theeya

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  287
 • Joined

 • Last visited

Everything posted by theeya

 1. நல்ல பதிவு வாழ்த்துகள். தமிழில் உள்ள ஓர் எழுத்துச் சொற்கள் பற்றி தொல்காப்பியம் இப்படிச் சொல்கிறது. “ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே” (தொல். மொழி. 12) இங்கு மூன்று வகையாச் சொற்களில் ஒன்றாக ஓர் எழுத்துச் சொற்கள் பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் சொல்கிறார். மேலும் நன்னூல் விருத்தியுரையில்... உயிர்மவி லாறுந் தபநவி லைந்துங் கவசவி னாலும் யவ்வி லொன்றும் ஆகு நெடினொது வாங்குறி லிரண்டோ டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின. எ-னின், மேல் எழுத்துத் தனித்தும் தொடர்ந்தும் ஒரு மொழி ஆம் என்றார். அவற்றுள் ஓர் எழுத்து ஒரு மொழி இவை என்பதூஉம் இத்துணைய என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உயிர்வருக்கத்தும் மவ்வருக்கத்தும் அவ்வாறும் தவ்வருக்கத்தும பவ்வருக்கத்தும் நவ்வருக்கத்தும் ஐவைந்தும் கவ்வருக்கத்தும் வவ்வருக்கத்தும் சவ்-வருக்கத்தும் நந்நான்கும் யவ்வருக்கத்து ஒன்றும் ஆகும் நெட்டெழுத்தான் ஆகிய மொழி நாற்பதும், நொவ்வும் துவ்வும் ஆகும் குற்றெழுத்தான் ஆகிய மொழி இரண்டுடனே ஓர் எழுத்தான் ஆகிய மொழி இந்நாற்பத்திரண்டும் சிறப்பினவாம் எ-று. உ-ம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ எனவும் மா, மீ, மூ, மே, மை, மோ எனவும் தா, தீ, தூ, தே, தை எனவும் பா, பூ, பே, பை, போ எனவும் நா, நீ, நே, நை, நோ எனவும் கா, கூ, கை, கோ எனவும் வா, வீ, வை, வௌ எனவும் சா, சீ, சே, சோ எனவும் யா எனவும் நொ, து எனவும் வரும். இவற்றுள் ஊ- இறைச்சி; ஓ- மதகுநீர் தாங்கும் பலகை; பே- நுரை; நே- அன்பு; சோ- அரண். நொ, து என்னும் குறில் இரண்டும் துன்பி, புசி என்னும் ஏவல். இவை, ‘சிறப்பின’ எனவே வகரவீற்றுச் சுட்டுப்பெயர்ப் பொருளை ஒப்புமையான் உணர்த்தி நிற்றலான் ஒள என்னும் ஓர் எழுத்து ஒரு மொழியும் சுட்டு, வினா, உவமைப்பொருளைத் தரும் இடைச்சொல் ஆதலால் குற்றுயிர் ஐந்தான் ஆய ஓர் எழுத்து ஒரு மொழிகளும் கௌ என்னும் உயிர்மெய்யான் ஆய ஓர் எழுத்து ஒரு மொழியும் இவை போல்வன பிறவும் சிறப்பு இல்லன எனக் கொள்க. எனக் கூறியுள்ளார். ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்‌தில் தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது எனக் கூறியுள்ளார். அவையாவன... ஆ - பசு ஈ - பறவை ஊ - இறைச்சி ஏ - கணை ஐ - தலைவன் ஓ - வியப்பு மா - பெரிய மீ - மேல் மூ - மூப்பு மே - மேன்மை மை - இருள் மோ - மோதுதல் தா - கொடு தீ - நெருப்பு தூ - தூய்மை தே - தெய்வம் தை - மாதம் சா - சாதல் சீ - இலக்குமி சே - எருது சோ - மதில் பா - பாட்டு பூ - மலர் பே - நுரை பை - பசுமை போ - செல் நா - நாக்கு நீ - முன்னால் இருப்பவர் நே - அருள் நை - இகழ்ச்சியை குறிப்பத்து நோ - வலி கா - பாதுகாப்பு கூ - வெல் கை - ஒப்பணை கோ - அரசன் வீ - மலர் வை - வைக்கோல் வௌ - கைப்பற்றுதல் யா - கட்டுதல் நொ - துன்பம் து - உணவு நன்றி -தியா-
 2. ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வலிகளை அவர்கள் பட்ட.. பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்களைப் பலர் பல கோணங்களில் இன்று படமாக்கி வருகின்றனர். அந்தவகையில் தனது வித்தியாசமான கேமிரா கோணங்கள் மூலம் புகழ் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் “இனம்” என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். “அசோகா”, “உறுமி” போன்ற ஒருசில படங்களை ஏற்கனவே இயக்கிப் புகழ் பெற்ற இவர் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் “Ceylon” எனவும் தமிழில் “இனம்” எனவும் இப் படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார். துப்பாக்கி, தளபதி, ரோஜா, உயிரே, இராவணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் அண்மையில் “இனம்” படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ரத்தத்தில் தோய்த்த கைவிரல் ரேகையில் இலங்கை வரைபடம் தெரிவது போல் இந்தப் ‘பர்ஸ்ட் லுக்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் பதிக்கப்பட்ட 8 சிறுவர்களை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. நடிகர் அரவிந்தசாமி அவர்களின் பின்னணிக் குரலுடன் இப் படத்துக்கான கதை விரிந்து செல்வது மேலும் சிறப்பான விடயமாகும். நடிகர் அரவிந்தசாமி அவர்களுடன் கருணாஸ், நடிகை சரிதா,ஹென் கருணாஸ் மற்றும் ஈழத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் பிறந்த அஜிதா, பிஜுனன், பிருஜன் ஆகிய மூன்று குழந்தை நச்சத்திரங்கள் ஆகியோரைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விஷால் இசை அமைக்க சந்தோஷ் சிவன் அவர்கள் இயக்கம் – கதை – ஒளிப்பதிவு ஆகியவற்றைத் திறம்படச் செய்துள்ளார். படத்தின் அனைத்து வெளிப்புறப் படப் பிடிப்புகளும் முடிந்த நிலையில் குரல் பதிவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இப் படக் குழுவினர் வரும் நவம்பரில் படத்தின் “ரெயிலரை”யும் அடுத்த வருட முற்பகுதியில் படத்தையும் உலகெங்கும் வெளியிடும் வகையில் கடுமையாக உழைத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். “இனம்” எம்மை நிமிர வைக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி தியா நன்றி http://www.panippookkal.com/ithazh/ceylon
 3. நன்றி மைத்திரேயி நான் மனிசி இல்லை மனிசன். உங்கள் கருத்துக்கு நன்றி தொடர்ந்து உங்களைப் போன்ற பலரின் ஆதரவுக்கு தலை வணங்குகிறேன். நன்றி இங்கு இன்னும் வசந்த காலம் வரலை ஒரே பனிப்பொழிவு அந்த ஏக்கம்தான்...உங்கள் பக்கம் எப்படி? நன்றி நண்பரே நன்றி, நிச்சயமாக என்றோ ஒருநாள் வசந்தம் வரும்.
 4. *******என்னுடைய இந்தச் சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/ இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. ***** விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…” நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் அப்படியே அமைதியாகி விட்டாள். இரண்டு மூன்று வாரங்களாக எமது தாய்நாட்டில் இருக்கும் உறவுகளின் புகைப்படங்கள், ஒளிப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர்களைத் தன் மனதில் ஞாபகப்படுத்திப் பத்திரப் படுத்திக் கொண்டாள். ஊருக்குப் போகும்போது எடுத்துச் செல்வதற்கென நிறைய விளையாட்டுப் பொருட்களையும் மற்றும் தன் விருப்பத்துக்குரிய சிலவற்றையும் பத்திரப் படுத்தித் தன்னுடனே வைத்திருந்தாள். விமானம் புறப்படுவதற்கு இன்னும் சில வினாடிகளே இருப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப் பட்டு ஆசனத்தில் அமர்வது இடுப்பு பட்டி பூட்டுவது தொடர்பான விவரணங்களை ஒளிப் படமாகக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். என் மனைவி சாளரத்தினூடாக வெளியில் பார்த்து; “அமெரிக்காவே நான் போய்வருகிறேன்…” என்பது போல் புன்னகைத்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாம் இங்கு வந்த போது அவளுக்கு இந்த மண் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது அவளுடைய பூர்வீகமே மினசோட்டா என்பது போல் உணரத் தலைப்பட்டிருந்தாள். இரவு ஆகியிருந்ததால் மின்னொளியில் விமான நிலையம் மிகவும் அழகாகத் தெரிந்தது. தன்னைச் சாளரத்தின் பக்கம் இருக்க விடவில்லை என்பதனால் அடம் பிடித்துச் சிறிது நேரம் மௌன விரதம் இருந்த என் மகள் இப்போது விரதத்தை முடித்துக் கொண்டு பேசத் தொடங்கினாள். “அப்பா யாழ்ப்பாணம் மினசோட்டா போல இருக்குமோ… அங்கைப் பெரிய கடைகள்… பெரிய பள்ளிக்கூடம்…எல்லாம் இருக்குமோ…” என்று தன் வழமையான நக்கீரர் பாணியைத் தொடர்ந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சென்னையில் இருந்து இங்கு வரும்போது “அப்பா அமெரிக்கா சென்னையைப் போல இருக்குமோ… அங்கைத் தியேட்டர்…பீச்…பார் இருக்குமோ…” என்று அவள் கேட்டவை இப்போது என் ஞாபகத்தில் எட்டி பார்த்தன. “இல்லையடா செல்லம் மினசோட்டா வேற யாழ்ப்பாணம் வேற ரண்டும் வித்தியாசமான வடிவாயிருக்கும் இருக்கும்” என்று கூறியவாறே அவளின் தலையை என் விரல்களால் கோதி விட்டேன். அப்படியே அவள் உறங்கிவிட்டாள். அபுதாபியில் அடுத்த விமானம் மாறுவதற்காக இறங்கியபோது அவள் யாழ்ப்பாணம் வந்துவிட்டது எனக் குதூகலித்துக் கொண்டாள். “இது யாழ்ப்பாணம் இல்லையடா செல்லம்…அபுதாபி. இன்னும் ஒரு நாளிலை யாழ்ப்பாணத்துக்குப் போயிடலாம்.” எனச் சமாதானம் சொன்னாள் என் மனைவி. நல்ல திரைப்படம் நல்ல சாப்பாடு என விமானப் பயணம் சலிப்பில்லாமல் போனதால் நேரம் போனதே தெரியவில்லை. கொழும்பை வந்தடைந்தபோது வியாழக்கிழமை அதிகாலை ஆகியிருந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியெங்கிலும் யுத்தத்தின் வடு ஆங்காங்கே எட்டி பார்த்தது. யுத்தம் முடிந்ததாகச் சொல்லப்பட்ட இந்த நான்கு வருடக் காலத்திலும் ஏதும் மாறுதல் நிகழ்ந்தது போல் என்னால் உணர முடியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தக் காலத்திலும் ஓர் சந்தோசம் இருந்தது. நாம் ஓடி உலாவிய மண்ணில் இப்போது நாகரிகமான மக்கள் கூட்டம் வாழ்ந்ததற்கான நிறைய ஆதாரங்கள் ஆங்காங்கே அழிக்கப்பட்டிருந்தன. மருதமும் முல்லையும் நெய்தலும் சார்ந்த எம் நிலத்தில் பாலைக்கான சாயல் ஆங்காங்கே தென்பட்டது. “அப்பா நாங்கள் திங்கள் இரவு வெளிக்கிட்டனாங்கள் புதன் தானே இஞ்சை வந்திருக்க வேணும் இண்டைக்கு வியாழன் எப்பிடி ஆனது… நீங்கள் ரண்டு நாளிலை போகலாமெண்டு பொய் சொல்லிப் போட்டிங்கள் என்ன” என்று என் மகள் கேட்டாள் “இல்லையடா செல்லக்குட்டி நாங்கள் அங்கையிருந்து திங்களிரவு வெளிக்கிட்டனாங்கள் அப்ப இஞ்சைச் செவ்வாய் கிழமை காலமை இப்ப வியாழக்கிழமை காலமை ரண்டு நாள் சரிதானேடா செல்லம்…. அமெரிக்காவுக்கும் இஞ்சத்தைக்கும் இடையிலை அரை நாள் வித்தியாசம் அங்கை இரவு எண்டால் இஞ்சைப் பகல்… இப்ப அமெரிக்காவிலை புதன் இரவு இஞ்சை வியாழன் காலமை” “அதெப்பிடி… போங்கப்பா நீங்கள் பொய் சொல்லுறீங்கள்….”என்றபடி சலித்துக் கொண்டாள். அவளுக்கு அகல-நெடுங்கோடு பற்றி படிப்பிக்கும் ஆற்றல் எனக்குமில்லை சொன்னாலும் புரியும் வயது அவளுக்குமில்லை என்பதனால் நான் அவள் போக்கிலேயே விட்டுவிட்டேன். ஊருக்கு வந்த சில நாட்களிலேயே வெற்று கால்களுடன் மண்ணில் இறங்கி விளையாடப் பழகிக் கொண்டாள். கோழி, நாய், பூனை, ஆடு, மாடு என அனைத்தையும் ரசனையுடன் நல்ல நண்பர்களாக ஏற்று கொண்டிருந்தாள். அவளுக்குக் கரப்பான் பூச்சி மட்டும் இன்றுவரை நண்பராக மறுத்து விட்டது. இந்த மண்ணுக்குரிய வாழ்வை அவள் மிகவும் ரசிப்பதை அவளின் நடவடிக்கைகள் மூலம் உணர முடிந்து. அவளுக்குத் தமிழ் சரளமாகக் கதைக்கத் தெரியுமென்பதனால் சொந்தக்காரர்களுடன் அவளால் இயல்பாகப் பழக முடிந்தது. “உங்கன்ரை மகள் எப்பிடி இவ்வளவு வடிவாய்த் தமிழ் கதைக்கிறா…” எனப் பலர் என்னிடம் கேட்டனர். “நாம் பிறப்பினால் தமிழர் அதன் பின்தான் அமெரிக்கர்… தாய்மொழியைச் சொல்லித்தர ஆள் எதுக்கு வீடே போதும்…அவளுக்கு தமிழுடன் ஆங்கிலம் எழுதக் கதைக்கத் தெரியும் அமெரிக்காவில் ஆங்கிலத்துடன் மேலதிகமாக இன்னும் சில மொழி தெரிந்தால் அதுக்குத் தனி மரியாதை அது அவள் எதிர் காலத்துக்கும் நல்லது. அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் பல நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதனால் அவர்கள் ஆங்கிலத்துடன் தமது பூர்வீக நாட்டு மொழியையும் தெரிந்து வைத்திருக்க விரும்புகின்றனர். அதுபோல் என் மகளும் தன் தாய்மொழியைப் படிப்பதில் என்ன தவறு” என்றேன். அவர்கள் என்னை வியப்புடன் பார்த்தனர். இப்படியே வீடும் சொந்தமும் சுற்றமும் என நாட்கள் உருண்டோடின. மறுபடிக்கும் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆட்டுக் குட்டிக்கும் “வீசா” எடுக்கும் படி என் மகள் அடம்பிடித்தாள். ஆட்டுக் குட்டியையும் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் வீட்டின் பின்னே உள்ள புல் வெளியில் கட்டி வளர்க்கப் போவதாகவும் கூறினாள். ஊரை விட்டுப் பிரியும் போது அழுகையும் ஆர்ப்பாட்டமுமாகக் கிளம்ப வேண்டியதாயிற்று. என் மகள் தான் அங்கிருந்து கிளம்பவே மாட்டேன் என்று அடம்பிடித்து அழத் தொடங்கினாள். அவளுக்குக் கிராம வாழ்க்கை பிடித்துப்போய் விட்டதாக எண்ணத் தோன்றியது. ஒருவாறாக அவளைச் சமாளித்து அங்கிருந்து கிளம்பி அமெரிக்காவுக்கு வருவதே பெரும் பாடாகியிருந்தது. மறுநாளே மறுபடியும் வேலையில் இணைய வேண்டி இருந்தமையினால் வந்த களைப்பு தீர ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பிவிட்டேன். மாலையில் வீடு வந்தபோது மனைவி வழமைபோல் ஏதோ வேலையில் மூழ்கியிருந்தாள். மகள் சில புத்தகங்களை நிலத்தில் பரப்பி எதையோ பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று நானும் அவளுடன் அமர்ந்து… “இனி என் செல்லக்குட்டி எப்ப யாழ்ப்பாணம் போறது..” என்றேன். “போங்கப்பா நீங்கள் இப்பதானே போயிட்டு வந்தனாங்கள் நாளைக்குப் பள்ளிக்கூடம் அதை முதல்லை பாப்போம். யாழ்ப்பாணம் போறதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்ன…” என்றாள். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. “என் செல்லக் குட்டியே” என்று சொல்லியவாறு வாரியணைத்து ஒரு முத்தமிட்டேன். - தியா -
 5. நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக் கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள் ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ்சாயம் போக்கி மீண்டும் வெண்துகில் போர்த்திய படி நீட்டி நிமிர்ந்து நீளுறக்கம் கொண்டிருந்தது… வசந்தத்தின் வருகைக்காய்க் காத்திருந்து தோற்றுப்போன மரங்கள் மீண்டும் பனிப்பூக்கள் சுமந்த படி அணிவகுத்து நின்றன. அகதியாகிப் போன இரு சிறு குருவி பற்றிய நினைவில் மிதந்தபடி நான் மட்டும் தனியாக வெளிபார்த்து. ----- ----------- --------------- ------------------- --------------------------------- --------------------------- *****என்னுடைய இந்தக் கவிதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது.******
 6. உண்மைதான் கிருபன் தமிழகத் தமிழரை விடுவோம் இன்று ஈழத் தமிழர் பலரே எமது வரலாறு தெரியாமல் உள்ளனர். முதலில் எங்கள் பிள்ளைகளுக்கு எம் வரலாற்றை மொழியை சொல்லி கொடுக்க தயங்கக் கூடாது. நாம் எமது பணியை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் எம்மைவிட புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டு மொழிகளில் சிறந்தவர்கள் எம் பிள்ளைகள் அவர்களுக்கான படித்தவர்கள் மத்தியிலான ஊடாட்டங்களும் அந்தந்த நாடுகளில் எம்மைவிட அதிகம்.
 7. சரியாகச் சொன்னீர்கள்
 8. நன்றி புங்கையூரான் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்கள் கருத்துக்கு நன்றி வந்தியதேவன்
 9. இன்று எனக்கு துக்கமான நாளா மகிழ்ச்சியான நாளா என்று எதுவுமே புரியவில்லை... எனது நண்பர்களில் ஒருவர் இன்றுடன் ஓய்வுபெறப் போகிறார். அவருக்கு எழுபது வயதாகின்றது. ஆனால் ஓர் இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து சுபாவங்களும் நிறைந்த ஓர் அற்புதமான மனிதர் அவர். இளமையான வேகம்... துல்லியமான பார்வை வீச்சு... பரந்த அறிவு... கண்ணியமான நட்பு... இளமையான உணர்வுகள் அனைத்தும் ஒருங்கே கூடியவர்... அவர் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக அழகான பெண்களை "ஏஞ்சல்" என அழைப்பார்கள் ஆனால் அவரின் பெயர் "ஏஞ்சல்" . எமது ஓய்வறையில் நாம் என்றும் நால்வர்தான் ஒன்றாக இருப்பது வழக்கம் இன்றிலிருந்து அது மூவராகக் குறைகிறது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இன்னொருத்தர் எதித்திரியா நாட்டைச் சேர்ந்தவர். நல்ல அரசியல் ஞானம் படைத்த பேச்சாளர்கள் கூட அவருடன் வாதம் செய்தால் தோற்றுப்போவது நிச்சயம். அத்தனை உலக அரசியல் அறிவு படைத்தவர் அவர். மூன்றாமவர் ஒரு பெண் இவள் வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவள். நல்ல அழகான தோற்றம் உடையவள் போன வருடம் வரைக்கும் தனக்கு இரண்டு பிள்ளைகள் எனக் கூறிக் கொண்டிருந்தவள் திடீரென ஒருநாள் தனக்கு ஐந்து பிள்ளைகள் என்றாள். எமக்கு எதுவும் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது முதல் கணவனை அவள் விவாகரத்து செய்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் கூடிய மற்றொருவரை அவள் மணம் முடித்திருப்பதாக... கடைசியாக நான். என்னைப்பற்றிச் சொல்ல அவ்வளவாக ஒன்றும் இல்லை. அவர்கள் மூவருள்ளும் இளையவன் நான்... மற்றைய மூவருக்கும் தமக்கென மொழி , மதம், நாடு உள்ளது... எனக்கு மொழியுண்டு... மதமுண்டு... நாடு மட்டும் இல்லை. அவர்கள் மூவருடன் ஒப்பிடும் பொது சுயத்தை இழந்தவனாக என்னை நான் உணர்ந்தேன்... எங்கள் நண்பரை வழியனுப்புவதற்காக தொழிற்சாலை நிர்வாகம் பிரியாவிடை நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருந்தது. அதைவிட நாங்கள் ஒரு கேக்கை பிரத்தியேகமாக அவருக்கென வாங்கி வந்திருந்தோம். அதனை அவரிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த பின் அவருடனான கடைசி ஓய்வறைச் சந்திப்பைத் தொடர்ந்தோம்... அழகுராணிப் போட்டியில் தொடக்கி அரசியல் வரை நீண்டது... அழகுராணிப் போட்டி பற்றிய பேச்சின் போது மெக்சிக்கோ நண்பரின் பக்கம் கூடுதலான தகவல்கள் இருந்தது. பெண்கள் பற்றிய அவருடைய வர்ணிப்பும் பேச்சும் அவரை மெக்சிக்கன் என்பதை அடிக்கடி நினைவு படுத்தியது.... அரசியல் பற்றிய பேச்சின்போது மனிதர் அப்படியே அடங்கி விடுவார்... இப்போது இது எதித்திரிய நாட்டவரின் நேரம் போல அவர் பேசத் தொடங்குவார். தங்கள் விடுதலைப் போராட்டம் பற்றியும் தாங்கள் தனிநாடு கேட்டுப் போராடி வெற்றி பெற்றது பற்றியும் கதைகதையாகச் சொல்வார். 1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனமை தங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் திருப்பம் என்பதை அவர் அடிக்கடி சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. இடையிடையே எமது ஈழப் போராட்டத்துக்கும் வந்து போவார். உங்கள் போராட்டம் அநியாயமாகத் தோற்று விட்டது எனக் கூறிக் கவலைப்படுவார். தாங்கள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய போது நாட்டின் கடைசிக் குடிமகன் கூடப் போராடியதாக வியட்னாம்காரி சொன்னாள். தங்கள் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப் படமே தங்களுக்கான விடுதலையைப் பெற்றுத்தந்ததாக அவள் பெருமைப் படுவாள். ஒரு சிறுமி உடலில் எந்த உடையுமின்றி தெருவில் அம்மணமாக ஓடுவதாகவும் சில படை வீரர்கள் அவளைத் துரத்துவதாகவும் அமைந்த அந்தப் புகைப்படம் பற்றிய விவரணத்தை அவள் விவரிப்பாள். இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்தும் எங்களுக்கு விடிவு வரவில்லையே எட்டுக் கோடி மக்கள் கொண்ட எமக்கென உலகில் நாடொன்று இல்லையே என நான் அவரிடம் சொல்வேன்... எங்களுக்கான விடுதலைப் போரில் எண்ணற்ற குழந்தைகள் கர்ப்பிணிகள் என லச்சக் கணக்கில் எங்கள் மக்கள் கொல்லப்பட்ட கதைகளைச் சொல்வேன்... கடைசிக் கட்டப் போரின்போது மகன் முன் தாய்... தாய் முன் மகன்... மகள் முன் தந்தை... தந்தை முன் மகள்... என அனைவரும் நிர்வாணப் படுத்தப்பட்டு ஆட்சியாளர்களால் அடிமைப்படுத்தப்பட்ட துன்பியல் வரலாற்றை எடுத்துச் சொல்வேன்... இப்படியெல்லாமா நடக்கும் என்பதுபோல் அவர்கள் என்னையே பார்ப்பார்கள்... ஆனால்......... முடிவில் அவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்வேன் "உங்களைப் போல் என்றோ ஒருநாள் எனக்கும் ஒரு நாடு கிடைக்கும் அப்போதும் நாங்கள் இதேபோல் ஓய்வறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நானும் எனது நாடு பற்றிப் பெருமையாகச் சொல்வேன்'' என்பேன்.
 10. கவிதை நல்லாய்தான் இருக்கு.....
 11. அப்பிடியும் இருக்கலாம்
 12. காரில்தான் வழமையாக நான் வேலைக்கு போய் வருவது வழக்கம்… கடந்த ஒன்றரை வருடமாக ஒரு பிரபலமான தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். வழமையாக அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்கு கிளம்பிவிடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் காரில் போய்க்கொண்டிருந்தேன்… அது ஒரு அமெரிக்கத் தெரு என்பதனால் சந்திச் சமிக்ஞை விளக்குகள் தானாக ஒளிர்ந்து மூடும்... பராமரிப்பாளர்களோ காவலர்களோ யாரும் இருப்பதில்லை. அதிகாலையில் பனிப்பொழிவு கொஞ்சம் இருந்தமையால் நான் வழமைக்கு மாறாக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தேன். வழமையாக நான் போய்வரும் பாதை என்பதால் எனக்கு மேடு - பள்ளம் எங்கிருக்கும் என்பதெல்லாம் அத்துப்படி... இருப்பினும் பனிக்கால எச்சரிக்கையாக கொஞ்சம் மெதுவாகவே நான் காரைச் செலுத்தினேன். குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும் நான் பார்த்த அந்தச் சம்பவம் என்னை நிலைகுலைய வைத்தது. இது நடந்து ஒரு வருடம் கடந்து விட்டாலும் இன்னும் என் மனக்கண் முன் அது நிழலாடுகின்றது... இந்த இரண்டரை வருட அமெரிக்க வாழ்வில் நான் பல நிகழ்வுகளைச் சந்தித்திருந்தாலும் என்னை ஒருகணம் உறைய வைத்த வினோத நிகழ்வு அது... ஒருகணம் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை... என் கண்கள் இருட்டத் தொடங்கின. காரின் வேகம் படிப்படியாக குறைந்து அடங்கிப் போகும் நிலைக்கு வந்துவிட்டது... கை கால்கள் பதறத் தொடங்கின… சிறு வயதில் நான் பல கதைகள் கேள்விப் பட்டிருக்கிறேன். எனது அம்மா முதல் அம்மம்மா வரை பலர் பல கதைகள் சொல்லியிருக்கிறார்கள் அம்மம்மா பல முனிக் கதைகள்... பேய்க் கதைகள் சொல்லுவதில் கெட்டிக்காரி... ஒருதடவை தான் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வீடு திரும்பி வரும் பொழுது சாமம் தாண்டி விட்டதாகவும் தனக்கு யாரும் துணையில்லையே என கவலையுடன் நடந்து சென்ற போது தனக்கு முன்னால் ஒரு வயதானவர் ஊன்று தடியுடன் ஒரு விளக்குஒன்றை கையில் ஏந்தியபடி சென்றாராம்... தான் அவரின் பின்னே நடந்து சென்றபோது வீட்டுக்கு அருகில் வந்ததும் திடீரென அந்த உருவம் மறைந்து விட்டதாகவும் அது கடவுள் செயல் எனவும் ஒருதடவை சொன்னதாக ஞாபகம் இருக்கிறது. தேவகணத்தில் பிறந்தவர்களின் கண்ணுக்கு பேய்கள்... பூதங்கள்... தேவதைகளின் நடமாட்டம் தெரியும் எனவும் கிராமத்தில் பலர் கதைக்கக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு இவை பற்றிய நம்பிக்கை துளிகூட இல்லை. எதையும் நம்பாத நான் இன்றுவரை அந்தச் சம்பவத்தை மறக்க முடியாமல் தவிப்பது எதனால் என்பதுதான் புரியவில்லை.... நான் கிராமத்தில் இருந்தபோது பலதடவை ஆடு மேய்த்திருக்கிறேன்... எனக்கு பிடித்தமான விடையங்களில் அதுவும் ஒன்று. ஆட்டுக் குட்டியை தூக்கித் தோழில் போட்டுக்கொண்டு காடுகாடாகத் திரிந்திருக்கிறேன். நான் நல்ல “கவண்” வைத்திருந்தேன் நரிகளைக் கவண் கொண்டு விரட்டியிருக்கிறேன். குட்டியீன்ற ஆட்டுக்கு கஞ்சி காய்ச்சி பருகக் கொடுத்திருக்கிறேன்... கடும்பு பால் காய்ச்சி உண்டிருக்கிறேன்...ஆட்டுக்குட்டி முதல் தடவையாக கண்விழித்து உலகை பிரமிப்புடன் பார்ப்பதை ரசித்திருக்கிறேன்... வயலும் காடும் எனது தாய்நிலம்... அனேகமாக காட்டில் உள்ள மிருகங்கள் எப்படிப்பட்டவை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். கரடியிடம் ஒருதடவை யானையிடம் இன்னொரு தடவை என மாட்டுப்பட்டு ஓடித்தப்பியவன் நான்... கட்டெறும்பு முதல் காட்டெருமை வரை எனக்கு தெரியாத மிருகங்கள் இருப்பது கடினம். கீரியும் பாம்பும் போட்ட சண்டையை கண்ணெதிரே கண்டவன் நான்... இவை எல்லாம் என் ஊரில் நடந்தவை... ஆனால் இந்த நிகழ்வு இப்போது நினைத்தாலும் கண்முன் படமாக விரிகிறது. அதனைப் பேய் என்றும் சொல்ல முடியவில்லை.... பிசாசு.... தேவதை... அப்படி எதுவும் இருப்பதாகவும் நான் நம்பவில்லையே. அப்படியாயின் அது என்னவாக இருக்கும் கிட்டத்தட்ட ஒரு மனிதன் போலவும்... ஆடுபோலவும்... கரடிபோலவும் சிலசமயம் மூன்றும் கலந்த உருவம் போலவும் அது... கண்களில் அவ்வளவு ஒரு பிரகாசம் காரின் வெளிச்சத்துக்கு அது தன் முகத்தைத் திருப்பியபோது நான் அதிர்ந்து போனேன்... அதன் கண்களில் இருந்து எதோ ஒன்று என்னுள் தாக்கியது. ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதைக்கூட என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு மின்னல் பொழுதுதான்... அடுத்த கணமே அது வீதியைத் தாண்டி மறுகரைக்குச் சென்று மறைந்துவிட்டது. என்னை இயல்பு நிலைக்குத் திருப்பி ஒரு சீருக்குக் கொண்டுவந்த நான்... அன்றையநாள் வேலைக்கு போய்விட்டேன்... அன்றிலிருந்து இன்றுவரை அதே பாதையால் தான் வேலைக்கு போய்வருகிறேன்... மீண்டும் ஒரு முறையாவது நான் அதனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அதைத் தினமும் தேடுகிறேன்.... குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும் என்னையும் அறியாமல் என் கண்கள் அதைத் தேடியலைவதை என்னால் உணர முடிகின்றது... ஒரு வருடமாகியும் பார்க்க முடியாத ஒன்றை மீண்டும் என் வாழ்நாளில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை....
 13. மலையொத்த மனிதரெல்லாம் ஏதிலியாய்வாழ்விழந்து ஒருவர் பின் ஒருவராக சிறைப்பட நடந்தனர். சிறுமலைகள் கூடிநின்ற பூமியைப் புறங்கண்ட பின்னொரு நாளில் மலைக்காடுகள் ஒன்றுகூடி மலைகளை மெல்ல மெல்லத் தின்றுகொண்டிருந்தன. மக்களையும் மண்ணையும் நீண்ட மலைத் தொடர்கள் பிரித்துக் கூறு போட்டபோது சூரியன் மலை இடுக்கில் விழுந்து இறந்து போனான். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன. நிலவு தேய்ந்து தேய்ந்து மறைந்து போனது. இன்னும்.... மனிதர் மட்டும் ஏதிலியாய் இழந்தவற்றை நினைத்தபடி வான் பார்த்து............
 14. என் காதலுக்கு உயிரோட்டம் தந்தவளே ஒற்றை வார்த்தைச் சொல்லில் கட்டிப் போட்ட வித்தகியே... இந்த நாளில் உன் வாய் திறந்து நீ உரைத்த தித்திக்கும் செந்தமிழே இன்னும் என் செவியில் உன் நினைவுகளை மீட்டும் தாரகை மந்திரமாய்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியிலும் என் சிறந்த தோழியாய் நீ.... நீ என் இனிப்புப் பெட்டகம் அன்பான வார்த்தைகளின் சொந்தக்காரி கண்களில் வைரக்கல் பதித்த காதல் ஓவியம் நீ உன் செவ்விதழ் என்ற காதல் ரோஜாவால் என் இதயத்தில் பூச்செண்டு முடித்து வைத்தாய். உன் மென் விரல்கள் என்னைத் தொடும் போதெல்லாம் என் இதயம் மெல்லிய வெப்பத்தை உணர்கிறது. உண்மையில் நீ என் இரத்த ஓட்டமாக இருப்பதால் தான் நான் - நீ - 'நாம்' என்றானோம் போலும். நீ என் வாழ்க்கைக்கு பொருள் கொடுத்திருக்கிறாய் நானும் பதிலீடாக என் வாழ்நாள் முழுவதையும் உனக்கே தந்திருக்கிறேன் என் இதயம் கலவரத்தால் நிரப்பப் பட்டபோது ஒளி நிரப்பி புதுப்பித்தவளே என் இனிய தோழியே நம் ஆத்மாவை ஒன்று சேர்த்து நெருக்கம் தந்த இறைவனுக்கு நன்றி செய்ய நாம் இருவரும் நமக்கு கிடைத்த இரு செல்வங்களுடன் என்றும் காதலராக மகிழ்வுடன் நிறைவாக வாழ்ந்து காட்டுவோம்.
 15. மருதம் :- வயலும் வயல்சார்ந்த இடமும் எதுவும் விதைக்கப்படாத வயல்வெளிகள் யாரும் புதிதெடுக்காத தரிசுநிலங்களாக… கண்மூடித் திறப்பதற்குள் கற்சிலையாய் அமைந்துபோன மனிதர்கள் வாழ்தல் எப்படிக் கொடூரமானது? கரடுமுரடான பாதை போல் கடினமானதா என்ன? எதுவுமே புரிவதில்லை… கால் பதிக்க முடியாத சேற்று வயல்வெளிகள் கட்டாந்தரையாகிக் கண்ணீர் வடிக்கக் கண்டேன். ஆற்றுப்படுக்கைகளில் ஆங்காங்கே பிளவுகள்.. வெடிப்புகள். உடைப்பெடுத்துப் பாயும் வெற்றுக்குளங்களில் செத்துக் கிடந்தன நீர்க்காக்கைகள். குளக்கட்டின் மரநிழலில் சிலையாகச் சமைந்திருந்தார் பிள்ளையார்…
 16. ஒற்றை வார்த்தை வேலை முடித்து மாலை வேளையில் சாலை நெரிசலில் சிக்கித் தவித்து விரையும் வண்டியில் வீடு விரைந்து இருட்டும் பொழுதிலே கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து முத்தம் கொடுத்து ஆரத் தழுவி உச்சி மோர்ந்து உள்ளம் குளிர என் செல்லக் குழந்தை சொல்லி அழைக்கும் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை களைப்பும் அமுங்கிப் போகும்
 17. உண்மைதான் யாயினி உங்கள் பதிலுக்கு நன்றி
 18. உலகம் இப்போ ஒரு உருண்டை வீடு அதில் மனிதர் எல்லாம் -தினம் அலையும் வெறும் கூடு இயந்திரங்கள் மனிதராகி வேர்வை சிந்தாது உழைக்கலாம் மனிதரெல்லாம் ஒன்று கூடி இயந்திரமாய்ப் பிளைக்கலாம் காலம் போற போக்கில் நாளை கலியாணங்கள் நடக்கலாம் ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத தம்பதியர் கூடியே தத்துப் பிள்ளை தத்தெடுக்க இயந்திரங்கள் சமைக்கலாம் வீட்டுக் காவல் வேலைகென இயந்திரத்தில் நாய்களாய் தோட்டம் முதல் தொலைவு வரை ஓடியோடி உழைத்திட இயந்திரமாய் மனிதனை சந்தையிலும் வாங்கலாம் .
 19. கதை நன்றாக உள்ளது தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி மேலும் மெருகேற வாழ்த்துகிறேன்.
 20. நன்றி சபேசன் உங்கள் கருத்துக்கு நன்றி சும்மா ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்றுதான் அப்படி வைத்தேன் வேற ஒன்றுமில்லை.
 21. நன்றி யாயினி தொடர்ந்து பார்த்து கருத்துரைத்து வருகிறீர்கள் உங்கள் பதிலுக்கு நன்றி.
 22. நன்றியக்கா உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி தொடர்ந்து பார்த்துக் கருத்துக்களைச் சொல்லுங்கள் உங்கள் வலைத்தளம் நன்றாக உள்ளது.
 23. கதை நன்றாக உள்ளது. பேசாப்பொருளைப் பேசத் துணிந்த சபேசனுக்கு பாராட்டுகள்
 24. கவிதை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் சிறுகதைப் பகுதியில் ஏன் வந்தது என்பதுதான் புரியவில்லை.