Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கட்டுரை தகவல் ஹஃபிசுல்லா மரூஃப் பிபிசி ஆப்கன் சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன. சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், கிட்டத்தட்ட 400 கி.மீ தூரத்தில் உள்ள பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், US Geological Survey நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது. பட மூலாதாரம், Getty Images உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன. இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது. உதவி கோரும் தாலிபன் அரசு தொலைதூர மலைப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தாலிபன் அரசு அதிகாரிகள் உதவி வழங்கும் அமைப்புகளை வலியுறுத்தியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இப்பகுதிக்கான சாலைகள் அணுக முடியாத அளவுக்கு இருப்பதாக என்று குனார் மாகாண காவல்துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விமானம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். தாலிபன் அதிகாரிகள் தங்களிடம் குறைவான வளங்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களை வழங்க சர்வதேச அமைப்புகளின் உதவியைக் கோருவதாகவும் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev2r7pkzv9o
  2. பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 29 ஆகஸ்ட் 2025 இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார். தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசிங்க இன்று பதவியை இழந்து கட்சி அரசியலில் மாத்திரம் ஈடுபட்டு வந்த தருணத்தில் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு புதிய வகையான பிரச்னையொன்றை எதிர்நோக்கியுள்ளார். வெளிநாட்டு பயணமொன்றின் ஊடாக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் (26) நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. 50 லட்சம் ரூபாய் வீதமான 3 சரீர பிணைகளின் கீழ் ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். எனினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தருணத்தில் சுகயீனமுற்ற ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு பல்வேறு நோய்கள் காணப்படுகின்ற பின்னணியில், அவர் தொடர்ந்தும் சிகிச்சை மருத்துவமனையில் தங்கியிருந்து பெற வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவ குழாம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் வாழ்க்கையில் எதிர்நோக்கிய சவால் மிகுந்த சர்ச்சைக்குரிய தருணங்கள் குறித்து இந்த கட்டுரை ஆராய்கின்றது. ஐ.தே.க கட்சித் தலைவர் பதவியின் சர்ச்சை பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட மிக முக்கியமான பழைமை வாய்ந்த கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுகின்றது. சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில், 1994-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை சந்தித்திருந்த பின்னணியில், கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் 2010-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்தது. கட்சி தலைவர் பதவி சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்திய பின்னணியில், 2015-ஆம் ஆண்டுக்கு பின்னராக காலத்தில் அது வலுப்பெற ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருந்தனர். இந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸ பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்திருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை இழப்பே, ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்க பிரதானமான காரணமாக அமைந்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து வெளியேறி, சஜித் பிரேமதாஸவுடன் கைக்கோர்த்திருந்தனர். இந்தப் பின்னணியில், 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார். 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் பெற்றுக்கொண்ட முழுமையான வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது. இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஒரு ஆசனத்தின் ஊடாக புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தனியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார். பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார். இதையடுத்து, கொரோனா தாக்கத்தின் ஊடாக நாடு பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியது. தனிநபராக நாடாளுமன்றத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்திய அவர், பொருளாதார சிக்கல் காரணமாக எழுந்த போராட்டத்தினால் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்தார். எனினும், பிரதான எதிர்க்கட்சிகளான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியன ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த பின்னணியில், தனிநபராக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டார். அதன் பின்னர் வலுப்பெற்ற போராட்டம் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பதில் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்ரமசிங்க, அதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளின் ஊடாக புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது ஒரு ஆசனத்தின் ஊடாக தனது அரசியலை செய்து, இறுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரேயொருவர் ரணில் விக்ரமசிங்கவாக கருதப்படுகின்றார். அதன்பின்னர், பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்ட நாடு, ஒரு சில மாதங்களிலேயே வழமை நிலைக்கு திரும்பியது. எனினும், 2024ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தோல்வியை சந்தித்திருந்தார். பல முறை ஆட்சி பீடம் ஏறி, இறுதியில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொறுப்பை அந்த கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க ஏற்க வேண்டும் என பல தரப்பினர் கூறியிருந்தனர். எனினும், சவால்களை கடந்து, இறுதியில் தனிநபராக ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார். சந்திரிக்கா கலைத்த அமைச்சரவை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் கூட்டணி தோல்வி அடைந்து, ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதன் ஊடாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். நிறைவேற்று அதிகாரம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கட்சி வசமும், ஆட்சி அதிகாரம் பிரதமரான ரணில் விக்ரமசிங்க வசமும் காணப்பட்டது. இதனால், ஆட்சியை உரிய முறையில் செய்வதில் பாரிய இழுப்பறி நிலைமை அந்த காலப் பகுதியில் காணப்பட்டது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த அந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தி, நாட்டில் போர் நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறான பின்னணியில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகாரத்திற்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடமேறி இரண்டு வருடங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையை கலைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 105 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. இந்த நாடாளுமன்ற கலைப்பானது ஜனநாயக விரோத செயற்பாடு என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு சதித்திட்டமாக அந்த காலப் பகுதியில் கருதப்பட்டது. 'ரணிலை வீழ்த்திய விடுதலைப் புலிகள்' படக்குறிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுத்த அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக அ.நிக்சன் குறிப்பிடுகின்றார். இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2005ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியிருந்தார். மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மஹிந்த ராஜபக்ஸ 4,887,152 வாக்குகளை பெற்றிருந்ததுடன், ரணில் விக்ரமசிங்க 4,706,366 வாக்குகளை பெற்றுக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஸவிடம், ரணில் விக்ரமசிங்க வெறும் 180,786 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்திருந்தார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியை தழுவ பிரதானமான காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடே காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதினர். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்னை தொடர்பில் சரியான தீர்வுகளை முன்வைக்க தவறிய பட்சத்திலேயே, விடுதலைப் புலிகள், 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை, ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பை பெரும்பாலும் தவிர்த்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் குறிப்பிடுகின்றார். ''சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளினால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்திருந்தால், குறைந்தது இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்டிருந்திருப்பார். நிச்சயமாக அவர் வென்றிருப்பார். அந்த மக்கள் வாக்களிக்கவில்லை. அதனாலேயே அவர் தோல்வி அடைந்தார். ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்திருந்தாலும் போர் நடந்திருக்கும். கட்டாயம் போர் நடந்திருக்கும். ஆனால், மஹிந்த ராஜபக்ஸ மாதிரி மிக மோசமாக போர் நடந்திருக்காது. ரணில் விக்ரமசிங்க வந்திருந்தால் விடுதலைப் புலிகள் மீதான தடைகளும் சர்வதேச ரீதியாக அதிகரித்திருக்கும்.'' என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் கூறுகின்றார். 2018 அரசியலமைப்பு குழப்பம் பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்த வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார். ராஜபக்ஸ குடும்பத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் 2015ம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பிலிருந்த மைத்திரிபால சிறிசேனவை அங்கிருந்து பிரித்து, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் நல்லாட்சி என்ற பெயரிலான அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தனர். 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியாக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2004ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கத்தை போன்றதொரு சம்பவத்தையே, மைத்திரிபால சிறிசேன மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிகழ்த்தியிருந்தார். இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு பதவி விலக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார். இது இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கியமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற மறுத்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நீடித்த இந்த சர்ச்சையை உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது, சட்டவிரோதமான செயற்பாடு என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்த சர்ச்சையானது, இலங்கை அரசியலமைப்பு குழுப்பநிலையை ஏற்படுத்தியிருந்ததுடன், அது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ரணில் விக்ரமசிங்க எதிர்கொண்ட மேலும் சில சர்ச்சைகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றார். பட்டலந்தை சித்திரவதை முகாம் நடத்தியதாக கூறப்படும் சம்பவம், மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் என சர்ச்சைகளை எதிர்நோக்கிய ரணில் விக்ரமசிங்க, தற்போது வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தற்போதைய ஆட்சியாளர்களினால் வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற நிலையில், நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. எனினும், ரணில் விக்ரமசிங்க சுகயீனமுற்ற நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23zlvel1po
  3. பாதாள உலகக் குழுவினரை ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து பகிரங்கமாகக் கையாள்வது ஆபத்து - பிரேம்நாத் சி தொலவத்த 31 Aug, 2025 | 08:37 PM (எம்.மனோசித்ரா) பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல. மிகவும் சூட்சுமமாகவும் இரகசியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமுமாகும். அரசாங்கத்தின் இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கே.பி.பத்மநாதன் மற்றும் மாகந்துரே மதுஷ் போன்றவர்களும் கடந்த ஆட்சி காலங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான விளையாட்டுக்களை நாம் பார்க்கவில்லை. சந்தேகநபர்களை அழைத்து வரும் போது அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் எதற்காக விமான நிலையத்துக்குச் செல்கின்றனர்? கேலிக் கூத்து காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த போது இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் 159 பேரும் நந்திக்கடலுக்குச் சென்று குளித்து நடனமாடியிருப்பர். கொண்டாடப்பட வேண்டிய விடயங்களை விடுத்து பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கைது செய்யப்பட்மை சிறந்த விடயம். ஆனால் அது இந்தளவுக்கு கொண்டாடப்பட வேண்டியதல்ல. இது மிகவும் சூட்சுமமாக கையாளப்பட வேண்டிய விடயமாகும். விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளின் முகங்களை ஊடகங்களில் பகிரங்கமாகக் காண்பிக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் எஞ்சியிருக்கும் பாதாள உலகக் குழுக்குழுவினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இலகுவாக இருக்கும். பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவற்கான நகர்வுகள் இரகசியமானவையாக இருக்க வேண்டும். ஏனையோர் மீது குறை கூறிக் கொண்டிருக்காமல் தமது பொறுப்பினை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். எமது ஆட்சி காலத்தில் பெருமளவான பாதாள உலக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த அரசாங்கமானாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தவே முயற்சிக்கும். மாறாக அவர்களை நிர்வகிக்க நினைப்பதில்லை. இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/223865
  4. இனியபாரதியின் இருசகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் கைது Published By: Vishnu 31 Aug, 2025 | 06:40 PM இனியபாரதியின் கல்முனையைச் சோந்த சகாவான டிலக்ஷன் கல்முனையில் வைத்து சனிக்கிழமை (30) சிஜடியினர் கைது செய்ததுடன் வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த இருவராங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட பிரதேசசபை தவிசாளரின் மனைவி சிஜடியிடம் முறைப்பாடு செய்திருந்தார் இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை 6ம் திகதி திருக்கோவில் வைத்து இனியபாரதியையும் அவரது சகாவான மட்டு சந்திவெளியைச் சேர்ச்த சசிதரன் தவசீலன் என்பவரை சந்திவெளியில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் திருக்கோவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் உதயகுமாரை கடந்த 2007-6-28 சம்பவதினம் வீட்டில் இருந்து வெளியே வீதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் கைக்குண்டை வீதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவரின் சகாவான கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷ்ன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சிஜடி யினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர் அதேவேளை இனியபாதியின் இன்னெரு சகாவான வவுணதீவு பாவக்கொடிச் சேனையைச் சேர்ந்தவரும்; காiiதீவீல் திருமணம் முடித்து வாழ்ந்துவரும் வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற நிலையில் அங்குவைத்து கமந்த 12ம் திகதி சிஜடி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார். இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையம் விசாரணைக்காக சிஜடி யினர் கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223872
  5. செம்மணியில் இன்று மதியம் வரையில் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் Published By: Digital Desk 3 31 Aug, 2025 | 04:18 PM செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 39 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் மதியத்துடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் , நாளைய தினம் திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது. https://www.virakesari.lk/article/223857
  6. Published By: Digital Desk 3 31 Aug, 2025 | 10:55 AM இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினரை தடுத்து வைத்திருந்த கடற்படை அதிகாரிகள் குழுவொன்றுடன் தொடர்புடைய ஆவணத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படிவதற்கு கடற்படை தவறியுள்ளமை நீதிமன்றத்தின் முன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலையின் பிரபல ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமை கண்காணித்ததன் பின்னர் அங்கு செயற்படும் விசேட புலனாய்வுப் பிரிவு எனும் குழுவை கலைக்குமாறு கோரி அன்றைய கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக பணியாற்றிய நிஷாந்த உலுகேதென்னவால் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியை கடற்படை தமக்கு வழங்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. காணாமலாக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் ஐவருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அறுவருக்கும் எதிரான வழக்கின் விசாரணையின்போது பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னான்டோ அக்கடிதத்தின் பிரதியொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்குமாறு இரண்டாவது தடவையாகவும் கடற்படைக்கு உத்தரவு பிறப்பித்தார். நபரொருவரை காணாமலாக்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக ஒரு மாதத்துக்கு முன் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தமித் நிஷாந்த சிரிசோம உலுகேதென்ன மீண்டும் ஓகஸ்ட் 27ஆம் திகதி நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை தெரிவித்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்கத் தவறியுள்ளமையால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அட்மிரல் உலுகேதென்ன சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி மகேஷ் கிரிஷாந்த நீதவானிடம் கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சந்தேகநபரை விடுதலை செய்வது பொருத்தமற்றது என சட்டத்தரணி மேலும் தெரிவித்தார். கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவீர என்பவரை கடத்திக் கொண்டுபோய் திருகோணமலை 'கன்சைட்' கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னாண்டோ உத்தரவு பிறப்பித்தார். சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்த கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேரில் சிலரது பெற்றோர்களும் வழக்கு விசாரணை தினத்தன்று சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன் பொல்கஹவெல நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தனர். சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை 'கன்சைட்' கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையில் பொலிஸ் சார்ஜண்ட் 38640 பண்டார, பொலிஸ் சார்ஜண்ட் 37611 ராஜபக்‌ஷ மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோர் நீதிமன்றில் தகவல்களை சமர்ப்பித்தனர். இலங்கை கடற்படையால் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய 2009ஆம் ஆண்டில் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அட்மிரல் உலுகேதென்ன மூன்று மாதத்திற்கும் மேற்பட்ட காலம் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றினார். 2010 ஒக்டோபர் முதலாம் திகதி கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் அப்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் சோமதிலக திசாநாயகவிடமிருந்து பெற்ற எழுத்து மூல அனுமதிக்கு அமைவாக திருகோணமலை கன்சைட் முகாமை பார்வையிடுவதற்குச் சென்றதாக சிரிசோம உலுகேதென்ன அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது. அதன்போது அங்கு 40 - 60 நபர்களை தடுத்து வைத்திருந்ததாக உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்ததாக அத்திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்துக்கு அறிவித்தது. 2010 ஜூலை 22 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் காணாமலாக்கப்பட்ட கனேராலலாகே சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கன்சைட் கடற்படை வதைமுகாம் அப்போது கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியான அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஜூலை 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். திருகோணமலை நிலக்கீழ் கன்சைட் முகாம் தமது பொறுப்பில் இருந்தாலும் அங்கு விசேட புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் அறியப்படும் ஓர் அலகு செயற்பட்டதாகவும் அது கடற்படை புலனாய்வுப் பிரிவால் செயற்படுத்தப்பட்ட அலகு அல்ல எனவும் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடற்கரையின் உளவுப் பிரிவுடன் தொடர்பற்றது எனக் கூறப்படும் அந்த புலனாய்வுப் பிரிவுக்கு அப்போது கமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க கட்டளை வழங்கியதாகவும் கடற்படையின் உறுப்பினர்களான ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி மற்றும் கௌசல்யா ஆகிய அறுவர் அவரின் கீழ் இருந்ததாகவும் அந்த விசேட புலனாய்வுப் பிரிவு தம்மால் கலைக்கப்பட்டதாகவும் அட்மிரல் உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 2008-09 காலப்பகுதியில் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்திக் கொண்டு போய் திருகோணமலை கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக விசாரணை செய்யும் இரகசியப் பொலிஸ் அதிகாரிகளிடம் சுமார் ஓராண்டு காலம் கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜயகாந்த் என்ற பொடிமல்லி என்பவர் சாந்த சமரவீர தன்னுடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார். இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் நிசங்சல விதானாரச்சி என்பவரும் அவர்களுடன் இருந்ததாக பொலிஸார் மேலும் கண்டுபிடித்துள்ளனர். கேகாலை சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை 'கன்சைட்' கடற்படை வதை முகாமில் தடுத்துவைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தொடர்பாக நடைபெற்ற கடந்த வழக்குத் தவணையில் பின்னர் அது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த ஒரு கூற்றினால் விசாரணை அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன உள்ளிட்ட சிலர் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அது தொடர்பிலும் தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓகஸ்ட் 27 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/223815
  7. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் முன்னாள் விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியின் மேலே நாசாவின் செயற்கைக்கோளான லான்சாட் 8 பறந்தது. அப்போது அதில் திகைக்க வைக்கும் ஒரு காட்சி பதிவானது. அங்கு 1.8 கி.மீ விட்டம், 6 மீட்டர் ஆழம் கொண்ட, கின்னம் போன்ற ஒரு பள்ளம் இருப்ப அந்த செயற்கைக்கோள் பதிவு செய்தது. கிட்டத்தட்ட துல்லியமான வட்ட வடிவில் இயற்கையான பள்ளம் உருவாகாது. பின்னர் அது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தபோது, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் ஏற்படுத்திய குழியே அந்தப் பள்ளம் என்பது தெரிய வந்தது. இத்தகைய விண்கல் மோதல்கள் பூமியில் எவ்வளவு அதிகமாக நிகழ்கின்றன? அவற்றால் என்ன ஆபத்து? பூமியில் டைனோசர்களின் இருப்பை அழித்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தவல்ல விண்கல் மோதல் மீண்டும் நிகழுமா? ரஷ்யாவை நிலைகுலைய வைத்த விண்கல் வெடிப்பு Play video, "பூமியில் மீண்டுமொரு பேரழிவை உண்டாக்கும் விண்கல் மோதல் நிகழ வாய்ப்புள்ளதா?", கால அளவு 7,57 07:57 காணொளிக் குறிப்பு, கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் திடீரென வானத்தில் பிரகாசமான நெருப்புக் கோளம் தெரிந்தது. அதை மக்கள் அனைவரும் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பூமியின் வளிமண்டலத்திற்குள் பறந்து வந்த அந்த நெருப்புக் கோளம் சுமார் 30கி.மீ உயரத்தில் வெடித்தது. அந்த வெடிப்பினால் காற்று விரிவடைந்து, அதிர்வலைகள் உருவாகிப் பரவின. சுமார் பல கிலோமீட்டர் பரப்பளவில் 8,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின, கட்டடங்கள் அதிர்ந்தன, கூரைகள் பிய்ந்து பறந்தன. உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், 1,500 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இதன் பின்னணியை ஆராய்ந்தபோது, சுமார் 9,000 டன் எடைகொண்ட, 20 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்துள்ளது. சுமார் 100கி.மீ சுற்றளவில் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சி தெளிவாகத் தென்பட்டுள்ளது. அதில் சிலர் சூரியனைவிட அதிக பிரகாசத்தில் அது தெரிந்ததாக தெரிவித்தார்கள். அதன் பாதைக்கு அருகில் இருந்த சிலர், அது கடந்து சென்றபோது வெப்பமாக உணர்ந்ததாகக் கூறினார்கள். அந்தப் பகுதியில் பிறகு தேடிப் பார்த்தபோது, கோழிகுண்டு அளவிலான, வெடிப்பில் சிதறிய அந்த விண்கல்லின் சிறுசிறு துண்டுகள் கிடைத்தன. பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, ரஷ்யாவில் 2013ஆம் ஆண்டு 100 கி.மீ பரப்பளவுக்கு இந்த விண்கல் வெடிப்பு தெளிவாகத் தெரிந்தது வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றிக்கொண்டிருந்த ஒரு விண்கல்தான் பாதை மாறி பூமியை நோக்கி வந்தது என்றும், அதுவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வியாழன் கோளின் ஈர்ப்புவிசையால் சிறிதளவு தள்ளப்பட்ட அந்தப் பெரிய விண்கல், பாதை விலகி பூமியை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 30கி.மீ தொலைவில் இந்த விண்கல் வெடித்த நிகழ்வில், கிட்டத்தட்ட 400-500 கிலோ டன் டி.என்.டி வெடிபொருட்களுக்கு நிகரான ஆற்றல் இதிலிருந்து வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். இதேபோல, 1908ஆம் ஆண்டில் சைபீரிய பகுதியில் உள்ள துங்குஸ்கா என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது. துங்குஸ்காவில் மோதிய விண்கல் 65 மீட்டர் விட்டம் கொண்டது. செல்யாபின்ஸ்க் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்திய விண்கல் 20 மீட்டர் விட்டமுள்ளது. இவை, நியுயார்க் நகரின் 443 மீட்டர் உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், பாரிஸில் உள்ள 324 மீட்டர் உயரமான ஐபில் டவர் ஆகியவற்றைவிடச் சிறிதாகத் தெரியலாம். ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப, மிக அதிக அளவிலான ஆற்றலை வெளிப்படுத்தி, சேதங்களை விளைவித்தன. படக்குறிப்பு, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றி வந்த ஒரு விண்கல் பாதை மாறி பூமியை நோக்கி வந்ததே 2013 ரஷ்யா நிகழ்வுக்குக் காரணம் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட சம்பவம் பூமியில் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது இவ்வாறான விண்கற்கள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது, மெக்சிகோவின் கிழக்கு கடல் பகுதியில் 10-15கி.மீ விட்டம் கொண்ட ஒரு மிகப் பிரமாண்டமான விண்கல் பூமியில் மோதியது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரளயத்தில் அதுவரை கோலோச்சி வந்த டைனோசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. அவை மட்டுமல்ல, 25 கிலோவுக்கும் மேல் எடை இருக்கக்கூடிய நீர், நிலவாழ் பெரிய உயிரினங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. ஆனால், விண்கல் மோதலால் இதுபோன்ற பிரளயங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பத்தில் கூறிய குஜராத் பள்ளத்தைப் போல பூமியில் சுமார் 200 இடங்களில் விண்கல் விழுந்தமைக்கான வடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆராய்ந்து, பூமியில் விண்கல் விழுவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். பல தருணங்களில் வானத்தில் எரிகல் நிகழ்வுகளைக் கண்டிருப்போம். அதாவது வானில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்படுவதைப் பார்த்திருப்போம். அவை எரிகல் பூமியில் விழும் நிகழ்வின் விளைவு. சின்னச் சின்ன அளவிலான எரிகற்கள் பூமியில் வந்து விழுவதையே எரிகல் நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியான எரிகற்கள் ஒரு நாளைக்குப் பல வந்து விழும். ஆனால், புவி வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மீது உராயும்போது அவை எரிந்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் இரு கைகளையும் சேர்த்து நன்கு தேய்த்துப் பாருங்கள். கை சூடாவதை உணர்வீர்கள் அதுதான் உராய்வு. அதேபோல எரிகற்கள் காற்றுடன் உராய்கின்றன. அப்போது ஏற்படும் வெப்பம் அவற்றை எரித்து விடுகின்றன. அப்படி எரிவதுதான் ஒளிக்கீற்றாக வானில் தென்படுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட அளவிலான விண்கல் சில கோடி ஆண்டுகளில் ஒருமுறை என மிக மிக அரிதாகவே நடப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பூமியில் தினசரி விழும் விண்கற்கள் ஒரு நாளைக்கு 44,000 கிலோ விண்கற்கள் பூமியில் வந்து விழுகின்றன. சின்னச் சின்ன மணல், கல் போன்ற எரிகற்கள் பூமியில் தினசரி வந்து விழுகின்றன. ஆனால், 50 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தாலும்கூட, அது வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அதுதான் ரஷ்யாவிலும் நடந்தது. ஒருவேளை சுமார் 75மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியில் மோதினால், அதனால் ஒரு சிறிய நகரை தரைமட்டமாக்க முடியும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடும். அதேநேரம், நூறு முதல் ஆயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்தவல்ல சுமார் 160 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட ஒரு விண்கல் பூமியில் மோதினால், சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களே தரைமட்டமாகிவிடும். இருப்பினும் கணிப்புகளின்படி, இத்தகைய சம்பவங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்க வாய்ப்புள்ளது. பூமியில் விழுந்தால் ஒரு மாவட்டத்தையே அழித்துவிடும் அளவிலான, சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமெனில், ஒரு விண்கல் 350 மீட்டருக்கும் மேல் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு 15,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் என்று கணிப்புகள் கூறுகின்றன. பூமியின் அரணாகச் செயல்படும் நிலா இதுபோன்ற விஷயங்களில் பூமியின் பாதுகாப்பு அரணாக நிலா செயல்படுகிறது. பூமிக்கு வரும் அடிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் பெரும் பகுதி விண்கல் மோதல்கள் நிகழாமல் அது தடுக்கிறது. பூமியின் பக்கமாக வரக்கூடிய விண்கற்களைத் தன் பக்கம் ஈர்த்து, அந்த அடிகளைத் தானே தாங்கிக் கொள்கிறது. அதனால்தான் நிலவில் விண்கல் மோதல்களால் உருவான கின்னக் குழிகள் இருக்கின்றன. புவியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலாவின் மறுபக்கத்தில் பார்த்தால் பிரமாண்டமான கின்னக் குழிகள் இருக்கின்றன. அவையெல்லாம் பூமியில் மோதிவிடாமல் நிலா பாதுகாத்து நிற்கிறது. இந்தக் காரணத்தால், டைனோசர்களையே அழித்த 10-15கி.மீ விட்டம் கொண்ட பிரமாண்ட விண்கல் பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் சில கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். ஆனாலும், அப்படிப்பட்ட ஓர் ஆபத்து வர வாய்ப்புள்ளதா என்பதை முன்னமே தெரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விஞ்ஞானிகள் உள்ளனர். அதற்காக, பூமிக்கு அருகிலுள்ள விண்கற்கள் அனைத்தும், எந்தத் திசையில் நகர்கின்றன, பூமியில் மோத வாய்ப்புள்ளதா என்பனவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxplqyk096o
  8. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு 31 Aug, 2025 | 09:11 AM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் ஆஜராக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பாக அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக உள்ள குற்றச்சாட்டில், வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்க, நாளை திங்கட்கிழமை (01) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/223803
  9. 31 Aug, 2025 | 09:09 AM (லியோ நிரோஷ தர்ஷன்) நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய இனி அனுமதியளிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இதன் போது இந்தியாவா - சீனாவா அல்லது அமெரிக்காவா என்பது எமக்கு முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து தீர்மானிக்க வெளிவிவகார அமைச்சு விசேட குழு அமைத்து கலந்துரையாடி வருகிறது. இவ்வாறான ஆய்வுக்கப்பல்களின் வருகை குறித்து ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பொதுவானவொரு திட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சீனா மாத்திரம் அல்ல வேறு எந்தவொரு நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதாயின், நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். மறுபுறம் இவ்வாறான ஆய்வுக்கப்பல்கள் வரும் போது உலகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதனையும் ஆராய வேண்டும். ஏனெனில் வல்லரசு நாடுகளுக்கு இடையில் போர் சூழலும் போட்டித்தன்மையும் காணப்படுகின்றமை இரகசியமான விடயமல்ல. எனவே ஏவுகணை தாக்குதல்கள், புவிசார் அரசியல் நலன்கள், ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கலாசார விஜயங்கள் என பல கோணங்களில் ஆய்வுக்கப்பல்களின் வருகையை கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. எனவே தான் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் வருகையை விசேட கண்ணோட்டத்தில் நோக்குகிறோம். இந்த விடயத்தில சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என வேறுப்படுத்தி பார்க்க விரும்ப வில்லை. இறுதியில் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும். இலங்கை போன்ற சிறிய நாடுகள் எவ்வாறு உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை அனுமதிக்கிறது என்ற உலக படிப்பினையுடனான திட்ட வரைபை வெளிவிவகார அமைச்சின் சிறப்பு குழு விரைவில் அமைச்சரவைக்கு சமர்பிக்கும். இதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/223801
  10. எஸ்சிஓ உச்சி மாநாட்டுக்காக ஒன்று கூடிய தலைவர்கள் - 10 புகைப்படங்கள் பட மூலாதாரம், Mehmet Ali Ozcan /Anadolu via Getty Images படக்குறிப்பு,சீன அதிபர் ஷி ஜின்பிங் நடத்திய இரவு விருந்துக்கு முன்னதாக ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டத்தில் யூரேசியா பிராந்தியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு கால்வான் மோதலுக்குப் பிறகு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இதற்கு முன்னர், 2018ஆம் ஆண்டு மோதி சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்தார். பட மூலாதாரம், Anadolu via Getty Images படக்குறிப்பு, தியான்ஜினில் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்ட சிவப்புக்கம்பள வரவேற்பு பட மூலாதாரம், Mehmet Ali Ozcan /Anadolu via Getty Images படக்குறிப்பு, எஸ்.சி.ஓ. மாநாட்டுக்கு வந்த தலைவர்களை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள் பட மூலாதாரம், Photo by SERGEI BOBYLYOV/POOL/AFP via Getty Images படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வரவேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அருகில் சீன அதிபரின் மனைவி பெங் லியுவான் இருக்கிறார். பட மூலாதாரம், Photo by ALEXANDER KAZAKOV/POOL/AFP via Getty Images படக்குறிப்பு, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் உரையாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பட மூலாதாரம், Handout/Anadolu via Getty Images படக்குறிப்பு, மியான்மர் குடியரசின் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பட மூலாதாரம், Qilai Shen/Bloomberg via Getty Images படக்குறிப்பு, மாநாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் பேச்சுக்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம் 'Xi Jinping: The Governance of China' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள தியான்ஜின் ரயில் நிலையம் பட மூலாதாரம், Photo by Ma Di/VCG via Getty Images படக்குறிப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக மின்னொளியில் ஜொலிக்கும் தியான்ஜின் நகரம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாநாடு நடைபெறும் அரங்கத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம் இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8x50vp5j1ro
  11. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2025, 02:34 GMT தற்போதைய அரசுகள் பொது மக்களின் நிலம் தேவைப்பட்டால், அதற்கான இழப்பீட்டைக் கொடுத்து அந்த நிலத்தைப் பெறுகின்றன. பல தருணங்களில் நிலத்திற்கான இழப்பீடு போதுமானதாக இல்லை என அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதும் நடக்கிறது. ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜேந்திரன் தமக்குத் தேவையான நிலத்தை, மக்களிடம் பணம் கொடுத்து வாங்கிய நிகழ்வு ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. புதுச்சேரிக்கு அருகே உள்ள திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து "புதுச்சேரி மாநில கல்வெட்டுகள்" என்ற தலைப்பில் "இன்ஸ்டிட்யூட் பிரான்சிஸ் டி பாண்டிச்சேரி" வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்களின்படி, இந்த வரதராஜ பெருமாள் கோவிலின் மேற்குச் சுவரில் கி.பி. 1058ஆம் ஆண்டில் சோழ அரசன் இரண்டாம் ராஜேந்திரன் உத்தரவுப்படி வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்தக் கல்வெட்டு, அரசன் பணம் கொடுத்து நிலம் வாங்கியது தொடர்பான தகவலைத் தெரிவிக்கிறது. படக்குறிப்பு, திருபுவனை கோவிலில் மொத்தம் 188 கல்வெட்டுகள் உள்ளன மக்களின் நிலத்தை பணம் கொடுத்து வாங்கிய சோழ மன்னன் சோழ மன்னன் இரண்டாம் ராஜேந்திரன் மக்களின் நிலத்தை பணம் கொடுத்து வாங்கியதைக் குறிக்கும் அந்தக் கல்வெட்டு உள்ளது. "ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கொல்" எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டில் "பிராட்டியார் பிரா தேக உலோக மாதேவியார் திருநாமத்தால் நம்மூர் தெந்பிடாகை குஞ்சிரமல்ல பேரரி கீழ் புத்தூரா ஜனநாத நல்லூர் கட்டளையில் குடிமக்கள் நிலத்தில் விலைகொண்ட நிலம் முற்ப்பிட்ட" என்ற செய்தி உள்ளது. அதாவது, கி.பி. 1058ஆம் ஆண்டில் இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் மன்னர், தனது மனைவியின் பெயரால் பணம் கொடுத்து நிலத்தை வாங்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. நில வகைப்பாட்டின்படி அதை உரிய பிரிவின்கீழ் வகைப்படுத்தி அதையும் ஆவணப்படுத்தியுள்ளனர். அரசன் அதிகாரம் பெற்றவனாக இருந்தும் கூட, மக்களிடம் இருந்து சோழ அரசர் நிலத்தை வாங்கியபோது அதற்கு உரிய விலை கொடுத்துப் பெற்றுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. படக்குறிப்பு, சோழர் காலத்தைச் சேர்ந்த செய்திகளைக் கூறும் பல கல்வெட்டுகள் திருபுவனை கோவிலில் உள்ளன ஏரியின் 'வயிற்றில் குத்திய' மர்ம நபர்கள் இந்தக் கோவிலின் கல்வெட்டுகளில் வேறு சில சுவாரஸ்யமான செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலின் தெற்கு சுவற்றில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், உடைந்த ஏரியின் கரையை கட்டித் தந்தவருக்கு அரசு மரியாதை செய்தது பற்றிக் கூறப்பட்டுள்ளது. பராந்தக சோழனால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ வீரநாரயணப் பேரேரியைச் சிலர் உடைத்து விட்டனர். இந்த உடைப்பை, இப்பகுதி அதிகாரியான உத்தம சோழ விழுப்பரையன் சரி செய்து கொடுத்துள்ளார். அவரது செயலைப் பாராட்டவும், அவருக்குச் சிறப்பு செய்யவும் மக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தானியம், நிலங்களை அளக்கும் மரக்கால், துலாக்கோல் ஆகியவற்றுக்கு அவரது பெயரைச் சூட்டி இந்த முறையிலேயே ஊரிலும் கோவிலிலும் அளக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதை அந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், அந்தக் கல்வெட்டில், ஏரியை ஓர் உயிருள்ள ஜீவனை போலவே குறிப்பிடும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஏரிக்கரையை உடைத்தவர்களைப் பற்றிக் கூறும்போது, 'ஏரி வயிற்றில் குத்திவிட்ட" என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி குலோத்துங்கனின் 9ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 25.7.1079) பொறிக்கப்பட்டுள்ளது. இதே கோவிலின் வடக்கு, மேற்கு, தெற்குப் பகுதி சுவர்களில் உள்ள முதலாம் ராசாதிராசனின் 33ஆம் ஆண்டு கல்வெட்டு (கி.பி.1051) புதிய ஊரை உருவாக்கிய செய்தியைத் தெரிவிக்கிறது. அதாவது, "முதலாம் ராசாதிராசனின் அதிகாரியாகிய ராஜேந்திர சோழ மாவலி வாணராயர் என்பவர் திருபுவனை வடபிடாகையில் கங்கை கொண்ட சோழப் பேரேரி என்ற பெயரில் ஓர் ஏரியை உருவாக்கினார். பின்னர், அதன் அருகிலேயே உள்ள காட்டுப் பகுதிகளைச் சமன்படுத்தி அதற்கு ராஜேந்திர சோழநல்லூர் எனப் பெயரிட்டு புதிய ஊரை உண்டாக்கினார். மக்கள் குடியிருப்பதற்கு முன்பாக இந்தப் பகுதி கொடுக்கூர் என்று அழைக்கப்பட்டது; மக்கள் குடியேற்றத்திற்குப் பிறகு ராஜேந்திர சோழ நல்லூர் என மாற்றப்பட்டுள்ளது" என்று அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. திருபுவனை கோவிலில் மொத்தம் 188 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் 187 கல்வெட்டுகள் சோழர்களின் ஆட்சிக் காலம் குறித்த செய்திகளைத் தருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj3l4762jv0o
  12. செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு 31 Aug, 2025 | 09:09 AM (லியோ நிரோஷ தர்ஷன்) நாட்டின் தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்க வழிவகுக்காது. எனவே செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசாங்கம், உள்ளக விசாரணை பொறிமுறைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் வழிகாட்டல்களை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவதில் அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. செம்மணி மனித புதைக்குழி விவகாரம் மற்றும் ஜெனிவா மனத உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். ஆவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதை 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் வெளியேற்றிய விதததிற்கு பின்னர் உலகிற்கு எம்மாள் எதுவும் கூற முடியாது போனது. ஆனால் எமது ஆட்சியில் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளோம். 2005 ஆம் ஆண்டில் தாரகி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வகையான சம்பவங்களை மீள் விசாரணைக்கு எடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி உத்திரவிட்டார். பாரின் பின்னர் செய்ய குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. நாம் ஆட்சிக்கு வரும் போது செம்மணி மனித புதைக்குழியில் 30 எழும்புக்கூடுகளே கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அங்குள்ள காவலர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்குகின்றது. செம்மணி மாத்திரம் அல்ல, கொக்குத்தொடுவாய், மண்டைத்தீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனித புதைக்குழிகள் இருக்கின்றன. அவற்றை தோண்டும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மீள நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க விரும்புகிறது. இந்த புதைக்குழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்ஷர்களே தவிர நாம் அல்ல. சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனித புதைக்குழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளுராட்சிமன்றங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். எனவே சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு நாட்டில் காணப்படும் போது, சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. எனவே தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்காது. இருப்பினும் உள்ளக விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கு அனுமதியளிக்க தயாராகவே உள்ளோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தேவைப்படலாம். மறுபுறம் சர்வதேச விசாரணைகள் நாட்டிற்குள் வந்ததும், தோல்வியடைந்துள்ள இனவாதிகள் மீள எழுவார்கள். குறிப்பாக ராஜபக்ஷர்கள் இதனை காரணம் காட்டி இனவாத அரசியலை முன்னெடுப்பார்கள். 6 தடவைகள் பிரதமராக இருந்த ரணிலை நீதவான் நீதிமன்றத்தினால் கைது செய்ய முடியும் என்றால் எமது நாட்டின் நீதித்துறை எவ்வாறு உள்ளது என்பதை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/223800
  13. 30 Aug, 2025 | 05:46 PM (எம்.மனோசித்ரா) எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். மஹரகம நகரசபையில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். எவராயினும் நேர்மையாக பணியாற்றினால் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்படாது. அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையை சரிவர நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அவர்களை பாதுகாப்போம். எவ்வாறிருப்பினும் அரச சேவைக்கு பொறுத்தமற்ற சிலர் இருக்கலாம். பொலிஸில் கூட அவ்வாறானவர்கள் இருக்கக் கூடும். அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாகும். அதற்காக சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க முடியாது. இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப் போவதில்லை. அதேபோன்று ஏனைய துறைகளிலும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து பணியாற்றுமாறு சகல அரச உத்தியோகத்தர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/223794
  14. பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 பேர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை பொலிஸார் பொறுப்பேற்று நேற்று (30) இலங்கைக்கு விமானம் ஊடாக அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmeznpb5r004zo29ns6su6xd2
  15. 3 கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்சிஓ உச்சி மாநாடு - சீனா உலகுக்கு சொல்லவரும் செய்தி என்ன? பட மூலாதாரம், Getty Images 28 நிமிடங்களுக்கு முன்னர் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு முந்தைய மாநாடுகளைவிட அதிக பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும். சீனாவின் வடக்கு கடலோர நகரமான தியான்ஜினில் செப்டம்பர் 31 முதல் செப்டம்பர் 1 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை நடத்தும். 23 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் பல்வேறு தூதரக நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது எஸ்சிஓவின் வரலாற்றில் 'இதுவரை இல்லாத மிகப்பெரிய' உச்சி மாநாடு என்று விவரிக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ உச்சி மாநாட்டை சீனா நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். சீனா கடைசியாக 2018 ஜூன் மாதம் கிங்தாவில் இந்த நிகழ்வை நடத்தியது. எஸ்சிஓ உச்சி மாநாடு "இந்த ஆண்டு சீனாவில் நடைபெறும் மிக முக்கியமான தேச தலைவர்கள் சந்திப்பு மற்றும் தூதரக நிகழ்வுகளில் ஒன்று", என சீனா கூறியுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசு தலைவர்கள் கவுன்சிலின் 25-வது கூட்டம் மற்றும் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் உரையாற்றுவார். எஸ்சிஓ விரிவாக்கப்பட்ட வடிவத்தில் இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது. ஷி ஜின்பிங் என்ன கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது? "ஷாங்காய் உணர்வை முன்னெடுப்பதற்கும், காலத்தின் பணியை ஏற்பதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் எஸ்சிஓ-விற்கான சீனாவின் புதிய தொலைநோக்கையும், முன்மொழிவுகளையும் ஷி ஜின்பிங் விரிவாக எடுத்துரைப்பார்", என ஆகஸ்ட் 22 அன்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் "எஸ்சிஓ-வின் உயர்தர வளர்ச்சி மற்றும் முழுமையான ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் அறிவிப்பார்" மற்றும் "இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்கவும், உலகளாவிய ஆளுகை முறையை மேம்படுத்தவும் எஸ்சிஓ-விற்கு புதிய வழிகளையும் முறைகளையும் முன்மொழிவார்". எஸ்சிஓ உறுப்பு நாடுகள் இணைந்து தியான்ஜின் பிரகடனத்தை வெளியிடுவார்கள், அடுத்த பத்தாண்டு எஸ்சிஓ வளர்ச்சி உத்தியை அங்கீகரிப்பார்கள், மற்றும் "உலக பாசிச எதிர்ப்பு போரின்" 80-வது வெற்றி ஆண்டு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 80-வது நிறுவன ஆண்டு நினைவு அறிக்கைகளை வெளியிடுவார்கள். பாதுகாப்பு, பொருளாதாரம், மக்கள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஆவணங்களின் தொகுப்பு வெளியிடப்படும். ஷாங்காயைச் சேர்ந்த ஜீஃபாங் டெய்லி, ஆகஸ்ட் 26 அன்று வெளியிட்ட செய்தியில், 10 ஆண்டு வளர்ச்சி உத்தி "இந்த உச்சி மாநாட்டில் வெளியிடப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டது. இது எஸ்சிஓ-வின் "முன்னுரிமை ஒத்துழைப்பு திசையை" நிறுவும், இது அமைப்பின் "நிலையான வளர்ச்சி" மற்றும் "சுய கட்டமைப்புக்கு" முக்கியமானது எனக் கூறியது. யார் கலந்துகொள்கிறார்கள்? பட மூலாதாரம், Xinhua News Agency படக்குறிப்பு, இந்த முறை எஸ்சிஓ மாநாட்டில் முன்பெப்போதையும் விட அதிக நாடுகள் பங்கேற்கும் 2001-இல் சீனா, ரஷ்யா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட எஸ்சிஓ, இப்போது 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. 2017 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டன, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரானும் பெலாரஸும் இணைந்தன. 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள், பார்வையாளராக மங்கோலியாவும், அமைப்பின் 14 பேச்சுவார்த்தைகளின் கூட்டாளிகளில் எட்டு நாடுகளான அஜர்பைஜான், ஆர்மீனியா, கம்போடியா, மாலத்தீவுகள், நேபாளம், துருக்கி, எகிப்து மற்றும் மியான்மரும் பங்கேற்கும். தென்கிழக்கு ஆசியாவுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்படும், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகியவையும் நட்பு நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன. இவர்கள் துர்க்மெனிஸ்தானுடன் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். 2024 இல், விருந்தினர் நாடான துர்க்மெனிஸ்தான், பேச்சுவார்த்தை கூட்டாளிகளான அஜர்பைஜான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியுடன் இணைந்து, கசாக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் முதல் எஸ்சிஓ பிளஸ் கூட்டத்தில் பங்கேற்றது. உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு விருந்து அளிப்பார், மேலும் சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உச்சி மாநாட்டின் ஒரு அங்கமாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த அமைப்பில் சீனாவுக்கு இணையான மிக முக்கியமான நாடுகளின் தலைவர்களான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான ஷி ஜின்பிங்கின் சந்திப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். புதின் கடைசியாக 2024 மே மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், கடந்த ஓராண்டில் இரு நாடுகள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோதி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சீனாவுக்கு செல்கிறார். ஆகஸ்ட் 28 அன்றைய ஊடக அறிக்கைகளின்படி, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 22 வெளிநாட்டுத் தலைவர்களில் 18 பேர் செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள். சீனா வழங்கிய பங்கேற்பாளர்களின் பட்டியலின் அடிப்படையில் பார்க்கையில், 2021 ஆகஸ்டில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உயர்மட்ட பிரதிநிதியை அனுப்பாத ஆப்கானிஸ்தான், இம்முறையும் கலந்துகொள்ளவில்லை. ஆப்கானிஸ்தான் 2012 இல் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது, ஜூலையில் ரஷ்யாவிடமிருந்து தூதரக அங்கீகாரம் பெற்றது, மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு, வெளியுறவு அமைச்சர் வாங் யி காபூலுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார். நட்பு அணுகுமுறைகள் இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தான் இல்லாதது, தாலிபானின் பங்கேற்பு குறித்து எஸ்சிஓவுக்குள் இன்னும் எதிர்ப்பு குரல்கள் இருப்பதைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 28 வெளியான ஊடக செய்திகளின்படி, எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 22 வெளிநாட்டுத் தலைவர்களில் 18 பேர், செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள். ஊடகங்கள் என்ன சொல்கின்றன? உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, சீன ஊடகங்கள் இப்போது "உலக மக்கள்தொகையின் கிட்டத்தட்ட பாதியையும், உலக நிலப்பரப்பின் கால் பகுதியையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது", என எஸ்சிஓ அமைப்பின் வளர்ச்சியைப் புகழ்ந்தன. 2024 இல் சீனாவின் மற்ற எஸ்சிஓ உறுப்பு நாடுகளுடனான வர்த்தகம் 512.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, "புதிய உச்சத்தை" எட்டியது என வணிக அமைச்சகம் ஆகஸ்ட் 27 அன்று தெரிவித்தது. அரசு நடத்தும் நாளிதழான குளோபல் டைம்ஸ், சீன சமூக அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளரை மேற்கோள் காட்டி, எஸ்சிஓ-வின் உலக பொருளாதாரம் மற்றும் அரசியலில் வலுவான செல்வாக்கு "பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும்" எனக் கூறியது. "எஸ்சிஓ புதிய வகை சர்வதேச உறவுகளுக்கும், பிராந்திய ஒத்துழைப்புக்கும் முன்மாதிரியாக உள்ளது, மேலும் குறிப்பிடத்தக்க சர்வதேச செல்வாக்குடன் உருவாக்கும் சக்தியாக விளங்குகிறது," என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி, ஆகஸ்ட் 23 அன்று ஒரு கருத்துரையில் தெரிவித்தது. எஸ்சிஓ "வரலாற்றின் சரியான பக்கத்தில்" மற்றும் "நீதியும் நியாயமும் உள்ள பக்கத்தில்" நிற்கிறது, என்று அது மேலும் தெரிவித்தது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமைப்பின் ஒருங்கிணைந்த குரல், "உலக ஆளுகையை மிகவும் நியாயமான மற்றும் பகுத்தறிவான திசையில் முன்னெடுக்கும், உலக தெற்கை ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கு பகிர்ந்த எதிர்காலத்த்தை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு வழிநடத்தும்". என்றும் அது கூறியது. பல கட்டுரைகள், அமைப்பினுள் ஒத்துழைப்பை நெறிப்படுத்தும்,"பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, பல்வேறு நாகரிகங்களுக்கு மரியாதை, மற்றும் பொது வளர்ச்சிக்காக உழைப்பது" ஆகிய கொள்கைகளை கொண்ட "ஷாங்காய் உணர்வு" பற்றி குறிப்பிட்டன. "காலம் மாறும்போது, இதன் சமகால மதிப்பு மேலும் தெளிவாகிறது, தற்போதைய உலக ஆளுகை இக்கட்டைத் தீர்க்கவும், சர்வதேச வேறுபாடுகளை களையவும், மனிதகுலத்திற்கு பகிர்ந்த எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு சித்தாந்த உத்வேகத்தை வழங்குகிறது," என்று சின்ஹுவா ஆகஸ்ட் 23 அன்று தெரிவித்தது. எஸ்சிஓ-வில் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு பொறுப்பான தூதர் ஃபான் சியான்ரோங், "சாங்காய் உணர்வு" எஸ்சிஓ-வின் "வேர் மற்றும் ஆன்மா" என்று விவரித்தார். இது "நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான எஸ்சிஓ நாடுகளின் தேவைகளை முழுமையாக எதிரொலிக்கிறது" மற்றும் "பனிப்போர் மனநிலை, நாகரிகங்களின் மோதல் போன்ற காலாவதியான கருத்துக்களை கடந்து நிற்கிறது" என்று சின்ஹுவா அறிவித்தது. அமைப்பின் உலகளாவிய செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு குறித்த பேச்சுகளுக்கு அப்பால், இணைப்பு, பெரிய தரவு, ஆற்றல் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றில் அமைப்பினுள் ஒத்துழைப்பு சாதனைகளை ஊடகங்கள் எடுத்துக்காட்டின. 2025-ஐ "எஸ்சிஓ நிலையான வளர்ச்சி ஆண்டு" என்று அவர்கள் குறிப்பிட்டனர், மேலும் நிலையான வளர்ச்சிக்கு தேவையான "பரஸ்பர சாதக அம்சங்கள்" மற்றும் "பெரும் திறன்" உள்ளதாக சுட்டிக்காட்டினர். இந்தக் கருப்பொருளுக்கு ஏற்ப, எண்ணெய், வாயு, உற்பத்தி, பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் எஸ்சிஓ கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த முயற்சிகள் "தொழில்துறை மாற்றத்தை ஊக்குவித்து, எஸ்சிஓ உறுப்பினர்களிடையே தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலி உறவுகளை மேலும் நெருக்கமாக்கும்" என்று வணிகத் துணை அமைச்சர் லிங் ஜி-யை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்தது. சீனாவின் கவனம் எஸ்சிஓ-வா அல்லது பிரிக்ஸா? மத்திய ஆசியா பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு நடைமுறையாக தொடங்கிய எஸ்சிஓ, இப்போது மூன்று கண்டங்களில் உள்ள நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கம், உலக தெற்கின் தேவைகளை பூர்த்தி செய்வது, "உண்மையான பன்முகவாதத்தை" பாதுகாப்பது மற்றும் "ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு" ஆகிய வாதங்கள், இந்த அமைப்பை சீனா தலைமையிலான மற்றொரு சர்வதேச அமைப்பான பிரிக்ஸைப் போல விரைவாக மாற்றுகிறது. 26 எஸ்சிஓ உறுப்பினர்கள், கூட்டாளிகள் மற்றும் பார்வையாளர் நாடுகளில் 9 நாடுகள் பிரிக்ஸிலும் தொடர்புடையவர்கள். இது 10 உறுப்பினர்களையும் 10 பேச்சுவார்த்தை கூட்டாளிகளையும் கொண்டுள்ளது, சமீப ஆண்டுகளில் உலக தெற்கு நாடுகளை ஈர்க்க விரிவாக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரிக்ஸ் அமைப்பின் செல்வாக்கு மற்றும் ஒற்றுமை குறைந்திருக்கலாம் என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஜூலையில் பிரேசிலில் நடைபெற்ற "பலவீனமடைந்த" பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் லி கியாங் கலந்துகொண்டதால், ஷி ஜின்பிங் பிரிக்ஸ்-க்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஷி ஜின்பிங் அதிபராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு எஸ்சிஓ உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார், மேலும் "சீனா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான தூதரக உறவுகளில் எஸ்சிஓ-விற்கு முன்னுரிமை அளித்து வருகிறது" என்றும், இந்த அமைப்பை "மேலும் உறுதியானதாகவும் வலிமையானதாகவும்" மாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். பெய்ஜிங் உண்மையிலேயே எஸ்சிஓ-விற்கு முன்னுரிமை அளிக்கிறதா என்பது இன்னும் தெளிவாக வேண்டும், ஆனால் தற்போதைக்கு, இந்த இரு அமைப்புகளும் பாதுகாப்புவாதத்திற்கு எதிர்ப்பு, ஒருதலைபட்சம், "ஆதிக்கம்" மற்றும் "அடக்குமுறை" ஆகியவற்றை நிராகரித்தல், உலக தெற்கிற்கு ஆதரவாகவும், மிகவும் நியாயமான சர்வதேச ஒழுங்கிற்காகவும் நிற்பது போன்ற செய்திகளை முன்னெடுக்க ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. எஸ்சிஓ-வில் அதிக உறுப்பினர்களையும் கூட்டாளிகளையும் சேர்ப்பது, மிக முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அமைப்பை பயனற்றதாக ஆக்கலாமா, மற்றும் "சில நாடுகள் தன்னிச்சையாக கூடுதல் வரிகளை விதிக்கும்" "உலகளாவிய கொந்தளிப்புக்கு" மத்தியில் இது ஒற்றுமையின் தோற்றமாக மாறலாமா என்பது வழக்கம்போல, ஊடக செய்திகளில் குறிப்பிடப்படவைல்லை. "எஸ்சிஓ தனது கதவுகளைத் தொடர்ந்து திறந்து வைத்து, ஷாங்காய் உணர்வை ஏற்கும் நாடுகளை பெரிய எஸ்சிஓ குடும்பத்தில் இணைய வரவேற்கும்," என சின்ஹுவாவுடனான நேர்காணலில், தூதர் ஃபான் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93dr9qy6nwo
  16. இலஞ்சம் பெற முயன்ற மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (30) மாதகல் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் முயற்சித்தனர். பின்னர் அவரை கைது செய்யாமல் விடுவதற்காக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது இந்நிலையில், போதைப் பொருளை வைத்திருந்தவர் 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்குவதற்கு இணங்கியுள்ளார். இந்நிலையில் அவர்கள் சந்தேகநபரை கைது செய்யாமல் விட்டு, இலஞ்சமாக கோரிய தொகையினை சித்தங்கேணி பகுதியில் உள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்திற்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அதிகாரிகள் மூவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmezitm3u004xo29n167y0zr8
  17. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 31 ஆகஸ்ட் 2025, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அசாம் மாநிலத்தில், கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மூன்று விநோத சம்பங்கள் நடந்தன. அந்த மூன்றிலுமே, கொல்லப்பட்ட, இறந்த பாம்புகள் பல மணிநேரம் கழித்தும்கூட மனிதர்களைக் கடித்துள்ளன. இறந்து போன நாகப் பாம்பு, கட்டு விரியன் ஆகியவை மூவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது எப்படி? முதல் சம்பவம்: தலை வெட்டப்பட்ட பிறகும் கடித்த நாகப் பாம்பு அசாமின் சிவசாகர் பகுதியில் தனது வீட்டிலுள்ள கோழிக்குஞ்சை பாம்பு சாப்பிடுவதைக் கண்ட 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அதன் தலையை வெட்டினார். பிறகு, வெட்டப்பட்ட பாம்பின் உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, இறந்த பாம்பின் தலை அவரது வலது கை பெருவிரலில் கடித்துவிட்டது. அந்த நபருக்கு பெருவிரல் கறுத்துவிட்டது. நஞ்சு தோள்பட்டை வரை ஏறிவிட்டது. அருகிலுள்ள மருத்துவமனை சென்ற பிறகு அவருக்கு நஞ்சுமுறி மருந்து வழங்கி சிகிச்சையளிக்கப்பட்டது. இறுதியில் அவர் முழுமையாக குணமடைந்தார். இரண்டாவது சம்பவம்: டிராக்டரின் கீழே நசுங்கிய பிறகும் கடித்த நாகம் அசாமின் அதே பகுதியில், வயலில் ஓடிக் கொண்டிருந்த டிராக்டரின் சக்கரத்தில் ஒரு நாகப் பாம்பு நசுங்கி இறந்தது. ஆனால், காலை 7:30 மணியளவில் வேலை முடிந்து டிராக்டரில் இருந்து கீழே இறங்கிய விவசாயி அதனிடம் கடிபட்டார். பாம்பு நசுங்கி இறந்து சில மணிநேரம் கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் 20 குப்பிகள் நஞ்சுமுறி மருந்து, ஆன்டிபாடி மருந்துகள் என 25 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அசாமில் இறந்த பிறகும் இருவரை கடித்த Monocled cobra என்ற வகையைச் சேர்ந்த நாகப் பாம்பு. இதன் தலையின் பின்புறம் வட்ட வடிவ பட்டை இருக்கும். மூன்றாவது சம்பவம்: இறந்து 3 மணிநேரம் கழித்து கடித்த கட்டு வரியன் மூன்றாவது சம்பவம், அசாம் மாவட்டத்தின் கம்ரூப் மாவட்டத்தில் நடந்தது. மாலை சுமார் 6:30 மணியளவில் ஒரு கரும்பட்டை கட்டு வரியனை கொன்ற சிலர், அதைத் தங்கள் வீட்டுப் பின்புறத்தில் வீசினார்கள். அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர், இரவு 9:30 மணியளவில் ஆர்வத்தில் இறந்த பாம்பைக் காண அங்கு திரும்பிச் சென்றார். அப்போது இறந்துபோன பாம்பு என்று கருதி, எச்சரிக்கையின்றி அதைக் கையில் எடுத்து, தலையைப் பிடித்துப் பார்த்துள்ளார். அந்த நேரத்தில், அவரது வலது கை சுண்டு விரலில் அந்த நச்சுப் பாம்பு கடித்துவிட்டது. குடும்பத்தினர், கடித்த இடத்தில் வலியோ, வீக்கமோ ஏதும் ஏற்படாததாலும் அது இறந்த பாம்பு என்பதாலும் ஆரம்பத்தில் கவனிக்காமல் தவிர்த்துவிட்டனர். ஆனால், நள்ளிரவு 2 மணியளவில் கடிபட்ட நபர் பதற்றத்துடன், தூக்கமின்றி, உடல் வலியுடன் அவதிப்பட்டுள்ளார். பிறகு படிப்படியாக நஞ்சின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அவருக்கு நஞ்சுமுறி மருந்துகளுடன் 43 மணிநேரம் சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நபர் உயிர் பிழைத்து, குணமடைய 6 நாட்கள் ஆனதாக ஆய்வறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் கட்டு வரியன். அசாமில் இறந்த பிறகும் ஒருவரைக் கடித்தது கரும்பட்டை கட்டு வரியன் வகையைச் சேர்ந்தது. பாம்பு இறந்த பிறகும் கடித்தது எப்படி? இந்த மூன்று சம்பவங்களையும் கேட்கும்போது நம்புவதற்குச் சற்று கடினமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், இத்தகைய சம்பவங்கள் நடக்கும் ஆபத்து உண்மையில் இருப்பதை வல்லுநர்கள் உறுதி செய்கின்றனர். இந்த மூன்று சம்பவங்களுமே அசாமில் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து, இவற்றின் பின்னணி குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதுகுறித்த ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், இறந்த பிறகு அல்லது தலை துண்டிக்கப்பட்ட பிறகும்கூட பாம்பு கடிப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது ஏன் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. முன்கோரைப் பற்களைக் கொண்ட பாம்பு வகைகளிடையே இத்தகைய அபாயம் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ். "பாம்புகளின் நஞ்சு என்பது மனிதர்களின் எச்சிலை போன்றதுதான். அந்த நஞ்சு சுரப்பதற்கான சுரப்பி கோரைப் பற்களில் ஒரு சிரிஞ்ச் ஊசியைப் போன்ற வடிவமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பற்கள் மூலமாக நஞ்சை கடிபடும் உயிரினத்தின் உடலில் அவற்றால் செலுத்த முடியும்" என்று ஆய்வறிக்கை விளக்கியுள்ளது. அதோடு, "அசாமில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையைக் கையாளும்போது, அதன் நஞ்சு சுரப்பி மீது தற்செயலாக அழுத்தம் ஏற்பட்டு, கவனக் குறைவாக நஞ்சு செலுத்தப்பட்டிருக்கலாம்," என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. படக்குறிப்பு, யுனிவர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் மனோஜ் அதேவேளையில், இத்தகைய சம்பவங்கள் இறந்த பாம்புகளில் நடப்பதற்கான அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கும் மனோஜ், இதன் அறிவியல் பின்னணி குறித்து விளக்கினார். "மனிதர்கள் தூங்கும்போது கொசு கடித்தால் அதைத் தன்னிச்சையாகவே அடிப்போம். ஆனால், அது நமக்கு விழித்தெழும் போது நினைவில் இருக்காது. மனிதன் இறந்தாலும் அவரது உள்ளுறுப்புகள் முழுமையாக இயக்கத்தை நிறுத்த சிறிது நேரமாகும். அதுபோலவே, பாம்புகளிலும் அது இறந்த பின்னரும் அதன் உள்ளுறுப்புகள் படிப்படியாகவே இயக்கத்தை நிறுத்தும்." என்று அவர் கூறினார். அப்படித்தான், பாம்புகளில் அவை இறந்த பிறகுகூட, தண்டுவடம் கடிப்பது போன்ற இத்தகைய செயல்முறைகளை அரிதான சமயங்களில் திடீரெனச் செயல்படுத்திவிடக் கூடும் என்கிறார் அவர். அதுமட்டுமின்றி, வழக்கமாக பாம்புகள் மேற்கொள்ளும் பொய்க்கடி மீதும் ஆய்வறிக்கை கவனம் செலுத்தியுள்ளது. அதாவது, பாம்புகள் தனது எதிரிக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்த, பொய்க்கடி எனப்படும், நஞ்சை செலுத்தாமல் வெற்றுக் கடி மூலம் எச்சரிக்கும். ஆனால், "அந்தச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது மூளைதான். இறந்த பாம்பின் உடலில் இந்தப் பண்பு சிறிதும் இருக்காது. ஆகையால், இறந்த பாம்பு ஒருவித உடலியல் இயக்க அடிப்படையிலான தூண்டுதலில் கடிக்கும்போது, கடிபடும் நபரின் உடலில் நஞ்சு இறங்குவதைத் தவிர்க்க முடியாது. பாம்பால் கட்டுப்படுத்த முடியாது என்பதால், நஞ்சு சுரப்பியில் இருக்கக்கூடிய மொத்த நஞ்சும் கடிபடுபவர் உடலில் செலுத்தப்பட்டுவிடும். இது தவிர்க்க முடியாத ஒன்று," என ஆய்வறிக்கை விளக்கம் அளித்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இறந்த பாம்பை கையில் எடுப்பதுகூட ஆபத்தில் முடியலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். (சித்தரிப்புப் படம்) எந்தெந்த பாம்புகள் இறந்த பிறகும் கடிக்க வாய்ப்புள்ளது? அமெரிக்காவில் அதிகம் காணப்படும், மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை உடைய ரேட்டில்ஸ்நேக் எனப்படும் பாம்பு வகையில், இத்தகைய நடத்தைகள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் முனைவர் மனோஜ். அதேநேரம், ஆஸ்திரேலியாவில் உள்ள பிரவுன் ஸ்நேக், சீனாவில் நாகப்பாம்பு போன்றவற்றில் இப்படி நடந்ததாக செய்திகள் வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார் கர்நாடகாவின் ஆகும்பேவில் உள்ள களிங்கா ஃபவுண்டேஷனின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எஸ்.ஆர்.கணேஷ். இந்தியாவில் காணப்படும் பாம்புகள் பற்றிப் பேசிய முனைவர் மனோஜ், "கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், மூங்கில் குழிவிரியன், மலபார் குழிவிரியன் உள்பட விரியன் குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகள், பவளப் பாம்புகள், கட்டு வரியன் வகைப் பாம்புகள் ஆகியவற்றில் இந்த அபாயம் அதிகளவில் இருக்கிறது" என்று தெரிவித்தார். அதேநேரம், "பார்ப்பதற்கு ஆபத்தற்றதாக தென்படக்கூடிய தண்ணீரில் வாழக்கூடிய கண்டங்கண்டை நீர்க்கோலி என்ற நீர்பாம்பு வகைகள்கூட இப்படிச் செய்வதுண்டு" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'பச்சைப் பாம்பின் உடலை உருவிவிட்டால் சமையல் நன்றாக வரும்' என்ற மூடநம்பிக்கை, இதுபோன்ற ஆபத்துகளுக்கு மக்கள் ஆளாவதை அதிகரிக்கும். அவரது கூற்றுப்படி, பாம்பு என்றாலே, இறந்துவிட்டாலும்கூட அதை எச்சரிக்கையின்றிக் கையாள்வது மிகவும் தவறான உதாரணம். "பலரும் இறந்த பாம்பு என்றால் அதை எடுத்துப் பார்ப்பது, கையாள்வது என்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இது ஆபத்தானது. 'ஒரு மனிதன் இறந்துவிட்டான்' என்பதற்கு மருத்துவ ரீதியாக சில வரையறைகள் இருப்பதைப் போல, பாம்புகள் போன்ற ஊர்வனவற்றுக்கு எந்தவொரு வரையறைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. அடிபட்ட அல்லது தலை வெட்டப்பட்ட பாம்பு அசைவற்று நீண்ட நேரம் கிடந்தாலே அது இறந்துவிட்டதாக நாம் கருதிவிடுகிறோம். பாம்புகளை உயிருடனோ அல்லது உயிரிழந்த நிலையிலோ எப்படிப் பார்த்தாலும், அதற்குரிய நிபுணர்களுக்குத் தெரியப்படுத்தி உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதே சிறந்த தீர்வு," என்று விளக்குகிறார் அவர். மேலும், "தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இறந்துவிட்ட பச்சைப் பாம்பின் உடலை உருவிவிட்டால் சமையல் நன்றாக வரும்" என்ற மூடநம்பிக்கையால், அத்தகைய செயல்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. இதுகுறித்துப் பேசிய முனைவர் மனோஜ், "பச்சைப் பாம்பு உள்பட நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளில் பல வகைகள், எளிதில் சீற்றம் கொண்டு கடிக்கும் நடத்தையைக் கொண்டவையாக உள்ளன. அவற்றின் உடல் அமைப்பே அதற்கு ஏற்ற வகையில்தான் இருக்கும் என்பதால், அவை இறந்த பிறகும் கடிக்கும் அபாயம் அதிகமுள்ளது. எனவே மூடநம்பிக்கை அடிப்படையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்," என்று எச்சரித்தார். மறுபுறம், ஒரு பாம்பு இறந்த பிறகு எவ்வளவு நேரத்திற்கு அதன் நஞ்சு வீரியம் மிக்கதாக இருக்கும், அது கடிக்கக்கூடிய ஆபத்து எவ்வளவு நேரத்திற்கு உள்ளது என்பது தொடர்பாக விரிவான ஆய்வுகள் இல்லை என்று கூறுகிறார் முனைவர் கணேஷ். அவரது கூற்றை ஆமோதிக்கும் மனோஜ், "இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்பு சட்டங்கள் மிகவும் கடுமையாக இருப்பதால், ஒரு பாம்பின் உயிரைப் பறித்து, அதனிடம் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள இயலாது. அதனால்தான், அசாமில் அரிதாக நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனவே, அதில் கிடைக்கக்கூடிய தகவல்களும் ஓர் அளவுக்குத்தான் இருக்கும். ஆனால், உலகின் வேறு சில நாடுகளில் இது ஏற்படுத்தும் தாக்கம், விரிவான ஆய்வுகளுக்கு உந்துதலாக இருக்கலாம்" என்று தெரிவித்தார். அசாமில் கிடைத்துள்ள கண்டுபிடிப்புகள், பாம்புக்கடி குறித்தான விழிப்புணர்வில் இன்னும் எந்த அளவுக்கு ஆழமான நடவடிக்கைகள் தேவை என்பதை உணர்த்துகின்றன. அதோடு, பாம்புகளை கவனமின்றி, பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வின்றிக் கையாளும் நபர்களுக்கு இந்தச் சம்பவங்களும் அவை குறித்தான ஆய்வின் முடிவுகளும் ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyjlp8lv0ko
  18. 27 Aug, 2025 | 11:02 AM இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐ.பி.எல். மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து மட்டுமல்லாமல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், “ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு புதிய ஆரம்பம் இருக்கும் என்பார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராக எனது காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடும் எனது காலம் இன்று தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடன் பணியாற்றிய அனைத்து அணிகளுக்கும், ரசிகர்களுக்கும், ஐ.பி.எல். மற்றும் பி.சி.சி.ஐ.-க்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அஸ்வின் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் என பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். தனது ஐ.பி.எல். பயணத்தில், 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். https://www.virakesari.lk/article/223471
  19. கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 முக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்! 30 Aug, 2025 | 09:25 PM இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் 3.30 மணியளவில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பாதாள உலகக் குழுவினரை அழைத்துவந்த விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திரணக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனை கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223796
  20. செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Published By: Vishnu 30 Aug, 2025 | 09:04 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (30) மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 180 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 38வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223795
  21. வேலை நிறுத்தம் நிறைவடைந்து ஒரு வாரம் கடந்தும் தேங்கியுள்ள ஒன்றரை கோடி தபால் பொதிகள் 30 Aug, 2025 | 03:37 PM தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. இவ்வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டு ஒரு வாரம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னும் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் நாடளாவிய ரீதியில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்தியம் பொறுத்தப்பட்டமை மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவு குறித்த சுற்று நிரூபம் என்பனவே இதற்கு பிரதான காரணியாகும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 24ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய போது தபால் மா அதிபர் மத்திய தபால் பரிமாற்ற சேவை நிலையத்தில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரத்தைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அத்தோடு மேலதிக வேலை நேர கொடுப்பனவை செலுத்துவதற்காக பணிக்கு திரும்புமாறு சுற்று நிரூபமொன்றையும் வெளியிட்டிருந்தார். அதற்கமைய ஒட்டுமொத்த தபால் பணியாளர்களும் அவ்வாறே செயற்பட்டோம். மத்திய தபால் பரிமாற்ற சேவையில் 30 சதவீதமானவை மேலதிக வேலை நேர கொடுப்பனவு முறைமையை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சேவைகளுக்கு பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை. பணியாளர்களை ஒதுக்குவதற்கு பதிலாகவே மேலதிக வேலை நேர கொடுப்பனவு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையிலேயே இந்த சேவைகள் மேலதிக வேலை நேர கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பிரதி பலனாக 10 மில்லியனுக்கும் அதிகமான தபால் பொதிகள் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் தேங்கியுள்ளன. தபால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் சகல தபாலகங்களிலும் சுமார் 5 நாட்களுக்கான தபால் பொதிகள் குவிந்துள்ளன. இவ்வாறு நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்றரை கோடி தபால் பொதிகள் தேங்கியுள்ளதாக நம்புகின்றோம். இந்த பொதிகளுக்குள் தரம் ஒன்றுக்குள் மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள், உயர்தர பரீட்சைகளுக்கான கடிதங்கள், நேர் காணல்களுக்கான கடிதங்கள், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் என பல முக்கிய ஆவணங்கள் உள்ளன. பொது மக்களுக்கான முக்கிய கடிதங்களை இவ்வாறு தேக்கி வைத்திருப்பதற்கு தபால்மா அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த நெருக்கடிக்கு அவரே முற்றுமுழுதாக பொறுப்பு கூற வேண்டும். இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் தபால் துறை முற்றாக வீழ்ச்சியடையும் என்று எச்சரிப்பதாக சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223782
  22. 7 வருடங்களுக்குப் பின்னர் சீனா சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி 30 Aug, 2025 | 09:58 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ. 6 இலட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகவுள்ளதால், ஜப்பானிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15வது வருடாந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சீனா பயணம் : முக்கியத்துவம் என்ன? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்ட வரி விதிப்பு என டிரம்ப் தரப்பில் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சீனாவில் நடக்கவிருக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாளை (ஆகஸ்ட் 31 ) மற்றும் செப்டம்பர் 1ஆம் திகதிகளில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட சுமார் 20 உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான கால்வனில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் தணியத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில், எல்லைப் பிரச்சினைகள் மட்டுமின்றி, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டமைப்பாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது டிரம்ப்புக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/223798
  23. வணக்கம் உறவுகளே, உயரப்புலம், இளவாலை, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பேசமுடியாத தகப்பனும் மூத்த மகனும் உள்ள திரு சிவானந்தராசா லக்‌ஷன் குடும்பத்திற்கு அரசாங்க உதவியுடன் கூடிய 10 லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. உண்மையில் இந்த பணத்தில் வீட்டுத்திட்டப் பணிகளை நிறைவு செய்ய முடியாது. மேலும் 7 லட்ச ரூபா தேவையாக உள்ளது. இதற்கு முன்னரும் பல தடவைகள் இவர்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்காது தவறியது. இம்முறை எவ்வாறாவது இவ்வீட்டுத்திட்டத்தை கட்டி முடிக்கவேண்டும் என்ற அறிவுறுத்தலோடு இவ்வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்றது. வேறு எந்த அமைப்பும் உதவி செய்ய முன்வராத சந்தர்ப்பத்தில் எமது புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களையும் கருணையுள்ளங்களையும் இந்த வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்ய உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதில் எமது புலர் அறக்கட்டளை நன்கொடையாளர்களாலும் கருணைகொண்ட நல்லுள்ளங்களாலும் 250070 ரூபா திரு சி.லக்‌ஷனுடைய வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டத்தை பூரணப்படுத்த மேலும் 450000 ரூபா தேவையாக உள்ளது. உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் 10 பேர் இணைந்து தலா 100$ போட்டு 1000$ (300000 ரூபா) திரட்டி அனுப்ப இயலுமாக இருந்தால் சிறப்பு. அல்லது உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இந்த உதவியானது பனை ஏறும் தொழிலாளியான திரு சி.லக்‌ஷனுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய உதவியாக அமையும். அவருடைய மாத வருமானம் சராசரியாக 20000 ரூபாவில் இருந்து 25000 ரூபாவிற்குள்ளாக இருக்கிறது. இவ்வருமானத்தில் குடும்பச் செலவுகளை சமாளிப்பதே கடினமானது. ஏற்கனவே பனை மரம் ஏறும் போது தவறி விழுந்து கை, கால்கள் முறிந்து குணமடைந்துள்ளார். உங்கள் எல்லோரதும் உதவியானது கஸ்ரப்படும் ஒரு குடும்பத்திற்கு வீடு கட்டி குடிபுகுவதை உறுதி செய்யும். வருமானம் குறைந்த தமிழ் குடும்பங்கள் பலருக்கு இது போன்ற குறைந்த நிதி வீட்டுத்திட்டங்கள் கிடைத்தாலும் அவற்றை பூரணப்படுத்த அவர்கள் கடனாளிகளாக மாறியுள்ளனர் என்பதையும் கவனத்தில் கொண்டு சிறுதுளி தான் பெருவெள்ளமாக மாறுகிறது என்பதால் துளித்துளியாய் உங்கள் எல்லோரதும் உதவியை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். சிவரஞ்சன் தேவகுமாரன் தலைவர் புலர் அறக்கட்டளை +94 77 777 5448 / +94 77 959 1047 அரசின் நிதி உதவியும் நன்கொடையாளர்களது நிதி உதவி சம்பந்தமான வங்கிக்கூற்று மேலே.
  24. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் அடையாளம் காணப்பட்டனவா? 30 Aug, 2025 | 03:54 PM துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மூடப்பட்ட, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழியான கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண்பதற்கான பத்திரிகை விளம்பரத்தை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) வெளியிட்டு மூன்று வாரங்கள் ஆவதாக, வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரண வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார். எனினும், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வந்ததாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என சட்டத்தரணி மேலும் தெரிவிக்கின்றார். "நபர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன. இதற்கு கால அவகாசம் போதுமானதல்ல என்பதால் OMP அலுவலகம் இன்று நீதிமன்றத்தில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பாக எங்களுக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை." கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால், அச்சமின்றி முன்வருமாறு அழைப்பு விடுத்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அவ்வாறு முன்வருபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் வலியுறுத்தினார். ஓகஸ்ட் 3ஆம் திகதி OMP அலுவலகம் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரம் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா? என, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், பத்திரிகை விளம்பரம் உடனடியாக மக்களைச் சென்றடையவில்லை என சுட்டிக்காட்டினார். "இது மக்களைச் சென்றடைந்ததா என்பதை மக்களிடம் கேட்டுதான் அறிய முடியும். ஏனெனில் பத்திரிகை விளம்பரங்கள் உடனடியாக மக்களைச் சென்றடைவதில்லை." தாம் பட்டியலிட்டுள்ள பிற பொருட்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள், 2025 செப்டம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாக தமது பிரதான காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களுக்கு வருமாறு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஓகஸ்ட் 3, 2025 அன்று வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தில் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 30 மனித எலும்புகளுடன் தொடர்புடைய பிற பொருட்களின் பட்டியல் விளம்பரத்தில் வெளியிடப்பட்டது. கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 90களின் நடுப்பகுதியில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் 2024 மார்ச் மாதம் கையளித்த இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார். தடவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழு, மார்ச் 22, 2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் 1994 மற்றும் 1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை எனவும், சடலங்கள் முறையாக புதைக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிக்கையின் அனுமானம் வெளியிடப்பட்டிருந்தது. ஜூலை 15, 2024 அன்று அகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 52 உடல்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவவின் தனது அறிக்கையில் அனுமானம் வெளியிட்டிருந்தார். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் வெளிப்பட்டன. https://www.virakesari.lk/article/223783
  25. 7) திரு பிரபாகர் சிறிபரமேஸ்வரன் அமெரிக்கா (சங்கானை) 30000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். 29/08/2025 வரை மொத்தமாக 250070 ரூபா கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.