-
Posts
5737 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
இந்த மோசமான சூழலை வைத்துச் சில விடயங்களுக்கு, குறிப்பாக அகதிகள் தொடர்பான தீர்மானங்களுக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் நகர்த்தப்படுகிறதோ தெரியவில்லை. அடுத்து ஆட்சி தீவிர வலதுகளிடம் போனாலும் ஆச்சரியப்படமுடியாது. யேர்மனியிலும் ஏ.எவ்.டி போன்ற தீவிரவலதுகளின் வளர்முகமும் வெளிநாட்டவருக்கு ஆபத்தானதே. போராட்டங்களை சனநாயகரீதியில் மேற்கொண்டு அரசை கேள்விக்குட்படுத்துவதைவிட்டு, இன்று அரசு போராட்டுத்தை நியாயமற்றது எனக் கூறவைத்துள்ளார்கள்.
-
குற்றச்செயல்கள் பல மடங்காக அதிகரிக்கின்றன - பொலிஸ்மா அதிபர் என எவரும் இல்லாத நிலை Published By: RAJEEBAN 04 JUL, 2023 | 01:06 PM இலங்கையில் பொலிஸ்மாஅதிபர் இன்னமும் நியமிக்கப்படாத சூழலில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. பட்டப்பகலில் துப்பாக்கிசூடு கொலைகள் போன்ற குற்றச்செயல்கள் நாட்டில் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் சட்டமொழுங்கை பேணவேண்டிய குற்றச்செயல்கள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொலிஸ் திணைக்களம் ஒருவார காலத்திற்கு மேல் பொலிஸ்மா அதிபர் இல்லாத நிலையில் இயங்குகின்றது. பொலிஸ்மா அதிபர் சிடிவிக்கிரமரட்ண ஜூன் 26ம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது - தகுதியான எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இலங்கையின் 36வது பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான பொருத்தமான பெயரை ஜனாதிபதி இன்னமும் அரசமைப்புபேரவைக்கு பரிந்துரை செய்யவில்லை. பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் காணப்படுவதும் இதற்கு காரணம். கடந்த சில மாதங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் இரகசிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஜனவரி மாதம் முதல் 40க்கும் அதிகமான துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன 25க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். குற்றங்களை குறைப்பதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்;ளனர் எனினும் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதல்கள் இன்றி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. புதியபொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படாதது பல நிர்வாக குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இலங்கையின் 35வது பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த சிடி விக்கிரமரட்ண இரண்டு தடவைகள் பதவி நீடிப்பை பெற்ற பின்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். அவர் 26ம் திகதிக்கு பின்னர் பணிக்கு சமூகமளிக்கவில்லை, இதன் காரணமாக பொலிஸ்திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஆவணங்களில் கைசாத்திடுவதற்கு எவரும் இல்லாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளன. குற்றச்செயல்கள் பல மடங்காக அதிகரிக்கின்றன - பொலிஸ்மா அதிபர் என எவரும் இல்லாத நிலை | Virakesari.lk
-
யாழ். புத்தூர் தாக்குதல் : தொடரும் கைதுகள் - ஒரே ஊரை சேர்ந்த 58 பேர் இதுவரை கைது ! 04 JUL, 2023 | 12:20 PM யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி 25 பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 25 பெண்களும் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் ஏனைய 06 ஆண்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அச்சுவேலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(2) மூவரை கைது செய்திருந்த நிலையில் திங்கட்கிழமை (03) 24 பேரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (03) வரையில் 58 பேரை கைது செய்துள்ளனர். புத்தூர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண்களின் படங்களை கணனி வரைகலை (கிராஃபிக்ஸ்) மூலம் ஆபாச படங்களாக மாற்றம் செய்து, அதனை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி இரவு ஊரில் உள்ள இரு இளைஞர்களே அவ்வாறு பெண்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர் என குற்றம் சாட்டி , அந்த இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். அத்துடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து உடைத்தும் , வீட்டின் முன் நின்ற வாகனங்களை அடித்து உடைத்து , அவற்றுக்கு தீ வைத்துள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை அங்கிருந்து மீட்டு , வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயன்ற போது , பொலிஸாருடன் முரண்பட்டு , பொலிஸார் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். அதில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் , நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதனை அடுத்து அங்கு கூடியிருந்த ஊரவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விட்டு , காயமடைந்த இரு இளைஞர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தொடர் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் யாழ். புத்தூர் தாக்குதல் : தொடரும் கைதுகள் - ஒரே ஊரை சேர்ந்த 58 பேர் இதுவரை கைது ! | Virakesari.lk
-
ஆக்கத்திற்குப் பாராட்டு, உறவுகளை ஒன்றிணைக்கும் பெரும் சக்தியாக குழந்தைகளேயெனில் மிகையன்று.
-
ஊடகங்களுக்கு செய்தி. உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்தோர் யாரென்றறியாத துயரத்துள் வெதும்பும் நிலை. இந்த அவலட்சணத்தில் ஐ.நாவும் மனித உரிமையும் என்று கதையளப்பு.
-
ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டி! Digital News Team ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை முன்னிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவரிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், அந்தத் தேர்தலில் பசில் ரபக்ஷ போட்டியிட்டால், அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், பசில் ராஜபக்ஷவும் அந்த விடயத்தை தற்போது பரிசீலித்து வருவதாகவும் அறியமுடிகிறது.இதன்படி, பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து தேசியப்பட்டியல் எம்பியாக பாராளுமன்றத்திற்கு வந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் . முன்னதாக, பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இருந்து பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட தனது தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, பசில் ராஜபக்ஷவுக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது. இந்த வருடம் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தால் ஜயந்த கடகொட தனது தேசியப்பட்டியல் எம்.பி ஆசனத்தை வழங்க தயாராக இருப்பதாகவும், அவர் தவிர மேலும் பல பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட மற்றும் பலம் வாய்ந்த உறுப்பினர்கள் கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் பல சுற்று விசேட கலந்துரையாடல்களை நடாத்தியதாகவும், இந்த விடயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அறியமுடிகிறது. . எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த விடயம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஒருவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமது கட்சி தற்போது இரு வேட்பாளர்களை பரிசீலித்து வருவதாகவும் அவர்களில் ஒருவர் பொருளாதாரம் தொடர்பில் நன்கு அறிந்தவர் எனவும் மற்றையவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கக் கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார். பேராசிரியரின் கருத்துப்படி, பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர் என்ற வகையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே இருக்கலாம் என, கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விடயம் தொடர்பில் கட்சியில் மேலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கமைய இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அறியமுடிகின்றது. mawbima Thinakkural.lk
-
உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா வக்னர் சதி? Published By: VISHNU 02 JUL, 2023 | 08:54 PM சுவிசிலிருந்து சண் தவராஜா ரஷ்யாவில் பெரும் பிரளயம் ஒன்று நடைபெற்று முடிந்திருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக தனியார் இராணுவக் குழுவான வக்னர் மேற்கொண்ட சதி 24 மணி நேர இடைவெளியில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும், அயல் நாடொன்றில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இவ்வாறான ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகியமை உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் ஒரு பதட்டமான சூழலைத் தேற்றுவித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. பெரும் மோதல் ஒன்று தவிர்க்கப்பட்டமையை இட்டு உள்நாட்டில் மகிழ்ச்சி நிலவினாலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சரிவைப் பெரிதும் எதிர்பார்த்திருந்த உக்ரேன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் மத்தியில் கவலை உருவாகி உள்ளமையை உணர முடிகின்றது. முதலாவது கேள்வி, இத்தகைய ஒரு நிலைமை எவ்வாறு உருவாகியது என்பது. அடுத்த கேள்வி தோல்வியைத் தழுவிய சதியின் பின்னணியில் அந்நிய சக்திகள் உள்ளனவா என்பது? இத்தகைய நிலை உருவானதால் நன்மை யாருக்கு என்ற மூன்றாவது கேள்விக்கு சிரமப்பட்டு விடை தேடத் தேவையில்லை. அது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. குறித்த சதி நடவடிக்கை தொடர்பான செய்திகள் வெளியான போதில் உக்ரே ன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தலைவர்களிடம் இருந்து வெளிவந்த கருத்துகளே அதனை உறுதிசெய்யப் போதுமானவை. அதுமாத்திரமன்றி குறித்த சதி முயற்சி பற்றி உக்ரேன் மற்றும் அமெரிக்கத் தரப்புகள் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததென பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தனியார் இராணுவக் குழுவான வக்னர் உக்ரேன் போரில் இணைந்து கொண்ட நாள் முதலாகவே ரஷ்யப் படைத்துறைக்கும், குறித்த குழுவுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவியதை அவ்வப்போது செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்போம். போர் ஒன்றில் ஈடுபடும் எந்தத்தரப்பாயினும் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை என்பது பொதுவான விதி. உக்ரேன் போர்முனையும் இதற்கு விதிவிலக்கானதல்ல. உக்ரேன் களத்தில் ரஷ்யப் படைத்துறையே மிகுந்த பலத்துடன் விளங்கினாலும், சில சமர்களில் வக்னர் குழுவினர் தீரத்துடன் செயற்பட்டு வெற்றிகளைப் பெற்றிருந்தமை அறிந்ததே. அது மாத்திரமன்றி பெருமெடுப்பில் நடைபெறும் போர்களில் படைத்துறை அதிகாரிகள் மத்தியிலும் ஒத்த கருத்து நிலவுவதில்லை என்பது உலகப் பொது விதியாக உள்ளது. உக்ரேன் மீதான படை நடவடிக்கையிலும் இத்தகைய போக்கு பல தடவைகளில் வெளிப்பட்டு உள்ளது. குறிப்பாக ரஷ்யப் படையினரின் மெத்தனமான நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்கள் வெளியாகி இருந்தமை ஒருபுறம் இருக்க, வக்னர் குழுவுக்குத் தேவையான போர்த் தளபாடங்களை போதுமான அளவு வழங்குவதிலும் பின்னணி ஆதரவு தருவதிலும் ரஷ்யப் படைத்துறை அமைச்சு முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல தடவைகள் பொது வெளியில் வைக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. ஜுன் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சதி நடவடிக்கை மறுநாளில் முடிவுக்கு வந்திருக்கின்றது. வக்னர் குழுவின் தலைவர் பிறிகோசினுக்கும் பெலாரஷ் நாட்டு ஜனாதிபதி அலெக்சான்டர் லுகஷென்கோவுக்கும் இடையில் - விளாடிமிர் புட்டினின் ஏற்பாட்டில் - இடம்பெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து உருவான கருத்தொற்றுமையின் விளைவாகவே உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து ஆயுத மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும், வக்னர் குழு உறுப்பினர்களின் எதிர்காலம் தொடர்பில் ஒரு முடிவு எட்டப்பட்டிருந்தாலும், நடைபெற்ற நிகழ்வுகளால் உருவான தாக்கம், பாதிப்பு என்பவை ரஷ்ய அரசியலில் அழிக்கமுடியாத ஒரு தடத்தைப் பதித்துள்ளதை மறுப்பதற்கில்லை. ரஷ்யாவின் அரசியல் தலைமையை மாற்றுவதை தமது வெளிப்படையான இலக்குகளுள் ஒன்றாகவே மேற்குலகம் கொண்டுள்ளது என்பது தெரிந்ததே. அதற்கான ஒரு அருமையான வாய்ப்பாக பிறிகோசினின் கலகம் அமைந்திருந்தது. 3 இலட்சத்துக்கும் அதிகமான படையைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் வெறும் 25,000 பேரை வைத்துக் கொண்டு - மக்கள் பலம் எதுவும் இன்றி - ஆட்சியைப் பிடிப்பது என்பது சாதாரண விடயமல்ல. அது தெரிந்தும் முயற்சி நடைபெற்றிருக்கின்றது. சில வேளைகளில் தமது செயற்பாட்டுக்கு வெளியில் இருந்து அல்லது உள்நாட்டில் இருந்து கூட ஏதாவது உதவிகள் கிடைக்கக் கூடுமென பிறிகோசின் நினைத்திருக்கக் கூடும். ஆனால், பாரிய இழப்பின்றி இந்த அவல நாடகம் முடிவுக்கு வந்திருக்கின்றது. பிறிகோசினின் படையினர் மீது ரஷ்;ய ஆயுதப் படையினர், விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்கள் மூலம் ஏற்பட்ட இழப்பு விபரங்கள் இன்னமும் சரியாக வெளியாகவில்லை. ஆனால், வக்னர் குழுவினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 5உலங்கு வானூர்திகளும் ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் விமானிகள் உள்ளிட்ட 13 படையினர் மரணித்ததாகவும் செய்திகள் வெளியாக உள்ளன. இந்தத் தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களில் பல குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும் 3 பொதுமக்கள் வரை காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எதுவாயினும், ரஷ்யாவைப் பொறுத்தவரை புட்டின் ஒரு ~இரும்பு மனிதன்| அல்ல என்பது தெளிவாகி உள்ளது. சொந்த நாட்டில் எதிர்ப்பதற்கு யாருமே இல்லாத ஒரு தலைவரென அவர் தன்னை இனிக்கருதிக்கொள்ள முடியாது. அது மாத்திரமன்றி, எதிர்ப்பு இத்தோடு முடிந்து விட்டது எனக்கருதி அவரால் நிம்மதியாகவும் இருந்துவிட முடியாது. உக்ரேன் களமுனையில் இருந்து வக்னர் குழுவினர் வெளியேறி உள்ளனர். இது உக்ரேன் படையினரைப் பொறுத்தவரை ஒரு சாகமான அம்சம். ஆனால், அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. களமுனையில் மோதல்கள் தொடருகின்ற போதிலும் மாற்றங்கள் எதனையும் அவதானிக்க முடியவில்லை. மறுபுறம், வக்னர் குழுவினரின் கலகம் தொடர்பான செய்திகள் உக்ரேன் படையினரின் பதில் தாக்குதல்கள் வெற்றிகள் எதனையும் பதிவு செய்யவில்லை என்ற செய்தியை அமுக்கி விட்டதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, உக்ரேன் போர் 16 மாதங்களாக பெரும் அழிவுகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மேற்குலகம் தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி உக்ரேனின் வெற்றியை உறுதி செய்ய எடுக்கும் முயற்சிகள் இதுவரை பயனளித்ததாகத் தெரியவில்லை. மறுபுறம், ரஷ்யத் தரப்பும் பாரிய வெற்றிகள் எதனையும் பெற்றுவிடவில்லை. பிறிகோசினின் சதி முயற்சி மேற்குலகின் கடைசி ஆயுதமாகக் கூட இருக்க வாய்ப்புண்டு. அதுகூடக் கைகொடுக்காத நிலையில் பேச்சுக்கள் மூலம் ஒரு மோதல் தவிர்ப்புக்குச் செல்ல மேற்குலகம் முயலக்கூடும். ஏற்கனவே இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பல உலா வருகின்றன. ரஷ்யாவைப் பொறுத்தவரை பிறிகோசின் வழங்கிய அதிர்ச்சி வைத்தியம் அந்த நாட்டின் போர் முனைப்பு தொடர்பில் மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்திக்கலாம். எது நடந்தாலும் உக்ரேன் போர் முடிவுக்கு வருவது உலக மாந்தர் அனைவர்க்கும் மகிழ்ச்சி தரும் செய்தியே நடக்குமா? உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா வக்னர் சதி? | Virakesari.lk
-
பலியாடுகள் ஆகும் மக்கள் Published By: VISHNU 02 JUL, 2023 | 06:32 PM (கார்வண்ணன்) பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் செலுத்துகின்ற கவனத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் செலுத்தவில்லை. கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பசுமை காடுகள் பாதுகாப்புக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று, பாரிஸில் நடந்த காலநிலை மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உறுதியளித்திருந்தார். ஆனால், அவரது அரசாங்கம் வடக்கு, கிழக்கின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் ஆபத்து குறித்து கவனத்தில் கொள்ளவேயில்லை. வவுனியா மாவட்டத்தில் உள்ள நயினாமடுவில், சீனி தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு, தாய்லாந்தின் சூரெக் சுகர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, 200 ஹெக்டெயர் காணிகளை வழங்குவதற்கு, அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்திருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான சிறு பற்றைக்காடுகளைக் கொண்ட நிலத்தை, குறித்த தாய்லாந்து நிறுவனத்துக்கு நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது. இங்கு 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. இலங்கைக்கு ஆண்டு தோறும், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி தேவைப்படுகிறது. அதில் 20 சதவீதத்தை, நயினாமடு சீனித் தொழிற்சாலை மூலம் பெற்றுக் கொள்வது தான் அரசாங்கத்தின் திட்டம். 400 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு வரப் போகிறது, சீனி இறக்குமதிக்காக செலவிடப்படும், டொலரின் ஐந்தில் ஒரு பங்கு குறையப் போகிறது, உள்நாட்டில் தொழிலாளர்களுக் வேலை வாய்ப்புக் கிடைக்கப் போகிறது- இது அரசாங்கம் கூறப் போகின்ற ஆதாயப் பட்டியல். வயல்களாக இருந்த நிலங்கள், போருக்குப் பின்னர் பற்றைகளாக மாறிய போது, அவற்றையெல்லாம் பாதுகாக்கப்பட்ட வனங்களாக அறிவித்து காணிகளை அபகரித்தது வனவளத் திணைக்களம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றும், காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழர்களின் நிலங்களை அபகரித்த இந்த திணைக்களம் இப்போது, 200 ஹெக்டெயர் காடுகளை தாய்லாந்து நிறுவனத்துக்கு வழங்க இணங்கியிருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லையா? கிட்டத்தட்ட 2 சதுர கிலோ மீற்றர் வரையான பற்றைக் காடுகள் இதனால் அழிக்கப்படும். இத்தோடு மட்டும் நிற்கப் போவதில்லை, இந்த திட்டம். இந்த சீனித் தொழிற்சாலைக்குத் தேவையான கரும்பு இங்கே தான் உற்பத்தி செய்யப்படவுள்ளது. வவுனியா மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டெயரில் கரும்பு பயிரிட்டு, சீனித் தொழிற்சாலையின் உற்பத்திக்கான மூலப்பொருளாக பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் விவசாயிகளை கூட்டுறவுச் சங்கங்களாக ஒருங்கிணைத்து 15 ஆயிரம் ஹெக்டெயரில் கரும்பு பயிரிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எஞ்சிய 15 ஆயிரம் ஹெக்டெயர் கரும்பு உற்பத்தி தாய்லாந்து நிறுவனமே மேற்கொள்ளும். 30 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பு என்பது, கிட்டத்தட்ட 300 சதுர கிலோ மீற்றர் ஆகும். வவுனியா மாவட்டத்தின் மொத்த தரை நிலப்பரப்பே, 1861சதுர கிலோ மீற்றர்கள் தான். அவ்வாறாயின், மாவட்டத்தின் பரப்பளவில் ஆறில் ஒரு பங்கு, கரும்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும். கரும்பு, அதிகளவு நீர் தேவைப்படும் ஒரு பயிர். நீரை அதிகளவில் உறிஞ்சும் கரும்பை பெருமளவில் உற்பத்தி செய்வது வடக்கின் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர். பேராறுகள் ஓடாத வடக்கில் கரும்பை பயிரிடுவதால், வடக்கில் நீர் ஆதாரம் வரண்டு, பாலைவனமாக மாறும் ஆபத்து இருப்பதாக, எச்சரித்திருக்கிறார் சூழலியலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன். இது மாத்திரம் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை, கரும்பு உற்பத்திக்காக காடுகள் அழிக்கப்படும். அல்லது ஏற்கனவே, நெல் பயிரிடப்படும் நிலங்கள் பயன்படுத்தப்படும். இந்த இரண்டுமே ஆபத்தானது தான். காடுகள் அழிக்கப்படுவதால், சுற்றாடல் பாதிப்புகள் ஏற்படும். நெல் பயிரிடும் பரப்பி்ன் அளவு குறையும் போது, மக்களின் உணவுக்காக பயன்படுத்தப்படும் அரிசியின் உற்பத்தி குறையும். வவுனியா வடக்கிலும் ,முல்லைத்தீவிலும் இன்னமும் பல தமிழர் பிரதேசங்கள் மீளக் குடியேறுவதற்காக விடுவிக்கப்படவில்லை. அண்மையில் கூட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் பகுதிகளில் மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடததப்பட்டிருந்தது. சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவ அச்சுறுத்தல்களாவும், 1980களின் தொடக்கத்தில் துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. இவ்வாறான நிலையில், குறித்த பிரதேசங்களை அண்டிய காணிகள், கரும்புச் செய்கைக்காக வழங்கப்படுவது தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த திட்டத்தை தமிழ் அரசுக் கட்சி கடுமையாக எதிர்ப்பதாக கூறியிருக்கிறது. ஆனால் ரெலோ இதற்கு பின்கதவால், இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவை என்ற போதும்- அவை இங்குள்ள மக்களின் வாழ்வியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆய்வுகள் எதுவும் இல்லாமல், வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பது ஆபத்தானது. அரசாங்கம் இந்த விடயங்களில் கண்மூடித்தனமாகச் செயற்படுகிறது அல்லது தமிழர்களின் நலன்களை பலியிடுகிறது. இந்த விடயங்களில் தமிழ் அரசியல் தரப்புகளும் மக்களின் உண்மையான நலன்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. கடலட்டை விவகாரத்திலும் இதே சிக்கல் காணப்படுகிறது. சீனாவின் பின்னணியில், கடலட்டை வளர்ப்புப் பண்ணைகளை உருவாக்கத் தொடங்கிய போது, அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் எதிர்ப்புத் தெரிவித்த மீனவர்கள் பலரின் வாய் அடைக்கப்பட்டு அந்த திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் புற்றீசல்கள் போல கடலட்டைப் பண்ணைகள் பெருகி வருகின்றன. கடலட்டையை இங்குள்ள மக்கள் உண்பதில்லை. ஆனால் அந்நிய செலாவணிக்காக அவற்றை இனப்பெருக்கம் செய்து வளர்ப்பதற்கு அதிகளவு ஊக்கம் அளிக்கப்படுகிறது. யாழ்.குடாநாட்டைச் சுற்றியுள்ள கடற்கரைகள் எங்கும் கடலட்டைப் பண்ணைகள் முளைத்திருக்கின்றன. குறிப்பாக யாழ். குடாக்கடல் கடலட்டைப் பண்ணைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கடநீரேரிப் பகுதியில் நீரோட்டங்கள் தடைப்பட்டு, ஏனைய மீன் இனங்களின் இனப்பெருக்கமும், நடமாட்டங்களும் குறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளில் யாழ்ப்பாண குடாக்கடல் சேற்றுக்கடலாக மாறும் ஆபத்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருக்கிறார் செயற்பாட்டாளரான இரேனியஸ் செல்வின். பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மாத்திரம் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். அவர்களிடம் இருந்து உணவுக்காக மீனை பெற்றுக் கொள்ளும் மக்களுக்கும் போதிய மீன் கிடைக்காத நிலை ஏற்படும். அண்மையில் கடற்றொழிலாளர் அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள், மீன் பெருக்கம் குறைந்ததே மீன்களின் விலை அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறியிருந்தனர். பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இது மக்களின் நாளாந்த வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது. வெளிநாட்டு நாணயத்தை உழைக்கும் நோக்கில் மீன்பிடி, விவசாய தொழில்துறைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இது உள்நாட்டு மக்களின் உணவுப் பழக்க வழக்கம் அவர்களின் போசாக்கு போன்றவற்றை பாதிக்கிறது. இப்போது, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அதிகளவு மீன்கள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் சாதாரண மக்களுக்கு அவை கிடைப்பதில்லை. கழிவு மீன்கள் மட்டும் தான் உள்ளூர் சந்தைக்கு வருகிறது. கடலட்டை ஏற்றுமதி திடீரென இடைநிறுத்தப்பட்டால், பண்ணைகளின் நிலை என்ன- சூழலில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்ற கேள்விக்கு பதில் இல்லை. கொரோனா காலத்தில் ஏற்றுமதிகள் முடங்கிய வரலாற்றுப் பாடம் கண் முன் இருக்கிறது. மக்களால் உண்ண முடியாத கடலட்டையை வைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாமல் போகும். கரும்புச் செய்கைக்கு அதிகளவு நீரை செலவிடும் போது நெற்செய்கை பாதிக்கப்படும். உள்ளூரில் அரிசிக்கான தட்டுப்பாட்டை தோன்றுவிக்கும். ஆக வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி ஏனைய பகுதிகளிலும் கூட ஏற்றுமதியை நோக்கிய பொருளாதார முதலீடுகளுக்கு திட்டமிடப்படும் போது தனியே டொலர் வருவாய் மட்டும் கணக்கிடப்படுகிறதே தவிர, உள்ளூரில் மக்களின் வாழ்வியலில் ஏற்படக் கூடிய பாதிப்பு கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசாங்கத்தின் இந்த பொறுப்பின்மைக்கு மக்களே பலியாடுகள் ஆக்கப்படுகின்றனர். பலியாடுகள் ஆகும் மக்கள் | Virakesari.lk
-
கோட்டாவைத் துரத்தும் பழைய கணக்கு Published By: VISHNU 02 JUL, 2023 | 06:01 PM (சுபத்ரா) கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகியிருக்கிறது. இது பழைய கணக்குத் தான், என்றாலும், புதிதாக திறக்கப்பட்டு, அவருக்கு எதிராக திரும்புகின்ற நிலை உருவாகியிருக்கிறது. ஜே.வி.பி. கிளர்ச்சியை ஒடுக்கும் நடவடிக்கையின் போது, மாத்தளை மாவட்டத்தில் இராணுவக் கட்டளை அதிகாரியாகவும் இராணுவ இணைப்பதிகாரியாகவும் இருந்தவர் லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ. கஜபா ரெஜிமென்ட்டின் முதலாவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். 1980களில், மாவட்டங்களின் நிர்வாகங்களை முன்னெடுப்பதற்கு இராணுவ இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் வடக்கு- கிழக்கிற்குத் தான் இராணுவ இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளை விட அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினர். எல்லாவற்றுக்கும் இராணுவ இணைப்பதிகாரியின் அனுமதி தேவை. அவரது கையெழுத்து இருந்தால் தான் மாவட்டத்துக்குள் எந்த தேவையையும் நிறைவேற்ற முடியும். அவசரகாலச்சட்டமும், பயங்கரவாத தடைச்சட்டமும் அதற்கான அதிகாரங்களை இராணுவ இணைப்பதிகாரிகளுக்கு வழங்குவதற்கு காரணமாக இருந்தன. மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாக, 1989 மே மாதம் முதலாம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போது, ஜே.வி.பி. கிளர்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. 1987இல், இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, ஜே.வி.பி.யின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ஆரம்பமாகியது. படிப்படியாகத் தீவிரமடைந்த அந்த ஆயுதக் கிளர்ச்சியை ஒடுக்குவதில் பொலிசும், இராணுவமும் முக்கிய பங்காற்றியிருந்தன. கோட்டாபய ராஜபக்ஷ, ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையில், கஜபா ரெஜிமென்ட்டின் ஒரு பற்றாலியன் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டிருந்தார். அதன் பின்னர், அவர், பிரிகேடியர் விஜய விமலரட்ணவின் கீழ் கஜபா ரெஜிமென்ட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு அரசியல் மட்டத்தில் எதிர்ப்புக் காணப்பட்டது. காரணம் மஹிந்த ராஜபக்ஷ அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துக் கொண்டிருந்தார். ஐதேக அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்த மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பி.யை ஒடுக்கும் நடவடிக்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்காக அவர் பின்னர் ஜெனிவாவுக்கும் சென்றிருந்தார். அதனால், கோட்டாவை மாத்தளை மாவட்ட இணைப்பதிகாரியாக நியமிக்க வேண்டாம் என அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக விளங்கிய ரஞ்சன் விஜேரட்ணவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் பிரிகேடியர் விஜய விமலரட்ணவின் பலமான சிபாரிசு இருந்தமையால், ரஞ்சன் விஜேரட்ண அந்த நியமனத்தை வழங்கினார். 1989 மே தொடக்கம் 1990 ஜனவரி வரையான காலப்பகுதியில் மாத்திரம் அவர் இந்தப் பதவியை வகித்திருந்தார். அவர் அங்கு பணியாற்றிய காலகட்டத்தில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகச் செய்யப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் இருந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்கிய எந்தவொரு இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் மீதும்- அப்போது விசாரணை நடத்தப்படவோ, நடவடிக்கை எடுக்கப்படவோ இல்லை. கோட்டாபய ராஜபக்ஷவும் அவ்வாறே தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தண்டனை விலக்கு கலாசாரம் உதவியது. 1991இல் அவர் இராணுவத்தை விட்டு விலகி அமரிக்காவுக்கும் சென்று விட்டார். 2005இல் மீண்டும் இலங்கைக்கு வந்து, பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார் கோட்டா. அவர் அந்தப் பதவியில் இருந்த காலகட்டத்தில் தான், 2012 ஆம் ஆண்டு, நொவம்பர் மாதம் மாத்தளையில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 150 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில், அவை 1940இல் மண்சரிவில் உயிரிழந்தவர்களுடையதாகவோ, அம்மை நோயினால் மரணமானவர்களுடையதாகவோ இருக்கலாம் என்று அரசாங்கம் திசை திருப்ப முற்பட்டது. ஆனால், அகழ்வுப் பணியை முன்னெடுத்த தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ, அந்த மனித எலும்புக்கூடுகள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டவர்களுடையது என்றும், அவர்கள், 1986இற்கும் 1990இற்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பி.பி.சி. செவ்வி ஒன்றில் கூறியிருந்தார். அரசாங்கம் இந்த புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளான காலகட்டத்தில்- 2013இல், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருந்தார் என இப்போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களில் இருக்கும், ஐந்து வருடங்களுக்கு முந்திய கோப்புகள் அனைத்தையும், அழித்து விடுமாறு 2013இல் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என்றும் அது குறிப்பிட்ட காலத்தில் இடம்பெற்ற காணாமல்போன, கொலை செய்யப்பட்டவர்களின் தரவுகளை அழிக்கும் சதி என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகள் அபிவிருத்தி நிலையம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியன இணைந்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் இலங்கை முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புதைகுழிகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 20 புதைகுழிகள் மட்டும் தோண்டப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புகள் மீட்கப்பட்ட போதும் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவோ, குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவோ இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஜே.வி.பி. கிளர்ச்சியின் போதும், வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போரின் போதும், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை கூட தெரியாதளவுக்கு பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. காணாமல் போனோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டு பதிவுகள் திரட்டப்பட்ட போது, 38 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். ஆயினும், 21ஆயிரம் பேர் தொடர்பான கோப்புகள் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னான்டோ கூறியிருக்கிறார். 1989 மே மாதம் தொடக்கம், 1991 ஜனவரி மாதம் வரையான காலகட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான, விசாரணைகளை முன்னெடுத்த நான்கு ஆணைக்குழுக்கள், மாத்தளை மாவட்டத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட 1041 பேர் தொடர்பான பதிவுகளை இனங்கண்டுள்ளன. அவற்றில், 700இற்கும் அதிகமான காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், இடம்பெற்ற காலப்பகுதி, 1989 மே மாதத்துக்கும், 1990 ஜனவரி மாதத்துக்கும் இடையில் இடம்பெற்றிருக்கின்றன. 700 பேர் காணாமல் ஆக்கப்பட்ட அந்த 9 மாத காலப்பகுதியிலும், கோட்டாபய ராஜபக்ஷவே இராணுவ இணைப்பதிகாரியாக பணியாற்றியிருந்தார். நான்கு விசாரணை ஆணைக்குழுக்கள், மாத்தளை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, 21 குற்றவாளிகளின் பட்டியலை தயாரித்திருந்தன. ஆனால் அவர்களின் விபரங்கள் அரசாங்க இரகசியமாக பேணப்படுகிறது. 2030ஆம் ஆண்டு வரை அந்த விபரங்கள இரகசியமாக பாதுகாக்கப்படும். அந்த 21 பேருக்குள் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இருக்கிறதா என்பது தெரியாது போனாலும், குறித்த காலத்தில் மாத்தளை மாவட்டத்துக்குப் பொறுப்பான இணைப்பதிகாரியாக இருந்தவர் என்பதாலும், குறிப்பிட்ட கால பொலிஸ் ஆவணங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டிருந்தார் என்பதாலும்- அவர் மீது சந்தேகங்கள் வந்திருப்பதில் ஆச்சரியமில்லை. இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற ஏராளமாக மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர். அதனால் தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கனடா பயணத் தடையை விதித்திருக்கிறது. ஆனாலும், அவரை பொறுப்புக்கூற வைக்கும் எந்த முயற்சிகளும் இதுவரையில் உள்நாட்டிலோ சர்வதேச அளவிலோ முன்னெடுக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமைக்காக, கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டவர். தமிழர்களை கொன்றால் அது வீரம் என்று கொண்டாடப்படும் சிங்கள சமூகத்தில், கோட்டா வீரனாக கொண்டாடப்படுவது ஆச்சரியமில்லை. சிங்கள இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருந்தும் அவரைக் கொண்டாடியது தான் சிங்கள இனத்தின் துரதிஷ்டம். இப்போது கோட்டா பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பு. அவர் அமெரிக்காவுக்கும் செல்ல முடியாது. இலங்கையிலும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர் அண்மையில் புதிய வீட்டுக்கு இடம்மாறிய போது, இரைச்சலால் அவரது அமைதி கெடுவதாக காரணம் சொல்லப்பட்டது. அமைதியற்ற நிலை அவரைத் துரத்தத் தொடங்கியுள்ளது. நிம்மதி தேடி கம்போடியா, மியான்மாருக்கு விகாரைகளைத் தேடிச் செல்லும் நிலை தோன்றியிருக்கிறது. இவ்வாறான நிலையில் அவருக்கு மாத்தளை புதைகுழித் தலைவலியும் சேர்ந்து கொண்டிருக்கிறது. இது அவரது எஞ்சிய காலம் நிம்மதியானதாக இருக்கப் போவதில்லை என்பதற்கான அறிகுறியாகவே தென்படுகிறது. கோட்டாவைத் துரத்தும் பழைய கணக்கு | Virakesari.lk
-
இலங்கையிலும் வாக்னர் குழு? Published By: VISHNU 02 JUL, 2023 | 06:02 PM (ஹரிகரன்) கடந்த வாரத்தில், வாக்னர் குழு தலைவரான ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தார். உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், தீர்க்கமான பங்கை வகித்து வந்தது, வாக்னர் குழு. இது ஒரு தனியார் இராணுவ அமைப்பு. உலகின் பல நாடுகளில் கூலிப்படைகளாகச் செயற்படும் ஒரு இராணுவம். உக்ரேன் இராணுவத்துக்கு எதிராக போரிட்டு வந்த வாக்னர் குழு, திடீரென கடந்த வாரம் ரஷ்ய எல்லைக்குள் திரும்பி, நகரம் ஒன்றையும், ரஷ்யாவின் தென்பகுதி பாதுகாப்பு தலைமையகத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தம்முடன் பேச்சு நடத்த முன்வராது போனால், மொஸ்கோ நோக்கி படைகளுடன் செல்லவுள்ளதாக எச்சரித்த பிரிகோசின், அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தார். மொஸ்கோ நோக்கி வாக்னர் குழுவினர் முன்னேறிக் கொண்டிருந்த நிலையில், ரஷ்யா முழுவதும் உள்நாட்டுப் போர் ஏற்படும் ஆபத்து தோன்றியது. பெலாரஸ் ஜனாதிபதி தலையிட்டு, இரண்டு தரப்புகளுடனும் சமரசம் செய்து, உடன்பாட்டை ஏற்படுத்தியதால் அந்தப் படையெடுப்பு 24 மணி நேரத்துக்குள் கைவிடப்பட்டு பதற்றம் தணிந்தது. வாக்னர் குழு தலைவர் பிரிகோசின் பெலாரஸுக்கு பாதுகாப்பாகச் சென்றிருக்கிறார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அதிகாரத்தை அசைத்துப் பார்த்து விட்டார் பிரிகோசின். இந்தளவுக்கும், புட்டின் உருவாக்கிய இராணுவம் தான் வாக்னர் குழு. தனது நம்பிக்கைக்குரிய- நெருங்கிய நண்பரான பிரிகோசின் தலைமையில் அவர் இந்த கூலிப்படையை 2014இல் உருவாக்கியிருந்தார். பெரும்பாலும் ரஷ்ய படைகளில் இருந்து விலகியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த கூலிப்படை. இவர்களுக்கான வெடிபொருட்கள், ஆயுதங்களையும் ரஷ்யாவே வழங்கியது. உக்ரேன் போரில் மூர்க்கமாகப் போரிட்ட வாக்னர் குழுவுக்கு பக்மூத் நகரைக் கைப்பற்றும் சண்டை நீண்டகாலத்துக்கு நீடித்தது ஒரு பெரும் பின்னடைவு. ரஷ்யா போதிய ஆயுதங்களை தமக்கு வழங்காமல் போனது தான், அந்தப் போரில் தங்களின் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதாக வாக்னர் குழு குற்றம்சாட்டியது. ரஷ்ய போர் விமானங்கள் தங்களை குறிவைத்து தாக்கியதாகவும் வாக்னர் குழு குற்றம்சாட்டுகிறது. தோளுக்கு மிஞ்சிய தோழனை தொட்டுப் பார்க்க முற்பட்டார் புட்டின். அதனால் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசின் ஆத்திரமடைந்து, உக்ரேன் எல்லையில் இருந்து தனது படைகளை விலக உத்தரவிட்டார். புட்டின், வாக்னர் குழு என்ற கூலிப்படையை உருவாக்கி விட்டதன் பலாபலனை இப்போது அனுபவிக்கின்ற நிலை தோன்றியிருக்கிறது. வாக்னர் குழுவின் மூலம், உலகம் எங்கும் ரஷ்யாவின் அதிகாரத்தை நிலை நிறுத்துவது தான் புட்டினின் திட்டம். ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா என்று உலகின் பல பாகங்களிலும் வாக்னர் குழு செயற்படுகிறது என்று அமெரிக்காவின் கொள்கை ஆய்வு அமைப்பான, மூலோபாய மற்றும் அனைத்துலக கற்கைகள் நிலையம் கூறுகிறது. சிரியாவிலும், மாலியிலும் மாத்திரமன்றி பல நாடுகளில் இந்த அமைப்பு செயற்படுவதாகவும், ரஷ்யாவில் இதுபோலப் பல தனியார் இராணுவக் குழுக்கள் உருவாகியிருப்பதாகவும், அந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. உலகில் சுமார் 30 நாடுகளில் இந்த அமைப்பு செயற்படுகிறது என்று மூலோபாய மற்றும் அனைத்துலக கற்கைகள் நிலையத்தின் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஐரோப்பாவில் உக்ரேன், ஆபிரிக்காவில் மாலி, சூடான், தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, மத்திய கிழக்கில் சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளில் வாக்னர் குழுவினர் கூலிப்படைகளாக இயங்குகின்றனர் என்று கூறப்படுகிறது. மாலியில் இருந்து ஐ.நா அமைதிப்படையை வெளியேறுமாறு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. வாக்னர் குழுவின் ஆதரவு தங்களுக்கு இருக்கின்ற துணிச்சலில் தான் மாலி அரசாங்கம் அந்த அறிவிப்பை விடுத்திருந்தது. இந்தநிலையில் ஆசியாவிலும் வாக்னர் குழு தீவிரமாக செயற்படுகிறது என்று பல்வேறு ஆய்வாளர்களும் தெரிவித்திருக்கின்றனர். அதில் உக்ரேனின் மோல்பர் (Molfar) என்ற ஆலோசனை நிறுவனம், இலங்கையில் ரஷ்யாவின் தனியார் இராணுவக் குழுக்கள்- அதாவது கூலிப்படைகள் இயங்குகின்றன என்று கூறியிருக்கிறது. வெளிநாடுகளில் ரஷ்யாவின் 37 தனியார் இராணுவக் குழுக்கள் செயற்படுவது, கண்டறியப்பட்டுள்ளதாக மோல்பர் ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் இயங்கும் ரஷ்ய தனியார் இராணுவ செயற்பாட்டாளர்களுக்கும், வாக்னர் குழுவுக்கும் தொடர்புகள் கண்டறியப்பட்டுளளதாகவும் அந்த ஆலோசனைக் குழு குறிப்பிட்டிருக்கிறது. இலங்கைப் போரில் பல நாடுகளின் கூலிப்படைகள் ஈடுபட்டிருக்கின்றன. இஸ்ரேலின் மொசாட், பிரித்தானியாவின் கீனி மீனி அல்லது எஸ்.ஏ.எஸ், போன்ற அமைப்புகளைச் சேர்ந்த கூலிப்படையினர் 1980களில் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருக்கின்றனர். சில போர் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது, கீனி மினியின் பயிற்சி மற்றும் திட்டமிடலின் கீழ், முன்னெடுக்கப்பட்ட சில தாக்குதல்களில், கீனி மீனியை சேர்ந்தவர்கள் விமானிகளாகவும் பங்கெடுத்திருந்தனர். பாகிஸ்தான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் கூலிப்படைகளாகச் செயற்பட்டிருந்தனர். சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யா, உக்ரேன், கசகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போக்குவரத்து மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர்களும் விமானங்களும் அதிகளவில் வாங்கிக் குவிக்கப்பட்டன. அப்போது, இலங்கை விமானப்படையில் போதிய விமானிகள் இருக்கவில்லை. உடனடியாக புதிய விமானிகளுக்கு பயிற்சிகளையும் வழங்க முடியவில்லை. போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், புதிய ஹெலிகள், விமானங்களில் விமானிகளுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவ்வாறான நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து கூலிப்படையினராக விமானிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களே அப்போது மிக்-27 போர் விமானங்களையும், எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர்களையும், மாத்திரமன்றி, அன்டனோவ் -32 போக்குவரத்து விமானங்களையும், எம்.ஐ 17 போக்குவரத்து ஹெலிகொப்டர்களையும் கூட இயக்கியிருந்தனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரஷ்ய மற்றும் உக்ரேன் நாட்டு விமானிகள் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். மிக் -27 போர் விமானம் ஒன்று, 2001ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குரான பகுதியில் விபத்துக்குள்ளானதில், உக்ரேனைச் சேர்ந்த கப்டன் எல். வெலாலி என்ற விமானி உயிரிழந்தார். அதற்கு முன்னர், எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் மற்றும் எம்.ஐ 17 ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும், ரஷ்ய விமானிகள் உயிரிழந்தனர். இலங்கையில் ரஷ்யாவுடன் தொடர்புடைய விமானிகள் கூலிப்படையினராக செயற்பட்டிருந்தனர். ஆனால் இப்போது, ரஷ்ய கூலிப்படையினர் ஏன் இலங்கையில் இயங்குகின்றனர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இலங்கையில் ரஷ்யாவின் கூலிப்படையினர் வெளிப்படையாக செயற்படவில்லை. அரசாங்கமோ அல்லது வேறு அதிகாரபூர்வ தரப்புகளோ இதனை ஒப்புக்கொள்ளவுமில்லை. ஆனால், உக்ரேனிய ஆலோசனை நிறுவனம், இதனைக் கூறியிருக்கிறது. ரஷ்யாவும் இலங்கையும் நட்பு நாடுகள். இப்போது இலங்கையின் சுற்றுலாத் துறையை காப்பாற்றிக் கொள்ளும் முக்கியமான நாடாக, ரஷ்யா விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் இப்போது உலாவுகின்றனர். அவர்கள் எல்லோரும் சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்கள் என்று கூற முடியாது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கூலிப்படையினரும் இருந்தால், அவர்கள் ஏன் தற்போதைய நிலையில் இலங்கைக்கு வர வேண்டும்? என்ற கேள்வி உள்ளது. புட்டின் ஆட்சி அமெரிக்காவைப் பலவீனப்படுத்தும் தேசியவாத கொள்கையை கொண்டது. தற்போது இலங்கையில் அமெரிக்காவின் கை ஓங்கி வருகின்ற நிலையில் ரஷ்யா தனது கூலிப்படையினரை இலங்கையில் களமிறங்கியிருக்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன. அவர்களின் இலக்கு இலங்கையாக இல்லாது போனாலும், அமெரிக்கா அல்லது மேற்குலகம் இலக்காக இருக்காது என்று கூற முடியாது. இலங்கையிலும் வாக்னர் குழு? | Virakesari.lk
-
1986 காலப்பகுதியிலே தமிழகத்தவரோ மலையாளத்தவரோ தெரியவில்லை. ஆனால், முதலாளியிலிருந்து பரிமாறுபவர்வரை இந்தியர்களால் நடாத்தப்பட்ட ஒரு உணவகம் திருநெல்வேலிச் சந்தைப்பக்கமாக(திருநெல்வேலி-யாழ் திசையில் இடதுபக்கமாக) இருந்தது. நல்ல சுவையான உணவு. பெரும்பாலும் தமிழர்களிடத்தே உணவுவிற்பனையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தியோர் இந்தியராகவோ அல்லது சிங்களவராகவோ(1983) இருந்ததுதான் நிலமை என நினைக்கின்றேன்.
-
எனக்குத் தெரிந்த அன்பரொருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தபோது உடல்நல விசாரிப்புகளிடையே கூறியது. தானொரு'ஸ்ரூல்' ஒன்று செய்து வைத்திருப்பதாகவும். அதன்மேல் காலைவைத்துக் குந்திகொண்டிருந்தே காலைக்கடன் கழிப்பதாகவும் மலச்சிக்கல் பிரச்சினையே வருதில்லை என்றார். உண்மையில் இருப்பதைவிட, குந்தியிருப்பதில் நன்மைகள் உள்ளதாகவே தோன்றுகிறது.
-
தமிழருக்கான தீர்வுக்குத் தடையாக இருப்பதே தற்போதுள்ள தலைமைகளினது செயற்றிறனற்ற போக்கே. இதிலே இவர்கள் எதையுமே கிழிக்கப்போவதில்லை. தந்தை செல்வா அவர்களுக்குப் பின்னான சனநாயக முறைமையிலான போராட்டத்தை அணிதிரட்டவோ, திட்டவட்டவட்டமான தீர்மானங்களை மக்களிடம் உண்மையவோ நேர்மையாகவோ கொண்டு செல்லத் திராணியற்றவர்கள் இன்னும் ஏன் களத்தில் நிற்கிறார்கள். கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் 'வடக்கு-கிழக்கில் சைவ- தமிழ் வரலாற்று எச்சங்களை அழித்தலும் பௌத்த எச்சங்களாக திரித்தலும்!' என்ற கட்டுரையில் சுட்டும் விடயங்களை முதலில் செய்தாலே அரைவாசி பிரச்சினைகள் தானாகத்தீரும். அதைவிடுத்து வெறும் அர்த்தமற்ற, தாமும் இருக்கின்றோம் என்று காட்டும் முனைப்புகளால் தமிழருக்கு நன்மையுண்டா?
-
வடக்கு-கிழக்கில் சைவ- தமிழ் வரலாற்று எச்சங்களை அழித்தலும் பௌத்த எச்சங்களாக திரித்தலும் ! Digital News Team கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ++++++++++++++++++++++++++++++++++++++ “தேர்தலை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகரித்த ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்”-இது இன்றைய பத்திரிகை செய்தி. இலங்கை மக்களின் (சிங்கள மக்களின்) இறையாண்மையை பாதுகாக்க ஐ.நா.தலையீடு வேண்டுமென சஜித் கேட்கலாம். அதனால், இந்த நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாது.ஜே.வி.பிக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் சிங்கள மக்கள் கொல்லப்படுவதற்கெதிராக மனித உரிமையை நிலை நாட்டக்கோரி மகிந்த ஐ.நா.செல்லலாம். அதனால் இலங்கையின் இறைமை,கீர்த்தி? பாதிக்கப்படாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேர்மையான நீதி விசாரணை வேண்டுமென கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா.வுக்கும் வத்திக்கானுக்கும் சென்றால் இலங்கையின் காவல்துறை, நீதித்துறையின் கீர்த்தியும் இறைமையும் பாதிக்காது. தலைப்பிற்கும் இவற்றுக்கும் என்ன சம்பந்தம்? இலங்கையின் தேசிய கட்சித்தலைவர்கள்,சிங்கள மத தலைவர்கள் எல்லோரும் இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க ,மனித உரிமைகளை பாதுகாக்க, நீதித்துறை, காவல்துறையின் நேர்மையான சேவையினை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்பதை காலத்துக்கு காலம் வலியுறுத்திக்கொண்டே வந்துள்ளனர். இங்கு அவர்கள் இலங்கை மக்கள் என்பதை மறைமுகமாக சிங்கள மக்கள் என்ற அர்த்தத்தையே வெளிப்படுத்தி வருகிறார்கள்.ஏனெனில் அவர்கள் விருப்பத்தில் இலங்கை ஓர் சிங்கள-பௌத்த நாடு. மேலும் இத்திட்டத்தை முழுமைப்படுத்த தடையாக இருக்கும் தமிழர்களையும் அவர்களது தொன்மையையும் அழிப்பதற்கெதிராக அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை,அதன் உறுப்பு நாடுகளுக்கு சென்றால் அது இறைமைக்கு அச்சுறுத்தல், நாட்டின் கீர்த்திக்கு பாதகம், ஆட்சியாளருக்கு அவமானம், தேசத்துரோகம் .எனவே அவர்கள் கைது செய்யப்படவேண்டுமென கூக்குரல்கள். இந்தப் பின்னணியின் புரிதலிலிருந்தே நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள-பௌத்த ஆட்சியாளரின் தமிழருக்கெதிரான கலாசார அழிப்பு நோக்கப்படவும் அதனை முற்றாக நிறுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு பிரிவுகளில் கலாசார படுகொலைக்கெதிரான ஆட்சியாளரின் செயற்பாடுகளை எடுத்து செல்லமுடியும்.1.யூனெஸ்கோ 2.மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கலாசார உரிமைகள் தலைப்பின் கீழ் தனியாக கையாள முயற்சிக்கலாம்.அரசாங்கம் தனது படைகளையும் பிக்குகளையும் அகழ்வாராய்ச்சி திணைக்களத்தையும் பயன்படுத்தி அதீத அதிகாரத்தை வழங்கி வேகமாகவும் தொடர்ச்சியாகவும் இக்கலாசார அழிப்பை செயற்படுத்தும் போது தமிழ் தலைமைகள் ஒவ்வொன்றும் அவ்வப்போது சிறு குரல் எழுப்பிவிட்டு அடங்கிவிடுவதே வரலாறாக உள்ளது. இலங்கையில் 83 பேருக்கு ஒரு படையினரும் வடக்கில் மட்டும் 5 பேருக்கு ஒரு படையினரும் என உலகில் மிக அதிகமான படையினரை கொண்ட நாடாக இலங்கை உள்ளது.இதற்கு உலகெங்கும் சொல்லப்படும் பொய்யான காரணம் தேசிய பாதுகாப்பு என்பதாகும். 2009 இல் புலிகள் மௌனிக்கப்பட்ட பின் வடக்கு கிழக்கில் ஒரு பட்டாசு கடை வெடித்ததில்லை.மாறாக ஒருபுறம் இராணுவத்தினரின் வன்குற்றங்களும் மறுபுறம் தென்னிலங்கையில் மாபியாக்களின் குற்றங்கள்,துப்பாக்கி சூடுகளுமே பதிவாகி வருகின்றன. வடக்கு,கிழக்கில் தமிழர் நிலங்களை சிங்களவர்கள் கபளீகரம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கல் ,சிங்கள மீனவர்கள் வடக்கு-கிழக்கு கடலில் தமிழர்களை அடக்கி மீன்பிடிக்க பாதுகாப்பு அளித்தல்,தமிழர்களின் புராதன சின்னங்களை அழித்து,மறைத்து புத்த கோவில்கள் கட்டுதல் ,விரும்பிய இடமெங்கும் புத்தர் சிலைகளை வைத்து பாதுகாப்பளித்தல் என வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அவற்றுக்கு பாதுகாப்பளிப்பதற்குமே தேசிய பாதுகாப்பு என பெயரிடப்பட்டுள்ளது. இதுபோன்றே இலங்கையின் அகழ்வாராய்ச்சி திணைக்களமானது தனது வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி அவற்றை அவ்வாறே பாதுகாப்பது என்கிற கடமைக்கு மாறாக ரகசியமான முறையில் பிக்குகளையும் படையினரையும் பயன்படுத்தி சைவ-தமிழ் கலாசார மறப்புரிமைகளை மறைத்தும் திரிவுபடுத்தியும் பௌத்த மயமாக்கல் என்னும் வேலையே கீழ்த்தரமாக செய்துவருகிறது. இவை இன அழிப்புடன் பின்னிப்பிணைந்த செயற்பாடுகளாகும்.தனியான தொடர்ச்சியான நிலப்பரப்பினை கொண்ட தனியான மொழி,கலாசார பண்பாடுகளை கொண்ட தமிழ் தேசிய இனத்தின் தொன்மைமிக்க வாழ்வியல் வரலாற்றை அழிப்பதனூடாக அவர்களின் தனித்துவம்,அடையாளத்தை அழித்து சிங்கள-பௌத்தத்திற்குள் கலந்து விடுவதன் மூலம் கலாசார படுகொலையீனூடாக இன அழிப்பு செய்யும் செயற்பாடே முன்னெடுக்கப்படுகிறது. இவற்றை முழுமையாக தடுத்து நிறுத்தி தமிழர் தாயகத்தையும் தமிழ் மக்களின் தொன்மையையும் தனித்துவத்தையும் நிலைபேறாக பாதுகாக்க வேண்டியது அவசியமும் அவசரமுமான தேவையாகிறது.”வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம்”என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வொப்பந்தம் ஓர் சர்வதேச ஆவணமாகும்.இதனை இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக மீறுதல் என்பது சர்வதேச ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.இவ்விடயத்தில் இந்தியா தலையிடுவதற்கான சட்ட உரித்தும் தமிழ் மக்கள் சார்பில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் அதனை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு-கிழக்கை நிரந்தரமாக இணைப்பதை உத்தரவாதம் செய்யவேண்டிய பொறுப்பும் சட்ட உரித்தும் இந்தியாவுக்குண்டு.இந்தியா இதனை நிறைவேற்ற செய்யும் கடமை தமிழ் தலைமகளுக்குரியது.இந் நகர்வானது வடக்கு கிழக்கில் குறைந்தபட்ச அதிகாரமேனும் உள்ள ஆட்சிக்கு வழிவகுக்கும். கலாசார அழிப்பினூடாக இன அழிப்புத்திட்டம் தொடர்பில் தமிழ் தலைமைகள் நுண்ணறிவுடனும் ராஜதந்திர ரீதியிலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்ட தொடர்ச்சியான முன்முயற்சிகள் எடுக்கவேண்டும்.தமிழ் தலைமை எப்போதுமே அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் (REACTIVE)அணுகுமுறையே மேற்கொள்கின்றனர்.மாறாக இவ் அடக்குமுறைகள் தொடர்பில் இலங்கை அரசின் கைகளை கட்டிப்போடும் வகையில் முன்னெடுப்புகள் (PROACTIVE) அணுகுமுறை கையாளப்படவேண்டும். சர்வதேச சமூகத்தை கையாளுதல் என்பது அவர்கள் இலங்கைக்கு வரும்போது சந்தித்து கதை சொல்லிவிட்டு வருவதாக அன்றி அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு வகைப்படுத்தப்பட்டு கலாசார உரிமைகளை பாதுகாக்க உலக அளவில் இயங்கும் ஐ.நா.மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களுக்கு சமர்ப்பிப்பதும் சர்வதேச நடவடிக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும். ஆதாரங்களை திரட்டுவதற்கும் வகைப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொருத்தமான சர்வதேச தளங்களில் அவற்றை சமர்ப்பித்து நிலைபேறான தீர்வு காண செயற்படும் வகையில் ஓர் சர்வதேச தலைமையகம் செயற்படவேண்டும்.அது ஓர் உயர்ஸ்தானிகரகத்துக்குரிய தரத்துடன் செயற்படும் வகையில் அமைய வேண்டும். இவற்றுக்கு சமாந்தரமாகவும் விரைவாகவும் இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் வட-கிழக்கு இணைப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு உரிய நகர்வுகளும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் நகர்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.தேவை அறிவுபூர்வமான,சாமர்த்தியமான ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதே. Thinakkural.lk
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? Digital News Team லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிகளிலும் பார்க்க (25.41%) தென்னிந்தியத் தமிழர்களிடமிருந்து (69.86%) அதிக பங்களிப்பைப் பெற்றுள்ளனர், அதேசமயம், இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய தமிழர்களுடன் (16.63%) ஒப்பிடும்போது இலங்கையின் சிங்களவர்களிடமிருந்து (55.20%) அதிக பங்களிப்பு உள்ளது”. இதிலிருந்து மூன்று முடிவுகள் வெளிவருகின்றன. முதலாவதாக, சிங்களவர்களும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், பெரும்பாலானவர்கள் திராவிட வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (69.8%). இரண்டாவதாக, இலங்கைத் தமிழர்கள் மிக நீண்ட காலமாக இலங்கையில் உள்ளனர் – ஏனெனில், “இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்களை விட சிங்களவர்களுடன் நெருங்கிய மரபியல் பிணைப்பை கொண்டுள்ளனர் ” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.மூன்றாவதாக, இலங்கைத் தமிழர்கள் மரபணு ரீதியாக சிங்களவர்களைப் போலவே இலங்கையர்களாகும் . இலங்கைத் தமிழர்களை தென்னிந்தியத் தமிழர்களுடன் அரசியல் உள்நோக்கத்துடன் பிணைப்பதனால் இந்த உண்மையை மாற்ற முடியாது. மேற்கூறிய மரபியல் ஆய்வுகளின் முடிவுகள் (இலங்கையில் பிறந்த) மானுடவியலாளர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபேசேகரே பின்வருமாறு கூறுகிறார்: “கிமு 500 க்கு முன்னர் குடியேறிய பழமையான குடியேற்றங்களைத்தவிர , இலங்கையில் குடியேறியவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், பெரும்பாலும் தமிழ்நாடு, ஒரிசா, மற்றும் கேரளத்திலிருந்து வந்தவர்கள் என்பதுடன்,விரைவில் சிங்களமயமாக்கப்பட்டவர்கள். உண்மையில், சிங்களவர்களிடையே மிகவும் கூச்சலிடும் தமிழ் விரோத சாதிகளில் சிலர் பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். இதற்கு நேர்மாறாக, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குக் கரையோரத் தமிழர்கள் குறைந்தது கி.பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இலங்கையில் இருந்துள்ளனர். இதே கருத்தை வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) மானுடவியல் ஓய்வுநிலை பேராசிரியர் எச்.எல். செனவிரத்னவும் எதிரொலிக்கிறார், மேலும் அவர் கூறுகையில் : “பரந்த கண்ணோட்டத்தில், துணைக் கண்டத்தில் உள்ள மக்களின் இன-மக்கள் தொகை பரம்பலைப் பற்றிய பார்வையில் ,தென்னிந்தியாவின் ஏனைய இன மற்றும் மொழிக் குழுக்களைப் போலவே சிங்களவர்களும் பலவகையான தமிழர்கள் என்பது மிகவும் வெளிப்படையானது.குறிப்பாக, வடக்கில் இருந்து மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பௌத்தம் பிழைத்திருப்பது தென்னிந்தியாவில்தான் என்ற உண்மையை சிங்கள பௌத்தர்கள் மறந்துவிட்டமை வியக்கத்தக்கது” என்று கூறியுள்ளார் . (தி ஐலண்ட், ஜனவரி 2014). இலங்கையில் உள்ள பல தமிழர்கள் குறைந்தது கிபி 500 வரை பௌத்தர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய ஆய்வுகளின் அடிப்படையில் தனி சிங்கள பௌத்தர்களால் ‘தங்கள் நாட்டிற்கு’ திரும்பிச் செல்லுமாறு கோரப்பட்ட மூன்று வெவ்வேறு இலங்கைத் தமிழர்களிடமிருந்து எழுத்தாளர் அறிந்திருப்பது விந்தையானது.பௌத்தத்தின் உன்னத மதம்/தத்துவத்தை தழுவி சிங்களவர்கள் தங்களை வேறுபடுத்திக் கொண்டனர்.இருப்பினும், இனம் பற்றி மட்டும் பேசினால், சிங்களவர்களும் ‘தங்கள் நாட்டுக்கு’ திரும்பச் சொல்ல வேண்டும். தீவின் மீதான அவர்களின் இன மற்றும் மத உரிமையானது பலரால் சர்ச்சைக்குரிய மகாவம்சத்தின் சந்தேகத்திற்குரிய உரையில் மட்டுமே உள்ளது. இந்தக் கட்டுரையின் எஞ்சிய பகுதி, சிறுபான்மையினருக்கு இலங்கையின் பரம்பரை உரிமையை மறுத்து, பெரும்பான்மைச் சமூகம் இந்த நாட்டை தனக்கு மட்டுமே சொந்தமானது என்று எவ்வாறு எடுத்துக்கொள்ள முயல்கிறது என்பதைக் காட்ட முயல்கிறது. இலங்கைத் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தீவில் உள்ளனர்.அவர்கள் தென்னிந்தியாவில் இருந்து பின்னர் சிங்களமயமாக்கப்பட்ட மக்களைக் கொண்டுவந்த அதே குடியேற்றத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. இலங்கைக்கு யார் முதலில் வந்தார்கள் என்பது பற்றி நாங்கள் பேசவில்லை. தீவில் ஏற்கனவே உள்ள இரண்டு சமூகங்கள்/ தேசங் களுடனான விடயங்கள் பற்றியதாகும் – அவற்றுக்கிடையே எத்தகைய உறவு இருக்க வேண்டும். தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்த்து ஒரு ஒற்றையாட்சியில் அமர்த்திய ஆங்கிலேயர்கள்தான், அனைத்து அரசியல் அதிகாரங்களையும் ஒரு சமூகத்தின் (மட்டும்) கைகளுக்கு வழங்கியமையே , உண்மையில் எங்களைப் பிரித்தெடுத்தது. இலங்கை ஒரு தேசம் என்ற நம்பிக்கையில் செயற்பட்ட பிரித்தானியர்கள், சிங்கள-பௌத்த பெரும்பான்மையினருக்கு அரசைக் கைப்பற்றுவதற்கு எளிதான வழியை ஏற்படுத்திக் கொடுத்து, பாராளுமன்ற முறைமையுடன் இணைந்து ஒற்றையாட்சியின் வரையறைகளை அமைத்தனர்.திசராணி குணசேகர அவர்கள் தனது கட்டுரையில் “சிங்கள-பௌத்தத்திற்கு நாம் இழந்த நாடு” என்ற தலைப்பில் சரியான பிரதிமையை வரைந்துள்ளார் (கிரவுண்ட்வியூஸ், 7,பெப்ரவரி , 2023). அவர் நாடளாவிய கண்ணோட்டத்தில் எழுதுகிறார், இது மிகவும் தேவை:நான் சிறுபான்மையினர் கண்ணோட்டத்தில் எழுதுகிறேன். ஆங்கிலேயர்கள் சிறுபான்மையினரை சிங்களவர்களைப் போன்ற அதே காலனித்துவக் கூண்டில் (ஒற்றையாட்சி) வைத்ததுடன், ,தமிழர்களை விடுவிக்காமல் சிங்களவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். சுதந்திரமும் ஒரு அரசியல் சித்தாந்தமாக சிங்கள-பௌத்தத்தின் எழுச்சியும் ஐரோப்பிய அரசுகளில் அவை தேசிய அரசுகளாக மாறுவதற்கு முன்பு, இன மற்றும் மதப் போட்டிகள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக போர்கள் மற்றும் இரத்தக்களரிகளால் தீர்க்கப்பட்டன.அதன் பிறகு ஜனநாயகம் தோன்ற 300 ஆண்டுகள் ஆனது.இலங்கையைப் பொறுத்தவரை, தற்போதுள்ள இன மற்றும் மத வேறுபாடுகள் விரிவடைந்து, ஒரு ‘தேசிய அரசு’ பிரகடனப்படுத்தப்பட்டு, ஜனநாயகத்தால் முடிசூட்டப்பட்டது. இலங்கை ஒரு மதச்சார்பற்ற அரசாக இருக்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற .டி.எஸ்.சேனாநாயக்கவின் உறுதிமொழியின் பேரில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.சிங்கள-பௌத்தம் ஒரு அரசியல் சித்தாந்தமாக அந்த உறுதிமொழியை கைவிட்டுவிட்டது. இது சிங்கள-பௌத்த பெரும்பான்மையினரின் அரசியலமைப்பு சதி, மதச்சார்பற்ற அரசு என்ற வாக்குறுதியை மறுத்து, தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்கு சொந்தமானது என்று அழைக்கும் அரசை எடுத்து செல்கிறது. உண்மையில், ஆங்கிலேயர்கள் தமிழர்களை சிங்களவர்களுடன் ஒரே காலனித்துவக் கூண்டில் (ஒற்றையாட்சி அரசில் ) அடைத்து அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினர்! சிங்கள மக்கள் வாக்காளர்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது, ஒற்றையாட்சியின் காலனித்துவக் கூண்டு ஒருபோதும் திறக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தும்.எமது சொந்த வரலாறு எமக்கு வேறுவிதமாக கற்பிக்க வேண்டும் என்றாலும் ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஒற்றையாட்சி அரசின் அனுமானத்துடன் தான் நாம் எப்போதும் தொடங்குகிறோம். காலனித்துவ வரையறைகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன ஆங்கிலேயர்கள் எமது தற்போதைய எல்லைகளுடன் எம்மை விட்டுச்சென்றனர் – அதை நாம் அனைவரும் எடுத்துக்கொண்டுள்ளோ ம். இருப்பினும் ஒரு காலத்தில், சிலோன் இந்தியாவின் மெட்ராஸ் பிரசிடென்சியின் (இன்று தமிழ்நாடு) ஒரு பகுதியாக இருந்தது. ஆங்கிலேயர்கள் எம்மை அப்படியே விட்டுவிட்டிருந்தால், எமது ஆட்சி மொழி தமிழாகவும், இந்தி எமது தேசிய மொழியாகவும் இருக்கும்! அதை சிங்களவர் யாராவது ஏற்றுக் கொண்டிருப்பார்களா? ஆங்கிலேயர்கள் எங்களிடம் விட்டுச் சென்ற ஒரு ஒற்றையாட்சியில் இருந்து ஆரம்பிக்கிறோம். எவ்வாறாயினும், சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் எழுச்சியைக் கருத்தில் கொண்டு, தீவின் முதல் காலனியாதிக்கவாதிகள் (போர்த்கேயர்கள்) வந்தபோது எங்கள் எல்லைகள் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நிச்சயமாக நன்றாக இருந்திருப்பார்கள். ஏன் எப்போதும் ஆங்கிலேயர்கள் எம்மை விட்டுச்சென்ற ஒற்றையாட்சியின் எல்லையில் இருந்து தொடங்குவது – வேறு எதுவுமில்லை? சிங்கள-பௌத்த ஆதிக்கத்திற்கான நிபந்தனைகளை உருவாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெளியேறும் அவசரத்தில், பிரித்தானியர்கள் இலங்கையில் ஒரு தேசிய அரசை விட்டுச் செல்கிறார்கள் என்று நம்புவதற்கு விரும்பினர்.அவ்வாறு செய்ய அவர்கள் வேண்டுமென்றே தங்கள் வரலாற்றைத் தவறாகப் புரிந்து கொண்டனர். இரண்டாவதாக, ஆங்கிலேயர்கள் ஒரு ஒற்றையாட்சி அரசை விட்டுச் சென்றனர்,அதை அவர்கள் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு மற்றும் நிர்வாக வசதிக்காக விரும்பினர்.மறுபுறம், நாம் அமெரிக்க செல்வாக்கின் கீழ் இருந்திருந்தால், லத்தீன் அமெரிக்காவில் உள்ள சில நாடுகளைப் போலவே, நாங்கள் மிகவும் பரவலாக்கப்பட்ட அரசியலமைப்பை – அல்லது ஒரு சமஷ்டி அரசியலமைப்பைப் பெற்றிருப்போம். மூன்றாவதாக, பிரித்தானியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தங்களுடைய சொந்த மாதிரியான பாராளுமன்ற அரசியலமைப்பை விட்டுச் சென்றனர்.இலங்கையில், பெரும்பான்மையான சிங்கள-பௌத்தர்கள் பாராளுமன்றத்தை கைப்பற்றுவதற்கும், சிங்களம் மட்டும் சட்டம் (1956) மூலம் நாட்டைப் பிரிப்பதற்கும் சிறிது காலம் எடுத்தது. 1972 அரசியலமைப்பானது ,சிங்களவர்கள் நிரந்தர மற்றும் ஏகபோக பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்தில் இறைமை தங்கியிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது. நான்காவதாக, பிரித்தானிய அரசியலமைப்பில் உரிமைகள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், எமது அரசியலமைப்பின் கீழ் சிறுபான்மையினருக்கான பாதுகாப்புகள் பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையால் இரத்து செய்யப்படலாம், அது எப்போதும் சிங்கள-பௌத்த குரலை எழுப்புவதன் மூலம் உருவாக்கப்படலாம். மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையினால் இன்னும் அதிகமாகச் சாதிக்க முடியும் என்றால், அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்புகளால் என்ன பயன்? இறுதியாக, ஆங்கிலேயர்கள் ஒரு ஒற்றையாட்சி எல்லைகளை உருவாக்கினர். எமது அரசியலமைப்பில் உள்ள மேற்கண்ட பாதிப்புகள், அரசின் இயல்பை அதன் சொந்த உருவத்திற்கு (மட்டும்) மாற்றியமைக்க தேர்தல் பெரும்பான்மையால் கைப்பற்றப்பட்டுள்ளது .இது இலங்கை தேசத்தை இன மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்தும் விளைவை ஏற்படுத்தியுள்ளது. ‘தேர்தல் ஜனநாயகம்’ எமது அரசியலமைப்புச் சட்டங்கள் அனைத்தும் ஜனநாயக செயல்முறையால் எழுகின்ற வகுப்புவாத வேறுபாடுகளைத் தீர்க்க முடியும் என்று மறைமுகமாக கருதுகின்றன.மாறாக, ஒவ்வொரு பொதுத் தேர்தலும் எமது வகுப்புவாத வேறுபாடுகளை அதிகப்படுத்தியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நாம் தேர்தல் ஜனநாயகத்தை மட்டுமே அடைந்துள்ளோம் – ஏனைய ஜனநாயகத்தை அல்ல. அனைத்து சிறுபான்மையினரும் எதிராக வாக்களித்த போதிலும், ஜனாதிபதி கோத்தாபய தேர்ந்தெடுக்கப்பட்டார்.சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலின் மூலம் சிறுபான்மை வாக்குகளின் பயனற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.எனவே, சிறுபான்மையினர் வாக்களித்தால் கேடு – இல்லை என்றால் அழிவு! கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு முடிவுகள் எமது தீவில் வாழும் இரு தேசியங்களுக்கும் இடையிலான பிரிவினையை உறுதியாகக் காட்டியது தற்செயல் நிகழ்வு அல்ல. உண்மையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு ஜனாதிபதி கோத்தாபயவுக்கு எதிராக உறுதியுடன் வாக்களித்தது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் 75 வருடங்களுக்கு மேலாக ஒற்றையாட்சியில் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்த போதிலும் சிங்கள ஆட்சியின் கீழ் வாழ விரும்பவில்லை என்பதையும் இது காட்டுகிறது. சரியாகச் சொல்வதானால், மேலே உள்ள யாவற்றுக்கும் நேர்மாறானதாக நாம் வாதிடலாம்.தற்செயலாக, தமிழர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருந்தால், அவர்களும் சிங்களவர்களைப் போலவே செய்திருப்பார்கள்: எல்லா அதிகாரங்களையும் தங்களுக்குள் குவித்து, அரசையும் அவர்களைப் போல தோற்றமளிக்க வேண்டும்.எனவே, இது ஒரு வகுப்புவாத பிரச்சனை மட்டுமல்ல, அரசியலமைப்பு பிரச்சனையும் கூட. எமது ‘தேசிய அரசில் ’ வெவ்வேறு தேசங்கள் சிறுபான்மையினரிடமிருந்து வேறுபட்ட இனம், மதம், மொழி, கலாசாரம், பழங்கால பௌத்த பாரம்பரியம் கொண்ட இனம், வேறு தேசம் என்று முதலில் கூறிக் கொண்டவர்கள் சிங்களவர்கள். சிங்கள- பௌத்த தேசியவாதத்தின் அரசியல் ஆதிக்கம் மூன்று நிலைகளில் முன்னேறியுள்ளது.முதலாவது சிங்கள-பௌத்த தேசியவாதத்தை இலங்கை தேசியவாதத்துடன் சமன்படுத்துவது. இரண்டாவது கட்டம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தை இலங்கை அரசுடன் சமன்படுத்துவது. மூன்றாவது கட்டம் சிங்கள – பௌத்தம், தமிழ் பேசும் வடக்கு, கிழக்கைக் கைப்பற்றுவதற்கு அரசின் பெயரால் செயற்படுவது. இதன் விளைவாக,நிலைகொண்டுள்ள இராணுவம் வேறு இனத்தைச் சேர்ந்தவர் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறது, ஆளப்படுவோரின் மொழியைப் பேசுவதில்லை, அதன் மதத்தைப் பின்பற்றுவதில்லை, மேலும் ஆளப்படுபவர்களின் விருப்பத்திற்கு எதிராக ஆட்சி செய்கிறது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பலவற்றை விட்டுக்கொடுத்த சிங்களவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். இலங்கையில் சிங்கள பௌத்த தேசம் மட்டுமன்றி, இனம், மதம், மொழி, கலாசார வேறுபாடுகள் கொண்ட இலங்கைத் தமிழர் தேசமும் இருப்பதுதான் பிரச்சினை. இந்த இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரினால்வலியுறுத்தப்பட்டது . வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் வாக்களிப்பதன் மூலம் (தமிழ் எம்.பி.க்கள் எப்பொழுதும் வாக்களிக்காதவர்களாகவே இருப்பார்கள்) அரசியலமைப்பு முறைமையினால் ஆளப்படுவதை தமிழர்கள் விரும்பவில்லை. கிழக்கு மாகாணத்தில் பலத்த பிரசன்னத்துடன் தனித்துவமான மதம் மற்றும் கலாசாரம் கொண்ட முஸ்லிம் சமூகமும் உள்ளது. புலிகளால் வெட்கக்கேடான முறையில் பாதிக்கப்பட்ட இந்தச் சமூகம் இப்போது சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் தாக்கத்தை உணர்ந்துள்ளது. இலங்கையின் சோகம் என்னவென்றால் எமது பன்மைதன்மை வாய்ந்த சமூகத்தின் யதார்த்தத்தை மறுப்பது மற்றும் இந்த வேறுபாடுகளை இராணுவ பலம் அல்லது கும்பல் வன்முறை மூலம் தீர்க்க முடியும் என்று நினைப்பதுதான். சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் கொள்கைகளும் அரசியலும் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பிரிவின் பிரதம குருமார்கள் அதிகாரப் பகிர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் வீட்டோ செய்துள்ளனர். சிங்கள-பௌத்தத்தின் அரசியல் சித்தாந்தம் அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் ‘மத ரீதியாகவும்’ செயற்படுவதாகத் தெரிகிறது. ஜனரஞ்சகவாதம், சர்வாதிகாரம், இனவாதம் மற்றும் வெளிப்படையான இராணுவவாதம் ஆகியவற்றின் கலவையானது, மதகுருமார்களின் ஆதரவுடன், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜேர்மனியில் பாசிசத்தின் எழுச்சியைக் குறிப்பிடுகிறது . சமஷ்டி அல்லது அதிகாரப் பகிர்வைகூட நிராகரிப்பதற்கு சிங்கள பெரும்பான்மையினரை சிங்கள அரசியல்வாதிகள் நம்ப வைத்துள்ளனர். எவ்வாறாயினும், எமது ஒற்றையாட்சி அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்த மட்டுமே உதவியது.ஒரு ஒற்றையாட்சிஅரசாக போரினால் பிரதேசம் ‘ஒருங்கிணைக்கப்பட்ட’ போதிலும், பிளவுபட்ட மக்கள்அதிகளவுக்கு ஒருபோதும் ஒன்றுபடவில்லை.எமது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 75 ஆண்டுகளுக்குப் பின்னராக இது இருக்கின்றது . ஜனநாயகத்தின் கீழ் நாட்டை ஒன்றாக வைத்திருப்பதற்கான ஒரே வழிமுறை அதிகாரப் பகிர்வு அல்லது சமஷ்டி முறைமையினால் மட்டுமேயாகும்.இதை இராணுவம் ஒன்றாக வைத்திருக்க முடியும் – ஆனால் எவ்வளவு காலத்திற்கு ? இக்கட்டுரையின் முழு வாதமும் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் கடவுள் கொடுத்த உரிமை சிங்கள மக்களுக்கு இல்லை என்பதேயாகும்.ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அதிகாரம், சுதந்திரத்தின் போது அளித்த வாக்குறுதியின் துரோகம் மற்றும் சமீபத்திய உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதன் மூலம் – அரசின் உள் மற்றும் வெளி வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு இந்த அதிகாரம் உள்ளது. கொழும்பு டெலிகிராப் Thinakkural.lk
-
தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம் ! 01 JUL, 2023 | 11:54 AM யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் சனிக்கிழமை (01) காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் குடியிருக்கும் பெண்கள், குழந்தைகள் உட்படப் பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்துத் தகவலறிந்த பொலிஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். “மக்களுக்கு மனநோய் வேண்டாம்”, “மின்காந்த அலை, காற்றுக்கு நஞ்சு”, “மக்களை உடல், உள ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்”, “எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்”, “நகர்த்து நகர்த்து தொடர்பாடல் கோபுரத்தை நகர்த்து” போன்ற சுலோகங்கள் அடங்கிய பாதாதைகளைத் தாங்கியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் நெருக்கமாகக் குடிமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளர்களும் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனாலேயே கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம் ! | Virakesari.lk
-
இலங்கை விமான சேவையில் 6 ஆயிரம் பேர் தொழிலை இழப்பர் : அமைச்சர் நிமல் 01 JUL, 2023 | 10:12 AM (எம்.மனோசித்ரா) இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இலங்கை விமான சேவை எமிரேட்ஸ் நிர்வாகத்தின் கீழ் காணப்பட்ட போது 30 மில்லியன் இலாபமீட்டியது. அதன் பின்னர் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்திடம் விமான சேவையொன்று உள்ளது என்பதை ஒரு வெற்றியாகக் கருதுகின்றோம். ஆனால் அந்த காரணத்துக்காக அதிகளவான பணம் செலவிடப்படுகிறது. இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. எனவே தான் அதனை மறுசீரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அரசாங்கத்திடம் 51 சதவீத பங்குகளும் , ஏனைய தனியார் முதலீட்டாளர்களிடம் 49 சதவீத பங்குகளும் காணப்படும் வகையில் இந்த மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எமது சட்டத்துக்கமைய விமான சேவையில் 49 சதவீதத்துக்கும் அதிக பங்குகளை வெளிநாட்டு தனியார் துறைக்கு வழங்க முடியாது. ஆனால் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க முடியும். இந்த மறுசீரமைப்பை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை உலக வங்கியின் கீழ் இயங்கும் நிறுவனமொன்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே விலைமனு கோரல் ஆவணம் தயாரிக்கப்படும். எவ்வாறிருப்பினும் தற்போது நிலைமை ஓரளவுக்கு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு விமான சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இஸ்ரேல் சிவில் விமான சேவைகள் குழுவொன்று நாட்டுக்கு விஜயம் செய்துள்ளது. அதேபோன்று ஈரான், ஷீஷெல்ஸ் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து நேரடியாக விமான சேவையை முன்னெடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பங்களாதேசுக்கு துறைமுகத்தில் ஒரு பகுதியை விற்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். எவ்வாறிருப்பினும் பங்களாதேஷ் ஏதேனுமொரு முனையத்தை அபிவிருத்தி செய்ய விரும்பினால் அதற்கான வாய்ப்பினை வழங்க தயாராகவே உள்ளோம். மறுசீரமைப்புக்கள் தாமதமடைந்துள்ளமை உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு 9.5 பில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனையும் , மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். இலங்கை விமான சேவையில் 6 ஆயிரம் பேர் தொழிலை இழப்பர் : அமைச்சர் நிமல் | Virakesari.lk
-
இலங்கையின் நெருக்கடிகளுக்கு பூச்செண்டுகளாக சர்வதேச உதவிகள் அழித்து விட வேண்டாம் - அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் 01 JUL, 2023 | 09:38 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் பொருளாதார நெருக்களை தீர்க்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்புகள் பூச்செண்டுகளாக கிடைக்கப்பெறுகின்றன. இவற்றை பயன்படுத்தி நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதா அல்லது அழிவுக்கு வழிவிடுவதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், அஸ்வெசும திட்டம் குறித்து பல்வேறு முரணான கருத்துக்கள் வெளியிடப்படுகிறது. உண்மையில் உலக வங்கியின் ஒத்துழைப்புகனை பெற்றே இவ்வாறான மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்கிறோம். சர்வதேச நாணய நதியத்துடன் வெற்றிகரமாக ஒப்பந்தங்களை நிறைவு செய்தமையினால் உலக வங்கி உட்பட பல சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை செய்கின்றன. எனவே இந்த ஒத்துழைப்புகளை நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும். கடன் மறுசீரமைப்புகளும் எதிர்கால இலங்கையின் அபிவிருத்திக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே தற்போது படிப்படியாக நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுவருகிறோம். இலங்கைக்கு 50 ஆயிரம் தொன் உரம் இலவசமாக கிடைத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் மற்றும் ஜேர்மன் உட்பட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது, எமது திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். எனவே நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் சர்தேச உதவிகளும் ஒத்துழைப்புகளும் மலர்ச்செண்டுகளாக கிடைக்கப்பெறுகின்றன. இவற்றை மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் நாட்டின் எதிர்காலததிற்காகவும் பயன்படுத்த வேண்டும். அவ்வர்று செய்தால் நாடு முன்னேற்றம் அடையும். இல்லை என்றால் நெருக்கடிகளும் அழிவுகளுமே மிச்சமாகும் என்றும் தெரிவித்தார். இலங்கையின் நெருக்கடிகளுக்கு பூச்செண்டுகளாக சர்வதேச உதவிகள் அழித்து விட வேண்டாம் - அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் | Virakesari.lk
-
பிரமியின் ’கனதி’ சிறுகதை நூல் வெளியீடு Posted on June 30, 2023 by தென்னவள் 11 0 ‘அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை’ கலை, இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் சேனையூர் பிரம்மியா சண்முகராஜாவின் கனதி சிறுகதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் திங்கட்கிழமை (03.07.2023) காலை 9.30 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருகோணாமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்திபனும், கௌரவ விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தமும், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர் க.ராஜனும் கலந்துகொள்ளவுள்ளனர். நூலின் வெளியீட்டு உரையை இலக்குமி பிரசுராலய இயக்குனர் கரவை மு.தயாளனும், நூல் விமர்சனத்தை வ.முரளிதரனும் வழங்க, நூல் வெளியீட்டை கவிஞர் ஷெல்லிதாசன் ஆரம்பித்து வைக்க, ஏற்புரையை நூலாசிரியர் வழங்குவார். பிரமியின் ’கனதி’ சிறுகதை நூல் வெளியீடு – குறியீடு (kuriyeedu.com)
-
இணைய விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த யாழ். இளைஞன் Posted on June 29, 2023 by தென்னவள் 8 0 இணைய விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாண இளைஞன் பணத்தினை இழந்துள்ளார். இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் அந்த மோட்டார் சைக்கிள் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை அடுத்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொடர்பு இலக்கத்துடன் இளைஞன் தொடர்பு கொண்ட போது , மோட்டார் சைக்கிளுக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால் , மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கிறோம் என நம்பிக்கை தரும் விதமாக கதைத்துள்ளார். அதனை நம்பி இளைஞன் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் செயல் இழந்துள்ளது. அதனையடுத்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த கொழும்பு விலாசத்தை தேடி சென்ற போது , விலாசம் பொய்யானது என தெரிய வந்துள்ளது. அதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார். இணைய விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த யாழ். இளைஞன் – குறியீடு (kuriyeedu.com)