Everything posted by கிருபன்
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 05 Sep, 2025 | 09:47 AM ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை(நேற்று) இரவு 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது நிலநடுக்கமாக இது ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. குறித்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி 20.56 அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதுடன், அந்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், காயமடைந்த சுமார் 17 பேர் குனார் மாகாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,368 பேர் உயிரிழந்ததுடன், 2,180 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/224250
-
கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை
கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை 04 September 2025 குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏறாவூர் நீதிவான் முன்னிலையில் மாணவர்கள் 16 பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல குறித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தினமும் மாலை 05 மணிக்கும் 06 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏறாவூர் காவல்நிலையத்துக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிவான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் குறித்த 16 மாணவர்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 07 மாணவிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. Hiru Newsகிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணைகிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை . Most visited website in Sri Lanka.
-
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
எல்லயில் பஸ் 1000 அடி பள்ளத்தில் விழுந்த இடம் Editorial / 2025 செப்டெம்பர் 05 , மு.ப. 07:17 எல்லையில் பஸ்ஸூடன் ஜீப்பும் 1000 அடி பள்ளத்தில் புரண்டுள்ளது... http://editorial.tamilmirror.lk/articles/loadEditArticle/error#%23%23%23Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KB https://www.tamilmirror.lk/செய்திகள்/எல்லயில்-பஸ்-1000-அடி-பள்ளத்தில்-விழுந்த-இடம்/175-364056
-
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை!
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை! விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதன்படி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பின்வரும் கேள்விகள் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டன? இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன? இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்பட்டது? ( உதாரணம் - தகனம்) இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? அப்படியானால், அதன் அதன் இலக்கம் மற்றும் பிரதேசம். இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட தகவல்களை தான் கோருவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார். https://newuthayan.com/article/விடுதலைப்புலிகளின்_தலைவர்_தொடர்பில்_பாதுகாப்பு_அமைச்சிடம்_மனித_உரிமைகள்_செயற்பாட்டாளர்_கோரிக்கை!
-
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது! எல்ல - வெல்லவாய வீதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீற்றர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. காவல்துறையினர், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர். அத்துடன் விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/நாட்டை_உலுக்கிய_எல்ல_விபத்து_-_ஒருவர்_கைது!
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி! Bookday20/05/2025 அ. குமரேசன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிற, நவீனத்துவ இலக்கிய முன்னோடியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற நாவல் 1922ஆம் ஆண்டில் வெளியான ‘யுலிசிஸ்’ (Ulysses)., அந்நாளிலேயே புராணக் கதாபாத்திரத்தை வைத்து மாற்றுச் சிந்தனை உள்ளிட்ட புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியதற்காகப் பாராட்டுகளைப் பெற்ற படைப்பு. அயர்லாந்து நாட்டின் ஜேம்ஸ் ஜாய்ஸ் – James Joyce (1882–1941) எழுதிய இந்தக் கதை, தொடக்கத்தில் கடுமையான முரண் விமர்சனங்களைச் சந்தித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. இலக்கியவாதிகளின் கருத்துகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் படிப்படியாகத் தடை விலக்கப்பட்டது, அமெரிக்காவில் பதிப்பாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் 1934இல் தடையை நீக்கியது. முரண்களாகக் கூறப்பட்டவை – வழக்கமான நாவல்களிலிருந்து மாறுபட்ட நடை, ஆகவே வாசிப்பதற்கு எளிதாக இல்லை. திடீர்த் திடீரென்று தத்துவம், உளவியல், அறிவியல், வரலாறு, மொழி இலக்கணம் என்று எங்கெங்கோ போகிறது, ஆகவே கதை என்னதான் சொல்கிறது எனப் புரியவில்லை. தடைக்கான காரணங்களாகக் கூறப்பட்டவை –பாலியல் உறவுகளைச் சித்தரிக்கிறது, அது அன்றைய சமூகக் கருத்துகளுடன் முரண்படுகிறது. ஒரு பெண்ணின் பாலியல் எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுகிறது, அது ஒழுக்க நெறிகளை மீறுகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) & யுலிசிஸ் (Ulysses) இந்த எதிர்ப்புகள் நியாயமற்றவை என்று எழுத்தாளரும், கதையின் புதுமையை ரசித்துக் கருத்தை ஏற்றுக்கொண்ட இலக்கியவாதிகளும் நிறையவே வாதிட வேண்டியிருந்தது. அதில் வெற்றியும் கிடைத்தது. நாவல் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் சுவையானவை. மூன்று பாகங்களாக வந்த இந்த நாவலில் மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளன. அத்தியாயம் என்று சொல்வது தவறு, ஏனென்றால் புத்தகத்தில் காட்சி (எபிசோட்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கப் பதிப்புகளில், காட்சிகளுக்குத் தலைப்புகளோ, வரிசை எண்களோ தரப்படவில்லை. ஆனால் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவது வெவ்வேறு முறைகளில் உணர்த்தப்பட்டிருக்கும். ஒரு காட்சி உரைநடையாக இருக்கும், இன்னொரு காட்சி நாடக உரையாடலாக இருக்கும், மற்றொரு காட்சி கவிதை வடிவில் இருக்கும், வேறொரு காட்சி சொல் விளையாட்டுகளோடு ஆங்கில மொழியின் வரலாறு பற்றிப் பேசும்! பல இடங்களில் வாக்கிய அமைப்புகள் கரடு முரடாக இருக்கும். இதையெல்லாம் ஜேம்ஸ் ஜாய்ஸ் திட்டமிட்டே செய்திருந்தார். மூவரின் கதை 1904 ஜூன் 16 , அயர்லாந்து தலைநகர் டப்ளின். அந்த ஒரு நாளில் நடைபெறுகிற, குறிப்பாக மூன்று பேரின் அனுபவங்களும் சிந்தனைகளுமே கதை. பத்திரிகை விளம்பர முகவரான லியோபோல்ட் ப்ளூம் அதன் விற்பனையாளர். அவரது மனைவி மோல்லி ஒரு பாடகர். இளம் ஆசிரியரான ஸ்டீபன் டெடலஸ் ஓர் எழுத்தாளர். நகரத்தின் ஒரு கோபுரக் கட்டடத்தில் நண்பர்களோடு குடியிருக்கும் ஸ்டீபன் டெலஸ் தனது தாயின் மரணத்தை எண்ணி வருந்துகிறான். நண்பர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பள்ளிக்குச் சென்று வகுப்பில் வரலாற்றுப் பாடம் நடத்தும் ஸடீபன் பின்னர் கடற்கரைக்குச் சென்று தனியாக அமர்ந்து சிந்தனையில் மூழ்குகிறான். தனது தந்தையுடன் நல்ல உறவில் இல்லாத ஸ்டீபன் தனக்கொரு ஞானத் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறான். லியோபோல்ட் ப்ளூம் தனது மனைவிக்குக் காலை உணவு தயாரித்துக் கொடுக்கிறார். பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்து நகரத்தில் சுற்றுகிறார். மனைவிக்கு பிளேசஸ் போய்லான் என்ற, இசைக்குழு மேலாளருடன் தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகம் அவரை அப்படிச் சுற்ற வைக்கிறது. ஆனால், மார்தா கிளிஃபோர்ட் என்ற பெண்ணுக்குப் புனைப் பெயரில் காதல் கடிதங்கள் அனுப்புகிறவரான அவருக்கு, அந்தப் பெண்ணிடமிருந்து கடிதம் வருகிறது. தொழில் சார்ந்தும் நட்பு முறையிலும் பலரோடு உரையாடுகிறார். இன்னொரு பக்கம், தனது மகனை இழந்த துயரத்தில் இருக்கும் அவரும், தனக்கொரு ஞானப் புதல்வன் வேண்டுமென நினைக்கிறார். மோல்லிக்கு உண்மையிலேயே போய்லானுடன் தொடர்பு இருக்கிறது. அவருடைய பாலியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது காரணமா அல்லது மிகுதியான வேட்கை கொண்டவரா என்பது வாசகர்களின் கருத்துக்கு விடப்படுகிறது. சிறுவயதில் தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக ஒரு தோழியுடன் பழகியவர் என்று நாவலின் பிற்பகுதியில் தெரியவருகிறது. ஊரைச் சுற்றி வருகிற ப்ளூம் தனது செயல்கள் பற்றித் தனக்குத் தானே விமர்சித்துக்கொள்கிறார். தனிமை, மனைவியின் மீது சந்தேகம், தானே சந்தேகத்துக்கு உரியவராக நடந்து கொள்வது, மோல்லியின் விருப்பங்கள் பற்றிய மதிப்பீடு, மனசாட்சியின் விசாரணை ஆகியவற்றால் உந்தப்படும் உணர்ச்சி மேலீட்டுடன் அவர் அலைக்கழிக்கப்படுகிறார். ஒரு மதுபானக் கூடத்தில் ப்ளூம், ஸ்டீபன் இருவரும் அறிமுகமாகிறார்கள். ஒருவர்க்கொருவர் பிடித்துப்போக பல சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தான் தேடுகிற ஞான மகன் ஸ்டீபனாக இருக்கலாம் என்று ப்ளூமும், ஞானத் தந்தை ப்ளூமாக இருக்கலாம் என்று ஸ்டீபனும் நினைத்துக்கொள்கிறார்கள். ஸ்டீபனை ப்ளூம் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தன்னோடு தங்கச் சொல்கிறார். ஆயினும் தனது சுதந்திரமான பாதையில் பயணிக்க விரும்பும் ஸ்டீபன் மறுத்துவிட்டு மறுபடி தனிமையில் நகரத்திற்குள் செல்கிறான். ஒருநாள் பழக்கம்தான் என்ற நிலையில் வீட்டில் தங்குகிற அளவுக்கு நெருங்க வேண்டாம் என்ற எண்ணத்தாலோ, மோல்லியின் வெளிப்படைத் தன்மையால் ஏற்பட்ட தயக்கத்தாலோ ஸ்டீபன் அந்த முடிவை எடுத்திருப்பான் என்று வாசகர்கள் ஊகித்துக்கொள்ளலாம். கடைசிக் காட்சியில், மோல்லியும் ப்ளூமும் சேர்ந்தே படுத்திருக்கிறார்கள். அப்போது மோல்லி தனது கடந்தகால நினைவுகளுக்குள் பயணிக்கிறார். தன்னுரையாடல் வடிவில் அந்த நினைவுகள் வாசகர்களுக்குப் பகிரப்படுகின்றன. தனது பாலியல் வேட்கை, கணவரைப் பற்றிய மதிப்பீடு, அவருடைய பக்குவம், போய்லான் மீதான உடல் சார்ந்த கவர்ச்சி, அதற்கு முன் பல ஆண்களுடன் பழகியது, இளவயதினளாக இருந்தபோது ஒரு நண்பியிடன் தன்பாலின ஈர்ப்பு, திருமணத்திற்கு முன் ப்ளூம் தன்னை அணுகி சேர்ந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தியது, அப்போது நெருக்கமாக இழுத்தணைத்துத் தனது ஒப்புதலை அளித்த விதம்… இப்படியாக அந்தத் தன்னுரையாடல் வெளிப்படுகிறது. செய்து வைத்தவர்களா? இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்துப்படி – மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்பு இது. கதையின் ஓட்டமே, இயற்கையான பாலியல் விருப்பத்தைச் சார்ந்திருப்பதால் அது பற்றிய சித்தரிப்புகளில் தவறில்லை. மேலும், ஒரு கதாபாத்திரம் என்றால் முழுக்க முழுக்க நல்லவர், அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவர் என வார்க்கப்படுவதிலிருந்த இந்த நாவல் மாறுபடுகிறது. அத்துமீறும் ஆசைகளும் அதைப் பற்றிய சுயவிமர்சனங்களுமாக இயல்பான மனிதர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். ப்ளூம் மனைவியின் மீது ஆத்திரப்படும் வழக்கமான கணவராக இல்லாமல், மோல்லியைப் புரிந்துகொள்ள முயல்வதும், தனது நிலையை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய உளவியல் நுட்பங்கள். மோல்லியின் நினைவோட்டம் ஒரே சீராக இல்லாமல், தொடர்ச்சியாக அமையாமல் ஏறுக்கு மாறாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் தனியாகச் சிந்திக்கிறபோது எழுதிவைத்தது போலத் தொடர்ச்சியாக இருக்காது, ஒன்றைப் பற்றி யோசிக்கிறபோதே இன்னொன்றைப் பற்றிய யோசனை தொற்றிக்கொள்ளும். அதை அலசுகிறபோது தொடர்பே இல்லாத வேறொரு நிகழ்வு நிழலாடும். இதை ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார். அந்த நீண்ட தன்னுரையாடலில் எங்கேயும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி என எந்த நிறுத்தற்குறியும் இருக்காது. அது வாசிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், அதுவே ஒரு புதிய உத்தியாகவும் அமைந்தது. நினைவுப் பகிர்வில் மோல்லி இடையிடையே “ஆமா” (யெஸ்) என்ற சொல்லை அடிக்கடி சொல்வதாக வரும். “ஆமா… அவன் என்னிடம் நெருங்கி ஆமா அப்படிக் கேட்டான் ஆமா நான் அவனை ஆமா அப்படியே அணைச்சிக்கிட்டேன்…” இப்படி. இந்த “ஆமா” மிகவும் புகழ்பெற்ற சொல்லாக மாறியதாம். ஸ்டீபன் என்னாகிறான்? ப்ளூமும் மோல்லியும் இணக்கமானார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்கு கதையின் போக்கை வைத்து அவரவர் கண்ணோட்டத்தில் பதில் காண வைக்கிறது நாவல். இதன் மூலம் வாசகர்களைப் படைப்பின் பங்காளியாக்குகிறார் நாவலாசிரியர். தனிமனித சிந்தனையோட்டம், உளவியல் ஆய்வு, நகர வாழ்க்கை என இந்த நாவலை மூன்று கோணங்களில் ஆராயலாம். இப்படிப்பட்ட படைப்பு வெளியானபோது தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் ஒன்றும் உண்டு. ஸ்டீபன் மதுபானக்கூடத்தில் இருக்கிறபோது, தேசப்பற்று பற்றிய காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. அப்போது அவன் பிரிட்டிஷ் மன்னரைக் கடுமையாக விமர்சிக்கிறான். அயர்லாந்தில் சுதந்திரத்திற்கான கிளர்ச்சி ஏற்பட்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் இந்த விமர்சனம் அரசு மீதான தாக்குதலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காரணத்திற்காகவும் இங்கிலாந்தில் நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. பிற்காலத்தில் அதே இங்கிலாந்தில் பல நாடகக்குழுக்கள் நாவலை மேடையேற்றியிருக்கின்றன. வானொலி நாடகத் தொடராகவும் ஒலிபரப்பானது. 1967இல் பிரிட்டன்–அமெரிக்க கூட்டுத் தயாரிப்பாக ‘ யுலிசிஸ் (Ulysses) ’ என்ற தலைப்பிலும், 2003இல் அயர்லாந்து–கனடா கூட்டுத் தயாரிப்பில் ‘ப்ளூம்’ என்ற தலைப்பிலும் திரைப்படங்களாக வந்தது. முதல் படம் வணிக அடிப்படையிலும் நல்ல வெற்றியைப் பெற்றது, இரண்டாவது படம் சுமாராகவே போனது. பெயரிலேயே ஒரு கலகம் 1914இல் டப்ளின் நகர வாழ்க்கையைப் பல வகைகளில் பிரதிபலித்த ‘டப்ளினர்ஸ்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு, 1916இல் தன் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘எ போர்ட்ரெய்ட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் அஸ் எ யங் மேனி’ என்ற நாவல், 1939இல் சிக்கலான மொழி விளையாட்டுக்காகப் பெரிதும் பேசப்படும் ‘ஃபின்னேகன்ஸ் வேக்’ என்ற நாவல் ஆகியவை ஜாய்ஸ்சின் குறிப்பிடத்தக்க இதர சில படைப்புகளாகும். டப்ளின் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. செவ்வியல் தன்மை, புதுமை முயற்சி, ஒரு காலத்தில் முரணாகப் பார்க்கப்பட்ட கதாபாத்திரங்கள், நுட்பமான அரசியல்–சமூக விமர்சனம், மொழி விளையாட்டுகள், அறிவியலும் வரலாறும் உள்ளிட்ட தேடல்கள், உளவியல் வெளிப்பாடுகள் இவற்றுக்காக இன்றளவும் இலக்கியம் மற்றும் கல்வி வட்டாரங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது ‘ யுலிசிஸ் (Ulysses) ’. யுலிசிஸ் (Ulysses) கிரேக்கப் புராணக் கதைகளில் வருகிற ஒரு வீரர். ஹோமர் எழுதிய ‘ஒடிஸி’ காவியத்தில், பல சாகசங்களைச் செய்கிற முக்கியமான கதாபாத்திரம். அந்த வீரரின் பெயரை, ஜேம்ஸ் ஜாய்ஸ், எந்தப் பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் அசாத்தியமான சாகசங்களும் இல்லாத ஒரு சராசரி மனிதரான ப்ளூமின் ஒரு நாள் நிகழ்வுகளைக் கூறும் ஒரு நாவலுக்குச் சூட்டியதே கூட பேசுபொருளானது. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கை ஒன்றும் சாதாரணமாதல்ல என்று உணர்த்தவே இந்தப் பெயராம்! https://bookday.in/books-beyond-obstacles-14-james-joyces-ulysses-a-neglected-novel-based-article-written-by-a-kumaresan/
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
மணலில் கட்டப்பட்ட பாலம் ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் லோமேஸர் என்ற முனிவர் அவர்களுடன் வழிகாட்டி சென்றார் . ஒருமுறை , கங்கைக் கரையில் அமைந்திருந்த ஒரு ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து சென்று அந்த இடத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கத் துவங்கினார் . அந்த இடமானது , பரத்வாஜ முனிவரின் மகனான யவக்ரீதா தன் அழிவை தேடிக்கொண்ட இடமாகும் . அந்த இடமானது பரத்வாஜ முனிவரின் நண்பரான ரைபயா என்ற முனிவரின் ஆசிரமம் . அங்கே ரைபயாவும் அவரது மகன்களான பரவஸு மற்றும் அர்வவஸு வேதங்களைக் கற்றுணர்ந்து மிகவும் புகழுடன் வாழ்ந்த வந்தனர் . பரத்வாஜ முனிவரோ இந்த உலக சுகதுக்கங்களை விடுத்து இறைவனுடன் கலப்பது பற்றியே சிந்தனையாக இருந்தார் . ரைபயா மற்றும் அவரது மகன்களுக்கு கிடைத்த புகழை கண்டு பொறாமைக் கொண்டான் யவக்ரீதா. தானும் அது போன்ற புகழைப் பெற வேண்டி இந்திரனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டான் . அவனது கடுமையான தவத்தைக் கண்டு மனமிரங்கிய இந்திரனும் அவன் முன் தோன்றி எதற்கு இத்தகைய தவம் இயற்றுகிறாய் என கேட்டான். அதற்கு யவக்ரீதா “இந்திரனே ! இந்த உலகில் உள்ள வேதங்களை எல்லாம் கற்றுணர்ந்தவன் ஆக விரும்புகிறேன் . ஆனால், ஒரு குருவிடம் சென்று இவற்றை கற்க நான் விரும்பவில்லை . எனவே, எனக்கு அந்த வேதங்களின் அறிவை கொடுப்பாயாக” எனக் கேட்டான் . அதைக் கேட்ட இந்திரனோ “வேதங்களை அறிய அவற்றை கற்பதே ஒரே வழி . எனவே , இந்த தவத்தை விடுத்து ஒரு குருவிடம் சென்று அவற்றைக் கற்றுக்கொள்” எனக் கூறி மறைந்தான் . ஆனால் , தன் முயற்சியை கைவிட விரும்பாத யவக்ரீதா, மீண்டும் முன்னை விட கடுமையான தவத்தை மேற்கொள்ள துவங்கினான். இம்முறையும் இந்திரனிடம் மீண்டும் அதே வரத்தை கேட்க , இந்திரனும் முன்பு சொன்ன அதே பதிலைக் கூறினான் . பின் ஒரு நாள் காலையில் யவக்ரீதா குளிக்க ஆற்றங்கரைக்கு சென்றான். அங்கே ஒரு முதியவர் கரையில் இருந்த மணலை எடுத்து ஆற்றில் போட்டுக் கொண்டிருந்தார் . அவர் என்ன செய்கிறார் என புரியாத யவக்ரீதா அவரிடம் வினவினான் . அதற்கு அந்த முதியவர் “ஆற்றில் இந்த மணலைப் போடுவதன் மூலம் , இக்கரையில் இருந்து அக்கரை செல்ல பாலம் எழுப்புகிறேன்” என பதில் உரைத்தார் . அதைக் கேட்ட யவக்ரீதா சிரித்துக் கொண்டே “கையில் மணல் எடுத்து பாலம் கட்டப் போகிறாயா? உனக்கு இது முட்டாள்தனமாக தெரியவில்லையா? ” என கேலியாக கேட்டான். “வேதங்களை கற்காமலேயே அந்த அறிவு வேண்டும் என நினைப்பதை விடவா இது முட்டாள்தனம்?” என திருப்பிக் கேட்டார் முதியவர். அந்த முதியவர் வேறு யாருமில்லை . இந்திரன்தான் முதியவரின் வடிவில் யவக்ரீதாவிற்கு பாடம் புகுத்த வந்திருந்தான். தன் தவறை உணர்ந்த யவக்ரீதா, இந்திரனின் காலில் விழுந்து “நான் நன்கு கற்றறிந்தவன் ஆக ஆசிர்வதிப்பீர்களாக” என கேட்டான். இந்திரனும் அவனது மனமாற்றத்தால் மகிழ்ந்து “நீ வேதங்களை நன்கு கற்றறிந்து புகழுடன் வாழ்வாயாக” என ஆசிர்வதித்தார். அழிவை உண்டாக்கிய தற்பெருமை யவக்ரீதாவின் கதையை லோமேஸர் தொடர்ந்து சொல்லலானார் . இந்திரனிடம் ஆசி பெற்ற யவக்ரீதா மெல்ல மெல்ல வேதங்களைக் கற்று தேர்ந்தான். இந்திரனின் ஆசியால்தான் தான் தனக்கு வேதங்களின் அறிவு கிட்டியதாக எண்ணி கர்வமடைந்தான். தனது மகன் செல்லும் பாதையை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த பரத்வாஜர் அவனை அழைத்து அவனை எச்சரித்தார். ரிஷி ரைபயாவையும் அவரது மகன்களையும் குறைத்து எடை போடுவது அவனது அழிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியது அவனது மனதில் பதியவே இல்லை . ஒரு நாள் காலையில் , பரவஸுவின் அழகிய இளம் மனைவி , ரைபயாவின் ஆசிரமத்திற்கு அருகே நடந்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன், தனது உணர்வுகளையும் மனதையும் அடக்க முடியாத யவக்ரீதா, மிருகமாய் மாறினான். தனிமையான இடத்திற்கு அவளை இழுத்து சென்று அவளை மானபங்கப்படுத்தினான். ஆசிரமத்திற்கு திரும்பி வந்த ரிஷி ரைபயா, அங்கே தனது மருமகள் அலங்கோலமாய் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் விசாரிக்கத் துவங்கினார். அவள் நடந்ததை சொல்ல, அதைக் கேட்ட ரிஷி ரைபயா மிகவும் ஆத்திரம் கொண்டார். தனது ஜடாமுடியில் இருந்து இரு முடிகளை பிடுங்கி மந்திரம் ஜெபித்து அங்கே இருந்த அக்னியில் வீசினார். அந்த அக்னியில் இருந்து அழகிய பெண் ஒருத்தியும் , கோர உருவம் கொண்ட அரக்கியும் உருவானார்கள். யவக்ரீதாவை கொல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார் ரைபயா. யவக்ரீதா காலை நேர கடன்களை கழித்துக் கொண்டிருக்கையில் , அவனை நோக்கி வந்த அந்த அழகிய பெண் அவனை மயக்கி அவன் தண்ணீர் வைத்திருந்த கமண்டலத்தை அவனிடமிருந்து பறித்து சென்றது. இப்பொழுது அந்த அரக்கி தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொல்ல வந்தது. யவக்ரீதா மந்திரங்கள் மூலம் அந்த அரக்கியை விரட்ட இயலும் என்றாலும், அதற்கு முன் அவன் தன்னை நீரால் சுத்திகரித்துக் கொள்ளவேண்டும். அவனின் கமண்டலம் பறிபோனதால், அருகில் இருந்த குளத்தை நோக்கி ஓடினான். ஆனால்,அவன் அதனருகே சென்றவுடன் அந்த குளம் வறண்டுவிட்டது. பின், அருகில் இருந்த ஓடையை நோக்கி ஓட அதுவும் அவன் அங்கே சென்றவுடன் காய்ந்து போனது. தன் உயிரை காத்துக் கொள்ள, அவனது தந்தை பரத்வாஜர் தவம் புரிந்துக் கொண்ட குடிலை நோக்கி ஓடினான். ஒவ்வொரு இடமாய் ஓடியவனின் சிகை அவிழ்ந்து முகம் வியர்த்து அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான். பாரத்வாஜரின் குடிலை காத்து நின்ற வயதான காவலாளிக்கு யவக்ரீதாவின் இந்த கோலம் அடையாளம் தெரியவில்லை. யாரோ பாரத்வாஜரின் தவத்தை கெடுக்க வருவதாக எண்ணி அவனை தடுத்து நிறுத்த அவன் பின்னாலேயே வந்த அந்த அரக்கி , தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொன்றது. https://solvanam.com/2025/02/23/மணலில்-கட்டப்பட்ட-பாலம்/
-
'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?
தெரு நாய் சர்ச்சை : தீர்வு ரொம்ப சிம்பிள்.. கழுதையை பற்றி கவலைப்பட்டார்களா? – கமல்ஹாசன் விளாசல்! 3 Sep 2025, 2:34 PM தெரு நாய்கள் கடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். தெரு நாய்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அம்மு, நடிகர் படவா கோபி உள்ளிட்டோர் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர்-3) காலை சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தெரு நாய்கள் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கமல், ” தீர்வு ரொம்ப சிம்பிள். விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள் கழுதையை எங்க காணோம் என்று யாராவது கவலைப்படுகிறார்களா.. கழுதை எல்லாம் காணாமல் போய்விட்டதே.. நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. அதை நாம் இப்போது பார்ப்பதே இல்லையே..கழுதையை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா.. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்ற வேண்டும்.. அவ்வளவுதான் எனது கருத்து” என தெரிவித்துள்ளார். https://minnambalam.com/kamal-response-on-the-stray-dog-controversy/
-
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை September 3, 2025 5:22 pm கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய சீமான், கச்சதீவு தமிழகத்தின் சொத்து. அது தமிழர்களுக்குச் சொந்தமானது. இந்தியா எப்படி கொடுக்க முடியும். இதனை இலங்கைக்கு கொடுக்கும் போது அதனை இந்திய நாடாளுமன்றில் எதிர்த்த ஒரே நபர் மூக்கையா தேவராகும். தமிழன தலைவர் புகழ்ந்துகொண்ட கலைஞர் என்ன செய்தார். கச்சதீவு கொடுக்கப்பட முன்னர் அதுகுறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளன. இந்தியமும் திராவிடமும் தமிழனத்துக்கும் தமிழத் தேசியத்துக்கும் எப்போதும் எதிரான என்பதை இதன் ஊடாக புரிந்துகொள்ள முடியும். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் உறுதியாக கச்சதீவு மீட்கப்படும். அதற்கான தீர்மானம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு நெய்தல் படை அமைக்கப்பட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். கச்சதீவை இந்தியா மீட்காவிடின் தமிழ்நாடு பிரியும். சிங்களவர்கள் நண்பர்கள் என்றாம் நாம் யார் எனக் கேள்வியெழுப்புகிறோம். அவர்கள்தான் முக்கியம் என்றால், எம்மை பிரித்து விடுங்கள் எனக்டி கோருவோம். இந்திய விடுதலைக்காக போராடியது தமிழர்கள். எம்மைவிட அவர்கள்தான் முக்கியம் என்றால், அவர்களுடன் இந்தியா நட்பு பாராட்டிக்கொள்ளட்டும் என்றும் அவர் கூறினார். https://oruvan.com/auto_awesome-translate-from-english-1829-5000-tamil-nadu-will-secede-from-india-if-kachchadive-is-not-recovered-from-sri-lanka-seaman-warns/
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற அறுவை சிகிச்சைகள் மூலம் அதிக நாட்கள் வாழ முடியுமா? இதுகுறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது. அவர்கள் பேசியதாவது, ஷி ஜின் பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள். புதின்: ஆம். மிகச் சில ஆண்டுகளில், உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாக இருப்பீர்கள். அந்த வகையில், இறவாமை சாத்தியமாகும். ஷி ஜின்பிங்: இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் கணிக்கின்றனர். இருவருடன் நடந்து சென்ற வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதைக் கவனித்து சிரித்தார். உரையாடலின் மொழிபெயர்ப்பை அவர் கேட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இது குறித்து கேட்டபோது, புதின் உரையாடலை உறுதிப்படுத்தினார். “நாங்கள் அணிவகுப்புக்கு நடந்து சென்றபோது ஷி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசினார் என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மனிதகுலம் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்” என்று புதின் கூறினார். https://akkinikkunchu.com/?p=339524
-
நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திற்து வைப்பு
நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திற்து வைப்பு PrashahiniSeptember 4, 2025 நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று (03) நடைபெற்றது. நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தனர். அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர். நிகழ்வில் நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அகிலன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.thinakaran.lk/2025/09/04/breaking-news/150884/நாவற்குழியில்-நவீன-கடலுண/
-
போர்த்துக்கல் - லிஸ்பனில் ரயில் கேபிள் கார் விபத்து ; 15 பேர் பலி!
போர்த்துக்கல் - லிஸ்பனில் ரயில் கேபிள் கார் விபத்து ; 15 பேர் பலி! 04 Sep, 2025 | 09:30 AM போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பனில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் எனும் ரயில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிஸ்பனின் நகரமுதல்வர் கார்லோஸ் மொய்டாஸ் புதன்கிழமை இரவு வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் நகர முதல்வரை வரவேற்கும் போர்த்துக்கல் அரசாங்கம், தேசிய துக்க தினமொன்றை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/224158
-
மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வாசஸ்தலம் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்படுமா?
மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வாசஸ்தலம் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்படுமா? 04 Sep, 2025 | 10:54 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அரச உயர் அதிகாரிகளால் இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்ப்பாத்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் காலங்களில் சபாநாயகரிடம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224168
-
புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த லக்சயன்!
புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த லக்சயன்! 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளான். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன. இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர். மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்தச் சாதனையின் மூலம், தனது பாடசாலைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmf4xo9k0007xo29nktu6dqqe புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று ஷனுதி அமாயா சாதனை 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதேவேளை, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன. இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmf4xy9xm007dqplp73s06m6e
-
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா? மொஹமட் பாதுஷா இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்; மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே இந்த கேள்விக்கான விடையைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சபையில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி. ‘சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று தமிழ் பேசும் மக்கள் தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய தினம் ஆகியவையாகும்’ என்று கூறி, தொடர்ச்சியாக உரையாற்றினார். பெருந்தேசிய அரசியலில் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க ஒரு எம்.பியாக எவ்வாறு கனகச்சிதமாக உரையாற்றினாரோ, அவ்வாறு உரையாற்றுகின்ற ஒரு தமிழ் அரசியல்வாதியாகவே சிறிதரன் எம்.பியைச் சொல்ல முடியும். இவர் உரையாற்றுகின்ற பாணிக்கு முஸ்லிம் சமூகத்திடையேயும் ஒரு வரவேற்பிருந்தது எனலாம். இலங்கையில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் கூட தனியான தேசிய இனங்களாக வாழ்கின்றனர். ஏன்? கத்தோலிக்க மக்களும், பூர்வீகக் குடியைச் சேர்ந்த (வேடுவ) மக்களும் தங்களைத் தேசிய இனங்களாக முன்னிறுத்த முடியும் என்பதுதான் யதார்த்தமாகும். இதுவெல்லாம் தெரியாத ஒரு அரசியல்வாதி என சிறிதரனை குறிப்பிட முடியாது. அத்துடன், அவர் தவறுதலாக உரையாற்றியதாகக் குறிப்பிடவும் முடியாது. அப்படிச் செய்திருந்தால் அந்த 20 நிமிட உரையில் எங்காவது ஒரு இடத்தில் அவர் அதனைத் திருத்தியிருப்பார் அல்லது வெளியில் வந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பார். எனவே, அவர் இதனைத் தெளிவாக, திட்டமிட்டே உரையாற்றியிருக்கின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிறிதரனுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் எம்.பிக்களும் இவ்விடயத்தைச் சரிப்படுத்தவோ சமாளிக்கவோ முற்படவில்லை என்பது இங்கு கவனிப்பிற்குரியது. இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் மட்டும்தான் வாழ்கின்றன என்ற தொனியில் உரையாற்றியதன் மூலம், அபத்தமானதும் பிற்போக்குத்தனமானதுமான கருத்தொன்றை மேற்படி தமிழ் எம்.பி. முன்வைத்திருக்கின்றார். இப்படியொரு கருத்தை சிறிதரன் போன்றவர்களிடமிருந்து முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவில்லை. வரைவிலக்கண அடிப்படையில் நோக்கினால், இனம் என்பது வேறு, தேசிய இனம் என்பது வேறு. ஒரு மக்கள் கூட்டம் வாழுகின்ற நிலப்பகுதி, கலாசாரம், பண்பாட்டு நடைமுறைகள், இன மரபு வரலாறு, மதம், மொழி என்பவற்றின் அடிப்படையிலேயே தேசிய இனங்கள் வரையறை செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் நூற்றாண்டு காலமாக இலங்கையில் ஒரு தேசிய இனமாக ஆகிவிட்டனர். இது, தமிழ்த் தேசியமோ சிங்கள தேசியமோ நிராகரிக்க முடியாத நிதர்சனமாகும்.அதனையும் மீறி யாராவது, இரண்டு தேசிய இனங்கள்தான் இந்த நாட்டில் உள்ளன என்று கூறுவார்களாயின் அதன் பின்னால் ஒரு கருத்தியல் ரீதியான நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஆரம்பக் காலங்களில் மொழியைப் பிரதான காரணியாக வைத்து தேசிய இனங்கள் தீர்மானிக்கப்பட்டாலும் அப்படி மொழியை மட்டும் கொண்டு தேசிய இனங்களைத் தீர்மானிக்கும் காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது. இப்போது மொழி என்பது, ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துவதற்கான ஏகப்பட்ட காரணிகளுள் ஒரேயொரு காரணி மட்டுமே என்பதைக் கவனிக்க வேண்டும். முஸ்லிம்கள் மொழியால் ஒன்றுபட்டாலும் ஏனைய காரணிகளால் வேறுபடுகின்றார்கள். கலாசாரம், மதம், பண்பாடு, மரபினம், ஆட்புல எல்லை, பொருளாதார அம்சங்கள் என ஏனைய எல்லா விதத்திலும் பிரத்தியேகமான அடையாளங்களை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கின்றது. அத்துடன், தெற்கில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது தாய் மொழியாக சிங்களத்தையே பேசுகின்றனர் என்பதையும் சிறிதரன் போன்றோர் மறந்து விடக் கூடாது. அவர் சொல்வது போல, வடக்கு, கிழக்கில் மொழியை அடிப்படையாக வைத்து முஸ்லிம்களைத் தமிழ் பேசும் தேசிய இனமாகக் கருதுவதாயின், தெற்கில் முஸ்லிம்கள் சிங்களத்தைப் பிரதானமாகப் பேசுகின்றார்கள் என்பதற்காக சிங்கள தேசிய இனத்திற்குள் உள்ளடக்க முடியுமா? அது மட்டுமன்றி, தமிழை விட அதிகமாக சிங்களத்தைப் பேசுகின்ற தமிழர்களையும் சிங்கள தேசிய இனமாகக் கொள்ள முடியுமா? முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் பேசும் சமூகங்களே அன்றி தமிழ் பேசும் ஒரு தனி தேசிய இனம் அல்ல. வடக்கு, கிழக்கில் அவர்கள் தமிழர்களோடும் அதற்கு வெளியே பெரும்பான்மைச் சமூகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழ்கின்றார்கள் என்பதற்காக தங்களது தேசிய இனத்திற்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி விட முடியாது. குறிப்பாக, முஸ்லிம்களும் தமிழ் பேசும் இனம் என்று கருதியிருந்தால் வடக்கில் இருந்து தனியே முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றியிருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கில் பல இடங்களில் முஸ்லிம்கள் ‘தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு’ தமிழ் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். இதனையெல்லாம் மறந்து விட்டு, கருத்துக் கூற முற்படும் பழமைவாத சிந்தனையைத் தமிழ் அரசியல்வாதிகள் களைய வேண்டும். முஸ்லிம்களைத் தனியொரு தேசிய இனமாகக் கூட கருத முடியாத மனநிலையில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள்தான், சிங்கள தேசியத்திடம் தமிழ் மக்களுக்கான உரிமையை வேண்டி நிற்கின்றனர் . என்பது முரண்நகை இல்லையா?20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தை, மதம், கலாசாரம், பண்பாடு என பல அடிப்படைகளில் தனித்துவமான அடையாளங்களின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாகக் கூறுவதற்குக் கூட விரும்பாத சூழலில் நாம், நல்லிணக்கம் பற்றிப் பேசுவது நகைப்புக்கிடமானது இல்லையா?உலக அரங்கில் தேசிய இனங்களைப் பிரகடனப்படுத்தும் ஒழுங்குகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன. முன்னைய காலங்களில் மொழி ஒரு பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த போதும், இப்போது மொழியை விட வேறு பல காரணிகள்தான் தேசிய இனங்களைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மதப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே நெதர்லாந்தில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர் தம்மைத் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி, பெல்ஜியம் என்ற நாடாகப் பிரிந்து சென்றனர். தவிர, மொழியை அடிப்படையாகக் கொண்டல்ல. இஸ்ரேல் உருவானதும் மொழியை அன்றி யூதர்கள் என்ற அடையாளத்தை மையமாகக் கொண்டே ஆகும். மதத்தை அடிப்படையாக வைத்து ஒரு தேசிய இனம் பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது. உலகில் வாழும் ஆங்கிலம் பேசுகின்ற எல்லோருமே ஒரு தேசிய இனத்திற்குள் உள்ளடங்குவது கனவிலும் சாத்தியமில்லை. ஐரோப்பாவில், ஆங்கிலம் என்ற ஒரே மொழியைப் பேசுகின்ற சமூகங்கள் வேறு காரணங்களை முன்வைத்து தம்மை, தனியான தேசிய இனங்களாக முன்னிறுத்தி, பிரிந்து செல்ல முற்படுவதை நாம் கண்டிருக்கின்றோம். அரபு மொழியைப் பேசும் நாடுகளிலும் இவ்வாறு தனித்தனியான பல தேசிய இனங்கள்; உருவாகியுள்ளன.இதனையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு, இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன என்று நாட்டின் உயரிய சபையில் உரையாற்றிச் செல்வது. குறுகிய அரசியல் சிந்தனையையே வெளிப்படுத்துகின்றது. பாராளுமன்றத்தில் இக்கருத்தை சிறிதரன் எம்.பி. கூறியபோது, இரு முஸ்லிம் எம்.பிக்கள் மாத்திரம் எழுந்து பதிலளித்தனர். ஹக்கீம். றிசாட் போன்ற கட்சித் தலைவர்களும் அரச தரப்பு முஸ்லிம்களும் மௌனமாக இருந்தாலும் கூட, இக்கருத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கின்றது. இப்படியான வேலையைச் சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இருந்தே பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில தமிழ் தலைவர்கள் செய்து வந்தார்கள். ‘முஸ்லிம்களும் தமிழர்கள்’ அல்லது ‘தமிழ் பேசும் இனத்தவர்’ என்று சொன்னார்கள். ஆனால், அதனை முஸ்லிம் சமூகம் மறுதலித்து. தாங்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதைப் பல வழிகளில் நிரூபித்தது. பின்வந்த தமிழ்த் தேசிய தலைவர்கள் இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட்டதாகச் சொல்லலாம். ஆனால், சிறிதரன் எம்.பியின் அண்மைய உரையானது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் சிந்தனை என்ற முருங்கை மரத்தில் மீண்டும் ஏறுகின்றார்களா? என்ற சந்தேகத்தைக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, இக்கருத்து உண்மையில், சிறிதரன் எம்.பியின் தனிப்பட்ட கருத்தா அல்லது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியத்தின் கருத்தும் இதுதானா என்பதைத் தெளிவுபடுத்துவது ஏனைய தமிழ் எம்.பிக்களின் பொறுப்பாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிதரன்-எம்-பியின்-கருத்து-முஸ்லிம்கள்-ஒரு-தேசிய-இனம்-இல்லையா/91-363965
-
எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி சர்வதேச சபையில் அநுர வழங்கவுள்ள செய்தி -விஜித ஹேரத் தெரிவிப்பு!
எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி சர்வதேச சபையில் அநுர வழங்கவுள்ள செய்தி -விஜித ஹேரத் தெரிவிப்பு! எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், நல்லிணக்க பொறிமுறை மற்றும் யுத்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு 'அதிக காலமும் விட்டுக்கொடுப்பும்' தேவை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வு செப்டெம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பிரித்தானியா உட்பட பல நாடுகளின் குழுமம் இம்முறை இலங்கை பிரச்சினை தொடர்பில் மேலும் ஒரு தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன. அது குறித்து ஆரம்ப கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன, ஆனால் தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு 'அதிக காலம் மற்றும் விட்டுக்கொடுப்பும்' தேவை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் இலங்கைக்கு தனது கருத்துக்களை முன்வைக்க இராஜதந்திர சமூகத்தின் ஆதரவு தேவையெனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நடைபெறவுள்ள அமர்வில் தனது அறிக்கையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை கடந்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது தற்போதைய அரசாங்கமும் அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது. கடந்த 11 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சர் இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அருணி ரணராஜா, செப்டெம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்றும் கூறினார். https://newuthayan.com/article/எதிர்வரும்_செப்டெம்பர்_24ஆம்_திகதி_சர்வதேச_சபையில்_அநுர_வழங்கவுள்ள_செய்தி_-விஜித_ஹேரத்_தெரிவிப்பு!
-
ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா?
ரணில் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய வல்லமையைப் பெற்றுவிட்டாரா? Veeragathy Thanabalasingham on September 1, 2025 Photo, Social Media முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல முதலாவது ‘சாதனைகளுக்கு’ சொந்தக்காரர். இந்த நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விக்கிரமசிங்கவை போன்று வேறு எந்த அரசியல் தலைவரும் நீண்டகாலம் பதவி வகித்ததில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தனது கட்சியின் தலைவராக இருந்து வரும் அவரே மிகவும் நீண்டகாலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல் தலைவர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்தில் தேர்தல் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவான முதல் அரசியல் தலைவர் விக்கிரமசிங்கவே. இறுதியில் அவரே அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி என்ற அவப்பெயரையும் தனது சுமார் அரை நூற்றாண்டுகால அரசியல் வாழ்வின் அந்திமக் காலத்தில் சம்பாதிக்க வேண்டியதாகப் போய்விட்டது. ஜனாதிபதியாக இருந்த வேளையில் 2023ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜி 77 நாடுகளின் உச்சி மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக கியூபாவுக்கும் அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது வருடாந்த கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட விக்கிரமசிங்க நாடு திரும்பும் வழியில் லண்டனில் தனிப்பட்ட தேவைக்காக தங்கிநின்ற இரு நாட்கள் தனக்கும் தனது குழுவினருக்குமான செலவுகளுக்கு அரச பணத்தைப் பயன்படுத்தியதன் மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியை மைத்ரி. விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகம் ஒன்று கௌரவப் பேராசிரியை பட்டம் வழங்கிக் கௌரவித்த வைபவத்தில் பங்கு பற்றுவதற்காகவே அவர் லண்டனுக்குச் சென்றார். பேராசிரியை மைத்ரி தனக்குரிய கௌரவத்தைப் பெறுவதற்காக தனது சொந்தப் பணத்திலேயே ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றிருந்தார். அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு லண்டனுக்குச் சென்று தங்கியிருந்த போது விக்கரமசிங்க தனது அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கான செலவினங்களுக்கு 16.6 மில்லியன் ரூபா அரச பணத்தை செலவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இலங்கை பொலிஸின் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 22ஆம் திகதி தனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு அதன் தலைமையகத்துக்குச் சென்ற விக்கிரமசிங்கவை நீண்டநேரம் விசாரணை செய்த பிறகு பொலிஸார் கைதுசெய்து கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ‘நாடக பாணியிலான’ நிகழ்வுகளுக்குப் பிறகு அன்றையதினம் இரவு 10 மணிக்குப் பிறகு அவரை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்ட விக்கிரமசிங்கவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் முதலில் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவரால் ஆகஸ்ட் 26ஆம் திகதி நீதிமன்றத்திற்கு செல்லமுடியவில்லை. இணையவழியின் மூலமாக நீதிமன்றத்தில் தனது பிரசன்னத்தை உறுதிசெய்த முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு கோட்டை மாஜிஸ்திரேட் அவரை தலா ஐந்து மில்லியன் ரூபா மூன்று ஆளுறுதிப் பிணையில் விடுதலை செய்தார். ஒருவாரகாலம் தேசிய வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருதய நோய் மற்றும் நீரிழிவு உட்பட பல பாரதூரமான நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற பிறகு ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி வீடு திரும்பினார். வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கு விக்கிரமசிங்க விரும்பினால் அரசாங்கம் அதற்கு அனுமதிக்குமா என்று தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மீண்டும் விக்கிரமசிங்கவின் வழக்கு அக்டோபர் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும். அவரின் கதியை இனிமேல் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்பதால் இதற்கு மேல் நாம் அதைப்பற்றி எதையும் கூறுவது நீதித்துறையை அவமதிப்பதாக அமைந்து விடும். அரச பணத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டதற்குப் பிறகு அந்த விவகாரம் முற்றிலும் சட்டப் பிரச்சினையாக மாறிவிட்டாலும் கூட, அது அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது. விக்கிரமசிங்கவை கடந்த காலத்தில் மிகவும் கடுமையாக விமர்சித்த அரசியல்வாதிகளும் கூட அணிதிரண்டு அவருக்கு தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டினர். பெரும்பாலும் சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களுமே செய்தியாளர்கள் மகாநாடுகளைக் கூட்டி விக்கிரமசிங்கவை நியாயப்படுத்தியதுடன் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாழ்வையும் தனிப்பட்ட வாழ்வையும் வேறுபடுத்திப்பார்க்கக் கூடாது என்றும் கூறினர். மேலும், விக்கிரமசிங்க மீதான சட்ட நடவடிக்கையை அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் என்றே வர்ணிக்கிறார்கள். விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான பெரும் தாக்குதல் என்று கண்டனம் செய்த அதேவேளை, முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ விக்கிரமசிங்கவின் கைதை அரசியல் பழிவாங்கல் என்று வர்ணித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்டமைத்து வருகின்ற அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு கட்சி வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். கோட்டபாய ராஜபக்ஷ மாத்திரமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக கருத்து எதையும் வெளியிடாமல் இருந்துவரும் முன்னாள் ஜனாதிபதியாவார். விக்கிரமசிங்க விவகாரம் ஒரு ஜனாதிபதியின் தனிப்பட்ட விஜயங்களையும் உத்தியோகபூர்வ விஜயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியுமா என்ற விவாதம் ஒன்றையும் மூளவைத்திருக்கிறது. அவ்வாறு வேறுபடுத்திப்பார்க்க முடியாது என்று விக்கிரமசிங்க கூறியதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தி/ ஜே.வி.பியின் நிகழ்ச்சிகளுக்கும் அநுராதபுரத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்கும் செல்லும் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பாதுகாப்புப் பிரிவினர் இல்லாமல் தனது சொந்த வாகனத்தையா பயன்படுத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதி தனிப்பட்ட தேவைகளுக்காக, குறிப்பாக சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்வையிடுவதற்காக நாட்டுக்குள் பயணங்களைச் செய்வதையும் முன்னாள் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு விமானங்களில் செல்வதையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் முடியுமானால் திசாநாயக்கவின் உள்நாட்டுப் பயணங்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடட்டும் பார்க்கலாம் என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சவால் விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. தற்போதைய இலங்கை அரசியல் தலைவர்களில் விக்கிரமசிங்கவே சர்வதேச மட்டத்தில் செல்வாக்கும் மதிப்பும் கொண்டவராகக் கருதப்படுவதால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை குறிப்பாக, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் கண்டனம் செய்யும் என்றும் அவரை உடனடியாகவே விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் என்றும் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. அவ்வாறு எதுவுமே நடைபெற்றதாகத் தெரியவில்லை. இலங்கையின் நிகழ்வுப் போக்குகளை அந்த நாடுகள் அவதானித்துக் கொண்டிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து அவருக்கு சார்பாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டவர்கள் என்றால் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்முமேயாவர். விக்கிரமசிங்க பாரதூரமான குற்றச் செயல் எதையும் செய்யவில்லை என்று கூறிய அவர்கள் இருவரும் அவரை உனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள். முன்னாள் ஜனாதிபதியின் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து நெருக்குதல்கள் வந்ததா என்று அமைச்சரவை செய்தியாளர்கள் மகாநாட்டில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேட்கப்பட்டபோது அதற்குப் பதிலளித்த அவர், எந்தவொரு வெளிநாட்டு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் சில தனிப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவமற்றவை என்றும் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் தற்போது இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சமத்துவமான முறையிலும் நேர்மையாகவும் பிரயோகிக்கப்படுகிறது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து கொழும்பில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் விளக்கிக் கூறியதாகவும் கைது தொடர்பில் மேலதிக விபரங்களை குறிப்பிட்ட சில சர்வதேச அமைப்புக்கள் அவர்களிடம் கோரியதாகவும் கட்சி வட்டாரங்கள் அறிவித்தன. விக்கிரமசிங்க விவகாரம் தற்போது சிதறிப்போயிருக்கும் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தி அரசாங்கத்துக்கு பெரிய சவாலைத் தோற்றுவிக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. முன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு உடனடியாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் காணப்பட்ட ஆரவாரம் தற்போது தணிந்து போயிருப்பதாகவே தோன்றுகிறது. எதிர்க்கட்சிகளின் பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பதற்கு அவற்றை வழிநடத்தக்கூடிய அரசியல் செல்வாக்கும் வல்லமையும் கொண்ட ஏற்புடைய தலைவர் ஒருவர் அவர்கள் மத்தியில் இல்லை. அதேவேளை, கடந்த வாரத்தைய சம்பவங்களுக்குப் பிறகு எதிரணி அரசியல் கட்சிகளை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு வலிமையான அரசியல் காரணியாக விக்கிரமசிங்க மாறியிருக்கிறாரா என்பதும் முக்கியமான ஒரு கேள்வி. இன்றைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் அவர்களது கடந்தகால முறைகேடான செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தினால் எளிதாக இலக்கு வைக்கப்படக்கூடிவர்களாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தங்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் நாட்டம் காட்டாமல் இருப்பதை உறுதிசெய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே ஐக்கியப்படுவது குறித்தும் மக்களை அணிதிரட்டுவது குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள். அத்தகைய அணுகுமுறை மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான சாத்தியம் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது. அதேவேளை, கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு அளித்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்புவதற்காக முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. விக்கிரமசிங்கவை விடவும் கூடுதலான அளவுக்கு செல்வாக்குடைய பலம்பொருந்திய அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்னதாக மக்களின் உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையே அவரின் கைது என்றும் ஊகிக்கப்படுகிறது. அரசியல் பழிவாங்கலில் இறங்கியிருப்பதாக அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எச்சரிக்கைளை தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று காட்டும் வகையில் நடந்துகொள்ளும் அரசாங்கத் தலைவர்கள் ஊழல்தனமான அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்டு எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பற்றி அறிவிப்புகளைச் செய்கிறார்கள். விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அணிதிரட்டிக்கொண்டு வந்தவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறியிருக்கிறார். சகல குடிமக்களுக்கும் சமத்துவமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி திசாநாயக்க ஏற்கனவே எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் மீள்பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார். அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களிடம் இருந்து அது திரும்பப் பெறப்படும் என்றும் ஊழலுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கொழும்பில் கடந்தவாரம் நிகழ்வொன்றில் கூறினார். செப்டெம்பரில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான வீடுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். அதேவேளை, விக்கிரமசிங்கவைப் போன்று மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் அவை குறித்து விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சட்டம் சகலருக்கும் சமமான முறையில் பிரயோகிக்கப்படும் என்று கூறிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எவரிடமிருந்தாவது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு கடந்த வாரம் கூறினார். விக்கிரமசிங்க விவகாரத்தில் முக்கியமான ஒரு அம்சத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர். அவரது கைதும் நீதிமன்றத்தில் அவர் பல மணி நேரமாக அனுபவிக்க வேண்டியிருந்த அசௌகரியங்களும் கொழும்பு உயர் வர்க்கத்தவர்களுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே.வி.பியின் தலைவர்களின் எளிமையான குடும்பப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு வர்க்க வன்மம் வெளிக்காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு. விக்கிரமசிங்கவின் அரசியலையும் எதையுமே மெத்தனமாக நோக்கும் அவரது சுபாவத்தையும் விரும்பாதவர்கள் பலர் கூட அவர் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் கூட்டிச் செல்லப்பட்டதனால் கடுமையான அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவானது. அத்துடன், மனைவியின் பட்டமளிப்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக (இலங்கையில் இடம்பெற்ற நிதி தொடர்பான பாரிய ஊழல் நடவடிக்கைளுடன் ஒப்பிடும்போது) ஒரு சிறிய தொகையான 16.6 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியதை பாரதூரமான பிரச்சினையாக ஊதிப்பெருப்பித்து அவரை கைதுசெய்திருக்க வேண்டியதில்லை என்ற ஒரு அபிப்பிராயமும் பல மட்டங்களில் இருக்கிறது. வழமையாக விக்கிரமசிங்கவை மிகவும் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்தின் உண்மையான முகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தை பொறுத்தவரை, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட ஒருவராக முன்னாள் ஜனாதிபதியைக் கருதவில்லை என்று கூறியிருக்கும் தயான், விக்கிரமசிங்க தனது குடும்பத்தவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் பெற்றிருக்கக்கூடிய 16.6 மில்லியன் ரூபாவை அரச நிதியில் இருந்து அவர் கையாடியிருப்பார் என்று நம்பினால் தனது விவேகத்தையே நிந்தனை செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சட்டபூர்வத் தன்மைக்கும் நியாயப்பாடான தன்மைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விளங்கிக்கொள்வது சாத்தியமில்லை என்றும் ஒப்பீட்டளவில் வலுவில்லாத ஒரு பிரச்சினைக்காக விக்கிரமசிங்கவை கைதுசெய்து அசௌகரியத்தை கொடுத்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமூக நீதியில் அதற்கு இருக்கும் பற்றுறுதியை அல்ல, அதன் தலைமைத்துவத்தின் கீழ்த்தரமான சிந்தனையையும் மட்டுமீறிய தவறான உணர்ச்சியார்வத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது என்றும் தயான் மேலும் கூறியிருக்கிறார். இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோது ஆட்சிப் பொறுப்பை அரசியல் தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு மீட்சிக்கு வழிகாட்டிய ஒரு தலைவரை கைதுசெய்து அவமதித்திருக்கக் கூடாது என்றும் ஒரு பிரிவினர் கவலைப்படுகிறார்கள். 2022 ஜூலையில் வெறுமனே 50 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு 2025 செப்டெம்பரில் 6 பில்லியன் டொலர்களாக உயரக்கூடியதாக நாட்டின் பொருளாதாரத்தை மீடடெடுத்த தலைவர் 53,000 டொலர்களுக்கு (16.6 மில்லியன் ரூபா)வுக்கு பெறுமதி இல்லாதவரா என்று சில தினங்களுக்கு முன்னர் ஒரு அரசியல் பத்தியாளர் தர்மாவேசத்துடன் கேள்வியெழுப்பியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியபோது விக்கிரமசிங்க தனது கையில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சனின் “கட்டவிழ்த்துவிடப்பட்டது ” (Unleashed) என்ற தலைப்பிலான சுயசரிதை நூலை கையில் வைத்திருந்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தபோது அதை அவர் வாசித்திருக்கிறார் போன்று தெரிகிறது. அதன் மூலமாக ஏதாவது அரசியல் செய்தியை நாட்டுக்கு அல்லது அரசாங்கத்துக்கு சொல்வதற்கு அவர் நோக்கம் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. போறிஸ் ஜோன்சனின் நூல் பற்றிய தகவல்களை அறியும் ஆவலில் கூகிளில் தேடுதல் நடத்தியபோது அது பற்றி லண்டன் கார்டியன் பத்திரிகையின் இணையாசிரியர் மார்டின் கெற்றில் கடந்த வருட பிற்பகுதியில் எழுதிய விமர்சனத்தை காண நேர்ந்தது. “போறிஸ் ஜோன்சனின் நூல் – ஒரு கோமாளியின் வரலாற்றுக் குறிப்புகள் ” (Unleashed by Boris Johnson review – memoirs of a clown) என்று அதற்கு தலைப்பிடப்பட்டிருந்தது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12270
-
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி September 3, 2025 11:29 am வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும் மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும். அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் ஆரம்பித்துள்ளோம். முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம். அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர். மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/i-will-fulfill-my-responsibility-to-build-the-economy-of-the-people-of-the-north-president/
-
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு
பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. “ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மெக்ஸிம் பிரிவோட் அறிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதாகப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கடந்த ஜுலை மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பெல்ஜியம் உட்பட பல நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுக்க தொடங்கியுள்ளன. நியூயார்க்கில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா. கூட்டத் தொடர் 23ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. பாலஸ்தீனத்தை நாடாகக் கருதும்படி பிற மேற்கத்திய நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. காஸாவில் அதிகரிக்கும் மனிதநேய நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு அந்தத் தீர்மானம் எடுக்கப்படுவதாகத் பிரிவோட் கூறியுள்ளார். இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனர்களில் அதிகமானோரை ஒரு முறைக்கு மேல் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளியிருப்பதாலும் ஐ.நா. அங்குப் பஞ்சத்தை அறிவித்திருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிவோட் குறிப்பிட்டுள்ளார். அனைத்துலக சட்டத்தை மீறும் விதத்தில் இஸ்ரேல் வன்முறையாக நடந்துகொண்டதால் இஸ்ரேலிய அரசாங்கம், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆகியோர்மீதான நெருக்கடியை அதிகரிக்க பெல்ஜியம் உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேலிய மக்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக அதன் அரசாங்கம் அனைத்துலக, மனிதநேய சட்டங்களை மதித்து நடப்பதை உறுதிசெய்து காஸாவின் நிலையை மாற்றும் நோக்கில் பெல்ஜியம் அத்தகைய தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. https://akkinikkunchu.com/?p=339390
-
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு
சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு 03 Sep, 2025 | 11:24 AM சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. https://www.virakesari.lk/article/224075
-
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர் 03 Sep, 2025 | 11:00 AM நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இணைந்து கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கடற்படையினரிடம் கேட்டறிந்தோம். அதேபோல சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைத்த வகையில் சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடு பற்றியும் கேட்டறியப்பட்டது. நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சத்தீவுவரை மேம்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/224070
-
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல் 03 September 2025 எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசாங்கத்திற்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான இறுக்கமான பொறிமுறைகள் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதோடு, நீதிமன்றக் கட்டமைப்பினூடாக பாதுகாப்புத் துறைக்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையை குறித்த அறிக்கையூடாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/418056/insisting-that-sri-lanka-sign-the-rome-statute
-
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்! அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராகவே, நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான அனுபவத்தையும், தகுதியையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில், கிட்டத்தட்ட 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் இவ்வாறு வேகமாக நிறைவடைவதற்கு நீதிபதி ஆனந்தராஜா காட் டிய அக்கறையும், அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளுமே காரணம் என்று துறைசார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே, அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கை அவர் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளை சம்பிரதாயபூர்வமாக மேற்பார்வை செய்யாமல், சான்றுப் பொருள்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னெடுத்திருந்தார். அகழ்வுப் பணிகளின் கால அளவை நீடிப்பது தொடர்பில் காத்திரமான உத்தரவுகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/செம்மணி_வழக்கை_சிறப்பாகக்_கையாண்ட_நீதிவான்_ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு_பதவி_உயர்வுடன்_இடமாற்றம்!
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - சரத் பொன்சேகா 02 Sep, 2025 | 10:12 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எடுத்துக்காட்டி, அவர் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அடுத்தடுத்து வந்த இலங்கைத் தலைவர்களை விமர்சித்தார். இதன்போது, தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை, இலங்கை தலைவர்களுக்கு இல்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரின் லீ குவான் யூ, மலேசியாவின் மகாதீர் முகமட் மற்றும் ருவாண்டாவின் ஜெனரல் ஜுவெனல் ஹப்யரிமனா போன்ற சர்வதேச பிரமுகர்களுடன் இலங்கை முன்னாள் தலைவர்களை ஒப்பிட்டு வேறுபடுத்தி இதன்போது அவர் உரையாற்றியுள்ளார். தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் கடந்த கால சம்பவத்தைக் குறிப்பிட்டு தமது கருத்துக்களை சரத் பொன்சேகா கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகால பகுதியில் சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தையும் இதன்போது அவர் நினைவுப்படுத்தினார். அந்த பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உத்தியோகபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகளை அவர் மன்னிக்கவில்லை என்றாலும், அதிகாரிகளை பொறுப்புக்கூற வைப்பதில் தற்போதைய நிர்வாகம் வகுத்த முன்னுதாரணத்தை ஆதரிப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ரணில் விக்கிரமசிங்க செய்தது சரி என நான் கூறவில்லை. அவரது நிலையை பார்ப்பது எனக்கு கவலையாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். ஆனால் இந்த வழக்கில், அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இதன்போது சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் கடந்த கால சிறைத்தண்டனை குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துகளுக்கும் சரத் பொன்சேகா பதிலளித்தார். இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றிய 35 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றியதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மீது சரத் பொன்சேகா நிகழ்வில் உரையாற்றும்போது குற்றம் சுமத்தியுள்ளார் https://www.virakesari.lk/article/223992
-
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி
சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி 02 September 2025 மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஒரு கிராமத்தையே அழித்த நிலச்சரிவில், குறைந்தது 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனமழையைத் தொடர்ந்து,கடந்த ஆகஸ்ட் 31 அன்று, இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக சூடான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே இந்த நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட கிராமம் தற்போது முழுமையாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/417818/landslide-destroys-village-in-sudan-over-1000-dead