Everything posted by ரசோதரன்
-
ஒரு பயணமும் சில கதைகளும்
இது தொடர்பாக ஒன்றையும் ஓரளவு விபரங்களுடன் எழுதலாம் என்று இருக்கின்றேன், அண்ணா. அதனாலேயே சில விபரங்களை இப்பொழுது தவிர்த்திருக்கின்றேன். அங்கு குடியேறிய, குடியேறிக் கொண்டிருக்கும் மக்களிடையே இருக்கும் நம்பிக்கையின்மைகளை, சந்தேகங்களை என் பார்வையில் எழுதலாம் என்று நினைத்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் மட்டுமே தான் இது காணப்படுகின்றது என்றில்லை. எல்லா மேற்கு நாடுகளிலும் புலம் பெயர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் அதிகமாகவே உள்ளது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
4. பாட்டி வடை சுட்ட கதை ------------------------------------------ சில கதைகளை ஆயிரம் தடவைகளாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம். சில நிகழ்வுகளும் திரும்ப திரும்ப நடந்து கொண்டேயும் இருக்கின்றன. மீண்டும் அந்தக் கதைகள் சொல்லப்படும் போது அல்லது அதே நிகழ்வுகள் நடக்கும் போது ஏதாவது ஒரு சின்ன மாற்றம் அல்லது திருப்பம் இருக்கும், இருக்காமல் கூட போகலாம். இந்தச் சில கதைகளும், நிகழ்வுகளும் எங்களின் வாழ்க்கைகளை விட்டு என்றுமே தூரமாகப் போவதில்லை என்பது ஆச்சரியம் தான். ஆனால் ஏராளமான கதைகள் முற்றாக எங்களை விட்டு நீங்கிவிட்டன. நான் சிறு வயதாக இருக்கும் போது அம்மாச்சி ஒரு கூனன் - கூனி என்னும் இருவரை வைத்து பல கதைகள் சொல்லியிருக்கின்றார். அந்தக் கதைகளை நான் பின்னர் வேறெங்குமே காணவில்லை. சல்லடை போட்டுத் தேடி இருக்கின்றேன், அவை அகப்படவேயில்லை. அந்தப் புகையிரத நிலையத்தில் வீட்டுக்காரர்கள் எல்லோரும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக இரண்டு சோடி தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன. நான் மறு பக்கமாக, அங்கே ஒரு சோடித் தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன, நின்று கொண்டிருந்தேன். புகையிரத நிலைய மேடையில் மஞ்சள் கோடுகள் இரண்டு பக்கங்களிலும் மிக நேர்த்தியாக கீறப்பட்டிருந்தது. மஞ்சள் கோட்டை தாண்டி எவரும் நிற்கக்கூடாது என்று ஒரு அறிவுறுத்தல் எழுதியிருந்தார்கள். எட்டிப் பார்த்துக் கொண்டே மஞ்சள் கோட்டைத் தாண்டிவிட்டேன். 'என்ன பாயப் போகின்றீர்களா...........' என்று கேட்டுவிட்டு சிரித்தார்கள். புகையிரத நிலையத்தின் இந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒரு சோடித் தண்டவாளம், மறுபக்கமாக போய்க் கொண்டிருந்த இரண்டு சோடித் தண்டவாளங்களுடன் நிலையத்தின் இரு முனைகளிலிருந்தும் சிறிது தூரத்தில் பின்னிப் பிணைந்து, பின்னர் இரண்டு சோடிகளாக பிரிந்து போய்க் கொண்டிருந்தன. 'தண்டவாளங்கள் சந்திப்பதில்லை............' என்ற தலைப்பில், ஏதோ ஒரு வடிவில், ஒன்றோ பலவோ வாசித்தது போல ஒரு ஞாபகம். டி. ராஜேந்திரரின் வசனமாகக் கூட இருக்கலாம். பல நல்ல உவமைகளும், சில வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட உவமைகளும் அவரது பாடல்களிலும், வசனங்களிலும் எப்போதும் இருந்தன. அடுக்கு மொழியில் தான் எழுதுவது என்று முடிவெடுத்தால் சில இடங்களில் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாதது. ஒரு புகையிரதம் மறு பக்கத்தில் வந்து நின்றது. அது நாங்கள் ஏற வேண்டியது இல்லை. சிட்னி நகர மையத்துக்குப் போவதற்காக நாங்கள் நின்று கொண்டிருந்தோம். மனிதர்கள் கண்டுபிடித்ததில், மனிதகுலத்தின் மொத்த வளர்ச்சியில் புகையிரதம் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு இலகுவாக ஒரு கூட்ட மக்களையும், பொருட்களையும் அது அள்ளிக் கொண்டு செல்கின்றது. ஒரு அராபியக் குதிரைக்கு, ஒரு காட்டு யானைக்கு இருக்கும் கம்பீரம் புகையிரதங்களுக்கு இருக்கின்றது. மேற்கு நாட்டவர்கள் நீராவியில் இயங்கும் இயந்திரங்களை உண்டாக்கி, அவற்றைக் கொண்டு கப்பல்களும், புகையிரதங்களும் செய்தார்கள்; அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே நாங்கள் நீராவியில் ஒரே மாவை இரண்டு தடவைகள் அவித்து புட்டு செய்து சாப்பிட்டோம் என்று சொல்லிச் சிரிப்பான் நண்பன் ஒருவன். இன்று அவன் போக்குவரத்து துறையில் பெரிய பொறுப்பில் இருக்கின்றான். உலகில் ஏறக்குறைய எல்லா பெரு நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் புகையிரத சேவைகள் திறம்பட இருக்கின்றன. ஆனால் நான் வாழும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் ஒரு விதிவிலக்கு. மிகவும் குறைந்த புகையிரத சேவைகளே லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கின்றன. ஒரு மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அராபியக் குதிரைகள் போல, காட்டு யானைகள் போல இந்த நகரில் புகையிரதங்கள் சோம்பி நிற்கின்றன. ஒழுங்கான புகையிரதப் பாதைகளோ அல்லது விரிவான தடங்களோ இல்லை. ஆனால் இங்கு வாழும் ஒவ்வொருவரும் ஒரு வாகனங்கள் அல்லது இரு வாகனங்கள் என்று வைத்திருக்கின்றார்கள். தனித்தனியே பயணிக்கின்றார்கள். அதுவே சுதந்திரம், வசதி என்கின்றார்கள். உலகில் நல்லதொரு புகையிரதச் சேவையை எங்கு பார்த்தாலும் மனம் ஏங்குகின்றது. சிட்னி நகரின் மையத்தில் இருக்கும் உயர்ந்த சுழலும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உணவகத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். 80 அல்லது 82 வது தளத்தில் அந்த உணவகம் இருந்தது என்று நினைக்கின்றேன். அதற்கென்று தனியே உயர்த்தி இருந்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டுமே அங்கிருந்து சாப்பிடலாம். அங்கே வேலை செய்பவர்கள் பலரும் நேபாளத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவர்கள் நேபாள மக்கள் என்று தெரிந்தது. அதில் ஒருவர் சரிதா தன்னுடைய பெயர் என்று அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் சரிதா என்ற பெயர் பயன்பாட்டில் இருக்கின்றது தானே என்று கேட்டார். இலங்கையிலும் நன்றாகவே இருக்கின்றது என்றேன். 'ஜூலி கணபதி' படம் நினைவில் வந்தது. சுழலும் 80 வது மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் ஜெயராமால் தப்பித்திருக்கவே முடியாது. வானம் நிறைந்த மப்பும் மந்தாரமுமாக இருந்தது. உணவகம் சுழன்றாலும் ஈரமான மேகங்கள் எல்லா திக்கையும் மூடி வைத்திருந்தன. பின்னர் சிறிது நேரத்தில் 360 பாகைகளில் சில பாகைகளில் மேகங்கள் கலைந்தன. சிட்னி நகரமும், அதன் முடிவில்லாக் கடலும் அந்த வெளிகளினூடே தெரிந்தன. ஊரில் சிறு வயதுகளில் வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து நான் பார்த்த அதே நீலக் கடல் தான். 15 நிமிடங்கள் இன்னும் இருக்கும் போதே உங்களின் நேரம் முடிந்து கொண்டு வருகின்றது என்று சரிதா வந்து ஞாபகமூட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்கும் போது 'மலையூர் மம்பட்டியான்' படம் ஞாபகத்திற்கு வந்தது. திரும்பி வரும் போது வங்கியில் ஏதோ எடுக்க வேண்டும் என்று போனார்கள். முன்பு சிட்னியில் திருட்டுப் பயம் மிக அதிகம். தாலியோ அல்லது பொன் நகைகளோ பலரும் அணிவதில்லை. முக்கியமாக புகையிரதங்களில் அணிவதேயில்லை. குறிப்பாக சில புகையிரத நிலையங்களில் இழுத்து அறுத்து விடுவார்கள் என்று சொன்னார்கள். அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். வீட்டுக்கு வந்து கூட திருடுவார்கள் என்றனர். புராணக் கதைகள் போல சில திருட்டுச் சம்பவங்களை விபரித்திருக்கின்றார்கள். அப்பாவித் தேவர்களிடம் அசுரர்கள் அடித்துப் பறிப்பது போல அந்தக் கதைகள் அமைந்திருந்தன. ஆதலால் பெரும்பாலான பொன் நகைகள் வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களிலேயே இன்றும் இருக்கின்றது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறியிருப்பதால் எம்மவர்களில் பலர் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தும் இருக்கின்றார்கள். இப்பொழுது திருட்டுப் பயம் ஓரளவு குறைந்திருக்கின்றது என்றார்கள். அதற்கான காரணத்தை வேறொரு தலைப்பில் பின்னர் எழுதுகின்றேன். திரும்பி வரும் போது புகையிரதத்தில் இரண்டு வரிசைகளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். கொஞ்சம் சத்தம் அதிகமாகவே கதைத்தும், சிரித்தும் கொண்டிருந்தோம். சில வருடங்களின் முன் அங்கு ஆஸ்திரேலிய - இந்திய பிணக்கு இப்படியான ஒரு நிகழ்வாலேயே ஆரம்பமானது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அது பொய்யான தகவலாகவும் இருக்கலாம். திடீரென்று முன்னால் இருந்த உறவினர் யாரோ அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஸ்பிரே அடிக்கின்றார் என்றார். அங்கே பார்த்தேன். ஒரு இளைஞன் குனிந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அந்த உறவினர் மீண்டும் அதையே சொன்னார். வங்கியில் இருந்து எடுத்த பொருட்கள் அவரிடமேயே இருந்தது. 'அய்யோ............ ஷ் ஷ் என்று ஸ்பிரே அடித்து, எங்களை எல்லாம் மயக்கிப் போட்டு, எல்லாவற்றையும் கொள்ளையடிக்கப் போகின்றான்.........' என்று அவர் சத்தமாகவே சொன்னார். இந்தப் பக்கத்தில் இருந்த நானும், என் மனைவியும் அந்த இளைஞனைப் பார்த்தோம். அவர் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே 'நானும் தமிழ் தான்..............' என்றார். கனடா டொரண்டோவில் இருந்து சிட்னிக்கு மருத்துவ படிப்பிற்காக வந்திருக்கும் இளைஞன் அவர். அன்றைய வகுப்புகள் முடிந்து அவரது தங்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவருடைய அலைபேசியையும், மடிக்கணனியையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சில தடவைகள் அந்த இளைஞனிடம் கேட்டுக்கொண்டோம். 'பரவாயில்லை, இலங்கைத் தமிழைக் கேட்பதே நல்ல சந்தோசமாக இருக்கின்றது..........' என்று அப்பாவியாக சிரித்தார் அந்த எதிர்கால மருத்துவர்.
- TrainStation.jpg
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
கமல் அரசியல், நிர்வாகம், ஆட்சி என்பனவற்றில் எவ்வாறு அனுபவம், நடைமுறை அறிவு, பொதுப் புரிதல் என்பன இல்லாமல் இருந்தாரோ, அதே போலவே விஜய்யும் இருக்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். கமலை விட மிகவும் செயற்கையாக விஜய் தோன்றுகின்றார். விஜய்யின் மேடைப் பேச்சுகளும், அங்க அசைவுகளும் மிகவும் அந்நியமாகத் தெரிகின்றன. எம் ஜி ஆரும், விஜய்காந்தும் அவர்களின் காலங்களில் அந்நியமாகத் தெரியவில்லை. ஆனாலும் 'அண்ணா..........' என்று அவரைத் தொடரும் ஒரு வயதினரில் பெரும்பகுதி வாக்குகள் அவருக்கு முதல் தடவையில் கிடைக்கும் என்றே நினைக்கின்றேன். இன்றைய நிலையில் அடுத்த தேர்தலில் தவெக மூன்றாவதாக வரக்கூடும்.
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பிலும் இதையே தான் எடப்பாடியார் சொன்னார். அவர் முகத்தை மூடி இருக்க வாய்ப்பில்லை தான், ஆனால் ஒரு சலிப்போ அல்லது விரக்தியோ காரணமாக, நாங்கள் சில சமயங்களில் கைகளால் நெற்றியைத் தாங்குவது போல, ஒரு கணத்தில் செய்திருக்கக்கூடும். தமிழ்நாட்டில் அரசியல் தாக்குதல்கள் தரை டிக்கெட் அளவிலும், இன்னும் கீழேயும் இருக்கும். சுற்றி நிற்கும் நாலு பேர்கள் சிரிப்பார்கள் என்றால் பேச்சாளர்களும், தலைவர்களும் எதையும் கூசாமல் சொல்லுவார்கள். அவை இணையத்திலும் வைரலாகப் பரவும். அதுவே தான் இந்த விடயத்திலும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. (அதிபர் ட்ரம்பும் இதே வழியையே பின்பற்றுகின்றார்..............)
-
ஒரு பயணமும் சில கதைகளும்
நல்லதொரு, அர்த்தமுள்ள படம் வில்லவன்.........❤️. சில வீடுகளில் நாங்கள் கொடுக்கும் வேப்பம் பூவின் பெறுமதியை விட அதிகமாகவே பணம் கொடுத்தார்கள். பல அயலவர்கள் எங்கள் மேல் மிகவும் பிரியமாகவே இருந்தார்கள். எல்லாவற்றையும் முடிந்த வரை உள்ள உள்ளபடியே வெளிப்படுத்திய அது வேறு ஒரு உலகம். பிடித்தமான எழுத்துகளும், கதைகளும் எங்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும் போல. புயலிலே ஒரு தோணியிலிருந்து வெளியே வருவதற்கு சில நாட்கள் எடுத்தன.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣.................. அந்த ஓங்கில் மீன்களின் கூட்டமே உண்மையானவையா அல்லது அங்கே அந்தப் பகுதி கடலுக்குள் அவர்கள் செய்து வைத்திருக்கும் செயற்கையானவையா என்ற சந்தேகம் தான் மிக மெல்லியதாக வந்தது............😜. கனடாவில் நான் இது வரை எந்த நூலகத்திற்கும் போகவில்லை. அங்கே போய்ப் பார்க்கவும் நேரம் கிடைப்பதில்லை. அடுத்த தடவை முயன்று பார்ப்போம். புலம் பெயர்ந்தவுடன் தாயகத்துடன் இருக்கும் ஒட்டுறவு காலத்தில் மெதுமெதுவாக கரைந்து போய் விடுகின்றது போல. பின்னர் வாழ்வு முடியும் காலத்தில் மீண்டும் தோன்றும் போலவும்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
யாழ் களத்திற்கு உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கின்றேன், ரதன். நான் சிறுவனாக இருக்கும் போது ஒரு சமயம் ஓங்கில் மீன் ஒன்று யாரோ ஒருவரின் வலையில் அகப்பட்டு விட்டதாக வீட்டில் கதைத்தார்கள். அதை மீண்டும் கடலிலேயே விட்டு விட்டதாகவும் சொன்னார்கள். ஓங்கில் மீன் என்றால் அது தான் டால்பின் மீன் என்று அந்த நேரத்தில் யாரோ விளக்கமும் கொடுத்திருந்தார்கள் என்றும் நினைக்கின்றேன். அது அப்படியே தங்கிவிட்டது. பின்னர் போராட்ட காலத்தில் என்று நினைக்கின்றேன். எங்களூர் கடற்கரையில் ஓங்கில் மீன் ஒன்று (அல்லது சில?) திசை மாறி ஒதுங்கின என்றும், அதை சில இளைஞர்கள் மீண்டும் ஆழக் கடலில் சேர்த்து விட்டதாகவும் செய்திகளில் வந்திருந்தது. நீங்கள் சொல்லியிருப்பது போலவே ஓங்கில் என்பது காரணப் பெயராக இருக்கலாம். பல புதிய சொற்கள் காரணப் பெயர்களாகவே உருவாகின்றன என்று நினைக்கின்றேன். ஓங்கில் என்னும் சொல் மூங்கில் போல மெலிதாக நீண்டு உயரமாக வளர்ந்தவர்களை விளையாட்டாக குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்ப்படுகின்றது.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
மிக்க நன்றி அண்ணா. உங்களைப் போன்ற பலர் இங்கு களத்தில் கொடுக்கும் உற்சாகத்தாலும் மற்றும் சில நண்பர்களாலுமே நான் எதையாவது எழுத முயல்கின்றேன். யாழ் களத்திற்கு என்றும் என் நன்றிகள். 'எடுத்ததெல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது.........' என்று சொல்வது தான் என் வகையிலும் சரியாக உள்ளது............❤️.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகளின் ஆரம்ப காலங்களில் கவனிக்காமல் விடப்படுவது அல்லது உதாசீனப்படுத்தப்படுவது வழமையே. எங்கள் இனத்தில் இந்தப் போக்கு இன்னும் கொஞ்சம் அதிகமோ என்று இடையிடையே தோன்றுவதுண்டு. ஆனால் பூமி சூரியனைச் சுற்றுகின்றது என்று சொன்னதற்காக கலீலியோ கலிலி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அப்படியே இறந்து போனார் என்பது போன்ற நிகழ்வுகளால், உலகில் ஒருவர் இன்னொருவருக்கு குறைவில்லை போல என்று சமாதானம் அடைவதும் உண்டு. சில சமூகங்கள் கால நதியில் வேகமாக நீந்தி முன்னே போய்விட்டன. வேறு சில பழம் பெருமைகள் பேசிக் கொண்டே சிறிது பின்தங்கிவிட்டன. மலை வேம்பு என்னும் மரத்தை, அதை ஒரு விருட்சம் என்றே சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன், பத்து பன்னிரண்டு வயதாக இருக்கும் போதே முதன் முதலில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னரேயே ஊர் வேப்ப மரங்களில் நுனி வரை ஏறி வேப்பம் பூ பிடுங்கும் வேலையில் சிறப்பு தேர்ச்சி அடைந்து இருந்தேன். எங்கள் ஊரில் வேப்பம் மரங்களின் உச்சியில் இருந்து பார்க்கும் போது நீலக் கடல் தொடுவானம் வரை எல்லையில்லாமல் தெரியும். இவையெல்லாம் ரசித்துப் பார்க்க வேண்டிய விடயங்கள் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை. வேப்பம் பூ பிடுங்கி, மரச் சொந்தக்காரருக்கு ஒரு பங்கைக் கொடுத்து விட்டு, மிகுதியை சில வீடுகளுக்கு விற்போம். வடகம் செய்வதற்காக வாங்குவார்கள். கடலின் அழகை ரசிப்பதை விட, அதிக வேப்பம் பூ சேர்ப்பதிலேயே கவனம் இருந்தது. ஆனால் மலை வேம்பு பூக்கவில்லை, அதனால் அந்த விருட்சத்தின் மீது ஏறும் தேவை ஏற்படவில்லை. மலை வேம்பு ஊர் வேப்பம் மரத்தை விட கடுமையான நிறம் கொண்டதாகவும், உறுதியானதாகவும் தெரிந்தது. அந்தக் காலங்களில் திருகோணமலை சல்லியில் இருந்து ஒரு உதைபந்தாட்ட அணியினர் எங்களூருக்கு போட்டிகளுக்கு வந்திருந்தார்கள். அவர்களின் அணி மிகவும் திறமையானது, ஆனால் அவர்களின் விளையாட்டில் முரட்டுத்தனம் சிறிது அதிகமாக இருந்தது போலத் தெரிந்தது. அதனாலும், மலை என்னும் பெயராலும், மலை வேம்பு திருகோணமலையிலேயே அதிகமாக இருக்கின்றது என்று நானாகவே முடிவெடுத்து வைத்திருந்தேன். பல வருடங்களின் பின்னர் திருகோணமலையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கு ஒரு மலை வேம்பையும் நான் காணவில்லை. ஆனால் சிட்னியில் ஒரு மலை வேம்பைக் கண்டேன். பல வருடங்களின் முன்னே ஒரு நாள் வெறுமனே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு சிட்னியின் புறநகர்ப் பகுதியான அந்த சிற்றூரில் நடந்து கொண்டிருந்தேன். அந்த விருட்சம் அங்கே நின்று கொண்டிருந்தது. இது எனக்குத் தெரிந்த மரமே என்று அதன் அருகில் போனேன். அது அதுவே தான். அப்படியே பார்த்து கொண்டு அதனுடன் இருந்த ஒரு சிறிய ஒற்றை தள கட்டிடத்தினுள் போனேன், நூலகம் என்று எழுதியிருந்ததால். நூலகத்தின் நடுவே நூலகப் பணியாளர்களுக்கான இடம் இருந்தது. வலதுகைப் பக்கமாக பல வரிசைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடதுகைப் பக்கமாக பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இருந்தன. அதனுடன் நூலகத்துக்கு வருபவர்கள் இருந்து வாசிப்பதற்கு வசதியாக கதிரைகளும், மேசைகளும் சில நிரல்களில் அங்கே இருந்தன. மிகவும் வசதியான இருக்கைகள் கொண்ட கதிரைகள் மற்றும் அகண்ட மேசைகள். இவை எல்லாவற்றின் பின்னும், சுவர் ஓரமாக இந்திய மொழிகளில் புத்தகங்களும், சஞ்சிகைகளும் அடுக்கியிருந்தார்கள். தமிழ் என்று ஒரு பிரிவும் இருந்தது. அதிகமாகப் போனால் ஆனந்த விகடனும், குமுதமும், சில அவசர நாவல்களும் அங்கே இருக்கும் போல என்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாமலேயே அருகில் சென்றேன். முதலில் கண்ணில் பட்டது அசோகமித்திரனின் '18 வது அட்சக்கோடு' நாவல். அந்த திகைப்பு மாறும் முன்னேயே அந்த தமிழ் பகுதியில் இருந்த பல நாவல்களும், கதைகளும் இன்னும் இன்னும் திகைப்பைக் கொடுத்தன. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு, எஸ் ரா, ஷோபா சக்தி, அ. முத்துலிங்கம்............ என்று தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்லப்படுபவர்களின் நாவல்களும், கதைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் யார் அங்கே கொண்டு வந்தது, அதைவிட முக்கியமாக இவற்றையெல்லாம் யார் அங்கே வாசிக்கின்றார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. எட்டோ அல்லது பத்துக் கோடி தமிழ் மக்களில் மொத்தமாகவே ஒரு ஆயிரம் பேர்கள் தான் இவற்றையெல்லாம் வாசிக்கின்றார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படியாயின் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அந்த சிற்றூர் வாசிகசாலையில் இந்தப் புத்தகங்கள் எதற்காக. எங்களை நாங்களே குறைவாக மதிப்பிட்டிருக்கின்றோம் போல. மௌனமாக இருப்பவர்களின் குரல்கள் கணக்கில் சேருவதில்லை போல. ஆனால் அந்த நாவல்களும், கதைகளும் அங்கே வாசிக்கப்படுகின்றன என்பது திண்ணம். நான் அங்கே நிற்கும் நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஒரு சில மணி நேரமாவது அங்கே போவேன். சில நாட்களில் பகல் பொழுதின் பெரும் பகுதியை அங்கேயே செலவழித்திருக்கின்றேன். அந்தப் புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.சில புத்தகங்கள் இல்லாமல் போகின்றன, மீண்டும் தோன்றுகின்றன. சிலவற்றில் சில பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் வாசிக்கும் ஒரு தமிழ் சமுதாயம் அங்கே இருக்கின்றது. நெல்சன் குடாவிலிருந்து திரும்பி வந்த பின் அடுத்த நாள் காலையிலேயே வாசிகசாலைக்கு கிளம்பினேன். அது அங்கே இன்னமும் அப்படியே இருக்கின்றது என்று வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். இரண்டு இரண்டு வீட்டுக் காணிகளை இணைத்து வரிசை வரிசையாக மாடிக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக்கும் அந்த ஊரில் வாசிகசாலையை அப்படியே விட்டு விடுவார்களா என்ற பயம் மனதில் இருந்தது. வாசலில் நின்ற மலை வேம்பு அங்கே இல்லை. அதற்குப் பதிலாக சவுக்கு மரம் ஒன்றை புதிதாக வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு கடும் மழையிலோ அல்லது காற்றிலோ அந்த விருட்சம் தளர்ந்து போயிருக்கலாம். கூரையின் மேல் அது விழ முன் அதை அப்புறப்படுத்தியிருப்பார்கள். நீ முந்தினால் நீ, நான் முந்தினால் நான் என்று காலம் போய்க் கொண்டிருக்கின்றது, மரமானாலும் மனிதர்களானாலும். மற்றபடி நூலகம் தோற்றத்தில் அப்படியே இருந்தது. அதே நடு, வலக்கை, இடக்கை பிரிவுகள். ஆனால் இடைக்கைப் பக்கம் இருக்கும் இருக்கைகள் எல்லாம் இந்திய மக்களால் நிரம்பி இருந்தது. சில ஆண்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்கள். பலரிடம் மடிக்கணினி இருந்தது. அவர்கள் அந்தக் கணினிகளில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு இலவச இணைய வசதி கிடைக்கின்றது என்று பின்னர் அறிந்துகொண்டேன். தமிழ் பகுதி அதே இடத்தில் இருந்தது. ஆனால் அங்கே இருந்த நாவல்களும், கதைகளும் மாறியிருந்தன. தமிழின் ஆகச் சிறந்த நாவல் அல்லது நாவல்கள் எது என்றால் பலருக்கும் பல தெரிவுகள் இருக்கும். மிகவும் மதிக்கப்படும் சில விமர்சகர்களால் தமிழின் ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது ப. சிங்காரம் அவர்கள் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' என்னும் நாவல். இந்த நாவல் இன்று வரை தமிழில் ஒரு சாதனையாகவே கருதப்படுகின்றது. அது அங்கே இருந்தது. புலம் பெயர்ந்தவகளுக்கும், இந்த நாவலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு உண்டு. தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட புலம்பெயர் நாவல் அல்லது கதை இதுவே. இந்த நாவலை 60ம் ஆண்டுகளில் எழுதிய சிங்காரம் அவர்கள், அதை 70ம் ஆண்டுகளிலேயே வெளியிட முடிந்தது. பத்து ஆண்டுகளாக பதிப்பகங்களாலும், நிறுவனங்களாலும் இவரது எழுத்து நிராகரிக்கப்பட்டது. 'ஒன்றுமே விளங்கவில்லை................' என்று தூக்கி எறிந்துவிட்டனர். சிங்காரம் அவர்கள் அப்படியே ஒதுங்கி தனியாகிப் போனார். அதன் பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லை. 90ம் ஆண்டுகளில் தனியே இறந்த பொழுது கூட எவருக்கும் தகவல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கிடைத்த ஒரு கதிரையில் அவரது நாவலுடன் அமர்ந்தேன். அட்டையில் அவரது படம். அப்படித்தான் நினைக்கின்றேன். இணையத்தில் கிடைத்த திருட்டுப் பதிப்பில் இந்த நாவலை முன்னர் வாசித்திருக்கின்றேன், ஆனால் அதில் அவரது படம் இருக்கவில்லை. முன் தலை முழுவதும் தலைமுடி இல்லை. காதுகளில் நீண்ட முடி வளர்ந்திருந்தது. அது அவருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மலை வேம்பும் ஊர் வேப்ப மரம் போலவே பூக்கும், காய்க்கும் என்று பின்னர் தேடி அறிந்துகொண்டேன். இனி அந்த விருட்சத்தை எங்கே தேட. (தொடரும்.................. )
- Library.jpg
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
மிகவும் நல்லதொரு கட்டுரை..............❤️. மேட்டுக்குடிகளையும், இந்து சமயத்தின் உள்ளே கறையான்களின் புற்றுகள் போல தேங்கி நிற்கும் பல அடுக்குகளையும் ஒரளவாவது எதிர்த்து நிற்கும், கேள்வி கேட்கும் துணிவை சாதாரண மனிதர்களுக்கும் கொடுத்தது சுயமரியாதை இயக்கமே. அங்கிருந்தே இன்றுள்ள தனிமனித உரிமைகளை வெளிப்படுத்தும் திறனை நாங்கள் பெற்றோம். இந்த இயக்கம் இல்லாவிட்டால், 'ஏன் நீங்களும் பூசை செய்யப் போகின்றீர்களோ...............' என்று யாராவது எங்களிடம் கேட்டால், இன்று கூட தலையைக் குனிந்து கொண்டு, முட்டும் கண்ணீரை அடக்கிக் கொண்டே போகும் நிலையிலேயே இருந்திருப்போம். 'நீங்கள் செய்யலாம் என்றால், நாங்கள் ஏன் செய்ய முடியாது...........' என்று இன்று பதில் சொல்லும் உணர்வை கொடுத்தது இந்த இயக்கமே. பின்னர் எங்கள் பகுதிகளில் இயக்கங்களும் இதையே இன்னும் மேலும் வளர்க்க முற்பட்டன. ஆனாலும் தீவிரமான ஆயுதப் போராட்டத்தால் இந்த முனைப்பில் அவர்களால் பெரும் கவனத்தை குவிக்க முடியவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல, தமிழ்நாட்டிலும், ஈழத் தமிழர்களிடையேயும் ஒரு பகுதி மக்களிடையே மேட்டுக்குடி மனப்பான்மை அழியாமலும் இருக்கின்றது. வெட்ட வெட்ட துளிர்க்கும், துளிர்க்க துளிர்க்க வெட்ட வேண்டும் போல.................
-
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள். மஞ்சள் காமாலை நோயிலிருந்து சுகமாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். நேற்று படப்பிடிப்பு ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் நீர்ச்சத்து குறைவே (dehydration?) மயக்கத்திற்கான காரணம் என்றார்கள்.
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
குளியல் அறை, படுக்கை அறை என்று எந்த இடத்தில் இருந்தும் படம் எடுத்துப் போட தயாராக உள்ள இன்றைய இணைய உலகில், எடப்பாடியார் என்ன ஒரு காரியத்தை செய்திருக்கின்றார்.............🫣. என்னதான் கடுமையாக அமித்ஷா பேசியிருந்தாலும், வீட்டுக்குப் போன பின் எடப்பாடியார் முகத்தை மூடிக் கொண்டு அழுதிருக்கலாம்.............. இன்று தமிழர்களும், தமிழ்நாடும் ஒன்றாக நின்று எதிர்ப்பை காட்ட வேண்டிய ஒரே கட்சி பாஜகவே. இந்த நேரத்தில் அவர்களுடன் கூட்டணி வைப்பது மட்டும் இல்லாமல், கட்சியையும், சுயமரியாதையையும் அவர்களிடம் இழந்து கொண்டிருக்கும் எடப்பாடியார் விரைவில் எல்லோராலும் கைவிடப்படலாம். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைய, விஜய்காந்த்தின் உடலும் உணர்வும் தளர, தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பாட்டிருக்கின்றது என்றனர். ஆனால் அப்படி ஒரு வெற்றிடம் உண்டாக விடாமல், திமுகவும் அதிமுகவும் தங்களை மீண்டும் கட்டமைத்துக் கொண்டன. ஆனால் இன்று திமுகவும், அவர்களுக்கு போட்டியாக ஒரு வெற்றிடமுமே உள்ளது. என்ன தான் வெற்றிடம் ஒன்று இருந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா என்ற நிலையிலேயே சில தலைவர்களின் காலம் முடியும் போல.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
ஒரு வாகனத்தில் ஏற்றியே மண் குன்றுகளுக்கு கொண்டு சென்றார்கள். செல்லும் போது சில சிறு மண் குவியல்களைத் தாண்டியே வாகனம் ஏறி இறங்கிச் சென்றது. அப்போது வல்லிபுரக் கோவில் பகுதிகளே நினைவில் வந்தன. வல்லிபுரத்தில் மண் குவியல்கள் இப்போது இல்லை. வெறும் மண் தானே என்று அள்ளி முடித்துவிட்டார்கள்.............🫣. மேற்கத்தைய நாடுகளில் வெறும் மண் தானே என்று அள்ளி விடாமல், அந்த இடத்தை பயனுள்ளதாக மாற்ற வேறு ஏதாவது வழிகள் இருக்கின்றதா என்று பார்க்கின்றார்கள். ஆனால் இதே மண் குவியல்கள் ஆபிரிக்காவிலோ அல்லது ஆசியாவிலோ இருந்தால், அதே மேற்கு நாடுகள் அங்கு அரிய உலோகங்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்து, அரிய உலோகங்கள் அங்கு இருந்தால் அந்த மண் குவியல்களை இல்லாமலும் ஆக்கிவிடக் கூடியன. அங்கு நான் பார்த்த இன்னொரு விடயம் மணல் மேடுகளில் ஏறிச் செல்லும் கனரக வாகனங்கள் மிட்சுபிசி (Mitsubishi) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனத்தின் இப்படியான கனரக வாகனங்களை நான் முன்னர் கண்டிருக்கவில்லை. இந்த நிறுவனத்தின் வாகனங்கள் ஒரு முடிவுக்கு வந்தது போன்ற ஒரு நிலையே அமெரிக்காவில் இருக்கின்றது. இதே போலவே அங்கே பலரும் மிட்சுபிசி அவுட்லாண்டர் போன்ற வாகனங்களையும் தங்களின் தேவைகளுக்கு வைத்திருக்கின்றார்கள்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த நாகரிகத்திலும் அப்படி ஒரு தெய்வம் இருக்கின்றதா என்று யோசிக்க வைத்தது மகளின் அந்தக் கேள்வி. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பன ஐந்து பூதங்கள் எனப்படுபவை. பூமியெங்கும் பல நாகரிகங்களிலும் இவைக்கு தனித்தனியே கடவுள்கள் இருந்தார்கள். அவற்றில் பல கடவுள்கள் அழிந்து போய் விட்டாலும், சில கடவுள்கள் மனிதர்களிடம் இருந்து தப்பி இப்போதும் பூமியில் அழியாமல் இருக்கின்றார்கள். ஆனாலும் தனியே மண்ணுக்கு என்று ஒருவர் எங்கேயும் இருந்ததில்லை என்றே தோன்றியது. 'மண்ணுக்கு என்று ஒரு அப்புச்சாமி இல்லை. ஆனால்...............' சுற்றிவர மண்ணும், மண் குவியல்களும் அன்றி வேறுதுவுமில்லை. மேலே தெளிந்த நீல வானம். குளிர்காலப் பருவத்தை முடித்துக் கொண்ட சூரியன் இதமாக கிழக்கில் இருந்து எரிந்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு இடம் இருப்பதை நான் முன்னர் தெரிந்திருக்கவில்லை. பெரும் மணல் வெளியும், அதன் இடை இடையே நெருக்கமாக சில நூறு அடிகள் உயரம் கொண்ட மண் குன்றுகளும் அந்தப் பிரதேசத்தை மூடி இருந்தன. மண் சரிவுகளில் சறுக்கும், ஓட்டகத்தில் ஏறி ஓடும், மணல் பிரதேச வாகனங்களில் பறக்கும் விளையாட்டுகளும், பொழுதுபோக்குகளுக்குமான இடம் அது. 'ஆனால் பூமாதேவி என்று ஒரு அப்புச்சாமி இருக்கின்றார். அம்மன் போல. அவர் தான் பூமி முழுவதற்கும் கடவுள், பூமிக்கு பொறுப்பு.............' என்றேன். 'நீங்கள் அவரையா இப்போது கும்பிட்டீர்கள்.........' என்று சிரித்தனர் ஒன்றாகச் சேர்ந்து. கொடுக்கப்பட்ட அந்த நீண்ட மட்டையின் மீது இருந்தோ அல்லது நின்றோ சரிவுகளில் சறுக்கிக் கொண்டு கீழே வந்து விடலாம். மட்டையின் மீது இருந்து கொண்டே சறுக்குவது இலகு. மட்டையில் நின்று கொண்டே சரிவுகளில் சறுக்கி வந்தால் முகம் குப்புற விழ வேண்டி வந்தாலும் வரும். எப்படியோ உருண்டு பிரண்டாவது கீழே வந்து விடலாம். ஆனால் மீண்டும் சரிவுகளில் ஏறும் போது மணல் தெய்வத்தின் துணை இருந்தால் நலம். நான் இரண்டு முழங்கால்களையும் குத்திட்டு, மட்டையை மணலில் குத்தி கைகளால் பிடித்துக் கொண்டே, தலையைத் தாழ்த்தி, மூச்சு விடும் போது பார்த்திருக்கின்றார்கள். காவோலை மண்டியிட்டு மூச்சு விட குருத்தோலைகள் கலகலத்தன. சிட்னியில் இறங்கிய அன்றே நெல்சன் குடாவுக்கு போவதற்கு ஆயத்தாகிவிட்டார்கள். என்னை விட்டால் வீட்டுக்கு அருகில் இருக்கும் வியட்நாம் வெதுப்பகத்தில், அது இப்பவும் அங்கே இருந்தால், பாணை வாங்கி சம்பல் அல்லது பழங்கறிகளுடன் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரில் இருக்கும் வாசிகசாலைக்குள் ஓடிப் போய் விடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். முன்னர் சில தடவைகள் அப்படி நடந்தும் இருக்கின்றது. -நெல்சன் குடா சிட்னியிலிருந்து வட கிழக்கு திசையில் ஒரு இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கின்றது. கலிபோர்னியாவில் இருக்கும் கடற்கரை சுற்றுலா நகரங்கள் போன்றே இதுவும் இருக்கின்றது. கோடை காலத்தில் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருவார்கள் என்றனர். அங்கே கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருக்கும் எண்ணற்ற விடுதிகளே அதற்குச் சான்று. அங்கிருக்கும் மணல் மேடுகள் பூமியின் தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று அங்கே எழுதியிருந்தார்கள். அதிகமாகப் போனால் சில நூறு அடிகளே வரும் இவையா தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று ஆச்சரியமாக இருந்தது. வடகோளத்தில் அரபுப் பாலைவனங்களிலோ அல்லது ஆபிரிக்கப் பாலைவனங்களிலோ ஆயிரம் அடிகளில் மண் மேடுகள் இருக்கும் என்றே நினைக்கின்றேன். இந்தியாவில் கூட ராஜஸ்தானில் இருக்கலாம். பூமியின் வடகோளமும், தென்கோளமும் மிகவும் மாறுபட்டவை. தென் கோளத்தில் நீர்ப்பரப்பு மிக அதிகம், நிலப்பரப்பு மிகக் குறைவு. வட கோளத்தில் நிலப்பரப்பு தென் கோள நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகம். அதனாலேயே தென் கோளத்தின் வெப்பநிலை சீராகவும், வடகோளத்தின் வெப்பநிலை பருவகாலங்களுடன் பெருமளவு மாறுபட்டுக் கொண்டும் இருக்கின்றது. திமிங்கிலம் பார்ப்பது, ஓங்கில் (டால்பின்) மீன்கள் பார்ப்பது என்றும் பெரிய படகுகளில் ஆட்களை கடலுக்குள் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். சில தடவைகள் கலிஃபோர்னியா கடலுக்குள் இப்படி போயும் இருக்கின்றோம். இப்படிப் போனதில் ஒரு தடவையாவது ஒரு திமிங்கிலமோ அல்லது ஓங்கில் மீனோ கண்ணில் பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பொழுது நான் வேலை பார்த்த இடம் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது, ஒரு நாள் மதியம் கடற்கரையில் நடக்கும் போது ஓங்கில் மீன்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தன. எப்பவோ குடுத்த காசுகளுக்கு அப்பொழுது எனக்காக வந்திருக்கின்றன போல. நெல்சன் குடாவிலும் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கட்டணங்கள், விலைகளும் அதிகம். அந்தக் கடற்பகுதியில் எத்தனை ஓங்கில்கள் இருக்கின்றன, எத்தனை குட்டிகள் போட்டன என்ற தகவல்களும், இன்னும் மேலதிக கதைகளும் அந்தப் படகுப் பயணத்தில் சொன்னார்கள். ஆனால் எந்த மீனும் மேற்கடலுக்கு வரவேயில்லை. கலிபோர்னியா கடலில் கேட்காத கதைகளா அல்லது கொடுக்காத காசா, சரி இதுவும் போகட்டும் என்று இருந்தோம். திடீரென்று வேறோரு பகுதியில் ஓங்கில் மீன்கள் நடமாடுவதாக அங்கே படகை செலுத்தினார்கள். அங்கே பெரிதும் சிறிதுமாக பல ஓங்கில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. பெரியவை கடுமையான சாம்பல் நிறத்திலும், குட்டிகள் மெல்லிய சாம்பல் நிறத்திலும் இருந்தன. முக்கியமான ஒரு விடயம் சொன்னார்கள். இந்த ஓங்கில் மீன்களின் கூட்டத்தில் பெரிய மீன்களில் ஆண் மீன்களே கிடையாது என்றும், அம்மா - பெரியம்மா - சித்தி - மாமி மீன்கள் மட்டுமே குட்டிகளை வளர்க்கின்றன என்றும் சொன்னார்கள். ஆண்கள் தனியே போய் விடுமாம். ஓங்கில் மீன்கள் புத்திசாலிகள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம் தானே. அங்கிருந்த ஒரு வெளிச்ச வீட்டிற்கு போயிருந்தோம். 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை, அந்த வெளிச்ச வீடு அங்கிருக்கும் ஒரு சிறிய மலையில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அந்த குடாப் பகுதிக்கு இரவுகளில் வரும் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து போயிருக்கின்றனர். தனி ஒருவராக ஒருவர் அந்த வெளிச்ச வீட்டை பல ஆண்டுகள் பராமரித்து இருக்கின்றார். சில மண்ணெண்ணை லாந்தர்களை இரவுகளில் ஏற்றி அந்த வெளிச்ச வீட்டை இயக்கியிருக்கின்றார். அவர் தினமும் லாந்தர்களை ஏற்றினார் என்றே அங்கே எழுதி வைத்திருக்கின்றார்கள். அந்த லாந்தர்கள் சில அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு மனிதர் போல எத்தனை தெய்வங்கள் வந்து போன பூமி இது. (தொடரும்..........................)
- SandBoarding.jpg
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣............ ஏற்கனவே அல்வாயன் அலவாங்கு, கத்தியுடன் நிற்கின்றார்...............🤣. தொடர்பான நிகழ்வொன்றை எழுதும் போது பதிந்து விடுகின்றேன், ஏராளன்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
மிகவும் சரியாகச் சொன்னீர்கள், அண்ணா............ ஒரு முக்கால் வட்ட வடிவில் எல்லா முனையங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது வட்டத்தின் குறுக்கே சில புதிய பாதைகள் வந்துள்ளன.ஆனாலும் முதலாவது அல்லது இரண்டாவது முனையங்களின் வெளியே கூட்டம் அதிகமானால், இரத்த அழுத்தம் எகிறுவது உறுதி................🤣. அடுத்த வருடம் இங்கு நடக்கவிருக்கும் உலக கோப்பை கால்ப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் 2028ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை முன்னிட்டு இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. People Mover என்னும் மேம்பாலம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இது எல்லா முனையங்களுக்கும் செல்கின்றது. இதற்கான ஏறும் தரிப்பு விமான நிலையத்தில் இருந்து வெளியே உள்ளது. அங்கே போய், அந்த மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களில் ஏற வேண்டும். எட்டுப் பெட்டிகள் கொண்டு செல்பவர்கள் திண்டாடப் போகின்றார்கள்........
-
ஒரு பயணமும் சில கதைகளும்
🤣............ இலங்கை தமிழர்களை அடிப்பதற்கு நான் என்ன இங்கிலாந்தில் பிறந்த தமிழனா, அல்வாயன்...........🤣. சிட்னியின் அந்தப் பகுதிகளில் இருக்கும் புதிய மாடிக் குடியிருப்புகளை பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றியதோ அதையே தான் அப்படியே பதிந்துள்ளேன். சிட்னியின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் பழைய வீடுகள் ஊரில் இருக்கும் எங்களின் வீடுகள் போன்றவை. பெரிய ஒரு வளவுக்குள் நடுவில் சிறியதாக ஒரு வீடு இருக்கும். பெரும்பாலும் ஒரு தள வீடுகளே. முன்னரே நம்மவர்கள் அவற்றை இடித்து பெரிய விசாலமான வீடுகளை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது நம்மவர்களின் மிகப் பெரிய வீடுகளுடன், மாடிக் குடியிருப்புகளும் வரிசையாக நிற்கின்றன. சிறிய ஊர்கள் நகரகங்கள் ஆக உருமாறிக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் குடியேறிக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் குடியேறிய, குடியேறும் இந்தியர்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன போன்று தெரிகின்றது. அங்கே நம்மவர்களில் சிலருக்கு அவர்கள் மேல் உண்டாகியிருக்கும் ஒவ்வாமைக்கு அதுவும் ஒரு பிரதான காரணம். பல வருடங்களின் முன் கனடாவில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு அனுபவம் ஏற்பட்டது. அதை நான் எங்கும் பதியவில்லை, அப்பொழுது நான் எழுதுவதில்லை........... ஒரு வரலாற்று ஆவணம் பதியப்படாமல் போய்விட்டது.............🤣.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இறகுகள் கறுப்பு அல்ல, அவை வண்ணங்கள் நிறைந்தவை என்று சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்திருக்கின்றேன். வண்ணங்கள் எங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை என்கின்றார்கள். உள்ளவற்றில் குறைவான விலையில் உள்ள விமான பயணச் சீட்டை நாங்கள் வாங்கியிருந்தோம். ஆதலால் அவர்களே இருக்கைகளை தெரிவு செய்து கொடுப்பார்கள். கொடுத்தார்கள். மூன்று இருக்கைகள் ஒன்றாகவும், மற்றைய இருக்கை அந்த வரிசைக்கு பின் வரிசையிலும் இருந்தன. ஒரு பொல்லாப்பும் இல்லை. நான் பின் வரிசையில் இருக்கலாம், மற்ற மூவரும் ஒன்றாக இருங்கள் என்றேன். அப்படியான ஒரு முடிவையும் உடனேயே எடுக்கத் தேவையில்லை என்றது குடும்பம். இன்றைய உலகம் எந்த அவசர உடன்படிக்கைக்கும் தயாராக இல்லாதது. காத்துக் கொண்டிருக்கும் போது 'பயணிகள் கவனிக்கவும்.................' என்று ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது. பாலகுமாரனின் ஒரு நாவலின் தலைப்பு இது. அவரை விழுந்து விழுந்து வாசித்த ஒரு காலம் இருந்தது. அது பதின்ம வயதுகள். அன்று வாசித்த அவரின் கதைகள் பலவும் இன்றும் சாராம்சமாக ஞாபகத்தில் இருக்கின்றன. சாராம்சமாக இருப்பதால் எல்லாமே ஒரே ஒரு கதை தான் என்றும் தோன்றுகின்றது. பின்னர் பெரிய இடைவெளி. அந்த இடைவெளியில் அவர் ஒரு சித்தர் ஆக மாறியிருந்தார். எழுத்துச் சித்தரோ அல்லது அப்படி ஏதோ ஒன்று சொன்னார்கள். புஷ்பா தங்கத்துரை கூட ஒரு பக்தி இதழில் எழுதுவதாகவும் பார்த்திருந்தேன். நாங்கள் ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகள் வாழ்ந்து தான் முடிப்போம் போல. 'விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால்.............' என்று தொடர்ந்தது அறிவிப்பு. வீட்டுக்கு திரும்பி போகச் சொல்லப் போகின்றார்களா என்று படபடத்தோம். சில வாரங்களின் முன் கனடா போகும் பொழுதும் இதே டெல்டா விமான நிறுவனம் தான். அவர்கள் எங்கேயோ மழையோ புயலோ என்று அன்று எங்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஒரு நாள் பிந்தியே கனடா போயிருந்தோம். ஆஸ்திரேலியா பயணத்தை மிகக் குறுகியதாகவே திட்டமிட்டிருந்தோம். அதில் ஒரு நாள் அநியாயமாகப் போய் விடுமோ என்பதே படபடக்க வைத்தது. பிரபஞ்சத்தில் ஒளியின் வேகமே மிக அதிகமானது என்கின்றார்கள். ஆனால் மனதின் வேகம், எண்ணங்களின் வேகம் ஒளியின் வேகத்தை விட மிகவும் அதிகம் என்பதே என் அனுபவம். பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், விமானம் மேலே எழும்பும் போதும், அது கீழே இறங்கும் போதும், விமானத்தின் சமநிலையைப் பேணுவதற்காக எல்லோரும் ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் சொன்னார்கள். இருக்கைகள் அந்த ஒழுங்கிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மேலும் சில வரிசைகள் இதன் காரணமாக முற்றிலும் வெறுமனே இருக்கும் என்றார்கள். இது புதிது, நான் முன்பின் அறிந்திராதது. விமானம் கிடையாக பறக்க ஆரம்பித்த பின் எங்கேயும் இருக்கலாம் என்றார்கள். எங்கள் நால்வரில் யார் பின் வரிசையில் இருப்பது என்ற உடன்படிக்கை ஏறக்குறைய தேவை இல்லை என்றாகியது. அந்த வரிசையில் வேறு எவருமே இல்லை. எல்லாமே எங்களுக்கு மட்டும் தான் என்றாகியது. அந்த அதிகாலைப் பொழுதில் சிட்னி விமான நிலையத்தில் ஆட்களையும் பார்க்கவில்லை, கொண்டு போகும் பொருட்களையும் எவரும் பார்க்கவில்லை. ஒரே ஒரு அதிகாரி வெளியேறும் வாசலில் நின்றார். ஏதாவது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துக் கொண்டு போகின்றீர்களா என்று கேட்டார். நாங்கள் நால்வரும் மொத்தமாக நான்கு பெரிய பொதிகளும், நான்கு சிறிய பொதிகளும் வைத்திருந்தோம். கனடா மில்லில் அரைக்கப்பட்ட மஞ்சள் தூள் மற்றும் சில பொருட்களும் இருந்தன. சிட்னி விமான நிலையத்தில் முன்னரும் பல விதமான அனுபவங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இருபது வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் முதல் தடவையாக அங்கு போயிருந்த போது, எங்கள் நால்வரையும் ஒரு அதிகாரி விசேடமாகப் பார்த்தார். எங்களின் கடவுச்சீட்டுகளின் மீதே அவருக்கு பெருத்த சந்தேகம் இருந்தது போல. அதன் பின்னரும் சில அனுபவங்கள். ஆஸ்திரேலியாவை மிகவும் சிரமப்பட்டே காப்பாற்றுகின்றார்கள் என்று தெரிந்தது. காற்றே புகாத இடத்தில் கூட இலங்கையர்களும், இந்தியர்களும், சீனர்களும் புகுந்து விடுவார்கள் என்ற தகவல் இவர்களுக்கு காலம் பிந்தியே தெரிய வரும். சிட்னிக்கும், லாஸ் ஏஞ்சலீஸூக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சீதோசன நிலை முக்கியமான ஒன்று. பெரும்பாலும் குளிர் இல்லாத இடங்கள் இந்த இரு நகரங்களும். மேலும் சிட்னி அமெரிக்க நகர்களின் சாயலிலேயே அமைக்கப்பட்டும் இருக்கின்றது. உதாரணமாக சியாட்டில் நகரம். சிட்னி விமான நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் கோவில் இருக்கும் பகுதிக்கு போவதற்கு நேரடியாக ஒரு பெருந்தெரு இப்பொழுது இருக்கின்றது. இது முன்னர் இருக்கவில்லை. கட்டணம் உண்டு, ஆனால் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களில் வீட்டுக்கு போய்விட்டோம். ' பெருந் தெருக்களை கட்டு, போய் வர கட்டணம் அறவிடு................' என்பது அண்ணன் காட்டிய வழி போல. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. ஆஸ்திரேலியாவில் இந்தக் குடியிருப்புகளில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டேன். 'இந்தியர்கள்...........புதிதாக வந்தவர்கள்.........' என்று சொன்னார்கள். காற்றுப் புக முடியாத இடமென்றாலும், நல்ல இடமென்றால் நாங்கள் குடியேறி விடுவோம் என்பது சரிதானே. சிட்னி விமான நிலையத்தில் எங்களை ஏன் அதிகாரிகள் எந்தச் சோதனைகளும் இல்லாமலேயே வெளியே விட்டார்கள் என்பதும் புரிந்தது. அந்த அதிகாரிகள் வேறு யாருக்காகவோ காத்துக் கொண்டு நிற்கின்றார்கள் போல. (தொடரும்...............) ** செயற்கை நுண்ணறிவிடம் ஒரு படம் வரையச் சொன்னேன். அதன் பூகோள அறிவு கொஞ்சம் அப்படி இப்படித்தான் போல. அதன் தவறைச் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு அதனிடம் இருந்து வந்தது இன்னும் கொடுமை............. அதனால் இதுவே போதும், மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அப்படியே இங்கு போட்டுள்ளேன்.
- LAtoSydney.jpg
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நந்தன் ( @நந்தன் )!
-
கற்க கசறும்
🤣............... 15 அல்லது 20 வருடங்களிற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு அடிக்கடி வந்து போயிருக்கின்றோம். அப்பொழுது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தார்கள். என் மனைவியின் குடும்பத்தவர்கள் அதிகமானோர் அங்கேயே இருக்கின்றார்கள். பிள்ளைகள் வளர்ந்த பின் ஆஸ்திரேலியா போய் வருவது குறைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் பல வகையான அனுபவங்கள் ஏற்பட்டன என்று தான் சொல்லவேண்டும். இந்திய மாணவர்களுக்கும், ஆஸ்திரேலியர்களுக்கும் ஏதோ தகராறாகி, பின்னர் அதுவே சில தாக்குதல்கள் ஆகவும் ஆகியிருந்த ஒரு காலம். தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் மைத்துனன் ஒருவர் தாக்கப்பட்டும் இருந்தார். ஒரே குத்து, ஆள் மயங்கிப் போனார் என்று நண்பன் சொல்லியிருந்தான். அந்த நாட்களில் நாங்கள் அங்கே தனியே நடந்து போகக் கூடாது என்று சொல்வார்கள். அங்கே வீட்டின் அருகே இருந்த வாசிகசாலை ஒன்றுக்கும், அதன் அருகே இருந்த நகரக் கடைகளுக்கும் நடந்தே போய் வந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். குறைந்தது இரண்டு குத்துகளுக்காவது தாக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்...................🤣. அந்த வாசிகசாலை பற்றி எழுதவேண்டும். நான் அப்படி ஒரு வாசிகசாலையை அந்த சிறிய ஊரில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அதே போலவே அந்த ஊரில் இருந்த ஒரு பேக்கரி. அது இப்பொழுதும் அங்கே இருக்கும் என்று நம்புகின்றேன். அதை நடத்தியவர்கள் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதிகள். பாண் என்ற சொல்லே பிரெஞ்ச் மொழி என்று அவர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன். அவர்கள் சொன்ன வரலாறும் புதியதே. தலைக்கு மேலே பறந்து திரியும் விதம் விதமான பறவைகள் ஆஸ்திரேலியாவின் சிறப்பும், வியப்பும். அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம்.