-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
அமெரிக்கா முன்னர் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் அல்லது அக்கிரமிப்புப் போர்களில் முவைத்த பொய்யான காரணங்களைப் போல் அல்லாமல் வெனிசுவேலா மீது தாம் மூன்று மணிநேர நடவடிக்கையினை நடத்தி மடூரோவைக் கைது செய்ததன் உண்மையான நோக்கம் வெனிசுவேலாவில் இருக்கும் எண்ணை வளத்தைத் தாம் கைய்யகப் படுத்தத்தான் என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். எண்ணெய்க் கிணறுகளை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அவற்றை மீளக் கட்டியெழுப்பி, முன்னர் அங்கு இயங்கிய அமெரிக்க எண்ணெய்க் கம்பெணிகள் கடந்த இரு வெனிசுவேலா நிர்வாகங்களினால் மூடப்பட்டபோது ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்டவீட்டை வளங்கப்போவதாகவும், பின்னர் எண்ணெயினை அகழ்ந்தெடுத்து, சுத்திகரித்து , ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்படும் பணத்தை இக்கம்பெணிகள் எடுக்கும் என்றும், வெனிசுவேலா நாட்டினை அபிவிருத்தி செய்யவும் இந்நிதி பயன்படும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ஆக, மடூரோ தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டதோ அல்லது அமெரிக்காவினுள் போதைவஸ்த்தை கொண்டு வருவதைத் தடுக்க ஆவண செய்யாமலிருப்பதோ அவர் கைதுசெய்யப்பட்டு இழுத்துவரப்படுவதற்குக் காரணமில்லை. ட்ரம்ப்பிற்கும் புட்டினுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால், ட்ரம்ப் வெனிசுவெலாவின் எண்ணெய் வளத்தை பலாத்காரமாகத் திருடப்போகிறார், புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்து வருகிறார்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
மொறட்டுவை பொலீஸ் நிலையம் போகும் வழியில் அன்று மாலை நடந்த விடயங்களையும், வாகனத்தில் இருந்த தமிழ் மாணவர்கள் இழுத்துவரப்பட்ட விடயங்களையும் ஓரளவிற்கு அறிந்துகொண்டேன். பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தவர்கள், பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த மாணவர்கள், பேரூந்துகளில் பல்கலைக் கழகத்திற்கு வந்திறங்கிய மாணவர்கள் என்று பலர் இழுத்துவரப்பட்டிருந்தார்கள். வெகுசிலரைத் தவிர அநேகமானோர் ஒன்றில் சறத்துடன் மட்டும் அல்லது சறமும் மேலங்கியும் அணிந்து காணப்பட்டார்கள். சுமார் 15 நிமிட பயணத்திற்குப் பின்னர் பொலீஸ் வாகனங்கள் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைச் சென்றடைந்தன. வாகனங்கள் நிறுத்தப்பட்டதும் கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டோம். பின்னர் பொலீஸ் நிலையத்தின் முற்பக்கத்தில் இருந்த சிறிய அறையொன்றினுள் எம்மை நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவு வேளையாதலால் சில மாணவர்கள் தரையில் அமர்ந்து உறங்க ஆரம்பித்தார்கள். எம்மை அறையினுள் நிற்கச் சொல்லிவிட்டுச் சென்ற பொலீஸ் அதிகாரி மீண்டும் அங்கே வந்தான். எம்மில் சிலர் உறங்குவதைக் கண்டுவிட்டு கத்தத் தொடங்கினான். வாயிலின் அருகில் நான் அமர்ந்திருந்தமையினால் என்னை நோக்கியே அவனது ஆத்திரம் திரும்பியிருந்தது. கோபம் கொண்டு காலால் என்னை உதைந்த அவன் பேசத் தொடங்கினான். "நீங்கள் எல்லாம் புலிகள், பிரபாகரன் உங்களை இங்கே அனுப்பியிருப்பது பொறியியல் கற்றுக்கொண்டு அங்கு சென்று தனக்கு உதவுவதற்காகத் தான். நாம் இங்கே எமது உயிரைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கிறோம். எமது அரசாங்கம், நாம் கட்டும் வரிப்பணத்தில் உங்களைப் படிப்பிக்கிறது. எமது சிங்கள மக்களுக்குச் செல்லவேண்டிய பணம் பயங்கரவாதிகளான உங்களுக்கு கல்விகற்கப் பாவிக்கப்படுகிறது. உங்களை இனிமேல் விடமாட்டோம், நீங்கள் இங்கிருந்து தப்பிக்க முடியாது" என்று சிறிதுநேரம் கர்ஜனை செய்துவிட்டு, "பிரபாகரனின் ஆட்சியில் உனக்கு என்ன பதவி தருவதாகக் கூறியிருக்கிறான்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். நிலைமையின் தீவிரம் உணராது, "தெரியவில்லை, என்னிடம் அவர் எதுவும் கூறவில்லை" என்று நான் பதிலளிக்கவும் மிகுந்த கோபம் கொண்ட அவன் என்னைத் தாக்கினான். எனக்குச் சிங்களம் தெரியும் என்று நினைத்து அவனுடன் பேசியதன் பலனை நான் அங்கு அனுபவித்தேன். அவன் மட்டுமல்ல, அன்றிரவு அப்பொலீஸ் நிலையத்தில் இருந்த இன்னும் சில பொலீஸ் அதிகாரிகளும் தமது பங்கிற்கு தவறாது வந்து எம்மீது வசைமாறி பொழிந்துவிட்டுச் சென்றார்கள். ஒருசிலர் தாக்கினார்கள். ஏனென்று கேட்பாரின்றி சுமார் 60 தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய அறையொன்றினுள் தடுத்துவைக்கப்பட்டு போவோர் வருவோர் என்று வேறுபாடின்றி உடலாலும், மனதாலும் கடுமையான தாக்கத்திற்கு உள்ளானோம்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
முஸ்லீம் மாணவன் அன்று எதற்காக அங்கு கொண்டுவரப்பட்டான் என்கிற காரணத்தை விளக்கிவிட்டு இப்பதிவினைத் தொடர்கிறேன். சிங்கள மாணவர்களின் இனவாதமும் காட்டிக்கொடுப்பும் தலைவிரித்தாடிய அன்றைய நாளுக்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர்தான் ஆனையிறவு இராணுவ முகாமை புலிகள் வெற்றிகொண்டிருந்தார்கள். இக்காலத்தில் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் ஆனையிறவிற்கான வெற்றிவிழா என்கிற சந்தேகக் கண்ணோட்டத்திலேயே பல்கலைக்கழக மாணவர்களும் பெரும்பாலான சிங்கள விரிவுரையாளர்களும் பார்த்து வந்தார்கள். விரிவுரையாளர்களில் பி ஏ டி சில்வா எனப்படும் எந்திரவியல்த்துறைப் பேராசிரியர் குறிப்பிடும்படியானவர். புகழ்பெற்ற சிங்கள இனவாதியாக கருதப்பட்ட இவரது வகுப்புகளில் ஆனையிறவு தளத் தோல்வியைப் பற்றி இவர் அதிகம் பேசுவார். பொறியியல்த் துறையில் படிக்கும் தமிழ் மாணவர்களே பிரபாகரனுக்கு உதவுவதாகவும் அவர் வெளிப்படையாகவே சில வகுப்புகளில் கூறியிருந்தார். இவ்வாறு ஆனையிறவுப் படைத்தளத் தோல்வியின் பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கெதிரான சிங்களவர்களின் எதிர்ப்புணர்வு அதிகரித்துக் காணப்பட்டதுடன் எமது அனைத்து நடவடிக்கைகளும் மிகுந்த சந்தேகத்துடன் அவர்களால் நோக்கப்பட்டன. இதனால் கூட்டமாக அமர்ந்து பேசுவதையோ, பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மத்தியில் தமிழில் உரையாடுவதையோ, பேரூந்துகளில் பயணிக்கும்போது தமிழில் உரையாடுவதையோ தவிர்க்கத் தொடங்கினோம். எம்மில் எவரது பிறந்த நாளின்போதும் மலிபன் சொக்கலேட் கிறீம் பிஸ்கெட்டும், ஐஸ் கீறீமும் கொண்டு பிறந்தநாளைச் சிறப்பிப்பது என்பது எமது வழக்கங்களில் ஒன்று. இவ்வாறான பிறந்தநாள் நிகழ்வுகள் பெரும்பாலும் பல்கலைக்கழக மைதானத்தில் இரவுவேளைகளில் நடக்கும். சிலவேளை பியர்ப் போத்தல்களும் அங்கு பரிமாறப்படும். ஆனால் அவ்வாறான கொண்டாட்டங்கள் கூட அக்காலத்தில் முற்றாக நிறுத்தப்பட்டுப் போனது. ஆனால், ஆனையிறவு போர் முடிந்து இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சிங்களவர்கள் ஓரளவிற்கு ஆறுதலடைந்திருப்பார்கள், மனதைத் தேற்றிக்கொண்டிருப்பார்கள் என்கிற நப்பாசையில் அந்த முஸ்லீம் மாணவனும் இன்னும் சிலரும் அன்றிரவு பல்கலைக்கழக மைதானத்தில் தமது நண்பர்களில் ஒருவனின் பிறந்தநாளுக்காக மதுபான கேளிக்கை ஒன்றினை ஆரம்பித்திருக்கிறார்கள். வழமைபோல தான் கொண்டுவந்திருந்த போதைப்பொருளை அம்மாணவன் அருந்தியிருக்கிறான். போதை தலைக்கேற, சத்தமாக தமிழில் சினிமாப் பாடல் ஒன்றினை அவனும் கூடவிருந்த சிலரும் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் பாடிய சத்தம் அப்பகுதியில் நின்றிருந்த சிங்கள மாணவர்களுக்குக் கேட்கவே, தமிழ் மாணவர்கள் ஆனையிறவு வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்று அவர்கள் எண்ணிவிட்டார்கள். கூடவே அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடி அருகில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தமது மதிப்பிற்குரிய பிரபல இனவாதி சி வி குணரத்ண இறந்த துயரமும் சேர்ந்துவிட, கும்பலாகச் சேர்ந்து மைதானம் நோக்கி வெறியுடன் ஓடி வந்திருக்கிறது சிங்கள மாணவர் கூட்டம். பாரிய கூட்டமொன்று தம்மை நோக்கி கத்தியபடி, கைகளில் பொல்லுகளுடன் ஓடிவருவதைக் கண்ட முஸ்லீம் மாணவனும் ஏனைய தமிழ் மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடத் தொடங்கியிருக்கிறார்கள். தம்மைக் கண்டு ஓடுவது தமிழ் மாணவர்கள்தான் என்றும், அவர்கள் அங்கு ஈடுபட்டது ஆனையிறவு வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில்த்தான் என்றும் நம்பிய துரத்திவந்த சிங்கள மாணவர் கூட்டம், அவர்களை மடக்கிப் பிடித்துக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. தாக்கியபடியே, "உங்களின் பல்கலைக்கழக அடையாள அட்டைகளைக் காட்டுங்கள்" என்று கேட்கவும், முஸ்லீம் மாணவனிடம் அதற்கான பதிவுகள் இருக்கவில்லை. ஏனென்றால் அவன் இரகசியமாகவே பல்கலைக் கழக விடுதியில் தரித்திருந்து படித்துவந்தான். சுமார் இரு வருடங்களுக்கு முன்னரே அவனது பல்கலைக்கழக அடையாள அட்டை முற்றுப்பெற்றுவிட்டது. ஆகவே, இவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவன் இல்லை என்று கருதிய சிங்கள மாணவர் கூட்டம், "நீ யார், ஏன் இங்கு வந்தாய்? எதற்காக களியாட்டம் நடத்துகிறாய்? சி வி குணரத்ணவைக் கொன்றது நீதானே?" என்று கேட்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அடியின் அகோரம் தாங்காது கதறிய முஸ்லீம் மாணவன், தப்பித்துக்கொள்வதற்காக, தாம் ஆனையிறவு வெற்றிக் கொண்டாட்டத்தையே நடத்தினோம் என்றும், சி வி குணரத்ணவைக் கொன்றது தாங்கள்தான் என்றும் கூறியிருக்கிறான். இதனையடுத்து உடனடியாக மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்ட சிங்கள மாணவர் கூட்டம், அமைச்சர் சி வி குணரதணவைக் கொலை செய்த புலிகளை, பல்கலைக்கழகத்தில் ஒளித்திருந்தவேளை பிடித்துவைத்திருக்கிறோம், உடனேயே வாருங்கள் என்று கூறியிருக்கிறது. அதற்குப் பின்னர் நடந்தவையே நான் மேலே விபரித்தது.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
குறைந்தது 60 தமிழ் மாணவர்கள் வரையில் அந்த முஸ்லீம் மாணவனால் அடையாளம் காணப்பட்டோம். வெகு சில தமிழ் மாணவர்களே அந்த அடையாள அணிவகுப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். அடையாளம் காணப்பட்ட எம்மை கட்டுப்பாட்டு அறையினுள்ளிருந்து வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலீஸ் வாகனங்களுக்குள் ஏற்றுவதற்காக பொலீஸார் இழுத்து வந்தபொழுது அங்கு சுற்றியிருந்த சிங்கள மாணவர்களும் பொதுமக்களும் வெற்றிக்களிப்பில் அகமகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள். கட்டுப்பாட்டு அறையினுள் நடந்தது நாம் புலிகளா இல்லையா என்கிற விசாரணை என்றும், எம்மை பொலீஸார் வாகனங்களில் ஏற்றியதன் மூலம் நாம் புலிகள் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் எம் முன்னாலேயே பேசினார்கள். அறுபது புலிகளைக் கைதுசெய்துவிட்ட மகிழ்ச்சியும் , "இவ்வளவு நாளும் எமக்குத் தெரியாமல் இத்தனை புலிகளும் இங்கு கல்விபயின்று வந்திருக்கிறார்களே?" என்கிற எரிச்சலும் ஒன்றுசேர அவர்கள் ஆத்திரம் பொங்கக் கூச்சலிட்டார்கள். நாம் மெதுமெதுவாக பொலீஸ் வாகனங்களில் ஏறத் தொடங்கினோம். பல்கலைக்கழகத்தில் இருந்து மொறட்டுவைப் பொலீஸ் நிலையம் செல்லும் வழியில் எனக்கருகில் இருந்த சக தமிழ் மாணவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி, எங்கே வைத்து, யார் உங்களைப் பிடித்து வந்தார்கள் என்கிற கேள்விகளும், விடைகளும் எமக்கிடையே பரிமாறப்பட்டன. கூடவே முஸ்லீம் மாணவன் எப்படி இதற்குள் சிக்கினான், அவனுக்கு என்ன நடந்தது? அவன் எதற்காக அடையாளம் காட்டும்படி வற்புறுத்தப்பட்டான்? என்கிற எனது கேள்விகளுக்கும் அந்தச் சிறிய பயணத்தில் விடை கிடைத்தது.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
காவலர்களின் கட்டுப்பாட்டு அறையினுள், மொறட்டுவை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, சில பொலீஸார், பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பல சிங்கள மாணவர்கள், குற்றவாளிகளைப்போல் இழுத்துவரப்பட்ட பல தமிழ் மாணவர்கள் மற்றும் ஒற்றை முஸ்லீம் மாணவன் ஆகியோர் அப்போது நின்றிருந்தோம். அந்த முஸ்லீம் மாணவன் பற்றிக் கூறவேண்டும். எமக்கு ஓரிரு வயது அதிகமாக இருக்கலாம். புத்தளத்தைச் சேர்ந்தவன். சுரங்கப் பொறியியல்த் துறையில் படித்துக்கொண்டிருப்பவன். இறுதியாண்டுப் பரீட்சைகளில் கடந்த இரு வருடங்களில் தேறாது போனதால் பல்கலைக் கழகத்தில் சில தமிழ் மாணவர்களுடன் கூடத் தங்கிப் படித்துக்கொண்டிருப்பவன். ஆனால் நான் அவனுடன் ஒருமுறையேனும் பேசியது கிடையாது, தேவையும் இருக்கவில்லை. போதைப்பாவனைக்கு அடிமையானவன் என்று அறியப்பட்ட அவனிடம் இருந்து ஒருசில தமிழ் மாணவர்களைத் தவிர பெரும்பாலான தமிழ் மாணவர்கள் விலகியே இருந்தார்கள். அந்த முஸ்லீம் மாணவன், பொறுப்பதிகாரி பீரிஸின் முன்னால் அச்சத்துடன் நடுங்கியபடி நின்றிருந்தான். அவன் எதற்காக அங்கு வந்தான், ஏன் விசாரிக்கப்படுகிறான் என்கிற தெளிவு எமக்கு அப்போது இருக்கவில்லை. அவனது முகம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது. மேற்சட்டை முற்றாக கிழிக்கப்பட்டு உடலில் இரத்தக் காயங்கள். அவன் அழுதுகொண்டிருந்தது அந்த அறைமுழுதும் எதிரொலித்தது. அவன் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதன் பின்னர் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் அவன் எதற்காக இழுத்துவரப்பட்டிருக்கிறான் என்பதை எமக்குப் புரியவைத்தது. கும்பல் கும்பலாக அங்கு இழுத்துவரப்பட்ட தமிழ் மாணவர்களை ஒவ்வொருவராக அந்த முஸ்லீம் மாணவனின் முன்னால் வரச் செய்து, "இவனை உனக்குத் தெரியுமா?" என்று விசாரிக்கத் தொடங்கினான் பீரிஸ். முதலில் பலரைத் தெரியாது என்று அவன் கூறவே பீரிஸ் அவனைக் கடுமையாக அறையத் தொடங்கினான். அதன்பின்னர் அவன் தனக்கு முன்னால் நிறுத்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் தனக்குத் தெரியும் என்று கூறித் தலையாட்ட ஆரம்பித்தான். எனது முறை வந்தது. என்னைத் தெரியாது என்றே சொல்வான் என்று நான் எதிர்பார்த்திருக்க, எனது முகத்தை நேரே பார்த்துவிட்டு, "இவனையும் எனக்குத் தெரியும்" என்று சிங்களத்தில் பீரிஸைப் பார்த்து அவன் கூறவும், "என்னை உனக்கு எப்படித் தெரியும், நான் உன்னுடன் பேசியதுகூடக் கிடையாதே?" என்று அவனைப் பார்த்துக் கேட்டேன். இதனைக் கேட்டதும் பீரிஸ் என்னை நோக்கி அடிக்க வந்ததுடன் சிங்களத்தில் "கட்ட வாபங் கரியா (வாயை மூடுடா....)" என்று கத்திக்கொண்டே ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தமிழ் மாணவர்கள் நின்ற பகுதி நோக்கித் தள்ளிவிட்டான். ஒருபுறம் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டான் என்கிற கோபம் வந்தபோதிலும்கூட, மறுபுறம், நான் மட்டுமல்ல, இன்னும் பல தமிழ் மாணவர்களும் என்னுடன் அகப்பட்டிருக்கிறார்கள் என்கிற நிம்மதி எனக்கு ஏற்பட்டது, ஆகவே மெளனமாக அங்கு நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டேன்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
பல்கலைக்கழக வாயிலை நாம் அடைந்தபோது எம்மை அச்சம் பற்றிக்கொண்டது. வாயிலின் உள்ளே அமைந்திருந்த வீதியில் பொலீஸாரின் இரு வாகனங்கள் நின்றிருந்தன. அப்பகுதியெங்கும் சிங்கள மாணவர்களும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி அமைந்திருந்த குடியிருப்புக்களைச் சேர்ந்த சிங்கள மக்களும் சூழ்ந்திருந்தார்கள். குறைந்தது 200 அல்லது 300 பேராவது இருக்கலாம். எம்மைக் கண்டவுடன் அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். சிங்களத்தில் வைய்யத் தொடங்கினார்கள். "பறத் தமிழர்கள்", "புலிப் பயங்கரவாதிகள்" என்று சிங்கள தூசண அடைமொழிகளுடன் அவர்களின் சொற்கள் வந்து வீழ்ந்தன. அவர்களை நோக்கிப் பார்க்கும் திராணி எமக்கு இருக்கவில்லை. பார்த்தால் ஏதாவது செய்வார்கள் என்கிற அச்சம். ஆகவே எம்மை இழுத்துச் சென்ற சிங்கள மாணவர்களின் பின்னால், தலைகுனிந்தபடி அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். எம்மை இழுத்துச் சென்றவர்கள் பல்கலைக்கழக வாயிலில் அமைந்திருந்த காவலாளர்களின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றார்கள். அறையினுள்ளே இன்னும் பல தமிழ் மாணவர்கள். பலர் வெறும் சறம் மாத்திரம் அணிந்திருந்தார்கள். தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி இழுத்து வந்திருக்கிறார்கள். இறுதியாண்டு, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு என்று பல தரங்களில் படித்துக்கொண்டிருந்த வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். எல்லோரது முகத்திலும் "இனி என்ன நடக்கப்போகிறதோ" என்கிற அச்சம் குடிகொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையின் மத்தியில் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தின் பிரதான பொலீஸ் பொறுப்பதிகாரி (ஓ. ஐ.சி), பீரிஸ் கோபம் கொப்பளிக்க, சிவந்த கண்களுடன் நின்றுகொண்டு சிங்களத்தில் கத்திக்கொண்டிருந்தான். ஏற்கனவே அச்சத்தின் உறைந்துபோன எங்களுக்கு அவன் கூறுவதில் முழுவதையும் கிரகித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. எங்களை சிங்கள மாணவர்கள் உள்ளே இழுத்து வருவதைக் கண்டதும், அந்தச் சிங்கள மாணவர்களிடம், "முங் கெளத? (இவர்கள் யார்?)" என்று கேட்டான். "முங் தெமள, கம்பஸ்ஸெக்கே பிட்டிப்பஸ்ஸே இந்தலா அள்ளங் ஆவா (இவர்கள் தமிழர்கள், பல்கலைக்கழகத்தின் பின்னாலிருந்து பிடித்து வந்தோம்)" என்று அந்த மாணவன் பதிலளித்தான்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
நாம் மண்டப வாயிலை அடைந்தபோது, சத்தமாகக் கூக்குரலிட்டபடி வந்த கூட்டமும் அப்பகுதியினை அடைந்திருந்தது. சுமார் 40 அல்லது 50 பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த முகங்களில் பெரும்பாலானவர்களை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் என்னுடன் கூடவே கல்விகற்கும் இறுதியாண்டின் சிங்கள மாணவர்கள். அவர்கள் அனைவரது கைகளிலும் கட்டில்ச் சட்டங்கள், பொல்லுகள், கதிரைகளின் கால்கள் என்று ஏதாவதொரு ஆயுதம் காணப்பட்டது. முன்னால் வந்தவன் காலியைச் சேர்ந்தவன். மின்னியல்க் கற்கை நெறியில் பயின்றுவருபவன். பல்கலைக்கழகத்தில் நான் இருந்த நான்கரை ஆண்டுகளில் என்னுடன் பலமுறை பேசியிருக்கிறான். மிகவும் பரீட்சயமானவன். ஆகவே, என்னதான் நடக்கிறது என்று அறிய அவனுடன் பேச்சுக் கொடுத்தேன். "என்ன நடக்கிறது? ஏன் கைகளில் பொல்லுகளுடன் திரிகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்" என்று சிங்களத்தில் சகஜமாகக் கேட்டேன். அவனது முகம் கோபத்தில் அமிழ்ந்திருந்தது தெரிந்தது. எனது கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் மன நிலையில் அவன் இருக்கவில்லை. எனது கையை இறுகப் பிடித்துக்கொண்ட அவன், தன்னுடன் வந்திருப்பவர்களை நோக்கி "அப்பகுதியில் வேறு யாரும் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்களா என்று பார்" என்று சிங்களத்தில் கத்தினான். அப்போதுதான் அவனும் அவனது தோழர்களும் வந்திருப்பது எம்மைத் தேடித்தான் என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும் "எதற்காக எனது கையைப் பிடித்திருக்கிறாய், எங்கே என்னை அழைத்துச் செல்கிறாய்?" என்று என்னை இழுத்துக்கொண்டு சென்ற அவனைப் பார்த்து மறுபடியும் கேட்டேன். "ஒன்றுமில்லை, பல்கலைக்கழகத்தின் முன்றலுக்கு எங்களுடன் வா, உன்னையும் உனது தமிழ் நண்பர்களையும் விசாரிக்க வேண்டும்" என்று ஒரு குற்றவாளியுடன் பேசுவது போலக் கூறினான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "மச்சான், என்னைத் தெரியவில்லையா உனக்கு?" என்று நான் அதிர்ச்சியுடன் கேடபோது, "தெரியாது" எனுமாப்போல் தலையை ஆட்டிவிட்டு என்னை தொடர்ந்தும் இழுத்துக்கொண்டு செல்ல, அவனின் நண்பர்களில் சிலர் இன்னும் நான்கு அல்லது ஐந்து தமிழ் மாணவர்களை இழுத்து வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் அவர்களுடன் கூடவே படித்துவந்த எம்மை, ஏதோ குற்றவாளிகளைப் பிடித்து விட்டதுபோல் அவர்கள் நடந்துகொண்டது எமக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கி விட்டது. என்னதான் ஒன்றாகப் படித்து, சிங்களத்தில் எவ்வளவுதான் பேசினாலும் இனவாதம் என்று வரும்போது எவருமே விதிவிலக்கல்ல என்பதும், தமிழர்கள் எல்லோருமே எதிரிகள்தான் என்று நடந்துகொள்வதும் அவர்களின் இயல்பு என்று எனக்குப் புரிந்தது. நான் பேசும் எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்கப்போவதில்லை. என்னை சக மனிதனாக நடத்தக்கூடிய மனநிலையிலும் அவனோ அவனுடன் கூடவிருந்தோரோ அன்று இருக்கவில்லை. புலிகளை உயிருடன் பிடித்துவிட்டோம் என்கிற பெருமிதத்தோடு பல்கலை வாயிலை நோக்கி எம்மை இழுத்துக்கொண்டு சென்றது எம்முடன் கூடவே படித்த சிங்கள மாணவர் கூட்டம்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
பாரபட்சமற்ற இனவாதம் நாடு : சிறிலங்கா காலம் : ஆனி, 2000 பல்கலைக்கழகத்தில் இறுதிப் பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள். பல்கலைக்கழக விடுதியில் இருந்து சுமார் 5 நிமிடத்தில் நடந்து செல்லக்கூடிய, பல்கலைக்கழக குடிசார் (சிவில்) பீடத்தின் மண்டபங்களின் விறாந்தைகளில் தமிழ் மாணவர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ இருந்து படித்துக்கொண்டிருந்தோம். சிங்கள மாணவர்கள் அவ்வேளைகளில் அப்பகுதிக்கு வருவது மிகவும் குறைவு, காரணம் எமக்குத் தெரியாது. இரவு பத்து மணியை கடந்திருந்தது. அன்று மாலை சொய்சாபுர தொடர்மாடியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும், சந்திரிக்கா அம்மையாரின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்தவரும், பிரபல இனவாதியுமான சி வி குணரத்ண கொல்லப்பட்டிருந்தது எமக்குத் தெரியும். வெள்ளவத்தைப் பகுதிக்கு இரவு உணவு வாங்கிவரச் சென்றிருந்த ஒரு சில தமிழ் மாணவர்கள் இரவு நெடுநேரமாகியும் விடுதி திரும்பாதது எமக்கு சற்றுக் கவலையைத் தந்திருந்தது. ஆகவே இவைபற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு பழையபடி எமது பாடங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டோம். மிகவும் நிசப்தமான அந்த இரவு வேளையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு சத்தம் கேட்கத் தொடங்கியது. அது பலர் ஒன்றாக ஆத்திரப்பட்டுக் கத்திப் பேசும் சத்தம். அச்சத்தம் நேரம் ஆக ஆக, நாமிருந்த மண்டப விறாந்தை நோக்கி நகர்ந்து வருவதை நாம் உணர்ந்துகொண்டோம். எம்மில் சிலருக்கு ஆச்சரியம், இன்னும் சிலருக்கு அச்சம். என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட நாம் அமர்ந்திருந்த இருக்கைகளை விட்டெழுந்து மண்டப வாயிலை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உண்மை, ஆனால் தனியாரின் பணமும் முடக்கப்பட்டிருக்கிறது.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
ரஸ்ஸிய கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், புட்டினுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் என்று பலராலும் ஐரோப்பாவில் பல வங்கிகளில் பணமாகவும், ஆடம்பர கப்பல்கள், மாளிகைகள் போன்றவற்றி முதலீடாகவும் வைப்பிலிடப்பட்ட சுமார் 245 பில்லியன் யூரோக்களின் ஒரு பகுதியினை உக்ரேனின் செலவுகளுக்காகப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது. தனது பணத்தினை உக்ரேனுக்குக் கொடுத்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஸ்ஸியா அச்சுருத்தியிருக்கும் நேரத்திலும், போலந்து இந்த முடிவில் உறுதியாக இருப்பதுடன் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் இதுகுறித்து சாதகமான முடிவினை எடுக்கும்படி கேட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் உக்ரேன் ஜனாதிபதியின் வேண்டுகோள்களில் ஒன்றான ரஸ்ஸியப் பணத்தினை உக்ரேனுக்கு வழங்கும் கோரிக்கையினை ஐரோப்பிய நாடுகள் சாதகமான முறையில் பரிசீலிக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்பணத்தினை வெறுமனே ஆயுதங்களை வாங்குவதற்காக மட்டுமே பாவிப்பதுடன் நின்றுவிடாது ரஸ்ஸிய ஆக்கிரமிப்பினால் அழிக்கப்பட்டிருக்கும் உக்ரேனைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் பாவிப்பது சாலப்பொறுத்தமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
நேட்டொவில் இணைந்துகொள்ளும் தனது விருப்பத்தினை உக்ரேன் முழுவதுமாகக் கைவிட்டு விட்டது என்று நான் நினைக்கவில்லை. நடைபெற்றுவரும் பேச்சுக்களுக்கு உக்ரேனின் நேட்டோவில் இணையும் கோரிக்கை தடங்கலாக அமையும் என்பதாலேயே அது அடக்கி வாசிப்பதாக நினைக்கிறேன். மேலும் நடைபெற்று வரும் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நேட்டோவில் இணையும் தனது விருப்பினை உக்ரேன் கைவிடவேண்டும் என்று நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்தாலும், நேட்டோவிற்கு வெளியே இருந்துகொண்டு தனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கக்கூடிய ஏற்பாடுகளை நேட்டோ நடுகளிடமிருந்து அது பெற்றிருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் நாடொன்றின் மீது எதிரி நாடொன்று தாக்குதல் நடத்தும் வேளையில் ஏனைய அங்கத்துவ நாடுகள் அந்நாட்டினைப் பாதுகாக்க போரில் இறங்கும் எனும் சரத்துக்கு இணையான உத்தரவாதத்தினை நேட்டோவிற்கு வெளியில் இருந்து உக்ரேன் பெற்றுக்கொள்ளவிருக்கிறது. இது நேட்டோவில் இணையும் தனது விருப்பத்தினை உக்ரேன் முழுமையாகக் கைவிட்டு விட்டது என்பதற்கு மாறாக, சூழ்நிலைகளுக்கேற்ப தனது தந்திரங்களை உக்ரேன் மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும். இதைத்தவிரவும் உக்ரேனினை தற்போது நேட்டோவினுள் உள்வாங்குவதன் ஊடாக , ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் புட்டினுடன் நேரடியான மோதல் ஒன்றிற்குச் செல்வதையும் சில நேட்டோ அங்கத்துவ நாடுகள் தற்போதைக்கு விரும்பவில்லை. ஆகவே தன்னை நோக்கி இதுவரையில் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பினை எந்த நாடும் முன்வைக்காத நிலையிலும், மாறிவரும் உலக சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டுமே உக்ரேன் நேட்டோவில் இணையும் தனது விருப்பினை தற்காலிகமாக மடித்து வைத்திருக்கிறது. இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம் என்னவென்றால், நேட்டோவில் இணையும் தனது விருப்பினை உக்ரேன் தனது அரசியலமைப்புச் சட்டத்தினுள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது என்பதுடன், அச்சரத்து இன்னமும் உயிர்ப்புடனேயே இருக்கிறது. இதைவிடவும் உக்ரேனின் அரசியல்வாதிகள் இன்றுவரை உக்ரேன் நேட்டொவில் இணைவதையே தாம் விரும்புவதாகக் கூறிவருகின்றனர். ஆக, நேட்டோவில் இணையும் தமது கோரிக்கையினைத் தற்போதைக்குக் கிடப்பில் போட்டாலும் நீண்டகால அடிப்படியில் உக்ரேன் நிச்சயமாக நேட்டோவில் சேரும் அல்லது உள்வாங்கப்படும் என்பது தவிர்க்க முடியாதது. இது இன்னுமொரு 10 வருடங்களிலோ அல்லது நாளை ரஸ்ஸியாவின் சர்வாதிகாரி புட்டினின் மரணத்துடன் நடந்தாலுமோ ஆச்சரியப்படுதற்கில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்குக் கிழக்கில் மலையகத் தமிழர்கள் வந்து குடியமர்வது நண்மையான விடயம். இது எமது இனச்செறிவை எமது தாயகத்தில் அதிகரிக்கும். மலையகத்தில் அவர்கள் வாழ்ந்தபோதிலும், எப்போதுமே சிங்களவர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்கிற அச்சமும், அடிக்கொருதடவை சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இனவன்முறைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதும் நடக்கிறது. ஆகவே அவர்கள் வடக்குக் கிழக்கில் குடியேறுவது அவர்களுக்குப் பாதுகாப்பானது. அடுத்ததாக, வடக்குக் கிழக்கில் காணப்படும் பெருமளவிலான அரச காணிகளில் தொல்லியல் திணைக்களமும், வன ஜீவராசித் திணைக்களமும் கட்டம்போட்டு அபகரித்துவரும் நிலையில், இப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் குடியேறுவது என்பது சிங்கள பெளத்த மயமாக்கலினைத் தடுக்க உதவும். 80 களின் ஆரம்பகாலத்தில் இது நடந்திருக்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல மலையகத் தமிழர்களும், யாழ்ப்பாணத் தமிழர்களும் குடியேறினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்போதும் இது நடப்பதென்பது எமக்கு நண்மையே. நிச்சயமாக நடக்க வேண்டும்.
-
வல்வை லிங்கம் started following ரஞ்சித்
-
சாத்தானின் படை புத்தகம் வேண்டி
இந்தப் பதிவில் 880 பக்கங்கள் இருக்கின்றன. தரவிறக்கமும் செய்யலாம்.
-
சாத்தானின் படை புத்தகம் வேண்டி
Satanic Force Collation Of IPKF Related News Affidavits Etc : LTTE : Free Download, Borrow, and Streaming : Internet Archive
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
குருவானவர் சந்திரா பெர்ணான்டோ அவர்களின் படுகொலை காலம் : ஆனி, 1988 இடம் : மட்டக்களப்பு , மரியண்ணை பேராலயம் நான் மட்டக்களப்பில் தங்கி வசிக்கத் தொடங்கியிருந்த காலம். மரியாள் ஆண்கள் விடுதியில் இன்னும் 40 மாணவர்களுடன் தங்கி பாடசாலை சென்று வந்தேன். விடுதி கத்தோலிக்க பாதிரிகளால் நடத்தப்பட்டு வந்தமையினால் பெரும்பாலான மாணவர்கள் கத்தோலிக்கர்கள், ஓரிருவரைத் தவிர. ஆகவே ஒவ்வொரு காலையும் தவறாது 6 மணிக்கு அருகில் அமைந்திருந்த புனித மரியண்ணை தேவாலயத்திற்கு காலைத் திருப்பலிக்காகச் செல்வது எமது நாளாந்தக் கடமைகளில் முதலாவது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் திருப்பலியினை ஒவ்வொரு நாளும் அத்தேவாலயத்தின் பங்குத் தந்தையான, குருவானவர் சந்திரா பெர்ணான்டோவே நடத்துவார். அவரது கனிவான முகவும், மென்மையான குரலும், அவர் திருப்பலியினை நடத்திச் செல்லும் விதமும் ஈர்ப்பினை உருவாக்கும். நாம் மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் என்பதை அறிந்த அவர் எம்முடன் சிலவேளைகளில் பேசுவதுண்டு. எமது விடுதி நடத்துனரும், குருவானவர் சந்திராவும் நண்பர்கள் ஆதலால் திருப்பலி முடிந்தபின்னர் சிலவேளைகளில் அவர்கள் பேசும்வரை நாம் காத்திருப்போம். வார விடுமுறை நாளான சனி காலையில் அவரது திருப்பலி முடிந்தவுடன், சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெறும் கத்தோலிக்க வகுப்புகளுக்கு நாம் செல்வோம். அங்கு தவறாது குருவானவர் சந்திராவும் கலந்துகொள்வார். சிலவேளைகளில் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களுடன் பேசுவதும் நடக்கும். இவ்வாறு மாணவர்களாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர் சந்திரா அவர்கள். புலிகள் தொடர்பாக மென்மையான போக்கினைக் கொண்டிருந்தவர் என்று அறியப்பட்ட சந்திரா அவர்கள், அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தவர். மட்டக்களப்பில் இயங்கிய பிரஜைகள் குழுவின் தலைவராகவும் அக்காலத்தில் பணியாற்றியவர். இராணுவத்தினராலும், துணைராணுவக் குழுவினராலும் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்களை மீட்கும் காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் மட்டகளப்பு வாழ் தமிழர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அவர் வலம்வந்தார். இவ்வாறான ஒரு நாள், ஆனி மாதம் 6 ஆம் திகதி மாலை வேளையில், விடுதி மாணவர்கள் சிலருடன் எமது விடுதிக்கு முன்னால் இருந்த வெற்றுக் காணியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். விடுதி நடத்துனரான ஸ்டீபன், ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை படிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். ஆகவே அவர் படிக்கும் வீரகேசரிப் பத்திரிக்கையினை வழக்கமாக போல் என்று அழைக்கப்படும் ஒரு மாணவனே மட்டக்களப்பு நகருக்குச் சென்று வாங்கிவருவான். அன்று வழமை போல போல் நகருக்கு பத்திரிக்கை வாங்கச் சென்றான்.சென்ற சிறிது நேரத்திலேயே அதிர்ச்சி மேலிட்டவனாக திரும்பி வந்தான். "பாதர் சந்திராவைச் சுட்டுப் போட்டாங்கள். கோயிலுக்குள்ள நிறைய ஆக்கள் நிக்கிறாங்கள்" என்று படபடக்கக் கூறினான். மரியாள் பேராலயம், எமது விடுதியில் இருந்து பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது. ஓடிச்சென்றால் இரு நிமிடங்களில் ஆலயத்தை அடைந்துவிட முடியும். ஆகவே அவன் கூறியவுடன் மைதானத்தில் நின்ற அனைவரும் தேவாலயம் நோக்கி ஓடினோம். தேவாலயம் பூட்டிக் கிடந்தது. ஆனால் அதன் அருகில் இருக்கும் குருவானவர் சந்திரா பெர்ணான்டோவின் அலுவலகம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு சனக்கூட்டத்தினுள் நுழைந்து, அவரது அறையினுள்ச் சென்றோம். எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை, நாம் மதிக்கும் ஒருவரை, இரத்த வெள்ளத்தில் நான் முதன் முதலாகப் பார்த்தது அங்கேதான். குருவானவர் தனது கதிரையில் அமர்ந்தபடி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடல் கதிரையில் இருந்து பின்புறமாகச் சரிந்திருக்க, நெற்றியின் அருகிலிருந்து குருதி வழிந்தோடி அவரது ஆசனம் இருந்த அறையின் பகுதியை நனைத்திருந்தது. அவர் சுடப்பட்டு வெகுநேரமாக இருக்கமுடியாது, ஏனென்றால் குருதி இன்னமும் காயாது அப்படியே கிடந்தது. அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை குருதியில் நனைந்திருக்க அவர் அங்கு கிடந்த காட்சி பார்த்த அனைவரையும் மிகுந்த துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்று நினைவில் இல்லை. அதிர்ச்சியும், பயமும் எம்மை ஆட்கொள்ள மெதுமெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதனை யார் செய்திருப்பார்கள் என்கிற கேள்வியே எம்மிடம் அன்று இருந்தது. குருவானவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கவென்று இருவர் வந்ததை தேவாலயத்தில் தோட்டவேலைகளில் ஈடுபட்டு வரும் ஒருவர் பார்த்திருக்கிறார். குருவானவருடன் வந்த இருவரும் முரண்பாட்டுடன் சத்தமாகப் பேசுவது கேட்டிருக்கிறது. அதன்பின்னரே அவர்கள் குருவானவின் நெற்றியில், மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள். மரியாள் பேராலயம் அமைந்திருந்த பகுதி இந்திய ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் அமைந்திருந்த ஒவ்வொரு இந்திய இராணுவ முகாமின் முன்னாலும் தவறாது தமிழ் துணை ராணுவக் குழுவினரின் பிரசன்னமும் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கும். குருவானவர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்தபின்னர் அவரைக் கொன்றது இந்திய ராணுவத்துடன் மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த புளோட் மற்றும் ஈ பி ஆர் எல் எப் துணை ராணுவக் குழுவினரே என்று பேசிக்கொண்டார்கள். குருவானவரைக் கொன்றவர்கள் மிக நிதானமாகவே அப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாம் அகப்பட்டுவிடுவோம் என்றோ, அருகில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமில் தடுக்கப்படுவோம் என்றோ அவர்கள் கலவரம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தினதும், துணை ராணுவக் குழுக்களினதும் மனிதவுரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்த குருவானவர் சந்திராவின் குரலை அடக்கவேண்டிய தேவை இந்திய இராணுவத்திற்கும் இருந்தமையினால், அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனேயே சந்திரா துணை ராணுவக் குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருவானவர் சந்திராவின் இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. மிகப்பெருந்திரளான மக்கள் மத வேறுபாடின்றி அதில் கலந்துகொண்டார்கள். நானும் அந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டேன்.