Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ரணில் விக்கிரமசிங்க கைது சரியா, தவறா ஆராய போவதில்லை நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் - விமல் வீரவன்ச Published By: VISHNU 24 AUG, 2025 | 08:20 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பொது சொத்து துஷ்பிரயோகம் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை தோளில் சுமந்துக் கொண்டு செல்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று உண்ணும் நிலைக்கு ஜனாதிபதி நாட்டை நிர்வகிக்கிறார். ஆளும் தரப்பினர் இழைக்கும் குற்றங்களுக்கு சட்டம் முறையாக செயற்படுத்தப்படுவதில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு சிந்தனைக்கு வருவதில்லை. பொது சொத்துக்கு முறைகேடு குற்றத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். நீதிமன்றத்தின் செயற்பாடுகள் பற்றி நாங்கள் பேச போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளுக்கு உத்தேகமளித்துக் கொண்டு ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/223274
  2. தமிழ் இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தொடர்கிறது Published By: VISHNU 24 AUG, 2025 | 08:17 PM தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது சனிக்கிழமை (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளாக மக்கள் கையெழுத்துப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (24) நாவிதன்வெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது . இக்கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டதுடன் அங்கு கலந்து கொண்ட இந்துசமய குரு தனது கருத்துகளையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார். இன்றைய நிகழ்வில் இந்த நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள், இளைஞர்களிடமும் இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள், பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர். https://www.virakesari.lk/article/223273
  3. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 24 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இதுவரை காலம் பிரிந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எதிர்கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்த எதிர்கட்சியாக உருவாகி வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் முதல் தற்போது வரை எதிர்கட்சிகள் ஒன்றாக கூடி பல்வேறு வகையிலான கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றன. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. கொழும்பிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடாத்தப்பட்டது. இந்த சந்திப்பில் அரசியல் ரீதியில் பல்வேறு வகையில் கடந்த காலங்களில் பிளவுப்பட்டிருந்த பெரும்பாலான பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்திருந்தனர். இலங்கை வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்திருந்த வரலாறு காணப்படுகின்றன. எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே கூட்டு எதிர்கட்சியாக களமிறங்க முயற்சிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக போராடிய தரப்பினர், இன்று ராஜபக்ஸ தரப்புடன் இணைந்தவாறு ஓரணி திரண்டுள்ளமை முக்கிய வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது. ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் நடாத்திய ஊடக சந்திப்பு பட மூலாதாரம், UNP MEDIA படக்குறிப்பு, இலங்கையில் பிளவுபட்டுக் கிடந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன அரசியல் ரீதியில் பிளவுப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து, விசேட ஊடக சந்திப்பொன்றை கொழும்பில் நடாத்தியிருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான பல கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர். அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்கட்சிகள் கூட்டணியாக ஒன்றிணைந்து, இன்றைய தினம் இந்த ஊடக மாநாட்டை நடத்தியிருந்தன. பட மூலாதாரம், UNP MEDIA ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ''எமது நாடு தற்போது செல்கின்ற பயணத்தில் நாட்டில் ஜனநாயகம் என்பது தொடர்பில் இன்று கேள்வி எழும்பியுள்ளது. ஜனநாயக சமூகத்தில் இருக்கின்ற அறிகுறிகள், சிறிது சிறிதாக அழிவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் சவப் பெட்டியின் பலகைகளை ஒன்று சேர்க்கும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது. அரசியல்வாதி ஒருவர் சிறையில் இருக்காத பட்சத்தில், அந்த அரசியல் வாழ்க்கை முழுமையடையாது. எனினும், தற்போது எழுந்துள்ள நிலைமையானது மிகவும் பாரதூரமானது. ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்துக்கொள்வதற்காக நாங்கள் ஜனநாயக ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செய்வோம்.'' என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஆதரவை, ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கியுள்ளார். தவிர்க்க முடியாத காரணத்தினால் ஊடக சந்திப்பிற்கு வர முடியாத சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, விசேட அறிக்கையொன்றை ஊடக சந்திப்பிற்கு அனுப்பிய நிலையில், அதனை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல வாசித்தார். அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் எதிர்ப்பு வெளியிடுவதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் பிரிட்டன் விஜயம் தொடர்பில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவூட்டியிருந்தார். விக்ரமசிங்க அரசாங்க செலவில் பயணம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். ''வோல்வஹம்ப்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பில் சில தெளிவின்மை காணப்படுகின்றது. இந்த இடத்தில் இரண்டு சம்பவங்கள் காணப்படுகின்றன. ஒன்று தான் விருந்துபசாரம். விருந்துபசாரமானது வோல்வஹம்ப்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை 25 வருடங்கள் தொடர்ச்சியாக வகித்த ஸ்வராஜ் பால் ஆண்டகையை கௌரவிக்கும் வகையில் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிலிட்ஸ் இந்தியா ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி என்ற முறையில் இதில் கலந்துக்கொண்டார் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. '' என்று ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார். மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டார். ''ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கை தொடர்பில் இணக்கம் இருக்க முடியும். இல்லாதிருக்கவும் முடியும். அது தொடர்பில் நாங்கள் இந்த இடத்தில் பேச வரவில்லை. 6 மாதத்தில் நாட்டை சீர்செய்வதாக பொய் கூறி அதிகாரத்தை கைப்பற்றிய அரசாங்கத்தினால், தற்போது ஒன்றுமே செய்துக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்துக்கொள்ளும் போது தனது எதிர் தரப்பை அடக்குமுறைக்கு உட்படுத்தி, தமது அதிகார இருப்பை தக்க வைத்துக்கொள்ள அந்த தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த நடவடிக்கையை எமது கட்சி வன்மையை கண்டிக்கின்றது. தமது அரச இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக எதிர் அணியினரை அடக்குமுறைக்கு உட்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.'' என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாகர காரியவசம் தெரிவிக்கின்றார். "விசாரிக்க வேறு காரணங்கள் இருக்கின்றன" இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கருத்து வெளியிட்டார். ''இன்று கூட்டு எதிர்கட்சிகளாக ஒன்று சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கடுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சமகாலத்தில் பட்டலந்த வதை முகாம் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. மத்திய வங்கி ஊழல் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இவற்றை எல்லாம் மக்கள் முன்னால் வைத்து நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி தான் இன்று அநுர குமார திஸாநாயக்கவின் ஜே.வி.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதை செய்யுங்கள். அதை செய்வீர்களேயானால், நான் நினைக்கின்றேன். இன்று கூடியிருக்கின்ற இந்த எதிர்கட்சிகள் இவ்வாறான ஊடக சந்திப்பை செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்கான அவசியம் வந்திருக்காது. ஏனென்றால், ரணில் விக்ரமசிங்க மீது இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்திய கட்சிகளில் பெரும்பாலானோர் இங்கும் இருக்கின்றார்கள். பிரச்னையில்லை. ஆனால் இதுவென்ன. நாட்டில் ஒரு விவாதம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி பதவி எங்கே முடிகின்றது. தனிப்பட்ட செயற்பாடு எங்கே ஆரம்பிக்கின்றது என்ற அந்த விவாதம் நடக்கின்றது. வெள்ளிகிழமையில் கைது செய்து, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று, மின்சாரத்தை துண்டித்ததை நாம் அவதானித்தோம். விளையாட வேண்டாம் என நண்பர் அநுர குமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றேன். பிரிட்டனில் செலவிட்ட பணத்தை மீள செலுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கலாம். மீள் செலுத்தும் முறையொன்று நாட்டில் உள்ளது. ஒன்று செலுத்துவார், அல்லது முடியாது என கூறுவார். அதன்பின்னர் நீதிமன்றம் சென்றிருக்கலாம். அவ்வாறு செய்யாது, இழுத்துக் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனாலேயே எதிர்கட்சியாகிய நாம் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி இந்த இடத்தில் ஒன்றிணைந்துள்ளோம்.'' என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார். முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒன்றிணைவு இலங்கையின் 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.எம்.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிறைவேற்று ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்ததுடன், தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரசியல் பேதங்களினால் பிரிந்திருந்த அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் இன்று ஒரு இடத்திற்கு வருகைத் தந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து, தற்போது அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளியிட முயற்சித்து வருகின்றனர். ரணில் விக்ரமசிங்க ஏன் கைது செய்யப்பட்டார்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை வரும் 26ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து அதிகாரபூர்வ விஜயமாக கியூபா சென்ற அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து அமெரிக்கா நோக்கி பயணித்திருந்தார். அதிகாரபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ரணில் விக்ரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக பிரிட்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை அமெரிக்காவிலிருந்து மேற்கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக செலிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்திருந்தார். இதன்படி, இந்த பிரிட்டன் விஜயத்திற்காக ரணில் விக்ரமசிங்க 166 லட்சம் இலங்கை ரூபாவை அரச நிதியிலிருந்து செலவிட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவரது மனைவியான மைத்திரி விக்ரமசிங்க, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா, மருத்துவர் ஒருவர் மற்றும் 10 போலீஸ் அதிகாரிகள் இந்த விஜயத்தில் அடங்கியிருந்ததாகவும் அவர் கூறுகின்றார். ஒன்றரை நாள் விஜயத்தின் போது வாகனத்திற்காக 4,475,160 ரூபாவும், வாகனத்திற்காக முற்கொடுப்பனவாக 14 லட்சம் ரூபாவும், உணவு மற்றும் குடிபானத்திற்காக 13 லட்சத்திற்கும் அதிக பணமும், ஹோட்டல் வசதிகளுக்காக 34 லட்சம் ரூபாவும், விமான நிலைய விசேட பிரமுகர் பிரிவிற்காக 6000 பிரிட்டன் பவுண்டும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் செலவிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் அறிவித்திருந்தார். அத்துடன், இந்த விஜயத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்காக போலீஸ் திணைக்களம் 3,274,301 ரூபாவை செலவிட்டுள்ளதுடன், பிரத்தியேக செயலாளராக செயற்பட்ட சென்ரா பெராராவிற்கு 39,000 ரூபாவை வழங்கியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ரீதியில் நாடு பாதிக்கப்பட்டிருந்த தருணத்தில், அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் அரச நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தனிப்பட்ட விஜயத்திற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தவறான செயற்பாடு என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் 26ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ரணிலின் உடல் நிலை எப்படி இருக்கின்றது? நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிக இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணிநேரமும் விசேட மருத்துவ குழுவினரால் ரணில் விக்ரமசிங்க கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ரூக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார். '' முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தற்போது நான் பார்வையிட்டேன். அவரின் உடல் நிலைமை ஓரிரு தினங்களில் வழமைக்கு வரக்கூடும். சரியாக சிகிச்சைகள் வழங்காத பட்சத்தில் நோய் அறிகுறிகள் மேலும் அதிகரிக்கக்கூடும். உடலில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன. 3 நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். அவரை விசேட மருத்துவ குழாம் பார்த்துக்கொள்கின்றது. அதிதீவிர சிகிச்சை பிரிவிலுள்ள ஒருவருக்கு நீதிமன்றத்திற்கு வருகைத் தர முடியாது. அன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மணிநேரத்திற்கு மேல் அவர் காத்திருந்திருக்கின்றார். அன்று மின்சாரமும் இருக்கவில்லை. தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டார் போல தெரிகின்றது. அதனால், உடலில் சில நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அதிக உஷ்ண நிலைமை போன்றதொரு காரணம் என கூற முடியும். அவரை நாங்கள் சரியாக பார்த்துக்கொண்டால், ஓரி இரு தினங்களில் வழமை நிலைமைக்கு திரும்புவார். அவ்வாறு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை வழங்கப்படாத பட்சத்தில், இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.'' என மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ரூக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார். அரசாங்கத்தின் பதில் பட மூலாதாரம், NALINTHA JAYATHISSA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளில் தலையிடவில்லை என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளில் தமது அரசாங்கம் எந்தவிதத்திலும் தலையீடு செய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார். ''குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெரிவித்திருந்தது. அதன்படி, நீதிமன்றம் தீர்மானமொன்றை எடுத்தது. நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை பேணப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடு செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசாரணைகள் மற்றும் நீதிமன்றம் நடவடிக்கைகள் சுதந்திரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டு பிரஜையொருவருக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கை இதனூடாக அதிகரித்துள்ளது. எந்தவொரு நபருக்கும் நாட்டின் நீதித்துறை பொதுவானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றே நான் அதனை கருதுகின்றேன்.'' என அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gzy3743k8o
  4. வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 ஆவது விளையாட்டுத்திருவிழா : மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனை படைப்பு 23 AUG, 2025 | 02:26 PM 2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 16வது விளையாட்டுத்திருவிழா 16.08.2025 தொடக்கம் 20.08.2025 வரை ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 05 தங்கப்பதக்கம், 03 வெள்ளிப்பதக்கம், 04 வெண்கலப்பதக்கம், 02 நான்காம் இடம், 03 ஐந்தாம் இடம், 01 ஆறாம் இடத்தினை பெற்று மொத்தமாக 102 புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் அஞ்சல் ஓட்ட சம்பியன் ஆகவும் 14 வயது மற்றும் 20 வயது பிரிவில் வடமாகாண சிறந்த அணி என்னும் விருதையும் தட்டி சென்றுள்ளது. மேலும் 14 வயது 4×100 மீற்றர் அஞ்சல் அணி 51.9 செக்கன்களில் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது. https://www.virakesari.lk/article/223182
  5. வேப்பங்கொட்டையால் விபரீதம் : மின்னல் தாக்கி சகோதரிகள் பலி..! 24 AUG, 2025 | 09:19 AM தமிழகத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9), அஸ்பியா 9ம் வகுப்பும், சபிக்கா 5ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று சனிக்கிழமை (23) பாடசாலை விடுமுறை என்பதால், ஊருக்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் தாயாருடன் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்றுள்ளனர். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மதியம் திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மரத்தடியில் நின்ற அக்கா, தங்கை மீது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகினர். தகவல் அறிந்த சத்திரக்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு ராமநாதபுரம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் உயிர்கள் மின்னல் தாக்கி பலியான சம்பவம், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/223223
  6. 23 AUG, 2025 | 03:34 PM (எம்.நியூட்டன்) உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பெய்ரூன் தலைமையிலான குழுவினர், ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (22) மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து முன்னணியில் உள்ளமையை சுட்டிக்காட்டினார். மிக நீண்டகால அனுபவம் உள்ள தாய்லாந்து இது தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாணம் விவசாய மற்றும் கடலுணவு உற்பத்திகளில் போதிய திறனைக் கொண்டுள்ளபோதும் இரு துறைகளில் விலைத்தளம்பல் இருக்கின்றது என்று ஆளுநர் குறிப்பிட்டார். இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமையும் இருக்கின்றது என்றும் தெரிவித்தார். இதை மாற்றியமைப்பதற்கு உற்பத்திப் பொருட்கள் அதிகளவில் கிடைக்கப்பெறும்போது அதை பதப்படுத்துவதற்கோ அல்லது பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கோ உரிய வாய்ப்புக்கள் இல்லை என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தில் அனுபவமுள்ள தாய்லாந்து முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதன் ஊடாக பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய முடியும் என ஆளுநர் குறிப்பிட்டார். இந்த விடயத்தை சாதகமாக அணுகுவதாக தூதுவர் பதிலளித்தார். அத்துடன் வேலை வாய்ப்பு தொடர்பான விடயத்தில், தாய்லாந்தில் பல இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்ட தூதுவர் வடக்கு மாகாண இளையோரும் அந்த வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், சுற்றுலாத்துறை தொடர்பிலும் தாய்லாந்து தூதுவர் கவனம் செலுத்தினார். அதற்கான உட்கட்டுமானங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார். வடக்கு மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளமையை சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த கால போர் காரணமாக அந்த மாவட்டம் மேலெழுந்து வருவதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். போதுமான வளங்கள் அந்த மாவட்டத்திலுள்ளபோதும் அதைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளமையும் தெளிவுபடுத்தினார். https://www.virakesari.lk/article/223176
  7. பட மூலாதாரம், X கட்டுரை தகவல் ஓமர் சலிமி பிபிசி உருது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம். எந்த அமைப்புகளையும் மாற்றாமல், இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என பலரும் குழப்பமடைந்துள்ளனர். சிலர் தங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர். ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இது குறித்த தகவல்களை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த மாற்றங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆப்பிள் போன்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், அந்த போன்களைப் பயன்படுத்துபவர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால், ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?, இந்த அமைப்புகள் எவ்வாறு மாற்றப்பட்டன, அவற்றை பழைய படி மாற்ற முடியுமா என்பதற்கான பதில்களைத் தேட முயற்சித்தோம். 'ஹேக்கிங்' செய்யப்பட்டதா? உண்மையான காரணம் என்ன? ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இந்த பிரச்னைக்கு பதில்களைத் தேடியுள்ளனர். சிலர் இதை 'ஹேக்கிங்' என்று கூறியுள்ளனர், மற்றவர்கள் இந்த மாற்றம் அரசு நிறுவனங்களின் கண்காணிப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். "வாழ்த்துக்கள், உங்கள் தொலைபேசி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு மென்பொருளும் தானாகவே நிறுவப்பட்டுள்ளது" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் "உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனின் அமைப்புகள் திடீரென்று மாறிவிட்டன. நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார். பட மூலாதாரம், GOOGLE படக்குறிப்பு, பலர் தங்கள் தொலைபேசிகளில் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். ஆனால், போனின் காட்சி அமைப்புகள் மாறியுள்ளதால், அதற்கு 'ஹேக்கிங்' என்றோ, அல்லது அந்த நிறுவனம் உங்கள் புகைப்படங்கள் அல்லது செய்திகளைத் திருடுகிறது என்றோ அர்த்தமல்ல என மற்றொருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மொபைல் போன் நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசிகளைப் புதுப்பிக்கின்றன. இதனால் அவை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறுகின்றன என்பது தான் அவரது கருத்து. இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி ? அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது, அதே நிறுவனத்தால் புதுப்பிக்கவும் படுகிறது (அப்டேட் செய்யப்பட்டுள்ளது ). 'மே 2025' இல், 'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரசிவ்' என்ற புதிய அமைப்பை வெளியிடுவதாக கூகுள் அறிவித்தது. இது கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது, தொலைபேசியின் மென்பொருளையும், அமைப்பையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில் மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது முன்னதாக, எங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் 'மெட்டீரியல் 3D' என்ற வடிவமைப்பில் இயங்கியது. 'இதன் வழக்கமான பயன்பாட்டின் காரணமாக பில்லியன் கணக்கான நபர்கள் அதற்குப் பழக்கமாகிவிட்டனர்' என கூகுள் கூறியது. புதிய அப்டேட்டில் அறிவிப்புகள், வண்ண தீம்கள், புகைப்படங்கள், ஜிமெயில் மற்றும் வாட்ச் போன்ற பல விஷயங்கள் மாற்றப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களும் அதில் ஒரு பகுதியாகும். பயனாளர் அனுமதியின்றி எவ்வாறு மாற்றப்பட்டன? 'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரஸிவ்' என்ற அப்டேட்டின் கீழ், ஆண்ட்ராய்டு போனின் அழைப்பு செயலியுடைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் முதலில் ஜூன் மாதத்தில் சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் அது படிப்படியாக பரவலாக வெளியிடப்பட்டது. அழைப்பு மேற்கொள்ளும் செயலியை மேலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது தான் இதன் நோக்கம் என கூகுள் கூறியது. 'சமீபத்திய' (சமீபத்திய அழைப்புகள்) மற்றும் 'முக்கிய எண்கள்' போன்றவற்றை நீக்கிய கூகுள், அவற்றை 'முகப்பு' என்ற பகுதியில் ஒன்றிணைத்துள்ளது. எனவே இப்போது நீங்கள் அழைப்பு செயலியைத் திறக்கும் போது, 'முகப்பு' மற்றும் 'கீபேட்' என்ற இரண்டு பகுதிகளை மட்டுமே காண்பீர்கள். ஒரே எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளும் இனி ஒன்றாகவோ அல்லது ஒரே இடத்திலோ காட்டப்படாது. யாரை எந்த நேரத்துக்கு அழைத்தீர்களோ அந்த வரிசைப்படி தனித்தனியாகக் காட்டப்படும். இதனால் நீங்கள் அந்த தொடர்பை மீண்டும் மீண்டும் தேட வேண்டிய அவசியம் இருக்காது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பல மொபைல் போன்களில் அழைப்பு மற்றும் டயல் அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பயனர்கள் குழப்பமடைந்தனர், பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது. எத்தனை தவறவிட்ட அழைப்புகள் உள்ளன அல்லது எத்தனை அழைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாகத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று கூகுள் விளக்கியுள்ளது. இதற்குப் பிறகு, மொபைல் போன் உபயோகிப்பவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் 'அழைப்பு' மற்றும் 'இன்-கால்' வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய வடிவமைப்பின்படி, அழைப்பின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போனை உபயோகிப்பவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்கும்போது தற்செயலாக அழைப்புகளைப் பெறவோ அல்லது துண்டிக்கவோ மாட்டார்கள். கூகுளின் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, பலருடைய தொலைபேசி செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் பலருடைய தொலைபேசியில் இந்த அப்டேட்கள் இடம்பெறவில்லை. பட மூலாதாரம், GOOGLE படக்குறிப்பு, கூகுள், போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. சிலர் தங்கள் தொலைபேசிகளில் கூகிள் பிளே ஸ்டோரில் ஆட்டோமேட்டிக் அப்டேட்கள் (தானியங்கி புதுப்பிப்புகளை) ஆன் செய்திருப்பதால், சில செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றன என கூகுள் வலைப்பதிவில் ஒருவர் கூறியுள்ளார். மொபைல் போனை உபயோகிப்பவர்கள், இந்த ஆட்டோமேட்டிக் அப்டேட்டகளுக்கான அனுமதியை ஆப் செய்துவிட்டு, தொலைபேசி செட்டிங்ஸ்க்கு சென்று 'Uninstall Updates' என்பதை கிளிக் செய்து, தொலைபேசி அழைப்பின் காட்சி அமைப்புகளை பழைய நிலைக்கு மாற்றி அமைக்கலாம் என்று அவர் கூறினார். பிரபல மொபைல் நிறுவனமான ஒன்பிளஸும் இதே விளக்கத்தைத் தான் வழங்கியுள்ளது. "ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, "இது ஒன்பிளஸ்ஸிலிருந்து அல்ல, கூகுள் போன் செயலியின் அப்டேட்டில் இருந்து வந்தது. உங்கள் தொலைபேசியில் இருந்த பழைய முறையே பிடித்திருந்தால், அப்டேட்களை நீக்கவும்"என நிறுவனம் பதில் அளித்தது. எனவே, நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்திருந்தால் குழப்பமடைய வேண்டாம். பழைய முறையிலேயே உங்களது போன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த புதிய அப்டேட்களை விரும்பவில்லை என்றால், 'Uninstall Updates'-இன் மூலம் பழைய முறையையே நீங்கள் தேர்வு செய்யலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev2p79depno
  8. 23 AUG, 2025 | 02:16 PM (எம்.நியூட்டன்) ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து "நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் சனிக்கிழமை (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம்" எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம் காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது. மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின் ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும். இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223185
  9. நுவரெலியாவில் குழந்தை துஷ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி 23 AUG, 2025 | 01:25 PM நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பாடசாலை குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து சனிக்கிழமை (23) நுவரெலியா நகரில் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நுவரெலியா நகர வீதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. குழந்தை துஷ்பிரயோகத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், குழந்தை துஷ்பிரயோகத்தை எதிர்க்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விளம்பரப் பலகைகள், பதாகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தி பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பேரணியை சுற்றுச்சூழல் மற்றும் எல்லா இடங்களிலும் வாழும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளின் பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223179
  10. தர்மஸ்தலா: 100க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை, கொலை என புகார் அளித்தவர் கைது - காரணம் என்ன? பட மூலாதாரம், ANUSH KOTTARY/BBC படக்குறிப்பு, வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, புகார்தாரரை அவர் உடலை அடக்கம் செய்ததாகக் கூறும் 17 இடங்களுக்கு அழைத்துச் சென்றது. கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கர்நாடகாவில் தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, கோவில் நகரமான தர்மஸ்தலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்களை சட்டவிரோதமாக அடக்கம் செய்ததாகக் கூறிய முன்னாள் துப்புரவுத் தொழிலாளியை கைது செய்துள்ளது. பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு வட்டாரங்கள் பிபிசி இந்தியிடம் தெரிவித்தன. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர், அங்கிருந்து பத்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த முன்னாள் துப்புரவுப் பணியாளர் காவல்துறை முன் புகார்தாரராகவும் சாட்சியாகவும் ஆஜரானார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் சாட்சியம் அளித்த பிறகு, சாட்சி பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த, இந்த முன்னாள் துப்புரவு பணியாளர் ஒரு மண்டை ஓடு மற்றும் எலும்புகளின் எச்சங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். இதன் மூலம், துப்புரவு பணியாளர் தனது கூற்றுகளை உண்மை என்று நிரூபிக்க முயன்றார். காவல்துறையில் அளித்த புகாரை நியாயப்படுத்த, 1995 முதல் 2014 வரை இறந்த உடல்களை அடக்கம் செய்த இடத்திற்கு தான் சென்றதாக அந்த நபர் கூறியிருந்தார். மேலும் தனது மனசாட்சியைத் திருப்திப்படுத்த இதைச் செய்ததாகவும் அவர் கூறினார். பொய் சாட்சியம் அளிப்பதற்கு என்ன தண்டனை? பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, புகார்தாரர் தலை முதல் கால் வரை கருப்பு நிற உடையணிந்து சாட்சியமளிக்க நீதிபதி முன் ஆஜரானார். கடந்த சில நாட்களாக நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு, சிறப்பு விசாரணைக் குழு அந்த நபரைக் கைது செய்துள்ளது. "அவர் கொண்டு வந்த மண்டை ஓடு மற்றும் எலும்பின் எச்சங்கள், அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய இடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல"என்று ஒரு அதிகாரி கூறினார். அந்த நபர் பெண்ணுடையது எனக் கூறிய மண்டை ஓடு, உண்மையில் ஒரு ஆணுடையது. துப்புரவுப் பணியாளர்கள் ஆதாரமாக கொண்டு வந்த அந்த மண்டை ஓட்டின் தடயவியல் பரிசோதனையில், அது ஆணுடையது என்பது உறுதியாகியுள்ளது என மற்றொரு அதிகாரி குறிப்பிட்டார். "நீதித்துறை நடவடிக்கையில் தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளிப்பவர் அல்லது விசாரணையின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் பொய்யான சாட்சியங்களைத் தயாரிப்பவர், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் பெறலாம்" என இந்திய நீதிச் சட்டத்தின் பிரிவு 229 இன் கீழ் உள்ள விதி கூறுகிறது. "துணைப்பிரிவு (1) இல் குறிப்பிடப்பட்ட வழக்குகளைத் தவிர, வேறு எந்த வழக்கிலும் யாராவது தெரிந்தே பொய்யான சாட்சியத்தை அளித்தாலோ அல்லது உருவாக்கினாலோ, அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்" இந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஜூலை 3ஆம் தேதி தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது தலை முதல் கால் வரை மூடப்பட்ட வகையில் அவர் உடை அணிந்திருந்தார். பின்னர், அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். புகார்தாரராகவும், சாட்சியாகவும் இருந்த அவரை , அவர் உடல்களை புதைத்ததாகக் கூறிய 17 இடங்களுக்கு எஸ்ஐடி (SIT) குழு அழைத்துச் சென்றது. அந்த இடங்களில் ஆறாவது மற்றும் பதினொன்றாவது இடங்களுக்கு அருகில் 'சில எலும்புக்கூடு எச்சங்கள்' கண்டுபிடிக்கப்பட்டன. 13வது இடத்தில் நிலத்துக்கு அடியில் ஆய்வு செய்ய நிலத்தில் ஊடுருவும் ரேடார் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை. பாஜக என்ன சொல்கிறது? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவில் கடந்த வாரத்தில், எதிர்க்கட்சியான பாஜக பெங்களூருவிலிருந்து தர்மஸ்தலா வரை பேரணி நடத்தி, "இந்து மதத் தலத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம்" எனக் கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, பிற தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, ஸ்ரீ க்ஷேத்ர மஞ்சுநாதசுவாமி கோவிலின் அதிகாரியையும், ராஜ்யசபா எம்பி வீரேந்திர ஹெக்டேயையும் சந்தித்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். பிபிசியிடமும் ஒரு செய்தி நிறுவனத்திடமும் பேசிய வீரேந்திர ஹெக்டே, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபரின் குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை என்றும், மக்களின் நலனுக்காக பல துறைகளில் சிறப்பான சேவையை வழங்கிய அமைப்பின் நற்பெயரை களங்கப்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் கூறினார். அரசாங்கம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது என இந்த வாரம் சட்டமன்றத்தில் பேசியபோது தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, "விசாரணைக்குப் பிறகு, புகார்தாரரும் சாட்சியுமான அந்த நபர் குறிப்பிட்ட இடங்களில் எப்போது தோண்டத் தொடங்குவது என்பதை சிறப்பு புலனாய்வு குழு தான் முடிவு செய்யும்" என்றும் கூறினார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஜி. பரமேஸ்வரா, சிறப்பு விசாரணை குழுவின் பணி விசாரணை முடியும் வரை தொடரும் என்றார். மேலும், "இது ஒரு சதித்திட்டமாக இருந்தாலும், விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார். வழக்கின் பின்னணி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கர்நாடகாவின் தர்மஸ்தலத்தில் சட்டவிரோதமாக உடல்கள் புதைக்கப்படுவதாகக் கூறி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஜூலை 3-ஆம் தேதி, அடையாளம் தெரியாத ஒருவர், 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா என்ற புனிதத் தலத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்தபோது, ஒரு செல்வாக்கு மிக்க குடும்பம் மற்றும் அவர்களது ஊழியர்களின் உத்தரவின்படி நூற்றுக்கணக்கான உடல்களை புதைத்ததாகக் கூறினார். பல பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவர்களது உடல்களைப் புதைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். அப்போது, தனது மேலதிகாரிகள் கொலை மிரட்டல் விடுத்ததால் தான் இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்ததாக புகார் அளித்தவர் கூறினார். ஜூலை 19-ஆம் தேதி, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. புகார்தாரரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட 13 இடங்களில் தோண்டும் பணியை அந்த குழு மேற்கொண்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg3z032jx4o
  11. ரணிலை கைதுசெய்து பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : எம்.ஏ.சுமந்திரன் 23 AUG, 2025 | 04:34 PM பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக ரணில் விக்ரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்தமை என்பது, முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது என்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்திலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/223206
  12. சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடைபவனி 23 AUG, 2025 | 11:18 AM முல்லைத்தீவு முத்தையன்கட்டு - ஜீவநகர் கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை (22) சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு "நாம் சிறுவர் எம்மை காப்பீர்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா ஆரம்பித்து வைத்திருந்தார். முத்தையன்கட்டு ஜீவநகர் பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த பேரணியானது நடைபவனியாக சென்று ஜீவநகர் சமாதான சுவிஷேச தேவாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது. ஜெபஆலயமிஷன் திருச்சபையின் கீழ் இயங்கும் பெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றிருந்தது. சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை பாதுகாப்போம் , சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மன்னிப்பு இல்லை, குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம், அமர்த்தாதே அமர்த்தாதே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புவோம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது. குறித்த பேரணியில் முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா, வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் காலேப் மற்றும் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/223160
  13. பட மூலாதாரம், EPA-EFE/KCNA கட்டுரை தகவல் ஃப்ராங்க் கார்ட்னர் பாதுகாப்பு செய்தியாளர் 23 ஆகஸ்ட் 2025, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பெய்ஜிங்கில் அணிவகுப்பு மைதானத்தில் இலையுதிர்கால வெயிலில் பளபளக்க, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ ஏவுகணைகள் ராட்சத லாரிகளின் வரிசையில் மக்கள் கூட்டத்தைக் கடந்து மெதுவாக நகர்ந்தன. 11 மீட்டர் நீளமும் 15 டன் எடையும் கொண்ட ஊசி-கூர்மையான உருவம் ஒவ்வொன்றிலும் "டி.எஃப்-17" (DF-17) என்ற எழுத்துகளும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன. சீனா அப்போதுதான் தனது டாங்ஃபெங் ஹைபர்சோனிக் ஏவுகணை இருப்பை உலகிற்கு அறிவித்தது. அது அக்டோபர் 1, 2019 அன்று தேசிய தின அணிவகுப்பில் நடந்தது. இந்த ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்தது, ஆனால் அதன் பின்னர் சீனா அவற்றை மேம்படுத்துவதில் முன்னேறியுள்ளது. அவை வேகமாக செல்லக்கூடியவை, அவற்றை இலகுவாக இயக்கலாம் - ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் அவை, வலிமையான ஆயுதங்கள் என்பதால் போர்கள் நடத்தப்படும் முறையை மாற்றக்கூடும். அதனால்தான் அவற்றை உருவாக்குவதில் உலகளாவிய போட்டி சூடுபிடித்து வருகிறது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, 2019-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் DF-17 ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா அறிமுகப்படுத்தியது. "இது அரசுகளுக்கு இடையில் நாம் காணும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் ஒரு கூறு மட்டுமே" என்று புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவின் தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் வில்லியம் ஃப்ரீர் கூறுகிறார். "[இது] பனிப்போருக்குப் பிறகு நம்மிடம் இல்லாத ஒன்று." ரஷ்யா, சீனா, அமெரிக்கா இடையே ஒரு உலகளாவிய போட்டி ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்த ஊகங்களை பெய்ஜிங் அணிவகுப்பு எழுப்பியது. இன்று ஹைபர்சோனிக் ஏவுகணைகளில் சீனா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது. அமெரிக்காவும் முன்னேறி வருகிறது, பிரிட்டனிடம் எதுவும் இல்லை. பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிறரிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்ற புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவைச் சேர்ந்த ஃப்ரீர், சீனாவும் ரஷ்யாவும் முன்னணியில் இருப்பதற்கான காரணம் மிக எளிமையானது என்கிறார். "சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்." இதற்கிடையில், இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில், பல மேற்கத்திய நாடுகள் உள்நாட்டில் ஜிஹாதிகளால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளில் கிளர்ச்சி எதிர்ப்பு போர்கள் இரண்டையும் எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தின. அப்போது, ஒரு நவீன, அதிநவீன எதிரிக்கு எதிராக போராட வேண்டிய வாய்ப்பு தொலைதூர ஒன்றாகத் தோன்றியது. பட மூலாதாரம், SHUTTERSTOCK "அதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால், சீனா ஒரு ராணுவ சக்தியாக உருவெடுத்ததை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்" என்று 2020 -ல் பிரிட்டனின் ரகசிய புலனாய்வு சேவையின் தலைவராக ஓய்வு பெற்ற உடனேயே சர் அலெக்ஸ் யங்கர் ஒப்புக்கொண்டார். மற்ற நாடுகளும் முன்னேறி வருகின்றன. இஸ்ரேலிடம் ஆரோ 3 (Arrow 3) என்ற ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளது, இது ஒரு இடைமறிப்பு கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னிடம் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிய இரான், ஜூன் மாதம் இஸ்ரேல் மீது 12 நாள் போரின் போது ஹைபர்சோனிக் ஏவுகணையை ஏவியதாகக் கூறியது. (அந்த ஆயுதம் உண்மையில் மிக அதிக வேகத்தில் பயணித்தது, ஆனால் இது ஒரு உண்மையான ஹைபர்சோனிக் ஏவுகணை என்று கூறும் அளவு பறக்கும் போது இலகுவாக இயங்கியதாக கருதப்படவில்லை). இதற்கிடையில், வட கொரியா 2021 முதல் தனது சொந்த ஏவுகணைகளை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது. தன்னிடம் ஒரு சாத்தியமான ஆயுதம் இருப்பதாக அந்த நாடு கூறுகிறது. பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் பிரிட்டனும் இப்போது ஹைபர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றன. பட மூலாதாரம், MORTEZA NIKOUBAZL/NURPHOTO VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஜூன மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் ஹைபர்சோனிக் ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியதாக இரான் கூறியது. அமெரிக்கா தனது தடுப்பு சக்தியை வலுப்படுத்தி வருவதாக தெரிகிறது, அமெரிக்கா "டார்க் ஈகிள்" ஹைபர்சோனிக் ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, டார்க் ஈகிள் "ராணுவம் மற்றும் நாட்டின் சக்தியையும் உறுதியையும் நினைவுப்படுத்துகிறது. ஏனெனில் இது ராணுவம் மற்றும் கடற்படையின் ஹைபர்சோனிக் ஆயுத முயற்சிகளின் வீரியத்தை பிரதிபலிக்கிறது". ஆனால் சீனாவும் ரஷ்யாவும் தற்போது வெகு தொலைவில் முன்னேறியுள்ளன - இது ஒரு கவலைக்குரிய விஷயமே என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். அதிவேகம் மற்றும் கணிக்க முடியாத போக்கு ஹைபர்சோனிக் என்றால் மேக் 5 (Mach 5) அல்லது அதற்கும் அதிகமான வேகமான வேகத்தில் பயணிக்கும் ஒன்று. (அதாவது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது மணிக்கு 3,858 மைல் பயணிக்கக் கூடியது.) இதனால் தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை விட வேறுபட்டதாக உள்ளது. சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட சற்றே அதிகமாக (மணிக்கு 767 மைல்) மட்டுமே பயணிக்கும். ஹைபர்சோனிக் ஏவுகணைகள் அத்தகைய அச்சுறுத்தலாகக் கருதப்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவற்றின் வேகம். இன்றுவரை மிக வேகமானது ரஷ்யாவின் - அவன்கார்ட் - மேக் 27 (தோராயமாக 20,700 மைல்) வேகத்தை எட்ட முடியும் என்று கூறப்படுகிறது - இருப்பினும் மேக் 12 (9,200 மைல்) என்ற வேகமே பெரும்பாலான இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இது வினாடிக்கு இரண்டு மைல்களுக்கு (அதாவது விநாடிக்கு 3.2 கி.மீ.) சமம். இருப்பினும், முற்றிலும் அழிக்கும் சக்தியைப் பொறுத்தவரை, ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டவை அல்ல என்று ஃப்ரீர் கூறுகிறார். "அவற்றைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் இடைமறிப்பதில் உள்ள சிரமம்தான் உண்மையில் இந்த ஏவுகணைகளை மற்றவைகளிலிருந்து வேறுபடுத்துகிறது." பட மூலாதாரம், REUTERS அடிப்படையில் இரண்டு வகையான ஹைபர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன: பூஸ்ட்-கிளைட் ஏவுகணைகள் (சீனாவில் உள்ள டி.எஃப் -17 போன்றவை) பூமியின் வளிமண்டலத்தை நோக்கியும் சில நேரங்களில் மேலேயும் உந்தி செல்ல ஒரு ராக்கெட்டை நம்பியுள்ளன. அங்கிருந்து அவை இந்த நம்பமுடியாத வேகத்தில் கீழே வருகின்றன. மிகவும் கணிக்கக்கூடிய வளைவில் (பரவளைய வளைவு) பயணிக்கும் மிகவும் பொதுவான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலல்லாமல், ஹைபர்சோனிக் கிளைட் வாகனங்கள் ஒழுங்கற்ற வழியில் நகர முடியும், பறக்கும் போதும் தங்கள் இலக்கை அவற்றை இயக்க முடியும். பின்னர் ஹைபர்சோனிக் க்ரூயிஸ் ஏவுகணைகள் உள்ளன, அவை உயரம் குறைவாக, எதிரிகளால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ரேடார் வீச்சுக்கு வெளியே இருக்க முயற்சிக்கின்றன. ராக்கெட் பூஸ்டரைப் பயன்படுத்தி அவை இதேபோல் ஏவப்பட்டு துரிதப்படுத்தப்படுகின்றன, பின்னர் அவை ஹைபர்சோனிக் வேகத்தை அடைந்தவுடன், அவை "ஸ்கிராம்ஜெட் என்ஜின்" எனப்படும் ஒரு அமைப்பை செயல்படுத்துகின்றன, அது பறக்கும் போது காற்றை எடுத்து, அதன் இலக்கை நோக்கி உந்துகிறது. இவை "இரட்டை பயன்பாட்டு ஆயுதங்கள்", அதாவது அவற்றிலிருந்து அணு ஆயுதங்களையும் செலுத்தலாம், அல்லது வழக்கமான உயர் வெடிபொருள் கொண்ட ஆயுதங்களையும் செலுத்தலாம். ஆனால் இந்த ஆயுதங்களுக்கு வேகத்தை விட வேறு சில விசயங்களும் உள்ளன. ஓர் ஏவுகணை ராணுவ தரங்களின் அடிப்படையில் உண்மையிலேயே "ஹைபர்சோனிக்" என்று வகைப்படுத்தப்படுவதற்கு, அது பறக்கும் போது இயக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதாவது, அதன் இலக்கை நோக்கி அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதை ஏவிய ராணுவத்தினர் நினைத்தால் அந்த ஏவுகணையை திடீரென கணிக்க முடியாத வகையில் பாதையை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும். இது இடைமறிப்பதை மிகவும் கடினமாக்கும். ஹைபர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிய பெரும்பாலான, நிலத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்களால் முடியாது. "ரேடாரின் வீச்சுக்கு வெளியே பறப்பதன் மூலம் அவை முன்கூட்டியே கண்டறிவதைத் தவிர்க்க முடியும் மற்றும் அவற்றின் இறுதி கட்டத்தில் சென்சார்களில் மட்டுமே தோன்றக்கூடும். இது அந்த ஏவுகணை இடைமறிக்கப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது" என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் ஆராய்ச்சி கூட்டாளர் பாட்ரிக்ஜா பாசில்சிக் கூறுகிறார். இந்த மையம் அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிடமிருந்தும் பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்களிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்றுள்ளது. இதற்கான பதில், மேற்கத்திய நாடுகளின் வான்வெளி அடிப்படையிலான சென்சார்களை வலுப்படுத்துவதாகும், இது தரையில் உள்ள ரேடார்களின் வரம்புகளை சமாளிக்கும் என்று அவர் நம்புகிறார். பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, நவம்பர் 2024 இல் கியவ் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹைபர்சோனிக் ஏவுகணை சிர்கானின் எச்சங்களை மக்கள் பார்க்கிறார்கள். நிகழ்நேர போர் சூழ்நிலையில், குறிவைக்கப்படும் நாட்டின் முன் ஒரு பயங்கரமான கேள்வியும் உள்ளது: இது அணுசக்தி தாக்குதலா அல்லது வழக்கமான தாக்குதலா? "ஹைபர்சோனிக் ஏவுகணைகள் போரின் தன்மையை மாற்றவில்லை, நீங்கள் செயல்படக்கூடிய வேகத்தை மாற்றியுள்ளது" என்று முன்னாள் ராயல் கடற்படை தளபதியும் விமான போர் எதிர்ப்பு நிபுணருமான டாம் ஷார்ப் கூறுகிறார். "சில அடிப்படை விசயங்கள் - உங்கள் எதிரியைக் கண்காணிக்க வேண்டும், அவர்களை சுட வேண்டும், பின்னர் நகரும் இலக்கை நோக்கி ஏவுகணையை கையாள வேண்டும் -இவை முந்தைய ஏவுகணைகளிலிருந்து வேறுபட்டதல்ல, அது பாலிஸ்டிக் ஏவுகணைகளானாலும் சரி, சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் ஆனாலும் சரி" என்கிறார் ஷார்பு. "அதேபோல், குறிவைக்கப்படும் நாடு உள்வரும் ஹைபர்சோனிக் ஏவுகணையை கண்காணித்து அழிக்க வேண்டும் என்கிற தேவை இப்போதும் மாறப்படவில்லை, ஆனால் இப்போது உங்களுக்கு குறைந்த நேரமே உள்ளது". இந்த தொழில்நுட்பம் வாஷிங்டனை கவலையடையச் செய்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட ஓர் அறிக்கை, "ஹைபர்சோனிக் ஆயுதங்களைக் கண்டறிந்து பின்தொடர நிலப்பரப்பு மற்றும் தற்போதைய வான்வெளி அடிப்படையிலான சென்சார் கட்டமைப்புகள் இரண்டுமே போதுமானதாக இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்." என எச்சரிக்கிறது. இன்னும் சில வல்லுநர்கள் ஹைபர்சோனிக் ஏவுகணையை சுற்றியுள்ள சில விசயங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார்கள். கூடுதலாக மிகைப்படுத்துகிறார்களா? ராயல் யுனைடெட் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு சிந்தனைக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சித்தார்த் கௌஷல், இவை அவசியம் போக்கை மாற்றியமைக்கக் கூடியவை அல்ல என்று நினைக்கிறார். "வேகமும் இலகுவாக இயக்கப்படக் கூடிய திறனும் இவற்றை உயர் மதிப்பு இலக்குகளை தாக்குவதற்கான எளிதான தேர்வுகளாக்குகின்றன. தாக்குதல் சமயத்தில் அவற்றின் இயக்க ஆற்றல் கடினமான, மிக ஆழமாக புதைக்கப்பட்ட இலக்குகளை குறிவைக்க பயனுள்ள வழிமுறையாக அமைகிறது, இந்த இலக்குகளை முன்பு பெரும்பாலான வழக்கமான ஆயுதங்களால் அழிப்பது கடினமாக இருந்தது." என்று கௌஷல் கூறுகிறார். ஆனால் அவை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது அதற்கு மேல் பயணித்தாலும், அவற்றை எதிர்த்து தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன - அவற்றில் சில "திறனுள்ளவை" என்று ஷார்ப் வாதிடுகிறார். முதலாவது, கண்காணிப்பையும் கண்டறிதலையும் மிகவும் கடினமாக்குவது. "ஏவுகணைகள் தங்கள் நிலையைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுக்கலாம்," என்று அவர் கூறுகிறார். "வணிக செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் தெளிவற்ற செயற்கைக்கோள் படம் சில நிமிடங்கள் பழையதாக இருந்தால் போதும், அதை நம்பி இலக்கு வைக்கப் பயன்படாது." "குறிவைக்கப் பயன்படுத்துவதற்கு போதுமான அளவு நிகழ்நேர, துல்லியமான செயற்கைக்கோள் படங்களைப் பெறுவது கடினமானது மற்றும் விலை உயர்ந்தது." என்கிறார். ஆனால் செயற்கை நுண்ணறிவும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் காலப்போக்கில் இதை மாற்றக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். படக்குறிப்பு, ஆதாரம் : பாதுகாப்பு உளவு நிறுவனம், ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு ரஷ்யா அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை ரஷ்யாவும் சீனாவும் இந்த ஆயுதங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பது உண்மைதான். "சீன ஹைபர்சோனிக் திட்டங்கள்...கவர்ச்சிகரமானதாகவும் அதே நேரம் கவலைக்குரியவையாகவும் உள்ளன என்று நான் நினைக்கிறேன்," என்று ஃப்ரீர் கூறுகிறார். ஆனால் "ரஷ்யர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எதைக் கூறினாலும் அதுகுறித்து நாம் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்றும் சொல்கிறார். நவம்பர் 2024-ல், ரஷ்யா யுக்ரேனின் நிப்ரோவில் உள்ள ஒரு தொழிற்சாலை தளத்தில் சோதனைக்காக நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது, அதை நேரடி சோதனைக் களமாகப் பயன்படுத்தியது. இந்த ஏவுகணை மேக் 11 (அல்லது மணிக்கு 8,439 மைல்) ஹைபர்சோனிக் வேகத்தில் பயணித்ததாக யுக்ரேன் தெரிவித்தது, இந்த ஏவுகணைக்கு 'ஒரெஷ்னிக்' என்று பெயரிடப்பட்டது, இது ரஷ்ய மொழியில் ஹேசல் மரம் (Hazel tree/ஜாதி பத்திரி மரம்) என்பதாகும். ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் மேக் 10 வேகத்தில் பயணித்ததாக கூறினார். ஏவுகணை இலக்கை நெருங்கியதும் அதன் ஆயுத முனை பல தனித்தனி பாகங்களாக பிரிந்து சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருத்தாக தகவல் கிடைத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்தனி இலக்குகளை கொண்டிருந்தன. இது பனிப்போர் காலத்து நடைமுறையாகும். அது சோதனை என்பதால், அப்போது அவற்றில் செயலற்ற எரிபொருள்களே இருந்தன. அது தரையிறங்கியதைக் கேட்ட ஒருவரிடம் பேசிய போது, " அது மிக சத்தமாக இல்லை, ஆனால் பல இடங்களை அது தாக்கியிருந்தது: 6 ஏவுகணை முனைகள் தனித்தனி இலக்குகளில் விழுந்தன. ஆனால் அவை செயலற்றவையாக இருந்ததால், அதனால் ஏற்பட்ட சேதம், யுக்ரேன் நகரங்களில் ரஷ்யாவின் இரவுக் குண்டுவீச்சால் ஏற்படும் சேதத்தை விட மிக அதிகமாக இல்லை. ஐரோப்பாவைப் பொறுத்தவரை, நேட்டோ நாடுகளுக்கு நிலவும் அச்சுறுத்தல் பிரதானமாக ரஷ்யாவின் ஏவுகணைகளால் ஏற்படுகிறது. அவற்றில் சில ஏவுகணைகள் ரஷ்யாவின் பால்டிக் கடற்கரையில் உள்ள காலினின்கிராட் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இம்முறை முழு உயர் வெடிகுண்டுகளை ஏற்றி புதின் கியவ் நகரத்தின் மீது ஒரெஷ்னிக் மூலம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டால் என்னவாகும்? ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் தொடர் உற்பத்தி செய்யப்பட போவதாகவும், இலக்குகளை "தூளாக்கும்" திறன் தங்களிடம் உண்டு என்றும் கூறினார். ரஷ்யாவிடம் ஹைபர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் பிற ஏவுகணைகளும் உள்ளன. புதின் தனது வான்படையின் கின்ஜால் (Kinzhal) ஏவுகணைகளைப் பற்றி அதிகம் பேசினார், அவை மிக வேகமாக செல்லும் அவற்றை இடைமறிப்பது சாத்தியமில்லை என்று கூறினார். அதன்பின், அவர் அவற்றில் பலவற்றை யுக்ரேன் மீது ஏவியுள்ளார் - ஆனால் கின்ஜால் உண்மையில் ஹைபர்சோனிக் அல்லாமல் இருக்கலாம் என்றும், பலவும் இடைமறிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஹைபர்சோனிக் ஏவுகணைத் துறையில் சீனாவும் ரஷ்யாவும் மற்ற நாடுகளை விஞ்சி உள்ளன. மேற்கத்திய நாடுகளுக்குக் கவலை தருவது ரஷ்யாவின் அதிவேகமான, மிக இலகுவாக இயக்கப்படக்கூடிய ஆயுதமான அவன்கார்ட் ஆகும். 2018 -ல் வேறு ஐந்து 'சூப்பர் ஆயுதங்களுடன்' அறிமுகமானது, அதனை புதின் தடுக்க முடியாதது என்று கூறினார். டாக்டர் சித்தார்த் கௌஷல் அதன் முதன்மையான பங்கு உண்மையில் "அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு முறைகளை விஞ்சுவதுதான்" என்று கூறுகிறார். "ரஷ்யாவின் அரசு ஆயுதத் திட்டங்கள் அவன்கார்ட் போன்ற அமைப்புகளை உற்பத்தி செய்யும் திறன் ரஷ்யாவிடம் போதிய அளவு இல்லை என்பதையும் காட்டுகின்றன," என்று அவர் வாதிடுகிறார். மேற்கு பசிபிக்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே மூலோபாய மேலாதிக்கத்திற்கான போட்டி தீவிரமடைந்து வருவதால், சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் பெருக்கம் தென் சீனக் கடல் மற்றும் அதற்கு அப்பால் அமெரிக்க கடற்படை நிலைப்பாட்டிற்கு தீவிரமான அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. சீனாவிடம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைபர்சோனிக் ஆயுதக் கிடங்கு உள்ளது. 2024-ன் பிற்பகுதியில், சீனா தனது சமீபத்திய ஹைபர்சோனிக் கிளைட் வாகனமான GDF-600ஐ வெளியிட்டது. 1,200 கிலோ பேலோடுடன், இது துணை ஆயுதங்களைச் சுமந்து மேக் 7 (மணிக்கு 5,370 மைல்) வேகத்தை எட்ட முடியும். பிரிட்டனின் அவசர முயற்சியில் வெற்றி பிரிட்டன் இந்தப் பந்தயத்தில் பின்தங்கியுள்ளது, குறிப்பாக அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து அணு ஆயுத நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாக இருப்பதால் இது குறிப்பிடத்தக்க பிரச்னையாகிறது. ஆனால் தாமதமாக முயன்றாலும், அது விரைந்து எட்டிப்பிடிக்க முயற்சி செய்கிறது, அல்லது குறைந்தபட்சம் பந்தயத்தில் சேர முயற்சி செய்கிறது. ஏப்ரலில், பாதுகாப்பு அமைச்சகமும் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகமும் ஒரு முக்கிய சோதனைத் திட்டத்தின் வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் "ஒரு முக்கிய தருணத்தை" எட்டியுள்ளனர் என்று அறிவித்தன. பிரிட்டனின் உந்துசக்திச் சோதனை பிரிட்டிஷ் அரசு, தொழில்துறை மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று தரப்பு ஒத்துழைப்பின் விளைவாகும். ஆறு வாரங்களில் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசா லாங்லே ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 233 "வெற்றிகரமான நிலையான சோதனை ஓட்டங்கள்" மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி இதை "ஒரு மைல்கல் தருணம்" என்று அழைத்தார். ஆனால் இந்த ஆயுதம் தயாராக இன்னும் பல ஆண்டுகள் ஆகும். பட மூலாதாரம், REUTERS/VALENTYN OGIRENKO படக்குறிப்பு, ரஷ்யாவின் 'கின்ஜால்' ஏவுகணை உண்மையில் ஹைபர்சோனிக் திறன் கொண்டதாக இருக்காது, அவற்றில் பல யுக்ரேனின் தடுப்பு‌ அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஹைபர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குவதுடன், மேற்கத்திய நாடுகள் அவற்றிற்கு எதிரான வலுவான பாதுகாப்பையும் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஃப்ரீர் வாதிடுகிறார். "ஏவுகணைப் போர் என்று வரும்போது, இது ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் பற்றியது. நீங்கள் சேதத்தைக் குறைக்கவும் முடிய வேண்டும், அதே நேரத்தில் எதிரியின் ஏவுதள அமைப்புகளைத் தாக்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்." "உங்களுக்கு இரண்டு கைகளும் இருந்தால், நீங்கள் ஒரு அளவிற்கு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த் தாக்குதல் நடத்தவும் முடிந்தால்... அப்போது ஒரு எதிரி மோதலைத் தொடங்க முயற்சிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு." எனினும், இந்த நேரத்தில் நாம் எந்த அளவிற்குக் கவலைப்பட வேண்டும் என்பது குறித்து டாம் ஷார்ப் இன்னும் எச்சரிக்கையாக உள்ளார். அவர், "ஹைபர்சோனிக்ஸ் குறித்த முக்கிய விஷயம், இந்தச் சமன்பாட்டின் இரு பக்கங்களும் ஒன்றைப் போலவே மற்றொன்றும் கடினமானவை - இரண்டும் இன்னும் கச்சிதமாக வடிவம் பெறவில்லை" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgypz9j564o
  14. ரணிலுக்கு வீட்டு உணவுகளை கொடுக்க அனுமதி - சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் 23 AUG, 2025 | 03:10 PM சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/223192
  15. கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு விளக்கமறியல்! Published By: VISHNU 22 AUG, 2025 | 10:39 PM கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது. குறித்த பிணை தொடர்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் தீலிப்ப பீரிஸ் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து குறித்த பிணை வழங்கலில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பலத்த இழுபறிக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223141 கை விலங்கிடப்பட்டு சிறை செல்கிறார் ரணில் Published By: VISHNU 22 AUG, 2025 | 11:13 PM 166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் கை விலங்கிடப்பட்டு சிறைச்சாலை பேருந்தில் கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். லண்டனுக்கு ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) சென்றிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/223143
  16. செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்பப்பாண மாவட்ட செயலகத்தின் கச்சேரி - நல்லூர் வீதியின் பக்கமாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கென பிரத்தியேகமான கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. வாக்குறுதியளித்த ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்று நிறுவப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இதேவேளை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் யோசனை சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/passport-distribution-begins-in-jaffna-september-1755849582
  17. பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் அன்பு வாகினி பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் மனித வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம் கருத்தரிப்பிலிருந்து இரண்டு வயது வரையிலான முதல் 1000 நாட்கள். இந்த காலகட்டத்தில் குழந்தையின் உடல், மன, உணர்வுபூர்வமான வளர்ச்சி வேகமாக நிகழ்கிறது. இந்த நாட்களில் சரியான ஊட்டச்சத்து கிடைப்பது குழந்தையின் வாழ்நாள் ஆரோக்கியம், அறிவுத்திறன், உற்பத்தித்திறனை தீர்மானிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் இந்த காலகட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் 'தாய்ப்பால் கொடுப்பதை முன்னுரிமைப்படுத்துங்கள், நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள்'. உலகளவில் 44% குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்கிறது உலக சுகாதார மையம். இந்தியாவில் இது 64% ஆக உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS 5) கூறுகிறது. ஆண்டுதோறும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்கள், தாய்ப்பால் ஊட்டத்தால் மட்டுமே காப்பாற்றப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம், தாய்ப்பாலின் பங்கு, ஊட்டச்சத்து தேவைகள், தாய்ப்பால் இல்லாத நிலையில் ஏற்படும் பாதிப்புகள், இந்தியாவில் தாய்ப்பால் ஊட்டுதலின் நிலை, சமூக-பொருளாதார தாக்கங்கள், தேவையான கொள்கை மாற்றங்கள் பற்றி விரிவாகக் காணலாம். முதல் 1000 நாட்கள் ஏன் முக்கியமானது? 1. உடல் - மூளை வளர்ச்சி கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகின்றன. பிறந்த பிறகு முதல் 2 வயது வரை, எலும்புகள், தசைகள், உள் உறுப்புகள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன. மூளையின் 80% இரண்டு வயதுக்குள் முழுமையாக வளர்ச்சி அடைகிறது. DHA (ஓமேகா-3), இரும்பு, அயோடின், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை செல்களை வலுப்படுத்துகின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், வளர்ச்சி குன்றிய நிலை (Stunting), ஐ.க்யு. (IQ) குறைவு, கற்றல் திறன் பாதிப்பு ஏற்படும். 2. நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின் IgA, லாக்டோஃபெரின் போன்ற நோயெதிர்ப்புப் பொருட்கள் உள்ளன. இவை குழந்தையை வயிற்றுப்போக்கு, நிமோனியா, அலர்ஜி போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகத் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது 3. எதிர்கால ஆரோக்கிய குறைபாடுகள் முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், பிற்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை எளிதாக வருவதற்கு சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால் ஏன் குழந்தைக்குப் பொன்னான உணவு? (1) தாய்ப்பாலின் ஊட்டச்சத்து மதிப்பு தாய்ப்பாலில் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், ஹார்மோன்கள் போன்றவை உள்ளன. கொலோஸ்ட்ரம் (சீம்பால் அல்லது முதல் பால்) பிறந்த முதல் 2-3 நாட்களில் வெளியாகும் மஞ்சள் நிறமான பால். இதை இயற்கையான தடுப்பூசி என்று அழைக்கிறார்கள். IgA, லாக்டோஃபெரின், வைட்டமின் A நிறைந்தது. DHA (மூளை வளர்ச்சிக்கு), லாக்டோஸ் (ஆற்றல் தரும்), ஓலிகோசாக்ரைடுகள் (oligosaccharides) (குடல் நோய்க்கிருமிகளை ஒழிக்கும்) இதில் அதிகமாக உள்ளது. (2) தாய்ப்பால் ஊட்டுதலின் நன்மைகள் (i) குழந்தைக்கான நன்மைகள் நோய்த்தடுப்பு: வயிற்றுப்போக்கு, நிமோனியா, காது தொற்றுகள், திடீர் குழந்தை மரணம் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தாயுடன் உள்ள உடல் தொடர்பு, கண்காணிப்பு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூளை வளர்ச்சி: DHA மற்றும் ARA கொழுப்பு அமிலங்கள் மூளை செல்களை வலுப்படுத்துகின்றன. தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் ஐ.க்யு. 5-7 புள்ளிகள் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உணர்ச்சிப் பிணைப்பு: தாயுடன் உள்ள உடல் தொடர்பு, கண்காணிப்பு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. (ii) தாய்க்கான நன்மைகள் புற்றுநோய் குறைப்பு: மார்பகப் புற்றுநோய் 28%, சூலகப் புற்றுநோய் (ovarian cancer) 21% குறைகிறது என்று ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன. உடல் எடை குறைதல்: தாய்ப்பால் கொடுப்பதால் 500 கலோரிகள் ஒரு நாளில் செலவிடப்படுவதால், தாயின் உடல் எடை கூடாமல் பாதுகாக்கப்படுகிறது. மகப்பேறு மன அழுத்தம் குறைப்பு: ஆக்சிடோசின் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் தாய்மார்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவாற்றல் முன்னேற்றத்துக்கு முக்கியமானது தாய்ப்பால் இல்லாமல் ஒரு குழந்தை வளர முடியுமா? தாய்ப்பால் இல்லாமல் ஒரு குழந்தை வளர்வது நடைமுறையில் சாத்தியமே. ஆனால், உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப், பல சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுகள் தாய்ப்பால் இல்லாத வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் (Victora et al., 2016; World Bank, 2020) ஏற்படுவதை தெளிவாக நிரூபிக்கின்றன. 2023இல் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸில் வெளியான ஒரு மெட்டா-அனாலிசிஸ் ஆய்வின்படி, தாய்ப்பால் பெறாத குழந்தைகளில் நிமோனியா, வயிற்றுப்போக்கு நோய்களின் விகிதம் 50% அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தாய்ப்பாலில் உள்ள IgA, லாக்டோஃபெரின், லைசோசைம் போன்ற சிறப்பு புரதங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதே (Ballard & Morrow, 2013; Chowdhury et al., 2015). மூளை வளர்ச்சியின் அடிப்படையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 10 வருட ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் மூளையில் சுமார் 20-30% அதிக நரம்பியல் இணைப்புகள் உள்ளதை கண்டறிந்துள்ளது (Isaacs et al., 2010. இந்த வித்தியாசத்துக்கு தாய்ப்பாலில் அதிக அளவில் காணப்படும் டோகோசா ஹெக்சானோயிக் அமிலம் (DHA) (Ballard & Morrow, 2013) முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. 2022இல் நேச்சர் நியூரோசயின்ஸில் வெளியான ஆய்வு தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பள்ளியில் 12% சிறந்த செயல்திறன் கொண்டிருப்பதை நிரூபித்துள்ளது. நீண்ட கால ஆரோக்கியத் தாக்கங்களில், லான்செட் ஜர்னலின் 2021ஆம் ஆண்டு ஆய்வு தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்த குழந்தைகளின் பிற்காலத்தில் டைப்-2 நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 35% (Victora et al., 2016)அதிகமாக இருப்பதை கண்டறிந்தது. தாய்ப்பாலின் சமூக - பொருளாதார முக்கியத்துவம் குறித்து உலக வங்கியின் 2020 அறிக்கை குறிப்பிடுகையில், தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகள் வளர்ந்த பின் சராசரியாக 20% அதிக வருமானம் ஈட்டுவதாக கணக்கிட்டுள்ளது. இந்த வித்தியாசத்துக்கு மேம்பட்ட அறிவுத் திறன், குறைந்த நோய் தாக்க நாட்கள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன (Victora et al., 2015; World Bank, 2020). எப்போது தாய்ப்பால் கொடுக்கக் கூடாது? தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது எனினும், சில சூழ்நிலைகளில் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது நல்லது. தாய்க்கு ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ், HTLV-1 புற்றுநோய்கள், நரம்பு மண்டல பிரச்னைகள் போன்ற நோய்கள் இருந்தால், அவற்றை குழந்தைக்கு பரப்பும் அபாயம் இருப்பதால் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. குழந்தை கேலக்டோசீமியா (Galactosemia) போன்ற மரபணுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பாலில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க முடியாமல் போகும். மேலும், புற்றுநோய் சிகிச்சை (Chemotherapy), கதிரியக்க மருந்துகள் (Radioactive drugs) அல்லது சில தீவிர மருந்துகளைத் தாய் எடுத்துக்கொண்டால், அவை பாலில் கலந்து குழந்தையை பாதிக்கலாம். அதிகப்படியான மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு, சிகரெட் புகைப்பது போன்றவை பாலின் தரத்தை பாதிக்கின்றன. குழந்தைக்கு கடுமையான இரைப்பை குடல் நோய் (NEC) இருந்தாலும் தாய்ப்பால் தவிர்க்கப்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில், மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்று ஊட்டமுறைகளை பின்பற்றுவது நல்லது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தாய்ப்பால் சேமிப்பை சரியாக புரிந்துகொண்டு பயன்படுத்தினால், தாய்மார்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகும். தாய்ப்பால் சேமிப்பு முறைகள் - முக்கியத்துவம் தாய்ப்பால் சேமிப்பு என்பது ஒரு அறிவியல்பூர்வ முறை. இதை சரியாக புரிந்துகொண்டு பயன்படுத்தினால், தாய்மார்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகும். பணிபுரியும் தாய்மார்கள், படிப்பில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள் அல்லது வேறு காரணங்களால் குழந்தைக்கு நேரடியாகப் பாலூட்ட முடியாத நேரங்களில், இந்த முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. தாய்ப்பாலை சரியான முறையில் சேமிப்பதன் மூலம், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாவிட்டாலும், முன்பே பாலை எடுத்து பிரிட்ஜ் அல்லது பிரீஸரில் சேமித்து வைக்கலாம். இந்த முறை மூலம், தாய்மார்கள் தங்கள் வேலை, குழந்தை பராமரிப்பையும் சமநிலைப்படுத்த முடிகிறது. பால் சேமிக்கும்போது குளிர்சாதன பெட்டியில் (4°C) 4 நாட்கள் வரை அல்லது ஐஸ் பாக்கெட் உள்ள கூலர் பையில் பாதுகாப்பாக வைக்கலாம். நீண்ட காலத்துக்கு பிரீஸரில் (-18°C) 6 மாதங்கள்வரை சேமிக்கலாம். தாய்ப்பால் வணிகமயமாக்கல் தாய்ப்பாலின் வணிகமயமாக்கல் என்பது சமீபத்தில் உலகளவில் வளர்ந்துவரும் ஒரு தீவிர பிரச்னை. தாய்ப்பால் எடுத்து சேமிப்பது ஒரு பயனுள்ள முறையாக இருந்தாலும், இதன் வணிகரீதியான பயன்பாடு பல சவால்களை உருவாக்கியுள்ளது. இணையதள சந்தை, தாய்ப்பால் வங்கிகள் மூலம் இந்த தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிறது. இது தூய்மை, பாதுகாப்பு, நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, ஏழைத் தாய்மார்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பாலை விற்கும்போது அவர்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி மருத்துவமனை, பால் வங்கிகள் மூலம் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள், அவசர தேவை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் பெறப்பட்டு வழங்கப்பட வேண்டும். இது ஒரு சமூகப் பொறுப்பாக கருதப்படுகிறது. இந்த வணிகமயமாக்கல் முயற்சிகள் தாய்ப்பாலின் தரம், பரிமாற்றத்தின் பாதுகாப்பு, தாய்மார்களின் உரிமைகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்குக் கடுமையான சட்டரீதியான கட்டுப்பாடுகள், நெறிமுறை வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. மகப்பேறு விடுப்பு, குழந்தையின் வளர்ச்சியில் அதன் தாக்கம் தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு (Maternity Leave) ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவாற்றல் முன்னேற்றத்துக்கு முக்கியமானது. முறைசார்ந்த, முறைசாரா துறைகளில் இந்த விடுப்பின் மூலம் கிடைக்கும் தன்மை, அளவு குழந்தையின் வளர்ச்சி மீது நேரடியாக தாக்கம் செலுத்துகிறது. இந்தியாவில், அரசு/தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தாய்மார்களுக்கு 26 வாரங்கள் (6 மாதங்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு (Maternity Benefit Act 2017) வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே தரப்பட வேண்டும். இந்த காலத்துக்கு விடுப்பு கிடைப்பது இதை உறுதி செய்கிறது. முறைசாரா துறையில் (விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள்) பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய விடுப்பு கிடைப்பதில்லை. பெரும்பாலான ஏழைத் தாய்மார்கள் பிறந்த 2-3 மாதங்களுக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டியுள்ளது. இதனால் தாய்ப்பால் ஊட்டுதல் குறைகிறது. இது குழந்தையிடம் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது. முறைசாரா வேலையில் ஈடுபட்டுள்ள தாய்மார்களின் குழந்தைகள் முதல் 1000 நாட்களில் சரியான ஊட்டச்சத்து- பாதுகாப்பைப் பெற, குழந்தைப் பராமரிப்பு மையங்கள் ஒரு அவசியத் தீர்வாகும். இது தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிக்கும், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும், தாய்மார்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும் உதவும். எனவே, இந்த மையங்களை அரசு கொள்கைகள், சமூக நலத் திட்டங்களின் மூலம் உறுதிப்படுத்துவது அவசியம். தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: ·தாய்மார்களுக்கு கூடுதல் ஊதிய விடுமுறை (குறைந்தது 26 வாரங்கள்). ·பணியிடங்களில் பால் ஊட்டும் வசதிகள் (குழந்தை பராமரிப்பு அறை, பால் ஊட்டும் இடைவேளை). ·ASHA தொழிலாளர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம். ·ஃபார்முலா பால் விளம்பரங்களை கட்டுப்படுத்துதல். ·பால் வங்கிகளை அதிகரித்தல் கருத்தரிக்காமலேயே தாய்ப்பால் கொடுக்க முடியுமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன? ஃபார்முலா பாலில் மறைந்துள்ள ஆபத்து என்ன? இந்தியாவின் பாரம்பரிய முறை சிறந்ததா? பால் சுரக்காத தாய்மார்கள்: குழந்தைகளுக்கு தாயாக விளங்கும் தாய்ப்பால் வங்கி பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? தாயின் ஆரோக்கியம், சமூக ஆதரவு தாய்ப்பால் ஊட்டுவதை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன. தாயின் ஊட்டச்சத்து நிலை, மன ஆரோக்கியம், குடும்ப ஆதரவு, பொருளாதார நிலை ஆகியவை முக்கியமானவை. ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பால் குறைவாக இருக்கும். பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தம் தாய்ப்பால் ஊட்டுதலை பாதிக்கும். கணவர், குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால், தாய்ப்பால் ஊட்டுதல் எளிதாகிறது. ஏழைத் தாய்மார்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது கடினமாக உள்ளது. தாய்ப்பால் ஊட்டுதல் என்பது தனிப்பட்ட தேர்வு மட்டுமல்ல, அது பொது சுகாதாரத் தேவை. தாய்ப்பால் ஊட்டுதலை நாடு ஊக்குவிக்க தேசிய அளவில் கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும். சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். சமூக கற்பிதங்களைக் களைய வேண்டும். முதல் 1000 நாட்களில் முதலீடு செய்வது ஆரோக்கியமான, புத்திசாலியான, உற்பத்தி திறன் மிக்க தலைமுறைக்கு வழிவகுக்கும். குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், அறிவுத் திறனுக்கு தாய்ப்பால் முக்கியமானது. எனவே, ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கான சரியான வழிகளை அறிந்துகொள்ள வேண்டும். அரசு, சமூகம், குடும்பம் அனைவரும் இதில் பங்கு வகிக்க வேண்டும். - கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gmvdlr225o
  18. 22 AUG, 2025 | 04:17 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) “மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மலையக மக்கள் பிரத்தியேக கலாச்சாரங்களை கொண்ட மக்கள் என்று ஏற்றுக் கொண்டுள்ளோம். அது எங்களின் கொள்கையாகும். ஹட்டன் பிரகடனத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி அந்த மக்கள் மலையக தமிழ் மக்கள் என்று இன்றைய பிரேரணையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் அவ்வாறு இந்த மக்களை அழைப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்ததாக சட்ட ஆவணங்களிலும் இந்த வசனம் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்காக சில சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளோம். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் இந்த வசனத்தை பயன்படுத்த தேவையான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம். சில தரப்பினர் இணங்காமல் இருந்தாலும் அவர்களையும் இணங்கச் செய்து அதனை செய்வோம். மலையக மக்கள் இலங்கையர்களே. அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் உரிமைளை பாதுகாக்க வேண்டியது எங்களின் பொறுப்பாகும். அவர்களுக்கென காணிகள்,வீடுகள் இருக்க வேண்டும். அத்துடன் சிறந்த கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதன்படியே ஹட்டன் பிரகடனத்தை நாங்கள் முன்வைத்தோம். இவர்களே இந்த நாட்டில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/223118
  19. மன்னாரில் 20வது நாளாக தொடரும் போராட்டம் - ஜும்ஆ தொழுகையின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் வர்த்தகர்கள் 22 AUG, 2025 | 04:53 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 20ஆவது நாளாக இன்றும் (22) சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுதிரண்டு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்கள் இன்று பகல் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின் பின்னர், மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வருகை தந்து கலந்துகொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்தப் போராட்டம் இன்று 20ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் உண்மை நிலையை அறிந்துகொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்டக் குழுவுக்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர். மன்னார் மக்கள் இன, மத வேற்றுமையின்றி ஒற்றுமையாக போராடும் பட்சத்தில் எமது இலக்கை அடைய முடியும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/223122
  20. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்கும் முன்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் தரப்பை ஆக்ரோஷமாக முன்வைத்து வந்தார். கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் அலாஸ்காவில் அதிபர் புதினுக்கும் டிரம்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என்று ஆகஸ்ட் 13 அன்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார். உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் பிரான்சின் அர்னாட் பெர்ட்ராண்ட், இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் மறுபதிவு செய்து , "இது இந்தியாவின் பல-சீரமைப்பு ராஜ்ஜீய உத்தியின் தோல்வி என்பது தெளிவாகிறது. இந்த உத்தி இந்தியாவை அனைவருக்கும் முக்கியமானதாக மாற்றுவதாக இருந்தது, ஆனால் அது அனைவருக்கும் தேவையற்றதாகிவிட்டது" என்று பதிவிட்டு இருந்தார். "வேறு சொற்களில் சொல்வதானால், இந்தியா தன்னை எந்த ஆபத்தும் இல்லாமல் எளிதில் தாக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சீனாவுடன் நேரடியாக மோதாமல், பொருளாதாரத் தடைகள் மூலம் ஒரு வலுவான செய்தியை அனுப்ப வேண்டிய நேரத்தில், டிரம்ப் இந்தியாவை அச்சுறுத்துகிறார். ஏனெனில், இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த பெரிய நாடாக இருந்தாலும், பதிலடி கொடுக்கும் அளவுக்கு வலிமையான நாடாக இல்லை." "எல்லோருக்கும் நண்பராக இருக்க முயற்சிக்கும்போது, நீங்கள் அனைவருக்கும் ஒரு அழுத்தத்தை வெளியிடும் குழாயாக (pressure valve) மாறுகிறீர்கள். குறிப்பாக, உங்கள் சொந்த நிலைப்பாட்டை வலியுறுத்தும் திறன் இல்லாதபோது, அந்த சூழல் மேலும் சிக்கலாகிறது"என்று அர்னாட் பெர்ட்ராண்ட் பதிவிட்டார். 'பன்முகக் கூட்டணி கொள்கை' என்பதற்கு , இந்தியா அனைத்து முக்கிய நாடுகளுடனும் நட்புறவைப் பேண முயற்சி செய்வது எனப் பொருள். இது நேருவின் 'அணிசேராமை' கொள்கையிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால், 'எல்லோருடனும் இருப்பது' என்ற நிலைப்பாடு, இறுதியில் 'யாருடனும் இல்லை' என்ற நிலையை உருவாக்கும் என்பதால், இது வெறும் சொற்களின் வேறுபாடு மட்டுமே என்று பலரும் நம்புகிறார்கள். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 15 அன்று, அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே இணக்கமான சூழல் நிலவியது. 'பன்முகக் கூட்டணி' கொள்கை தோல்வியடைகிறதா? ஆறு நாட்களுக்கு முன் இந்தியாவைப் பற்றிய விமர்சனங்கள் எழுதிய அர்னாட் பெர்ட்ராண்ட், ஆகஸ்ட் 19 அன்று தனது நிலைப்பாட்டை மாற்றியதுபோல் தோன்றுகிறது. அந்த நாளில் தான், பிரதமர் மோதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டார். "இந்தியாவைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஐரோப்பாவிடம் இல்லாத அரசியல் துணிச்சல் மோதியிடம் இருக்கிறது. ஐரோப்பா ரஷ்யாவுடன் இதேபோல் நேரடியாக செயல்பட்டிருந்தால், டிரம்பிற்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்திருக்காது. ஐரோப்பாவிற்கு டிரம்பின் மத்தியஸ்தம் தேவைப்பட்டிருக்காது"என அதே பதிவை மறுபதிவு செய்து , அர்னாட் குறிப்பிட்டிருந்தார். " டிரம்ப், ஐரோப்பியத் தலைவர்களை பள்ளிக் குழந்தைகளைப் போல நடத்தி, பொருளாதார ரீதியாக சேதம் ஏற்படுத்தியதைக் குறித்து நான் பேசவே இல்லை. தற்போதைய சூழ்நிலை, ஐரோப்பா எல்லா வகையிலும் பாதிக்கப்படும் அளவுக்கு மோசமாக உள்ளது. ஒருபுறம், அமெரிக்காவின் கைக்கூலியாக அவமானப்படுத்தப்படுகிறது. மறுபுறம், டிரம்ப் இந்த நிலையை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஐரோப்பா ஒரு மறைமுகப் போருக்கான விலையைச் செலுத்துகிறது, அதேசமயம் அண்டை நாட்டின் விரோதத்தையும் எதிர்கொள்கிறது. இதற்கிடையில், டிரம்ப் ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்தி வருகிறார்." "சீனா மீது இந்தியர்கள் கொண்டுள்ள விரோதம், ஐரோப்பாவில் ரஷ்யா மீது இல்லை. அதாவது, இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க அரசியல் ரீதியாக மிகவும் கடினமான சூழ்நிலை இருந்தது. உத்தி சார்ந்த சுயாட்சி மீது ஆசியத் தலைவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, ஐரோப்பாவில் காணப்படுவதில்லை"என்றும் அர்னாடின் பதிவு கூறுகிறது. "நாடுகள் நீண்ட காலத்திற்கு சிந்திக்கின்றன. ஆய்வாளர்கள் குறுகிய காலத்திற்கு சிந்திக்கின்றனர்"என மாற்றம் அடைந்த அர்னாட்டின் நிலைப்பாடு குறித்து, 'தி இந்து' செய்தித்தாளின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜானி கூறுகிறார். பிரான்சுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜாவேத் அஷ்ரஃப்பிடம், மோதி அரசாங்கத்தின் 'பன்முகக் கூட்டணி கொள்கை' உண்மையில் தோல்வியடைகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. "நான் அப்படி நம்பவில்லை. நரேந்திர மோதி எஸ்சிஓ மாநாட்டிற்குச் செல்கிறார் என்றால், அவர் அமெரிக்காவிற்கு எதிராகப் போகிறார் என்று அர்த்தமல்ல. டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பே, சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியில் சில பிரச்னைகள் இருந்தாலும், மற்ற உறவுகள் நிலைத்திருக்கின்றன." என்று ஜாவேத் அஷ்ரஃப் பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்த உடன்பாடும் இல்லாததற்கான காரணம், இந்தியா தனது தேசிய நலன்களில் எந்தவித சமரசமும் செய்யவில்லை என்பது தான். இந்தியா அமெரிக்காவுடன் உத்தி சார்ந்த சுயாட்சியுடன் பேசுகிறது. சீனாவும் ரஷ்யாவும் அதிக சக்தி வாய்ந்த நாடுகள், எனவே அவர்கள் அமெரிக்காவிற்கு அதன் சொந்த மொழியில் பதிலளிக்கிறார்கள். நமக்கும் அந்த சக்தி இருந்திருந்தால், நாமும் அதேபோல் பதிலளித்திருப்போம். இதுதான் ஒரே வித்தியாசம்"என்றார். மோதியின் சீனப் பயணம் டிரம்பின் நிலைப்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால், சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தும் முயற்சி திடீரென்று தொடங்கியதல்ல என்று சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான தன்வி மதன் கருதுகிறார். "கடந்த ஆண்டு, ரஷ்யாவின் கசானில் பிரதமர் மோதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். எல்லையில் பதற்றம் அதிகரிக்காமல் இருக்கவும், இந்தியாவின் உத்தி சார்ந்த மற்றும் பொருளாதார பரப்பை விரிவுபடுத்தவும், சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது," என அவர் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்தார். "ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், சீனா இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுமா? என்பது தான். எல்லைப் பிரச்னைகள் காரணமாக, பல பேச்சுவார்த்தைகள் முழுமையடையாமல் முடிந்ததை நாம் பார்த்துள்ளோம். சீனா இந்தியாவை பலவீனமாகக் கருதினால், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம்." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 19 அன்று, பிரதமர் நரேந்திர மோதி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்தார். பிரதமர் மோதியின் சீனப் பயணம் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்குப் பயணம் செய்தார். இதன் பின்னர், ஆகஸ்ட் 21 அன்று அவர் பாகிஸ்தானை அடைந்தார். இந்தியாவிற்குப் பிறகு, பாகிஸ்தானுக்குச் சென்ற வாங் யியின் பயணத்திலிருந்து பல அர்த்தங்கள் பெறப்படுகின்றன. "இந்தியா சீனாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினால், சீனா அதை வரவேற்கும். ஆனால் இந்தியாவுக்கு எந்த சலுகைகளும் கிடைக்காது. சீனா தனது நலன்களில் எந்தவித சமரசமும் செய்யாது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவதையும் நிறுத்தாது"என்று நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளார் ஷாங்காயின் ஃபுடான் பல்கலைக்கழகத்தில் தெற்காசியாவுடனான சீனாவின் உறவுகள் குறித்த நிபுணரான லின் மின்வாங். அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த 50 சதவீத வரி ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுடன் வணிகம் செய்வது கடினமாகிவிடும். கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. 2024-25 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலராக இருந்தது. அமெரிக்காவுடனான இவ்வளவு பெரிய வர்த்தகம் தடைபட்டால், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது, தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் அல்லது புதிய சந்தைகளைத் தேட வேண்டும் என்ற அழுத்தம் இந்தியா மீது உள்ளது. "இந்தியா, வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஈடாக அமெரிக்காவிற்கு அடிபணிய மறுத்தால், அதனால் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியையும் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையையும் இழக்க நேரிடும். சீனாவுடனான நட்பை அதிகரிப்பது அல்லது நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகளை எடுப்பது நல்லது தான் , ஆனால் அவற்றால் அமெரிக்காவின் இடத்தை ஈடுசெய்ய முடியாது" என்று ப்ளூம்பெர்க் தனது செய்தியில் கூறியுள்ளது. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவும் வளர்ந்து வரும் பொருளாதார நாடு தான், எனவே அமெரிக்காவுடனும் சீனாவுடனும் மோசமான உறவுகளைப் பேணுவதன் மூலம், இந்தியா அதன் சிக்கல்களை அதிகரிக்க விரும்பவில்லை. அதேசமயம் இந்த இரு நாடுகளுடனான உறவுகளும் இணக்கமாக இல்லை என்பது உண்மைதான். சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 127.7 பில்லியன் டாலராக இருந்தது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை தியான்ஜினில் நடைபெறும் எஸ்சிஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி சீனா செல்கிறார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மோதி சீனா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திர மோதி சீனாவுக்குச் செல்கிறார். இந்தியாவும் சீனாவும் இணக்கமாக இருப்பதன் முக்கியத்துவம் கிழக்கு லடாக்கில் ஏப்ரல் 2020க்கு முந்தைய நிலை இன்னும் திரும்பாத நேரத்தில், பிரதமர் மோதி சீனாவுக்குச் செல்ல உள்ளார். 2020 க்குப் பிறகு சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை மாண்டரின் மொழியில் பல முறை மறுபெயரிட்டுள்ளது. சீனா அருணாச்சலப் பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என அழைக்கிறது. திபெத் மற்றும் தைவான் ஆகிய இரண்டும் சீனாவின் ஒரு பகுதியாகும் எனக் கூறும் 'ஒரே சீனா' கொள்கையில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்பது வேறு விஷயம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோதி சீனா செல்ல உள்ளார் என்பது எதிர்பாராத முடிவு அல்ல. இந்தியா, 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு முன்னிலை வகித்து, இந்த மாநாட்டை மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்தது. இவ்வாறு இந்த மாநாட்டை , இந்தியா மெய்நிகர் முறையில் நடத்தியது, சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள குழுக்கள் மீது இந்தியா அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், 2022 ஆம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது, சீன அதிபர் ஜி ஜின்பிங் அதில் கலந்து கொள்ளவில்லை. இந்தச் சூழலில், மோதியின் சீனப் பயணம், இந்தியா-அமெரிக்க உறவுகள் மோசமடைவதோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. 'கலிங்கா இந்தோ-பசிபிக் ஆய்வுகள் நிறுவனத்தின்' நிறுவனர் பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ரா, அமெரிக்காவுடனான உறவு முறிந்ததன் காரணமாக இந்தியா சீனாவிற்கு தூது அனுப்புகிறது என்று கருதவில்லை. "அமெரிக்காவுடனான உறவில் முறிவு ஏற்படவில்லை, சீனாவிற்கு புதிய உறவுக்கான தூதும் அனுப்பப்படவில்லை. டிரம்ப் சில முடிவுகளை எடுத்துள்ளார், அவை இந்தியா மீது மட்டுமல்ல, உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் இந்தியாவின் ஒவ்வொரு முடிவையும் டிரம்புடன் இணைக்க முடியாது. பதற்றமான நாட்களிலும் சீனாவுடனான நமது வர்த்தகம் அதிகரித்துள்ளது" என்று பேராசிரியர் மகாபத்ரா விளக்குகிறார். இந்திய தொழில்துறை, சீனாவின் தொழில்நுட்பத்தை அதிகமாக சார்ந்துள்ளது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி , 2024 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவிலிருந்து 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுவியல் மற்றும் மின் உபகரணங்களை இறக்குமதி செய்தது. இந்தியாவின் தொலைத்தொடர்பு வலையமைப்பு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு சீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இது தவிர, இந்தியாவின் மருந்துத் துறையும் சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவும் அரிய மண் தாதுக்களுக்கு சீனாவையே சார்ந்துள்ளது. அது இல்லாமல், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நுகர்வோர் மின்னணு துறைகளின் இலக்குகளை, இந்தியாவால் அடைய முடியாது. சமீபத்தில், சீனா தனது இறக்குமதியைக் கட்டுப்படுத்தியபோது, இந்தியாவின் பல தொழில்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிகவும் பாதிக்கப்பட்டது. மறுபுறம், சீனாவிற்கும் இந்தியா தேவை. இந்தியா ஒரு பெரிய சந்தையாக இருப்பதால், சீனா தனது பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0l6e3g9n9do
  21. யாழில் T56 துப்பாக்கிகள் மற்றும் 5,000 தோட்டாக்கள் மீட்பு யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதை அடுத்து, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று (22) யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது, 30 T-56 ரக துப்பாக்கிகளும், அவற்றிற்கு பயன்படுத்தப்படும் 5,000 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmemolwju0011qpu7dlpfp0ob
  22. இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில்தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (22) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், https://adaderanatamil.lk/news/cmemsee2i0015qpu7mprjjq6q
  23. உக்கிரமான தாக்குதல்; ஒரே இரவில் 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பிய ரஷ்யா! 22 AUG, 2025 | 01:06 PM உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று (21) உக்கிர நிலையை அடைந்தது. நேற்றிரவு ரஷ்யா 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை அனுப்பி உக்ரைனில் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 15க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha) குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் லிவிவ், முகாசெவோ, டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு கட்டடங்கள், தொழிற்சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை நடத்தப்பட்ட உக்ரைன் - ரஷ்யா தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதல் என உக்ரைன் தெரிவித்துள்ளது. உலகில் இயங்கிவரும் இராணுவக் கூட்டமைப்புகளில், மிகவும் பலம் பொருந்தியதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டமைப்பான “நேட்டோ”வில் இணைவதற்காக உக்ரைன் முயற்சித்து வருகிறது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் விளைவாக, 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் இந்த யுத்தம் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவி வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடனும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம், ஒரே இரவில் 574 டிரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு ரஷ்யா அனுப்பி, மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கும், அதனால் விளைந்த அழிவுகளுக்கும் உக்ரைன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/223085
  24. யாழ். கொட்டடி தனியார் காணியில் ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டுபிடிப்பு! 22 AUG, 2025 | 03:50 PM யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தனியார் காணியில் வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இது தொடர்பாக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். அதன் பின்னர், இன்றைய தினம் (22) வெடிபொருட்களை கண்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் செயற்படுத்தப்படும் இந்த ஆயுத மீட்புப் பணியில் யாழ்ப்பாண பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/223116
  25. அடிப்படையில் ரணில் ஊழல்வாதியல்ல என்பதை எவரும் அறிந்திருந்தபோதும் பழக்கப்பட்ட ஒரு துஷ்பிரயோகத்துக்கு அவரும் பங்காளியாகியிருக்கிறார். ரணிலை விட பல மடங்கு துஷ்பிரயோகம் செய்திருக்கும் ஒருவரை கைது செய்வதற்கான ஒரு ஆரம்ப எச்சரிக்கையாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. நாளைக்கு பிக்குமார்களையும், முன்னாள் இராணுவத்தினரையும், இனவாத சக்திகளையும் திரட்டிக்கொண்டு அக்கைதுக்கு எதிராக ராஜபக்சவினர் கிளர்வதாயின் அதற்கான மனப்பக்குவத்துக்கு தயார்படுத்த ரணிலின் இந்த கைது கணிசமான அளவு உதவும். 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க 2025ல் ரணில் விக்கிரமசிங்க இலங்கையை ஆட்சி செய்த அதியுயர் பதவியில் இருந்தவர்களில் 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின், 2025ல் சுமார் 210 ஆண்டுகளுக்கு பின்னராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகியுள்ளார். இடைப்பட்ட காலத்தில் பிரித்தானிய தேசாதிபதிகளும், 1948 சுதந்திரத்தின்பின் பிரதமர்களும், 1978 அரசியலமைப்பின்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இலங்கை ஆட்சிக்கு தலைமைவகித்தபோதிலும் எவரும் எக்காரணத்துக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையின் மன்னராட்சி காலத்துக்கு பின்னரான - மக்களாட்சி காலத்தின் முதலாவது அரச தலைவர் கைது என்பது ஓர் வரலாறு. இனித்தான் சட்டப்புத்தகங்களும், அரசியலமைப்பின் பக்கங்களும் தீவிரமாக ஆராயப்படப் போகின்றன. குறிப்பாக அரசியலமைப்பின் 35வது சரத்து. பிரதி வட்சப்பில் வந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.