Everything posted by ஏராளன்
-
‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
விஜய் மெளனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம், tvk 30 செப்டெம்பர் 2025, 10:38 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்' என கரூர் நெரிசல் சம்பவம் வீடியோ மூலம் விஜய் பேசியுள்ளார். சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு சார்பில் வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல், மின் தடை குறித்து அரசுத்தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் சமூக ஊடங்களில் வெளியிட்ட வீடியோவில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்." என பேசியுள்ளார். இந்த சுற்றுப்பயணங்களில் எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு மட்டும்தான் தன் மனதில் ஆழமாக இருக்கும் என்றும், அதனால்தான் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இடங்களை காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் விஜய் கூறியுள்ளார். "ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். நான் திரும்பி போக வேண்டியிருந்தால் வேறு சில பதற்றங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை." என விஜய் கூறியுள்ளார். இறந்தவர்களுக்கு வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜய், என்ன சொன்னாலும் குடும்பத்தினரின் இன்னல்களுக்கு ஈடாகாது என குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விரைவில் அவர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், Getty Images 'என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்' "எங்களின் வலிகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால், கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும்போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரியவரும்." என விஜய் கூறியுள்ளார். தங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பரப்புரை நடத்தினோமே தவிர வேறு ஏதும் செய்யவில்லை என கூறியுள்ள விஜய், எனினும் தவெகவினர் மீது வழக்குகள் போடப்பட்டிருப்பதாக கூறினார். சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்கள் மீதும் வழக்கு தொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். "முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்களை எதுவும் செய்யாதீர்கள். நான் வீட்டில் இருப்பேன், இல்லையெனில் அலுவலகத்தில் இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாகியிருக்கிறது, இன்னும் தைரியமாக தொடரும்." என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images அரசுத் தரப்பில் கூறுவது என்ன? இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்களை காட்டி அமுதா ஐஏஎஸ் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். தவெக கேட்ட இடத்திற்கு மாறாக வேலுசாமிபுரத்தில் அனுமதி தரப்பட்டதா? ''கூட்டத்திற்கு 26-ஆம் தேதி அனுமதி கேட்ட கடிதத்தில் வேலுசாமிபுரத்தில் அனுமதி கேட்டிருந்தனர். 25-ஆம் தேதிதான் வேறொரு கட்சி அங்கு கூட்டம் நடத்தியது. அதில், 10,000-15,000 பேர் கலந்துகொண்டிருந்தனர்.'' கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் ஏன் இடம் கொடுக்கப்படவில்லை? ''கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் இருந்தது. மேலும், வடிகால் கால்வாயும் இருந்தது. அதனால் தான் அந்த இடத்தை போலீஸார் தேர்ந்தெடுத்து தரவில்லை. உழவர் சந்தையில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள கூடிய இடம். எனவே தான், இறுதியில் வேலுச்சாமிபுரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.'' பட மூலாதாரம், Getty Images கூட்டத்தை முன்பே கணிக்க முடியவில்லையா? ''தவெகவின் அனுமதி கடிதத்திலேயே 10,000 பேர் கூடுவார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். இதில், 20 பேருக்கு ஒரு போலீஸ் என, 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் வரும்போது அவரின் பின்னாலும் நிறைய கூட்டம் கூடியது. அதனால் பரப்புரை நடைபெறும் இடத்தில் 25,000க்கும் அதிகமானோர் கூடியிருக்கலாம்.'' பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா? ''தவெக தலைவர் உரையாற்றும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது உண்மையல்ல என, கரூரில் மின்வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனர். தடுப்புகள் அமைத்து கட்சியினர் வைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் தொண்டர்கள் உள்ளே நுழைந்தபோது அப்பகுதியில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது.'' பட மூலாதாரம், DIPR படக்குறிப்பு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் காவலர்கள் தடியடி நடத்தியதால் தான் இது நடந்ததா? ''பரப்புரை நடைபெறும் இடத்தை நோக்கி வாகனத்தின் பின்னால் வந்தவர்கள் என பலரும் நகர ஆரம்பித்தனர். அதனால், கூட்ட நெரிசல் அதிகமாகவே பரப்புரை வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அதை கட்சியினர் கேட்கவில்லை.'' பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் தொடங்கிவிட்டதா? ''நண்பகல் 12 மணிக்கு விஜய் வந்திருக்க வேண்டும். காலையிலிருந்தே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. மதியம் 3 மணி முதல் கூட்டம் அதிகமாகிவிட்டது. வாகனம் பரப்புரை இடத்திற்கு நெருங்கவே, அதன் பின்னால் உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள கூட்டத்துடன் கலந்ததால், கூட்ட நெரிசல் அதிகமானது.'' இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு அமுதா ஐஏஎஸ் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் பதிலளித்தனர். என்ன நடந்தது? பட மூலாதாரம், Getty Images கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார். அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr4q19zzv0lo
-
பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். ஆதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும். இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmg6pk33500rdo29nfpamg16x
-
இஸ்ரேலை மன்னிப்பு கேட்க வைத்த டிரம்ப் - புதிய 'காஸா அமைதித் திட்டம்' நிறைவேறுவதில் என்ன சிக்கல்?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டாம் பேட்மேன் வெள்ளை மாளிகை வெளியுறவுத்துறை செய்தியாளர் 30 செப்டெம்பர் 2025, 08:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸா போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது திட்டம் "மனிதகுல வரலாற்றின் சிறந்த நாட்களில் ஒன்றாகவும், மத்திய கிழக்கில் நிலையான அமைதியைத் தரக்கூடியதாகவும்" இருக்கும் என்று கூறினார். இப்படி மிகைப்படுத்திப் பேசுவது டிரம்பின் வழக்கமான பாணிதான். ஆனால், திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தபோது அவர் வெளியிட்ட 20 அம்சங்களைக் கொண்ட இந்தத் திட்டம், அவரது சொற்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும், ராஜ்ஜீய ரீதியாக ஒரு முக்கியத் தருணமாகவே உள்ளது. இந்தத் திட்டம், போருக்குப் பிறகு காஸாவின் எதிர்காலம் குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு இதுவரை அமெரிக்கா நெதன்யாகுவுக்கு கொடுத்ததை விட அதிகமாக அழுத்தம் கொடுத்து, அவரை ஒரு ஒப்பந்தத்தை ஏற்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. வரும் வாரங்களில் இது நடைமுறைப்படுத்தப்படுமா என்பது, நெதன்யாகுவும் ஹமாஸ் தலைமையும் போரைத் தொடர்வதை விட அதை முடிப்பதிலேயே அதிக பலன் இருக்கிறது என்று உணருகிறார்களா என்பதைப் பொறுத்து இது அமையும். இந்நிலையில், ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை தெளிவான பதில் எதுவும் வரவில்லை. பிபிசியிடம் பேசிய ஹமாஸ் பிரமுகர் ஒருவர், இந்த திட்டம் பாலத்தீன மக்களின் நலன்களை பாதுகாக்கவில்லை என்றும், காஸாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக விலகுவதை உறுதி செய்யாத எந்தத் திட்டத்தையும் ஹமாஸ் ஏற்காது என்றும் தெரிவித்தார். அமெரிக்க அதிபரின் அருகில் நின்ற நெதன்யாகு, இஸ்ரேல் டிரம்பின் 20 அம்சங்களை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். ஆனால், அவரது கூட்டணியில் உள்ள சில தீவிர வலதுசாரி தலைவர்கள், அதன் சில அம்சங்களை ஏற்கனவே நிராகரித்திருந்தனர். ஆனால், டிரம்ப் முன்வைத்த கொள்கைகளை ஏற்றுக்கொள்வதை மட்டும், போரை முடிவுக்குக் கொண்டு வரும் அடையாளமாகக் கருத முடியாது. நெதன்யாகு பின்வரும் குற்றச்சாட்டை மறுத்தாலும், அவரது அரசியல் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்கக் கூடிய சூழலை உருவாக்கும் ஒப்பந்தங்களை முறியடிக்கும் பழக்கம் உடையவர் என்று இஸ்ரேலில் உள்ள அவரது எதிர் தரப்பு கூறுகிறது. இந்த நிலையில், டிரம்ப் விரும்பும் முடிவைப் பெற இந்த திட்டம் மட்டுமே போதுமானதாக இருக்காது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் அரசியல் தரப்புகளுக்குள் இன்னும் பல தடைகள் உள்ளன. அவை இறுதியில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதைத் தடுக்கக் கூடும். இந்தத் திட்டம் குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்பதால், இரு தரப்பினரும் அதை ஏற்றுக்கொள்வது போல காட்டலாம். அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகளின் போக்கைப் பயன்படுத்தி திட்டத்தை குலைக்கவும், தோல்விக்கு மற்றொரு தரப்பை குறை கூறவும் வாய்ப்புள்ளது. பட மூலாதாரம், Getty Images இந்த வழக்கமான முறை தான் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளிலும் காணப்பட்டது. அப்படி நடந்தால், டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலின் பக்கம் நிற்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஹமாஸ் திட்டத்தை ஏற்கவில்லை என்றால், "நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய அமெரிக்காவின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும்" என்று டிரம்ப் திங்களன்று நெதன்யாகுவிடம் கூறி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். டொனால்ட் டிரம்ப் இதை ஒரு முழுமையான அமைதி ஒப்பந்தமாகக் கூறினாலும், உண்மையில் இது பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஒரு அடிப்படைக் கட்டமைப்பாகவே உள்ளது. அவர் இதை "கொள்கைகளின் தொகுப்பு" என ஒரு கட்டத்தில் விவரித்திருந்தார். காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான விரிவான திட்டமாக இது இன்னும் உருவாகவில்லை. இது, மே 2024-ல் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அறிவித்த "நெறிமுறை" போன்று காணப்படுகிறது. ஒவ்வொரு கட்டமாக போர்நிறுத்தம் செய்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவர அத்திட்டம் முயன்றது. ஆனால், இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் செய்துகொள்ள எட்டு மாதங்கள் எடுத்தன. டிரம்ப் ஒரு "முழுமையான" அமைதி ஒப்பந்தத்தை எதிர்பார்த்தார். அது, இஸ்ரேல் படைகள் எங்கு, எப்போது வெளியேற வேண்டும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான விவரம், விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளின் பெயர்கள், போருக்குப் பிந்தைய ஆட்சி முறை போன்ற பல முக்கிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், அவரது 20 அம்சத் திட்டத்தில் இவை எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் அமைதி ஒப்பந்தத்தைத் தடுக்கும் அளவுக்கு பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம். இந்தத் திட்டம், ஜூலை மாதத்தில் வெளியான சௌதி-பிரெஞ்சு திட்டம் மற்றும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் சர் டோனி பிளேர் செய்த சமீபத்திய முயற்சிகளிலிருந்து சில கூறுகளை எடுத்துக்கொண்டது. சர் டோனி பிளேர், டிரம்ப் தலைமையில் இயங்கும் "அமைதி வாரியத்தில்" உறுப்பினராக இருப்பார். இந்த வாரியம், இந்தத் திட்டத்தின் கீழ் காஸாவின் நிர்வாகத்தை தற்காலிகமாக கண்காணிக்கும். பட மூலாதாரம், Getty Images டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள், கத்தார், எகிப்து போன்ற அரபு நாடுகளுடன் பேசிய பிறகு இந்தத் திட்டத்தை உருவாக்கினர். சண்டையை நிறுத்த வேண்டும், இஸ்ரேல் படைகள் சில இடங்களில் வெளியேற வேண்டும், ஹமாஸ் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பின்னர் இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்றவை, இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன. போருக்குப் பிறகு, காஸாவில் அன்றாட நிர்வாகத்தை கையாள ஒரு உள்ளூர் நிர்வாகம் அமைக்கப்படும். இதை எகிப்தை தளமாகக் கொண்ட "அமைதி வாரியம்" மேற்பார்வையிடும். "அமைதியாக வாழ" உறுதி கொடுத்து ஆயுதங்களை கைவிடும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு கிடைக்கும். மற்றவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அமெரிக்காவும் அரபு நாடுகளும் இணைந்து உருவாக்கும் "படை" காஸாவின் பாதுகாப்பை கவனிக்கும். இது பாலத்தீன ஆயுதக் குழுக்களின் ராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவரும். பாலத்தீன அரசு குறித்து இந்தத் திட்டம் மேலோட்டமாக மட்டுமே பேசுகிறது. ரமல்லாவில் உள்ள பாலத்தீன ஆணையம் மாற்றப்பட்டால், "பாலத்தீனர்களுக்கு சுயநிர்ணய உரிமையும் தனிநாடு அந்தஸ்தும் கிடைக்க ஒரு நல்ல பாதை உருவாகலாம்" என்று இத்திட்டம் கூறுகிறது. அரபு நாடுகள் இந்தத் திட்டத்தை ஒரு பெரிய முன்னேற்றமாகக் காண்கின்றன. காரணம், இது டிரம்பின் பிப்ரவரி மாத காஸா "ரிவியரா" திட்டத்தை நிராகரித்துவிட்டது. அந்தத் திட்டம் பாலத்தீனர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் ஒன்றாக இருந்தது. பாலத்தீனம் தனிநாடு பற்றி உறுதியான வாக்குறுதி இல்லாவிட்டாலும், அதைப் பற்றி ஒரு சிறிய குறிப்பாவது இருப்பது அவர்களுக்கு முக்கியமாக உள்ளது. அமெரிக்கத் திட்டம், "இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிக்காது அல்லது இணைக்காது" என்று கூறுகிறது. ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இப்படியொரு உறுதி அளிக்கப்படவில்லை. ஆனாலும், இது அரபு நாடுகளுக்கு மிக முக்கியமான விஷயம். இஸ்ரேல் தரப்பில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது நோக்கங்களுடன் இந்தத் திட்டம் ஒத்துப்போவதாகச் சொல்கிறார் நெதன்யாகு. அதாவது, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும், காஸா ஆயுதமற்ற பகுதியாக வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் பாலத்தீன நாடு உருவாகக் கூடாது. ஆனால், ஆயுதக் குறைப்பு மற்றும் பாலத்தீன நாடு பற்றிய விதிகளை அவரது அரசில் இடம் பெற்றுள்ளவர்கள் ஏற்பார்களா அல்லது நெதன்யாகு அழுத்தம் கொடுத்து விதிகளில் "மாற்றங்கள்" செய்வாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. பட மூலாதாரம், Getty Images இப்போது ஹமாஸின் பதிலைப் பொறுத்து மற்ற விஷயங்கள் அமையும். எனது சக செய்தியாளர் ருஷ்டி அபு அலூஃப் முன்பு எழுதியது போல், இது ஒரு குழப்பமான தருணமாக இருக்கலாம். அதாவது, ஹமாஸ் திட்டத்தை ஏற்பது போல் காட்டி, அதே நேரத்தில் மாற்றங்கள் வேண்டும் என கேட்கலாம். எனவே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முந்தைய "திட்டங்கள்" மற்றும் "கொள்கைகளை" போலவே, இந்தத் திட்டமும் வெள்ளை மாளிகைக்கு பெரிய சவாலாக இருக்கலாம். அதேபோல் மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வும் அமைந்தது. கூட்டு அறிவிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, டிரம்ப் நெதன்யாகுவை கத்தாரிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். இந்த மாதத் தொடக்கத்தில் தோஹாவில் ஹமாஸ் தலைமைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கோரியிருந்தது. தற்போது, கத்தார் மீண்டும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. டிரம்ப்-நெதன்யாகு சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, காஸா நகரில் இஸ்ரேலின் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் அதிகமாயின. அங்கு இஸ்ரேலிய ராணுவம் தனது மூன்றாவது கவசப் பிரிவை அனுப்பியுள்ளது. இஸ்ரேலின் பரந்த தாக்குதல், ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதி. ஆனால், இது பொதுமக்களுக்கு மேலும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன. இதே நேரத்தில், காஸாவில் உள்ள ஹமாஸ் தளபதி எஸ் அல்-தின் அல்-ஹதாத், "இறுதி முடிவுக்கான போர்" என ஹமாஸ் களத் தளபதி ஒருவர் பிபிசியிடம் விவரித்த போருக்கு தயாராகி வருகிறார். பிரான்ஸ், சௌதி அரேபியா தலைமையில் ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகள், கோடை காலத்தில் ராஜ்ஜீய வழியை மீண்டும் உருவாக்க முயற்சித்தன. இஸ்ரேலின் களச் செயல்பாடுகள் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தன. இது இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதை மேலும் அதிகரித்தது. காஸா போர்க்குற்றங்களுக்காக நெதன்யாகு இன்னும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்டின் கீழ் உள்ளார். மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிப்பதை ஐரோப்பியர்கள் கண்டனர். அவர்கள், இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இரு நாடுகள் தீர்வு இருப்பதாக நம்பினர். இதற்காக, இன்னும் உள்ள மிதவாத தலைவர்களிடம் முறையிடலாம் என்று அவர்கள் நம்பினர். இந்தத் திட்டத்தில் இரு நாடுகள் தீர்வு வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், காஸாவுக்கான முன்மொழிவுடன் டிரம்பை இணைத்துக்கொள்வது முக்கியம் என அவர்கள் கருதினர். இந்த அமெரிக்கத் திட்டம், பேச்சுவார்த்தையின் வேகத்தை மீண்டும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டிரம்ப் கூறுவது போல போருக்கான முழுமையான முடிவைப் பெறவும், அதைச் செயல்படுத்தவும் பல வாரங்களோ அல்லது மாதங்களோ கடினமான முயற்சிகளும் நுட்பமான பணிகளும் மேற்கொள்ள வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c70157z0w34o
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்
-
கரூர் கூட்ட நெரிசல்: அரசியல், சட்டம், கட்சி ரீதியாக விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள்
பட மூலாதாரம், TVK IT Wing Official/X கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக மாவட்ட, மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுவிட்டார். கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர். "வரும் நாட்களில் பொதுமக்களை எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை விஜய் எதிர்கொள்ள நேரிடும்" என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தவெகவின் அரசியல் பயணத்தில் கரூர் சம்பவத்தின் தாக்கம் எப்படி இருக்கும்? கரூர் வழக்கு - என்ன நடந்தது? கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசி முடித்துவிட்டுக் கிளம்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார். அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. விஜய் பிரசாரம் செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. 'தவெக அணுகுமுறையில் தோல்வி' - ஷ்யாம் தவெகவின் அணுகுமுறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர் "துயர சம்பவத்துக்குப் பிறகு ஒரு கட்சி எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது முக்கியம். ஆளும்கட்சி என்பதால் களத்துக்கு தி.மு.க வந்துவிட்டது. பா.ஜ.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டன" என கூறுகிறார். "சசிகலாவும் கூட பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஆனால், மக்களை சந்திப்பது தொடர்பாக தவெக தலைமை மற்றும் நிர்வாகிகளிடம் எந்தப் பதிலும் இல்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Tarasu Shyam படக்குறிப்பு, கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தவெகவின் அணுகுமுறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், ஷ்யாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு கீழ்மட்டத்தில் கட்டமைப்பு இல்லாததை பிரதான காரணமாக முன்வைக்கும் ஷ்யாம், "மருத்துவமனைக்கு கட்சித் தலைவர் வராவிட்டாலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். அவர்கள் சென்று பார்க்காததன் மூலம் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை என்பது தெளிவாகிறது" என்கிறார். "கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாவிட்டால் தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் இருக்கும். இது தோல்வியில் முடியும். நேரில் ஆறுதல் கூறுவதற்குச் சென்றால் தங்களுக்கு ஏதேனும் நேரும் என்ற அச்சம் இருந்தால் அரசியலுக்கு வரவே கூடாது" எனவும் ஷ்யாம் தெரிவித்தார். "ஆனால், அடிப்படைக் கட்டமைப்பு என்பது கட்சிக்கான நீண்டகால பிரச்னை" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், " உடனடியான பிரச்னை என்பது சட்டரீதியானது. தேர்தலுக்கு எட்டு மாதங்களே உள்ளன. அதற்குள் பிரச்னைகளை சரிசெய்ய முடியுமா என்பது கேள்விக்குறி" என்கிறார். அடுத்து வரக் கூடிய சிக்கல்கள் என்ன? "வரும் நாட்களில் விஜய் பரப்புரையில் எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்?" என, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் கேட்டது. "வரும் நாட்களில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சில பரப்புரைகளை மேற்கொள்ள முடியாது. நீதிமன்றத்துக்கு தவெக சென்றுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் கட்டுப்பாடுகள் வரவே செய்யும்" எனக் கூறுகிறார். இதற்கு மாறான கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை விஜய் மீது தான் அனைவரின் கவனமும் திரும்பியிருப்பதாக கூறுகிறார். "ஆளும்கட்சியை பொருத்தவரை எத்தனை அனுமதிகளை வேண்டுமானாலும் தரலாம். களத்தில் அது தவெகவுக்கு எதிர்மறையாகவே முடியும்" என்கிறார். பட மூலாதாரம், Getty Images 'கூட்டணி சேரும் கட்சிகளுக்கும் சிக்கல்' "கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல்துறைக்கு சில கடமைகள் இருப்பதைப் போன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் சில கடமைகள் உள்ளன" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "மதியம் 12 மணிக்கு ஐந்தாயிரம் பேர் வந்தனர் என்றால் ஏழு மணிக்கு பத்தாயிரம் பேர் வருவார்கள் என ஊகித்திருக்க வேண்டும்" என்கிறார். "2026 சட்டமன்றத் தேர்தலில் கரூரில் தவெகவை சேர்ந்த நிர்வாகிகள், விஜயின் படத்தைக் காட்டி வாக்கு கேட்க முடியாது" எனக் கூறும் ஷ்யாம், " அரசியல் ரீதியாக இதனை எதிர்கொள்வதற்கு அவர்களுக்குத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது" எனக் கூறுகிறார். "மக்களை எதிர்கொள்வதில் விஜய்க்கு சிக்கல் வரும். கரூர் சம்பவத்தை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. திரைக் கவர்ச்சியும் கூட்டத்தைக் கூட்டும் நபராகவும் இருப்பதாலேயே ஒருவரால் அரசியல் தலைவர் ஆக முடியாது." என்கிறார் ஷ்யாம். "2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு மட்டுமல்லாமல் அக்கட்சியுடன் கூட்டணி செல்லும் கட்சிகளுக்கும் இது பிரச்னையை ஏற்படுத்தும்" எனவும் அவர் தெரிவித்தார். 'விஜய்க்கு காத்திருக்கும் 3 வகையான சவால்கள்' கரூர் சம்பவத்தின் மூலம் சட்டம், அரசியல் மற்றும் கட்சி ரீதியாக மூன்று வகையான பிரச்னைகளை விஜய் எதிர்கொள்ளலாம் எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வழக்கில் முதல் குற்றவாளியாக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனையும் அடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் இதர நிர்வாகிகளைச் சேர்த்துள்ளனர். வழக்கில் விஜயைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது சட்டரீதியான சவாலாக இருக்கும்" எனக் கூறுகிறார். பட மூலாதாரம், RK Radhakrishnan படக்குறிப்பு, வழக்கில் விஜயைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்கிறார், ஆர்.கே.ராதாகிருஷ்ணன் "இரண்டாவதாக, அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தில் இருந்து தவெக எப்படி வெளிவரப் போகிறது என்பது முக்கியம். கடந்த கால பொதுக் கூட்டங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நிகழ்வுகள் கூட உள்ளன. ஆனால், இவ்வளவு பேர் இறந்துபோனதாக எந்த சம்பவங்களும் இல்லை" எனக் கூறுகிறார், ஆர்.கே.ராதாகிருஷ்ணன். தொடர்ந்து பேசிய அவர், "மூன்றாவதாக, தவெகவின் அரசியல் வியூகங்களில் சிக்கல் உள்ளது. இதைத் தலைமையின் பிரச்னையாக பார்க்கிறேன். சம்பவத்துக்குப் பிறகு விஜய் சென்னை சென்றுவிட்டார். அடுத்தநிலையில் உள்ளவர்கள் யாரும் செல்போனை எடுக்கவில்லை. ஒரு சம்பவத்துக்குப் பிறகு அனைவரும் ஓடிப் போய்விட்டதாக பார்க்க முடியும்" என்கிறார். சதி செய்துவிட்டதாக கூற முடியுமா? கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தவெக பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு போதுமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அதுவே அசம்பாவிதம் நிகழ்வதற்குக் காரணம்" என செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார். இதனை மேற்கோள் காட்டிப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் ரீதியாக தி.மு.க எதிர்ப்புக்கு இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா எனப் பார்க்கின்றனர். 'காவல்துறை தவறிவிட்டது.. சதி நடந்துள்ளது' என்றெல்லாம் கூறுவதற்கு இது தான் காரணம்" என்கிறார். 'சம்பவங்கள் தொடரவே செய்யும்' கரூரில் பரப்புரை செய்வதற்கு விஜய் வந்த பேருந்தை பின்தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் சென்றனர். இவ்வாறு பின்தொடர வேண்டாம் எனவும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் கூட்டத்துக்கு வரவேண்டாம் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார். "பின்தொடர வேண்டாம் எனக் கூறிவிட்டு தொடர்வதற்கு அனுமதிப்பதை தங்களின் செல்வாக்காக பார்க்கின்றனர். இரண்டாயிரம் பேர் பேருந்துடன் நகர்கின்றனர். அதைத் தடுக்க வேண்டிய கடமை ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தலைமைக்கும் உள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "பரப்புரை மேற்கொள்ளப்படும் இடங்களில் உள்ளூர் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தால் இதேபோன்று பல சம்பவங்கள் தொடரவே செய்யும். இனி இவ்வாறு நடக்காது என்று சொல்வதற்கு உத்தரவாதங்கள் இல்லை" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார். கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக மூத்த நிர்வாகிகளிடம் விளக்கம் பெற பிபிசி தமிழ் முயன்றது. அதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgmze82exkzo
-
ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு; மாதாந்தம் 3 கோடி ரூபாய் மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு - உதய கம்மன்பில
29 Sep, 2025 | 02:39 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்கள் மாதாந்தம் சுமார் 3 கோடி ரூபாவை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு வழங்கி மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில் ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (29) முறைப்பாடளித்ததன் பின்னர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு பின்வருமாறு குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான தேவானந்த சுரவீர 'நாங்கள் அனைவரும் எமது மாதாந்த சம்பளத்தை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு முழுமையாக வழங்குகிறோம். கட்சி கொடுக்கும் நிதியில் இருந்து தான் வாழ்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தனது மாத சம்பளத்தை தனது விருப்பத்துக்கேற்ப செலவு செய்ய முடியாது.செலவு செய்யும் முறைமை தொடர்பில் நிச்சயிக்கப்பட்ட விடயதானங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதாந்த கொடுப்பனவு, வருகைக்கான கொடுப்பனவு மற்றும் குழுக்களில் பங்குப்பற்றுவதற்கான கொடுப்பனவு என்ற மூன்று கொடுப்பனவுகளை மாத்திரம் தனது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடியும். விருந்துபசார கொடுப்பனவு, தொலைபேசி மற்றும் வாகனத்துக்கான கட்டண கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு,எரிபொருள் கொடுப்பனவு ஆகிய கொடுப்பனவுகளை கட்சியின் நிதியத்துக்கு வழங்கி அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும். தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் 3 கோடி ரூபாய் மக்கள் நிதியை முறைகேடாக தமது கட்சியின் நிதியத்துக்கு வழங்கியுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தில் எவருக்கும் சிறப்பு சலுரக வழங்கப்படாது என்பதை அரசாங்கம் தாரக மந்திரமாக குறிப்பிடுகிறது. 159 பேருக்கு எதிராக சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை எதிர்பார்த்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/226404
-
தாலிபான்கள் இணையத்தை துண்டித்ததால் ஆப்கானிஸ்தானில் தொலைத்தொடர்பு முடக்கம்
Published By: Digital Desk 3 30 Sep, 2025 | 11:08 AM ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கம், ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் (fibre-optic internet connections) துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்கள் கழித்து, நாடளவிய ரீதியில் தொலைத்தொடர்புகளை முடக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் தற்போது "முழுமையான இணைய முடக்கத்தை" சந்தித்து வருவதாக, இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள அலுவலகங்களுடனான தொடர்பை சர்வதேச செய்தி நிறுவனங்கள் துண்டித்துள்ளதாகக் கூறுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் கையடக்க தொலைபேசிக்கான இணைய வசதி மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முடக்கத்திற்கான உத்தியோகபூர்வ காரணத்தை தலிபான்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் விளக்கத்தின்படி தாலிபான்கள் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தொலைத்தொடர்பு முடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கும் என தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனியார் ஆப்கானிய செய்தி சேனலான டோலோ நியூஸ், அதன் தொலைக்காட்சி மற்றும் வானொலி நெட்வொர்க்குகளில் இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுப்பிப்புகளுக்கு அதன் சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடருமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது. காபூல் விமான நிலையத்திலிருந்து விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 இன் படி, செவ்வாய்க்கிழமை காபூல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட அல்லது வந்தடைய திட்டமிடப்பட்ட குறைந்தது எட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. காபூலில் உள்ள பலர் ஃபைபர்-ஆப்டிக் இணையம் வேலை நாளின் முடிவில், உள்ளூர் நேரப்படி மாலை 17:00 மணியளவில் முடங்கியதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, வங்கி சேவைகள் மற்றும் பிற வணிகங்கள் மீண்டும் தொடங்கவிருக்கும் செவ்வாய்க்கிழமை காலை வரை பலர் தாக்கத்தை கவனிக்க மாட்டார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. https://www.virakesari.lk/article/226469
-
அநுரவின் 12 மாதகால ஆட்சி
Published By: Vishnu 29 Sep, 2025 | 09:43 PM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும். இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது ஆட்சிக்காலத்தினை நோக்கும்போது அரசியல் ரீதியாக அதன் அடைவுமட்டங்களை பார்ப்பதிலும், பொருளாதார ரீதியான அடைவுமட்டங்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் அரசாங்கம், அரசியல் ரீதியான விடயங்களை விடவும், சமூக, பொருளாதார ரீதியான விடயங்களுக்கே தாங்கள் முக்கியத்துவம் அளிப்பாக ஆட்சியைப் பொறுப்பெடுத்த முதல்நாளில் இருந்தே தெரிவித்து வந்திருந்தது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சுற்றுலா, ஏற்றுமதிகள், தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மற்றும் கையிருப்பு ஆகியவற்றுடன் சில காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில், முதலாவதாக, பணவீக்க விடயத்தினைப் பார்க்கின்றபோது, பணவீக்கம் என்பது சாதாரணமாக குடும்பம் மிக விரைவாக உணரக்கூடியதான விடயமாகும். அந்தவகையில், 2024ஆம் ஆண்டு நெருக்கடியான கலகட்டத்தில் ஜூலையில் 2.4சதவீதமாக இருந்தது. அக்காலப்பகுதியுடன் ஒப்பீடும்போது, உணவுப் பொருட்களின் விலைகள் 0.8சதவீதம் உயர்வடைந்துள்ளன. உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 0.4சதவீதம் உயர்வடைந்துள்ளன. மாதாந்த அடிப்படையில், பார்க்கின்றபோது 1.85 சதவீதம் குறைவாக காணப்படுகின்ற அதேசமயம் பணவீக்கம் 4.4 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாகக் குறைந்ததுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பணவீக்கமான குறுகிய காலத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பின்னர் இலக்கை நோக்கி படிப்படியாக நகரும் என்றும் எதிர்பார்த்தது. எனினும் நாட்டின் பணவீக்கத்தின் போக்கானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாறியிருக்கின்றது. ஒருவருட இடைவெளி காணப்படுகின்றபோதும் பணவீக்கம் 1.2 சதவீதமாக நேர்மறையாக மாறியுள்ளது. இதனால், ஜூலையில் இருந்த விலைகளில் 0.3 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, உணவுப்பொருட்களின் விலைகள் 2 சதவீதமாக உயர்ந்ததுள்ளதோடு உணவு அல்லாத உணவுப் பொருட்கள் அல்லாதவற்றின் விலைகள் 0.8 சதவீதமாக நேர்மறையாக மாறியது. மாதாமாதம் குறியீடு சற்று குறைந்தாலும், உணவு அல்லாத பொருட்கள் சிறிய உயர்வைச் சந்தித்தன. முக்கிய பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரித்தது. இதனடிப்படையில், 2024 இல் வீழ்ச்சியடைந்த விலைகள் 2025 இல் மீண்டும் மிதமான அளவில் உயரத் தொடங்கியுள்ளன. ஆகவே பணவீக்கத்தின் அடிப்படையில் குடும்பங்கள் மகிழ்ச்சியான மாற்றத்தினைக் காணவில்லை. அடுத்ததாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்துக்கொண்டால், 2024இன் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5சதவீத வளர்ச்சி கண்டது. விவசாயம் 3சதவீதமாகவும், தொழில் 10.8சதவீதமாகவும், மற்றும் சேவைகள் 2.6சதவீதமாகவும் வளர்ச்சியைக் கண்டன. கட்டுமானத் துறை, சுரங்கத் தொழில் மற்றும் பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால் தொழில்துறை உயர்வுக்கு வந்தது. தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் வர்த்தகத்தின் மூலம் சேவைகள் துறைகளும் வளர்ந்தன. எனினும், 2025இன் இரண்டாம் காலாண்டில் மெத்த உள்நாட்டு உற்பத்தியானது, 4.9சதவீதமாகவே வளர்ந்துள்ளது, இது பொருளாதா மீட்சிக்கான விரிவாக்கத்தின் எட்டாவது தொடர்ச்சியான காலாண்டாகும். அதன்படி, விவசாயம் 2சதவீதம், தொழில்துறை 5.8சதவீதம், மற்றும் சேவைகள் 3.9சதவீதம் அதிகரித்தன. ஆடை, உலோகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் உள்ளிட்ட பல துறைகளில் உற்பத்தி வளர்ந்தது. ஒட்டுமொத்தமாக, 2024 இன் பிற்பகுதியில் 5.5சதவீதமாக இருந்த இருந்த வளர்ச்சி 2025 இன் நடுப்பகுதியில் 4.9சதவீதமாக சற்றுக் குறைவாக வெளிப்படுத்தப்பட்டாலும் கட்டுமானம், உற்பத்தி மற்றும் விரிவடையும் சேவைகள் ஆகியவற்றால் தொடர்ந்து பலமாக இருந்து வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் வருமாணத்தில், சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியன அந்நிய செலாவணிக்கான முக்கியமான மூலமாக காணப்படுகின்ற நிலையில் இந்தாண்டில் அவற்றின் முன்னேற்றம் காத்திரமாக உள்ளது. 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 1.3 மில்லியனாக இருந்தது. ஆனால் 2025 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்துவிட்டது. இத்துறை 2025ஆம் ஆண்டிற்கான இலக்கை மூன்று மில்லியன் பார்வையாளர்களாக நிர்ணயித்துள்ளமை முக்கிய விடயமாகும். விசேமாக, 2025 ஆகஸ்ட்டில் முதல் 13 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.1சதவீதமாக அதிகரித்திருந்தது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதோடு அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன. அடுத்ததாக, 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஆடைத்துறை, தேயிலை, இறப்பர் சார்ந்த பொருட்கள், தேங்காய் சார்ந்த பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் உதவியுடன் மொத்த ஏற்றுமதி 10.6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. 2024 ஆகஸ்ட்டில் ஆடைத்துறை இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 500 மில்லியன் டொலர்கள் என்ற வரம்பைக் கடந்துள்ளது. அதேபோன்று 2025 ஆகஸ்டில் ஏற்றுமதி வலிமையடைந்ததை அடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஆகிய இரு துறைகளையும் இணைத்து மொத்த ஏற்றுமதி 1,607.58 மில்லியன் டொலர்களை கடந்துள்ளது. 2024 ஆகஸ்ட்டை விட 2.57சதவீதம் அதிகமாகும். அடுத்ததாக, பணப்பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு விடயத்தினைப் பார்கிக்கின்றபோது, ஜனவரி முதல் 2024 ஆகஸ்ட் வரையில் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மொத்தம் 4,288 மில்லியன் டொலர்களாகும். இது 2023 இல் இதே காலகட்டத்தில் 3,863 மில்லியன் டொலர்களில் இருந்தை விடவும் அதிகரிப்பாகும். இவ்வாறான நிலையில் 2025 ஜூலை வரையிலான தரவுகள் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் ஆண்டு இன்றுவரை 4,435.2 மில்லியன் டொலர்களைக் காட்டுகின்றன. மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2025 ஜூலையின் இறுதியில் 6.1 பில்லியன் டொலர்களாக இருந்தது. அந்தவகையில், புதிய ஆட்சி நிர்வாகத்தின் முதலாண்டைப் பற்றி கருத்துவெளியிட்டள்ள பெஸ்ட் கப்பிற்றலின் தலைமையாராய்ச்சி மற்றும் மூலோபாய அதிகாரியான திமந்த மாத்யூ, ஸ்திரத்தன்மை அடையப்பட்டிருந்தாலும், முக்கிய சவால்கள் இன்னும் உள்ளன என்று குறிப்பிட்டார். அத்துடன் சீர்திருத்தங்களின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சி ஓரளவுக்கு அடையப்பட்டுள்ளது. முடிக்கப்பட வேண்டிய மறுசீரமைப்பு செயன்முறை தொடரப்பட்டு, அதன் மூலம் ஒருவித ஸ்திரத்தன்மை அடையப்பட்டுள்ளது. கையிருப்பு இலக்குகள் போன்ற பெரும்பாலான பொருளாதார குறிகாட்டிகளும் அதிகநிலையான மட்டத்தில் நிலைபெற்றுள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, வரவுசெலவுத் திட்டத்தின் செலவினப் பக்கத்தில் மூலதனச் செலவினத்தில் மந்தநிலை இருப்பதாகத் தெரிகிறது, என்றும் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து வெளியே வருவதால், வளர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு சில அரசாங்க ஆதரவு தேவையாக உள்ளது என்றும் கூறினார். ஆவரின் கூற்றுப்படி, மூலதனச் செலவினத்தின் மந்தநிலை வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சற்றுக் குறைந்து வருகிறது, மேலும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் மிகவும் தெளிவாகத் தெரியக்கூடும். அதனை உரியவாறு கையாள வேண்டும் என்று அவர் எச்சரித்தார். சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக அரச நிறுவனங்களில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் அவசியமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இலங்கை மின்சார சபையில் சில சீர்திருத்தங்கள் நடந்துள்ளன, ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டிற்கு ஏற்ப இன்னும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இதை வெற்றிகரமாக அடைவது, நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், பொருளாதாரம் மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இருக்கவும் பாதுகாப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், அடுத்த ஆண்டுக்கான சவால், இந்த வேகத்தை மேலும் கட்டியெழுப்புவதாக உள்ளதோடு பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதுடன், பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் ஈட்டுவதற்கான துறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தான் தங்கியுள்ளது. ஆக மொத்தத்தில் அநுரவின் முதலாவது ஆண்டு பொருளாதார ரீதியாக முதலாவது படியை அடைந்திருந்தாலும் அது அழுத்தமாக பதிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. https://www.virakesari.lk/article/226442
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் பரப்புரையை வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 29 செப்டெம்பர் 2025, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகவும் அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியதாகவும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் அறிவுரையையும் மீறி தவெக நிர்வாகிகள் அசாதாரண செயல்களில் ஈடுபட்டதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. காவல்துறையும் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தற்போது வெளியாகியுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தவெக சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதோடு பரப்புரை தினமான சனிக்கிழமை 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில்25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு விஜய் கரூர் வர இருப்பதாக காலை 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது, இதனால் காலை 10 மணி முதலே கூட்டம் கூடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "இதனால் வேலுச்சாமிபுரம் மெயின்ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்சன், கோவை சாலை, திருக்காம்புலியூர், ரவுண்டானா, மதுரை சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள்." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் 25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. கரூரில் பரப்புரை மேற்கொள்ள 12 மணிக்கு அனுமதி வாங்கியிருந்த நிலையில் நாமக்கலில் இருந்து புறப்பட்ட விஜய் மாலை 04:45 மணிக்கு கரூர் மாவட்ட எல்லையை அடைந்ததாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறி வரவேற்பு நடத்தியதாகவும் விஜயின் வாகனத்தை நிறுத்தி கால தாமதம் செய்ததாகவும் காவல்துறை தெரிவிக்கிறது. "வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோ நடத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தினர்." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக விஜயின் வாகனம் மாலை 06.00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்சனில் ராங்ரூட்டில் (தவறான வழியில்) பயணித்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறியதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்." என எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. "காவல்துறை அறிவுரையை தவெகவினர் புறக்கணித்தனர்" மாவட்ட செயலாளர் மதியழகன், என். ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலரிடமும் "அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும்" என எச்சரித்ததாக காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது. "மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை. ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். தகர கொட்டகை உடைந்ததாலும் மரம் முறிந்ததாலும் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தனர். இதனால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியதாகவும் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீண்ட காலதாமதத்தால் காத்திருந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் உடல் நிலை சோர்வடைந்தனர் என்றும் காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9dx4pw8w6lo
-
”LGBTQ சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டாம்” - பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
தன்பாலினத்தவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவித்துள்ளமை முறையற்றது; நாமல் ராஜபக்ஷ 29 Sep, 2025 | 04:27 PM (இராஜதுரை ஹஷான்) சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தன்பாலினத்தவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவித்துள்ளமை முறையற்றது. இந்த தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச நிர்வாகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் அனைத்தையும் கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்துவதை ஆட்சியாளர்கள் பிரதான கொள்கையாக கொண்டுள்ளார்கள். ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது ஆகவே இன்றும் கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம். போதைப்பொருள் குற்றச்சாட்டையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.கைப்பற்றப்படும் போதைப்பொருள் பற்றி மாத்திரமே பேசப்படுகிறது. ஆனால் சர்வதேச புலனாய்வு பிரிவினரால் முன்கூட்டியதாகவே தகவல் வழங்கப்பட்ட 2 கொள்கலன்களை விடுவித்தவர்கள் பற்றி ஏதும் குறிப்பிடப்படுவதில்லை. அதேபோல் 232 கொள்கலன்களை விடுவித்தது யார் என்பது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எம்மீது பழிசுமத்துகிறது. சுற்றுலாத்துறைறை மேம்படுத்துவதற்காக தன்பாலினத்தவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவித்துள்ளமை முறையற்றது. இது இலங்கையின் கலாசாரத்துக்கு பொருத்தமற்றது. ஆகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். 16 வயது பிள்ளை சுய விருப்பத்தின் அடிப்படையில் உடலுறவில் ஈடுபட்டால் என்ன பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஹன்சாட் பதிவிலும் இது உள்ளது. பிள்ளைகள் உள்ள பெற்றோர் எவ்வாறு இப்படி பேசுகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை என்றார். https://www.virakesari.lk/article/226412
-
தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல – ஐக்கிய மக்கள் சக்தி
29 Sep, 2025 | 04:26 PM (எம்.மனோசித்ரா) உலகில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல. இது இலங்கையில் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எதிர்மறையான ஒரு போக்கினையே காண்பிக்கிறது. எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு இதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மறைக்கப்பட்ட நெருக்கடியொன்று உருவாகியுள்ளது. பொருளாதார நிபுணர்கள், நாட்டிலுள்ள முதலீட்டாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தாவிட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன. எமக்கு கற்பனை உலகில் வாழ முடியாது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காததால் நாடு பாரிய நெருக்கடிகளை ஏற்பட்டு, இறுதியில் ஆட்சியும் கவிழ்ந்தது. இவ்வாண்டின் 5 ஆண்டு ஆட்சி காலத்திலேயே மீண்டும் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த வேண்டிய காலம் ஆரம்பமாகிறது. வருடத்துக்கு சுமார் 5 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் நாட்;டில் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி இருப்பு 6 – 7 பில்லியன் டொலர் மாத்திரமே. வெளிநாட்டு கடன் மீள் செலுத்தலுடன் ஏனைய செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு நாட்;டின் அந்நிய செலாவணி இருப்பு ஆகக் குறைந்தது 12 பில்லியன் டொலராவது காணப்பட வேண்டும். ஆனால் பொருளாதார வளர்ச்சி வேகம் அதற்கு ஏற்றதாக இல்லை. எனவே அரசாங்கம் இதற்கு அரசியல் ரீதியான பதிலை வழங்காமல் பொருளாதார ரீதியிலான தீர்வினை முன்வைக்க வேண்டும். உலகில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல. இது இலங்கையில் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எதிர்மறையான ஒரு போக்கினையே காண்பிக்கிறது. எனவே இந்த வங்கி நாட்டில் அதன் செயற்பாடுகளை நிறுத்துவரத தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/226417
-
ஜனாதிபதி இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்
ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிதி அமைச்சருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை Published By: Vishnu 29 Sep, 2025 | 08:18 PM ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் நிதி அமைச்சர் கதோ கசுனொபுவிற்கும் (KATO Katsunobu) இடையில் திங்கட்கிழமை (29) பிற்பகல் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஜப்பான் உதவி/JICA ஒத்துழைப்பின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/226440
-
மன்னாரில் நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு
மன்னாரில் காற்றாலை அமைத்தல், பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து அணி திரண்ட மக்கள்!; பொது முடக்கல் போராட்டம் 29 Sep, 2025 | 03:42 PM மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து இந்த அழைப்பினை விடுத்திருந்தன. அதற்கமைய, இன்றைய தினம் காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். காற்றாலை திட்டம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமானது. மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை கோபுரங்களை அமைத்தல், மன்னாரில் கனிம மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் அருட்தந்தையர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று மன்னாருக்குச் சென்றிருந்தது. மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து, சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை அடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்றுகூடிய இடத்துக்குச் சென்றார். இதன்போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டிய கடிதமொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் இடத்துக்குச் சென்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தாக்கிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர். பின்னர் தொடர்ச்சியாக முருகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, பின், அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். இப்போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226418
-
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராக செயல்பட்டதாக பொலிஸார் தகவல்
மனம்பேரியின் வாக்குமூலத்தில் வௌியான மேலும் பல தகவல்கள் மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியிடம் விசாரணை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளதுடன், இதன் போது ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல உண்மைகள் தெரியவந்துள்ளன. ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு நாள் கழித்து அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக சம்பத் மனம்பேரி விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதுவரை தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் சந்தேகநபர் கூறியுள்ளார். வட்ஸ்அப்பில் பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு கொள்கலன்களும் மித்தேனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது பெக்கோ சமன், "அண்ணா, இரண்டு கொள்கலன்கள் உள்ளன. அவற்றை விடுவிக்க வேண்டும். அதை செய்து தர முடியுமா? என்று சம்பத் மனம்பேரியிடம் கேட்டிருந்தார், அதற்கு அவர், "தம்பி பிரச்சினை ஏதும் வருமா?" என்று கேட்டிருந்தார். இதன்போது, பெக்கோ சமன், "அப்படி ஒன்றுமில்லை, அண்ணா. சில கற்கள் வருகின்றன. அவை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன" அதை எடுத்துச் செல்லவே வேண்டும் என்று மனம்பேரி கூறியிருந்தார். அதன்படி, சம்பத் மனம்பேரி வேறொரு நபருடன் சென்று இரண்டு கொள்கலன்களையும் பொறுப்பேற்று மித்தேனிய பகுதிக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அது குறித்த ஆவணங்களை பெக்கோ சமன் வட்ஸ்அப் மூலம் சம்பத் மனம்பேரிக்கு அனுப்பியிருந்தார். இதற்கு சம்பத் மனம்பேரியின் சகோதரரான பியல் மனம்பேரியும் உதவியுள்ளார். இருப்பினும், கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிறகு, அச்சத்திற்கு உள்ளான சம்பத் மனம்பேரி, தனது சகோதரருடன் சேர்த்து அந்த இரசாயன தொகையை புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர், அவர் மித்தேனிய பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதற்கிடையில், பெக்கோ சமன் மற்றும் தரூன் என்பவர் மூலம் அறிமுகமான மன்னார் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல்காரரான டைகர் என்பவரின் உதவியுடன் அவர் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குற்றக் கும்பல் உறுப்பினர்களுடனான தொடர்புகளை வெளிப்படுத்த சம்பத் மனம்பேரியின் கையடக்க தொலைபேசியை கண்டுபிடிக்க விசாரணை அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அவர்களால் இன்னும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாகவும் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர் "சேர், நான் ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி. எனவே, மொபைல் போன் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் வெள்ளவத்தையில் தண்டவாளத்தில் வைத்து அதனை அழித்தேன்," என்று மனம்பேரி அதற்கு பதிலளித்துள்ளார். பெக்கோ சமனுக்குச் சொந்தமான துப்பாக்கிகளைக் கொண்டு செல்வது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, கேரள கஞ்சா கடத்தல் மற்றும் வியாபாரம், கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொல்ல தம்மால் வழங்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்களுடன் அவர் நெருங்கிய உறவைப் பேணி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அது குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன. மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் அந்த பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் டி சில்வா ஆகியோரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. https://adaderanatamil.lk/news/cmg4x410000qao29nkf6nkdnn
-
ஜனாதிபதி இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்
ஜப்பான் பிரதமர் - ஜனாதிபதி அநுர முன்னிலையில் இரு முக்கிய திட்டங்கள் கைச்சாத்து 29 Sep, 2025 | 05:10 PM (இணையத்தள செய்திப் பிரிவு) "அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டம்" மற்றும் "பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம்" குறித்த குறிப்புகள் பரிமாற்றத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அதிமேதகு அகியோ இசொமதா மற்றும் இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹெரத் ஆகியோர் ஜப்பான் பிரதமர் அதிமேதகு ஷிகெரு இஷிபா மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அதிமேதகு அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் முன்னிலையில் செப்டம்பர் 29 ஆம் திகதி கையெழுத்திட்டனர். இலங்கைக்கான ஜப்பானின் முதல் OSA, பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. 2023 இல் தொடங்கப்பட்ட OSA, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் பாதுகாப்பு மற்றும் தடுப்பு திறன்களை வலுப்படுத்த ஜப்பானின் புதிய மானிய உதவி ஒத்துழைப்பு கட்டமைப்பாகும். வளரும் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான "அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (ODA)"-யிலிருந்து வேறுபட்டு, ஆயுதப் படைகள் ஒரு பெறுநராக இருக்க OSA உதவுகிறது. இந்த OSA திட்டத்தின் கீழ், 500 மில்லியன் யென் (அண்ணளவாக 1 பில்லியன் ரூபாய்) தொகையில், அவதானிப்பு, கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காக இரண்டு வகையான அதிநவீன ஜப்பானிய தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV-கள்) இலங்கை கடற்படைக்கு வழங்கப்படும். இந்த திட்டம் இலங்கையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான மானிய உதவித் திட்டத்தின் கீழ், 463 மில்லியன் யென் (தோராயமாக 945 மில்லியன் ரூபாய்) தொகையில், நிகழ்நேர பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) உபகரணங்கள், விந்து இயக்கம் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் நான்கு சக்கர டிராக்டர் போன்ற உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை மத்திய மாகாணம், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் உள்ள கால்நடை வசதிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் பால் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையும், அதன் மூலம் இலங்கையில் உள்ள சிறு அளவிலான பால் விவசாயிகளின் மேம்பட்ட வாழ்வாதாரத்தின் மூலம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மைல்கல் திட்டங்கள் இலங்கையை ஆதரிப்பதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வளர்ப்பதற்கும் பங்களிக்கின்றன. https://www.virakesari.lk/article/226416
-
கண்ணாடி பார்க்கும் போதே கழுத்து மூலம் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்வது எப்படி?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தடிமனான கழுத்து உடல்நலப் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 29 செப்டெம்பர் 2025, 04:10 GMT மக்கள் பெரும்பாலும் உடல் பருமனை அதிக எடை அல்லது தொப்பை கொழுப்புடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். இதுபோன்ற உடல் பருமனால் பெரும்பாலானோர் பீதியடைந்து எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி உணர்த்தும் உடல் உறுப்புகளில் கழுத்தும் முக்கியமானதாகும். ஆனால் மக்கள் பொதுவாக இதில் கவனம் செலுத்துவதில்லை. கழுத்துப் பகுதி முகத்திற்கு கீழ் இருப்பதாலும் எளிதில் பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாலும், கழுத்தில் கறை தென்பட்டாலோ, நிறம் மாறினாலோ பொரும்பாலானோர் அதை சரி செய்யவே முயற்சிக்கின்றனர். ஆனால் கழுத்துப்பகுதி வழக்கத்தை விட தடிமனாகவோ, ஒல்லியாகவோ இருந்தால் அது எதை உணர்த்துகிறது? இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட.. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆப்ரிக்க நாடுகளில், கழுத்தை மெல்லியதாக வைத்துக்கொள்ள வளையல்களை கழுத்தில் அணிந்துகொள்வார்கள். மெல்லிய கழுத்து என்பது எப்போதும் அழகுடன் தொடர்புடைய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதை மெருகேற்றிக் காண்பிக்க பலரும் ஆபரணங்களை அணிவதுண்டு. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களின் கழுத்தை அழகாக காண்பித்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஒரு சில ஆப்ரிக்க நாடுகளில், கழுத்தை மெல்லியதாக வைத்துக்கொள்ள வளையங்களை கழுத்தில் அணிந்துகொள்வார்கள். இதனால் கழுத்து மெல்லியதாகவும் நீளமாகவும் இருக்கும் என நம்புகின்றனர். கழுத்தை வசீகரமாக மாற்ற மக்கள் உடற்பயிற்சி மையங்களை நாடி பிரத்யேக உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் மாற்றம் இயல்பானதுதான். ஆனால் நம் உடலை விட கழுத்துப்பகுதி மெல்லியதாகவோ, தடிமனாகவோ இருந்தால், அது பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். தடிமனான கழுத்து எதை உணர்த்துகிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெண்களின் கழுத்துச் சுற்றளவு 33 முதல் 35 செ.மீ ஆக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டெல்லியில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் சிவ் குமார் சரின் தனது 'On Your Body' என்ற புத்தகத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். "பொதுவாக பெண்களின் கழுத்துச் சுற்றளவு 33 முதல் 35 செ.மீ ஆகவும், ஆண்களுக்கு 37 முதல் 40 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும். இதைவிட கூடுதலாக இருந்தால் நோய் அறிகுறியாக இருக்கலாம்" என பிபிசியிடம் கூறினார். கழுத்தின் தடிமனை வைத்து நோய்களை கண்டறிவது தொடர்பாக நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரைப்பை குடலியல் இணை பேராசிரியர் டாக்டர் ஷாலிமர் இதுகுறித்து பேசுகையில், "கழுத்துப் பகுதியில் கொழுப்பு சற்று அதிகமாக இருந்தாலோ அல்லது கழுத்து குட்டையாக இருந்தாலோ பெரும்பாலும் கல்லீரலில் கொழுப்பு அல்லது உடல்பருமன் போன்ற பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். சில சமயங்களில் இவர்கள் அதிகமாக குறட்டை விடுவார்கள்" என்றார். ஒருவரின் கழுத்து வழக்கத்தை விட தடிமனாக இருந்தால் அது வளர்சிதை மாற்ற நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகராகரான டாக்டர் மோஹ்சிம் வாலி கூறுகையில், "தடிமனான கழுத்து இருக்கும் நபர்களுக்கு அதிக கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு, நீரிழிவு நோய், அதிக ரத்தக்கொதிப்பு இருக்கலாம். இதற்கு தனி பரிசோதனைகள் தேவை" என்கிறார். தடிமனான கழுத்து உடல் பருமனுக்கான அறிகுறியாகவும் இருக்கக்கூடும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தடிமனான கழுத்து உடல் பருமனுக்கான அறிகுறியாகவும் இருக்கக் கூடும். "ஒரு பெண்ணின் கருப்பை வாய் தடிமனாக இருந்தால், அது பாலிசிஸ்டிக் கருப்பை (polycystic ovary) நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். கருப்பையில் கட்டிகள் உண்டாகலாம். இது தீவிர பிரச்னைக்கு வழிவகுக்கும். சீரற்ற மாதவிடாய் மற்றும் கருவுறுதலில் பிரச்னை போன்றவையும் இதில் அடங்கும்" என மோஹ்சிம் வாலி கூறுகிறார். சில நோய்களால் கழுத்து தடிமனாக இருப்பவர்களுக்கு கழுத்தின் பின்புறம் கருப்பாக மாறலாம். இந்தக் கருமையான கழுத்து என்பது சருமப் பிரச்னையை தாண்டி வேறு ஏதேனும் மருத்துவ பிரச்னைக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம். புனேவில் உள்ள டி.ஒய். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அமிதவ் பானர்ஜி இது குறித்து பேசுகையில், "ஒருவரின் கழுத்து வழக்கத்தை விட தடிமனாக இருந்தால், அவருக்கு உடல்நலப் பிரச்னை இருப்பதை குறிக்கும். குறிப்பாக அவர் உடல் பருமனை நோக்கிச் செல்கிறார் என அர்த்தம். உடல் பருமன் என்பது நிறைய நோய்களை உள்ளடக்கியுள்ளது." என்றார். "ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் இரண்டு பேரின் உடல் அமைப்பு ஒரே மாதிரியாகத் தெரிந்தால், அதாவது, எடை அடிப்படையில் இருவரும் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அவர்களில் ஒருவரின் கழுத்து தடிமனாக இருந்தால், அவரது உடலில் அதிக கொழுப்பு உள்ளது என்றும், அவர் உடல் பருமனை நோக்கி நகர்கிறார் என்றும் அர்த்தம்." என்கிறார் அமிதவ் பானர்ஜி. மெல்லிய கழுத்து உணர்த்துவது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மெல்லிய கழுத்து தைராய்டு தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மெல்லிய கழுத்து பொதுவாக அழகுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் இது தைராய்டு தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மெல்லிய கழுத்து உடையவர்களுக்கு பெரும்பாலும் கூடுதல் முதுகெலும்புகள் இருக்கும். முதுகு தண்டுவடத்தில் பொதுவாக ஒருவருக்கு 7 முதுகெலும்புகள் இருக்கும். சிலருக்கு இது 8 ஆக இருக்கும். அதாவது ஒருவருக்கு கையில் 5 விரல்களுக்கு பதில் 6 விரல்கள் இருக்கிறதல்லவா. அதுபோலதான் இதுவும். முதுகு தண்டுவடத்திற்கு முதுகெலும்புதான் முக்கியமாக உள்ளது. முதுகு தண்டுவடம் மற்றும் நரம்புகளுக்கு இதுதான் பாதுகாப்பு அளிக்கிறது. "மெல்லிய கழுத்து பொதுவாக எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. ஆனால் சில சூழல்களில் கூடுதலாக ஒரு முதுகெலும்பு தென்படும் போது (8 ஆக இருக்கும்போது) கைகளில் உணர்ச்சியற்ற தன்மை போன்ற பிரச்னைகள் இருக்கும்" என மருத்துவர் வாலி கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரத்தசோகையால் கூட சிலரின் கழுத்து வழக்கத்தை விட மெல்லியதாக தென்படலாம். "சில சமயங்களில் ரத்த சோகையால் கூட (anemia) சிலரின் கழுத்து வழக்கத்தை விட மெல்லியதாக தென்படலாம். இவர்களுக்கு இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அளிக்கப்படுகின்றன. சில சமயங்களில் ரத்தத்தை மாற்ற வேண்டிய தேவையும் (blood transfusion) ஏற்படுகிறது" என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் அடேரியா நிகர்சந்திரா. சில சமயங்களில் இது மரபணு ரீதியாகவும் இருக்கலாம் என்றார் அவர். தந்தைக்கு நீளமான மற்றும் மெல்லிய கழுத்து இருந்தால், மகனுக்கும் அதேபோல இருக்கலாம். பெரும்பாலும் மெல்லிய கழுத்து உடையவர்களுக்கு பிரத்யேக பிசியோதெரபி சிகிச்சை வழங்க ஆலோசிக்கப்படுகிறது. அவர்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு மருந்துகள் மூலமாகவோ, மற்ற வழிகளிலோ சமன் செய்யப்படும். இதன்மூலம் அவர்களின் கழுத்து தசைகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். வழக்கத்தை விட தனது கழுத்து தடிமனாக இருப்பதைப் போல ஒருவர் கருதினால் உடனடியாக அவர்கள் தங்களின் உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதனால் அவர்கள் தங்களின் உணவு முறையில் தனி கவனம் செலுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள். உங்களின் உடல் அல்லது ஆரோக்கியம் ஆபத்தை நோக்கி செல்கிறதா என்பது தெரியவேண்டும் என்றால் எப்போதெல்லாம் கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்களோ, அப்போது உங்களின் கழுத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gw74wlew7o
-
இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு மத நிகழ்ச்சித் தொடர் ஆரம்பம்
இராணுவக் கொடிகளுக்கு ஸ்ரீ தலதா மாளிகையில் ஆசீர்வாதம் 29 Sep, 2025 | 03:15 PM இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இராணுவக் கொடிகளுக்கு ஸ்ரீ தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெறும் விழா ஞாயிற்றுக்கிழமை (28) கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில் நடைபெற்றது. இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/226414
-
கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் - இருவர் படுகாயம்
கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmg4ur31g00q5o29nv8jqz4zn
-
திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு -
திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்க திரைப்படத்துறையை வௌிநாடுகள் திருடியுள்ளதாக அவர் கூறியுள்ளது. இது குழந்தையிடம் இருந்து மிட்டாயினை பறிப்பது போன்ற செயலாகும் என குறிப்பிட்டுள்ளார். எனவே அமெரிக்காவுக்கு வௌியில் வௌிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியினை விதிப்பதாக அறிவித்துள்ளார். அவரது கவனம் ஹொலிவுட்டில் இருந்தபோதிலும், இந்த அறிவிப்பு அனைத்து வெளிநாட்டு படங்களையும் குறிவைப்பதால், இந்திய சினிமாவும் தாக்கத்தை உணரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவிற்கு அமெரிக்கா ஒரு முக்கியமான சந்தையாகும். வெளிநாட்டு வசூலில் இது 30-40% பங்களிப்பதாகவும், தெலுங்கு படங்களுக்கு, தெலுங்கானாவிற்குப் பிறகு இரண்டாவது பெரிய சர்வதேச சந்தையாகவும் அமெரிக்கா உள்ளது. இந்த படங்கள் பொதுவாக அமெரிக்கா முழுவதும் 700-800 இடங்களில் வெளியிடப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில், இந்திய படங்கள் மொத்தமாக அமெரிக்க பொக்ஸ் ஒபிஸில் சுமார் 160–170 மில்லியன் அமெரிக்க டொலரை வசூலித்தன. அதிக வருமானம் ஈட்டிய படங்களில் பாகுபலி 2 ($22 மில்லியன்), கல்கி ($18.5 மில்லியன்), பதான் ($17.49 மில்லியன்), RRR ($15.34 மில்லியன்) மற்றும் புஷ்பா 2 ($15 மில்லியன்) ஆகியவை அடங்கும். 100% வரி இந்த வருவாய்களை கணிசமாகக் குறைக்கலாம், விநியோக ஒப்பந்தங்களை சீர்குலைக்கலாம் மற்றும் அமெரிக்க சந்தைக்கான வெளியீட்டு உத்திகளை மறுபரிசீலனை செய்ய ஸ்டுடியோக்களை கட்டாயப்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmg573m7y00qho29nkmd6insx
-
ஜனாதிபதி இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்
29 Sep, 2025 | 01:28 PM ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று திங்கட்கிழமை (29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை (Shigeru ISHIBA) சந்தித்து கலந்துரையாடல் நடத்த உள்ளார். இதன்போது, இரு நாடுகளின் பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர். https://www.virakesari.lk/article/226399
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்
-
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை
திறந்து மறுநாளே மூடப்பட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம்; மூன்றரை வருடங்களுக்கு பின் நாளை மீண்டும் அங்குரார்ப்பணம் 29 Sep, 2025 | 10:45 AM யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வர்த்தக வாணிப பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. விவசாயிகள் தமது அறுவடைகளுக்குத் தகுந்த விலையை பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோர் மலிவு விலையில் மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. 2022இல் திறந்துவைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் மறுநாளே மூடப்பட்டது. அதன் பின்னர் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலாக பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள், கடைக்கான முற்பணத்தை வழங்கியபோதும் இதுவரை வியாபார நடவடிக்கை நடைபெறவில்லை. அந்தப் பகுதியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும். விவசாயிகளுக்கும் தென்பகுதி வியாபாரிகளும் இந்த வியாபார நிலையத்தை நோக்கி வருவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக தமக்கு சில சலுகைகளை வழங்கவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்தின் பின் இந்த பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/226376
-
பூநகரியில் விபத்து; 5 வயது சிறுமி பலி!
Published By: Digital Desk 1 29 Sep, 2025 | 10:30 AM பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18வது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூநகரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உடன் பயணித்த சிறுமியும் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226373
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றாலும் கோப்பையை வாங்காத இந்தியா - சூர்யகுமார் கூறியது என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் 41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி, பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பை வென்றுள்ளது. துபை சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான பைனலில், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நடப்பு ஆசிய கோப்பையில், மூன்றாவது முறையாக பாகிஸ்தான் உடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா நீக்கம் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த பாண்ட்யா, முழு உடற்தகுதியை எட்டாததால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, கடந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஷிவம் துபே மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆல்ரவுண்டர் பாண்ட்யா இல்லாததால் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, அதிரடி ஃபினிசர் ரிங்கு சிங் உள்ளே கொண்டுவரப்பட்டார். பாகிஸ்தான் அணி, கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது. நேற்றைய ஆட்டத்திலும் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டனுடன் மட்டும் ரவி சாஸ்திரி உரையாடினார். பாகிஸ்தான் கேப்டனுடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பேசினார். பட மூலாதாரம், Getty Images பவர்பிளேவில் அசத்திய ஃபர்ஹான்–ஜமான் ஹர்திக் பாண்ட்யா இல்லாததால், முதல் ஓவரை துபே வீசினார். வழக்கமாக பவர்பிளேவில் சொதப்பும் பாகிஸ்தான், நேற்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடியது. ஃபர்ஹான் தாறுமாறாக பேட்டை சுழற்றியும் முதல் இரு ஓவர்களில் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தன. துபே ஓவரை குறிவைத்து தாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் களமிறங்கியது போல இருந்தது. ஆனால், தன்னால் முடிந்த வரையில் துபே கட்டுப்பாட்டுடன் வீசி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். பும்ராவின் இரண்டாவது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்சர் விளாசிய ஃபர்ஹான், டி20 கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் 3 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிரடி காட்டிய ஃபர்ஹானுக்கு மற்றொரு தொடக்க வீரர் ஜமான் உறுதுணையான நிற்க, பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம், Getty Images அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் நடப்பு ஆசிய கோப்பையில் இந்தியாவின் துருப்பு சீட்டாக திகழும் குல்தீப் யாதவ் தனது முதல் இரு ஓவர்களில் 23 ரன்களை கொடுத்தார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 57 ரன்கள் குவித்த ஃபர்ஹான் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி கைப்பற்ற, ஆட்டத்தில் முதல் திருப்புமுனை ஏற்பட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு நடப்பு தொடரில் நான்கு முறை ' டக் அவுட்' ஆன சைம் அயூப் களமிறங்கினார். ட்ரிங்க்ஸ் இடைவேளைக்குப் பிறகு துபே ஓவரில் சைம் அயூப் இரு பவுண்டரிகளை விளாச, 12–வது ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்களைத் தாண்டி நல்ல நிலையில் இருந்தது. குல்தீப் யாதவ் பந்தில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து சைம் அயூப் (14) ஆட்டமிழக்க, நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹாரிஸ், அக்சர் படேலின் அடுத்த ஓவரிலேயே ரன் ஏதுமின்றி நடையைக் கட்டினார். பட மூலாதாரம், Getty Images ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், வருண் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்சர் அடிக்கும் முயற்சியில் ஜமான் (46) பாயிண்ட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்தார். அக்சர் படேலின் அடுத்த ஓவரில் தலத்தும் (1) பெவிலியன் திரும்ப, தனது கடைசி ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, ஷாஹின் ஷா அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப் என 3 விக்கெட்டுகளை குல்தீப் தூக்கினார். பந்து உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்ற குழப்பத்திலேயே 3 விக்கெட்டுகளும் விழுந்தன. அடுத்த ஓவரில் ஹாரிஸ் ராஃப்பை பவுல்டாக்கிய பும்ரா, விமானம் வீழ்வது போல சைகை காண்பித்து அவர் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இப்படியாக, தொடர்ச்சியாக 6 ஓவர்களில் விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது. இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் விக்கெட்டை பும்ரா கைப்பற்ற, 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 9 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு பறிகொடுத்தது மரண அடியாக அமைந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பட மூலாதாரம், Getty Images பைனலில் ஏமாற்றிய அபிஷேக் சர்மா 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கடைசி இரு ஆட்டங்களில் அப்ரிடியின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அபிஷேக் சர்மா, இந்தமுறை இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த தொடரில் இந்தியா அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் அபிஷேக் சர்மா (5) விக்கெட்டை, இரண்டாவது ஓவரிலேயே ஒரு குறைவேகப்பந்தில் ஃபஹீம் அஷ்ரஃப் கைப்பற்றினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஃபார்மில் இல்லாத கேப்டன் சூர்யகுமார் யாதவ், அடுத்த ஓவரிலேயே அப்ரிடியின் குறைவேகப்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பிட்ச்சின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை கூடக் குறைத்து மாற்றி மாற்றி வீசினர். ஃபஹீம் அஷ்ரஃபின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக ஒரு கட்டர் பந்தில் கில்லும் (12) ஆட்டமிழக்க, ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம்சன், திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ச்சியாக மூன்றாவது ஓவரை வீசிய ஃபஹீம் அஷ்ரஃப் பந்துவீச்சில் திலக் வர்மா, பவுண்டரியும் சிக்சரும் விளாச, பவர்பிளே முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம், Getty Images ஆபத்பாந்தவனாக மாறிய திலக் வர்மா பவர்பிளேவுக்குப் பிறகு இந்திய அணியின் மீது சுழல் தாக்குதலை பாகிஸ்தான் தொடுக்க, திலக், சாம்சன் இருவரும் நிதானமாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை காட்டினர். இந்திய வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி, செட்டில் ஆக கூடாது என்பதற்காக முதல் 10 ஓவர்கள் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். தேவைப்படும் ரன் ரேட் உயர்ந்தபடி இருந்ததால், அதிரடியை தொடங்கிய சாம்சன் அயூப் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் ஒரு அபார சிக்சர் அடித்தார். ஆனால், லெக் ஸ்பின்னர் அப்ரார் வீசிய அடுத்த ஓவரில், இன்சைட் அவுட் ஷாட் அடிக்க முயன்று 24 ரன்களில் பாயிண்டில் ஃபர்ஹானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 6–வது விக்கெட்டுக்கு துபே இயங்கிய நிலையில், ஹாரிஸ் ராஃப் வீசிய 15–வது ஓவரில் 1 சிக்சர் 2 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களை இந்தியா குவித்தது. கடைசி 30 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்ரார் அஹமது, ஹாரிஸ் ராஃப் ஓவர்களில் துபே சிக்சர்கள் விளாசினார். 12 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த துபே (33), ஃபஹீம் பந்தில் லாங் ஆஃப் திசையில் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம், Getty Images கடைசி ஓவரில் என்ன நடந்தது? கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட, நடப்பு தொடரில் முதல்முறையாக ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்ற ரிங்கு சிங் களம்புகுந்தார். குறைவான ஓவர் ரேட் காரணமாக உள்வட்டத்தில் கூடுதல் பில்டர் நிற்க வைக்க பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டது. ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் பந்தில் திலக் வர்மா இரு ரன்கள் ஓட, அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் அடித்து ஆட்டத்தை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார். மூன்றாவது பந்தில் திலக் வர்மா சிங்கிள் எடுத்த நிலையில், ஸ்கோர் சமமானது. நான்காவது பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி விளாச, ஒன்பதாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. வழக்கத்துக்கு மாறாக டாப் ஆர்டர் கைகொடுக்காத நிலையில், கடைசி வரை நிலைத்து நின்று விளையாடிய திலக் வர்மா 69 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஆட்டத்தை வென்றளித்தார். பட மூலாதாரம், Getty Images ஏன் இந்தியா கோப்பையை வாங்க மறுத்தது? ஆசிய கோப்பை பைனலில் கடைசி ஓவர் திரில்லரில் வென்ற பிறகும், இந்திய அணிக்கு கோப்பையும் மெடலும் வழங்கப்படாதது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மொஷின் நக்வி. இவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் செபாஷ் ஷெரீப் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருக்கிறார். வெற்றிபெறும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மொஷின் நக்விதான் வெற்றிக் கோப்பையை வழங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய அணி நிர்வாகம், ஆசிய கோப்பை மற்றும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் மெடல்களை மொஷின் நக்வியிடம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் நேரப்படி ஆட்டம் 10.30 மணிக்கே முடிவடைந்த போதும், நள்ளிரவு வரை பரிசளிப்பு நிகழ்ச்சி தாமதமானது. தாமதமாக தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மட்டும் நக்வியிடம் இரண்டாமிடம் (runners-up) பிடித்த அணிக்கான காசோலையை பெற்றுக்கொண்டார். பட மூலாதாரம், Getty Images ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும் தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் பெற்றுக்கொண்டனர். இந்திய அணியினர் விருது பெறும்போது மொஷின் நக்வியை தவிர்த்து மற்ற அனைவரும் கை தட்டினர். இந்திய அணி மீது பாகிஸ்தான் கேப்டன் விமர்சனம் இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல; அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்." என்றார். தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் கைகுலுக்கிய சூர்யகுமார் யாதவ், கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுப்பதாக சல்மான் அகா குற்றம்சாட்டினார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி, அவர் அப்படி நடந்துகொண்டார் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பது ஓர் அணியாக எடுத்த முடிவு என்று தெரிவித்த சூர்யகுமார், இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தங்களுக்கு யாரும் அறிவுறுத்தவில்லை என்றார். சூர்யகுமார் கூறியது என்ன? பரிசளிப்பு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்." எனக் கூறினார். மொஷின் நக்வி நடந்துகொண்ட விதம் குறித்து நவம்பரில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் முறையிட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இப்படியாக, சர்ச்சையுடன் தொடங்கிய ஆசிய கோப்பை, எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காணப்படாமல் மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையுடனே முடிந்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn95e9pvz20o
-
கால்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில் கைது செய்யப்பட்டபோது வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியும் தெரிவிப்பு
28 Sep, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (28) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, தான் சிறையில் இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய பங்களிப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து விசாரித்தார் என்றும் ஐக்கிய தேசிய கட்சி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226339