Everything posted by ஏராளன்
-
மன்னார் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு - பேசிய விடயம் என்ன?
Published By: DIGITAL DESK 3 19 AUG, 2025 | 04:32 PM மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்று திங்கட்கிழமை (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று திங்கள் கிழமை மன்னார் ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார். மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினை, மின்சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால் எழுந்துள்ள பாரிய பாதிப்புக்கள், வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன. கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகளையும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாதிப்புக்களையும் ஆயர் ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கியபோது அச்செயற்பாடு முற்றாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். மின் சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால் எழுந்துள்ள பாரிய பாதிப்புகள், இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன், குறிப்பாக மக்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை ஆயர் வலியுறுத்திய போது இது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222892
-
ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா? - 'தி ஹண்ட்' தொடரால் எழும் கேள்விகள்
படக்குறிப்பு, ராஜீவ் காந்தி, சிவராசன் (வலது) கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் 1991 ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பெங்களூருக்கு அருகில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது என்னவெல்லாம் நடந்தது? அவர்கள் வேறு கொலைகளைத் திட்டமிட்டிருந்தனரா? கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து விசாரிப்பதற்காக டி.ஆர். கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது தேடுதல் வேட்டையில் கொலையில் தொடர்புடைய ஒவ்வொருவராகக் கைது செய்ய ஆரம்பித்தது. இந்தக் கொலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதாகக் கருதப்பட்ட சிவராசனை சி.பி.ஐ. தீவிரமாகத் தேடிவந்தது. ஆனால், அந்தத் தேடுதல் வேட்டையில் பலன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிவராசனை சி.பி.ஐ. நெருங்கியபோது, அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். முடிவில் அவர்கள் சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை பின்னணியாக வைத்து சமீபத்தில் The Hunt: The Rajiv Gandhi Assassination Case என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று வெளியானது. அந்தத் தொடரில், ராஜீவ் காந்தி கொல்லப்படுவதிலிருந்து சிவராசன் மரணம் வரையிலான பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொடர் வெளியான பிறகு, இதில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறித்து சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு சிவராசன் தேடப்பட்டுவந்தபோது, அவர் வேறு சில தலைவர்களை, குறிப்பாக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்தத் தொடரில் காட்டப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியது. பட மூலாதாரம், SONY LIV படக்குறிப்பு, தி ஹண்ட் தொடரில் இடம்பெற்ற சிவராசன் கதாபாத்திரம். அந்தத் தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது? 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒன்பது காவல்துறையினர் உட்பட மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த நாளே, மத்திய ரிசர்வ் காவல் படையின் தென் பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த டி.ஆர். கார்த்திகேயன் இந்த விசாரணைக்குத் தலைமை தாங்குவார் என முடிவுசெய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் இது தொடர்பான விசாரணைக்காக சி.பி.ஐயின் சென்னைக் கிளை, தமிழ்நாடு காவல்துறை, சிஆர்பிஎஃப், மத்திய - மாநில அரசுகளின் சில நிறுவனங்களில் இருந்து அதிகாரிகளைத் தேர்வுசெய்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வந்த காவல்துறை ஐ.ஜி. ஆர்.கே. ராகவன் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். அதில், இறந்துபோன புகைப்படக்காரர் ஹரிபாபுவின் உடல் மீதிருந்த கேமராவும் இருந்தது. அதனை காவல்துறை போட்டோகிராபர் ஒருவரிடம் கொடுத்து, அதனை டெவலப் செய்து கொண்டுவரச் சொன்னார். ஆனால், கலர் பிலிம் என்பதால் உள்ளூரில் அதைச் செய்ய முடியவில்லை. இதற்குப் பிறகு, சட்டம் - ஒழுங்கு பிரசனை ஏற்பட்டதால் மே 23ஆம் தேதியன்று முன்னிரவில்தான் அதிலிருந்த புகைப்படங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்டன. மொத்தம் பத்து புகைப்படங்கள். அதில் ஒன்றில் கையில் சந்தன மாலையுடன் நின்று கொண்டிருந்த சல்வார் கம்மிஸ் அணிந்த பெண், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லதா கண்ணன், அவர் மகள் கோகிலா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்குச் சற்றுத் தள்ளி குர்தா - பைஜாமா அணிந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். பட மூலாதாரம், SONY LIV படக்குறிப்பு, மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு. சிறப்புப் புலனாய்வுக் குழு அந்த மனிதர் யார் எனத் தேட ஆரம்பித்தது. தொடர்ந்து நடந்த விசாரணை, "புகைப்படக் கலைஞர் ஹரிபாபு, இறந்த மனித வெடிகுண்டு, என்ன ஆனார் எனத் தெரியாத குர்தா பைஜாமா மனிதர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தியது" என்கிறது 'ராஜீவ் காந்தி படுகொலை - ஒரு புலனாய்வு' என்ற புத்தகம். இந்த நூல், சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி.ஆர். கார்த்திகேயனாலும் மற்றொரு உயரதிகாரியான ராதா வினோத் ராஜுவாலும் இணைந்து எழுதப்பட்டது. இதற்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழு, சந்தேகத்திற்குரிய கொலையாளி, குர்தா - பைஜாமா நபர் ஆகியோரின் படங்களை வெளியிட்டு, அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி கூறியது. இதற்கிடையில் தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை ரூசோ என்ற சங்கரைக் கைதுசெய்தது. அவரிடம் நளினி, தாஸ் ஆகிய இருவரின் தொலைபேசி எண்கள் கிடைத்தன. அவர் அளித்த கூடுதல் தகவலின் பேரில், திருத்துறைப்பூண்டியில் ஒரு கடத்தல் புள்ளி கைதுசெய்யப்பட்டார். அவரை விசாரித்தபோதுதான், குர்தா - பைஜாமா நபரின் பெயர் சிவராசன் என்பதும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையில், இது குறித்து விசாரிப்பதற்காக கொழும்பு சென்றிருந்த குழு ஒன்று சென்னைக்குத் திரும்பியது. அந்தக் குழுவினரும் குர்தா - பைஜாமா நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராஜா மாஸ்டர் தான் எனக் குறிப்பிட்டனர். இதற்குப் பிறகு, நளினியின் சகோதரர் பாக்கியநாதனை விசாரித்தபோது அவரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். மேலும், மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு, அவரது தோழியின் பெயர் சுபா, புலிகள் இயக்கத்தில் சிவராசனின் பெயர் ரகு ஆகிய தகவல்களும் கிடைத்தன. இதற்கிடையில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். ஜூலை மாத இறுதியில் கோவையில் பதுங்கியிருந்த டிக்ஸன், குணா ஆகிய புலிகளைப் பிடிக்க முயற்சி செய்தபோது அவர்கள் இருவரும் சயனைட் அருந்தி உயிரிழந்தனர். பெங்களூரில் நடந்த தேடுதல் வேட்டையிலும் இருவர் உயிரிழந்தனர். படக்குறிப்பு, முருகனுடன் நளினி பெங்களூருவில் சுற்றி வளைக்கப்பட்ட குழுவினர் இதற்கிடையில் பெங்களூருக்குத் தப்பிச் சென்ற சிவராசனும் சுபாவும் லேத் ஒன்றை நடத்திவந்த ரங்கநாதன் என்பவரது வீட்டின் ஒரு அறையில் தங்கினர். பிறகு பெங்களூரின் கோனனகுண்டேவில் இருந்த இன்னொரு வீட்டிற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று சிவராசனும் அவரது குழுவினரும் இடம்மாறினர். தேடுதல் வேட்டைத் தீவிரமடைந்தபோது மற்றொரு சம்பவமும் நடந்தது. கர்நாடக மாநிலம் மூதாடி, பிரூடா ஆகிய இடங்களில் புலிகள் தங்கியிருந்த இடத்தை காவல்துறை சுற்றிவளைக்க அந்த இரு வீடுகளில் தங்கியிருந்த 17 பேர் சயனைடு அருந்தி உயிரிழந்தனர். இந்தச் செய்தி சிவராசன் குழுவினருக்குத் தெரிந்ததும், ரங்கநாதனின் மனைவி மிருதுளா பதற்றமடைந்தார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மிருதுளா சிகிச்சைக்காக எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறி தன் சகோதரர் வீட்டில் சென்று தங்கினார். விரைவிலேயே காவல்துறை மிருதுளாவைப் பிடித்தது. ஆகஸ்ட் 18ஆம் தேதி பிடிபட்ட அவர் கடந்த 16 நாட்களில் புலிகளுடனான தனது அனுபவத்தை விரிவாக காவல்துறையிடம் தெரிவித்தார். கோனன குண்டேவில் அவர்கள் தங்கியருந்த வீட்டையும் காட்டினார். அந்த வீட்டில் அந்தத் தருணத்தில் சிவராசன், சுபா ஆகிய இருவருடன் மேலும் ஐந்து பேரும் தங்கியிருந்தனர். இதற்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். என்ன நடவடிக்கை எடுப்பதென டி.ஆர். கார்த்திகேயன், சி.பி.ஐயின் இயக்குநரிடம் கேட்டபோது, தான் அங்கே வரும்வரை காத்திருக்கும்படி சொன்னார் அவர். பட மூலாதாரம், SONY LIV மருத்துவருடன் வந்த சி.பி.ஐ இயக்குநர் சி.பி.ஐயின் இயக்குநர் அங்கு வந்து சேரும்போது, தன்னுடன் டாக்டர் ராமாச்சாரி என்ற சயனைடு விஷ நிபுணரையும் அழைத்துவந்தார். ராமாச்சாரி, வேறொரு விஷ முறிவு மருந்து தேவை என்று குறிப்பிட்டார். அந்த மருத்து குவாலியரிலிருந்து வர வேண்டியிருந்தது. இதில் சில மணி நேரங்கள் கடந்தன. இதற்கிடையில், ரங்கநாத்தும் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் சிவராசன் தங்கியிருந்த வீட்டிற்கு சற்று தூரத்தில் லாரி ஒன்று பழுதாகி நிற்க, அதிலிருந்த டிரைவர் லாரியைப் பழுது பார்க்க கீழே இறங்கினார். அவர்களை காவல்துறையினர் என நினைத்து சிவராசனும் குழுவினரும் சுட ஆரம்பித்தனர். காலை ஐந்து மணியளவில் குவாலியரிலிருந்து விஷ முறிவு மருந்து வந்தது. ஆறு மணியளவில் கறுப்புப் பூனைப் படையினர் உள்ளே புகுந்தனர். ஆனால், உள்ளே போய் பார்த்தபோது ஏழு பேருமே இறந்து போயிருந்தனர். அந்த ஏழு பேரும் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அம்மன், டிரைவர் அண்ணா, முந்தைய நாள் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த ஜமுனா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் சிவராசன் மட்டும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்து போயிருக்க, மற்றவர்கள் சயனைடு அருந்தி உயிரிழந்திருந்தனர். "மறுநாள் காலை வரை காத்திருந்திருக்காமல் முந்தைய இரவே அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென நாங்கள் கருதினோம்" என இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் டி.ஆர். கார்த்திகேயன். "முடிவு எங்களிடமே விடப்பட்டிருந்தால் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று நாங்கள் அந்த இடத்தை புயலென புகுந்து தாக்கியிருப்போம். சையனைடு நச்சு முறிப்பு ஊசியோடு ஒரு மருத்துவரும் இருந்தும்கூட நாங்கள் பொறுப்பின்றி செயல்பட்டதாக விமர்சனத்திற்கு உள்ளானோம்" என தன் நூலில் குறிப்பிடுகிறார் அவர். ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த சம்பவம் நடந்ததாலும் தற்செயலாக ஆகஸ்ட் 20ஆம் தேதி ராஜீவ் காந்தியின் பிறந்த நாளாக இருந்தாலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன என்றும் இந்த மரணங்கள் முன்னாள் பிரதமரின் பிறந்த நாள் பரிசுபோல திட்டமிடப்பட்டதா என சில பத்திரிகைகள் விமர்சித்தன என்றும் டி.ஆர். கார்த்திகேயனின் நூல் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். வேறு திட்டமா? The Hunt தொடரில், ராஜீவ் காந்தியின் கொலை முடிந்த பிறகு சிவராசன் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு சில திட்டங்களையும் தீட்டுவதாக காட்டப்படுகிறது. அதில் ஒன்று, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமையகமான மல்லிகையைத் தாக்குவது. இரண்டாவது, அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்களை கொல்வது. இதனை சிவராசனை மற்றொரு கூட்டாளியிடம் சொல்வதாகக் காட்டப்படுகிறது. The Hunt தொடரைப் பொறுத்தவரை, பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins நூலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்த நூலில், இது போன்ற ஒரு திட்டத்தை சிவராசன் சொல்வதாக அல்லாமல், உளவுத் துறையின் கருத்தாக இடம்பெறுகிறது. "ஐ.பியிலிருந்து வந்த தகவல்களின்படி, புலிகள் இயக்கம் தீர்த்துக்கட்ட வேண்டிய நீண்ட பட்டியலுடன் மிகப் பெரிய இலக்குகளை வைத்திருக்கிறது. இந்தக் கொலைப் படையினர், குறைந்தது மூன்று வி.ஐ.பிகளைத் தீர்த்துக் கட்ட நினைக்கின்றனர் - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி கே. ராமமூர்த்தி, தமிழக காவல்துறை டிஜிபி எஸ். ஸ்ரீபால்" என அந்த நூல் குறிப்பிடுகிறது. இந்த நூலை எழுதிய அநிருத்ய மித்ரா, இந்தியா டுடே இதழுக்காக ராஜீவ் கொலை தொடர்பான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தொடர்ந்து சேகரித்துவந்தவர். ஆக்ஸட் 21, 1991ஆம் தேதியிட்ட இந்தியா டுடே தமிழ் இதழில் இந்தத் தகவலை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். "ராஜீவைக் கொன்ற பிறகு சிவராசன் தப்பிக்கவில்லை, கொலைப் பட்டியலில் இருந்த அடுத்த இரண்டு வி.ஐ.பிக்களைத் தாக்கத் தயாரானார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது எஸ்.ஐ.டியை உலுக்கியிருக்கிறது. இந்த முறை டெல்லியில் கொலையை நடத்த திட்டமிட்டார். ஜூலை மாத மத்தியில் ஜெயலலிதா, ராமமூர்த்தியுடன் பி.பி. நரசிம்மராவைப் பார்க்கப் போவதாக இருந்தது. ராஜீவைக் கொலைசெய்ததைப் போன்ற ஜெயலலிதாவையும் கொலை செய்ய இருந்ததாக கனகசபாபதியும் ஆதிரையும் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டபோது தெரிவித்தார்கள்" என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் அனிருத்ய மித்ரா. பட மூலாதாரம், SONY LIV படக்குறிப்பு, The Hunt தொடரில், ராஜீவ் காந்தியின் கொலை முடிந்த பிறகு சிவராசன் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு சில திட்டங்களையும் தீட்டுவதாக காட்டப்படுகிறது வாழப்பாடி கே. ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தனிடம் கேட்டபோது, "அந்தத் தருணத்தில் அவர் விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்துவந்ததால், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது உண்மைதான். இதனால், சேலம் வீட்டிலும் சென்னை வீட்டிலும் 24 மணி நேரமும் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது" என்பதை மட்டும் அவர் நினைவுகூர்ந்தார். ஆனால், டி. கார்த்திகேயனின் நூல் இது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. கனகசபாபதியையும் ஆதிரையையும் கைதுசெய்தபோது விடுதலைப் புலிகளுக்கு என டெல்லியில் ஒரு இடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் சிவராசன் உத்தரவாக இருந்தது என்று குறிப்பிட்டார்கள். டெல்லியில் ஒரு இடம் ஏற்படுத்திக்கொண்டால் இந்தியா முழுவதும் புலிகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லவும் சௌகர்யமாக இருக்கும் என்பதுதான் அவர்களது திட்டம் என்கிறது கார்த்திகேயனின் நூல். அந்தத் தருணத்தில் இது குறித்து தொடர்ந்து செய்தி சேகரித்துவந்த மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங்கும் பிற தலைவர்களைக் கொல்லும் திட்டம் ஏதும் புலிகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார். "சிவராசன் உயிரோடு பிடிபடவில்லை. அவர் உயிரோடு பிடிபட்டு இதைச் சொல்லியிருந்தால் அதை ஏற்கலாம். அவர் யாரிடமோ இதைச் சொல்லி, அவர்கள் அதை வெளியில் சொன்னார்கள் என்பது ஏற்கக்கூடியதாக இல்லை. புலிகளைப் பொறுத்தவரை, யாருக்கு எவ்வளவு தகவல்கள் தெரிய வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே சொல்வார்கள். தவிர, அந்த நேரத்தில் அவர்கள் ஜெயலலிதாவைக் கொல்வதற்குக் காரணமே இல்லை. அவர் புலிகள் எதிர்ப்பாளராக இருப்பதுதான் காரணம் என்றால், ராஜீவ் கொலைக்குப் பிறகு பலருக்கும் அந்த மனநிலைதான் இருந்தது. தவிர, அந்நிய மண்ணில் இதுபோல செய்வதன் விளைவுகள் அவர்களுக்குத் தெரியும். ஆகவே, ராஜீவ் கொலைக்குப் பிறகு அப்படி எந்தத் திட்டமும் அவர்களிடம் இருந்ததாகச் சொல்ல முடியாது" என்கிறார் அவர். அதே சமயத்தில் தி ஹிந்து நாளிதழுக்காக இது தொடர்பான செய்திகளைச் சேகரித்துவந்த டி.எஸ். சுப்பிரமணியனும் இது போல தான் கேள்விப்படவில்லை என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mpjge9r1lo
-
குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி
குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம் 19 AUG, 2025 | 04:37 PM (எம்.மனோசித்ரா) வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த உப்பளத்தின் செயற்பாடுகளை அரச - தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பினும், அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/222891
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் காற்றாலை, கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்; பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், மீனவர்கள் பங்கேற்பு 19 AUG, 2025 | 03:02 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (19) 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர். மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பனங்கட்டிக்கொட்டு, ஜிம் பிரவுன் நகர், எமில் நகர், இத்திக்கண்டல், தலைமன்னார் கிராமம் ஆகிய கிராம மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர். குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள நிலையில் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன் வைத்துள்ளதோடு, ஜனாதிபதி உரிய தீர்வை வழங்காது விட்டால் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222876
-
நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம்; தொடரும் நீர்க்கண்காட்சி
19 AUG, 2025 | 01:30 PM நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (24) வரை இடம்பெறவுள்ளது. நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திங்கட்கிழமை (18) மாலை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் "தண்ணீரின் கதை" நாடக ஆற்றுகை இடம்பெற்றது. நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்பதனை சித்தரிக்கும் வகையில் நாடகம் உயிர்ப்புள்ளதாக இருந்தது. பார்வையாளர்களை கண்ணீரில் நனைய வைத்த நாடகத்தின் பின் பலரது அனுபவ பகிர்வுகளும் உருக்கமாக அமைந்திருந்தன. நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (19) ஆற்றுகை நிகழ்வாக பாடல் நிகழ்வுகளும், "கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்" என்கிற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்களின் கருத்துரையும் உரையாடலும் இடம்பெறும். நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/222859
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிறைய காசு கட்டின கோபத்தில எழுதின பதில் போல இருக்கு!
-
தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றினால் நகரங்கள் என்ன ஆகும்?
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஆ. நந்தகுமார் பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2025, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நாடு தழுவிய அளவில் ஒரு பரந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. குழந்தைகளைக் கடிப்பது, சாலையில் நடந்து செல்வோரைக் கடிப்பது, ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் என தெருநாய்கள் விவகாரம் ஓர் ஆபத்தான விஷயமாக மாறியுள்ளதால், ஒரு தரப்பினர் இந்த உத்தரவை வரவேற்கின்றனர். அதேசமயம் நாய்களை இப்படி கூண்டோடு அகற்றுவது மனிதாபிமானமற்ற செயல் என்றும், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்றும் விலங்கு நல அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால் இப்படி நாய்களை ஒட்டுமொத்தமாக அகற்ற முடியுமா? அப்படி அகற்றினால் மக்கள் வசிப்பிடங்களுக்கு என்ன ஆகும் என்பதே. உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் அமைதிப் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன. தெருநாய்களை முற்றிலுமாக அகற்றினால் 'சுற்றுச்சூழல் பேரழிவு'- வுக்கு வழிவகுக்கும் எனவும் இதனால் மனிதர்களுக்குத்தான் பெரும் பிரச்னை எனவும் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 'நகர்ப்புற சூழலியல் அமைப்பின் ஒரு பகுதி' ''நாய், பூனை, எலி போன்றவை மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பரப்பில் இயற்கையாகவே தகவமைத்து வாழும் தன்மை கொண்டவை. தெருநாய்கள் ஒரு விலங்கு மட்டுமல்ல, நகர்ப்புற சூழலியல் அமைப்பின் ஒரு பகுதியாகும். அவை மற்ற உயிரினங்களையும் மனித சமூகத்தையும் சமநிலைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.'' என்கிறார் பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மனித - விலங்கு தொடர்பு குறித்த படிப்பான பொலிட்டிகல் ஈகாலஜி பேராசிரியர் கிருத்திகா. எடின்பரோ பல்கலைக்கழகத்தின் ''Decolonial Approaches to Street Dogs and Rabies Prevention in India'' எனும் ஆய்வில் தலைமை ஆய்வாளராக இவர் பணியாற்றியுள்ளார். நாய்களை ஓர் இடத்திலிருந்து அகற்றுவதால் ஏற்படும் ''Vacuum Effect" (வெற்றிடம்) காரணமாக பிரச்னை மேலும் சிக்கலாகும் என்கிறார் கிருத்திகா. படக்குறிப்பு, பேராசிரியர் கிருத்திகா ''ஒரு தெருவில் இருந்து நாய்களை அகற்றினால், ஆறு மாதத்துக்குள் ஒரு புது தெரு நாய் அங்கு வந்திருக்கும். ஏனெனில் உணவு, தங்குவதற்கு வசதி போன்றவை பிற பகுதி நாய்களை இங்கு ஈர்க்கும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நாய்களின் இடப்பெயர்வைத் தடுக்க முடியாது. இதனால் புதிதாக வந்த நாய்களுக்குள்ளும், நாய்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் இடையே மோதல் வரும். இது சூழலை மிகவும் மோசமாக்கும்'' என்கிறார் அவர். அதனால்தான் உலக சுகாதார நிறுவனம் போன்ற உலகின் பல்வேறு அமைப்புகளும் நாய்களை அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எதிர்க்கிறது என்கிறார் கிருத்திகா. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் பல்வேறு அமைப்புகளும் நாய்களை அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எதிர்கிறது 'எலி, பூனை பிரச்னை அதிகரிக்கலாம்' ஐரோப்பாவில் சில நாடுகள் தெரு நாய்களை அகற்றியதால் அங்கு அந்த பிரச்சினையில்லை எனக் கூறப்படும் வாதத்துக்குப் பதில் அளித்த கிருத்திகா,''பிரிட்டன் போன்ற நாடுகளில் தெருநாய்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாய் தொடர்பான பிரச்னைகள் தீரவில்லை. குப்பையாக வீசப்படும் உணவுகளை உண்ண ஓநாய்கள் வருகின்றன. இதனால் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது'' என்கிறார் கிருத்திகா. ''உதாரணமாகப் பிரிட்டனின் எடின்பரோ நகரில் நான் வசிக்கிறேன். எனது அடிக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் உள்ள பூங்காவுக்குக் கூட ஓநாயும் கழுகும் வருகின்றன. சென்னையில் நீங்கள் வீட்டில் வெளியே எட்டிப்பார்த்தால் நாய் தூங்கிக் கொண்டிருப்பது போல என் வீட்டின் வெளியே எட்டிப்பார்த்தால் ஓநாய் தூங்கிக் கொண்டிருக்கும்'' என கூறுகிறார் அவர். சூழலியல் அமைப்பு என்பது கணிக்க முடியாதது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், மனிதர்கள் மனதில் ஒன்று நினைத்து சூழலியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்ய நினைத்தால் அதற்கான விளைவு வேறு ஒன்றாக இருக்கும் என்கிறார் கிருத்திகா. ''உதாரணத்துக்கு மும்பையில் சில பகுதிகளில் நாய்களுக்குக் கருத்தடை செய்யும் திட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்தியதால் தெருநாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயம் பூனைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களின் எண்ணிக்கை குறைவுக்கும், பூனைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் ஒரு முக்கிய தொடர்புள்ளது. பூனைகளுக்குக் கருத்தடை செய்யும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி செயல்படுத்தி வருவதையும், பூனை தொல்லை குறித்து மக்கள் புகார் அளித்து வருவதையும் பார்க்கிறோம் '' என்கிறார் அவர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு,'மனிதர்கள் மனதில் ஒன்று நினைத்து சூழலியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்ய நினைத்தால் அதற்கான விளைவு வேறு ஒன்றாக இருக்கும்' ''தெருநாய்கள் இயற்கையாகவே பூனை, எலிகளை வேட்டையாடும். உணவு போன்ற கழிவுகளை தின்று குப்பைகளைக் குறைக்கும். தெருநாய்கள் இல்லையெனில் எலிகள் பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்படும்'' என்கிறார் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும் கால்நடை மருத்துவருமான ராமகிருஷ்ணன். 1994-ஆம் ஆண்டு சூரத்தில் அனைத்து நாய்களும் அகற்றப்பட்ட பிறகு அங்கு எலிகளின் தொல்லை அதிகரித்து மக்களுக்கு பிளேக் நோய் பரவியதாக விலங்கு நல ஆர்வலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மேனகா காந்தி பல முன்னணி ஆங்கிலப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தில் இருந்து மாறுபடும் கிருத்திகா,'' எலி பிரச்னையோ அல்லது பூனை பிரச்னையோ என இந்தியாவில் என்ன பிரச்னை வரும் என கணிக்க முடியாது. அதுதான் சூழலியல் அமைப்பு. ஆனால், நிச்சயம் புது பிரச்னை ஏற்படும். நீண்ட கால தாக்கம் என்னவென்றால் நாய்கள் விட்டுச்செல்லும் சூழலியல் இடத்தை (உணவு, இடம்) வேறு விலங்குகள் அபகரித்துக் கொள்ளும். அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில், தெரு நாய்கள் வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து அகற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்தன. அந்த இடத்தை ஓநாய்களும், ரக்கூன்களும் பிடித்துள்ளதை எங்கள் மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை காகம், கழுகு கூட நாய்கள் உண்ணும் உணவை உண்ணும் தன்மை கொண்டவைதான் '' என்கிறார். மேலும் அவர், ''பிடிக்கிறதோ இல்லையோ நாம் நாய்களுடன் வாழப் பழகிவிட்டோம். ஆனால் ஓநாய், கழுகு போன்றவற்றுடன் எப்படி வாழ்வது என்பதை அறிவது மிகவும் கடினம்.'' என்கிறார். பட மூலாதாரம், GETTY IMAGES விலங்குகள் இடப்பெயர்வால் அதிகரித்த காசநோய் பிரிட்டனில் பேட்ஜர் எனும் விலங்கு மாடுகளுக்கு காசநோயை பரப்புவதாக கண்டறியப்பட்ட பிறகு, பேட்ஜர்களை கொல்லுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டாலும், விளைவுகள் மோசமாக இருந்தது என்கிறது ஓர் ஆய்வு. ஓர் இடத்தில் இருந்த பேட்ஜர்கள் கொல்லப்பட்ட பிறகு அங்கு வேறு இடத்தில் இருந்து புதிய பேட்ஜர் அந்தப் பகுதிக்கு வந்தது. வெவ்வேறு குழுக்களை சேர்ந்த பேட்ஜர்கள் கலந்ததன் விளைவாக மாடுகளுக்கு காசநோய் பரவல் இன்னும் அதிகரித்தது. காசநோயை கட்டுப்படுத்த பேட்ஜர்களை கொல்ல எடுத்த முடிவு, நோய் பரவலை அதிகரித்து நிலைமையை மோசமடைய வைத்ததே தவிர பிரச்னையை தீர்க்கவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிகரிக்கும் ஆபத்து? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'நாய்கள் பிரச்னைக்கு ஒற்றை தீர்வு என எதுவும் இல்லை' இந்தியாவில் நாய்க்கடி பிரச்னை மற்றும் ரேபிஸ் நோய் பரவலாகக் காணப்படுகிறது. உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் ரேபிஸின் உண்மையான பாதிப்பு முழுமையாகத் தெரியவில்லை என்றும் இருப்பினும் கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இறப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் ரேபிஸ் இறப்புகளில் சுமார் 30 - 60% 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகின்றன என அந்த அமைப்பு கூறுகிறது. மறுபுறம், இந்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2023 இல் 50 ஆக இருந்த ரேபிசால் ஏற்பட்ட உயிரிழப்பு 2024 இல் 54 ஆக அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் காட்டுகின்றன ''தெருநாய்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் தாக்குவதே சமீபத்தில் மக்களின் கோபம் அதிகரித்துள்ளதுக்கு முக்கிய காரணம். இதனால் தெருநாய்களைப் பார்த்தாலே மக்கள் பீதியடைகின்றனர்'' என்கிறார் மருத்துவர் ராமகிருஷ்ணன். சமீபத்திய உச்சநீதிமன்றம் உத்தரவு கூட டெல்லியில் தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்தே பிறப்பிக்கப்பட்டது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நாய் தொல்லை ஒரு மோசமான ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்கிறார் மருத்துவர் ராமகிருஷ்ணன். ''நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் உணவு உண்ணத் தினமும் சுமார் 10 நாய்கள் வரும். தினமும் வழக்கமாகப் பார்த்த நாய் திடீரென ஒருநாள் என்னை கடித்தது. எந்த நாய் இயல்பாக இருக்கிறது, எந்த நாய் ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதைக் கண்டறிவதே கடினமாக உள்ளது. அப்போதிலிருந்து தெரு நாய்களைப் பார்த்தாலே ஒரு பதற்றம் ஏற்படுகிறது. குடியிருப்பு மக்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமெனில் கட்டாயம் தெரு நாய்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது'' என்கிறார் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி. பட மூலாதாரம், GETTY IMAGES சிறந்த தீர்வு என்ன? நாய்கள் பிரச்னைக்கு ஒற்றை தீர்வு என எதுவும் இல்லை என்கிறார் பேராசிரியர் கிருத்திகா. ரேபிஸ் நோய், நாய்க்கடி மற்றும் விழிப்புணர்வு என மூன்றாக இதனைப் பிரித்து பார்த்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்கிறார் அவர். ''நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். அகற்றுவது அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நாய்களைக் கொல்வது, ஓர் இடத்தில் இருந்து அகற்றுவது போன்றவற்றைச் செய்யாமல் இனப்பெருக்க தடுப்பு மற்றும் தடுப்பூசிகளைச் செலுத்தி வருகிறோம். ஆனால், இது முழுமையாகவும் சிறப்பாகவும் செய்யப்படவில்லை.'' எனக் கூறும் அவர் 3 விஷயங்களைப் பரிந்துரைக்கிறார். ''அனைத்து நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசியும், நாய் கடிபட்ட மனிதர்களுக்கு உடனே ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். எந்த விலங்கும் ஓரிடத்தில் இருக்கிறது என்றால் அதற்கான உணவும் பிற வசதிகளுக்கும் அங்கு இருக்கிறது என ஆர்த்தம். நாய்களுக்குத் தேவையான உணவு, குப்பை கழிவு போன்றவை ஓரு இடத்தில் அல்லது பகுதியில் அதிகம் இருக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாய்க்கடி பிரச்னையை குறைக்கலாம். இறுதியாக தெரு நாய்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், நாய்களுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.'' என்றார் கிருத்திகா. ''லட்சக்கணக்கான நாய்களை அடைத்து வைப்பது நடைமுறை சாத்தியமற்றது. ஏனெனில் நகர நிர்வாகத்தில் போதிய பராமரிப்பு வசதிகள் இல்லை. ஒரு நாய் சராசரியாக பத்து ஆண்டுகள் உயிருடன் இருக்கும் என வைத்துக்கொண்டால், ஒரு நாய்க்குச் சராசரியாகத் தினமும் 40 - 50 ரூபாய் செலவாகும். லட்சக்கணக்கான நாய்களுக்கு அரசால் செலவு செய்ய முடியுமா?" என்று தமிழ்நாடு மாநில வன உயிரின வாரியத்தின் உறுப்பினரும், விலங்கு நல ஆர்வலருமான ஆண்டனி ரூபின் கேள்வி எழுப்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4ge0y5mpq8o
-
வட்டுவாகல் பாலத்துக்கு ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு; முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைப்பதில் மகிழ்ச்சி - ரவிகரன் எம்.பி
வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அனுமதி வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் 50/1 ஆம் இலக்க பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இறுதியாக திருத்தப்பட்டுள்ள குறித்த பாலம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் இருவழிப் பாதையுடன் கூடிய புதிய பாலமாக அதனை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைமையின் அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய, கணிசமானபதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s RR Construction (Pvt) Limited க்கு இந்த நிர்மாணப் பணிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmei8d8aq02qaqp4k5tvwrtgp
-
வீரமுனை பெயர்ப்பலகை அமைக்க தடுத்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள்; அதிகாரிகளுக்கு சாதகமாக செயற்பட்ட பொலிஸார் - வீரமுனை மக்கள் குற்றச்சாட்டு
Published By: VISHNU 19 AUG, 2025 | 03:24 AM அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக் குறிக்கும் பெயர்ப் பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை - கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை இன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்திருந்தது. எனினும் அங்குவந்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த சம்மாந்துறை பொலிஸாரும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சாதகமான முறையில் செயற்பட்டதாக வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியில் பெயர்பலகை நடுவதற்கு பிரதேசசபையிடம் எந்த அனுமதியும் பெறத்தேவையில்லாத நிலையில் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பிரதேச மக்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதனை போலியான காரணங்கள் கூறி தடுத்தவர்கள் மீண்டும் அதே வேலையினை செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சம்மாந்துறை பிரதேச சபையில் உள்ள சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வீரமுனையின் அடையாளத்தினை இல்லாமல் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இது கண்டனத்திற்குரியது எனவும் அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222831
-
குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச - தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmei6lpu302pzqp4k7sb5zz0g
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் யாருக்கு என்ன தேவை? : 4 தரப்பு , 4 கோணங்கள்
பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் லாரா கோஸி மற்றும் டாம் கோகெகன் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகையில் உலகத் தலைவர்கள் அரிதாக ஒன்றுகூடும்போது நிச்சயம் அது வழக்கமான நாளாக இருக்காது. ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கு இடையேயான சந்திப்பாக அறிவிக்கப்பட்டது, தற்போது ஒரு மாநாடு போன்று மாறியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்கள், மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் அதற்கான நிபந்தனைகள் குறித்தும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஒன்றுகூடியுள்ளனர். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை யுக்ரேனுக்கு சாதகமாக இல்லாத ஒன்றாக மாற்றியுள்ளது என்பது, வளர்ந்து வரும் ஐரோப்பிய கவலைகளுக்கு காரணமாக உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மற்றும் கலந்துகொள்ளாத ஒருவருக்கு (ரஷ்யா) நீண்ட விவாதங்களுக்குப் பிறகு வெற்றிகரமான முடிவு என்பது என்னவாக இருக்கும் என்பது குறித்து நாங்கள் விவாதித்திருக்கிறோம். "ஒப்பந்தம் வந்தால் போதும்" - அமெரிக்கா டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது, தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே இந்த மோதலுக்கு தீர்வு காண்பதாக கூறியிருந்தார், ஆனால் ஆறு மாதங்கள் கழிந்தும் அதை அவரால் எட்ட முடியவில்லை. காலப்போக்கில், எந்தவொரு ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும் விட இந்த ஒப்பந்தத்தில் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டியதால், விதிமுறைகள் மாறிவிட்டன. வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததிலிருந்து, டிரம்ப் மாஸ்கோ மீதான தனது விமர்சனத்தையும், பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தலையும் கைவிட்டு, அதற்கு பதிலாக ஜெலன்ஸ்கி மீது அழுத்தத்தைக் குவிக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு சமூக ஊடகப் பதிவில், யுக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைய வேண்டும் என்ற நம்பிக்கையை அந்நாட்டு அதிபர் கைவிட வேண்டும் என்றும், 2014 இல் புதின் சட்டவிரோதமாக க்ரைமியாவை இணைத்ததை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார். ரஷ்யாவின் மேலதிக ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கும் என்று டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஆனால் அதுகுறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. இதுவரை, யுக்ரேனின் எதிர்கால பாதுகாப்புக்கு அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய கோரிக்கைகளை அமெரிக்கா எதிர்த்தது. அது உண்மையில் மாறிவிட்டதா என்பதை அறிய அனைவருடைய கவனமும் வெள்ளை மாளிகையை நோக்கி உள்ளது. விட்டுக்கொடுக்க மறுக்கும் யுக்ரேன் பொறுமையிழந்து காணப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னிலையில், தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி இருக்கிறார். தற்போதைய நிலையில் டிரம்ப் புதினின் கருத்துக்களால் தூண்டப்பட்டவராக அறியப்படுகிறார். ஏற்கெனவே அமைதிக்கு இடையூறாக ஜெலன்ஸ்கி இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜெலென்ஸ்கியிடம் ரஷ்யாவுக்கு நிலத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறலாம். 2022 முதல் ஆயிரக்கணக்கான யுக்ரேனிய வீரர்கள் உயிரைக் கொடுத்து போராடிய பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளிலிருந்து பின் வாங்குவது என்பது யுக்ரேனுக்கு கடினமான முடிவாக இருக்கும். இது புதிய நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்புக்கான ஏவுதளமாக ரஷ்யா பயன்படுத்த வழிவகுக்கும். எனவே ரஷ்யா மீண்டும் தாக்கினால், பதிலடி கொடுக்கும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் நிலச் சலுகைகளை வழங்க ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ள முடியாது. பாதுகாப்பு உத்தரவாதங்கள் நேட்டோவால் வழங்கப்பட்டிருக்கலாம், ஆனால் யுக்ரேன் நேட்டோ கூட்டணியில் சேராது என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். எந்த மாற்று பாதுகாப்பு உத்தரவாதங்களின் விவரங்களும் இன்னும் உருவாக்கப்படவில்லை, ஆனால் அவை இல்லாமல் ஜெலன்ஸ்கி எந்த உறுதிமொழிகளையும் எடுப்பது கடினமாக இருக்கும். உடனடி போர் நிறுத்தத்தை விரும்புவதிலிருந்து முழு அமைதி ஒப்பந்தத்தை நோக்கி டிரம்ப் நகர்ந்துவிட்டதாகத் தோன்றுவதும் யுக்ரேனை கவலையடையச் செய்கிறது. இதனால் ஏற்படும் தாமதத்தால், ரஷ்யாவின் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரலாம். பாதுகாப்புக்கான உத்தரவாதம் - ஐரோப்பாவின் கோரிக்கை ஐரோப்பியத் தலைவர்கள் யுக்ரேனுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் எதிர்பார்ப்பார்கள். இந்த விஷயத்தில் அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளில் இருக்கும் தெளிவின்மை, ஐரோப்பியர்களுக்கு கவலை அளிக்கிறது. ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க யுக்ரேனை அமெரிக்கா வலியுறுத்தக்கூடும் என்ற கருத்து குறித்த பதற்றமும் உள்ளது. ஐரோப்பிய கண்டம் ரத்தம் தெறிக்கும் போர்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் எல்லைகள் பலவந்தமாக மறுவரையறை செய்யப்படும் சூழ்நிலையைத் தவிர்க்க தலைவர்கள் விரும்புகிறார்கள். இந்த கவலைகளின் விவாதத்தின் ஐரோப்பாவின் இத்தனைத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு செல்லும் திடீர் முடிவை எடுத்துள்ளனர். கடந்த வாரம் டிரம்ப் - புதின் சந்திப்பு நடைபெற்ற, அலாஸ்கா உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்த ஒரு மெய்நிகர் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் விளைவாக ரஷ்யா மீதான டிரம்பின் விமர்சனத்தை கடுமைப்படுத்த முடிந்தது. ஆனால்,புதினை சந்தித்த பின்னர், அவர் மீண்டும் ரஷ்யாவின் பக்கம் சாய்வது போல் தோன்றுவதால், ஐரோப்பியத் தலைவர்கள் கண்டத்தின் நீண்டகால பாதுகாப்பு குறித்த தங்கள் கவலைகள் மாறவில்லை என்பதை அவருக்கு உணர்த்த முயற்சிப்பார்கள். ரஷ்யா எதிர்பார்ப்பது என்ன? இன்று வெள்ளை மாளிகையில் நடைபெறும் சந்திப்பில் ரஷ்ய பிரதிநிதிகள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனாலும்,அதனை ஒரு பொருட்டாக கருதாத அளவுக்கு,கடந்த வாரம் டிரம்ப் மீது புதின் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் கருதப்படுகிறது. இதனால் ரஷ்யா தனது பார்வை போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்று நம்பலாம். யுக்ரேன் நேட்டோவில் சேராது என்று டிரம்ப் ஏற்கெனவே கூறியுள்ளார்.மேலும் அந்த உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் அங்கீகரிக்கவும் ரஷ்யா விரும்புகிறது. டான்பாஸ் மீதான முழு கட்டுப்பாட்டையும் அது விரும்புகிறது, இது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் இன்னும் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் நிலத்தை யுக்ரேன் விட்டுக்கொடுக்க வழிவகுக்கும். மிக முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இப்போது ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது என்பதை டிரம்ப் மூலமாக ரஷ்யா பேசவைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஜெலன்ஸ்கி டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதை ரஷ்யா அறிந்திருக்கிறது. இந்த முண் டிரம்ப் நிரந்தரமாக பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகி, யுக்ரேனையும் ஐரோப்பியர்களையும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழியைத் தேட வழிவகுக்கும் என்பதே ரஷ்யாவின் வெற்றியாக இருக்கும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80d1n11vy5o
-
ஒரு முகப்பட வேண்டிய சூழல் — கருணாகரன் —
பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
-
ஆளுநர்களின் கீழ் மாகாண சபைகள் செயல்படுவது சட்டவிரோதம் - பொதுஜன பெரமுன
18 AUG, 2025 | 04:50 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாதாள குழுக்களின் எழுச்சிக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கருத்து அவதானத்துக்குரியது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் பாதாள குழு தலைவர்கள் நாட்டை விட்டு ஓடி தலைமறைவானார்கள். பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை கடந்த அரசாங்கங்கள் எடுக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பாதாள குழுக்களை பாதுகாத்தது. அதன் விளைவை இன்று நாடு எதிர்கொள்கிறது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன.பொலிஸாரின் முன்பாக துப்பாக்கிதாரிகள் தமது இலக்கினை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் பிரதானவையாக காணப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். மாகாணசபைத் தேர்தல்முறைமையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிக்குள்ளாக்கினார். இதற்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது. ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. ஆகவே தேர்தலை நடத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/222807
-
உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி!
Robots from 16 countries compete in World Humanoid Robot games in Beijing
-
உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி!
இயந்திர மனிதர்களின் முதலாவது சர்வதேச விளையாட்டு - குறுங்காணொளி
-
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது; சுமந்திரன் 18 AUG, 2025 | 05:30 PM யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே . வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது. அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது. எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி, அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி. வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது. தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக , மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர். பாடசாலைகள் , தனியார் காணிகள் , ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம். வடக்கு - கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன. அதனால் , அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து , அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம். பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும். வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார். அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் .சி.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும். ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும். இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள். அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/222819
-
வேலை நிறுத்த போராட்டத்தினால் ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள்
18 AUG, 2025 | 04:02 PM (எம்.மனோசித்ரா) தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர். இதனால் திங்கட்கிழமை (18)மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரமும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் இணக்கப்பாடுகளை மீறியே தற்போது வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே வேலை நிறுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். பேச்சுவார்த்தைகள் மூலம் இதனை நிறைவுக்கு கொண்டு வர தொழிற்சங்கங்கள் விரும்பினால் அதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம். தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் வருமானத்தை விட சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுகளுக்கான செலவுகள் அதிகமாகவுள்ளன. தற்போது 4 பில்லியனாகக் காணப்படும் நஷ்டம், சம்பள அதிகரிப்புடன் 10 – 12 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. வேலை நிறுத்தங்களால் ஒரு நாள் மாத்திரம் இழப்புக்கள் ஏற்படப் போவதில்லை. அதன் விளைவுகள் நீண்ட காலத்துக்கு தொடரும். எனவே அவற்றை சரி செய்வது கடினமாகும். தபால் சேவை என்பது போட்டித்தன்மை மிக்கதாகும். தனியார் துறையினரும் இந்த சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறிருக்கையில் இவ்வாறு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டால், எமக்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே தனியார் துறையை நோக்கி நகரக் கூடும். இயலாத பட்சத்திலேயே வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எம்மால் சவால் விடுக்க முடியாது என்றார். அம்பாறை மாவட்ட தபால் அலுவலக சேவைகளும் முடக்கம் தபால் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் காரணமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன. அதன்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் தவிர 12 தபால் நிலையங்கள் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகிறது. அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர் ஜே.பி இப்போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் எமது போராட்டம் காலவரையறையின்றி தொடரும் என்றார். மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று தபால் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து தபாலகங்களும் உப தபாலகங்களும் ஊழியர்களின் பணி நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஊழியர்களின் பணி நிறுத்தத்தை அறியாத பொதுமக்கள் பலர் தபாலகங்களுக்கு வந்து திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. நீர்கொழும்பு நீர்கொழும்பு பிரதான தபாலகமும் இன்று மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு தேவைகளுக்காக தபால் நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/222801
-
மனிதப் புதைகுழிகள் : சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு - கிழக்கில் கையெழுத்துப் போராட்டத்துக்கு ஏற்பாடு
18 AUG, 2025 | 03:38 PM நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட, குறிப்பாக, வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மனித குலத்திற்கு எதிராக, இந்த பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு நீதி கோரி தமிழ் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் வருடக்கணக்கில் போராட்டம் நடாத்தி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த அரசும் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை. இதேவேளை புதிது புதிதாக மனித புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குள் இருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த மனித புதைகுழிகள் தொடர்பில் உள்நாட்டில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும், குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனையும் கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் தமிழ் மக்கள் இந்த விடயங்களில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருகின்றனர். மனித புதைகுழிகள் தொடர்பான நவீன தொழில்நுட்ப உதவிகள் உட்பட சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் இக்கோரிக்கையினை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/222805
-
இலங்கையின் இளைஞர்களும் 'நீல நிற' வேலைகளும் ஒரு சமூகப் பொருளாதார ஆய்வு
இலங்கையின் இளைஞர்கள் மத்தியிலான 'நீல நிற' வேலைகள் மீதான தயக்கம் ஒரு பெரிய சமூக-பொருளாதார சவாலாகும், இது உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வேலையின்மை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு இந்த மனநிலை நேரடியாகக் காரணமாக அமைகிறது. கல்வி முறை சீர்திருத்தம், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம், சமூக மதிப்பீடுகளில் மாற்றம் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் மூலம் இந்த மனநிலையை மாற்றியமைக்கலாம். மேம்பட்ட நாடுகள் உடல் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், இலங்கை இளைஞர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்க பங்களிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன், இளைஞர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை மேம்படுத்தும். இலங்கையின் வளர்ச்சிப் பாதையில், 'நீல நிற' வேலைகள் எனப்படும் உடலுழைப்பு சார்ந்த தொழில்கள் மீது நமது இளைஞர்கள் கொண்டுள்ள மனநிலை ஒரு பெரும் சமூகப் பொருளாதார சவாலாக எழுந்துள்ளது. மற்ற வளர்ந்த நாடுகளில், வேலை செய்யும் தொழிலைப் பொருட்படுத்தாமல், தனிநபர்கள் தங்கள் பங்களிப்பை மதித்து, அதற்காகப் பெருமைப்படும் ஒரு கலாச்சாரம் நிலவுகிறது. ஆனால், இலங்கையில், குறிப்பாக படித்த இளைஞர்கள் மத்தியில், அலுவலக வேலைகள் அல்லது 'வெள்ளை நிற' வேலைகள் மீதான அதீத நாட்டம் காணப்படுகிறது. இந்த மனநிலை, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனைப் பாதிக்கின்ற ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது. இலங்கையின் மனிதவளத்தின் பெரும்பான்மையைக் கொண்டுள்ள இளைஞர்கள், சவாலான ஆனால் அத்தியாவசியமான கட்டுமானத் துறை, விவசாயம், உற்பத்தி மற்றும் தொழிற்பிரிவு சேவைகளில் ஈடுபடத் தயங்குவது, நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பெரும் தடையாக உள்ளது. ஒருபுறம் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்க, மறுபுறம் பல திறன் சார்ந்த வேலைகளுக்குப் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்ற முரண்பாடு இலங்கையின் இன்றைய யதார்த்தமாக உள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த மனநிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளன. முதலாவதாக, தொழிற்துறை சார்ந்த துறைகளில் திறன்மிக்க தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால், பல கட்டுமான மற்றும் உற்பத்தித் திட்டங்கள் தாமதமாகின்றன அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது நாட்டுக்குள் இருக்கும் அந்நியச் செலாவணியை வெளியே கொண்டு செல்வதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் பறிக்கிறது. இரண்டாவதாக, 'கவுரவம்' என்று கருதப்படும் வேலைகளைத் தேடி இளைஞர்கள் காத்திருப்பதால், அவர்களின் இளம் பருவத்தில் பல உற்பத்திமிக்க ஆண்டுகள் வீணடிக்கப்படுகின்றன. இது தனிநபர்களின் பொருளாதாரச் சுமையைப் பெருக்குவதுடன், குடும்பங்களின் நிதி நிலையையும் பாதிக்கிறது. மூன்றாவதாக, இந்த வேலையின்மை இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும், மனச்சோர்வையும் உருவாக்குகிறது. சமூகத்தில் வேலையின்மையால் ஏற்படும் விரக்தி, போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டுக் குழுக்கள் போன்ற குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கு வழிவகுப்பதாக அண்மைய செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. "கம்பஸ் நியூஸ்" (Campus News) போன்ற உள்நாட்டு அறிக்கைகள், பட்டதாரிகள் மத்தியிலும் வேலையின்மை ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதையும், இது அவர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் அவ்வப்போது எடுத்துரைக்கின்றன. மேலும், இந்த மனநிலை நாட்டின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைக்கு மக்களின் எதிர்வினைகள் பல்வேறுபட்டதாக உள்ளன. பொதுவாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அலுவலக வேலைகளில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். இது சமூக அந்தஸ்துடனும், பாதுகாப்பான எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் கூட, தங்கள் பிள்ளைகள் நகரங்களுக்குச் சென்று 'வெள்ளை நிற' வேலைகளில் ஈடுபடுவதையே விரும்புகின்றனர். சில சமயங்களில், இளைஞர்கள் வேலையின்மையில் வாடினாலும், அவர்களுக்குப் பொருந்தாத உடலுழைப்பு சார்ந்த வேலைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இந்த மனநிலை சமூக ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது, அங்கு இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்மையை விமர்சிக்கும் அதே வேளையில், கிடைக்கக்கூடிய வேலைகள் குறித்த எதிர்மறையான கருத்துகளையும் பகிர்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் வேலையின்மைக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்கிறார்கள், ஆனால் இந்த வேலைவாய்ப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் எந்த வகையான வேலைகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது குறித்த ஆழமான விவாதம் குறைவாகவே உள்ளது. இது ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினையாக, தனிநபர்களின் அபிலாஷைகளுக்கும் சமூக யதார்த்தங்களுக்கும் இடையிலான மோதலைப் பிரதிபலிக்கிறது. இந்த சவாலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்வினைகளும் குறிப்பிடத்தக்கவை. பல அரசியல் தலைவர்கள், இளைஞர்களின் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர், மேலும் அதற்கான தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளனர். "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் முன்னுரிமை" என்று பல அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் அறிவிக்கின்றனர். அரசாங்கத்தின் கொள்கைகளில், தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவது, சுயதொழில் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பது போன்ற அம்சங்கள் அடங்கும். உதாரணமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இந்த முயற்சிகள் அனைத்தும், 'நீல நிற' வேலைகள் மீதான மனநிலையை மாற்றுவதில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. சில தலைவர்கள், இளைஞர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நேரடியாகவே அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இந்த அறிவுரைகள் பெரும்பாலும் தனிப்பட்ட பொறுப்பாகப் பார்க்கப்படுகின்றன, அன்றி ஒரு பரந்த சமூக மாற்றத்திற்கான இயக்கமாக உருவெடுக்கவில்லை. என் பார்வையில், இந்த 'நீல நிற' வேலைகள் மீதான மனநிலை மாற்றம் என்பது வெறும் தனிப்பட்ட இளைஞர்களின் பிரச்சினை அல்ல; இது ஒரு ஆழமான சமூக மற்றும் கட்டமைப்புரீதியான சிக்கலாகும். நமது கல்வி முறை, சமூக மதிப்பீடுகள், மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் இந்த மனநிலையைப் பறைசாற்றுகின்றன. நாம் ஒரு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். வெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் நிற்காமல், உடலுழைப்பு சார்ந்த தொழில்களின் மதிப்பையும், அவசியத்தையும் சமூகத்தில் உயர்த்துவது அவசியம். நமது கல்வி முறை இன்னும் ஒரு குறிப்பிட்ட வகையான 'வெள்ளை நிற' வேலைகளுக்கு மட்டுமே மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இது உடனடியாக மாற்றப்பட வேண்டும். பாடசாலைக் கல்வியின் ஆரம்பப் படிகளிலேயே தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு தொழில்களின் மதிப்பை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். சமூகத்தில் 'நீல நிற' வேலைகள் மீதான எதிர்மறையான பார்வையை மாற்ற ஊடகங்கள், சமூகத் தலைவர்கள், மற்றும் பெற்றோர் ஒருமித்துச் செயல்பட வேண்டும். இந்த மனநிலையை மாற்றியமைத்து, உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு பல நடைமுறைத் தீர்வுகள் உள்ளன. முதலாவதாக, கல்வி முறையில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலைகளில் தொழிற்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் திட்டங்களை வலுப்படுத்துவதுடன், பல்வேறு தொழில்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் சந்தைத் தேவைகளுக்கு ஏற்றவாறு பயிற்சிகளை வழங்க வேண்டும். உதாரணமாக, கட்டுமானத் துறை, விருந்தோம்பல், விவசாயம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளுக்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். இரண்டாவதாக, சமூகத்தில் 'நீல நிற' வேலைகளின் மதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். ஊடகங்கள், பொதுப் பிரச்சாரங்கள் மற்றும் வெற்றிகரமான 'நீல நிற' தொழில்முனைவோரின் கதைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம். மூன்றாவதாக, அரசாங்கம், 'நீல நிற' வேலைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்குக் கவர்ச்சிகரமான ஊதியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (எ.கா., ஓய்வூதியம், சுகாதார காப்பீடு) மற்றும் பணிச் சூழல் மேம்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட இளைஞர்களுக்கு உயர்தர திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், அவர்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளைப் பெற ஊக்குவிக்கலாம் (உதாரணமாக, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் செவிலியர்கள் அல்லது தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள்). இறுதியாக, இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் நிலவும் 'நீல நிற' வேலைகள் மீதான தயக்கம் ஒரு சிக்கலான சமூக-பொருளாதாரப் பிரச்சினையாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனையும், சமூக நலனையும் பாதிக்கிறது. இந்த மனநிலையை மாற்றியமைப்பது ஒரு இரவில் நடக்கும் மந்திரமல்ல; அதற்கு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் ஒரு கூட்டு முயற்சி தேவை. கல்வி முறை சீர்திருத்தம், சமூக மதிப்பீடுகளில் மாற்றம், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் சிந்தனை மாற்றம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொண்டு, நமது இளைஞர்கள் தங்கள் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தவும், நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகப் பங்களிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது இளைஞர்கள் தங்கள் உழைப்பைப் பற்றிப் பெருமை கொள்ளும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பும் ஒரு தேசத்தின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது. Posted by S.T.Seelan (S.Thanigaseelan) https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_14.html
-
ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்போம் : இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை
18 AUG, 2025 | 03:36 PM உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன. கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது. உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை தடுப்பது முக்கியம், உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைன் - ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றுவரும் நிலையில், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர். குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வி முடிவும் எட்டப்படாத நிலையில், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செல்கிறார். இந்நிலையில், 'விருப்ப கூட்டணி' என்ற பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் ஜேர்மன் ஜனாதிபதி பிரைட்ரிச் மெர்சும் காணொளி மூலம் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். இதன்போதே இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222806
-
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்
'வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம்': தேர்தல் ஆணையம் இந்த 4 கேள்விகளுக்கு பதில் தந்ததா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, வாக்குகளை திருடுவதாக தேர்தல் ஆணையத்தையும் பாஜக அரசாங்கத்தையும் குற்றம் சாட்டினார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்கள் இணைந்து பிகாரில் உள்ள சசாரமில் இருந்து 'வாக்காளர் உரிமை யாத்திரை'யைத் தொடங்கினார்கள். பிகாரின் பேரணியில், தேர்தல் ஆணையம் 'வாக்கு திருட்டு' செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சசாரமில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் தேசியத் தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து 'வாக்குகளைத் திருட' செயல்படுவதாகவும், 'பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது வாக்குகளைத் திருடுவதற்கான முயற்சி' என்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொன்னது. "சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து உருவாகின்றன, எனவே அந்த அரசியல் கட்சிகளுக்கு இடையே தேர்தல் ஆணையம் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்?" என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து அரசியல் செய்வதாக என்று கூறிய அவர், "ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தேர்தல் ஆணையத்திற்கு அனைவரும் சமம்" என்றும் அவர் கூறினார். வாக்குத் திருட்டு என குற்றம் சுமத்தும் ராகுல் காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பேசிய காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் நேரடியாக பதிலளிக்கப்படவில்லை என்று கூறியது. பட மூலாதாரம், ANI 1. பீகார் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன்? ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை சசாரத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியபோது, பிகார் தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குரிமையைப் பறிக்கிறது என்று குற்றம் சாட்டினார். "பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதன் மூலம், புதிய வாக்காளர்களைச் சேர்த்தும், பிற வாக்காளர்களைக் குறைத்தும், பிகார் தேர்தல் முடிவைத் திருட வேண்டும் என்பது அவர்கள் (பாஜக-ஆர்எஸ்எஸ்) செய்யும் சதியின் இறுதி குறிக்கோள். ஆனால், அவர்கள் இந்தத் தேர்தலைத் திருட நாங்கள் விடமாட்டோம்" என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்தார். பிகாரில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை, திருடப்பட்டதாகவோ அல்லது அவசரமான முறையில் செய்யப்பட்டதாகவோ கூறி எதிர்க்கட்சியினர் குழப்பத்தை உண்டாக்குவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்காளர் பட்டியலை எப்போது திருத்த வேண்டும்? தேர்தலுக்கு முன்பா அல்லது பின்பா? தேர்தலுக்கு முன் என்பதே வெளிப்படையான பதில். இதைச் சொல்வது தேர்தல் ஆணையம் இல்லை, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. இது, தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ பொறுப்பு" என்று தெரிவித்தார். வெள்ளத்தால் பிகார் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் செயல்முறை ஏன் செய்யப்படுகிறது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. இது தவிர, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் பத்திரிகையாளர்கள் இதே கேள்வியை எழுப்பினார்கள். இந்தக் கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், "பிகாரில் 2003ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடத்தப்பட்டது. அப்போது அது வெற்றிகரமாக நடத்தப்பட்டது, இந்த முறையும் அது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது" என்று கூறியது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 2. வாக்காளர் எண் (EPIC) பிரச்னை ஏன்? வாக்காளர் எண் தொடர்பாக இரண்டு வகையான 'பிரச்னைகளை' தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது- ஒருவாக்காளர் எண் - பல நபர்கள் ஒரே நபர் - பல வாக்காளர் எண்கள் நாட்டில் சுமார் மூன்று லட்சம் பேரின் வாக்காளர் எண்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதன் பிறகு, வாக்காளர் எண் ஒரே மாதிரியாக இல்லாதபடி அவர்களின் எண்கள் மாற்றப்பட்டன. "ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களின் வாக்காளர் பட்டியலில் இருக்கும்போதும், அவரது வாக்காளர் எண் வேறுபட்டிருக்கும் போதும் இரண்டாவது வகை நகல் ஏற்படுகிறது. அதாவது, ஒரு நபர், பல வாக்காளர் எண்" என்று ஞானேஷ் குமார் கூறினார். ஒரு நபர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டாலும், பழைய வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்காததால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. தனது செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான சில உதாரணங்களை அளித்த ராகுல் காந்தி, இதுபோன்ற வாக்காளர்களின் பெயர்களை பிற இடங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், "ஒரே பெயரில் பலர் இருப்பதால், ஒருவரின் வேண்டுகோளின் பேரில் தேர்தல் ஆணையத்தால் யாருடைய பெயரையும் நீக்க முடியாது. அதை அவசரமாகச் செய்ய முடியாது. ஒரு நபர் விரும்பினால், அவரே பெயரை நீக்கலாம் அல்லது சிறப்பு தீவிர திருத்த செயல்முறை (SIR) மூலம் அதை சரிசெய்யலாம்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார் 3.'போலி வாக்காளர்கள் மற்றும் வீட்டு எண் பூஜ்ஜியம்' குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன? 2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாகவும், இது பாரதிய ஜனதா கட்சிக்கு பயனளித்ததாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக, பெங்களூருவில் உள்ள மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், பல வாக்காளர் அடையாள அட்டைகளில் முகவரி போலியாக இருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். போலி வாக்காளர்கள் (உதாரணமாக பல மாநிலங்களில் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்ட ஒரே நபர்) மற்றும் தவறான முகவரிகள் (உதாரணமாக ஒரு சிறிய அறையில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள்) ஆகியவற்றிகான உதாரணங்களைக் கொடுத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றது' மற்றும் 'பொறுப்பற்றது' என்று கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. 'வாக்கு திருட்டு' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது கோடிக்கணக்கான வாக்காளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்களின் நேர்மையின் மீதான தாக்குதல் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. மகாராஷ்டிராவில் வரைவுப் பட்டியல் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட போது, ஏன் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய தேர்தல் ஆணையம், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தவறுகள் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறுகிறது. வீட்டு எண்ணை பூஜ்ஜியம் என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டைப் பற்றி கூறிய தேர்தல் ஆணையம், "வீடு இல்லாதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால், அவர்கள் இரவில் தூங்க வரும் இடமே (சில நேரங்களில் சாலையோரங்களில் அல்லது சில நேரங்களில் பாலத்தின் கீழ்) அவர்களின் முகவரியாக பதிவு செய்யப்படும். அவர்களை போலி வாக்காளர்கள் என்று குறிப்பிட்டால், அது அந்த ஏழை சகோதர சகோதரிகள் மற்றும் வயதான வாக்காளர்களை கேலி செய்வதாக இருக்கும்" என்று பதிலளித்தது. "கோடிக்கணக்கான மக்களின் வீடுகளின் எண்கள் பூஜ்ஜியமாக உள்ளன, ஏனெனில் பஞ்சாயத்து, நகராட்சி அவர்களுக்கு வீட்டு எண்ணை ஒதுக்கவில்லை. நகரங்களில் அங்கீகரிக்கப்படாத காலனிகள் உள்ளன, அங்கு அவர்களுக்கு வீட்டு எண் கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் படிவத்தில் எந்த முகவரியை நிரப்புவார்கள்? தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, அத்தகைய வாக்காளர் யாராவது இருந்தால், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு கற்பனை எண்ணை வழங்கவேண்டும். வீட்டு எண் இல்லாமல் கணினியில் ஒருவரின் முகவரியை நிரப்பும்போது, அது பூஜ்ஜியமாகத் தோன்றும்." ஒருவர் வாக்காளராக வேண்டுமானால், 18 வயது பூர்த்தியடைய வேண்டும், முகவரி மற்றும் குடியுரிமை தேவை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். 4. தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியிடம் மட்டுமே பிரமாணப் பத்திரம் கேட்பது ஏன்? தேர்தல் ஆணையம் தன்னிடம் மட்டும் பிரமாணப் பத்திரத்தை கேட்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பிகார் பேரணியிலும் ராகுல் காந்தி இந்தப் பிரச்னையை எழுப்பினார். "தேர்தல் ஆணையம் என்னிடம் மட்டுமே பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, வேறு யாரிடமும் கேட்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு, பாஜகவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியபோது, அவர்களிடமிருந்து பிரமாணப் பத்திரம் எதையும் கேட்கவில்லை. ஆனால் இப்போது என்னிடம் மட்டும், நான் வைத்திருக்கும் தரவு சரியானது என்று பிரமாணப் பத்திரம் கொடுக்கச் சொல்கிறார்கள். நான் கொடுக்கும் தரவு தேர்தல் ஆணையத்துடையது என்னும்போது, அவர்கள் ஏன் என்னிடமிருந்து பிரமாணப் பத்திரம் கேட்கிறார்கள்?" என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி குற்றம் சாட்டும் பகுதியின் வாக்காளராக இல்லாததால், அவர் பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. "முறைகேடுகள் பற்றிப் பேசும் ஒருவர், அந்த சட்டமன்றத் தொகுதியின் வாக்காளராக இல்லை என்றால், சட்டப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சாட்சியாக உங்கள் புகாரை தாக்கல் செய்யலாம், வாக்காளர் பதிவு அதிகாரியிடம் ஒரு உறுதிமொழியையும் அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழி, நீங்கள் புகார் அளித்த நபரின் முன் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டம் பல ஆண்டுகள் பழமையானது, அனைவருக்கும் பொருந்தக்கூடியது" என்று ஞானேஷ் குமார் கூறினார். "பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியே கிடையாது. ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம்" என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறுகிறார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார் 'வாக்குத் திருட்டு' என்ற குற்றச்சாட்டு முடிவுக்கு வருமா? எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கூறியுள்ளார். "மகாதேவ்புராவில் நாங்கள் அம்பலப்படுத்திய ஒரு லட்சம் வாக்காளர்கள் குறித்து ஞானேஷ் குப்தா (தலைமை தேர்தல் ஆணையர்) பதில் ஏதேனும் அளித்தாரா? இல்லை" என்று பவன் கெரா கூறினார். "ஞானேஷ் குமார் எங்கள் கேள்விகளுக்கு இன்று (17-08-2025) பதிலளிப்பார் என்று நம்பினோம்... அவர் பேசியது (பத்திரிகையாளர் சந்திப்பில்) பாஜக தலைவர் ஒருவர் பேசுவது போல் இருந்தது" என்று அவர் கூறினார். தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா டாகுர்தாவும் கலந்து கொண்டார். அவரின் கருத்துப்படி, தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. பிபிசியிடம் பேசிய பரஞ்சோய் குஹா டாகுர்தா, "பத்திரிகையாளர் சந்திப்பில் சில கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்கப்படவில்லை. உதாரணமாக, மகாராஷ்டிராவில் 40 லட்சம் புதியவர்களை சேர்த்தது உண்மையா என்ற என்னுடைய கேள்விக்கு, அப்போது யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று ஆணையம் கூறியது. மாநிலத்தின் மக்கள் தொகையைக் காட்டிலும் வாக்காளர் பட்டியலில் அதிகமான பெயர்கள் ஏன் இருந்தது எப்படி என்று நான் கேட்ட மற்றொரு கேள்விக்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை" என்றார். "இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை, எனவே எதிர்க்கட்சிகள் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டில் இருந்து இப்போதைக்கு பின்வாங்கப் போவதில்லை." குறைந்தபட்சம் பிகார் தேர்தல் வரை எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா குப்தா நம்புகிறார். "பிகார் வரைவுப் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை, எதிர்க்கட்சிகள் இதை தொடர்ந்து ஒரு பிரச்னையாக மாற்றுகின்றன. இன்று (ஆகஸ்ட் 17) பிகாரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பேரணி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மகாராஷ்டிரா குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் இன்னும் அப்படியே உள்ளன. எனவே, தேர்தல் ஆணையம் என்ன சொன்னாலும், எதிர்க்கட்சிகள் பிகார் தேர்தலில் அதை நிச்சயமாக ஒரு பிரச்னையாக மாற்றும்" என்று ஸ்மிதா குப்தா கூறுகிறார். மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ஜோஷி, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ஒரு அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான கேள்வியாகக் கருதுகிறார், எனவே இந்தப் பிரச்னை அவ்வளவு எளிதில் முடிவுக்கு வராது என்று கூறுகிறார். பிபிசியிடம் பேசிய பிரமோத் ஜோஷி, "ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம் இரண்டிற்கும் எதிரானவை. தேர்தல் ஆணையம் மட்டுமே பதில்களை வழங்கியுள்ளது. ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் கூறுகிறது, ஆனால் ராகுல் காந்தி அவ்வாறு செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த விஷயமும் அரசியல் அடிப்படையிலேயே போராடப்படும், மேலும் இந்தியா கூட்டணி அவ்வளவு எளிதில் உடன்படாது" என்றார். பட மூலாதாரம், GETTY IMAGES இந்திய தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது ஏன்? மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மக்களவைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களிலும் 'வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மோசடி' நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதன்பின் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. 'வாக்குத் திருட்டுக்கு' எதிராக இந்தியா கூட்டணி பிகாரில் பேரணி நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. "தேர்தல் ஆணையம் இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முன்வந்ததில்லை. இன்று, பிகாரில் இந்தியா கூட்டணி ஒரு பேரணியை நடத்திய சமயத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இன்னும் முக்கியமானது என்னவென்றால், இந்த மாதம் 14ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தை கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் இந்தப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இயந்திரம் படிக்கக்கூடிய தேடலை மக்கள் செய்யக்கூடிய வகையில் அதைக் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது" என்று பரஞ்சோய் குஹா டாகுர்தா கூறுகிறார். இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் பதிலை அரசியல் சூழலில் பார்க்க வேண்டும் என்று பிரமோத் ஜோஷி நம்புகிறார். "நாம் நேரத்தைப் பற்றிப் பேசினால், தேர்தல் ஆணையத்தின் பதிலும் நிச்சயமாக அரசியல் சார்ந்ததுதான். ராகுல் காந்தி அல்லது அவரது கட்சி பிகாரில் இதை அரசியலாக்குவது போல, அதே தேதியில், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் சார்பாக தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது" என்று பிரமோத் ஜோஷி விளக்குகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4jz5g1n0o
-
புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய
பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு குவியும் முறைப்பாடுகள்! 18 AUG, 2025 | 02:10 PM நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த ஐந்து நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 071- 8598888 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என ஆகஸ்ட் 13 ஆம் திகதி பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/222790
-
சிறுநீரில் நுரை வருகிறதா? சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் 5 அறிகுறிகள்
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் தீபக் மண்டல் பிபிசி செய்தியாளர் 18 ஆகஸ்ட் 2025, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரகங்கள் நம் உடலில் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. அவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன. திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கின்றன. அவை ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, ரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. ஆனால் மக்கள் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள். இந்த அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சையையும் சீக்கிரமாகவே தொடங்கலாம். நாம் பெரும்பாலும் கவனம் செலுத்தாத அந்த ஐந்து அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவை சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். 1. சிறுநீர் அடிக்கடி கழித்தல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீர் அடிக்கடி கழிப்பது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது பாலியூரியா என்று அழைக்கப்படுகிறது. சிறுநீரகம் சேதமடைந்தால், தேவையானதை விட குறைவான சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும், சிறுநீரில் நுரை வருவது இதன் அறிகுறியாகக் கூறப்படுகிறது. "ஆனால் இது கட்டாயமில்லை, பிற நோய்களாலும் சிறுநீரில் நுரை வரலாம்" என்கிறார் சர் கங்காரம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், மருத்துவர் மொஹ்சின் வாலி. 2. உடலில் வீக்கம் கண்கள் மற்றும் கால்களில் வீக்கம் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். கணுக்காலில் வீக்கம் இருந்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. இது சிறுநீரக நோயைக் குறிக்கிறது. மணிப்பால் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் கரிமா அகர்வால், "கால்கள் வீங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்கள், முகம் மற்றும் பாதங்களில் வீக்கம் சிறுநீரக நோயைக் குறிக்கிறது" என்று கூறுகிறார். 3. ரத்த அழுத்தம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, "ரத்த அழுத்தம் என்பது இருமுனைக் கத்தி போல. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது." சிறுநீரக செயலிழப்பு காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் குறித்து ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "பல நேரங்களில் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல், பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இதுவும் சிறுநீரக நோயின் அறிகுறியாகும்" என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார். 4. நீரிழிவு நோய் நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சிறுநீரக நோயாளிகளில் 80 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார். நீரிழிவு நோயாளிகளில் 30 முதல் 40 சதவீதம் பேருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய் உருவாகத் தொடங்கினால், அவர்களின் ரத்த சர்க்கரை அளவும் குறைகிறது. உடலில் பல வருடங்களாக சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் காரணமாக சிறுநீரக நோய் உருவாகத் தொடங்குகிறது. 5. சோர்வு, அரிப்பு மற்றும் குமட்டல் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரக நோயால் உடலில் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. சோர்வு, உடலில் அரிப்பு மற்றும் குமட்டல் ஆகியவை சிறுநீரக நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் பாஸ்பரஸ் இல்லாததால் அரிப்பு ஏற்படுகிறது. சிறுநீரக நோய் உடலில் பாஸ்பரஸ் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு குமட்டல் ஏற்படத் தொடங்குகிறது. அவர்களுக்கு சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது. சிறுநீரக நோயைத் தடுப்பதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வழக்கமான உடற்பயிற்சி, போதுமான அளவு தண்ணீர் குடித்தல், உப்பு மற்றும் சர்க்கரையை குறைவாகப் பயன்படுத்துதல் ஆகியவை சிறுநீரக நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சிறுநீரக நோய் வராமல் தடுக்க 7 வழிமுறைகளை மருத்துவர் மொஹ்சின் வாலி மற்றும் மருத்துவர் கரிமா அகர்வால் இருவரும் பிபிசியிடம் தெரிவித்தனர். 1. போதுமான தண்ணீர் குடிக்கவும் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கவும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது, சிறுநீரகங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்ற போதுமான சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. மேலும், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகிறது. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால், உங்கள் சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்கும். பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார். 2. உப்பு குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள் அதிகப்படியான உப்பு சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல, ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது. ஊறுகாய், அப்பளம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். நூடுல்ஸ் போன்ற உணவுகளில் அதிக உப்பு உள்ளது. அவற்றைத் தவிர்க்கவும். 3. பாறை உப்பைத் தவிர்க்கவும் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பாறை உப்பு சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இப்போதெல்லாம் பாறை உப்பை (Rock Salt) உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் பாறை உப்பை உட்கொள்ளக்கூடாது. "சாதாரண உப்பை விட பாறை உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது. அதில் பொட்டாசியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் மொஹ்சின் வாலி. 4. சர்க்கரையை குறைக்கவும் சிறுநீரக நோய்களைத் தவிர்க்க விரும்பினால், இனிப்புகளைக் குறைவாகச் சாப்பிடுங்கள். சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. கேக், பிஸ்கட், பேஸ்ட்ரி மற்றும் கோலா போன்றவற்றில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உள்ளது. சர்க்கரை உடல் பருமனை அதிகரித்து சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. 5. எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள் பட மூலாதாரம், DISNEY VIA GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரக நோயைத் தவிர்க்க விரும்பினால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துங்கள். பருமனான நபர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதால், அவர்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (BMI) குறைவாக இருக்க வேண்டும். அது 24க்கும் குறைவாக இருந்தால், அது மிகவும் நல்லது. லேசான உடற்பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் முக்கியம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை நன்றாக வைத்திருக்கும். இது நன்றாக இருந்தால், 50 வயதை எட்டும்போது, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறையும். 6. சமச்சீரான உணவை உண்ணுங்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். புரோபயாடிக் உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள். வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளுதல்ல், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். 7. உங்கள் மருத்துவரிடம் கேட்காமல் மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள். "மக்கள் பலரும் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள். பலர் வலி நிவாரணிகளை தாங்களாகவே எடுத்துக்கொள்கிறார்கள்" என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார். "முதியோர்கள் பெரும்பாலும் உடல் வலி மற்றும் மூட்டுவலிக்கு (ஆர்த்ரிட்டீஸ்) வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறார்கள். சில மருந்துகளில் கன உலோகக் கூறுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் இருக்கலாம். இது சிறுநீரகங்களை சேதப்படுத்தும்." என்று கூறுகிறார் கரிமா அகர்வால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c776kr5v6v2o
-
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்
Published By: VISHNU 18 AUG, 2025 | 02:02 AM (இராஜதுரை ஹஷான்) முத்தையன்கட்டு இளைஞன் மரணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் திங்கட்கிழமை (17) காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த ஹர்த்தாலுக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் வணிக பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுமையாக முடங்க வேண்டும். அதனுடாக அரசாங்கத்துக்கு வலுவான செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8 ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களை இராணுவத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி முத்தையன்கட்டு முகாமிற்குள் அழைத்துச் சென்றதாகவும், இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதனால் ஒரு இளைஞர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு 'முத்தையன்கட்டு முகாமிற்குள் ஒருதரப்பினர் அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களை விரட்டியடிக்கும் போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிட்டு,.இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்வதாக'குறிப்பிட்டிருந்தது. முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிகொண்டுள்ள இராணுவ பிரசன்னத்துக்கும், இளைஞனின் மரணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது. இந்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக அறித்து கடந்த 15 ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபட அறிவித்திருந்தது. இருப்பினும் பல்வேறு நியாயமான காரணிகளால் ஹர்த்தால் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த பூரண ஹர்த்தாலுக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் தரப்பினர், வணிக அமைப்பினர் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காலை முதல் மதியம் வரை பூரண ஹர்த்தாலில் அமுல்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி சகல தரப்பினரிடமும் வலியுறுத்துகிறது. https://www.virakesari.lk/article/222768
-
குழந்தை திருமணத்தை ஏற்க மறுத்து ஓடும் காரில் இருந்து குதித்த 13 வயது சிறுமியின் கதை
படக்குறிப்பு, குழந்தைத் திருமணம் என்ற சமூக இடரில் சிக்கினாலும் படிப்பு என்ற கனவை நனவாக்கிய சோனாலி படே கட்டுரை தகவல் பிராச்சி குல்கர்னி பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "சோட்டி ஸி உமர்...." என்று துவங்கும் மெகா சீரியலின் பாடல் ஒலிக்காத வீடுகளே வட இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர்களில் மிகவும் பேசப்பட்ட இந்தி மொழித் தொடர், 'பாலிகா வது'. குழந்தைப் பருவ திருமணத்தை மையக்கருவாக கொண்ட தொடர் அது. நிதர்சனத்தில் இந்த கதையின் நாயகியுடன் சோனாலி படேவை ஒப்பிடலாம். இந்தப் பெண்ணும் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர். "நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு திருமணம் நடைபெற்றபோது எனக்கு 13 வயது, மாப்பிள்ளைக்கு 30 வயது." உலகம் தெரியாத வயதிலேயே குடும்பத்தினரின் கட்டாயத்தால் சோனாலிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது 26 வயதாகும் சோனாலி, 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைக்கும் போது உணர்ச்சிவசப்படுகிறார். சோனாலி படே, மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் தாலுகாவில் உள்ள ஷிரூர் காசர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள். மூன்று சகோதரிகளும் நான்காவதாக பிறந்த ஒரு சகோதரன் என பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சோனாலி படே. கறும்பு அறுவடை காலத்தில், சோனாலியின் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்குச் செல்வார்கள். வேலைக்குச் செல்லும்போது, குழந்தைகளை யார் கவனித்துக்கொள்வது, வயதுக்கு வந்த மகளை யார் பொறுப்பாக பார்த்துக்கொள்வது என்று யோசித்த பெற்றோர், சோனாலியை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துவிட்டனர். சட்டப்படி குழந்தைத் திருமணம் தவறு என்றாலும், அந்த சமயத்தில் பீட் பகுதியில் நடந்த பல குழந்தை திருமணங்களில் சோனாலியுடையதும் ஒன்று. மாப்பிள்ளை வீட்டினருக்கு பெண்ணை காட்டும்போது, பள்ளியிலிருந்தே வீட்டிற்கு கூட்டிச் செல்லப்பட்டதாக சோனாலி கூறுகிறார். ஆனால் ஒவ்வொரு முறை பெண் பார்க்கும் படலம் நடைபெறும்போதும், திருமணமான பிறகும் தன்னுடைய கல்வியை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சோனாலி தன் பெற்றோரிடம் சொல்வார். "நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த ஒரே ஒரு விஷயம், 12ஆம் வகுப்பு வரை என்னை படிக்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், திருமணமாகிவிட்டாலும் என் மாமியார் வீட்டில் படிக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் 'உனக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?' என்ற கேள்வியைத் தான் நான் எதிர்கொண்டேன்" என்கிறார் சோனாலி. தங்களது பகுதியில் பெண்கள் 10ஆம் வகுப்பு முடிப்பதற்கு முன்பே திருமணம் செய்து கொள்வது வழக்கம், எனவே சோனாலி மட்டும் ஏன் திருமணத்திற்குத் தயாராக இல்லை? என்று அவளுடைய பெற்றோர் யோசிக்கத் தொடங்கியதாக சோனாலி கூறுகிறார். சோனாலியின் அக்காவுக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. சிறு வயதில் திருமணம் செய்வது சரியா அல்லது தவறா என்றெல்லாம் தெரியாது, ஆனால், படிக்க வேண்டும் என்பதே சோனாலியின் கனவு. இருப்பினும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, அவளுடைய திருமணம் முடிவு செய்யப்பட்டு விரைவாக நடந்து முடிந்தது, யோசிக்கக்கூட நேரம் இல்லை. "மணமகன் நாசிக்கைச் சேர்ந்தவர். திருமணம் நடைபெற்றபோது எனக்கு 13 வயது, மாப்பிள்ளைக்கு 30 வயது. முதல் நாள் பெண் பார்த்தார்கள். அதன்பிறகு, ஒரு நாள் விட்டு, மூன்றாம் நாளில் திருமணம் நடந்தது" என்று சோனாலி கூறுகிறார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக அப்பா தன்னை மிரட்டியதாக கூறுகிறார். "ஹல்தி நிகழ்ச்சியின் போது, புது மணப்பெண் போல நடந்து கொள்ளவில்லை என்பதற்காக நான் பலமுறை அடிவாங்கினேன். தற்கொலை செய்து கொள்வதாக அப்பா மிரட்டினார்." அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர், தன் மகள் சொல்வதை கேட்பதில்லை என்று கோபித்துக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனைவரும் அதையே சொல்லி, "உன் பெற்றோர் இறந்துவிட்டால் என்ன செய்வாய்? குடும்பம் என்னவாகும்?" என்று கேட்க ஆரம்பித்தனர். திருமணம் செய்து கொள்ள மறுத்த சோனாலிக்கு பெற்றோரின் அடிஉதை முதல் பலவகையிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. உண்மையில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் நடப்பது எதுவும் சரியல்ல என்பது மட்டுமே சோனாலிக்கு புரிந்தது. பெண் பார்த்து திருமணம் நடைபெறும் வரையிலான இரண்டு நாட்களும் குடும்பத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இருந்த போதிலும், காவல் நிலையத்திற்குச் சென்று உதவி கேட்டார். ஆனால், குழந்தை திருமணம் சர்வசாதாரணமாக நடக்கும் பகுதி என்பதால், காவல் நிலையத்திலும் கூட தனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று சோனாலி கூறுகிறார். தனக்கு நடத்தப்பட்ட குழந்தைத் திருமணத்தில் கிராமத் தலைவரும் காவல்துறையினரும் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். பள்ளி வளாகத்தில் உள்ள கோவிலில் சோனாலியின் திருமண சடங்குகள் தொடங்கின. பள்ளியைப் பார்த்ததும், சோனாலியால் அழாமல் இருக்க முடியவில்லை. மணப்பெண் ஏன் இவ்வளவு அழுகிறாள் என்று கேட்கப்பட்ட போது, தனியாக விடப்பட்டுப் பழக்கமில்லாததால் தான், சோனாலி அழுவதாக அவருடைய பெற்றோர் மணமகன் வீட்டாரிடம் சொல்லியிருக்கின்றனர். திருமணம் நடந்து முடிந்ததும், கணவன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக சோனாலியை காரில் உட்கார வைத்தனர். ஆனால் மாமியார் வீட்டிற்கு செல்வதில்லை என்று உறுதியாக இருந்த சோனாலி, காரின் கதவு பக்கத்தில் அமர்ந்தாள். கிராமத்தை விட்டு வெளியேறிய கார், நெடுஞ்சாலையை அடைந்தது. வாந்தி வருவதாகக் கூறி கார் ஜன்னலைத் திறக்கச் சொன்னார் சோனாலி. சிறிது நேரம் கழித்து, கதவைத் திறந்து நகரும் காரிலிருந்து கீழே குதித்துவிட்டார். "கீழே விழுந்ததும் எனக்கு சுயநினைவில்லை. எலும்பு முறிவுகளோ அல்லது பெரிய காயங்களோ எதுவும் இல்லை. நான் காரில் இருந்து குதித்து உயிர் பிழைத்தால், ஏதாவது செய்ய முடியும் என்று நினைத்தேன்" என்று சோனாலி கூறுகிறார். படிக்க வேண்டும் என்ற நினைப்பில் சோனாலி வீடு திரும்பினாள். ஆனால், ஊராரின் கேலிப் பேச்சை தவிர்ப்பதற்காக, பல்வேறு உறவினர்களின் வீட்டிற்கு சோனாலி அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி சுமார் ஓராண்டு காலம் உறவினர்களின் வீட்டிற்கு அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டதால் சோனாலியின் படிப்பு வீணானது. ஒன்பதாம் வகுப்பில் அவர் பள்ளிக்கூடத்திற்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை என்றாலும், படிக்க வேண்டும் என்ற அவருடைய உறுதியில் மாற்றம் ஏற்படவில்லை. தனது தோழிகளின் உதவியுடன் தேர்வெழுதினார். அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வுக்கான படிவத்தையும் நிரப்பினார். ஆனால் அவளுடைய கணவர் அவளை தன்னுடன் அழைத்துச் செல்லும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டார். அவர் தனது வீட்டிற்கு வரும்போது, சில சமயங்களில் தன்னிடம் தன்மையாக பேசியும், சில சமயங்களில் வலுக்கட்டாயமாகவும் தன்னை சமாதானப்படுத்த முயற்சித்தார் என்று சோனாலி சொல்கிறார். "என் பெற்றோர்,'நீ இறக்கவும் துணிந்துவிட்டாய்', எனவே 'இப்போது முடிவு உன்னுடையது, என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே முடிவு செய்' என்று சொல்லிவிட்டார்கள்." என்னை அழைத்துச் செல்ல என் கணவர் வரும்போது, நான் வீட்டிலிருந்து வெளியேறி விடுவேன். அவர் திரும்பி வரும் வரை வீட்டிற்கு வரமாட்டேன். சில நேரங்களில் திரும்பி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, என் கையில் ஏதாவது ஆயுதம் இருக்கும். ஒரு முறை என்னிடம் கத்தி இருந்தது. ஒரு முறை நான் பிளேடுடன் திரும்பி வந்தேன். இப்படிப்பட்ட அழுத்தமான சூழ்நிலையில், சோனாலி தனது படிப்பைத் தொடர்ந்தார். புத்தகங்களுக்கு பணம் இல்லாததால், அவ்வப்போது வயல்வேலைக்குச் சென்று நாளொன்றுக்கு 70 ரூபாய் சம்பாதித்தார். இந்த காலகட்டத்தில், கிராமத்தில் பணிபுரியும் ஆஷா பணியாளர் ஒருவரை சந்தித்தார். அவருடன் பேசிய பிறகு படிப்பதற்காக சோனாலி வெளியூருக்குச் செல்ல முடிவு செய்தார். இதற்கிடையில், சதாராவில் உள்ள வழக்கறிஞர் வர்ஷா தேஷ்பாண்டேவைப் பற்றி சோனாலிக்குத் தெரியவந்தது. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்ட அவரைத் தொடர்பு கொள்ள சோனாலி சதாரா செல்ல முடிவு செய்தார். சதாரா செல்வதற்கு கையில் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தபோது தன்னுடைய தாலியைப் பற்றிய நினைவு சோனாலிக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. பாதுகாப்பாய் தன் தாயிடம் இருந்த தங்கத் தாலியை திருடி விற்றுவிட்டார். அதன் மதிப்பு தெரியாத சோனாலி, தாலியை கொடுத்துவிட்டு, தனக்கு தேவையான 5 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சதாராவிற்கு சென்றார். சதாராவுக்கு வந்த சோனாலி, வர்ஷா தேஷ்பாண்டேவை தொடர்பு கொண்டார். அவருடைய அறிமுகம் வாழ்க்கையை திசை திருப்பியது. அவரிடம் இருந்து பல்வேறு பயிற்சி வகுப்புகளைப் பற்றி அறிந்து கொண்ட சோனாலி நர்சிங் படிப்பை தேர்ந்தெடுத்தார். சதாராவில் ஆரம்ப நிலை நர்சிங் படிப்பில் சேர்ந்து பயின்ற பிறகு, வேலைக்காக புனேவுக்கு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் செவிலியராகப் பணிபுரிந்த போது, கிடைத்த அனுபவங்களினால் மேல் படிப்புகளைப் பற்றி தெரிந்துக் கொண்டார். ஆனால் படிப்பதற்கு தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. செவிலியராக வேலை பார்த்து பணத்தைச் சேமித்த சோனாலி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, JNM-ல் தனது நர்சிங் பட்டப் படிப்பை முடித்தார். தற்போது புனேவில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறார். 26 வயதான சோனாலி, இப்போது தனது சொந்தக் காலில் நிற்கிறார். தனது முயற்சிகளின் மூலம் தன்னுடைய தங்கைகளை குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு வரை படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கனவு மெய்ப்படும் என்பதை நிரூபித்து தனது படிப்பு என்ற கனவை நனவாக்கிய சோனாலி, புதிய வாழ்க்கைத் துணையைப் பெறமுடியும் என்று இப்போது கனவு காண்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2pgl6n19yo