Everything posted by ஏராளன்
-
செம்மணி மனிதப் புதைகுழி : பன்னாட்டு நீதி விசாரணை தேவை; சோமரத்ன ராஜபக்ஷவும் விசாரணைகளில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் - ரவிகரன்
21 AUG, 2025 | 03:50 PM யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ என்னும் முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல், இராணுவத்தின் படுகொலைச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றுக்கு சாட்சியமளித்த பி2899 என்னும் வழக்கினை தற்போதைய செம்மணி மனிதப் புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்துவதுடன், பன்னாட்டு நீதி விசாரணைகளில் சோமரத்ன ராஜபக்ச இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் ரவிகரன் கேட்டுக்கொண்டார். அத்தோடு செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பது தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்கவரும் மக்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அச்சுறுத்துவதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும் இந்த செம்மணி கோரப்படுகொலையின் விசாரணைகள் மும்முரமடையும்போது குற்றமிழைத்த படையினர் நாட்டைவிட்டுத் தப்பியோட வாய்ப்பிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்விடயத்தில் குற்றமிழைத்த தரப்பினர் நாட்டை விட்டு தப்பிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயங்களை பற்றி பேசினார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் பன்னாட்டுக் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துவதுடன், பன்னாட்டு நிபுணத்துவம் பின்பற்றப்பட்டு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் இந்த உயரிய சபையில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு செம்மணி அகழ்வாய்வுப் பணிகளுக்குரிய தொழில்நுட்பம் சார் நிபுணத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இராஜாங்க செயலாளர் டேவிட் லமி அண்மையில் தெரிவித்துள்ளார். அவரின் இக்கருத்தினை வரவேற்பதுடன், அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறாக இந்த செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தமது நிபுணத்துவங்களை வழங்குவதற்கு முன்வரும் பன்னாடுகளுக்கு இந்த அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன், அகழ்வாய்வில் அனைத்து விதமான பன்னாட்டு நிபுணத்துவங்களும் பின்பற்றப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு பன்னாட்டு தடயவியல் நிபுணர்களும், பன்னாட்டு மனித உரிமைகள் நிபுணர்களும் இந்த அகழ்வாய்வுகளில் பங்கேற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு சுயாதீனமானதும் நம்பிக்கைத்தன்மை மிக்க பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொள்ளுமாறும் இவ்வுயரிய சபையினைக் கோருகின்றேன். குறிப்பாக தற்போது இந்த நாட்டில் பெரும்பேசுபொருளாக யாழ்பாணம், செம்மணி, சிந்துபாத்தி மயானப் புதைகுழி விவகாரம் மாறியிருக்கின்றது. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் இதுவரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் பரீட்சார்த்த அகழ்வுப் பணியாக 9 நாட்கள் இடம்பெற்று ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. அதனைத் தொடர்து இரண்டாங்கட்ட மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றால் 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் கடந்த ஜூலை 10ஆம் திகதி அகழ்வாய்வாளர்களின் ஓய்விற்காக இடைநிறுத்தப்பட்டு, கடந்த 21.07.2025ஆம் திகதியன்று மீள இரண்டாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த 06.08.2025 அன்று 32ஆவது நாளுடன் இரண்டாம்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அந்த வகையில் இதுவரை குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மொத்தம் 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 140 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் இந்த அகழ்வாய்வுகளில் ஈடுபடும் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ கடந்த 14.08.2025அன்று நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், அகழ்வாய்விற்கு இன்னும் குறைந்தது எட்டு வாரங்கள் தேவைப்படுமெனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இதுவரை மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வாய்வுகளில் பெண்கள், சிறார்கள், குழந்தைகள் என பலதரப்பட்டோருடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், சிறார்களின் விளையாட்டுப்பொம்மை, சிறுமிகளின் ஆடைகள், காலணிகள், கண்ணாடி வளையல்கள், பாடசாலைப் புத்தகப்பை என்பன சான்றுப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன. இவ்வாறான கொடூரங்களைக் காணும்போது நெஞ்சமெல்லாம் பதைபதைக்கின்றது. கண்களில் நீர்நிறைகின்றது. மேலும் இதுவரை இனங்காணப்பட்ட 147 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிர்வாணமாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவை என கடந்த 14ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இதன் மூலம் இங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பதும், இந்தப் புதைகுழியில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென பல்வேறு தரப்பினரும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விடயமும் தற்போது அம்பலமாகியிருக்கின்றது. வார்த்தைகளில் கூறிவிடமுடியாத கொடூரமான தமிழினப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கான மிக முக்கியமான ஆதாரமாகவே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகிறது. வாக்குமூலம் வழங்குவோரை அச்சுறுத்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செம்மணியில் எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணி தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலங்களை அளிக்கவரும் மக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கே.குருபரன், வி.மணிவண்ணன் ஆகியோரால் நீதிமன்றிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தி, சிரமத்திற்குள்ளாக்கி வாக்குமூலமளிக்கவரும் மக்களை அங்குவரவிடாமல் தடுக்கும் நோக்குடன் செயற்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான அச்சுறுத்தல் செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறக்கூடாதெனக் கேட்டுக்கொள்கின்றேன். படுகொலைகளோடு தொடர்புடைய படையினர் தப்பிக்காமலிருக்க நடவடிக்கை தேவை கடந்த 1999இல் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில், கே.எச்.கமிலஸ் பெர்னான்டோ, ஜெஸிமா ஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகிய நால்வர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த விசாரணைக் குழுவினால் 210 பக்கங்களைக் கொண்ட நீண்ட விசாரணை அறிக்கை கடந்த 2003 ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் காணாமல்போனவர்களில் பெருமளவானோர் இராணுவத்தினால் கொல்லப்பட்டிருக்கலாமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், படுகொலையுடன் தொடர்புடைய இராணுவமுகாம்கள், இராணுவஅதிகாரிகள், இராணவத்தினரின் பெயர்களும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த மனிதப் புதைகுழி விசாரணைகள் மும்முரமாக இடம்பெறும்போது அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய படையினர் தப்பியோட வாய்ப்புள்ளது. ஆகவே அதற்கு முன்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். சோமரத்ன ராஜபக்ஷ பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் கடந்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலைவழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட ஆறு இராணுவத்தினருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி மரண தண்டனை வழங்கியிருந்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ செம்மணியில் 300 தொடக்கம் 400 வரையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இவ்வாறு சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றில் சாட்சியமளித்ததற்கமைய அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அதனைத் தொடர்ந்து செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டிருந்தன. பின்னர் இந்த விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அப்போது நீதிமன்றிற்கு வழங்கிய சாட்சியத்தை ஆதாரப்படுத்தும் வகையில் தற்போது செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் மிக அதிகளவில் இனங்காணப்படுகின்றன. எனவே குறித்த வழக்கு மீள எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதப்புதைகுழி வழக்குடன் தொடர்புபடுத்தப்படவேண்டும். யாழ். நீதவான் நீதிமன்ற வழக்கேட்டிலிருந்து கொழும்பு நீதிமன்றுக்கு அனுப்பப்பட்ட பி2899 என்னும் வழக்கு மீளவும் யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனக் கோருகின்றேன். இத்தகைய சூழலில் பன்னாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கடந்த 1996 காலப் பகுதியில் செம்மணி தொடக்கம் துண்டி இராணுவ முகாம் வரை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல படுகொலைகள், பலசேனா தலைமையகம் முதல் இராணுவத்தால் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம் பற்றிய விபரங்கள், மணியம் தோட்டம் பகுதியிலுள்ள புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக அண்மையில் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்போதைய அரசதலைவர் சந்திரிக்கா அம்மையார், அப்போதைய பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட தரப்பினரும் இத்தகைய வதைமுகாம்கள் தொடர்பில் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அக்காலப்பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களாக 7ஆவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரிகளான கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார ஆகியோருடன் பொலிஸ் பரிசோதகர்களான அப்துல் ஹமீட் நஸார், சமரசிங்க ஆகியோரின் பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு விவகாரத்திற்கு தலையீடுகளற்ற சுயாதீன பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அந்த பன்னாட்டு நீதி விசாரணைகளில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியங்களும் பெறப்படவேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருகின்றேன். அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்த அரசானது தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் எமது பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கேட்டுக்கொள்கின்றேன். பன்னாட்டு நீதி விசாரணை மாத்திரமே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றத்தரும் ஒரே மார்க்கமாக அமையும். அதேவேளை செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வாய்வுப் பணிகளில் பன்னாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதல், பன்னாட்டு கண்காணிப்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன், பன்னாட்டு நிபுணத்துவங்கள் பின்பற்றப்பட்டு அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திற்கும் பன்னாட்டு நீதி விசாரணை தேவையென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/223022
-
அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்
- அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்
Judge Frank Caprio Who Became a 'Symbol of Kindness' Dies at 88 | WION- வன்னியில் விசேட தேவையுள்ள மாணவர்களுடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன்
விசேட கல்வியில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன் 21 AUG, 2025 | 02:40 PM வன்னி பிராந்தியத்தில் விசேட கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். தற்போது விசேட கல்விப்பரப்பில் பல்வேறு குறைபாடுகள், பற்றாக்குறைகள் காணப்படுகின்ற நிலையிலும் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற மாணவன் ஜெயபாலன் பூந்தமிழ் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தோற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்வாறு ஏனைய விசேட தேவையுள்ள மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது குழுக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று புதன்கிழமை (20) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நான் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். அந்த வகையில் விசேட கல்வி தேவையுடைய மாணவர்கள் எமது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் உள்ளனர். குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 53 விசேட கல்வி தேவையுடைய மாணவர்கள் காணப்படுகின்றனர். அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் வலயம் மற்றும் வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் அதிகளவான விசேட கல்வித் தேவையுள்ள மாணவர்கள் காணப்படுகின்றனர். யுத்த காலப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள விசேட கல்வித்தேவையுடைய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவே உணர்கின்றோம். தற்போதும் விசேட கல்வி மாணவர்களுக்கான தேவைப்பாடுகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் விசேட கல்வி போதிப்பதற்கு 27 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். எனினும் 13 விசேட கல்வி ஆசிரியர்களை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேநிலை தான் வன்னியின் ஏனைய பாகங்களிலுள்ள கல்வி வலயங்களிலும் காணப்படுகின்றது. இலங்கை பூராகவும் இக்குறைபாடுகள் இருப்பதையும் அறியக்கூடியதாக உள்ளது. எனவே இத்தகைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும். அந்த வகையில் விசேட கல்வி ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படவேண்டும். விசேட கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். விசேட கல்விக்கான பௌதீக வளங்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். விசேட கல்விக்கான வகுப்பறைகள் உறுதிசெய்யப்படவேண்டும். விசேட கல்விக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் சமத்துவ அடிப்படையிலான வளப்பங்கீடும், சமத்துவ அடிப்படையிலான வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படவேண்டும். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனிய வாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற விசேட தேவையுடைய மாணவனான ஜெபாலன் பூந்தமிழ் என்ற மாணவன் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார். கல்வி கற்பதற்கு பல்வேறு பற்றாக்குறைகள் காணப்பட்டபோதும், வசதிவாய்ப்புக்கள் முறையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் அளவிலே அந்த மாணவன் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். ஆசிரியர்களும் மிகச் சிறப்பான முறையில் கற்பித்தால் செயற்பாட்டினை முன்னெடுத்ததாலேயே இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அந்த ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு ஏனைய விசேட தேவையுடைய மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும். எனவே விசேட கல்விக்கான வசதி வாய்ப்புக்களையும், முறையான வளப்பங்கீடுகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/223010- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
“மனிதர்களைக் கொன்றுவிட்டு மின்சாரம் எதற்கு?” - மன்னாரில் காற்றாலை அமைத்தல், கனிம மணல் அகழ்வுக்கு எதிராக தொடரும் போராட்டம் 21 AUG, 2025 | 01:22 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 19ஆவது நாளாக இன்றும் (21) சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம், மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்னார் முச்சக்கரவண்டி சங்கத்தினர் ஆதரவு வழங்குவதோடு, அவர்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டனர். இதில் மக்கள், “மனிதர்களைக் கொன்றுவிட்டு மின்சாரம் எதற்கு?”, “காற்றாலை உற்பத்தி எம் கண்ணீரின் கதை சொல்லும்” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னாரில் புதிதாக செயற்படுத்தப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றை முழுமையாக நிறுத்தும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என, அதில் பங்கேற்றுள்ளவர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் நடத்தப்பட்ட இப்போராட்டத்தின்போது வெளிநாட்டு பிரஜை ஒருவர் கலந்துகொண்டு மக்களின் போராட்டம் தொடர்பாக கேட்டறிந்தார். ஜனாதிபதி ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள நிலையில் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இருந்து மாவட்ட செயலகம் வரை ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/223006- நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 வீதமானவற்றுக்கு தொற்றா நோய்களே காரணம் - இலங்கை மருத்துவ சங்கம்
21 AUG, 2025 | 12:40 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டவர்களின் முதல் ஆரம்பத்தை அவதானிக்கும்போது அவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர். இலங்கை மத்திய பொருளாதாரம் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. வறுமை நிலையிலுள்ள நாட்டு மக்கள் எவ்வாறான உணவுகளை உட்கொள்கின்றனர்? அவர்கள் அதிகளவு சீனி மற்றும் உப்பு கொண்ட உணவுகளையே உட்கொள்கின்றனர். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் குறிப்பாக மேல் மாகாணத்தில் ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுகிறது. நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவற்றுக்கு தொற்றா நோய்கள் மற்றும் அதனையொட்டிய நோய்களே பிரதான காரணியாக உள்ளன. இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு பிரதான மூலக் காரணி சீனியாகும். குறிப்பாக மது பாவனை பழக்கமுடையவர்களே இதில் பெரும்பாலானவர்களாக உள்ளனர். எவ்வாறிருப்பினும் தற்போது சிறிதளவும் மதுப் பழக்கம் அற்றவர்களிலும் இவ்வாறான நோய் நிலைமைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதிகளவு சீனி எடுத்துக்கொள்வது இதயத்தில் கொழுப்பு படிவதற்கு காரணமாக அமைகிறது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனியை எடுத்துக்கொள்கின்றனர். உலகில் அதிகளவில் சீனி பயன்படுத்தும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என மருத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/223003- உயிர்கள் வாழ இன்னொரு இடம்? - பூமிக்கு அருகே வாயு கோளத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்
பட மூலாதாரம், NASA, ESA, CSA, STSCI, R. HURT (CALTECH/IPAC) படக்குறிப்பு, ஆல்ஃபா சென்டாரி ஏ-வைச் சுற்றி வரும் ஒரு வாயு கோளின் மாதிரி படம். வலது மற்றும் இடது புறம் உள்ள இரு பிரகாசமான நட்சத்திரங்களின் மத்தியில் புள்ளியாக உள்ள சிறிய ஒளி தான் நமது சூரியன் கட்டுரை தகவல் ஜார்ஜினா ரன்னார்ட் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உயிரற்ற கோள், வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் உயிரைத் தாங்கக்கூடிய நிலவுகளைக் கொண்டிருக்கலாம். இந்த அறிகுறிகள், ஆல்ஃபா சென்டாரி நட்சத்திர அமைப்பில், சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டன. இந்த சாத்தியமான கோள் கடந்த ஆண்டு (2024 ஆகஸ்ட்) கண்டறியப்பட்டது, ஆனால் அதன் பின்னர் பார்வையிட்டபோது அது மறைந்துவிட்டது. இந்தக் கோள் நிச்சயமாக இருப்பதை உறுதிபடுத்த வானியலாளர்கள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. சூரிய குடும்பத்தைச் சேராத இந்தக் கோளின் நட்சத்திரத்திற்கும் நமது சூரியனுக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. "நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட தூரம், ஆனால் பால்வெளி அளவில் இது மிக அருகில் உள்ளது - இது நமது அண்டைப் பகுதியில் உள்ளது," என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் விண்வெளி கருவிகள் இணைப் பேராசிரியர் டாக்டர் கார்லி ஹோவெட் கூறினார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வியாழனின் நிலவான யூரோப்பாவின் சித்தரிப்புப்படம், இதன் கடல் பகுதியில் உயிரின் அறிகுறிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர் மேலும் அவர், "இது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உள்ளது, அதே வெப்பநிலையும் பிரகாசமும் கொண்டது. வாழக்கூடிய உலகங்களைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பினால் இது மிகவும் முக்கியமானது," என்று தெரிவித்தார். இந்தக் கோள், நமது சூரிய மண்டலத்தின் வாயு கோள்களான சனி மற்றும் வியாழனைப் போன்று இருக்கும், மேலும் அடர்த்தியான வாயு மேகத்தால் சூழப்பட்டிருக்கும். அதாவது, இந்தக் கோளில் உயிர்கள் இருக்க முடியாது. ஆனால் அதைச் சுற்றி வரும் நிலவுகள் உயிர்கள் வாழக்கூடியவையாக இருக்கலாம். நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் மற்றும் பிற கோள்களில் பனியால் ஆன நிலவுகள் உள்ளன, அவை உயிரைத் தாங்கக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த சாத்தியத்தை தற்போது யூரோப்பா கிளிப்பர் மற்றும் ஜூஸ் என்கிற விண்வெளி ஆய்வு திட்டங்களின் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த கோள்கள் நமது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஆனால், இந்த "புதிய" கோள் ஒப்பீட்டளவில் அதன் நட்சத்திரத்திற்கு அருகில் உள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (கோப்புப்படம்) தொலைதூரப் பொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு தற்போது விஞ்ஞானிகள் வசம் இருக்கும் கருவியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் நேரடி படமாக்கல் மூலம் இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டன. "இந்த நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகவும், அருகிலும் வானத்தில் வேகமாக நகரக்கூடியவையாகவும் இருப்பதால், உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தினாலும் இந்த அவதானிப்புகளை மேற்கொள்வது மிகவும் சவாலானது," என்று நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் இணை ஆசிரியருமான சார்லஸ் பைச்மேன் கூறினார். இந்த நட்சத்திரங்கள் பெருமளவு பிரகாசமான ஒளியை உருவாக்குகின்றன, இது அருகிலுள்ள பொருட்களை மறைக்கக்கூடும். அதனால் தான் இந்தக் கோள் 2024 ஆகஸ்டில் ஒரு முறை கண்டறியப்பட்ட பிறகு மீண்டும் தேடியபோது மறைந்துவிட்டதாகத் தோன்றியிருக்கலாம். "ஒருவேளை அந்த கோள் நட்சத்திரத்தின் பின்னால் இருந்திருக்கலாம் அல்லது பார்க்க முடியாத அளவுக்கு அருகில் இருந்திருக்கலாம். இதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை," என்று டாக்டர் ஹோவெட் கூறினார். வானியலாளர்கள் இப்போது இந்தக் கோளை பற்றிய புதிய அறிகுறிகளைத் தேடுவார்கள். இதற்கு, 2027இல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய நாசா தொலைநோக்கியான கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் எதிர்கால ஆய்வுகள், ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்கிற முறை மூலம் இந்த கோள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நமக்கு தெரிவிக்க முடியும். இது, கோளின் தோற்றம் மற்றும் அதைச் சுற்றி வரும் நிலவுகளின் வாழக்கூடிய தன்மை பற்றி மிகவும் விரிவான தகவல்களை வழங்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j9vygzn60o- அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்
21 AUG, 2025 | 10:57 AM அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ (Frank Caprio) நேற்று புதன்கிழமை (20) காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமாகியுள்ளார். நீதிமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222988- தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
தவெக மாநாடு: மோதி - ஸ்டாலினுக்கு விஜய் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள் என்ன? பட மூலாதாரம், TVK 21 ஆகஸ்ட் 2025, 11:19 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், '2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக, மற்றொன்று திமுக.' என்றார் 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. சுமார் 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றினர். அதற்கு முன்பு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில், விஜய் நடந்து சென்றபோது, தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் பலரும் அந்த பாதையிலேயே ஏறிவிட்டனர். மேடையில் அமந்திருந்த தனது தந்தை எஸ்.வி சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரை விஜய் கட்டியணைத்தார். தன்னை பார்த்தவுடன் எழுந்து நின்ற இருவரையும் அமரும்படி விஜய் வற்புறுத்தினார். பின்னர் தவெகவினர் உறுதிமொழி ஏற்றனர். பட மூலாதாரம், TVK 'எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை' தொடர்ந்து மாநாட்டில் பேசிய விஜய், ''ஒரு சிங்கம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது, சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டருக்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் உயிருடன் உள்ள, பெரிய விலங்குகளையே தாக்கும், ஜெயிக்கும். உயியிரில்லாததை, கெட்டுப் போனதை தொடாது. அப்படிப்பட்ட சிங்கம் எதையும் தொடாது, தொட்டால் விடாது. சிங்கம் காட்டின் எல்லையை தானே வகுக்கும். கூட்டத்துடனும் இருக்கும், அஞ்சாமல் தனியே வரும். தனியாக இருந்தாலும் அது காட்டின் அரசாக இருக்கும். '' என்றார். ''எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எம்ஜிஆரை மாதிரியே குணம் கொண்ட விஜயகாந்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரும் மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியாது. 1967, 1977ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று 2026ல் அப்படியொரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்வதற்கான மாநாடு இது.'' என்றார் விஜய். பட மூலாதாரம், TVK '2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி' உரையை தொடர்ந்த விஜய், ''ஷூட்டிங்கில் இருந்து வந்துவிட்டு எப்படி ஆட்சியைப் பிடிப்பார் என தற்போது கேட்கின்றனர். இந்த விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தில் மட்டும் இருக்கிறார் என நினைக்காதீர்கள். இது வெறும் ஓட்டாக அல்ல, மக்கள் விரோத ஆட்சிக்கு 'வேட்டாக' இருக்கும். என்னுடைய பிணைப்பு மக்களுடன் மட்டும்தான்.'' ''எங்களின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை. ஒரே கொள்கை எதிரி பாஜக தான், அரசியல் எதிரி திமுக தான். ஒட்டுமொத்த மக்களின் சக்தி எங்களுடன் இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் உறவுகள் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜகவுடன் ஏன் மறைமுக கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்? நாங்கள் என்ன மகா ஊழல் கட்சியா? 2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று டிவிகே, மற்றொன்று திமுக.'' என்றார் ஷார்ட் வீடியோ Play video, "காணொளி: மாநாட்டு மேடையில் பெற்றோரை ஆரத்தழுவிய விஜய்", கால அளவு 0,24 00:24 காணொளிக் குறிப்பு, காணொளி: மாநாட்டு மேடையில் பெற்றோரை ஆரத்தழுவிய விஜய் பாடல் பாடிய விஜய் 'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என்ற பாடலை பாடிய விஜய், "மக்கள் அரசியல்' எனும் சவுக்கை கையில் எடுக்கலாமா? பாசிச பாஜக, 'பாய்சன்' திமுகவுக்கு எதிராக கையில் எடுக்கலாமா?'' என்றார். ''மோதி மூன்றாவது முறையாக ஆட்சியை கையில் வைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக நல்லது செய்ய வந்தீர்களா? அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்களின் பிரதிநிதியாக உங்களிடம் (மோதி) சில கேள்விகள் கேட்க வேண்டும். தமிழக மீனவர்கள் 800 பேருக்கு மேல் தாக்கப்பட்டிருக்கின்றனர். இனியாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நடத்தப்படும் நீட் தேர்வால், பல அநியாயங்கள் நடக்கின்றன. அதை சொல்வதற்கே மனம் வலிக்கிறது. நீட் தேவையில்லை, என அறிவியுங்கள் போதும். இதைச் செய்வீர்களா?'' என்றார். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, 'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என்ற பாடலை விஜய் பாடினர் ''நேரடி பாசிச பாஜக அடிமை கூட்டணி ஒருபக்கம், மறுபுறம் மறைமுக பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணி. மக்கள் சக்தி இல்லாத ஊழல் கட்சிகளை அடிபணிய வைத்து 2029 வரைக்கும் சொகுசுப் பயணம் செல்லலாம் என திட்டம் வைத்துள்ளீர்களா?'' என சாடினார் விஜய். ''நேரடி - மறைமுக கூட்டணி வைத்தாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? ஒரு எம்.பி. சீட் கூட தரவில்லையென்பதால் பாஜக ஓரவஞ்சனை செய்கிறது. கீழடி நாகரிகத்தை மறைத்து பாஜக 'உள்ளடி' வேலை செய்கிறது.'' என்றார் ஷார்ட் வீடியோ Play video, "தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர்", கால அளவு 2,05 02:05 காணொளிக் குறிப்பு, தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர் - மாநாடு பற்றி தவெக தொண்டர்கள் கூறுவது என்ன? 'டெல்லி சென்று ரகசிய கூட்டம்' ''எம்ஜிஆரின் மாஸ் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அவர் உயிருடன் இருக்கும்வரை ஒருவராலும் முதலமைச்சர் சீட் பற்றி கனவு கூட காணமுடியவில்லை. 'எப்படியாவது சி.எம். சீட்டை எனக்கு தாருங்கள், என் நண்பர் வந்தவுடன் திரும்பித் தருகிறேன்," என தன் எதிரியைக் கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர். ஆனால், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யார்? அப்பாவி தொண்டர்களே அதை சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கின்றனர். அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு 2026ல் யாருக்கு ஓட்டு செலுத்த வேண்டும் என நன்றாகவே தெரியும். அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி. திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது. ஒரு ரெய்டு நடந்தால், டெல்லி சென்று ரகசிய கூட்டம் நடத்துகின்றனர் திமுகவினர். அந்த சந்திப்புக்குப் பிறகு அந்த பிரச்னை அப்படியே காணாமல் போயிருக்கும்.'' என்றார் விஜய் ''இந்த ஆட்சியை பார்த்து நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்? நீங்கள் (ஸ்டாலின்) நடத்தும் ஆட்சியில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா? தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து 'வாயே இல்லாத வயிறு கூட சிரிக்கிறது'. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? வெளியே செல்லும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என பெண்கள் கதறுகின்றனர். அந்த கதறல் உங்களுக்குக் கேட்கிறதா? ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.'' என்றார் '234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்' ''தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர். உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர்தான் வேட்பாளராக நிற்பார்கள். அந்த வேட்பாளரும் நானும் வேறு வேறு இல்லை. நீங்கள் அவருக்கு வாக்கு செலுத்தினால், எனக்கு வாக்கு செலுத்தியது போன்று. என்னையும் மக்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சினிமாவில் 'மார்க்கெட்' போனவுடன் நான் அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.'' என்றார் விஜய் பட மூலாதாரம், TVK 'எல்லா சினிமாக்காரர்களும் கெட்டவர்கள் கிடையாது' ''என்னையும் மக்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சினிமாவில் 'மார்க்கெட்' போனவுடன் நான் அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன்'' என்றார் விஜய் ''எல்லாவற்றுக்கும் தயாராகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மக்கள் செலுத்திய அன்புக்காக ஆதரவுக்காக வந்திருக்கிறேன். எல்லா அரசியல்வாதியும் நல்லவர் கிடையாது, எல்லா சினிமாக்காரர்களும் கெட்டவர்கள் கிடையாது'' என்று கூறினார் விஜய் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் "எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது?" என விஜய், விமர்சித்திருந்தார். இதற்கு விஜய் பெயர் குறிப்பிடாமல் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ''அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறதென சிலர் கேட்கிறார்கள். அறியாமையின் காரணமாக பேசுவதாக பார்க்கிறேன்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgn0nzg2kko- மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்தை முறைப்படுத்த ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவு
Published By: VISHNU 21 AUG, 2025 | 08:08 PM மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே வியாழக்கிழமை (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முறையாக வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்துடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை அதிகரிப்பது, அவர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், அந்தக் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளை வழங்குதல் போன்றவற்றை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கவும் தற்பொழுது வழங்கப்படும் சேவைகளை மேலும் செயற்திறனுடன் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் ஜயமாலி.சி. விக்ரமாரச்சி மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/223055- பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!
பொலிஸாரால் தேடப்படும் மூன்று இளைஞர்களை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்! 21 AUG, 2025 | 12:37 PM சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்களை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த நபரொருவர் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைக்குண்டுடன் மற்றுமொரு சந்தேக நபர் வவுனியா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கைக்குண்டுகளை வைத்திருக்கும் மேலும் மூன்று இளைஞர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் மூன்று இளைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களில் உள்ள இளைஞர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 071 - 8591966 அல்லது 071 ක- 8596150 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று இளைஞர்களின் விபரங்கள் ; பெயர் - ஜீவராச சுஜீபன் வயது - 30 முகவரி - காந்தி நகர், நெரியகுளம், வவுனியா தேசிய அடையாள அட்டை இலக்கம் - 950554215V பெயர் - இலங்கோ இசைவின்சன் வயது - 27 முகவரி - இலங்கம் 379, 03 ஆம் பிரிவு, செட்டிக்குளம் தேசிய அடையாள அட்டை இலக்கம் - 199836210402 பெயர் - மஹேந்திரன் யோகராசா வயது - 27 முகவரி - அராலி, வட்டுக்கோட்டை தேசிய அடையாள அட்டை இலக்கம் - 981633881V https://www.virakesari.lk/article/223000- தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், எவ்வாறு முதலுதவி செய்யவேண்டும்?
ஹெய்ம்லிச் மனேவர் என்ற முதலுதவி முறை சுய முதலுதவி- தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், எவ்வாறு முதலுதவி செய்யவேண்டும்?
தொண்டையில் மாத்திரை சிக்கியதால் உயிரிழந்த 4 வயது சிறுவன் - கவனமாக இருப்பது எப்படி? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2025, 02:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள பி.ஆர். பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் நான்கு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை, காய்ச்சல் காரணமாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் சிறுவனுக்கு சில மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். அன்று இரவு அந்த மாத்திரைகளை மகனுக்கு வழங்கியதாக பெற்றோர் கூறுகின்றனர். அதை விழுங்கும்போது, மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்? பெரியவர்களுக்கும் இதுபோல நடக்க வாய்ப்புள்ளதா? குழந்தைகளுக்கு மாத்திரைகளை கொடுக்கலாமா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே' "5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அவர்கள் கைக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய பொருள்கள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். அவை தொண்டையில் சிக்கி காற்றுப்பாதையை அடைக்கும்போது, நுரையீரல் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கலாம். மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆக்ஸிஜன் செல்லாமல் இருக்கும்போது, அது மூளை பாதிப்பு அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்." என 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' தெரிவிக்கிறது. ஆனால், "மாத்திரைகளை முழுங்குவது சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, (சில) பெரியவர்களுக்கும் கூட எளிதானது அல்ல. மாத்திரைகளை முழுங்குவது, மூன்றில் ஒருவருக்கு வாந்தி, குமட்டல் உணர்வு அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது." என ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி தெரிவிக்கிறது. இதுகுறித்துப் பேசிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், "பொதுவாகவே 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரைகளை அப்படியே கொடுப்பதைத் தவிர்க்கலாம். தண்ணீரில் பொடித்துக் கொடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே" என்கிறார். படக்குறிப்பு, சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார். பொதுவாக வாயில் சிறிதளவு தண்ணீரை வைத்துக்கொண்டு, பின்னர் மாத்திரையை வாயில்போட்டு விழுங்குவது சிறந்தது எனக் கூறும் அவர், "ஆனால், குழந்தைகளை அவ்வாறு செய்யவைப்பது சுலபமல்ல என்பதால், பொடித்துக்கொடுப்பது நல்லது." என்கிறார். சில மருந்துகள் மாத்திரை வடிவங்களில் மட்டுமே இருக்கும், சிரப் வடிவில் கூட கிடைக்காது என்பதால், சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார். "குழந்தைகளுக்கு அதைக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மருத்துவர்கள் வழங்குவர். ஆனால் இறுதியாக, பெற்றோர் தான் குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுப்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்." என்றும் அவர் கூறுகிறார். குழந்தைகளில் மூச்சுத் திணறல் தொடர்பான இறப்பு அபாயத்தைக் குறைக்க, மாத்திரைகளை நசுக்கி தண்ணீருடன் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) பரிந்துரைக்கிறது. பெரியவர்களும் கவனமாக இருக்க வேண்டுமா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மாத்திரைகளை அப்படியே விழுங்கவேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை என்கிறார் மருத்துவர் அருண்குமார். 'மாத்திரைகளை விழுங்குவது என்பது பெரியவர்களுக்கு குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு மிகவும் கடினமானது. வயது மூப்பின் காரணமாக அவர்கள் அதிக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால், மாத்திரைகளை விழுங்குவது மூலம் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்' என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கட்டுரை தெரிவிக்கிறது. குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால், அவர்கள் ஒருகட்டத்தில் மாத்திரைகளை உட்கொள்வதையே தவிர்ப்பதாகவும், இதனால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாக மாறுகிறது என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும் என்றும், உதாரணத்திற்கு 19.5 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் எடுத்துக்கொள்ளப்படும் நீரிழிவு நோய்க்கான மிகவும் பொதுவான மருந்தான மெட்ஃபோர்மின் போன்றவை அளவில் பெரிதாக இருப்பதும் ஒரு முக்கியப் பிரச்னை என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. "முதியோர்களுக்கு மாத்திரை கொடுக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்கும் நீரில் கரைத்துக் கொடுப்பது நல்லது. மாத்திரையை விழுங்கியே ஆக வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. கேப்சியூல் வடிவில் இருந்தாலும் பிரித்து, நீரில் கரைத்துக் கொடுக்கலாம்." என்கிறார் மருத்துவர் அருண்குமார். தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. "குழந்தைகள், பெரியவர்கள் என தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், ஹெய்ம்லிச் மனேவர் என்ற முதலுதவி முறையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண்குமார். பொதுவாக ஒருவருக்கு தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனே முதுகில் தட்டுவது என்பது பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால், அது பெரிதாக பலனளிக்கக்கூடிய ஒரு முறை அல்ல என்பது மட்டுமல்லாமல், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் மேலும் கீழே செல்லவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த ஹெய்ம்லிச் மனேவர் (Heimlich maneuver) முறை பரிந்துரைக்கப்படுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது. குறிப்பாக, 1960களில் அமெரிக்காவில், உணவு, பொம்மைகள் மற்றும் பிற பொருட்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவது என்பது தற்செயலான மரணங்களுக்கு ஆறாவது முக்கிய காரணமாக இருந்தது. அதன் பிறகு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகள், மூச்சுத்திணறலால் சுயநினைவு இழந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும். மூச்சுத்திணறல் அல்லது தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அதாவது தொண்டையில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, பேச, இரும அல்லது மூச்சுவிட முடியாத நிலையில் ஒருவர் இருந்தால், உடனடியாக இந்த ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும். "பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக்கொள்ளுங்கள். வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண்குமார். ஒருவயதிற்குட்பட்ட குழந்தை என்றால், தங்களது தொடையின் மீது வயிறு இருப்பது போல குழந்தையை படுக்க வைத்து முதுகில் தட்ட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். "பல பள்ளிக்கூடங்களில் இந்த முதலுதவி முறையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதை பொதுமக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அது ஒரு எளிய முறை தான்." என்கிறார் அருண்குமார். 'மாத்திரைகளை கட்டாயப்படுத்திக் கொடுக்கவே கூடாது' படக்குறிப்பு, மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுவது ஆபத்தானது என்கிறார் ரேவதி. "பொடித்து கொடுக்கிறோமோ அல்லது உடைத்துக் கொடுக்கிறோமோ, ஆனால் ஒருபோதும் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுக்கக் கூடாது. அதனால் குழந்தைகள் பீதியடைவார்கள், அது மூச்சுத்திணறலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்" என்கிறார் மருத்துவர் ரேவதி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை நலப் பிரிவின் மூத்த ஆலோசகராக உள்ளார். குழந்தைகளை ஆசுவாசப்படுத்தி கொடுக்க வேண்டும், அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தும் அவர், "சிலர் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுகிறார்கள். அது மிகவும் தவறு மற்றும் ஆபத்தானது." என்கிறார். சிறு குழந்தைகளின் மூச்சுக்குழாய் அமைப்பு மிகவும் குறுகலாக இருப்பதால் மாத்திரைகள் தொண்டையில் சிக்கும் வாய்ப்பு அதிகம் என அவர் கூறுகிறார். "6 வயதுக்குட்பட்ட குழந்தை என்றால் நிச்சயமாக தண்ணீரில் கரைத்துக் கொடுங்கள். 6 முதல் 10 வயது என்றால், உடைத்தோ அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் கொடுக்கலாம் அல்லது மெல்லக்கூடிய மாத்திரைகளை (Chewable tablet) பரிந்துரைப்பது சிறந்தது. 10 வயதிற்கு மேல் மாத்திரைகளை அப்படியே விழுங்கச் சொல்லலாம், ஆனாலும் கவனம் தேவை" என்கிறார் மருத்துவர் ரேவதி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2x4z4e74vo- யாழ். பலாவி விமான நிலைய 2 ஆவது கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது - ஸ்ரீதரன்
20 AUG, 2025 | 04:03 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படையின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க வடக்கு - கிழக்கின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இவ்விமான நிலையம் ஊடாகவே எயார்சிலோன் நிறுவனத்தின் முதலாவது விமானப் பயணம் இரத்மலானையிலிருந்து சென்னைக்கு நடத்தப்பட்டது. அதன் பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்புக்கும் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டு பின்னரான போர்க்காலச் சூழலில் பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியில் முதற்கட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்விமான நிலையம் மீளியக்கப்பட்டு வருகின்றபோதும், தற்போது பயன்பாட்டிலுள்ள விமான ஓடுபாதையை மேலும் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு விரிவாக்கும் பட்சத்தில், ஏ-320 ரக விமானம் உள்ளிட்ட ஆகக்குறைந்தது 180 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து தரையிறங்கும் நிலையை உருவாக்கி, அதன்மூலம், புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்த விமானநிலையம் ஊடாக வருகை தருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். குறிப்பாக, பெரிய ரக விமானங்கள் செயற்படத் தொடங்கினால் பயணிகள் கொண்டுவரக் கூடிய பொதிகளின் அளவு 15 கிலோவில் இருந்து 30 கிலோவாக அதிகரிக்கப்படும். இதனால் வடக்கு - கிழக்கிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் தெரிவாக பலாலி விமானநிலையமே முன்னுரிமை பெறும். இதன்மூலம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைவதுடன் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படும். அதேவேளை, வடக்கு கிழக்கிலுள்ள வரலாற்றுத் தொன்மை மிகு ஆலயங்களை தரிசிக்க பெருமளவு இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும். இவ்வாறான பின்னணியில் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன? மேற்குறித்த அடிப்படையில் விமான நிலையத்தின் சேவைப்பரப்பை விரிவாக்குவதன் மூலம் புலம்பெயர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எவையேனும் அரசிடம் உள்ளதா? அமைச்சர் கடந்த 2025.03.30ஆம் திகதி தாங்கள் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதந்த போது, ஆறுமாத காலத்திற்குள் இவ்விமானநிலையத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்படும் என உறுதியளித்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள போதும், அதுசார்ந்த எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இதுவரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அறித்தர முடியுமா? வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய நாட்டின் உதவியுடனேயே இந்த விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவி எவ்வளவு என்பதையும், இரண்டாம்கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்பதையும் அமைச்சர் தெரிவிப்பாரா?, அவ்வாறு எந்தத் தடைகளும் இல்லையெனில் பலாலி விமானநிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது முடிவுறுத்தப்படும் என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா? பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கலாமா? ஆமெனில், இதுவரை எத்தனை பேருக்கு எவ்வளவு தொகை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இன்றுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாதவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாமைக்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? என்றார். https://www.virakesari.lk/article/222946- காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
காஸாவில் தரைவழித் தாக்குதல் தொடக்கம் - நகரை முழுவதும் கைப்பற்ற நடவடிக்கை பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் தரை வழித் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம். கட்டுரை தகவல் டேவிட் க்ரிட்டன் & கேப்ரியலா போமிராய் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தரைவழி தாக்குதலுக்கான முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதன் புறநகர் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சைதூன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேலிய படைகள் ஏற்கனவே நுழைந்துவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸின் ஒப்புதல்படி தாக்குதலுக்கான அடித்தளம் அமைப்பதே நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 ரிசர்வ் படையினர் வரவழைக்கப்படுகின்றனர். அதன்பின் தற்போது உள்ள படையினர் விடுவிக்கப்படவுள்ளனர். அப்பாவி மக்கள் மீது போர் தொடுப்பதற்காக இஸ்ரேல் சண்டை நிறுத்தத்தை தடுப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. காஸா நகரை இஸ்ரேல் கைப்பற்றி வருவதால், லட்சக்கணக்கான பாலத்தீனர்கள் காஸாவில் இருந்து வெளியேறி தெற்கு காஸாவில் உள்ள முகாவிற்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலிய கூட்டாளிகள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "இது இருதரப்பு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும், மேலும் முழு பிராந்தியத்திலும் நிரந்தரமாக போர் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது." என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ராங் தெரிவித்துள்ளார். "மேலும் இடம்பெயரும் சூழல், தீவிரமடையும் விரோதப் போக்கு ஆகியவை காஸாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு ஏற்கனவே பேரழிவு தரும் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது" என சர்வதேச ரெட் கிராஸ் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டை நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் உடனான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, முழு காஸா நகரையும் கைப்பற்றும் முடிவை அறிவித்தது இஸ்ரேல் அரசு. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பரில் 60,000 ரிசர்வ் படையினர் வரவழைக்கப்படுகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 21) தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின், 22 மாதப் போருக்குப் பிறகு ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "காஸா நகரில் ஹமாஸுக்கு ஏற்படும் சேதத்தை நாங்கள் மேலும் ஆழப்படுத்துவோம் எனவும் நிலத்திற்கு மேலும், கீழும் பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் சேதத்தை நாங்கள் ஆழப்படுத்துவோம், மேலும் மக்கள் ஹமாஸைச் சார்ந்திருப்பதைத் துண்டிப்போம்." எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்குதலை தொடங்க காத்திருக்கவில்லை என டெஃப்ரின் கூறினார். "நாங்கள் ஏற்கனவே முதற்கட்ட தாக்குதலை தொடங்கிவிட்டோம். காஸாவின் புறநகர்ப் பகுதிகள் IDF கட்டுப்பாட்டுக்குள் உள்ளன" "சைதூன் சுற்றுப்புறத்தில் 2 படைப்பிரிவுகள் பதுங்கி தரைவழித் தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் இங்கு ஆயுதங்களுடன் கூடிய ஒரு சுரங்கப்பாதையை கண்டுபிடித்தனர். மேலும் மூன்றாவது படைப்பிரிவு ஜபாலியா பகுதியில் செயல்பட்டு வருகின்றனர்" என அவர் தெரிவித்தார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில், காஸாவில் இருந்து அவர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். சைதூன் மற்றும் சப்ரா சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் செவ்வாயன்று AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவின் புறநகர்ப் பகுதிகள் IDF கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக டெஃப்ரின் கூறினார் நேற்று இஸ்ரேலிய படை நடத்திய தாக்குதலில் இந்தப் பகுதியில் 25 பேர் உயிரிழந்ததாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. காசா நகருக்கு மேற்கே உள்ள ஷாதி அகதிகள் முகாமின் பத்ர் பகுதியில் உள்ள வீடு குண்டுவீச்சுக்கு உள்ளானதில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரும் இதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 50 பணையக்கைதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் IDF மேற்கொள்வதாக டெஃப்ரின் தெரிவித்தார். இதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் இந்த தரைவழி தாக்குதலில் பாதிக்கப்படக்கூடும் என இவர்களின் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். காஸாவில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், பாலத்தீன மக்கள் மற்றும் பணயக்கைதிகள் என இருவருக்கும் பேரழிவு ஏற்படும் என்று ICRC எச்சரித்தது. "மாதக் கணக்கில் நடைபெறும் தொடர் விரோதப் போக்குகள் மற்றும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் ஆகியவற்றால் காஸா மக்கள் சோர்வடைந்துள்ளனர்." "அவர்களுக்குத் தேவையானது அதிக அழுத்தம் அல்ல, நிவாரணம். அதிக பயம் அல்ல, சுவாசிக்க ஒரு வாய்ப்பு. அவர்கள் கண்ணியமாக வாழ அத்தியாவசியமான உணவு, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்கள், சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவைதான்" என இந்த அறிக்கை கூறுகிறது. மேலும் "ராணுவத்தின் இந்த கூடுதல் தாக்குதல், பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும், பல குடும்பங்களை பிரிக்கும், மனிதாபிமான நெருக்கடிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பணையக்கைதிகளின் உயிரும் ஆபத்தில் வைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி சண்டை நிறுத்தத்தை கோரியுள்ளது. மேலும் காஸா முழுவதும் உடனடியாக மனிதாபிமான உதவிகளை தடையின்றியும் கொண்டு செல்லவும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் சண்டை நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. 60 நாட்கள் சண்டை நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளில் பாதி பேரை விடுவிப்பதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளன. இதை திங்ட்கிழமையன்று ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் இதுவரை 62,122 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் ஒரு விரிவான ஒப்பந்தத்தைக் கோருவதாகவும் , பாதி பேரை விடுதலை செய்யும் ஒப்பந்தத்தை இனி ஏற்கப்போவதில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தனர். "இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மத்தியஸ்தர்களின் சண்டை நிறுத்த முடிவை புறக்கணித்ததாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அவர் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் தடையாக இருப்பவர் என்றும் விமர்சித்துள்ளது" என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. 2023 அக்டோபர் 7ஆம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அப்பகுதியின் சுகாதாரத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, காஸாவில் இதுவரை 62,122 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைச்சகத்தின் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் புள்ளி விவரங்களை ஐ.நா மற்றும் பிற நாடுகள் மேற்கோள் காட்டுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gj467wnk6o- தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
த.வெ.க மாநாட்டில் எம்.ஜி.ஆர், அண்ணா படங்கள் - விஜய் சொல்ல வரும் அரசியல் செய்தி என்ன? பட மூலாதாரம், TVK/X கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று (ஆக. 21) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு மேடையின் உச்சியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆருடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்த கட்-அவுட்டில் 'வரலாறு' திரும்புகிறது என எழுதப்பட்டுள்ளது. 1967, 1977க்கு இடையே 2026 என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றியது என, 1967, 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களை குறிப்பிடலாம். இந்த சட்டமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டின் இரு முக்கிய தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர் இருவரும் மாநிலத்தில் அதற்கு முன்பிருந்த அரசியல் களச்சூழலை மாற்றி வெற்றியை தனதாக்கிக்கொண்டனர். இதேபோன்று, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் என்பதே தவெகவின் எண்ணமாக இருக்கிறது. கட்-அவுட்டில் அண்ணா, எம்ஜிஆரை விஜய் முன்னிறுத்துவது ஏன்? இதற்கு முன்பு, 1967, 1977ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது எப்படி, ஏன் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அரசியல் பயணத்தில் அண்ணா தன் தலைவராக பின்தொடர்ந்த பெரியாருடன் 1949ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்திலிருந்து விலகினார். அதே ஆண்டிலேயே தன் ஆதரவாளர்கள் பலருடன் இணைந்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குகிறார். செப்டம்பர் 18, 1949 அன்று சென்னை, ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழைக்கு நடுவே திமுகவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பட மூலாதாரம், TWITTER 1949ல் அண்ணா திமுகவை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, திராவிட இயக்க அரசியலில் மிக்க அனுபவம் வாய்ந்தவராக திகழ்ந்தார். திராவிட இயக்க கொள்கைகளை பல மேடைகளில் நின்று எடுத்துரைத்திருக்கிறார். 1930களில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணியில் நின்றார். காங்கிரஸ் கட்சி மற்றும் ஆட்சி மீதான விமர்சனங்களை மக்களிடத்தில் எடுத்துச் சென்றார். திமுகவை ஆரம்பித்த பிறகும், தேர்தல் அரசியலில் அண்ணா உடனேயே இறங்கிவிடவில்லை. ஆட்சி, அதிகாரத்தை நோக்கிய தன் பயணத்தை மிகுந்த கவனத்துடனேயே எடுத்துவைத்தார் எனலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டில் நடைபெற்றபோது, திமுக அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக, "அந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸ் அல்லாத நாணயமுள்ள திறமைசாலிகளான முற்போக்குக் கருத்தினரையும் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது." என திராவிட இயக்க வரலாறு எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார், எழுத்தாளர் ஆர். முத்துக்குமார். அடுத்ததாக, 1957ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில் 15 பேர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர், அக்கட்சி 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதன்பின், 1962 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு என பொதுமக்களை பாதிக்கும் பல விஷயங்களை முன்னிறுத்தி திமுக தேர்தலை சந்தித்தது. 1962 பொதுத் தேர்தலில் திமுக சார்பில் 142 பேரும் நாடாளுமன்ற தேர்தலில் 18 பேரும் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலுக்கு முன்பாகவே திமுகவில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி. சம்பத் அக்கட்சியிலிருந்து வெளியேறி, தமிழ் தேசியக் கட்சி எனும் கட்சியை ஆரம்பித்திருந்தார். 1962 தேர்தலில் திமுக 50 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அதாவது, கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான இடங்கள். அதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர். ஆனால், அந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா தோல்வியை தழுவினார். எனவே, அண்ணா மாநிலங்களவை உறுப்பினரானார். இவ்வாறாக, திமுகவின் 1967 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அதற்கு முந்தைய தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக அமைந்தன. 1967 தேர்தல் வெற்றி 1967 தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனை தேர்தலாக அமைந்தது. இந்த தேர்தலில் 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி அரிசி நிச்சயம்' என்ற முக்கிய வாக்குறுதியை முன்வைத்து தேர்தல் களம் கண்டார் அண்ணா. முந்தைய தேர்தல்களில் படிப்படியாக வெற்றி பெற்றாலும், இத்தேர்தலில் கூட்டணி அமைத்தே திமுக களம் கண்டது. சுதந்திரா கட்சி (ராஜாஜி), ஃபார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் (மா.பொ.சி), நாம் தமிழர் (சி. பா. ஆதித்தனார்) உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து அந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது. திமுக 173 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியும் 49 இடங்களை மட்டுமே வென்றது. தனது சொந்தத் தொகுதியான விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் பெ. சீனிவாசனிடம் தோற்றார். திமுக அந்த தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1967 மார்ச் மாதம் முதலமைச்சர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. 1949ல் திமுகவை தொடங்கிய பின் அண்ணா ஆட்சியில் அமர 18 ஆண்டுகள் ஆகின. பட மூலாதாரம், GNANAM படக்குறிப்பு, வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு அண்ணா அமைத்த கூட்டணி 1967ல் அண்ணா வெற்றி பெற்றது எப்படி என மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனிடம் கேட்டோம். "1967 இருந்த அரசியல் களச்சூழல், தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன. எளிய மக்களை அந்த சமயத்தில் காங்கிரஸ் சென்றடையவில்லை. திமுக கட்சியாக இருப்பதற்கு முன்பாகவே கொள்கைகளை மக்களிடத்தில் சேர்த்ததால், வெகுஜன மக்களின் ஆதரவு கிடைத்தது" என்றார். அண்ணா அமைத்த கூட்டணியும் வெற்றிக்குக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார். "அண்ணா ஓர் பரந்த கூட்டணியை அமைத்தார், மா.பொ.சி, ராஜாஜி என மாற்று கொள்கை கொண்டவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்தார். ராஜாஜிக்கு காமராஜரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. இப்படி காங்கிரஸுக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொண்டார்." என்றார் சாவித்திரி கண்ணன். "அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தெளிவான மாற்றத்தைக் கொண்டு வந்த இயக்கமாக திமுக இருந்தது. தேசிய கட்சி அல்லாத ஒரு மாநில கட்சி பெற்ற முதல் வெற்றியாக அது அமைந்தது" என்கிறார், அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன் எம்ஜிஆரின் அரசியல் பயணம் இதேபோன்று, எம்.ஜி.ஆரின் பயணமும் நீண்டதாகவே உள்ளது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., 1950களின் தொடக்கத்திலேயே திமுகவில் இணைந்தார். தன்னுடைய திரைப்படங்களில் திராவிட இயக்கம், திமுகவின் கொள்கைகளை பேசினார். திமுகவுக்காக அப்போதிலிருந்து தேர்தல்களில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக 1967 தேர்தலில் மின்னல் வேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் ஒரே நாளில் 30-40 பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் கலந்துகொண்டதாகவும் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஆர். முத்துக்குமார். அதன் விளைவாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியை வழங்கினார் அண்ணா. பட மூலாதாரம், MGR FAN CLUB படக்குறிப்பு, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ம் ஆண்டில் திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார் எம்ஜிஆர். இதன்பின், கட்சியின் வரவு-செலவுகள் குறித்து எம்ஜிஆர் எழுப்பிய கேள்விகளால் அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. அதன்பின், 1972ல் அதிமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு 1973ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் 2,60,930 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் முதல் வெற்றியாக அது அமைந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்த எம்ஜிஆர், 1977ல் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். 20 தொகுதிகளில் அதிமுக, 16 தொகுதிகளில் காங்கிரஸ், 3 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டன. இந்த கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதிமுக 18, காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் வெற்றியை பெற்றன. அதன்பின் நடைபெற்ற 1977 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்தன. கடந்த முறை போன்று சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை. தேர்தல் முடிவில், அ.தி.மு.க. மட்டும் 130 இடங்களைப் பிடித்திருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.எம். 12 தொகுதிகளைப் பிடித்தது. கட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகளிலேயே எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் வெற்றி பெற்றது எப்படி? "கருணாநிதியின் தன்னிச்சையான முடிவுகள், திமுக ஆட்சி மீதான அதிருப்தி எம்ஜிஆர் முன்னெடுத்த திமுகவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை இந்த தேர்தலில் எடுபட்டன. அதிமுகவை ஆரம்பிப்பதற்கு முன்பு பல காலம் திமுகவில் பயணித்தார், பல பொறுப்புகளை வகித்தார் எம்ஜிஆர். அரசியல் மேடைகளில் பிரசாரம் செய்தார். புதிதாக அவர் அரசியலுக்கு வரவில்லை. அதற்கான அங்கீகாரம் தான் 1977ல் எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றி." என்கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். 1977ல் எம்ஜிஆர் பெற்ற வெற்றி குறித்து பேசிய முனைவர் ராமு மணிவண்ணன், "திமுகவில் இருந்தபோது அக்கட்சிக்காக உழைத்த பிரதான அடையாளம் எம்ஜிஆர். திமுகவுடன் அவருக்கு ஏற்பட்ட பிளவு கொள்கை ரீதியானதாக மட்டுமல்லாமல், ஆளுமை ரீதியானதாகவும் இருந்ததால் அவருடை தனிப்பட்ட அரசியல் முன்னெடுப்பு இருந்தது. இதனால், தனிநபர் அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் சூழல் தமிழகத்தில் உருவானது." என குறிப்பிடுகிறார். பட மூலாதாரம், TVK விஜய் சொல்ல வரும் செய்தி என்ன? தற்போது 2026 தேர்தலுக்கு அண்ணா, எம்ஜிஆரை விஜய் முன்னிறுத்துவது ஏன் என கேட்டபோது, "விஜய் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் வருகிறார். அதனால் 1967, 1977ல் இருந்த சூழலுடன் அவரை பொறுத்திப் பார்க்க முடியாது. எம்ஜி ஆரின் அரசியல் வாரிசாக தான் உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது." என்றார் அவர். விஜயிடம் இதன் மூலம் எந்த அரசியல் செய்தியும் இல்லை என தான் கருதுவதாகக் கூறுகிறார் முனைவர் ராமு மணிவண்ணன். "1967, 1977-ஐ முன்னிறுத்துவதற்கு என்ன காரணம் என கேட்டால், அவரிடமிருந்து எந்த அரசியல் செய்தியும் இல்லை என்பதால்தான். வலிமையான, ஆழமான கருத்துகளோ, புதிய அரசியல் பார்வையோ அவரிடம் இல்லை. பழைய பிம்பத்தை தன் அடையாளமாகப் பயன்படுத்தி வருகிறார். புதிய சிந்தனைகளை சொல்லி அடையாளப்படுத்தும் ஆழமான அரசியல் நிலைப்பாடு அவரிடம் இல்லை. புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் முன்பே வெற்றி பெற்றவர்களைத்தான் கையில் எடுப்பார்கள். தன்னையும் அவர்களோடு சேர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அது மக்கள் மத்தியில் ஆதரவை பெறுவதற்கான விளம்பர உத்தியாக உள்ளது. ஆனால், அந்த விளம்பரத்துக்கான விலை என்ன என்பது தேர்தல் முடிவில் தெரியும். " - என்றார் முனைவர் ராமு மணிவண்ணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3e23kwl52o- மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு சென்று வெளிவந்த பெண் ஒருவர் சினிமா பாணியில் ஆட்டோவில் கடத்தல்
Published By: VISHNU 21 AUG, 2025 | 03:35 AM மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) காலையில் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இத பற்றி தெரியவருவதாவது; 27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார் அவ்வாறே காதலன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் சில காலங்களுக்கு பின்னர் இந்த பதிவு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பெற்றோருக்கு தெரிய வந்துள்ள நிலையில் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளார். அதன் பின்னர் வெளிநாடு சென்ற காதலன் பல தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்ததையடுத்து அவருடன் வாழ முடியாது என விவாகரத்து கோரி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரியார் நீதிமன்றில் ஆஜராகி வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து காதலன் திரும்ப நாட்டுக்கு வந்து வழக்கிற்கு நீதிமன்றில் ஆஜராகி 3 தவணைக்கு சென்று வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது. இந்நிலையில் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (19) குறித்த வழக்கு விசாரணைக்கு காதலி அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். அதேவேளை காதலன் அவரது சகோதரி மற்றும் ஒரு குழுவினருடன் சென்று நீதிமன்ற பகுதிக்கு இருவர்களின் உறவினர்களும் வெளியில் காத்து நின்றபோது நீதிமன்றத்துக்குள் காதலியும் காதலனும் சென்று வழக்கு விசாரணையின் பின்னர் அங்கிருந்து திருப்பி வெளியே வந்து வீதிக்கு வரும் போது அங்கு வைத்து காதலியை காதலனின் சகோதரி திடீரென அவரின் வாயை பிடித்து பொத்திக் கொண்டார். இதன்போது காதலன் அவளை இழுத்து சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அங்கிருந்த காதலியின் உறவினர் ஒருவர் உடனடியாக ஆட்டோ மீது பாய்ந்து அவரை காப்பாற்ற முற்பட்ட போது ஆட்டோ அவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று அங்கு தள்ளி விட்டுவிட்டு இந்திய தமிழ் சினிமா பாணியில் குறித்த காதலியை காதலன் அவரது சகோதரியும் கடத்தி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/222981- வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?
பட மூலாதாரம், GETTY IMAGES/SKYNESHER படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரம் என்பது உற்பத்தித்திறனை பாதிக்காமல் நல்வாழ்வை மேம்படுத்துவது புதிய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது கட்டுரை தகவல் சோஃபியா பெட்டிஸா, பிபிசி உலக சேவை 20 ஆகஸ்ட் 2025 வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்து, வார இறுதியை கொண்டாடுவோம். அதன் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சோகத்திற்கு தயாராவோம். ஆனால் இந்த நடைமுறை இனியும் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்? நேட்ஷர் ஹியூமன் பிஹேவியர் இதழில் வெளியான பெரிய அளவிலான ஆய்வு ஒன்று வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் மனிதர்களில் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாகக் கூறுகிறது. பாஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 141 நிறுவனங்களில் சோர்வு, வேலை திருப்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட நான்கு முக்கிய குறியீடுகளை கண்காணித்தனர் "ஊழியர்களின் நல்வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம்" என முன்னணி ஆசிரியர் வென் ஃபேன் பிபிசியிடம் தெரிவித்தார். "நிறுவனங்கள் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயிலும் லாபம் கண்டன. தற்போது ஆய்வு முடிந்த பிறகு 90 சதவிகிதமானோர் நான்கு நாள் வேலை முறையையே தேர்வு செய்கின்றனர்" என்றார். இது குறைந்த வேலைவாரத்தை நல்ல ஆரோக்கியம், மேம்பட்ட வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் ஒட்டுமொத்த மேம்பட்ட வேலை திருப்தியுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகளோடு சேர்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று நீண்ட வேலை நேரங்கள் மூளை கட்டமைப்பை மாற்றுவதாக கண்டறிந்துள்ளது, அதன் வரிசையிலே இந்த ஆய்வும் வந்துள்ளது. எனவே இதன் ஆரோக்கிய நலன்கள் வெளிப்படையான பிறகு எது நம்மைத் தடுக்கிறது என்கிற கேள்வியும் உள்ளது. அதிகவேலை மரியாதையின் சின்னமா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பல கலாச்சாரங்களில் கூடுதல் வேலை என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது சீனா '996' வேலை கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது. அங்கு தொழிலாளர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை செய்கிறார்கள். இந்தியாவில் வளர்ந்து மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊழியர்கள் நீண்ட, ஒழுங்கற்ற நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற இடைவிடாத அழுத்தத்தை அடிக்கடி சந்திக்கின்றனர். "சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நீண்ட வேலை நேரம் என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் பேராசிரியர் ஃபேன். ஜப்பானில் சம்பளமில்லாத கூடுதல் வேலை நேரம் மிகவும் சகஜமானது. எந்த அளவிற்கு என்றால் கூடுதல் வேலையால் ஏற்படும் மரணத்திற்கு 'கரோஷி' என தனி வார்த்தையே உள்ளது. "ஜப்பானில் வேலை என்பது வேலை மட்டுமல்ல, அது ஒரு சமூக சடங்கு போல உள்ளது" என்கிறார் ஹிரோஷி ஓனோ. இவர் ஜப்பானில் உள்ள வேலையிட கலாச்சாரம் மற்றும் தொழிலாளர் சந்தைகளின் வல்லுநர் ஆவார். "மக்கள் சீக்கிரமாக வந்து, வேலையே இல்லையென்றாலும் தங்களின் உறுதிபாட்டை காண்பிப்பதற்கு என்றே தாமதமாக செல்வார்கள். இது தற்காப்பு கலைகள் போன்று செயல்திறன் சார்ந்தது, அதைச் செய்வதற்கு வழி உள்ளது" எனத் தெரிவிக்கிறார் ஹிரோஷி இதனை ஜப்பானின் கூட்டு கலாச்சாரம் எனக் கூறிய ஹிரோஷி தொடர்ந்து விளக்குகிறார். " ஜப்பானில் 'வேலையில் சமாளிப்பவர்களுக்கு (ஃப்ரீ ரைடர்ஸ்) எதிராக ஒரு வலுவான களங்கம் உள்ளது. ஒரு வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்தால் மற்றவர்கள் 'அவர் ஏன் இன்று வேலையைத் தவிர்த்துவிட்டார்' என யோசிப்பார்கள்" என்றார். இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் சட்டப்பூர்வமான பலன்களான பேறுகால விடுப்பு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. "ஆண்கள் ஒரு ஆண்டு வரை விடுப்பு எடுக்கலாம், ஆனால் வெகு சிலர் மட்டுமே அவ்வாறு செய்கின்றனர் - விடுப்பு தங்கள் உடன் வேலை செய்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் என நினைப்பார்கள்" எனத் தெரிவித்தார் ஹிரோஷி. எனினும் இது போன்ற ஆய்வுகள் கூடுதல் வேலை செய்யும் வலுவான பாரம்பரியம் உள்ள இடங்களிலும் பார்வையை மாற்றி வருகிறது என்கிறார் வென் ஃபேன். ஐஸ்லாந்தில் 90 சதவிகிதமானோர் தற்போது குறைவான நேரங்களே வேலை செய்கின்றனர் அல்லது அவர்களின் வேலை நாட்களை குறைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்கா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெய்ன், டொமினிகன் குடியரசு, போட்ஸ்வானா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடைபபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சி செய்யத் தொடங்கியது. துபாயிலும் அரசு ஊழியர்களுக்கு இதே போன்றதொரு கோடைக்கால முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியா அக்டோபர் 2025-இல் 67 நிறுவனங்களில் 4.5 நாள் வேலைவாரத்தை பரிசோதிக்க உள்ளது. வேலை என்பது வாழ்க்கையுடன் தொடர்பில்லாமல் உள்ளது பட மூலாதாரம், CITY OF GOLDEN PD படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறிய பிறகு கொலராடோ காவல்துறை ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது. "கொரோனாவுக்குப் பிறகு பலரும் தங்களின் வேலையும் வாழ்க்கையும் தொடர்பில்லாமல் இருப்பதாக உணர்கின்றனர். இந்தப் போக்கை உங்களால் திருப்ப முடியும்" என்கிறார் 4 டே வீக் குளோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கேரன் லோவ். அவரின் அமைப்பு பிரேசில், நமிபியா, ஜெர்மனி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நிறுவனங்கள் நான்கு நாள் முறையை சோதிக்க உதவுகின்றன. அவரின் வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்று கொலராடோவின் கொல்டன் நகர காவல்துறையில் 250 பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டது தான். நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய பிறகு கூடுதல் வேலை நேர செலவுகள் 80% வரை குறைந்துள்ளது, ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது. "அவசர காலங்களில் வேலை செய்யும், ரோந்து செய்யும் காவல்துறையில் இது வேலை செய்கிறது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும்" என்கிறார் லோவ். "நாங்கள் 2019-இல் இந்த ஆய்வை தொடங்கியபோது ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டின. தற்போது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இதைச் செய்து வருகின்றன. ஆதாரம் உள்ளது, ஆனால் இல்லாத ஒரு விஷயம் புரிதல் தான்" என்றார். பட மூலாதாரம், KAREN LOWE படக்குறிப்பு, நான்கு நாள் வாரம் என்பது தேவையற்றவைகளை குறைப்பது என்கிறார் கேரன் லோவ் குறைந்த வேலை நாட்கள் என்றால் குறைவான செயல்திறன் ஒரு பொதுவான தவறான புரிதல் இருக்கிறது என்கிறார் லோவ். ஆனால் அதற்கு மாறானது தான் உண்மை என அவர் வாதிடுகிறார். 2019-இல் மைக்ரோசாஃப்ட் ஜப்பானில் நான்கு நாள் வேலை வாரத்தை பரிசோதித்தபோது முந்தைய ஆண்டை காட்டிலும் ஒவ்வொரு ஊழியரிடமும் 40% விற்பனை அதிகரித்தது. எனினும் அதனை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துவிட்டது. பெருநிறுவனங்களில் பல துறைகள் இருப்பதாலும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நேர மண்டலங்களில் செயல்படுவதாலும் அவை மிகவும் சிக்கலான பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்கிறார் லோவ். ஃபேனின் ஆய்வில் உற்பத்தித்திறன் பெரும்பாலும் தக்கவைப்பது, ஏனென்றால் நிறுவனங்கள் குறைந்த மதிப்புள்ள பணிகளை குறைத்துவிட்டன. தேவையில்லாத மீட்டிங் செல்போன் அழைப்பு அல்லது குறுஞ்செய்தியில் முடிக்கப்பட்டன. மற்றுமொரு தவறான புரிதல் இருப்பதாக கூறுகிறார் லோவ். அது ஊழியர்கள் விடுப்பு எடுத்த நாளுக்கு ஈடு செய்ய கூடுதல் கடினவேலை செய்ய வேண்டும் என்பது தான். "ஐந்து நாள் வேலைகளை நான்கு நாட்களுக்கு சுருக்குவது அல்ல, தேவையற்ற வேலைகளை குறைப்பது தான் முக்கியமானது" என்கிறார். தற்போது ஏஐ மூலம் பல பணிகளும் தானியங்கிமயமாகின்றன. நம்மால் அத்தகைய பணிகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் தெரிவித்தார். ஆரோக்கியத்தில் வேலை ஏற்படுத்தும் பாதிப்பு பட மூலாதாரம், CHARL DAVIDS படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறியது தன் குழுவிற்கு உயிர்நாடியாக உள்ளதாகக் கூறும் சார்ல் டேவிட்ஸ், முடிவுகள் சிறப்பாக இருந்தது என்கிறார். கேப் டவுனில் உள்ள ஸ்டெல்லன்போஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் மையத்தின் இயக்குநரான சார்ல் டேவிட்சுக்கு நான்கு நாள் வாரம் என்பது மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு உயிர்நாடி. அவரின் குழு 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மனநல உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த மாற்றத்திற்கு முன்பாக பணியாளர்கள் மிகவும் சோர்வாக இருந்ததாகக் கூறுகிறார். "அதிக அளவில் வேலையைத் தவிர்த்துவந்தனர். மக்கள் அடிக்கடி சுகாதார விடுப்பு எடுத்தனர். அவர்கள் சோம்பேறியாக இருந்ததால் அல்ல, அவர்கள் ஆற்றலே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர்" என்றார். தென் ஆப்ரிக்கா உலகின் மிக மன அழுத்தம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் உள்ளது. சார்லின் குழுவில் 56 பேர் உள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் உள்ளவர்களை அதிகம் சந்திப்பது, அதிக பணிச்சுமை மற்றும் வளங்கள் பற்றாக்குறை போன்றவற்றால் உணர்வு ரீதியாக மிகவும் சோர்வுற்று இருந்தனர். நிறுவனத் தலைமையின் ஆட்சேபனை மற்றும் தனது சொந்த குழுவின் அவநம்பிக்கை காட்டிலும் அவர் நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சித்தார். "அவர்கள் இது வேலை செய்யாது என நினைத்தார்கள். ஆனால் வேலை செய்தது, அதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது" எனத் தெரிவித்தார். இந்த முயற்சிக்கு முந்தைய ஆண்டு இவரின் குழு 51 சுகாதார விடுப்பு எடுத்தனர். இந்த முயற்சி அமலில் இருந்த ஆறு மாதத்தில் இது 4 நாட்களாக குறைந்தது. பணியாளர்கள் நல்ல உறக்கம், கூடுதல் உடற்பயிற்சி மற்றும் அவர்களின் பொழுதுபோக்குகளைப் பின் தொடர முடிந்தது. "வார இறுதி நாட்களில் பணி செய்யாமல் அவர்களால் குடும்பத்துடன் செலவிட முடிந்தது" என்கிறார் சார்ல். "அவர்களின் பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி தனியாக வேலை செய்து கூடுதலாக சம்பாதிப்பார்கள் என நான் நினைத்தேன். ஆனால் ஒருவர் மட்டுமே அவ்வாறு செய்தார்" என்றார். ஊழியர்கள் மேம்பட்ட நல்வாழ்வு அவர்களை பணியில் சிறப்பாக்கியது என சார்ல் நம்புகிறார். "அவர்கள் கூடுதல் கவனத்துடனும் அககறையுடனும் இருந்தனர். இது மாணவர்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கக்கூடியதாக மாறியது" அனைவருக்கும் பொருந்தாத ஒற்றை அணுகுமுறை இவ்வகையான மாற்றங்கள் எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை. "ஒருநாட்டின் தொழில்துறை அமைப்பு, அதன் வளர்ச்சி கட்டமும் இதில் முக்கியமாகிறது" என்கிறார் ஃபேன். "ஆப்ரிக்காவில் பல தொழிலாளர்கள் வேளாண்மை, சரங்கம் அல்லது முறைசாரா துறைகளில் உள்ளனர்" என்கிறார் கேரன். "இவர்கள் வேலை நெகிழ்வுத்தன்மை பற்றிய உரையாடலை சிந்திக்கவே முடியாது" என்றும் தெரிவித்தார். குறைந்த திறன் கொண்ட மனிதனால் செய்யப்படும் வேலைகளை மாற்றியமைப்பது கடினமானது. இந்த துறைகளில் உள்ள முதலாளிகள், வேலை நேரத்தை மாற்ற யோசிப்பதை விட பெரும்பாலும் லாபத்தை அதிகரிக்கவே பார்ப்பார்கள்" என்கிறார் லோவ். ஆனால் சில முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஃபேனின் ஆய்வில் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுற்றுலா துறையில் உள்ள நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் சில வெற்றிகளும் உள்ளன. "இவை பல துறைகளில் வேலை செய்ய முடியும். ஆனால் நான்கு நாள் வேலை வாரத்தை நான் ஒரு சர்வரோக நிவாரணி என கூற மாட்டேன்" என்கிறார் அவர். இது அனைவருக்கும் பொருந்தும் ஒற்றைத் தீர்வு கிடையாது என்றும் தெரிவித்தார். இளம் தலைமுறையினர் மாற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய விசை இளைஞர்களிடமிருந்து வரும் என வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர். 2025-இல் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய கருத்துகணிப்பில் முதல் முறையாக சம்பளத்தை விட வேலை-வாழ்க்கை சமநிலை தான் மிகவும் முக்கியமானது என்பது தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் பல இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள். "இளம் தலைமுறையிடம் அதிகரித்து வரும் எதிர்ப்பை நாம் பார்க்க முடிகிறது. வேலையின் நோக்கம் மற்றும் வாழ்க்கையிடமிருந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அவர்கள் அடிப்படையிலே வேறான எண்ணங்கள் உள்ளன" என்கிறார் ஃபேன். "கிரேட் ரெசிக்னேஷன் (Great resignation, பேரிடருக்குப் பிறகு கூட்டாக ராஜினாமா செய்வது , கொயட் க்வுட்டிங் (Quiet quitting, வேலையில் என்ன தேவையோ அதை மட்டும் செய்வது) போன்ற இயக்கங்கள் இளம் தொழிலாளர்கள் அவர்களின் அதிருப்தியை பதிவு செய்ய வழிகளைத் தேடி வருவதையும் சோர்வு கலாசாரத்தை நிராகரிப்பதையும் காட்டுகின்றன என்கிறார். காலப்போக்கில் இந்த மாற்றங்கள் வேலையிட விதிமுறைகளை மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்தார். ஜப்பானில் சில மாற்றங்களைப் பார்ப்பதாகக் கூறுகிறார் ஹிரோஷி ஓனோ. "30% ஜப்பான் ஆண்கள் தற்போது பேறுகால விடுப்பை எடுக்கின்றனர். இது முன்னர் பூஜ்ஜியமாக இருந்தது. இது மக்கள் நல்வாழ்விற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை காட்டுகிறது" என்றார். முதல்முறையாக பணியாளர்கள் உண்மையில் எதிர்க்க தொடங்குகின்றனர் என்பதை ஒப்புக்கொள்ளும் கேரன் வயது குறைய குறைய கூடுதல் மாற்றங்களைக் கேட்கின்றனர் என்றார். அதற்கான உத்வேகம் உருவாகி வருவதாக அவர் நம்புகிறார். "கொரோனா முதல் திருப்புமுனையை வழங்கியது. நான்கு நாள் வாரம் அடுத்த திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz71g1dl7j5o- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல - மைத்திரிபால
20 AUG, 2025 | 05:45 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் எதிர்காலத்தில் எமக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை பகிரங்கமாகவே கூறுகின்றேன். ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளோடு இறுதியில் இந்தியா எமக்கு பருப்பு வழங்கியது. பருப்பினை வழங்கி ஜே.ஆர்.ஜெயவர்தன தரப்பினரை அச்சுறுத்தி இந்து – லங்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது. இந்து – லங்கா ஒப்பந்தத்தின் பின்னர் என்ன ஆனது? அதனை நடைமுறைப்படுத்துவதற்காக 13ஆவது அரசியமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாகாணசபை சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மாகாணசபைகள் செயற்பாட்டில் இல்லை. 2500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்களுக்கான சம்பளம், வாகனம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை அல்ல என்பதே உண்மையாகும். தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதாயின் எமது நாட்டுக்குள்ளேயே அதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. ஆனால் இந்து – லங்கா ஒப்பந்தம் காரணமாக இன்று தேசிய ஒற்றுமை எட்ட முடியாத ஒரு இலக்காக மாற்றப்பட்டுள்ளது. வரவு – செலவு திட்டத்தில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கூடியளவு நிதி வீணாக மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலைமை எம்மால் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக எமக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தத்தினால் ஏற்பட்டவையாகும். இவற்றை விட மேலும் பல அநீதிகள் எமக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமாகவே எனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டு எனது அரசாங்கம் கலைக்கப்பட்டு கட்சியும் சீரழிக்கப்பட்டது. இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்திருக்கின்றேன். ஆனால் யாராலும் அதனை வெளியில் கூற முடியாத நிலைமையே காணப்படுகிறது. தற்போது பிரதான சூத்திரதாரியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சகல அரசாங்கங்களும், இராணுவத்தினரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சூத்திதாரி எங்கிருக்கின்றார் எனக் கூறினாலும், எம்மால் அவர்களுடன் மோத முடியாது. சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். அவர்களால் போர் இல்லாமல் வாழ முடியாது. அவர்களுக்கு போர் மனநிலை மாத்திரமே இருக்கிறது. உதாரணமாக, நெதன்யாகுவைக் குறிப்பிடலாம். அவர் எப்போதும் யாரையாவது தாக்க முயற்சித்துக் கொண்டே இருப்பார். போருக்குச் செலவிடப்பட்ட பணம் அனைத்தும் உலகின் ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும். 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் சென்றபோது, தெருக்களில் யாசகர்களைப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது, அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். இந்தப் போர் மனநிலைதான் இதற்கு வழிவகுத்தது என்றார். https://www.virakesari.lk/article/222971- முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?
அண்ணை அவசரப்படாதேயுங்க, இப்ப ஆய்வு நடந்துகொண்டு இருக்காம்! எதிர்காலத்தில் தான் வரும்போல.- யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
20 AUG, 2025 | 12:54 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நாளாந்தம் இரண்டு விமான சேவைகள் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இடம்பெறுவதுடன், அந்த விமான சேவைகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஜுலை வரையில் யாழப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 140 விமானங்கள், 2021 ம் ஆண்டில் 32 விமானங்கள், 2022ம் ஆண்டில் 383 விமானங்கள், 2023 ம் ஆண்டில் 864 விமானங்கள், 2024 ம் ஆண்டில் 1156 விமானங்கள் வந்து சென்றுள்ளதுடன், 2025 ஜுலை 31ஆம் ஆண்டு வரையில் 752 விமானங்கள் வருகை தந்துள்ளன. அத்துடன் இந்த விமானங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 3491 பயணிகளும் 2021ஆம் ஆண்டில் 110 பயணிகளும், 2022ஆம் ஆண்டில் 881 பயணிகளும், 2023ஆம் ஆண்டில் 29,717 பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 40,680 பயணிகளும், 2025ஆம் ஆண்டில் ஜுலை வரையில் 31,917 பயணிகளும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர். இந்த சிறியளவிலான விமானங்களில் குறிப்பிட்டளவிலான பயணிகள் ஆசனங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகள் வழங்கப்படுகின்றன. இதேவேளை 2021ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தினால் லாபம் இருக்கவில்லை. 41 மில்லியன் ரூபா நஷ்டம் இருந்தது. 2022இல் 5 மில்லியன் வருமானம் கிடைத்தாலும் 82 மில்லியன் ரூபா செயற்பாட்டு நஷ்டமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபம் இருந்தது. 2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைகள், விமான நிலையங்கள் நிறுவனத்தை சேர்ந்த 76 பேரும், சுங்கம், வெளிநாட்டு சேவைகள், சுற்றுலாத்துறை, பொலிஸ் உள்ளிட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த 182 பேரும் பணியாற்றுகின்றனர். இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெரியளவிலான விமானங்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் பெரியளவிலான விமான ஓடுபாதை, விமான நுழைவு பகுதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி மற்றும் பயணிகள் பகுதி உள்ளிட்ட நிர்மாணங்களுக்காக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலதிக காணிகளையும் கையகப்படுத்த வேண்டிவரும். இங்கு ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகளை பெற்றே அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அங்கே தற்போது பயணிகளை வரவேற்க, வழியனுப்ப செல்லும் உறவினர்களுக்காக அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு தற்காலிக டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்த நிர்மானமொன்றை வரும் மாதங்களில் அதனை செய்வோம். நிச்சயமாக சர்வதேச விமான நிலையமாக யாழ். விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. அதனை வணிக திட்டங்களுடனேயே செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். கட்டம் கட்டமாக பெரிய விமான நிலையமாக மாற்ற வேண்டும். மத்தள விமான நிலையம் பெரிய விமானங்களை தரையிறக்ககூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதனை போன்று யாழ். விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும். ஆனால் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்தால் அது தோல்வியடையும். இதனால் கட்டம் கட்டமாக நாங்கள் அதனை அபிவிருத்தி செய்வோம். நல்ல நிலைக்கு தற்போது விமான நிலையம் செல்கின்றது. இந்நிலையில் யாழ். விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. ஆனால் தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும், இதனை மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/222928- செம்மணிக்கான நீதியை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் - பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு புலம்பெயர் தமிழர்கள் மகஜர்
20 AUG, 2025 | 01:58 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் அதேவேளை அம்மனிதப்புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர். செம்மணி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் பிரிட்டனின் ஆதரவைக்கோரி பிரதமரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் மகஜரில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இம்மகஜரில் கையெழுத்திட்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களும், தப்பிப்பிழைத்தவர்களும், தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் பிரதிநிதிகளுமாகிய நாம், அண்மையில் தமிழர் தாயகத்தில் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உங்களுக்கு இந்த மகஜரை எழுதுகிறோம். அரச அனுசரணையுடனான ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாம் ஏற்கனவே அறிந்திருந்த உண்மை, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியின் ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. செம்மணிப்படுகொலை என்பது தனியொரு குற்றச்செயல் அல்ல. மாறாக அது நீண்டகாலமாகத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டத்தின் ஓரங்கமேயாகும். நாம் பல தசாப்தகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களாவோம். இன்று நாம் எமக்காக மாத்திரமன்றி, நீதியோ, நினைவுகூரலோ, அங்கீகாரமோ இன்றிப் புதைக்கப்பட்ட மற்றும் அமைதிப்படுத்தப்பட்ட சகலருக்காகவும் குரல் எழுப்புகிறோம். எமது அமைப்பானது தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதையும், தமிழீழத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதையும் இலக்காகக்கொண்டு தொடர்ச்சியாகப் பணியாற்றிவருகிறோம். அதன் நீட்சியாக இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். அதேவேளை இவ்விடயத்தில் இலங்கை அதிகாரிகள் சிலருக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். இருப்பினும் அந்நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவையன்று என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அப்பாவித் தமிழ் மக்களின் எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி, தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு தொடர்கிறது என்பதற்கான சான்றாகும். இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றல், செம்மணி விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவரல், செம்மணி உள்ளடங்கலாகத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவிடம் வலியுறுத்தல், செம்மணிப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறலைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தல், தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவ ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருமாறு வலியுறுத்தல், செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்கல், தமிழர்களை இலக்குவைத்துத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் நில அபகரிப்புக்களைக் கண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/222932- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னார் மக்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கண்டியில் ஊர்வலம் 20 AUG, 2025 | 05:25 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (20) 18 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் ஆதரவு வழங்கும் வகையில் கொக்குபுடையான் கிராம மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக மக்கள் போராட்ட முன்னனியினரும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். அதே நேரம் மன்னார் மக்களின் உரிமைக்காக சிங்கள,மற்றும் தமிழ் மக்களை ஒன்று திரட்டி இம்மாதம் 23,24 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிபத்கொட வரை ஒரு நடைபவணி ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற உள்ளதாகவும் மக்கள் போராட்ட முன்னனியினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222967- மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு - வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு!
20 AUG, 2025 | 04:55 PM 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் சபையின் உறுப்பினர் பிரகலாதன் கூறியதுடன் இந்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்று புதன்கிழமை (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் காலை 10.00 மணிக்கு சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு வலியுறுத்தினார். மேலும் செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாக இருக்கும் இன்றைய சூழலில் வேலணை பிரதேசத்தில் 90 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் இந்த புதைகுழியையும் அகழ்வதற்கு அப்பிரதேசத்தை உள்ளடக்கிய பிரதேச சபையாக இருப்பதால் அதை வலுயுறுத்தவே இந்த விவகாரம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது என்றும் கூறினார். இது குறித்து சபையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் காலத்துக்கு காலம் தேர்தல் அரசியல் பேசும் பொருளாக இருப்பதால் இது தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். குற்றவாழிகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வும் பரிகாரமும் வழங்குவது அவசியம் என்றும் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த்,பார்த்தீபன், மற்றும் கருணாகரன் நாவலன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர். இன்னிலையில் குறித்த ஆதாரங்களுடன் துறைசார் தரபுக்கு அறிக்கை அனுப்பப்ப சபையில் தீர்மானிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/222963- முடியிலிருந்து தயாரிக்கப்படும் பற்பசை : உங்கள் பற்களை பாதுகாக்க உதவுமா?
பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON படக்குறிப்பு, இந்த தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என மருத்துவர் ஷெரிஃப் எல்ஷர்காவி நம்புகிறார். கட்டுரை தகவல் ஹேரி லோவ் பிபிசி நியூஸ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் முடியிலிருந்து தயாரிக்கப்படும் டூத்பேஸ்ட் (பற்பசை) பாதிக்கப்பட்ட உங்களின் பற்களை சரிசெய்து பாதுகாக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முடி, தோல் மற்றும் கம்பளியில் காணப்படும் புரதமான கெரடினால் பல் எனாமலை சரி செய்து பல் சொத்தையாவதை முன்கூட்டியே தடுக்க முடியும் என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கெரடின் என்பது எச்சிலில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது இயற்கையான எனாமல் அமைப்பு மட்டும் செயல்பாட்டை ஒத்த பாதுகாப்பு பூச்சு ஒன்றை தயாரிக்கிறது என இவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. "கெரட்டின் என்பது தற்போதைய பல் சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றை வழங்குகிறது" என்கிறார் கிங்ஸ் கல்லூரியின் முனைவர் ஆய்வாளரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான சாரா காமியா. பட மூலாதாரம், KING’S COLLEGE LONDON படக்குறிப்பு, அமிலத்தன்மை கொண்ட உணவு மற்றும் பானங்களால் பற்கள் சொத்தை ஆகலாம். "இந்த தொழில்நுட்பம் உயிரியல் மற்றும் பல் மருத்துவத்துக்கு இடையேயான இடைவெளியை சுருக்கி இயற்கையான நடைமுறையை பிரதிபலிக்கும் சுழலுக்கு உகந்த மாற்றை வழங்குகிறது" என்று தெரிவித்தார். மேலும் அவர், "இது உயிரியல் கழிவு பொருட்களான முடி மற்றும் தோலிலிருந்து சூழலுக்கு உகந்த முறையில் நிலையாக பெறப்படுகிறது. அதோடு இவை பல் மறுசீரமைப்பில் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட பாரம்பரிய பிளாஸ்டிக் ரெசின்களுக்கான தேவையை தவிர்க்கிறது." என்றார். அட்வான்ஸ்ட் ஹெல்த்கேட் மெட்டீரியல்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் விஞ்ஞானிகள் கம்பளியிலிருந்து கெரடினை எடுத்துள்ளனர். படக்குறிப்பு, முடியிலிருந்து பெறப்படும் கெரடின் மூலம் பல் எனாமலை சரி செய்யும் டூத் பேஸ்டை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் கெரடினை பற்களில் தேய்கின்றபோது எச்சிலில் உள்ள தாதுக்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் இயற்கை எனாமலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை பிரதிபலிக்கிற மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, படிகம் வடிவிலான சாரம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, காலப்போக்கில் இதன் மீது கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஐயன்கள் தொடர்ந்து படிந்து பற்களைச் சுற்றி எனாமல் பூச்சு போன்ற பாதுகாப்பு அமைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள், மோசமான வாய் சுகாதாரம் மற்றும் வயதாவது என அனைத்துமே எனாமல் அரித்து பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் பல் வலி ஏற்பட்டு ஒருவர் பல்லை இழக்க நேரிடுகிறது. பட மூலாதாரம், KING'S COLLEGE LONDON படக்குறிப்பு, இந்த ஆய்வு முனைவர் மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது "எலும்பு மற்றும் முடி போல எனாமல் மறு உற்பத்தி செய்துகொள்ளாது. ஒருமுறை இழந்தால் அதன் பிறகு மீண்டும் பெற முடியாது" என்கிறார் மூத்த ஆசிரியரும் கிங்ஸ் கல்லூரியில் ப்ராஸ்தோடாண்டிக்ஸ் துறையின் ஆலோசகருமான ஷெரிஃப் எல்ஷர்காவி "நாம் ஒரு சுவாரஸ்யமான யுகத்தில் நுழைகிறோம். இங்கு உயிரி தொழில்நுட்பம் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாது உடலின் சொந்த பொருட்களை பயன்படுத்தி உயிரியல் செயல்பாடுகளை மீட்டெடுக்கிறது" "மேலும் வளர்ச்சி மற்றும் சரியான துறைசார் கூட்டணி மூலம் கூடிய விரையில் நாம் முடிவெட்டுவது போன்ற எளிய விஷயத்திலிருந்து வலுவான, ஆரோக்கியமான புன்னகைகளைப் பார்க்க முடியும்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mlg893y18o - அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.