Everything posted by ரசோதரன்
-
உன்னால் முடியும் தம்பி
உன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன். வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது. அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள். இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன். தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன் இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன். 'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன். 'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல.
- ReturnFlightFromToronto.jpg
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
மனைவிமார்கள் சொல்லும் குற்றம் குறைகளை வைத்தும் ஒருவர் மதிப்பிடப்படலாம் என்றால், ஆபிரகாம் லிங்கன் கூட ஒன்றும் இல்லை என்று ஆகிவிடுவார். அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட அவருடைய நோபல் பரிசைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஓபாமாவிற்கு கொடுத்த நோபல் பரிசு விவாதத்திற்கு உட்பட்டதே. ஆனால் அவருக்கு அந்தப் பரிசை முன்மொழியவும், அதைக் கொடுக்கவும் தேவையான சரியான உறுதியான நடவடிக்கைகளை ஓபாமா அவரது பதவியின் முதல் வருடத்திலேயே எடுத்திருந்தார். ஓபாமாவை எந்த தனிநபர்களும் அரசியல் சார்பாகவோ அல்லது நலம் கருதியோ முன்மொழியவில்லை. மாறாக, நோபல் பரிசுக் குழுவே அவரை தெரிந்தெடுத்தது. ஒபாமாவை தெரிந்தெடுத்தற்கான காரணங்களாக நோபல் குழுமம் பின்வருபனவற்றை சொல்லியிருந்தார்கள்: இஸ்லாமிய நாடுகளுடன் இணக்கத்தை உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் இன்றும் கூட ஓபாமா மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தார் என்பதே. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை புதுப்பித்தது அல்லது உண்டாக்கியது. யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார். ட்ரம்பின் சமாதான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கூட தவிர்த்துவிட்டு, புதிய ஒப்பந்தங்களை பயமுறுத்தலின் ஊடாகவே அவர் செய்ய முனைகின்றார். அவைகளும் கூட மிகவும் ஒரு பக்கச் சார்பாக, அமெரிக்காவின் நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இவர் உலகின் மீது தொடுத்திருக்கும் வர்த்தகப் போர்கள் கூட உலகின் ஸ்திரத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று என்ன, நாளை என்ன என்று எதுவும் தெரியாத நிலையிலேயே அமெரிக்கர்களும், உலகமும் இவரின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடுமை உலகம் கண்ட மிகக்கொடிய சில கொடுமைகளில் ஒன்று. 'ஒரு பை அரிசிக்காக பலஸ்தீனியர்கள் அவர்களின் உயிர்களைக் கூட விட தயாராக இருக்கின்றார்கள்...................' என்ற வசனம் எந்த மனிதனையும் அழவைக்கும். அமெரிக்காவும், ட்ரம்பும் நினைத்தால் இந்தக் கொடுமையை இன்றே நிற்பாட்டமுடியும். ஆனால் காசாவில் உல்லாச விடுதிகளைக் கட்டுவதைப் பற்றியே ட்ரம்பும், அவரது குடும்பமும் அக்கறையாக உள்ளது. ஈரானுடனான முரண்பாட்டில் கூட ட்ரம்ப் சமாதானத்தை தேடவில்லை. இன்னும் பல இப்படியே போய்க் கொண்டிருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்டவற்றை விட, இன்றைய திகதியில் உலகில் மிகப்பெரும் அட்டூழியங்கள் செய்யும் இஸ்ரேலின் தலைவரே ட்ரம்பை முன்மொழிந்திருக்கின்றார் என்ற ஒரு தகவலே ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கக் கூடாது என்பதற்கான பிரதான காரணம்.
-
ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வார்கள். ரஷ்யாவில் பொதுவாக மாடியிலிருந்து தவறுதலாக யன்னலூடாக விழுந்து செத்துப் போவார்கள். இப்போது ரஷ்யர்களும் முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள்..................
-
பயந்தாங்கொள்ளி
🤣......... கனடாவில் கார் ஓட்டிப் பாருங்கள்....... 'கமரா......... கமரா.........' என்று விடாமல் ஒரு பயம் காட்டுவார்கள் பாருங்கள்...... மன்னன் அலெக்ஸாண்டரே பயந்து போய் விடுவார்..........
-
பயந்தாங்கொள்ளி
இதற்காக ஒரு நோபல் பரிசை கேட்டுப் பார்ப்பமோ என்றும் ஒரு ஐடியா உள்ளுக்குள் வருகின்றது.........🤣.
-
பயந்தாங்கொள்ளி
அந்தப் பக்கம் நல்ல துணிவாகத்தான் இருக்குது....... நாங்கள் தான் இப்படி ஆகிவிட்டோம்...... கல்யாணத்தின் பின்........🤣.
-
பயந்தாங்கொள்ளி
இங்கும் சுத்தமாகவே இருக்கின்றன, அண்ணா. இவை என் வீட்டுப் பூனைகள் இல்லை, ஆனால் வந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பாத்ரூமாக வேறு ஒரு அயல் வீட்டை உபயோகிக்கின்றன என்றே தெரிகின்றது...................🤣. ஒரு குட்டியை சாப்பிட்டு விடும் என்பது உண்மையல்ல என்றே நினைக்கின்றேன்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜிம்மி கார்ட்டருக்கு கொடுத்திருந்தார்கள். பின்னர் ஓபாமாவிற்கு கொடுத்தார்கள். மேலும் இருவருக்கு 100 வருடங்களின் முன் கொடுத்திருந்தார்கள். எம்ஜிஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது ஒரு முறை கொடுக்கப்பட்டிருக்கின்றது. சிவாஜிக்கு இந்த விருது ஒரு தடவையும் கொடுக்கப்படவில்லை. இதில் எது அதிகொடுமை.........🤣.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் அல்ல, கொடுக்கப்படும் மற்ற நோபல் பரிசுகளும் தனக்கே வேண்டும் என்று அடம்பிடிப்பார் அதிபர் ட்ரம்ப். அடுத்த மூன்று வருடங்களில் ஏதோ ஒரு நாள் காலையில் இந்த மனிதன் வேறு ஒரு எழுத்தாளரை வைத்து எழுதிய கவிதையோ அல்லது கதையோ கூட இவரின் பெயரில் வெளிவரலாம், இலக்கிய பரிசுக்காக. இவரின் பெயரில் வந்த 'Art of the Deal' போல. 'He doesn't have a soul...........' என்று பின்னர் சொல்லியிருந்தார் இந்தப் புத்தகத்தை உண்மையில் எழுதிய எழுத்தாளர். 'ஆன்மா அற்ற ஒரு மனிதன்...............' என்ற இந்த வசனம் இதை வாசித்த அந்தக் கணத்தையே அப்படியே சில்லிடவைத்தது. இவரால் உலகத்திற்கு பெரும் அழிவு கிட்டும் என்று யாழ் களத்தில் இவர் மீண்டும் வருவதற்கு முன்னர் எழுதியிருக்கின்றேன். இவரின் முன்னைய ஆட்சியில் கூட உலகம் சமாதானப் பூங்காவாக இருந்துவிடவில்லை. இவரின் முன்னைய ஆட்சிக் காலத்திலேயே அமெரிக்கா மிக அதிகமான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய முழுமையான செய்திகள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவே அமெரிக்காவின் வெளியே வாழும் ஈழத்தமிழர்கள் பலருக்கும் பைடன் மற்றும் ஜனநாயகக்கட்சியை புறம் தள்ளி, ட்ரம்பை சமாதானத்தின் தூதுவராக நினைக்கவைத்தது. அதிபர் ட்ரம்ப் வெறும் வாக்குறுதிகளைக் கொடுப்பவர், அடுத்த நாட்களிலேயே அவற்றை மறந்து விடுபவர், இந்த இயல்பு அவருடன் கூடவே என்றும் இருக்கின்றது. அவருடைய உண்மையான அக்கறை அவரின் மேலே மட்டுமே என்ற விடயத்தை எம் மக்கள் காணத் தவறினார்கள். உக்ரேனின் மீதோ, ரஷ்யாவின் மீதோ அல்லது உலகத்தின் மீதோ அல்ல. எங்களின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளைக் கொண்டு, நிகழ்வுகளையும், மனிதர்களையும் கணிப்பது பெரும்பாலும் தவறான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
முதலீடுகள் இரண்டு வழிகளில் மட்டுமே வரும். ஒன்று சேமிப்பு. இரண்டாவது, போதிய சேமிப்பு இல்லாவிட்டால், கடன். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகக் குறைவாக சேமிப்பவர்கள் அமெரிக்கர்கள். சேமிப்பே கிடையாது. பிறகு முதலீடுகளுக்கு எங்கே போவது............. ஆனால் உலகமே அமெரிக்காவில் முதலிடுகின்றது. அமெரிக்காவிற்கு ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இலங்கையுடன் கூட. அது இலங்கை அமெரிக்காவில் இடும் முதலீடு. சீனா முதலிடுகின்றது, மெக்சிக்கோ முதலிடுகின்றது............. எல்லாமே கடன்களாக இந்த நாட்டுக்குள் வருகின்றன. அதுவே கட்டிடங்களாக, தொழில்நுட்பங்களாக, ஐபிஓக்களாக, எலான் மஸ்க்குகளாக மாறுகின்றன. இதை ஏன் வேறு ஒரு நாட்டில் உலகம் முதலிட முடியாதுள்ளது............ ரஷ்யாவில் முதலிட முடியாதா, சைனாவில் முதலிட முடியாதா.............. முடியாது என்பதே இன்றைய நிலவரம். இத்தனைக்கும் சைனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அதன் தலைவர்கள் இறக்கும் வரை மாறுவதில்லை, அவர்களின் கொள்கைகளில் மாற்றம் இல்லை, அரச நிர்வாகத்தில் தனித்தனியான சுதந்திரம் உள்ள அமைப்புகளினால் ஏற்படும் கட்டுப்பாடுகள் அங்கு இல்லை. ஆனாலும் முதலிடுபவர்கள் எதிர்பார்க்கும் ஒரு நம்பகத்தன்மையும், வெளிப்படையும், சுதந்திரமான நிர்வாக அமைப்புகளும் அங்கு இல்லை. இந்த காரணங்களுக்காகவே டாலர் பெறுமதியாக இருக்கின்றது, அமெரிக்காவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா எறியும் காசு அவர்களுடையது அல்ல. ஆனாலும் மற்றவர்களுக்கு அதை கொடுப்பதற்கு வேறு இடமும் இல்லை. அமெரிக்காவின் பிரச்சனை திருப்பிச் செலுத்தும் வட்டியின் அளவு. இது இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதனால் அரசாங்கம் இனி சேமிக்கப் போகின்றார்களாம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
நேற்று இரவு தமிழ்நாட்டு செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் கேட்பது சரிதானா என்று மிகவும் உன்னிப்பாகக் கேட்டேன். என் காதில் செய்தி சரியாகவே விழுந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்ற வேண்டாம் என்று சில பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்!! அதைத் தொடர்ந்து வந்த அடுத்த செய்தியில் இன்னொரு ஊரில் அங்கிருக்கும் டாஸ்மாஸ்க் கடையை அகற்றும் படி பெண்கள் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இதில் எது உண்மை, எது சோடிக்கப்பட்ட ஒரு நாடகம், களநிலை எது, தேவையானது எது என்பதை இந்த இரண்டு செய்தித் துண்டுகளில் இருந்தோ அல்லது இவற்றை துண்டு துண்டாக கொண்டு வரப் போகின்ற யூடியூப் காணொளிகளில் இருந்தோ மட்டும் சொல்லிவிடமுடியாது. தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிலை மற்றும் டாஸ்மாஸ்க் பற்றிய புரிதல் ஏற்கனவே இருந்தால் மட்டுமே இவற்றின் பின்புலங்கள் என்னவென்று தர்க்கரீதியாக சிந்திக்கமுடியும். அப்படியான புரிதல்கள் இல்லாவிட்டால், டாஸ்மாஸ்க் கடைகளுக்கு குடும்பப் பெண்களே ஆதரவு கொடுக்கின்றார்கள் என்ற செய்தியும் சரியென்றே தோன்றும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்த இரண்டு நாடுகளினதும் இன்றைய கிரெடிட் ரேட்டிங் என்னதான் என்று தேடிப் பார்த்தால் ஆச்சரியம் தான் மிஞ்சுகின்றது. AAA ரேட்டிங்கிலிருந்து அமெரிக்காவின் ரேட்டிங் AA1 ஆகியுள்ளது. AA1 என்பது Stable Outlook. சீனாவின் ரேட்டிங் A1 என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. A1 என்றால் Negative Outlook.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
'கிரெடிட் ரேட்டிங்' விழுந்தது அதிபட் ட்ரம்ப் அவர்களின் நிலையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதன் பொருட்டான அவசர நடவடிக்கைகளால். அமெரிக்க - சீன போட்டியால் அல்ல. இந்த அரிதான உலோகங்கள் மீதான சீனாவின் அதிகாரம் என்பது மிகவும் சமீபமாக நடந்த ஒரு நிகழ்வு. அதற்கு பல வருடங்கள் முன்னரேயே அமெரிக்கவும் சீனாவும் ஒன்றும் இரண்டும் என்று உலகில் போட்டாபோட்டியில் இருக்கின்றன. இதன் அடிப்படையே ரஷ்யாவோ அல்லது வேறு எவருமோ அருகில் கூட இல்லை என்பதே. இன்று சீனாவிடம் அரிதான உலோகங்களின் மீதான அதிகாரம் இருக்கலாம். ஆனால் இன்னும் பல தொழில்நுட்பங்கள் அமெரிக்காவின் கைகளிலேயே இருக்கின்றது. ஒரு சாதாரண பயணிகள் விமானத்தை கூட சீனா பாதுகாப்பாக செய்து விற்க, அதை உலக நாடுகள் வாங்கும் நிலை இன்னும் வரவில்லை. நாங்களும் சீனா செய்யப் போகும் விமானங்களில் பயணிக்கும் நிலையிலும் இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுவே தான் மைக்ரோ பிராசசர் தொழில்நுட்பத்திலும். இந்த இருவரும் தொழில்நுட்பத்தில் உலகெங்கும் போட்டி போடுவார்கள். ஆனால் இராணுவ ரீதியாக இன்னொரு கண்டம் போய், இன்னொரு நாடு போய், அங்கே நின்று போரிடுவது என்பது இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவால் மட்டுமே முடியும். வேறு எவரிடமும் அந்த வளங்களும், திறமைகளும் இல்லை.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
கடஞ்சா, சைனா மத்திய கிழக்கில் நடக்கும் சண்டைகள் என்று மட்டும் இல்லை, எந்தச் சண்டைகளிலுமே பங்குபற்றுவதில்லை. உலகில் இரு நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளுமே தங்கள் மேல் தீவிரமாக, தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை திணிக்கப்பட்டாலே அன்றி சண்டைகளில் ஈடுபடுவதில்லை. இன்றைய காலத்தில் ஒரு பத்து நாட்கள் நடக்கும் யுத்தமே ஒரு நாட்டை மிக இலகுவாக சில வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்று விடும் என்ற தெளிவு எல்லா நாடுகளிடமுமே இருக்கின்றது. மிக அண்மையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பார்த்தோம். ஒருவரின் வான்வெளிக்குள் அடுத்தவரின் யுத்த விமானங்களே பறக்கவில்லை. தங்கள் தங்கள் வான்வெளிகளிலேயே இரண்டு நாட்கள் சுற்றிப் பறந்து விட்டு இறங்கினார்கள். பின்னர் சமாதானம் என்றார்கள். அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே தொடர்ச்சியாக உலகெங்கும் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேல் அதன் இருப்பிற்காக அங்கு பலருடன் போராடுகின்றது. அமெரிக்கா அதன் மதிப்பிற்காகவும், அதற்கு பொறுப்புகள் இருக்கின்றது என்றும் பல இடங்களுக்கும் போய் வருகின்றது. அமெரிக்கா வல்லரசே இல்லை, அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவமே கிடையாது என்று 25 வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். அமெரிக்க டாலரே மூழ்கிவிட்டது என்பதையும் பல வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். சீனா முன்னே போய்விட்டது என்றும் தான். கோவிட் காலத்தில் அமெரிக்க வல்லமை அற்றது என்று வந்த செய்திகள் ஏராளம். அடுத்த 25 வருடங்களுக்கும் இதே செய்திகள் வரும். ஆனால் அமெரிக்கா இருக்கும் இடத்திலேயே இருக்கும், அமெரிக்க டாலரும் அங்கேயே இருக்கும். அப்படியே நான் போய்ச் சேர்ந்து விடுவேன்............ வேற யாராவது வந்து இதைப் போல யாழில் எழுதுவார்கள்....................🤣.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், நீங்கள் சொன்னது போலவே நடந்தது. இது போலவே உங்களுக்கு வேறு பல உலக விளையாட்டுகளில் இருக்கும் பரிச்சயமும், தெரிந்திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை..........👍. அரசியல் மற்றும் வரலாறு என்று வரும் போது பலரும் ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள், நான் உட்பட. பார்வைகளும் அவரவர் நிலைப்பாட்டின் வழியே தான் பெரும்பாலும் செல்லும். சிலருக்கு பரந்த வாசிப்பு இருக்கும். சிலரிடம் மிக அதிக ஞாபகசக்தி இருக்கும். இன்னொரு பார்வையில் ஒரு உறுதியான கருத்து சரியான தரவுகளுடன் வரும் போது அதையிட்டு அமைதியில்லாமல் தவிக்க வேண்டிய அளவிற்கு நாங்கள் ஒருவரும் தொழில்முறை அரசியல்வாதிகள் இல்லைத்தானே..................... மாற்றுக் கருத்துகளையும் இலேசாகக் கடந்து போவது தான் சிறப்பு. இதற்காக எங்களின் உடல், மன ஆரோக்கியத்தை இழப்பது தேவையற்றது. சரியான தரவுகளின் பின்புலம் இல்லாமல் வரும் கருத்துகள்/காணொளிகள் அம்புலிமாமா கதைகள் போல, வாசித்தவுடன்/பார்த்தவுடன் மறந்துவிடவேண்டும்................🤣.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
என்ன கடஞ்சா நீங்கள்.................. மற்றவர்களுக்கு பரந்த சிந்தனை, அகண்ட பார்வை கிடையாது என்று சொல்லுகின்ற நீங்கள் எழுமானமாகவே தொடர்புகளை உண்டாக்குகின்றீர்கள். மலைக்கும், மண்ணுக்கும் மேல் தங்கள் இஷ்டப்படி குண்டுகள் போட்டவர்களுக்கு, அங்கே இருக்கும் இராணுவ கட்டமைப்புகள் மேல், அரச கட்டமைப்புகள் மேல், மக்களை வெளியேற சொல்லிவிட்டு பெரும் நகரங்கள் மேல் குண்டுகள் போடமுடியாதா? வெற்றி - தோல்வி - செருக்கு என்பதையும் தாண்டி, ஏதோ கொஞ்சமாவது மனிதம் இன்னும் வாழ்கின்றதே என்று ஆறுதல் அடையவேண்டியிருக்கின்றது. டோக்கியோ மீது அணுகுண்டை வீசவில்லை. ஹிரோசிமா மற்றும் நாகசாகி மீதே அணுகுண்டுகள் வீசப்பட்டன. அந்த இரு நகரங்களின் மேல் கூட வீசாமல், ஜப்பானில் இருக்கும் பொட்டல் வெளிகளிலோ அல்லது மலைகளிலோ வீசி இருக்கலாம். அதற்குப் பின்னும் ஜப்பான் பணிய மறுத்து இருந்தால், கடுமையான மிகக் கவலையான முடிவை அமெரிக்கா எடுத்திருக்க வேண்டும் என்று தானே இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கத்தாரில் இருக்கும் அமெரிக்க தளத்தின் மீது ஈரான் நடத்தியது ஒரு தாக்குதலா........ என்ன சேதம் விளைந்தது............. எங்கள் ஊர் அம்மன் கோவில் வேட்டைத் திருவிழாவில் விட்ட எலி வாணத்தாலாவது சில சேலைகள் பற்றி எரிந்தன....................
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பங்குபற்றிய மூன்று நாடுகளும் தங்களுக்கு வெற்றி என்று கொண்டாடிக் கொண்டே அப்படியே கலைந்து போங்கள். நேரடியாக பங்குபற்றாமல் மறைகரங்களாக இருந்தவர்களும் வென்றவர்களே. ஆனால் சில விசயங்கள்: இப்பொழுதும் அதிபர் ட்ரம்பின் சமூகவலைப் பதிவுகளை, பேட்டிகளை, பேச்சுகளை இந்த உலகில் எவராவது நம்புகின்றார்கள் என்றால், அவர்களின் தலைகள் மேல் ஜிபியூ - 57 இராட்சதக்குண்டை போடுவதில் தப்பேயில்லை. அதிபர் கமேனிக்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் நன்கு தெரியும். அவசரப்பட்டு தலையை வெளியே காட்டாமல் இருக்கும் இடத்தில் அப்படியே இருந்து கொண்டால் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் 94 வயதுகள் வரை அவர் அதே இடத்தில் வாழக்கூடும். இந்த 94 என்பது ஒரு மாஜிக் நம்பராக பல இடங்களிலும் பேசப்படுகின்றது. அது ஏன் 94............. ஈரான் அணுகுண்டு செய்வதற்கு முன்னர் அதன் ஆகாயத்தை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பக்கத்தால் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் போகின்றவர்களே ஈரானுக்கு கல்லால் எறிவார்கள். மிக முக்கியமானது: இன்று உலகச் சந்தையில் எண்ணெயின் விலை நன்றாகச் சரிந்துவிட்டது. இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த விலையை விட இன்று குறைவாகிவிட்டது. இறந்தவர்களும், இழந்தவர்களும் தவிர, ஏனையோர் குறைந்த விலை எண்ணெ வாங்கி மகிழலாம். 'ஒரு கலன் எட்டு டாலர்கள் ஆகியது........... கலிஃபோர்னியா கவிழ்ந்தது.............' என்ற யூடியூப் தலைப்பு அடுத்த மத்திய கிழக்கு சண்டை வரை காத்திருக்கவேண்டும். 'மூன்றாவது உலக மகாயுத்தம் ஆரம்பாகிவிட்டதா..............' - கமேனி 94 வயதில் போய்விடுவார், ட்ரம்ப் கூட போய்விடுவார், ஆனால் இந்த தலைப்பு சாகாவரம் பெற்றது. இப்பொழுது 12 நாட்களுக்கு முன்னர் விட்ட இடத்திற்கு உலகம் போகவேண்டும், அதாவது ரஷ்யா - உக்ரேன் எல்லைக்கு.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்காவைச் சுற்றி சோவியத் யூனியனின் தளங்கள் இருந்திருக்கலாம், பையன் சார். அங்கு அமெரிக்காவின் முக்கிய நகரங்களை நோக்கி ஆயுதங்கள் நிறுத்தப்பட்டும் இருக்கக்கூடும். அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இதை உலகெங்கும் தளங்கள் அமைத்து செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய ரஷ்யா மிகவும் பின்தங்கிவிட்டது. அமெரிக்கா நன்றாக முன்சென்றுவிட்டது. அன்றைய கியூபா, இன்றைய வெனிசுவேலா என்று மிகக் குறைந்த ஆதரவு நாடுகளே ரஷ்யாவிற்கு இந்தப் பக்கங்களில் உண்டு. இன்று வெனிசுவேலாவில் கூட ரஷ்யாவால் தளம் அமைக்க முடியாத நிலை. ஆனால் மிக வேகமான விமானங்களும், ஏவுகணைகளும் தளங்களின் தேவையை ஓரளவு குறைக்கும். ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்காவின் தளங்கள் பல இன்றும் இருக்கின்றன. இங்கு அமெரிக்காவில் சில மாநிலங்கள் பெரியவை, பொருளாதாரத்திலும் மேம்பட்டவை. சில மாநிலங்கள் மிகச் சிறியவை, வசதி வாய்ப்புகளும் குறைந்தவை. பெரும் மாநிலங்கள் சிறிய மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதுவே சரியான நடைமுறையும் கூட. ஆனால் சில பெரிய மாநிலங்களில் சிலர் இது போன்ற காரணங்களால் பிரிந்து போகப் போகின்றோம் என்று சொல்லிக் கொள்வார்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், இங்கு நாங்கள் எழுதுவது வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. உங்கள் மீது எனக்கிருக்கும் வாஞ்சையில் ஒரு துளியேனும் இந்தக் கருத்துகளால் குறைந்து விடப்போவதில்லை. ரஷ்யா மக்கள் மீதும், அந்தப் பெரும் தேசத்தின் மீதும், அது ஒரு காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட கோட்பாடுகளின் மீதும் மற்றும் அதன் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் மதிப்பும் விருப்பும் எனக்கு உள்ளது. ஊரில் வாழ்ந்த பதின்ம வயதுகளில் கூட ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் சோவியத் யூனியனே பதக்கப்பட்டியலில் முதலாவதாக வர வேண்டும் என்று உளமார விரும்பியும் இருக்கின்றேன். ஆனால் அந்த சோவியத் யூனியன் அல்ல இன்றிருக்கும் ரஷ்யா. அதிபர் புடின் அந்த தேசத்தையே அழித்துவிட்டார். மேலும் கோட்பாடுகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்று கிடைத்த வாழ்க்கை மிக நல்லாகவே கற்றுக் கொடுத்தும் விட்டது. அன்றிருந்த சோவியத் யூனியனைப் பற்றியே இன்று சில கேள்விகள் உள்ளே இருக்கின்றன.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பையன் சார், ஈரானின் நட்பு நாடுகள் இதுவரை ஈரானுக்கு ஏதாவது உதவி செய்திருக்கின்றார்களா என்று பார்த்தால், சீனா, ரஷ்யா உட்பட, எந்த உதவிகளும் செய்யவில்லை என்றே தெரிகின்றது. பாகிஸ்தானுக்கு சீனா செய்த உதவிகளைக் கூட சீனா ஈரானுக்கு செய்யவில்லை. இத்தனைக்கும் ஈரானிடமிருந்து எவ்வளவு எண்ணெயை மிக மலிவு விலையில் சீனா வாங்கிக் கொண்டிருக்கின்றது. கைமாறாக பிஎல் - 15 ரகம் போன்ற ஏவுகணைகளையும், அதை சுமந்து செல்லும் சில யுத்த விமானங்களையும் சீனா ஈரானுக்கு கொடுத்திருக்ககலாம் தானே. இவற்றை வைத்துத்தானே பாகிஸ்தான் இந்திய விமானங்களை தாக்கியது. இந்தியாவுக்கு அடிப்பது என்றால் கொடுப்பார்கள், ஆனால் அமெரிக்காவிற்கு அடிப்பது என்றால் கொடுக்காமல் பின்வாங்குகின்றார்களா? இஸ்ரேலும், அமெரிக்காவும் வேறு வேறல்ல. இரு நாடுகளும் ஒன்றே தான். இதில் ஒருவரை ஒருவர் போர்க் குற்றவாளி என்று என்றும் சொல்லப்போவதில்லை. அணு குண்டை அமெரிக்கா முதலில் செய்தது அமெரிக்காவினது மட்டும் இல்லை, உலகின் அதிர்ஷ்டமும் கூட. இதையே அன்று ஜேர்மன் அல்லது ஜப்பான் செய்திருந்தால், இன்று நாலு கண்டங்களின் பெரும் பகுதிகள் பூமியில் மனிதர்கள் இல்லாத பாலைநிலங்களாக இருந்திருக்கும். அதன் பின்னர் அணு ஆயுதங்கள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் பல் நாடுகளால் சுயமாக தயாரிக்கப்பட்டன. அமெரிக்காவால் எவரையும் அன்று தடைசெய்ய முடியாது. சில நாடுகளிடம் இருப்பதும் நன்மைக்கே. ஒற்றை ஏகாதிபத்தியம் என்ற நிலையை அது இல்லாமல் செய்கின்றது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானுக்கு அதன் ஆதரவு நாடுகளிலிருந்து ஒரு உதவி தன்னும் கிடைக்கப் போவதில்லை. ஏதோ எங்கள் வீட்டில் சுட்ட தோசையை தட்டில் மூடிக் கொண்டு போய் அடுத்த வீட்டிற்கு கொடுப்பது போல, ரஷ்யாவிலிருந்தும், வட கொரியாவிலிருந்தும் ஈரானுக்கு அணு ஆயுதங்கள் கொடுப்போம் என்று கேலிக்கூத்தான வாய்மொழி ஆதரவு மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கும். ஒரு நாடு அணு ஆயுதத்தை தன் நாட்டில் வைத்திருப்பதற்கே அந்த நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு அணு ஆயுத திட்டமும், பராமரிப்பு சேவைகளும் இருக்கவேண்டும். ஈரானிடம் அப்படியான வசதிகள் எதுவும் இல்லை. மேலதிகமாக ரஷ்யாவே வட கொரியாவிடமிருந்து வட கொரிய வீரர்களையும், ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. மூன்றரை வருடங்களாக சேத்துக்குள் விட்ட காலை வெளியே எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் ரஷ்ய அதிபர் புடின். டாலர் கடைகளில் எண்ணெய் வாங்குவது போல ஈரானிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகவும் மலிவு விலையில் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கும் சீனா கூட எந்த விதமான தளபாட உதவிகளும் செய்யப்போவதில்லை. அடுத்ததாக எண்ணெய்க்கு என்ன செய்யலாம் என்பதே அதன் ஒரே ஒரு யோசனை. ஈரான் அழிந்து போகாமல் தப்பிக்க, தற்காலிகமாகவேனும் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதே இன்றுள்ள நல்ல ஒரு தெரிவு. அழிந்து போன தேசங்கள் பல அப்படியே அழிந்த நிலையிலேயே இன்னும் இருக்கின்றன. இல்லாவிட்டால் ஈரானும் அந்த வகையில் இன்னொன்று ஆகிவிடும். அதன் வான்வெளியில் சுத்தமாகவே எந்தக் கட்டுப்பாடும் அற்ற ஈரான் மிகவும் ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே அந்த நாட்டை பிடிக்கின்றேன், இந்த நாட்டை பிடிக்கின்றேன் என்று சொல்லியபடியே இருக்கின்றார். இது அவருக்கு இன்னும் உற்சாகத்தை கொடுக்கப் போகின்றது. அடுத்ததாக கிரீன்லாந்த் கதையை ஆரம்பிக்கப் போகின்றார்.................... பொதுவாகவே ட்ரம்ப் எதைச் செய்ய முயன்றாலும் இங்கு சில மாநிலங்களில் மிகக் கடுமையான எதிர்ப்புகள் காட்டப்படும். இதில் முன்னிலை வகிக்கும் மாநிலம் கலிஃபோனியா. ஆனால் ஈரான் மீதான தாக்குதலுக்கு வழமையான அளவிற்கு எதிப்புகள் இங்கு காட்டப்படவில்லை. ஒரு விதமான ஆதரவுப் போக்கே இருக்கின்றது.
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்கா ஈரான் மீது இராட்சத குண்டுகளைப் போட்டு விட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன், இவர்கள் இப்படிச் செய்து விட்டார்களே என்ற ஒரு பெருத்த ஏமாற்றமும், இப்போது கூட யோசனையாகவுமே இருக்கின்றது. உலகம் ஒரு ஒழுங்கில் இல்லாமல், பலம் உள்ளவர்கள் எதையும், எங்கேயும் செய்யலாம் என்பது எப்படியான ஒரு உலகத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களாக இப்படியான தான்தோன்றித்தனமான நிகழ்வுகள் எத்தனை ஆரம்பிக்கப்பட்டு, முழு உலகமுமே அவற்றின் பாதிப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. உலக சுகாதார மையத்தில் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்த தமிழ் பெண்மணி ஒருவரின் பேட்டி ஒன்று கடந்த வாரம் ஒரு இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் போனது. கோவிட் வைரஸ் எங்கே ஆரம்பித்திருக்கலாம் என்ற மூன்று ஊகங்களை சொல்லி, அதில் ஒன்றை முற்றாக நிராகரித்து விட்டு, மற்றைய இரு ஊகங்களையும் உறுதிப்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுத்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒன்று மீண்டும் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருக்கும் உலக சுகாதார மையத்தின் நிலையைச் சொன்னார். இந்தப் பெரிய நாடுகளுக்கு கொஞ்சம் கூட, தங்கள் நலன்கள் தவிர, அக்கறை என்பதே கிடையாது. சில தலைவர்களும் அப்படியே. மிகவும் முன்யோசனையற்ற ஏட்டிக்குப் போட்டியான செயல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சர்வாதிகாரிகளும், மத/இன அடிப்படைவாதிகளும் மட்டும் இல்லை, ஜனநாயக வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இப்படியே செய்வது ஆபத்தான ஒரு எடுத்துக்காட்டு.
-
பயந்தாங்கொள்ளி
இளகிய மனது, வெள்ளை மனது என்பதை விட பயந்த மனது என்று சொல்வது தான் சரி போல.........🤣. உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு பூனைக்குட்டியைக் கூட தூக்கி விட துணிவில்லாமல், மனைவியை துணையாகக் கூட்டிக் கொண்டு போனதை வேறு என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை............. அதுவும் ஓடும் போது கையில் ஒரு துவாயையும் எடுத்துக் கொண்டே ஓடினேன் பாருங்கள்........... அந்த நாலாவது பூனைக்குட்டியை விட நான் தான் ஒரு பயந்தாங்கொள்ளி...............🤣. கொஞ்சம் வெளியே நின்று ஒவ்வொருவரும் எங்களை நாங்களே கவனித்து பார்த்தால் சரியான வேடிக்கையாக இருக்கும் போல...............