Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழ்ப்பாணம் சென்ற உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் adminMay 14, 2024 உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி (Gerald Rebelli) மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக யாழ் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது யாழ் மாவட்ட பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் “Food for Assets ” செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மற்றும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வ.தர்சினி ஆகியோர் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2024/202846/
  2. 63 போட்டிகள் முடிந்துவிட்டன. CSK ஐத் தாண்டி RCB எப்படியாவது play-off க்கு போகுமா? இல்லையா?
  3. தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். திகதி: 12 May, 2024 12.05.2024 தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப்போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்டமக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள்- மே18 இன் பதினைந்தாம் ஆண்டு நிறைவில், வையகம்முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியோடுநினைவேந்திட தயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம்நின்று கொண்டிருக்கிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைக்கான மாபெரும் விடுதலைப்போராட்டமாகஎமது போராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும் பலஇலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கிவளர்த்தெடுத்த, தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுக்கனன்று தேசவிடுதலையை நோக்கிநகர்ந்துகொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசிற்குப்பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப உதவிகளைவழங்கியதன் காரணமாக, 2009 மே 18 இல் தமிழீழநடைமுறை அரசின் தேசிய இராணுவம் ஒரு தற்காலிகப்போரியல் பின்னடைவைச் சந்தித்தது. பல நாடுகளின்ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒரு பெருஞ்சமரின் பின்னடைவை, ஒரு பாரிய வெற்றியாகச் சிங்கள அரசுஇறுமாப்புடன் கொண்டாடியது. ஆனால், தமிழினத்தின்அசைவியக்கமும் பலமும் தேசியத்தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கோட்பாடுதான் என்பதை, சிறிலங்காவின் பேரினவாத அரசும் அதன்அடிவருடிகளும் கணிக்கத் தவறிவிட்டனர். உலகின் அசைவியக்கதில் சுயமாக உருவாகிய எதனையும்எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒருஇனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள்தன்னுள்ளே அடக்கி வைத்திருந்தபேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளேஉள்வாங்கி, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டதமிழினத்தின் வழிகாட்டியே தமிழீழத் தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஆகவே, அவர்இயல்பாகவே உருவாகிய தலைவர், உருவாக்கப்பட்டவர்அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும்அவர்தான். இந்த ஒப்புவமையற்ற தமிழீழ விடுதலைச்சிந்தனையை அழிக்கவேண்டுமாயின், தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு எனஅறிவித்து,விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச்சாவுமணி அடிக்க வேண்டும். இவ்வறிவிப்பின்ஊடாக,தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களைவழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம்இழந்து விட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில்பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச்சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இவையெல்லாம் சரிவரநடந்தேறினால், தேசியத்தலைவரின்சிந்தனைக்கேற்ப, மாவீரர்களின் உயிர்விதைகளால்அத்திவாரமிட்டு, மக்களின் அர்ப்பணிப்புக்களால்உறுதியாகக் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைப்போராட்டம், தன்னைத்தானே அழித்துவிடும்என எதிரிகள் கனவுகாண்கின்றனர். இதுதான்> எமதுஎதிரியான சிங்களப் பேரினவாதத்தின் தெளிவானநிகழ்ச்சிநிரலாகும். தமிழீழக் கோட்பாட்டை அழிக்கவல்ல, நுணுக்கமானஇப்புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மைவாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடையபூகோள, வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத்துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்தியவாதமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகிறது. இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்இயங்குவிசையையும் தளத்தையும் செல்நெறியையும்மடைமாற்றம் செய்வதற்காக, தேசியத்தலைவரின் குடும்பஅங்கத்தவர்கள் சார்ந்தும்; புதல்வி துவாரகா,அரசியல்தலைமைத்துவத்தை ஏற்றுச் சனநாயக ரீதியில்போராட்டத்தைக் கொண்டு நடாத்தப் போகிறார் எனவும்சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சிலநடவடிக்கைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் ஊடாகப் பலரிடம் நிதிதிரட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தக்குழுவின்அரசியல் கட்டுக்கதைகளைமுத்திரையிடுவதற்காக, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (WTCC) என்னும் புலம்பெயர் தேசத்தில் செயற்பாடற்றகாகித நடவடிக்கை அமைப்பொன்று,மக்கள் மத்தியில்குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்,மட்டுப்படுத்தப்பட்டசமூக ஊடக வெளிப்பாடுகளையும் செய்துவருகிறது. தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப்பாரம்பரியங்களையும் கட்டுக்கோப்புகளையும்சிதைத்து,தமிழீழ விடுதலைக்கோட்பாட்டைஅழித்து, தேசியத்தலைவரின் பெருமதிப்பைஇல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்துவருகின்றார்கள். அன்பார்ந்த மக்களே! ஒருபுறம், தமிழீழத் தேசியத்தலைவரின் புதல்வியின்வருகை என்னும் தமிழீழவிடுதலைப் போராட்டமரபுகளைத்தாண்டிய தமிழீழக் கோட்பாட்டுச் சிதைப்புநடவடிக்கை,மறுபுறம் தமிழீழத்தின் வாழும்சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என்னும்சொல்லாடலினுள் அடக்கி,விளக்கேற்றுதல் என்னும்நடவடிக்கை. இவ்விரண்டு நடவடிக்கைகளும் தமிழீழக்கோட்பாடு என்னும் தேசியத்தலைவரின் சிந்தனைமூலோபாயத்தை அழிப்பதற்காக, எதிரிகளினால்திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில்தயாரிக்கப்பட்டவையாகும். இந்நடவடிக்கைகள்,தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்தப் போகும்பின்னடைவுகளைவிளங்கிக்கொள்ளாமல்,உணர்வெழுச்சியினால்உந்தப்பட்டு சில தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள்மடைமாற்றப்பட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. ஆனால், தேசியத்தலைவரின் சிந்தனையானதுஇதிலிருந்து அவர்களை மீட்கும் எனத் திடமாகநம்புகிறோம். பேரன்புமிக்க எமது மக்களே ! காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டுஉருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை நாம்கண்டறிந்து, முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறானஉண்மைக்குப் புறப்பான கதையாடல்களைப்புறந்தள்ளி,இச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல்விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன்வேண்டிக்கொள்கின்றோம். காலநதியில் கரைந்து போகாத எமது விடுதலைப்பயணங்கள்,தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்என்னும் பேராளுமையின் சிந்தனையின்வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித்தொடர்ந்தும் பயணிக்கும். அது,எந்நிலையிலும் எதிரிகளின்சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின்சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள்காட்டிய வழித்தடத்தில், தமிழீழத் தேசியத்தலைவரின்ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன்வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும்போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோம். ``புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" அனைத்துலகத் தொடர்பகம். தமிழீழ விடுதலைப் புலிகள். https://www.thaarakam.com/news/1e76217f-f8c4-4ac6-8d5b-a3ff75860a06
  4. பாசிக்குடா கடற்கரையில் அநீதியான முறையில் பணம் அறவீடு Vhg மே 11, 2024 மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரை வளாகத்தில் அநீதியான முறையில் கட்டணம் அறவிடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளாகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கவும் மற்றும் குளிக்கவும் என பல்வேறு விடயங்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் தமது விடுமுறை நாட்களில் வருகை தருகின்றனர். இருப்பினும், குறித்த கடற்கரையை அடைவதற்கு இடிபாடுள்ள, குழியும் பள்ளமும் நிறைந்த, கரடுமுரடான பாதையொன்றே காணப்படுகின்றது. மேலும், கடற்கரையை சென்றடைவதற்குள் நான்கு மர்ம நபர்கள், பற்றுச்சீட்டு ஒன்றை வலுக்கட்டாயமாக கொடுத்து சுற்றுலாப் பயணிகள் இடமிருந்து பணம் பெறுவதாக கூறப்படுகின்றது. அதேநேரம், பற்றுச்சீட்டில் திகதி, வாகன இலக்கம் என எதுவும் இருக்காது எனவும் குறைந்த பட்சம் அதனை யார் தருகிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வ சீல் கையொப்பம் கூட இருக்காது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குறித்த பற்றுச்சீட்டில் மேலேயும், கீழேயும் "கோறளைப்பற்று பிரதேச சபை" என எழுதப்பட்டிருப்பதாகவும் வாகன பாதுகாப்போ, வாகன நிறுத்துமிட ஒழுங்கமைப்போ அல்லது வாகனத்தை எடுப்பதற்கான எவ்வித ஒத்துழைப்போ கட்டணம் அறவிடுபவர்களிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைப்பதில்லை. இந்நிலையில், குறித்த பற்றுச்சீட்டை வழங்குவது யார்? குறித்த கட்டணத்தை பயணிகளிடம் அறவிடுவற்கு இவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியது யார்? அறவிடப்படும் பணம் எங்கே செல்கின்றது? தனியார் ஒருவர் குறித்த பற்றுச்சீட்டை வழங்குவாராயின் குறித்த பிரதேச சபையின் பெயரினை எவ்வாறு பற்றுச்சீட்டில் பயன்படுத்த முடியும்? போன்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அதேவேளை, இயற்கையை இரசிக்க வருபவர்களிடம் அநீதியான முறையில் பணத்தை பெறும் பிரதேச சபை, கடற்கரைக்கு செல்லும் பாதையை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் ஏன் மக்களுக்காக புணரமைத்து அபிவிருத்தி செய்து தரமுடியாது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். ராசிக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாழைச்சேனை பிரதேச சபை இந்த விடயத்தில் பராமுகமாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். https://www.battinatham.com/2024/05/blog-post_18.html
  5. யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்! adminMay 12, 2024 யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. முன்னதாக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகை சுடரும் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் , வீதியில் சென்ற மக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து , முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி ஆரம்பமானது. குறித்த ஊர்திப் பவனி ஆனது, நாளை திங்கட் கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும். முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். https://globaltamilnews.net/2024/202759/
  6. மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை! adminMay 12, 2024 பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (12.05.24) காலை சிவசேனையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், நாக விகாரை விகாராதிபதி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்டவர்களுடன் சிவசேனை அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2024/202755/
  7. ரஷ்யா – உக்ரேன் போரில் 17 இலங்கையர்கள் பலி! adminMay 12, 2024 ரஷ்யா – உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, சனிக்கிழமை (11.05.24) ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பதவிய பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தன, ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக பெப்ரவரி 12 அன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டார். மார்ச் 29 அன்று அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாக தொடர்பு கொண்டார், அதன்பிறகு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறே, ஓய்வுபெற்ற அதிகாரியான மதவாச்சியை சேர்ந்த பிரதீப் சந்தனவும் பெப்ரவரி 12ஆம் திகதி ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மார்ச் 29ஆம் திகதி அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாகத் தொடர்பு கொண்டார் எனவும் அதன்பிறகு எந்த அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2024/202751/
  8. நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை ஒத்திவைப்பு adminMay 12, 2024 நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. காங்கேசன் துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருந்தது.இந்நிலையில் தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் கப்பலின் தாமதமான வருகையாலும் நாளைய தினம் கப்பல் சேவை இடம்பெறாது எனவும், 17 ஆம் திகதி முதலே சேவைகள் ஆரம்பமாகும். நாளைய தினம் கப்பல் பயணத்திற்கு பதிவு செய்த பயணிகள் 17ஆம் திகதிக்கு பின்னர் அவர்கள் விரும்பிய திகதிக்கு மாற்றம் செய்து பயணிக்க முடியும். அல்லது கப்பல் பயணத்திற்கு செலுத்திய கட்டணத்தை மீள பெறமுடியும். என கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. https://globaltamilnews.net/2024/202734/
  9. லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது! adminMay 12, 2024 லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று, லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருந்த ஏனைய 6 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீது சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://globaltamilnews.net/2024/202745/
  10. தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன் ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான வாசிப்போ விளக்கமோ இன்றிக் கருத்து கூறுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தில் அரசியல் ஆர்வமுடைய வாக்காளர்கள் மட்டுமல்ல, பத்திரிகை ஆசிரியர்கள், புலமையாளர்கள், காணொளி ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள், யுடியூப்பார்கள்… என்று அனைவரும் அடங்குவர். இவர்கள் பொது வேட்பாளர் என்ற ஒரு தெரிவை விளங்காமல் எழுதுகிறார்களா அல்லது எல்லாவற்றையும் நன்கு விளங்கிக்கொண்டும் ஏதோ ஒரூ சூதான அரசியல் உள்நோக்கத்தோடு,யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா? தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் மிகத் தெளிவாக வகிடு பிரித்துக் காட்டுகிறது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், யுடியுப்கள் போன்றவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கின்ற பலரும் எங்கேயோ ஒரு விசுவாசப் புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வெளித்தோற்றத்துக்கு ஆளுக்காள் தொடர்பற்ற உதிரிகளாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலர் ஏதோ ஒரு தரப்புக்கு விசுவாசமானவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். பொது வேட்பாளரை எதிர்க்கும் பொழுது அவர்கள் காட்டும் வன்மம்,வெறுப்பு,பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றன அவர்கள் எந்தளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னுறுத்தி எழுதுபவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள், ஜனாதிபதித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மறைமுக வாக்கெடுப்பை நடத்துவது, அதில் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு பொது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதாவது தமிழ்த் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியை விடவும் தேய்மானமே அதிகம். பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் தோன்றியுள்ளன. கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. மக்கள் அமைப்புகள் தோன்றிப் பின் சோர்ந்து விடுகின்றன. தமிழ் மக்களை வடக்கு கிழக்காய் சமயமாய் சாதியாய் இன்னபிறவாய் சிதறடிக்க விரும்பும் சக்திகள் தமிழ் மக்களாலேயே தெரிந்தெடுக்கப்படுகின்றன. 2009க்கு பின்னிருந்து தமிழ் கூட்டு மனோநிலை என்பது கொந்தளிப்பானதாக காணப்படுகிறது. யாரையும் நம்ப முடியாத சந்தேகப் பிராணிகளாக தமிழ் மக்கள் மாறிவருகிறார்கள். எல்லாவற்றுக்கு பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக மாறி வருகிறார்கள். அதாவது தமிழ் மக்களைப் பிரித்துக்கையாளும் சக்திகளுக்கு உள்ளூர் முகவர்கள் அதிகரித்து வருவதாக ஒரு கூட்டுப் பயம்; ஒரு கூட்டுச் சந்தேகம்; ஒரு விதத்தில் ஒரு கூட்டு நோய் அதிகரித்து வருகிறது. இது ஒரு கூட்டுத் தோல்வி மனப்பான்மையின் விளைவு. தோல்வி மனப் பான்மையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்றால் ஒருவர் மற்றவரை நம்பும்; ஒருவர் மற்றவருக்குத் தோள்கொடுக்கும் கூட்டுப் பலத்தில் நம்பிக்கை வைக்கும் ஓர் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கான கடந்த 15ஆண்டுகாலப் பரிசோதனைகளில் இருந்து கற்றுக்கொண்டு, சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பது குற்றமா? தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது குற்றமா? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது குற்றமா? அப்படியென்றால் எமது பள்ளிக்கூடங்களில்,பாலர் வகுப்பில் “ஒற்றுமையே பலம்”; “ஒன்று திரண்டால் உண்டு வாழ்வு”;“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று படித்ததெல்லாம் பொய்யா? தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமூகங்கள் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றுதானே கேட்கின்றன? தமிழ்மக்களை யாரிடமாவது சரணடையச் சொல்லி கேட்கின்றனவா? தமிழ்மக்களை யாருக்காவது விலை கூறி விற்க முற்படுகின்றனவா? இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக வெற்றுக் காசோலைகளாக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை, தமிழ் மக்களின் பேரபலத்தை உயர்த்தும் வாக்குகளாக மாற்றுவது தவறா? ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு கட்டமைப்பாக கூர்ப்படைய வேண்டும் என்று கூடி உழைப்பது குற்றமா? தமிழ்ப் பொது வேட்பாளர் தோற்றால் எல்லாமே தோற்றுவிடும், அது தமிழ் மக்களைப் புதை குழிக்குள் தள்ளிவிடும்… என்றெல்லாம் எழுதுகிறார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது மட்டும் என்ன வெற்றிப் பாதையிலா சென்று கொண்டிருக்கிறார்கள் ? இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மிகப்பெரிய திருப்பகரமான வெற்றி எதையுமே பெற்றிருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்கள் இனிமேல்தான் தோற்க வேண்டும் என்று இல்லை. கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது வெற்றியின் அரசியல் அல்ல. சிறிய தேர்தல் வெற்றிகள்,சில குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் எழுச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால் தொடர்ச்சியான வெற்றிகள் அல்ல. அதாவது தமிழ் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு திருப்பக்கூடிய வெற்றிகள் அல்ல. எனவே தோல்வியைக் காட்டி பயமுறுத்தும் அரசியல்வாதிகள் தாங்கள் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மறைக்கிறார்களா ? கடந்த 15 ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்கு திருப்பகரமான வெற்றி எதையும் பெற்றுத்தரவில்லை. எனினும் காலம் ஒரு அரிதட்டு.அது பலரைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. பலரை அந்த அரிதட்டு சலித்துக் கழித்து விட்டிருக்கிறது. இப்பொழுது பொது வேட்பாளர் என்ற விடயமும் பலர் எங்கே நிற்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக நிற்கிறார்கள்?யாரை சந்தோஷப்படுத்த எழுதுகிறார்கள்? போன்ற எல்லாவற்றையுமே தெளிவாக வெளியே கொண்டு வந்திருக்கிறது. பொது வேட்பாளர் தோற்கக்கூடாது. உண்மைதான். தோற்கக் கூடாது. அவ்வாறு தோற்கக் கூடாது என்று சொன்னால் அதற்காக தமிழ் மக்கள் கூட்டாக உழைக்க வேண்டும். அதற்குத்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது, இரண்டு தரப்பும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தி அந்த முயற்சியை முன்னெடுக்கலாம், அதேசமயம் தேர்தல் அரசியல் எனப்படுவது வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான். கடந்த 15 ஆண்டுகால தோல்விகரமான அரசியல் பாதையில் இருந்து தமிழ் அரசியலை திருப்பகரமான விதத்தில் தடம் மாற்ற ஒரு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. அதில் தோற்கலாம் வெல்லலாம். ஆனால் அது பரிசோதனை. இப்போதிருக்கும் தோல்விகரமான பாதையில் இருந்து தமிழரசியலை திசை மாற்ற முயற்சிக்கும் ஒரு பரிசோதனை. எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப் பயமுறுத்துவோர்,தாங்கள் ரகசியமாக “டீல்” செய்ய முயற்சிக்கும் அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை. அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார். அதைவிட முக்கியமாக,தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அவர் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஒரு வேட்பாளர்தான். இலங்கை முழுவதற்குமான தமிழ் வேட்பாளர் அல்ல. தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளாக பிமுகர் மைய அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் யார் அந்தப் பிரமுகர்,பொது வேட்பாளராக களமிறங்க போவது ? என்ற கேள்வி எழுகிறது. கட்டாயமாக அவர் ஒரு பிரமுகராக இருக்கத் தேவையில்லை. தேர்தலில் தனக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அடுத்தடுத்த தேர்தல்களுக்கு முதலீடு செய்யும் ஓர் அரசியல் விலங்காக அவர் இருக்கக் கூடாது. அவரும் அவர் பயன்படுத்திய பொது சின்னமும் எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கைக்கு அவர் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். பொது வேட்பாளராக ஒரு பிரமுகரைத் தேடும் அனைவரும் ஏன் மற்றொரு அன்னை பூபதியை உருவாக்குவது என்று சிந்திக்கக்கூடாது? அன்னை பூபதி உண்ணாவிரதம் இருக்கும் வரையிலும் அவரை யாரென்று அநேகருக்குத் தெரியாது. ஆனால் 30 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததன் மூலம் நவீன தமிழ் வரலாற்றில் அழிக்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றார். அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து மற்றொரு அன்னை பூபதியைக் கட்டியெழுப்ப முடியாதா? அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. யாரும் உயிர் துறக்கத் தேவையில்லை. உயிரைக் கொடுத்தது போதும். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட ஒரு வேட்பாளர் வேண்டும், தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்த ஒரு பொதுகட்டமைப்பானது எதிர்காலத்தில் கூர்ப்படையத் தேவையான ஒரு பொதுத்தளத்தை அவர் பலப்படுத்துவார். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறுவழி தமிழ் மக்களுக்கு உண்டா? ஏனென்றால் ஐக்கியப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு அடுத்த கட்டமே இல்லை. அடுத்தகிழமை பதினைந்தாவது மே 18 வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருக்கும் தமிழ் அரசியலை ; கடந்த 15 ஆண்டுகளாகத் தேய்ந்து கொண்டு போகும் கட்சி அரசியலை; கட்சிக்காரர்களிடமிருந்தே கட்சிகளைக் காப்பாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில்; வடக்காய் கிழக்காய் சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் சிதறிக் கொண்டே போகும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாகத் திரட்டுவதைவிட உன்னதமான ஒரு நினைவு கூர்தல் உண்டா? https://www.nillanthan.com/6754/
  11. தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதியாக வர முடியுமா? இலங்கைத்தீவின் வடகிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். மக்களின் இந்த விரும்பங்களுக்கு ஏதுவாக சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி கலந்துரையாடி வருகின்றன. இது 95 சதவிகிதம் இணக்கமாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கிலிருந்து மொத்தம் 46 சிவில் அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன. ஆரம்பக் கலந்துரையாடல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 'பொது பொறிமுறை'யை அமைத்த பின்னரே சிவில் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சந்தித்து தமிழ் பொது வேட்பாளர்கள் விவகாரம் தொடர்பாக உரையாடவுள்ளன. ஜனாதிபதியாக வரமுடியுமா? இந்த முயற்சியைச் சிலர் இனவாத செயற்பாடு என்று கூற முற்படுகின்றனர். ஆனால் அது இனவாத ஏற்பாடு அல்ல. அது ஈழத்தமிழர்களுக்குரிய ஜனநாயக உரிமை. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்க முடியாது என்று நேரடியாகக் கூறவில்லை. ஏனெனில் 75 வீதமானவர்கள் சிங்களவர்கள். தமிழ் முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழர்கள் அனைவரும் ஏகமனதாக வாக்களித்தாலும் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான குறைந்தபட்ச 51 சதவீத வாக்குகளை பெற முடியாது. அப்படியானால் கணிசமான சிங்கள மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் ஒரு தமிழருக்கு சிங்களவர்கள் வாக்களிக்கும் அரசியல் கலாச்சாரம் இலங்கைத்தீவில் இன்னும் உருவாகவில்லை. ஆனால் தமிழ் - முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். அரசியலமைப்பின் விதி தமிழ் முஸ்லிம் மக்கள் தாங்கள் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது இலங்கை அரசியலமைப்பில் எழுதப்படாத விதியாகும். எனினும், இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மலையகத் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்கள் பிராந்தியங்களில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் தங்கள் மக்களின் பிரதிநிதிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் தமது தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். வடக்கு - கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் சிங்களப் பிரதிநிதிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்படுகின்றன, ஆனால் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சிங்களப் பிரதிநிதிகளும் அது சிங்களக் குடியேற்றம் அல்ல என்றும் வடக்கு கிழக்கு சிங்கள மக்களின் வரலாற்று வாழ்விடமாகும் என்றும் கூறுகின்றனர். 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு 'வரலாற்று வாழ்விடங்கள்' என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயேர் ஆட்சியில் தொடங்கியது இது தமிழர்களின் பாரம்பரிய தாயகம் அல்லது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்று குறிப்பிடப்படவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக தமிழர்கள் ஏற்க மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு தமது பாரம்பரிய பிரதேசம் என்று கூறி வருகின்றனர். தமிழர்கள் இன்றும் வடக்கு கிழக்கு தமது பாரம்பரிய தாயகம் என்று நம்புகிறார்கள். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினால் வடக்கு - கிழக்குப் பிரச்சனை உருவானது என்று சிங்கள அரசியல் கட்சிகள் இன்னமும் சிங்கள மக்களுக்குக் காரணம் காட்டி வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியது. 1920இல் 'இலங்கைத் தேசிய இயக்கம்' பிளவுபட்டு 1921இல் 'தமிழ் மகா சபை'உருவானபோது எழுந்த சிங்கள-தமிழ் முரண்பாடு 1930இல் டொனமூர் மற்றும் 1947இல் சோல்பரி அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது மேலும் விரிவடைந்தது. பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடப்புத்தகங்களில் கூட இது பற்றிய கதைகள் உள்ளன. இப்போது நீளம் கருதி இந்த வரலாறுகளை முழுமையாக ஆராய விரும்பவில்லை. ஆனால் இந்த வரலாறுகளின் பின்னணியில்தான் வடகிழக்கு தமிழர்கள் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பொது வேட்பாளரை நிறுத்த நினைக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். தமிழ் வாக்காளர்கள் தேவை 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் பின்னர், முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் தேவை என்று தமிழர்கள் உணர்ந்தனர். ஏனெனில் 2009க்குப் பிறகு 15 வருடங்களில் குறைந்தபட்ச அரசியல் தீர்வைக் கூட வழங்க இலங்கை அரசு விரும்பவில்லை என்பது தமிழர்களின் குற்றச்சாட்டாகும். 1960களில் வி.நவரத்தினம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தைச் செல்வா), அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் எந்த அரசியல் தீர்வையும் காணத் தவறியது. அதன் பின்னர் 1970களில் தமிழ் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பகிர்வைப் பெற முடியவில்லை. போராட்டமும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழர்கள் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். 2009ல் அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் இறுதிப் போருக்கு இலங்கை அரசுக்கு ஆதரவளித்தன. இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிதியுதவியும் வழங்குகின்றன. அரசியல் தீர்வை முன்வைக்காத இலங்கை அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு இச் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு கடும் அழுத்தத்தை மட்டுமே கொடுத்து வருகின்றன. பொருளாதார உதவிகளை வழங்கும்போது அரசியல் தீர்வையும் முன்வைக்க வேண்டும் அல்லது இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் இலங்கைத்தீவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மாத்திரமே அறிக்கை விடுவார்கள். 2012ஆம் ஆண்டு முதல் ஜெனிவா மனித உரிமைச் சபையில் போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் அரசியல் தீர்வுகளுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் 15 வருடங்களாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்கவில்லை. பொறுப்புக்கூறல் இல்லை. 2020ல் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தைப் பகிரங்கமாக நிராகரித்தது. ஆனால், 2009ல் நடந்த போரை ஆதரித்த அமெரிக்கா, இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் தீர்மானம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக கோட்டாபய அரசாங்கத்திடம் எதுவுமே கேட்கவில்லை. மாறாகத் தமக்குரிய பிராந்திய புவிசார் அரசியலில் கவனம் செலுத்தி, வடக்கு கிழக்கில் தங்களுக்குத் தேவையான இயற்கை வளங்களையும் அரசியல் பொருளாதார நலன்களையும் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே இந்த நாடுகளின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது. கவலை தெரிவித்த சம்பந்தன் ஆனால், இலங்கைத் தீவிற்குள் நிரந்தர அரசியல் தீர்வும் இல்லை, தமிழர்களுக்கு நீதியும் இல்லை.எனவே, சர்வதேச நீதி கிடைக்கும், குறிப்பாக 2009க்குப் பிறகு, சர்வதேச நீதி வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அது அவர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் என்றும் நம்புகின்றனர். 2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆர்.சம்பந்தன், 2009ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள அமெரிக்க-இந்தியத் தூதுவர்கள், விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர், தமிழர்களுக்கு நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும் பத்து வருடங்கள் கடந்த பின்னரும் இன்று வரை அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை எனவும் சம்பந்தன் தனது உரையில் கவலை தெரிவித்துள்ளார். அந்த உரையில் சம்மந்தன் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஆனால் 2009க்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் பொருத்தமான அரசாங்கத்தை அமைப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துகின்றன. 2010, 2015 மற்றும் 2020 ஆட்சி மாற்றங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. குறிப்பாக 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அனைவரின் நம்பிக்கையையும் வீணடித்தது. ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த வல்லரசுகள் கூட மைத்திரி - ரணில் அரசாங்கத்திடம் இருந்து தாம் நினைத்த எதையும் சாதிக்க முடியவில்லை. சந்திரிக்கா ஆட்சி 1994 இல் வடகிழக்கு தமிழர்கள் ஏகமனதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வாக்களித்திருந்தனர். ஆனால் அவரது பதினொருஆண்டு கால ஆட்சியில் போர் மாத்திரமே நடந்தது. 2000 ஆம் ஆண்டு சந்திரிகாவின் பலவீனமான ஆட்சி பல அரசியல் நெருக்கடிகளையும் கண்டது. எனவே இலங்கைத் தீவிற்குள் முழுமையான அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரமே நிலையான சமாதானத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் உகந்தது என்பதைச் சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன. எனினும், இந்த வரலாறுகள் பற்றிச் சர்வதேச சமூகம் அறியாதவை அல்ல. எனவே இந்த வரலாறுகளைப் புரிந்து கொண்டு வேறு மாற்று அணுகுமுறைகளை கையாளாமல் மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு சாதகமான ஒருவரை இந்த நாடுகள் தேடி வருகின்றன. ஆனால் இந்த நாடுகள் இலங்கை அரசியலில் தலையிடுவதில்லை என அவ்வப்போது மறுத்தும் வருகின்றன. இந்தப் பின்னணியில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடி வருகின்றன. இங்கு தமிழ் பொது வேட்பாளர் எத்தனை வாக்குகளைப் பெறுகிறார் என்பதை விட, தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் முக்கியமானவை. சர்வதேச நீதியே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வாகும் என்பதை அக் காரணங்கள் பகிரங்கப்படுத்துகின்றன. அது்துடன் இது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் தன்மை பற்றி உலகுக்கு உணர்த்துகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் கொழும்பை மையப்படுத்திய சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாகவும் சில வெளிநாடுகளின் விருப்பத்துக்கு ஏற்பவும் செயற்படுவது உண்மைதான். அதை மறுக்க முடியாது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் சில தமிழ் உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வு இதனால் தமிழ் தேசிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள இந்த சந்தர்ப்பங்களைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில சக்திகள் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வுகளை முடக்க முயற்சிக்கின்றனர். அதே சமயம் தமிழர்கள் உண்மையான அரசியலை ஏற்க வேண்டும் என்று சில தமிழ் முற்போக்கு சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பதை எற்க வேண்டும் என்கிறார்கள், இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என்கின்றனர். ஆனால் 'உண்மையான அரசியல்' மற்றும் 'இணக்க அரசியல்' ஆகியவற்றின் வரையறை எப்போதும் கேள்விக்குரியது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிலையான அரசியல் தீர்வை முன்வைக்க முடியவில்லை என்று கடந்த முப்பது வருடங்களாக இலங்கை அரசு வாதிட்டு வருவது உலகம் அறியாதது அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 15 வருடங்களில் என்ன நடந்தது என்பதைச்சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தீர்மானத்திற்கு சிவில் சமூக அமைப்புக்கள் தயாராகி வருவதாக யாராவது கூறினால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.நிக்ஸன் https://oruvan.com/sri-lanka/2024/05/10/can-tamils-and-muslims-become-president
  12. சவுக்கு சங்கரை தொடர்ந்து… டெல்லியில் பெலிக்ஸ் கைது! christopherMay 11, 2024 08:34AM பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் டெல்லியில் இன்று (மே 11) கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக அரசியல் விமர்சகரும், யூடியுபருமான சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர். மேலும் அவர் வந்த காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சென்னை போலீசாரால் மேலும் இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையே தேனி மாவட்ட போலீசார் மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று சோதனை செய்தனர். அப்போது சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா, செல்போன், லேப்டாப், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீசார் சீல் வைத்தனர். இந்த நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூப் சேனல் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை அடுத்து சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். பேட்டி எடுத்தவர் தான் முதல் குற்றவாளி! அந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “பேட்டி கொடுத்தவரை விட பேட்டி எடுத்த வரை தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும், தற்போது யூட்யூப் சேனல்களை நெறிமுறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது” என்று கூறியது. ஏற்கெனவே அரசியலில் இருக்கும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் ஜாமீனில் வந்த நிலையில், தற்போது மீண்டும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் பெலிக்ஸை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸை டெல்லியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது ’அரசியலில் இருக்கும் பெண்கள் அனைவரும் அட்ஜஸ்ட் செய்து வந்தவர்களே’ என்று பேசியதற்காக இவர் மீது சைபர் கிரைம் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கிலும் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி வெளியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/political-news/felix-arrested-in-delhi-after-savukku-sankar/
  13. எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்! May 10, 2024 — கருணாகரன் — வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! இலங்கையில் இனவாதச் சிந்தனையே அரசிடமும் பெரும்பாலான அரசியல், ஊடகத் தரப்பினரிடத்திலும் உண்டு. இனவாதச்சிந்தனை என்றாலே அது வன்முறையைக் கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். கூடவே தம்மைப் பற்றிய உச்ச உயர்வுணர்வையும் (superiority complex) அதிக பாதுகாப்புணர்வையும் (sence of supreme security) கொண்டிருப்பதுமாகும். சிலவேளை அதிக தாழ்வுணர்வையும் (inferiority complex) கொண்டிருப்பதுமுண்டு. இதனால் எப்போதும் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேணும் என்ற உச்ச உணர்வுடன் – பதற்றத்துடன் எதிர்த்தரப்பின் மீது போரைத் தொடுப்பதற்கான வியூகங்களை வகுப்பதைப்பற்றிய சிந்தனை அதற்குள் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும். இது நேரடியாக ஆயுதம் தாங்கிய போராகத்தான் நடக்கும் என்றில்லை. பல வடிவங்களிலும் ஒடுக்குதலை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக விலக்குவது, விலகுவது, முரட்டுத் தனமாக எதிர்ப்பது, மற்றமைகளை நிராகரிப்பது, எதிர்த்தரப்புக்கு எதிராக அணிதிரள்வது, மக்களைத் திரட்டுவது, மூர்க்கமாக எதிர்ப்பது, எதையும் சந்தேகிப்பது எனப் பல வகைப்பட்டிருக்கும். சிங்களத் தரப்பு தமிழர்கள் மீதும் தமிழர்கள் சிங்களவர் மீதும் கொண்டுள்ள சந்தேகமும் எதிர்ப்புணர்வும் (பகையுணர்வும்) இவ்வாறானதே. இப்படித்தான் முஸ்லிம்கள் மீது தமிழர்களும் சிங்களவர்களும் சிங்களவர், தமிழர் மீது முஸ்லிம்களும் சந்தேகம் கொள்வதும் எதிர்ப்புணர்வுடன் நோக்குவது என இந்த வியாதி தொடர்கிறது. அரசு இதில் முழுமூச்சாக இயங்குகிறது. போட்டியாக ஆளையாள் குற்றம் சாட்டிக் கொண்டு இனவாதத்தை எல்லோரும் வளர்க்கின்றனர். இதுவே லாபகரமான அரசியலாக்கப்பட்டுள்ளது. குறித்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதுவொரு வரலாற்றுப் பழியாகவே உள்ளது. இதனால் மக்களுக்கு உண்டாகும் அழிவுகள், இழப்புகள், சேதங்கள், பின்னடைவுகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் எந்த நிலையிலும் இனவாதத்தைக் கடந்த – இணக்கத்துக்கான, சமாதானத்துக்கான அரசியலையே இவர்கள் மேற்கொண்டிருப்பர். அதனுடைய நல் விளைவுகள் உருவாகியிருக்கும். இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு யார் முன்வரவில்லை? அல்லது ஏன் பின்னிற்கிறார்கள்? தமிழர்களும் முஸ்லிம்களும் சமாதான அரசியலுக்கு முன்வந்தாலும் அரசும் சிங்களத் தரப்பும் அதற்குத் தயாரா? அதற்கான உத்தரவாதம் என்ன? இதை யார், எப்படிக் கண்காணிப்பது? அதற்கான பொறிமுறையும் கால எல்லையும் என்ன? இப்படிச் சில அடிப்படையான கேள்விகளைச் சிலர் எழுப்பக் கூடும். இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு இன்னும் இலங்கைத்தீவில் சில சக்திகள் உண்டு. மெய்யாகவே அவை சமத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்றன. ஆனால், அவற்றை உதிரிகளாகவே மக்களும் நோக்குகின்றனர். ஊடகங்களும் வெளியுலகமும் பார்க்கின்ற பார்வை உண்டு. இதற்குக் காரணம், அவை வளரவில்லை. அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. இனவாதம் செழித்திருக்கும் ஒரு சூழலில் அதற்கு எதிரான தரப்புகள் வளர்ச்சியடைய முடியாது. அப்படி வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு நீண்ட காலமும் கடுமையான உழைப்பும் தேவை. மிகுந்த சவால்களின் மத்தியில்தான் அவை வேர் விடவும் துளிர் விடவும் முடியும். ஏனென்றால், இனவாதத்தில் திளைத்துப் போயிருக்கும், அதில் முதலிட்டிருக்கும் பிற அரசியற் தரப்புகளும் ஊடகங்களும் பிற அமைப்புகளும் லேசில் இந்த மாற்றுத் தரப்புக்கான இடத்தை அளிக்காது. ஆகவே கல்லிலே துளிர் விடும் சிறு நாற்றுப்போலவே அமைதிக்கான தரப்புகள் முளைத்தெழ வேண்டும். ஏற்கனவே இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு முயற்சித்தவர்களை மக்களே தோற்கடித்து விட்டனர். இடதுசாரிய நண்பர்கள் துயரம்தோய்ந்த பகடியாக அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியமுண்டு. “இடதுசாரிகளைத் தோற்கடித்து விட்டு இனவாதிகளை வளர்த்த மக்கள் அதற்கான துயரத்தை அறுவடை செய்கின்றனர்” என. உண்மைதான் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத அரசியலுக்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். நாடும் பொருளாதார ரீதியாகவும் ஜனநாயகம், அமைதி, சுபீட்சம் போன்றவற்றாலும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் இதில் பட்டறிவைப் பெறுவதற்கும் இதைக் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கும் மாற்று உபாயங்களைத் தேடுவதற்கும் தயாரில்லை. அவர்கள் மலக்குழிக்குள்ளே அமுதத்தைத் தேட முயற்சிக்கிறார்கள். அதற்கேற்றவாறு மலத்திலிருந்து தேனை எடுத்துத் தருவதாக இந்தத் தலைவர்களும் தங்கள் மக்களுக்கு இனிப்பாக வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக மொத்தத்தில் மக்களும் தமது தலைவர்களைப்போல இனவாதத்தில் சிக்கியுள்ளனர். தலைவர்களுக்கேற்ற மக்கள். அல்லது மக்களுக்கேற்ற தலைவர்கள். “இனவாதத்தை முறியடிப்பேன், இலங்கைத்தீவில் சமாதானத்தை நிலைநாட்டுவேன்” என்று தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு எந்தத் தலைவரும் நாட்டில் இல்லை. இதனால் சமாதானத்துக்காக வேலை செய்யக் கூடிய, செயற்படுகின்ற ஒரு பத்துப் பேரைக் கூட இந்த நாட்டில் நம்மால் கண்டு பிடிக்க முடியாலிருக்கிறது. அண்மையில் மேற்குநாட்டுத் தூதுவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கேட்டார் -“போரைச் செய்வதற்காக நீங்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டீர்கள். பல படையணிகளை உருவாக்கினீர்கள். பல உயிர்களைக் கொடுத்தீர்கள். போர் வெற்றிக்காக எவ்வளவோ இழப்புகளின் மத்தியில் நீண்ட காத்திருப்பில் இருந்தீர்கள். அதிலே நீங்கள் எந்த நன்மைகளையும் பெற்றதில்லை. கண்ணீரையும் துயரத்தையும் பகை உணர்வையும் சம்பாதித்ததுதான் மிச்சம். பதிலாக சமாதானத்துக்காக என்ன விலையைக் கொடுத்தீர்கள்? எத்தனைபேர் சமாதானத்துக்காக உங்கள் நாட்டில் உழைக்கிறீர்கள்? உலகத்தில் அமைதியாக, இணக்கமாக, சமாதானமாக வாழ்வதுதானே சிறப்பு?” என்று. “நாங்கள் சமாதானத்துக்காக எத்தனை படிகள் கீழே இறங்கினாலும் அரசாங்கம் அதைப் புரிந்து கொள்ள மறுக்கிறதே. அது மேலும் மேலும் சமாதானத்துக்கு எதிராக அல்லவா செயற்படுகிறது? சிங்களப் புத்திஜீவிகள் கூட இதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றார்களே!” என்று பதிலளித்தோம். “உலகம் அப்படித்தான் உள்ளது. அதிகாரத் தரப்புகளின் குணவியல்பே அப்படியானதுதான். ஆனால் அரசுக்கு எல்லா மக்களையும் காக்க வேண்டிய பொறுப்புண்டு. அந்த அடிப்படையில் செயற்பட வேண்டிய கடப்பாடுண்டு. அதையே சர்வதேச நியமங்கள் வலியுறுத்துகின்றன. அதற்கமைய சமாதானத்துக்கான வற்புறுத்தலைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் அனைத்து அரசியற் தரப்புகளுக்கும் உண்டு. அப்படிச் செய்தால் நிச்சயமாகச் சமாதானத்தை எட்ட முடியும்? அதைச் செய்தே ஆக வேண்டும். நீங்கள் சொல்கிற மாதிரி நம்பிக்கையீனமாக யோசித்தால் உலகம் முழுவதும் இரத்தக்களரியாகத்தானிருக்கும். யதார்த்த உலகம் அப்படி இல்லையே!” என்றார் அவர். இதற்கு என்ன பதிலைச் சொல்வது? தலையைக் கவிழ்ந்து கொண்டு அமைதியாக இருந்தோம். இந்தப் பின்னணியில்தான் சமகால – எதிர்கால அரசியலை நாம் பேசவும் பார்க்கவும் வேண்டியுள்ளது. நம்முன்னே உள்ள யதார்த்தத்தையும் நடைமுறைச் சாத்தியத்தையும் பற்றி நம்முடைய அரசியற் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் மக்களும் சிந்திப்பதேயில்லை. உலகத்தின் மொழியையும் வரலாற்றின் குரலையும் பொருட்படுத்துவதில்லை. பகை வளர்ப்பின் மூலம் ஒருபோதுமே தீர்வை எட்ட முடியாது என்ற தெளிவான பட்டறிவு இருந்தாலும் நம்முடைய மனது எதிர்ப்பில், பகைமையில்தான் திளைக்கிறது. அது ஒரு போதையாகி விட்டது. எதிர்த்தரப்பை அப்படி நோக்கிப் பழகி விட்டோம். ஆனால் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையர்களும், யப்பானும் அமெரிக்காவும் எனப் பல பகையைக் கடந்த உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இதை ஒத்துக் கொள்வதற்கு யாரும் தயாரில்லை. இனமுரணை மேலும் மேலும் வளர்த்தால் தீர்வை எட்டவே முடியாது. இனப் பிளவு கூடக் கூட நாடு பலவீனப்படும். இதனால் நாடு அந்நியச் சக்திகளிடம்தான் பறிபோகும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நமக்குள்ளே உடன்பாடு காணவும் அதிகாரங்களைப் பகிரவும் தயாரில்லை என்றால், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பிற சக்திகள் நம்முடைய நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். இலங்கை இந்திய உடன்படிக்கை எதற்காக வந்தது? இனப்பிரச்சினையின் விளைவாகத்தானே. ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாறாக திருகோணமலை எண்ணெய்க்குதங்களை நீண்டகால அடிப்படையில் இந்தியா எடுத்துக் கொண்டது. இப்படித்தான் ஒவ்வொரு நாடும் இலங்கையைக் கூறு போட்டு எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான விலையை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என எல்லோரும் இணைந்தே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஏதாவது வேறுபட்ட நிலையிலா செலுத்திக் கொண்டிருக்கிறோம்? அல்லது இந்த விலை கொடுப்பில் யாருக்காவது விலக்கிருக்கிறதா? சிவனின் முதுகில் விழுந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டதைப்போல, இலங்கைத்தீவுக்கு வருகின்ற நெருக்கடிகளும் அழுத்தங்களும் அனைவருடைய தலைகளிலும்தான் சுமையாக ஏறுகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் ஆளாளுக்கு பகைமையை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறோம். இது அந்நியருக்குச் சேவகம் செய்வதாகும். காலனிய ஆட்சிக்கால அடிமைத்தனம் முடிவுக்கு வந்து விட்டதாக நாம் கருதலாம். அது முடியவில்லை. நம்முடைய அறிவீனத்தின் விளைவாக இப்போதும் நாம் அடிமையாகவே இருக்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நம்முடைய உழைப்புச் சுரண்டப்படுவது வேறு. நம்முடைய தாய் மண்ணிலேயே பிறரால் சுரண்டப்படுவதும் அடிமைப்படுத்தப்படுவதும் வேறு. இது மிகக் கொடுமையானது. இதற்குக் காரணமாக நாமே இருப்பது இன்னும் கொடுமையானது. இங்கேதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. தம்முடைய சொந்த மக்களுக்குத் துரோகமிழைத்துக் கொண்டு, அந்திய சக்திகளுக்குத் தொண்டு செய்கிறது அரசு. அரசு மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து இனக் கட்சிகளும்தான். இதில் தமிழ், சிங்களச் சமூகத்தினருக்கே கூடுதல் பொறுப்புண்டு. இருதரப்புக்கும் இடையிலான இனமுரண்களே பாதிப்பின் பெருவிளைவுகளாகும். பின்னர், முஸ்லிம்களிடமும் இந்த வியாதி தொற்றிக் கொண்டது. இனவாதத்தையும் அதனால் உண்டாகும் இனமுரணையும் பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளிற் சிலவும் கூடத் தமது தேவைக்கேற்ப ஊக்குவிக்கின்றன. வளர்க்கின்றன. அதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதேவேளை இனவாதத்திற்கு எதிராக – அமைதித் தீர்வுக்காகச் சில நாடுகள் உண்மையிலேயே முயற்சிக்கின்றன. நம்மவர்கள் அதிகம் நம்புவதும் தொடர்பில் இருப்பதும் தீர்வுக்கு எதிரான தரப்புகளுடனேயே. இப்படி ஒரு சிக்கலான நிலைக்குள்ளேதான் இலங்கையின் இனப்பிரச்சினையும் இனங்களின் நிலையும் உள்ளது. இந்தக் கசப்பான யதார்த்த வெளியில்தான் இலங்கையர்கள் தமது அரசியலை முன்னெடுத்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். சரியான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருந்தால், நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபட வேண்டும். அதைத் தூக்கியெறிய வேண்டும். “இது சாத்தியமா?” என்று சிலர் கேட்கலாம். “அப்படிச் சிந்தித்த இடதுசாரிகளே இனவாதிகளாக மாறிய பிறகு, அதுவும் சிங்கள மேலாதிக்கத்தோடு அவர்கள் இணைந்த பிறகு எப்படி, எதில் நம்பிக்கை வைத்து நம்மால் செயற்பட முடியும்? மேலும் சமாதானத்துக்கான முயற்சியும் விட்டுக் கொடுப்பும் அதிகாரமற்ற சிறுபான்மைத் தரப்பிலிருந்து ஒரு எல்லைக்கு மேல் செய்யப்படுமாக இருந்தால், அதைப் பலவீனமாகக் கருதிக் கொண்டு, அரசு மேலாதிக்கம் செய்து விடும். இப்பொழுது அது தமிழர்களின் நிலப்பகுதியை – பிரதேசங்களை – சிங்கள மயமாக்கி வருகிறது. ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. படையை ஆதிக்க முனையாக தமிழரின் நிலத்திலேயே நிறுத்தியுள்ளதே! இந்த நிலையில் எப்படிச் சமாதானத்தை முன்னெடுப்பது?” என்று பல கேள்விகளை அடுக்கலாம். இனவாத அரசு, ஒடுக்குமுறை இயந்திரம் வேறு எப்படி இருக்கும்? வேறு எப்படி இயங்கும்? முதலாளிகள் தங்களுடைய லாபங்களை எல்லாம் தொழிலாளிகளுக்காக விட்டுக் கொடுத்து விடுவார்களா? வேண்டுமானால் சில சலுகைகளைச் செய்து கொள்வார்கள். அதற்குமேல் எதுவுமே இல்லை. இங்கேதான், நம்முடைய வலிமையான – உறுதியான நிலைப்பாடும் போராட்டமும் தேவை. நாம் எந்த நிலையிலும் ஐக்கியத்தை, சமாதானத்தை, நீதியை, உரிமையை, அதிகாரப் பகிர்வை, அமைதித்தீர்வையே விரும்புகிறோம். எந்த நிலையிலும் நமக்குச் சமாதானமே வேண்டும் என்று உறுதியாக – விடாப்பிடியாக நிற்க வேண்டும். இதுதான் உலக மொழி. அகிம்சையின் வழி. இந்த வார்த்தைகளைப் படித்துப் பலரும் சிரிக்கக் கூடும். சிலர் பரிகசிக்கலாம். அல்லது இதொரு மோசமான கற்பனை என்று உதாசீனப்படுத்தலாம். ஆனால், இறுதியிலும் இறுதியாக இந்த இடத்துக்கே வந்து சேர வேண்டும். ஏனென்றால், இலங்கைத்தீவில் பிரிவினையை எந்தச் சக்தியும் ஒருபோதுமே ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை, ஆதரிக்கப்போவதுமில்லை. அந்தச் சூழலே மாறி விட்டது. இப்போது உலகம் விரும்புவதும் வலியுறுத்துவதும் அமைதியையும் சமாதானத்தையுமே. அதற்காகவே அமெரிக்கா தொடக்கம் நோர்வே, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா தொடக்கம் அனைத்து நாடுகளும் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு (போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட) உதவுகின்றன. சமாதானத்துக்காகவும் பகை மறப்புக்காகவும் பல செயலணிகளை உருவாக்குவதற்கு நிதிப்பங்களிப்பையும் அறிவுசார் செயலாக்கப்பகிர்வையும் செய்கின்றன. ஒரு காலம் போருக்கு உதவியவை இதில் உள்ள சில நாடுகள். இப்பொழுது சமாதானத்துக்குப் பங்களிக்கின்றன. இதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. ஏற்றுக் கொள்ள மறுத்தால், இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று அவர்கள் சொல்ல வேண்டும். https://arangamnews.com/?p=10728
  14. தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் முடிவெடுக்க 19 ஆம் திகதி தமிழரசு மத்திய குழு கூடுகிறது May 11, 2024 தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை எடுப்பதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழு எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது. வவுனியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து மத்திய செயல் குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த 4ஆம் திகதி சிவில் அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்றதமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு இரண்டு வாரகாலஅவகாசத்தை கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே அவர், மத்திய செயல்குழுவை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை ஜனநாயகயக தமிழ்த் தேசியக்கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ் மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்றதும் – பழம்பெரும் கட்சியுமான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்காக பல தரப்பினரும் காத்திருக்கின்றனர். ஏற்கனவே, அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் இரு வேறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையிலேயே தமிழ் அரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை தீர்மானமாக அறிவிப்பதற்காக எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் தவிர, கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் நடை பெற்றுவரும் வழக்கு தொடர்பிலும் பேசப்படலாம் என்று தெரியவருகின்றது. https://www.ilakku.org/தமிழ்ப்-பொது-வேட்பாளா்-வ/
  15. MI, PBKS அணிகள் நாக்-அவுட்: பிற அணிகளுக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு என்ன? christopherMay 10, 2024 10:57AM IPL 2024: 2024 ஐபிஎல் தொடரில் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. 58 லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் புள்ளிப்பட்டியலில் அந்த டாப் 4 இடங்களில் ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது. இப்படியான சூழலில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2024 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக MI அணி நாக்-அவுட் ஆனது. இதை தொடர்ந்து, பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்ததை அடுத்து, அந்த அணியும் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து நாக்-அவுட் ஆனது. இப்போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எந்த அணிக்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை இங்கு பார்ப்போம். KKR, RR அணிகளுக்கான வாய்ப்பு என்ன? நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 16 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள், கிட்டத்தட்ட 99% தங்கள் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. தற்போது உள்ள சூழ்நிலையில், அவர்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வென்றாலும் கூட, அவர்களின் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். SRH, CSK அணிகளுக்கான வாய்ப்பு என்ன? இவர்களை தொடர்ந்து, 14 மற்றும் 12 புள்ளிகளுடன் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ள ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள், தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் வென்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலையில் உள்ளது. ஒருவேளை, இந்த அணிகள் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றாலும் கூட மற்ற அணிகளின் வெற்றி தோல்வி, ரன்-ரேட் ஆகியவற்றின் அடிப்படையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளது. LSG, DC அணிகளுக்கான வாய்ப்பு என்ன? அடுத்தபடியாக, தலா 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது, 6வது இடத்தில் உள்ள டெல்லி, லக்னோ அணிகள், பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள தங்களுக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் 2 போட்டிகளில் தோல்வியடைந்தால், இந்த 2 அணிகளும் பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், இந்த தொடரின் 64வது லீக் போட்டியில், டெல்லி மற்றும் லக்னோ அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. RCB, GT அணிகளுக்கான வாய்ப்பு என்ன? பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும், இன்னும் அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ள பெங்களூரு, குஜராத் அணிகள், முதலில் தங்களுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். பின், ஐதராபாத் அணி தங்களுக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும். அதேபோல, சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள், தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் ஒன்றுக்கும் அதிகமான வெற்றியை பெறக்கூடாது. இவை எல்லாம் நடக்கும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில், இன்னும் சில போட்டிகளே மீதமுள்ள நிலையில், 8 அணிகள் இன்னும் பிளே-ஆஃப் ரேஸில் உள்ளதால், இந்த தொடர் கூடுதல் சுவாரஸ்யம் பெற்றுள்ளது. https://minnambalam.com/sports/ipl-2024-playoffs-qualification-race-which-team-will-win-the-ipl-2024-prediction/
  16. யாழ்ப்பாணம் வந்தாா் நளினி May 10, 2024 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார். அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளார். https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வந்தாா்-நளின/
  17. வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து! வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரரும் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், யாழ். மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பல்வேறுபட்ட சமூக சீர்கேடான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் இளைய தலைமுறையினருக்கு, விளையாட்டின் மூலம் சாதனை படைக்கும் 22 வயதேயான வியாஸ்காந்த் ஒரு சிறந்த முன்னுதாரணமாவர். இவரை முன்மாதிரியாகக் கொண்டு எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. கற்றல் மூலம் மட்டுமல்ல விளையாட்டின் மூலமும் உயரங்களை எட்ட முடியும் என்பதை உணர்த்தியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றேன் என்றுள்ளது. https://thinakkural.lk/article/301294
  18. குறிச்சி என்பது? நீலாம்பிகை கன்னிப் பெண்ணாக இருந்தும் மீன் விற்பதற்குச் சங்கானைக்குப் போனதில் அவளது குறிச்சியே அதிர்ந்து போய் இருந்தது. அவள் அதைப் பற்றிக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணனின் கடும் எதிர்ப்பைக்கூட அசட்டை செய்யவில்லை. தம்பிராசா என்ன நினைப்பான் என்கின்ற ஒரு எண்ணம் எழுந்தாலும், அதையும் புறங்கையால் தள்ளிவிடுவது போலத் தள்ளி விட்டாள். சங்கானைக்குப் போய் வந்தபின் செக்கல் பொழுதில் கரைக் கிணற்றிற்குக் குளிக்கச் சென்ற நீலாம்பிகைக்கு அதிர்ச்சியாக இருந்தது. அள்ளிய வாளி நீரில் கல்லெண்ணை நாறியது. மேலும் முகர்ந்தபோது அது நிச்சயமாகிற்று. அதற்குள் யார் கல்லெண்ணெய் ஊற்றினார்கள் என்பதையோ, எதற்காக ஊற்றினார்கள் என்பதையோ அவள் அறிய மாட்டாள். நடு ஊராரின் கிணற்றில் குளிக்க விடாததிற்கு கிழக்குத்திக்கார் இரகசியமாக இரவோடு இரவாக கல்லெண்ணை ஊற்றியது அவளுக்குத் தெரியும். அதற்குப் பழிவாங்கலாக இது இருக்கலாம் என்பது விளங்கியது. என்ன செய்ய முடியும் என்று யோசித்தவண்ணம் வீட்டிற்குத் திரும்ப எண்ணிய போது தம்பிராசா வந்தான். அவன் தன்னைப் பார்ப்பதற்கு அலைவது பற்றி நீலாம்பிகை முதலில் கேள்விப்பட்டிருந்தாள். பின்பு ஒரு நாள் கள்ளுச்சீவும் இரட்டைப் பனையடியில் வைத்து 'நான் உன்னை விரும்பிறன் நீலா' என்றான். அவள் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. இப்போது அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவள் ஒரு முறை பார்த்துவிட்டு வாளியைத் தூக்கினாள். 'என்ன குளிக்கேல்லையே?' என்று தம்பிராசா கேட்க அவள் நிலைமையை விளங்கப்படுத்தினாள். தம்பிராசா இருட்டி இருப்பதாலும், நடுத்திக்குக்காரின் கிணற்றில் ஆட்கள் இல்லாததாலும் அதில் குளித்துவிட்டுச் செல்லலாம் என்றான். அதைக் கேட்டு முதலில் நீலாம்பிகை நடுங்கினாலும், தம்பிராசா தன்னைக் கொலைநடுங்கி என்று நினைத்து விடுவானோ என்பதாக எண்ணியவள், சரி என்று கூற, இருவருமாக நடுத்திக்காரிக் கிணற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது திடீரென உழவு இயந்திரம் இவர்களை நோக்கி வர, பனைக் காட்டை நோக்கி ஓடிய இருவரும், அங்கே ஒளித்திருக்கும் போதுதான் அவர்கள் காதல், முத்தம் வரை சென்றது. ஒஸ்லோ என்றாலும் எங்கள் கலாச்சாரம் காப்பதாக, பார்த்துப் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட கலியாண வீடு அது. இது சொர்க்கத்தில் அல்ல, ஒஸ்லோவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பாடசாலை மண்டபம் ஒன்றில் நடைபெற்றாலும், அரச வைபவம் போல் அலங்கரிக்கப்பட்ட உள் மண்டப அழகு வேலைப்பாடுகள். வண்ண வண்ண ஆடல்களும், வடிவு சேர்க்கும் உருவங்களும், கண்ணைப் பறிக்கும் மணமேடையும், உயர்ந்து நின்ற மணமக்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளும், வானவில்லைப் பூமியில் நிறுவிய ஊதுபைகளுமாக மண்டபம் அமர்க்களப்பட்டது. சொந்த ஊர்ச்சனம், தெரிந்தவர்கள் என்று இரு நூறு விருந்தினர்கள் வந்திருப்பார்கள். ஐயர் புகையடிக்கும் தனது அலுவலில் மும்முரமாக, மேளமும், நாதஸ்வரமும் ஆரம்ப சுருதி பிடிப்பில் போட்டியாக. எங்கும் சிறுவர்களின் கீச்சுக் குரல், பெரியவர்களின் நகைப்பு, பேச்சு, என்பதாக வண்டுகளின் ரீங்காரமாய், களிப்பைப் பேசுவதாய், மண்டபம் உயிர் பெற்றிருந்தது. திருச்செல்வன் ஊரில் 'எதுவும் கிடையாது அவனுக்கு' என்று சொல்வார்களே, அந்த ரகத்தைச் சார்ந்தவன். இங்கே அதற்குத் தடை ஏது என்கிற சுதந்திரம் வேறு. அவனது திருநிறைச் செல்வன் சுகந்தனுக்கும், அளவெட்டியைச் சார்ந்த சிவபாலனின் ஏக புத்திரி சுகுனாவுக்கும், அன்றைய நாள் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டதால் இந்தக் கலியாணத் திருவிழா. விடுவானா திருச்செல்வன்? தனக்குத் தெரிந்த ஊர்க்காரர் எல்லோரையும் அழைத்ததோடு, பல தனது வெளியூர் நண்பர்களையும் அழைத்திருந்தான். நீளமாகப் பன்னிரண்டு நபர்கள் உட்காரும்படி நாற்காலிகள் போடப்பட்ட மேசைகள், அலங்காரத்தோடு குளிர்பானங்கள் தாங்கி, சேவைக்குத் தயாராகக் காத்து இருந்தன. அதில் சில மேசைகளில் அவன் ஊர்க்காரர்கள் ஆட்சி செய்தார்கள். அப்படி ஆட்சிக்கு உட்பட்ட மேசை ஒன்றில் தர்மசீலன், அவன் மனைவி சாந்ததேவி, ரவி, கவி என்கிற அவன் பிள்ளைகள், தவலிங்கம் அவன் மனைவியான ராணி, சிவறூபன், அவன் பாரியார் நந்தினி, கமலன் அவன் துணைவி சியாமளா, தம்பிராசா, அவன் இல்லத்தாள் நீலாம்பிகை என்பவர்கள் அமர்ந்து இருந்தார்கள். 'மனிதப் புறத்தோற்றம் ஐரோப்பா வந்த பின்பு அடையாளம் தெரியாது மாறிப்போனது, அல்லது ஒரு சமத்துவத்தை எட்டியது என்பதான ஒரு மாயை. இருந்தும் மர்மமான மனதுகள்? அதனுள் புதைந்துள்ள அகத் தோற்றங்கள்? அவை சாகாவரம் பெற்ற அசுரர்கள் போலப் பலரின் மனதின் ஆழத்தில் ஒளிந்து இருக்கிறது, இருந்தும் அது வெளியே தெரியாதபடி தடித்த முகமூடிகள் பலரைக் காப்பாற்றுகின்றன' எனத் தவலிங்கம் எண்ணிக் கொண்டான். அவன் மனது பாரதி போல சமூக அநியாயங்கள் கண்டு குமுறும். இருந்தும் போராடுவது பாதிக்கப்பட்டவனாய் இருக்க வேண்டும் என்று அவன் வலுவாக நம்புபவன். அப்போது அங்கே வந்த திருச்செல்வன், மேசையில் வைக்கப்பட்ட குளிர்பானத்தைப் பார்த்துவிட்டு, 'என்ன பாத்துக் கொண்டு இருக்கிறியள்? எடுத்து வாய நனையுங்க.... கெதியா பங்ஷன் ஆரம்பிச்சிடும். பிறகு பலகாரமும் ரீயும் வரும். எல்லாம் ஓ.கே தானே?' என்று தனது விருந்தினரை உபசரிப்பதாகக் கேட்டான். அதைக்கேட்ட தர்மசீலன் 'இதெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேணுமே. உங்களுக்கு ஏதும் உதவி தேவை எண்டாச் சொல்லுங்க' என்றான் ஊர்க்காரன் என்கின்ற உரிமையில். 'ஓ... நான் தேவை எண்டா வந்து கேட்கிறன்' என்றவன் ஏதோ அவசர அலுவலாகச் சென்று விட்டான். அப்போதே, குளிர்பானத்தையும், மேசையைச் சுற்றி இருந்தவர்களையும் பார்த்த சிவறூபன், தம்பிராசாவையும், நீலாம்பிகையையும் பார்த்தான். அவனுக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு அவன் மூளையில் முளைவிட்டது. சிவறூபன் ஒரு பொறியியலாளனாக வேலை செய்கிறான். ஒஸ்லோவில் மற்றவர்களோடு ஒப்பிடும்போது தான் கௌரவமான வேலை செய்வதான தடிப்பு. தனக்கு ஒரு தனி மதிப்பு இருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இங்கு அதைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள முடியாததில் ஒருவித பொறுமையற்ற அடக்கம். அவன் மனதில் புதைந்து கிடக்கும் மனிதாபிமானத்திற்கு விரோதமான இன்னும் சில எண்ணங்கள். அதைப் பற்றி இங்கே கதைத்தால் தனக்கே அவமானம் என்கின்ற உண்மை விளங்கியதால் என்ன செய்வது என்கின்ற திணிக்கப்பட்ட சகிப்பு. சிறுவனாக இருக்கும்போது தம்பிராசா அப்பாவோடு சிவநாயகி அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தான். அவர் கணவர் தேவநேசன். யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்தார். வெள்ளிக்கிழமை என்றால் அவர் கொப்பிலேறி குரங்காகத் தாவிக்கொண்டு ஊருக்கு வருவார். அவர்களுக்கு ஊரில் அரைவாசி சொத்து உடைமையாக இருந்தது. அதனால் கூலிகள் யாவரும் அடிமைகள் என்கின்ற நினைப்பு. அதைப் பற்றி எல்லாம் தம்பிராசாவின் அப்பா கவலைப்படுவதில்லை. வேலை தந்து சம்பளமும் தரும் எசமானர்கள் கடவுளுக்குச் சமம் என்பது அவர் எண்ணம். அன்று தம்பிராசா அப்பாவோடு போனபோது சிவநாயகி அம்மாவின் கடைக்குட்டி ராகவன் நின்றான். அவனுக்கு ஆறுவயது இருக்கும். அவன் தம்பிராசாவின் அப்பாவைப் பார்த்து 'வாடா' என்பதோடு தொடர்ந்து சாதிப் பெயரையும் அப்பாவின் பெயரையும் சேர்த்துக் கூறினான். அப்பா கோவிப்பாரோ என்று தம்பிராசா நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தான். அவர் சிரித்துக்கொண்டு அவனுக்குப் பணிவு காட்டி 'அம்மா எங்க தம்பி?' என்று கேட்டபோது அவன் காதுகளை அவனாலேயே நம்பமுடியவில்லை. தம்பிராசாவிற்கு அன்றிலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை. அப்பாவுக்கே இப்படி என்றால் எனக்கு என்பதை அவனுக்கு எண்ணவே பிடிப்பதில்லை. அது சாதிகளாய், குறிச்சிகளாய், இன்னும் பலவாய், பலரோடு பழகும் துணிவைச் சிலவேளைத் தின்றுவிடுகின்றது. பிரச்சினையை எதிர்கொள்வதைவிடத் தப்பிப்பதில் ஒரு அலாதி நிம்மதி தம்பிராசாவிற்கு. இருந்தும் நோர்வேக்கு வந்த பின்பு எல்லோரும் மாறிவிட்டார்கள் என்கின்ற தப்புக்கணக்கில் ஒரு துணிவு வளர்ந்தது. சிவறூபனுக்கு தம்பிராசா தம்பதிகளைப் பார்த்த ஞாபகம் வரவே இல்லை. அந்தப் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற பரபரப்பு மேலும் மேலும் கொம்பாய் முளைத்து விடுமோ என்பதான அவதி. அவன் ஊரில் மற்றவரை அறிமுகம் செய்து கொள்வதற்கு, இல்லை அவர்கள் தகவல்களை ஞாபகக் களஞ்சியத்திலிருந்து எடுப்பதற்கு, பரம்பரைப் பெயர், இல்லை என்றால் குறிச்சி தெரிய வேண்டும். அதில் ஏதாவது ஒன்றைக் கூறினால் அத்தனை தகவலும் அகரவரிசையில் அவர்கள் ஞாபகத்தில் வந்துவிடும். சிவறூபன் தம்பிராசாவைப் பார்த்து, 'நீங்கள் ஊரில எந்த இடம், உங்கட அப்பாவிற்கு என்ன பெயர்?' என்று கேட்டான். தம்பிராசாவிற்கும், நீலாம்பிகைக்கும் அந்தக் கேள்வியை யாரும் கேட்டால், கட்டி இருப்பதை உருவுவது போன்ற அவமானமும், பதை பதைப்பும் ஏற்படும். ஏற்படத்தான் வேண்டுமா என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டது இல்லை. 'ஈழத்திலிருந்து இங்கே வந்த பின்பு பலரும் அதை மறந்ததாகக் காட்டிக் கொள்கிறார்கள். கலந்து ஊர்வலம் போகிறார்கள். சில இடங்களில் சமபந்தி போஷனம் சங்கோஜம் இல்லாமல் செய்கிறார்கள். அவர்கள் மனது, உள் வீட்டின் மனநிலை, வெளியில் தெரியாதவை. அவை விரிவான ஆராய்ச்சிக்குரியது' என்பதான எண்ணம் நீலாம்பிகையிடம் இருந்தது. ஆனால் முகத்துக்கு நேரே வித்தியாசம் காட்டாது பழகுவதில் தம்பிராசாவும் நீலாம்பிகையும் திருப்தி அடைந்தனர். 'அல்லது அவர்களால் கறுப்பு வெள்ளை பிரச்சனை இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது. அதற்கு நியாயம் கேட்க முடியாது' என்பதும் அவர்களுக்குத் தெரியும். அந்தப் பாதுகாப்பிற்கு இன்று பங்கம் வந்ததாய் உடல் உதறிப் போட்டது. எழுந்து ஓடினாலும் அவமானம், இருந்து பதில் சொன்னாலும் அவமானம். வெளியேற இருந்த இரண்டு வாசலிலும் நெருப்பு பற்றினால் எங்கே ஓடுவது? என்கிற தத்தளிப்பு அவர்களிடம். தம்பிராசா பதில் சொல்லாது திருதிருவென முழித்தான். கார்மேகம் சூழ்ந்த வானமாய் அவன் முகம் இருண்டது. அதைப் பார்த்த தர்மசீலன் 'அவை எங்கடை ஊர்தான். உனக்குத் தெரியாதே?' என்று சமாதானம் சொல்ல முயன்றான். 'அதுதான் ஆர் எண்டு கேட்கிறன்' என்று தொடர்ந்தான் சிவறூபன். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தவலிங்கம் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்றான். 'சும்மா இருங்க அப்பா' என்றாள் ராணி அவசரமாக. சிவறூபன் அது தனக்கு என்று விளங்கிக் கொண்டான். தவலிங்கம் கூறியது அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. அதை அவனுக்கு வேறு யாரிடமும் காட்ட முடியாது போக, அவன் பார்வை மீண்டும் தம்பிராசாவில் திரும்பியது. 'இவர் என்ன பெரிய மகாராசாவே, பெயரைச் சொன்னோண்ணை ஞாபகம் வாறத்துக்கு? எங்கடை ஊரில என்ன வழமை? பரம்பரைப் பெயரைச் சொல்ல வேணும், இல்லாட்டி எந்தக் குறிச்சி எண்டு சொல்ல வேணும். அதை விட்டிட்டு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது எண்டு ஒரு உருப்படி இல்லாத பழமொழி சொல்லுறியள். அந்தச் சுரைக்காய்க்குத்தான் லட்சம் லட்சமாய் சம்பளம் அள்ளித் தாராங்கள்' என்றான் சூடாக. தவலிங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற வாய் நமைச்சல் . என்றாலும் ஏட்டுச் சுரைக்காய் பற்றி விளங்கிக் கொண்ட விதத்தை எண்ணி 'அவை அறிந்து பேசு' என்பதாக அமைதி காத்தான். தம்பிராசாவிற்கு எழுந்து போவதா, இருந்து அவமானப்படுவதா என்கின்ற சங்கடம். எழுந்து போவதே அவன் முதல் தெரிவாக இருந்தது. அவன் நீலாம்பிகையைப் பார்த்தான். அவள் அவன் கண்களைச் சங்கடமாகப் பார்த்தாள், சோகமான சிட்டுக்குருவி போல அவள் இமைகளைச் சோர்வாக வெட்டினாள். அவர்களின் சங்கடத்தைப் பார்த்த தர்மசீலன் புதையுண்டு கிடக்கும் தேரை இழுப்பது போல, 'திருச்செல்வன் பார்த்துப் பார்த்து ஹோல் அலங்காரம் எல்லாம் நல்லா செய்திருக்கிறான். நானும் உதவிக்கு வந்து இருக்கோணும். எனக்கு வேலையாப் போச்சுது' என்றான் கவலையும் காரணமுமாக. 'அது நிறைய ஆட்கள் உதவிக்கு வந்திச்சினம். இதில நான், தம்பிராசா, அதைவிட செல்வன், குமரேசன், குஞ்சன், மணி, தேவாரம், நகுலன், இன்னும் கன வெளியூர்க்காரர் எண்டு நல்ல பம்பலாப் போச்சுது' என்றான் தவலிங்கம் மேலும் தேரிழுக்க கை கொடுப்பது போல. தம்பிராசா தான் தப்பி விட்டதாகத்தான் நினைத்தான். தம்பிராசா யார் என்பதுகூட சிவறூபனுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு பொறியியலாளனை மதிக்காமல், தான் யார் என்று சொல்லாது இழுத்தடிப்பது, அவனை அவமானப்படுத்தியதான எண்ணத்தைத் தந்தது. அவன் மீண்டும் தம்பிராசாவைப் பார்த்தான். தம்பிராசா அவன் பார்வை வேண்டாம் என்பதாகப் பக்கத்து மேசையைப் பார்த்தான். 'நீ எங்கே பார்த்தாலும் உன்னை நான் விடமாட்டேன்' என்பதாகச் சிவறூபன், 'சரி, நீங்கள் ஊரில எந்த இடம்?' என்றான் மீண்டும். அமைதி ஒப்பந்தம் எழுதிவிட்டு விமானத் தாக்குதல் நடத்தியதாக அதிர்ந்தான் தம்பிராசா. இந்த ஆக்கினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய தவலிங்கம், 'அவர் எங்கடை குறிச்சிதான். கொழும்பில இருந்ததால உனக்குத் தெரியாது' என்றான். அவன் இத்தோடு ஓய்ந்து விடுவான் என்கின்ற ஒரு நப்பாசை. ஆனால் சிவறூபன் விடுவதாய் இல்லை. 'கொழும்பில இருந்தால் என்ன, ஆர்ற்ற பரம்பரை எண்டு சொன்னா எனக்குத் தெரியும்தானே' என்றான். கூடி இருந்த பலரும் ஆளை ஆள் பார்த்து விழித்தார்கள். அப்படி ஒரு பூட்டு அதில் இருப்பது அவர்களுக்குத்தான் தெரியும். குறிச்சிக்கோ, பெயருக்கோ குல விசாரணைக்கான அடையாள எண் போன்ற பெறுமானம் அவர்கள் ஊரில் உண்டு. தகவற் களஞ்சியத்தைவிடத் தனி மூளைகளில் அதைப் பற்றி அதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும். 'உன்னைப் பற்றி அறிந்துகொள்ள அதில் ஒன்றைத் தா' என்பது சிவறூபனின் தொடர் அடம். 'எம் அடையாளம் தெரிந்தால் உன் கண்ணில் பரிகாசம் தோன்றுமே' என்கிற அஞ்சல், அவதி, சங்கடம் தம்பிராசாவிடம். பசுவும் கொலை செய்யும். மனித பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதாகக் கோபமும், அரிகண்டமும் தம்பிராசா மனதில் கொழுந்து விடத் துவங்கியது. நீலாம்பிகையின் அண்ணன் குட்டியன் கள்ளுச்சீவப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் தம்பிராசா கடன் கொடுத்த பணத்தைக் கேட்டதால் கோபமுற்ற முருகதாஸ் இருவரது காதலையும் அவனிடம் ஒப்புவித்தான். கோபத்தால் மனது தணலாகக் கொதிக்க, தடநாரையும் குடுவையையும் தெருவில் போட்டுவிட்டு பளைக்கத்தியோடு, இருவரையும் தேடி அலைய, ஒளித்து ஓடி ஒருவாறு சிவநாயகி வீட்டிற்குச் சென்று சரணடைய, ராகவன் எதற்கும் பயப்படாது தனது மகிழுந்தில் ஏற்றிச் சென்று வவுனியாவிற்கு அனுப்பியதையும், அதனால் தமது உயிரும், காதலும் பிழைத்ததையும் தம்பிராசாவால் மறக்க முடிவதில்லை. இன்று வரையும் எது ராகவன் என்பது அவனுக்கு விளங்கவில்லை. சிறுவனா அல்லது வளர்ந்த மனிதனா? மனிதர்கள் யார் எப்போது எப்படி இருப்பார்கள் என்பதோ எந்த நேரம் அவர்கள் எந்த முகம் வெளிப்படும் என்பதோ யாருக்கும் தெரியாது. அவை விதிக்கு அப்பாற்பட்டவை. 'என்ன தம்பிராசா வாய்க்க கொழுக்கட்டையே வச்சிருக்கிறியள்? ஒரு மனிஷன் கேட்டா அதுக்குப் பதில் சொல்ல மாட்டியளே?' என்று மீண்டும் பொல்லுப் போட்டான் சிவறூபன். தம்பிராசாவால் அதன் பின்பும் பொறுமையோடு மௌனம் காக்க முடியவில்லை. இதற்குப் பதிலளிக்க எதற்குத் தான் தயங்க வேண்டும் என்று எண்ணினான். இது, தன் குறையோ, குற்றமோ இல்லை என்று முடிவு செய்தவன் 'நான் கிழக்கு திக்கு' என்றான். அதைக் கேட்ட சிவறூபன் எள்ளலாக நகைத்த வண்ணம், 'அதே உந்த மசி மசிஞ்ச நீ' என்றான் ஒற்றையில். தம்பிராசா முறைத்துப் பார்த்த வண்ணம் மேசையிலிருந்து எழுந்தான். ஒலிபரப்பியில் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்கின்ற பாரதியின் பாட்டு போய்க் கொண்டு இருந்தது. 'புரட்சி செய்யாவிட்டாலும் மனிதாபிமானத்தோடு இருக்கலாம்' என்று எண்ணிய தவலிங்கத்திற்கு சிவறூபன் மேல் கடுங்கோபம் வந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று விளங்கவில்லை. ஆனால் தனது உரிமையை விட்டுக் கொடுத்து, தப்பிக்க முயன்ற தம்பிராசாவை உக்கிரமாகப் பார்த்து, 'எதுக்கு நீங்கள் இப்ப எழும்புகிறியள், அவருக்கு இதில இருக்கப் பிரச்சினை எண்டா அவர் எழும்பிப் போகட்டும், நீங்கள் ஏன் பயந்து ஓடவேணும்? அவனவன் பிரச்சினைக்கு அவனவன்தான் போராடோணும். மற்றவை போராட முடியாது' என்றான். தம்பிராசாவிற்கு தவலிங்கம் கூறியது சரியாகப் பட்டதோடு, தனது உரிமைக்கு தானே போராட வேண்டும் என்பதும் விளங்கியது. அவன் தனது இருப்பிடத்தில் மீண்டும் இருந்து கொண்டான். 'நான் அவரை யார் எண்டு தானே கேட்டன். எழும்பி ஓடச் சொன்னனா?' என்று சிவறூபன் அவமானத்தோடு வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். 'கேட்கக் கூடாததை கேட்காமல் இருப்பதும் அறம். அறிஞ்சு கொள்ளும்' என்றான் தவலிங்கம். மணமகள் மேடைக்கு வந்ததால் எல்லோரது கவனமும் அங்கே திரும்பியது. - இ.தியாகலிங்கம், நோர்வே https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/46675-2024-05-06-10-38-14
  19. எகிப்துடனான உதவிகள் வரும் ரபா எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்தத்திலும் இழுபறி maheshMay 8, 2024 May 8, 2024 6:00 am 0 comment காசாவின் தெற்கு நகரான ரபா மீது இரவு முழுவதும் சரமாரித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள எகிப்து மற்றும் காசாவுக்கு இடையிலான ரபா எல்லை கடவையை நேற்று (07) கைப்பற்றியதோடு இஸ்ரேலிய டாங்கிகள் ரபாவுக்குள் மேலும் முன்னேறி வருகின்றன. காசா போர் நேற்றுடன் 8 ஆவது மாதத்தை எட்டியதோடு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் போராடி வரும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கு இணங்குவதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் கடந்த திங்களன்று அறிவித்தபோதும், அந்தப் போர் நிறுத்த விதிகள் தமது கோரிக்கையை பூர்த்தி செய்வதாக இல்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. காசாவில் பொதுமக்கள் நிரம்பி வழியும் ரபா தொடர்பில் சர்வதேச அளவில் கவலை அதிகரித்திருக்கும் சூழலில், அங்கு பல இடங்கள் மற்றும் வீடுகள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. நேற்று அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ரபாவில் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. குறிப்பாக அங்குள்ள வீடுகளை இலக்கு வைத்தே இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டு மேலும் 96 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த இந்தப் போரில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,789 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 78,204 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதோடு அவர்கள் கூடாரங்கள் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருக்கும் நிலையில் பலரும் அங்கிருந்து வெளியேற முயன்று வருகின்றபோதும், காசாவின் பெரும்பகுதி இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏற்கனவே இடிபாடுகளாக மாறியுள்ளன. இதனால் செல்வதற்கு பாதுகாப்பான இடங்கள் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர். ரபாவில் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றில் காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டது. பிரசல்ஸில் நேற்று பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான தலைவர் ஜோசப் பொரல், ‘ரபா மீதான தாக்குதல் பொதுமக்களுக்கு உயிராபத்துக் கொண்டது’ என்று எச்சரித்தார். ‘அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அனைவரும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகுவை கேட்டுக்கொண்டபோதும், சர்வதேச சமூகத்தின் அனைத்துக் கோரிக்கைகளையும் மீறி ரபா தாக்குதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை’ என்று பொரல் குறிப்பிட்டுள்ளார். ரபா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் இஸ்ரேல் பல வாரங்களாக எச்சரித்து வந்தது. அங்கு ஆயிரக்கணக்காக ஹமாஸ் போராளிகள் நிலைகொண்டிருப்பதாகவும் பல டஜன் பணயக்கைதிகள் இருக்கக் கூடும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டது. ரபாவை கைப்பற்றாது ஹமாஸுக்கு எதிரான வெற்றி சாத்தியமில்லை என்றும் அது குறிப்பிட்டிருந்தது. ரபா எல்லைக் கடவை மூடல் இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைகொண்டிருப்பதால் காசாவுக்கு உதவிகள் வருவதற்கான பிரதான வழியாக இருக்கும் ரபா எல்லைக் கடலை மூடப்பட்டிருப்பதாக காசா எல்லை நிர்வாகத்தை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளிட்டுள்ளது. படைகள் அங்கு நுழைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவ வானொலி முன்னதாக குறிப்பிட்டிருந்தது. ரபா மற்றும் இஸ்ரேல் கட்டுப்பாட்டு கெரம் ஷலோம் எல்லை கடவையில் காசாவுக்கான உதவிகள் முற்றாக நிறுத்தப்பட்டிருப்பதாக எகிப்தில் உள்ள செம்பிறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான திட்டம் ஒன்று வகுக்கப்படும் வரை ரபா படை நடவடிக்கையை ஆரம்பிக்கக் கூடாது என்று அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வந்தன. ‘ரபா எல்லைக் கடவை மூடப்பட்டதை அடுத்து காசா குடிமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மரண தண்டனையை விதித்துள்ளனர்’ என்று காசா எல்லைக் கடவை நிர்வாகத்திற்காக பேசவல்ல ஹிஷாம் எத்வான் தெரிவித்தார். ரபா எல்லையை இஸ்ரேல் கட்டுப்படுத்துவது குறித்து பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. ‘கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, எல்லையை கடப்பதும், போதிய உதவி பொருட்கள் வராததும் ஆகும்’ என்று அந்த ஐ.நா. நிறுவனத்தின் பேச்சாளர் லுயிஸ் வட்ரிட்ஜ் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காசாவின் ரபா நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை மற்றும் ரபா எல்லைக் கடவையில் பலஸ்தீன பக்கத்தை இஸ்ரேல் கைப்பற்றியதை எகிப்து வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது. ரபா மீதான தாக்குதல் போர் நிறுத்த முயற்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கும் பகுதிகளில் உள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. அந்த மக்களை 20 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் ‘நீடிக்கப்பட்ட மனிதாபிமான வலயம்’ என்று அழைக்கும் பகுதிக்கு செல்வதற்கு இஸ்ரேல் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. சில பலஸ்தீன குடும்பங்கள் மீண்டும் ஒருமுறை கழுதை வண்டிகள் மற்றும் ட்ரக் வண்டிகளில் தமது குழந்தைகள் மற்றும் உடைமைகளை ஏற்றியபடி மீண்டும் ஒருமுறை வெளியேற ஆரம்பித்துள்ளனர். சிலர் சேறும் சகதியுமான வீதிகள் வழியே நடைபாதையாகவே வேளியேற ஆரம்பித்துள்ளனர். ஒக்டோபரில் போர் வெடித்தது தொடக்கம் வெளியேறிச் செல்வது இது நான்காவது முறை என்று அப்துல்லா அல் நஜர் என்ற பலஸ்தீனர் தெரிவித்துள்ளார். ‘எங்கே செல்வது என்று இறைவனுக்குத் தான் தெரியும். இன்னும் அது பற்றி நாம் தீர்மானிக்கவில்லை’ என்றார். கெய்ரோவில் போர் நிறுத்த பேச்சு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் பொருட்டு, தமது தூதுக்குழு நேற்று கெய்ரோ பயணித்ததாக மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், போர் நிறுத்தம் ஒன்றுக்கான முன்மொழிவை ஏற்பதாக தமது அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியோ கட்டார் மற்றும் எகிப்திடம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த முன்மொழிவு இஸ்ரேலிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் ஆனால் உடன்பாடு ஒன்றை எட்டும் முயற்சியாக பேச்சுவார்த்தையாளர்களுடனான சந்திப்புக்கு இஸ்ரேல் தூதுக்குழு ஒன்றை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளது. மறுபுறம் ரபாவில் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுக்க நெதயாகுவின் போர் கால அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த அலுவலகம் கூறியது. இதில் ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருக்கும் முன்மொழிவு எகிப்தினால் வழங்கப்பட்ட பலவீனமான ஒன்று என்றும் அதில் இஸ்ரேல் ஏற்காத கூறுகள் உள்ளடங்கி இருப்பதாகவும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பு மூன்று கட்டங்களைக் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றுக்கே இணங்கி உள்ளது. ஒவ்வொன்று 42 நாட்களைக் கொண்டதான இந்த போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதோடு இரண்டாவது கட்டத்தில் எஞ்சிய பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேல் காசாவில் இருந்து முழுமையாக வெளியேறவுள்ளது. மூன்றாவது கட்டத்தில் காசாவில் மூன்று தொடக்கம் ஐந்து ஆண்டுகள் கொண்ட மீள்கட்டமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதற்கு ஹமாஸ் பிரதிநிதிகள் இன்றைக்குள் கெய்ரோ செல்லவிருந்ததாக பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பலஸ்தீனர் தரப்பை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் கடந்த நவம்பரில் பாதி எண்ணிக்கையான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட ஒரு வாரம் போர் நிறுத்தத்திற்கு பின்னரான முதலாவது போர் நிறுத்தமாக அமையும். ஆனால் அது தொடக்கம் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்று இன்றி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் அமைப்பு மறுத்து வருவதோடு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்துவதாக இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. https://www.thinakaran.lk/2024/05/08/world/58850/எகிப்துடனான-உதவிகள்-வரும/
  20. டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டவர் எனவும், இதனால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. https://thinakkural.lk/article/301111
  21. ஆயுதங்களை வெறுத்த ஆனால் ஆயுதம் தாங்கியவர்களை (போராளிகளை) வெறுக்காத இருமையான மனநிலை. தமிழர்களின் போராட்டம் பெரிய அழிவுகளைக் கொடுத்தது. ஆனால் ஆயுதப்போர் ஒரு பலனையும் தரவில்லை. இந்த விரக்தியான நிலைதான் 90 களுக்கு முன்னர் பிறந்தவர்களினது. அது கதையில் தெரிகின்றது. கதையின் முடிவில் காட்டாற்று வெள்ளமும் அனுமதி பெற்றுத்தான் ஓடுகின்றது என்பது “அமைதி”யான இக்காலத்தில் அதிகாரமும், இராணுவ பலமும் எப்படி அடக்குமுறையைத் தொடர்கின்றன என்ற குறியீட்டுடன் முடித்தமாதிரி உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.