Everything posted by ரசோதரன்
- FingerPointing.jpg
-
வணக்கம்
வணக்கம் ரதன். உங்களை மிக்க மகிழ்வுடன் வரவேற்கின்றேன். தொடர்ந்து உங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் எழுதுங்கள்.............❤️.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
தமிழ்நாட்டில் அரசியல் செய்யு எந்த அரசியல் கட்சியும், அரசியல் தலைவரும் பின்வருபவனவற்றை மேடையில் சொல்லியே ஆகவேண்டும் (பாஜகவும், அதன் தமிழ்நாட்டு பிரதிநிதிகளும் இந்த சட்டகத்துக்குள் வரமாட்டார்கள்): இந்தி எதிர்ப்பு நீட் தேர்வு எதிர்ப்பு ஊழலை அடியோடு அழித்தல் சமூகநீதியை ஏற்படுத்தல் இலங்கை கடற்படையிடம் இருந்து அப்பாவி தமிழக மீனவர்களை பாதுகாத்தல் கச்சதீவை மீட்டல் இலங்கை தமிழ் மக்களின் அகதிமுகாம்களை மேம்படுத்தல் ........ ஒரு துரும்பைக் கூட இந்த தலைவர்களால் அதன் இடத்திலிருந்து அசைக்க முடியாது என்பதே உண்மை. ஆனால் காலத்தின் மாற்றங்களால் சமூகநீதி அதன் பாதையில், ஒப்பீட்டளவில், சில முனைகளில் முன்னே சென்று கொண்டிருக்கின்றது. பாஜகவினர் மேடையில் சொல்ல வேண்டிய ஒரே விடயம்: பாரத மாதாக்கு ஜே..............
-
அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?
இது ஒரு சுமையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகின்றது. இந்த மாதிரியான அச்சொட்டான ஞாபகசக்தி இல்லாமல், ஒருவருக்கு இருக்க வேண்டிய சாதாரண ஞாபகசக்தியை விட கொஞ்சம் அதிகமாக இருந்தாலே சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. சில வருடங்களின் முன், 30 வருடங்களின் பின் ஒரு நண்பனைச் சந்தித்தேன். அவன் கடைசியாக ஊரில் இருந்த போது அவனிடம் ஒரு சிறிய கீபோர்ட் இருந்தது. மேற்கு நாடுகளில் எங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது வாங்கிக் கொடுக்கும் பொம்மை, பிளாஸ்டிக் கீபோர்ட் போன்றது அது. அதில் சில அடிப்படை இசைத் துணுக்குகளை உருவாக்கலாம். அப்பொழுது அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து 'ராஜா................. ராஜாதி ராஜா இந்த ராஜா.......................' பாடல் மிகப் பிரபலமாக இருந்தது. நண்பன் அதைப் போன்ற ஒன்றை அவனிடம் இருந்த கீபோர்ட்டில் உருவாக்கி, ஒரு நாள் எங்களுக்கு வாசித்துக் காட்டியிருந்தான். நான் இதை அவனிடம் சொன்ன போது, அவன் அப்படி ஒரு விடயம் நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டான். அவனிடம் அப்படி ஒரு கீபோர்ட் இருக்கவும் இல்லை என்றும் சொன்னான். ஆனால் அந்த ஞாபகம் இன்றும் அப்படியே என்னிடம் இருக்கின்றது. கடல், மிகச் சிறிய திறந்த கடற்கரை, அதையொட்டி பிரதான வீதி, வீதியின் இந்தப் பக்கமாக அவனின் வீடு. முன்பக்கம் தலைவாசலும், சுற்றுச் சுவரும் உள்ளது அவன் வீடு. முற்றம் தாண்டிச் சென்றால், வீட்டின் வலக்கை பக்கம் இருக்கும் சிறிய அறையிலேயே நாங்கள் அன்று இந்தப் பாடலை கேட்டோம். பின்னர் சுனாமியில் அந்த அறை உடைந்து போயிருந்தது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
ஒரு பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்ல, சில பக்கத்து வீட்டுக்காரர்களுன் இதே போலவே தான். அவர்களுக்கு மிகவும் வயதாகி விட்டது, அத்துடன் அவர்களுடைய பிள்ளைகளும் தூர இடங்களுக்கு போய்விட்டார்கள். முன்னர் இந்த தெருவில் இருந்த சிலர் போயும் விட்டார்கள். இங்கே பல்லிகள் வீடுகளுக்குள் பொதுவாக வருவதில்லை. ஆனால் வளவுகளுக்குள் ஓடித் திரிகின்றன. பூச்சிகளை இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன. அவர் தான் பல்லியை இதற்கு முன் இங்கே கண்டதேயில்லை என்று சொல்லி, பயத்தில் துள்ளிக் கொண்டிருந்தார். அதையே அவர் கூரையில் நின்றார் என்று சொல்லியிருந்தேன். அவர் குஜராத்தில் இருக்கும் போது அவர் வீட்டில் பணியாளர்கள் இருந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அங்கே அவருடைய வீட்டுக்குள் பல்லிகள், பூச்சிகள் வராமல் அந்தப் பணியாளர்கள் 24 மணி நேரங்களும் காவலுக்கு இருந்திருக்கின்றார்கள் போல........
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣................ ஒரு படத்தில் ஒரு காட்சியில் விவேக்கிற்கு பெண்கள் வெளியே சொல்லாமல் மனதில் நினைக்கும் விடயங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் வரும் காட்சிகள் நல்ல சிரிப்பை வரவழப்பவை. ஆனால் எங்களின் மனதுகளின் தோன்றுபவற்றை அப்படியே வெளியே சொன்னால், அங்கே சிரிப்பு இருக்காது, பெரிய வெட்டுக் குத்துகள் ஆவது மட்டும் இல்லை, அதன் பின்னர் ஒரு தனிமனிதனாக அலையவும் வேண்டி இருக்கும்...........🤣. 👍.......... சமீபத்திலும் கோமியம் (பசு மாட்டின் சிறுநீர்) அருந்துவது மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றிய ஒரு விவாதம் உண்டானது. சென்னை ஐஐடியின் இயக்குனர் காமக்கோடி மற்றும் ஶ்ரீதர் வேம்பு போன்ற பலராலும் அறிவாளிகள் என்றும், முன்னோடிகள் என்றும் கருதப்படும் பலரும் கோமியம் அருந்துவதை ஆதரித்து கருத்துகள் தெரிவித்திருந்தார்கள். நேற்று தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஶ்ரீதர் வேம்பு ஏதோ சொல்லியிருப்பதாக செய்திகளில் இருந்தது. அந்தச் செய்தியில் என் மனம் ஒட்டவில்லை, மாறாக கோமியம் பற்றியே சிந்தனை ஓடியது. தேடிப் பெறும் எந்த அறிவுமே அசைக்க முடியாத கண்மூடித்தனமான நம்பிக்கைகள் எங்கும் இருக்கின்றன போல..............🫣.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
நீங்கள் சொல்லுவதையே தானும் நானும் நினைத்திருந்தேன். நாராயணர் என்பவர் ஒரு அவதாரம் என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. பத்து அவதாரங்கள் என்று வரிசைப்படுத்தப்படுபவை: 1. மச்ச அவதாரம் 2. கூர்ம அவதாரம் 3. வராக அவதாரம் 4. நரசிம்ம அவதாரம் 5. வாமன அவதாரம் 6. பரசுராமர் அவதாரம் 7. ராமர் அவதாரம் 8. கிருஷ்ணர் அவதாரம் 9. பலராமர் அவதாரம். சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை ஒன்பதாவது அவதாரமாகக் கருதுவதும் உண்டு 10. கல்கி அவதாரம். புராணங்களின் படி, 10 வது அவதாரம் மட்டுமே மிச்சமுள்ளது. கலியுகத்தை முடித்து வைப்பதற்க்கான அவதாரம் இது. பிரகலாதன் - இரணிய மன்னனின் கதையில் வரும் நரசிம்ம அவதாரமே நாராயணரின் தொடர்புடையது போல. இவை எல்லாமே புராண காலத்தவை, புத்தர் மட்டுமே ஒரு விதிவிலக்கு, அவரை ஒரு அவதாரமாகக் கருதுவது கூட பொதுவான ஒரு அபிப்பிராயம் இல்லை. சுவாமி நாராயணன் என்று குஜராத்தி மக்களால் வழிபடப்படுபவர் பிரிட்டிஷ் கால இந்தியாவில், 1781 - 1830 ஆண்டுகளில், வாழ்ந்த ஒரு துறவி. 200 வருடங்களுக்கு முன் மனிதராக வாழ்ந்த ஒருவர். இவர் ஒரு புராண அவதாரம் இல்லை என்றும், பெயர்க் குழப்பமே இங்குள்ளது என்றும் நினைக்கின்றேன்...............
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
தமிழ்நாட்டு மக்கள் மிக இலேசாக கடந்து போய்க் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. இதையே எங்கள் நாட்டில் ஒரு அரசியல் தலைவரோ அல்லது முக்கியம் மிக்க ஒருவரோ செய்து விட்டு, இவ்வளவு இலேசாக இருந்து விடமுடியாது. தமிழ்நாட்டில் பல தலைவர்களின் கதைகளில் பலர் வந்து போயிருக்கின்றார்கள். ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார் அல்லது கொள்ளை அடித்தார் என்பது இன்னும் ஒரு இலேசாகக் கடக்கப்படும் நிகழ்வு. இதை ஒரு பரபரப்பான செய்தியாகப் பார்ப்பார்களே அன்றி, அதற்கான விளைவுகள் மக்களால் ஆற்றப்படுவதில்லை. அங்கே ஊழலும், லஞ்சமும் சாதாரண ஒருவரின் வாழ்க்கையிலேயே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகமாகவே கலந்திருப்பதால், இவை ஒரு குற்ற உணர்வை தொடர்ந்தும் எவர் மனதிலும் உண்டாக்குவதில்லை. சமீபத்திய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் போன்ற நிகழ்வுகள் கூட மறக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் அழகிரியின் எல்லை மீறிய கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் கொலைகள், பொன்முடியின் சமீபத்திய மேடைப் பேச்சு போன்றன ஒருவரை அங்கே அரசியல் அநாதை ஆக்கக்கூடியன. சாதி, இனம், மொழி, மதம் என்று கோடுகளால் பிரித்து, வெறுப்பை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அங்கே இடம் இருந்தாலும், அவர்களுக்கான ஆதரவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
5. இன்னொரு பாலம் -------------------------------- எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்விக்குட்படுத்துவதும் கிடையாது. உதாரணமாக, பொதுவாக பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை. இதே போலவே தெய்வம் என்ற மேலான ஒரு சக்தி கிடையவே கிடையாது என்ற நம்பிக்கையும் பல மனிதர்களிடம் பரவலாகவே இருக்கின்றது. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நம்பி வாழ்பவர்களும் உண்டு. மனிதர்களும் ஒரு விலங்கே, அங்கே சுயநலம் மட்டுமே உண்டு என்று உறுதியாக எதிர்த் திசையில் நம்புவர்களும் உண்டு. புதுமைப்பித்தனின் 'கடவுளின் பிரதிநிதி' என்னும் கதையில் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவரின் நம்பிக்கை ஒரு தருணத்தில் கேள்விக்கு உட்படுகின்றது. அந்தக் கணத்தில் அவர் அப்படியே உடைந்து சிதறிப் போகின்றார். நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தால், எந்த வாழ்க்கையும் அங்கே உடைந்து தான் போகும். என் வீட்டருகே இரண்டு கோவில்கள் இருக்கின்றன. நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு ஒரு 25 வருடங்களின் முன் குடிவந்தோம். இந்தக் கோவில்களும் ஏறக்குறைய அதே காலத்திலேயே இங்கு வந்தன. ஒன்று சுவாமி நாராயணன் கோவில், மற்றையது தமிழ்நாட்டு வகை கோவில். இரண்டுமே இந்த இடத்தில் மிக செழிப்புடன் இருக்கும் குஜராத்தி மக்களாலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. என் மனைவி ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாட்டு வகை கோவிலின் முதல் வகுப்பு குடிமகள்களில் ஒருவர். என் அயலவர், அவர் குஜராத்தி இனத்தை சேர்ந்தவர், சுவாமி நாராயணன் கோவிலின் முதல் வகுப்பு குடிமகன்களில் ஒருவர். ஊரில் வளர்ந்த சுழ்நிலையோ அல்லது கண்டதையும் கடியதையும் வாசித்ததாலோ, வளரும் நாட்களில் தெய்வம் என்னும் நம்பிக்கை மீது பெருத்த சந்தேகமே இருந்தது. எங்களில் பலருக்கும் நடந்தது போலவே, மிகப் பெரிய இழப்புகளும் ஏற்பட்டன. இவ்வளவும் கேட்பாரன்றி நடந்த பின், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் மனைவி 'இன்று நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும்............' என்று சொல்லிக் கூட்டிப் போகும் நாட்களில் போய்க் கொண்டிருக்கின்றேன். குஜராத்தி அயலவரின் மகன் திருமணச் சடங்கு ஒன்று சுவாமி நாராயணன் கோவிலில் நடந்தது. அதற்காக அந்தக் கோவிலுக்கு ஒரு தடவை போயிருக்கின்றேன். அங்கு இருக்கும் கடவுள் கிருஷ்ணரே என்று நினைத்திருந்தேன். சிட்னியில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும், அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். மிகப் பிரமாண்டமான கோவில் என்றார்கள். என் வீட்டருகே 25 வருடங்களாக இருக்கும் சுவாமி நாராயணன் கோவில் ஓரளவு பெரியது. என் வீட்டிலிருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவில் ஒன்றை குஜராத்தி மக்கள் கட்டியிருக்கின்றார்கள். அதை எல்லோரும் போய்ப் பார்க்கின்றார்கள், வியக்கின்றார்கள். நியூ ஜெர்சி, துபாய் என்று உலகெங்கும் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிட்னியில் கட்டிக் கொண்டிருப்பது 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் என்று சொன்னார்கள். சிட்னி நகரிலிருந்து கொஞ்சம் வெளியே ஒரு இடத்தில் கட்டியிருக்கின்றார்கள். முன்பே அந்தக் கோவிலுக்கு போய் வந்தவர்களும், இப்போது தான் முதன்முதலாக போயிருப்பவர்களும் ஒருங்கே ஒரு அதிசயத்தை பார்ப்பது போலவே அந்த இடத்தை பார்த்துக் கொண்டு நின்றார்கள். கோவிலின் முன்பு ஒரு சாது ஒற்றைக் காலில் நிற்கும் பெரிய சிலை ஒன்று இருந்தது. இந்தியப் பிரதமர் மோடி வந்து அதைத் திறந்து வைத்ததாகச் சொன்னார்கள். சிலையின் உயரம் 49 அடிகள் என்று இருந்தது. அந்தச் சிலையில் இருப்பவர் தான் சுவாமி நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார் என்றும் இருந்தது. அவர் ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக இப்படியே ஒற்றைக் காலில் தவம் இருந்ததாக அங்கிருக்கும் பல கல்வெட்டுகளில் தகவல்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இவர் 49 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த காரணத்தால், 1781 - 1830 ஆண்டுகள், சிலையின் உயரம் 49 அடிகளாக உள்ளது என்ற தகவலும் ஒரு கல்வெட்டில் இருந்தது. சுவாமி நாராயணன் என்றால் கிருஷ்ணர் என்று நான் இதுவரை நினைத்திருந்தது பொய் என்பது ஏமாற்றமாகவே இருந்தது. என்னுடைய அயலவரிடம் சுவாமியின் வரலாற்றை நான் கேட்டிருக்க வேண்டும். அவர் அடிக்கடி என்னிடம் ஏதாவது கேட்பார். ஒரு தடவை அவர் வீட்டிற்குள் பல்லி ஒன்று வந்து விட்டதாகவும், உடனே ஓடி வா என்று கூப்பிட்டார். நான் போகும் போது, அவர் கிட்டத்தட்ட கூரையில் நின்று கொண்டிருந்தார். நான் பல்லியைப் பிடித்து, அவர் வீட்டிற்கும், என் வீட்டிற்கு இடையில் இருக்கும் இன்னொரு வீட்டின் முன் வளவினுள் விட்டுவிட்டேன். இப்படி நான் அவருக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கின்றேன். நான் கேட்டிருந்தால், வரலாற்றை மகிழ்ச்சியாக சொல்லியிருப்பார். அன்று நான் பிடித்த பல்லியை நடுக்காணியில் விட்டது அவருக்கு தெரியாது. கோவில் வளாகம் ஒரு பெரும் சரிவில் பல தொகுதிகளாக கட்டப்பட்டிருந்தது. சுவாமியின் 49 அடி சிலை சரிவின் அடிவாரத்தில் ஆரம்பமாக இருந்தது. அதன் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக, 400 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்களில் செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கோவிலின் பகுதிகள் இருந்தன. முதல் தொகுதியில் அபிஷேகம் செய்யும் இடம் ஒன்று இருந்தது. சில டாலர்கள் கொடுத்து நாங்களே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள். எங்களில் ஒருவர் செய்தார். என் மனைவியின் வீட்டார்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் எந்த அவதார புருஷரையும், பாபாக்களையும், குருக்களையும், சாமியார்களையும் நம்புவதும் இல்லை, பின்பற்றுவதும் இல்லை. அந்த நாராயணனை நினைத்து இந்த நாராயணனுக்கு அபிஷேகம் செய்திருக்கின்றார்கள். அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அதன் பின்னால் உணவு விடுதி ஒன்று இருந்தது. எங்களில் சிலர் உள்ளே போனார்கள். என்ன பெரிது என்று சொல்லிக் கொண்டே, ஆனால் வெறுங்கைகளுடன் திரும்பி வந்தார்கள். வட இந்திய சைவ உணவாக இருக்க வேண்டும் போல. ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார்கள். அதன் பின்னால் ஏறிப் போனால், இந்தப் பிரிவின் இன்றைய குருவின் பெரிய பெரிய படங்களும், அவர் சொல்லும் விடயங்களும் இருந்தன. இது ஒரு குரு வழியாக, தொடராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. இந்த குரு சமாதி அடைந்தால், இன்னொரு குரு வருவார். குருவிற்கு செய்யும் பணிவிடைகள் இறைவனுக்கே செய்யும் பணிவிடைகள் என்று ஒரு செய்தி இருந்தது. இறைவனுக்கும், எங்களுக்குமிடையே குரு ஒரு பாலமாக இருக்கின்றார் என்று இன்னொரு செய்தி இருந்தது. அங்கிருந்து பார்க்கும் போது சுவாமி நாராயணனின் 49 அடி சிலையின் பின் பக்கம் தெரிந்தது. இவர்கள் எழுதி வைத்திருப்பது போலவே அவர் ஏழு வருடங்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படியான பாலங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காகவா அவர் தவமிருந்திருப்பார்? சேலத்தில் நித்தியும், கோயம்புத்தூரில் சத்குருவும், புட்டபர்த்தியில் சாயிபாபாவும், இலங்கையில் பிரேமானந்தாவும், இன்னும் எண்ணற்ற மனிதர்களாப் பிறந்து சாமிகளான பலரும் இதே பாலம் என்ற உருவகத்தை தானே வெவ்வேறு வழிகளில் சொல்லி தங்களை முன்னிறுத்தினார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த அடுத்த நாள் அயலவரைப் பார்த்தேன். 'சிட்னியில் உங்கள் கோவிலுக்கு போயிருந்தேன்..............' 'ஓ.......... போயிருந்தியா............ அதை மோதிஜி திறந்து வைத்தார்...............மந்திர் எப்படியிருக்கின்றது?' 'ஆ....... மோடி தான் திறந்தது என்று அங்கே சொன்னார்கள். 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு செய்து கட்டியிருக்கின்றார்கள்.' 'அவர்களிடம் பணம் நிறையவே இருக்கின்றது. எங்களில் பலர் தங்கள் வருமானத்தில் 25 வீதத்தை இதற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்............' தங்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனிதர்கள் உடைந்து போகின்றார்கள் என்றால், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடனே வாழும் மக்கள் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. (தொடரும்......................)
- Swami.jpg
- BridgeToHeaven.jpg
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣................. நக்கீரர் வழி வந்தவர் எங்கள் அல்வாயன்..................... விபரமாகவே பின்னர் எழுதப் போகின்றேன் அல்வாயன்...........👍.
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
தமிழ்நாட்டில் வெகு சில அரசியல் தலைவர்களுக்கே நீங்கள் சொல்லியிருக்கும் பேதங்கள் கடந்த ஆதரவு உள்ளது. இந்த தலைவர்கள் ஒரு அடையாளத்துக்குள் உட்படாதவர்கள். விஜய்யும் அவர்களில் ஒருவர் என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே. விஜய்யிற்கு நல்லவர் என்ற பிம்பமும் உள்ளது. ஆனால் தமிழக மக்கள் தலைவர்கள் கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும் ஏற்றுக் கொள்வார்கள், அவர்களுக்கு பிடித்து இருந்தால். உதாரணமாக, திரிஷாவுடன் உண்மையிலேயே ஏதாவது தொடர்புகள் இருந்தால் கூட..................🤣. ஜெயலலிதா மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் உண்டாக்கிய மாற்றம் ஆச்சரியமானது. அவர் இருக்கும் போது அவரின் மீது சில விமர்சனங்கள் எனக்கு இருந்தன. இப்பொழுது அவர் இல்லாத போது, அவர் இப்பவும் இருந்திருக்கலாமே என்று தோன்றுகின்றது..................😔.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
இது தொடர்பாக ஒன்றையும் ஓரளவு விபரங்களுடன் எழுதலாம் என்று இருக்கின்றேன், அண்ணா. அதனாலேயே சில விபரங்களை இப்பொழுது தவிர்த்திருக்கின்றேன். அங்கு குடியேறிய, குடியேறிக் கொண்டிருக்கும் மக்களிடையே இருக்கும் நம்பிக்கையின்மைகளை, சந்தேகங்களை என் பார்வையில் எழுதலாம் என்று நினைத்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் மட்டுமே தான் இது காணப்படுகின்றது என்றில்லை. எல்லா மேற்கு நாடுகளிலும் புலம் பெயர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் அதிகமாகவே உள்ளது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
4. பாட்டி வடை சுட்ட கதை ------------------------------------------ சில கதைகளை ஆயிரம் தடவைகளாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம். சில நிகழ்வுகளும் திரும்ப திரும்ப நடந்து கொண்டேயும் இருக்கின்றன. மீண்டும் அந்தக் கதைகள் சொல்லப்படும் போது அல்லது அதே நிகழ்வுகள் நடக்கும் போது ஏதாவது ஒரு சின்ன மாற்றம் அல்லது திருப்பம் இருக்கும், இருக்காமல் கூட போகலாம். இந்தச் சில கதைகளும், நிகழ்வுகளும் எங்களின் வாழ்க்கைகளை விட்டு என்றுமே தூரமாகப் போவதில்லை என்பது ஆச்சரியம் தான். ஆனால் ஏராளமான கதைகள் முற்றாக எங்களை விட்டு நீங்கிவிட்டன. நான் சிறு வயதாக இருக்கும் போது அம்மாச்சி ஒரு கூனன் - கூனி என்னும் இருவரை வைத்து பல கதைகள் சொல்லியிருக்கின்றார். அந்தக் கதைகளை நான் பின்னர் வேறெங்குமே காணவில்லை. சல்லடை போட்டுத் தேடி இருக்கின்றேன், அவை அகப்படவேயில்லை. அந்தப் புகையிரத நிலையத்தில் வீட்டுக்காரர்கள் எல்லோரும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக இரண்டு சோடி தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன. நான் மறு பக்கமாக, அங்கே ஒரு சோடித் தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன, நின்று கொண்டிருந்தேன். புகையிரத நிலைய மேடையில் மஞ்சள் கோடுகள் இரண்டு பக்கங்களிலும் மிக நேர்த்தியாக கீறப்பட்டிருந்தது. மஞ்சள் கோட்டை தாண்டி எவரும் நிற்கக்கூடாது என்று ஒரு அறிவுறுத்தல் எழுதியிருந்தார்கள். எட்டிப் பார்த்துக் கொண்டே மஞ்சள் கோட்டைத் தாண்டிவிட்டேன். 'என்ன பாயப் போகின்றீர்களா...........' என்று கேட்டுவிட்டு சிரித்தார்கள். புகையிரத நிலையத்தின் இந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒரு சோடித் தண்டவாளம், மறுபக்கமாக போய்க் கொண்டிருந்த இரண்டு சோடித் தண்டவாளங்களுடன் நிலையத்தின் இரு முனைகளிலிருந்தும் சிறிது தூரத்தில் பின்னிப் பிணைந்து, பின்னர் இரண்டு சோடிகளாக பிரிந்து போய்க் கொண்டிருந்தன. 'தண்டவாளங்கள் சந்திப்பதில்லை............' என்ற தலைப்பில், ஏதோ ஒரு வடிவில், ஒன்றோ பலவோ வாசித்தது போல ஒரு ஞாபகம். டி. ராஜேந்திரரின் வசனமாகக் கூட இருக்கலாம். பல நல்ல உவமைகளும், சில வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட உவமைகளும் அவரது பாடல்களிலும், வசனங்களிலும் எப்போதும் இருந்தன. அடுக்கு மொழியில் தான் எழுதுவது என்று முடிவெடுத்தால் சில இடங்களில் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாதது. ஒரு புகையிரதம் மறு பக்கத்தில் வந்து நின்றது. அது நாங்கள் ஏற வேண்டியது இல்லை. சிட்னி நகர மையத்துக்குப் போவதற்காக நாங்கள் நின்று கொண்டிருந்தோம். மனிதர்கள் கண்டுபிடித்ததில், மனிதகுலத்தின் மொத்த வளர்ச்சியில் புகையிரதம் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு இலகுவாக ஒரு கூட்ட மக்களையும், பொருட்களையும் அது அள்ளிக் கொண்டு செல்கின்றது. ஒரு அராபியக் குதிரைக்கு, ஒரு காட்டு யானைக்கு இருக்கும் கம்பீரம் புகையிரதங்களுக்கு இருக்கின்றது. மேற்கு நாட்டவர்கள் நீராவியில் இயங்கும் இயந்திரங்களை உண்டாக்கி, அவற்றைக் கொண்டு கப்பல்களும், புகையிரதங்களும் செய்தார்கள்; அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே நாங்கள் நீராவியில் ஒரே மாவை இரண்டு தடவைகள் அவித்து புட்டு செய்து சாப்பிட்டோம் என்று சொல்லிச் சிரிப்பான் நண்பன் ஒருவன். இன்று அவன் போக்குவரத்து துறையில் பெரிய பொறுப்பில் இருக்கின்றான். உலகில் ஏறக்குறைய எல்லா பெரு நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் புகையிரத சேவைகள் திறம்பட இருக்கின்றன. ஆனால் நான் வாழும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் ஒரு விதிவிலக்கு. மிகவும் குறைந்த புகையிரத சேவைகளே லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கின்றன. ஒரு மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அராபியக் குதிரைகள் போல, காட்டு யானைகள் போல இந்த நகரில் புகையிரதங்கள் சோம்பி நிற்கின்றன. ஒழுங்கான புகையிரதப் பாதைகளோ அல்லது விரிவான தடங்களோ இல்லை. ஆனால் இங்கு வாழும் ஒவ்வொருவரும் ஒரு வாகனங்கள் அல்லது இரு வாகனங்கள் என்று வைத்திருக்கின்றார்கள். தனித்தனியே பயணிக்கின்றார்கள். அதுவே சுதந்திரம், வசதி என்கின்றார்கள். உலகில் நல்லதொரு புகையிரதச் சேவையை எங்கு பார்த்தாலும் மனம் ஏங்குகின்றது. சிட்னி நகரின் மையத்தில் இருக்கும் உயர்ந்த சுழலும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உணவகத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். 80 அல்லது 82 வது தளத்தில் அந்த உணவகம் இருந்தது என்று நினைக்கின்றேன். அதற்கென்று தனியே உயர்த்தி இருந்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டுமே அங்கிருந்து சாப்பிடலாம். அங்கே வேலை செய்பவர்கள் பலரும் நேபாளத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவர்கள் நேபாள மக்கள் என்று தெரிந்தது. அதில் ஒருவர் சரிதா தன்னுடைய பெயர் என்று அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் சரிதா என்ற பெயர் பயன்பாட்டில் இருக்கின்றது தானே என்று கேட்டார். இலங்கையிலும் நன்றாகவே இருக்கின்றது என்றேன். 'ஜூலி கணபதி' படம் நினைவில் வந்தது. சுழலும் 80 வது மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் ஜெயராமால் தப்பித்திருக்கவே முடியாது. வானம் நிறைந்த மப்பும் மந்தாரமுமாக இருந்தது. உணவகம் சுழன்றாலும் ஈரமான மேகங்கள் எல்லா திக்கையும் மூடி வைத்திருந்தன. பின்னர் சிறிது நேரத்தில் 360 பாகைகளில் சில பாகைகளில் மேகங்கள் கலைந்தன. சிட்னி நகரமும், அதன் முடிவில்லாக் கடலும் அந்த வெளிகளினூடே தெரிந்தன. ஊரில் சிறு வயதுகளில் வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து நான் பார்த்த அதே நீலக் கடல் தான். 15 நிமிடங்கள் இன்னும் இருக்கும் போதே உங்களின் நேரம் முடிந்து கொண்டு வருகின்றது என்று சரிதா வந்து ஞாபகமூட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்கும் போது 'மலையூர் மம்பட்டியான்' படம் ஞாபகத்திற்கு வந்தது. திரும்பி வரும் போது வங்கியில் ஏதோ எடுக்க வேண்டும் என்று போனார்கள். முன்பு சிட்னியில் திருட்டுப் பயம் மிக அதிகம். தாலியோ அல்லது பொன் நகைகளோ பலரும் அணிவதில்லை. முக்கியமாக புகையிரதங்களில் அணிவதேயில்லை. குறிப்பாக சில புகையிரத நிலையங்களில் இழுத்து அறுத்து விடுவார்கள் என்று சொன்னார்கள். அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். வீட்டுக்கு வந்து கூட திருடுவார்கள் என்றனர். புராணக் கதைகள் போல சில திருட்டுச் சம்பவங்களை விபரித்திருக்கின்றார்கள். அப்பாவித் தேவர்களிடம் அசுரர்கள் அடித்துப் பறிப்பது போல அந்தக் கதைகள் அமைந்திருந்தன. ஆதலால் பெரும்பாலான பொன் நகைகள் வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களிலேயே இன்றும் இருக்கின்றது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறியிருப்பதால் எம்மவர்களில் பலர் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தும் இருக்கின்றார்கள். இப்பொழுது திருட்டுப் பயம் ஓரளவு குறைந்திருக்கின்றது என்றார்கள். அதற்கான காரணத்தை வேறொரு தலைப்பில் பின்னர் எழுதுகின்றேன். திரும்பி வரும் போது புகையிரதத்தில் இரண்டு வரிசைகளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். கொஞ்சம் சத்தம் அதிகமாகவே கதைத்தும், சிரித்தும் கொண்டிருந்தோம். சில வருடங்களின் முன் அங்கு ஆஸ்திரேலிய - இந்திய பிணக்கு இப்படியான ஒரு நிகழ்வாலேயே ஆரம்பமானது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அது பொய்யான தகவலாகவும் இருக்கலாம். திடீரென்று முன்னால் இருந்த உறவினர் யாரோ அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஸ்பிரே அடிக்கின்றார் என்றார். அங்கே பார்த்தேன். ஒரு இளைஞன் குனிந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அந்த உறவினர் மீண்டும் அதையே சொன்னார். வங்கியில் இருந்து எடுத்த பொருட்கள் அவரிடமேயே இருந்தது. 'அய்யோ............ ஷ் ஷ் என்று ஸ்பிரே அடித்து, எங்களை எல்லாம் மயக்கிப் போட்டு, எல்லாவற்றையும் கொள்ளையடிக்கப் போகின்றான்.........' என்று அவர் சத்தமாகவே சொன்னார். இந்தப் பக்கத்தில் இருந்த நானும், என் மனைவியும் அந்த இளைஞனைப் பார்த்தோம். அவர் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே 'நானும் தமிழ் தான்..............' என்றார். கனடா டொரண்டோவில் இருந்து சிட்னிக்கு மருத்துவ படிப்பிற்காக வந்திருக்கும் இளைஞன் அவர். அன்றைய வகுப்புகள் முடிந்து அவரது தங்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவருடைய அலைபேசியையும், மடிக்கணனியையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சில தடவைகள் அந்த இளைஞனிடம் கேட்டுக்கொண்டோம். 'பரவாயில்லை, இலங்கைத் தமிழைக் கேட்பதே நல்ல சந்தோசமாக இருக்கின்றது..........' என்று அப்பாவியாக சிரித்தார் அந்த எதிர்கால மருத்துவர்.
- TrainStation.jpg
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
கமல் அரசியல், நிர்வாகம், ஆட்சி என்பனவற்றில் எவ்வாறு அனுபவம், நடைமுறை அறிவு, பொதுப் புரிதல் என்பன இல்லாமல் இருந்தாரோ, அதே போலவே விஜய்யும் இருக்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். கமலை விட மிகவும் செயற்கையாக விஜய் தோன்றுகின்றார். விஜய்யின் மேடைப் பேச்சுகளும், அங்க அசைவுகளும் மிகவும் அந்நியமாகத் தெரிகின்றன. எம் ஜி ஆரும், விஜய்காந்தும் அவர்களின் காலங்களில் அந்நியமாகத் தெரியவில்லை. ஆனாலும் 'அண்ணா..........' என்று அவரைத் தொடரும் ஒரு வயதினரில் பெரும்பகுதி வாக்குகள் அவருக்கு முதல் தடவையில் கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். இன்றைய நிலையில் அடுத்த தேர்தலில் தவெக மூன்றாவதாக வரக்கூடும்.
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பிலும் இதையே தான் எடப்பாடியார் சொன்னார். அவர் முகத்தை மூடி இருக்க வாய்ப்பில்லை தான், ஆனால் ஒரு சலிப்போ அல்லது விரக்தியோ காரணமாக, நாங்கள் சில சமயங்களில் கைகளால் நெற்றியைத் தாங்குவது போல, ஒரு கணத்தில் செய்திருக்கக்கூடும். தமிழ்நாட்டில் அரசியல் தாக்குதல்கள் தரை டிக்கெட் அளவிலும், இன்னும் கீழேயும் இருக்கும். சுற்றி நிற்கும் நாலு பேர்கள் சிரிப்பார்கள் என்றால் பேச்சாளர்களும், தலைவர்களும் எதையும் கூசாமல் சொல்லுவார்கள். அவை இணையத்திலும் வைரலாகப் பரவும். அதுவே தான் இந்த விடயத்திலும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. (அதிபர் ட்ரம்பும் இதே வழியையே பின்பற்றுகின்றார்..............)
-
ஒரு பயணமும் சில கதைகளும்
நல்லதொரு, அர்த்தமுள்ள படம் வில்லவன்.........❤️. சில வீடுகளில் நாங்கள் கொடுக்கும் வேப்பம் பூவின் பெறுமதியை விட அதிகமாகவே பணம் கொடுத்தார்கள். பல அயலவர்கள் எங்கள் மேல் மிகவும் பிரியமாகவே இருந்தார்கள். எல்லாவற்றையும் முடிந்த வரை உள்ள உள்ளபடியே வெளிப்படுத்திய அது வேறு ஒரு உலகம். பிடித்தமான எழுத்துகளும், கதைகளும் எங்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும் போல. புயலிலே ஒரு தோணியிலிருந்து வெளியே வருவதற்கு சில நாட்கள் எடுத்தன.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣.................. அந்த ஓங்கில் மீன்களின் கூட்டமே உண்மையானவையா அல்லது அங்கே அந்தப் பகுதி கடலுக்குள் அவர்கள் செய்து வைத்திருக்கும் செயற்கையானவையா என்ற சந்தேகம் தான் மிக மெல்லியதாக வந்தது............😜. கனடாவில் நான் இது வரை எந்த நூலகத்திற்கும் போகவில்லை. அங்கே போய்ப் பார்க்கவும் நேரம் கிடைப்பதில்லை. அடுத்த தடவை முயன்று பார்ப்போம். புலம் பெயர்ந்தவுடன் தாயகத்துடன் இருக்கும் ஒட்டுறவு காலத்தில் மெதுமெதுவாக கரைந்து போய் விடுகின்றது போல. பின்னர் வாழ்வு முடியும் காலத்தில் மீண்டும் தோன்றும் போலவும்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
யாழ் களத்திற்கு உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கின்றேன், ரதன். நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு சமயம் ஓங்கில் மீன் ஒன்று யாரோ ஒருவரின் வலையில் அகப்பட்டு விட்டதாக வீட்டில் கதைத்தார்கள். அதை மீண்டும் கடலிலேயே விட்டு விட்டதாகவும் சொன்னார்கள். ஓங்கில் மீன் என்றால் அது தான் டால்பின் மீன் என்று அந்த நேரத்தில் யாரோ விளக்கமும் கொடுத்திருந்தார்கள் என்றும் நினைக்கின்றேன். அது அப்படியே தங்கிவிட்டது. பின்னர் போராட்ட காலத்தில் என்று நினைக்கின்றேன். எங்களூர் கடற்கரையில் ஓங்கில் மீன் ஒன்று (அல்லது சில?) திசை மாறி ஒதுங்கின என்றும், அதை சில இளைஞர்கள் மீண்டும் ஆழக் கடலில் சேர்த்து விட்டதாகவும் செய்திகளில் வந்திருந்தது. நீங்கள் சொல்லியிருப்பது போலவே ஓங்கில் என்பது காரணப் பெயராக இருக்கலாம். பல புதிய சொற்கள் காரணப் பெயர்களாகவே உருவாகின்றன என்று நினைக்கின்றேன். ஓங்கில் என்னும் சொல் மூங்கில் போல மெலிதாக நீண்டு உயரமாக வளர்ந்தவர்களை விளையாட்டாக குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்ப்படுகின்றது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
மிக்க நன்றி அண்ணா. உங்களைப் போன்ற பலர் இங்கு களத்தில் கொடுக்கும் உற்சாகத்தாலும் மற்றும் சில நண்பர்களாலுமே நான் எதையாவது எழுத முயல்கின்றேன். யாழ் களத்திற்கு என்றும் என் நன்றிகள். 'எடுத்ததெல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது.........' என்று சொல்வது தான் என் வகையிலும் சரியாக உள்ளது............❤️.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகளின் ஆரம்ப காலங்களில் கவனிக்காமல் விடப்படுவது அல்லது உதாசீனப்படுத்தப்படுவது வழமையே. எங்கள் இனத்தில் இந்தப் போக்கு இன்னும் கொஞ்சம் அதிகமோ என்று இடையிடையே தோன்றுவதுண்டு. ஆனால் பூமி சூரியனைச் சுற்றுகின்றது என்று சொன்னதற்காக கலீலியோ கலிலி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அப்படியே இறந்து போனார் என்பது போன்ற நிகழ்வுகளால், உலகில் ஒருவர் இன்னொருவருக்கு குறைவில்லை போல என்று சமாதானம் அடைவதும் உண்டு. சில சமூகங்கள் கால நதியில் வேகமாக நீந்தி முன்னே போய்விட்டன. வேறு சில பழம் பெருமைகள் பேசிக் கொண்டே சிறிது பின்தங்கிவிட்டன. மலை வேம்பு என்னும் மரத்தை, அதை ஒரு விருட்சம் என்றே சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன், பத்து பன்னிரண்டு வயதாக இருக்கும் போதே முதன் முதலில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னரேயே ஊர் வேப்ப மரங்களில் நுனி வரை ஏறி வேப்பம் பூ பிடுங்கும் வேலையில் சிறப்பு தேர்ச்சி அடைந்து இருந்தேன். எங்கள் ஊரில் வேப்பம் மரங்களின் உச்சியில் இருந்து பார்க்கும் போது நீலக் கடல் தொடுவானம் வரை எல்லையில்லாமல் தெரியும். இவையெல்லாம் ரசித்துப் பார்க்க வேண்டிய விடயங்கள் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை. வேப்பம் பூ பிடுங்கி, மரச் சொந்தக்காரருக்கு ஒரு பங்கைக் கொடுத்து விட்டு, மிகுதியை சில வீடுகளுக்கு விற்போம். வடகம் செய்வதற்காக வாங்குவார்கள். கடலின் அழகை ரசிப்பதை விட, அதிக வேப்பம் பூ சேர்ப்பதிலேயே கவனம் இருந்தது. ஆனால் மலை வேம்பு பூக்கவில்லை, அதனால் அந்த விருட்சத்தின் மீது ஏறும் தேவை ஏற்படவில்லை. மலை வேம்பு ஊர் வேப்பம் மரத்தை விட கடுமையான நிறம் கொண்டதாகவும், உறுதியானதாகவும் தெரிந்தது. அந்தக் காலங்களில் திருகோணமலை சல்லியில் இருந்து ஒரு உதைபந்தாட்ட அணியினர் எங்களூருக்கு போட்டிகளுக்கு வந்திருந்தார்கள். அவர்களின் அணி மிகவும் திறமையானது, ஆனால் அவர்களின் விளையாட்டில் முரட்டுத்தனம் சிறிது அதிகமாக இருந்தது போலத் தெரிந்தது. அதனாலும், மலை என்னும் பெயராலும், மலை வேம்பு திருகோணமலையிலேயே அதிகமாக இருக்கின்றது என்று நானாகவே முடிவெடுத்து வைத்திருந்தேன். பல வருடங்களின் பின்னர் திருகோணமலையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கு ஒரு மலை வேம்பையும் நான் காணவில்லை. ஆனால் சிட்னியில் ஒரு மலை வேம்பைக் கண்டேன். பல வருடங்களின் முன்னே ஒரு நாள் வெறுமனே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு சிட்னியின் புறநகர்ப் பகுதியான அந்த சிற்றூரில் நடந்து கொண்டிருந்தேன். அந்த விருட்சம் அங்கே நின்று கொண்டிருந்தது. இது எனக்குத் தெரிந்த மரமே என்று அதன் அருகில் போனேன். அது அதுவே தான். அப்படியே பார்த்து கொண்டு அதனுடன் இருந்த ஒரு சிறிய ஒற்றை தள கட்டிடத்தினுள் போனேன், நூலகம் என்று எழுதியிருந்ததால். நூலகத்தின் நடுவே நூலகப் பணியாளர்களுக்கான இடம் இருந்தது. வலதுகைப் பக்கமாக பல வரிசைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடதுகைப் பக்கமாக பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இருந்தன. அதனுடன் நூலகத்துக்கு வருபவர்கள் இருந்து வாசிப்பதற்கு வசதியாக கதிரைகளும், மேசைகளும் சில நிரல்களில் அங்கே இருந்தன. மிகவும் வசதியான இருக்கைகள் கொண்ட கதிரைகள் மற்றும் அகண்ட மேசைகள். இவை எல்லாவற்றின் பின்னும், சுவர் ஓரமாக இந்திய மொழிகளில் புத்தகங்களும், சஞ்சிகைகளும் அடுக்கியிருந்தார்கள். தமிழ் என்று ஒரு பிரிவும் இருந்தது. அதிகமாகப் போனால் ஆனந்த விகடனும், குமுதமும், சில அவசர நாவல்களும் அங்கே இருக்கும் போல என்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாமலேயே அருகில் சென்றேன். முதலில் கண்ணில் பட்டது அசோகமித்திரனின் '18 வது அட்சக்கோடு' நாவல். அந்த திகைப்பு மாறும் முன்னேயே அந்த தமிழ் பகுதியில் இருந்த பல நாவல்களும், கதைகளும் இன்னும் இன்னும் திகைப்பைக் கொடுத்தன. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு, எஸ் ரா, ஷோபா சக்தி, அ. முத்துலிங்கம்............ என்று தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்லப்படுபவர்களின் நாவல்களும், கதைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் யார் அங்கே கொண்டு வந்தது, அதைவிட முக்கியமாக இவற்றையெல்லாம் யார் அங்கே வாசிக்கின்றார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. எட்டோ அல்லது பத்துக் கோடி தமிழ் மக்களில் மொத்தமாகவே ஒரு ஆயிரம் பேர்கள் தான் இவற்றையெல்லாம் வாசிக்கின்றார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படியாயின் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அந்த சிற்றூர் வாசிகசாலையில் இந்தப் புத்தகங்கள் எதற்காக. எங்களை நாங்களே குறைவாக மதிப்பிட்டிருக்கின்றோம் போல. மௌனமாக இருப்பவர்களின் குரல்கள் கணக்கில் சேருவதில்லை போல. ஆனால் அந்த நாவல்களும், கதைகளும் அங்கே வாசிக்கப்படுகின்றன என்பது திண்ணம். நான் அங்கே நிற்கும் நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஒரு சில மணி நேரமாவது அங்கே போவேன். சில நாட்களில் பகல் பொழுதின் பெரும் பகுதியை அங்கேயே செலவழித்திருக்கின்றேன். அந்தப் புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.சில புத்தகங்கள் இல்லாமல் போகின்றன, மீண்டும் தோன்றுகின்றன. சிலவற்றில் சில பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் வாசிக்கும் ஒரு தமிழ் சமுதாயம் அங்கே இருக்கின்றது. நெல்சன் குடாவிலிருந்து திரும்பி வந்த பின் அடுத்த நாள் காலையிலேயே வாசிகசாலைக்கு கிளம்பினேன். அது அங்கே இன்னமும் அப்படியே இருக்கின்றது என்று வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். இரண்டு இரண்டு வீட்டுக் காணிகளை இணைத்து வரிசை வரிசையாக மாடிக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக்கும் அந்த ஊரில் வாசிகசாலையை அப்படியே விட்டு விடுவார்களா என்ற பயம் மனதில் இருந்தது. வாசலில் நின்ற மலை வேம்பு அங்கே இல்லை. அதற்குப் பதிலாக சவுக்கு மரம் ஒன்றை புதிதாக வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு கடும் மழையிலோ அல்லது காற்றிலோ அந்த விருட்சம் தளர்ந்து போயிருக்கலாம். கூரையின் மேல் அது விழ முன் அதை அப்புறப்படுத்தியிருப்பார்கள். நீ முந்தினால் நீ, நான் முந்தினால் நான் என்று காலம் போய்க் கொண்டிருக்கின்றது, மரமானாலும் மனிதர்களானாலும். மற்றபடி நூலகம் தோற்றத்தில் அப்படியே இருந்தது. அதே நடு, வலக்கை, இடக்கை பிரிவுகள். ஆனால் இடைக்கைப் பக்கம் இருக்கும் இருக்கைகள் எல்லாம் இந்திய மக்களால் நிரம்பி இருந்தது. சில ஆண்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்கள். பலரிடம் மடிக்கணினி இருந்தது. அவர்கள் அந்தக் கணினிகளில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு இலவச இணைய வசதி கிடைக்கின்றது என்று பின்னர் அறிந்துகொண்டேன். தமிழ் பகுதி அதே இடத்தில் இருந்தது. ஆனால் அங்கே இருந்த நாவல்களும், கதைகளும் மாறியிருந்தன. தமிழின் ஆகச் சிறந்த நாவல் அல்லது நாவல்கள் எது என்றால் பலருக்கும் பல தெரிவுகள் இருக்கும். மிகவும் மதிக்கப்படும் சில விமர்சகர்களால் தமிழின் ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது ப. சிங்காரம் அவர்கள் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' என்னும் நாவல். இந்த நாவல் இன்று வரை தமிழில் ஒரு சாதனையாகவே கருதப்படுகின்றது. அது அங்கே இருந்தது. புலம் பெயர்ந்தவகளுக்கும், இந்த நாவலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு உண்டு. தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட புலம்பெயர் நாவல் அல்லது கதை இதுவே. இந்த நாவலை 60ம் ஆண்டுகளில் எழுதிய சிங்காரம் அவர்கள், அதை 70ம் ஆண்டுகளிலேயே வெளியிட முடிந்தது. பத்து ஆண்டுகளாக பதிப்பகங்களாலும், நிறுவனங்களாலும் இவரது எழுத்து நிராகரிக்கப்பட்டது. 'ஒன்றுமே விளங்கவில்லை................' என்று தூக்கி எறிந்துவிட்டனர். சிங்காரம் அவர்கள் அப்படியே ஒதுங்கி தனியாகிப் போனார். அதன் பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லை. 90ம் ஆண்டுகளில் தனியே இறந்த பொழுது கூட எவருக்கும் தகவல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கிடைத்த ஒரு கதிரையில் அவரது நாவலுடன் அமர்ந்தேன். அட்டையில் அவரது படம். அப்படித்தான் நினைக்கின்றேன். இணையத்தில் கிடைத்த திருட்டுப் பதிப்பில் இந்த நாவலை முன்னர் வாசித்திருக்கின்றேன், ஆனால் அதில் அவரது படம் இருக்கவில்லை. முன் தலை முழுவதும் தலைமுடி இல்லை. காதுகளில் நீண்ட முடி வளர்ந்திருந்தது. அது அவருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மலை வேம்பும் ஊர் வேப்ப மரம் போலவே பூக்கும், காய்க்கும் என்று பின்னர் தேடி அறிந்துகொண்டேன். இனி அந்த விருட்சத்தை எங்கே தேட. (தொடரும்.................. )
- Library.jpg
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
மிகவும் நல்லதொரு கட்டுரை..............❤️. மேட்டுக்குடிகளையும், இந்து சமயத்தின் உள்ளே கறையான்களின் புற்றுகள் போல தேங்கி நிற்கும் பல அடுக்குகளையும் ஒரளவாவது எதிர்த்து நிற்கும், கேள்வி கேட்கும் துணிவை சாதாரண மனிதர்களுக்கும் கொடுத்தது சுயமரியாதை இயக்கமே. அங்கிருந்தே இன்றுள்ள தனிமனித உரிமைகளை வெளிப்படுத்தும் திறனை நாங்கள் பெற்றோம். இந்த இயக்கம் இல்லாவிட்டால், 'ஏன் நீங்களும் பூசை செய்யப் போகின்றீர்களோ...............' என்று யாராவது எங்களிடம் கேட்டால், இன்று கூட தலையைக் குனிந்து கொண்டு, முட்டும் கண்ணீரை அடக்கிக் கொண்டே போகும் நிலையிலேயே இருந்திருப்போம். 'நீங்கள் செய்யலாம் என்றால், நாங்கள் ஏன் செய்ய முடியாது...........' என்று இன்று பதில் சொல்லும் உணர்வை கொடுத்தது இந்த இயக்கமே. பின்னர் எங்கள் பகுதிகளில் இயக்கங்களும் இதையே இன்னும் மேலும் வளர்க்க முற்பட்டன. ஆனாலும் தீவிரமான ஆயுதப் போராட்டத்தால் இந்த முனைப்பில் அவர்களால் பெரும் கவனத்தை குவிக்க முடியவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல, தமிழ்நாட்டிலும், ஈழத் தமிழர்களிடையேயும் ஒரு பகுதி மக்களிடையே மேட்டுக்குடி மனப்பான்மை அழியாமலும் இருக்கின்றது. வெட்ட வெட்ட துளிர்க்கும், துளிர்க்க துளிர்க்க வெட்ட வேண்டும் போல.................