Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கரும்புலிகள் - அடி முடி அறியமுடியா அதிசயங்கள் இசை: இசைப்பிரியன் இறுவட்டு: அறியில்லை/ தனிப்பாடல் மூலம்: ஒளிவீச்சு கதிர் 81 ஜூலை - 2000 (பாகம்1) கரும்புலிகள் நாங்கள் இங்கு கானம் இசைக்கிறோம் பெருமொலியாய் வெடித்து உயிரைத் தானம் செய்கிறோம் தலைவன் வழியில் நின்றுகொண்டு தணலை மூட்டுறோம் தமிழர் வாழ்வை வசந்தமாக்க வெடிகள் ஆகிறோம் உங்களின் வாழ்வுக்காய் நாங்கள் வெடிப்போம் வென்றுமே அண்ணனின் ஆணை முடிப்போம் வேகம் கொண்டு வேங்கை நாங்கள் பகையில் மோதி வெடிப்போம் தாகம் தமிழீழமென்று சாவை வாழ்வாய்ப் படைப்போம் அண்ணனின் அணியிலே பொங்கும் கரும்புலிகள் நாம் எண்ணமெல்லாம் எங்களுக்கு தமிழர் வாழ்வு ஒன்றுதான் விடிவின் வழியை கொடிய பகைவன் அடைத்தால் தகர்த்தெறிவோம் இனத்தை எவனும் அழிக்க நினைத்தால் இடித்தே கதை முடிப்போம் இறந்த பிறகும் உறங்க எமக்கு ஆறடி நிலம் கேளோம் பிறந்த மண்ணில் தமிழர் மூச்சில் கலந்து நின்று வாழ்வோம்
  2. எழுச்சிப் பாடல் புத்தகங்கள் "ஒரு தலைவனின் வரவு" எழுச்சிப் பாடல்கள் தமிழீழ தேசிய பாடல்கள் (1990) தமிழீழ எழுச்சி கானங்கள் - இப்புத்தகத்தில் உள்ள "முல்லைப்போர்" பாடல்கள் சிலவற்றில் இசையமைப்பாளர்களைப் பற்றிய விபரங்கள் பிழையாக உள்ளன. உதாரணமாக, "முல்லை மண்" பாடலுக்கு இசையமைத்தவர் யாழ் ரமணன் தான். அதேபோல, "நந்திக்கடலோரம்" பாடலுக்கு இசையமைத்தவர் தமிழீழ இசைக்குழு. அத்துடன், "ஊரில் புகுந்து" பாடலுக்கு இசையமைத்தவர் இசைவாணர் கண்ணன் அவர்கள். தமிழீழ எழுச்சிப் பாடல்கள் – பாகம் 1 - இப்புத்தகத்தில் இடம்பெற்ற "குயிலே பாடு" பாடல்வரிகளில் வரும் "கழுத்தில் ஆடுது நஞ்சு" என்று தொடங்கும் வரியை "கழுத்தில் ஆடுது நெஞ்சு" என்று பிழையாக எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இதேபாடலில் "பகை விரட்டி எடுப்பரே பலிகள்" என்பதற்குப் பதிலாக "பகை விரட்டி எடுப்பரே புலிகள்" என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் – பாகம் 4 வெற்றிமுரசு பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்) போர்ப்பறைப் பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்) எழுச்சிப் பாடல் புத்தகங்கள் அ பாட்டுப் புத்தகங்கள் ஏராளம்.... இறுவட்டுகள் வெளிவந்தவுடன் பாட்டுப் புத்தகங்களும் வெளியாகும். இவ்வாறு வெளிவந்தவற்றுள் மேற்கண்ட 7 மட்டுமே இப்போது வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. பல ஊழியால் அழிந்துவிட்டன.
  3. தமிழீழ இசைக்குழுவினரின் படிமங்கள் (இவர்கள் தவிர வேறு யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயரை மட்டும் (முதற் பெயர் மட்டும்) தெரிவித்துதவுக, ஆவணப்படுத்துவதற்கு.) தகவல் வழங்குநர்: இனந்தெரியாத ஒருவர் இடது: எஸ். ஜி. சாந்தன் | வலது: எஸ்.பி. ஈஸ்வரநாதன். இவர் தமிழீழ இசைக்குழுவின் பொறுப்பாளராக இருந்தவர் ஆவார். இவர் கருணாவுடன் பிரிந்து சென்ற போது கொல்லப்பட்டார. அவரது குடும்பத்தினரில் சிலர் வஞ்சகன் கருணாவின் ஆதரவாளர்கள் என்பது நானறிந்தது. அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் ஆனையிறவின் மேனி தடவி என்ற பாடலுக்கு இசையமைத்தவர்களில் இவரும் ஒருவராவார். அது மட்டுமன்றி, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் மீது பாடப்பெற்ற "பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்" என்ற பாடலின் இசைக்குச் சொந்தக்காரருமாவார். தவிபு ஆல் வெளியிடப்பட்ட ஆனையிறவின் மேனி தடவி பாடல் காட்சியில் இவர் சீருடையில் தோன்றுகிறார்: https://eelam.tv/watch/ஆன-ய-றவ-ல-ம-ன-தடவ-aanaiyiravil-meeni-thadavi-original-version-elephantpass-victory-song_9A1oTREri6Mn2NC.html குட்டிக்கண்ணன் = கப்டன் சிலம்பரசன் பெயர்: சிவா பெயர்: பாப்பா ============================== எஸ். பி. ஈஸ்வரநாதனின் இறப்பிற்குப் பிறகு தென் தமிழீழத்தில் மேஜர் கருவேந்தனின் தலைமையில் தமிழீழ இசைக்குழு உருவாக்கப்பட்டு செயற்பட்டது (ஆதாரம்: மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 10).
  4. இறுவட்டு அட்டைகள் ஜீவ ராகங்கள் மூல அட்டை: இரண்டாவது அட்டை: "ஜீவ ராகங்கள்" - ஒரு கலாவதானியின் விமர்சனப் பார்வை திறனாய்வு: மூலம்: எரிமலை ஜனவரி 1991 பக்கம்: 21-23 தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவின் பிரெஞ்சுக் கிளையினரால் வெளியிடப்பட்ட ஜீவராகங்கள் பாடல் ஒலியிழை நாடா பற்றிய விமர்சனம். ஜீவராகங்கள் ஜீவனுடைய ராகமேதான்! பொழுது சாயும் நேரம், கடற்கரையில் போராளிகள் எதிரியை முறியடிக்க அவனின் வரவு நோக்கிக் காத்திருக்கின்றார்கள். பாதுகாப்பு உறையில் தோன்றுகின்ற காட்சியே முதலில் எம் கண்களில் ஒரு கவிதை எழுதுகின்றது. துயர்படவும், துடித்து மாளவும், அடிபடவும், குண்டு துளைத்தோர் கோரம் காணவும், அழுது துயர் தோய்ந்து சாகவுமோ மனிதன் பிறந்தான்! எம்மை ஒத்த ஜீவன்கள், எம் வாழ்வுக்காய் போராடுவதையும், மண்ணை மீட்கப் போரில் சாவதையும், அந்நிய தேசத்தில் நாம் அகதிகளாய் துயருறுவதையும், மண்ணுக்காய் ஆற்ற எமக்கு கடமை ஒன்றிருப்பதையும் நினைவூட்டுவதாய் பாடல்கள் அமைந்துள்ளன. ஏக்கங்களையும், நம்பிக்கைகளையும் சுமந்துகொண்டு புதியதொரு உலகத்திற்குச் செல்லும் உணர்வு, பாடல்களைக் கேட்கும் போது ஏற்படுகின்றது. அம் மனயாத்திரை எம்மையறியாமல் இயல்பாகவே நடைபெறுகின்றது. இதிலுள்ள பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம். "கண்ணோடு ஒரு கனவு" என்று தொடங்குகின்ற பாடலில் "செம்புழுதித் தரைகளெல்லாம் செந்நீர் குளிக்கிறதே" என்று ஒலிக்கின்ற பாடல்வரி புழுதி அளைந்து ஓடி ஆடிய தரைகளில் இன்று ஒரு விடுதலைப் போர் நடக்கின்றது என்பதைக் காட்டி நிற்கின்றது. அதே பாடலில் "செந்தமிழ் மண் நிலை எண்ண கண்ணோரம் கரைகிறதே!" என்று வருகின்றது. தாய்மண் பிரிவின் வலியை நொந்து அனுபவிக்கின்றார் அக் கவிஞர். கேட்கிற எம் கண்களை குளமாக்குகிறது அக் கவிதை. "எங்கள் தேசம் எங்களுக்கே உரிமை" என்ற பாடல் எமது தேச விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்; அதற்காகப் பாடுபட வேண்டும் என கவிஞர் வலியுறுத்துகிறார். விடுதலை என்பது பெற்றுத் தருவதல்ல; போராடி இரத்தம் சிந்திப் பெறுவது என்பதை வலியுறுத்தும் வகையில் இப்பாடல் அமைகிறது. "மனிதன் என்றொருவன் அடிமையாகலாமா?" என்ற பாடலில் வரும் "அடிமை நிலை இதுவேண்டாம்; என்றும் சுதந்திரம் சுதந்திரம்" என்ற வரிகள் ஒரு தந்தையார் தன் குழந்தைக்கு சொல்வது போல் ஒலிக்கின்றன. "புதிய சரிதம் எழுதவே" என்று தொடங்குகிற பாடலைப் பார்ப்போம். இந்திய இராணுவம் 1987 ல் எமது தேசியத் தலைவரை நயமாக அழைத்துச் சென்று பின்னர் அசோகா ஹொட்டலில் சிறைவைத்திருந்த போது மக்கள் நாட்டில் திரண்டெழுந்தார்கள். இந்திய இராணுவத்தை மறியல் செய்தார்கள். தலைவரை விடும்படி போராடினார்கள். இந்த நிதர்சனத்தைக் கவிஞன் தன் பார்வையில் மிக நேர்த்தியாக எளிமையாகப் பாடுகிறான். "காவலனைக் காக்கும் மக்கள் மலைகளல்லவோ! மாமனிதன் பிரபா ஈழத்தலைவனல்லவோ! பெரும் புயலை சிறையில் பூட்டி அடைக்க முடியுமா?" தெம்மாங்கு இசைத் தன்மையில் பாடப்படும் "உலகமெங்கும் வாழும் தமிழர்களே" என்ற பாடல் உலகத் தமிழர்களின் கடமை எது என்று வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. மேலும் அந்தப் பாடலில் "எங்கள் பலம் நம்பித்தானே எம் இளைஞர் களம் போனார்" என்று கவிஞர் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் எமது போராட்டத்தை உலக நாடுகளை நம்பித் தொடங்கவில்லை. எம் உரிமையை வென்றெடுக்க நாம் தான் போராட வேண்டும். தூங்கிக் கிடக்கும் எம் சகோதரர்களுக்கு உரிமையோடு கவிஞர் உரைக்கிறார். "கொள்கைகள் சமத்துவம் அத்தனையும் செயற்படுமே". அந்தக் கவிஞனின் எதிர்பார்ப்பின் சிறப்பம்சமாகவும், உறுதியோடும், நம்பிக்கையோடும் உச்சாடனமாகிறது அப்பாடல் வரி. "ஏன் இந்த மௌனமோ?" என்று தொடங்குகிற பாடலில் "அன்பே" எனப் போராளியை விளித்து, "நீ மகிழ்வான தூக்கம் கொள்கிறாயா?" எனக் கேட்டு நிற்கிற போது அத்துணை நெருக்கம், ஐக்கியமான உறவு விடுதலைப் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே நிலவுவதைக் காட்டி நிற்கிறது. "நாம் பிறந்த நமது மண் எங்களதே" என்ற பாடலில் எமது மண்ணில் எம்மை யார் அடிமைப்படுத்துவது? காற்று, வானம், பூமி யாவும் மக்களுக்கே என்று மார்புதட்டி வீரமாய் முழக்கமிடுகிறார். மனித நேயம், விடுதலை, வீரம், தாய்மண் என்ற பொருள்களில் எழுதப்பட்ட பாடல்கள் என்றும் சிறப்பானவையே. அடுத்து இசை தொடர்பாகப் பார்ப்போமாகில் நல்ல இசையொன்றை கேட்கின்ற திருப்தியிருக்கிறது. ஈழத்து இசைத்துறையில் முன்னேற்றகரமான ஒரு பாய்ச்சலை இசை அமைப்பாளர் செய்திருக்கிறார். "தொலைந்த வாழ்க்கையை எண்ணித் தங்கை கண்ணீர் வடிக்கிறாள்" இங்கே பாடகர் அத்துணை துயரோடு பாடுகிறார். அத்தனை வாத்திய கலைஞர்களின் விரல்களும் சோக நெருடல் கொள்கின்றன. மேற்கத்தைய இசைக் கருவிகளை மிக நுட்பமாக கீழத்தேய இசை வாத்தியங்களின் இசைக்கு இணையாக வாசிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால் இயல்பான மண்ணில் உறவுகளில் இருந்து விலகி சற்று ஆடம்பரமாக அமைந்திருக்கிறது. ஜீவராகங்கள் ஒலி இழை நாடாவில் உள்ள பாடல்களை நாம் இசைத் தன்மையில் தரம்பிரித்துப் பார்க்கையில், கர்நாடக இசைத்தன்மையோடு "ஏன் இந்த மௌனமோ" என்ற பாடலும், தெம்மாங்குப் பாடல் இசைத்தன்மையோடு "உலகமெங்கும் வாழும் தமிழர்களே" என்ற பாடலும், போர்ப்பாடல் இசைத்தன்மையோடு "நாம் பிறந்த நமது மண் எங்களதே", "எங்கள் தேசம் எங்களுக்கே உரிமை" என்ற இரு பாடல்களும், மெல்லிசைப் பாடல்களாக ஏனையவையும் விளங்குகின்றன. பாடல்களின் இடையே அமையும் இசை (INTERLUDE) பாடலின் கருத்தை வலியுறுத்துவதைப் போல் அமைந்திருக்கின்றது. பாடல்களின் வரியை ஆமோதிப்பது போலவும், அடுத்து என்னவென்று வினாவுவது போலவும், தேவையான இடங்களில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இடை இசையை திறம்பட உய்த்து அனுபவித்து இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் சோகமாகப் பாடும் போதும் சரி, வீரமாகப் பாடும் போதும் சரி பாடல்கள் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சியோடு இடை இசை ஒத்துழைத்து நிற்கிறது. கேட்போர் உள்ளங்களில் பாடல் தாங்கியிருக்கின்ற கருத்தை அல்லது செய்தியை பதிய வைப்பதற்கு இசை உதவி உள்ளது. "கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்" என்ற ஈழத்துப் பாடல் நல்ல கருத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு இசையமைப்பாளர் இசை அமைத்திருக்கின்ற தன்மை அப்பாடலை கள்ளுக் குடித்தவன் ஆட்டம் போட உவப்பாய் அமைத்துவிட்டிருக்கிறது. எனவே பாடல்கள் நல்ல பொருத்தமான இசையோடு இழைந்து வரும்போதே அது தாங்கி வருகின்ற விடயத்தை நேர்த்தியாக கேட்போர் மனதில் உறைய வைக்கும். "நாம் பிறந்த நமது மண் எங்களதே" எனத் தொடங்குகிற பாடல் மண்மணத்தை உணர்த்துவதாய் இசையில் வர்ணங்களைச் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர். எனினும் அப்பாடல் முழுநிறைவோடு போர் ஆக்ரோஷ வெளிப்பாட்டைத் தந்துவிடவில்லை. திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதைப் படம்பிடிப்பது போல் எழுதப்பட்ட பாடலுக்கு உயிர்ப்பூட்டல் போல் இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். "ஏன் இந்த மௌனமோ அன்பே ஆனந்த சயனமோ" என்ற பாடலில் "திலீபனே!" என்கிற போது மக்களுக்காக வாழ்ந்து எரிந்து கொண்டிருக்கின்ற தீபத்தின் அசைவு தெரிகின்றது. அந்த இதயத்தின் ஒலிப்பும் கேட்கிறது. "ஒரு தோழன் வயற்காட்டில் பிணமாகலாம்" என்ற பாடல் வரியைப் பாடுபவர்களும் சரி, இசைக்கலைஞர்களும் சரி அப்படியே ஒரு கணம் மௌனித்துப் போனார்கள். பிரபஞ்சம் கூட ஒரு கணம் நின்று போனதாக இசையமைப்பாளர் உணர வைத்து விடுகிறார். இப்படி சில பாடல்களில் இசையமைப்பின் சிறப்பையும், விசேட தன்மைகளையும் நாம் காணலாம். நன்றாக பயின்ற குரல்வளம் மிக்கவர்கள் பாடல்களை உணர்ச்சியோடு பாடியிருக்கிறார்கள். சொற்கள் விளங்க உச்சரிக்கப்பட்டுள்ளன. பாடல்களை மெல்லிதாக ஒலிக்கவிட்டுக் கேட்கும் போது இசையில் சில இடங்களில் சமனிலையின்மை காணப்படுகின்றது. இப்படி சில குறைகளைக் கொண்டிருந்தாலும் ஜீவராகங்கள் காயம் பட்டுப் போன ஏராளமான ஜீவன்களின் இதய நரம்புகளை மீட்ட வல்லது. தாய் மண்ணின் பிரிவின் வலியை சதா தனித்து உணர்ந்தவர்கள் கூடியிருந்து உள்ளம் குமுறவும், உறுதி பெற்றெழுந்து வாழ்வை மீட்கவும் வழிகாட்டும். இதே போன்று மண்ணின் விடுதலை வேண்டி ஏராளமான பாடல்கள் எழ வேண்டும். விடுதலையை வென்றெடுக்க கலையும் இலக்கியமும் கூட ஒரு ஆயுதமாக திகழ்கின்றது என்பதை மனதில் கொண்டு அழுத்தம் கொடுத்து செயற்பட முன்வாருங்கள். *****
  5. இறுவட்டு அட்டைகள் ஜீவ கானங்கள் கீழுள்ளதே மூல அட்டையாகும். இதைத் தவிர வணிக நோக்கிலான அட்டைகளும் இதற்குண்டு.
  6. இறுவட்டு அட்டைகள் வேர் விடும் வீரம்/ வல்லமை தரும் மாவீரம் இவ்விரு பெயரிலும் வெளிவந்த இறுவட்டிலிருந்த பல பாடல்கள் தான் புலிகளால் இறுதியாக இசையமைக்கப்பட்ட பாடல்களாகும். அவை முறையாக ஒரு இறுவட்டாக்கப்பட்டு தகுந்த வெளியீட்டு நிகழ்வினூடு வெளியிடப்பட முன்னரே இறுதிப் போரின் கடைசிக் கட்டம் நடந்தமையால் அவை புலிகளால் வெளியிடப்படவில்லை. எம்மவர்களின் அழிவிற்குப் பின்னர் - தமிழீழ ஆதரவாளர்களால் இப்பாடல்கள் மீட்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர், அவை வெளிநாட்டிற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து இரு பெயர்களில் வெளியாகின. இதற்குள் உள்ள "கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை" என்ற பாடல் 2009இற்கு முன்னரே புலிகளால் தனிப்பாடலாக வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இவை தமிழீழ நடைமுறையரசின் நேரடி அலுவல்சார் வெளியீடுகள் இல்லாமையாலும் இவ்விறுவட்டுகளின் பெயர்கள் தமிழீழ நடைமுறையரசால் வழங்கப்படமாயாலும் நான் இவற்றின் அட்டைகளை இங்கே இணைக்கவில்லை.
  7. இறுவட்டு அட்டைகள் வேங்கைகளின் விடுதலை வேதங்கள் இது தமிழீழத்திலிருந்து வெளியான இரண்டாவது வெளியீடாகும். இதற்கு எழுதப்பட்ட ஓர் பாடலில் தலைவர் விரும்பியது போல சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான "துயிலுமில்லப் பாடலாக" வெளிவந்தது. இந்த இறுவெட்டின் மேல் 2009இற்குப் பிறகு நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் வணிகம் செய்யும் இவ் வலைத்தளம் தன்னிடம் கிடைக்கப்பெற்ற இவ்விறுவட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் நிறுவனத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இருப்பினும் அவ்வொலியை நீக்க இயலும். இந்து போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது.
  8. இறுவட்டு அட்டைகள் வெஞ்சமரின் வரிகள் நீளும் இசைவெளியில் 'வெஞ்சமரின் வரிகள்' திறனாய்வு: அமரதாஸ் மூலம்: எரிமலை (மார்ச் 2003) பக்கம்: 38-40 இசையும் மொழியும் மனிதனுக்கேயுரிய தனிப்பெரும் சொத்துக்கள். இவை, இல்லா உலகை மனிதனால் ஜீரணிக்க முடியாது. மொழியும் இசையும் முழுமனித இனத்திற்கேயுரிய தனிப் பண்புகள் என்று கூறுகின்றது 'த மியூசிக்கல் மைன்ட்' என்ற நூல். மொழியும், இசையும் மனிதனின் தொடர்பாடல் முறைகளுக்கு உயிர்நாடிகள். மொழியைப்போலவே இசையும் பேசக்கூடியது. இசை மொழி உணர்வுகளுடன் பேசுவது. இசை பேசும் போது மனிதனின் உணர்வுகள் கேட்கின்றன; உள்வாங்கிக் கொள்கின்றன. இசையானது உணர்வுகளைச் சுண்டி இழுக்கக் கூடியது. அலைபாயும் மனதை ஆசுவாசப்படுத்தக் கூடியது. இசை குறிப்பிட்டதொரு மனநிலையை உருவாக்குகிறது அல்லது மாற்றுகிறது. 1930கள் மற்றும் 40களில் கிட்லருடைய வசீகரிக்கும் பேச்சை மக்கள் கேட்பதற்காக உணர்வைத் தட்டியெழுப்பும் அணிவகுப்பு இசையை 'நாஸிகள்' பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து இசையின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். இசை புதிது புதிதாக உணர்வுகளைக் கட்டமைத்துச் செல்லும் வித்தை. இசையே ஒரு தனி மொழி. இது உலகெங்கும் எல்லாத்துறைகளிலும் ஊடுருவி வேலை செய்திருக்கிறது. இசையால் மனத்தை மயக்கமுடிகிறது. அதனால் நன்மையோ தீமையோ செய்யத் தூண்டுவிக்க முடிகிறது. சிலவகை இசையை சிறுபிள்ளைகள் கேட்டுக் கொண்டே இருந்தால், அது அவர்களது அறிவுப் புலமையையும் உணர்ச்சி ரீதியலான வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. "நகர முடியாமல் தவிக்கும் நரம்புக் கோளாறுகளுடைய நோயாளிகள் மீதும் இசை ஏற்படுத்தும் தாக்கம் சில சமயங்களில் மலைக்க வைக்கிறது" என்று 'இசையும் மனமும்' என்ற நூலில் 'அந்தோனி ஸ்ரோ' கூறுகிறார். இசை தனிவலிமையால் ஏராளமான நன்மைகளை விளைவிக்கின்றது. இந்த இசையே வேறுவிதமாக தீமைகளுக்கு தூபம் போடவும் செய்கிறது. சுய உணர்வையும், பகுத்தறிவையும் இழந்து நுகர்வோரை ஒருவித போதை உணர்ச்சிகளுக்கு அடிமைகளாக்கவும் செய்கிறது. எனவே இசையைக் கையாள்பவர்களும் நுகர்வோரும் அதை அறிவுபூர்வமாகவும் அணுக வேண்டிய தேவை உணரப்படுகிறது. உணர்ச்சிகளை வர்ணிக்க பல வாக்கியங்கள் தேவைப்படக்கூடும். ஆனால், இசையில் உணர்ச்சிகளை எளிமையாக ஓரிரு சுர அடுக்கிலேயே வெளிப்படுத்திவிட முடியும். தமிழரின் இசை முயற்சிகள் மிகவும் தொன்மையானவை. தமிழ்மொழி பண்டைக்காலத்தில் இயல், இசை, நாடகம் என மூன்று வகைகளாக பாகுபாடு பெற்று வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. முதற்சங்கப் புலவரில் ஒருவராகிய அகத்தியரால் இயற்றப் பெற்ற அகத்தியத்திலேயே தமிழ் மூன்று வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்திலே முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, இசைமரபு, இசைநுணுக்கம், பஞ்சபாரதீயம், இந்திரகாளியம் போன்ற இசைத்தமிழ் நூல்கள் எழுந்திருக்கின்றன. அவை மறைந்து போயின. எனினும் பண்டைக்கால இசைத்தமிழ் வளர்ச்சியை அறிய தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, உதயணன் காதை போன்ற நூல்களும் இடைக்கால நூல்களான தேவாரம், பெரியபுராணம் போன்ற நூல்களும் இன்று உதவும். இன்றைய கர்நாடக இசைக்கு தேவாரப் பண்ணிசையே ஆதிமூல வடிவமாக விளங்குகின்றதென இசை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இசையானது தமிழரின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்றது. பிறப்பிலிருந்து இறப்பு வரையான, வாழ்வின் பகுதிகளையெல்லாம் தாலாட்டிலிருந்து ஒப்பாரி வரையாக இசையால் நிறைத்து வந்த பாராம்பரியம் தமிழருடையது. இசைப்பாடல்களுக்கான தேவைகள் இன்றுவரை இருந்து வந்திருக்கின்றன. இனியும் இசைப்பாடல்களுக்கான தேவைகள் இருந்து கொண்டிருக்கும். வார்த்தைகளை அல்லது எண்ணங்களை உணர்ச்சிகளோடு சங்கமமாக்க இசை உதவுகிறது. பெரும்பாலும் இசைப்பாடல்களில் வார்த்தைகள் அவ்வளவு கருத்தாளம் மிக்கதாகவோ இலக்கியச் செறிவுள்ளதாகவோ அமைவதில்லை. பின்னணியில் பொருத்தமான இசை இசைந்து வருகையில் வார்த்தைகள் அல்லது எண்ணங்கள் கேட்போரின் உணர்வை எளிதாகவும் விரைவாகவும் கவர்ந்திழுத்து விடுகின்றன. இசையின் தன்மையிலேயே உணர்வு, செய்தி பெருமளவுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடுகின்றன. இசைப்பாடல் எழுதுவதென்பது இலகுவான காரியமல்ல. இசைப்பாடல் அடிப்படையில் கேட்டல் ஊடகமாக புரியும்படியானதாகவும் உள்ளதால் கேட்கும்போதே எளிமையானதாகவும் சூழ்நிலை புலப்படும் படியாகவும் ஒத்திசைவுடனும் அழகியல் அம்சங்களுடனும் எழுதப்படவேண்டி இருக்கிறது. பாடலைக் கேட்கும்போதே அப்பாடலின் சூழ்நிலையும் மைய உணர்வும் எம்முள் விரியவேண்டும். இதைச் செய்வதில் இசைக்கு முக்கிய பங்குண்டு. அகத்துள் ஊடுருவி படிமங்களை நிகழ்த்தக் கூடியதாக இசை இருக்கிறது. அதுவே ஒரு தனிமொழியாக இயங்கும் தன்மை கொண்டது. எனவே இசைப்பாடலில் வரிகளுக்கு அதிக முக்கியத்துவம்மில்லாது போகக்கூடிய நிலை தோன்றக்கூடும் விடுதலைப் போராட்ட சூழலில் வெளிப்படும் இசைப்பாடல்களில் வரிகளுக்கான முக்கியத்துவத்தைத் தவற விடுதல் நல்லதல்ல. வரிகளுக்கான விழிப்புணர்ச்சியை புதிய சிந்தனைகளை காலப்பதிவைச் செய்யவேண்டிய தேவை விடுதலைப் போராட்ட கால இசைப்பாடல்களுக்கு உண்டு. இசையும் வரிகளும் இணைந்த இசைப்பாடல்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட சூழலில் அதிகம் வெளிப்பட்டிருக்கின்றன. இவை, தென்னிந்திய தமிழ் சினிமாப் பாடல்களின் தாக்கம் அதிகமுள்ள ஈழத்தமிழ்ச் சூழலில் புதிய வரவாக புரட்சிப்போக்காக அமைந்திருக்கின்றன. போராட்டச்சூழல் இந்தப் புதிய போக்கின் தேவையை அதிகமதிகம் கொண்டிருந்தது. புதிய இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள்,பாடகர்கள், இசைக்கலைஞர்கள் தோன்றினர். இந்தப் போக்கில் போராளிகளும் பொதுமக்களும் கலந்திருந்தனர். பிரதானமான போராட்டசக்தியான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பல்வேறு பிரிவினரும் தனித்தனியாக இசைப்பேழைகளை உருவாக்கினர். தேவைகள் அதிக விளைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றுள் கணிசமானவை வளர்ச்சி நிலையைக் காட்டுவன. அவற்றுள் பல காலப்பெறுமதி வாய்ந்தவையாயும் கலைத்தனமானவையாயும் வெற்றிபெற்ற படைப்புகளாகவும் நின்று நிலைக்கக் கூடியவை. அண்மைக் காலத்தில் புதிய வரவாக தமிழீழ இசைக்குழுவின் அமைப்பாளர் எஸ்.பி.ஈஸ்வரநாதனின் இசையமைப்பில் மலையவனின் ஒலிப்பதிவில் 'வெஞ்சமரின் வரிகள்' என்ற இசைப்பேழை மாலதிபடையணியின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 2002.10.10 அன்று 2ம் வெப். மாலதி நினைவு நாள் மற்றும் தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள் நிகழ்வில் அது வெளியிடப்பட்டது. "எல்லை கடந்துவரும் பகைவருக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும் எங்களின் ஓய்வேயற்ற களவாழ்வு வித்தியாசமானது. உறவுகளை நினைவுகளில் சுமந்தவாறு நெருப்பெரியும் நிலமெங்கும் உலவும் எங்களின் ஆன்மாவின் குரலாகவே இந்தப் பாடல்களை நாங்கள் உருவாக்கினோம். தென்றலையும் தீயாய் மாற்றும் ஆற்றல் மிக்க எங்கள் பெருந்தலைவர் பிரபாகரனின் விழிகளே எங்களின் ஊற்றுவாயாக இருக்கின்றது. களத்திலேயே வாழும் எங்களிடம் தலைவர் காட்டும் தாயன்பு ஈடிணை அற்றது. எங்களின் ஒவ்வொரு அசைவும் அவரின் ஆற்றலால் நெறிப்படுத்தப்படுகின்றது. தலைவரின் நினைவோடு தாய்மண்ணின் கனவைச் சுமந்து களமெங்கும் நடக்கின்ற நாங்கள் இதுவரை வெற்றிச் செய்திகளாகவே எங்கள் செவிகளை வந்தடைந்தோம். இப்போது விடுதலைப் பாடல்களாக வருகிறோம்" என்ற அறிமுக உரையுடன் தொடங்கி ஒன்பது பாடல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த இசைப்பேழை. ஏற்கனவே விடுதலைப்புலிகள் மகளிர் படையணியினர் 1993இல் 'விழித்தெழுவோம்' என்ற பெயரிலும் 1995இல் 'நெருப்பு நிலவுகள்' என்ற பெயரிலும் 2000 இல் 'சூரியப்புதல்விகள்' என்ற பெயரிலும் இசைப்பேழைகளை வெளியிட்டுள்ளனர். மகளிர் படையணிகளில் ஒரு படையணியான மாலதி படையணி இப்போது 'வெஞ்சமரின் வரிகள்' என்ற பெயரில் 2002 இல் ஒரு இசைப்பேழையை உருவாக்கி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இம்முயற்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்போராளிகளின் தீவிர ஈடுபாட்டையும், பங்களிப்பையும் ஆர்வத்தையும் புலப்படுத்துகின்றன. இனி, 'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழைபற்றி ரசனைத்தளத்தில் எழுந்த சில கருத்துக்களை சுருக்கமாக முன்வைக்கலாம். மாலதி படையணி, போராட்டப் பாதையில் எதிர்கொண்ட சவால்களையும், அனுபவங்களையும், சாதனைகளையும் 'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழைவாயிலாக பதிவு செய்யும் முயற்சியில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இசைப்பேழையினது 1ஆவது பாடலாக "மாலதி என்னும் எம் போரணி..." என்ற பாடல் உள்ளது. படையணிப் போராளிகள் படையணிபற்றிப் பாடுவதான பாடல் இது. 2ஆவது பாடலான "காவலரண் மீது காவலிருக்கின்ற..." என்ற பாடல் பெண் போராளியின் தகப்பன் அவளைப் பற்றிப் பெருமிதமாகப் பாடுவதாக அமைந்திருக்கிறது. வரிகளுக்கேற்ப மெட்டும் இசையும் கையாளப்பட்டிருக்கிறது. 3ஆவது பாடலான "தென்றல் தீயாய் மாறும் காலம்..." என்ற பாடல் போராளிகள் தமது தலைவனின் கருத்துக்களை முன்வைத்துப் பாடும் பாடலாக வித்தியாசமான பாடல் எழுத்து முயற்சியாக இருக்கிறது. 4ஆவது பாடலான "மின்னல் இடி மழை கொண்டதோர்..." என்ற பாடல் புரட்சிப் பெண் எனும் படிமத்தை அதன் பரிமானங்களைச் சுட்டும் பாடலாகத் தோன்றுகிறது. இசைப்பேழையினது 5ஆவது பாடலான "தோளின் சுமைகளில் பங்கேற்று..." என்ற பாடல் பெண் போராளிகளின் போராட்டப் பங்களிப்பை வெளிப்படுத்தி பெருமிதமாக ஆண் போராளிகள் பாடும் பாடலாக அமைந்துள்ளது. பொருத்தமான மெட்டும் இசையும் கையாளப்பட்டிருக்கிறது.6ஆவது பாடலான "கோப்பாய் வெளிக்காற்றில்..." என்ற பாடல் மாலதி பற்றியும் மாலதி படையணிபற்றியும் பெண்போராளி பாடுவதாக அமைந்துள்ளது. 7ஆவது பாடலான "இருளின் திசைகள் புலரும் வரையும்..." என்ற பாடல் மாலதி படையணியின் எழுச்சிப்பாடலாக அமைந்துள்ளது. வீறார்ந்த மெட்டும், இசையும் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. பாடும்குரல் ஆண்குரலாக அமைந்திருப்பது பொருத்தமற்றுத் தெரிகிறது. பெண்கள் படையணியின் எழுச்சிப்பாடலுக்கு பெண்குரலே அதிகம் பொருத்தமாய் இருந்திருக்கும். 8ஆவது பாடலான "கல்லறைகள் உங்களுக்காய்..." என்ற பாடல் வீரச்சாவடைந்த போராளிகளுக்கானதாய் அவர்களின் உயர்வை, தியாகத்தைப் பதிவு செய்வதாக அமைந்திருக்கிறது. வரிகளுக்கேற்ற அமைதியான மெட்டும், இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 9ஆவது பாடலான "வெல்லும் தலைவன் விழியில்..." என்ற பாடல் மாலதி படையணிப் போராளிகள் பாடுவதாக உள்ளது. இதன் மெட்டு கர்நாடக சங்கீத பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. மெட்டு நல்லதாகவே உள்ளது. ஆனால் பாடல் வரிகளின் உணர்வுகளுக்குப் பொருந்தாமல் ஒத்திசையாமல் நர்த்தகிப்பதாகவே படுகிறது. பெருமளவு நிறைவாக பாடல்களுக்கேற்ற மெட்டும், இசையும், குரலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவே உணர முடிகிறது. சில பாடகர்கள் பாடும்போது குரலில் அநாவசியமான பாவங்களைக் காட்டுகிறார்கள் போலிருக்கிறது.'வெஞ்சமரின் வரிகள்' இசைப்பேழையை முழுதாகக் கேட்டு முடித்ததும் நல்ல பாடகர்களும், பாடலாசிரியர்களும், இசைக்கலைஞர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடிகிறது. சில பாடல்களின் வரிகள் உணர்வு பூர்வமானவையாகவும் கவித்துவமாகவும் அமைந்திருக்கின்றன. சில பாடல்கள் ஒத்திசையாத வரிகளாலும் வலிந்து புகுந்த வார்த்தைகளாலும் இடறுப்படுவதாகத் தோன்றுகிறது. மெட்டமைப்பிலும் இசையிலும் சில சறுக்கல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பாடல்களின் இசைக்கோர்ப்பில் இசையமைப்பாளரின் திறமை பளிச்சிடுகிறது. ஒவ்வொரு பாடல்களுக்கும் இடையில் உள்ள இடை வெளிகளில் பாடலாசிரியர், பாடியோர், இசைக்கலைஞர்கள் ஆகியோரது விபரங்களைச் சேர்த்திருக்கலாம். இப்படிச் செய்வதனூடாக அவர்களது பங்களிப்பை கௌரவிக்க முடியும். அவர்களது பங்களிப்பும் முயற்சியும் பொருத்தமாகவும் சரியாகவும் பதிவு செய்யப்படவேண்டியது அவசியம். இல்லையேல் எந்தப் பாடலை யார் எழுதினார் அல்லது பாடினார் என்று தெரியாமலேயே போய்விடும். இசைப்பேழையின் இறுதியில் பொதுவாகப் பெயர் விபரங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனவெனினும் தனித்தனியாக இனங்காட்டப்படவில்லை. இந்த இனங்காட்டலை இனிமேலாவது இசைப்பேழைகளை உருவாக்குவோர் செய்வது நல்லது. இந்தியாவில் திரைப்படங்களிலேயே அதிக இசைப்பாடல்கள் வருகின்றன. திரைப்பாடல்களுக்கு அப்பால் இசைப்பாடல்கள், இசைக்கோலங்கள் 'அல்பங்களாகவும்' வெளிவருகின்றன. அவை பெருமளவுக்கு வெகுசன ஆதரவினையும் பெறுகின்றன. ஈழத்தமிழரின் இசைப்பாடல்களும், இசைக்கோலங்களும் அதிக அளவில் 'அல்பங்கள்' ஆக்கப்பட்டு வெகுசனங்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டும். அவற்றை மேலைநாடுகளிலோ இந்தியாவிலோ அவ்வப்போது நிகழ்த்தப்படும் இசை அபத்தங்களுக்கு மாற்றாக ஆற்றுப்படுத்த வேண்டும். இசைப்பாடல் என்பது ஒரு கூட்டுக்கலை. பாடகரின் குரல் வளமும், இசையமைப்பாளரின் மெட்டும், இசையும், பாடலாசிரியரின் வரிகளும் ஒத்திசைந்து வளரும்போதுதான் ஒரு நல்ல இசைபாடல் கிடைக்கிறது. இசைப்பாடலின் வெவ்வேறு கூறுகளில் ஈடுபடுவோரது தேர்ச்சியும், பிரக்ஞையும் ஆழமாகும்போது விநோதமான, வினைத்திறன்மிக்க, வித்தியாசமான ஒத்திசைவுகள் நிகழும், நவீன இசைவழி நீளும். *****
  9. இறுவட்டு அட்டைகள் வீழமாட்டோம் இந்தியத் தமிழ்க் கவிஞரான திரு. வைரமுத்துவால் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் புலிகளால் அதே பெயரில், 2009 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்து போனது. இதனது அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.