Everything posted by ரசோதரன்
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
காட்சி 3 (அமிர்தமும் பாரதமும் வீட்டு வாசலை அடைந்து, அமிர்தம் வீட்டிற்குள் செல்ல, பாரதம் அருள் புரியும் அபிநயத்துடன் வாசலில் நிற்கிறார். அமிர்தம் திரும்பி பார்த்து திகைக்கிறார்.) அமிர்தம்: குடி கெட்டுது................. அபிநயத்தை விட்டிட்டு கொஞ்சம் அடக்கமாக வாருங்கோ. விசயம் வெளியில தெரிஞ்சா, நீங்கள் மறைஞ்சிடுவீங்க......... கும்பிடப்போன தெய்வத்தை கூட்டிட்டு வந்த சாமியார் என்று ஒரு பெயரும் வைத்து, பாத்ரூமிற்கு போனாக்கூட போட்டோ எடுத்துப்போட ஒரு ஆள் வைக்க, அந்த அதிர்ச்சியிலயே நான் என் பேத்தியின்ர கல்யாணத்தை பார்க்காமல் போய் சேர்ந்துடுவன். பாரதம்: கோவில் கதவைத் திறந்தவுடனேயே அப்படி நின்று நின்று பழகிப்போயிட்டுது............... (இருவரும் வீட்டின் உள்ளே செல்கிறார்கள். உள்ளே அமிர்தத்தின் கணவர் தட்சணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார்.) அமிர்தம்: (பாரதத்தை நோக்கி) தெரியும் தானே........... இவர்தான் என் வீட்டுக்காரர், தட்சணாமூர்த்தி. பாரதம்: (சிரித்தபடி) தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கித்தானே இருப்பார்............... இவர் ஏன் வடக்கு பார்த்து இருக்கிறார்? தட்சணாமூர்த்தி: (ஒரு மாதிரி பாரதத்தை பார்த்தபடி) ம்................ வாடைக்காற்று முகத்தில அடிக்கட்டும் என்று இருக்கிறன். அது சரி, இது யார், புது ஆளா தெரியுது? பாரதம்: நான் ஒன்றும் புது ஆளில்லை, உங்களிற்கு முன்னாலேயே நான் இங்கே இருக்கிறன்................ தட்சணாமூர்த்தி: வடக்கு பார்த்து இருந்த நேரத்தில வாசலிற்குள்ளால ஒரு வில்லங்கம் வந்திருக்குது போல............... அமிர்தம்: சும்மா இருங்கோ, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இவ என்ரை பெரியம்மாவோட மகள், பெயர் பாரதம். தட்சணாமூர்த்தி: உனக்கு ஒரு பெரியம்மா இருக்கிறதே எனக்கு தெரியாது.......... எந்த ஊரில இருக்கிறா? அமிர்தம்: இப்ப பெரியம்மா இல்லை… தட்சணாமூர்த்தி: பெரியம்மா என்றா எப்பவும் பெரியம்மா தானே........... அது என்ன இப்ப அவ பெரியம்மா இல்லை என்று, (மெதுவாக) ஏன் உங்களிக்குள்ள ஏதும் குடும்ப பிரச்சனையே......... அமிர்தம்: (சலிச்சபடி) இப்ப அவ உயிரோடு இல்லை அப்பா............... வீட்டுக்கு வந்த பிள்ளையை வா என்று சொல்லாமல், சும்மா வளவள என்று. தட்சணாமூர்த்தி: அதுவும் சரிதான், பாரதம் வா பிள்ளை. பாரதம்: நீங்கள் என்ன இப்படி அநியாயத்திற்கு உடனேயே ஒத்துப்போகிறீங்கள், எங்களின் வீட்டில என்றால் தாண்டவம் தான். ஒரு ஆட்டம் ஆடித்தான் அடங்குவம்........ அமிர்தம்: தாயே, அந்த ஆட்டத்தை எல்லாம் நீ மேல போய் ஆடு, இப்ப எங்களை மாதிரி இரு. தட்சணாமூர்த்தி: அது எங்க மேல? எங்கட வீட்ல மாடி கூட இல்லை. அமிர்தம்: மேயில போய் ஆடு என்றது மேல என்று வாய் தவறி வந்திட்டுது............ சும்மா சும்மா கேள்வி கேட்காதேங்கோ............. எனக்கு பிரசர் வந்துடும்.................. தட்சணாமூர்த்தி: பிரசரோட இங்கிலீசும் சேர்ந்து வருது............ சரி பிள்ளை நீ மேயில போய் ஆடு. சீச்சீ, என்ன இது, இந்த மனிசியோட சேர்ந்து நானும் மேயில ஆடு, மேல ஆடு என்று புலம்பிறன். இது அமிர்தத்தின்ரை ஏரியா, அவளே பார்த்துக் கொள்ளட்டும். பாரதம்: அது என்ன அவவின்ட ஏரியா, உங்கட ஏரியா? தட்சணாமூர்த்தி: பிள்ளை பாரதம், சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் அவளுடையது, பெரிய விசயங்கள் எல்லாம் என்னுடைய முடிவுப்படியே நடக்கும். அதால தான் எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை. (அமிர்தம் முறைக்கிறார்.) பாரதம்: அது எப்படி நீங்கள் மட்டும்தான் பெரிய விசயத்தில முடிவு எடுப்பியள்? ஏன், அவவிற்கு முடியாதோ? தட்சணாமூர்த்தி: முடியாதோ முடியாதோ என்று முடிஞ்சு வைக்காதே பிள்ளை............. நீ ஒரு வில்லங்கம் பிடிச்ச ஆள். முதலில சின்ன விசயங்கள் எது, பெரிய விசயங்கள் எது என்று கேள். பாரதம்: சரி, சின்ன விசயங்கள் எது? தட்சணாமூர்த்தி: சின்ன விசயங்கள் என்றால் என்ன சமைக்கிறது, எந்த உடுப்பு போடுறது, எவ்வளவு காசு செலவழிக்கிறது, எவ்வளவு சேர்க்கிறது, வீடு வாங்கிறது, விற்கிறது, யாரோட கதைக்கிறது, யாரோட முறைக்கிறது............... இப்படியான விசயங்கள் தான், இதெல்லாம் அமிர்தத்தின்ர முடிவுதான், நான் தலையிடுறது இல்லை. பாரதம்: அப்ப எது பெரிய விசயங்கள்............ நீங்கள் முடிவெடுக்கிறது? இதைவிட வேற ஏதும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. தட்சணாமூர்த்தி: பெரிய விசயங்கள் என்றால் அமெரிக்கா ஈரானுக்கு அடிக்காலாமோ இல்லையோ, சைனீஸ் பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்திறது, மகிந்தவில எப்ப வழக்குப் போடுறது............ இது மாதிரியான் விசயங்கள்......... இவை எல்லாம் என்னுடைய தனிப்பட்ட முடிவுகள் தான், அமிர்தம் தலையிட மாட்டா.................... பாரதம்: (சிரித்தபடியே) இப்ப தெரியுது ஏன் உங்களுக்குள்ள சண்டை சச்சரவு இல்லை என்று. ம்............... எங்கட வீட்ல நிலமை வேற மாதிரி, சிவம் பெரிசா சக்தி பெரிசா என்று............ அண்டமே நடுங்கிப்போகும்................... (அமிர்தம் தொண்டையைச் செருமிகிறார். பாரதம் வாயை கையால் மூடுகிறார்.) தட்சணாமூர்த்தி: நான் வேணுமென்டால் உன்னுடைய வீட்டுக்காராரோட ஒருக்கால் கதைச்சுப் பார்க்கட்டே? அமிர்தம்: நீங்கள் ஓன்றும் கதைக்கவேண்டாம், அதுகள் நல்லாத்தான் இருக்குது. பாரதம் சும்மா கதை சொல்லிறா, பாரதத்தின்ரை வீட்டுக்காரர் நல்ல ஆள் தான். (லக்ஷனா உள்ளே வருகிறார்.) லக்ஷனா: (பாரதத்தை நோக்கி )அம்மாச்சி மாதிரியே இருக்கிறீங்கள், சகோதரம் என்றே சொல்லலாம். தட்சணாமூர்த்தி: சொல்லலாம் என்ன, சகோதரமே தான். லக்ஷனா: எனக்கு தான் இவங்களை தெரியவில்ல, அப்பப்பாவிற்கு தெரிஞ்சிருக்குது. தட்சணாமூர்த்தி: தெரியவில்லை என்று சொன்னால், பிரசரும் வில்லங்கமும் சேர்ந்து வரும்............. அம்மாச்சியின்ர பெரியம்மா மகள், பெயர் பாரதம். லக்ஷனா: நைஸ் டு மீட் யூ பாரதம் அம்மாச்சி. பாரதம்: நைஸ் டு மீட் யூ லக்ஷனா. லக்ஷனா: அட, உங்களிற்கு இங்கிலீஷ் தெரியுது, என்னுடைய பெயரும் தெரிஞ்சிருக்குது. வெளியில ஒருக்கா போட்டு உடனே வருகிறன்............ உங்களோட நிறைய கதைக்கவேணும் போல இருக்குது. தட்சணாமூர்த்தி: நானும் உன்னோட வருகிறன் பிள்ளை. (இருவரும் செல்கிறார்கள்.) அமிர்தம்: என்ன, வேலையலை காட்டிற மாதிரி தெரியுது. பேத்தியோட இங்கிலீசில நடக்குது. இந்த சித்து வேலையெல்லாம் காட்டக்கூடாது என்று முதலே சொல்லியிருக்கிறன். என்னுடைய பேத்திக்கு எப்பவும் என்னைத்தான் பிடிக்கும்......... பாரதம்: அது பிள்ளை சொன்னதை நான் அப்படியே திருப்பிச் சொன்னனான்.......... மற்றபடி உன்னுடைய பேத்தியை நான் என்ன கூட்டிக்கொண்டு கைலாயமே போகப் போகிறன்.............. எனக்கும் ஒரு பெண்பிள்ளை இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்..................ம்.......... அமிர்தம்: உங்களுக்கும் கவலையென்றால் எங்க போய் சொல்லுறது.......... சரி வாங்கோ போய் சாப்பிடுவம்............... (தொடரும்...................)
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
🤣.................... 'மூக்குத்தி அம்மன்' படம் வருவதற்கு சில வருடங்கள் முன்னரேயே இதை நான் எழுதிவிட்டேன்.................... ஆர். ஜே. பாலாஜி மேல் ஒரு வழக்கு போடலாம் போல் தெரிகின்றதே....................🤣. புதுமைப்பித்தன் இறங்கி வந்து அவருடைய கதையை திருப்பி திருப்பி எழுதும் எல்லோருக்கும் ஒரு போடு போடப் போகின்றார்...................🤣.
-
வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்
அவருடைய தரப்பை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றார் ரவீந்திரன்................ ஒரு வக்கீல் போல ஒரு தரப்பிற்காக வாதாடியிருக்கின்றார். சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம். அந்தச் சொற்கள் இந்தக் கட்டுரையை ஒரு 'சமூக ஊடக அலட்டல்' என்ற அளவிற்கு தரமிறக்கி விடக்கூடும். குறிப்பிடப்பட்டிருக்கும் சில வருடங்களும் தப்பானவை என்றே தெரிகின்றது, உதாரணம்: அமெரிக்க உளவுத்துறையினால் அமெரிக்க - சீன யுத்தம் தொடங்கும் வருடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு.............................
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
காட்சி 2 (அமிர்தம் அம்மன் கோயிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்.) அமிர்தம்: அம்மாளாச்சி, நான் சின்னனாக இருந்தபோது சின்னப்பிள்ளைகளை ஒருவரும் மதிக்கவில்லை. எனக்கு வயசானப் பிறகு வயசு போனவர்களை ஒருவரும் மதிக்கினம் இல்ல. பூமி சுத்துது, நான் மட்டும் ஆணி அடிச்சு வைச்ச மாதிரி அப்பிடியே நிற்கிறன். ஆயிரம் கண்ணில ஒரு கண்ணை திறந்து என்னைப் பார் தாயே.................... (அமிர்தம் கண்ணை மூடி, முணுமுணுத்து கும்பிடுகிறார். கண்ணைத் திறந்து பார்க்கும்போது அவரின் பக்கத்தில் ஒருவர் நிற்கிறார்.) அமிர்தம்: (ஆச்சரியமாக) ம்ம்ம்….திடீரென்று வந்து பக்கத்தில நிற்கிறீங்கள், புதுசா வேற இருக்கிறீங்கள், ஆனா பழகின மாதிரியும் இருக்குது….......... எங்கயிருந்து வாறீங்கள்? பாரதம்: (கோயில் உள்ளே கையை காட்டி) அங்கேயிருந்து தான் நான் வருகிறேன். அமிர்தம்: யார் நீங்கள் ஐயரோட வீட்டுக்காரியே.............. ஐயரின் ஒரு ஆளை எனக்கு தெரியும்.......... ஐயருக்கு இன்னுமொரு வீடு இருக்கிற சங்கதி எனக்கு தெரியாது............ அதுவும் சரிதான், இதெல்லாம் என்ன சொல்லிச் செய்யிற விசயமே..................... (பாரதம் சிரிக்கிறார்). பாரதம்: நான் ஐயரோட வீட்டுக்காரியில்ல........... ஐயனோட வீட்டுக்காரி. (அமிர்தம் எதுவும் புரியாமல் முழிக்கிறார்). அமிர்தம்: எந்த ஐயன்…. பாரதம்: அண்டசராசரத்தையும் படைத்து, படைத்ததெல்லாவற்றையும் அழித்து, அழித்ததை எரித்து, எரித்ததை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு திரியும் அந்த ஐயனோட வீட்டுக்காரி நான். அமிர்தம்: இது என்ன கூத்து தாயே, நேரிலயே வந்துவிட்டீர்கள். பக்தையே உன் பக்தியில் நாம் மனமுருகிவிட்டோம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டு, கையில ஒரு வரத்தை கொடுத்துவிடாதே அம்மா................ பாரதம்: எல்லா மானிடருமே முதலில் எங்களிடம் கேட்பது வரம்தான்........... உனக்கு ஏன் வேண்டாம் என்கிறாய், அமிர்தம்? அமிர்தம்: கடவுளிடம் வரம் வாங்கி, இதுவரை இந்த பூமியில நல்லா வாழ்ந்த ஒரு மனிதனும் கிடையாது. கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும் பின்னால் பிடுங்கி விடுவீர்கள். இருந்தததையும் இழந்து, ஓடி ஒழிந்து, அழிந்தவர்தான் எல்லோரும். பாரதம்: நன்றாகவே பேசுகிறாய் அமிர்தம். ஆனால் நான் இப்போது வரம் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பூலோகத்தில் சில நாட்கள் உன்னோடு தங்கியிருக்க வந்துள்ளேன். அங்கு எனக்கு நிம்மதியே இல்லை. அமிர்தம்: அது எப்படியம்மா முடியும்? கடவுள் என்று தெரிந்தாலே உன்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டார்களே. கடவுளின் அவதாரம் என்று சொன்னவர்களையே அறைக்குள் வைத்து படம் எடுத்து, அல்லோலகல்லோலம் செய்தார்கள். முதலில், நீங்கள் யாருடைய கடவுள் என்கிற பிரச்சனையிலயே உலகம் அழிந்துவிடும்................. பாரதம்: நீ நான் கடவுள் என்று எவரிடமும் சொல்லாதே. நான் சாதாரண மானிடர் போல இருந்துவிட்டு போகிறேன். அமிர்தம்: அது சரி தாயே............. நீங்கள் இங்கு வரவேண்டிய அளவிற்கு அங்கு என்ன பிரச்சனை? பாரதம்: ஒன்றா, இரண்டா சொல்லுவதற்கு........... சின்னவனுக்கும் பெரியவனுக்கும் சண்டை................ ஒரு மாம்பழத்திற்காக கோவணத்தோட ஓடித் திரிகிறான் சின்னவன். இவர் என்னவென்றால், தலையில் கூட ஒருத்தியை வைத்திருக்கிறார். நீங்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், மிக ஒற்றுமையாகவும், நாங்கள் படைத்த எல்லா உயிர்களிலும் மிகச்சிறப்பாக வாழ்கிறீர்கள். அதுவும் தான் எப்படியென்று பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன். (இருவரும் நடக்கிறார்கள்) அமிர்தம்: மனிதர்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை போல தெரிகிறது......... சரிதான், இருநதுதான் சில நாட்கள் பார்த்து விட்டு போங்கள். அதுசரி உங்களை யாரென்று நான் மற்றவர்களிடம் சொல்லுவது? பாரதம்: உன் பெரியம்மாவின் மகள் என்று சொல்லு. பெயர் கூட பாரதம் என்று சொல்லிவிடு. அமிர்தம்: ம்ம்ம்… துருவித் துருவி கேட்பார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று எக்காரணத்தைகொண்டும், எந்த சந்தர்ப்பத்திலும் உங்களின் சித்துவிளையாட்டுக்கள் எதுவும் இங்கு காட்டக்கூடாது. பாரதம்: நானே சித்துவேலைகளினால் மனம் நொந்துபோய் இங்கு வந்துள்ளேன். எதுவுமே நடக்காது, நீ பயப்படத் தேவையில்லை. அமிர்தம்: என்னுடைய குடும்பத்தைப் பற்றீத் சொல்லத் தேவையில்லைம், எல்லாமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாரதம்: சில விசயங்கள் எனக்கு புரியவில்லை. உனக்கு நல்ல பெயர் அமிர்தவல்லி, உன்னுடைய மகளுக்கும் பார்வதி என்றுஎன்னுடைய பெயர்தான், உன் மகளின் மகளுக்கு மட்டும் லக்க்ஷனா என்று…. அமிர்தம்: இதுதான் மனிதனின் சின்ன சின்ன சித்துவேலைகள். என் மருமகனுக்கு நடிகை சுலக்க்ஷனாவை நல்லா பிடிக்கும், ஆனால் அப்படியே வைக்கமுடியாது, பார்வதி கொப்பரத்தில ஏறி, கொடி பிடித்துவிடுவாள். அதுதான் இப்படி ஒரு சின்ன மாற்றம். எல்லா இடமும் ஒரே கதைதான், அங்கே தலையில வைத்திருந்தால் இங்கே தலைக்குள்ள வைத்திருப்பார்கள். உரிக்க உரிக்க தோல் கழட்டும் வெங்காயம் போன்றவர்கள் மனிதர்கள்.......... கண்ணில கண்ணீர் மட்டும் தான் மிஞ்சும்............... (தொடரும்........................)
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
இது நான் சில வருடங்களின் முன்னர் எழுதிய நாடகம் ஒன்று. இங்கு யாழ் களத்தில் இருந்தால் இது யாருக்கேனும் உபயோகப்படலாம் என்றும், அத்துடன் நான் எழுதியவை அப்படியே மறைந்து போகாமல் இருக்கவும் கூடும் என்ற நோக்கில் இங்கு இவற்றை பதிவிடுகின்றேன். மோகன் அண்ணாவிற்கும், கள நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் அருமையான சிறுகதையை தழுவியே இந்த நாடகத்தை எழுதினேன். அவருடைய இந்தக் கதையும், வேறு பல தலை சிறந்த கதைகளும் சென்னை வாசிகசாலை இணையத் தளத்தில் கிடைக்கின்றது. அவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..................... https://www.chennailibrary.com/ppn/story/kadavulumkandasamyppillaiyum.html அம்மனும் அமிர்தமும் காட்சி 1 (அமிர்தவல்லி பாட்டி தரையில் அமர்ந்திருக்கிறார். பாட்டியின் மகள் பார்வதி கையில் வேலையுடன் அவசரத்துடன் அங்கும் இங்கும் ஓடிகிறார். பாட்டியின் பேத்தி லக்க்ஷனா மொபைல் போனை நோண்டியபடி இருக்கிறார். வீட்டு போன் அடிக்கின்றது.) அமிர்தம்: யாராவது அந்த போனை எடுங்கோவன். (லக்க்ஷனாவை நோக்கி) இவள் ஒருத்தி காதுக்குள்ள ஒன்றை போட்டுவிடுவாள். எங்கட காலத்தில காது கேட்காவிட்டால் மிஷின் போடுவினம், இப்ப காது கேட்கக்கூடாது என்று போடினம். பார்வதி: (கொஞ்சம் அதட்டலாக) அது சும்மா சும்மா அடிக்கும், எடுக்கத் தேவையில்ல. அமிர்தம்: யாரோ ஒரு ஆள் எங்கட நம்பரை தேடி எடித்து அடிக்கிறான், எடுக்காமல் விடுகிறது மரியாதை இல்லை. நாலு சனத்தை மதிச்சு பழகவேண்டும். இப்ப சனமும் இல்ல, சாத்திரமும் இல்ல, ஆத்திரம் மட்டும்தான் எல்லாரிட்டயும் இருக்குது. லக்க்ஷனா: (காதிலிருந்து கழட்டியபடி) அம்மாச்சி, ம்ம்ம்…........ இப்பிடித்தான் நீங்கள் ஒருவனை மதிச்சு, அவனும் எறும்புக்கு மருந்து அடிக்க வந்து, இப்ப இந்த தெருவில ஒரு வீட்லயும் எறும்பே இல்ல. எல்லா எறும்பும் எங்கட வீட்லதான் குடியிருக்கிது. பார்வதி: நான் அவனோட எவ்வளவு சண்டை போட்டன்................... அவன் கடைசியா உங்கட வீட்ல யாருக்கோ சர்க்கரை வியாதி இருக்கு, எறும்பு இந்த வீட்டைவிட்டு போகவே போகாது என்று சாபம் போட்டுவிட்டு போனான். அமிர்தம்: வயசு போனா எல்லாருக்கும் அது வரும். சொல்லிக்காட்டத் தேவையில்ல. நாங்கள் என்றாலும் நல்லா ஓடியாடி உழைச்சோம்......... இப்பத்தான் இது எல்லாம் வருது............ இவ்வளவு நாளும் கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்பிடியே இருந்தனாங்கள்தானே. பார்வதி: நான் ஏன் சொல்லிக்காட்டிறன்? வந்தவனுக்கு தேவையில்லாத வீட்டுக் கதைகளை சொல்லி, அவன்தான் வாசலில நின்று எல்லாருக்கும் நியூஸ் வாசிச்சு விட்டுப்போனவன். அமிர்தம்: (மெல்ல எழுந்தபடி) லக்க்ஷனா, அந்தக் கண்ணாடியை எடுத்து தா பிள்ளை. ஏதாவது நியூஸ் பார்ப்பம். உறவுக்கு பகை கதை என்று என் கதை ஆயிட்டுது. (லக்க்ஷனா காதில் விழாததால் அசையாமல் இருக்க, பார்வதி கண்ணாடியை எடுத்துக்கொடுக்கிறார்.) அமிர்தம்: (கண்ணாடியை வாங்க்கிக்கொண்டே) நான் என்ரை பேத்தியைத்தானே கேட்டனான்................ பார்வதி: அவவின்ட கண்ணாடியையே நான் தான் தேடவேண்டும். இந்த வீட்ல மனிசரையும் அவை அவையின்ட சாப்பாட்டுக் கோப்பையையும் தவிர மற்றதெல்லாம் மறைந்து மறைந்து தோன்றும். ஒரு நாளுக்கு நானும் இப்படியே மறைந்து போகிறன்............... அமிர்தம்: (சிரித்தபடியே) அவசரப் படாத மகளே, மனிசர் மறைந்தா திரும்ப தோன்றுவினம் என்று உறுதியா சொல்ல முடியாது............. நீ வேற புண்ணியம் செய்தவள்.............. இல்லாட்டி எனக்கு மகளாக பிறந்திருப்பியே? (பார்வதி காதில் வாங்காமல் செல்கிறார். அமிர்தம் எழும்பி பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார்.) அமிர்தம்: கடைக்கு போன பெண் கடைசிவரை திரும்பவில்ல................... எப்படி திரும்பும்? வீட்ல அதுக்கு என்ன கொடுமையோ? எங்கயும் கிணத்திலயோ குளத்திலயோ குதிச்சு இருக்குமோ................... சீச்சீ, அப்படியெல்லாம் இருக்காது, எல்லாருக்கும் நீச்சல் வேற இப்ப தெரியும். நான் தான் ஒன்றையும் பழகாமல் இருந்திட்டன். லக்க்ஷனா: அம்மாச்சி, அடுத்த வரியையும் படியுங்கோ. அமிர்தம்: காரியச்செவிடு என்று சொல்லுறது, கொம்மா இவ்வளவு சத்தம் போட்டும் தவம் கலையாமல் இருந்தாய். ம்ம்ம்…….அடுத்த வரியில என்ன இருக்குது…பக்கத்து தெருவில பையனும் மிஸ்ஸிங் ஆச்சரியக்குறி ஆச்சரியக்குறி. இதென்னடி ரெண்டு நியூஸை கலந்து போட்டிருக்கிறாங்கள். (பார்வதி உள்ளே வருகிறார்.) பார்வதி: பாட்டியும் பேத்தியும் இப்படியான கதை என்றால் சிறப்பாக ஆராய்ச்சி செய்வீங்களே. அது ரெண்டு கதை இல்ல, ஒரு கதைதான். ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு ஓடியிட்டுதாம். அமிர்தம்: வேலியில இருக்கிற கதியால இழுத்துக்கொண்டு ஓடுகிற மாதிரி சாதாரணமாய் சொல்லுகிறாய். லக்க்ஷனா: அதொன்றும் அப்படியில்ல, அதுகள் விரும்பியிருக்கும், வீட்டுக்காரர் எதிர்த்திருப்பினம், வேற என்ன வழி இருக்குது? அமிர்தம்: என்னடி பிள்ளை, ஆ ஊ என்றா ஓடிறம் மறையுறம் என்று பீதியை கிளப்பிகிறீயள். ஒலிம்பிக் பக்கம் போய் ஓடுறதுதானே, பதக்கமும் கிடைச்ச மாதிரி.................... அதென்னடி பிள்ளை தணலை அள்ளி தண்ணிக்குள்ள கொட்டின மாதிரி ஒரு சத்தம் வருது. லக்க்ஷனா: உங்கட மகள் தான் மூச்சை புசுபுசுவென்று விடுகிறா. பார்வதி: தணலை தள்ளி தலையில கொட்டுங்கோ. பார்த்துப் பார்த்து வளர்த்துவிட, அவை ஓடிவினமாம், இவை பதக்கத்தோட நிற்பினமாம். பிள்ளையளுக்கு நல்ல புத்திமதி சொல்லுறத விட்டிட்டு, அதுகளோட சேர்ந்து கூத்து நடக்குது இங்க. அமிர்தம்: நான் எங்கயடி கூத்தாடிறன், சரியா நடக்ககூட முடியிதில்ல, முட்டி வாதம் வந்திட்டுது போல. பார்வதி: சும்மா கதையை மாத்தாதேங்கோ. டொக்டரிட்டை போனா, நீங்க நல்ல சுகமாக இருக்கிற மாதிரியும், டொக்டருக்குத்தான் ஏதோ வருத்தம் மாதிரியும் கதைக்கிறது. நீங்கள் சொல்லிச்சொல்லியே அந்தாளுக்கு இப்ப ஏதோ வந்துட்டுதாம். அமிர்தம்: அடியே, அந்தாளுக்கு வருத்தம் முதலே இருந்தது. நான் ஆட்களை பார்த்தவுடனேயே அப்படியே சொல்லிவிடுவன். அந்தாளுக்கு மூச்சு வாயாலயும் பேச்சு மூக்காலயும் வந்துகொண்டிருந்தது. பார்வதி: ஓம் ஓம், எல்லாரையும் நெளிச்சு இப்படியே நாக்கால மூக்கை தொடுங்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சனங்கள் எங்களை பழிக்கிறமாதிரி நடந்துவிடும். அமிர்தம்: அம்மா தாயே, நான் இனி ஒன்றும் சொல்ல வரவில்ல. பிறகு என்னாலதான் இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லவும் வேண்டாம். சரி, மெதுமெதுவா இந்த கோயிலுக்கு ஒருக்கா போட்டு வாறன். (தொடரும்.......................)
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
28 அம்ச சமாதான திட்டம் என்பது ரஷ்யாவினாலேயே தயாரிக்கப்பட்டது. அதை அவர்கள் அமெரிக்காவிடம் கொடுத்தார்கள். அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால் மார்க் ரூபியோவும், அதிபரின் குடியரசுக்கட்சியின் பிரதிநிதிகளும் கூட இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை நியாயம் அற்றது என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தத் திட்டம் உக்ரேன் முற்று முழுதாக ரஷ்யாவிடம் சரண் அடையும் நிலை என்றே அமெரிக்க பிரநிதிகளால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் மார்க் ரூபியோவின் தலைமையில் 28 அம்ச திட்டம் 19 அம்ச திட்டமாக மாற்றப்பட்டது. இதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இங்கு எவருமே அவர்களின் இலக்கை அடையாமல் போரை நிறுத்தி சமாதானத்துக்கு தயாராக இல்லை என்பதே உண்மை. நான்கு தரப்பிற்கும் வெவ்வேறான இலக்குகள் உள்ளன என்றே தெரிகின்றது: அமெரிக்கா - வழமை போலவே அமெரிக்காவிற்கு கிடைக்கப் போகும் குறுகிய மற்றும் நீண்ட கால பொருளாதார நலன்களே அமெரிக்காவின் பிரதான இலக்கு. அரசியல் பலம் மற்றும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தல் என்பன அடுத்த இலக்குகள். அதிபர் ட்ரம்ப் வந்த பின் அவரினதும், அவரைச் சார்ந்தவர்களினதும் (அவரது கட்சியினர் அல்ல) நலன்களும், அவர்கள் அடையப் போகும் பயன்களும் இன்னொரு இலக்காகி உள்ளது. இந்தச் சண்டையில் நோபல் பரிசு பெறுவது என்பது கூட ஒரு இலக்கு என்பது முகம் சுளிக்க வைக்கும் நிஜம். ரஷ்யா - அதிபர் புடின் ஒரு பலமான ரஷ்யாவை, சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்ததைப் போல, உருவாக்க நினைக்கின்றார். ரஷ்யாவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள், இரசாயன ஆயதங்கள் போன்றவற்றை தவிர்த்துப் பார்த்தால், இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் அருகில் கூட வரமுடியாத நிலையிலேயே ரஷ்யா உள்ளது. உக்ரேனுடன் சண்டை போடுவதற்கே ரஷ்யாவிற்கு வட கொரியாவின் பத்தாயிரம் வீரர்கள் களத்தில் தேவைப்படுகின்றார்கள். அதை விட வேலை வாய்ப்புகள் என்று சொல்லி அழைத்து வரப்பட்ட இலங்கை இளைஞர்கள் கூட கட்டாயமாக களத்துக்கு ரஷ்யாவால் அனுப்பப்படுகின்றார்கள். நேற்று தென் ஆபிரிக்காவில் இதே விடயத்தில், ரஷ்யாவின் போருக்கு ஆட்களை சேர்த்த குற்றத்திற்காக, சில பிரபலமான தென் ஆபிரிக்கர்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அதிபர் புடினின் நோக்கம் ஒன்றே. அது சமாதானம் அல்ல. அவருடைய நோக்கம் முழு உக்ரேனையும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே. ஐரோப்பா: யாராவது சண்டை பிடித்துக் கொள்ளட்டும், யாராவது அவர்களின் வளங்களை செலவழித்துக் கொள்ளட்டும், நாங்கள் அப்படியே இருந்து விடுவோம் என்று நினைக்கின்றார்கள். அத்துடன் ரஷ்யாவின் மீதும், அதிபர் புடினின் மீதும் பயமும் இருக்கின்றது. பலம் என்பதை விட, அதிபர் புடினின் மூர்க்கத்தனமே அவர்களை யோசிக்க வைக்கின்றது. அதிபர் புடினின் சாத்தான் - 2 நீண்ட தூர ஏவுகணை பரிசோதனை இந்த வாரமும் வெற்றியளிக்கவில்லை. அதிபர் புடின் இதை தொடரப் போவதாகவே சொல்லியிருக்கின்றார். ஐரோப்பாவும், அமெரிக்காவும் இப்படியான ரஷ்யாவின் நடவடிக்கைகளை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எதிர்க்கவே போகின்றார்கள். உக்ரேன் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம். உக்ரேன்: உக்ரேனியர்கள் தங்கள் இறைமைக்காகவே போராடுகின்றார்கள். உலகில் மிகப் பெரிய நாடுகளின் அருகில் அமைந்திருக்கும் சிறிய நாடுகளுக்கு தெரிவுகள் மிகக் குறைவு. உக்ரேனுக்கும் அதுவே நிலை. அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஆதரவளிக்கா விட்டால், உக்ரேன் இன்றே முடிந்தது. ஒரு தேசிய இனமே இந்த உலகில் இருந்து மெதுமெதுவாக மறைந்துபோகும். நீங்கள் கல்விச் சமூகம் என்று சொன்னதை நான் என்னை நோக்கியதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் பொதுவாக படித்து பட்டம் பெற்றவர்களையே நீங்கள் சொல்லுகின்றீர்கள் என்று நினைத்துவிட்டேன். துறைசார் நிபுணர்களை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே. பட்டங்கள் பெறுபவர்கள் எல்லோரும் கல்விச் சமூகமாக ஆவதில்லை.................. போகும் வழியில் கிடைத்த பட்டங்களாக எடுத்துக் கொண்டு, ஒரு புதிய சமூகமாக மாறாமல், தங்கள் வழியிலேயே வாழ்ந்து முடிப்பவர்களும் பலர் இருக்கின்றார்கள்......................
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அண்ணா, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பூர்வீகக் குடிகளை அழித்து, குடியேற்றங்கள் நிகழ்த்தி, இன்று வல்லாதிக்கம் செய்வோர்................... ஐரோப்பியர்களே, அண்ணா. அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களே. ஆங்கிலயர்களும், ஜெர்மனியர்களும், ஸ்கண்டினேவியர்களும், வேறு பல ஐரோப்பியர்களுமே அமெரிக்கர்கள். அன்றைய ஐரோப்பாவின் நீட்சி தான் இன்றைய அமெரிக்கா. முன்னர் ஜெர்மனியும், இங்கிலாந்தும், பிரான்சும், ஸ்பெயினும், இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் செய்த வல்லாதிக்கத்தையும், கொடுமையையும் தான் இன்றைய அமெரிக்கா வேறு வழிகளில் தொடருகின்றது . இவை எல்லாமே பாவப்பட்ட நிலங்கள் தான். கனடா, ஆஸ்திரேலியா கூட அதுவே. நான் முன்னர் வேறு ஒரு இடத்தில் எழுதியிருந்தது போல, புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கருத்துகளை எழுதும் நாங்கள் எவரும் இதே கருத்துகளை இவ்வளவு வெளிப்படையாக ஊரிலிருந்தால் எழுதியிருக்க முடியாது. மேற்கு நாடுகளில் குடிபுகுந்திருக்கும் நாங்கள் அனைவருமே பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்புகள் தான். மேற்கு நாடுகள் கொடுக்கும் வசதிகளும், சுதந்திரமும், பாதுகாப்புமே எங்களுக்கு துணிவைக் கொடுக்கின்றன. இதே காரணங்களே, வசதி - சுதந்திரம் - பாதுகாப்பு, எங்களை இந்த நாடுகளை நோக்கி புலம்பெயர வைத்ததற்கான பிரதான காரணங்கள் கூட. இவை எங்களுக்கும், எங்களின் பின்னால் எங்களின் சந்ததிக்கும் கிடைக்காது என்று கருதப்பட்ட தேசங்களை நாங்கள் குடியேறுவதற்கு உகந்தவை அல்ல என்று தவிர்த்தோம். இந்த மேற்கு நாடுகளில் எங்களினதும், குடும்பத்தினதும், அடுத்த சந்ததிகளினதும் இருப்பையும், எதிர்காலத்தையும் உறுதி செய்து விட்டு, தார்மீக மற்றும் ஆத்மாந்த ஆதரவுகளை எங்களுக்கு பிடித்தமான தேசங்களுக்கும், தலைவர்களுக்கும், கோட்பாடுகளுக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம். இது மிகச் சாதாரண ஒரு மனித இயல்பு. ஒரு நாட்டில் குடி இருந்து கொண்டு இன்னோரு நாட்டுக்கு எப்படி ஆதரவாக இருக்க முடியும் என்பது ஒரு கேள்வியே அல்ல. இது மிக இயல்பானது. ஈழத்தமிழர்களுக்கு தீர்வு என்று இன்று கல்விச் சமூகம் என்ன சொல்கின்றது என்று வசீ சொல்லியிருந்ததை மட்டுமே மேற்கோளாக எடுத்திருந்தேன். இணைந்த மாகாணசபை போராட்டத்தின், நோக்கத்தின் ஒரு மைல் கல்லாக இருந்திருக்கலாம் என்று தான் சொல்லியிருந்தேன். மற்றபடி இந்த விடயத்தில் கருத்து சொல்வதற்கு என்னால் முடியாது. அதற்கு திராணியும், மனப்பலமும் இல்லை. ரஷ்ய - உக்ரேன் போரை ஆதரிக்கவில்லை என்னும் உங்களின் நிலைப்பாடு மிகவும் சிறந்தது. இங்கு அமெரிக்காவிலும் அப்படியானவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அதிபர் ட்ரம்ப் கூட போர்களில் நம்பிக்கை அற்றவர் என்றே தன்னைச் சொல்லிக் கொள்கின்றார். ஆனால், உக்ரேன் தோற்று தன் நிலத்தை இழந்து, ரஷ்யா வென்று தான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்னும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நான் கருத்துகளை முன்வைக்கின்றேன். இந்தப் போரை ஆதரித்தல்ல.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
🤣................. ஏராளமான இந்தியர்களின் கதைகளில் ஒன்று இது: என்னுடன், என் அணியிலேயே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய நண்பனின் விசாவில் ஒரு சிக்கல் வந்தது. இன்னமும் சில மாதங்களே இருந்தன. அவனும் , மனைவியும் திரும்பிப்போக வேண்டிய ஒரு சூழல். மனைவி சில மாதங்கள், நாலோ ஐந்து மாதங்கள், கர்ப்பமாக இருந்தார். அவர்கள் உடனே திரும்பிப் போகவில்லை. சில மாதங்களின் பின் அவன் மட்டுமே திரும்பிப் போனான். மனைவி இங்கேயே தனித்து இருந்தார். பின்னர் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவி குழந்தையுடன் இந்தியாவுக்கு திரும்பிப் போனார். இவை மொத்தமுமே அவர்களின் குழந்தை அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே நிகழ்ந்தது. மருத்துவ காரணங்கள் எதுவுமில்லை. 'அமெரிக்கர்கள் பெரிய திருட்டுப் பயல்கள், சார்.................' என்று சொல்லிக் கொண்டே இங்கு நான் இருக்கும் இடத்திலேயே இரண்டு வீடுகளும், ஒரு வியாபாரமும் வாங்கும் இந்தியர்கள் பலர். அமெரிக்க பல்கலைக் கழகங்கள் உருப்படியற்றவை என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த உடனேயே, இங்கிருக்கும் சில பல்கலைக் கழகங்களுக்கு எப்படி அனுமதியைப் பெற்றுத் கொள்வது என்ற ஆராய்ச்சியிலும், முயற்சிகளிலும் இறங்கிவிடுவார்கள். இவர்களில் ஒருவர் கூட மாஸ்கோ பல்கலைக்கழகம் பற்றி அதன் பின்னர் பேசமாட்டார்கள். இந்தியர்கள் கோவிட் தொற்றின் போது ஸ்புட்னிக் வக்சீனுக்காக வரிசையில் நின்றார்களா, இல்லையே, ஃபைசர் வக்சீன் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். இங்கு எவராவது ஸ்புட்னிக் வக்சீன் போட்டார்களா................... இங்கு களத்திலேயே சில மாதங்களின் முன் ரஷ்யா புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக செய்தி வந்தது. களம் ஆராவாரமாகவும் இருந்தது. உலகில் ஆயிரம் புற்றுநோய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் இந்த மருந்து எந்த புற்றுநோய்க்கு என்ற கேள்வி கூட வரவில்லை. ரஷ்யாவை நண்பர்கள் என்று சொல்லும் இந்தியர்களும், இந்தியாவும் இந்த மருந்தை இந்திய மருத்துவமனைகளில் அனுமதித்து விடுவார்களா.............. டி. ராஜேந்தரே இங்கு சன் ஃபிரான்சிஸ்கோ வந்து தான் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தார். ஏன், நாங்களும் தான் ரஷ்ய மருந்தை எங்கள் உடலுக்குள் செலுத்த அனுமதிப்போமா................... இந்தியாவினதும், இந்தியர்களினதும் நட்பும், நடைமுறையும் இவ்வாறு முரண்பட்டதே.............. அவர்களின் கனவு மாஸ்கோவிற்கு போவதல்ல................... அவர்களின் கனவு சிலிக்கன் பள்ளத்தாக்குக்கு போவதே........... புதிதாக மதம் மாறியவர்கள், அது வேறு ஒரு வகை. எம்ஜிஆர் ரசிகராக இருந்த ஒருவர் திடீரென்று சிவாஜி ரசிகர் ஆனால் என்ன நடக்குமோ அதையே தான் இந்த மதம் மாறியவர்களும் செய்கின்றார்கள். பழையதை எவ்வளவு தூற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக தூற்ற வேண்டும்; புதியதை எவ்வளவு போற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக போற்ற வேண்டும். இந்த வகையில் பயங்கர ஆக்டிவாக இருப்பார்கள். இவர்களைப் பார்த்து புதுக் கடவுளே பயந்து போய் பதுங்கிவிடுவார்.....................🤣. இது அரசியலில் கட்சி மாறுபவர்களைப் போன்ற ஒன்று.............. இது விசுவாசம் தான்................. அவர்கள் இன்னொன்றை கண்டு கொள்ளும் வரை............................
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
உக்ரேனுக்கும், ஈழத்திற்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கின்றது அல்லவா, வசீ. ஒரு நாட்டிலிருந்து பிரிந்து போய் தங்களுக்கென்று ஒரு தனிநாட்டை உருவாக்க ஈழ மக்கள் போராடினார்கள், அதே வேளையில் சுதந்திரநாடாக இருக்கும் உக்ரேன் அதன் மீது இன்னொரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுகின்றது. ஈழ மக்களுக்கு தனிநாட்டை விட குறைந்த ஒரு தீர்வு தான் தற்போதைக்கு சாத்தியமானது என்பது ஈழத்திற்கான போராட்டத்தின் ஒரு மைல் கல் ஆகலாம். ஈழத்துக்கான போராட்டம் அங்கிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரலாம். ஆனால் உக்ரேன் தனது நிலப்பரப்பை விட்டுக் கொடுக்கும் ஒரு தீர்விற்கு சம்மதிப்பது ஒரு மைல் கல் அல்லவே........... இதில் அடுத்த கட்டம் என்ன........... முழு இறைமையையும் ஆக்கிரமிப்பாளருக்கு விட்டுக் கொடுப்பதா.............. சாதாரண மனிதர்களிடம் கருத்துக்கு விசுவாசமாக இருத்தல் என்னும் ஒரு செயல் அல்லது முயற்சி நடைமுறையில் இல்லையென்றே நினைக்கின்றேன், விளங்க நினைப்பவன். கருத்துகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்ற நிலை இது. 99 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வகையினரே, நான் உட்பட. கருத்துகள் என்பது நாங்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு சுய அடையாளம், பெரும்பாலும் கற்பனையான ஒன்றே. பின்னர் அந்த அடையாளத்துடன் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகின்றது. நாங்கள் வாழும் வாழ்க்கைகளுm, எங்களின் பல கருத்துகளும் மலையும், மடுவும் போல. உலகெங்கும் ஒரு ஒற்றை இலக்குடன் போராடும் போராளிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள்..............🙏. ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பவர்களிடம் நீங்கள் ரஷ்யாவுக்கு போய் வாழ்வீர்களா, உங்கள் பிள்ளைகளை ரஷ்யாவிற்கு வாழ அனுப்பிவீர்களா என்று கேட்பதில் எந்தப் பொருளும் கிடையாது. அப்படியொரு முட்டாள்தனத்தை எந்த மனிதனும் செய்யப் போவதில்லை. 'படித்தவர்கள் எல்லோரும் கழனிப் பானைக்குள் விழுந்தார்கள்..................' என்று என் வீட்டில் அன்று பலரும் சொல்லிச் சிரிப்பார்கள். வீட்டிலோ அல்லது சொந்த பந்தத்திலோ பெரிதாக படித்தவர்கள் என்று, 10 வகுப்பு சித்தி அடைந்தவர்கள் கூட, கிடையாது. அவர்கள் எல்லோருமே சேர்ந்து உருவாக்கிய அடையாளம் தான் இந்தக் கழனிப் பானை. ஒரு மன ஆறுதலுக்கு போல. ஆனால் வீட்டில் நடைமுறை வேறாக இருந்தது.............. நாங்கள் எல்லோரும் எப்படியாவது நன்றாகப் படிக்க வேண்டும் என்று தங்களால் ஆன எல்லாவற்றையும் அந்த இடர் மிகுந்த காலங்களிலும் மிகவும் செய்தார்கள். எங்களை கழனிப் பானைக்குள் விழுத்த முயன்றார்கள், ஆனாலும் எங்களில் பலரும் பானைக்குள் விழாமல் தப்பிவிட்டார்கள்...................🤣. இது போலவே ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கான ஆதரவு நிலைப்பாடுகளும்........................ சொல்லும், செயலும் ஒன்றல்ல.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
வசீ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லும் எவையும் ஒரு இரவு கூட தாக்குப் பிடிப்பதில்லை. இந்த 28 அம்ச திட்டம் அடுத்த நாளே 19 அம்ச திட்டம் ஆகியது. பின்னர் இந்த வார நீண்ட விடுமுறைக்கு முன்னர் இவை பேசித் தீர்க்கப்படும் என்றார். இங்கு கடந்த வியாழனும், வெள்ளியும் விடுமுறை தினங்கள். ஆனால் பேச்சுவார்த்தை எதுவுமே நடக்கவில்லை. அதிபர் ட்ரம்ப் இப்பொழுது நான்கு ஐந்து நாட்களாக வேறு விடயங்களில், ரஷ்ய - உக்ரேன் சண்டையில் அல்ல, தனது நேரத்தையும், முயற்சியையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றார். இந்தச் சண்டையில் அமெரிக்காவிற்கு நீண்ட கால நோக்கங்கள் சில இருக்கலாம். மேற்கு ஐரோப்பாவிற்கும் சில நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் நோக்கங்கள் இவைகளுடன் இணைந்தவை அல்ல. அவர் ஒரு முதிர்ச்சி அடையாத, நான் என்ற முனைப்பு மிக அளவுக்கு அதிகமான, வயது போன மனிதர் மட்டுமே. தான் வரலாற்றில் நிற்க வேண்டும் என்று நினைக்கின்றார்............... நிற்கத்தான் போகின்றார், ஆனால் அவர் நினைக்கும் இடத்தில் அல்ல. இந்த அம்ச திட்டங்கள் என்ற பேச்சு வந்த பின், ரஷ்யா வழமை போலவே இன்னும் அதிகமாக உக்ரேன் மீது ஏவுகணைத் தாக்குதல்களையும், ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியது. சிலர் இறந்தும் போனார்கள். உக்ரேனும் ரஷ்யாவின் ஒரு லேசர் விமானத்தை அதன் இருப்பிடத்திலேயே குண்டு வைத்து தகர்த்தது. ரஷ்யாவிடம் இருந்தது இரண்டு லேசர் விமானங்கள் மட்டுமே. அங்கும் சிலர் இறந்தார்கள். இந்தச் சண்டையின் ஆரம்பமே உக்ரேனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்பது தான். உக்ரேனை நேட்டோவில் இணைப்பதை யார் தடுக்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் ரஷ்யா என்பதே. ரஷ்யாவை மீறி உக்ரேனை நேட்டோவில் இணைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. இந்த இரு பக்கங்களிலும் எவர் உக்ரேனில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்காக போராடுகின்றார்கள்................. ரஷ்யாவா................ ரஷ்யாவில் இருக்கும் சிறுபான்மை மக்களே தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா. செச்னியர்கள் என்ற ஒரு இனமே ரஷ்யாவில் இல்லாமல் ஆகிவிட்டது அல்லவா. ரஷ்யா போன்ற அரசில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும், சீனாவிலும் கூட சிறுபான்மை அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவை வீழ்த்தி ஜப்பான் வென்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் அரசு அமைத்திருந்தால், இந்தியாவிலும் மொழிவாரி மாநிலங்களோ அல்லது தனித்தனி இன அடையாளங்களோ இருந்திருக்காது. பர்மாவில் 10 இலட்சம் தமிழர்கள் தொலைந்து போனது போல. இந்துக்களாகிய தமிழர்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள், அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற காரணத்தை முன்வைத்து இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்க முடியாது. அப்படி இந்தியா செய்தால், இந்தியாவுக்கு எதிராகவே உலக அபிப்பிராயம் இருக்கும். அதுவே தான் ரஷ்யாவின் நிலையும் இன்று. என்ன ஆனாலும் எப்போதும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே வரும் கருத்துகளையோ, அல்லது எந்த நிலையிலும் எப்போதும் அமெரிக்க ஆதரவாக வரும் கருத்துகளையோ அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இது பெரும்பாலும் ஏற்கனவே ஒருவருக்குள் இருக்கும் விருப்பு - வெறுப்பு - காழ்ப்பு என்ற உணர்வுகளின் அடிப்படைகளில் வரும் கருத்துகள். ஊடகங்களும், கருத்தாளர்களும் இப்படி பக்கச்சார்பாக இயங்கினாலும், காலப்போக்கில் அவற்றின் தன்மைகளை அறிந்து, பிரித்தறிய வேண்டியது எங்களின் கடமை ஆகின்றது.
-
படுபட்சி நாவல்: விசாரணை
வணக்கம் நெடுமாறன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். சொந்தமாக விமானங்கள் செய்தோமா....................... அங்கு பல்கலைக் கழகங்களில் இருக்கும் இருக்கும் குப்பை போடும் தொட்டிகளை கூட, காலால் அமத்த மூடி திறக்கும் தொட்டிகள், நாங்கள் சொந்தமாகச் செய்யவில்லை..................🤣. முன்னர் எங்கேயோ இந்த குப்பைத் தொட்டி டிசைன் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கின்றேன். Autofiction என்பதை Science fiction என்று மாற்றினால் போச்சு...................😜.
-
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
அண்ணா, என்னுடைய களப்பெயரின் முன்னாலோ அல்லது பின்னாலோ ஒரு பாபாவைச் சேர்த்துப் பாருங்கள்............. ஒரு சகோதரத்துவம் தெரியவில்லையா........😜. சேலத்து பாபா (நித்தி), கோயம்புத்தூர் பாபா (ஜக்கி வாசுதேவ்), புட்டபர்த்தி பாபா............ இப்படி எத்தனை பாபாக்கள் உலகிற்கு தேவையாக இருக்கின்றார்கள். இவர்கள் பொய்யர்கள் மட்டும் இல்லை, குற்றவாளிகளும் கூட என்றாலும், இவர்கள் குருக்களாக இருக்கின்றார்கள். மனிதர்களுக்கு அவ்வளவு தேவைகளும், பிரச்சனைகளும் இருக்கின்றன............. ஆனால் அவற்றை அவர்களின் கடவுள்களிடம் நேரடியாகச் சொல்வதில் ஏதோ சில இடர்பாடுகள் போல......... இடையில் ஒரு குரு தேவைப்படுகின்றார்........ விக்கினேஸ்வரனை பிரேமானந்தாவின் பக்தர் என்று சொன்னார்கள். சும்மா சொல்கின்றார்கள் என்று அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. சமீபத்தில் அவர் வீட்டில் எடுத்த படமொன்றில் பிரேமானந்தாவின் படம் வரவேற்பறையில் இருந்தது......... அட கொக்கா மக்கா (இது என்னை நானே சொல்லிக் கொள்வது, உங்களையல்ல.....)............. இவர்கள் தான் இனத்தின் வழிகாட்டிகளா....................🫣.
-
ஆயிரங்களில் ஒன்று
மிக்க நன்றி அல்வாயன். இந்த வாரம் முழுவதும் ஊரின் பெயர் எங்கேயும் இருக்கும். உங்களின் கவிதை ஒன்றில் கூட இருந்தது. அவை பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தன. ஒரு மீன் தொட்டிக்குள் வாழும் மீன் போல நான் அங்கே இருந்த காலங்கள் அவை. மீன் தொட்டியின் சுவரில் முட்டி முட்டி, அதை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றித் திரிந்த ஒரு காலம். ஒவ்வொரு நாளும் நான் கண்டதும் ஒரே மனிதர்களையே. அத்துடன் இந்த வாரம் 'Satanic Force' என்ற ஆவணப் புத்தகத்தில் கிடைத்த பகுதியை வாசித்துப் பார்த்தேன்........................ என்ன கொடுமைகள்............ அதில் இல்லாதவை கூட நடந்து இருக்கின்றன............ அதில் ஒன்று இது..............
-
ஆயிரங்களில் ஒன்று
ஆயிரங்களில் ஒன்று ------------------------------ எப்படி மறைந்தார்கள் என்று தெரியாத ஆயிரம் ஆயிரம் மனிதர்களில் ஒரு குடும்பத்தின் கதை இது ஊரில் அழகான பெண்களில் அவர் ஒருவர் தெரிந்தவர் தான் பலர் கவனம் கொண்டிருந்தார்கள் அந்த நாட்களில் அடிக்கடி ஊரையே துலாவித் தேடும் இலங்கை இராணுவமும் காவல்துறையும் அடிக்கடி ஊரில் கொன்றும் குவித்தது ஒரு முறை அகப்பட்டவர்களை ஒரு கான்கிரீட் கட்டடத்துக்குள் அடைத்து அதற்கு குண்டு வைத்து அப்படியே கொன்றது இன்னொரு முறை எங்கள் கடற்கரையில் முழங்காலில் வரிசையில் இருக்கச் சொல்லி சுட்டுக் கொன்றது நாட்டில் எங்கு தாக்குதல் நடந்தாலும் எங்கள் ஊரையே திருப்பி அடித்தார்கள் எங்கு கண்டாலும் எங்களை இறக்கி அடையாள அட்டை பார்த்து அடித்தார்கள் ஊரே உயிர் காக்க சிதறி ஓடியது கடலே தாயென்று வாழ்ந்தவர்கள் அதைத் தாண்டி ஓடினர் கடல் மேல் ஓடும் போது தாண்டு மாண்டு போனவர்களும் ஏராளம் ஒரு நாள் இந்தப் பெண் அக்கரை போய்ச் சேர்ந்தார் அங்கே உறவினர் ஒருவரை மணம் முடித்தார் அந்த நாட்டில் நடந்த அனர்த்தம் ஒன்றுக்கும் இந்த ஊரவர்களையே தேடித் தேடிப் பிடித்தார்கள் அவர்கள் கொண்டு போன கணவரை அவர்களே பிணமாக கொண்டு வந்து அவரின் நடு வீட்டில் தூக்கினார்கள் அந்தப் பெண்ணையும் அவரின் மாமியையும் விசாரணை என்று பின்னர் அவர்களில் யாரோ கொண்டு போனார்கள் 35 வருடங்களுக்கு மேல் ஆகியும் விசாரணை இன்னும் முடியவில்லை யார் எங்கே என்ன விசாரிக்கின்றார்கள் என்றும் எவருக்கும் தெரியாது.
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
எல்லா சரி பிழைகள், வழி முறைகள் சொல்லப்படும் போதும் இதுவே கண் முன்னே வந்து நிற்கின்றது அந்தப் பாலகனின் கடைசி விம்பம் எவர் நெஞ்சிலும் அப்படியே ஒட்டி நிற்கும்..................🙏.
-
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
🤣................... அக்னிக்குஞ்சு நிறுவனத்தை ஆதவன் நிறுவனம் வாங்கி விட்டதா, சொல்லவேயில்லை...................😛. எத்தனை பாபாக்கள் வந்தாலும் அத்தனையையும் பூமியும் தயக்கம் இல்லாமல் தாங்குதே..................🤣. பாபாக்கள் சொல்லும் விடயங்களை விட, அவர்கள் தங்கள் வாய்க்குள் இருந்து எடுக்கும் சிவலிங்கங்களை விட, அவர்கள் காற்றிலிருந்து வரவழைக்கும் பொருட்களை விட, இப்படியான அவர்களினால் நிகழ்த்தப்படும் எல்லா அதிசயங்களையும் விடவும் அதிசயமான விசயம் என்னவென்றால்.............. பாபாக்களின் அருள் வார்த்தைகளை கேட்டு 'நிபுணர்கள்' எனப்படுவோர் குழம்பி நிற்கின்றார்கள் என்ற செய்தியே...............😜. இது என்ன நிபுணத்துவம் என்று தெரிந்தால் நாங்களும் கற்றுத் தேரலாம் என்ற ஒரு ஆவல் தான்....................🤣.
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
இன்னுமா அமெரிக்க அதிபர் சொல்வதை இந்த உலகம் நம்பி கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்........................🤣. நாளைக்கு விடிந்தால் அவர் என்ன சொல்லுவார் என்று எங்களுக்கு மட்டும் இல்லை, அவருக்கே தெரியாது...................😜. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் ஒரு விடயத்தை கடுமையாகச் சொல்லியிருந்தார். பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியை இந்தியாவுடன் இணைக்கப் போவதாக அவர் சொல்லியிருந்தார். பாகிஸ்தானின் சிந்து பகுதியில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்புகின்றார்கள் என்று அவர் சொல்லியிருந்தார். சிந்து நதியின் புனிதம் பற்றியும் சொல்லியிருந்தார். ரஷ்யா உக்ரேனை இணைக்கலாம். அமெரிக்கா கனடாவை இணைக்கலாம். இந்தியா சிந்துவை இணைக்கலாம்................. இலங்கையில் வடக்கை தெற்கு இணைக்கலாம்...........🙃.
-
வணக்கம்உறவுகளே
அப்படியாயின் 'வாருங்கள்.............. வணக்கம்...............' என்று நான் உங்களை வரவேற்பது முறையில்லை................... நீங்கள் தான் என்னை வரவேற்க வேண்டும்..................🤣. வணக்கம் நித்தி. நான் இங்கு களத்தில் போன வருடம் இணைந்தேன்...............
-
கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும்
🤣.................... முபாறக் மஜீத்துக்கு பகிடிகள் நன்றாகவே வருகின்றது............👍. அவர்கள் தொல்பொருட்களை தேடி ஆய்வு செய்யவில்லை. புதிதாக செய்து கொண்டிருக்கப்படும் புத்த பெருமானின் சிலைகளையும், முளைத்துக் கொண்டிருக்கும் வெள்ளரசு மரங்களுக்கும் புதுப்புது இடங்கள் தேடுகின்றார்கள். இந்த விடயம் தெரியாமல் என்னுடைய ஊர்ச் சந்தியில் அரச மரத்தை நாங்களாவே வைத்துள்ளோம். பழைய மரம் பட்டுப் போக, இப்பொழுது புதிய மரமொன்றை வைத்துள்ளோம். ஏதோ ஒரு விடிகாலைப் பொழுதில் அந்த அரச மரத்தையும் அவர் ஆட்கொண்டு விடுவார் போல.................. 'இது யசோதராவின் மரம்.............' என்று ஒரு அறிவிப்பை அந்த இடத்தில் எழுதி வைத்தால், அந்தப் பக்கமே அவர் எட்டிப் பார்க்க மாட்டார் போல............🤣.
-
சாத்தானின் படை புத்தகம் வேண்டி
மருது, இந்த ஆவணப் புத்தகத்தை இந்தியப் புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் எங்கேயும் விட்டு வைக்கவில்லை போல. நான் இந்தப் புத்தகம் பற்றி முன்னர் அறிந்திருக்கவில்லை. எந்த ஆவணக் காப்பகத்திலும் இது இல்லை என்றே தெரிகின்றது. எக்ஸ் தளத்தில் சில வருடங்களின் முன் முன்னாள் இந்தியப் புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்தப் புத்தகத்தை தனக்கு இன்னொரு அதிகாரி கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். இந்த அதிகாரியிடம் நீங்கள் தொடர்பு கொண்டு கேட்டால், அவர் உங்களுக்கு இந்தப் புத்தகத்தை கொடுப்பாரா அல்லது உங்களை விசாரணைக்கு கூப்பிடுவாரா என்றும் தெரியவில்லை......... தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் 'கீற்று' போன்ற தளங்களில் இயங்கும் சிலர் இந்தப் புத்தகம் பற்றி அறிந்தவர்களாக இருக்கக்கூடும்.................
-
சாத்தானின் படை புத்தகம் வேண்டி
வணக்கம் மருது பாண்டியன். உங்கள் வரவு நல்வரவாகுக. இங்கு களத்தில் இருக்கும் 2009ம் ஆண்டு காலப் பதிவொன்றில் இந்தப் புத்தகம் கீழ் உள்ள இணைப்புகளில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது உங்களுக்கு உதவக்கூடும்: Part 1 http://www.mediafire.com/?emj0zigyjyu Part 2 http://www.mediafire.com/?i5tzkzyjfny Part 3 http://www.mediafire.com/?tz1mvzdgggz
-
அமெரிக்காவின் அவலம்
🤣................... அதே தான் ஜஸ்டின்.............. எத்தனை டிசைன்கள்................🤣. நான் 'லுங்கி டான்ஸ்' போன்ற குறுங்கதைகளை இங்கு களத்தில் எழுதியதற்கு காரணமே இங்கிருக்கும் இப்படியான சில 'டிசைன்கள்' தான்.........................😜. இப்படியான அபத்தங்களை நாசூக்காக சொல்லுவதற்கு இப்படி எழுதுவது நல்ல ஒரு வழி................அபிலாஷ் கூட இது போன்ற நிஜத்தில் நடந்து கொண்டிருக்கும் நம்மவர்களின் அபத்தங்களை எழுதலாம்.....................
-
அமெரிக்காவின் அவலம்
இந்தக் கட்டுரை எழுதியவரின் பெயர், விபரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் வரும் கட்டுரைகள் போன்ற ஒன்றாக இருந்தால், இதை மிக இலகுவாக புறக்கணித்து விட்டு போய்விடலாம். ஆனால் பொறுப்பான ஒரு இடத்தில் இருக்கும், பொதுவெளியில் இயங்கும் அபிலாஷ் போன்ற ஒருவர் இவ்வளவு மேலோட்டமாக, பிழையான அனுமானங்கள் மற்றும் தகவல்களுடன், அவசரகதியில் எழுதியிருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல என்றே தோன்றுகின்றது. என்னுடைய சொந்த அனுபவங்கள் மற்றும் நான் அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையான தரவுகளையும் தேடி எடுத்து, அமெரிக்காவின் நிலையையும், இந்தியாவின் நிலையையும் எந்தப் பக்கமும் சாராமல் எழுத ஆரம்பித்தால் அது ஒரு சின்ன புத்தகமாகவே முடியும். நான் 95ம் ஆண்டு இங்கு படிக்க வந்தேன். மூன்று மாதங்களின் பின்னர் மனைவியும் வந்தார். அடுத்த அடுத்த மாதங்களில் எங்களின் முதலாவது குழந்தை உண்டாகினார். படிக்கும் போது அமெரிக்க பல்கலைக்கழகமே முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் மாதம் மாதம் ஒரு தொகையை செலவுக்கு கொடுத்தார்கள். அந்தத் தொகை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேயே இருந்தது. இந்த விடயம் அப்போது எனக்குத் தெரியாது ஏனென்றால் அவர்கள் கொடுத்த தொகையில் அரைவாசிக்கு மேல் மீதமாகிக் கொண்டிருந்தது. மகப்பேற்று மருத்துவரிடம் போன பொழுது, அவர் எங்களிடம் அமெரிக்க அரசின் வருமானம் குறைந்தவர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் பற்றி சொல்லிவிட்டு, எங்களை அதில் சேரச் சொன்னார். நாங்களும் சேர்ந்தோம். மாதம் மாதம் உணவு முத்திரைகள் கொடுத்தார்கள். இது நடந்தது 95, 96 மற்றும் 97ம் ஆண்டுகளில். பணவீக்கம், வேலையின்மை போன்ற காரணங்களால் இது இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூகநலத் திட்டம் அல்ல. நாங்கள் அன்று அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்தது எங்கள் மூவருக்கும் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. இங்கு மத்திய அரசின் செலவுகள் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கடன் முடிவடையும் தறுவாயில், புதிய நிதி அல்லது கடன் எல்லை பெரும்பான்மையான பிரநிதிகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். சில சமயங்களில் பிரேரிக்கப்படும் புதிய நிதி அல்லது கடன் எல்லைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய நிதி வழங்குவது தடைப்படும். அரசின் சமூகநலத் திட்டங்களுக்கும் இங்கிருந்தே நிதி போகின்றது. ஆனாலும் நிதி வரப் போவதில்லையே என்று இங்குள்ள நிர்வாகத் துறைகள் இந்த சமூகநலத் திட்டங்களை என்றும் கைவிடுவதில்லை. 'இனிமேல் பூனைக்கறி தான் சாப்பிட வேண்டும்............' என்று சொல்வது நிலைமையின் அவசரத்தை அழுத்திச் சொல்லும் ஒரு முறையே அல்லாமல் அது நிஜம் அல்ல. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டது உண்மையிலேயே நடந்தது. இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும் உண்மையே. ஏழ்மையை ஒரு குற்றமாக இங்கு அமெரிக்காவில் எவரும் பார்ப்பதில்லை. ஒருவர் ஏழையா, இல்லையா என்று கூட இங்கு தெரிவதில்லை. அரசிடம் உதவி பெறுவதற்கு பலர் தயங்குகின்றார்கள், வெட்கப்படுகின்றார்கள் என்பது உண்மை தான். அது அவர்களின் தன்முனைப்பை, சுயமரியாதையை இழக்கும் ஒரு செயல் என்று அவர்கள் நினைப்பதால் மட்டுமே. அந்த நினைப்பே ஏழ்மையும், இல்லாமையும் தங்களின் தலைவிதி என்று அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை கடந்து முன்னேறும் திறனை அவர்களுக்கு கொடுக்கின்றது. இந்தியாவில் பிறப்பு என்றும், தலைவிதி என்றும் கிடைத்த வாழ்வை ஏற்றுக்கொண்டு அப்படியே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களை அபிலாஷ் போய்ப் பார்க்கவேண்டும். இன்றிருப்பதை விட 2008ம் ஆண்டில் இங்கு அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க வாகனங்கள் தயாரிக்கும் நகரான Detroit மிகவும் நலிவடைந்தது. வாகனங்கள் தயாரிக்கும் மூன்று பெரிய அமெரிக்க நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒரு செய்தித் துணுக்கில் ஒரு குடும்பம் வேலை இழந்து, அரசின் சமூகநலத் திட்டத்தில் போய் உதவி பெறும் நிலையை எண்ணி கண்கலங்கி நின்றார்கள். இப்படி அவர்கள் கேட்டது வேலையை மட்டுமே, அரசின் உதவியை அல்ல. பின்னர் அமெரிக்க அரசு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பல பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்தது. புதிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்கர்கள் அவற்றை வாங்கினார்கள். இது ஒரு அலையாக இங்கு நடந்தது. இந்தியர்களோ அல்லது வேறு நாட்டவர்களோ அன்று அமெரிக்க வாகனங்களை வாங்குவது இல்லை என்றே சொல்லலாம். அந்த நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தினார்கள். அமெரிக்காவும் அதன் மக்களும் மீண்டும் மீண்டும் மீண்டு வருவதற்கான பிரதான காரணம் இதுவே. 100 நாட்கள் வேலைத் திட்டம் பற்றி அறிய வயநாடு போகத் தேவையில்லை. தமிழ்நாட்டிலேயே அது பரவலாக இருக்கின்றது. அடிக்கடி ஊர்மக்கள் நிகழ்த்தும் போராட்டங்கள் செய்திகளில் வருகின்றது. திட்டத்தின் பிரகாரம் வேலை கொடுப்பதில்லை என்றும், கூலி கொடுப்பதில்லை என்றும் போராடுகின்றார்கள். இந்த திட்டத்தால் இதுவரை உற்பத்தி, சேவைகள் அல்லது எந்த மக்களினதும் வாழ்க்கைத்தரமாவது அதிகரித்திருக்கின்றதா. இதுவும் இன்னொரு இலவச உதவி வழங்கும் தேர்தல்கால வாக்குறுதியாகவே இருக்கின்றது. வேலையில் இருந்து கொண்டே ஏழையாகவும், பரதேசியாகவும் இருக்கும் நிலை அமெரிக்காவில் இருக்கின்றது என்கின்றார். வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' மற்றும் இவை போன்ற படங்கள் சினிமா அல்ல, அவை நிஜம் என்ற உண்மையை காணத் தவறிவிட்டார். அமெரிக்கா பாலும், தேனும் ஓடும் ஒரு தேசம் அல்ல. உலகில் அப்படி ஒரு தேசமுமே கிடையாது. ஆனால் இந்தியா போன்ற சமூகநீதி மறுக்கப்பட்ட, தேர்தல் காலங்களில் அன்றி வேறு எப்போதும் எவ்வகையிலும் மனிதர்களாகவே கருதப்படாத ஏழை எளிய மக்கள் படும் அவலங்களுக்கு பல மடங்குகள் குறைந்த அவலமே அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் இருக்கின்றது. இந்த மாதம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தார். அவர் இங்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கின்றேன். பல வகைகளில் உலகின் சிறந்த தேசம் அமெரிக்காவே என்று ஜெயமோகன் ஒவ்வொரு தடவையும் எழுதுகின்றார். அபிலாஷ் தான் ஜெயமோகனுக்கு எழுத்திலும், சிந்தனையிலும் எதிர்முனை என்பார். இரண்டு முனைகளுக்கு நடுவில் அமெரிக்கா மாட்டுப்பட்டுவிட்டது போல....................🤣.
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
மருதங்கேணியார் இருவருக்கும் நேரம் மிகுதி என்று எழுதியிருந்தபடியால், சரி, இந்த விடயம் அப்படியே போகட்டும் என்று விட்டுவிட்டேன், கோஷான். நீங்கள் 1987ம் ஆண்டைக் குறிப்பிட்டவுடன், மருதங்கேணியாருடன் பகிடியாக எழுத நினைத்த விடயம் மீண்டும் நினைவில் வந்துவிட்டது................ 1987ம் ஆண்டு தான் என்னுடைய ஏ லெவல் வருடம். மே மாதம் 25ம் திகதி இரவு வல்வைக் கல்வி மன்றத்தில், அந்த நாட்களில் இது ஒரு தனியார் கல்வி நிலையம், சேர்ந்து படிப்பதற்காக நண்பர்கள் பலர் ஒன்றாக இருக்கின்றோம். அங்கேயே தான் அநேக நாட்களில் நித்திரையும் கொள்வோம். பலரும் ஒன்றும் படிப்பதில்லை. நன்றாக கதைத்து விட்டு, ஏதாவது சாப்பிட்டு விட்டு நித்திரையாகிவிடுவார்கள். ஒரு சிலர் பின்னர் இருந்து படிப்பார்கள். அன்றிரவு இலங்கை இராணுவத்தின் லிபரேஷன் ஆபரேஷன் ஆரம்பித்தது. ஒன்றாக ஓட ஆரம்பித்தோம். ஒவ்வொரு ஊராக நாங்களும் சேர்ந்தே பின்வாங்கிப் போனோம். அப்பொழுது சூசை தான் எங்கள் பிரதேச பொறுப்பாளர். இரண்டாம் நாள் இரவு. கற்கோவளம் கடற்கரையில் படுத்திருந்தோம். இராணுவம் முள்ளியிலும் இறங்கி விட்டார்கள் என்றார்கள். அதற்கு சாட்சியாக அந்தப் பக்கமாக வானம் பிரகாசமாக இருந்தது. இனிமேல் இங்கிருந்தால் எங்கள் எல்லோரையும் கடல் உட்பட நான்கு பக்கங்களாலும் சுற்றி வளத்துவிடுவார்கள் என்று நடுநிசியின் பின் வடமராட்சி கிழக்கு நோக்கி கடற்கரையால் நடந்தோம். அடுத்த நாள் பகல் பொழுதில் உடுத்துறையைப் போய்ச் சேர்ந்தோம். உடுத்துறையில் இருந்த நாட்களில் மருதங்கேணியினூடாக பளைக்கு போய் வந்து கொண்டிருந்தோம். இந்த ஊர்கள் எல்லாமுமே அப்பொழுது தான் தெரியவந்தன. 1987ம் ஆண்டின் பின் நான் மீண்டும் அந்தப் பக்கங்களுக்கு போகவில்லை. இப்பொழுது யாழில் மீண்டும் மருதங்கேணியார் அந்த நாட்களை நினைவுபடுத்துகின்றார்..................🤣. பின்னர் உடுத்துறையிலிருந்தும் இடம்பெயர வேண்டியதாக ஆனது. உடுத்துறைக்கு கீழே ஆனையிறவு இராணுவ முகாம். அங்கிருந்தும் இராணுவம் வடமராட்சி நோக்கி வரப் போகின்றார்கள் என்று ஒரு செய்தி வந்தது....................... கடைசியில் பார்த்தால் உயிருடன் வாழ்வதே ஒரு போனஸ் போலவே தெரிகின்றது........... இதில் அமெரிக்காவிற்கு ஆதரவா, அல்லது ரஷ்யாவிற்கு ஆதரவா என்றால்............ கற்கோவளம் கடற்கரை தான் கண்ணில் தெரிகின்றது..................😜.