Everything posted by ரசோதரன்
-
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முன்மொழியும் திட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான விடயங்களாக இருக்கின்றன. இன்றே இவற்றை முன்மொழிந்து சட்டங்கள் ஆக்கினால், இனிவரும் காலங்களில் இவை பயன்களைக் கொடுக்கும். ஒரு மரத்தை நடுவது போல. ஆண்களால் சிலவற்றை சீரணிக்க முடியாமலேயே இருக்கப் போகின்றது. மனங்களை விசாலமாக்கி, இவற்றை ஏற்றுக் கொள்வது தான் இங்கிருக்கும் ஒரே வழி. சில வருடங்களின் முன் என்று நினைக்கின்றேன். கனடாவில் ஓரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். அந்த திருமணம் ஒரு திருமண விழாவாகவே நடந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் வந்த எதிர்ப்பு மிகப் பெரியது. ஆண்களின் எதிர்ப்புக் குரல்களே அதிகமாக இருந்தன. நாங்கள் அப்படியே அங்கங்கே தேங்கி நின்று விட்டோம் என்று தோன்றியது. ஆனால் காலம் தேங்கி நிற்பதில்லை, பின்னுக்கும் போவதில்லை. நாங்கள் தான் ஓடிப் போய் பிடிக்கவேண்டும். அந்த திருமணத்தில் நான் உணர்ந்த ஒரு விடயம்: அந்த இரு பெண்களுக்கும் உலகெங்கும் இருந்து எம் பெண்கள் கொடுத்த ஆதரவு. பிறப்புச் சான்றிதழில் ஏன் ஆணின் பெயர் அவசியமில்லை என்பதற்கான தேவைகளில் இதுவும் ஒன்று.
-
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி
சமீபத்தில் கனடாவில் ஒரு கோவிலை இடம் மாற்றியிருந்தார்கள். முன்னர் இருந்த இடத்தில் இருந்து ஒரு புதிய இடத்திற்கு. இதனால் கோவிலின் கணக்கில் இருந்த நிதி முழுவதுமாக முடிந்துவிட்டது. இப்பொழுது புதிய நிதியை திரட்டுவதற்காக சில சூப்பர் சிங்கர் பாடகர்களை அழைத்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் போக்குவரத்து செலவு, தங்குமிடம் மற்றும் கட்டணம் பற்றி ஒரு நண்பன் சில தகவல்களை சொன்னான். எங்கேயென்றாலும், சரியாகத் திட்டமிட்டால், நிதி திரட்டுவதற்கு இது ஒரு இலகுவான வழி போல.
-
குளிக்கும் வேலை
🤣......... கிட்டத்தட்ட இன்னொரு ஜென்மம் எடுத்தது போலவே............. 🤣.......... ஒரு வயதுக்கு மேலே புதிதாக எதையும் கண்டுபிடித்தால் என்ன, கண்டுபிடிக்காவிட்டால் என்ன என்ற ஒரு மெத்தனப் போக்கு பொதுவாக வந்து விடுகின்றது போல, சுவி ஐயா............
-
குளிக்கும் வேலை
உங்களின் மாமி இப்பொழுது சுகமாகி இருப்பார் என்று நினைக்கின்றேன், அண்ணா. கனடாவில் நண்பன் ஒருவனின் அம்மாவிற்கும் இப்படி நடந்துவிட்டது. படுத்த படுக்கையாக இருக்கின்றார். அந்த நினைவும், அலுவலகத்தில் நடந்த விடயமும் சேர்ந்து தான் இப்படி ஒன்றை எழுத வைத்திருக்கின்றது போல.................... சும்மா பகிடியாகவே எழுதினேன். தெரிந்தவர்கள் சிலருக்கு இப்படி நடந்திருப்பது இப்பொழுது வரிசையாக ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஒருவர், அவர் இலங்கையில் ஓரளவு பிரபலமானவர். குளியலறையில் விழுந்த பின் சென்னைக்கு கொண்டு போனார்கள் என்று நினைக்கின்றேன். அல்லது கொழும்பில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையோ என்று சரியாக ஞாபகம் இல்லை. அங்கு சில மாதங்கள் இருந்தார் போல. நிறைய செலவாகியது. ஆனால் அவர் சுகப்படவே இல்லை.
-
குளிக்கும் வேலை
🤣................ அடுத்த தடவை போய் விடுவேன் என்று நினைக்கின்றேன். உலகம் முழுக்க 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக காயப்படுவதில் குளியலறையில் விழுவதும் ஒன்று என்று சொல்லுகின்றார்கள். இன்னும் சில வருடங்கள் இருக்கின்றன.............😜.
-
குளிக்கும் வேலை
குளிக்கும் வேலை ---------------------------- ஏதாவது புதிய யோசனைகள் உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர் அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார் மௌன அஞ்சலி செலுத்துவது போல மௌனமாக இருந்தோம் நாங்கள் இரண்டு நிமிடங்கள் முடிய இன்று மதியம் என்ன உணவு என்று முடிவெடுத்து இருந்தேன் பரவாயில்லை குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும் அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார் நாளை கூட சொல்லலாம் என்றார் சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது ஒரு இருபது வருடங்களின் முன் எனக்கும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தோன்றிக் கொண்டிருந்தன பின்னர் எப்பவோ அது நின்று போனது அன்று குளிக்கும் போது ஒன்றைக் கண்டு பிடித்தே விடுவது என்று தலையில் தண்ணீரை விட்டேன் குளியலறையில் வழுக்கி விழுந்த சொந்தங்கள் தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து போயினர்.
- WorkWhileShowering.jpg
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
🤣............... நல்ல ஒரு வலுவான காரணம், வாதவூரான்.................😜. ஒரு பிள்ளையின் பின்னால் எத்தனை பேர்கள் சுற்றுகின்றார்கள் என்ற ஒரு கணக்கு கூட 80 களில் இருந்தது. எவருமே கலைக்காத பிள்ளைகளும் வேறு ஒரு புதைமணலில் சிக்கிக் கொண்டார்கள் போல. சில ஆசிரியர்கள் கூட, குறிப்பாக விலங்கியல் படிப்பித்த தம்பிராசா ஆசிரியர், தூய/பிரயோக கணிதங்கள் படிப்பித்த கணேசலிங்கம் ஆசிரியர் போன்றோர், இதற்கு ஒரு சின்னக் காரணமோ தெரியவில்லை. அவர்கள் வகுப்புகளில் போட்ட அதட்டில் பிள்ளைகள் தெறித்து ஓடினார்கள். கணிதப் பிரிவிலிருந்து வர்த்தகப் பிரிவிற்கு பாய்ந்தோடிய ஒரு சக மாணவியைப் பற்றி முன்னர் எழுதியிருக்கின்றேன்................
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
👍............... இதன் பின்னணி என்னவென்ற ஆர்வம் பல வருடங்களாகவே என் மனதில் இருக்கின்றது. அந்த நாட்களிலேயே, 80ம் ஆண்டுகளில், இப்படித்தான் நடந்தது. ஊரில் என்னுடைய வகுப்பில் சாதாரண தரத்தில் மிகத் திறமையாக சித்தி பெற்றவர்களில் பல பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். எங்களின் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் ஒருவர் கூட விதிவிலக்கில்லாமல் சக மாணவிகள் எல்லோரும் காணாமல் போனார்கள். மருத்துவர் ஆகப் போகின்றார், பொறியியலாளர் ஆகப் போகின்றார் என்று கூறப்பட்ட ஒரு சக மாணவி கூட அப்படி ஆகவில்லை. சாதாரண தரத்தில் நண்பனின் மகள் ஒருவர் 9 A பெற்றிருந்தார். அவர் ஊரில் உள்ள ஒரு பாடசாலையிலேயே படித்தார். அயலூரில் இருக்கும் மெதடிஸ் பெண்கள் கல்லூரி அல்லது வேறு எந்த பெரிய பாடசாலைக்கும் அவர் போகவில்லை. இந்த வருடம் அவருடைய உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்தன. மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஊர் இணையதளங்களில் ஒரு செய்தியுமே வரவில்லை. சிறந்த பரீட்சை முடிவுகளை ஊர் இணையதளங்கள் உடனேயே போடும் காலம் இது. பின்னர் அவருடைய பரீட்சை முடிவுகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்தது. இன்னொரு தடவை முயற்சி செய்யுங்கள், கண்டிப்பாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கும் என்று பலரும் சொல்லியிருக்கின்றார்கள்.................
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
இவை சிலருக்கு ஒரு வடிகால்களே என்பதில் மற்றுக்கருத்து கிடையவே கிடையாது. இதில் சிலரை பல்கலைக் கழகம் முடிந்து பல வருடங்கள் பின்னரும் நான் அறிந்து இருக்கின்றேன். இந்த நடவடிக்கைகள் வேறு ஏதோ வகைகளில் அவர்களிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. புதிய மாணவர்களுக்கு நிறைய உதவிகள் தேவையே. செய்யப்படும் சின்ன உதவிகளைக் கூட பலரும் வாழ்நாளில் மறப்பதில்லை. 'மெய்யழகன்' படத்தில் வரும் அந்த சைக்கிள் கதை போல நெகிழ்ந்து சொல்லுகின்றார்கள். இப்படி வரும் பிணைப்பும், நட்பும் என்றும் அழியாமல் நிற்கின்றது........👍.
-
கிறிஸ்துமஸ் மரம்
❤️................ என்ன ஆனாலும் சிலவற்றை இறுதிவரை தொடர்வோம் போல, சுவி ஐயா.
-
கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் மரம் --------------------------- ஒரு ஒழுங்கான கூம்பு வடிவில் இருக்கும் சின்ன சவுக்கு மரமே கிறிஸ்துமஸ் மரம் என்று தான் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. ஊரில் இருந்த நாட்களில் இதை எங்காவது நேருக்கு நேரே பார்த்ததாக ஞாபகம் இல்லை. படங்களில் அல்லது கதைகளில் மட்டுமே நான் இதை பார்த்திருக்கவேண்டும். அப்படியே வெள்ளைப் போர்வையாக அந்த வீடுகளைச் சுற்றி பனி கொட்டிக் கொண்டிருப்பதாகவும் மனதில் பதிந்து இருந்தது. ஆகவே நிச்சயம் இது படமோ அல்லது கதையோ உண்டாக்கிய தோற்றம் மட்டுமே. ஊரில் கிறிஸ்தவ மக்கள் இருந்தார்கள். மற்றைய ஊர்களை விட என்னுடைய ஊரில் அதிகமாகவே இருந்தார்கள். அதில் ஒரு சிலர் என்னுடைய வயது உடையவர்களாவும், தெரிந்தவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்தப் பண்டிகை நாட்களில் அவர்களின் எவர் வீடுகளுக்குள்ளும் போனதாக ஞாபகம் இல்லை. உண்மையில் அவர்களின் ஒருவரின் வீடுகளுக்குள்ளும் ஒரு தடவையும் போனதில்லை. பின்னர் அவர்களில் ஒருவன் நெருங்கிய நண்பன் ஆனான். அப்பொழுதும் கூட அவன் வீட்டின் வெளிக்கதவில் நின்றே அவனைக் கூப்பிடுவோம். அவன் அதற்கு முன்னர் அவ்வளவாக ஊர் சுற்ற எங்களுடன் வெளியில் வந்ததில்லை. அவர்கள் ஒரு உயர்குடி என்ற அபிப்பிராயம் எங்கள் மனதுகளில் பொதுவாக இருந்தது. மார்கழி மாதங்களில் அவன் வீட்டின் கண்ணாடி யன்னல்களில் சின்ன சின்ன மின்விளக்குகள் நின்று நின்று எரிந்து கொண்டிருக்கும். அவனின் வீடே அந்த நாட்களில் இன்னும் அழகானதாக மாறி இருக்கும். நண்பனின் வீட்டுக்குள் ஒரு கிறிஸ்துமஸ் மரம் இருந்திருக்கும். அந்த மரத்திற்கு சோடனைகள் செய்திருப்பார்கள். அதன் உச்சியில் ஒரு நட்சத்திரமும் வைத்திருப்பார்கள். ஆனால் நான் இவை எதையும் பார்க்கவில்லை. அவன் சில நாட்களில் சில தின்பண்டங்களை எடுத்து வருவான். அவை வித்தியாசமானதாக இருந்தன, நன்றாகவும் இருந்தன. பின்னர் அவனுடன் ஒன்றாக நான்கு வருடங்கள் தங்க வேண்டியிருந்தது. அது படிக்கும் காலம். இவ்வளவு நல்ல மனிதர்களும் இருக்கின்றார்களா என்று ஆச்சரியப்படவைத்தான். அதை நான் அவனுக்கு சில தடவைகள் நேரடியாகவே சொல்லியிருக்கின்றேன். ஒரு விதமாக சிரிப்பான். நீ தான் அடுத்த தேவமைந்தன் என்று பகிடி போல சொல்லியும் இருக்கின்றேன். சில மனிதர்கள் எப்படி அப்பாவிகளாகவும், மிகவும் நல்லவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது பெரிய ஆச்சரியமாகவே இருக்கின்றது. இவ்வாறு இருப்பவர்களின் உலகத்தில் மிகச் சில விடயங்களே இருக்கின்றன. அவர்களின் உலகத்தில் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இறைவன் ஒருவரும் இருக்கின்றார் போல. பின்னர் எங்கள் வாழ்க்கையில் நானும் மனைவியும் சேர்ந்து வருடாவருடம் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்க வேண்டியதாகியது. இரு குழந்தைகளின் எதிர்பார்ப்பை ஏமாற்ற முடியவில்லை. அந்த நாட்களில் கிறிஸ்துமஸ் மரத்துடன் சேர்ந்து வீடும் அழகாகவே இருந்தது. எதற்கு இருக்கின்றது தெரியாமல் இருக்கும் புகைபோக்கியினூடாக ஒரு தாத்தா வருவார் என்று அங்கு கொஞ்சம் இடம் ஒதுக்கி வைக்க வேண்டியதாகியது. வருடத்தில் ஒரு நாள் தாத்தாவிற்கு பிஸ்கட்டும், பாலும் வைக்கும் ஒரு வழக்கத்தையும் கற்றுக்கொண்டோம். முன்பக்கம் இருந்த அயல் வீடொன்றில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தனர். அவர்களுக்கு ஒரு மகன், அவர் வேறு எங்கேயோ இருந்தார். அடிக்கடி வந்து போவார். வெள்ளை இனத்தவரான அவர்கள் எங்களுடன் பேசவில்லை. அவர்கள் பேசுவதற்கு கூட முயலவில்லை என்றே சொல்லவேண்டும். நான் சிறிது முயன்றேன், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன். அவர் வயதானவர் என்றாலும் மிகவும் சுறுசுறுப்பானவராக இருந்தார். அவர் வீட்டில், வளவில் எல்லா வேலைகளையுமே மிகவும் நேர்த்தியாகச் செய்தார். அவர் வீட்டின் கூரையின் ஒரு பகுதியைக் கூட அவரே புதிதாகப் போட்டார். கூரையில் ஏறி கோழி கூட பிடிக்க முடியாத நான் கூரையை எப்படி மாற்றுவேன் என்று அதிர்ச்சி அடைவதை தவிர வேறொரு மார்க்கமும் எனக்கு இருக்கவில்லை. அவர் எந்த வேலை செய்தாலும் அவருடைய மனைவி எந்த உதவியும் செய்ததில்லை. அவர் வேலை செய்யும் போது வெளியில் வந்து எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. அவர் கூரைக்கு மேல் நின்ற நாட்களில் கூட அவரின் மனைவி வீட்டினுள்ளேயே இருந்தார். அவர்களின் வீட்டின் முன் ஒரு மரம் நின்றது. அது நான் சிறு வயதில் கற்பனையில் கண்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை ஓரளவிற்கு ஒத்தது. அதுவே தான் அவர்களின் கிறிஸ்துமஸ் மரம் என்பது முதல் வருடத்தில் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எல்லா சோடனைகளும் அந்த மரத்திற்கே நடந்து கொண்டிருந்தது. பரிசுப் பொதிகள் போன்றவை கூட அந்த மரத்தின் கீழே வைக்கப்பட்டன. அவர்களின் வீட்டினுள் கிறிஸ்துமஸ் மரம் இருக்கவில்லை. வெளியில் உயிருடன் நின்ற கிறிஸ்துமஸ் மரத்தை சோடிப்பதற்காகவே விசேடமாக சின்ன ஏணி, சில தடிகள் என்று அவர் வைத்திருந்தார். சில வருடங்களின் பின் அவர் மிகவும் தளர்ந்து போனார். ஒரு நாள் அவராகவே வந்து அவரது ஈரல் பகுதியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். அதன் பின்னர் மிகவும் நட்புடனும், நெருக்கத்துடனும் பேச ஆரம்பித்தார். அந்த வருடமும் அவரே கிறிஸ்துமஸ் மரத்தை சோடித்தார், கொஞ்சம் மெதுமெதுவாக. அவரின் மனைவி உள்ளேயே இருந்தார். பின்னர் ஒரு நாள் அவர் வீட்டின் முன் தெருவின் கீழ் போய்க் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இருவர் திருத்திக் கொண்டிருந்தார்கள். அவரின் மகன் அந்த இருவரின் அருகிலே நின்று கொண்டிருந்தார். குழாய் வெடித்து விட்டதா என்று அவரின் மகனிடம் கேட்டேன். ஆமாம், உடைந்து விட்டது, இன்று திருத்தி விடுவார்கள் என்றார் அவரின் மகன். கூரையையே மாத்தியவருக்கு இந்தக் குழாயை மாற்றுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை, ஆனால் இப்பொழுது உடம்புக்கு முடியாமல் போய் விட்டது என்று நினைத்தபடியே அப்பா எங்கே என்று கேட்டேன். 'அப்பா போன மாதம் இறந்து போனார்..................' '' வார்த்தை ஒன்றும் வரவில்லை. அந்தக் கணத்தில் உலகமே அப்படியே உறைந்து போனது. எனக்கு ஏன் சொல்லவில்லை என்று உரக்கக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் இது என்ன உலகம், இந்த மனிதர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு கையாலாகாத நிலையிலேயே அங்கே நின்றேன். 'அம்மா......................' என்றேன். 'அம்மா உள்ளே இருக்கின்றார்................'. எதுவும் சொல்லாமலேயே அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அந்த அம்மா அந்த வீட்டுனுள் இருக்கின்றார் என்பதற்கு அடையாளமாக இரவுகளில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உயிருள்ள கிறிஸ்துமஸ் மரம் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மரம் இனி என்னவாகும் என்ற எண்ணம் வந்து கொண்டேயிருந்தது. அந்த வருட பண்டிகைக்காலம் ஆரம்பித்த ஒரு நாள் வெளியே போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கிறிஸ்துமஸ் மரம் இருக்கும் திசையில் பார்வை அதுவாகப் போனது. அங்கே அதே விசேட சின்ன ஏணி, சில தடிகளை வைத்துக் கொண்டு அந்த அம்மா கிறிஸ்துமஸ் மரத்தை மெதுமெதுவாகச் சோடித்துக் கொண்டிருந்தார்.
- ChristmasTree_W.jpg
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
👍.......................... இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். எந்தப் புள்ளியிலும் எல்லாத் திசைகளும் இருக்கின்றது தானே.................... இலங்கையின் தென் கிழக்கே போய்த்தான் அங்கிருந்து தென்கிழக்கை பார்க்க வேண்டுமா............... அப்படியே உட்கார்ந்தாலும் வந்து விடும் படிப்பு................🫣.
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
தமிழ், சிங்கள, இஸ்லாமிய மாணவர்கள் என்ற பேதங்கள் இல்லாமல், மூவினங்களிலிருந்தும் சில மனநோய்க் கூறுகளைக் கொண்டவர்களால் இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் இந்த எல்லை மீறிய பகிடிவதை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1997ம் ஆண்டில் வரப்பிரகாஷ் என்னும் மாணவன் பேராதனை பொறியியல் பீடத்தில் இப்படியான ஒரு பகிடிவதையால் இறந்து போனது பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தி இருந்தாலும், அதன் பின்னரும் இந்தப் பகிடிவதை இதே வகைகளில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. பகிடிவதையின் அடிப்படையே புதிய மாணவர்களும், ஏற்கனவே அங்கிருக்கும் மாணவர்களும் கலந்து பழகும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது என்று சொல்லப்பட்டாலும், அத்துமீறிய பகிடிவதைகளைச் செய்வோர்களில் மிகப் பெரும்பாலானோர் பகிடிவதைக் காலத்தின் பின் பழகுவதும் இல்லை, புதிய மாணவர்களும் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் இல்லை.
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
நான் இருப்பது மேற்குக்கரையில், அல்வாயன். இங்கு வெள்ளம் வருவது குறைவு அல்லது இல்லை, ஆனால் நெருப்பு எரியும். அநேகமாக ஈழப்பிரியன் அண்ணா இங்கு கலிஃபோர்னியா வரும் போது நெருப்பு எரியும் என்று நினைக்கின்றேன்...............😜.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
தவெக மூன்றாவது பெரிய கட்சி என்று நான் சொல்லவில்லை. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களுக்குமான ஒரு கட்சி தவெக என்றே சொல்லுகின்றேன். திமுக, அதிமுக, தவெக தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்லுகின்றேன். இந்த தேர்தலில் தவெகவும் விஜய்யும் தனியே நின்று பத்து வீத வாக்குகளை பெற்றால், அவர்கள் ஒரு சக்தியே. அப்படி பெறாவிட்டால், விஜய் கட்சியைக் கலைத்து விட்டு சினிமாவிற்கே மீண்டும் போய்விடலாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவின் வாங்கு வங்கி ஏறக்குறைய 35 வீதங்கள் அளவில் இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவின் பின் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏறபட்டுக் கொண்டிருக்கின்றது. விகிதாசாரப் பிரதிநிதிதுவமோ அல்லது 50 வீத பெரும்பான்மையோ தேவையில்லாத, சாதாரண பெரும்பான்மையிலேயே இந்தியாவில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒவ்வொரு வாக்கும் எல்லா கட்சிகளினதும் நோக்காக இருக்கின்றது. ஆதலாலேயே கூட்டணியை அமைக்கின்றார்கள். மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் கட்சிகள் திராவிடம் பேசினால் என்ன, தமிழ்த்தேசியம் பேசினால் என்ன, கட்சி சார்பாக நிற்கப் போகும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, இந்தக் கொள்கைகள் எல்லாமே காற்றில் போய்விடும். சாதியம் மட்டுமே முன்னிற்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் பெரும்பான்மையோ அந்த சாதியில் இருந்தே வேட்பாளர்கள் கட்சிகளால் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். நாதக கூட இதற்கு விதிவிலக்கல்ல. சென்னை போன்ற பெருநகரமும், சில பிரபலங்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாகவே சாதியக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியை பெரும் கட்சிகள் விரும்புகின்றன. இப்படியான ஒரு தேர்தல் களத்தில் கூட, ஜெயலலிதா அம்மையார் ஒரு தடவை கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் தனியே நின்று பெரும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
அண்ணா, இந்திய தேர்தல்களின் மீது மொத்தமாகவே எங்களுக்கிருப்பது ஒரு அவநம்பிக்கையையே என்றால், இங்கு பலதும் அர்த்தங்களை இழந்து போய்விடுகின்றன. இந்த அவநம்பிக்கை இருக்குமானால், சீமான் போன்று பணபலமும், கூட்டணிப் பலமும் இல்லாமல் அரசியல் களத்தில் நிற்பவர்கள் எதையுமே எக்காலத்திலும் சாதிக்க முடியாது, அடைய முடியாது என்ற முடிவை இன்றே எடுத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம். சீமான் போன்றோர் மிகத் தீவிர இடதுசாரிகள் (நக்சலைட்டுகள்) போன்ற ஒரு அமைப்பை அல்லது ஒரு இயக்கத்தை நடத்தாமால், மாறாக ஜனநாயக வழியிலான தேர்தல்களில் நம்பிக்கை உள்ள ஒரு அரசியல் கட்சியை நடத்துவதன் பின்னணியே அவர்களுக்கும், இங்கு பெரும்பாலானோருக்கும் இந்திய தேர்தல்களில் உள்ள நம்பிக்கையே காரணம். பணபலத்தின் மூலம் வென்றிடலாம் என்றால், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தியில் பாஜக தோற்றிருக்கவே முடியாது. ராமர் கோவிலைக் கட்டி, அதைத் தொடர்ந்து அந்த தொகுதியையே வைகுண்டம் போன்று ஆக்கினார்கள் ஆளும் பாஜகவினர். ஆனாலும் அங்கு தோற்றார்களே................... எந்த பணபலமும் இல்லாத ஆம் ஆத்மி டெல்லியிலும், பஞ்சாப்பிலும் வென்று ஆட்சியமைத்தார்கள். ஆம் ஆத்மி ஒரு சேர பாஜகவையும், காங்கிரஸையும் எதிர்த்து நின்று வென்று காட்டினார்கள். மக்கள் ஆம் ஆத்மியை, அதன் கொள்கைகளை, அங்கிருந்த தலைவர்களை நம்பினார்கள். எம்ஜிஆர் என்ற அசைக்க முடியாத ஆளுமையின் மறைவின் பின்னர், தமிழ்நாட்டில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறியே ஆட்சி அமைத்தன. ஆளும் கட்சிகளின் பணபலத்தாலோ அல்லது மோசடிகளாலோ தங்களது ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. ஆட்சியில் இருந்த அரசுக்கள் அடுத்த தேர்தல்களில் மிகக் கடுமையான தோல்விகளைக் கூட தமிழ்நாட்டில் சந்தித்திருக்கின்றன. பணபலத்தையும், ஆளும் நிர்வாகத்தின் மோசடிகளையும் மீறி, இந்தியாவில் மக்களின் தீர்ப்புக்கு இன்னமும் இடமிருக்கின்றது. பல ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் ஒரு சார்வாதிகார அல்லது இராணுவ நிர்வாகம் காலூன்ற முடியாமல் இருப்பதற்கு அதன் மக்களும், தேர்தல்களும் ஒரு பிரதான காரணம். தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்குமான கட்சிகள் என்று எடுத்தால், திமுக, அதிமுக, தவெக என்று மூன்றே இன்று பிரதானமாக இருக்கின்றது. மற்றைய கட்சிகள் ஏதோ சில வகைகளில் ஒரு சாதியக் கட்சி போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை மூன்றுக்குமே ஆட்சியமைக்கும் தகமையும், சாத்தியங்களும் இருக்கின்றன. இன்றிருக்கும் பாமக, நாதக, விசிக போன்ற கட்சிகளுக்கு அந்த தகமை கிடையாது, சாத்தியங்களும் இல்லை. இன்று உலகின் சில நாடுகளில் அந்த நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் தங்களையே பாதிக்கப்பட்டவர்களாக எண்ணிக் கொள்ளும் ஒரு போக்கு உருவாக்கப்பட்டிருக்கின்றது, உதாரணம்: அமெரிக்காவில் வெள்ளையின மக்கள், இந்தியாவில் இந்துக்கள், இலங்கையில் சிங்கள மக்கள். இது அங்கங்கே இருக்கும் சில அரசியல் தலைவர்களாலும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளாலும் பிரச்சாரங்கள் ஆக்கப்படுகின்றன. இந்தியாவில் பாஜக, அமெரிக்காவில் மஹா குழுமம், இலங்கையில் மஹிந்தவின் பொதுஜன பெரமுன என்பன இதற்கு சிறந்த உதாரணங்கள். இவை கூட மக்களின் வாக்குப் பலத்தால், ஜனநாயக தேர்தல்களின் ஊடாக இல்லாமல் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவநம்பிக்கையுடன் எதையும் ஆரம்பிக்க முடியாது. நம்பிக்கையுடன் ஆரம்பித்து தோற்றுப் போகலாம்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ட்ரம்பிலிருக்கும், புட்டினிலிருக்கும், மோடியிலிருக்கும், ஸ்டாலினிலிருக்கும், சுமந்திரனிலிருக்கும், சிறிதரனிலிருக்கும் அதே கரிசனை தான் சீமான் மீதும் எங்களுக்கு இருக்கின்றது. இவர்களைச் சார்ந்த மக்களுக்கும், பொதுவாக மற்றவர்களுக்கும் இவர்களால் பயன் உண்டா அல்லது ஏமாற்றப்படுகின்றார்களா என்ற அதே பார்வையைத் தான் நாங்கள் இங்கே முன்வைக்கின்றோம். பல வருடங்களின் முன், முல்லைப் பெரியாறு அணைக்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை.அப்பொழுது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பன் கேட்டான், 'நாங்கள் ஏன் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்................'. சீமான் பேசும் விடயங்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் கூட தங்களுக்கு எந்தளவு முக்கியம் என்றும் அவன் கேட்டான். தமிழ்நாட்டு பொதுசனங்களுடன் சீமானுக்கு இருக்கும் பெரிய இடைவெளிகளில் இதுவும் ஒன்று. முதன் முதலில் நீட் பரீட்சையால் தற்கொலை செய்து இறந்து போன அனித்தாவிற்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை. இதை இயக்குனர் ரஞ்சித் நேரடியாகவே மேடையில் கேட்டார். இன்றும் கூட பங்குபற்றமாட்டார். அதற்கான காரணமும் எங்களுக்கு தெரியும். சீமான் தொல் திருமாவுடன் ஒரு மேடையில் ஏறப் போவதும் இல்லை. பின்னர் இவர் எப்படி ஒரு சமூகப் போராளி ஆகின்றார்................. இவர்கள் பேசும் தமிழ்த்தேசியத்தை தொல் திருமாவோ அல்லது ரஞ்சித்தோ அல்லது அவர்களில் எவரோ ஏற்காததன் பின்னணியும் இதுவே. இங்கு ஒன்றுபட்ட ஒரு தேசியமே இல்லை. ஒரு சிறு வட்டம் மட்டுமே உள்ளது. ராமதாஸும் இவரைப் போன்ற ஒரு சமூகப் போராளியே. ஆணவக் கொலைகளையும், நாடகக் காதல் என்ற சொற்பதத்தையும் தமிழர்கள் மத்தியில் விதைத்து வளர்த்து வைத்திருப்பவர்கள் பாமகவினரே. வாழும் காலத்தில் காடுவெட்டி குரு ஒரு தாதாவாகவே வாழ்ந்து முடித்தார். இவர்கள் சமூகப் போராளிகளா........... இவர்களால் ஒரு பட்டியலின மக்களின் குடிசைக்குள் இன்றும் போக முடியுமா........... 'ஜெய்பீம்' என்ற ஒரு படத்தில் நடித்ததற்காக, அதில் வரும் ஒரு குறியீட்டுக்காக, நடிகர் சூர்யா படும் பாட்டைப் பாருங்கள். இது தான் பாமகவும், ராமதாஸும் சொல்லும் சமூக நீதியா.......... ஒரு சாதி பற்றி மட்டுமே இவர்கள் பேசுகின்றனர். சமூகம் பற்றி அல்ல. பிற சாதியினரை அடக்கி ஒடுக்குகின்றனர். பின்னர் இருவரும் சமூக நீதி, சமூகப் போராளிகள் என்கின்றனர். எம்ஜிஆரின் கட்சி எடப்பாடியாரின் கையால் முடிய வேண்டும் என்று இருக்கின்றது போல....................🫣.
-
உன்னால் முடியும் தம்பி
உங்களை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் இப்படி நழுவிப் போய்விட்டதே, ஜஸ்டின். இதே போலவே நியூ ஜெர்சியில் இருந்து வருவதாகச் சொல்லிய ஒரு அணியும் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது. அங்கிருந்து ஒரு சிலர் மட்டும் வந்தார்கள். என்னுடைய அணி செட்அப் வாலிபால் கிண்ணத்தை வென்றது. மொத்தமாகவே உலகெங்கும் எங்களில் செட்அப் வாலிபால் விளையாடுபவர்கள் குறைவு. இரண்டு 2கே அணிகள் கனடாவிலிருந்தும், ஒரு 2கே அணி அமெரிக்காவிலிருந்தும், மற்றும் என்னுடைய அணியும் கலந்துகொண்டன. அந்த இளையோர் அணிகள் எதிர்பார்க்காத விதத்தில் போட்டிகள் அமைந்தன. ஓவர் கேம் வாலிபாலில் கனடா அணி ஒன்று வென்றது. இரவு ஒன்றுகூடலும் நன்றாகவே இருந்தது.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் மறைவின் பின், விஜய்காந்தும் முற்றிலும் உடல், உணர்வுகள் தளர்ந்து போக, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். ஆனால் அவ்வாறான ஒரு வெற்றிடம் உருவாகவில்லை. ஸ்டாலின் திமுகவை கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸூம் இணைத்தலைமை என்று அதிமுகவை கொண்டு சென்றார்கள். அதனால் சீமான், கமல் போன்றோரின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், இன்று மீண்டும் ஒரு வெற்றிடம் இருப்பது போல தெரிகின்றது. அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகப் போகின்றது என்ற ஒரு ஊகம் பரவலாக இருக்கின்றது. அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே அவர்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தக்கூடும். விஜய்யின் தவெக திமுகவிற்கு ஒரு மாற்றாக, இரண்டாவது பெரிய கட்சியாக வரக்கூடும். அந்த நிலையில் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியையும் இன்று காண முடியாதுள்ளது. சீமான் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களை கைவிட்டு விட்டு, பெரிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது அவருக்கு கிடைத்திருக்கும் மிக நல்லதொரு சந்தர்ப்பம். இவ்வாறான போராட்டங்கள் - கள் இறக்குதல், ஆடு மாடுகளுக்கான மாநாடு, அடுத்தது என்ன........ கடற்கரையில் வலை பின்னுதலா........? - சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களே. இந்த வகைப் போராட்டங்களை பாரம்பரியமாகவே சிறு கட்சிகளாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட செய்வதில்லை. இவை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பான செய்திகளாக ஓரிரு நாட்களாக வருமேயன்றி வாக்குகளாக மாறப்போவதில்லை. திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லது தங்களை ஒரு பெரும் கட்சியாக எண்ணும் அவரும் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்துவதுமில்லை. இவை ஒரு விதத்தில் அசட்டுத்தனமான செயல்களே. நாதக இப்போது செய்ய வேண்டியது திமுக அரசு மற்றும் அதிமுக கட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறிந்து, அதை மூலதனமாக்கி, 2026ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்வதே. தவெக அந்த வழியிலேயே பயணிக்கின்றது. இல்லாவிட்டால், கமல் ஒரு இடத்தில் தேங்கி நின்று இல்லாமல் போனது போலவே நாதகவின் நிலையும் ஆகும்.
-
உன்னால் முடியும் தம்பி
🤣........................ நானே ஒரு பூனைக்குட்டி போல ஆகிவிட்டேன் அந்த விமானப் பயணத்தில்......... கனடாவிலிருந்து திரும்பி வந்தவுடன் ஓடிப் போய் குட்டிகளைத்தான் எட்டிப் பார்த்தோம். ஒரு குட்டியும் அங்கிருக்கவில்லை. அன்று நாள் முழுவதும் குட்டிகள் கண்களில் படவேயில்லை குட்டிகளை யாரோ பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் போல என்று கவலையாகவும், பரவாயில்லை, அவைகள் எங்காவது வீடுகளில் வளரட்டும் என்று ஒரு ஆறுதலாகவும் இருந்தது. நேற்று மீண்டும் பார்க்கும் போது மூன்று குட்டிகள் நின்றன. ஒன்றைத்தான் காணவில்லை. பொதுவாக மனிதர்கள் இல்லாத பிரச்சனைகளை அவர்களே உருவாக்கி, அதற்குள் சுற்றிச் சுழல்வார்கள் என்று சொல்வார்கள். உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன் போல...............🤣.
-
உன்னால் முடியும் தம்பி
அந்தப் புத்தகம் என்ன புத்தகம் என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன், சிறி அண்ணா........🤣. நான் இளவயதில் இருக்கும் போது ஆனந்த விகடனில் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். எங்களில் பலரும் அவற்றை அன்று வாசித்திருப்போம். கிட்டத்தட்ட அது போன்ற கட்டுரைகள் கொண்டது இந்தப் புத்தகம். 'உன்னால் முடியும் தம்பி' என்பதே உதயமூர்த்தி அவர்களின் ஒரு பிரபலமான தலைப்புத்தான்................ பின்னர் பாலச்சந்தர் - கமல் - ஜெமினி கணேசன் ஆக்கத்தில் இதே பெயரில் ஒரு படமும் வந்தது. மூன்று விரல்கள் காட்டிய அந்தக் குழந்தைக்காக அதை இங்கே எடுத்துக்கொண்டேன்..........
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
அரசியல் தலைமைகளுக்கு வழங்கப்படும் சமாதான பரிசுகளுக்கு அந்த அரசியல் தலைமைகளின் முயற்சிகளே பெரும்பாலும் காரணமாக அமைகின்றது, அண்ணா. அந்த முயற்சிகளின் இறுதி முடிவுகள், நீங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே, எதிர்பார்த்த பலன்களை எப்போதும் கொடுப்பதும் இல்லை. பர்மாவில் அப்போது ஆட்சியில் இருந்த இராணுவ ஆட்சியை எதிர்த்த Aung San Suu Kyi க்கு 1991ம் ஆண்டு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பர்மாவில் ரோகிங்கியா மக்களுக்கு எதிராக இவரது ஆட்சிக் காலத்திலேயே கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. ஆங் சூ இக் கொடுமைகளை எதிர்க்காதது மட்டும் இல்லாமல், ரோகிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆதரவாகவும் நடந்துகொண்டார். கொடுக்கப்பட்ட சமாதானப்பரிசை திரும்பப் பெறவேண்டும் என்ற குரல்கள் உலகெங்கும் ஒலித்தன. ஆனால் செஞ்சிலுவைச் சங்கங்கள் போன்ற நிறுவனங்களுக்கும், அரசியல்/நிர்வாகம் சாராத தனிநபர்களுக்கும் அவர்கள் காத்திரமாக செய்த செயல்களுக்காகவே இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது. ஜிம்மி கார்ட்டரோ அல்லது ஓபாமாவோ அல்லது வேறு எந்த உலக அரசியல் தலைவர்களின் மொத்த நடவடிக்கைகளுமே விமர்சனத்துக்கு உட்பட்டதே. அவர்கள் பெறும் விருதுகளுக்கும், பாராட்டுகளுக்கும் அவர்கள் தகுதியுடையவர்களா என்பது பல முனைகள் கொண்ட விவாதமே. இன்றுடன் இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல் 643 நாட்களாகத் தொடர்கின்றது. உலகில் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் தவிர்த்து வேறு எந்த நாடும் இதை ஆதரிக்கவில்லை. அமெரிக்கா நினைத்தால் இதை இன்றே தடுக்கமுடியும். ஆனால் அமெரிக்காவோ எதிர்த்திசையிலேயே பயணிக்கின்றது. எம் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் தாக்குதல் உலகின் பல நாடுகளால் மௌனமாக ஆதரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. இந்தியாவின் பிரதான ஆதரவுடன் இலங்கை அரசு வேறு பல நாடுகளின், அமெரிக்கா உட்பட, இராணுவ மற்றும் வேறு பல உதவிகளுடன் இதை நிகழ்த்தியது. இதை தடுக்கும் கடப்பாடு இந்தியாவிடமே இருந்தது. காசா போன்று நீண்டு தொடரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே முள்ளிவாய்க்காலில் அமெரிக்கா என்ன செய்தது என்ற கேள்வியும், காசாவில் அமெரிக்கா என்ன செய்கின்றது என்ற கேள்வியும் தொடர்புபட்டவை அல்ல. இவை யாவும் மனிதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற சட்டகத்திலேயே பார்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஒரு தலைவருக்கு ஆதரவாகவும், இன்னொரு தலைவருக்கு எதிராகவும் பார்க்கப்பட வேண்டிய விடயங்கள் அல்ல.
-
உன்னால் முடியும் தம்பி
இவர் அவர் இல்லை............... இவர் அவராக இருப்பாரோ என்று செயற்கை நுண்ணறிவு உய்த்தறிந்து இப்படி ஒரு படத்தை கீறியிருக்கின்றது...............🤣. செயற்கை நுண்ணறிவை தொடர்ந்து நச்சரிக்கவும் மனது வர மாட்டேன் என்கின்றது. செயற்கை நுண்ணறிவு செயற்படும் Data Centers இருக்கும் அழகான, அமைதியான கிராமங்கள் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வெளியே வர ஆரம்பித்துவிட்டன. அங்கங்கே நீர்வளம் அருகி அல்லது கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது. செயற்கை நுண்ணறிவை கேள்விகள் கேட்கும் போது, 'Please......' என்னும் ஒரு சொல்லை ஒரு தடவை தவிர்த்தால் ஒரு சிறிய போத்தல் தண்ணீர் மிச்சமாகும் என்று Sam Altman (CEO of OpenAI) சமீபத்தில் சொல்லியிருந்தார். அப்படியாயின் மொத்தமாக எவ்வளவு நீர் இதற்கு தேவைப்படுகின்றது என்ற கணக்கு மலைக்கவைக்கின்றது. கப்பலின் ஓட்டைகளை அடைப்பது போல உலகம் போய்க் கொண்டிருக்கின்றது போல. ஒரு ஓட்டையை அடைத்தால், இன்னொரு இடத்தில் புதிய ஓட்டை ஒன்று உருவாகின்றது.