Everything posted by Justin
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
யூ ரியூப்பினால் எனக்கு நன்மை எப்பவாவது வீட்டில் சிறு திருத்த வேலைகள் செய்ய வேண்டியிருந்தால் அதை உரிய நிபுணர் எப்படி செய்கிறாரென்று பார்த்து விடுவது. மற்றது வடிவேல் பகிடி பார்ப்பது. தீமை? எனக்கல்ல தனிப்பட, ஆனால் ஒட்டு மொத்தமாக சமுதாயத்திற்கு. உதாரணமாக நேற்று "ஜப்பானில் குறையாக உருவான மனித குழந்தைகளை உணவாகச் சாப்பிடுகிறார்கள்"😎 என ஒருவர் யூ ரியூபில் பார்த்த பின்னர் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் நம்பும் ஆட்களை உருவாக்கி, இன்று எந்தக் குப்பையைப் போட்டாலும் நம்பும் ஒரு முட்டாப்பீஸ் சமுதாயத்தை உருவாக்கிய பெருமை யூ ரியுப்பிற்கே உரித்தானது!
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
இறுதியில் இது ஒரு பணம் பார்க்கும் வியாபார உத்தியாகத் தான் பயன்படுமென நினைக்கிறேன். ஏவுகணை விற்கும் இஸ்றேல், ஏவுகணையை தடுக்கும் தொழில்நுட்பத்தை எதிர் தரப்பிற்கு விற்பது போல, இந்த வகையான தொழில்நுட்பத்தை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யாது தடுக்கும் நுட்பத்தையும் கல்வி நிலையங்களுக்கு விற்க ஒரு கம்பனி கிளம்பும்! லொக்டவுண் பிறவுசர் போல ஒரு தயாரிப்பு வரலாம் விரைவில். ஆனால், Open AI போன்ற செயற்கை அறிவுத் தயாரிப்புகளால், அறிவுச் சோம்பேறிகள் அதிகம் உருவாவர் என நினைக்கிறேன். ஏற்கனவே யூ ரியூப்பில் வருபவன் சொன்னால் வேதமென்று இருக்கும் ஆட்களுக்கு, இனி இது தான் கைத்தடி. சமூகம் இன்னொரு 10 வருடத்தில் இதன் விளைவை உணரக் கூடும்!
-
திரும்பும் வரலாறு!
நன்றி, ஓம் கவனமாக எழுத வேண்டிய இடம் யாழ். எழுத்துப் பிழை விட்டாலே தூக்கியடிக்க "பண்டிதர்கள்" உலவும் இடம்😂. நூல்களை என் சுவாரசியத்திற்காக வாசித்தேன், ஆனாலும் மீளப் போய் தரவுகளைக் கண்டு பிடித்து எழுத ஒவ்வொரு பகுதியும் 4 மணித்தியாலங்கள் வரை பிடித்தது. நன்றி! உங்களுக்கு நான் விசேட நன்றி சொல்லக் காரணம் ஒவ்வொரு பகுதியும் எழுதி முடிய உடனே கருத்துச் சொல்லும் ஒருவராக நீங்கள் தொடர்ந்திருக்கிறீர்கள். நன்றி வரவுக்கும் ஆதரவுக்கும்! யாழிலும் சரி, யாழிணைத்திற்கு வெளியேயும் சரி, திரித்த வரலாற்றுத் தகவல்களை ஒவ்வொன்றாகத் திருத்திக் கொண்டிருப்பது வீண் வேலையென்று நினைத்தமையால் ஒரே இடத்தில் எழுதி வைப்பது நல்லதென நினைத்தேன்.
-
திரும்பும் வரலாறு!
பிற்குறிப்புகள் தொடர்ந்து வாசித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் - முக்கியமாக சுவி, புங்கையூரான் ஆகியோருக்கு - நன்றிகள்! பயன்படுத்தப் பட்ட நூல்கள்: 1. In the Garden of Beasts (2011), Erik Larson. இது நாசிகளின் 1933 ஜேர்மனியின் நாளாந்த சம்பவங்களை விபரிக்கும் ஒரு நூல். 2. The Splendid and the Vile (2020), Erik Larson. இது 1939 முதல் 1940 வரை சேர்ச்சிலின் இங்கிலாந்து, ஹிற்லரின் நாசி ஜேர்மனி ஆகியன பற்றிய அருமையான நூல். 3. Stalingrad, The Fateful Siege:1942-1943. Antony Beevor (1998). இது 1942 இல் நிகழ்ந்த ஸ்ராலின்கிராட் முற்றுகை பற்றியதெனினும், அனைத்து சோவியத் முனைகள் பற்றிய முதல் நிலைத்தரவுகள் (primary source) அடிப்படையிலான வரலாற்று நூல். 4. Einstein: His Life and Universe, Walter Isaacson (2008). ஐன்ஸ்ரைனின் வாழ்க்கை வரலாறு, இதன் ஒரு அத்தியாயம் அணுகுண்டு தயாரிப்பு முயற்சிகள் பற்றிய விபரங்களைத் தருகிறது. 5. Killing the Rising Sun: How America Vanquished World War II Japan, by Bill O’ Reilly & Martin Dugard (2016). பேர்ள் துறைமுகத் தாக்குதல், அமெரிக்க அணுவாயுதப் பரிசோதனைகள், ஜப்பான் மீதான அணுவாயுதத் தாக்குதல் என்பன பற்றிய நூல். இணையவழி ஆவணக்காப்பகங்கள்: 1. The US National Archives. 2. Imperial War Museum, UK.
-
திரும்பும் வரலாறு!
திரும்பும் வரலாறு- பாகம் 8 (இறுதிப் பாகம்) (உலகின் முதல் அணுவாயுதப் பிரயோகம் பற்றி 2022 ஆகஸ்ட் மாதம் "அரங்கம்" செய்தித் தளத்தில் வெளிவந்த என் கட்டுரையின் திருத்திய வடிவம் இது) உலக வரலாற்றில் ஆகஸ்ட் மாதம் முக்கியமானதொரு மாதம். 77 ஆண்டுகளுக்கு முன்னர், 1945 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் அமெரிக்கா மனித வரலாற்றில் முதன் முறையாக அணுவாயுதத்தை யுத்த முனையில் பயன்படுத்தியது. விமானத்திலிருந்து ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் இரண்டினாலும் மொத்தமாக 140,000 ஜப்பானிய மக்கள் இறந்தனர். இறக்காமல் தப்பிய மக்கள் ஏராளமானோர் கதிர்வீச்சின் விளைவான புற்று நோய் உட்பட்ட பல ஆரோக்கியச் சவால்களை எதிர்கொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வின் தொடர்ச்சியாக, உலகம் அணுவாயுதப் போட்டி உட்பட இன்றும் தொடரும் பூகோள அரசியல் விளைவுகளை எதிர்கொண்டது. அணுசக்தி - மனித வரலாற்றின் திருப்பு முனை முதன் முறையாக அணுவைப் பிளந்து உருவான சக்தி மனித அழிவிற்குப் பயன்பட்டது கசப்பான ஒரு உண்மை. இந்தக் கசப்பான உண்மையைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அணுசக்தி மனித வரலாற்றின் ஒரு விஞ்ஞான மைல்கல். அல்பர்ட் ஐன்ஸ்ரைன் சடப் பொருட்களை ஆக்கும் அணுவினுள் இருக்கும் சக்தியை E=MC2 எனும் சமன்பாட்டினால் வெளிப்படுத்தினார். ஆனால், இந்த மாபெரும் சக்தியை அணுவைப் பிளப்பதால் வெளிக்கொண்டு வர முடியும் என்ற யோசனை லியோ சிலார்ட் என்ற ஹங்கேரிய பௌதீகவியல் விஞ்ஞானிக்குத் தான் முதலில் தோன்றியது. நாசி ஜேர்மனியில் இருந்து தப்பி வந்து லண்டன் நகரில் வசித்து வந்த சிலார்ட், வீதியைக் கடப்பதற்காக ஒரு தெருச்சந்தியில் காத்திருந்த போது தான் இப்படியான ஒரு யோசனை உதித்ததாகப் பதிவு செய்திருக்கிறார். இயற்கையில் இருக்கும் யுரேனியம் என்ற மூலகத்தின் 1% இற்கும் குறைவான ஒரு உபவகை யுரேனியம் 235 (U235) எனப்படுகிறது. இந்த யுரேனியம் 235 தொடர்ச்சியாக அழிவடைந்து செல்வதால் நியூட்ரோன்களை வெளிவிடும். இவ்வாறு யுரேனிய அழிவினால் வெளியாகும் நியூட்ரோன்கள் அருகிலிருக்கும் ஏனைய யுரேனியம் 235 அணுக்களைத் தாக்குவதால் ஒரு சங்கிலித் தொடர் தாக்கம் (chain reaction) நடக்கும். இத்தகைய சங்கிலித்தொடர் தாக்கம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை (Criticality) அடையும் போது பெருமளவிலான சக்தி வெப்பமாகவும், ஒளியாகவும், அணுக்கதிர் வீச்சாகவும் வெளிப்படும். அடிப்படையில், இந்த மூன்று சக்தி வெளிப்பாடுகளையும் கடிவாளமிட்டுப் பயன்படுத்திய ஆயுதம் தான் அணுகுண்டு. இயற்கையில், மிக ஐதாகப் பரவிக் காணப்படும் யுரேனியம் 235 நியூட்ரோன்களை வெளியேற்றி அழிவடைந்தாலும், போதிய யுரேனியம் 235 இல்லாமையால் அணுகுண்டுக்கு இணையான வெடிப்பை உருவாக்குவதில்லை. எனவே அணுகுண்டை முதலில் உருவாக்கிய விஞ்ஞானிகள் இரு முக்கிய சாதனைகளைச் செய்தார்கள்: முதலாவதாக - இயற்கையில் இருக்கும் 1% இற்கும் குறைவான யுரேனியம் 235 இனை 90% ஆக ஆய்வு கூடத்தில் செறிவாக்கினார்கள். இரண்டாவதாக - இந்த செறிவான யுரேனியம் 235 சுயமாக அணுசக்தி வெடிப்பை ஏற்படுத்தி விடாமல் தடுக்கும் (harnessing) தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தார்கள். சாதனை என்று கருதப் படும் இந்த விஞ்ஞானப் பயணத்தில் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் பங்களித்தார்கள். இந்த விஞ்ஞானப் பயணத்தின் பெரும்பகுதி அமெரிக்க அரசின் இரகசியத் திட்டமான Manhattan Project (1942- 47) மூலம் தான் நிறைவேறியது. அமெரிக்காவுக்கு அகதிகளின் பரிசு நாசி ஜேர்மனியின் பிடியிலிருந்து தப்புவதற்காக, பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் அகதிகளாகத் தஞ்சம் தேடி வந்த பல பௌதீகவியல் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் முதல் அணுகுண்டைத் தயாரிக்கப் பங்களித்தார்கள். தனது நாச வேலைகளுக்கு ஏற்கனவே விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிய நாசி ஜேர்மனி, அணுவாயுதத்தையும் தயாரித்து விடுமோ என்ற அச்சமே இந்த அகதி விஞ்ஞானிகள் அமெரிக்காவிற்கு உதவப் பிரதான காரணமாக இருந்தது. ஐன்ஸ்ரைன், சிலார்ட் போன்ற பல விஞ்ஞானிகள் ஜேர்மனியை விட்டு வெளியேறி விட்டிருந்தாலும், நாசிகளோடு ஒட்டி உறவாடிய பல ஜேர்மன் விஞ்ஞானிகள் அணுவாயுதத் தொழில்நுட்பத்தை ஜேர்மனியின் போராயுதமாக மாற்ற உழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில் தான், சிலார்ட் போன்ற அகதி விஞ்ஞானிகள் சிலர், அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல பௌதீகவியலாளரான ஐன்ஸ்ரைன் மூலம் அமெரிக்க அரசை அணுகி அணுவாயுதத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடும் படி வலியுறுத்தினார்கள். 1943 இல், நியூ மெக்சிகோ மானிலத்தின் லொஸ் அலமொஸ் நகரத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரகசிய அணுசக்தி ஆய்வுகூடத்தில் அமெரிக்க இராணுவத்தின் மேற்பார்வையில் விஞ்ஞானி றொபர்ட் ஒபன்ஹைமரின் தலைமையில் அமெரிக்காவின் அணுகுண்டுத் தயாரிப்பு வேலைகள் தொடங்கின. ஜூலை 16, 1945 இல் முதல் அணுகுண்டு நியூ மெக்சிகோப் பாலைவனத்தில் பரீட்சிக்கப் பட்ட போது ஐரோப்பாவில் முசோலினியும் ஹிற்லரும் இறந்து நாசி ஜேர்மனியும் தோற்கடிக்கப் பட்டிருந்தது. ஆனால், பசுபிக் பிராந்தியத்தில், கிழக்காசியாவில் ஜப்பான் சரணடைவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை - எனவே இரண்டாம் உலகப் போர் இன்னும் தொடர்ந்தது. வளங்களுக்காக ஆக்கிரமிப்புப் போர் செய்த ஜப்பான் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஜப்பான் பேரரசின் பேரரசர் நடைமுறையில் அந்த நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு சிறைக் கைதி. ஜப்பான் சக்கரவர்த்தி சூரியக் கடவுளின் வழி வந்தவராகத் துதிக்கப் பட்டாலும், இம்பீரியல் ஏஜென்சி (Imperial Household Agency) என்ற அமைப்பினைத் தாண்டி எதுவும் பேசவோ செய்யவோ முடியாத நிலை - இது இன்றும் இருக்கும் நிலை. ஹவாய் தீவின், பேர்ள் துறைமுக அமெரிக்கப் படைத்தளத்தின் ஒரு பகுதி. 1941 டிசம்பர் 7, ஜப்பானிய இம்பீரியல் விமானப் படையின் தாக்குதலின் பின்னர். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. தனது பெரும்பாலான வளங்களையும் மூலப் பொருட்களையும் வெளியேயிருந்து இறக்குமதி செய்து கொள்ளும் வளங்களற்ற தீவுக்கூட்டமான ஜப்பான், அந்த நிலையை மாற்றுவதற்குத் தேர்ந்து கொண்ட வழி அண்டை நாடுகளை இராணுவம் மூலம் ஆக்கிரமித்துக் கையகப் படுத்தும் வன்முறை வழி. இத்தகைய ஆக்கிரமிப்பை ஜப்பானின் பாதுகாப்புப் படைகள் தென்கிழக்காசியாவில் மூர்க்கமாக இரண்டாம் உலகப் போரின் போது அமல்படுத்திய போது அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இது ஜப்பானின் போர் இயந்திரத்தை முடக்கும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியமாக, 1941 டிசம்பரில் பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்கப் பிராந்தியமான ஹவாய் தீவுகளில், பேர்ள் துறைமுகத் தளம் மீது ஜப்பான் படைகள் தாக்குதல் நடத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினரைக் கொன்றன. இதன் பின்னர், அமெரிக்கா ஜப்பான் மீதும் போர்பிரகடனம் செய்து பசுபிக் போர் அரங்கில் ஜப்பானுக்கெதிராகக் கால் வைத்தது. மரணம் வரை போர் 1941 முதல் 1945 வரை, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த அமெரிக்கத் தளங்களைப் பின் தளமாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு தீவாகக் கைப்பற்றியபடியே அமெரிக்கா உட்பட்ட நேச நாட்டுப் படைகள் ஜப்பானை நோக்கி முன்னேறின. 1945 ஆரம்பத்தில் ஜப்பானுக்கு தென் கிழக்காக இருந்த இவோ ஜிமா தீவு அமெரிக்கப் படைகளிடம் வீழந்த போது, ஜப்பானின் தோல்வி சுவரில் எழுதிய செய்தியாகி விட்டது. ஆனால், “மக்களும் படைகளும் பூரணமாக அழிந்தாலும் கூட சரணடைவதேயில்லை” என்ற ஜப்பானியப் படைத் தலைமையின் முடிவை சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ தன் மௌனத்தால் அங்கீகரித்தார். 1945 யூலையில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் கூட்டாக பொற்ஸ்டாம் பிரகடனம் மூலம் விடுத்த எச்சரிக்கையில், "சரணடையா விட்டால், ஜப்பான் பேரழிவை எதிர்கொள்ள வேண்டிவரும்" எனக் குறிப்பிடப் பட்டது. இந்தப் பேரழிவு அணுவாயுதப் பாவனை மூலம் ஏற்படுத்தப் படுவதற்கான முடிவை அமெரிக்கத் தலைமை ஏற்கனவே எடுத்திருந்ததா என்பதில் தெளிவில்லை. ஆனால், அமெரிக்கப் படைகளின் பசுபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதியாக இருந்த ஜெனரல் டக்ளஸ் மக் ஆர்தர், ஐரோப்பாவின் நோர்மண்டியில் நிகழ்ந்த பாரிய தரையிறக்கம் போலவே, ஜப்பானின் பிரதான தீவையும் தரையிறக்கம் மூலம் கைப்பற்றும் ஒரு பாரிய திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார் என ஆவண ஆதாரங்கள் காட்டுகின்றன. இந்தத் தரையிறக்கத்தில் 1 மில்லியன் வரையான உயிரிழப்புகள் அமெரிக்கப் படைத் தரப்பில் ஏற்படும் என்ற கணிப்பீடு இருந்த போதிலும், புகழ் விரும்பியான மக் ஆர்தர் தரையிறக்கத் தாக்குதலைத் தயார்படுத்திய படி இருந்திருக்கிறார். ஆனால், "இழக்க எதுவும் இல்லாதவன் தான் மிகவும் ஆபத்தானவன்" என்ற கருத்தைக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அணு ஆயுதத்தை ஜப்பான் மீது பயன்படுத்தும் முடிவை எடுத்தார். ஆகஸ்ட் 6, 1945 ஹிரோஷிமா - ஜப்பான் தலைநகர் ரோக்கியோவிலிருந்து 500 மைல்கள் தொலைவில் இருந்த தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். ஜப்பானின் போர் இயந்திரத்திற்கு அவசியமான பல இராணுவத் தொழிலகங்கள் அங்கே இருந்தன. சுமார் மூன்றரை இலட்சம் மக்களும் இருந்தனர். 9000 இறாத்தல்கள் நிறை கொண்ட முதல் அணுகுண்டு அமெரிக்காவின் பி- 29 விமானத்திலிருந்து பரசூட் மூலம் இந்த நகரத்தின் மீது தான் இறக்கப் பட்டது. சாதாரண குண்டுகள் போல இலக்குடன் மோதும் போது வெடிக்கும் வகையில் அணுகுண்டுகளை வடிவமைப்பதில்லை - இது விபத்துக்களின் போது அணுவெடிப்புகள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்குமென்பதால் இந்த ஏற்பாடு. ஹிரோஷிமா மீது பரசூட் மூலம் மிதக்க விடப் பட்ட அணுகுண்டு தரையிலிருந்து 2000 அடிகள் உயரத்தில் ஒரு சிறு வெடிப்பு (trigger) மூலம் இரு யுரேனியம் 235 திணிவுகள் ஒன்றாக இணைக்கப் பட்டன. இப்படி ஒன்றாக இணைந்த யுரேனியம் 235 திணிவு சங்கிலித் தொடர்த் தாக்கத்திற்கு உரிய நிலையை (criticality) உருவாக்கியதால் பெரும் வெடிப்புடன் ஒளி- வெப்பம்-கதிர்வீச்சு என்பன வெளிப்பட்டன. ஆய்வு நோக்கங்களுக்காக அணுகுண்டுடன் சேர்த்தே வீசப் பட்ட உபகரணங்களின் கணிப்பீட்டின் படி, குறைந்தது 12,000 தொன் நிறை கொண்ட ரி.என்.ரி வெடிமருந்துக்குச் சமனான வெடிப்பு இந்த ஹிரோஷிமா அணுகுண்டினால் சில மில்லி செக்கன்களின் நிகழ்ந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அமெரிக்காவின் முதல் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகரின் ஒரு தோற்றம். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. Little Boy எனப் பெயரிடப் பட்ட இந்த முதல் அணுகுண்டை போல் ரிப்பெற்ஸ் என்ற விமானி தனது பி- 29 விமானத்தில் காவிச் சென்று ஒரு லட்சம் வரையான ஜப்பானிய மக்களைக் கொன்றிருக்கிறார். தனது அணுகுண்டு தாங்கிய பி 29 விமானத்திற்கு அவர் இட்ட பெயர் "எனொலா கே" - இது அவரின் தாயாருடைய பெயர். ஆனால், இது பற்றி அந்த விமானிக்கு எந்தக் குற்றவுணர்வும் ஏற்பட்டிருக்கவில்லை. பின்னர் இந்த விமானியை நேரில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் இந்த மனிதப் பேரழிவிற்கான பொறுப்பு தான் மட்டுமே என்று கூறியதாக அறியக் கிடைக்கிறது. ஆகஸ்ட் 9, 1945 முதலாவது அணுகுண்டு ஜப்பானிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்த்த துலங்கலைத் தரவில்லை - சரணடைதல் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இரண்டாவது அணுகுண்டை மூன்று நாட்கள் கழித்து கொகுரா (Kokura) என்ற இன்னொரு தொழில்துறை செறிந்த ஜப்பானிய நகரம் மீது வீச அமெரிக்காவின் இன்னொரு பி 29 விமானம் அனுப்பப் படுகிறது. நகரின் ஒரு குறிப்பிட்ட நில அடையாளத்தின் மீது Fat Boy என்ற பெயர் கொண்ட (முன்னையதை விட அதிக வெடிப்பு சக்தி கொண்ட) அணுகுண்டை பரசூட் மூலம் இறக்க வேண்டுமென்பதே திட்டம். கொகுரா நகர மக்களின் அதிர்ஷ்டம், முகில் மூட்டங்கள் இலக்கினை மறைத்ததால், இந்த இரண்டாவது குண்டு நாகசாகி நகரம் மீது வீசப் படுகிறது. இந்த புழூட்டோனியம் அணுகுண்டின் சக்தி வாய்ந்த வெடிப்பினால் 40,000 பேர் வரை உடனடியாக உயிரிழந்தார்கள். அணுகுண்டு முன்னையதை விட சக்தி கூடியதாக இருந்த போதும், ஒரு பக்கத்தில் மலைகளால் சூழப்பட்டிந்ததால், நாகசாகியின் உயிர்ச் சேதம் ஹிரோஷிமாவினதை விடக் குறைவாக இருந்தது. ஜப்பான் சரணடைந்தது ஆகஸ்ட் 15 (1945) இல் ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ ஜப்பான் நிபந்தனையின்றிச் சரணடைவதாக நாட்டு மக்களுக்கு வானொலி உரை மூலம் அறிவித்தார். செப்ரெம்பர் மாதம் ஜெனரல் மக் ஆர்தரிடம் உத்தியோகபூர்வமாக ரோக்கியோவில் ஜப்பான் சரணடைந்தது. ஐரோப்பாவில் நியூரம்பேர்க் வழக்கு மூலம் நாசி ஜேர்மனியின் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டது போல, ஜப்பானின் பாதுகாப்புக் கட்டமைப்பின் பலர் ரோக்கியோ யுத்தக் குற்ற விசாரணை ஆணையத்தால் (Tokyo War Crimes Tribunal) தண்டிக்கப் பட்டார்கள். அமெரிக்கப் படைகளின் தூரகிழக்குப் படைகளின் தளபதி ஜெனரல் டக்ளஸ் மக்கார்தர், மனிலா, பிலிப்பைன்ஸ். ஜப்பான் சரணடைந்த பின்னர், சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோ மீது யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளாமல் காத்தவர் மக்கார்தர். பட உதவி: நன்றியுடன், அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிற்றோவை யுத்தக் குற்ற விசாரணைகளோடு தொடர்பு படுத்த அமெரிக்கா விரும்பவோ முயற்சிக்கவோ இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஜப்பானிய முடியாட்சி, ஜப்பான் ஒரு தேசமாக மீண்டும் துளிர்க்க அவசியமென அமெரிக்கத் தரப்பினர் நம்பியதே இதன் காரணம் எனக் கருதப் படுகிறது. தற்கால ஜப்பானில் கூட, இரண்டாம் உலகப் போரின் போது தென் கிழக்காசியாவில் ஜப்பானிய படைகள் செய்த போர்க்குற்றங்களை ஏற்றுக் கொள்ளாத வலது சாரிகள் அரசிலும், சமூகத்திலும் இருக்கிறார்கள். சில போர்க்குற்றவாளிகள் ஜப்பானிய மரபின் படி இன்றும் நினைவாலயங்களில் விம்பங்களாக வீற்றிருக்கிறார்கள். பூகோள மாற்றங்கள் இரண்டு உலகப் போர்களிலும் ஆரம்பத்தில் இராணுவ ரீதியில் தலையிடாமல் விலகியிருந்த அமெரிக்கா இறுதியில் அந்த இரு போர்களினதும் முடிவினைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாகத் திகழ்ந்தது. இந்த இரண்டாம் உலகப் போரில் அதியுச்ச ஆயுதமான அணுவாயுதத்தைப் பயனபடுத்தியதால், அமெரிக்காவிற்கு சில நன்மைகளும் தீமைகளும் சேர்ந்தே கிடைத்தன. இராணுவ மேலாண்மை மூலம் உலகப் பொலிஸ்காரனாகவும், நேட்டோ என்ற இராணுவக் கூட்டமைப்பின் பிரதான தலைமை நாடாகவும் வரக் கிடைத்தமை நன்மைகள். மறுபக்கம், இலட்சக் கணக்கான போர்வீரர்களல்லாத ஜப்பானிய மக்களை சில வினாடிகளில் கொன்று குவித்த மனிதாபிமானக் கறை, இதன் காரணமாக உலகில் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஏனைய மனிதப் படுகொலைகளைக் கண்டிக்கும் தகுதியை இழந்தமை என்பன அமெரிக்காவிற்கு ஏற்பட்ட தீமைகள். ஆனால், ஜப்பானும் அமெரிக்காவும் இந்தப் பேரழிவைக் கடந்து சுமூகமான உறவுடன் முன்னகர்ந்து விட்டன. 1945 இற்குப் பின்னரான அடுத்த இரு தசாப்தங்களில் உலகின் அணுவாயுதப் போராயுதங்களின் எண்ணிக்கையும், சக்தியும், இவ்வாயுதங்களைக் காவிச் செல்லும் ஏவுகணைகளின் பரிசோதனைகளும் அதிகரித்தன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், முழு உலகமும் அணுவாயுதங்களால் தோல்வியையே சந்தித்தது என்பதே வரலாற்று உண்மை. - முற்றும்
- Pearl Harbor.jpg
- Hiroshima .jpg
- Gen. McArthur .jpg
-
திரும்பும் வரலாறு!
திரும்பும் வரலாறு- பாகம் 7 நாசிகள் பதவிக்கு வந்த 1933 இலிருந்து 1940 வரையான காலத்தில், செக்கோஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், போலந்து, பிரான்ஸ் உடபட்ட பல நாடுகள் வரிசையாக நாசிகள் வசம் வீழ்ந்தன எனப் பார்த்தோம். இங்கிலாந்தை ஆக்கிரமிக்கும் ஹிற்லரின் கனவு நிறைவேறாமல் போக, ஹிற்லரின் கவனம் சோவியத் ரஷ்யா மீது திரும்பியது டிசம்பர் 1940 இல். ஸ்கொற்லாண்ட் வந்த சமாதானப் புறா ஜூன் 1941 இல் ஒபரேசன் பார்பறோசா என்ற பெயரில் சோவியத் ரஷ்யாவைக் குறிவைத்த நாசி ஜேர்மனிப் படையெடுப்பு ஆரம்பித்தது. அதற்கு முன்னர், மே 10 ஆம் திகதி இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளிலேயே மர்மம் நிறைந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஹிற்லருக்கு அடுத்த நிலையில் நாசித் தலைமையில் இருந்த ருடோல்f ஹெஸ் ஒரு இரட்டை எஞ்சின் விமானத்தை எடுத்துக் கொண்டு, ஜேர்மனியில் மியூனிக் நகரில் இருந்து ஸ்கொற்லாண்டின் நாட்டுப் புற இலக்கொன்றில் திடீரென வந்திறங்கினார். இந்த வினோதச் சம்பவத்தின் பின் கதை இன்று வரை முழுவதுமாக பொதுவாசகர்களுக்குத் தெரியாத ஒரு புதிர். ஆனால், பல்வேறு நாட்குறிப்புகள், உள்ளறிக்கைகள் சார்ந்து பார்க்கும் போது, நாசி ஜேர்மனிக்கும் பிரிட்டனுக்குமிடையே சமாதானம் பேசும் தூதுவராகவே, தன்னிச்சையாக ஹெஸ் வந்திறங்கினார் என்று தெரிகிறது. நாசி ஜேர்மனியின் துணை வேந்தராக பதவியிலிருந்தாலும், ஹெஸ்ஸின் மதிப்பு ஹிற்லரின் உள்வட்டத்தில் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. பல சர்வாதிகாரிகள், தங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் தன்னை விட எந்த வகையிலும் மேலாண்மை மிக்கவராக இருந்து விடக் கூடாதென மிக அவதானமாக இருப்பர். அந்த அடிப்படையிலேயே, பாரிய ஆளுமையெதுவும் இல்லாத ஹெஸ் துணை வேந்தராக ஹிற்லரால் நியமிக்கப் பட்டார் என ஒரு கருத்தும் நிலவுகிறது. ருடோல்f ஹெஸ்ஸின் மெசர்ஸ்மிற் 110 விமானத்தின் சிதைவுகள். விமானம் முற்றாக எரிபொருள் தீர்ந்த நிலையில் ஸ்கொற்லாண்டில் வீழ்ந்தது, ஹெஸ் காயங்களின்றித் தப்பினார். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. ஆனால், ஹெஸ்ஸோ ஹிற்லரை, கடவுள் ஜேர்மனிக்கு அளித்த ஒரு மீட்பராக வழி பட்டார். எனவே, கோறிங்கின் நாசி விமானப் படையாலும், கோயபல்சின் பிரச்சாரத்தாலும் வீழ்த்த முடியாதிருந்த பிரிட்டனை, தானே நேரில் சென்று சமாதானம் பேசி ஹிற்லருக்கு ஒரு பரிசாக பிரிட்டனைக் கொடுக்கலாம் என்று ஹெஸ் கணக்குப் போட்டிருப்பார் போலும். இதற்காக ஹெஸ் செய்த பயணம் நீண்டதும் (800 மைல்கள் பறப்பு) ஆபத்தானதுமாக இருந்தது. விமானமோட்டி லைசென்ஸ் வைத்திருந்த ஹெஸ், தனது இரட்டை எஞ்ஜின் மெசர்ஸ்மிற் 110 விமானத்திற்கு மேலதிக எரிபொருள் தாங்கிகள் பொருத்தி, சில மருந்துகளும், உணவும் கட்டிக் கொண்டு ஸ்கொற்லாந்தில் போயிறங்கியது டியூக் ஹமில்ரன் என்ற பிரிட்டன் அரசகுடும்பத்தைச் சேர்ந்த நாசி அனுதாபியின் மாளிகைக்கு அண்மையாக. உள்ளூர் பொலிசாரால் கைதான ஹெஸ்ஸை யாரென்று உறுதி செய்த பின்னர், அவரை ஒரு பங்களாவில் அதிக கெடுபிடிகளில்லாமல் சிறை வைத்தார்கள் பிரிட்டன் பாதுகாப்புப் பிரிவினர். இடையிடையே நடந்த விசாரணைகளின் போது, ஹிற்லர் சோவியத் ரஷ்யாவைத் தாக்க இருக்கும் செய்தியையும் ஹெஸ் கசிய விட்டிருக்கிறார். சேர்ச்சில் நிர்வாகம் இந்த தகவலை மொஸ்கோவிற்கு உடனேதெரியப் படுத்திய போதிலும், ஸ்ராலின் இதை நம்பவில்லை. சுவாரசியமான இன்னொரு விடயம், அதே காலப்பகுதியில் ஜப்பானில் இருந்த ஒரு சோவியத் உளவாளியும் நாசிகள் சோவியத் மீது தாக்குதல் தொடுக்கவிருக்கும் உளவுச் செய்தியை மொஸ்கோவிற்கு அனுப்பி வைக்கிறார் - ஸ்ராலினுக்கு இது சொல்லப் படுகிறது- அதையும் உதாசீனம் செய்து, நாசிகளுடனான பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் நீடிக்குமென நம்பினார் ஸ்ராலின். பூனைக்காலால் நடந்து வந்த நாசிகள் நாசி ஜேர்மனியின் முதல் சோவியத் நோக்கிய பீரங்கி முழக்கம் ஜூன் 22, 1941 இல் வெடிக்கிறது. ஆனால், ஜூன் ஆரம்பத்திலிருந்தே போலந்தில் இருந்த சோவியத் முன்னரங்க நிலைகளூடாக நாசிகளின் ஐந்தாம் படை சோவியத் படைகளின் பின்னரங்கம் நோக்கி ஊடுருவி, தொலைத் தொடர்பைத் துண்டிக்கும் நாசவேலைகளைத் தொடங்கி விட்டன. இதனால், ஜூன் 22 இல், 3000 தாங்கிகள், 2000 குண்டுவீச்சு விமானங்கள் சகிதம் ஒப்பரேசன் பார்பறோசா ஆரம்பித்த போது, சோவியத்தின் செஞ்சேனை தாக்குப் பிடிக்க இயலாமல் துவழ வேண்டி வந்தது. உதாரணமாக, முதல் 9 மணி நேர நாசி விமானத் தாக்குதலில், சோவியத் விமானப் படையின் 1200 விமானங்கள் - பெரும்பாலானவை விமான ஓடுபாதைகளில் வைத்தே - அழிக்கப் பட்டன. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில், முதல் 48 மணி நேரங்கள் தோழர் ஸ்ராலின் எங்கேயென்று அவரது உள்வட்டத்தினருக்கே தெரியாத நிலை. ஸ்ராலின் எதிர்பார்த்திருக்காத இந்த தாக்குதலால் அவர் அதிர்ச்சியடைந்ததே இந்த 2 நாள் மௌனத்தின் பின்னணி என சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மறு பக்கம், தாக்குதல் ஆரம்பிக்க முன்னதாக பெர்லினில் இருந்த சோவியத் தூதுவராலயம் நாசிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்த, தகவலறிய முயன்று கொண்டிருந்ததாகவும் சில ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், எவ்வாறு மின்னாமல் முழங்காமல் திடீரென நாசி - சோவியத் பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் (மொலரோவ் றொப்பன்ரொப்) உலகை உலுக்கியதோ, அதே போல அது போர்ப்பிரகடனம் எதுவும் இல்லாமலே ஸ்ராலின் முகத்தில் நாசி ஜேர்மனியால் கிழித்தும் எறியப் பட்டது. பனியுறைந்த சோவியத் முனையில் ஒரு நாசிப் படையினரின் சவக்காலை. பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. லெனின்கிராட் முற்றுகை தற்போது செயின்ற் பீற்றர்ஸ்பேர்க் என்று அழைக்கப் படும் ரஷ்ய நகரம், 1941 இல் லெனின்கிராட் என்று அழைக்கப் பட்டது. ஒபரேசன் பார்பறோசாவின் இலக்கு இந்த லெனின்கிராட் தான். சோவியத்தின் பால்ரிக் குடியரசுகளூடாக ஊடறுத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லெனின்கிராட்டைக் கைப்பற்றுவது தான் இலக்கு. ஆரம்பித்த வேகத்தில் நாசி ஜேர்மனியின் தரைப்படைகளால் முன்னேற இயலா விட்டாலும், செப்ரெம்பர் 1941 இல் லெனின்கிராட்டை நாசிப் படையின் வடக்குப் பிரிவு (Army Group North) சுற்றி வளைத்தது. இந்த முற்றுகையில் ஒரு கட்டத்தில் சோவியத்தின் முன்னாள் எதிரிகளான பின்லாந்தின் படைகளும் கலந்து கொண்டு முற்றுகையை இறுக்கின (இது 1940 இல் சோவியத் ரஷ்யா பின்லாந்திடமிருந்து பறித்துக் கொண்ட கரேலிய பிராந்தியத்திற்கு ஒரு பழி தீர்த்தலாகப் பார்க்கப் பட்டது). நவீன போர்க்கால வரலாற்றில் நீண்ட முற்றுகைகளில் ஒன்றாகத் திகழும் லெனின்கிராட் முற்றுகை 800 நாட்களுக்கு மேல் நீடித்தது. முற்றுகை இறுதியாக உடைக்கப் பட்ட போது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் லெனின்கிராட் வாசிகள் தாக்குதல்களாலும், பட்டினியாலும் இறந்திருந்தனர். ஆனால், இந்த முற்றுகைக்குச் சமாந்தரமாக, நாசிகள் தெற்காக இருந்த மொஸ்கோ நோக்கியும், அதற்குக் கீழாக வொல்கா நதிக்கரையில் இருந்த ஸ்ராலின்கிராட் நோக்கியும் புதிய களங்களை உருவாக்கி முன்னகர்ந்தனர். இது, அண்மித்து வந்த குளிர்காலம் பற்றிய எச்சரிக்கையுணர்வையும் மீறி, சோவியத்தை ஆக்கிரமிக்கும் ஹிற்லரின் நப்பாசையால் மில்லியன் கணக்கான நாசிப் படைகளை கிழக்கு நோக்கி நகர்த்தி ஆரம்பிக்கப் பட்ட ஒரு நடவடிக்கை. செப்ரெம்பரில் மொஸ்கோ நோக்கி ஒபரேசன் ரைfபூன் (Typhoon) என்ற புதிய நகர்வைத் தொடங்கிய நாசித் தரைப்படையின் மத்திய அணி (Army Group Center), ஒக்ரோபரில், மொஸ்கோவிற்கு மிக அண்மையாக வந்திருந்தது. ஸ்ராலின் மொஸ்கோவிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கு நகரொன்றிற்குச் செல்வதற்கும் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தாலும், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு மொஸ்கோவைக் காக்க எதிர்த்து நிற்பதெனத் தீர்மானித்தார். ஸ்ராலின்கிராட்: கௌரவப் பரிசு விரைவிலேயே வடக்கில் லெனின்கிராட் முற்றுகையும், அதற்குத் தெற்கே மொஸ்கோ முற்றுகையும் சோவியத் ரஷ்யாவின் கொடூர உறைபனிக் காலத்தில் நாசிகளுக்குப் பாதகமாக மாறி முன்னேற்றமற்ற அழித்தொழிப்பு யுத்தமாக (war of attrition) மாறி விட்டது. பிரிட்டன் செய்தது போலவே, சோவியத் ரஷ்யாவும் துரிதமாக இராணுவ உபகரணங்களையும், தாங்கிகளையும் உற்பத்தி செய்து, ஒரு மில்லியன் வரையான சோவியத் செஞ்சேனையினரையும் களத்தில் இறக்கியதால் இந்த அவல நிலை ஹிற்லரின் படைகளுக்கு. இந்த நிலையிலும், ஸ்ராலினுக்கு மூக்குடைப்பது போல ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்த ஹிற்லர், உக்ரைனுக்கு கிழக்காக, மொஸ்கோவிற்கு தெற்காக இருந்த "ஸ்ராலின்கிராட்" எனும் வொல்கா நதிக்கரை நகரத்தைக் குறிவைத்து மூன்றாவது களமுனையொன்றை நாசிகளின் தெற்குப் படையணியைக் (Army Group South) கொண்டு ஆரம்பித்தார். 1942 ஆகஸ்டில், வொல்கா நதியின் மேற்குக் கரையில் அமைந்திருந்த ஸ்ராலின்கிராட் மீது முற்றுகையை நாசி, மற்றும் இத்தாலிய படைகள் இறுக்கின. அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர்ந்த இந்த ஸ்ராலின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்த போது, ஸ்ராலின்கிராட்டில் சிக்கியிருந்த ஐம்பதினாயிரம் மக்களில், பத்தாயிரம் பேர் வரை எஞ்சியிருந்தனர். பெரும்பாலானோர் முற்றுகை ஆரம்பிப்பதற்கு முன்னரே வொல்கா நதியைக் கடந்து கிழக்குக் கரைக்குச் சென்று விட்டதால், லெனின்கிராட் போன்ற இலட்சக் கணக்கான மக்கள் இழப்பு நிகழவில்லை. ஆனால், இன்றும் வரலாற்றில் எதிரொலிக்கும் சில அதிர்வுகளுக்கு ஸ்ராலின்கிராட் நோக்கி, நாசிகள் கிழக்கு ஐரோப்பா, உக்ரைன் ஆகியவையூடாக மேற்கொண்ட நகர்வுகள் காரணமாக இருக்கின்றன. உக்ரேனிய மக்களுக்கும், ஸ்ராலினுக்குமிடையே இருந்த வரலாற்றுப் பகை காரணமாக, உக்ரேனியர்கள் நாசிகளோடு ஒத்துழைக்கத் தலைப்பட்டனர். கீயெவ் ஊடாக முன்னேறிய நாசிப் படைகள் உக்ரேனிய யூதர்களைச் சுற்றி வளைக்கவும், கொலை செய்யவும், கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருந்த வலது சாரி உக்ரைன் குழுக்கள் உதவின. உக்ரேனியர்கள் மட்டுமன்றி, கம்யூனிச ஆட்சியில் நிலமிழந்து அலைந்த கோசாக்குகளும் கூட நாசிகளோடு ஒத்துழைத்த பதிவுகள் இருக்கின்றன. ஸ்ராலினின் சோவியத் ரஷ்யா முன்னெடுத்த இன அடையாள அழிப்பு முயற்சிகளின் பிரதிபலன்களாக இந்த நடவடிக்கைகள் பார்க்கப் படுகின்றன. ஸ்ராலினின் களையெடுப்பு இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே, ஸ்ராலின் அடிக்கடி தன் ஆதரவாளர்களிடையே களையெடுப்பு (purge) நடத்தி, ஆயிரக்கணக்கானோரை பனியுறைந்த சைபீரியாவில் திறந்த வெளிச்சிறைச்சாலைகளுக்கு (Gulags) அனுப்புவதும், கொல்வதுமாக இருந்தார். மூன்று முனைகளில் நாசிகள் முன்னேறி முற்றுகைக்குள்ளாக்கிய போதிலும், ஸ்ராலினின் களையெடுப்பு அதிகரித்ததேயொழிய, குறையவில்லை. யுத்த காலத்தில் NKVD எனப்படும் ஸ்ராலின் உளவுப்பிரிவு முன்னரங்குகளில் தீவிரமாக ஊடுருவி செஞ்சேனையின் சகல மட்டங்களிலும் துரோகிகள் இருக்கிறார்களா எனத் தேடிக் கொண்டேயிருந்தனர். இந்த துரோகம் என்பது மிக நொய்மையாக வரையறை செய்யப் பட்டிருந்ததால், ஏராளமான இராணுவ வீரர்களும், சாதாரண மக்களும் வலுவான காரணங்களின்றி சைபீரியாவுக்கோ, சவக்காலைக்கோ அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தனர். நாசிகளின் சோவியத் முனைத் தோல்விக்குப் பிறகு, ரெஹ்றான் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி றூஸவெல்ட், பிரிட்டனின் சேர்ச்சில், சோவியத் ரஷ்யாவின் மார்ஷல் ஸ்ராலின். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. நாசிக் கனவுகளின் முடிவிடம் 1815 இல் நெப்போலியனின் படைகளைப் பலிகொண்ட சோவியத் எனும் பனியுறைந்த பெருநிலம், 1943, பெப்ரவரியில், நாசிகளின் படைகளையும் சிதைத்து இலட்சக் கணக்கான நாசிப் படையினர் சோவியத்திடம் சரணடைய வைத்தது. சோவியத் வெற்றிக்கு வித்திட்ட ஒப்பரேசன் யுரேனஸ், ஒப்பரேசன் றிங் போன்ற நடவடிக்கைகள் பற்றி ஏராளமான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் ஏற்கனவே இருப்பதால், அந்த விபரங்களை இங்கே தவிர்க்கிறேன். 1943 நவம்பரில் ரெஹ்றான் மாநாட்டில், ஸ்ராலின்கிராட் மக்களின் வீரத்தைப் பாராட்டி "ஸ்ராலின்கிராட் வாள்-Sword of Stalingrad" எனப்படும் அடையாள வாளொன்றை பிரிட்டன் அரசர் சார்பாக சேர்ச்சில் ஸ்ராலினிடம் வழங்கினார். இந்த மாநாட்டில் தான் சேர்ச்சில், ஸ்ராலின், றூசவெல்ட் ஆகிய நேச நாடுகளின் தலைவர்களால் நாசி ஜேர்மனியைக் கைப்பற்றும் திட்டம் வகுக்கப் பட்டது. ஐரோப்பாவின் கிழக்கில் நாசிகள் சோவியத்தை நோக்கி நகர்ந்த அதே காலப் பகுதியில், 1941 டிசம்பர் 7 இல், பசுபிக் அரங்கில் ஜப்பானிய இராணுவம் அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையை வான்வழியாகத் தாக்கிப் பேரழிவை விளைவித்தன. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இறங்கக் காரணமாக இந்த தாக்குதல் அமைந்தது. இந்த தாக்குதலின் விளைவாக ஜப்பான் மீது 4 ஆண்டுகள் கழித்து உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் வீசப் பட்ட நிகழ்வை அடுத்த பகுதியில் பார்க்கலாம். -தொடரும்
- Barbarossa.jpg
- Tehran Conference.jpg
- Hess's Plane wreckage.jpg
-
50 வருடங்களின் பின்னர் நிலவுக்கு பயணிக்கவுள்ள விண்வௌி வீரர்கள்
இணைப்பிற்கு நன்றி! நிலவுக்குப் போகும் முதல் பெண் இவர். ஆனால், 60 களில் விண்வெளிக்குப் போன முதல் பெண்ணாக ரஷ்யாவின் வலன்ரீனா ரெறஸ்கோவா இருக்கிறார். தற்போது யுனைரட் ரஷ்யா கட்சியின் சார்பில் ரஷ்ய நாடாளுமன்ற (Duma) உறுப்பினராக இருக்கிறார்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
கொஞ்சம் மயக்கம் இருந்தால் பொங்க மாட்டினம்! 😎 ஆனால், கேள்வியையே "ஜெய்ப்பூர்" அறிவிடம் மாறிக் கேட்டு, அது சரியான பதிலைச் சொல்ல , அதைக் கொண்டு வந்து அவசரப் பட்டு ஒட்டி, வேலை மெனக்கெட்டு எழுதுவோருக்கு எரிச்சலூட்டினால் பொங்கிவினம்! எனவே, கவனமாகப் பாவியுங்கள்!😂
-
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
நன்றாக இருக்கிறது அனுபவக் கதை. தலைப்பை இப்ப இருப்பது போல அல்லாமல் "அழகன்டா நீ!"😎 என்று வைத்திருந்தால் தூக்கலாக இருந்திருக்குமென்பது என் கருத்து!
-
திரும்பும் வரலாறு!
திரும்பும் வரலாறு- பாகம் 6 அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்! பிரித்தானிய மக்களின் ஓர்மம் மக்கள் மயப்படுத்தப் படாத எந்த இராணுவ முயற்சியும் தோல்வியில் முடியுமென்பது வரலாற்றில் மீள மீள நிரூபிக்கப் பட்ட ஒரு கோட்பாடு. இதை ஆரம்பத்திலேயே வரலாற்றின் மாணவனான சேர்ச்சில் உணர்ந்து கொண்டதன் விளைவே பிரித்தானிய மக்களை இயலுமான வழிகளில் நாசி எதிர்ப்பு யுத்தத்தில் பங்களிக்க நடவடிக்கைகளை எடுத்தது. இந்த மக்கள் பங்களிப்பின் முதல் வடிவமாக, பிரித்தானியர்கள் நாசிகளின் கொடூரத் தாக்குதல்களை ஓர்மத்தோடு தாங்கிக் கொண்டனர். ஏனெனில், போருக்குப் பின் கைப்பற்றப் பட்ட கோயபல்சின் நாட்குறிப்புகளின் படி, நாசி விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் பிரித்தானிய மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கி, பிரித்தானிய அரசின் மீது வெறுப்பேற்றுவதாகவே இருந்திருக்கிறது. இதனால், சேர்ச்சில் மீது எதிர்க்கட்சிகளே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சேர்ச்சிலை அகற்றி விட, நாசிகளுக்கு பிரிட்டனில் செங்கம்பளம் விரிக்கப் படும் என்று கோயபல்சே நம்பியிருக்கிறாரெனத் தெரிகிறது. இந்த நாசிக் கனவில் முதல் மண்ணை பிரித்தானிய மக்களே போட்டனர். ஏராளமான வதந்திகள், பொய் செய்திகள் கோயபல்சின் கட்டுப் பாட்டிலிருந்த ஆங்கில மொழி மூல வானொலிகள் மூலமும், ஐந்தாம் படையினர் மூலமும் பிரித்தானிய மக்களிடையே பரப்பப் பட்டாலும், எவையும் எதிர் பார்த்த மறை விளைவைத் தரவில்லை. இது எப்படிச் சாத்தியமானது? சேர்ச்சிலின் நிர்வாகம், மக்களைத் தம் பக்கம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸ் வீழ்வதற்கு முன்னரே உணர்ந்து சில திட்டங்களைச் செயல்படுத்தியது ஒரு காரணம். உதாரணமாக, பிரித்தானிய மக்களிடையே சில ஆயிரம் தொண்டர்களைக் தேர்த்தெடுத்து, அவர்களுக்கு மக்களின் உணர்வுகளைக் கிரமமாகப் பதிவு செய்யும் பணி வழங்கப் பட்டது. Mass observation diary என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டம் மூலம், பிரித்தானிய மக்களின் நாடித் துடிப்பை பிரித்தானியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு துல்லியமாகக் கணித்து வந்தது. இதனை நவீன அரசுகள் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒட்டுக் கேட்டு உளவறியும் முயற்சியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த மக்கள் குறிப்புகள் மூலம் தனி நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப் பட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. மாறாக, மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறுவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி விடும் நோக்கமே இந்தப் பாரிய முயற்சியின் நோக்கமாக இருந்தது. உதாரணமாக, லண்டன் நகர வாசிகள் தினசரி இரவு நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து தப்ப நிலக்கீழ் காப்பிடங்களுக்குச் சென்று விடுவர். ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் அற்றிருந்த இந்தக் காப்பிடங்களை, அரச நிர்வாகம் ஒரு சீரான தரத்தில் வைத்திருக்கும் விதிகளை உருவாக்கி, மக்களின் இரவு வாழ்க்கையை இலகுவாக்கியது. இதன் விளைவுகள் அபாரமாக இருந்தன: லண்டன் வாசிகள் இரவை நிலக்கீழ் காப்பிடங்களில் கழித்து விட்டு, காலையில் வழமை போல தங்கள் தொழில்களைப் பார்க்கச் செல்லும் அளவுக்கு பிரித்தானிய மக்களின் நாளாந்த வாழ்க்கை சாதாரணமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஏராளமான பிரித்தானிய மக்கள் வெறுமனே பலியாடுகளாக இருக்காமல் தொண்டர்களாக நாசி எதிர்ப்புப் போர் முயற்சியில் இறங்கினர். நாசிகளின் இரவு நேரத் தாக்குதல்களில், நாசிகளுக்கேயுரித்தான குரூர நுட்பங்கள் பல இருந்தன. ஒவ்வொரு தாக்குதல் விமான அணிக்கும், முன்னணியாக இலக்குகளை அடையாளம் காணும் விசேட விமானங்கள் வரும். இந்த விசேட விமானங்கள் இலக்குகள் மீது எரி குண்டுகளை (incendiaries) வீசி, அந்த இலக்குகளை பிரகாசமாக எரியவைக்கும். பின் தொடரும் தாக்குதல் விமானங்கள், எரியும் இலக்குகள் மீது தங்கள் குண்டுகளை வீசும். எனவே, தீயணைப்புத் தொண்டர்கள் எரியும் இலக்குகளை அணைக்கும் வேலை முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதனை, உயிராபத்திற்கு மத்தியிலும் சாதாரண தீயணைப்புத் தொண்டர்கள் செய்தனர், உயிரையும் கொடுத்தனர். இன்னொரு குரூர நுட்பமாக, நாசிகள் நேரங்கழித்து வெடிக்கும் குண்டுகளையும் வீசினர். உடனடியாக வெடிக்காத இந்தக் குண்டுகள், மீட்புப் பணியில் ஈடுபடும் மக்களைக் குறி வைத்து வீசப்பட்ட தாமதித்து வெடிக்கும் (delayed fuse) குண்டுகள். இந்தக் குண்டுகளாலும் ஏராளமான பிரித்தானிய போர் முயற்சித் தொண்டர்கள் பலியாகினர். ஆனால், பிரித்தானிய மக்கள் ஒவ்வொரு தாக்குதல் இரவின் பின்னரும் பிரித்தானியாவை நாசிகள் ஆழ அனுமதித்தால் என்ன நிகழும் என்ற எச்சரிக்கையை ஆழமாக உணர்ந்து கொண்டதால், எட்டு மாத நரகத்தினூடாக நடந்த படியே இருந்தனர். இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி. அலன் ரூறிங்கும் விஞ்ஞானிகளும் பிரித்தானியாவை நாசிகளின் தாக்குதல்கள் சுருள வைக்காமல் காத்த இரண்டாவது பெரிய சக்தி தொழில்நுட்பம். பிரித்தானியா, வரலாற்று ரீதியாக ஒரு தொழில்நுட்ப முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எதையும் பிரமாண்டமாக (பல சமயங்களில் காரணமில்லாமல்) செய்யும். ஆனால், பிரித்தானியா பிரமாண்டத்தை விட, செயல் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் - இது பல விடயங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இயல்பு. இதே தொழில்நுட்ப மேன்மையை, பிரித்தானியாவின் நாசி எதிர்ப்பு யுத்தத்திலும் பயன்படுத்தினார்கள். இது ஒரு பாரிய குழு முயற்சியாக இருந்தாலும், பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களில் கணிதவியலாளரான அலன் ரூறிங் (Alan Turing) முக்கியமானவர். அலன் ரூறிங்கின் முக்கியத்துவம் அறிவதற்கு, நாம் ஜேர்மனியின் இரகசிய செய்தித் தொடர்பு இயந்திரமான "எனிக்மா" இயந்திரம் பற்றிச் சிறிது பார்க்க வேண்டும் எனிக்மா எனும் "சிதம்பர சக்கரம்" நாசிகளின் பயன்பாட்டிலிருந்த ஒரு எனிக்மா இயந்திரம். பட உதவி: நன்றியுடன் சைமன் சிங் இணையத்தள விம்ப சேகரிப்பு. இரண்டாம் உலகப் போர் காலத்தில் வானலைகள் வழியாக மோர்ஸ் சமிக்ஞை (Morse code) மூலமே இராணுவத் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்த மோர்ஸ் சமிக்ஞையை யாரும் இடை மறித்துக் கேட்க முடியும். எனவே, சங்கேத மொழியொன்றை உருவாக்கும் முயற்சியாக ஜேர்மனியர்கள் எனிக்மா (Enigma) எனும் இயந்திரத்தை போர் ஆரம்பிக்க முன்னரே தயாரித்தார்கள். சம்பந்தமில்லாத சொற்களை சங்கேதக் குறிகளாகப் பயன்படுத்தும் முறையை மாற்றி, ஆங்கில மொழியின் 26 எழுத்துகளில் ஒவ்வொன்றும் வேறொரு ஆங்கில எழுத்தாக (cypher) இந்த எனிக்மா இயந்திரத்தால் மாற்றப் படும். மாற்றப் பட்ட தகவல் சாதாரண கண்களுக்கு அர்த்தமற்ற எழுத்துக் கூழாகத் (Alphabetic soup) தெரியும். ஆனால், மோர்ஸ் கோட் மூலம் இந்த எழுத்துக் கூழ் அனுப்பப் படும் இடத்தில் இருக்கும் ஒருவரிடம், இந்த எனிக்மா இயந்திரத்தின் எழுத்துக் கூழை, உண்மையான சொற்களாக மாற்றிக் கொள்ளும் குறியீட்டு வழிகாட்டி (code) இருக்கும். இத்தகைய இரகசிய நீக்கம் (decryption) செய்வதற்கும், ஒரு எனிக்மா இயந்திரத்தைப் பயனபடுத்திக் கொள்ளலாம். எனிக்மா இயந்திரத்தின் கட்டுமானத்தைச் சிக்கலாக்குவதன் மூலம், இதன் மூலம் உருவாக்கப் படும் செய்திகளை எனிக்மாவின் உதவியின்றி ஒருவர் இரகசிய நீக்கம் செய்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை “பில்லியனில் ஒன்று” என்ற அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், எனிக்மாவுக்கும் ஆப்பு வைக்கும் சில குறைபாடுகள் இருந்தன: ஒரு எனிக்மா இயந்திரத்தைக் கைப்பற்றினாலோ அல்லது எனிக்மா குறியீட்டுப் புத்தகத்தைக் கைப்பற்றினாலோ இதன் இரகசிய நீக்கம் சாத்தியமாகி விடும். பிரித்தானியா இந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னரே, போலந்து விஞ்ஞானிகள் எனிக்மாவை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். இரகசியமாக போலந்து இராணுவக் கட்டமைப்பினருக்குக் கிடைத்த ஒரு எனிக்மா இயந்திரத்தை ஆராய்ந்து, தாங்களே ஒரு எனிக்மா இயந்திரத்தை போலந்து இராணுவம் வடிவமைத்தது. சில கணிதவியலாளர்களைப் பணியில் அமர்த்தி, சில ஜேர்மன் செய்திப் பரிமாற்றங்களையும் ஆராய்ந்து எனிக்மா செய்திகளை இரகசிய நீக்கம் செய்வதில் ஒரளவு வெற்றியும் கண்டார்கள். ஆனால், நாசிகள் தங்கள் மிக அடிப்படையான எனிக்மா இயந்திரத்தை மேலும் சிக்கலானதாக மாற்றி, தங்களது இரகசிய குறியீட்டுப் புத்தகத்தையும் தினசரி மாற்ற ஆரம்பித்த போது, போலந்தின் முயற்சிகள் முன்னேற முடியாமல் முடங்கின. ப்ளெட்ச்லி பார்க்- Bletchley Park ப்ளெட்ச்லி பார்க் அருங்காட்சியகத்தில் அலன் ரூறிங்கின் சிலை. 2011, யூலை 15, அரசி இரண்டாம் எலிசபெத்தினால் ப்ளெட்ச்லி பார்க் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. பட உதவி: நன்றியுடன், பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பகம். போலந்து, போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்னர் தனது எனிக்மா இயந்திரம் மீதான முயற்சிகளை பிரிட்டனிடமும், பிரான்சிடமும் பகிர்ந்து கொண்டது. போலந்து வீழந்த பின்னர், போலந்தில் இருந்த எனிக்மா இயந்திரங்களில் ஒன்று பிரிட்டனின் உளவுத் துறையிடம் வந்து சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், பின்னர் நோர்வேயில் குறுகிய காலம் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுப், பின்வாங்கிய போதும் நாசிகளிடமிருந்து எனிக்மா இயந்திரமும், குறியீட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப் பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஆரம்ப முதலீட்டை வைத்துக் கொண்டு எனிக்மாவின் இரகசியங்களை உடைக்கும் மிக ஆரம்ப காலக் கணணியை வடிவமைத்தவர் தான் அலன் ரூறிங். பற்சக்கரங்களும், மின் விளக்குகளும் கொண்ட இந்தப் பாரிய இயந்திரத்தை இன்று ப்ளெட்ச்லி பார்க் எனப் படும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். சிக்கலான எனிக்மா இயந்திரத்தின் தகவல்களை, கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி இரகசியம் நீக்கும் வேலையை இந்த ஆரம்ப காலக் கணனி செய்ததால், பல லட்சம் உயிர்கள் காக்கப் பட்டன. பிரிட்டன் உட்பட, போரில் நாசிகளை எதிர்த்த நேச அணியின் வெற்றியும் இதனால் உறுதி செய்யப் பட்டது. ப்ளெட்ச்லி பார்க் என்ற மாளிகையின், நிலவறையில் நடந்த இந்த முயற்சிகள் அதி உயர் இரகசியமாகப் பேணப்பட்டதால், நாசிகளுக்கு போர் முடியும் வரை தங்கள் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப் படுவது தெரிய வரவில்லை. அதே நேரம், இந்த அரிய பணியைச் செய்த அலன் ரூறிங்கின் பெயரும் அப்போது வெளியே தெரியவரவில்லை. இந்தப் பிரபலமின்மையின் ஒரு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராக இருந்த அலன் ரூறிங்கை பிரித்தானிய அரசு ஆண்மை நீக்க மருந்துகள் மூலம் குணமாக்க முயன்றதும், அந்த மருந்தின் பக்க விளவினால் அவர் தற்கொலை செய்து கொண்டதும், பெரிதாகப் பேசப் படவில்லை. ஓரினச் சேர்க்கையாளராக நீதிமன்றினால் தண்டிக்கப் பட்ட அலன் ரூறிங்கை, அவாது மரணத்திற்குப் பின்னர் மிக அண்மையில் பகிரங்கமாக அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்தது பிரித்தானிய அரசு. - தொடரும்
- Alan Turing Statue - Bletchely Park.jpg
- Enigma - Simon Singh collection.jpg
-
திரும்பும் வரலாறு!
திரும்பும் வரலாறு- பாகம் 5 டன்கர்க் 1940, மே மாதம் 10 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் தரைப்படைகள் பிரான்சினுள் சடுதியாக ஆக்கிரமித்து ஊடுருவின. பிரான்ஸ் தரப்பில் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுத் தரைப்படையினர், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ் இராணுவம் (British Expeditionary Force), சில பத்தாயிரம் பெல்ஜியம், கனேடியப் படையினர் என பெரும் இராணுவ அணியை நாசிகள் டன்கர்க் எனும் வட கிழக்கு பிரான்ஸ் கடற்கரையோர நிலப் பரப்பில் சுற்றி வளைத்தனர். பாதுகாப்புகளற்ற கடற்கரை வெளியில் சிக்கிக் கொண்ட நான்கு இலட்சம் வரையான இப்படைகளை, நாசி விமானங்கள் இடைக்கிடை குண்டு வீசிப் பெரும் உயிர்ச்சேதமெற்படுத்தின. கடல்வழியாக இந்தப் படைகளில் ஒரு பகுதியினரையாவது மீட்டெடுக்கும் முயற்சியாக ஒபரேசன் டைனமோ மே 26 இல் ஆரம்பிக்கப் பட்டு, அடுத்த ஒரு வாரத்தினுள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிரிட்டிஷ், பிரெஞ்சு, கனேடிய படையினர் டோவர் நீரிணையின் வழியாக மீட்கப் பட்டனர். கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும், அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். சமாதானப் புறாக்கள் 1940 ஜூன் நடுப்பகுதியில் பிரான்ஸ் நாசிகளிடம் சரணடைந்து 80% ஆன பிரான்ஸ் நிலப்பரப்பை நாசிகளிடம் ஒப்படைத்தது. இவ்வாறு பிரான்ஸ் சரணடைவதற்கு முன்னர், நாசிகள் பாரிசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும் வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரான்ஸ் அரச தலைவர்களை பிரான்சிலேயே நேரடியாகச் சந்தித்து தொடர்ந்து போராடும் படி ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இந்த வலியுறுத்தலின் காரணங்கள் பல. பிரான்ஸ் வீழ்ந்து விட்டால் கடல்வழியாக பிரிட்டனை நாசிகள் ஆக்கிரமிக்க அதிக காலம் எடுக்காது. அத்துடன், பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நாசி விமானங்கள் பறக்க வேண்டிய தூரமும் வெகுவாகக் குறைந்து விடும். எனவே, பிரான்சின் பாதுகாப்பு என்பது இங்கிலாந்தின் பாதுகாப்புத் தான் என்பது தெளிவு. எனவே, இறுதியில் பிரான்ஸ் வீழ்ந்த போது, அடுத்த நாசி இலக்கு இங்கிலாந்து தான் என்பது சேர்ச்சிலுக்கு மட்டுமன்றி பிரிட்டன் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக ஹிற்லர் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை உடனே வழங்கவில்லை. ஏன்? ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாசிகள் தம் ஒவ்வொரு எதிரிகளையும் ஒவ்வொரு தரத்தில் வைத்திருந்தனர். யூதர்களும், றோமாக்களும் கரப்பான் பூச்சிகள், ரஷ்ய சிலாவிக் மக்கள் "கீழ் நிலை மனிதர்கள்" என வெவ்வேறு தரங்களில் பார்த்தனர் (இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!). ஹிற்லர், பிரித்தானியர்களை, ஜேர்மனிய ஆரியர்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நாகரீக இனமாகப் பார்த்தார். எனவே, இராணுவ ரீதியில் தாக்காமலே அவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கத்தில் இருந்தார். ஹிற்லர் நீட்டும் நேசக் கரத்தைப் பற்றிக் கொண்டு இங்கிலாந்து சமாதானத்தைப் பேண வேண்டுமென வாதிட்ட எட்வேர்ட் மோஸ்லி (இவர் பிரிட்டன் பாசிச யூனியன்- British Union of Fascists எனும் அமைப்பின் தலைவர்), டியூக் ஹமில்ரன் (Duke of Hamilton) போன்ற சிலரும் பிரிட்டனில் இருந்தனர். சமகாலத்தில், சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம். இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்கு, நாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். வளையாத கருங்கல்! "கருங்கல் உடையும், வளையாது!" எனும் புதுவையின் வரிகளின் பிரதிபலிப்பாக, வின்ஸ்ரன் சேர்ச்சில் நாசிகளோடு பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பேயில்லையென மறுத்து விட்டார். பிரிட்டன் பாராளுமன்றிலும் சரி, பொது மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றும் உரைகளிலும் சரி, சேர்ச்சிலின் உரைகள் இரு பகுதிகளைத் தவறாமல் கொண்டிருந்தன. ஒன்று: எந்த நிலையிலும் பிரிட்டன் சரணடையாது போராடும் என்ற உறுதி, இரண்டு: இந்தப் போராட்டம், பிரிட்டன் மக்களுக்கு ஒரு கொடிய நரகமாக இருக்கும் என்ற யதார்த்தம். இது ஒரு அற்புதமான செயல்திறன் மிக்க உளவியல் நுட்பம். எதிர் கொண்டு வரும் கடின நாட்கள் பற்றிய உண்மையை மீள மீளச் சொல்லி விட்டால், மக்கள் பூப்படுக்கையை எதிர்பார்க்காமல் இருப்பர், ஏமாற்றம் கொள்ளாமல் காரியத்தைப் பார்ப்பர். அதே வேளை நம்பிக்கையை இழப்பது மட்டும் நடக்கக் கூடாதென மனதில் ஊன்றி விடுதல் மூலம், போராட்டக் குணத்தைத் தக்க வைத்தல். இவை இரண்டையும் ஒருங்கிணைத்து ரத்தின சுருக்கமாக சேர்ச்சில் சொன்ன ஒரு வாக்கியம்: “If you are walking through hell, keep walking!” "நரகத்தினூடு நடக்க வேண்டியிருக்கிறதா? நடந்து கொண்டேயிருங்கள்!" காத்திருந்த கழுகுகள் மறு கரையில் நாசி ஜேர்மனியில், பி.பி.சி வானொலியைத் தவறாமல் கேட்ட படி சமாதான சமிக்ஞைக்காகக் காத்திருந்த நாசிப் பிரச்சார பீரங்கி கோயபல்ஸ் பிரிட்டனுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நாள் நெருங்கி விட்டதாக தன் டயரியில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். பிரிட்டனின் சரணடைவை விரைவாக்கும் "லங்காபுவத்" பாணி பிரச்சார நடவடிக்கைளும் கோயபல்சால் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டிருந்தன. இன்று இணையவழியில் ரஷ்யாவின் அரச அமைப்புகள் பொய்ச்செய்திகளையும், எதிர் நாட்டில் பிரிவினையூட்டும் போலி ஆய்வுகளையும் கசிய விடுவது போல, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த மக்கள் தொடர்பாடல் ஊடகமான வானொலி மூலம் நாசிகள் பிரச்சாரம் செய்தனர். பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளிலிருந்து ஆங்கில மூலத்தில் இந்தப் பிரச்சாரங்கள் ஒலிபரப்பாகின. ஹிற்லரின் உள்வட்டத்திலேயே பிரிட்டனை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்பதில் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. இந்த முரண்பாடுகளின் ஒரு காரணம், யார் தலைமை நாசியான ஹிற்லரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பதில், ஹிற்லரின் கூட்டுக்களிடையே இருந்த கடும் போட்டி. ஹிற்லரின் நம்பர் 2 ஆக இருந்த ருடோல்f ஹெஸ் சமாதானம் பேச வேண்டுமென்று வலியுறுத்தினார் (பின்னர் அவரே ஒரு விமானத்திலேறி ஸ்கொற்லாந்துக்குப் பறந்து போனது இன்னொரு சுவாரசியமான கதை!). கோயபல்ஸ் உள்பிரிவினையால் பிரிட்டனையும் சேர்ச்சிலையும் பலவீனப் படுத்திய பின்னர் கடல்வழியாக ஆக்கிரமிக்க வேண்டுமென்றார். நாசி விமானப்படையின் தலைவரான கோறிங், ஒரே வாரத்தில் தன் விமானப் படையின் தாக்குதல்களால் பிரிட்டன் அடி பணியும் என்று ஹிற்லருக்கு நம்பிக்கையூட்டினார் (மூன்று நாட்களில் உக்ரைனின் கியேவ் விழும் என்று வாக்குறுதி கொடுத்த ரஷ்ய இராணுவத் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!). இறுதியில், கோறிங்கின் இந்த வான்வழித் தாக்குதல் தான் பிரிட்டனை அடிபணிய வைக்கும் வழியென ஹிற்லர் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தார். கழுகின் நாள்! பிரான்சின் வடக்குக் கரையோரத் தளங்களிலிருந்து கிளம்பி, ஆயிரத்திற்கு மேற்பட்ட, பல வகை நாசி விமானங்களை உள்ளடக்கிய விமான அணி இங்கிலாந்தை நோக்கி முதலில் தாக்குதல் செய்ய ஆரம்பித்தது 1940, ஆகஸ்ட் 13. இந்த முதல் நாளை கோறிங் "கழுகின் நாள்- Eagle Day (Adlertag)" என்று பெயரிட்டு தயார் செய்து கொண்டிருந்த போது, பேர்லினில், பிரிட்டன் தோற்ற வெற்றிப் பேரணியைக் கொண்டாடும் அலங்கார வேலைகளை இன்னொரு நாசிக் குழு செய்ய ஆரம்பித்திருந்தது. அவ்வளவுக்கு, தனது விமானத் தாக்குதலால், சில நாட்களில் பிரிட்டன் சுருண்டு விடும் என்று நம்பினார் கோறிங். ஆனால், முதல் நாளிலேயே ஏமாற்றம் காத்திருந்தது. பிரிட்டனின் மீதான மோசமான வானிலையும், றோயல் விமானப் படையின் எதிர்த்தாக்குதலும் சேர்ந்து, இலக்குகளை அடையாளம் காணாமலே குண்டுகளை வீசி விட்டுத் திரும்ப வேண்டிய நிலை நாசி விமானங்களுக்கு ஏற்பட்டது. ஆனால், நான்கு நாட்களில் றோயல் விமானப் படையை அழித்து விடுவோம் என்று உறுதியெடுத்த கோறிங், தன்னுடைய கணிப்பை மாற்றிக் கொள்ளவில்லை, எனவே படை படையாக நாசி விமானங்களை இங்கிலாந்தின் வான்பரப்பினுள் அனுப்பும் அணுகுமுறை தொடர்ந்தது. அடுத்த சில நாட்களில், இந்தப் பகல் நேர நாசி விமானத் தாக்குதல்களை எதிர்ப்பதற்கு மேலதிகமாக, இரவில் பேர்லின் மீதும் றோயல் விமானப் படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குமளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தன. இரவு நேரம், நிலாக் காலம்! நாசி விமானப் படை ஒரு புதிய நுட்பத்தைக் கையாள ஆரம்பித்தது. பகலில், றோயல் விமானப் படையின் விமானங்கள் நாசி விமானங்களை வானில் எதிர் கொண்டு தாக்குவதைத் தவிர்க்க, இரவுகளில் பிரிட்டன் மீதான தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். றோயல் விமானப் படையின் சண்டை விமானங்களில் ரேடார் வசதிகள் இருக்கவில்லை. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளாலும் இரவில் குறி பார்த்துச் சுட இயலாது. ஆனால், நாசி விமானங்கள் இரவிலும் தரையில் இலக்குகளை அடையாளம் கண்டு தாக்க இயலும், இதற்கு ரேடார் அவசியமில்லை. எனவே, நிலா வெளிச்சம் நிரம்பிய இரவுகள், பிரிட்டன் நகரங்களுக்கு நரக நாட்களாக மாறின. இரவு நேர நாசி விமானத் தாக்குதல்களால் எரிந்து சிதைந்த இலண்டன் பொதுக் கட்டிடங்கள். பட உதவி: நன்றியுடன் அமெரிக்க ஆவணக்காப்பகம். நிலா வெளிச்சமில்லா நாட்களில் கூட நாசிகள் துல்லியமாக கட்டடங்களையும், இலக்குகளையும் தாக்குவதற்கு ஒரு வானலைத் (Radio beacon) தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். விமானங்கள் ஓடுபாதைகளில் துல்லியமாகத் தரையிறங்குவதற்கெனப் பயன்பாட்டிலிருந்த லொறென்ஸ் (Lorenz) தொழில்னுட்பத்தை செம்மைப் படுத்தி சில நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் இலக்குகளை அடையாளம் காண நாசிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள். அனேக உயிர், உடைமைச் சேதங்கள் பிரிட்டனில் இந்த இரவு நேரத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன. ஏனைய நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், இலண்டன் நகரை நாசிகள் தொடாமல் விட்டிருந்தது, சேர்ச்சில் மனம்மாறி நாசிகளுடன் சமாதானம் பேச வருவார் என்ற நம்பிக்கையினால். அந்த நம்பிக்கை இப்போது சேர்ச்சிலின் வானொலி உரைகளால் தகர்ந்து விடவே, 1940 செப்ரெம்பர் 7 இல் முதன் முறையாக இலண்டன் நகரமும் நாசிகளின் இரவு நேரத் தாக்குதலுக்குள்ளானது. ஒரு இரவில், மத்திய இங்கிலாந்திலிருக்கும் கொவென்ட்றி நகரத்தின் மீதான தாக்குதலில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 1940, செப்ரெம்பர் 7 ஆம் திகதி முதல், 1941 மே 11 வரையிலான எட்டு மாத காலம், செறிவான நாசி விமானத் தாக்குதல்களை இலண்டன் உட்பட்ட நகரங்கள் எதிர் கொண்டதில், மொத்தம் 44, 652 மக்கள் பலியானார்கள். இவர்களுள் 29,000 பேர் இலண்டனில் பலியானார்கள். பிரித்தானியாவில், நாசி விமானத் தாக்குதல்களால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5,626. ஏமாற்றம், திசை மாற்றம்! 1940 டிசம்பரில், ஹிற்லர் பிரிட்டனின் வீழ்ச்சிக்காக இனிக் காத்திருக்கப் போவதில்லையெனத் தீர்மானித்து, தனது தளபதிகளுக்கு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்: "கேஸ் பார்பரோசா (Case Barbarossa)" எனும் சங்கேதப் பெயர் கொண்ட அந்த ஆணை, சோவியத் ரஷ்யாவை நோக்கி முன்னேறும் திட்டங்களை வரையுமாறு கட்டளையிட்டது. இந்தத் திட்டம், ஒப்பரேசன் பாபரோசாவாக 1940 ஜூன் மாதம் ஆரம்பித்தமை தான், பிரிட்டன் மீதான நாசி விமானப் படையின் தாக்குதல்கள் ஒரு ஆளியைச் சொடுக்கியது போல நின்று போகக் காரணம். இதை பாகம் 7 இல் விரிவாகப் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்னாகப் பார்க்க வேண்டியது: நாசிகளின் கொடிய விமானத் தாக்குதல்களால் பிரிட்டன் துவண்டு விடாமல் காத்தது சேர்ச்சில் மட்டுமா? இந்தத் துவழாத பிரிட்டனின் தூண்களாக இருந்த இரு தரப்பினர் பற்றி அடுத்த பாகத்தில் பேசலாம்! - தொடரும்
- London Blitz 1940-41.jpg
-
திரும்பும் வரலாறு!
முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது 👆 ஸ்மார்ட்டான chat gpt ஐயும் கிரகிப்பில் பிரச்சினையுடையோர் பாவித்தால் பலன் இருக்காது என்பதற்கு, பெருமாள் நல்ல சாட்சி பகர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன்!😎 இன்புழுவன்சாத் தொற்றினால் அரை மில்லியன் பேர் இறந்ததாகச் சொல்லியிருக்கிறேன், அவர் அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறார். மொழிபெயர்க்கும் போது எழுவாய் பயனிலை எல்லாவற்றையும் குழப்பியிருக்கிறது. அதை அப்படியே நம்புகிறார்! Chat gpt:1, பெருமாள்:0😂 இதை ஏற்கனவே நான் பாகம் 2 இல் எழுதியிருக்கிறேனே? வரலாற்று ஆய்வாளர்கள் எழுதாமல் எங்கேயிருந்து நான் எடுத்தேன் என்று நினைக்கிறீர்கள்? வாசிக்காமல் சொல்லும் கருத்துக்கள், (அல்லது வாசிக்காமல் கொப்பி செய்து chat gpt இல் ஒட்டி வரும் கருத்துக்கள்😂) இவற்றிற்கு தனித் தனியாகப் பதில் சொல்லும் நேரம் இல்லை! எனவே இணைந்திருங்கள் அல்லது விலகியிருங்கள் - உங்கள் இஷ்டம்!👍
- திரும்பும் வரலாறு!
- திரும்பும் வரலாறு!
-
திரும்பும் வரலாறு!
நீங்கள் வாசித்து விட்டுத் தான் கருத்து சொல்கிறீர்களென தவறாக நினைத்து விட்டேன்😂. ஹிற்லரின் கூட்டை ஏன் ஜேர்மனியர்கள் தேர்ந்தார்களென முதல் பாகத்திலேயே எழுதியாகி விட்டது (அதே போல இனப்படுகொலையாளர் குடும்பமான பக்ஷக்களை ஏன் சிங்களவர்கள் தேர்ந்தார்களென நீங்களும் தேடிப் பார்த்து அதன் பின்னாலுள்ள நியாயங்களையும் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன், அப்படியா?😎 ) ஜேர்மனிய யூதர்கள் ஹிற்லருக்கு முன்னர் செய்த அக்கிரமங்களை நீங்கள் தான் சொல்ல வேண்டும்! ஏனெனில் ஒழுங்கான ஒரு வரலாற்று நூலிலும், ஆவணத்திலும் யூதர் செய்த அக்கிரமங்களைக் காணவில்லை. நீங்கள் பார்க்கும் சதிக் கோட்பாட்டு வீடியோக்களில் மட்டுமே அவை இருக்கின்றன என நினைக்கிறேன்.
-
திரும்பும் வரலாறு!
ஜப்பான் வர இன்னும் மூன்று நான்கு பாகங்கள் இருக்கு. ஆனால், நுணாவும் கோசானும் சுட்டியது போல, இம்பீரியல் ஜப்பான் இராணுவம் நாசிகளுக்கு சளைக்காத கொடூரர்களே! நன்றி! நன்றிகள்! ஆம், அதனால் தான் இடையிடையே நாசிகளுக்குப் பிந்திய காலங்களையும் சுட்டிக் காட்டி எழுதுகிறேன். கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்!😎 நான் வாசித்த வரலாற்றின் படி, பேர்லின் உட்பட்ட ஐரோப்பிய நகரங்களில் வர்த்தகம், கலை, விஞ்ஞானம், அரசியல் என எல்லப் பரப்புகளிலும் வெற்றிகரமாக வாழ்ந்தது தான் ஐரோப்பிய யூதர்கள் செய்த "அக்கிரமம்"! 😂. அந்தக் காலத்தில் கள்ள மட்டை போடுதல், களவாக வேலை, போன்ற "அக்கிரமங்கள்" கூட இருந்திருக்கவில்லை! நீங்கள் என்ன அறிந்து கொண்டீர்கள் என்று சொன்னால் அறிந்து கொள்கிறோம்! நன்றி!