Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. “இன விடுதலை“ – சர்வதேச சட்டங்களும் ஐ.நா நியமங்களும் August 22, 2025 5:09 am -அ.நிக்ஸன் இன விடுதலை கோரும் சமூகம் ஒன்றின் அரசியல் நியாயப்பாடுகளை கருவறுக்க அரசுகள் கையாண்ட உத்திகள் – எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி எல்லாம் ஆராய்ந்து, அறிந்து இராஜதந்திரமாக காய் நகர்த்த வேண்டிய பொறுப்பு என்பது அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகளின் பிரதான கடமை. செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு பற்றிய செயற்பாடுகளின் பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் ”பயங்கரவாத செயற்பாடுகள்” – ”பாசிசம்” என்ற கோசங்கள் மீண்டும் சிங்கள ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. இன அழிப்பு என்பதை கனடாவின் பிரதான தேசிய கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும், கனேடிய அரசு என்ற கட்டமைப்பின் இலங்கை பற்றிய வெளியுறவுக் கொள்கையில், தமிழ் இன அழிப்பு என்ற விவகாரம் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் நோக்கில் வெறுமனெ பேச்சு மாத்திரம் தான் விஞ்சியுள்ளன. ஆனாலும், இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் அதனை செப்பனிடும் அரசியல் – இராணுவ ஆய்வாளர்கள் சிலரும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்த இடத்திலேதான் சில புரிதல்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும். –இன அழிப்பு என்றால் என்ன?– இன அழிப்பு (Genocide) என்பது ஓர் இனத்தையும் அந்த இனத்தின் மரபுரிமைகள் – வரலாறுகள் போன்றவற்றை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்தலைக் குறிக்கும். குறித்த இன மக்களை திட்டமிட்டு கொலை செய்வது மாத்திரம் இன அழிப்பு என்று வரையறை செய்ய முடியாது. குறிப்பாக, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இன அழிப்பு என்று பொருள் கொள்ள முடியும். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் உலக நாடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கம் இன அழிப்பு என்ற விவகாரத்தையும் மனித உரிமை மீறல் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதையும் உரிய முறையில் வகுக்கத் தவறிய பின்னணியில்தான் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது, இந்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஐ.நா எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. சர்வதேச சங்கத்துக்குப் பதிலாகவே இது உருவானது. The German army marches into Poland, September 1939. இந்த ஐ.நா சபை இன அழிப்பு என்பதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றவியல் குற்றம் என வரையறை செய்து அறிவித்தது. இதன்படி ஓர் இன மக்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொலை செய்ய நினைப்பது அல்லது இனம் இல்லாமல் செய்வது, இன அழிப்பு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பிரதானமாக இன வேறுபாட்டை மையப்படுத்தி குழந்தைப் பிறப்பை தடுத்தல், மக்களை இடம்பெயரச் செய்தல் வேறு எவ்வகையிலேனும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இன அழிப்பு குற்றங்களாக நோக்கப்படும். இது சர்வதேச தடைச் சட்டத்தின்படி குற்றச் செயலாகும். —சட்டத்தரணியின் விளக்கம்— பெலரஸ் (Belarus) நாட்டவரான சட்டத்தரணி ரபேல் லேம்கின்(Raphael Lemkin) 1944 ஆம் ஆண்டு எழுதிய “Axis Rule in Occupied Europe” என்ற தனது புத்தகத்தில் இன அழிப்பு என்பதை பயன்படுத்தியுள்ளார். 1933 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது சர்வதேச தண்டனைச் சட்ட ஒருங்கிணைப்பு நாடுகள் மாநாட்டில் (League of Nations) அவர் ஆற்றிய உரையில், இன, மத மற்றும் இன குழுக்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச குற்றங்களாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் முன் மொழிந்திருந்தார். காட்டுமிராண்டித் தனமான குற்றம் (Crime of Barbarity) சர்வதேச சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை ரபேல் லேம்கின் ஆரம்பத்தில் எழுதியிருந்தார். இக் கருத்து பின்னர் இன அழிப்பு என பெயரிடப்பட்டு சர்வதேசத்தில் அங்கீகாரம் பெற்றிருந்தது. இப் பின்புலத்தோடுதான் ஐ.நா எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்பு என்பதை ஏற்று அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. இந்த இடத்தில் அரச பயங்கரவாதம் என ஒன்றும் வரையறை செய்யப்படுகிறது. அரச பயங்கரவாதம் (State terrorism) என்பது ஒரு அரசாங்கம் தமது நாட்டில் வாழும் ஏனைய இனங்கள் மீது கட்டவிழ்த்து விடும் ஆக்கிரமிப்புகள் – இராணுவ தாக்குதல்கள் போன்றவற்றைக் குறிக்கும். தமது சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் செயல்களையும் அரச பயங்கரவாதம் என்ற சொல் குறித்து நிற்கும். ஐ.நா சட்ட விதிகள் – ஒழுங்குகளை கடைப்பிடிக்கத் தவறும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் அரச பயங்கரவாதம் என பொருள் கொள்ள முடியும். அதாவது, ஒரு அரசாங்கம் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது அரச பயங்கரவாதம் என வகை செய்ய முடியும். குறிப்பாக போர் குற்றம், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் வன்முறை, சித்திரவதை, நியாமற்ற கைதும் தடுப்பும், பலாத்காரமாக காணாமல் ஆக்கப்படுதல், தடுத்து வைத்தல் · சட்டத்துக்கு மாறான கொலைகள், அடிமைத்தனம், சாதி சமய பாகுபாடு, மாற்று இன பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட குடியேற்றம், இன கருவறுப்பு, பண்பாட்டுச் சீரழிவுகள் போன்றவை அரச பயங்கரவாதமாகும். இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாதிக்கப்படுகின்ற இனத்தின் இளைஞர்கள், தமது இனத்தின் ”அரசியல் விடுதலை” என்பதை மாத்திரம் முன்நிறுத்தி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை பயங்கரவாத செயற்பாடாக பார்க்க முடியாது. உலகில் விடுதலை இயக்கங்கள் – பயங்கரவாத அமைப்புகள் என இரண்டு வகை உண்டு. விடுதலை இயக்கங்கள் தாம் வாழ்கின்ற நாட்டின் இராணுவத்திற்கு எதிராக அதாவது முப்படைகளையும் இயக்கும் அரச இயந்திரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும். அந்தப் போராட்டத்தை பயங்கரவாதம் என வரையறை செய்ய முடியாது. ஆனால், இலங்கை போன்ற நாடுகள் அப் போராட்டங்களை பயங்கரவாதமாக சர்வதேச அரங்கில் சித்தரித்து வருகின்றன. –சர்வதே சட்டங்கள் சொல்வதென்ன?— ஆனால், 2012 இல் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களின் இரண்டாம் பதிப்பு (Hand books of international law) உள்ளடக்கங்கள், எது பயங்கரவாதம் என்பதை பொருள் கோடல் செய்கின்றன. குறிப்பாக உள்நாட்டுச் சட்டங்கள், சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை ஓர் அரசு மீறும் பட்சத்தில் அது பயங்கரவாதம் என்ற தொனியை சர்வதேச சட்டங்கள் வியாக்கியானம் செய்கின்றன. லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகம் (Cambridge University Press) 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அப் பதிப்பை செய்திருக்கிறது. பொதுவாக சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் என்பதில் வேறுபாடுகள் இருக்காது. ஐ.நா நியமங்களைக் கூட ஓர் அரசு மீறினால் அது பயங்கரவாதமாகவே நோக்கப்பட வேண்டும். அதேநேரம், சர்வதேச சட்டம் என்றால் என்ன என்பது பற்றி சட்ட அறிஞர்கள் பலரும் பல்வேறு விதமாக கற்பிதம் செய்கிறார்கள். சாதாரண வழக்கிலும் சட்டம் என்பது பல வழிகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. சர்வதேச சட்டத்தின் இயல்புகளை விவாதிக்க முற்பட்டால், முதலில் எதிர்கொள்ள வேண்டிய வினா சர்வதேசச் சட்டம் உண்மையில் ஒரு சட்டமா? என்பதாகவே எழும். இலங்கை போன்று உள்நாட்டு இன மோதல் இடம்பெறும் நாடுகள் குறிப்பாக அரசுகள்,. உள்நாட்டு சட்ட அமைப்பு முறையின் (Domestic legal system) பிரகாரம் அந்த இன மோதலுக்குரிய அரசியல் தீர்வை கொண்டு வர முற்படும். உள்நாட்டு நீதிமன்றங்கள் ஊடாகவே அனைத்துக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளையும் நடத்த விரும்பும். ஈழத்தமிழர்கள் போன்று பாதிக்கப்பட்ட அரசு அற்ற இனம் ஒன்று சர்வதேச சட்டங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிகள் அதற்கு இடம் கொடுக்காது. குறிப்பாக சர்வதேச நீதி என்பது புவிசார் அரசியல் – பொருளாதார நலன்களின் பிரகாரமே அமைந்துள்ளது எனலாம். இந்த இடத்திலேதான், ஐ.நா வின் சில நியமங்கள் தொடர்பாகவும் அதன் கீழ் செயல்படும் ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றியும் கேள்விகள் சந்தேகங்கள் எழுகின்றன. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு (United Nations Commission on Human Rights) என்றுதான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் ஜெனீவாவில் இயங்கிய அந்த ஆணைக்குழு ஒழுங்கு முறையில் செயற்படவில்லை. இதன் காரணத்தால், 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜெனிவா மனித உரிமை சபையை (The United Nations Human Rights Council) ஐ.நா உருவாக்கியது. —பேராயர் டெஸ்மன்ட் —- ஜெனிவாவில் இயங்கும் இந்த மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு உறுப்புரிமை வழங்கக் கூடாது என்று தென் ஆபிரிக்க பேராயர் அமரர் டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் இன அழிப்பு நடவடிக்கைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுவதால் புதிதாக உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வழங்க வேண்டாம் என்று ஐ.நா.வுக்கு கடும் அழுத்தம் கொடுத்திருந்தார். ஆனாலும், இலங்கை உறுப்பு நாடாக இணைந்து கொண்டது. இருந்தாலும், ஐசிசிபிஆர் எனப்படும் சர்வதேச சமவாயம் (International Covenant on Civil and Political Rights – ICCPR) எனப்படும் பிரதான நியமம் ஒன்றை இலங்கை சட்டமாக்க வேண்டும் என ஐ.நா வற்புறுத்தியது. இதன் காரணமாக சர்வதேச சமவாயத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச 2007 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 56 ஆம் இலக்க சாதாரண சட்டமாக அமுல்படுத்தினார். –ஐசிசிபிஆர் சமவாயம்—— ஆனால் அந்தச் சமவாயத்தில் உள்ள பிரதான நியமங்கள் இலங்கைச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக சுயநிர்ணய உரிமை என்ற வாசகம் அகற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என அப்போது அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் பொருள்கோடல் செய்தார். இதன் காரணமாக ஐசிசிபிஆா் என்ற சமவாயத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் இலங்கைச் சட்டத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டியிருந்தார். பேராசிரியரின் அந்த விளக்கம் ஒரு வகையில் நியாயமானது. ஏனெனில், ஐநா சமவாயத்தில் ஒரு நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை என்ற கற்பிதம் ஐசிசிபிஆர் என்ற அந்த சமவாயத்தின் சரம் 1 என்ற பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. இது குழப்பமானது தான். இதன் ஆங்கில வடிவம் வருமாறு- (Article 1 All peoples have the right of self-determination. By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development.) ஆகவே, ஐ.நாவின் இந்தத் தவறை தமக்குச் சாதமாகக்கியே ஐசிசிபிஆா் எனப்படும் சமவாயத்தை இலங்கை சட்டம் ஆக்கியிருக்கிறது. இது பற்றி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தன்னுடைய முதல் உரையின் போது கேள்வி தொடுத்திருந்தார். ஆகவே, புவிசார் அரசியல் – பொருளாதார இலாப நோக்கில் ஐ.நா நியமங்களும் சர்வதேச் சட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், அரசு அற்ற ஓர் இனம் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எந்த வகையான அணுகு முறைகளை பின்பற்ற முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழு ஒழுங்காக செயற்படவில்லை என்பதால், 2006 இல் மனித உரிமைச் சபை உருவாக்கப்பட்டு இன்று 47 நாடுகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்படுவது ஏன்? மனித உரிமைச் சபையின் ஆணையாளர் வோல்க்கர் டர்க் (Volker Türk) கடந்த ஜூன் மாதம் இலங்கை வந்தபோது, யாழ் செம்மணிக்கும் சென்று போர்க்கால மனித புதைகுழிகளை பார்வையிட்டிருந்தார். ஆனால், இலங்கை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ள முன்னோடி அறிக்கையில் அது பற்றி பிரஸ்தாபித்திருந்தாரா? இன அழிப்பு நடந்தாக குறிப்பிட்டு தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதம் பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை அந்த அறிக்கையில் இருந்ததா? கடந்த ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தீர்மானங்களில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்டிருந்த கடுமையான நிலைப்பாடுகள் பற்றியேனும் ஆணையாளரின் அந்த முன்னோடி அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டிருந்தா? ஆகவே, இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அதன் ஊடான அரசியல் – பொருளாதார லாபங்களை கணக்கிட்டு ஆணையாளர் முன்னோடி அறிக்கையை தயாரித்திருக்கிறார் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாகத் தெரிகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னணியில், மீண்டும் உள்ளக விசாரணை பொறிமுறைக்கு ஆணையாளர் பரிந்துரைத்தமை எந்த அடிப்படையில்? —தீர்மானங்களை நிராகரித்த பின்னணிகள்— ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. 2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஜெனீவா தீர்மானத்தை முற்றாகவே நிராகரித்திருந்தார். அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை. புதிய அரசாங்கம் என ஆணையாளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனீவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலையில், இன அழிப்பு என்று தமிழர்கள் கோருகின்ற விடயம் முற்றாகவே கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஒப்பாசாரத்துக்குக் கூட அது பற்றிய வார்த்தைகளே இல்லை. கடந்த ஆண்டுகளில் வெறுமனே போர்க்குற்றம் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மதிப்பட்டிருந்த அந்த விடயங்களை கூட உரிய முறையில் கவனத்தில் எடுக்காமல் வெறுமனே உள்ளக விசாரணை எனவும், இலங்கை மீது நம்பிக்கை வைப்பதாகவும் 2025 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் ஆணையாளர் குறிப்பிட்டிருப்பது பற்றிய பின்னணி என்ன? ஆகவே, தொடர்ச்சியான முறையில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஐ.நா நியமங்களையும் மனித உரிமைச் சபையின் தீர்மானங்களையும் புறக்கணித்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் எந்த அடிப்படையில் ஐ.நா, இலங்கை மீது நம்பிக்கை வைக்கிறது? எதற்காக ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது? 2009 மே மாதத்திற்கு பின்னரான சூழலில் ஈழத் தமிழர்களுக்கு ஒழுங்கான அரசியல் தலைமை இல்லை என்பது வேறு. ஒருமித்த குரல் செயற்பாடுகள் இல்லை என்பதும் வேறு. ஆனால் அவற்றைக் காரணம் காண்பித்து 2012 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் எதையும் இலங்கை செயற்படுத்தவில்லை என்பதை ஏன் மனித உரிமைச் சபை கவனத்தில் எடுக்கவில்லை? 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, தமது அறிக்கையில், சர்வதேசக் குற்றங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்த விவகாரங்கள் பற்றி ஏன் கவனத்தில் எடுக்கப்படவில்லை? ஆகவே, அமெரிக்க – இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை மையப்படுத்தி ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கில் மேற்கு – ஐரோப்பிய நாடுகள் செயற்படுகின்றன என்பதும், அதற்கு ஐ.நா கட்டமைப்பு ஒத்துழைக்கிறது என்பதும் இங்கே பகிரங்கமாகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் முறைமைகளுக்குள் முடங்கி இருக்கின்றமையும் இதற்குப் பிரதான காரண – காரியமாகும். –பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலகம்—– ஆனாலும்,ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச நீதி கிடைக்காது என்றில்லை. சர்வதேச சட்டங்கள், ஐ.நா நியமங்கள் அனைத்தும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமாக இருப்பதை இலங்கை எவ்வாறு தமக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்துகிறதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையில், அரசு அற்ற இனமாக வேறு நாடுகளுடன் தமிழ்த்தரப்பு உறவை பேண வேண்டும். பல்துருவ அரசியல் மையமாக மாறிவரும் உலக ஒழுங்கில் சிறிய நாடு ஒன்றுடன் அல்லது சீனா போன்ற வல்லரசுகளுடன் ஏதோ வழியில் உறவை பேணக்கூடிய வழி வகைகள் இல்லாமலில்லை. அவ்வாறு அணுகும்போது இலங்கை ஒரு சிறிய அதுவும் பொருளாதார பலவீனம் உள்ள நாடு என்ற அடிப்படையில் நிச்சயமாக ஈழத்தமிழர் விவகாரங்களில் விரும்பியோ விரும்பாமலோ கீழ் இறங்கி வர வேண்டிய கட்டாயச் சூழல் எழும். இலங்கையை தாங்கிப் பிடிக்கும் அமெரிக்க – இந்திய அரசுகள் கூட படி இறங்க வேண்டிய பின்னணி உருவாகும். ஆனால்,இந்த இராஜதந்திரம் என்பது ஈழத்தமிழ்த் தரப்பிடம் இன்று வரையும் இருப்பதாக இல்லை. சிங்களத் தலைவர்கள் காலத்துக்கு காலம் அதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து குறிப்பாக போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அமெரிக்க – இந்திய அரசுகள் தம்மை நோக்கி படி இறங்கி வரக்கூடிய அணுகுமுறைகள் – விட்டுக் கொடுப்புகள் போன்ற இராஜதந்திரங்களை பல சந்தர்ப்பங்களில் பேணியிருந்தனர். விமர்சனங்கள் – குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் 1983 இல் அமிர்தலிங்கம் அவ்வாறான அணுகுமுறையை கையாண்டிருக்கிறார். ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் எந்த ஒரு தமிழ்த் தலைவர்களும் அவ்வாறு அணுகவில்லை. அரசு அற்ற இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகள் அவ்வாறான அணுகுமுறைகளை ஜனநாயக வழியில் கையாளக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அத்துடன், இன அழிப்பை ஆதாரப்படுத்தும் ஆவணங்களைக் கூட ஒழுங்குபடுத்த முடியும். ஆனால், தேர்தல் வியூகங்கள் மாத்திரமே தமிழ் தேசிய கட்சிகளினால் வகுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் இலக்குகளும் விஞ்சியுள்ளன. இப் பலவீனங்களை சாதகமாக்கி விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குச் சாதகமான அரசியல் – இராணுவ ஆய்வாளர்கள் சிலா் மீண்டும் சர்ச்சையை கிளப்புகின்றனர். “இீன அழிப்புக்கான சர்வதேச நீதி என்பது மேலெழந்து விடக்கூடாது என்பதை பிரதானப்படுத்தியே அவ்வாறான விமர்சனங்கள் மீண்டும் எழுகின்றன. குறிப்பாக செம்மணி புதைகுழி விவகாரத்துக்குப் பின்னரான சூழலில் புலிகள் பற்றிய இவ்வாறான விமர்சனங்கள் சிங்களத் தரப்பில் எழுவதை அவதானிக்க முடிகிறது. பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன Sri Lanka. Sri Lanka Military Academy Journal என்ற சஞ்சிகையில் எழுதி வருகிறார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் எழுதியுள்ளார். ஆகவே,தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டையும், போராட்டங்கள் பற்றிய சம்பவங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பதுடன் நியாயப்படுத்தல் போன்ற செயல் முறைகளிலும் தமிழ்த்தரப்பு ஈடுபட வேண்டும். குறிப்பாக முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் போது ஏற்பட்ட விளைவுகள் மாத்திரமல்ல, ஆயுதப் போராட்டதுக்கு முந்திய அதாவது, 1949 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்லோயா குடியேற்றத் திட்டம் மற்றும் அதற்கு எதிராக 1956 இல் நடந்த போராட்டத்தின் போது இடம்பெற்ற திட்டமிடப்பட்ட படுகொலைகள் போன்றவற்றில் இருந்து இன்றைய செம்மணி புதைகுழி வரையும் ஆவணப்படுத்தல் அவசியமாகிறது. அதேநேரம்,2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் குறிப்பாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என அழைக்கப்பட்ட மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் சிங்கள பௌத்த வரலாறுகள் – சிங்கள மொழித் திணிப்புகள் தமிழ் வரலாற்று பாடநூல்களில் புகுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஐ.நா யுனெஸ்கோ கல்வி நியமங்கள் அடிப்படையில், பாடநூல்கள் குறிப்பாக ஓர் இனத்தின் வரலாற்றை திரிபுபடுத்தி மொழிபெயர்ப்பு செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஆகவே, இவ்வாறான ஆவணப்படுத்தல்கள் – இன அழிப்பு பற்றிய ஆதாரங்கள் நியாயப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற பிரதான நோக்கில் விடுதலைப் புலிகளை பாசிசம் – பயங்கரவாதம் என்று சித்தரிப்பதும் வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பபாணத்தில் சாதி ஒடுக்குமுறை இருப்பதாகவும் மிகைப்படுத்தி “அரசியல் விடுலை“ பற்றிய சிந்தனை இளைஞர்கள் மத்தியில் இருந்து மடைமாற்றம் செய்யப்படுகிறது. இக் கட்டுரையில் பயங்கரவாதம் – பயங்கரவாத செயற்பாடுகள் என்பது அரசு என்ற கட்டமைப்பை நோக்கியதாகவே இருக்கும் என்பது மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று பாசிசம் என்பதும் அவ்வாறுதான் –பாசிசம் பற்றிய புரிதல்—- “பாசிசம் ஒரு மிகச் சிறிய அறிமுகம்” (Fascism: A Very Short Introduction) என்ற நூலை எழுதியுள்ள வரலாற்று அறிஞரான கார்டிஃப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கெவின் பாஸ்மோர் (Kevin Pasmore) பாசிசம், நாசிசம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துச் செல்பவை அல்ல என்கிறார். இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தன. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை. ஆகவே, ஒரு விடுதலை இயக்கத்தின் செயலில் படுகொலைகள் – “மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க மறுக்கும் தன்மை இருப்பதால் மாத்திரம், அவர்களை பாசிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்த முடியாது என்று இவர் விளக்குகிறார். இத்தாலியில் இருந்த பாசிசத்தில் கோர்ப்பரேட்டிசம் (Cooperativism) எனப்படும் கூட்டுப் பிழைப்புவாதம், அரசியல் ரீதியாக கலந்தே இருந்தது என்றும் இவர் வாதிடுகிறார். மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் ஒரு தலைமையின் கீழ் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது எனவும் கெவின் பாஸ்மோர் மேலும் கற்பிதம் செய்கிறார். ஓர் அரசானது அரசற்ற இனம் ஒன்றின் அரசியல் விடுதலை பற்றிய நியாயங்களை திட்டமிட்டு ஒதுக்குவது, கொலை செய்வது, அந்த இனத்தின் கருத்துக்களை முடக்குவது அவர்களிடையே பிரிவினைகளை திட்டமிட்டு உருவாக்குவதும் பாசிசம் என்ற வரையறைக்குள் உள்ளடங்கும் என்றும் கெவின் பாஸ்மோர் கற்பிதம் செய்கிறார். ஆகவே,2009 இற்குப் பின்னரும் சிங்கள ஆய்வாளர்கள் சிலர் புலிகளை பாசிட்டுகள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் திட்டமிட்டு பரப்புரை செய்வதன் பின்னணி என்பது, இன அழிப்புக்கான சர்வதேச நீதி மேலெழுந்து விடக்கூடாது என்பதை மையமாகக் கொண்டுள்ளது எனலாம். மார்சியோ காசலோரி (Marzia Casolari) என்ற ஒரு இத்தாலி ஆய்வாளர் ஒருவர். “இந்திய தேசியத்திற்கும் நாஜி – பாசிசத்திற்கும் இடையிலான தெளிவற்ற உறவு” (Ambiguous Relationship between Indian Nationalism and Nazi-Facism) என்ற ஓர் ஆய்வு நூலை 2000 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அந்த ஆய்வு நூல் அரசு என்ற கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஓர் அரசாங்கம் மற்றும் விடுதலை இயக்கங்கள் எவ்வாறு செயற்படும் என்ற வியாக்கியானத்தை தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே,2009 இற்குப் பின்னரான சூழலில் ஜனநாயக வழியில் இன அழிப்புக்கான சர்வதேச நீதியை கோருவதற்கு உரித்துடைய தமிழ்த் தரப்பு, முதலில் “ஆவணப்படுத்தல்“ – “நியாயப்படுத்தல்” என்ற இரண்டு பிரதான காரியங்களிலும் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழல் நிலைமைகளுக்குள் விழுந்துவிடாமல், ஐ.நா நியமங்கள் – சர்வதேச சட்டங்கள் என்ற இரண்டு வழிமுறைகள் ஊடாக பயணிக்க வேண்டியதும், பாதிக்கப்பட்ட தரப்பாக தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியதும் பிரதான கடமை ஆகும். https://oruvan.com/ethnic-liberation-international-laws-and-un-standards/
  2. தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் : முழு விவரம்..! 22 Aug, 2025 | 03:33 AM தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) நடைபெற்றது. மாநாட்டு மேடைக்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். சுமார் 35 நிமிடங்கள் நீடித்த அவரது பேச்சில் அரசியல் மற்றும் தேர்தல் குறித்த அதிரடியான கருத்துக்கள் இடம்பெற்றன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களும் பின்வருமாறு:- தீர்மானம் 1: பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது .இதில் பெரும்பான்மையான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமானவை. முப்போகமும் விளையக்கூடியவை. தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதை தடுக்க, வருடக்கணக்கில் போராடி வரும் எளிய மக்களின் போராட்டத்தை நசுக்கவும், பலவந்தமாய் அவர்களின் நிலங்களைப் பறிக்கவும் பலவழிகளிலும் தொடர்ந்து தி.மு.க. அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், அரசு கையகப்படுத்த முயலும் நிலப்பரப்பில் 13 வற்றா நீர்நிலைகள் உள்ளன. விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும். சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் இந்த நீர்நிலைகளே உள்ளன. இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டால் சென்னை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு,இங்குள்ள நீர் தேங்கும் பகுதிகள் சிதைக்கப்பட்டால் பருவமழைக் காலங்களில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது. பரந்தூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். இதற்குப் பதிலாக, விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் தவறும்பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும். அதோடு எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கும் எந்த அரசும் அதே எளிய மக்களால் ஆட்சி.அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்பதையும் இந்த தீர்மானத்தின் வழியே எச்சரிக்கையாகவும் தெரிவித்துக்கொள்கிறோம். தீர்மானம் 2: சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 8.3 சதவீதமாகும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியலில் இவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவில்லையா? இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியிருப்பது ஜனநாயக விரோதமில்லையா? என்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள் என எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் சிறப்புத் தீவிர திருத்தத்தை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ளக் கூடாது என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மட்டுமே. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம் 3: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் மத்திய மற்றும் மாநில அரசுகள், மீனவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் எப்போதும் அரசியல் ஆதாயமாக மட்டுமே பார்க்கின்றன. ஆனால் தமிழக வெற்றிக் கழகம், எப்போதும் உண்மையான மீனவ நண்பனாக அவர்களுடன் நிற்கும். நம் நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததால் கடலில் தத்தளிக்கும் படகு போலவே தமிழக மீனவர்களின் வாழ்வும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கைது செய்வதைத் தடுக்க, அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை நிறுத்த, மீன்பிடி தொழிலையும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே கூறியது போல கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களின் படகுகளை இலங்கை அரசுத் திருப்பித் தரவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம் 4: ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவச் சமூக நீதிக்கான அறநெறியை உலகிற்கே கற்றுக் கொடுத்த தமிழகம், இன்றைய திறனற்ற ஆட்சியாளர்களால் வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துள்ளது. சாமானிய மனிதர்கள் சராசரி வாழ்க்கை நடத்தக்கூட அஞ்ச வேண்டிய சூழல், தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. ஆணவக் கொலைகளைத் தனிச் சட்டமியற்றித் தடுக்கத் தவறிய வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. எப்படிச் சமூக நீதி அரசாகும்? ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும்போது, அதை இந்தத் தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. தீர்மானம் 5: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணம் முதல் காவலர் படுகொலைகள் வரை பல்வேறு காரணங்களுக்காக, சர்வ சாதாரணமாகக் கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவங்கள். மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதனால், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இளைய சமுதாயம் பாதுகாப்பற்ற சூழலைச் சந்தித்து வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசுக்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் 6: அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசுப் பணியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பின்றிப் பரிதவித்து வரும் சூழல், தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்நிலையில், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த நடவடிக்கையால். போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர்கள், மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான நேரடிப் பணியிடங்கள் பெருமளவு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படுவதால். TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவையே தகர்த்துவிடும் பேராபத்து ஆகும். எனவே, இந்த அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், TNPSC உள்ளிட்டத் தேர்வு வாரியங்கள் வாயிலாகத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்மையான முறையில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தமிழக வெற்றிக் கழகத்தின் இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது https://www.virakesari.lk/article/223059
  3. யாழில் இராணுவ முகாமுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் 22 Aug, 2025 | 11:10 AM பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வருமாறு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (22) நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் வழங்கப்பட உள்ளது. 01) வின்சன்டி போல் டக்ளஸ் போல் நகர பிதா பருத்தித்துறை நகர சபை. 02) தம்பிராசா சந்திரதாஸ் தலைவர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம். https://www.virakesari.lk/article/223080
  4. சத்தியாகிரகத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த சத்தியாகிரகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட மையம் உள்ளிட்ட பல தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) 5வது நாளாகவும் தொடர்கிறது. இந்த சூழலில் மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், கைரேகையை கட்டாயமாக்குதல் மற்றும் மேலதிக நேரம் தொடர்பான தீர்மானம் குறித்த முடிவை திரும்பப் பெற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார். 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. பணிப்புறக்கணிப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmemetnq3001jo2g9mif2ju0x
  5. ‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கை முருகானந்தன் தவம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ‘நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ அரசுக்குள் முரண்பாடுகள், அரசு மீதான குற்றச் சாட்டுக்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள், கிண்டல்கள் என ஏதோவொன்றுக்குள் சிக்கி வருகின்றது. ஒரு சிக்கலுக்குள் இருந்து விடுபடுவதற்குள் இன்னொரு சிக்கலுக்குள் மாட்டுப்பட்டு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பிரசாரங்களுக்கும் நன்றாகத் தீனி கொடுப்பதே அரசின் நிலையாகவுள்ளது. அனுரகுமார அரசு ஆட்சி அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம், அரிசி, தேங்காய், குரங்கு, உப்பு, பாதாள உலகம், படுகொலைகள், சர்வாதிகாரம், இந்தியப் பிரதமரின் வருகை, ஜனாதிபதியின் இந்திய, சீன விஜயங்கள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்கு வீழ்ச்சி, மின்சாரக் கட்டணம், வடக்கு காணி சுவீகரிப்பு, 323 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிப்பு,இஸ்‌ரேலுக்கான அனுமதிகள், கல்வி மறு சீரமைப்பு என பல சர்ச்சைகளில் சிக்கி இவற்றிலிருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது ‘கஞ்சா’ சர்ச்சையில் சிக்கியுள்ளது. இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதன்முறையாக ‘கஞ்சா’ பயிரிடுவதற்கான சட்ட பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன வெளியிட்டுள்ளதன் மூலமே ‘மாற்றம்’ அரசு தற்போது ‘கஞ்சா’ அரசாக மாறி கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதன்முறையாக கஞ்சா (பயிரிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இலங்கை முதலீட்டு சபையின் கீழ், செயல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 37 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றில் இருந்து ஏழு முதலீட்டாளர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இலங்கை முதலீட்டு சபை அவர்களுக்கு உரிய சட்ட அனுமதியை வழங்கியுள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஆறு மாதங்களுக்குத் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் நடைபெறும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, உரிமம் நீட்டிக்கப்படுமா என்பதைக் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும். ஒவ்வொரு முதலீட்டாளரும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை இலங்கை மத்திய வங்கியில் உத்தரவாதமாக வைப்பிலிட வேண்டும். பயிர்ச்செய்கைத் திட்டத்தை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு தேவை. கஞ்சா பயிரிடப்படும் அனைத்து உற்பத்திகளும் முழுமையாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். நாட்டிற்குள் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது. ஏற்றுமதி நோக்கங்கள் மருந்து உற்பத்தி மற்றும் சோதனைக்காக மட்டுமே. பயிரிடும் பகுதி பாதுகாப்பான வேலியால் சூழப்பட்டிருக்க வேண்டும். விதைகள், இலைகள், வேர்கள் உள்ளிட்ட எந்தப் பகுதியும் வெளிப்புற சூழலுக்குள் வெளியேறக் கூடாது. வளாகத்தில் சிறப்பு பணிக்குழு மற்றும் பொலிஸ் பாதுகாப்பு கட்டாயம். நில ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு, இலங்கை முதலீட்டு சபையின் கீழ் மீரிகம பகுதியில் 64 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் நடைமுறையை இலங்கை முதலீட்டு சபை, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுர்வேதத் திணைக்களம் இணைந்து மேற்பார்வையிடுகின்றன. இந்த முயற்சியின் மூலம் இலங்கைக்கு கணிசமான அந்நியச் செலாவணி வருவாய் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது. ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான இலங்கையில் கஞ்சா பயிரிடும் திட்டத்தை அனுரகுமார அரசு முதன்முதலில் கொண்டுவந்திருந்தால் கூட அது பெரியளவிலான சர்ச்சைகளை, விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், கடந்த அரசில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த டயனா கமகே இந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் ஒரு யோசனையாக முன்வைத்தபோது, அதனை வரிந்துகட்டிக்கொண்டு எதிர்த்தவர்கள் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமாரவும் பிரதமரான ஹரிணி அமரசூரியவும் அமைச்சரான விஜித ஹேரத்தும் கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி அமைச்சரான டயனா கமகே இந்த யோசனையை 2021ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் முன்வைத்தார். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சா செய்கை ஊடாக, பாரிய இலாபத்தை பெற்று வருவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். எனினும், கஞ்சா ஏற்றுமதிக்கான பயிர் செய்கையை மேற்கொள்வது சட்டமாக்கப்படுகின்றமை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்த நிலையில், அனுரகுமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதனை கடுமையாக எதிர்த்தது. இலங்கையில் கஞ்சா தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், நாட்டிற்குள் இன்றும் கஞ்சா பயன்பாடு காணப்படுவதாகவும் இந்த நிலையில், கஞ்சா செய்கையை அனுமதித்து சட்டமாக்கும் பட்சத்தில், அது நாட்டிற்குள் மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது எனவும் கஞ்சா ஏற்றுமதிக்கு மாத்திரம் அனுமதி தற்போது கோரப்பட்டாலும், எதிர்காலத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்கும் அனுமதி கோரப்படும் சாத்தியம் உள்ளது எனவும் இவர்கள் எதிர்த்து வாதிட்டனர். கஞ்சா என்பது போதைப்பொருள் கிடையாது என்பதுடன், கஞ்சா என்பது தலைசிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சாவிற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், பல நாடுகள் கஞ்சா செய்கை செய்து வருகின்றன. அத்துடன், பல நாடுகள் கஞ்சாவை ஏற்றுமதி செய்யும் அதேவேளை, மருந்து வகைகளுக்கும் கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றன. கஞ்சாவிற்கான கேள்வி, நாளுக்கு நாள் அதிகரிக்கும் உலகில் நோய்கள் என்றுமே குறையாது . அதனால், மருத்துவ குணம் கொண்ட இவ்வாறான மூலிகைகள் அத்தியாவசியமானவை. எதிர்வரும் காலப் பகுதியில் பில்லியன் கணக்கான பணத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு ஏற்றுமதி பயிர் செய்கை கஞ்சா. நாடு இன்று பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து யோசிக்க வேண்டும். இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் கிடையாது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய, செய்கை முறையிலான கேரளா கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுவே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கஞ்சா என்பது இலங்கையின் கலாசாரத்துடன் இணைந்த ஒன்று. கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டிற்கு பாரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும், கஞ்சாவின் ஊடாக பெரும்பாலான முக்கிய பொருட்களைத் தயாரிக்க முடியும். அழகு சாதன பொருட்கள், மருத்துவ வகைள் என பல்வேறு பொருட்களைத் தயாரிக்க முடியும் எனவும் டயானா கமகே தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது டயனா கமகேயை மிக மோசமாக, தரக்குறைவாக, அவரின் நடத்தை தொடர்பில் கூட, விமர்சித்தவர்கள்தான் தற்போது அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த ‘கஞ்சா பயிர் செய்கை’ திட்டத்திற்கு தமது அரசில் அனுமதி வழங்கி அதனை நியாயப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா செய்கை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட திட்டம். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கஞ்சா பயிர்ச் செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டம். இந்த திட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சியினரும் ஆதரவு வழங்கியிருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அப்போது எதிர்க்கட்சியில் இருந்தனர், இந்த திட்டத்தின் ஆபத்தான விடயங்களை அப்போது அவர்கள் எதிர்த்தனர். தற்பொழுது அந்த ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்டு கஞ்சா செய்கையில் ஈடுபடவுள்ளது என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கின்றார். ‘புதிய திசை’, ‘மாற்றம்’ என்ற கோஷத்தோடு ஆட்சி பீடம் ஏறிய அனுரகுமார அரசு, எந்த புதிய திசையிலும் பயணிக்க வில்லை. எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. பழைய திசையிலேயே தொடர்ந்தும் பயணிப்பதுடன், பழைய அரசுகள் கொண்டுவந்த போது தங்களினால் கடுமையாக எதிர்க்கப்பட்ட திட்டங்களையே அப்படியே ‘கொப்பியடித்து’ தமது திட்டங்களாக்கி அதனை நியாயப்படுத்தி நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதுவே சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் முதல் தற்போதைய ‘கஞ்சா பயிர் செய்கை’ வரை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, ‘மாற்றம்’ என்பது அனுரகுமார அரசின் வார்த்தையாகவே மட்டும் உள்ள நிலையில் ‘கொப்பி பேஸ்ட்’ மட்டுமே அனுரகுமார அரசின் நடவடிக்கையாக மாறிப்போயுள்ளது. அதாவது நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, தமது கொள்கையிலிருந்து, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து அனுரகுமார அரசுதான் ‘மாற்றம்’ கண்டுள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொப்பி-பேஸ்ட்-மட்டுமே-அனுரகுமார-அரசின்-நடவடிக்கை/91-363230
  6. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்தார். இருப்பினும், மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தபால் மா அதிபர் ருவான் சத்குமார கருத்து தெரிவிக்கையில், “சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். வேலைநிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்றார். https://www.samakalam.com/வேலைநிறுத்தத்தில்-ஈடுபட/
  7. ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக இவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/ரணில்-விக்ரமசிங்க-குற்றப/
  8. நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது! adminAugust 22, 2025 நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் (21.08.25) வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை, அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர். அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்த காவற்துறையினரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் காவற்துறையினர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் காவற்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219514/
  9. தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்! adminAugust 22, 2025 சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என கூறி , அதற்கான துண்டு சீட்டுக்களும் ஒட்டப்பட்டு , சிற்றிக் அமிலம் கரைசலை 4 லீற்றர் கொள்கலன்களில் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வந்துள்ளது. குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் செபமாலை பிறின்சன் அவற்றில் இருந்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்டு வந்த சிற்றிக் அமிலம் கொள்கலன்களை மீட்டு , நிறுவனத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை அடுத்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்ட சிற்றிக் அமிலம் கொள்கலன்களை , அரச பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு மன்று பணித்தது. பகுப்பாய்வு அறிக்கையில், அவ்கரைசல் தனியே சிற்றிக் அமிலம் என்பதுடன் முழுவதும் கிருமித்தொற்றுடனும் மனித பாவனைக்கு உகந்ததல்லாதகாவும் இருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, குறித்த நிறுவன உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. இயற்கை பழச்சாறு என விற்கப்பட்ட பானங்கள் இந்த கரைசலை பயன்படுத்தியே தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219516/
  10. காதலில் துறவி ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் நாரதரின் அறிவுரையின் படி , திரௌபதி பாண்டவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு வருடம் சுழற்சி முறையில் இருப்பாள் என்றும் இதை மீறுபவர்கள் ஒரு வருடம் தலைமறைவாய் இருக்க வேண்டுமென்ற விதிமுறைக்கு ஒத்துக்கொண்டனர். ஒரு நாள் , மாலைவேளையில் ஒரு பிராமணர் அர்ஜுனன் இடம் வந்து திருடப்பட்ட அவரது பசுக்களை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது அர்ஜுனனின் ஆயுதங்கள் யுதிஷ்டரரின் வீட்டில் இருந்தன. அவர்களது சுழற்சி முறைப்படி, திரௌபதி அப்பொழுது யுதிஷ்டிரருடன் இருந்தாள். அதனால் அர்ஜுனன் தயங்கினான். இருந்தும், அந்த பிராமணர் திரும்ப திரும்ப வேண்டியதால் யுதிஷ்டரரின் வீட்டிற்கு சென்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திருடப்பட்ட பசுக்களை மீது தந்தான். அதன்பின், தர்மரிடம், ” அண்ணா ! நாம் ஏற்றுக்கொண்ட விதிமுறையை நான் மீறிவிட்டேன். எனவே , நான் நிபந்தனையை காப்பாற்ற, ஒரு வருடம் புனித யாத்திரை செல்கிறேன்” எனக் கூறினான். தர்மரோ, அந்த சூழ்நிலை இந்த விதிமீறலுக்கு இடம் அளித்தது. எனவே பார்த்தனின் தவறு இதில் எதுவும் இல்லை என கூறினார். ஆனாலும், தான் சொன்னதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான் அவன். அங்கிருந்து பாரதம் முழுக்க வலம் வரத் துவங்கினான். முதலில் கிழக்குக் கடற்கரையோரமாக தனது யாத்திரையைத் துவங்கி பாரதத்தின் தென்கோடி முனையை அடைந்தான். அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரம் பிரயாணித்து துவாரகையை அடைந்தான். அங்கு வந்தவுடன் சுபத்ரையின் நினைவு வந்தது. அழகான துணிச்சலான பெண் ஆன சுபத்திரையை சந்திக்க ஆவல் கொண்டான். உடல் முழுதும் சாம்பல் பூசிக்கொண்டு துறவியாய் அங்கிருந்த கோவில் ஒன்றில் தவம் செய்யத் துவங்கினான். விரைவில் நகரம் முழுவதும் புதிதாய் வந்துள்ள யதியை பற்றிய செய்தி பரவியது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த செய்தி வந்தவுடன் யதியின் அடையாளங்களைக் கொண்டு அது யாத்திரையில் இருக்கும் அர்ஜுனன் என புரிந்துக் கொண்டார். மேலும், சுபத்திரையின் கவனத்தை தன் பால் ஈர்க்கவே இதை செய்கிறான் எனவும் புரிந்து கொண்டார். அர்ஜுனனை நேரில் சந்தித்து அவனின் உண்மை நோக்கத்தை அறிந்து கொண்டார். சுபத்திரையை அர்ஜுனன் மேல் காதல் கொள்ள செய்யவேண்டும் என இருவரும் திட்டமிட்டனர். ஷத்ரியர்களிடையே பெண்ணின் விருப்பத்தை கொண்டு கல்யாணம் செய்து கொள்வது பழக்கத்தில் இருந்த ஒன்றாகும். துவாரகை வந்துள்ள யதியை பற்றிய நல்ல செய்திகளாக பலராமனின் காதுகளை எட்டுமாறு செய்தார் கிருஷ்ணர். இவர்களின் சதி ஆலோசனை பற்றி ஏதும் அறியாத பலராமனோ , யதியின் அறிவிலும் தேஜஸிலும் கவரப்பட்டு , சுபத்ராவின் தோட்டத்தில் தங்கவும், அவரது தேவைகளை கவனிக்கவும் சுபத்ராவை பணித்தான். இதற்கு கிருஷ்ணர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தார். இளம் வயதுடைய ஆணையும் பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதிப்பது தவறு என அவர் சொல்ல, பலராமரோ கிருஷ்ணர் எதிர்பார்த்தவாறே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விரைவிலேயே , எது நடக்கவேண்டுமோ அது நடந்தது. வந்திருக்கும் யதி, அர்ஜுனன்தான் என்பதை சுபத்ரா அறிந்து கொண்டாள். அர்ஜுனன், சுபத்ரையின் கனவுக் காதலன். விரைவில் இருவரும் காதலிக்கத் துவங்க , நாடகம் அடுத்த கட்டத்தை அதாவது திருமணத்தை நோக்கி நகர்ந்தது. இந்த விஷயத்தில் கிருஷ்ணர் உதவிக்கு வந்தார். பலராமரை அவர் குடும்பத்துடன் அருகில் இருந்த தீவில் நடைப்பெற்ற 15 நாள் பூஜைக்கு அழைத்து சென்றார். உடல்நலமின்மையை காரணம் காட்டி சுபத்ரா மட்டும் பின்தங்கினாள். அவர்கள் அங்கிருந்து சென்ற பன்னிரெண்டாம் நாள் நல்ல முகூர்த்த தினமாய் அமைந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் விட்டு சென்ற தேரில் சுபத்ரையுடன் அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பினான். யதி யாரென்றும் அதன் பின் நடந்தவையும் கேள்விப்பட்ட பலராமன் மிகுந்த கோபத்துக்கு உள்ளானார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சை மீறி இருவரையும் ஒரே இடத்தில தங்க அனுமதித்தது பலராமன் அல்லவா ? இப்பொழுது அவர் யாரை குற்றம் சொல்ல இயலும் ? இடும்பவனம் & இடும்பி ஒருமுறை கௌரவர்களின் சதியில் இருந்து தப்பி, யார் கண்ணுக்கும் படாமல் வெகு தூரம் சென்றனர். பீமன் தனது ஒரு தோளில் அன்னை குந்தியை சுமந்து சென்றான். மற்றொரு தோளில் தனது சகோதரர்களில் ஒருவனை மாற்றி மாற்றி சுமந்து சென்றான். நீண்ட தூரம் சென்ற பிறகு ஒரு அடர்ந்த வனத்தை அடைந்தனர். அருகிலேயே நீர் நிறைந்த தாமரை குளம் ஒன்றும் இருந்ததால் அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தனர். நீண்ட தூரம் அனைவரையும் சுமந்து வந்ததால் களைத்திருந்த பீமன், குளத்தில் களைப்பு தீர நீராடி வந்த பொழுது, அவனது தாயும் சகோதரர்களும் களைப்பில் உறங்கி இருந்தனர். அவர்களை எழுப்பி குளத்தில் இருந்து நீரை தாமரை இலைகளில் கொண்டு வந்து தந்து பருக செய்தவன் மீண்டும் அவர்களை தூங்க சொல்லி அவர்களுக்கு காவலாக அமர்ந்து கொண்டான். அந்த வனமானது கொடிய ராக்ஷஷனான இடும்பனுக்கு சொந்தமான இடும்பவனம் ஆகும். இடும்பனுக்கு நர மாமிசம் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்பொழுதெல்லாம் அந்த வனத்தில் மனிதர்கள் நுழைகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை அடித்து சாப்பிடுவது அவனுக்கு பிடித்த ஒன்றாகும். இப்பொழுதும் பாண்டவர்கள் நுழைந்தவுடன் மனித வாசனை அவனுக்கு வந்தது. உடனே தனது தங்கையான இடும்பியிடம் ” தங்கையே ! எனக்கு உணவின் வாசனை அடிக்கிறது. கண்டிப்பாய் இந்த காட்டில் மனிதர்கள் நுழைந்திருக்க வேண்டும். நீ உடனடியாக சென்று அவர்களை பிடித்து வா ! இன்று விருந்தை நாம் மகிழ்வுடன் உண்போம் !” எனக் கூறினான். அங்கிருந்து வந்த இடும்பி பாண்டவர்களை பார்த்தாள் . பார்த்தவுடன் அவர்களின் கருணை ததும்பும் முகம் அவளை ஈர்த்தது. அவர்களுக்கு காவலாய் அமர்ந்திருந்த நன்கு பலம் பொருந்திய ஓநாய் போன்ற உடலைக் கொண்டிருந்த பீமனையும் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவன் பால் ஈர்க்கப்பட்ட இடும்பி, அவர்களை உணவாக அவள் அண்ணனிடம் கொண்டு செல்லும் எண்ணத்தை மறந்தாள். பீமன் தன்னை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அழகிய பெண் வடிவத்தை எடுத்து அவன் அருகே சென்றாள் . பீமனும் அவளைப் பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொண்டான். அவளை பார்த்து ” அழகிய பெண்ணே ! நீ யார் ” என வினவினான். அவள் திரும்ப அவனிடம் ” முதலில் நீங்கள் யார் என நான் அறிந்து கொள்ளலாமா ? அங்கே மலர் போல் உறங்கும் அழகிய பெண்மணி யார் ? யாரிந்த இளம் வாலிபர்கள் ?” என கேட்டாள். ” நான் பீமன் , அரசன் பாண்டுவின் மகன். அங்கே இருப்பவர்கள் என் சகோதரர்கள் . என் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரர்களும். அது என் அம்மா . நீ தேவதையா ?” என பதில் உரைத்தான் பீமன். அதற்கு இடும்பி ” என் பெயர் இடும்பி, இந்த காட்டை ஆளும் இடும்பனின் சகோதரி. அவன் உன்னை கண்டால் உன்னை தின்றுவிடுவான். உன்னை என்னால் இழக்க இயலாது. உங்கள் அனைவரையும் நான் காப்பாற்ற விரும்புகிறேன். உங்கள் எல்லோரையும் அந்த மலை சிகரத்துக்கு தூக்கி சென்றுவிட்டால் உங்களை அவனால் கண்டுபிடிக்க இயலாது ” என காதல் வேகத்தில் கூறினாள். ” என்னைப் பற்றி அவ்வளவு தாழ்வாக எண்ணாதே பெண்ணே ! உன் அண்ணன் வரட்டும் அவனை நான் கொல்கிறேன் ” என்று பெருமிதத்துடன் கூறினான். விரைவில் பசியினால் பொறுமை இழந்த இடும்பனின் கர்ஜனை கேட்டது. அதைக் கேட்டவுடன் இடும்பி நடுக்கத்துடன் குந்தி அருகே சென்று அமர்ந்து கொண்டாள். மரத்தின் பின்னிருந்து வந்த இடும்பன், தன் தங்கை அழகிய உருவம் எடுத்து மனிதர்களுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் கோபம் கொண்டான். பீமன் அவனை சண்டைக்கு அழைத்தான். உடனே இருவருக்கும் இடையே மிக கடுமையான சண்டை துவங்கியது. அந்த சப்தத்தில், உறங்கி கொண்டிருந்த குந்தியும் மற்ற சகோதரர்களும் விழித்துக் கொண்டனர். தன்னருகே அமர்ந்திருந்த இடும்பியிடம் அவளை பற்றி கேட்டு வியப்படைந்தாள் குந்தி. யுதிஷ்டிரன் பீமனிடம் ” சண்டையை வளர்த்துக் கொண்டே செல்லாதே ! இரவு கவிழ்ந்தவுடன் ராக்ஷர்களின் பலம் அதிகமாகி விடும் ” எனக் கூறினான். உடனே பீமன், இடும்பனை தன்னுடைய பலம் வாய்ந்த கைகளால் உருத்தெரியாமல் நசுக்கி எறிந்தான். அதன் பின், பாண்டவர்களும், குந்தியும் தங்கள் பயணத்தை தொடர முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினார்கள். வேறு வழித் தெரியாத இடும்பியும் அவர்களை பின் தொடர்ந்தாள் . இதைக் கண்ட குந்தி ” மகளே ! நீ என் எங்களைப் பின் தொடர்கிறாய் ” என வினவினாள். இடும்பி நாணத்துடன் பீமனை பார்த்து பின் ” நீங்கள் அவருடைய அம்மா ..” என கூற, குந்தி பீமனை அவன் மனதில் இருப்பதை சொல்ல சொன்னாள் . மிக பெரிய உருவம் கொண்ட பீமன், வெட்கத்துடன் தரையை பார்த்தும் தன் புன்னகையை மறைக்கவும் முயன்றான். விரைவில் ஒரு அழகிய இடத்தை அடைந்தனர் அவர்கள். அங்கே இடும்பி அவர்கள் தங்க ஒரு குடிசை நிர்மாணித்தாள் . அதன் பின், பீமன் இடும்பியை மணந்து அங்கே மகிழ்வாக வாழ்ந்தனர். மகன் பிறந்தவுடன் அவனுக்கு ” கடோத்கஜன்” என பெயரிட்டு அவனை தாயுடன் விட்டுவிட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பழிக்கு பழி அரக்கு மாளிகை தீயில் இருந்து தப்பிய பாண்டவர்கள் ஏகசக்கரம் என்ற நகரில் பிராமணர்களாக வேடம் பூண்டு ஒரு பிராமணரின் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர் . தினமும் அந்நகரத்தில் பிக்ஷை எடுத்து உண்டு வந்தனர் . அத்தகைய சமயத்தில் ஒரு நாள் , சகோதரர்கள் நால்வரும் பிக்ஷை எடுக்க வெளியே சென்றிருக்கையில் பீமன் மட்டும் தன் தாய் குந்தியுடன் வீட்டில் இருந்தான் . அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளரின் பகுதியில் எதோ குழப்பமான விவாதம் நடப்பது அவர்கள் காதில் விழுந்தது . “அன்பே! நீ கூறுவதுபடி , நீ எங்களை விட்டு பிரிந்து சென்றால் நான் என்ன செய்வேன்? நம் குழந்தைகள் என்ன செய்வார்கள்? நம் சிறு மகளை நாம் காப்பாற்ற வேண்டும். மேலும் , நம் குலத்தையும் காப்பாற்ற வேண்டும்.” என அந்த வீட்டின் உரிமையாளர் தன் மனைவியிடம் கூறினார் . “நாதா! நான் போய்தான் ஆக வேண்டும். நீங்கள் செல்ல நான் அனுமதிக்க இயலாது. கணவன் இல்லாமல் , குழந்தைகளை எப்படி ஒரு பெண் பாதுகாக்க இயலும் ? மேலும் , அப்பாவி குழந்தைகள் தந்தை இல்லாமல் எங்ஙனம் வளர்வார்கள்? எனக்கு இறப்பை பற்றிய எந்த கவலையோ பயமோ இல்லை. நான் இறந்த பிறகு நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனமாக வளருங்கள்” என்று அவருடைய மனைவி பதில் கூறினாள். இதைக் கேட்ட அவர்களின் சிறு பெண் ” நான் சிறு பெண்தான் . இருந்தாலும் , நான் சொல்வதை இருவரும் கேளுங்கள் . நீங்கள் இறந்துவிட்டால், சிறு குழந்தைகளான நானும் என் தம்பியும் என்ன செய்வோம்? என்னை செல்ல நீங்கள் அனுமதித்தால் , உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்” என கூறினாள். இதைக் கேட்ட பெற்றோர் இருவரும் அவளை அனைத்துக் கொண்டனர் . நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் சிறு மகன் கையில் ஒரு தடி எடுத்துக் கொண்டு வந்து ” ஏன் எல்லாரும் அழுகிறீர்கள்? யாரும் பயப்பட வேண்டாம். நான் சென்று அந்த அரக்கனை கொன்று விடுவேன் ” என கூறியதைக் கேட்டு அந்த துயரமான நிலையிலும் அனைவரும் சிரித்தனர் . அந்த சமயத்தில் அங்கே வந்த குந்தி ” நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா ? ” என வினவினாள். “சகோதரி ! பகாசுரன் என்ற அசுரன் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து இந்த நகரின் ராஜாவை கொன்று நகரைக் கைப்பற்றிக் கொண்டான் . பின், வெறி கொண்டவனாய் நகரத்தில் இருக்கும் மக்களை கொல்ல துவங்கினான் . அவனது அராஜகத்தை சமாளிக்க முடியாத மக்கள் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர் . அதன்படி , ஒவ்வொரு வாரமும் , வண்டி நிறைய உணவுப் பொருட்களுடன் ஒரு மனிதரை அனுப்புவதாய் ஒத்துக் கொண்டனர். அதன்படி , ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒருவர் உணவு கொண்டு செல்லவேண்டும் . அந்த உணவுடன் , உணவு எடுத்து செல்லும் நபரையும் பகாசுரன் விழுங்கி விடுவான் . இந்த வாரம் உணவு எடுத்து செல்ல வேண்டியது எங்கள் குடும்பத்தின் முறை. “ ” மக்களை காப்பாற்ற வலிமையான அரசரோ இளைஞர்களோ இல்லாதபட்சத்தில் வலிமையற்ற சாதாரண மனிதர்களாகிய நாங்கள் என்ன செய்ய? ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாத எங்களால் என்ன செய்ய முடியும்? பேசாமல் , நாங்கள் நால்வருமே அவனுக்கு உணவாக செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறோம்” என அவர் நிலைமையை குந்திக்கு விளக்கினார் . “சகோதரரே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு ஐந்து மகன்கள் . அவர்களில் ஒருவன் இந்த முறை அசுரனுக்கு உணவெடுத்து செல்லட்டும் ” என குந்தி கூற அதை அந்த பிராமணர் மறுத்தார் . “என்னுடைய மகன் பீமன் மிகவும் பலம் பொருந்தியவன் . ஏற்கெனவே அவன் பல அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்றிருக்கிறான். எனவே நீங்கள் அதை எண்ணி பயப்பட வேண்டாம். உங்களுக்கு பதில் அவன் செல்வான்” என குந்தி உறுதி அளித்தாள். குந்தியின் உத்தரவின் படி இரண்டு வண்டிகள் நிறைய உணவுப் பொருட்களுடன் பகாசுரன் இருந்த குகை நோக்கி சென்றான் பீமன் . அந்த குகையை அடைந்தவுடன் வண்டியை நிறுத்திய பீமன் வண்டியில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிடத் துவங்கினான் . பகாசுரனுடன் சண்டையிடும் பொழுது அந்த உணவு கீழே விழுந்து வீணாகிவிடும். மேலும், அவனைக் கொன்றவுடன் குளிக்காமல் உண்ண இயலாது என அவ்வாறு செய்தான் . உணவின் சுவை நாசியில் ஏற தன் குகையில் இருந்து வெளிவந்த பகாசுரன் , தனக்கான உணவுப் பொருட்களை மானிடன் ஒருவன் உண்பதைக் கண்டு கோபம் கொண்டு தாக்கத் துவங்கினான் . துவக்கத்தில் , அவனது தாக்குதலை கண்டுகொள்ளாத பீமன், ஒரு கையால் உணவருந்திக் கொண்டே மறு கை கொண்டு அசுரனுடன் சண்டையிட்டான் . உணவுகளை முழுவதும் உண்ட பின் , அங்கிருந்த மரத்தைப் பிடுங்கி அசுரனை தாக்க பதிலுக்கு அசுரன் எறிந்த கற்களை விளையாட்டாக தடுத்தான் . பின் பகாசுரனை தூக்கி தரையில் எறிந்து கொன்று அந்நகர மக்களுக்கு விடுதலை தந்தான் . https://solvanam.com/2025/02/09/காதலில்-துறவி/
  11. NPP + தமிழ் பேசும் கட்சிகள்-பொறுப்பும் கூட்டுப் பொறுப்பும் August 20, 2025 — கருணாகரன் — ‘வரலாற்றில் ஒரு மாற்றுத் தரப்பு‘என்ற அறிவிப்போடும் அடையாளத்தோடும் அதிகாரத்தில் – ஆட்சியில் இருக்கிறது NPP. அது மாற்றுத் தரப்பா, இல்லையா? அது பிரகடனப்படுத்தியதைப் போலமுறைமை மாற்றத்தை (System change) மெய்யாகவே நடைமுறைப்படுத்துகிறதா? தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாற்றங்களை நிச்சயமாகச் செய்யுமா? செய்யாதா? NPP சுயாதீனமாக இயங்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது அதை JVP கட்டுப்படுத்தித் தன்னுடையபிடியில் வைத்திருக்கிறதா? அல்லது NPP யும் ஏனைய ஆட்சியாளர்களைப்போலத்தான்இயங்குகின்றதா; சிந்திக்கின்றதா? அதை மீறிச்செயற்படுமா? என்ற சந்தேகங்கள், விமர்சனங்கள், விவாதங்கள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. ஆனாலும் ஆட்சியில் (அதிகாரத்தில்) பெரும்பான்மை பலத்தோடு NPP யே இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளவேண்டிய – மறுக்க முடியாத – உண்மை. இந்த உண்மையிலிருந்தே நாம் விடயங்களை அணுக வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொண்டபடியால்தான் இந்தியா பல வழிகளிலும் NPP அரசாங்கத்தோடு ஒத்துழைக்கிறது. அநுர குமார திசநாயக்கவுக்கு புதுடெல்லி அளித்த உற்சாகமான வரவேற்பிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியா மட்டுமல்ல, சீனா, மேற்குலக நாடுகள், அரபுதேசங்கள் எல்லாம் NPP அரசாங்கத்துடன் சீரானஉறவையே கொண்டிருக்கின்றன. IMF, ADB என சர்வதேச நிதி நிறுவனங்களும் UN போன்ற சர்வதேச அமைப்புகளும் NPP ஆட்சியுடன் இணைந்தே பயணிக்கின்றன. விருப்பமோ விருப்பமில்லையோ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புத்தான் ஆட்சியிலிருக்கும். அந்தத் தரப்புடன்தான் தொடர்பு கொள்ள முடியும். அதனோடு இணைந்தே எதையும் செய்ய முடியும். பெரும்பான்மை மக்கள் (இந்தப்பெரும்பான்மை வேறு. சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ்பேசும் மக்களிலும் கணிசமானவர்கள்) NPP யையே ஆட்சியமைப்பதற்குத் தெரிவு செய்துள்ளனர். ஆகவே அந்த மக்களுடைய தெரிவின் அடிப்படையிலே, அதற்கு மதிப்பளித்தே இந்தத் தரப்புகள் எல்லாம் NPP ஆட்சியுடன் தொடர்புறுகின்றன; தம்முடைய வேலைகளைச் செய்கின்றன. இதைத் தவிர்க்க முடியாது. இங்கே இந்தத் தரப்புகள் கவனத்திற் கொள்வது, தம்முடைய தொடர்பைப் பேணுவதையும் தம்முடைய வேலைகளைச் செய்வதையும் பற்றியே. இதற்காக NPP அரசாங்கத்தை – ஆட்சியிலிருக்கும் தரப்பை -எப்படிக் கையாள்வது என்பதையே சிந்திக்கின்றன. அதற்கப்பால் எதைப்பற்றியும் அவை சிந்திக்கவில்லை. ஆனால், தமிழ் பேசும் தரப்புகளோ தமக்கு முன்னே உள்ள துலக்கமான உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளன. அல்லது அதை மறுக்கின்றன. அதனால் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் மாறாகவே சிந்திக்கின்றன; செயற்படுகின்றன. என்பதால்தான் NPP ஐ எதிர்ச்சக்தியாகவே பிரகடனப்படுத்தி வைத்துக்கொண்டு, அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், இதற்கு முன்னிருந்த இனவாதத் தரப்புகளான UNP, SLFP, SLPP போன்றவற்றோடு இணங்கியும் பிணங்கியும் உறவைக் கொண்ட கட்சிகள், NPP யோடு மட்டும் விலக்கம் கொள்கின்றன. ஒப்பீட்டளவில் UNP, SLFP, SLPP ஆகியவற்றை விட NPP இனவாதக் கட்சியல்ல. மட்டுமல்ல, முன்றேற்றச் சிந்தனைகளையும் ஊழல் எதிர்ப்பையும் அதிகாரக் குறைப்பையும் கொண்ட சக்தி. சுருக்கமாகச் சொன்னால், மற்றவற்றை விட நெருக்கம் கொள்ளக்கூடிய தரப்பு – சக்தி. என்பதால்தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் NPP க்கு தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளனர். சிங்கள மக்களும் கூட மாற்றத்தைக் குறித்த நம்பிக்கையை NPP மீதே வைத்துள்ளனர். என்பதால்தான் அவர்கள் NPP க்குப் பேராதரவை வழங்கினர். இங்கே பிரச்சினை என்னவென்றால், மக்களின் உணர்வுக்கும் தெரிவுக்கும் வெளியே – மாறாக தமிழ், முஸ்லிம், மலைகக் கட்சிகள் நிற்கின்றன. காரணம், இவற்றின் அரசியல் இருப்புக்கு NPP சவாலை உருவாக்கியதே. இதை பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்வந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொண்ட விதமும் அதற்குப் பின் சபைகளை அமைக்கும்போது இந்தத் தமிழ்பேசும் கட்சிகள் நடந்து கொண்ட முறையும் தெளிவாகவே வெளிப்படுத்தின. இதனால் அரசாங்கத்துக்கு (ஆட்சிக்கு) முற்றிலும் வெளியிலேயே தமிழ்பேசும் தரப்புகள் நிற்கின்றன. அரசாங்கத்துக்கு வெளியே என்பதை, ‘அரசாங்கத்தை எந்த நிலையிலும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில்‘ என்றுபொருள் கொள்ள வேண்டும். இங்கே ஒரு ஆழமான உண்மையை உணருவது அவசியம். சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக இப்போதுதான் தமிழ்பேசும் தரப்புகள் முற்றாகவே ஆட்சிக்கு வெளியே நிற்கின்றன. இதற்கு முன்பெல்லாம் எப்படியாவது சில கட்சிகள் ஆட்சியில் பங்கேற்கும். அது சரியானதா பிழையானதா என்பதல்ல இங்கே உள்ள விடயம். இங்கே கவனத்திற்குரியது, அப்படிச் சிலகட்சிகளாவது அரசாங்கத்தோடு (ஆட்சித்தரப்போடு) இணைந்து நின்றதால் – பங்கேற்றதால் – அந்தந்தச் சமூகங்கள் முழுச்சுமையிலிருந்து அல்லது முழுமையான நெருக்கடியிலிருந்து தப்பியிருந்தன. இப்போது தமிழ்பேசும் தரப்புகள் மொத்தமாக வெளியே – ஆட்சித்தரப்புக்கு எதிராக நிற்பதால், ஒட்டுமொத்தத் தமிழ்பேசும் சமூகங்களின் நலன்களும் உரிமைகளும் கேள்விக்குள்ளாகியுள்ளன. NPP எந்தளவுக்கு நியாயத்தோடும்விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்ளுமோ அதைப்பொறுத்தே இந்தச் சமூகங்களின் நலன்களும் உரிமைகளும் பேணப்படும். இதில் NPP யில் உள்ள தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் NPP ஐ ஆதரிக்கும் தமிழ்பேசும் சமூகத்திலுள்ள நபர்களும் ஏதாவது செல்வாக்கைச் செலுத்தினால் சற்றுக் கூடுதலாக ஏதாவது நடக்கலாம். ஆனால், அதற்குரிய வல்லமையை அவர்களிடம் காணமுடியவில்லை. ஆகவே தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கட்சிகளும் NPP யுடன் கொள்ளும் தொடர்பும் உறவும் அதைக் கையாளும் முறையுமே இந்தச் சமூகங்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும். ஆனால், NPP ஐக் கையாளத்தெரியாமலே – அதற்கான வல்லமை இல்லாமலேயே தமிழ்பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உள்ளன. (இதே நிலையிற்தான் NPP யும் உள்ளது. இதைப்பற்றிப் பின்னர் சற்றுவிரிவாகப் பார்க்கலாம்). ஆக, தமக்கு முன்னே உள்ள உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளத் தவறினால் அல்லது புரிந்து கொள்ள முடியாமல் போனால் அது எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். இதுவே தமிழரின் அரசியலில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் விடுதலைப்புலிகள் பகைத்துக்கொண்டதும் இலங்கை அரசுடன் தமிழ்த்தேசியவாதக் கட்சிகள் தொடர்ச்சியாகவே எதிர்ப்பு அரசியலை மேற்கொள்வதும் இவ்வாறான கையாள்கையின் தவறுகளாலேயே. “இலங்கையின் ஆட்சியாளர்கள் இனவாதத்துக்கு அப்பால் எப்போது சிந்தித்தனர்? இனவாதத்துக்கு வெளியே வருவதற்கு யார் தயாராக இருந்தனர்? அப்படி யாராவது வந்திருந்தால் அதை வரவேற்றிருப்போமே!” என்று யாரும் இதற்குப் பதில் அளிக்கக் கூடும். இலங்கையின் சிக்கலான இனத்துவ அரசியற் சூழலில், இனவாதமும் மதவாதமும் பின்னிப் பிணைந்திருக்கும் ஆட்சி முறையில், இந்தியாவும் தமிழ்நாடும் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆகவே தமிழர்களை விட தாம் சிறுபான்மையினர் என்று சிந்திக்கும் தாழ்வுணர்ச்சியைக் கொண்ட சிங்களத் தரப்பிடமிருந்து முழு நிறைவான அதிகாரப் பகிர்வை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கலாம். அரசியல் யதார்த்தத்தின்படி அந்த நியாயத்தை படிப்படியாகவே உணரச் செய்ய முடியும். படிப்படியாகவே வென்றெடுக்க முடியும். அதற்கு முடிவற்ற அரசியல் வேலைத்திட்டங்களும் கூர்மையான நுண்திறனும் வலிமையான உத்திகளும் உச்ச நிதானமும் தேவை. முகப்புத்தகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அள்ளிச் சொரியும் குப்பைகளால் அதைச் செய்யவே முடியாது. அரசியலில் ‘கையாள்கை‘ என்ற சொல்லை Handling, Diplomacy, Strategy என்றே கொள்ளவேண்டும். இவை அனைத்தும் கலந்ததாகவே ‘கையாள்கை‘யின் செயற்பாட்டுத் தன்மை இருக்கும். தமிழரின் அரசியலில் ‘கையாள்கை‘ என்பது படுதோல்வியான விசயம். இப்பொழுது இந்தச் சுழிக்குள் மலையக, முஸ்லிம் கட்சிகளும் சிக்கியுள்ளன. இதற்குக்காரணம், தேசியம் (Nationalism) என்பதை இவை தவறாகப் புரிந்துகொண்டு, அதை இனவாதமாக(Racism) மடைமாற்றம்(Metamorphosis) செய்திருப்பதேயாகும். இந்தத் தவறை நீண்டகாலமாவே செய்தது தமிழ்த்தரப்பே. பின்னாளில் இதில் முஸ்லிம், மலையகச் சக்திகளும் இணைந்து கொண்டன. என்பதால்தான் இவற்றினால் அரசோடு பேசவே முடியாதிருக்கிறது. இதனால் இப்பொழுது அனைத்தும் எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதை அந்தக் கட்சியின் தலைவர்கள் மறுக்கலாம். ஆனால், உண்மை இதுதான். காலம் கடந்து இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கே இன்னொரு கடினமான – அவசியமான உண்மையைக் கவனிக்க வேண்டும். NPP என்பது தனியே ஆட்சியை நடத்தும் தரப்போ கட்சியோ மட்டுமல்ல. அது பெரும்பான்மையான மக்களின் தரப்பாகும். முந்திய ஆட்சித்தரப்புகளைப் போலன்றி, தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் செல்வாக்கையும் (ஆதரவையும்) பெற்ற தரப்பாக உள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தில் அது அறுதிப் பெரும்பான்மையையும் கொண்டுள்ளது. அதுதான் சர்வதேச சமூகத்தின் பாதியுமாகும். எப்படியென்றால், அரசாங்கத்தைக் கடந்து எந்த வெளிச்சக்தியும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது. அப்படித் தலையிட்டாலும் அதற்கு வரையறைகள் உண்டு. ஆகவே NPP யுடன் அல்லது அரசாங்கத்துடன் எதிர்த்து நிற்பதோ விலகி நிற்பதோ சர்வதேச சமூகத்தோடும் விலகி நிற்பதாகவே யதார்த்தத்தில் அமையும். அரசாங்கத்தை – ஆட்சித்தரப்பைப் பகைத்துக் கொண்டு வெளிச்சமூகம் அரசுக்குவெளியே நிற்கும் தமிழ்பேசும் தரப்போடு உருப்படியான எந்தவேலைகளையும் செய்யாது. வேண்டுமானால் வழமையைப் போலச்சம்பிரதாயமாக அவ்வப்போது சந்திப்புகளைச் செய்யலாம். ஏதாவது உரையாடலாம். நடைமுறையில் அவற்றினால் எந்தப் பயனும் குறிப்பிடக்கூடிய நன்மைகளும் கிட்டாது. கடந்த காலச் சந்திப்புகளும் படமெடுப்புகளும் இதைத் தெளிவாகவே உணர்த்துகின்றன. ஆகவே NPP யின் ஆட்சியை எதிர்த்து நிற்பதென்பது, ஒரேநேரத்தில் அரசாங்கம், வெளிச்சமூகம், பெரும்பான்மை மக்கள் ஆகிய மூன்று தரப்பையும் எதிர்த்து நிற்பதாகும். அப்படியென்றால், NPP என்னசெய்தாலும், எப்படிச்செயற்பட்டாலும் அதைக்கண்மூடித்தனமாக – எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்வதா? என்ற கேள்வியை ஒரு குண்டாக யாரும் தூக்கிப் போடலாம். NPP இன்னும் பொறுப்புக் கூறும் ஒரு ஆட்சித் தரப்பாகமாறவில்லை என்பது உண்மையே. அப்படிமாறியிருந்தால், ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல, அரசாங்கத்தை நிர்வகிக்கும் – ஆட்சியை நடத்தும் – தரப்பு, மாற்றங்களைச் செய்ய விரும்பும் தரப்பு, மக்கள் நலனை முன்னிறுத்தும் தரப்பு, பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் தரப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண விரும்பும் தரப்பு, ஒட்டுமொத்தமாக ஒரு மாற்றுச்சக்தி என NPP பொதுவாகக்கருதப்படுவதால் தமிழ்பேசும் தரப்புகளை – தமிழ்பேசும்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை NPP இணக்கமான முறையில் அணுகியிருக்கவேண்டும். ஏனென்றால் NPP இப்பொழுது ஒரு அணியோ கட்சியோ அல்ல. அது ஆட்சியிலிருக்கும் தரப்பு. ஆட்சியிலிருக்கும் தரப்பு அதற்குரிய பொறுப்போடும் கடமைகளோடும் கண்ணியத்தோடும் இருக்கவேண்டும். அது கட்சி ஒன்றைப்போல விருப்பு வெறுப்பு, லாப நட்டக் கணக்குப் பார்த்துச்செயற்படக் கூடாது. கட்சியாகச்சுருங்கிச் செயற்பட முடியாது. ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவை அப்படித் தவறாக (கட்சியாக) செயற்பட்டதன் விளைவே கடந்தகாலத் துன்பியல் வரலாறும் இலங்கையின் வீழ்ச்சியுமாகும். இந்தப்படிப்பினைகளிலிருந்து NPP உண்மையாகவே எதையாவது படித்திருந்தால், அதுகட்சி என்ற உணர்விலிருந்துவிடுபட்டு, பொறுப்புடைய அரசாங்கத் தரப்பாகவே தான் உள்ளேன் என்று கருதிச்செயற்படும். தன்னுடைய பொறுப்புக் கூறலை, இணக்க நடவடிக்கைளை, மாற்றத்துக்கான செயற்பாடுகளை, தீர்வுக்கான முயற்சிகளை ஆரம்பிக்கும். இங்கும் ஒரு வேடிக்கையான – துயரமான உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அதிகாரத்துக்கு வருவதற்கு முன், தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்றவற்றோடு சிநேகபூர்வமான உறவைக் கொண்டிருந்த அநுரவும் NPP யும் ஆட்சி பீடமேறியபின் எதிர்மனோபாவத்தோடு அணுகும் நிலை தோன்றியுள்ளது. அப்படித்தான் ஆட்சி அமைப்பதற்கு முன், நட்புடன் கைகுலுக்கிய மேற்படி தரப்புகள் இப்பொழுது முகத்தை மறுவளமாகத் திருப்பிக் கொண்டுள்ளன. இந்த முட்டாள்தனத்தை (அறியாமையை) என்னவென்று சொல்வது? ஆகவே இந்த இருளிலிருந்து ஒவ்வொரு தரப்பும் விலகி, ஒளியை நோக்கிப் பயணிக்க வேண்டும். இதில் கூடுதல் பொறுப்பு அரசாங்கத்தை நிர்வகிக்கும் NPP க்கு உண்டு. பொறுப்புக் கூறல் என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண்பதற்கான, காயங்களை ஆற்றக் கூடிய, எதிர் முகாம்களை இணக்கத்துக்குக் கொண்டுவரக்கூடிய, அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய சிறப்பான ஒரு முன்னாரம்ப நடவடிக்கையாகும். (Accountability is a great first step towards finding solutions to problems, healing wounds, bringing opposing camps to reconciliation, and giving hope to all). அப்படிப் பொறுப்புக் கூறும் தரப்பாக, பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் தரப்பாக NPP செயற்படுமாக இருந்தால், அது எத்தகைய அரசியல் தவறுகளைத் தமிழ்பேசும் தரப்புகள் விட்டாலும் அதைக் கடந்து, அவற்றைச்சுமுகமாக்க முயன்றிருக்கும். இந்த ஓராண்டு ஆட்சிக்காலத்துள் அனைத்துத் தமிழ்பேசும் தரப்போடும் குறைந்தபட்சம் ஒரு சம்பிரதாயபூர்வமான சந்திப்பையாவது மேற்கொண்டிருக்கும். அதாவது பொருத்தமான அணுகுமுறையின் மூலம் தமிழ்பேசும் தரப்புகளைக் கையாண்டிருக்கும். அதில் வெற்றி கொண்டிருக்கும். ஒரு மாற்றுச் சக்தியானால் அதுவே நிகழ்ந்திருக்க வேண்டியது. NPP யின் அழைப்பையும் நல்லெண்ண முயற்சிகளையும் தமிழ்பேசும் தரப்புகள் புறக்கணித்தால் அல்லது தவிர்த்தால் அது NPP க்கே மதிப்பைக் கூட்டும். பதிலாக தமிழ்பேசும் தரப்புகளுக்கு நெருக்கடியை உண்டாக்கும். குறிப்பாக அரசாங்கத்தின் அழைப்பையும் நல்லெண்ணத்தையும் ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பும். இப்பொழுது கூட இரண்டுதரப்புக்கும் (அரசாங்கம் {NPP} – தமிழ்பேசும் தரப்புகள்) காலம்கடந்து விடவில்லை. பரஸ்பரம் இரண்டு தரப்பும் சுமுகம் கொள்வதற்கான வழிகளைத்தேடலாம். NPP ஏற்றுக்கொள்ளவே முடியாத சக்தி என்றால், ஐ.தே.கவை அல்லது சு.கவை அல்லது பெரமுனவை அல்லது ஐக்கியமக்கள் சக்தியை ஏற்றுக்கொள்ளப்போகிறீர்களா? இவைதானே முன்பு ஆட்சியில் இருந்தன. இவற்றோடு குறைந்தளவிலேனும் உரையாடப்பட்டது. உறவாடப்பட்டது. ஏற்பட்ட விளைவு? ஐ.தே.க, சு.க, பெரமுன, ஐக்கியமக்கள் சக்தி போன்றவற்றை விட NPP ஆபத்தானதா? NPP தவறு என்றால் அடுத்ததெரிவு என்ன? அதைப்போல தமிழ் பேசும் சக்திகளைப் புறக்கணித்துவிட்டு, இந்த நாட்டில் எத்தகைய தீர்வை எட்ட முடியும்? எத்தகைய முன்னேற்றத்தை உருவாக்கலாம்? இந்த நாட்டில் மாற்றம் வேண்டும் என்றால், அது தனியே NPP யால் மட்டும் நிறைவேறக் கூடியதல்ல. அனைத்துத் தரப்பினதும் அனைத்துச் சமூகங்களினதும் பங்களிப்புடன்தான் ஏற்படக்கூடியது. அதற்கான கதவுகளை (வாசல்களை) திறக்கவேண்டிய பொறுப்பு Responsibility (கடப்பாடு – Obligation) அனைவருக்கும் உண்டு. “ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?“ பாரதி பாடல் சொல்கின்ற இந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைச் சமூகங்கள் தங்களுக்கிடையில் இணக்கம் கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணையவில்லை என்றால். இலங்கையில் பன்மைத்தன்மைக்கான இடமில்லை என்றால், அந்திய சக்திகள்(வெளியார்) (The forces of darkness – outsider) ஆதிக்கம் செய்யவே வழியேற்படும். அது இலங்கையை வெளியாரிடம் அடிமைப்படுத்துவதாகவே அமையும். என்ன செய்யப்போகிறோம்? https://arangamnews.com/?p=12262
  12. ”4/21 சூத்திரதாரியை எல்லோருக்கும் தெரியும்,ஆனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது” 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார். அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்தவர் என்றும், ஆனால் அவரை அடைய முடியாது என்றும் அவர் கூறினார். இலங்கை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, கொடிய தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் துடித்துக் கொண்டிருந்தாலும், உண்மையை பொதுமக்களுக்கு எளிதில் வெளிப்படுத்த முடியாது என்று கூறினார். “அது எப்படி நடந்தது என்பது பற்றி நான் சிஐடியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது. மூளையாகச் செயல்படுபவரைக் கண்டுபிடிக்க அனைவரும் துடிக்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் – அது யார் என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒவ்வொரு அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும், உளவுத்துறைக்கும் தெரியும். மூளையாகச் செயல்படுபவர் எங்கே இருக்கிறார் என்பதை நாம் சொல்ல முடியும் என்றாலும், அவர்களை நாம் எதிர்கொள்ள முடியாது,” என்று சிறிசேன கூறினார். “கடுமையான குற்றங்கள் நடந்துள்ளன – சில வேண்டுமென்றே திட்டமிடப்பட்டன. இந்தத் திட்டங்கள் எனது பெயரை சேற்றில் இழுத்து, எனது அரசாங்கத்தை நாசமாக்கி, எனது கட்சியை அழித்துவிட்டன,” என்று அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி புவிசார் அரசியல் மற்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஒரு புதிய சிந்தனைக் குழுவைத் தொடங்கி வைக்கும் போது கருத்து தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=337732
  13. காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு காசா நகர் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ள தரைவழித் தாக்குதலின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், நகரின் புறநகர் பகுதிகளை ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கான களத்தை அமைப்பதற்காக, செய்தூன் மற்றும் ஜபலியா பகுதிகளில் படைகள் ஏற்கெனவே செயல்பட்டு வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நடவடிக்கைகளுக்காக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 மேலதிக வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது களப்பணிக்குத் தேவையான வீரர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான போரைத் தொடர்வதற்கு ஆதரவாக இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், காசா நகரில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் திட்டத்தை அதன் பல நட்பு நாடுகள் கண்டித்துள்ளன. இது “இரண்டு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும். மேலும், நிரந்தரப் போர்ச் சுழற்சியில் இப்பகுதி முழுவதையும் தள்ளிவிடும்” என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை எச்சரித்துள்ளார். இதற்கிடையில், மேலும் அதிகமான மக்கள் இடம்பெயர்வதும், தாக்குதல்கள் தீவிரமடைவதும், காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கான ஏற்கெனவே பேரழிவுகரமான சூழ்நிலையை மோசமாக்கும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ICRC) தெரிவித்துள்ளது. https://akkinikkunchu.com/?p=337727
  14. இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விவாதத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்கள் இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியிலேயே இந்தியாவுக்கு அகதிகளாக அகதி முகாமுக்கு சென்றுள்ளனர். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள். இதன்படி தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் 110க்கும் அதிகளவில் காணப்படும் அகதி முகாம்கள் தொடர்பில் எமது நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இந்த அகதி முகாம்களில் ஒரு இலட்சத்து 10ஆயிரம் பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களில் 28ஆயிரத்து 500 பேர் வரையிலானோர் இலங்கையினதோ இந்தியாவினதோ குடியுரிமை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர். இதனால் ஜே.வி.பி என்ற வகையில் நானும் இராமலிங்கம் சந்திரசேகரனும் அந்த முகாம்களுக்கு சென்று காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இ ரட்ண சிறி விக்கிரமநாயக்கவின் உதவியுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றி குறித்த 28ஆயிரத்து 500 பேருக்கும் இலங்கை குரியுரிமையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம். இந்நிலையில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த அகதி முகாம்களில் இருந்தவர்களில் குறைந்தது 6ஆயிரம் பேர் வரையிலானோர் இலங்கை வந்து குடியேறியுள்ளனர். கிளிநொச்சியில் கனகபுரம், பாரதிபுரம் போன்ற இடங்களில் இவ்வாறு குடியேறியவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் காணி மற்றும் மின்சாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளேன். இவ்வாறான நிலைமையில் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் அகதிகள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மையில் சின்னையா சிவலோகநாதன் என்பவர் பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தோல்வியடைந்த எம்.பியொருவர் பெரும் கோசமெழுப்பி நீதிமன்றத்திற்கும் சென்றார். ஆனால் அதன்பின்னர் நானும், குடிவரவு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி 2 நாட்களில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்படுவது சரியானது அல்ல. இது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல. நாங்கள் அதிகாரிகள் ஊடாகவே நாட்டை நிர்வாகம் செய்கின்றோம். இதனால் அதிகாரிகள் தவறிழைக்கலாம். இதனை அரசாங்கத்தின் செயற்பாடு என்று அரசாங்கதிற்கு சேறு பூச கூடாது. தமிழ் அகதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே இடையூறுகளை ஏற்படுத்துகின்றது என்று காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். வடக்கில் உள்ள சிலர் இவ்வாறு செய்கின்றனர். பச்சை இனவாதத்தை தமது செயற்பாடாக கொண்டவர்களே அவர்கள். வடக்கில் ராஜபக்‌ஷக்களின் பிம்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களை தமிழ் என்பதனால் பழிவாங்குகின்றது என்று காட்டவே முயற்சிக்கின்றனர். இதேவேளை ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்னுமொரு சம்பவம் நடந்தது. அதாவது ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை அகதிகளே. இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டம் உள்ளது. அதன்படியே இவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் . இந்த விடயத்தில் நாங்கள் கவலையடைகின்றோம். இவ்வாறு வருபவர்களில் ஒருவர், இருவருக்காவது இவ்வாறு நடக்கலாம். இதற்கான சட்ட ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால் இது மாற்ற முடியாத விடயம் அல்ல. இந்த திருத்தங்களை முன்னரே செய்திருக்கலாம். அரசாங்கம் என்ற வகையில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை அன்பாக ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் அவர்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான உதவிகளை வழங்குவோம். அமைச்சர் ஆனந்த விஜேபால புனர்வாழ்வு அதிகாரசபையின் முன்னாள் தலைவராவார். இவர் 5 வருடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் இருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள சகல வீடுகளுக்கும் சென்றவரே. 2015ஆம் ஆண்டின் பின்னர் வீடுகளுக்கு சென்று படிவங்களை விநியோகித்தவர்களே. இதனால் எந்த வகையிலும் கொள்கை ரீதியில் இவ்வாறு வரும் அகதிகளை தடுத்து வைத்தல் மற்றும் கைது செய்யப் போவதில்லை. இந்நிலையில் ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். குறிப்பிட்ட இரண்டு சம்பங்களை பயன்படுத்தி ஏன் இவ்வாறு இலங்கைக்கு அவர்கள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும். எவ்வாறாயினும் இங்கிருந்து அகதிகளாகியுள்ள எமது மக்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான வசதிகளை வழங்கி அவர்களை பாதுகாத்து இந்நாட்டின் பிரஜைகளாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இந்த விடயத்தில் சட்ட விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம். இதனால் வேறு அதிகாரிகளால் இழைக்கப்படும் தவறுகளை இனவாத அர்த்தத்தில் பார்க்க வேண்டாம். இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதனால் அநீதிக்கு இலக்காவதாக கூறப்படும் செய்தி முதமைச்சர் கனவில் இருப்பவர்களுக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பெறுமதியானதாக இருக்கலாம். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்களுக்கு அவ்வாறான எண்ணம் இருக்காது என்று நினைக்கின்றோம். நாங்கள் ஒரே இலங்கையை அமைப்போம். குறைபாடுகளை எங்களுக்கு சுட்க்காட்டுங்கள். ஆனால் இனவாத திட்டங்களுக்கு உதவ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார். https://akkinikkunchu.com/?p=337765
  15. யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை 21 Aug, 2025 | 11:37 AM யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உருவாக்குவதற்கும், அது குறித்த ஒரு கருத்தாடலைக் கட்டியெழுப்பவும் பங்களிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு “Clean Sri Lanka” வேலைத்திட்டம் மற்றும் அதன் கருத்தியல் பெறுமதி குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அடையாள ரீதியான பரிசாக பெறுமதியான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோருடன் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/222993
  16. கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பினை மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmekrzab80002qpu752l58f74
  17. எப்பவும் ஜெற் விமானத்தில் பறப்பவர்களுக்கு சிறிய இரட்டை என்ஜின் விமானங்களில் பறப்பது புது அனுபவமாக இருக்கலாம். 😃
  18. கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை! adminAugust 20, 2025 கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர். அவ் நடமாடும் சேவைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள். மேலும், மேற்படி நடமாடும் சேவைகளில் குறிப்பாக கண் பரிசோதனை, ஆட்பதிவுச் சேவை, மருத்துவ பரிசோதனைச் சேவை, பிறப்பு இறப்பு பதிவுச் சேவை, மோட்டார் வாகன போக்குவரத்து சேவை மற்றும் ஓய்வூதியச் சேவைக்கே அதிக பொது மக்கள் பங்குபற்றினார்கள். பொது மக்களின் மேற்படி சேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடாத்தவுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி சங்கானை பிரதேச செயலகத்திலும், 30 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலக த்திலும் மாவட்டச் செயலகத்தினால் நடமாடும் சேவை பிரதேச செயலக ஒத்துழைப்புடன் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும், பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை இரண்டு வாரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார். அத்துடன் மக்களுக்கான சேவையில் அனைவரதும் ஒத்துழைப்புக்களை வினைத்திறனாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/219495/
  19. ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்! August 19, 2025 — அழகு குணசீலன் — முத்தையன்கட்டு குளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம், அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இளைஞனின் கொலைக்கு இராணுவமே காரணம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிய நிலையிலேயே, தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் ஹர்த்தால் அழைப்பு வெளியானது. சுமந்திரனின் இந்த அழைப்பு தனிநபர் அழைப்பு என்பதே மக்களதும், பொது அமைப்புக்கள், கட்சிகளின் நிலைப்பாடாக ஆரம்பம் முதல் இன்று வரை இருக்கிறது. இடையில் இது குறித்த விசாரணைகள் வேறு பல குற்றவியல் உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளன. இந்த உண்மைகள் மரணம் குறித்து மக்களுக்கு இருந்த ஆத்திரத்தை தணித்தன. இராணுவ பக்கம் நீட்டப்பட்ட சுட்டுவிரலை மக்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பக்கம் திருப்பினர். இதனால் அறிவித்த வேகத்தில் ஹர்த்தாலை முன்னெடுப்பதில் மக்கள் ஒத்துழைப்பில் இருந்து விலகி இருந்தனர். கஞ்சா வியாபாரிக்கும், திருட்டு கும்பலுக்கும் நியாயம் கோரி ஹர்த்தாலா? என்று கேட்டனர். அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்தது. குறிப்பிட்ட முகாமைச் சேர்ந்த மூன்று இராணுவச்சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டத்திலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு “அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் ஹர்த்தால் அறிவிப்பு எதற்கு” ? என்று கேட்டுள்ளார். மறுபக்கத்தில் சுமந்திரன் தன்னிச்சையான இந்த முடிவு குறித்து தமிழரசுக்கட்சிக்கு உள்ளும், வெளியும், தமிழ்த்தேசிய பரப்பிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டன. ஹர்த்தாலுக்கு திகதியிடப்பட்ட 15ம்திகதி குறித்து விமர்சனங்கள் வெளிவந்தன. திகதி 18 க்கு மாற்றப்பட்டது. விமர்சனங்கள் குறையவில்லை. முழுநாள் ஹர்த்தால் அறிவிப்பை சில மணித்தியாலங்களுக்கு குறுக்க வேண்டிய நெருக்குவாரம் சுமந்திரனுக்கும், சிவஞானத்திற்கும் ஏற்பட்டது. நல்லூர் ஆலய நிருவாகம் இந்த ஹர்த்தால் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. யாழ்.குடாநாட்டில் சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பின் தாக்கம் ஒரு “புஷ்வாணம்” என்று நிருவாகம் நினைத்திருக்கலாம். இதை யாழ்ப்பாணத்தில் ஹர்த்தாலின் தோல்வியாக எம்.ஏ. சுமந்திரனும், சி.வி.கே. சிவஞானமும் ஊடகச் சந்திப்பில் ஏற்றுக்கொண்டனர். நல்லூர் அலட்டிக்கொள்ளாதபோதும், மன்னார் ஆயர் இல்லம் குறிப்பிட்ட 15ம் திகதி நிர்ணயம் குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இதனால் பதறியடித்த ஹர்த்தால் அறிவிப்பாளர் சுமந்திரன் மன்னார் சென்று ஆயரைச்சந்திக்க முயற்சித்துள்ளார். கடையடைப்பைக் கோரிய சுமந்திரன் ஆயர் தனக்கு கதவடைப்பை செய்வார் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். சுமந்திரனை சந்திக்க ஆயர் மறுத்துவிட்டார். குருவானவர் ஒருவரை சந்தித்து விட்டு வெறுங்கையோடு வந்த சுமந்திரன் விடுத்த மறு அறிவிப்பு தான் ஹர்த்தால் 18ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதாகும். மறுநாள் அது மற்றொரு திருத்தத்துடன் 18ம்திகதி காலை மட்டும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கோணல் முற்றும் கோணல். இவை அனைத்தும் எதனைக் காட்டுகின்றன? 75 ஆண்டுகள் பழம்பெரும் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் எடுக்கும் சக்தியையா? பெருமையையா? தமிழரசுக்கட்சியின் யாப்பு கட்டமைப்பில் அரசியல் குழு, மத்திய குழு, வேட்பாளர் தெரிவுக்குழு, பாராளுமன்றக்குழு, மாவட்டக்குழு, பிரதேசக்குழு, கிராமியக்குழு என்பனவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டையா? ஹர்த்தாலுக்கான இந்த முடிவை எந்த குழு, எங்கு கூடி, எப்போது எடுத்தது என்று அறியலாமா….? இவை தமிழ்ச்சமூகம் எழுப்பிய கேள்விகள். வடக்கு கிழக்கு மக்களோடு தொடர்பு பட்ட, மக்கள் அரசியல் செயற்பாட்டு முடிவில் உள்வாங்கப்பட்ட பொது சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக சமூகம், வடக்கு கிழக்கில் செயற்படும் பெண்கள் அமைப்புகள், மத நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், …. மற்றும் அமைப்புகள் எவை? என்ற கேள்வியும் வலுப்பெற்றது. “இராணுவ பிரசன்னத்தை குறைத்தல்” என்ற இந்த ஹர்த்தாலுக்கான மகுடத்தில் உள்வாங்கப்பட்ட தமிழ்த்தேசிய, தமிழ்த்தேசியம் சாராத அரசியல் கட்சிகள் எவை? வடக்கு கிழக்கின் ரெலோ, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழர் முற்போக்கு முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லீம் காங்கிரஸ் போன்று வெறும் ஆதரவு அறிக்கை கட்சிகள் வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்திற்கு, கொழும்பு அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைப்பதற்கு இன்றைய ஹர்த்தாலுக்கு வழங்கிய வகிபாகம் என்ன? ஒரு வகையில் இந்த ஆதரவு அறிக்கைகளும் சுமந்திரன் பாணியிலான தனிநபர் அறிக்கைகள் தான். இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் ஹர்த்தாலுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. வேறு தமிழ்த்தேசிய கட்சி ஒன்று இப்படி தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்து தமிழரசிடம் ஆதரவு கோரியிருந்தால் அந்த கோரிக்கையை ஏற்று தமிழரசு -சுமந்திரன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பாரா? ரி.என்.ஏ. உடைவு, பொதுவேட்பாளர், உள்ளூராட்சி தேர்தல் பொறிமுறை, தேர்தலுக்கு பின்னர் ஒன்றிணைதல்….. போன்ற அரசியல் ஏமாற்று செயற்பாடுகளில் ஒத்துப்போகாத தமிழரசுக்கும் -சுமந்திரனுக்கும் தன்னிச்சையாக முடிவை எடுத்து விட்டு மற்றைய தரப்புமீது ஆதரவு கோருவதற்கான -திணிப்பதற்கான யோக்கியதை உண்டா…? இதனால் தான் இந்த ஹர்த்தால் அறிவிப்பு சுமந்திரன் எதேச்சையாக, எடுத்த எடுப்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு என்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. அத்தோடு இந்த ஹர்த்தால் படுதோல்வியில் முடிவடைந்திருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். இதற்கான முற்று முழுதான பொறுப்பும் சுமந்திரனைச்சாரும். சமூக ஊடகங்களும், வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களும் ஹர்த்தால் தோல்வியையே பதிவு செய்துள்ளன. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல்மாவட்ட மக்களால் பாராளுமன்றத்திற்கு வெளியே ஜனநாயக வழியில் தூக்கி வீசப்பட்டவர். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று 2010 முதல் தமிழ் தேசிய அரசியல் ரீதியான சுமந்திரனின் செயற்பாடுகள் மீதான அதிருப்தி. மற்றையது என்.பி.பி. அநுர அலையில் யாழ்ப்பாணம் அள்ளுண்டு போனது. எனினும் தமிழரசு என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசு என்ற நிலைப்பாட்டை கட்சிக்குள் வளர்ப்பதில், தன்னைச் சுற்றி ஒரு ஆதரவாளர் கூட்டத்தை அவர் கடந்த தேர்தலுக்கு முன்னர் இருந்தே திட்டமிட்டு உருவாக்கி வந்தார். ஆனாலும் தேர்தல் தோல்வியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தனது கையில் இல்லை என்பது சுமந்திரனுக்கு மெல்ல மெல்ல வெளிச்சமாகியது. இதன் மிகப் பிந்திய வெளிப்பாடே அவரே ஏற்றுக்கொண்ட ஹர்த்தால் தோல்வி. இப்போது சுமந்திரனுக்கு இருக்கின்ற நெருக்கடி தனது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான மாற்று தளம் ஒன்றை தேடவேண்டும். அது யாழ்ப்பாண குடா நாட்டிற்கு வெளியே வன்னியில் அல்லது கொழும்பிலேயே சாத்தியம். இந்த நெருக்கடியில் விடப்பட்ட வெள்ளோட்டம் தான் இந்த ஹர்த்தால். வன்னியில் இராணுவ கெடுபிடிகள் அதிகம், இராணுவ பிரசன்னம் அதிகம், நில அபகரிப்பு, விகாரைகள், குடியேற்றங்கள், போரின் விளைவுகள் என்று பல பிரச்சனைகள் உண்டு இவற்றை தனது அரசியலுக்கு முதலிடும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த ஹர்த்தால் வெள்ளோட்டம். வன்னி மக்களைப் பொறுத்தமட்டில் இராணுவ அடக்குமுறையை அவர்கள் எதிர்க்கின்ற போதும் அதைவிடவும் கடுமையாக சுமந்திரனின் அரசியலை எதிர்க்கின்றனர். வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்த சுமந்திரனுக்கு குடா நாட்டில் ஆதரவற்ற நிலையில், அதை ஈடுசெய்ய வன்னியில் வாக்கு கேட்கவேண்டிய நிலை. இது இந்த ஹர்த்தால் அறிவிப்பின் பின்னணி. 2020 வரை இராணுவத்தின் பாதுகாப்பில் பவனிவந்த சுமந்திரன் இப்போது அதே “பாதுகாப்பு” இராணுவத்தை வெளியேறத் கோருகிறார். தனக்கு பாதுகாப்பு வழங்கியது இராணுவம் அல்ல எஸ்.ரி.எப். என்ற விசேட அதிரடிப்படை என்று தமிழ்பேசும் மக்களை முட்டாள்கள் ஆக்கும் கயிறு திரிப்புகள் வேறு. இது நீதிமன்றத்தில் சட்டவாதத்திற்கு சரியாகலாம் மக்கள் அரசியலுக்கு அல்ல. இலங்கை பேரினவாத அரச இயந்திரத்தை பாதுகாக்கின்ற படைகளைக் கொண்ட பல இராணுவ கட்டமைப்புகள் உண்டு. இதில் இராணுவம் – விசேட அதிரடிப்படை இடையேயான வித்தியாசம் என்ன? எஸ்.ரி.எப். தமிழ்பேசும் மக்களின் பாதுகாப்பு படையா? கிழக்கு மாகாணத்தை சூறையாடிய விசேட அதிரடிப்படை பயங்கரவாதத்தை அழிக்க அமெரிக்க, இஸ்ரேல் ஆலோசனையில் ஜே.ஆர்.காலத்தில் அமைக்கப்பட்ட எஸ்.ரி.எப். இராணுவத்தை விடவும் மிகவும் மோசமான விசேட பொலிஸ் படையணி என்பது சுமந்திரனுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. சம்பவம் நடந்த இராணுவ முகாம் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் உள்ளது. 200 பேர்வரை இருந்த இந்த முகாமில் தற்போது 25 பேர் வரைதான் உள்ளனர். மூடப்படுகின்ற முகாமில் உள்ள எச்சசொச்ச பொருட்களை எடுக்கவே இந்த இளைஞர்கள் அங்கு சென்றுள்ளனர். இது அரசாங்கம் படிப்படியாக முகாம்களை மூட எடுத்துள்ள முடிவின் ஒரு விளைவு. இதில் அணில் கிணறு தோண்டிய கதையாக பேரெடுக்கும் அரசியல் செய்ய பார்க்கிறார் சுமந்திரன். இந்த ஹர்த்தால் தவறானதல்ல ஆனால் அதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை அணுகுமுறை, காலப்பொருத்தம், தவறானது. சிலர் இராணுமுகாம்களால் இராணுவம் – மக்கள் உறவு வளர்கிறது என்று கதிகலங்குகின்றனர். இராணுவம் நிலை கொண்டு இருப்பதால் தான் அரசாங்கம் அரசியல் தீர்வில் அக்கறையற்று இருக்கிறது என்றும் கதை விடுகிறார்கள். இராணுவம் இல்லாத காலத்தில் அரசியல் தீர்வு கிடைத்ததா? இராணுவம் – மக்கள் உறவு துரோகத்தனம் என்று சென்.ஜோன்ஸ். அதிபர் ஆனந்தராஜா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் அரசியல் தீர்வு கிடைத்ததா? சுட்டுக்கொண்டவர்களும் படைத்தளபதிகளும் கை குலுக்கவில்லையா? அல்லது கிடைத்த தீர்வைத்தான் ஏற்றுக் கொண்டீர்களா? இந்த ஹர்த்தாலுக்கு பதிலாக கொழும்பில் ஒரு போராட்டத்தை ஏன்? செய்யமுடியாது என்ற கேள்வி சமூக ஊடகங்களில் கேட்கப்பட்டது. பல பதிவுகள் உண்ணாவிரதத்தை முன்மொழிந்தன. அந்த உண்ணாவிரதத்தை தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டும்பேரும் செய்யவேண்டும் என்றும், முடியுமானால் சாகும்வரை செய்யவேண்டும் என்றும் கேட்கப்பட்டது. இவை ஒரு பகுதி தமிழ்பேசும் மக்களின் கருத்துக்கள். இதற்கு தமிழரசின் பதில் என்ன? முடியுமானால் ஹர்த்தாலுக்கு ஆதரவு அறிக்கை விட்டவர்களும் நோன்பிருந்தால் அதன் கனதி சர்வதேசத்தில் அதிகமாக இருக்கும். இப்பவும் காலம் கடந்து விடவில்லை. ஹர்த்தால் போட்டு அன்றாடம் உழைக்கும் கூலிகளை பட்டினி போடுவதை விடவும் இது இதயசுத்தியான அரசியல். அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலத்தில், ஜனாதிபதி ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றும் காலத்தில் தமிழரசு எம்.பி.க்கள் சாகும்வரை உண்ணாவிரதம்? இது எப்படி இருக்கு? இதைச் செய்யலாமே. ஒரு வகையில் மக்களுக்கு கட்டளையிட்டு அவர்களை வதைப்பதை விடவும், மக்கள் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டதாகவும் வரலாற்றில் அமையும். இராணுவ முகாம்களை மூடுவது என்பது நூறு வீதம் அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது. காலாவதியாகிப்போன ஹர்த்தால்களால் அதை சாதிக்க முடியாது. இந்திய இராணுவம் வந்திறங்கிய போது இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவின் படி இராணுவம் முகாமுக்குள் முடங்கவில்லையா? அரசியல் தீர்வுக்கும் – இராணுவ பிரசன்னத்திற்கும் போடும் முடிச்சு முழங்காலுக்கும், மொட்டத்தலைக்குமானது. ஜதார்த்தமற்றது, உண்மையான, நேர்மையான அரசியல் அற்றது. அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் போது இராணுவம் வரையறுக்கப்பட்ட வகையில் குறைக்கப்படலாம். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்றால், தனிநாடே வழி. இதற்கு போராட, புருடா விடாமல் சுமந்திரனும், தமிழரசுக்கட்சியும் தயாரா? அரசாங்கம் நல்லெண்ண அடிப்படையில் இந்த யுத்த சூழல் எச்சங்களை படிப்படியாக குறைக்க முயற்சிக்கிறது. அரசாங்கம் தென்னிலங்கை சிங்கள பௌத்த தீவிர அரசியல் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாத தமிழ்த்தேசிய உணர்ச்சி எதிர்ப்பு அரசியல் இராணுவத்தை நிலைநிறுத்தவும், இனப்பிரச்சினைக்கான தீர்வை பின் தள்ளவும், பயங்கரவாத சட்டத்தின் நீக்கத்தை தடுக்கவும் தமிழ்த்தேசியம் அரசாங்கத்திற்கு செய்யும் சேவகமாக அமையும். எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். இதுதான் தமிழரசுக்கட்சியினதும், சுமந்திரனதும் பின்கதவு இலக்கா….? இது தந்தை செல்வாவின் அசரீரி, “சுமந்திரா..! உனது முதலமைச்சர் கனவு வில்லங்கமானது. உன்னை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஆமேன்..!” https://arangamnews.com/?p=12259
  20. ஓமந்தை A9 வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்: ஓர் ஆய்வு August 20, 2025 10:37 am A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுக்கு அமானுஷ்யங்கள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதை அவதானித்து இருந்தேன். இந்த விபத்துக்களுக்கான காரணங்களில் 1% கூட இந்த அமானுஷ்யங்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. மாறாக இந்தக் கூற்றுக்கள் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமான கவனக்குறைவுகளுக்கு வழி கோலுகின்றன. ஏழு ஆண்டுகள் ஓமந்தைப் பிராந்தியத்திலும் இரண்டு ஆண்டுகள் ஓமந்தையிலும் கடமையாற்றும் அனுபவத்தில் இந்த விபத்துக்களின் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக எழுதியுள்ளேன். வழக்கமான காரணங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்துள்ளேன். விசேடமான காரணங்களை மட்டும் இணைத்து எழுதியுள்ளேன். ஒருமுறை என்னுடைய பறக்கும் கெமரா (Drone) மூலம் மகிழங்குளம்- றம்பைக்குளம் சந்தியில் இருந்து குறிப்பிட்ட அளவு உயரம் உயர்த்தி தெற்குநோக்கி கெமராவைத் திருப்பிய போதுதான் இந்த 7.5km பிரம்மாண்டத்தை கண்ணால் கண்டுகொண்டேன், அதாவது குறிப்பிட்டளவு உயரத்திலேயே நொச்சிமோட்டையின் வளைவு மகிழங்குளத்தில் Drone மூலம் நேர்சாலையாகப் பார்க்கமுடிகிறது. வடக்கில் அதிக விபத்துக்கள் நிகழும் ஓமந்தையின் A9 வீதியானது கிட்டத்தட்ட 7.5 km நீளமான நேர்பாதையாகும். எந்த வளைவுகளும் இல்லாத வடக்கின் நேர்வேகப் பாதையின் நுழைவாயில் இதுவாகும். இதே போன்று முறிகண்டி தொடக்கம் ஆனையிறவு வரையான A9 பாதை 28 km நேர்நீளமானது. இங்கு ஏற்படாத விபத்துக்கள் ஓமந்தையில் ஏற்படப் பல பௌதிக-உளவியல் காரணங்கள் உள்ளன. ஓமந்தையில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 60% ஆனவை தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற போது ஏற்பட்டவையாகும். கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் நேரடியாக இணைக்கும் நெடுஞ்சாலைக்கு A9 வீதி என்று பெயர். இச்சாலை இலங்கையின் சகல மாவட்டங்களையும் யாழ்ப்பாணத்துடன் இணைத்துப் பயணத்திற்கு உதவுகிறது. தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்பவர்கள் தம்முடைய பயணத்தில் கவனச் சிதறல் ஏற்படாத வண்ணம் வவுனியா நகரை அடைந்துவிடுகின்றனர். வவுனியா நகருக்கும் கண்டிக்கும் இடையில் பலநூறு வளைவுகளைச் சந்தித்து வருவதும் இதற்கு ஒரு காரணம். வவுனியா நகரில் இருந்து யாழ் நோக்கிச் செல்லும் போது மிக வேகமாகச் செல்லக்கூடிய முதலாவது நேர்ப்பாதை நுழைவாயில் என்றால் ஓமந்தையிலுள்ள 7.5 km நீளமான நெடுஞ்சாலையாகும். இந்த 7.5 km நீளமான நெடுஞ்சாலையைக் கடக்கும் போது கடந்த எட்டுமாதங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர், ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் காயமுற்றுள்ளனர், பல வாகனங்கள் வீதியை விட்டு விலகிக் குடைசாய்ந்துள்ளன. இதற்குப் பிரதான காரணங்கள் 1. பல வளைவுகள் கொண்ட ஏனைய மாவட்டங்களின் பாதைகளைக் கடந்துவரும் சாரதிகள் வடக்கின் முதலாவது நேர்பாதை நுழைவாயிலில் நுழைந்ததும் ஓட்டுநர் கவனம் சிதறல் (Driver Distraction) ஏற்பட்டு நீண்ட, நேராக செல்லும் சாலைகள் சலிப்பை ஏற்படுத்தி, ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறச் செய்துவிடுகிறது. இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படலாம். அத்துடன் நேராக இருக்கும் சாலைகள் ஓட்டுநர்களை அதிக வேகத்தில் செல்ல தூண்டும். இதனால் வாகனங்களின் மீது கட்டுப்பாடு இழக்கப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடுகின்றது. குறிப்பாக, வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, எதிர் வரும் வாகனங்களுக்கு சரியான எதிர்வினையாற்ற முடியாமல் போவது போன்ற காரணங்களால் விபத்துக்களை மேலும் தீவிரப்படுத்துகின்றது. ஆனால் சாலைகளை நேராக அமைப்பது போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் என்பதனை இங்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும். 2. கண்டி தொடக்கம் வவுனியா இரட்டைப் பெரியகுளம் வரையும் பலநூறு வளைவுகள் சாரதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கின்றது. தூக்கம் போன்ற காரணங்களைத் தவிர்த்து அவர்கள் கவனத்தைச் சிதறவிடுவது மிகக் கடினமாகும். ஆனால் ஓமந்தையின் 7.5 km நீளமான பாதை அவ்வாறானதல்ல. Travel Shock இனை அளிக்கும் வகையில் ஓமந்தைப் பகுதியிலுள்ள பௌதிகக் காரணிகள் உள்ளன. இந்த 7.5km நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருபதுக்கும் மேற்பட்ட குறுக்குப் பாதைகள் உள்ளன. அறுபதிற்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளுக்கான வழிப்பாதைகள் உள்ளன, அந்தக் குறுக்குப் பாதைகளுக்கு உள்ளாக வரும் உள்ளூர் வாசிகள் பலர் பிரதான A9 வீதியில் நுழையும் போது வாகனங்களைக் கவனிக்காமலே பிரதான சாலையில் நுழைகின்றனர், இதனால் 7.5 km நீளமான நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன. 3. அண்மையில் ஓமந்தை வாகன விபத்தில் கொல்லப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலய கலாசார உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் கூட குறித்த காரினை ஓட்டிய குறித்த உத்தியோகத்தரின் தூக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான், ஆனால் அவர் கொழும்பில் இருந்து இவ்வளவு தூரம் வந்தபோது ஏற்படாத தூக்கம் ஓமந்தைப் பகுதியின் நீள்சாலையில் ஏற்படக் காரணம் இந்த தடுப்புகளற்ற நீளமான சாலைதான். 7.5 km சாலையின் கால்வாசிப் பகுதியில் நுழையும் போதே குறித்த கார் விபத்துக்குள்ளாகி அவர்களின் மரணம் சம்பவித்துள்ளது. 4. அண்மையில் கூட குறித்த ஓமந்தை சாலையில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். சென்ற மாதம் இந்திய தூதரக அதிகாரி விபத்தில் உயிரிழந்த இடத்திற்கும், அதற்கும் முதல்மாதம் வைத்தியர் ஒருவர் அவரது Hilux இல் சென்றபோது விபத்தில் இறந்த இடத்திற்கும் இடையிலுள்ள ஒரு இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 7.5 km நீளமான சாலையாக இருப்பது போக்குவரத்தை வினைத்திறனாக்கும் என்றாலும், சாரதிகளின் கவனயீனம் மற்றும் உள்ளூர் வாசிகளின் அலட்சியம் என்பவற்றால் இந்த விபத்துக்கள் அதிகம் சம்பவிக்கின்றன. அந்த கவனயீனங்கள் அதிகம் இந்தப் பகுதியில் நிகழ்வதுதான் துன்பியல் சம்பவமாகும். இவற்றைத் தடுக்க இனி என்ன செய்யலாம்? 1. நொச்சிமோட்டை- பறனட்டகல் வளைவில் தொடங்கி மகிழங்குளம்- இறம்பைக்குளம் பகுதிக்கு இடையில் இந்த 7.5km நீளமான விபத்து வழக்கமாக நடைபெறும் நேர் பாதை அமைந்துள்ளது. இந்த நேர்சாலையை தூரப்பிரதேசங்களில் இருந்துவரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வெறும் நான்கரை நிமிடங்களில் கடந்துவிடுகின்றன, அதாவது 100km/h வேகத்தில் செல்கின்றன. உள்ளூர் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் கூட ஏழு நிமிடத்திற்குள் கடந்துவிடுகின்றன. இவை அவ்வீதியில் கட்டுப்படுத்த முடியாத வேகமாகும். முறிகண்டியில் இருந்து ஆரம்பிக்கும் நேர்ச்சாலையானது ஆனையிறவில் முடிவடைகிறது, கிட்டத்தட்ட 28 km நேரான தூரமாகும். இதனைக் கடக்க முதல் இளைப்பாறும் நிலையம் ஒன்றை முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் ஆரம்ப காலங்களில் தமிழர்கள் அமைத்துள்ளனர், விபத்துக்களைத் தவிர்க்க இது ஒரு உளவியல் செயற்பாடாகக் கருதமுடியும். ஆனால் வடக்கிற்கான நுழைவாயிலில் உள்ள 7.5km நீளமான நேர்சாலையில் அதாவது நொச்சிமோட்டைக்கும் ஓமந்தைக்கும் இடையில் ஒரு இடைத்தங்கல் இளைப்பாறல் நிலையம் ஒன்று அமைக்கப்படாமை இவ்விபத்துக்கள் நிகழ ஒரு காரணமாக இங்கு முன்மொழியலாம், அப்படி ஒன்றை அமைத்துவிடுவது இதனைக் குறைக்க ஒரு தீர்வாக இங்கு குறிப்பிடலாம். அத்துடன் 28km நேர்ச் சாலையை விடவும் 7.5 km நேர்ச்ச்லையில் நிகழும் விபத்துக்களும் மரணங்களும் அதிகம் என்பதனை நாம் உணர வேண்டும். 2. இந்த 7.5km தூரத்திற்குள் மூன்று அதிவேக மட்டுப்படுத்தல் முறைமைகளை (Overspeed Board) அமைப்பது விபத்துக்களைத் தவிர்க்க ஒரு வழியாக இருக்கும். A. நொச்சிமோட்டை வளைவுக்கும் ஓமந்தை காவல் நிலையத்திற்கு இடையிலும், B. ஓமந்தை காவல் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கு இடையிலும், C. ஓமந்தை பாடசாலைக்கும் மகிழங்குளம்-இறம்பைக்குளம் சந்திக்கு இடையிலும் (ஏற்கனவே உண்டு- இதில் விபத்துக்கள் தற்போது ஓரளவு குறைவு) அமைப்பதுவும் அதில் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்துவதும் இப்பகுதியில் நடைபெறும் விபத்துக்களைத் தவிர்க்க மற்றொரு வழியாக அமைந்திருக்கும். 3. ஓமந்தை அம்மாச்சிக்கும், அருகில் அமைந்துள்ள மதுபான சாலைக்கும் இடையில் மஞ்சள் கடவை ஒன்றை இடுவதும், அதில் வீதிக்கரையில் வழிவியாபாரங்கள் மேற்கொள்வோரைக் கட்டுப்படுத்தலும் பிரதானமாகும், இப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இதுவரை ஆறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்த 7.5 km நீளமான நேர்ச்சாலையில் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முறிகண்டியில் அமைக்கப்பட்டது போன்று ஒரு இடைத்தங்கல் நிலையத்தை நொச்சிமோட்டைக்கும் பறனட்டகல் சந்திக்கும் இடையில் அமைப்பதும், மூன்று வேகத்தடுப்பு பலகைகளை (Overspeed Board) பொலிசாரின் பங்கேற்புடன் கொண்டுவருவதும், இதற்கும் மேலாக இந்த 7.5km நேர் தூரத்தைக் கடக்கும்போது சாரதிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் மனநிலை அதற்கு ஏற்ப இசைவாக்கம் அடைவதும் மிக முக்கியமாகும். (குறித்த ஓய்வு நிலையங்களை அமைக்க வாய்ப்புகள் இல்லையென்றால் பயணம் செய்யும் நபர்களாவது குறித்த இடங்களுக்கு முன்னதாகத் தரித்துச் செல்வது நல்லது) வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த இடங்களைப் பார்வையிட வடக்கிற்கு வெளியிலுள்ள ஒன்றரைக் கோடிப் இலங்கையரும் ஆர்வமாக இருப்பர். அதனால் தினமும் ஓமந்தை நேர்ச்சாலையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும், ஆகவே எதிர்வரும் விபத்துக்களைத் தவிர்க்க முயன்று பார்ப்போம். வழக்கமான காரணங்களை விடுத்து விசேடமான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையுமே இங்கு என் அனுபவத்தில் இங்கு எழுதியுள்ளேன். இவற்றை எல்லாம் இணைத்தது போல வள்ளுவர் கூறுவார் “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்” வரவிருக்கும் ஆபத்தை அறிந்து அதற்கேற்ப தன்னை காத்துக் கொள்ளும் அறிவாளிகளுக்கு, அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது என்பது அதன்பொருள்! தொகுப்பு – சுயாந்தன் https://oruvan.com/accidents-on-the-omanthai-a9-road-are-increasing-a-study/
  21. யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு Published By: Vishnu 20 Aug, 2025 | 09:21 AM யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து , கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும் , அவற்றினை நீதிமன்றில் பரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர் https://www.virakesari.lk/article/222908
  22. சமூகத்தின் மனப்பான்மை ரீதியான மாற்றத்திற்க அரச ஊடகங்களின் பங்களிப்பைப் பெறத் திட்டம் தயாரிக்குக - ஜனாதிபதி 20 Aug, 2025 | 10:19 AM சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04 திணைக்கலன்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்துவதற்கான தற்போதைய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். தற்போது 30,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார சேவையை 10,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப சுகாதார சேவையில் நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இங்கு ஆராயப்பட்டது. சுகாதாரத் துறையின் கட்டுமானங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதாரத் துறையில் தற்போது எழுந்துள்ள ஒரு பாரிய பிரச்சினையான ஆயுர்வேதத் துறையை உள்ளடக்கிய கொள்முதல் வழிகாட்டுதல்களை புதுப்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது, அதே நேரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. தேசிய இரத்தமாற்று சேவை போன்ற சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இந்த வருடத்திற்குள் கொள்வனவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப சுகாதார சேவையின் பௌதீக மற்றும் மனித வளங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு ஒரு தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளின் கீழ் பெறப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தி அவற்றினால் எதிர்பார்க்கும் பயனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாகாண சபை மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து வைப்பது குறித்தும் இதன் போது பரிந்துரைக்கப்பட்டது. சுகாதாரத் துறையில் வழங்கப்படும் நன்கொடைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மானியங்களை வழங்கும் மற்றும் பெறும் நபர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் முன்மொழியப்பட்டது. தற்போது நாட்டின் 272 இடங்களில் செயற்படுத்தப்படும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேலும் விரிவுபடுத்தி அதனை 400 இடங்கள் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. வெகுஜன ஊடக அமைச்சு தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. சமூக மனப்பாங்குகளின் மாற்றத்தில் தலையிடுவது அரச ஊடகங்களின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எனவே, சமூக மனப்பாங்குகளின் மாற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் பொருத்தமான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அரச ஊடகங்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார். தபால் சேவையை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. கூரியர் சேவைகள் போன்ற சேவைகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி தபால் சேவையை புதிய மாதிரிக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தேவையான திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையே முன்பிருந்த பிரச்சினை என்றும், அந்த நிலைமையை மாற்றுவதற்காக, கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் போதுமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட நிதியாண்டில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு அந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் முறையாகப் பயன்படுத்தி, மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222916
  23. புடின் - செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு சாத்தியமானதாக இல்லை - கிரெம்ளின் 20 August 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், யுக்ரைனின் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே விரைவில் ஒரு உச்சிமாநாடு நடைபெறுவதை கிரெம்ளின் இன்னும் சாத்தியமான விடயமாக அறிவிக்கவில்லை. எனினும், யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்ற தனது அழைப்பை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி கடந்த வாரம் அலஸ்காவில் புடினைச் சந்தித்தார் பின்னர், ஏழு ஐரோப்பியத் தலைவர்களையும், செலென்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னரே, ரஷ்ய-யுக்ரைன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அழுத்தம் வந்துள்ளது. இந்தநிலையில், "இந்த பிரச்சினை கடினமானது" என்று ட்ரம்ப் ஒப்புக் கொண்டார், அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விரோதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதேவேளை, யுக்ரைனுக்கான, அமெரிக்கா அனுசரணையிலான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அத்தகைய உறுதிமொழிகள் கியேவின் இறையாண்மைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று செலென்ஸ்கியும், ஐரோப்பியத் தலைவர்களும் ட்ரம்பை நம்ப வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/415506/putin-zelensky-meeting-unlikely-kremlin
  24. முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் 20 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைக்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னதாக கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/415507/muthaiyankattu-incident-4-arrested-army-soldiers-remanded
  25. ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்க கோரிக்கை 20 August 2025 ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FGTO), வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு கடிதம் ஒன்றின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இதனை குறிப்பிட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தமைக்காக இலங்கையை அந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன. அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து 16 ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்குவதற்கான பேரவையின் இயலாமை குறித்து அந்த அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, 1998 ஆம் ஆம் ஆண்டு கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில், செம்மணியில் 300–400 உடல்கள் இராணுவ உத்தரவால் புதைக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். எனினும், 1999 ஆம் ஆண்டு 15 உடல்கள் மட்டுமே தோண்டியெடுக்கப்பட்டு, விசாரணைகள் நிறுத்தப்பட்டன. தற்போது செம்மணியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன்,சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்தனர். அதேநேரம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் மைய அரசியல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்தன. பிரித்தானியர்கள் 1948 ஆண்டு சுதந்திரம் வழங்கியபோது, அவர்கள் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர். அவர்கள் தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த கடிதம் மூலம் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சந்தேகிக்கப்படும் புதைகுழிகளிலும் சர்வதேச தடயவியல் விசாரணைகளை ஆதரித்தல், ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கைக்கான விசேட தீர்ப்பாயத்தை நிறுவ அழுத்தம் கொடுத்தல், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, ஐ.நா.வின் கண்காணிப்பில் சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த அமைப்புகள் முன்வைத்துள்ளன. https://hirunews.lk/tm/415520/demand-to-recognize-the-eelam-tamil-struggle-as-an-unresolved-decolonization-issue

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.