Everything posted by கிருபன்
-
சுய கண்டடைதல் : கல்பற்றா நாராயணன்
சுய கண்டடைதல் : கல்பற்றா நாராயணன் தமிழில் : அழகிய மணவாளன் “கண்ணாடி மிக அதிகமான பதிப்புகள் வெளிவந்த பெஸ்ட் செல்லர் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் கொண்ட என்றென்றைக்குமாக வாசிக்கப்படும் நூல் பைபிளைவிட அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்பட்ட புனிதமான நூல்.“ (நிழலை கைப்பற்றுதல் – கல்பற்றா நாராயணன்) கண்ணாடிக்கு பச்சைத்தண்ணீரின் நிறம். பிரதிபலித்தல் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் நீலநிற நீர்த்தேக்கம் (Now I am a lake mirror- Sylvia Plath). நார்ஸிஸஸ் தன் நீர்ப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு மூழ்கி மறைந்த தடாகம் ஒவ்வொருமுறை நான் கண்ணாடி பார்க்கும்போதும் எழுந்துவருகிறது. மனிதர்கள் அதில் நீந்தித்திளைக்கிறார்கள். அதில் மூழ்கி தங்களை தொலைத்தும் விடுகிறார்கள். கண்ணாடியைவிட ஈர்ப்பான வேறு எந்த பொருளையும் மனிதன் படைக்கவில்லை.‘ கண்ணாடியைப் பார்த்து வாங்கமுடியாது/ கண்ணாடி பார்ப்பவர்களாக ஆகிவிடுவோம்’. கண்ணாடி மாட்டப்படாத வீடு எது? அங்காடிகளில் ’இது ஒரு வீடு’ என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. நீரில் பிரதிபலித்த ’சுயரூபம்’ தான் மனிதனில் தன்னுணர்வை உருவாக்கியது. தன் சொந்த நீர்ப்பிம்பத்திலிருந்து உருவாகிவரும் தன்னுணர்வை விவரிக்கும் உருவகக்கதை ஒன்றுண்டு: நிறைமாத கர்ப்பிணியான புலி மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளை பதுங்கியிருந்து தாக்குகிறது. ஆடுகள் தப்பிவிடுகின்றன. வேகமாக பாய்ந்தது கீழே விழுந்த அதிர்வில் புலி குட்டியை ஈன்றுவிட்டு பிரசவத்திலேயே இறந்தும் விடுகிறது. ஆடுகள் அனாதையான புலிக்குட்டியை தங்களுடன் எடுத்துச்சென்று வளர்த்தன. அது ஆடுகளுடன் புல்லை உணவாக சாப்பிட்டது. ஆடுபோல கனைத்து, மிகமெதுவாக நடந்து புல்மேய்ந்து வாழ்ந்தது. ஒருநாள் ஆடுகளுடன் இருந்த அந்த புலிக்குட்டியை இரை தேடிவந்த புலி ஒன்று பார்க்கிறது. புலியைப்பார்த்ததும் ஆடுகள் ஓடி மறைந்துவிடுகின்றன. பயத்தில் ஸ்தம்பித்து நின்ற புலிக்குட்டியை புலி ஆசுவாசப்படுத்தியது. ‘ நீ என் உறவினன். நீ ஆட்டுக்குட்டி அல்ல புலிக்குட்டி. நீ வளர்ந்து பெரிதாகும்போது என்னைப்போல ஆவாய். நாம் புல் சாப்பிட வேண்டியவர்கள் அல்ல. ஆட்டிறைச்சியும் முயலிறைச்சியும்தான் நமது உணவு. என்னுடன் வா, உனக்கு உன்னை யார் என்று காட்டித்தருகிறேன் ’ என்று சொல்லி புலிக்குட்டியை அருகே உள்ள ஆற்றிற்கு அழைத்துச்சென்றது. ஆற்றங்கரையின் ஓரத்தில் தன்னுடன் நின்ற புலிக்குட்டியிடம் ஆற்றை பார்க்கச்சொன்னது புலி. புலிக்குட்டி சிறியது என்றாலும் பார்க்க புலிபோலவே இருக்கும் தன் நீர்ப்பிம்பத்தை பார்த்தது. தன்னை அழைத்துவந்த புலியை பார்த்தது, தன்னால் எவ்வளவுமுடியுமோ அவ்வளவுக்கு தன்னையே பார்த்துக்கொண்டது, தன் நீர்ப்பிம்பத்தை பார்த்தது. மாறிமாறி பார்த்ததுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் புலியாக ஆகக்கூடிய உயிர்த்துடிப்பு தன் உடலில் நிறைந்திருப்பதை உணர்ந்துகொண்டது. தான் புலிதான் என்று அதற்கு நம்பிக்கை வரத்தொடங்கியது என்றாலும் புலியின் உருமல் அதை அச்சுறுத்தியது. ’வா இது முடியவில்லை. உன்னை இன்னும் நீ அறியவேண்டியிருக்கிறது’ என்று சொல்லி புலி ஒரு முயலை வேட்டையாடி புலிக்குட்டிக்கு கொடுத்தது. புல் சாப்பிட்ட பழகிய புலிக்குட்டி முதன்முறையாக சுவை என்றால் என்ன என்பதை அறிகிறது. புலி மட்டுமே அறிய சாத்தியமான தீவிரமான சுவை. தீப்பற்றியது போன்ற உன்மத்தத்தில் அது முயல் இறைச்சியை கடித்து கிழித்து உண்டது. அது தன்னையறியாமலேயே உருமியது. மறைந்திருந்த தேற்றைப்பற்களும் நகங்களும் வெளியே வந்தன. என் பருவடிவம் புலியாக ஆகிக்கொண்டிருக்கிறது. தானாக ஆதல் என்பது எவ்வளவு கம்பீரமான அனுபவம்! எந்த உருவகக்கதையையும்போல இந்த கதையிலும் புலி புலி அல்ல. இந்த கதையில் நிகழ்வதுபோல இம்மாதிரியான புறவயமான தூண்டுதலால் புலிக்குட்டி புலியாக ஆவதில்லை. தன் நீர்ப்பிம்பத்தை கண்டுகொள்ளவோ, அந்த கண்டுபிடிப்பை மாற்றத்திற்கான தூண்டுதலாக ஆக்கவோ புலியால் முடியாது. ஆனால் அந்த ஆற்றல் கொண்ட மனிதனின், அவன் பரிணாமத்தின் கதையாக மாற இந்த புலிக்கதையால் முடியும். மனிதப்பரிணாமத்தின் பொதுத்தன்மையை விவரிப்பதற்காக மட்டுமல்ல அதன் நுட்பமான தனி இயல்புகளையும் சொல்ல இந்த கதையால் முடியும். நரேந்திரனில் விவேகானந்தரை கண்டுகொண்டு அதை நோக்கி அவரை செலுத்திய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையும் ஒருவகையில் இந்த புலிக்கதைதான். குழந்தைப்பருவத்தில் மனித சிசு தாண்டிவரும் ஒரு இக்கட்டை நாடகீயமாக இந்த கதை கையாண்டிருக்கிறது. எப்போது என்று உறுதியாக சொல்லமுடியாத தொல்பழங்காலத்தில், இன்றைய நவீன மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதன் குழந்தைப்பருவத்திலிருந்த மனிதன் தன் தோற்றத்தை/’சுய’ ரூபத்தை நீர்ப்பிம்பத்தில் கண்டுகொண்டுதான் அவனாக ஆகத்தொடங்குகிறான். அது நீர்ப்பிம்பமாக இருக்கலாம் அல்லது பிளாட்டோ சொல்வதுபோல எரியும் நெருப்பிற்கு பின்புறம் உள்ள குகைச்சுவற்றில் பதிந்த நிழலாக இருக்கலாம். அதில் மனிதன் முதல்முறையாக தன்னை நேரடியாக பார்க்கிறான் (ஒருவகையில் எல்லா புகைப்படங்களும் நீர்ப்பிம்பங்களின் பதிலிவடிவங்கள் அல்லவா?). நீர்ப்பிம்பத்தில் தன்னை கண்டடைந்து அதுவழியாக தன்னுணர்வு உருவாகி வருவதன் புறவயமான சித்திரம் இந்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த உருவகக்கதை மிகப்பழையது. ‘கண்ணாடிப்பருவம் (mirror stage)’ என்ற லக்கானின்(Jacques Lacan) உளவியல்ரீதியான கண்டுபிடிப்பிற்கு பல காலம் முன்பே இந்த கதையில் அந்த கருதுகோள் தோற்றம் மாறி நம்மிடம் வந்துசேர்ந்துவிட்டிருக்கிறது. ஒருவகையில் ஆன்மிகமான தேடலில் தன்னை அறிதல்(Realisation) நிகழ்வதற்கு முன்பு கடக்கவேண்டிய தடையையும் அந்த கதை சுட்டிக்காட்டுகிறது. ஸ்ரீநாராயண குரு தான் நிறுவிய கோவில்களில் கண்ணாடியை பிரதிஷ்டை1 செய்தது தன்னுணர்வு கொண்ட மனிதனை உருவாக்குவதற்காகத்தான் (’ஆத்மவிலாசம்’ என்ற பெயரில் நாராயணகுரு ஒரு வசன கவிதை எழுதியிருக்கிறார். அதில் கண்ணாடி பற்றிய அவருடைய அகத்தரிசனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. எவ்வளவு விளக்கங்கள் அளித்தாலும் தீராத அர்த்த சாத்தியங்களுடன், அதற்குமேல் செறிவாக்கவே முடியாத அளவுக்கு அடர்ந்த மொழியில் அந்த கவிதை எழுதப்பட்டிருக்கிறது). புல்தின்று ஆடுகளுடன் வாழ்ந்த அந்த புலிக்குட்டியைப்போல மனிதன் என்ற போதம் இல்லாமல் வாழ்பவர்களை தன்னுணர்வு கொண்டவர்களாக ஆக்குவதற்காகத்தான் நாராயணகுரு கண்ணாடியை பிரதிஷ்டை செய்தார். கண்ணாடியில் நீ உன் உடலைப்பார். இது மனித உடல். ஈழவன் என்றோ, தலித் என்றோ பிராமணன் என்றோ உள்ள பிரிவினைகளுக்கு அப்பால் உள்ளது மனித உடல். எந்த மனிதனிலும் உள்ள எண்ணற்ற சாத்தியங்கள் உன்னிலும் உண்டு. கண்ணாடியில் உன்னைப்பார். உன்னில் இருப்பது சாதி முத்திரையில்லை, மனிதன் என்ற முத்திரை மட்டும்தான். கண்ணாடியில் உன்னைப்பார், ஒரே ஒரு சாதியும் ஒரேயொரு மதமும் ஒரே ஒரு தெய்வமும்தான் இருக்கிறது, அது எந்த வகைபேதங்களும் அற்ற ’மனிதனை’த்தானே காட்டுகிறது? தன்னுணர்வை உருவாக்கும் கண்ணாடி என்ற ஊடகத்தை வழிபாட்டிற்கு உரியதாக ஆக்குவது வழியாக ’மனிதனை’ உருவாக்கியெடுக்கிறார் நாராயணகுரு. மனிதன் அல்லாத மற்ற எந்த உயிரினத்தாலும் அறிந்துகொள்ளமுடியாத தன்னுணர்வை நாராயணகுரு அழுத்தமாக சொல்கிறார். உண்மையில் நாராயணகுரு கண்ணாடி பிரதிஷ்டை செய்யவில்லை, கண்ணாடியில் மனிதனை அவர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மனிதன் தவிர்த்த உயிர்க்குலங்கள் அனைத்தும் இயற்கை என்ற மென்பொருளில் நிம்மதியாக வாழ்கின்றன (மனிதன் அந்த சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவன்). மனிதன் தான் சுயமாகவே உருவாக்கிக்கொண்ட, ஆனாலும் அவனுக்கு போதுமானதாக இல்லாத மென்பொருளில் இயங்குகிறான். இதைப்பற்றிய கற்பனையம்சம் நிறைந்த விவரணை கிரேக்க தொன்மமான எபிமெதீயஸ்(Epimetheus) ப்ரோமெதீயஸ்(Prometheus) என்ற இரட்டையர்களின் கதையில் இருக்கிறது. மனிதன் தவிர்த்த பிற உயிரினங்களுக்கு எபிமெதீயஸ் தன்னிடம் இருக்கும் அரியவற்றை வரமாக கொடுக்கிறான். அடர்ந்த தோல், உடலின் மேற்பரப்பில் குளிர்தாங்கும் அடர்ந்த ரோமங்கள், குளம்பு, நகம், தேற்றைப்பல், கொம்பு, பல அடுக்குகள் கொண்ட குடல், பார்க்க அழகான புறவுடல், அதிக வேகம், உடல்வலிமை, தீவிரமான புலன்கள் என உயிர்வாழ்க்கைக்கு அவசியமானவற்றையெல்லாம் உயிர்களுக்கு எபிமெத்யூஸ் அளிக்கிறான். மனிதனின் முறை வரும்போது தன் கைவசம் இருப்பதையெல்லாம் எபிமெத்யூஸ் கொடுத்து தீர்த்துவிட்டிருந்தான். பிறர் உதவியில்லாமல் வாழமுடியாத, மிகமிக கைவிடப்பட்டவனான மனிதன் முன் எபிமெத்யூஸ் தன்னிடம் எதுவும் இல்லை என கையை விரித்துவிட்டான். மனிதனுக்கு நல்ல உடையைக்கூட எபிமெதீயஸ் அளிக்கவில்லை. மனிதன் மேல் இரக்கம் கொண்ட ப்ரோமெதீயஸ் தேவலோகத்திலிருந்து நெருப்பை கவர்ந்துவந்து அவனுக்கு அளிக்கிறான். நெருப்பை எரிபொருளாக ஆக்கி தான் உயிர்வாழ்வதற்குரிய மென்பொருளை தானே உருவாக்கிக்கொண்டான் மனிதன். முதல்முறையாக நீரில் உற்று பார்க்கும்போது அதில் இருக்கும் பிம்பம் தன் சொந்த நிழல்தான் என்பதை மனிதன் கண்டடைகிறான். ப்ரோமெதீயஸ் அவனுக்கு அளித்த நெருப்பின் முதல் ஒளிர்வு அந்த தருணத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த தருணத்திலிருந்து தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாத- கண்டுகொள்ள முடியாத- ஆரம்பகட்ட உயிரினங்களிலிருந்து மனிதன் உயர்கிறான். அதுவரை கடவுளைத்தவிர யாராலும் அறிய முடியாத அவனுடைய பிம்பத்தை, நிழலை மனிதன் முதன்முறையாக காண்கிறான். ஆத்மவிலாசம் என்ற கவிதையில் ‘இந்த கண்ணாடிதான் நம் கடவுள்’ என்று நாராயணகுரு சொல்கிறார். ’ நம்மை நாம் நேருக்கு நேராக பார்க்கமுடிந்ததில்லை’. இதோ இப்போது அதற்கான வழிமுறை உருவாகியிருக்கிறது. ‘கடவுள் என்பது பரிசுத்தமான கண், அது கண்ணாடியாகவும் ஆகியிருக்கிறது’. கண்ணாடியை கடவுளின் சதுர வடிவமான கண் என்கிறார் சில்வியா பிளாத். பயணத்திற்கு கிளம்பும் மனிதன் கண்ணாடிமுன் நின்று விடைபெற்றுசெல்வதுபோன்ற ஓவியம் ஒன்றை வரைவது வழியாக ஒட்டுமொத்த மனித வளர்ச்சியின் நுண்வரலாற்றை ஒவியனால் சித்தரித்துக்காட்டிவிடமுடியும். மலையாள நாவலாசிரியரும் இதழாளரும் ஆன எம்.பி.நாராயணபிள்ளையின் ‘நினைவுகூர்தல்’ என்ற சிறுகதை கண்ணாடியைப்பற்றிய கண்டடைதல்கொண்ட நல்ல சிறுகதை. அந்த சிறுகதையில் கதைசொல்லி ஒரு கடிதமெழுதி முடித்து அடியில் கையெழுத்துப்போடும்போது சட்டென அவனுக்கு தன் பெயர் நினைவுக்கு வராது. எவ்வளவு முயற்சித்தாலும் பெயர் நினைவுக்கு வராது. ஒருவன் இல்லாத இடத்தில் அவனை பிரதிநிதித்துவப்படுத்துவது அவன் பெயர்தான். ஒருவனை நேரில் பார்த்தேயிராதவர்களுக்கு அவனுடைய பெயர் மட்டும்தான் அவனாக இருக்கிறது. பெயர் என்பது மனிதனைவிட விரிவானது, அவனுடைய பதிலி. ”ஒருவனின் உண்மைத்தன்மை அவனுடைய பெயர்தான் இல்லையா? பெயர் இல்லாவிட்டால் தன்னால் இந்த கடிதத்தை முழுமையாக்க முடியுமா? யாரிடமாவது கேட்க முடியுமா தன் பெயர் என்ன என்று? அதுவும் இந்த இரவில்? (பெயரிடுவதற்கு முன்பு உள்ள இன்மையை, இருளை இந்த இரவு நினைவுபடுத்துகிறதோ?) என் முகத்தை பார்த்தால் ஒருவேளை பெயர் நினைவுக்கு வரலாம். அதை பார்க்கலாம்….. மெழுகுவர்த்திக்கு நேராக உள்ள கண்ணாடிக்கு நேராக நடக்கிறான். நல்ல பரிச்சயம். பரிசயமுள்ளவர்களை பார்க்கும்போது சிரிக்கவேண்டும் அல்லவா. சிரித்தேன். கண்டுபிடித்துவிட்டேன். ஓ, இது வேலப்பன் அல்லவா?” கதைசொல்லிக்கு வேலப்பன் என்ற தனித்தன்மையை அளித்த மனிதப்பண்பாடு அதன் பயணத்தை தொடங்கியது கண்ணாடிப்பிம்பத்திலிருந்து உடைத்து வெளிவந்த தன்னுணர்விலிருந்துதான் இல்லையா? கண்ணாடிக்கு முன் நின்றவுடன் எவ்வளவு வேகமாக கதைசொல்லி தன்னை அறிந்துகொள்கிறான், எவ்வளவு சீக்கிரம் அவனுக்கு அவன் பெயர் நினைவுக்கு வருகிறது! “இந்த கண்ணாடிப்பிம்பம் வழியாகத்தானே நான் வேறுபட்ட இருப்பாக ஆகியிருக்கிறேன்? வேறு ஒரு இருப்பான ’கையெழுத்து’ இப்போது என்னுடையதாக ஆகிவிட்டது. ‘ வி.வேலப்பன். இது போதும். இனி கையெழுத்திடலாம். வி.வேலப்பன் என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்கடியில் ஒரு கோடு வரைந்து இரண்டு புள்ளிகள்” நீர்ப்பிம்பத்தில் தன்னை கண்டுகொண்டதால் மட்டும் மனிதன் விலங்காக அல்லாமல் ஆவதில்லை. மேலும் தன்னுணர்வு இல்லாததை விலங்குகளும், பறவைகளும் மோதாமையாகவும் உணர்வதில்லை. அவை இயற்கையின் மென்பொருளில் பாதுகாப்பாக தொடர்வதற்கு அந்த அறியாமை அவசியமானது. ‘செயற்கை நுண்ணறிவால்’ உருவாக்கப்பட்ட, தானாகவே இயங்கும் வாகனம் ஓட்டுநரால் இயக்கப்படும் வாகனத்தைவிட பாதுகாப்பானதாக இருப்பது போல இயற்கையின் பிடியில் உள்ள விலங்குகளின் நிலை நாம் இருக்கும் நிலையைவிட பாதுகாப்பானது. செயற்கை நுண்ணறிவில் இயங்கும் வாகனத்திற்கு முன்னே ஆபத்துகள் எதுவும் இல்லை, வளைவில் சட்டென எதிர்ப்படும் வாகனங்கள் அதிர்ச்சியடையச் செய்வதில்லை, தற்செயல்கள் இல்லை, நாளை இல்லை, நேற்று இல்லை, மரணம் இல்லை. அந்தந்த கணங்கள் மட்டும். தன்னால் நிறைந்த தான் மட்டும். தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் முயலை மனிதக்கற்பனையில் பிறந்த கதைகளில் மட்டும்தான் பார்க்கமுடியும். ஒரு தனிவிலங்கிற்கு தனக்கு மட்டுமேயான எந்த பொறுப்பும் இல்லை, எந்த பதற்றமும் இல்லை. எந்த விலங்கும் தனித்தன்மை கொண்டதல்ல. தனித்தன்மையை அடைவதற்கு அவசியமான வீழ்ச்சியையோ உயர்வையோ அவற்றின் பரிணாத்தில் எதிர்கொள்ளவில்லை. ஒன்றாம் நூற்றாண்டின் நரிக்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு நரிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள நரிக்கும் கொயிலாண்டியில் உள்ள நரிக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லை. அவற்றிற்கு கால-இடம் இல்லை. தன் நிழலை தன்னுடையதுதான் என்று கண்டடைவதற்கான அறிவு அவற்றிற்கு அருளப்பட்டிருந்தால் அவை இயற்கையின், பாதுகாப்பின் மென்பொருளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும். கண்ணாடியுடன் தங்களால் உரையாட முடிவதில்லை என்பதை விலங்குகள் போதாமையாக உணர்வதில்லை. விலங்கு தன் சொந்த நிழல் தன்னுடையதுதான் என்பதை அறிய நேர்ந்தால் அவை நார்ஸிஸஸ் போல மனம் பிறழ்ந்துவிடும். நீரில் தெரியும் பிம்பம் தன்னுடையதுதான் என்று அவை அறிந்திருந்தால், அந்த பிம்பம்மீது கண்மூடித்தனமாக காதலிக்க ஆரம்பித்திருக்கும். அந்த காதலின் மிக மோசமான நிலையைத்தான் நாம் நார்ஸிஸஸில் பார்க்கிறோம். நார்ஸிஸஸிற்கு மனிதன் தவிர்த்த உயிரினங்களுக்கு உள்ள பாதுகாப்பு கவசம் (இயற்கையை நாம் அப்படியும் அழைக்கலாம்)இல்லாமலாகிறது, தனக்கென சுயமான பாதுகாப்பு கவசத்தை படைப்பதற்கான ஆற்றலும் அவனுக்கு இல்லை. தன்னுணர்வாக கனிவடைவதற்கு முன்பு உள்ள குருட்டுத்தனமான சுயமோக நிலை. இயற்கை அளித்த பாதுகாப்பின் கூட்டை உடைத்து வெளியே வந்த தன்னை எல்லாம் மறந்து கட்டித்தழுவிக்கொள்கிறான் நார்ஸிஸஸ். நார்ஸிஸஸின் கதை தொல்பழங்காலத்தில் எங்கேயே நிகழ்ந்த சம்பவமோ, அந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதையோ அல்ல. வெளிப்படாமல் இருக்க சாத்தியமில்லாத, இந்த ஒரு வடிவத்தில் அல்லாமல் வேறெப்படியும் வெளிப்படமுடியாத ஒரு கண்டடைதல்தான் நார்ஸிஸஸின் கதை. நம் வழியாக, நம்மையும் கதாப்பாத்திரங்களாக ஆக்கி இன்னும் தொடரும் ஒரு கதை (அதை முழுமுற்றாக பகிர்ந்து முடிக்க முடியாததால் அதை நாம் ‘தொன்மம்’ என்று சொல்கிறோம்). நாம் இன்னும்கூட நார்ஸிஸஸுக்கு தீவிரமான விழைவை ஏற்படுத்திய தற்பிம்பத்தை வெறுக்கக்கூடியவர்களாக ஆகவில்லை. தன்னை எவ்வளவு வரைந்தாலும், எவ்வளவு புகைப்படங்கள் எடுத்தாலும், இதோ இன்று தொடர்ச்சியாக தற்படங்கள் எடுத்தாலும் மனிதனுக்கு நிறையவில்லை. அசாதாரணமான கோணங்களில் தற்படம் எடுப்பதற்காக அபாயகரமான இடங்களில் தவறிவிழுந்து இறப்பவர்கள் என உலகம் முழுக்க தினம் ஒருவர் என்ற கணக்கில் நார்ஸிஸஸ்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முன்பு வகுப்பறைகளில் புத்தகங்களுக்கு கீழே மறைத்துவைத்த கண்ணாடியில் பார்த்து உதடு, கண், மூக்கு இவற்றையெல்லாம் மனதில் பதியவைத்துக்கொண்டவர்கள் இன்று செல்ஃபி எடுக்கும் வசதி உள்ள கைபேசியை நெஞ்சில்வைத்து உறங்குகிறார்கள். எந்த மனிதனும் நார்ஸிஸஸ் விழுந்து இறந்த தடாகத்தில் நீராடி நிறைவடைந்தவர்கள் அல்ல. ‘ நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில் மற்ற யாரையும் நான் பார்க்கவில்லை’ எதிலும் படியும் தற்பிம்பத்தை தான் என்று நினைத்து மயங்கும் ஒவ்வொரு கணமும் நாம் நார்ஸிஸஸாக ஆகிவிடுகிறோம். தான் வடித்த சிற்பத்தின் அழகில், முழுமையில் பித்தாகி தற்கொலை செய்துகொண்ட சிற்பியும் நார்ஸிஸஸ் அன்றி பிறிதொருவன் இல்லை. கதையில் என்பதுபோல கணநேரத்தில் நாடகீயமான மரணம் எதுவும் நிகழாமலிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய சில அம்சங்கள் ஆழமான சுயமோகத்தில் உள்ளது. தற்பிம்பத்தை பார்த்து ’அது நான்தான்’ என்று நம்மை அறியாமலேயே நாம் உணரும்நிலை தன்னறிதல் அல்ல. தற்பிம்பத்தை பார்த்து அது தன் பிம்பம்தான் என்ற கண்டடைதலிலிருந்துதான் (realisation) தன்னை அறிதல் நிகழ்கிறது. ஒன்றை அது மட்டுமாகவே பார்ப்பவர்களும் நார்ஸிஸ்டுகள்தான். நேரடியான பொருளில் (Literal reading) இலக்கியத்தை வாசிப்பவர்களும் நார்ஸிஸ்ட்டுகள்தான். வெறும் ஆடிப்பிம்பம் என்பதிலிருந்து தொடங்கி தன்னை அறிதல் நோக்கி உயர்ந்தும் படிநிலைகளில் முதல்படி நாராயணகுரு கோவில்களில் நிறுவிய ’கண்ணாடி’. கண்ணாடி பிம்பத்தில் ஒருவன் தன்னை பார்த்து, அதன் அடுத்த படியாக அது மனிதனின் பிம்பம் என்பதை உணர்ந்து, அதற்கு அடுத்த படியாக அது சாராம்சமானதோ, முழுமுடிவானதோ அல்ல நிழல்தான் என்று அறிந்து அதன்வழியாக ‘ அறியும் தன்னிலை’யை கண்டடையும் ஒரு மனிதனைத்தான் நாராயணகுரு உத்தேசித்தார். பிம்பமாக ஆவது எது? என்பதை அறியும் உயிரை (mortal). ‘நம்மை மட்டுமில்லை, நம்மால் காணப்படுவது அனைத்தையும் பிம்பமாக ஆக்குவதற்கான வாய்ப்பை கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்’ (ஆத்மவிலாசம்) கண்ணாடியில் தன்னை காண்பதற்கும் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. முகத்தில் ஏற்பட்ட காயத்தில் உள்ள ரத்தத்தை கண்ணாடியில் தெரியும் முகத்தில் துடைப்பதற்கும் கண்ணாடியை பார்த்து சொந்த முகத்திலிருந்து துடைப்பதற்கும் இடையேயான வேறுபாடு. நார்ஸிஸஸ் நீரில் தன்னை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு அதை கட்டியணைக்க முயன்றபோது அது தான் அல்ல, தன் நீர்ப்பிம்பம் என்று அவன் அறியவில்லை (அது நிழல், அது ஜடம் என்கிறார் நாராயணகுரு). சுயமோகத்தில் தன்னுணர்வின்மை உண்டு என்றும் அது ஆன்மாவை ஒட்டுமொத்தமாகவே அழிக்கக்கூடியது என்றும் நார்ஸிஸஸ் நமக்கு கற்றுத்தருகிறான். ‘சுயமே உருவாக்கிய தடைகளை’ இல்லாமலாக்குவது எளிதல்ல. ராமாயணத்தில் உள்ள சாயாக்ரஹணி கதை மனிதசுயம் கடக்கவேண்டிய தடை பற்றிய உருவகக்கதை. ராமாயணத்தில் சீதையைக்காண அனுமன் இந்திய பெருங்கடலை கடக்கும்போது சாயாக்ரஹணி என்ற அரக்கியிடம் அகப்படுகிறான், அவள் உயிர்களை கொல்வது அவற்றின் நிழலை கைப்பற்றுவது வழியாக. அவளிடம் அகப்பட்ட அனுமன் கொஞ்சநேரம் சஞ்சலமடைந்துவிடுகிறான். பின் தன் சுயத்தை மீட்டெடுத்து சாயாக்ரஹணி என்ற அரக்கியை அழித்துவிட்டு ராமனுக்காக தான் ஆற்ற வேண்டிய பயணத்தை அனுமன் தொடர்கிறான். இந்தியப்பெருங்கடல் நீரில் பிரதிபலித்த தன் நீர்ப்பிம்பத்தில் தன் சொந்த உடலின் கம்பீரத்திலும், அழகிலும் ஈர்க்கப்பட்டு சிந்தையற்று நின்றுவிட்ட அனுமன் தன்னை சூழ்ந்த நார்ஸிஸ சுழலில் சிக்கிக்கொண்டதன் கதையைத்தான் சாயாக்ரஹணி என்ற உருவகம் வழியாக வால்மீகி சித்தரித்திருக்கிறார். அது தான் அல்ல, தன் நிழல்தான் என்று அறிந்தபோது கைகூடிய தன்னறிதலுடன், அதிக தேஜஸுடன் அனுமன் சமுத்திரத்தை கடக்கிறான். ராமனுக்கு செய்யும் சேவையாக இலங்கை போகும் அனுமன் அழித்தது சுயமோகத்தைத்தான். நார்ஸிஸஸை வென்ற அந்த அரக்கி, அனுமனை கொஞ்ச நேரத்திற்கு குழப்பிய, சொந்த நீர்ப்பிம்பத்தின் முன் ஸ்தம்பித்து நிற்கச்செய்த அந்த அரக்கி, கண்ணாடி என்ற இந்த நீர்ப்பரப்பில் எப்போதும் இருக்கிறாள். சில்வியா பிளாத்தின் Mirror என்ற கவிதையில் தன் இளமையை கொஞ்சகொஞ்சமாக விழுங்கும் அந்த அரக்கியை தெளிவில்லாமல் என்றாலும் நம்மால் காணமுடிகிறது. தன் ஆடிப்பிம்பம் தன்னுடையதுதான் என்று எண்ணுபவர்களை அந்த அரக்கி மிகமிக எளிதாக கைப்பற்றிவிடுகிறாள். பெண் தன்னை கண்ணாடியில் பார்க்காமலிருக்கக்கூடிய தைரியத்தை அடையும்போதுதான் அவள் விடுதலை அடைகிறாள் என்று எழுத்தாளர் மாதவிக்குட்டி சுட்டிக்காட்டுவது பெண்களை இன்னும் சுவைத்து உண்ணும், கண்ணாடியில் இருக்கும் சாயாக்ரஹணி என்ற அரக்கியின் இருப்பைத்தான். ‘ நிழலை பிடித்துவைத்த இந்த அரக்கியை/ வீட்டு சுவரில் மாட்டியது ஏன்/ இப்போது எதற்காக என்றாலும் இந்த மூதேவியிடம் முகம் காட்டவேண்டும்/ வெளியே போகும்முன் முதலில் அவள் என்னை உடல்பரிசோதனை செய்து முடிக்கவேண்டும்/ கண்ணாடியில் தெரியும் முகங்களெல்லாம்/ அவள் உறிஞ்சிவிட்டதால் இரத்தம் வற்றிய முகங்கள்’ சுயமோகம் உலகம் மீதான காதலாக மாறும்போது இந்த அரக்கி பலவீனமானவளாக ஆகிவிடுகிறாள். ‘ அவனவன் சுயவிருப்பத்திற்காக செய்யும் விஷயங்கள் பிறரும் மகிழ்ச்சியடைவதாக ஆகும்போது’ அவள் இல்லாமலாகிவிடுகிறாள். இந்த பரிணாமத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய படைப்பு ஆற்றூர் ரவிவர்மாவின் ‘அர்க்கம்’ என்ற கவிதை. கவிதைசொல்லிக்கு தன் ஆடிப்பிம்பத்திலிருந்து கண்ணை விலக்க முடியவில்லை ‘ காலையில் வேலைக்கு கிளம்பும்போது எவ்வளவுமுறை கண்ணாடி பார்த்தும் நிறைவதில்லை’ கண்ணாடியில் மட்டுமல்ல நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்திலும் கவிதைசொல்லி தன்னைத்தவிர மற்ற யாரையும் பார்ப்பதில்லை. ஆனால் அது தான் அல்ல தன் நிழல் மட்டும்தான் என்றும், கண்ணாடியை விட்டு வெளியேறிவிட்டால் அது இல்லாமலாகிவிடுகிறது அதற்கென தனி இருப்பு இல்லை என்பதையும் கவிதைசொல்லி உணர்ந்துகொள்கிறான். எவ்வளவுமுறை பார்த்தாலும் தன் முகம் எப்படியிருக்கிறது என்பதை அறியமுடிவதில்லை. ஆடிபிம்பம் காட்டிய சுயத்தால் நிறைவடையாத கவிதைசொல்லி வீட்டைவிட்டு வெளியேறி, கோகர்ணத்திற்கும் கன்யாகுமரிக்கும் செல்கிறான். ஆன்மவிடுதலையை அளிக்கக்கூடிய நிலங்கள். பலரின் கொந்தளிக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைத்த இடம். ஆனால் அங்கு எங்குமே கவிதைசொல்லி ‘தன்னை தனக்கு காட்டவில்லை’ என்று உணர்கிறான். கீழை மரபை விடுத்து மேற்கத்திய நவீன சிந்தனையில் வழி தேடுகிறான். பீஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் செல்கிறான். பலருக்கு புதியவகையான சுயகண்டடைதலை அளித்த இடங்கள். காடு முழுக்க தேனைத்தேடி அலைந்தவன் கடைசியில் வீட்டிமுற்றத்தின் எருக்கங்செடியில் தேனை கண்டுடைவதுபோல தன் வசிப்பிடத்தில் தன் சூழலிலேயே அவன் தன் சுயத்தை கண்டடைகிறான். அப்போது அது தன்னில் மட்டும் இல்லை என்பதையும் அறிகிறான். தூரத்தில் உள்ள கடலின் நீலநீர்ப்பெருக்கும், அதன் விளிம்பில் உள்ள தொடுவான்கோடும், கீழே உள்ள நுரைக்கும் அலைவெளியும் கரையும் நான்தான். தன்னை வெல்வது, தன்னை கடப்பது என்பது தன் நிழல் மீதான, தன் பிம்பம் மீதான வெற்றிதான். தன்னை வென்றவனுக்கு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரதிபலிக்கும்தன்மையை அடைந்துவிடுகிறது. இந்த கவிதையில் அப்பட்டமான அழகு இல்லாத, யாருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வசீகரம் இல்லாத, அதனாலேயே தேன்கூடு கட்டும் தேனீக்களை ஈர்க்கக்கூடிய, சுயமாகவே மருத்துவகுணங்கள் கொண்ட எருக்கங்செடியில் கவிதைசொல்லி தன்னை கண்டடைகிறான். ’ நான் ஒரு எருக்காக நிற்கிறேன்’ ஒருவேளை மலையாளத்தில் மிக குறைவாக கண்ணாடிபார்த்த கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவாகத்தான் இருக்க வேண்டும். ஆற்றூர் ரவிவர்மாவை ஒரு தாவரமாக ஆக்கினால் அவர் எருக்குச்செடியாகத்தான் நின்றுகொண்டிருப்பார். புத்தனாக உருமாறிய சித்தார்த்தனின் வாழ்க்கையைப் பாருங்கள். சுயமோகம் கொண்டவனுக்கு நிம்மதியாக வாழ தேவையானதெல்லாம் சித்தார்த்த இளவரசனுக்காக மாளிகையில் அவன் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். அரசர்களின் வழக்கமான திரைக்கதையிலிருந்து அவன் திசைதிரும்பிவிடாமலிருக்கத் தேவையான எல்லாம். தன் அழகை புகழ சுவரெங்கும் கண்ணாடிகள்; தன் கவர்ச்சியை பிரதிபலிக்க நிறைய அழகிகள்; தன் கனிவை,அன்பை காட்ட அழகிய நல்லியல்புகள் கொண்ட மனைவி; தன் தகுதிகளை வாழ்த்திப்பாடும் நிறைய துதிபாடிகள், அவனின் சுவைவுணர்வை கொண்ட பல்வேறுவகையான உணவுகள், தன் அதிகாரத்தை நினைவுறுத்த பணியாட்கள், காட்டிலிருக்கும் உணர்வை தனக்காக அளித்த மலர்வனங்கள் அனைத்தும் அவனுக்கு இருந்தது… அரண்மனையில் தன்னை மகிழ்விக்கும், தன்னை துதிக்கும் இந்த கண்ணாடிகளிலிருந்து வேறுபட்ட ஒரு கண்ணாடி வெளியே இருந்தது. தன் இருபத்தி யொன்பதாம் வயதில் சித்தார்த்தன் அந்த கண்ணாடி முன் நிற்கிறான். அதில் சித்தார்த்தன் ஆழமான நிலைகுலைவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகளை பார்க்கிறான். முதுமையை, நோயை, வறுமையை, மரணத்தை. ஜரா-நரை பாதித்த அந்த மனிதனில் தன்னை மட்டுமல்ல தான் உட்பட உள்ள, இனி பிறக்கப்போகும் ஒவ்வொரு மனிதனையும் காத்திருக்கும் ஒன்றை ஆடிப்பிம்பமாக சித்தார்த்தன் பார்க்கிறான். நோயாளியின் நசிந்த உடல் யாரும் எப்போது வேண்டுமானாலும் ஆகச் சாத்தியமான நிலை ஒன்றை அவனுக்கு சுட்டிக்காட்டியது. இறந்தவிட்ட மனித உடல் ஒவ்வொரு மனிதனையும் காத்திருக்கும், யாராலும் தவிர்க்கமுடியாத நிலையை அறிவுறுத்தியது. அவையெல்லாவற்றை பிரதிபலித்த கண்ணாடியில் மிக மிக நிலைகுலைந்த ஒருவனின் பிம்பத்தை புத்தனாக ஆகிவிட்ட சித்தார்த்தன் காண்கிறான். அரண்மனையில் கண்ணாடியில் மாயை காட்டிக்கொண்டிருந்த வசீகரிமான ஆடிப்பிம்பம் சித்தார்த்தனுக்கு உவப்பில்லாததாகவும், பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. மகிழ்பவர்கள், திருஷ்ணையில்(விழைவுகளில்) திளைத்திருப்பவர்கள் சுயமோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமான நிலையின்மை கொண்ட , அனைத்திலும் அழிவின் நிழல் கொண்ட உலகத்தில், அறியாமை மட்டும்தான் மனிதனின் நிம்மதிக்கு காரணம். மனிதப்பிரக்ஞையில் மரணமோ நிச்சயமின்மையோ அழிவோ உட்படவில்லை என்றும் அதனால்தான் மனிதன் எந்த யதார்த்தமும் இல்லாத மகிழ்ச்சியில் வாழ்கிறான் என்பதையும் சித்தார்த்தன் அறிகிறான். எந்த ஒன்றும் அது மட்டுமே அல்ல என்றும் அதன் இருப்பு அதை மட்டுமே சார்ந்தது இல்லை என்பதையும் சித்தார்த்தன் அறிகிறான். சித்தார்த்தன் அரண்மனையிலிருந்து இரவில் வெளியேறி பலவகையான தடைகளை தாண்டி புத்தனில் சென்றுசேர்கிறான். புனுயேலின்(Luis Bunuel) இயக்கிய மில்கி வே(Milky way) என்ற திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியால் உந்தப்பட்டு பால் சக்கரியா ‘ கண்ணாடி பார்க்கும்வரை’ என்ற பெயரில் சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். கிருஸ்து கண்ணாடியை எதிர்கொள்ளும் காட்சி. அந்த காட்சியின் தரிசனரீதியான ஆழத்திற்கு சக்கரியா பொருத்தமான கதைவடிவத்தை தந்திருக்கிறார். கிருஸ்துவிற்கு நன்றாக பொருந்தக்கூடிய வடிவம் (அவரை வேறு ஒரு வடிவில் நாம் கற்பனை செய்வதில்லை) நீளமான முடியும் தாடியும் மீசையும்தான். அதை வெட்டுவதற்காக கிருஸ்து நாவிதரின் கடைக்கு செல்கிறார். நாவிதர் அங்கே புதிதாக மாட்டப்பட்ட கண்ணாடியை பார்க்க சொல்கிறார். அதுவரை கிருஸ்து தன்னை எதிர்கொண்டதில்லை. அவர் சஞ்சலமடைகிறார். ‘ வேண்டாம் வேண்டாம்’ கிருஸ்து மிகமெல்லிய ஒலியில் கண்ணாடியிடம் சொல்கிறார். ‘ நீ என்னை எனக்கு காட்டவேண்டாம். அதில் நான் எதைப்பார்க்கப்போகிறேன் என்பதை இப்போது என்னால் ஊகிக்கமுடியவில்லை; எனக்கு பயமாக இருக்கிறது. கண்ணாடி மணிமுழங்குவது போன்ற ஒலியில் “ வா, கிருஸ்து வா… உனக்கு தெரியாதா? நீ எனக்குள்ளே இருக்கிறாய்; இரண்டே இரண்டு அடி முன்னால் வந்து கொஞ்சம் குனிந்து பார்த்தால்போதும், நாம் மூவரும் ஒன்றுதான் ‘. கிருஸ்து சொன்னார்.’ இல்லை இல்லை. நான் பார்க்கவிழைவதை நீ காட்டமுடியுமா? இல்லை, இல்லை’ தன் நீண்ட அங்கியில் வியர்வை வழிவதை உணர்ந்தார். கடும்புயலில் சிக்கியதுபோல தள்ளாடினார். அவர் எதை அஞ்சினார்? தன்னை தன் புறவயமான வடிவத்தில் பார்ப்பதையா? தன் தெய்வாம்சத்தை இழந்துவிடுவோம் என்று பயந்தாரா? தன்னை சூழ்ந்திருக்கும் ரகசியத்தன்மையை சோதித்துப்பார்ப்பதில் உள்ள அச்சமா? மனிதர்களை சரியான திசையில் செலுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வகுமாரன் தனித்தன்மையை, தனிமையை அஞ்சினாரா? இன்று நாம் காணும் கிருஸ்துவின் மழிக்கப்படாத முகம் (கண்ணாடியையே பார்த்திராத முகம்) அவரின் ஆரம்பகால ஓவியங்களில், சிற்பங்களில், மொழியில் வெளிப்படவில்லை (பைபிளில் கிருஸ்துவின் உருவம் சார்ந்த விவரணைகளே இல்லை. கிருஸ்துவின் ஆரம்பகட்ட சிற்பங்கள் ஒன்றில் christ with St.Paul (389 AD) மழிக்கப்பட்ட முகம்கொண்ட கிருஸ்துதான் இருக்கிறார். புனுயேலும் சக்கரியாவும் சித்தரித்திருக்கும் கிருஸ்துவின் சஞ்சலத்தைவிட அவரை தாடி மீசையுடன் சித்தரிக்கவேண்டுமா கூடாதா என்ற குழப்பத்தில் அவரை வரைந்த ஓவியர்கள் சஞ்சலம் அடைந்திருப்பார்கள். மழித்த முகம் கிருஸ்துவிற்கு பொருந்தக்கூடியதா? மழித்தலில் ஒரு பிரத்யேக காலம் இருக்கிறது. சவரக்கத்தி உண்டு. இன்றைய நம்முடைய வழக்கப்படி முன்னால் ஒரு கண்ணாடி உண்டு. பரமபிதாவின் மகன், எல்லாகாலத்திற்குமான மகன், அவருக்கு மழித்த முகம் பொருத்தமானதா? இந்த ஒரு பதற்றத்தைதான் சக்கரியா தன் சிறுகதை வழியாக நமக்கு பகிர்கிறார். கிருஸ்துவின் உருவம் பல நூற்றாண்டுகள் அழிவின்மையின் குறியீடாக நிலைநிற்க தாடி மீசை கொண்ட இயற்கையான தோற்றம் போதும் என சில கலைஞர்கள் முடிவெடுக்கிறார்கள். பின்னர் அதை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனாலும் கண்ணாடி முன்னால் புயலில் சிக்கித்தவித்ததுபோல தடுமாறிய கிருஸ்துவை முதன்முதலாக கற்பனைசெய்த கலைஞன் எத்தனை இரவுகள் தூக்கமிழந்திருப்பான்? கடைசியில் அவனுடைய கிருஸ்து எந்த சஞ்சலமும் இல்லாமல் கண்ணாடியை நிராகரிக்கிறார். ——————————————————————————————————————– கேரளம் முழுக்க நாராயணகுரு சாதிமத பேதமில்லாமல் அனைவரும் வழிபடுவதற்கான கோவில்களை நிறுவினார். ஒவ்வொரு கோவிலிலும் கண்ணாடியையும் பிரதிஷ்டை செய்தார். எங்கு நிறைந்திருக்கும் கடவுளுக்கு வருணாசிரம பிரிவினை இல்லை, அவர் எல்லா மனிதர்களின் அகத்தில் இருக்கிறார். கடவுளை வழிபட வருபவர்கள் கண்ணாடியில் தன் ஆடிப்பிம்பத்தை காண்பதுவழியாக தன்னையும், தன்னில் உள்ள கடவுளையும் உணர்ந்துகொள்ள முடியும் என்பதால்தான் கண்ணாடியை பிரதிஷ்டை செய்தேன் என்கிறார் நாராயணகுரு. ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு. https://akazhonline.com/?p=7185
-
இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி
இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி May 7, 2024 போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெற்றது. இவை குறித்து அதனை நேரில் பாா்வையிட்ட வடமாகாண முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன் வழங்கிய நோ்காணல் கேள்வி – கொக்குத் தொடுவாய்ப் பகுதிக்கு கடந்த வாரம் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தீா்கள். அங்கு என்ன நடைபெறுகின்றது? பதில் – வடமாகாண சபையில் நான் உறுப்பினராக இருந்த காலத்தில் இந்தக் காணிகள் சுமாா் 25 ஏக்கா் படி 30 வழங்கப்படவிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, மாகாண சபையிலும் இந்த விடயத்தை நான் கதைத்திருந்தேன். இது தமிழா்களுடைய பூர்வீக நிலம். இங்குள்ள பிரதேச செயலகமோ அல்லது மாவட்ட செயலகமோ சம்பந்தப்படாமல், மகாவலி அபிவிருத்தி அதிகார சபைதான் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமாா் 4,326 ஏக்கா் காணியை இந்தத் திட்டத்தின் மூலமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டத்தில் அமைச்சா் நிமால் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்குக் கூட 25 ஏக்கா் காணி வழங்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இவா்கள் சிங்கள ஆதிக்கத்தைக் கொண்டுவந்து தமிழா்களின் பூர்வீக காணிகளை பறிக்கும் நோக்கத்துடன்தான் இவா்களுடைய செயற்பாடுகள் அமைந்திருந்தன. 25 ஏக்கா் தமிழா்கள் வைத்திருக்க முடியாதாம். எங்களுக்கு 2 ஏக்கா் காணி மட்டும்தான் வைத்திருக்க முடியுமாம். இந்தப்பின்னணியில்தான் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெறுவதாக தகவல் வந்ததால் அங்கு னெ்றேன். என்னுடன் சூழலியல், சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் வந்தாா்கள். ஆனால், அன்றைய தினம் காட்டை தள்ளிக்கொண்டிருந்த ஒருவரும் இருக்கவில்லை. ஆனால், பெருமளவிலான இடங்களை அவா்கள் தம்வசப்படுத்தியிருந்தாா்கள். கிணறுகள் வெட்டி, கொட்டில்கள் அமைத்து குடியிருப்பதற்கு ஏற்றவாறு தயாா்படுத்தியிருந்தாா்கள். முல்லைத்தீவு பறிபோய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருணாட்டுக்கேணி, மணலாறு என்ற எங்களது இதயபுமி என்று சொன்ன பகுதியில் இன்று 13 ஆயிரத்துக்கும் மேலான சிங்களவா்கள் உள்ளாா்கள். வசதியான மக்களுக்கு, கிணறுகள் அமைத்து, பாதுகாப்புக்காக யானை வேலிகள் அமைத்து கொடுக்கின்றாா்கள். இதனைத் தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இங்குள்ள அரச அதிகாரிகள் இல்லை. நாங்கள் பாா்த்த இடங்களில் 145 ஏக்கருக்கும் அதிகமான பகுதி அழிக்கப்பட்டிருந்தமையை நாங்கள் பாா்த்தோம். அதாவது, அழிக்கப்பட்டு அவா்களுடைய இருப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. இப்போது அழிக்கப்பட்ட பகுதிகளை 30 பேருக்கு 25 ஏக்கா் வீதம் மகாவலி அதிகார சபை வழங்கியிருக்கின்றது. இந்தக் காணிகளின் உறுதிகள் தமிழா்களிடம் இன்றைக்கும் உள்ளது. ஒரு காணிக்கு ஒரு ஆவணம் இருக்கும் போது, மற்றொரு ஆவணம் வழங்கப்படுமாக இருந்தால் முதலில் வழங்கப்பட்ட ஆவண்தான் செல்லுபடியாகும் என இலங்கைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. கேள்வி – நீங்கள் மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் குறித்தும் சொல்லியிருந்தீா்கள். முல்லைதீவு மாவட்டத்தில் அவா்கள் எவ்வாறான நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றாா்கள்? பதில் – அவா்கள் தங்களுக்கென்று ஒரு செயற்பாட்டை வைத்துள்ளாா்கள். அவா்களை யாரும் தட்டிக்கேட்க முடியாது. மாவட்ட செயலாளரோ, பிரதேச சபைகளின் செயலாளா்களோ அவா்களிடம் கேள்வி கேட்க முடியாது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் அவா்கள் வரமாட்டாா்கள். மாகாண சபை இருந்த காலத்தில் எப்போவாவது கூட்டத்துக்கு வருவாா்கள். இந்தக் காணிகள் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருப்பதாகக் காட்டப்படுகின்றது. ஆனால், மகாவலி – எல் திட்டத்துக்குட்பட்டதாக இந்தக் காணிகள் காட்டப்படுகின்றது. இதனைவிட மேலும் பல காணிகள் மகாவலி எல் திட்டத்துக்கு உட்பட்டதாகக் காட்டப்படுகின்றது. இதன்படி முல்லைத்தீவில் மேலும் பெருமளவு தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களவா்களுக்குக் கொடுக்கப்படும் ஆபத்து இருக்கின்றது. இந்த விடயத்தில் எம்மவா்களும் சரியான ஒரு திட்டத்தைப் போட்டு உறுதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். மகாவலி அதிகார சபை எல் என்ற ஒரு திட்டத்தின் மூலமாக முல்லைத்தீவின் கிழக்குப் பக்கமாக ஒட்டுசுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு ஒரு திட்டத்தையும், மேற்குப் பக்கமாக மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பகுதிகளுக்கு மகாவலி ஜே என்ற ஒரு திட்டத்தையும் கொண்டுவந்திருக்கின்றாா்கள். இது இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த மகாவலி அதிகார சபை காலுான்றுகின்ற இடங்களில் தமிழ் மக்களுக்குக் காணி கொடுத்ததாக எந்தத் தகவலும் இல்லை. தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைதான் நடந்துகொண்டிருக்கின்றது. இதனால், பெருந்தொகையான சிங்களவா்கள் முல்லைத்தீவு பகுதியில் காலுான்றிவிட்டாா்கள். இதனால், சிங்களப் பிரதேச சபை ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனால், எமது அடுத்த சந்ததிகள் சிங்கள மயமாக்கப்பட்ட முல்லைத்தீவுக்குள்தான் வாழப்போகின்றாா்களா என்ற அச்சம் ஏற்படுகின்றது. மகாவலி அதிகார சபையை கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்க அதிபா் கூட இல்லை. அவா்களுடன் பேசும் போது அதனை அறிய முடிகின்றது. கேள்வி – முல்லைத்தீவு இவ்வளவு பிரச்சினைகளையும் எதிா்கொண்டு சிங்கள மயமாகிக்கொண்டுள்ள நிலையிலும் தமிழ்க் கட்சிகள் அதில் போதிய கவனத்தைச் செலுத்துவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்கிறாா்கள். உண்மை நிலை என்ன? பதில் – கிழக்கு மாகாண நிலைமைகள் அனைவருக்கும் தெரியும். அங்கு தமிழா்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதேநிலைதான் முல்லைத்தீவிலும் நடந்துகொண்டிருக்கின்றது. குருந்துாா்மலை விடயத்திலும் பெரும்பாலானவா்கள் வந்தாா்கள். ஆனால், எவ்வளவு போா் அதில் கவனத்தை எடுத்துச் செயற்பட்டாா்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். கொக்குளாய் விவகாரை கட்டப்பட்ட இடத்தில் நாங்கள் பிரதிநிதிகளாகப் போய் ஒரு மாதமோ என்னவோ தொடா்ச்சியான ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தால் அது பெரிதாக வெடித்திருக்கும். அவ்வாறான ஒரு போராட்டத்தை முன்னெடுக்காமல், இடையில் ஒரு தடவை போய்ப் பாா்த்துவிட்டு வருவது. ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்பன எந்தப் பயனையும் தரப்போவதில்லை. அவா்கள் குடியேற்றிக்கொ்டுதான் இருக்கின்றாா்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் 2 இலட்சத்து 22 ஆயிரம் ஏக்கா் அடா்ந்த காடுதான் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், அதற்குப் பின்னா் சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் காணியை வன இலாகா அபகரித்திருக்கின்றது. இவ்வாறு இந்த காணி அபகரிப்பு தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இவை அனைத்தும் தமிழ் மக்கள் பாவித்த காணி. சிறுதானிய பயிா்ச் செய்கைக்கு நெற்செய்கை என்பவற்றுக்காக மக்கள் பயன்படுத்திய காணிகள். வன இலாகா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகார சபையின் எல் திட்டம் மற்றும் படையினா் என ஒவ்வொரு தரப்பினரும் தமது பங்குக்கு காணிகளை அபகரித்துக்கொண்டிருக்கின்றாா்கள். இதனைத் தடுக்க வேண்டுமானால், எம்மவா்கள் அங்கு களத்தில் இறங்கி தொடா்ச்சியாகப் போராட வேண்டும். கேப்பாப்புலவை நாங்கள் இவ்வாறான தொடா்ச்சியான போராட்டத்தினால்தான் மீட்டிருந்தோம். https://www.ilakku.org/இவா்களை-யாராலுமே-தட்டிக்/
-
வட மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவிப்பு!
வட மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவிப்பு! இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று திங்கட்கிழமை(06) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போகும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார். விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். (ச) https://newuthayan.com/article/வட_மாகாண_அபிவிருத்திக்கு_ஒத்துழைப்புகளை_வழங்குவதாக_இலங்கைக்கான_நோர்வே_தூதுவர்_தெரிவிப்பு!
-
ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு
ஆயுர்வேதத் திணைக்களத்தால் 359 சித்த மருத்துவ மாணவர்கள் பாதிப்பு adminMay 7, 2024 ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என சித்த மருத்துவ மாணவர்களின் பிரநிதியான வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இலங்கை பூராகவும் 359 சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலமே நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுடைய பிரச்சனை தொடர்பில் பேசியிருந்த போது, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 60 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உள்ளக பயிற்சி என்பது அனைத்து மாணவர்களுக்குமான உரிமையாகும். எவ்வாறு 60 மாணவர்களுக்கு மாத்திரம் இந்த அனுமதியினை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வழங்க முடியும். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவ்வாறாயின் அது அரசாங்கத்தின் தவறு ஒழிய மாணவர்களுடைய தவறல்ல. இதற்குக் காரணம் ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள். இவர்களுடைய இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நமது கற்க நெறியை பூரணமாக நிறைவு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். தற்பொழுது 30 வயதினை எட்டி இருக்கின்ற போதிலும் நீண்ட காலமாக உள்ளகப் பயிற்சியினை முடிக்காததனால் எமது கற்கை பூரணப்படுத்தப்படவில்லை. உள்ளக பயிற்சி நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே ஆயுர்வேத சங்கத்தில் எங்களை ஒரு வைத்தியராக பதிவு செய்ய முடியும். எனவே நமது எதிர்காலத்தை கருத்தில் எடுத்து கற்கை நெறியை பூர்த்தி செய்ய ஏதுவாக உள்ளக பயற்சியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம் என்றார். https://globaltamilnews.net/2024/202518/
-
தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை
“அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொன்றேன்” – சிறுவன் வாக்குமூலம் adminMay 7, 2024 அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் காவல்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர். மறுநாள் பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததுடன், வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்பட்டன. அது தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்த வேளை காணாமல் போன 16 வயது சிறுவனை நேற்றைய தினம் காவல்துறையினா் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினா்ர் தெரிவித்துள்ளனர். சிறுவனை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை , சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் கைபேசி விளையாட்டுக்களுக்கு (மொபைல் கேம்ஸ்) அடிமையானவர் எனவும் , அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் என கடந்த 05ஆம் திகதி காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/202526/
-
வித்தியா வழக்கு – நீதியரசர் எஸ். துரைராஜா விலகல்
வித்தியா வழக்கு – நீதியரசர் எஸ். துரைராஜா விலகல் adminMay 7, 2024 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் நியமித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் எஸ். துரைராஜா நேற்று (06) குறித்த குழாமில் இருந்து விலகியுள்ளாா். இந்த மனுக்கள் நேற்று எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, அமர்வின் தலைமை நீதியரசர் எஸ்.துரைராஜா, தான் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலத்தில் இந்த வழக்கின் விவகாரங்களை மேற்பார்வையிட்டதால் இந்த மேன்முறையீட்டு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தெரிவித்தார். இதனையடுத்து , இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்புகள் உரிய முறையில் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை சுமார் 06 வருடங்களாக தாமதமாகியுள்ளதாக மேன்முறையீட்டு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தமைக்கு . பதிலளித்த நீதியரசர் துரைராஜா, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையால் இந்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அப்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளில் உள்ள பழுதடைந்த பகுதிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். . இதனையடுத்து , மொழிபெயர்ப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உரிய மேல்முறையீட்டு மனுக்களை ஜூலை 30-ஆம் திகதி அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தமக்கு எதிராக தண்டனை வழங்கிய விதம் சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அந்த தண்டனைகளில் இருந்து தம்மை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/202533/
- மரச் சிற்பம் - ஷோபாசக்தி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? CAN ?? IRL ?? USA ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? AUS ?? NAM ?? SCOT ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? WI ?? AFG ?? PNG ?? UGA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA ?? SL ?? BAN ?? NED ?? NEP ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) #அணி 2B - ? (1 புள்ளிகள்) 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing பின்வரும் வர்ணப் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய குழுநிலை போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளை காட்டும். உ+ம்: #A1 - ? (2 புள்ளிகள்) A1 <- Choose A1 or enter your preferred Team #A2 - ? (1 புள்ளிகள்) A2 <- Choose A2 or enter your preferred Team ஒருவர் கூகிள் ஷீற்றில் பதில்களை தட்டச்சும் செய்யும் வேளை இன்னொருவரும் தட்டச்சு செய்தால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, கூகிள் ஷீற்றை பிரதிசெய்து உங்கள் கணக்கில் பதில்களைத் தெரிவு செய்து பின்னர் யாழில் பதியுங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 அதிகபட்ச புள்ளிகள் 208 முதல் சுற்றிலும் சுப்பர் 8 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். அணிகள்: ஆப்கானிஸ்தான் (AFG) அவுஸ்திரேலியா (AUS) பங்களாதேஷ் (BAN) கனடா (CAN) இங்கிலாந்து (ENG) இந்தியா (IND) அயர்லாந்து (IRL) நமீபியா (NAM) நேபாளம் (NEP) நெதர்லாந்து (NED) நியூஸிலாந்து (NZ) ஓமான் (OMA) பாகிஸ்தான் (PAK) பபுவா நியூகினி (PNG) ஸ்கொட்லாந்து (SCOT) தென்னாபிரிக்கா (SA) சிறிலங்கா (SL) உகண்டா (UGA) ஐக்கிய அமெரிக்கா (USA) மேற்கிந்தியத் தீவுகள் (WI) முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 29 ஜூன் அன்று இறுதிப் போட்டியில் பார்படோஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
T20 உலகக் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் குழு A: இந்தியா (IND) BATTERS: Rohit Sharma (c), Yashasvi Jaiswal, Virat Kohli, Rishabh Pant, Sanju Samson, Suryakumar Yadav ALLROUNDERS: Hardik Pandya, Shivam Dube, Ravindra Jadeja, Axar Patel BOWLERS: Arshdeep Singh, Jasprit Bumrah, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Mohammed Siraj பாகிஸ்தான் (PAK) BATTERS: ALLROUNDERS: BOWLERS: கனடா (CAN) BATTERS: Navneet Dhaliwal, Aaron Johnson, Shreyas Movva, Ravinderpal Singh, Kanwarpal Tathgur ALLROUNDERS: Saad Bin Zafar(c), Dilpreet Bajwa, Junaid Siddiqui, Nicholas Kirton, Pargat Singh, Rayyan Pathan, Harsh Thaker BOWLERS: Jeremy Gordon, Dillon Heyliger, Kaleem Sana அயர்லாந்து (IRL) BATTERS: ALLROUNDERS: BOWLERS: ஐக்கிய அமெரிக்கா (USA) BATTERS: Monank Patel (c), Aaron Jones, Andries Gous, Nitish Kumar, Shayan Jahangir, Steven Taylor ALLROUNDERS: Corey Anderson, Harmeet Singh, Milind Kumar, Nisarg Patel, Shadley van Schalkwyk BOWLERS: Ali Khan, Jessy Singh, Nosthush Kenjige, Saurabh Netravalkar குழு B: இங்கிலாந்து (ENG) BATTERS: Jos Buttler (c), Jonny Bairstow, Harry Brook, Ben Duckett, Phil Salt ALLROUNDERS: Moeen Ali, Sam Curran, Will Jacks, Liam Livingstone BOWLERS: Jofra Archer, Tom Hartley, Chris Jordan, Adil Rashid, Reece Topley, Mark Wood அவுஸ்திரேலியா (AUS) BATTERS: Tim David, Travis Head, Josh Inglis, Matthew Wade, David Warner ALLROUNDERS: Mitchell Marsh (c), Cameron Green, Glenn Maxwell, Marcus Stoinis BOWLERS: Ashton Agar, Pat Cummins, Nathan Ellis, Josh Hazlewood, Mitchell Starc, Adam Zampa நமீபியா (NAM) BATTERS: ALLROUNDERS: BOWLERS: ஸ்கொட்லாந்து (SCOT) BATTERS: Richie Berrington (c), Matthew Cross, Michael Jones, George Munsey ALLROUNDERS: Michael Leask, Brandon McMullen, BOWLERS: Chris Greaves, Jack Jarvis, Safyaan Sharif, Chris Sole, Mark Watt, Brad Wheal, Oli Carter, Bradley Currie, Charlie Tear ஓமான் (OMA) BATTERS: Aqib Ilyas (c), Pratik Athavale, Khalid Kail, Mehran Khan, Naseem Khushi, Kashyap Prajapati, Shoaib Khan, Zeeshan Maqsood ALLROUNDERS: Ayaan Khan, Mohammad Nadeem BOWLERS: Bilal Khan, Fayyaz Butt, Kaleemullah, Shakeel Ahmed, Rafiullah குழு C : நியூஸிலாந்து (NZ) BATTERS: Kane Williamson (c), Finn Allen, Devon Conway ALLROUNDERS: Michael Bracewell, Mark Chapman, Daryl Mitchell, James Neesham, Glenn Phillips, Rachin Ravindra, Mitchell Santner BOWLERS: Trent Boult, Lockie Ferguson, Matt Henry, Ish Sodhi, Tim Southee மேற்கிந்தியத் தீவுகள் (WI) BATTERS: Rovman Powell (c), Johnson Charles, Shimron Hetmyer, Shai Hope, Brandon King, Nicholas Pooran, Sherfane Rutherford ALLROUNDERS: Roston Chase, Jason Holder, Andre Russell, Romario Shepherd BOWLERS: Akeal Hosein, Shamar Joseph, Alzarri Joseph, Gudakesh Motie ஆப்கானிஸ்தான் (AFG) BATTERS: Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Mohammad Ishaq, Najibullah Zadran ALLROUNDERS: Rashid Khan (c), Azmatullah Omarzai, Gulbadin Naib, Karim Janat, Mohammad Nabi, Nangeyalia Kharote BOWLERS: Fareed Ahmad, Fazalhaq Farooqi, Mujeeb Ur Rahman, Naveen-ul-Haq, Noor Ahmad பபுவா நியூகினி (PNG) BATTERS: ALLROUNDERS: BOWLERS: உகண்டா (UGA) BATTERS: Fred Achelam ALLROUNDERS: Dinesh Nakrani, Alpesh Ramjani, Kenneth Waiswa BOWLERS: Brian Masaba (c), Bilal Hassan, Cosmas Kyewuta, Riazat Ali Shah, Juma Miyagi, Roger Mukasa, Frank Nsubuga, Robinson Obuya, Ronak Patel, Henry Ssenyondo, Simon Ssesazi குழு D : தென்னாபிரிக்கா (SA) BATTERS: Aiden Markram (c), Quinton de Kock, Reeza Hendricks, Heinrich Klaasen, David Miller, Ryan Rickelton, Tristan Stubbs ALLROUNDERS: Marco Jansen BOWLERS: Ottniel Baartman, Gerald Coetzee, Bjorn Fortuin, Keshav Maharaj, Anrich Nortje, Kagiso Rabada, Tabraiz Shamsi சிறிலங்கா (SL) BATTERS: ALLROUNDERS: BOWLERS: பங்களாதேஷ் (BAN) BATTERS: ALLROUNDERS: BOWLERS: நெதர்லாந்து (NED) BATTERS: ALLROUNDERS: BOWLERS: நேபாளம் (NEP) BATTERS: Aasif Sheikh, Dipendra Singh Airee, Kushal Bhurtel, Sundeep Jora, ALLROUNDERS: Rohit Paudel (c), Karan KC, Kushal Malla, Pratis GC, Anil Sah, Sompal Kami BOWLERS: Abinash Bohara, Gulsan Jha, Lalit Rajbanshi, Kamal Airee, Sagar Dhakal ஏழு அணிகளின் வீரர்களின் விபரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அவை வெளியானதும் அறிவிக்கப்படும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 01 ஜூன் 2024 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 29 ஜூன் 2024 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) கனடா (CAN) அயர்லாந்து (IRL) ஐக்கிய அமெரிக்கா (USA) குழு B: இங்கிலாந்து (ENG) அவுஸ்திரேலியா (AUS) நமீபியா (NAM) ஸ்கொட்லாந்து (SCOT) ஓமான் (OMA) குழு C : நியூஸிலாந்து (NZ) மேற்கிந்தியத் தீவுகள் (WI) ஆப்கானிஸ்தான் (AFG) பபுவா நியூகினி (PNG) உகண்டா (UGA) குழு D : தென்னாபிரிக்கா (SA) சிறிலங்கா (SL) பங்களாதேஷ் (BAN) நெதர்லாந்து (NED) நேபாளம் (NEP) முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 1 ஜூன் முதல் 17 ஜூன் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று: சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அவை கீழே உள்ளவாறு பிரிக்கப்படும். குழு 1: A1 B2 C1 D2 குழு 2: A2 B1 C2 D1 சுப்பர் 8 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 19 ஜூன் முதல் 24 ஜூன் வரை நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) முதலாவது அரையிறுதிப் போட்டி 26 ஜூன் அன்று ட்ற்னிடாட் & ரொபேகோவிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 27 ஜூன் அன்று கயானாவிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 29 ஜூன் அன்று பார்படோஸில் மோதவுள்ளன. கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
-
இராமன் வில் - நெற்கொழு தாசன்
இராமன் வில் - நெற்கொழு தாசன் அவன் சாவோடும் போரோடும் வளர்ந்த குழந்தை. இப்போது எல்லாம் அழிவுற்றதான ஒரு தனியன். எறும்பைப் போல, இலையானைப் போலவாவது தனக்குமொரு வாழ்க்கை இருந்துவிடாதாவென எண்ணுகின்ற போதெல்லாம் தனது பெயரைத்தான் நினைத்துக்கொள்வான். பார்க்கும், பழகும் அனைவருக்கும் அவன் எல்லாவற்றாலும் விடுதலை பெற்றவொரு சாமானியன். விடுதலை என்பதன் அர்த்தம் உள்ளங்கை ரேகைபோல ஆளுக்காள் மாறுபட்டாலும் விடுதலையில்தான் எல்லாமுமிருக்கிறது என்பவர்களுக்கு, தனது பெயரே விடுதலை என்பதுதான் என்பதை, விளங்கவைக்கவே தன் கதையை சொல்லுவான். அந்தக் கதை கருப்பிகுளத்திலிருந்து ஆரம்பிக்கும். "இராமன் வில்லு காட்டுகிறேன் வா" என்று மதுரா அவனது கையைப் பிடித்து அழைத்துச்சென்று கருப்பி குளக்கட்டில் இருத்தி வைத்திருந்த, கருமேகங்கள் சூழ்ந்த அந்த மாலைப்பொழுதை நினைவிலிருந்து மெதுவாக மீட்கத் தொடங்கும்போதே ஆக்காட்டி அலைவுற்றுக் கத்தும் ஓசை அவனது ஒற்றைக் காதுக்குள் கேட்கத் தொடங்கும். அந்த ஓசை தலையைப் பிளந்து நெருப்புக்கோளம் வெளிவருவதுபோல உணரவைக்கும். பின்வந்த நாள்களில் யாருமில்லாமல் தனியனாகக் குளக்கட்டில்போய் அமர்ந்திருந்தால், அந்த வழியாக தலைச்சுமையுடன் நடந்து செல்வோரையும், மாடுகளை ஓட்டிச்செல்வோரையும், அருகிலிருந்த முகாமிலிருந்து பயிற்சிக்காக ஓடும் போராளிகளையும் பார்த்துக் கொண்டதெல்லாம் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் அந்த முதல்நாள் நினைவுகள், ஆக்காட்டியின் அலறல் இடைவிடாது தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்தச் சாவும் நிழல்போல வளர்ந்துகொண்டே இருந்தது. வவுனிக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதும் அதுவழியாக நுரைத்துப் பெருகிவரும் நீர் வயல்களையும், குடிமனைகளையும் கடந்து கருப்பிகுளத்தை வந்தடையும். குளம் நிரம்பியதும் அங்கிருந்து மூன்று கிளை வாய்க்கால்களால் பிரிந்து வடக்கு வயல்களைக் கடந்து விரிந்துகிடக்கும் பெருங்காட்டை ஊடறுத்துச் சென்று பாலியாற்றில் கலக்கும். யானைகளும் கரடிகளும் நிறைந்துகிடக்கும் அந்தக் காட்டிலிருந்து பலதடவைகள் யானைகள் கருப்பி குளத்தில் இறங்கி நீர் தூவிக் குதூகலிப்பதும் உண்டு. தாமரைகளும் அல்லியும் நிறைந்து கருப்பிகுளம் எக்காலமும் செழிப்புற்றுக்கிடக்கும். குளத்தின் அகன்ற கட்டில் இருந்து அந்த நீரின் அசைவுகளையும் மிதக்கும் தாமரை இலைகளையும் அதில் தாவும் சிறு பூச்சிகளையும், பசியகருமைபடர்ந்து விரிந்துகிடக்கும் பெருங்காட்டையும் பார்த்துக்கொண்டிருந்தால் நேரமே போவது தெரியாது. எல்லாவற்றையும் இழந்த பின்னும் விடுதலைக்கு அந்தக் குளக்கட்டில் வந்திருந்ததும் கிடைக்கும் அமைதி அலாதியானது. இரவுகளையும் கூட அந்தக் குளக்கட்டிலேயே உறங்கிக் களித்துவிடவும் தயாராகவே இருந்தான். ஆனால் இரவுகளில் அங்கு வரும் யானைகளுக்கும் நரிகளுக்கும் இடையூறாக மனிதவாடை இருந்து விடக்கூடாதென எழுந்து சென்றுவிடுவான். கருப்பி குளத்திலிருந்து இருநூறு மீற்றர்கள் தூரத்தில் அவனது தற்போதைய வீடு இருந்தது. அவனுக்கு அது வீடு. ஏனையோருக்கு வயல்காவலுக்கு கட்டப்பட்ட குடில் அல்லது கொட்டில். அன்று கையைப்பிடித்து அழைத்துச்சென்றவள், அவனைக் கட்டில் இருத்திவிட்டு குளத்தில் இறங்கி தாமரைப் பூக்களையும் சில தாமரைக் கிழங்குகளையும் பிடிங்கி வந்தாள். பின் கட்டில் வாகாக ஏறி அவனுக்கருகில் அமர்ந்துகொண்டு தாமரை இதழ்களைப் பிரித்து, நடுவில் மகரந்தம் சூழ்ந்திருந்த பகுதியை காரித்தின்றாள். தானே கடித்து துண்டாக்கி விடுதலைக்கும் கொடுத்தாள். ஒரு கையில் நிறைந்த தாமரைப்பூக்களுடன் தன்னருகில் இருந்த மதுராவை பிரியத்துடன் பார்த்தான்.சில்லெனகுளிர்ந்த காற்று அவனது கழுத்தைத் தடவிப்போனது. அப்போதுதான் "அங்க பார் இராமன் வில்லு" என வானத்தில் தோன்றிய வளைந்த வண்ணக்கலவையை சுட்டிக்காட்டினாள். குளக்கட்டிலிருந்து நீருக்குள் குதித்து இராமன் வில்லு, இராமன் வில்லு வா வாவெனக் கத்தினாள். அவனும் குளத்தின் நீருக்குள் மெதுவாக இறங்கினான். பல தடவைகள் தாயுடன் அந்தக் குளப்பகுதியை நடந்தோ சைக்கிளிலோ கடந்துபோயிருந்தாலும் குளத்தின் அருகிலோ அல்லது குளத்தின் கட்டுகளுக்கோ சென்றதில்லை. குளத்தில் முதலை இருக்கிறதென வெருட்டியிருந்தார்கள். அந்த பயம் காரணமாக அவன் குளத்திற்குள் இறங்கிப் பார்க்க கேட்டதுமில்லை. விரும்பியதுமில்லை. அன்றுதான் குளத்தின்கரையில், கால்கள் நீரில் புதைய முதன் முதலாக நின்று வியந்து பார்த்தான். கால்களுக்கு கீழே பூமியே புதைவதுபோல தோன்ற மதுராவின் கைகளைப் பற்றிக்கொண்டான். தூரத்தே தெரிந்த கரும் முகில்களை, அவற்றின் திரண்ட பருமன்களை, அதனூடு இடைவெட்டி உருவாகிக் கிடந்த வானவில்லை கண்கள் விரியப் பார்த்தான். பதினைந்து வயதேயான மதுரா, தான் வானவில்லை பார்க்கவும், தாமரைப் பூக்களை ஆய்ந்து விளையாடவும் வேண்டுமென்ற ஆவலில்தான் அவனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அவளுக்கு அந்த வனப்புமிகுந்த நிலமும் குளமும் குளத்தின் அருகிலிருந்த விளாத்தி மரநிழலும் மிகப் பிடித்தமானது. நிழல் வளர்வதைப்போல தானும் வளர்வேன் என்று சொல்லுவாள். பற்றிப்பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு இராமன் வில் என்ற அந்த வர்ணக்கலவையை எட்டிப் பிடித்துவிடலாம் என்பதுபோல மகிழ்ந்து துள்ளியதைப் பார்த்தான். அந்தக் கணத்தில்தான் அது நிகழ்ந்தது. வானம் இடிந்து விழுந்ததுபோலவொரு ஓசை. மதுரா முகங்குப்புற விழுந்தாள். அவளது தலையிலிருந்து வழிந்த குருதி குளத்து நீரில்கலந்து வானில் தோன்றியதுபோலவே இராமன் வில்லுகள் பல தோன்றின. அந்த சத்தத்தால் கலவரமுற்ற ஆக்காட்டியொன்று அலைவுற்றுக் கத்தியபடி வட்டமிட்டுப் பறந்தது. அவன் அருகிலிருந்து பார்த்த முதல் சாவு அவளது. ஏன் சுட்டார்கள். எதற்கு சுட்டார்கள். எங்கிருந்து சுட்டார்கள். எதுவுமே அவனுக்குப் புரியவில்லை. மறுநாள் பலவித தோரணைகள் கொண்ட பலர் அவனிடம் கேள்விகள் கேட்டார்கள். கருப்பிகுளத்தின் மறுகரையில், "எங்களூர்காரங்க" என்று அந்தக் கிராம மக்களால் அழைக்கப்பட்ட, இந்திய இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி மலர்வளையத்துடன் வந்து நீண்டநேரம் கைகளை கட்டியபடி கண் கலங்க மதுராவில் உடலருகில் நின்றிருந்தார். தவறுதலான சூடு என்று ஊர்ப்பிரஜைகள் குழுவிடம் கூறி, சூட்டினை மேற்கொண்ட நபரை இராணுவ நீதிமன்றில் நிறுத்துவதாகவும், சாட்சி சொல்லவரும்படியும் கோரிக்கை விடுத்து தன்னை தவறற்றவனாக நிறுவிக்கொண்டார். கரும் பச்சை உடையில், முகத்தில் மீசையோ தாடியோ இல்லாமல் பளிச்சென்றிருந்த அவரது தோற்றமும், கையில் தன்னைப்போலவே சின்னவிரலோடு சேர்ந்திருந்த ஆறாவது விரலும் அவனுக்குள் படிந்துகொண்டது. வீட்டுக்கு அடிக்கடி வந்து சாப்பிட்டு செல்லும் தாடிமீசை தரித்த பலருடன் அந்த அதிகாரியை ஒப்பிட்டுப் பார்த்தான். இவர், அவர்கள் யாரைப்போலவும் இல்லையென தலையை அசைத்துக் கொண்டான். அப்போதுதான் அந்த அதிகாரியின் சீருடையில் இருந்த மூவர்ணத்தை பார்த்தான். அதுவொரு சிதைவுற்ற இராமன் வில் என மனதுக்குள் எண்ணிக்கொண்டான். மதுராவின் சாவின் பின்வந்த பத்தாம் நாள் அவனது வீடு எரிக்கப்பட்டது. அவனும் அம்மம்மாவும் தவிர மற்ற அனைவரும் கருகி இறந்தனர். பயத்தில் நடுங்கிய ஊர் காட்டுக்குள் இறங்கி ஒளிந்துகொண்டது. ஊரோடு அவனும் சேர்ந்துகொண்டான். காடு அம்மம்மாவை வாங்கிக் கொண்டு தன் வெம்மையை அவனுக்குக் கொடுத்து அரவணைத்துக் கொண்டது. செஞ்சிலுவைச்சங்கத்திடம் முறையிட்டதாலும், சாட்சியாக அவன் இருந்த காரணங்களாலும் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவே வீட்டினை எரித்து படுகொலையை நிகழ்த்தியதாக காடெங்கும் முணுமுணுப்புகளால் நிறைந்திருந்தது. குடும்பத்தோடு அவனும் எரித்தழிக்கப்பட்டுப்போனான் என வரலாறு பதிந்துகொண்டது. விடுதலை என்ற அவனது பெயர் காட்டைத்தாண்டி, கருப்பிகுளத்தை கடந்து தமிழ் நிலமெங்கும் பரவியது. சிறுவயதில் மயிலிறகு பொறுக்கக் கூட்டிச்செல்லும் தம்பியின் நினைவாகவே விடுதலை என்ற பெயரை தனக்கு வைத்தாக தாய் சொல்லியிருந்தாள். முகம் தெரியாத அந்த மாமனின் கண்களும் உனது கண்களைப்போலதான் இருக்குமென்று அம்மம்மா கூறிய நாளில் அவனுக்கு அந்தப்பெயர் குறித்தொரு பெருமித உணர்வே கிடைத்தது. அந்தப் பெருமிதம்தான் இன்றைய வாழ்வின் நாசமறுப்புக்கு ஆரம்பப்புள்ளி என்று சொல்வான். தன் நினைவுகளிலிருந்து தப்பி ஓட நினைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இயலாமையால் திரும்பி வந்து கருப்பிகுளத்தின் கட்டினில் அமைதியாக இருந்துவிடுவதை அல்லது அந்தப் பெருங்காட்டுக்குள் இறங்கிவிடுவதைத் தவிர வேறுவழி தோன்றியதில்லை. காலையோ மாலையோ குளத்தின் கரையினில் அல்லது விளாத்திமர நிழலில் அமர்ந்துவிட்டால் போதும் எல்லா நினைவுகளும் கழன்றுபோக வெற்று மனிதனாகிடுவேன் என்பான். சிறுவயதுகளில், பச்சை உடுப்புடன் கம்பீரமாக வந்து, மயில் இறகு பொறுக்கித்தரும் மாமனை கனவுகளில் கண்டிருக்கிறான். கைவிரலைப் பிடித்து அழைத்துச்செல்லும் மாமன் அப்படியே வானம் இறங்கும் தொலைவுவரை நடந்து கொண்டிருக்க, ஆயுதமொன்றின்மேல் தொப்பியை கவிழ்த்து வைத்து சுவர்களில் வரையப்பட்ட ஓவியமொன்றொடு கனவு முடியும். பாடசாலைகளில் தன் கனவு பற்றிப் பகிர்ந்துகொண்ட போதெல்லாம் மற்ற நண்பர்களும், தங்களுக்கும் அதேசாயலிலொரு கனவு தோன்றுவதாக கூறுவார்கள். மாமாக்களினதும், அண்ணாக்களினதும் கதைகளால் அந்தக் காலங்கள் நிரம்பியிருந்தன. அவனிடம் மாமாவின் கதை அரைகுறையாவே இருந்தது. மதுராவின் சாவின்பின் பலநாட்கள் கழிந்து, ஒரு புகைப்படம் கூட இல்லாமல்போன மாமனைப் பற்றி அயல்வீட்டு "மணிமுத்தாறு" ஆச்சியிடம் கேட்டான். "ஒன்றாக வந்தோமே மாநகரத்திலிருந்து நன்றாகத்தான் இருந்தோமா" என ஆரம்பித்து, றப்பர் தோட்டத்தில் ஒரேயொருநாள் வேலைக்கு போகாத காரணத்தால் ஆப்கானிலிருந்து வேலைக்கு வந்த காவலாளியொருவன் சுட்டுக்கொன்ற கதையையும், பதின்நான்கு வயதுப் பாலகியை நிர்வாணமாக்கி பிரம்பாலடித்த தோட்டத்துரையின் திமிரையும், அங்கிருந்து ஒளிந்தோடி இங்கு வந்தும் ஒளியுறமே, பழைய கப்பல் ஏறி வாழவென்று வந்தோமேயென, தங்கள் பூர்வீகக் கதையை ஒப்பாரியோடு கூறியதையும், மண் அள்ளித் தூற்றியதையும் பார்த்தான். அதன்பின் அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை. மாமன் குறித்து தனக்குள் ஒரு சித்திரத்தை வரைந்துகொண்டான். அது ஊரவர்களின், மாமனின் நண்பர்கள் சொன்ன கிளைக் கதைகளிலிருந்து அவன் உருவாக்கியது. மாமன் இருந்திருந்தால் வீடு எரிந்திருக்காது. அப்படி எரிந்திருந்திருந்தாலும் ஒரு தேவதூதன்போல கையைப்பிடித்து தங்களை காப்பாற்றி இருப்பானென உளமார நம்பிக்கை கொண்டான். எப்படியும் திரும்பி வந்துவிடுவானென்று அத்தனை பேரும் நம்பியிருந்தாக சொல்லியிருந்ததுதான் அவனுக்கு வியப்பை கொடுத்தது. ஏனென்றால் ஆபத்துவேளைகளில் காற்றோடு காற்றாற்றவும் நீரோடு நீராகவும் மரத்தோடு மரமாகவும் மாறிவிடக்கூடிய அசாத்தியமான திறமை கொண்டவனென கூறியிருந்தார்கள். ஒருநாள் பத்துமணி சேவல் கூவும்போது அவனோடு வந்துசென்றவர்கள் மறுநாள் வெள்ளிவிழும் பொழுதில் வந்து அவன் இல்லையென்றும் உடல் கிடைக்கவில்லையென்றும் கூறினார்களாம். அதுவொரு இயக்க இரகசியம் எனக் கருதி எப்படி நடந்தது என்று யாருமே கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை. பின் பல தடவைகள் வந்துசென்றிருந்தாலும் அதைபற்றி எதுவுமே அவர்களும் பேசியதில்லை. இவர்களும் கேட்டதில்லை. அவர்கள் அவனுக்கு வைத்த பெயரை மட்டும் கூறினார்களாம். அந்தப் பெயரை இவன் பிறந்தபோது அவர்களே இவனுக்கு வைத்துவிட்டார்கள். "விடுதலைக்கு எத்தனை மாமன்கள் பாருங்கள்" அக்கா என்று கூறுவர்களாம். சுற்றியிருந்த அத்தனையும் இல்லாமல்போய் காட்டிலிருந்து மீண்டும் திரும்பி வந்தபோது அவன் வாழ்ந்த நிலத்தில் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. ஒவ்வொரு இடமாக மாறிமாறி இனி ஒழிய இடமில்லையென்ற நிலைவந்தபோதுதான் திரும்பிப் பார்த்தான் கூட யாருமேயில்லை. காட்டின் வெம்மை அவனுக்குள் நீறாமல் எரிந்துகொண்டிருந்தது. எல்லாக் காலங்களிலும், தங்கள் எல்லோரிலும் ஆயுதங்களால் நிகழ்ந்த வடு அவனுக்குள் ஆறாமல் கிடந்தது. ஆயுதங்களை வெறுத்தான். அது வழங்கிவிடும் அதிகாரபோதையை காறி உமிழ்ந்தான். அதன் மூலம் கிடைக்கின்ற பாதுகாப்பையும் துணிவையும் நிராகரித்தான். அது நிகழ்த்திய கொலைகளை துயரத்தோடு சுமந்தான். ஆனால் ஆயுதம் மீதான வெறுப்பு அதனைச் சுமந்து திரிந்தவர்கள் மீது வரவேயில்லை. அவர்களை பரிதாபத்துடன் நேசித்தான். இது அவனுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. இரண்டுபட்ட மனநிலையில் நிராகரிக்கவும் வெறுக்கவும் அதேசமயம் நேசிக்கவும் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டான். தனிமை சூழ்ந்த நாட்களில் கருப்பிகுளத்தை கடந்து காட்டுக்குள் இறங்கிவிட்டால் நாளும் பொழுதும் போவது தெரியாமல் அலைந்துகொண்டே இருப்பான். காடு அவனுக்கு சலிப்பதில்லை. காட்டுக்குள் ஓடும் ஆறொன்றின் அமைதியுடன் நடந்துகொண்டே இருப்பான். ஊருக்குள் திரும்பிவந்த நாள்களில் அவன் நடந்த வழியெங்கும் சாவுகள் வளர்ந்து கொண்டே இருந்ததைப் பார்த்தான். அதனால் ஊருக்கே வர அஞ்சினான். யாரும் யாருக்காவும் காத்திருக்கவில்லை. எல்லைகள் மாறிக்கொண்டிருந்தன. எந்த ஆயுதத்தாலும் அவனை நெருக்க முடியவில்லை. நெருங்க முயன்ற போதெல்லாம் காடு அவனை தனக்குள் மறைத்துக் கொண்டது. வெளியில் திசைகள் பற்றியெரிந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மக்களின் பெரும் நம்பிக்கை சரிந்துபோனதை அவனால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. ஆயுதம் மீதான அவனது வெறுப்பும், நிராகரிப்புமே வாழ்வதற்கு போதுமானது எனக் கண்டுகொண்டான். மதுராவில் தொடங்கி ஒவ்வொருவராக அவனைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கக் கண்டான். வீடு எரிந்தபோது ஊரவர்களுடன் காட்டுக்குள் இறங்கியவன், ஊரே எரிந்து எழுந்து திசையறியாது ஓடியபோது, தனியனாக காட்டுக்குள் இறங்கினான். காடு அபயமளித்தது. எப்பவாவது ஒருதடவை ஊருக்கு திரும்புவான். அவன் திரும்பும் ஒவ்வொரு தடவையும் ஊர் மாறிக்கொண்டிருந்தது. முகங்கள் மாறின.மொழிகள் மாறின. ஆயுதங்கள் மாறின. பச்சை உடைகள் மாறின. மனிதர்கள் மாறினார்கள். அந்தமாற்றங்கள் அவனை ஊரிலிருந்து விலகவைத்தன. இருந்தும் கருப்பிகுளமும் அவன் வாழ்ந்த நிலமும் அவனை அழைத்துக்கொண்டுதான் இருந்தது. அதற்காக ஒருநாள் ஊருக்கு திரும்பியவன் கைதுசெய்யப்பட்டான். மீண்டும் ஒருதடவை விடுதலை என்ற பெயர் தமிழ் நிலமெங்கும் பேசுபொருளானது. ஊடகங்களில் சில முன்னாள் போராளியென்றன, சில அப்பாவி இளைஞன் என்றன, அரசியல் தலைவர்களில் சிலர் போராளிகளை திரட்டி புதிய அமைப்பை கட்டியெழுப்பும் தலைவன் என்றார்கள். தாக்குதலுக்கு மீண்டும் தயாராகின்றன படையணிகள் என்றார்கள். ஆயுதங்களை வெறுத்து நிராகரித்த அவனைச் சுற்றிலும் ஆயுதங்கள் பேசுபொருளாயின. தடுப்புக்காவலில் இருந்த அவனுக்கு இவை எதுவுமே தெரியாது. விசாரணையின்போது எங்கெல்லாம் உறங்கியதாக கூறினானோ, எங்கெல்லாம் உணவு தயாரித்ததாக கூறினானோ அங்கெல்லாம் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் கண்முன்னாலேயே அந்த இடம் உருக்குலைக்கப்பட்டது. தன்னால், தனக்கு அபயமளித்த காடு சிதைக்கப்படுவதை நேரில் பார்த்தான். இயலாமையோடு யாருக்கும் தெரியாமல் அன்றுவரை காப்பாற்றிவந்த ஆயுதம் பற்றிய இரகசியத்தை காட்டுவதாக கூறினான். தன்னைச் சுற்றிலும் ஆயுதங்கள் குறிபார்க்க அழைத்துச் சென்றான். அவர்கள் எழுப்பிய ஆரவாரங்களால் கலவரமுற்று ஆக்காட்டியொன்று அவலக்குரல் எழுப்பியபடி பறந்துபோனது. கருப்பிகுளத்துக்கு நேர் எதிராக இருந்த கட்டுப்பகுதிக்குள் நீண்ட நேர பயணத்தின் பின், வானத்தை மறைத்துநின்ற பெருமரங்களிடையில் திசையெங்கும் கிளையெறிந்து உயர்ந்து நின்ற அரசமரத்தின் கிளையொன்றை சுட்டிக்காட்டினான். அவன் காட்டிய திசையில் பார்த்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். துருவெறிப்போன ஆயுதமொன்றை தோளில் சுமந்தபடியொரு எலும்புக்கூடு கயிற்றில் அசைந்து கொண்டிருந்து. அதற்கு நேர்கீழே நிலத்தில் குவியலாக இருந்த கரிய கற்களில் யாரோ வழிபாடு நிகழ்த்தியமைக்கு ஆதாரமாக கருகிய காட்டுப்பூக்கள் கிடந்தன. உயரதிகாரியின் கட்டளைக்கு இணங்க மரத்தில் எறிய இராணுவ வீரர்கள் கயிறை அறுத்து மெதுவாக எலும்புக்கூட்டை இறக்கினார்கள். அதன் தோளில் கொழுவியிருந்த துருப்பிடித்திருந்த ஆயுதத்தில் மிகப் பழையதான தினக்குறிப்பேடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. அதனை எடுத்துப் பார்த்தபோது எழுத்துக்கள் எல்லாம் அழிந்துபோய் பக்கங்கள் சிதைந்து மக்கி கையோடு கழன்று வந்தன. அதிலொன்றை எடுத்து பார்த்தபோது அதில் அச்சிடப்பட்டிருந்த ஆண்டு மட்டும் தெரிந்தது. அது ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து எட்டு. விடுதலை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டான். எலும்புக்கூடு ஆயுதம் தினக்குறிப்பேடு கயிறு கீழே இருந்த கருகிய மலர்கள் என எல்லாவற்றையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார்கள். நீதிமன்றத்தால் விடுதலையை விசாரணைக் கைதியாக வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆய்வுக்கு அனுப்பிய பொருள்களின் முடிவு கிடைத்தபோது, கருகிக்கிடந்த மலர்களில் விடுதலையின் கைரேகை இருப்பதாக சொல்லி அவனை புனர்வாழ்வுக்கு அனுப்பினார்கள். வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம் இலங்கைக்கான இந்திய வதிவிடப் பிரதிநிதியை அழைத்து, எலும்புக்கூட்டையும், ஆயுதத்தையும், தினப்பதிவேட்டையும் கையளித்தது. அந்த நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்ற அய்யத்தையும் நீதிமன்றம் தெரிவித்துக்கொண்டது. எலும்புக்கூட்டை பெற்றுக்கொண்ட இந்திய தூதுவராலயம், தமது சார்பில் டீ. என்.ஏ சோதனைகள் உட்பட அனைத்தையும் மீண்டும் செய்து கொண்டார்கள். பின் முழு இராணுவ மரியாதையுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து திரட்டப்பட்ட தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு அடையாளம் காணப்பட்டு தமிழகத்தின் "மணிமுத்தாறு" என்ற கிராமத்திற்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட பின்னர், உறவினர்கள் கூடிநிற்க, இலங்கையில் இராணுவப் பணியிலிருந்தபோது அனுப்பியிருந்த கடிதமொன்றும் வாசிக்கப்பட்டது. அதில் விடுதலையின் கண்கள் ஆயிரமாயிரமென பெருகுவதாகவும் ஒருவரி எழுதப்பட்டிருந்தது. தங்களது தந்தை இலங்கையில் வாழ்ந்த இடத்தை பார்க்க விரும்புவதாக அவர்கள் கோரிகை விடுத்தார்கள். நீண்ட பரிசீலனையின் பின் அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற இந்திய தூதரகம் முன் வந்தது. அத்தோடு அவர்கள் விடுதலையை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் விடுதலையை சந்தித்தநாளில், காட்டினை ஊடறுத்து முகாம்கள் முளைத்திருந்தன. விலங்குகள் யாவும் இடம்பெயர்ந்திருந்தன. பறவைகள் தூரப்போயிருந்தன. தாமரைகள் இல்லாமல் கருப்பிகுளம் பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்தது. காடு தன்னை காடென மறந்து வெம்மையை இழந்து விட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக காடு எல்லோருக்கும் எட்டாத இடமாயிற்று. இப்போது காற்றும் காட்டாற்று வெள்ளமும் அனுமதி பெற்றுத்தான் காட்டுக்குள் உள்நுழைய முடிகிறதென, இந்தக் கதையை கருப்பிகுளக்கட்டில் இருந்து, காட்டைப் பார்த்தபடி சொல்லிமுடித்தான். (இமிழ் – மார்ச் 2024) மூலம்: நெற்கொழு தாசன் Messenger ஊடாக.
-
கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வி! – அரசாங்கம் கையில் எடுக்கவுள்ள புதிய துருப்புச் சீட்டு
கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வி! – அரசாங்கம் கையில் எடுக்கவுள்ள புதிய துருப்புச் சீட்டு May 6, 2024 அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத் திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. வெற்றிகரமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற தலைப்பை எதிர்வரும் தேர்தல்களில் பிரதான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மகத்தான வெற்றியைப் பெற்றதாகக் காட்டி அதனைப் பெரிய துருப்புச் சீட்டாக மாற்ற அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்திருந்தது. ஆனால் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாகவும், இலங்கையின் பிரதான கடனாளியான சீனா, பாரிஸ் கிளப் முன்வைத்த பிரேரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து அரசாங்கம் புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத்திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. அல்லது இரண்டு கொள்கைகளின் கீழ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைச்செயல்படுத்த வேண்டும். ஆனால் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக உலகில் எந்த நாடும் இதுபோன்ற இரண்டு திட்டங்களைச் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. அப்படி நடந்தால், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் செய்து கொள்ளும் கடன் ஒப்பந்தங்களை அது கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் அனைவரும் ஒரே திட்டத்தின் கீழ் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், சீனா மற்றும் பாரிஸ் கிளப்புடன் தனது கடைசித் துருப்புச் சீட்டாக இரண்டு கடன் திட்டங்களை செயல்படுத்த ஒரு உடன் பாட்டை எட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/கடன்-மறுசீரமைப்புத்-திட்/
-
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு - கையினால் தயாரிக்கப்படும் ஓனிகிரியை விட 10 மடங்கு விலை PrashahiniMay 6, 2024 ஜப்பான் உணவகங்களில் புதிதாக அக்குளை பயன்படுத்தி வியர்வை கலந்த ஓனிகிரி எனப்படும் சோற்று உருண்டைகள் தயாரிக்கப்படுகிறன. சோறில் தயாரிக்கப்படும் ஓனிகிரி என்ற உணவு ஜப்பானில் பாரம்பரிய உணவாக உள்ளது. இந்நிலையில் இதனை கையினால் தயாரிப்பதை விட புதிதாக அக்குளுக்கு வைத்து முக்கோணமாகவும், வட்டமாகவும் செய்து விற்பனைக்கு வந்துள்ளதாக ஜப்பான் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு உணவகங்களில் பணிபுரியும் இளம் பெண்கள் தங்கள் அக்குள்களைப் பயன்படுத்தி ஓனிகிரியை வடிவமைக்கிறார்கள். தயாரிக்கும் பெண்கள் கண்டிப்பான சுகாதார நெறிமுறையைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் உணவை தயாரிக்கும் முன்பு தங்கள் உடல் பாகங்களை முழுமையாக கிருமி நீக்கம் செய்கிறார்கள். பின்னர் பெண்கள், வியர்க்கத் தொடங்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறார்கள். இவ்வாறாக அவர்கள் தங்கள் கைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தங்கள் அக்குள்களைப் பயன்படுத்தி குறித்த உணவைத் தயாரிக்கிறார்கள். சில உணவகங்கள் இந்த செயல்முறையை வெளிப்படையாக நிரூபிக்கின்றன, இது வாடிக்கையாளர்கள் இந்த தனித்துவமான நுட்பத்தைப் பார்க்க அனுமதிக்கிறது. மனித வியர்வை இல்லாத கையினால் தயாரிக்கப்படும் ஓனிகிரியை விட 10 மடங்கு விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது இந்த தயாரிப்பை சிலர் தனித்துவமான சுவையாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். சோற்றுடன் மீன், இறைச்சி வகைகளை வைத்து கடற்பாசியால் மூடி இந்த ஓனிகிரி விற்கப்படுகின்றது. https://www.thinakaran.lk/2024/05/06/breaking-news/58609/ஜப்பானில்-அக்குள்-வியர்வ/
-
யாழில் உணவகத்தில் புழு!!
யாழில் உணவகத்தில் புழு!! புதியவன்) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் நகருக்கு அண்மையாகவுள்ள பிரபல சைவ உணவகத்தின் மதிய உணவில் புழு காணப்பட்டமை தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவுப் பொதியை இன்று ஒருவர் 300 ரூபா செலுத்திக் கொள்வனவு செய்துள்ளார். அவர் தனது அலுவலகத்துக்குச் சென்று மதிய உணவை உண்பதற்காக பொதியைத் திறந்துள்ளார். இதன்போது உணவினுள் புழு இருந்தமையை அவதானித்துள்ளார். உடனடியாக யாழ். மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரிக்கும், பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் அறிவித்துள்ளார். இதேவேளை மேற்படி உணவகத்தின் மதிய உணவில் புழு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டிருந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது. (அ) https://newuthayan.com/article/யாழில்_உணவகத்தில்_புழு!!
-
இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி
இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி adminMay 6, 2024 இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்த முன்மொழிவுகளுக்கமைய ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதன் காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2024/202491/
-
மரச் சிற்பம் - ஷோபாசக்தி
மரச் சிற்பம் ஷோபாசக்தி பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு இப்போது வாழ்வதற்கு அபாயகரமான நிலமாகிவிட்டது. குற்றக் குழுக்களதும் கலகக்காரர்களதும் கரிய பாதங்களுக்குக் கீழே இந்தத் தூய நிலம் அழுந்திகொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கற்றதன்மையிலிருந்து மீள்வதற்கு நமக்கு ஒரேயொரு வழியே உள்ளது. பிரான்ஸின் தனித்த பெருமைக்குரிய, மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் சின்னமான மரச் சிற்பத்தை மீண்டும் நாங்கள் பொது முற்றங்களில் நிறுவ வேண்டும்.” பிரெஞ்சு மொழியில் உயிருள்ளவை, உயிரற்றவை எனப் பலவற்றுக்கும் செல்லப் பெயர்கள் அன்றாடப் பேச்சுகளில் சரளமாகப் புழக்கத்திலுண்டு. பொலிஸ்காரனுக்கு ‘கோழி’ என்பதும் பெண்ணுக்கு ‘தெள்ளுப்பூச்சி’ என்பதும் ஆண்குறிக்கு ‘சேவல்’ என்பதும் செல்லப் பெயர்கள். ‘மரச் சிற்பம்’ என்ற செல்லப் பெயரால் குறிப்பிடப்படுவது கில்லட்டின். ‘லே மிஸரபிள்’ நாவலில் விக்டர் ஹியூகோ “ஒருவர் தனது சொந்தக் கண்களால் கில்லட்டினைப் பார்க்காத வரை, மரணதண்டனை குறித்து அவருக்கு அலட்சியம் இருக்கலாம். ஆனால், அதைப் பார்த்ததும் அதிர்ச்சியால் அவரது மூளை கலங்கிவிடும்” என்று சொல்கிறார். விக்டர் ஹியூகோவை நான் முழுமையாகவே விசுவாசிக்கிறேன். நான் என்னுடைய கண்களால் அந்த மரச் சிற்பத்தைப் பார்த்திருக்கிறேன். அது தற்செயலாக நிகழ்ந்ததுதான். பாரிஸ் நகரத்திலுள்ள ‘ஓர்ஸே’ அருங்காட்சியகத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற தலைப்பைக் கடனாகப் பெற்று ‘குற்றமும் தண்டனையும்’ என்றொரு கண்காட்சி நடந்தது. அந்தத் தலைப்பால் கவரப்பட்டுத்தான் நான் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கேதான் பிரான்ஸிலிருக்கும் கட்டக் கடைசி கில்லட்டினைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்த மரச் சிற்பம் பதினான்கு அடி உயரமானது. அந்தச் சிற்பத்தின் பீடம் ஏழடி நீளமும் இரண்டடி அகலமுமானது. மரணதண்டனை விதிக்கப்பட்ட மனிதரை அந்தப் பீடத்தில் குப்புறப் படுக்க வைப்பார்கள். கைகளும் கால்களும் உடலோடு சேர்த்துத் தடித்த கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். மரச் சிற்பத்தின் ஆசனவாய் போன்று தோற்றமளிக்கும் துளையில் அந்த மனிதரின் கழுத்துப் பகுதி செருகப்படும். துளைக்கு இந்தப் பக்கம் அவரின் உடலும் அந்தப் பக்கம் தலையும் இருக்கும். அவரது ஆன்மா அப்போது எங்கிருந்திருக்கும்? மரச் சிற்பத்தின் கிரீடம் போல உச்சியில் தொங்கிக்கொண்டிருக்கும் கனமான, கூர்மையான கத்தி விசையுடன் இறக்கப்பட்டதும் தலை முண்டத்திலிருந்து எகிறி விழும். அதை ஏந்துவதற்குக் கீழேயொரு அழுக்குப் பிரம்புக் கூடை வைக்கப்பட்டிருக்கும். பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட எல்லா கில்லட்டின்களும் இந்த வடிவத்திலேயே இருந்ததாகச் சொல்ல முடியாது. புரட்சி நடுவர் மன்றம் நாடு முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மரணதண்டனை விதித்துக்கொண்டேயிருந்ததால், சுலபமாகக் கையிலேயே எடுத்துச் சென்று காரியத்தை முடித்துவிட குட்டியான நடமாடும் கில்லட்டின்கள் கூட அப்போது நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்டன. ஓர்ஸே அருங்காட்சியகத்திலிருந்து ஏதேதோ குழப்பமான எண்ணங்களுடன் சித்தம் கலங்கியவனாகத்தான் நான் வெளியே வந்தேன். அந்த அருவருக்கத்தக்க இரத்த மரச் சிற்பம் அன்று முழுவதும் என்னுடைய மூளையை விட்டு அகல மறுத்தது. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் அந்த மரச் சிற்பத்தால் தலை கொய்யப்பட்டவர்கள் எனது தலைக்குள் அரூபப் படிமங்களாக, ஒலி எழுப்பாமல் பேசிக்கொண்டே அலைந்தார்கள். பாரிஸ் நகரத்தின் புரட்சிச் சதுக்கத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த மரச் சிற்பங்களை நோக்கி அழைத்துச் செல்லப்படுகையில் அவர்கள் எதைப் பேசியிருப்பார்கள்? என்ன நினைத்திருப்பார்கள்? பேரரசர் பதினாறாம் லூயி மரச் சிற்பத்தின் ஆசனவாய்க்குள் தனது தலையை நுழைக்கும்போது, “நான் எனது எதிரிகளை மன்னிக்கிறேன்” என்று கூறியது உண்மைதானா? மகாராணி மரி அந்துவானெட் மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டு; கழுத்தில் கத்தி பிசிறில்லாமல் இறங்குவதற்காக அவரது நீளமான தலைமுடி பிடரிக்கு மேலாகச் சிரைக்கப்பட்டபோது, அவர் எதை நினைத்திருப்பார்? மகாராணி தனது எட்டு வயது மகன் லூயி -சார்ள்ஸைக் கட்டாயப்படுத்தி அவனோடு செக்ஸ் வைத்துக்கொண்டார் என்று புரட்சி நடுவர் மன்றம் குற்றம் சாட்டியபோது “உங்களுக்கல்ல! இங்கிருக்கும் தாய்மார்களுக்கு நான் சொல்கிறேன்…ஒரு தாய்மீது சுமத்தப்படும் இத்தகைய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க இயற்கை என்னைத் தடுக்கிறது” என்று சொல்லியிருந்தாரே… அந்த இயற்கையைத்தான் அந்தக் கடைசி நிமிடத்தில் அவர் நினைத்திருப்பாரா? புரட்சியின் முக்கிய தலைவர்களான தாந்தோனும்,ரொபஸ்பியரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்த வருடமே புரட்சிச் சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டு இந்த மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டபோது, அவர்கள் எதை நினைத்திருக்கக் கூடும்? அவர்களது தாரக மந்திரமான சுதந்திரம் -சமத்துவம் – சகோதரத்துவம் என்பதைக் கடைசி விநாடியில் அவர்கள் உச்சரித்திருப்பார்களா? புரட்சிச் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம் “துரோகிகளைக் கொல்லுங்கள்!” என்று ஆர்ப்பரித்த வார்த்தைகள்தான் அவர்களது காதுகளில் விழுந்த கடைசி வார்த்தைகளா? கில்லட்டின் படுகொலைகளைத் தூண்டிய புரட்சி நாயகர்களில் அதிமுக்கியமானவரான ‘மக்கள் தோழன்’ மாராவின் இருதயத்தில் சமையல் கத்தியைப் பாய்ச்சிக் கொன்ற இருபத்துநான்கு வயது யுவதி சர்லோத் கோர்தே இந்த மரச் சிற்பத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுகையில் என்ன நினைத்திருப்பார்? “நான் எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன்! இந்த மனிதரின் உத்தரவால் இலட்சக்கணக்கானவர்கள் கில்லட்டினில் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் இவரைக் கொன்றேன்” என்று மாராவின் பிணத்தின் முன்னே நின்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருடன் கடைசிவரை இருந்து அந்த அழுக்குப் பிரம்புக் கூடையில் தெறித்து விழுந்திருக்குமா? நான் பத்திரிகையை மேசையில் வீசிவிட்டு, நொறுங்கிவிழும் நிலையிலிருந்த ஜன்னலை மெதுவாகத் திறந்து கடல் காற்றை உள்ளே வரவழைத்தேன். மார்ஸேய் நகரத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் இந்தப் பழைமையான தங்கு விடுதியில்தான் கடந்த ஒரு வாரமாக நான் தங்கியிருக்கிறேன். பாரிஸில் கடுங்குளிரும் பனிப்பொழிவும் ஏற்படும்போது, கொஞ்சம் வெப்பத்தையும் கடலையும் தேடிக்கொண்டு தெற்குப் பிரான்ஸிலுள்ள ஏதாவதொரு கடற்கரை நகரத்திற்கு நான் வந்துவிடுவேன். பழைமையைக் காப்பாற்றுவதில் இந்த விடுதி நிர்வாகம் கடும் கவனத்தைச் செலுத்துகிறது. விடுதியில் தங்குபவர்களுக்கு தினப் பத்திரிகையை இலவசமாக வழங்கும் கலாசாரத்தை நிறுத்தாத பிரான்ஸின் மிகச் சில தங்கு விடுதிகளில் இதுவுமொன்று. உளுத்துப்போயிருக்கும் அறைக் கதவின் கீழால் இன்று காலையில் அவர்கள் மடித்துத் தள்ளிவிட்ட சனியன் இப்போது என்னில் தொற்றிக்கொண்டு என்னை மூச்சுத் திணற வைக்கிறது. அறைக்குள் நுழைந்த காற்று என்னை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் சோர்வுக்குள்ளேயே தள்ளிவிட்டது. எழுதும் மேசையின் முன்னால் அமர்ந்து ஏதாவது எழுதுவதற்கு முயற்சித்தேன். ஓர் எழுத்தைக் கூட என்னால் எழுத முடியவில்லை. நேரம் காலை பத்தரை மணியாகிவிட்டது. கோப்பி ஒன்று குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவே காலணிகளை மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டேன். மறக்காமல் அந்தப் பத்திரிகைச் சனியனைச் சுருட்டிக் கையில் எடுத்துக்கொண்டேன். அந்தப் பத்திரிகைக்காக அனபெல் அம்மையார் காத்திருப்பார். அனபெல் அம்மையாரை இந்த நகரத்திற்கு வந்த முதல் நாளே நான் சந்தித்திருந்தேன். நான் இந்த நகரத்திற்கு இரயிலில் வந்திறங்கும்போது, காலை ஒன்பது மணியிருக்கும். மதியம் பன்னிரண்டு மணிக்குத்தான் அறை கொடுப்போம் என்று விடுதி நிர்வாகி சொன்னார். அதுவரை நேரத்தைப் போக்குவதற்காக விடுதிக்கு எதிரேயிருந்த கஃபேக்குச் சென்றேன். தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த வட்டமான சிறிய மேசையொன்றைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துகொண்டேன். அதுதான் புகை பிடிப்பதற்கு வசதி. எக்ஸ்பிரஸோ கோப்பி ஒன்றுக்குச் சொல்லிவிட்டு, தெருவை வேடிக்கை பார்ப்பதும் சிகரெட் புகைப்பதுமாக நான் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தபோதுதான், அந்த கஃபேயை நோக்கி அனபெல் அம்மையார் மெது மெதுவாக நடந்து வந்தார். அவருக்குக் கிட்டத்தட்ட எழுபது வயதிருக்கும் என்றே நினைக்கிறேன். அவரது வெண்ணிறக் கால்களிலும் கைகளிலும் தாடையிலும் பொன்னிறத்தில் பூனை ரோமங்கள் மினுங்கின. முற்றாக நரைத்திருந்த தலையில் அங்கங்கே திட்டுத் திட்டாக முடிகள் உதிர்ந்திருந்தன. அவற்றை மறைப்பதற்காகவோ என்னவோ சிறுமிகள் கட்டும் வண்ண ரிப்பன்கள் சிலவற்றைத் தலையில் குறுக்குமறுக்காகக் கட்டியிருந்தார். அவரது சிறிய சாம்பல் நிறக் கண்களின் கீழே சதை திரண்டு அழுகிய தோடம்பழச் சுளைகளைப் போலத் தொங்கின. அனபெல் சராசரிக்கும் குறைவான உயரமுள்ளவர். ஆனால், கனத்த உடல்வாகு. கழுத்தும் கைகளும் கால்களும் பெருத்துக் கிடந்தன. உண்மையில் அவை வீக்கங்களாகத்தான் இருக்க வேண்டும். முழங்கால் வரைக்குமான கவுன் அணிந்திருந்தார். காலுறைகளைச் சுருட்டி விட்டிருந்தார். புடைத்திருந்த ஒரு துணிப் பையைக் கையில் சுமக்க முடியாமல் சுமந்துவந்தார். அவர் ஒரு குடி நோயாளி என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுவதுபோல, அவரது முகம் காற்று நிரப்பப்பட்ட ரோஜா நிற பலூன் போல ஊதியிருந்தது. அனபெல் எனக்கு அருகிலிருந்த மேசையில் உட்கார்ந்துகொண்டார். அவர் மூச்சிரைக்கும் சத்தம் பெரிய புறாவொன்று குனுகுவதைப் போல எனக்குக் கேட்டது. பரிசாரகர் வந்து “நல்ல நாளாகட்டும் மேடம் அனபெல்! இன்று எப்படியிருக்கிறீர்கள்? நலம்தானே? நான் உங்களுக்கான கோப்பையை எடுத்து வந்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மது நிரம்பிய சிறிய கண்ணாடிக் கோப்பையை அனபெலின் மேசையில் வைத்தார். அனபெல் கோப்பையை என் முகத்திற்கு நேரே தூக்கிக் காட்டிவிட்டு, ஒரே மடக்கில் கோப்பையைக் காலி செய்து, வெற்றுக் கோப்பையை மேசையின் ஓரத்தில் வைத்தார். பின்பு, தனது துணிப் பைக்குள்ளிருந்து கற்றையாகப் பத்திரிகைளை எடுத்து மேசையில் பரப்பி வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கினார். எனக்குப் பொழுது போகாமல், அவர் என்ன வாசிக்கிறார் எனக் கண்களை எறிந்து பார்த்தேன். அவர் வாசித்தது எல்லாமே முந்தைய தின, முந்தைய வாரப் பத்திரிகைகளே. நான் அவரைக் கவனிப்பதை அனபெல் எப்படி உணர்ந்தார் என்று தெரியவில்லை… திடீரெனத் தலையை என் பக்கம் திருப்பி “நண்பரே! உங்களை முன்பு இங்கே பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லையே. எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருடைய குரலில் இரண்டு விஷயங்களை நான் கவனித்தேன். அனபெலின் குரலில் ஆண்தன்மை மிகுந்திருந்தது. அந்தக் குரல் எந்தவித உணர்ச்சியோ பாவமோ இல்லாமல் ‘Votre attention, s’il vous plaît’ என இரயில் நிலையங்களில் தினமும் ஒலிக்கவிடப்படும் தட்டையான அறிவிப்புப் போலவே ஒலித்தது. அவர் எப்போதுமே இப்படித்தான் பேசினார். எல்லா உணர்ச்சிகளும் -அப்படி ஏதாவது அவரிடமிருந்தால் -ஒரே தொனியில்தான் அவரிடமிருந்து வெளிவந்தன. அடுத்தடுத்த நாட்களில் நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். அனபெல் ஒவ்வொரு நாளும் காலை பத்து மணிக்கு அந்த கஃபேக்கு வந்துவிடுகிறார். மாலை ஆறு மணிவரை அங்கேயே ஒரு மேசையில் உட்கார்ந்திருக்கிறார். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை ஒரு கோப்பை மது வரவழைத்துக் குடித்துவிட்டுப் பத்திரிகைகளைப் படித்தவாறிருக்கிறார். அந்தப் பத்திரிகைகளைக் குப்பைத் தொட்டிகளிலும் தெருக்களிலும் அவர் சேகரிக்கிறார். எனக்கு தங்கு விடுதியில் தள்ளிவிடப்படும் பத்திரிகையை மேலோட்டமாக மேய்ந்துவிட்டு, அனபெலிடம் கொடுப்பதை நான் வழக்கமாக்கிக்கொண்டேன். நான் விடுதியின் மாடிப்படிகளில் இறங்கி வரும்போது, மனம் ஆற்றாமல் மாடிப்படியிலேயே உட்கார்ந்து மீண்டும் ஒருமுறை அந்த மரச் சிற்பச் செய்தியைப் படித்தேன். எத்தனை தடவைகள் படித்தாலும் ஒரே செய்திதான் இருக்கும் என்பதைக் கூடப் புரிந்துகொள்ளாத அளவுக்கு அந்தச் செய்திச் சனியன் என்னுடைய மூளையை மழுங்கடித்துவிட்டது. நான் கஃபேக்குச் சென்றபோது, தாழ்வாரத்தின் இடது பக்க மூலையிலிருந்த மேசையின் முன்னே அனபெல் பத்திரிகையொன்றை வாசித்தவாறே அமர்ந்திருந்தார். “பொன்ஜூர் மேடம் அனபெல்” எனக் கூறிக்கொண்டே, கையில் எடுத்துச் சென்ற பத்திரிகையை அந்த மேசையில் வைத்துவிட்டு, அவருக்கு எதிரே அமர்ந்துகொண்டேன். இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஒரே மேசையில் அமர்ந்து குடிக்குமளவுக்கு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. என்னிடம் வந்த பரிசாரகர் “ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்? உடல்நலம் சரியாக இருக்கிறதல்லவா? இந்த உப்புக் காற்று சிலருக்கு ஒத்துவருவதில்லை. உங்களுக்கு கோப்பி எடுத்துவருகிறேன்” எனச் சொல்லிவிட்டுப் போனார். அப்போது அனபெல் வெடிப்புற்றிருந்த தனது மெல்லிய உதடுகளைக் குவித்துக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பத்திரிகையிலிருந்த மரச் சிற்பச் செய்தியை நான் அனபெலிடம் தொட்டுக் காட்டினேன். அவர் அதைப் படித்து முடிக்கும்போது, அவருக்கான அடுத்த கோப்பை மது வந்துசேர்ந்தது. ஒரே மடக்கில் குடித்துவிட்டு, வாயைக் கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டிருந்தார். நான் பொறுக்க முடியாமல் “நூற்றாண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட இரத்த மரச் சிற்பங்களை மீண்டும் தோண்டி எடுத்து இந்தக் காட்டுமிராண்டிகள் பொது முற்றங்களில் நிறுவப் போகிறார்களாம். அதையும் இந்த வெட்கங்கெட்ட பத்திரிகை வெளியிட்டிருக்கிறது” என்றேன். அனபெல் ஏதாவது இரண்டு வார்த்தைகளை -எப்போதும் போல உணர்ச்சியற்ற குரலில் – சொன்னால் கூட என்னுடைய மனது சற்று ஆறுதலடையும் போலிருந்தது. அனபெல் கைக்குட்டையை மடித்துக்கொண்டே சொன்னர்: “நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்புவரை மரச் சிற்பம் இயங்கிக்கொண்டேயிருந்தது. அது வெட்டிய கடைசித் தலை இந்த நகரத்தில்தான் புதைக்கப்பட்டிருக்கிறது.” அனபெலுக்கு காலையிலேயே போதை ஏறிவிட்டது, அதனால்தான் உளறுகிறார் என்றே நான் முதலில் நினைத்தேன். ஆனால், நான் இதுவரை பழகிப் பார்த்ததில் அனபெல் ஒருபோதுமே போதையால் உளறியது கிடையாது. அவர் எப்போதுமே திருத்தமாகவும் திட்டவட்டமாகவும்தான் பேசுகிறார்… இரயில் நிலைய அறிவிப்புப் போல. “என்ன சொல்கிறீர்கள்…நாற்பத்தேழு வருடங்களுக்கு முன்பாகவா?” என்று நான் கேட்டேன். “10-ம் தேதி, செப்டம்பர் 1977, அதிகாலை 4.40 மணி” என்று அதே உணர்ச்சியற்ற குரலில் அனபெல் சொன்னார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. இதை வாசிக்கும் உங்களால் நம்ப முடிகிறதா என்ன? ஜோன் போல் சார்த், சீமோன் து புவா, மிஷல் ஃபூக்கோ, ரோலோன்ட் பாத், பிரான்சுவா த்ரூபோ, கொடார்ட் என மாபெரும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் அப்போது இங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். 1977-ல் பிரான்ஸின் அதிபராகயிருந்த கிஸ்கார்ட் தன்னுடைய இளம் வயதில், ஹிட்லரின் நாஸிப் படைகளை எதிர்த்துத் தீரமாகப் போராடியவர். இந்த மாமனிதர்கள் எல்லாம் வாழ்ந்த காலத்தில் இரத்த மரச் சிற்பம் எப்படி இயங்கியிருக்க முடியும்? எனவே, அனபெல் அம்மையார் ஏதோ நினைவுத் தடுமாற்றத்தில் பேசுகிறார் என்றே நான் முடிவெடுத்தேன். ஆனாலும், ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ள, அனபெல் அம்மையாரிடம் “யாரின் தலை வெட்டப்பட்டது?” என்றொரு குறுக்குக் கேள்வியைக் கேட்டேன். இப்போது அவரது நினைவுத் தடுமாற்றம் தெளிந்துவிடும். “ஹமிடா என்ற இருபத்தேழு வயது மனிதனைத்தான் கொன்றார்கள். அவனது குடும்பப் பெயர் ஜோண்டூபி” என்று அதே உணர்ச்சியற்ற குரலில் அனபெல் சொன்னார். அனபெல் சொல்வதை இப்போது என்னால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்! கொல்லப்பட்டவரின் குடும்பப் பெயர் முதற்கொண்டு தேதி, நேரத்துடன் சொல்கிறாரே. ஆனாலும், எனது சந்தேகம் முழுவதுமாகத் தீர்ந்ததாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பிரெஞ்சு வரலாறு, பிரெஞ்சுப் பண்பாடு போன்றவற்றின் மீதான எனது தீவிர வாசிப்பில் எனக்கு இன்னும் நம்பிக்கையிருந்தது. எனவே நான் அனபெல்லிடம் “இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டேன். சற்று நேரம் மவுனமாக இருந்த அனபெல் பரிசாரகரை அழைத்து இன்னொரு கோப்பை மது கேட்டார். மது வந்ததும் ஒரே மடக்கில் குடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார். அவர் பேசப் பேச நான் அவரை முழுமையாக நம்பத் தொடங்கினேன். நான் எந்தக் குறுக்கீடும் செய்யாமல் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன். அதே உணர்ச்சியற்ற குரலில் மிகத் தட்டையான பாவங்களோடு அனபெல் சொன்னார்: “ஹமிடா எங்களது வீட்டு மாடியறையில் சில காலம் தங்கியிருந்தான். எனக்கு அப்போது பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். அவன் துனிஷியன். தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் வேலை தேடி இந்த நகரத்திற்குக் கப்பலில் வந்திறங்கியவன். அவனுக்கு மரங்கள் வெட்டும் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. செபஸ்டியனும் அதே தொழிற்சாலையில்தான் வேலை செய்துகொண்டிருந்தார் -செபஸ்டியன் என்பது எனது அப்பா. சிறுவயதிலிருந்தே பெயர் சொல்லித்தான் நான் அவரை அழைப்பேன்- செபஸ்டியனுக்கு ஹமிடாவைப் பிடித்திருந்தது. ‘ஹமிடா புத்திசாலிப் பையன், கடுமையான உழைப்பாளி’ என்றெல்லாம் அடிக்கடி சொல்வார். இந்தப் பழக்கத்தில்தான் அவன் எங்களது மாடியறையில் வாடகைக்குக் குடியேறினான். அந்தக் காலத்தில் இந்த நகரத்திலிருந்த இளைஞர்களிலெல்லாம் பேரழகன் ஹமிடாவே என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். கன்னங்கரேலென்ற சுருட்டை முடி. அகலமான நெற்றி. புன்னகைக்கும் ப்ரவுண் நிறக் கண்கள். கற்சிற்பம் போலக் கடைந்தெடுத்த உடல்வாகு. மென்மையாகவும் இனிமையாகவும் பேசி யாரை வேண்டுமானாலும் வசியம் செய்யக்கூடியவன். அவன் எங்கள் வீட்டில் தங்கியிருந்த காலத்தில்தான், அந்த மோசமான விபத்து நடந்தது. தொழிற்சாலையில் வண்டியொன்றின் சக்கரத்திற்கு அடியில் ஹமிடாவின் வலது கால் சிக்கிக்கொண்டது. அவனது வலது கால் தொடைக்குக் கீழே முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது என்று செபஸ்டியன் என்னிடம் சொன்னபோது, நான் நாள் முழுவதும் அழுதவாறேயிருந்தேன். ஹமிடா நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்தான். அங்கே சந்தித்த ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவளுடனேயே வசிக்கச் சென்றுவிட்டான். அந்தப் பெண்ணைக் கொலை செய்ததற்காகத்தான் அவனைக் கைது செய்தார்கள். அவன் கைதாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவனை வீதியில் தற்செயலாகப் பார்த்தேன். செயற்கைக் கால் அணிந்திருந்ததால் கொஞ்சம் தடுமாறித்தான் நடந்தான். ‘அதே முகவரியில்தானே வசிக்கிறாய் அனபெல்?’ என்று கேட்டான். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதுதான் நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட நாளன்று செபஸ்டியன் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தார். வீட்டுக்குத் திரும்பி வந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் குடிக்கத் தொடங்கினார். நாள் முழுவதும் குடித்துக்கொண்டேயிருந்தார்…” நான் பொறுமையிழந்து குறுக்கிட்டேன். “ஆனால், அந்த மனிதனை கில்லட்டினில்தான் வெட்டினார்களா அனபெல்?” ‘ஆம்’ என்பது போல அனபெல் தலையசைத்தார். நான் கண்களை மூடி அந்த மனிதன் மரச் சிற்பத்தில் படுக்க வைக்கப்பட்டு வெட்டப்படும் காட்சியைக் கற்பனை செய்ய முயற்சித்தேன். அவனுடைய செயற்கைக் காலை என்ன செய்திருப்பார்கள்? அந்த மனிதனுடைய கடைசி நிமிடம் எதுவாக இருந்தது? ‘என்ன யோசிக்கிறாய்?’ என்பது போல அனபெல் என்னைப் பார்த்தார். மனதில் இருந்ததைச் சொன்னேன். பின்பு இருவரும் மவுனமாக இருந்தோம். அடுத்த கோப்பை மது வந்ததும், அனபெல் ஒரே மடக்கில் கோப்பையைக் காலி செய்துவிட்டு “நான் அதை உனக்குச் சொல்கிறேன்” என்றார். உணர்ச்சியற்ற அதே வறட்டுக் குரல்! 2 1977 செம்டம்பர் 9-ம் தேதியன்று, மரணதண்டனைக் குற்றவாளியின் கருணை மனுவை பிரான்ஸின் அதிபர் கிஸ்கார்ட் நிராகரித்தார். அன்று பிற்பகல் மூன்று மணிக்கு விசாரணை நீதிபதியான திருமதி. மொனிக் மாபெலிக்குச் சிறைச்சாலைத் தலைவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்தது. அடுத்த நாள் விடிகாலையில் திருமதி. மாபெலியின் முன்னிலையில் குற்றவாளியின் தலை மரச் சிற்பத்தின் ஆசனவாய்க்குள் திணிக்கப்படவுள்ளது. மாபெலியைச் சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக வண்டியொன்று அதிகாலை நான்கு மணிக்கு மாபெலியின் வீட்டுக்கு வரும். இந்தத் தகவலைக் கேட்டதும் திருமதி. மாபெலி இலேசாகச் சஞ்சலமடைந்தார். குற்றவாளியின் முகம் அவரது மனதில் தோன்றி அவருக்கு ஒருவிதப் பதற்றத்தைக் கொடுத்தது. தனது மகன் ரெமியை விடக் குற்றவாளி ஒரு வயது மட்டுமே இளையவன் என்ற ஞாபகம் அவரது மூளையில் சிரங்கு போல பரவிக்கொண்டிருந்தது. வழக்கு விசாரணைகள் முடிவுற்றுத் தீர்ப்பு வழங்கும் நேரம் வந்தபோது, குற்றவாளியின் வழக்கறிஞரான ஜோன் குடாரோ “மோசமான விபத்தில் தன்னுடைய காலை இழந்ததிலிருந்து ஹமிடா ஜோண்டூபி அதிர்ச்சியால் மனச் சமநிலை குழம்பிப் போய்விட்டார். எனவே மாண்புமிகு நீதிபதி கருணையுடன் இந்த அங்கவீனரை அணுகிக் குறைந்தபட்சத் தண்டனையே வழங்க வேண்டும்” எனக் கோரியது மீண்டும் இப்போது நீதிபதி மாபெலியின் காதுகளில் ஒலிக்கிறது. ஆனால், நடக்கவிருக்கும் இரத்தச் சடங்கிலிருந்து மாபெலியால் தப்பிக்கவே முடியாது. நாளை விடிந்ததும் நடைபெறப் போகும் நிகழ்வில் சட்டப்படி அவர் இருந்தே ஆகவேண்டும். மாலை ஏழுமணிக்கு திருமதி. மாபெலி தனது தோழி பஸ்ரியானாவுடன் திரையரங்குக்குச் சென்று திரைப்படமொன்றைப் பார்த்தார். திரைப்படம் முடிந்ததும் பஸ்ரியானாவின் வீட்டுக்குச் சென்றார். தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்வதை நினைத்தாலே அவருக்குப் பதற்றமாகியது. அதிகாலை நான்கு மணிக்கு அவரைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வாகனம் வரவிருக்கிறது. எனவே “நாங்கள் இன்னொரு திரைப்படம் பார்க்கலாமா?” என்று பஸ்ரியானாவிடம் மாபெலி கேட்டார். தோழிகள் இருவரும் நொறுக்குத் தீனிகளைத் தின்றவாறே தொலைக்காட்சியில் ஒரு படத்தைப் பார்த்தார்கள். அந்தப் படம் முடியும்போது, அதிகாலை ஒரு மணியாகிவிட்டது. மாபெலி சேர்வாகத் தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணியாகிவிட்டது. அவரால் உறங்கவே முடியவில்லை. மூன்றரை மணிக்குக் கட்டிலை விட்டு எழுந்து தயாராகி, உத்தியோக உடைகளை அணிந்துகொண்டார். அன்றைக்குக் கடிகார முள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார். சரியாக அதிகாலை நான்கு மணிக்கு அவரது வீட்டுக்குக் கார் வந்தது. மாபெலி காரில் ஏறி அமர்ந்துகொண்டார். காருக்குள் சாரதியோடு ஓர் அதிகாரி முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். யாரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த வாகனம் ‘பூமெற்ஸ்’ சிறைச்சாலையை நோக்கி விரைந்தது. மாபெலி சிறைச்சாலையைச் சென்றடைந்தபோது, அவரை எதிர்பார்த்து எல்லோரும் தயாராக நின்றிருந்தார்கள். அங்கே ஓர் அணி உருவானது. அந்த அணியில் மாபெலி, அட்டர்னி ஜெனரல், குற்றவாளியின் வழக்கறிஞர், சிறையதிகாரிகள், காவலர்கள், மரச் சிற்பத்தை இயக்குபவர்கள், மதக் கடமையை நிறைவேற்றி வைக்கும் இமாம் என முப்பது பேர் இருந்தார்கள். அவர்கள் மரச் சிற்பம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி ஊர்வலமாக நடந்துபோனார்கள். இந்தச் சடங்கில் கலந்துகொள்பவர்களின் காலடிகள் தரையில் பதியாமலிருக்க பழுப்பு நிறக் கம்பளங்கள் பாதையில் விரிக்கப்பட்டிருந்தன. வழியில் ஒரு மூலையில் நாற்காலியொன்று இருந்தது. அங்கே மாபெலியும் இன்னும் சிலரும் நின்றுவிட, மற்றவர்கள் குற்றவாளியை அழைத்துவரச் சென்றார்கள். அவர்களோடு இமாமும் போனார். “குற்றவாளி படுத்திருக்கிறார்… ஆனால், தூங்கவில்லை” என்று ஓர் அதிகாரி மாபெலியிடம் தெரிவித்தார். இரண்டு நிமிடங்கள் கழித்து “குற்றவாளி இப்போது மரத்தாலான தனது செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டிருக்கிறார்” என்று இன்னொரு அதிகாரி சொன்னார். அந்தப் பழுப்பு நிறத் கம்பளங்களில் கால்களை மெதுவாக வைத்துக் குற்றவாளி நடந்துவந்தார். அவரது கைகளில் முன்புறமாக விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. மாபெலியைக் கண்டதும் குற்றவாளி மெல்லிய புன்னகையுடன் மாபெலியின் கண்களைப் பார்த்தார். மாபெலி தனது கையிலிருந்த ஆவணங்களைச் சரி பார்ப்பது போல பாவனை செய்து கண்களைத் தாழ்த்திக்கொண்டார். மாபெலிக்கு அருகிலிருந்த நாற்காலியில் குற்றவாளி உட்காரவைக்கப்பட்டார். குற்றவாளி நிதானமான குரலில் “எனக்கு ஒரு சிகரெட் வேண்டும்” என்றார். ஒரு காவலர் குற்றவாளியின் உதடுகளில் சிகரெட்டைப் பொருத்திப் பற்ற வைத்தார். குற்றவாளி நிதானமாகப் புகையை ஓர் இழுப்பு இழுத்துவிட்டு, விலங்கிடப்பட்ட தனது கையை உயர்த்தி வாயிலிருந்த சிகரெட்டை எடுத்துக்கொண்டே “இந்தக் கைவிலங்கு மிகவும் இறுக்கமாக இருக்கிறது” என்றார். கைவிலங்கைத் தளர்த்திப் பூட்டுவதற்கு ஒரு காவலர் முயற்சித்தார். மரச் சிற்பத்தை இயக்கவிருக்கும் சார்ல் செவாலியரும் அவரது உதவியாளரான இளைஞரும் அப்போது குற்றவாளிக்கு வலதுபுறத்தில் நின்றிருந்தார்கள். கை விலங்கைத் தளர்த்தும் காவலரின் முயற்சி வெற்றியளிக்காததால், விலங்கை அகற்றிவிட்டுக் குற்றவாளியின் கைகளைக் கயிற்றால் பிணைப்பதற்குத் தீர்மானித்தார்கள். குற்றவாளியின் கைவிலங்கு அகற்றப்பட்டதும் சார்ல் செவாலியர் குற்றவாளியின் தோளைத் தட்டிக்கொடுத்து “பார் தம்பி… இப்போது நீ சுதந்திரமாக இருக்கிறாய்” என்று சொன்னபோது, மாவெலி திடுக்குற்றுப் போனார். அவர் ஓரக் கண்ணால் குற்றவாளியைப் பார்த்தார். குற்றவாளி எதையோ யோசித்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தார். ஒருவேளை அவர் பிறந்து வளர்ந்த துனிஷியா நாட்டை அவர் நினைத்திருக்கக் கூடும். தன்னுடைய பால்ய வயது ஞாபகங்களை மீட்டிப் பார்த்திருக்கக் கூடும். தான் கடந்துவந்த மெடிட்டரேனியன் கடலை அவர் நினைத்திருக்கக் கூடும். தன்னால் கொல்லப்பட்ட தனது முன்னாள் காதலியைக் கூட அவர் நினைத்திருக்கலாம். குற்றவாளியின் கைகள் சில நிமிடங்களுக்குப் பிணைக்கப்படாமல் இருந்தன. அவர் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட் முற்றாக எரிந்து முடிந்துவிட்டது. குற்றவாளி இன்னொரு சிகரெட் கேட்டபோது, அவருக்கு அது வழங்கப்பட்டது. அவர் இப்போது முடிந்தளவுக்கு மெதுவாகப் புகையை இழுத்தார். இனித் தப்பிக்க முடியாது. அந்த சிகரெட் முடியும்போது, அவரது வாழ்க்கையும் முடியவிருக்கிறது. நிலமையின் தீவிரத்தை இப்போதுதான் உணர்ந்தது போல குற்றவாளியின் முகம் இறுகிக்கொண்டே வந்தது. இந்த சிகரெட் எவ்வளவு நேரத்திற்குத்தான் எரியும் என்று மாபெலி நினைத்துக்கொண்டார். குற்றவாளி தனது வழக்கறிஞரைத் தனக்கருகே அழைத்துப் பேசினார். கிசுகிசுப்பான குரல்களிலேயே குற்றவாளியும் வழக்கறிஞரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசி முடித்தபோது, குற்றவாளியின் இரண்டாவது சிகரெட்டும் முழுவதுமாக முடிந்திருந்தது. குற்றவாளி அந்த நாற்காலியில் அமர்ந்து கால் மணி நேரம் ஆகிவிட்டது. அப்போது இளைஞரான ஒரு காவலர் தனது கைகளில் ஒரு குடுவையோடும் அழகிய கண்ணாடிக் கோப்பையுடனும் வந்து “நீ சிறிது ரம் அருந்த விரும்புகிறாயா?” என்று குற்றவாளியிடம் கேட்டார். ‘ஆம்’ என்பதுபோலக் குற்றவாளி மெதுவாகத் தலையசைத்தார். அந்தக் காவலர் கண்ணாடிக் கோப்பையில் பாதியளவுக்கு மதுவை ஊற்றிக் குற்றவாளியிடம் கொடுத்தார். குற்றவாளி மிக மிக மெதுவாக மதுவை உறிஞ்சி மிடறு மிடறாகக் குடித்தார். அவர் மதுவை அனுபவித்துக் குடிப்பது போன்று பாவனை செய்கிறார் என்பது மாபெலிக்குப் புரிந்தது. உண்மையில், குற்றவாளி தான் உயிருடன் இருக்கும் நேரத்தை நீடிக்கவே விரும்புகிறார். உயிரோடு இருப்பதற்கு மேலதிகமாக ஒரேயொரு விநாடி கிடைத்தால் கூட அந்த விநாடியையும் அவர் வாழ்ந்துவிட ஆசைப்படுகிறார் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் தெளிவாகவே புரிந்தது. நேரத்தை நீட்டிக்கும் முயற்சியில் குற்றவாளி என்னவெல்லாமோ செய்தார். தனது வழக்கறிஞரிடம் மீண்டும் பேசினார். வழக்கறிஞரிடமிருந்து ஒரு தாளை வாங்கிப் படித்துவிட்டு, அதைச் சுக்குநூறாகக் கிழித்து ஒரு சிறையதிகாரியிடம் கொடுத்து “தயவு செய்து குப்பையில் போடுங்கள்” என்றார். அந்த அதிகாரி குப்பையை வாங்கித் தனது காற்சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டார். அந்த அதிகாரியிடம் “சிறையறையில் இருக்கும் என்னுடைய புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று குற்றவாளி கேட்டார். “சட்டப்படி நடந்துகொள்வோம்” என்றார் அந்த அதிகாரி. அப்போது, குற்றவாளி இமாமைத் தனக்கருகில் அழைத்தார். இமாம் அரபு மொழியில் ஏதோ சொல்ல, குற்றவாளியும் ஏதோ சொன்னார். அப்போது மாபெலிக்கு அருகில் நின்றிருந்த அதிகாரி ஒருவர் “தன்னை ஹலால் முறையில் வெட்டுமாறு கேட்கிறானா அவன்” என்று எரிச்சலோடு முணுமுணுத்தது மாபெலிக்குத் தெளிவாகவே கேட்டது. மாபெலி சடாரெனத் திரும்பி அந்த அதிகாரியைப் பார்க்க, அந்த அதிகாரி அசட்டுத்தனமான இளிப்புடன் கண்களைத் தாழ்த்திக்கொண்டார். கண்ணாடிக் கோப்பையில் இப்போது ஒரு மிடறு மதுதான் எஞ்சியிருக்கிறது. அதைக் குடித்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்பது குற்றவாளிக்கும் தெரியும். எனவே, குற்றவாளி தனது கடைசி முயற்சியைச் செய்தார். தனக்கு இன்னொரு சிகரெட் கொடுக்குமாறு மிகவும் பணிவாகவும் நிதானமாகவும் கேட்டார். ஒரு காவலர் இன்னொரு சிகரெட்டைக் குற்றவாளிக்கு வழங்க எத்தனித்தபோது, மரச் சிற்பத்தை இயக்கவிருக்கும் சார்ல் செவாலியர் குறுக்கிட்டார். அவர் தனது பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தார். “இந்த மனிதனிடம் நாங்கள் ஏற்கனவே மிகவும் அன்பாகவும் கருணையாகவும் அளவுக்கு மிஞ்சிய மனிதாபிமானத்துடனும் நடந்துகொண்டிருக்கிறோம். இப்போது அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் சொன்னதும், அட்டர்னி ஜெனரல் தலையிட்டு சிகரெட் வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்திவிட்டார். குற்றவாளி பணிவான குரலில் மறுபடியும் கேட்டார்: “எனது கடைசிச் சிகரெட்டைத் தாருங்கள்” அந்தக் குரல் மாபெலியின் இருதயத்தை நன்னியது. குற்றவாளி தெளிவான மனநிலையில் இருக்கிறார் என்பதில் மாபெலிக்கு எந்தச் சந்தேகமுமில்லை. இன்னொரு சிகரெட் புகைப்பதன் மூலம் மரச் சிற்பத்தில் படுப்பதை இரண்டு நிமிடங்கள் தாமதப்படுத்துவதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்துவிட முடியாது என்பது குற்றவாளிக்குத் தெளிவாகப் புரிந்திருக்கிறது. உண்மையில், படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த எல்லா வழிகளையும் பயன்படுத்தும் குழந்தையைப் போலத்தான் குற்றவாளியும் கில்லட்டின் படுக்கைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றார். குற்றவாளி நாற்காலியில் அமர்ந்து இருபது நிமிடங்களாகிவிட்டன. இனியும் தாமதிக்க முடியாது என்பது போல குற்றவாளியைத் தவிர மற்ற எல்லோருமே ஆளை ஆள் பார்த்துக்கொண்டார்கள். கண்ணாடிக் கோப்பையிலிருந்த கடைசி மிடறு மதுவைக் குடிக்குமாறு ஓர் அதிகாரி குற்றவாளியை ஊக்கப்படுத்தினார். குற்றவாளி அதிகாரியின் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, கண்ணாடிக் கோப்பையைக் கவிழ்த்து, கடைசி மிடறு மதுவை நிலத்தில் ஊற்றினார். ஒரு நிமிடம் அங்கே உண்மையான அமைதி நிலவியது. யாரும் எதுவுமே பேசவில்லை. குற்றவாளிக்கு இடது புறம் நின்றிருந்த மாபெலிதான் மவுனத்தைக் கலைத்தார். “நேரமாகிறது” என்று சிறையதிகாரியிடம் சொன்னார். நாற்காலியில் அமர்ந்திருந்த குற்றவாளியின் தோள்களை இரண்டு காவலர்கள் தங்களது வலுவான கைகளால் பற்றிப்பிடித்து, குற்றவாளியின் உடலைச் சற்றே இடது பக்கமாக மாபெலி நின்றிருந்த திசைக்குத் திருப்பினார்கள். உடனேயே வலது பக்கத்திலிருந்த சார்ல் செவாலியரும் அவரது உதவியாளரும் குற்றவாளியின் கைகளை ஆளுக்கொன்றாகப் பற்றிக் குற்றவாளியின் முதுகுக்குப் பின்புறமாக இழுத்துவைத்துக் கயிற்றால் கட்டத் தொடங்கினார்கள். அப்போது குற்றவாளியின் கண்கள் மாபெலியின் கண்களின் மீதிருந்தன. குற்றவாளியின் கண்களில் தெரிந்தது வேதனையா, இறைஞ்சுதலா, வெறுப்பா, ஆத்திரமா, குற்றவுணர்ச்சியா அல்லது இவை எல்லாமே அந்த ப்ரவுண் நிறக் கண்களில் இருந்தனவா என்பதை மாபெலியால் கண்டுபிடிக்க முடியவில்லை. கைகளைக் கட்டுவதற்குப் பதிலாகக் குற்றவாளியின் கண்களைக் கட்டிவிட்டால், தான் தப்பித்துக்கொள்ளலாம் எனக் குழந்தைத்தனமாக திருமதி. மாபெலி நினைத்துக்கொண்டார். குற்றவாளியின் கைகள் கட்டப்பட்டதும், சார்ல் செவாலியரின் உதவியாளர் ஒரு கத்தரிக்கோலை எடுத்து, குற்றவாளி அணிந்திருந்த சிறைச் சீருடையின் கழுத்துப் பகுதியை வெட்டத் தொடங்கினார். ஆனால், அவர் கோணல்மாணலாக அந்த நீலநிறச் சீருடையை வெட்டும்போது, கத்தரிக்கோலின் நுனி குற்றவாளியின் கழுத்துப் பகுதியில் குத்தி ஒரு சொட்டு இரத்தம் சிகப்பு மாணிக்கக் கல் போன்று குற்றவாளியின் பின்கழுத்தில் முகிழ்த்தது. அதைக் கண்டதும் குற்றவாளியைத் தவிர அங்கிருந்த எல்லோருமே பதறிப்போனார்கள். மாபெலி ‘அய்யோ’ என்று தன்னையறியாமலேயே சத்தம் போட்டுவிட்டார். சார்ல் செவாலியர் பாய்ந்து சென்று உதவியாளரிடமிருந்து கத்தரிக்கோலைப் பிடுங்கிக்கொண்டு “பன்றியே! உன்னால் ஒரு வேலையையும் சரிவரச் செய்ய முடியாதா? என்னுடைய வேலைக்கு உலை வைக்கவா பார்க்கிறாய் பைத்தியகாரப் பயலே” என அடங்கிய குரலில் உதவியாளரைத் திட்டினார். குற்றவாளி அப்போது அசையாமல் இருந்தார். சார்ல் செவாலியர் நீலநிறச் சீருடையின் கழுத்துப் பகுதியை இலாவகமாக வெட்டி எடுத்தார். இப்போது குற்றவாளியை எழுந்து நிற்குமாறு உத்தரவு பிறந்தது. குற்றவாளி மெதுவாக எழுந்து நின்று தலையைக் கவிழ்ந்து பூமியைப் பார்க்கிறார். அவர் இந்தப் பூமியில் எதை விட்டுச் செல்கிறார்? ஒரு மிடறு மதுவா? நாற்காலிக்கு அருகிலிருந்த ஒற்றைக் கதவு திறக்கப்பட்டது. குற்றவாளியை அழைத்துக்கொண்டு இந்த ஊர்வலம் மரச் சிற்பத்தை நோக்கிச் சென்றது. சிறையின் உள் முற்றத்தில் மரச் சிற்பம் நிமிர்ந்து நிற்கிறது. குற்றவாளி அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காகக் கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார். தனது கடைசிக் காட்சி ஆகாயமாக இருக்க வேண்டும் என்றுகூட அவர் விரும்பியிருக்கலாம். ஆனால், அந்தச் சிறை முற்றத்தில் கறுப்புத் திரை கட்டி ஆகாயம் மறைக்கப்பட்டிருந்தது. ஹெலிகொப்டரிலிருந்து யாராவது மரணதண்டனைக் காட்சியைப் படம் பிடிக்கலாம் என்பதால் ஆகாயத்தை மறைத்துவிட்டார்கள். சிறை முற்றத்தில் நிகழவிருப்பதை ஒரு சிறு பறவையால் கூடக் காண முடியாது. சார்ல் செவாலியர் ஒரு சிறிய செங்கம்பளத்தை எடுத்துவந்து திருமதி. மாபெலிக்கு முன்னால் தரையில் விரித்தார். குற்றவாளியின் செயற்கைக் காலை சார்ல் செவாலியரின் உதவியாளர் கழற்றி எடுத்தார். இப்போது குற்றவாளி நகரத் தொடங்கினார். கைகள் பின்புறமாக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த நிலையில், அவர் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிச் சென்று மரச் சிற்பப் பீடத்தில் தட்டுத் தடுமாறி ஏறிக் குப்புறப் படுத்துக்கொண்டார். அவர் இன்னொரு சிகரெட்டோ, குடி தண்ணீரோ கேட்டுவிடக் கூடாது என்று மாபெலி கடவுளை வேண்டிக்கொண்டார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து அகன்றுவிடவே மாபெலி விரும்பினார். மரச் சிற்பம் உயிர்த்து அசைந்தபோது, அதன் ஆசனவாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தது. வேறு வழியில்லை… இப்போது திருமதி. மாபெலி அந்த அழுக்குக் கூடையைப் பார்வையிட்டு அதனுள்ளே ஒரு தலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சார்ல் செவாலியர் அந்தக் கூடையைத் தூக்கிக்கொண்டு வந்து மாபெலியிடமும், அட்டர்னி ஜெனரலிடமும் காண்பித்தார். பின்பு, கூடையிலிருந்து தலையை எடுத்துச் சென்று, செங்கம்பளத்தில் மெதுவாக வைத்தார். அவரின் உதவியாளார் குற்றவாளியின் செயற்கைக் காலை எடுத்துவந்து அந்தத் தலையின் அருகே வைத்தார். ஒரு மனித முகம் காலில் முளைத்திருப்பது போல அது இருந்தது. 3 இதைப் படிக்கும் உங்களாலேயே அனபெல் அம்மையாரின் கடைசி வார்த்தைகளிலிருந்து மீள முடியவில்லையென்றால், இதையெல்லாம் நேரிலே கேட்டுக்கொண்டிருந்த என்னுடைய மனம் என்ன நிலையில் இருந்திருக்கும் என்று சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். அதேவேளையில், இந்தக் கதையெல்லாம் அனபெல் அம்மையாருக்கு எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிந்திருக்கிறது என்ற குழப்பமும் என்னுள் எழுந்தது. இதுவொரு கற்பனைக் கதையாக இருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்று என்னுடைய மனது தவிக்காமலில்லை. நான் அனபெல்லிடம் அதைக் கேட்டேவிட்டேன். “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” அனபெல் அதே உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்: “நீதிபதி மாபெலி அன்று அதிகாலை 5.10 மணிக்குத் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினார். எழுதும் மேசையின் முன்னே உடனேயே உட்கார்ந்து, இரண்டு வெள்ளைத் தாள்களில் இதையெல்லாம் எழுதினார். எழுதிய தாள்களை எடுத்து மடித்து ஒரு கடித உறையினுள் வைத்து மூடி ஒட்டினார். அந்தக் கடித உறையைத் தனது மகன் ரெமியிடம் கொடுத்து, தன்னுடைய மரணத்தின் பின்பாக அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடுமாறு சொன்னார். திருமதி. மாபெலி இறந்ததற்குப் பின்பாக அந்தக் கடித உறை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்பு, எப்படியோ அந்த இரண்டு தாள்களும் ஒரு பத்திரிகையில் பிரசுரமாகின. கலங்கரைவிளக்கத்திற்குப் பக்கத்திலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து அந்தப் பத்திரிகையை நான் கண்டெடுத்தேன். அப்போது திடீரென ஒரு கேள்வி என்னுடைய மனதில் எழுந்தது. உடனடியாகவே அந்தக் கேள்வியை அனபெல்லிடம் கேட்டேன்: “தனது மரணத்திற்குப் பின்பு வெளியிடுவற்காக நீதிபதி. மாபெலி எழுதியது போலவே, தனது மரணத்திற்குப் பின்பு வெளியிடுவதற்காகக் குற்றவாளியும் எதையாவது எழுதி யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமல்லவா?” அப்போது பரிசாரகர் மதுக் கோப்பையைக் கொண்டுவந்து அனபெல் முன்னால் வைத்தார். அனபெல் எதுவும் பேசாமல் அந்தக் கோப்பையை எடுத்துப் பொறுமையாக அருந்திக்கொண்டிருந்தார். அவர் அருந்தும் விதத்தைப் பார்த்தால், இந்த ஒரு கோப்பை மதுவை தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவர் மிடறு மிடறாகக் குடித்துக்கொண்டேயிருப்பார் என்றே எனக்குத் தோன்றியது. (இமிழ் – மார்ச் 2024) https://www.shobasakthi.com/shobasakthi/2024/05/06/மரச்-சிற்பம்/
-
பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பகுதி ஒன்று - புத்தரின் வாழ்க்கை புத்தர், பிட்சை கேட்பவராக - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 1. நீங்கள் எந்த மதத்தை(religion)* சேர்ந்தவர்? பௌத்தம் 2. பௌத்தம் என்றால் என்ன? புத்தர் என்ற மாபெரும் ஆளுமையால் வழங்கப்பட்ட போதனைகளை உள்ளடக்கியது. 3. இந்த போதனைகளுக்கு ‘பௌத்தம்’ (Buddhism) என்பது தான் சிறந்த பெயரா? இல்லை, அது (Buddhism) மேற்கத்திய சொல்வழக்கு, ‘புத்த தர்மம்’ என்பதுதான் அதற்கு சரியான பெயர். 4. பௌத்தத்தை பின்பற்றும் பெற்றோருக்கு ஒருவர் பிறந்ததால் அவரை பௌத்தர் என்று நீங்கள் அழைப்பீர்களா? நிச்சயமாக இல்லை. புத்தரை மிக உன்னதமான ஆசிரியர் என்றும், அவர் போதித்த போதனைகளின் மீதும், அர்ஹத்தர்களின் சகோதரத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் அவருடைய போதனைகளை பின்பற்றுபவரே பௌத்தர். 5. ஆண் ‘பௌத்தர்களை’ எவ்வாறு அழைப்பது? உபாசகர் 6. பெண்களை? உபாசகி 7. புத்தரின் போதனைகள் முதன்முதலில் எப்போது உரைக்கப்பட்டன? அந்த நாளை சரியாக குறிப்பிடுவதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் சிங்கள பௌத்த நூல்களின் படி அது கலியுகத்தின் (தற்போதைய யுகம்) 2513-ஆம் ஆண்டு ஆகும். 8. புத்தரின் கடைசி பிறவியில் முக்கியமான தினங்களை பற்றி சொல்லுங்கள். புத்தர் கலியுகம் 2478-ஆம் ஆண்டு விசாகா நக்ஷத்திரத்தில் வைகாச பௌர்ணமியும் செவ்வாய்கிழமையும் கூடிய நாளில் பிறந்தார். 2506-ஆம் ஆண்டு அரசை துறந்து காடேகினார், 2513-ல் ‘புத்தர்’ ஆனார். பிறகு 2558-ஆம் ஆண்டு தன்னுடைய எண்பதாவது வயதில் பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு பரிநிர்வானத்தில் நுழைந்தார். இந்த ஒவ்வொரு நிகழ்வுமே வைகாசி பௌர்ணமியில் நடந்ததால் பௌத்தர்கள் வைகாச பௌர்ணமியை பெரும் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். 9. புத்தர் கடவுளா? இல்லை, புத்த தர்மம் எந்த ”தெய்வீக” அவதாரத்தையும் போதிப்பதில்லை. 10. புத்தர் மனிதரா? ஆம். ஆனால் ஞானி, மேன்மையானவர், உன்னதமானவர். பிற எந்த உயிர்களை விடவும் எவற்றை விடவும் எண்ணற்ற பிறவிகள் வழியாக தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டவர், அவருக்கு முந்தைய புத்தர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. 11. கௌதம புத்தருக்கு முன்பு வேறு புத்தர்கள் இருந்தனரா? ஆம், ஆனால் அதை பிறகு விளக்குகிறேன். 12.‘புத்தர்’ என்பது தான் இவரின் பெயரா? இல்லை, இது ஞானத்தின் உச்சத்தை அடைந்த பிறகு உள்ள நிலை அல்லது அந்த ஞான நிலையின் பெயர். 13. அப்படி என்றால்? ஞானம் அடைந்தவர், அல்லது முழுமையான ஞானம் கொண்டவர் என்று பொருள். பாலி மொழியில் ‘சப்பாண்ணு’, எல்லையில்லா அறிவுடையவன் என்று பொருள். சமஸ்கிருதத்தில் ஸர்வக்ஞன். 14. அப்போது புத்தரின் இயற்பெயர் என்ன? சித்தார்த்தன் என்பது அவரது இயற்பெயர், கௌதமர் அல்லது கோதமர் என்பது அவரது அரசகுடும்பப் பெயர். அவர் கபிலவஸ்துவின் இளவரசர் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஒக்கக்காவின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். 15. அவருடைய தாய், தந்தையர்? தந்தை அரசர் சுத்தோதனர். அன்னை மாயா, மஹாமாயா என்றும் அழைப்பார்கள். 16. சுத்தோதனர் எந்ந நாட்டின் அரசர்? அரசர் சுத்தோதனர் க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்தவர். சாக்கியர்களின் கபிலவஸ்துவிற்கு அரசராக இருந்தார். 17. கபிலவஸ்து எங்கிருந்தது? கபிலவஸ்து இந்தியாவின் நேபாள் பகுதியில் அமைந்திருந்தது. வாரணாசிக்கு வடகிழக்கே நூறு மைல் தொலைவிலும், இமயத்திலிருந்து நாற்பது மைல் தொலைவிலும் இருந்தது. இப்போது கபிலவஸ்துவின் எச்சங்கள் கூட அழிந்துவிட்டன. 18. கபிலவஸ்து எந்த நதிப்படுகையில் அமைந்திருந்தது? ரோஹினி நதி, இப்போது அதை கோஹனா என்று அழைக்கிறார்கள். 19. இளவரசர் சித்தார்த்தர் எப்போது பிறந்தார் என்பதை எனக்கு மீண்டும் ஒருமுறை சொல்லமுடியுமா? கிருஸ்து பிறப்பதற்கு 633 ஆண்டுகள் முன்பு சித்தார்த்தர் பிறந்தார். 20. புத்தர் சரியாக எந்த இடத்தில் பிறந்தார் என்று தெரியுமா? ஆம், அது இப்போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேபாளத்தின் காட்டில், புத்தரை பின்பற்றிய புகழ்பெற்ற சக்ரவர்த்தி அசோகரின் ஸ்தூபி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதில் புத்தர் பிறந்த இடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் அந்த இடம் லும்பினி தோட்டம் என்று அழைக்கப்பட்டது. 21. சித்தார்த்தரும் அனைத்து இளவரசர்கள் மாதிரி ஆடம்பரமான ராஜபோக வாழ்க்கையில் தான் இருந்தாரா? ஆமாம், அவருக்கு அவர் தந்தையான அரசர் சுத்தோதனர், இந்தியாவின் மூன்று பருவகாலத்திலும் தங்குவதற்கு உகந்த அற்புதமான மூன்று மாளிகைகள் கட்டிக்கொடுத்திருந்தார். குளிர்கால மாளிகை ஒன்பது அடுக்குகளுடனும், வேனிற்கால மாளிகை ஐந்து அடுக்குகளும், மழைகால மாளிகை மூன்று அடுக்குகளும் கொண்டவையாக அவை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. 22. அந்த மாளிகைகள் எவ்வாறெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தது? ஒவ்வொரு மாளிகைகளிலும் பலவிதங்களில் அழகழகான வண்ணங்கள் நிறைந்த வாசனை பூந்தோட்டங்கள் நீர்வீழ்ச்சியுடன் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு உள்ள மரங்கள் அனைத்திலும் பறவைகள் பாடிக்கொண்டும் மயில்கள் நடனமிட்டுக்கொண்டும் இருந்தன. 23. அங்கு அவர் தனியாகவா வசித்தார்? இல்லை இல்லை. சித்தார்த்தர் தனது பதினாறாம் வயதில் அரசர் சுப்ரபுத்தாவின் மகள் யசோதரையை மணந்து அவருடன் வாழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் நடனத்திலும் இசையிலும் தேர்ச்சிபெற்ற பல அழகிய ஆடல்பெண்கள் அவரை மகிழ்விப்பதற்காவே மாளிகைக்கு வந்துகொண்டும் இருந்தனர். 24. எவ்வாறு அவர் யசோதரையை மணம்புரிந்தார்? யசோதரையின் தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பல நாட்டின் இளவரசர்கள் தங்களின் வீரத்தையும் திறமைகளையும் காட்டவந்திருந்தனர். தொன்மையான க்ஷத்ரியமுறைப்படி அவர்களை வென்று சித்தார்த்தன் யசோதரையை மணம்புரிந்தார். 25. எப்படி, இத்தனை சுகபோகங்களுக்கு நடுவில் இருந்த ஒரு இளவரசன் ஞானியாக முடியும்? குழந்தைப் பருவத்திலேயே எல்லாக் கலைகளையும் சாஸ்திரங்களையும் விரைவாக புரிந்துகொள்ளும் ஞானம் சித்தார்த்தனுக்கு இயல்பாக அமைந்திருந்தது. மிகச் சிறந்த ஆசிரியர்கள் அவருக்கு அமைந்தார்கள், ஆனாலும் அவரால் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றை அந்த ஆசிரியர்களால் அவருக்கு கற்றுக்கொடுக்கமுடியவில்லை. 26. அவர் தனது பிரம்மாண்டமான அழகிய மாளிகைகளில் இருந்துகொண்டே புத்த நிலையை அடைந்துவிட்டாரா? இல்லை. அவர் எல்லாவற்றையும் துறந்து, தனிமையில் காடேகினார். 27. அவர் ஏன் அவ்வாறு செய்தார்? நம் துயரங்களின் காரணங்களை கண்டறியவும், அவற்றிலிருந்து விடுதலை அடையவும். 28. இவ்வாறு அவரை செய்யவைத்தது அவருடைய சுயநலம் அல்லவா? இல்லை, உயிர்களின்மேல் கொண்ட எல்லையில்லா அன்பினால் அவற்றின் நன்மைக்காக தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக்கொண்டார். 29. ஆனால் எவ்வாறு அவர் எல்லையில்லா அன்பை உணர்ந்துகொண்டார்? எண்ணற்ற பிறவிகள் பிறந்தும் பற்பல நூற்றாண்டுகளாகவும் அவர் இந்த அன்பை உணர்ந்து வந்திருக்கிறார், புத்தராகும் ஒரே லட்சியத்தோடு. 30. அவர் எதைத் துறந்து விலகிசென்றார்? அவருடைய அழகிய மாளிகைகள், செல்வம், ஆடம்பரம், சிற்றின்பம், மென்மெத்தைகள், நல்லாடைகள், உயர்தர உணவு அவரது அரசுரிமை ஆகியவற்றையும். தன்னுடைய காதல் மனைவி யசோதரை, அன்பு மகன் ராகுலாவையும் கூட அவர் விட்டுவிலகி சென்றார். 31. மனித குலத்தின் நன்மைக்காக வேறெவரேனும் இத்தகைய தியாகம் செய்திருக்கிறார்களா? இன்றுள்ள காலகட்டத்தில் யாருமில்லை. இதனால்தான் பௌத்தர்கள் அவரை மிகவும் நேசிக்கின்றனர், பௌத்தர்களில் சிறந்தவர்கள் அவரைப் போல வாழ முயற்சிக்கின்றனர். 32. ஆனால் பலர் இவரை போலவே உலக இன்பங்களையும், ஏன் தங்கள் உயிரையே கூட சக மக்களின் நன்மைக்காக துறந்திருக்கிறார்களே? உண்மைதான். எனினும் இவர் மனிதர்கள் மேல் கொண்ட சுயநலமற்ற பேரன்பினால் அவர்களுக்காக யுகயுகங்களுக்கு முன்பு தீபங்கர-புத்தரின் காலத்தில் தான் அடையவிருந்த அரிய நிர்வாண முக்தி நிலையை துறந்தார். அப்போது அவர் பிராமண சுமேதராக பிறந்தார். நிர்வாணத்தில் நுழைவதற்கான நிலையை அடைந்திருந்தார். மனிதர்கள் மீது அன்பில்லாமல் தன்னை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தால் அவர் நிர்வாணத்தில் நுழைந்திருப்பார் அல்லவா. விடுதலைக்கும் உலக அமைதிக்குமான வழியையும் அனைத்து உயிர்களுக்கும் பொதிப்பதற்காக நிர்வாணத்தை துறந்து, இப்பிறவியை எடுத்து, வலுகட்டாயமாக தன்னை உலக துயர்களில் ஆழ்த்திக்கொண்டார், புத்தனாக ஆகும்வரை. 33. அவர் கானகம் புகந்த போது அவருக்கு என்ன வயது? அப்போது அவருக்கு 29வது வயது. 34. எது அவரை தீர்க்கமாக மனிதர்கள் விரும்பும் அனைத்தையும் துறந்து கானகம் புக வைத்தது? அவர் தன் பல்லக்கில் வலம் சென்றபோது தேவன் ஒருவன் நான்கு வெவ்வேறு தருணங்களில் நான்கு விதமான ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தும் வடிவங்களில் காட்சி தந்தார். 35. அந்த வடிவங்கள் என்னென்ன? மிகவும் வயதாகி தளர்ந்த கிழவராக, நோய்வாய்பட்ட ஒருவராக, அழுகும் ஒரு பிணமாக, எல்லாம் துறந்த துறவியாக. 36. அவர் மட்டுமா அதை பார்த்தார்? இல்லை, அவர் சேவகன் சன்னாவும் அவைகளை பார்த்தான். 37. ஏன் சாதாரணமாக எல்லோரும் காணும் காட்சிகள் அவரை மட்டும் கானகம் செல்ல தூண்டியது? நாம் அடிக்கடி அத்தகைய காட்சிகளை காண்போம், ஆனால் அவர் கண்டதில்லை. ஆகையால் அவை அவர் உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தின. 38. ஏன் அவர் அவற்றை இதற்கு முன்பு பார்க்கவில்லை? அவர் பிறந்த போது பிராமண நிமித்திகர்கள் அவர் ஒரு நாள் தன் அரசை துறப்பார் என்றும் பிறகு புத்தனாவார் என்று கணித்து கூறினார்கள். ஆகவே அரசர் அதாவது அவரது தந்தை தன் அரசை வழிநடத்தபோகும் ஒரே வாரிசு மனித துயர்களையும் இறப்புகளையும் காணும் சந்தர்பங்களை மிகவும் கவனத்துடன் தவிர்த்து வந்தார். இளவரசரிடம் அதை பற்றி பேசவும் யாருக்கும் அனுமதியில்லை. அவர் தனது அழகிய பெரிய மாளிகைகளிலும் பூந்தோட்டங்களிலும் ஒரு கைதிபோல வாழ்ந்துவந்தார். அவை பெரும் மதில்களால் சூழப்படிருந்தன, எத்தனை அழகு சாத்தியமோ அத்தனை அழகுடன் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆகவே இளவரசர் வெளியேயுள்ள துன்பங்களையும் வேதனைகளையும் சென்று பார்க்க விரும்பமாட்டார் என்று அவரது தந்தை நினைத்தார். 39. அவரின் தந்தை தன் மகன் உலக நன்மைக்காக எல்லாவற்றையும் துறந்து செல்வார் என எண்ணும் அளவிற்கு இளவரசர் அத்தனை அன்பு-உள்ளம் கொண்டவரா? ஆமாம். அவர் எல்லா உயிர்களிடமும் மிகுந்த அன்பும் கருணையும் கொண்டிருந்தார். 40. அவர் எங்ஙனம் துயரங்களுக்கான காரணத்தை கானகத்தில் அறியமுடியும் என எண்ணினார்? அனைத்திலிருந்தும் விலகி தொலைதூரத்திற்கு செல்வதனால் துயரங்களின் காரணத்தின் மீதும் மனித இயல்பு மீதும் ஆழ்ந்த சிந்தனையை செலுத்த இயலும். 41. எவ்வாறு அவர் மாளிகையிலிருந்து தப்பிசென்றார்? ஒருநாள் இரவில் அனைவரும் உறங்கியபின் அவர் விழித்துக்கொண்டார். தன் மனைவியையும் சிறு குழந்தையையும் ஒருமுறை பார்த்தார். பிறகு தனது சேவகன் சன்னாவை அழைத்தார். தன்னுடைய விருப்பமான வெள்ளை குதிரையான காந்தகாவில் சேணம் ஏற்றி மாளிகையின் வாயில்கதவருகே சென்றார். வாயில் காப்பாளர்கள் ஆழ்ந்த துயிலும்படி செய்தனர் தேவர்கள். ஆகையால் குதிரையின் குளம்பொலியைக்கூட அவர்கள் கேட்கவில்லை. சித்தார்த்தனின் புறப்பாடு - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 42. ஆனால் கதவு பூட்டித்தானே இருந்திருக்கும்? ஆம், ஆனால் தேவர்கள் சிறு ஒலிகூட எழாமல் கதவை திறக்கச்செய்தனர். பிறகு அவர் குதிரையில் இருட்டில் பாய்ந்து சென்றுவிட்டார். 43. அவர் எங்கு சென்றார்? ஆனோமா ஆற்றங்கரைக்கு. கபிலவஸ்துவிலிருந்து நெடுந்தொலைவில் இருப்பது. 44. பிறகு என்ன செய்தார்? குதிரையிலிருந்து கீழ் குதித்தார். அழகிய தலை முடியை வாளால் மழித்துக்கொண்டார். காவியுடை தரித்துகொண்டார். குதிரையையும் ஆபரணங்களையும் சன்னாவிடம் கொடுத்து தன் தந்தையிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். 45. பிறகு? நடைப்பயணமாக ராஜகிரஹம் சென்றார். அது மகத அரசன் பிம்பிசாராவின் தலைநகரம். 46. அங்கு அவரை யார் சந்தித்தார்கள்? அரசன் தன் அமைச்சர்கள் அனைவருடனும் சென்று அவரை சந்தித்தார். 46a. அங்கிருந்து எங்கே சென்றார்? உருவெல்லா, தற்போது மஹாபோதி ஆலயமுள்ள புத்த கயாவிற்கு அருகில். 47. அவர் ஏன் அங்கே சென்றார்? அங்கிருந்த கானகத்தில் துறவிகளும் ஞானிகளும் இருந்தனர். தன்னுடைய தேடலுக்கான அறிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் அவர்களிடம் சீடனாக சேர்ந்துகொண்டார். 48. அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்? இந்து மதம். அங்கிருந்தவர்கள் பிராமணர்கள். 49. அவர்கள் என்ன கற்றுக்கொடுத்தனர்? கடுமையான தவத்தின்மூலமும் உடலை வருத்திக்கொள்வதன் மூலமும் மனிதனால் சரியான ஞானத்தை அடையமுடியும் என்று. 50. இளவரசன் இதை சரியென்று உணர்ந்தாரா? இல்லை, அவர்களின் நியதிகளை கற்றுகொண்டார், கடும் தவங்களை பயிற்சிசெய்தார். ஆனால் அவரால் மனித துயரின் காரணங்களை, முழுமையான விடுதலைக்கான வழியை அறியமுடியவில்லை. 51. பிறகு என்ன செய்தார்? உருவெல்லா அருகேயுள்ள கானகத்துள் சென்றுவிட்டார். அங்கே அவர் ஆறு ஆண்டுகள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அழியக்கூடிய தன் உடலின் மீது தீவிரமான ஒழுக்க விதிகளை ஏற்றிக்கொண்டார். 52. அவர் தனியாக இருந்தாரா? இல்லை, ஐந்து பிராமணர்கள் உடனிருந்தனர். 53. அவர்கள் பெயரென்ன? கொண்டன்னா, பட்டியா, வப்பா, மஹானாம, அஸாஜி. 54. தனது மனதை திறந்து வைத்து முழு உண்மையை அறிய எந்த விதமான திட்ட விதிகளை அவர் கடைபிடித்தார்? அவர் ஓரிடத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். வாழ்வின் அதிஉச்ச சிக்கல்களில் மட்டும் தன் மனதை நிலைக்கச்செய்தார். தனது தியானத்தை குலைக்கும் எந்த காட்சிக்கும் ஒலிகளுக்கும் தன் கவனம் செல்லாது அடைத்துக்கொண்டார். 55. அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டாரா? ஆமாம், அந்த தியான காலம் முழுவதும் அவர் மேலும் மேலும் மிக சிறு அளவே உணவும் நீரும் உட்கொண்டார். அதன் உச்சமாக தினமும் ஒரு பருக்கை அரிசி அல்லது எள்ளு மட்டுமே உட்கொண்டார் என்று கூறப்படுகிறது. 56. இந்த கடும் தவம் அவர் தேடிய ஞானத்தை கொடுத்ததா? இல்லை. அவர் உடலளவில் மெலிந்துகொண்டே சென்றார். பலவீனமடைந்து கொண்டே இருந்தார். அப்போது ஒருநாள், மெல்ல நடந்து தியானம் செய்துகொண்டிருக்கும்போதே அவர் ஜீவ சக்தி சட்டென்று விலகி சுயநினைவிழந்து மண்ணில் விழுந்தார். 57. இதைப்பற்றி அவருடன் இருந்தவர்கள் என்ன நினைத்தனர்? அவர் இறந்துவிட்டார் என அவர்கள் நினைத்தனர். ஆனால் சிறிதுநேரம் கழித்து அவர் மீண்டும் விழித்துக்கொண்டார். 58. பிறகு என்ன ஆயிற்று? வெறும் உண்ணாவிரதத்தாலோ உடலை வருத்திக்கொள்வதாலோ அறிவு கிடைக்கப்போவதில்லை, திறந்த மனதுடன் இருப்பதாலேயே அது சாத்தியப்படும் என்னும் புரிதலை அடைந்தார். தன்னை வருத்திக்கொண்டதால் நூலிழையில் மரணம் வரை சென்று உயிர் திரும்பினார். எனினும் ஞானம் பெறவில்லை. ஆகவே ஞானம் அடையும் வரை வாழ்ந்தாக உணவு உட்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார். 59. அவருக்கு உணவளித்தவர் யார்? சுஜாதா எனும் பெண்தான் அவருக்கு உணவளித்தாள். ஊர் தலைவரின் மகளான அவள் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த அவரை கண்டு உணவளித்தாள். அவர் எழுந்து உணவை பெற்றுக்கொண்ட பிட்சை பாத்திரத்துடன் நெரஞ்சரா ஆற்றங்கரைக்குச் சென்றார். ஆற்றில் குளித்துமுடித்து, உணவு உட்கொண்டு, கானகத்திற்குள் சென்றுவிட்டார். 60. அங்கு அவர் என்ன செய்தார்? நடந்த நிகழ்வுகளில் இருந்து உறுதியான முடிவை எடுத்துக்கொண்டு அந்திப்பொழுதில் ஒரு போதி (அஸ்வத்த) மரத்திற்கு சென்று சேர்ந்தார். அது தற்போதய மஹாபோதி ஆலயம் இருக்குமிடம். 61. அங்கு என்ன செய்தார்? சரியான ஞானம் கிடைக்கும்வரை அந்த இடத்தைவிட்டு விலகுவதில்லை என உறுதிகொண்டார். 62. மரத்தின் எந்த திசையில் அவர் அமர்ந்திருந்தார்? கிழக்குநோக்கி 63. அன்றிரவு அவர் அடைந்தது என்ன? அவரின் முற்பிறப்புகள், மறுபிறப்பிற்கான காரணங்கள், ஆசைகளை அழிப்பதற்கான வழிகள் ஆகியவற்றைப் பற்றிய ஞானத்தை அடைந்தார். விடியலுக்கு சற்று முன்பு அவரது மனம் முழுதும் மலர்ந்து விரிந்த தாமரை போல முழுமையாக திறந்துகொண்டது. உயர்நிலை அறிவொளி அல்லது நான்கு பெரும் உண்மைகள் அவர்மீது பொழிந்தன. அவர் புத்தரானார். எல்லாம் அறிந்த சர்வஞ்ஞர் ஆனார். 64. இறுதியாக அவர் மனித துன்பங்களின் காரணங்களை கண்டுகொண்டாரா? ஆம், இறுதியில் அவர் கண்டுகொண்டார். சூரியனின் காலைஒளி இருளை அகற்றி மரம், நிலம், பாறை, கடல், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பிற அனைத்தையும் காட்டுவதுபோல, அவர் உள்ளத்தில் உதித்த அறிவின் முழு வெளிச்சத்தால் ஒரே பார்வையில் மனித துன்பங்களுக்கான காரணங்களையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் கண்டுகொண்டார். 65. இந்த சரியான ஞானத்தை அடைய அவர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டாரா? ஆமாம். மிக பிரம்மாண்டமான கடுமையான சிரமங்களை எதிர்கொண்டார். நாம் உண்மையை நோக்க தடைகளாக இருக்கும் இன்பங்களையும் ஆசைகளையும், உடலில் இயற்கையாக உள்ள குறைகளையும் அவர் தன் உடலால் வெல்லவேண்டியிருந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் பாவ உலகின் தீய தாக்கங்கள் அனைத்தையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்தின் பல எதிரிகளை எதிர்த்து தீவிரமாக போரிடுவது போல அவர் போராடினார். போரில் வென்ற நாயகன் போல தன் இலக்கை அவர் அடைந்தார், மனித துன்பங்களின் ரகசியத்தை கண்டறிந்தார். புத்தரின் வெற்றி - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 66. இவ்வாறு அடைந்த ஞானத்தை கொண்டு அவர் என்ன செய்தார்? முதலில் பெரும் மக்கள் திரளுக்கு அந்த ஞானத்தை அளிப்பதில் தயக்கம் கொண்டிருந்தார். 67. ஏன்? அதன் அதிமுக்கியத்துவமும் உன்னதமுமே அதற்கு காரணம். மிக சிலரே அதை உணர்ந்துகொள்வர் என அஞ்சினார். 68. அவரின் இந்த நிலைப்பாடு மாறியதற்கு எது காரணம்? தான் அறிந்ததை தெளிவாகவும் எளிதாகவும் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பது தன் கடமை என உணர்ந்துகொண்டார். தனிநபரின் கர்மத்திற்கு ஏற்ப மெய்மையின் தரிசனம் அவர்களுக்கு கிடைக்கக்கூடும் என நம்பினார். விடுதலைக்கான ஒரே வழி இது ஒன்றே. அதை தன்னிடம் கோரும் எல்லா உயிர்களுக்கும் உரிமையுண்டு என்றும் நம்பினார். அகவே அவர் கடும்பயிற்சிகள் எதுவும் உதவாது என்று விரதத்தை நிறுத்திக்கொண்ட போது அவரைவிட்டு விலகிய ஐந்து நண்பர்களிடமிருந்து இந்த ஞானப் பகிர்வை தொடங்கலாம் என தீர்மானித்தார். (பிரம்ம தேவன் புத்தரிடம் அவரின் ஞானத்தை உயிர்கள் அனைத்திற்கும் பகிருமாறு வேண்டிக்கொண்டதாக புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன). 69. அவர்களை எங்கே கண்டுகொண்டார்? பனாரஸ் அருகே மான்கள் நிறைந்த இசிபட்டானா என்னும் சோலையில். 70. அந்த இடத்தை இப்போது கண்டுகொள்ளமுடியுமா? முடியும். சிறிது சிதிலமடைந்த ஸ்தூபம் அல்லது டகோபா இன்னமும் அங்கே நிற்கிறது. 71. அந்த ஐந்து நண்பர்களும் அவர் சொல்வதைக் கேட்க தயாராக இருந்தார்களா? இல்லை, முதலில் தயங்கினார்கள். ஆனால் அவரின் வசீகரிக்கும் ஆன்மீக தோற்றமும், மிக இனிமையான உறுதியான போதனையும் அவர்களின் முழு கவனத்தையும் அவருக்கு கொடுக்கசெய்தது. 72. இந்த சொற்பொழிவு எவ்வகையான தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது? வயதில் முதிர்ந்த ’கொண்டன்னா’ என்று அறியப்படுபவர்தான் முதலாவதாக தன் முன்முடிவுகளை விளக்கி புத்தரின் போதனைகளை ஏற்றுகொண்டார். அவரே முதல் சீடனும் ஆகி அர்ஹதரின் வழி சேரும் பாதையில் பயணிக்க முடிவுசெய்தார். மற்ற நால்வரும் விரைவிலேயே அவரை பின்தொடர்ந்தனர். 73. அடுத்து யார் அவரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டனர்? இளம் செல்வந்தனாகிய யாசாவும் அவனின் பணக்கார வணிகராகிய தந்தையும். மூன்றாம் மாத இறுதியில் சீடர்களின் எண்ணிக்கை அறுபதாக இருந்தது. 74. முதல் பெண் சீடர்கள் யாவர்? யாசாவின் தாயும் , துணைவியும். 75. அச்சமயம் புத்தர் என்ன செய்துகொண்டிருந்தார்? தன் சீடர்களை ஒன்றாக அழைத்து அவர்களுக்கு வழிமுறைகளை கூறி, தன் கொள்கையை போதிக்க எல்லா திசைகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்தார். 76. அந்த கொள்கையின் சாராம்சம் என்ன? விடுதலைக்கான வழி தூயவாழ்வை வாழ்வதிலும் நெறிகளை பின்பற்றுவதிலும் அடங்கியுள்ளது. அவற்றை பிறகு விளக்குகிறேன். 77. இவ்வகையான வாழ்க்கை முறைக்கு அவர் என்ன பெயர் சூட்டினார்? அஷ்டாங்க மார்க்கம் (உன்னத எண்வகை மார்கங்கள்) 78. பாலி மொழியில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? அரியோ அட்தங்கிகோ மக்கோ 79. பிறகு புத்தர் எங்கே சென்றார்? உருவெல்லா-விற்கு 80. அங்கு என்ன நடந்தது? ஜதிலர்களின் ஆசிரியரும் கல்விக்கு பெயர் பெற்றவருமான காஷ்யபரை தன் நெறிக்குள் உட்புகுதினார். அக்னியை வழிபடும் பெரும் குலமான ஜதிலர்கள் இதன் பிறகு புத்தரை பின்தொடர துவங்கினர். 81. இவரால் மாறுதலுக்கு உண்டான அடுத்த பெரும் நபர் யார்? மகத அரசன் பிம்பிசாரன். 82. அச்சமயத்தில் புத்தரால் மிகவும் விரும்பப்பட்ட நன்கு கற்ற எந்த இரண்டு சீடர்கள் அவரின் நெறிக்கு மாறினர்? சாரிபுத்திரர் மற்றும் மொகல்லானா. இதற்குமுன் இவர்கள் துறவி சஞ்சய்யாவின் தலைமை சீடர்களாக இருந்தனர். 83. எதனால் இவர்கள் இருவரும் மிகவும் அறியப்படுகிறார்கள்? சாரிபுத்திரர் அவருடைய ஆழ்ந்த கற்றலுக்காகவும் (பிரஜ்னா), மொகல்லான அவருடைய தனித்துவமான ஆன்மீக சித்திக்கும் அறியப்படுகின்றனர். 84. இத்தகைய அதிசய-சக்திகள் மாயஜாலவித்தைகளா? இல்லை. அனைவருக்கும் இயல்பாக கிடைக்கக்கூடியவைதான். முறையான பயிற்சியின்மூலம் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆற்றல்கள் இவை. 85. புத்தர் தனது குடும்பத்தை விட்டு நீங்கியபின்பு அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததா? ஆம். ஏழு வருடம் கழிந்து அவர் ராஜக்ரஹத்தில் வசிக்கும்போது அவரது தந்தை சுத்தோதன மன்னனிடமிருந்து வந்தது. தந்தை தன் மரணத்திற்கு முன் தன் மகனை மீண்டும் ஒருமுறை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 86. புத்தர் சென்றாரா? ஆம். அவருடைய தந்தை தனது எல்லா சுற்றத்துடனும், அமைச்சர்களுடனும் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். 87. மீண்டும் இளவரசராக அவர் சம்மதம் தெரிவித்தாரா? இல்லை. அவர் மிக இனிமையாக தன் தந்தையிடம் சித்தார்த்தன் என்ற இளவரசன் தற்போது இல்லையென்றும், அவன் 'புத்தனாகி' அந்நிலையில் எல்லா உயிர்களையும் சமமாக அன்பாக பார்க்கிறார் என்றும் விளக்கினார். மண்ணுலக அரசனாக குறிப்பிட்டவொரு மக்களையோ நாட்டையோ ஆள்வதைவிட தன்னுடைய 'தம்மத்தால்' மக்கள் அனைவரின் மனதையும் வென்று அவர்களை தன் வழியே வரச்செய்வதே தன் விருப்பம் என்று கூறினார். 88. அவர் யசோதரையும் அவரது மகன் ராகுலாவையும் சந்தித்தாரா? ஆம். அவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்திருந்த அவரின் மனைவி அவரைகண்டதும் வேதனையில் அழுதாள். மேலும் இளவரசனின் மகன் என்னும் உரிமையில் ராகுலனை அவரிடம் சென்று தன் அரசஉரிமைகளை கேட்க செய்தார். 89. என்ன நடந்தது? அனைவருக்கும் தம்மத்தின் வழியே எல்லா துயர்களையும் களைவதற்கான பாதையை போதித்தார். அவரது தந்தை, மகன், மனைவி, ஆனந்தன் (சகோதரன்), தேவதத்தன் என அனைவரும் அவரின் சீடராயினர். இவர்களில் அனுருத்தன் மற்றும் உபாலி ஆகியோர் பின்னாலில் புகழ்பெற்றனர். அனுருத்தன் பெரும் தத்துவவாதி ஆனார். அரண்மனை நாவீதரான உபாலி வினய சாஸ்திரத்தில் பெரும் புலமை பெற்றார். 90. முதல் பிக்குணி யார்? மஹாபஜபதி(மஹாபிரஜாபதி) கோதமி. இவர் இளவரசர் சித்தார்த்தரின் அன்னையான மாயாதேவியின் இளைய சகோதரி, சித்தார்த்தரின் வளர்ப்பு அன்னையும் ஆவர். இவருடன் யசோதரை மற்றும் நிறைய பெண்கள் பிக்குணிகளாக ஆனார்கள். 91. தன் இரண்டு மகன்கள் சித்தார்த்தனும் ஆனந்தனும், சகோதரனின் மகன் தேவதத்தன், மருமகள் யசோதரை, பேரன் ராகுலா என அனைவரும் ஆன்மீக பாதையை தேர்வுசெய்த போது வயோதிக மன்னர் சுத்தோதனரின் மனதில் அவை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது? இது அவரை மிகவும் வருத்தமடைய செய்தது. புத்தரிடம் புகார் கூறினார். மேலும், பெற்றோர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஒப்புதலின்றி இனி யாரும் துறவறம் ஏற்கக்கூடாது என்னும் ஆணையும் பிறப்பித்தார். 92. தேவதத்தனின் விதியை பற்றி கூறமுடியுமா? அவர் மிகுந்த அறிவுத்திறன் உடையவர். தம்மத்தின் ஞானத்தை மிக விரைவாக அறிந்துகொண்டார். ஆனால் அவரிடம் தீவிரமாக புகழுக்கான வேட்கையும் இருந்தது. அதுவே தேவதத்தனை புத்தரிடம் விரோதம் கொள்ளவும் அவரை வெறுக்கவும் தூண்டியது. கடைசியில் அவரை கொல்லவும் முயற்சிசெய்தார். மேலும், தேவதத்தன் மகத மன்னன் பிம்பிசாரரின் புதல்வன் அஜாதசத்ருவை தன் வசம் ஈர்த்து மன்னனை கொல்லத் தூண்டினார், அவனை தனது சீடனாக ஆக்கினார். 93. தேவதத்தன் புத்தருக்கு எதாவது காயம் ஏற்படுத்தினாரா? அது மட்டும் நிகழவில்லை. ஆனால் புத்தருக்கு எதிராக அவர் வகுத்த தீய செயல்கள் இறுதியாக அவரையே சூழ்ந்துகொண்டு துர்மரணம் அடைய செய்தது. 94. எத்தனை ஆண்டுகள் புத்தர் போதனையில் ஈடுபட்டுவந்தார்? நாற்பது ஆண்டுகள். இச்சமயத்தில் அவர் ஏராளமான பிரசங்கங்களும், வாதங்களும் நிகழ்த்தினார். புத்தரும் அவரது சீடர்களும் ஆண்டின் மழையில்லாத எட்டு மாதங்கள் முழக்க பயணித்து போதனை செய்வர். மழை காலங்களில் புத்த தர்மத்திற்கு மாறிய மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் அவருக்காக ஏற்படுத்திய பர்ணசாலைகளிலும் விகாரங்களிலும் தங்கிக்கொள்வர். 95. இவற்றில் புகழ் பெற்ற கட்டிடங்கள் யாவை? ஜெத்தாவனாரமா, வேலுவனரமா, புப்பரமா, நிக்ரோதரமா, இசிபட்டனரமா.(ஜேதவனமும் புப்பராமாவும் உத்தர பிரதேசத்தின் சிராவஸ்தியில் இருக்கும் புத்த மடங்கள். வேனுவனம் ராஜகிரஹத்தில் இருக்கிறது. இசிபத்தானா என்பது இன்றைய சாரநாத், நிக்ரோதராமா கபிலவஸ்துவில் உள்ளது) 96. எந்த வகையான மக்கள் அவராலும் அவரது சீடர்களாலும் புத்த தர்மத்திற்கு மாற்றப்பட்டனர்? எல்லா தரப்பினரும், எல்லா தேசத்து மக்களும், செல்வந்தர்கள் ஏழைகள், கூலிகள், மன்னர்கள், வலியவர் எளியவர், கல்லாதவர்கள், கற்றவர்கள் என அனைவரும். அவரது கொள்கை அனைவருக்குமானது 97. புத்தரின் இறப்பை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? தனது புத்த தன்மையை அடைந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த வைகாச மாதத்தின் முழு நிலவு நாளன்று தன் இறுதி அணுகுவதை உணர்ந்தார். ஒரு மாலை பொழுதில் வாரனாஸிலிருந்து 120 மைல்கள் தொலைவிலுள்ள குசிநகரம் என்னும் இடத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கே மல்லர்களின் சால மரதோப்பில் இரண்டு சால மரத்திற்கு இடையே தொல்வழக்கப்படி வடக்கில் தலை வைக்குமாறு படுக்கை அமைக்கப்பட்டிருந்தது. அதில் படுத்துக்கொண்டு முழு அமைதியான மனதுடன் தன் சீடர்களுக்கு கடைசி அறிவுரைகள் வழங்கி, இறுதியாக விடைபெற்றும் கொண்டார். 98. அவர் தனது இறுதி யாத்திரைகளிலும் மக்களை புத்த தர்மத்திற்குள் புகசெய்தாரா? ஆம், மிக முக்கியமான நபர் ஒருவர் தர்மத்திற்குள் நுழைந்தார். புகழ்பெற்ற பிராமண பண்டிதர் சுபத்ரா. மேலும் மல்யா இளவரசர்கள் மற்றும் அவர்களை பின்பற்றும் அனைவருக்கும் தம்மத்தை போதித்தார். 99. வைகறை பொழுதில் என்ன நடந்தது? அவர் சமாதி நிலையில் உள்ளடங்கி, பின் நிர்வாணத்தை அடைந்தார். நிர்வாணத்தை அடைதல் - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 100. தன்னுடைய சீடர்களுக்கு அவர் அருளிய இறுதி சொற்கள் என்ன? “பிக்குகளே! நான் உங்களிடம் அழுத்தமாக கூறுவது இதுதான், மனிதர்களின் அதிகாரத்திற்கான விழைவு களையப்படவேண்டும். உங்கள் மீட்சிக்கான முயற்சியில் பெரும் கவனத்துடன் இருக்கவேண்டும்.” என்று கூறினார். 101. புத்தர், அதற்குமுன் இளவரசர் சித்தார்த்தன் என வாழ்ந்த இவரின் இருப்புக்கான வரலாற்று ஆதாரம் உள்ளதா? அவரின் இருப்பு வேறெந்த வரலாற்று மனிதபாத்திரத்தை விடவும் மிக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 102. சில ஆதாரங்களை கூறுங்கள்? அவரை நெருக்கமாக அறிந்தவர்களின் எழுத்துபூர்வ ஆதாரங்கள் உள்ளன. அவரது காலகட்டம் சார்ந்த கதைகளில் குறிப்பிடப்படும் ஊர்கள் மற்றும் எஞ்சிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவரது காலத்திற்கு நெருக்கமாக வாழ்ந்த மன்னர்கள் அவரின் நினைவாக பாறைகளின் செதுக்கிய கல்வெட்டுகள், நிறுவிய ஸ்தம்பங்கள் மற்றும் ஸ்தூபிகள் ஆகியவற்றைக் கொண்டு இவரின் வாழ்க்கை பற்றிய கதையை உறுதிசெய்ய முடிகிறது. அவர் நிறுவிய சங்கத்தின் அறுபடாத தொடர்ச்சி. மற்றும் அங்கிருந்தவர்கள் அவரது வாழ்க்கை பற்றிய நிஜ தகவல்களை தொடக்கம்முதல் தலைமுறை தலைமுறையாக பேணி வந்துள்ளனர். அவர் இறந்த அதே ஆண்டில் பல இடங்களில் சங்கத்தின் மகாசபைகளும் கூடுகைகளும் நிகழ்ந்துள்ளன. அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவை அதன் நிறுவனரின் உண்மையான போதனைகளை உறுதிசெய்வதற்காக நிகழ்ந்தன. உறுதிசெய்யப்பட்ட போதனைகளை ஆசிரியரிடம் இருந்து மாணவருக்கு கடத்தப்படுகிறது. இது இன்றளவும் நிகழ்ந்து வருகிறது. அவரின் எரியூட்டத்திற்கு பிறகு எஞ்சிய அவரது உடல் பாகங்கள் எட்டு அரசர்களால் பங்கிடப்பட்டு ஒவ்வொன்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் ஸ்தூபங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அரசன் அஜாத சத்ரு தனக்கு கொடுக்கப்பட பாகத்தை ராஜகீரில் அடக்கம் செய்து அதன்மீது ஸ்தூபம் நிறுவியுள்ளார். இரண்டு நூற்றாண்டுகள் முடிவதற்குள் அப்பாகம் பேரரசர் அசோகரால் மீண்டும் எடுக்கப்பட்டு அவரது ராஜ்ஜியம் முழுதும் பகிரப்பட்டது. தொடக்கம் முதலே அது பாடலிபுத்திர அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆகவே அந்த உடல்பாகம் புத்தருடையதா இல்லையா என அறிந்துகொள்வதற்கான எல்லா வழிகளும் அசோகரிடம் இருந்தது. புத்தரின் பல சீடர்கள் அர்ஹத்தர்கள் ஆயினர். இதன்வழியாக அவர்கள் தங்கள் உயிர் ஆற்றலை கட்டுக்குள் வைத்திருந்தனர், ஆகவே அவர்கள் நீண்ட வயது வாழ்ந்திருக்க வேண்டும். எனவே புத்தரின் இறப்பிற்கு பிறகு அசோகரின் காலத்தில் புத்தரின் நேரடி சீடர் மரபு இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை மட்டுமே நீண்டிருக்கும். ஆகவே அசோகர் புத்தரின் வாழ்க்கை பற்றிய உண்மைகளை நேரடியாக அந்த சீடர்களிடமிருந்து அறிந்திருக்க முடியும். (இரண்டாம் மகாசபை கூட்டத்தில் ஆனந்தரின் இரு சீடர்கள் இருந்தனர், அவர்களுக்கு நூறுவயது இருந்திருக்கலாம். அசோகரின் சபையில் அவர்களின் மாணவர்கள் இருந்தனர்.) மஹாவம்சம் சிங்களர்களின் பழம்பெரும் வரலாற்று பதிவு நூல். நன்கு ஏற்கப்பட்ட நூல். இது அரசன் வினயாவின் ஆட்சிகாலம் வரை சிங்கள வரலாற்றை பதிவுசெய்துள்ளது - (பொ.மு 543), இது கிட்டத்தட்ட புத்தரின் காலம். இதில் புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் பற்றி குறிப்புகள், பேரரசர் அசோகர் பற்றிய குறிப்புகள் மற்றும் பௌத்த வரலாற்றில் அறியப்பட்ட அணைந்து ஆட்சியாளர்களின் குறிப்புகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. 103. எந்தெந்த பெயர்களில் புத்தர் அழைக்கப்படுகிறார்? சாக்யமுனி (சாக்கிய முனிவர்), சாக்யசிம்ஹம் (சாக்கிய சிம்மம்), சுகதர் (ஆனந்தமானவர்), சத்த்தர் (ஆசிரியர்), ஜினர் (வென்றவர்), பகவத் (புனிதமானவர்), லோகநாதர் (உலகத்தின் அரசர்), சர்வஞ்யர் (சர்வமும் ஆன ஒருவர்), தர்மராஜர் (தர்மத்தின் அரசர்), ததாகதர் (மகத்தானவார்) போன்று, இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அடிக்குறிப்பு: மதம் (religion) என்ற சொல்லை பௌத்தத்திற்கு பொருத்துவது சரியானது அல்ல. ஏனென்றால் அது மதம் அல்ல. அறதத்துவம், இதை நாம் பிறகு பார்க்கவிருக்கிறோம். பொதுவான பயன்பாட்டில், ஒரு குறிப்பிட்ட அற கொள்கையை பின்பற்றும் மக்களைக் கொண்ட குழுக்களுக்கு அச்சொல் பொருத்தப்படும். ஆனால் லத்தீன் வேரைக்கொண்ட ’religion’ என்ற சொல்லை ஐரோப்பியர்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி சிங்கள பௌத்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். சிங்கள பௌத்தர்களிடம் கிறிஸ்துவத்தில் இருக்கும் ‘பந்தம்’ (binding) போன்ற எந்த கருத்துக்களும் இல்லை. பந்தம் என்றால் ’இறைவனிடத்தில் தான் சரணடைவது’, அல்லது ’இறைவனிடம் சேர்வது’. சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கும் பௌத்தம் மற்றும் புத்தருக்குமான தங்களது உறவை ’ஆகமா’ என குறிப்பிடுகின்றனர். இது சம்ஸ்க்ருத சொல், ‘அணுகுதல்’ அல்லது ’வருதல்’ என்று பொருள். ’புத்தர்’ என்பதற்கு ஞானம் அடைந்தவர் என்று பொருள். இந்த இரண்டு சொற்களின் கூட்டுச்சொல் புத்தாகமா, இந்த சொல்லால்தான் அவர்கள் பௌத்தத்தைக் குறிப்பிடுகின்றனர். இது ‘ஞானத்தை அணுகுதல்’ அல்லது ‘ஞானத்தை நோக்கி வருதல்’ என்ற அர்த்தத்தை கொண்டிருக்கலாம், அல்லது ‘சாக்கியமுனி’ என்ற கோட்பாட்டில் இருந்து வந்திருக்கலாம். கிறிஸ்துவ சமயப்பரப்பாளர்கள் ஏற்கனவே இருந்த சொல் ‘ஆகமா’-வை ‘religion’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக கையாண்டனர். கிறிஸ்துவத்தை ’கிறிஸ்டியனாகமா’ என எழுதினர். இது கிறிஸ்டியனிபந்தனா என ஆகியது. பந்தனா என்ற சம்ஸ்கிருத சொல் சொற்பிறப்பியலின் (etymology) படி religion என்ற சொல்லுக்கு இணையானது. பௌத்தர்களுக்கு ’விபாஜவாதி’ என்ற பெயருண்டு, இதற்கு பகுத்து-அறிபவன் என்று பொருள். அவர்களுக்கு ’அத்வயவாதி’ என்ற பெயரும் உண்டு. இந்த விளக்கம் பொதுவாசகர்களுக்காக அன்றாடதளத்தில் பயன்படுத்தப்படும் ‘மதம்’ (religion) என்ற சொல்லை பௌத்த தத்துவம் பற்றி பேசும் போதும் பயன்படுத்துவதற்கு எதிராகவே அளிக்கிறேன். ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/04/buddhist catechism-tamil.html
-
தமிழ்ப் பொது வேட்பாளர் : சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு - நிலாந்தன்
தமிழ்ப் பொது வேட்பாளர் : சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு - நிலாந்தன் கடந்த மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் வாடிவீட்டு விடுதியில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் கூடிக் கதைத்தன. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது என்று மேற்படி சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அது ஒரு முக்கியமான சிவில் சமூகச் சந்திப்பு. காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நிகழ்ந்த அச்சந்திப்பில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த 32 சிவில் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அமைப்புகளைச் சாராத செயற்பாட்டாளர்களுமாக மொத்தம் 46 பேர் பங்கு பற்றினார்கள். மதத் தலைவர்கள், கருத்துருவாக்கிகள், ஏற்கனவே பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்திய “மக்கள் மனு” என்ற சிவில் அமைப்பு, வெளிநாட்டுத் தூதரகங்களோடான சந்திப்புகளில் தொடர்ச்சியாக தமிழ் நோக்கு நிலையை வெளிப்படுத்தும் “தமிழ் சிவில் சமூக அமையம்” உள்ளிட்ட பலமான சிவில் அமைப்புகள். வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கான அமைப்பு, அரசியல் கைதிகளுக்கான அமைப்பாகிய “குரலற்றவர்களின் குரல்” அமைப்பு, வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவ அமைப்புகள், மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்காகப் போராடும் அமைப்பு,தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக இயங்கும் செயற்பாட்டு அமைப்புக்கள்… முதலாக பல்வேறு வகைப்பட்ட அமைப்புக்கள் அச்சந்திப்பில் பங்குபற்றின. மிகக்குறிப்பாக “பொங்கு தமிழ்” எழுச்சியின் முக்கியஸ்தர்கள், ”எழுக தமிழ்” எழுச்சிக்குப் பின்னால் இருந்து உழைத்தவர்கள், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான” அமைப்பின் இணைத் தலைவர்கள் என்று, தமிழ்ப் பரப்பில் நிகழ்ந்த மூன்று எழுச்சிகளின் பின்னால் நின்று உழைத்த பிரதிநிதிகளும் அங்கே வந்திருந்தார்கள் என்பது ஒரு சிறப்பம்சம். இம்மூன்று மக்கள் எழுச்சி அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஒரு சந்திப்பில் ஒன்றுகூடியமை என்பது கடந்த 15 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை வருமாறு…. “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் 30/௦4/2024 அன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர். 1.-தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது. 2-ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது. 3.-அதற்கு அமைய ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது. 4-அதற்காக சிவில் சமூகமும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது. 5.-தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்காலக் கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது..” இவ்வாறு சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் தங்களுக்கு இடையே ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்தபின்,அடுத்த கட்டமாக அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு பொது கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் பொருட்டு கட்சிகளோடு உரையாடுவதற்கு என்று ஒரு குழு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்பானது சிவில் சமூகங்களையும் அரசியல் கட்சிகளையும் கொண்டதாக அமையும். பொதுக் கட்டமைப்பு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கு தேவையான குழுக்களை உருவாக்கும். ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு உபகுழு,தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான உபகுழு, நிதி விவகாரங்களை கையாள்வதற்கான உபகுழு, பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக் கொள்ளாத ஏனைய தரப்புக்குளோடு உரையாடுவதற்கும் தென்னிலங்கையில் உள்ள கட்சிகளோடு உரையாடுவதற்கும் ஓர் உபகுழு.. என்று வெவ்வேறு உபகுழுக்கள் உருவாக்கப்படும். அதாவது ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாக கட்டமைப்பு ரீதியாக சிந்திக்கப்படுகின்றது என்று பொருள். தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப் பொது நிலைபாடு எனப்படுவது பிரயோக நிலையில் தமிழ் ஐக்கியம்தான். தமிழ் ஐக்கியம் என்பது இங்கு தமிழ் கட்சிகளின் ஐக்கியம் என்பதைக் கடந்து கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் இணைந்த ஒரு கட்டமைப்பாகச் சிந்திக்கப்படுகின்றது. கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்ந்த எல்லா எழுச்சிகளும் சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்புக் கூடாகவே சிந்திக்கப்பட்டது. எழுத தமிழாகட்டும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பெரெழுச்சியாகட்டும் ஏனைய எந்த ஒரு பெரிய மக்கள் எழுச்சியாக இருந்தாலும், அங்கே தனியாகக் கட்சிகள் அதனை முன்னெடுக்கவில்லை. தனிய சிவில் சமூகங்களும் அதனை முன்னெடுக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் வெற்றி பெற்ற எல்லாப் பேரெழுச்சிகளும் சிவில் சமூகங்களும் அரசியல் சமூகமும் இணைந்து பெற்ற வெற்றிகள்தான். அப்படித்தான் கடந்த 15 ஆண்டுகளுக்குள் ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதம், பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட 13 அம்ச ஆவணம், தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கூட்டுக் கடிதம்..உள்ளிட்ட பெரும்பாலான முயற்சிகள் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து முன்னெடுத்தவைதான். இதை இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால், கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்த போதுதான் வெற்றிகள் கிடைத்தன. அந்த அடிப்படையில்தான் இப்பொழுதும் அவ்வாறான ஒரு வெற்றியை நோக்கி சிந்திக்கப்படுகின்றது. இந்தக் கட்டமைப்பு வெற்றிபெறுமாக இருந்தால் இது ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு கட்டமைப்பு என்பதைக் கடந்து தமிழ்ப்பொது விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு பொருத்தமான அரசியல் தளமாக மாற்றப்பட வேண்டும் என்ற விருப்பமும் மேற்படி கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. அதன்படி எதிர்காலத்தில் தமிழ் அரசியலை தீர்மானிப்பதற்கு தேவையான ஒரு பலமான மக்கள் அமைப்புக்குரிய பொருத்தமான கட்டமைப்பாக அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பேரவை தோன்றியது. தமிழ் மரபுரிமைப் பேரவை தோன்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சி இயக்கம் தோன்றியது. ஆனால் இவை எவையுமே அவற்றின் அடுத்தடுத்த கட்டக் கூர்ப்புக்குப் போகவில்லை. இவை எவையுமே தேர்தல்மைய அரசியலைக் கடந்த ஒரு வெகுசன அரசியலை முன்னெடுக்கும் பொருத்தமான ஏற்பாடுகளாகக் கூர்ப்படையவில்லை. இந்த மூன்று கட்டமைப்புகளின் எழுச்சியில் இருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் அல்லது போதாமைகளில் இருந்தும் கற்றுக்கொண்டு ஒரு புதிய பொருத்தமான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முதல் அடிவைப்பாக மேற்படி கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பை எடுத்துக் கொள்ளலாமா? கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சி அரசியல் எனப்படுவது வளர்ச்சியாக இல்லை. தேய்மானமாகத்தான் இருக்கின்றது. பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறு கூட்டுகள் உருவாகி வருகின்றன.கூட்டுக்கள் உடைந்துடைந்து உருவாகும் தனிக் கட்சிகளும் கூட பின்நாளில் தங்களுக்குள் உடைகின்றன. அதாவது கடந்த 15 ஆண்டு கால கட்சி அரசியல் எனப்படுவது, தேயும் அல்லது சிதறும் ஒரு போக்காகத்தான் காணப்படுகின்றது. வளரும் ஒரு போக்காக அல்லது திரளும் ஒரு போக்காக இல்லை. மக்கள் இயக்கங்களும் தோன்றி மறைகின்றன. தொடர்ச்சியாக அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் போகவில்லை. எனவே இந்தப் பாரதூரமான வெற்றிடத்தின் பின்னணியில் சிவில் சமூகங்களும் கட்சிகளும் இணைத்து ஒரு புதிய வளர்ச்சிக்குப் போகவேண்டிய ஒரு தேவை வலிமையாக மேலெழுகின்றது. ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்தி அவ்வாறான ஒரு கட்டமைப்பின் கருநிலைக் கட்டமைப்பை உருவாக்கினால் அது எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப ஒரு பொருத்தமான வளர்ச்சியை அடையும் என்ற எதிர்பார்ப்பு சிவில் சமூகங்களிடம் காணப்படுகின்றது. கடந்த 15 ஆண்டுகளிலும் பெரிய கட்சிகள் பலமாக இருக்கும் பொழுது அல்லது பெரிய கூட்டு பலமாக இருக்கும் பொழுது சிவில் சமூகங்களை மதிப்பது குறைவு. 2014 ஆம் ஆண்டு மன்னாரில் நடந்த சந்திப்பு ஒன்றில் சம்பந்தர் அப்போதிருந்த மறைந்த ஆயர் ராயப்பு ஜோசஃப் அவர்களை நோக்கி சொன்ன பதில் அதைத்தான் காட்டுகிறது. ”பிஷப் நீங்கள் சொல்லுவதை சொல்லுங்கோ நாங்கள்தான் முடிவெடுக்கிறது” என்று சம்பந்தர் திமிராகச் சொன்னார். ஆனால் 2020ல் கூட்டமைப்பின் ஏகபோகம் உடைந்து அதன் ஆசனங்கள் வெளியே போனபோது கூட்டமைப்பு இறங்கி வந்தது. அதன் விளைவுதான் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு கூட்டுக் கடிதம். அதாவது கட்சிகள் பலமாக இருக்கும் போது அல்லது கூட்டுக்கள் பலமாக இருக்கும் பொழுது அவர்கள் சிவில் சமூகங்களை மதிப்பதில்லை. ஆனால் கட்சிகள் பலவீனமடையும் போது சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீக தலையீட்டைச் செய்யக் கூடியதாக இருக்கின்றது. அப்படி ஒரு கட்டம் இப்பொழுது தமிழ் அரசியலில் ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் எனப்படுவது அரசாங்கத்தால் ஏற்படுத்தித் தரப்பட்ட ஒரு வாய்ப்பு. அதைத் தமிழ்த் தரப்பு தனது நோக்கு நிலையில் இருந்து கையாள முடியும். இதை கவித்துவமாகச் சொன்னால், அரசாங்கம் திறந்து விட்டிருக்கும் ஒரு மைதானத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய விளையாட்டை விளையாடுவது. https://www.nillanthan.com/6743/
-
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு! பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தத்துக்கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ! ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1700 குழந்தைகள் த தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார். கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் கொடுக்கும் போது, அது குறித்த தகவலை பதிவாளர் துறைக்கு தெரிவிக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் போன்ற சமூகப் பிரச்சனைகளே குழந்தைகளை பிறரிடம் தத்து கொடுப்பது அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் நாட்டில் கருக்கலைப்புச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/300915
-
போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது !
போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது ! ShanaMay 5, 2024 போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன்வந்திருக்கிறார். இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். போகம்பர சிறைச்சாலை 2014ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. மேலும், அந்த அதிகார சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சிறைச்சாலையின் பிரதான கட்டடம் காலனித்துவ கட்டடக்கலையை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கு திறந்த மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் வளாகத்தின் பொருளாதார மதிப்பை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் இ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க தெரிவித்தார். தற்போதும் சிறைச்சுவர் மற்றும் பிரதான கட்டடம் தவிர மற்ற பகுதிகளின் அபிவிருத்திக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை வைத்தியசாலை கட்டடத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. 2018ஆம் ஆண்டு வரை நகர அபிவிருத்தி அதிகார சபையானது சிறைச்சாலையின் முன்பகுதியை நன்கு பாதுகாக்கப்பட்ட பழைய கட்டடத்துடன் கூடிய பூங்காவாக உருவாக்கியுள்ளது. சிறைச்சாலையின் பிரதான வர்த்தகத் தொகுதி, உணவுக்கூடம், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உள்ளிட்ட வர்த்தகக் கட்டடமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை வளாகத்தின் கட்டடக்கலை மற்றும் வரலாற்று விழுமியங்களைப் பாதுகாத்து, அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார். இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கை முதலீட்டு சபையும் இணைந்து தனியார் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்துள்ளன. இது தவிர முதலீட்டாளர் தெரிவு செய்யப்பட்டு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். போகம்பர சிறைச்சாலை 138 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி மூடப்பட்டு அதன் செயற்பாடுகள் பல்லேகலையில் உள்ள புதிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது. போகம்பர சிறைச்சாலை தற்போது பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை கட்டப்படுவதற்கு முன்னர், இலங்கை பிரித்தானியர்களின் காலனியாக மாறிய பின்னர், தற்போதைய கண்டி மத்திய சந்தைக்கு முன்னால் அமைந்துள்ள ஹெங்மேன்ஸ் ஹில் (Hangmans Hill) என்ற மலைப்பாதையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1876ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போகம்பறை ஏரியை நிரப்பி சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது. அரசாங்க திணைக்களத்தின் மூலம் அப்போது சிறைச்சாலை மற்றும் காவல் துறையின் பிரதான ஆணையாளராக இருந்த என்.ஆர். சோண்டர்ஸின் மேற்பார்வையில் இருந்தது. இந்த சிறைச்சாலை 92 கைதிகளின் உழைப்பில் 4 இலட்சம் ரூபாய் நிதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு சிறைச்சாலைகளில் போகம்பறர சிறைச்சாலையும் ஒன்று. பரப்பளவு மற்றும் பாதுகாப்பில் இலங்கையின் இரண்டாவது இடத்தில் இருக்கும் போகம்பர சிறைச்சாலையில் ஒரே நேரத்தில் மூவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம். 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கிலாந்து எடிம்பரோ ராணி விக்டோரியாவின் கிரீடத்தின் வடிவில், பிரான்சின் பரிஸ் பஸ்டில் கோட்டையைப் போன்றே கட்டப்பட்டது. இது 556 அடி நீளமும், 144 அடி அகலமும், 102 அடி உயரமும் கொண்டது. இது 408 கைதிகளுக்குப் போதுமான 1080 கன அடி (10×12×9) கொண்ட 328 அறைகளைக் கொண்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை ஒரு கட்டடக்கலை அடையாளமாகும். இது ஆசியாவிலேயே மிக நீளமான கட்டடமாகும். இங்கு 1876 முதல் 1975 வரை 524 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் நாட்டையே உலுக்கிய முப்பதாவது கொலைக் குற்றவாளிகளான டபிள்யூ.ஜி.ரிச்சர்ட் மற்றும் டி.எம்.ஜயவர்தன ஆகிய இரு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர், போகம்பர சிறைச்சாலையில் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. எஹலேபொல குமாரிஹாமி நீரில் மூழ்கி சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடமும் இந்த சிறை வளாகத்திலேயே உள்ளது. மேலும், உத்துவன்கன்தே சரதியல், மரு சிரா, கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி சில்வா போன்ற பிரபலங்களும் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர். இதே போன்று உதுவன்கன்தே சரதியல், மரு சிறா போன்றவர்களும் கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி. சில்வா போன்ற பிரபல்யமான மனிதர்களும் இங்கு சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சிறைச்சாலையாக செயற்படுகின்ற காலத்தில் அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, புளொக் கல் உற்பத்தி, பூ வளர்த்தல், சவர்க்காரம் செய்தல் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில்களும் அங்கு சிறைச்சாலையின் நலன்புரிப் பிரிவால் இங்கு செயற்படுத்தப்பட்டிருந்தன. https://www.battinews.com/2024/05/blog-post_32.html
-
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் !
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் ! ShanaMay 5, 2024 பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அது சரியானதும் நியாயமானதுமாக நான் கருதவில்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சினைகளாகவே கடைப்பிடித்து வந்தனர். அவர்கள் தமிழ் சமூகத்துக்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் உள்நோக்கம் கொண்ட சுயஇலாபம் கொண்டதாகும். அது ஜனாதிபதி முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் எமது மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி, அதன் பின்பு ஓர் உத்தரவாதத்தினை ஏற்படுத்திக்கொள்ள நாம் அவர்களை இணங்க வைக்க வேண்டும். பொது வேட்பாளர் என்பது ஒரு பொய்த்தனம். பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார். https://www.battinews.com/2024/05/blog-post_76.html
-
மே 5: கார்ல் மார்க்ஸ் பிறந்ததினம் - மார்க்சின் கம்யூனிசம், கற்பனை அல்ல!
மார்க்சின் கம்யூனிசம், கற்பனை அல்ல! - என்.குணசேகரன் மே 5: கார்ல் மார்க்ஸ் பிறந்ததினம் மனித சமூக வளர்ச்சி பற்றிய காரல் மார்க்சின் பார்வை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமத்துவம் நிலைப்பெற்று, மனிதம் மாபெரும் வளர்ச்சி கண்டு சிகரம் தொடும் நிலையை காரல் மார்க்ஸ் சிந்தித்தார். மற்ற ஞானிகள் மேலான சமூகம் பற்றி மாபெரும் கனவுகள் கண்டனர். ஆனால், மார்க்ஸ் அறிவியல் நடைமுறையுடன் இணைத்து தனது சிந்தனைகளை பதிவு செய்தார். ஒரு தனிநபரின் சுதந்திரமான வளர்ச்சி மட்டுமல்ல; சமூக மாந்தர்கள் அனைவரின் சுதந்திரமான வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் மார்க்ஸ் எழுதினார்.சோசலிச சமூகத்தின் கோட்பாடாக மார்க்ஸ் இதனை கருதினார். மார்க்ஸின் சமூக சித்திரம் “கோதா திட்ட விமர்சனம்” நூலில் கம்யூனிஸ்ட் சமுதாயம் எனும் உயர்ந்த கட்டத்தைப் பற்றி கீழ்க்கண்ட வகையில் வரையறுத்தார் மார்க்ஸ். தனிநபரை அடிமையாக்கும் வேலைப் பிரிவினை ஒழிய வேண்டும். மூளை உழைப்புக்கும், உடலுழைப்புக்குமான முரண்கள் அனைத்தும் ஒழிய வேண்டும். எந்த உழைப்பாக இருந்தாலும் அதன் உண்மையான மதிப்பின் பலன் உழைப்பவர்களுக்கு கிட்ட ேண்டும். உழைப்பு என்பது தனது வாழ்க்கைத் தேவைக்காக கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய, சலிப்பான ஒன்று எனும் நிலை மாறி, உழைப்பது, மனிதர்களின் முதன்மை விருப்பமாக மாற வேண்டும். தனி மனிதரின் பன்முக வளர்ச்சியால் உற்பத்தி சக்திகள் மாபெரும் வளர்ச்சி கண்டு, பொதுவான செல்வம் வெள்ளமாக பெருகி வரும் நிலை ஏற்படும். இந்த நிலையில்தான் முதலாளித்துவ சமூக உரிமைகள் அமைத்து வைத்திருந்த குறுகிய எல்லைகளை முற்றாக கடந்து, சமூகம் மகத்தான ஒரு பதாகையைத் தாங்கி நடைபோடும். ‘ஒவ்வொருவர் சக்திக்கேற்ற வேலை; ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்தும் அனைவருக்கும் கிட்டும்’ என்ற பதாகை உயரும். மேற்கண்ட மார்க்சின் மகத்தான சமூகச் சித்திரம், மார்க்சின் கற்பனையில் உதித்தது அல்ல. இன்றைய முதலாளித்துவத்தில் உள்ளடங்கிய முரண்பாடுகளின் இயக்கம், அவை எங்கு சென்று முடிவடையும் என்பதைக் கண்டறிந்து, மார்க்ஸ் வந்தடைந்த அறிவியல் முடிவு தான் கம்யூனிசம். முதலாளித்துவம் கருணை காட்டுமா? முதலாளித்துவத்தை அகற்றுவது பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். முதலாளித்துவத்தின் சில குறைகளை சரி செய்தால் போதும்; அது மனிதாபிமான முதலாளித்துவமாக மாறிடும் என்று பலர் திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சர்வதேச நிதி நிறுவனம் உலக அளவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வை புள்ளி விவரங்களோடு விளக்கியது. ஏழை நாடுகள் முன்னேறிய நாடுகளை விட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன என்பதை ஐ.எம்.எப் எடுத்துக்காட்டியது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று ஐ.எம்.எப் நிறுவனமும் உலக வங்கியும் “அறிவுரை”வழங்கின. இது சாத்தியமானதா? ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை ஒட்டச் சுரண்டி வரும் அமெரிக்காவும்,மற்ற ஏகாதிபத்திய நாடுகளும் கருணையுடன் நடந்து கொள்வார்களா? இது ஒரு புறமிருக்க, சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் வழங்கல் கொள்கை எப்படிப்பட்டது? நாடுகள் தங்களது நலத்திட்டங்களை குறைத்து வெட்ட வேண்டும்; பணக்காரர்களுக்கு வரியை குறைக்க வேண்டும்; சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கடும் நிபந்தனைகள் விதித்து வளரும் நாடுகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தது இந்த நிறுவனங்கள் தான். முதலாளித்துவம் இரக்க குணத்தோடு நடந்து கொள்ளும் சமூக அமைப்பாக எக்காலத்திலும் இருக்க முடியாது. இதையும் அன்றே மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதியுள்ளனர். ஏங்கல்ஸ் தனது 24 வயதில் எழுதிய “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்க நிலை” என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்: “……….. ஒரு மையமான உண்மை மேலும் மேலும் தெளிவாகி வருகின்றது. தொழிலாளி வர்க்கத்தின் மோசமான நிலைமைக்கான காரணங்களை சிறிய குறைபாடுகளில் தேடுவது சரியல்ல; முதலாளித்துவ முறைதான் அடிப்படையான காரணம்”. மார்க்சின் கண்டுபிடிப்பு அன்றைய இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் வாழ்நிலையை ஆராய்ந்து மேற்கண்ட முடிவுக்கு ஏங்கல்ஸ் வருகிறார். ஏங்கல்ஸ் தொடர்கிறார்: “… ஒரு தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை குறிப்பிட்ட தினக்கூலித் தொகைக்கு முதலாளியிடம் விற்கின்றார். ஒரு சில மணி நேர உழைப்பில் அந்த ஊதியத்தின் மதிப்பை அவர் உற்பத்தி செய்து விடுகிறார். ஆனால் அவர் முதலாளியோடு செய்து கொண்ட ஒப்பந்தம் என்பது, மேலும் குறிப்பிட்ட மணி நேரம் வேலை செய்து தனது வேலை நாளை அவர் முடிக்க வேண்டும்.” “இவ்வாறு தொழிலாளி உழைக்கும் கூடுதல் மணி நேர உழைப்பு, உண்மையில் தொழிலாளியின் உபரி உழைப்பு. இதற்கான மதிப்பிற்கு,- அதாவது உபரி மதிப்பிற்கு,-முதலாளி எதுவும் செலவு செய்வதில்லை; எனினும் இந்த உபரி மதிப்பு அவருடைய பாக்கெ ட்டிற்கு செல்கி றது…” இதுவே முதலாளி த்துவ சுரண்டலின் அடிப்படை என்று மார்க்ஸ் கண்டுபிடித்தார். இதுதான் உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்ட முதலாளிகள் ஒருபுறம்; தனது உழைப்புச் சக்தியை விற்றுப் பிழைக்கும் நிலையில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளிகள் மறுபுறம் என சமூகம் பிளவுபடக் காரணம். இந்த உபரி மதிப்புக் கோட்பாடு, மார்க்சின் மகத்தான கண்டுபிடிப்பு. ஒரு சமூகத்தில் பல்வேறு மக்கள் பிரிவுகள் இருக்கலாம். பொருளுற்பத்தி மீதான கட்டுப்பாடு எந்த வர்க்கங்களிடம் உள்ளது என்பதே முக்கிய பிரச்சனை. உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டும் உடைமை வர்க்கங்களுக்கும், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கான முரண்பாடே சமூகத்தின் பிரதான முரண்பாடு. இதனால் எழுவதுதான் வர்க்கப் போராட்டம். மார்க்ஸ் தனது “தத்துவத்தின் வறுமை’ நூலில் தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்கிறார். இந்த மாற்றத்தோடு இணைந்ததாக தொழிலாளர்களின் சிந்தனையில் ஏற்படும் மாற்றங்களை விவாதிக்கிறார். ஒரே வேலைத்தளங்களில் கூடி, உழைப்பைச் செலுத்துவதால், தொழிலாளர்கள் ஒரே மாதிரியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் முதலாளிகளிடம் ஒரே மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, தொழிலாளர் ஒற்றுமை பலம் பெறுவதும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் உருவாவதும் நிகழ்கின்றன. இந்த போராட்டங்களும் கூட்டான நடவடிக்கைகளும் தொழிலாளர்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துகின்றன.இந்தக் கட்டத்தில்தான் தொழிலாளர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய அரசியல் பாத்திரத்தை உணர்கின்றனர். பாட்டாளி மக்கள் வர்க்க உணர்வு பெறுவது ஏக காலத்தில் இரண்டு நிகழ்வுகளைக் கொண்டது. ஒன்று, தாங்கள் உழைப்பை செலுத்தினாலும், உற்பத்தியில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்கிற உண்மை அவர்களிடம் “அந்நியமயமாதல்” உணர்வினை ஏற்படுத்துகிறது. அதனோடு இணைந்தாக, அந்நியமயமாதலை முறியடிப்பதற்கு, முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற சிந்தனைக்கு தொழிலாளர்கள் வந்து சேருகின்றனர். இதுவே வர்க்க உணர்வு (Class consciousness). இந்த வர்க்க உணர்வு வலுப்பெறுவது சமூகப் புரட்சிக்கு அடிப்படை. இதுவே மார்க்சின் வரலாற்று தத்துவப் பார்வை; சமூக மாற்றத்திற்கான மார்க்சின் தத்துவம். அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிர்ப்பு மார்க்சின் சமூக மாற்றப் பார்வையின் மையமான கருத்தாக்கம் வர்க்கப் போராட்டம். சமூக உற்பத்தியில் வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் காரணமாக வேறுபட்ட நலன்கள் கொண்ட வர்க்கங்களுக்குள் மோதல் உருவாகிறது. இந்த வர்க்கப் பகைமையும் முரண்பாடுகளும்தான் ஒரு சமூகத்தில் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது. மனிதர்களிடையே வர்க்க வேறுபாடுகள் மட்டுமல்லாது வேறு பல வேறுபாடுகள் இருக்கலாம். இவற்றில் மோதல்களும் எழலாம். குறிப்பிட்ட மதம், சாதி, இனம், மொழி சார்ந்த பிரிவினர் இதர பிரிவினர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அதற்கு எதிராகப் போராட்டம் எழலாம். மேலாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களும் அவசியமானவை. ஆனால் இத்தகைய போராட்டங்கள் முதலாளித்துவ முறையை ஒழிக்கும் போராட்டத்துடன் இணையவில்லை என்றால் மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் நிரந்தரமான முடிவுக்கு வராது. அத்துடன், வர்க்க அடிப்படையிலான ஒற்றுமையும் ஏற்படாது; சமூக மாற்றமும் நிகழ்ந்திடாது. அனைத்து ஒடுக்குமுறைகளும் ஒழிய வேண்டுமெனப் போராடுவது மார்க்சியம்.ஆனால், ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான செயல்பாடுகள் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான நடைமுறையுடன் இணைந்ததாக முன்னெடுத்துச் செல்வதுதான் மார்க்சியத்தின் சிறப்பு. எனவேதான், சுரண்டப்படும் வர்க்கங்களை பொருளாதாரம்,அரசியல், சித்தாந்தம், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் திரட்டும் பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிய மூலவர்கள் வலியுறுத்துகின்றனர். இதுவே வர்க்க உணர்வை வலுப்படுத்தி புரட்சிகர மாற்றத்திற்கு வழிவகுக்கும். “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் “வர்க்கப் போராட்டம்சாரம்சத்தில் ஒரு அரசியல் போராட்டமே” என மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிடுகின்றனர். ‘சமூக இயக்கத்தில் வர்க்கத்தின் பங்கு உள்ளது என்பது சரிதான்.. அதே நேரத்தில் மற்ற காரணிகளும் சமமாக பங்கு வகிக்கின்றன’ என்ற பாணியில் பலர் வாதிடுவதுண்டு. வர்க்கத்தின் பாத்திரத்தை அங்கீகரிப்பது அவரவர் விருப்பம் சார்ந்ததல்ல. சமூக மாற்றங்களின் அச்சாணியாக வர்க்க உறவுகளும் வர்க்கப் போராட்டங்களும் இருந்து வந்துள்ளன என்பது எதார்த்தமான வரலாற்று உண்மை. அதேபோன்று சோசலிச மாற்றம் என்ற இலட்சியத்தை நோக்கி பயணப்பட வேண்டுமெனில் வர்க்க கருத்தியல் மிக முக்கியமானதும், அடிப்படையானதும் ஆகும். சமூக மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியமான பங்கினை மார்க்ஸ் வலியுறுத்துவதற்கு காரணம் என்ன? அந்த வர்க்கம் அதிக அளவில் ஒடுக்கப்பட்டும் சுரண்டலுக்கு ஆளாகியும் வருவதால் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கம் மூலதனக் குவியலை வலுப்படுத்துவதில் முக்கியமான பங்கினை வகிக்கிறது. உபரி மதிப்பை ஏற்படுத்தி முதலாளிகளுக்கு மூலதனக் குவியலுக்கு வழிவகுப்பது தொழிலாளர்களின் உபரி உழைப்பு. இதனை அந்த வர்க்கம் உணர்ந்து வர்க்க உணர்வு பெறுகிறபோது அது புரட்சிகர ஆற்றல் கொண்ட வர்க்கமாக மாறுகிறது. ஆனால், தொழிலாளி வர்க்கம் மட்டுமே புரட்சியை முன்னெடுப்பது இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமில்லை; இதர சுரண்டப்படும் வர்க்கங்களையும் அணி திரட்ட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், இந்திய சமூகத்தின் வர்க்கக் கட்டமைப்பை துல்லியமாக ஆய்வு செய்கிறது. மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் வழிகாட்டிய ஆய்வுத் தடத்தில் நின்று, இந்திய வர்க்கங்களை கட்சித் திட்டம் ஆராய்ந்து நிர்ணயிப்புக்களை வரையறுத்துள்ளது. தொழிலாளி -விவசாயி வர்க்கக் கூட்டணியை மையமாகக் கொண்டு, இதர சுரண்டப்படும் வர்க்கங்களையும் திரட்டி, மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டியமைக்க கட்சித் திட்டம் வழிகாட்டுகிறது. வர்க்கங்களைத் திரட்டுவதே அன்றாடப் பணியாக இருக்க வேண்டும் என்பது மார்க்சின் போதனை. அதற்கு அவரது வாழ்க்கையே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அவரின் பிறந்த தினத்தில் “வர்க்கங்களை அணி திரட்டுவோம்” என்று மீண்டும் உறுதி மேற்கொள்வதே பொருத்தமானது! https://theekkathir.in/News/tamilnadu/மதுரை/marx's-communism-is-not-fiction
-
தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை
தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை adminMay 5, 2024 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் , வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்படுகின்றன. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அருகில் உள்ள வீட்டில் தூங்க சென்ற சமயம் வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர். அயல் வீட்டில் தூங்க சென்ற பெண்ணின் மகள் மறுநாள் வீட்டிற்கு சென்ற வேளை தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதேவேளை தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார். அது தொடர்பில் அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து , அயல் வீட்டார் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2024/202449/