Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣.................... டோராவும், போக்கிமோன் பிகச்சுவும், இன்னுமொரு சிறுவர் பாத்திரமும் இங்கு உள்ளூர் தொலைக்காட்சியில் வருவார், பிள்ளைகளுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள்...... இங்கு வட கோளத்தில் கோடை காலம் முடிந்து கொண்டு வருகின்றது. எல்லோரும் விடுமுறைகளை முடித்து வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பாடசாலைகள் இந்த மாதம் ஆரம்பித்துவிட்டன. கல்லூரிகள் இந்த மாதமும், அடுத்த மாதமும் ஆரம்பிக்கின்றன. இந்த கோடை காலம் முழுவதும் இங்கு வந்து எழுதுவதற்கு எனக்கு நேரம் அதிகம் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு பயணம் இருக்கின்றது............. உங்களின் நாட்டிற்கு............... ஆர்வம் அல்லது விருப்பம் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது. சில பல நேரங்களில் கூட்டத்துடன் சேர்ந்து ஓடிப் போய், பின்னர் உணர்ந்து கொண்டு வெளியேயும் வந்து விடுகின்றார்கள். இங்கு பல்கலைப் படிப்பே அப்படித்தான் இருக்கின்றது. ஒரு வருடம், இரண்டு வருடங்களில் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு போகின்றார்கள். அவர்களுக்கு பொருந்தும் ஒன்றை தேடும் வசதிகள் இருப்பது மிகவும் நல்ல ஒரு விடயம் என்றே நினைக்கின்றேன்.
  2. கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.
  3. 🤣................... அவர்களும், பல பிற நாட்டவர்களும், எங்களைப் போலவே அடுத்தவர்கள் விவகாரத்தில் அளவுக்கு அதிகமாக ஆர்வமாக இருக்கின்றார்கள் என்ற பார்வையையே இந்தச் சம்பவம் எனக்கு கொடுத்தது..............👍. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு..............' என்பது போல அந்த ஒரு கேள்வி தான் அவர்கள் என்று தோன்றியது. நான் பிழையாகக் கூட இருக்கலாம்............... அந்த வீட்டில் முன்னர் இருந்தவர்கள், அவர்களின் மறைவு, பின்னர் அந்த வீடு விலைக்கு வந்தது.......... இவற்றை ஒரு கதையாகவே எழுதலாம்.
  4. 🤣............... சமீபத்தில் கூட விடுமுறையைக் கழிக்க உலகில் மிகச் சிறந்த இடமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருந்தது. உலகத்தின் தேவைகளும் தெரிவுகளும் வேறு, எங்களின் தேவைகளும் தெரிவுகளும் வேறு போல, அல்வாயன்..................... நன்றி யாயினி. குறிப்பாக ஓரிரு சொற்களை குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். இதை இன்னொரு முறை எழுதினால், அங்கிருக்கும் சில சொற்களையும், வசனங்களையும் மாற்றி விடுகின்றேன்......................👍.
  5. அவர் பக்கத்தில் நின்றிருந்தால், மூன்று பேரையும் பக்கத்தில் இருக்கும் கண் மருத்துவமனைக்கு ஏற்றிக் கொண்டு போய் இறக்கி விட்டிருப்பார், அண்ணா................🤣. நன்றி அக்கா. வரலாற்றில், பைபிளில் இருக்கும் எஸ்தரை நான் இதுவரை வாசிக்கவில்லை, அக்கா. வண்ணநிலவனின் எஸ்தரே எனக்கு தெரிந்த முதல் எஸ்தர். அதுவே மறக்க முடியாததும் ஆகிவிட்டது. பைபிள் எஸ்தரை நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்...............👍.
  6. ஒரு சோறு --------------- 'இந்தியாவா ...................' என்றனர் அவர்கள். வீதியின் அடுத்த பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வயதான தம்பதிகள் போன்றே தெரிந்தார்கள். 'இல்லை......... ஶ்ரீலங்கா..........' என்றேன். 'சிங்கப்பூரா ................' என்று திருப்பிக் கேட்டார்கள். இதுவரை எவரும் கேட்டிராத கேள்வி அது. நான் யாரோ இருவருக்கு ஒரு சிங்கப்பூர் குடிமகன் போல தோன்றுவேன் என்ற நினைப்பு இதுவரையில் எனக்கு ஒரு கணமேனும் வந்தது கிடையாது. அவர்கள் வீதியைக் கடந்து என் பக்கம் வர முயன்றார்கள். நீங்கள் அங்கேயே இருங்கள், நானே வருகின்றேன் என்று சொல்லி விட்டு, கையில் இருந்த தும்புக்கட்டையை சுழற்றி புல்லுக்குள் எறிந்து விட்டு வீதியைக் கடந்து அவர்களிடம் போனேன். ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள். அவருடைய பெயர் போல் என்றார் அந்த முதியவர். போல் என்னும் பெயர் எனக்கு மிகவும் பரிச்சயமானது, ஶ்ரீலங்காவில் இந்தப் பெயரில் பலர் இருக்கின்றார்கள் என்றேன். அவருடைய மனைவியின் பெயர் எஸ்தர் என்றார். சொல்லி விட்டு என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். எத்தனை எஸ்தர்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள். வண்ணநிலவன் அவர்கள் எழுதிய 'எஸ்தர்' என்னும் சிறுகதை தான் தமிழின் ஆகச் சிறந்த சிறுகதை என்று சில கவனிக்கத்தக்க பட்டியல்களில் உள்ளது. அந்தக் கதையில் வரும் எஸ்தர் என்னும் பாத்திரமும், அந்தக் கதையும் மனதை விட்டு அகல்வதேயில்லை. பின்னர் பல தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளின் பெயர்கள் எஸ்தர் என்று ஆகியிருக்கின்றது. அவற்றில் சில படங்கள் பரவாயில்லை என்று சொல்லலாம். 'நீர்ப்பறவை' படத்தில் எஸ்தர் வருகின்றார். விஜய் ஆண்டனியின் ஒரு படத்திலும் எஸ்தர் வந்தார். அந்தப் படம் மறந்துவிட்டது, அதில் வந்த எஸ்தர் என்ற பெயர் மட்டும் நினைவில் நிற்கின்றது. பல படங்களில் உதவி இயக்குனர்களில் ஒருவர் தான் கதாநாயகிக்கு இந்தப் பெயரை சிபாரிசு செய்திருப்பார் போல. எஸ்தரையும் எனக்கு மிகவும் நல்லாகவே தெரியும் என்றேன். 'எஸ்தர் பைபிளில் வருகின்றாரே........... அதனால் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.........' என்றார்கள் அவர்கள் இருவரும். இவர்கள் சொல்லும் எஸ்தரை எனக்குத் தெரியாது. முன்னால் நின்று கொண்டிருந்த வயதான எஸ்தர் அம்மாவின் முகத்தில் புன்னகை நீண்டு அழகாக தெரிய ஆரம்பித்தார். அந்தப் பக்கத்தில் இருக்கும் வீட்டில் குடியிருப்பவர் தங்களின் பெறாமகள் என்றனர். வேலையில் இருந்து அவர் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். 'அவர்களைத் தெரியுமா................' 'ஆ............... தெரியும். சமீபத்தில் தானே குடிவந்தார்கள். பேசியிருக்கின்றோம். அவர்கள் சாக்லேட் கூட கொடுத்தார்கள்..................' 'சாக்லேட்டா............... எதுக்கு சாக்லேட்........' 'எதற்கென்று தெரியவில்லை. அவர்கள் கொடுத்தார்கள், நான் வாங்கினேன்...............' '' இந்த தெரு மிகவும் அமைதியாக இருக்கின்றது என்றனர். வீட்டுக்கு முன் இருக்கும் தெருவே இவ்வளவு அகலமாகவும், சுத்தமாகவும் இருக்கின்றதே என்றனர். சுழற்றி எறிந்து விட்டு வந்த தும்புக்கட்டையின் ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன். விழுந்த இடத்திலேயே அது அப்படியே மல்லாக்காகக் கிடந்தது. 'இங்கு எவ்வளவு வருடங்களாக குடியிருக்கின்றீர்கள்............' '25 வருடங்கள் ஆகிவிட்டது............' என்றேன். 'என்னது 25 வருடங்களாகவா............ பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்கின்றீர்களா.............' இரண்டு வாரங்களிற்கு முன்னால் ஒரு நிகழ்விற்காக தலைக்கு கறுப்பு நிறம் அடித்திருந்தேன். இப்பொழுது அமோனியா இரசாயனம் இல்லாமல் மூலிகைகள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை இங்கிருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கின்றார்கள். அந்தப் பொடியை நீரில் கலந்தவுடன் அதில் இருந்து வரும் வாசனை ஒரு கெட்ட வாசனை போன்றே எனக்கு இருக்கின்றது. சில பொழுதுகளில், இருமல் மருந்தைக் குடிப்பது போல, இந்தப் பொடியை தலையில் பூச வேண்டியிருக்கின்றது. 'முண்டாசுப்பட்டி' படத்தில் வருவது போல கமராவின் உபயோகம் தடைசெய்யப்பட்ட ஒரு ஊருக்கு குடிபெயர்ந்தால் நன்றாக இருக்கும். அது முடியா விட்டால், அதிபர் ட்ரம்பிடம் சொல்லி இந்தக் கலர் மாற்றும் பொருட்களுக்கு ஒரு 500 வீத வரி போடச் சொல்லவேண்டும். அவரே சிவப்புக் கலர் தலைமுடியுடன் இருப்பதால், சிவப்புக் கலருக்கு மட்டும் வரி விலக்கு கொடுத்துவிடலாம். மூலிகைப் பொடி போட்டு இரண்டு வாரங்களில் என்னுடைய தலைமுடி உடைந்த செங்கல் நிறத்தில் திட்டுத் திட்டுகளாக பல இடங்களில் ஆகியிருந்தது. எனக்கே கண்ணாடியில் சகிக்க முடியவில்லை. கமரா தடைசெய்யப்பட்ட முண்டாசுப்பட்டி கதை போல, கண்ணாடி தடைசெய்யப்பட்ட ஒரு ஊர் பற்றியும் ஒரு சினிமா எடுக்கலாம். நல்ல சிரிப்பு படங்கள் என்று எதுவும் வருவதாகத் தெரியவில்லை. கமல், ரஜனி படங்களே இப்பவும் வருவதை நம்ப முடியாமல் இருக்கின்றது. 'காளி' மற்றும் 'குரு' படங்கள் புதிதாக வந்த போது, என்னுடைய காற்சட்டையில் ஒரு பொத்தான் குறைவாக இருந்த காலங்கள் அவை. மூன்று தலைமுறைகள் ஆகிவிட்டது............... எப்பொழுது நாங்கள் வல்லரசாவது........... போலும், எஸ்தரும் என்னை 25 வயதுகள் என்று மதிப்பிட்டது ஒரு பகிடியாக இருக்குமோ என்று இருவரையும் உற்றுப் பார்த்தேன். அவர்கள் பகிடி விடுவதற்கு முயற்சி எதுவும் செய்ததற்கான அடையாளம் ஒன்றும் அவர்களின் முகங்களில் தெரியவில்லை. கண் பார்வை மங்கிப் போவதும் வயதுடனேயே வரும் ஒரு பொதுவான போக்குத்தான். இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. நாற்பது வருடங்கள் சிகாகோவில் இருந்ததாகச் சொன்னார்கள். இனிமேல் வீட்டின் முன் விழும் பனியை அள்ளிக் கொட்ட உடம்பில் பலமில்லை. அதனால் இந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்து விட்டதாகச் சொன்னார்கள். சிகாகோவிற்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்தீர்களா என்று கேட்டேன். தாங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத்தளம் ஒன்று அந்த நாட்டில் இருந்தது. அமெரிக்காவிற்கு வெளியே இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத்தளம் என்று அதை ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றார்கள். வியட்நாமியர்களும் இருக்கின்றார்கள். கம்போடியர்கள் இருக்கின்றார்கள். அமெரிக்கா ஒரு காலத்தில் சண்டைக்கு போன இடங்களில் இருந்து பல நாட்டவர்களை கூட்டி வந்து இங்கு குடியேற்றி இருக்கின்றார்கள். இப்பொழுது எவரும் உள்ளே வராதே, வராதே என்கின்றார்கள். 'இந்த வீட்டின் விலை என்ன..............' என்று அவர்களின் பெறாமகளின் வீட்டைக் காட்டி என்னிடம் கேட்டார்கள். அவர்களை நன்றாகப் பார்த்தேன். 'தெரியாது................ அவர்கள் எனக்கு சாக்லேட் கொடுக்கும் போது நான் எதையுமே கேட்கவில்லை............. நல்வரவு என்று மட்டுமே சொன்னேன்.....' என்றேன். போலும், எஸ்தரும் தெரிந்து கொள்ள விரும்பிய ஒரேயொரு விடயத்தை நான் கடைசிவரை சொல்லவேயில்லை.
  7. @குமாரசாமி அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
  8. அமெரிக்காவின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய கட்டுரைகள் பல நம்பத்தகுந்த ஊடகங்களில் வந்திருந்தன. சில நாட்களாக வேறு சில வேலைகளில் கவனம் இருந்ததால் எதையும் வாசிக்க நேரம் இருக்கவில்லை. இந்த வாரம் வாசிக்கவேண்டும். அதிபர் ட்ரம்ப் விரைவில் ஒரு சமநிலைக்கு வந்தால் எல்லோருக்கும் நல்லது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது, இப்போது நிலைமை பரவாயில்லாமல் அவரது முடிவுகளில் ஓரளவிற்கு ஒரு ஸ்திரத்தன்மை தெரிகின்றது. அமெரிக்க பங்குச்சந்தையின் போக்கும் அதையொட்டியே இருக்கின்றது.
  9. இதயங்களின் மொழி -------------------------------- அண்ணனைப் பார்க்கும் போது அவருக்கு சத்திர சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் ஆகியிருந்தது. அண்ணனின் இதயத்தை திறந்து சிகிச்சை செய்திருந்தார்கள். அண்ணன் எப்போதும் மிகவும் தெளிவானவர். வாழ்வை இலேசாக எடுத்துக் கொண்டவரும் கூட. இப்போது சத்திர சிகிச்சையின் பின் முகத்தில் தெளிவு இன்னமும் கூடியிருந்தது, சந்தோசத்தையும் நன்றாகவே காட்டினார். அண்ணனுக்கு மூன்று அடைப்புகள் இருக்கின்றதென்றே இதயத்தை திறந்தார்கள். திறந்த பின் நான்காவதாக இன்னொன்று இருப்பதையும் கண்டுகொண்டார்கள். அதையும் சரிசெய்தார்கள். அது கூட அண்ணனின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணமோ தெரியவில்லை. அதற்காக எல்லோரும் இப்படித்தான் இந்த விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்வார்கள் என்றும் இல்லை. என்னை விட பத்து வயதுகள் குறைந்த என்னுடன் வேலை செய்த நண்பன் ஒருவனுக்கு சில வருடங்களின் முன் திடீரென்று இப்படி ஆகியது. அவனுக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் என்றே சொன்னார்கள், ஆனால் அவனுக்கும் நான்கு திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. நண்பனை அடுத்த அடுத்த நாட்களிலேயே மருத்துவமனையில் போய் பார்த்தேன். 'இனி என்ன.......... எல்லாமே முடிந்து விட்டது............ எவ்வளவு திட்டங்கள் வைத்திருந்தேன்..............' என்ற கவலையுடன் சொல்லிக் கொண்டே தயிர் போல ஏதோ ஒன்றை சாப்பிட முயன்று கொண்டிருந்தான். அவனிடம் திட்டங்களுக்கு என்றும் குறைவே இருந்ததில்லை. ஒரு நாட்டில் ஆளும் கட்சிக்கு இருக்கும் திட்டங்கள் அளவுக்கு அவனிடம் திட்டங்கள் எப்போதும் இருக்கும். குடும்பம், குழந்தைகள், வேலை, நண்பர்கள்,சமூகம் இவற்றை விட இன்னும் சிலவும் இருக்கும். உதாரணமாக, ஒரு தடவை ஒரு குறும்படம் எடுப்பதாகச் சொல்லியிருந்தான். வேலை செய்யும் இடத்தில் பலரும் அது ஒரு நல்ல திட்டம் என்றனர். நானும், இன்னொரு நண்பனும் சிரித்துவிட்டோம். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு............' என்பது போல ஒரு தலைப்பைச் சொன்னான். சிரித்திருக்க கூடாது தான், ஆனால் தலைப்பை அவன் சொன்னவுடன் அதுவாக களுக்கென்று வெளியே வந்துவிட்டது. அவன் இந்த சினிமாத் துறையில் ஒரு நாற்பது வருடங்கள் பின்னுக்கு நின்று கொண்டிருந்தான். பின்னர் கதையும் முடிவாகியது. சிரித்த எங்கள் இருவருக்கும் எந்தப் பாத்திரங்களும் கொடுக்கப்படவில்லை. அவனுக்கு இந்த ஆர்வம் எங்கிருந்து வந்தது என்றால், தமிழ்ச்சினிமாவின் மிகப் பிரபலமான ஒரு இயக்குனராலேயே அவனுக்கு இந்த ஆர்வம் வந்திருந்தது. அந்த இயக்குனரும் நண்பனும் தமிழ்நாட்டில் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இயக்குனர் நண்பனை விட ஓரிரு வயதுகளே அதிகமானவர், ஒன்றாகவே பாடசாலை போய் வந்தவர்கள். 'அவனே இயக்குனராகி கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றான். நான் ஆகக் கூடாதா...........................' என்ற உந்துதலே ஒரு குறும்படம் எடுக்கும் நிலைக்கு நண்பனைத் தள்ளியது. இந்த எண்ணத்திற்கும், கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட நண்பனின் நாலாவது அடைப்புக்கும் நேரடியான தொடர்புகள் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஒரு நாட்டின் பல திட்டங்கள் போலவே அவனது குறும்படம் எடுக்கு திட்டம் கைவிடப்பட்டு, பின்னர் அவன் வேறு சில புதிய திட்டங்களுடன் இருக்கும் போதே இப்படி ஆகியது. அண்ணன் இப்படியானவர் இல்லை. அண்ணனும் நானும் இருபது, இருபத்தைந்து வருடங்களாக உருண்டு பிரண்டு கொண்டிருக்கின்றோம். அந்த நாட்களில் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் சிலர் அருகிலிருக்கும் இடமொன்றில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறு எவரையும் சேர்ப்பதில்லை. ஆனால் அண்ணனையும், என்னையும் சேர்த்தார்கள். எப்படி எங்களைச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. அங்கு விளையாடும் போது இருவருக்கும் ஒரே பெயர் தான். அண்ணனின் பெயரில் ஒரு ஆங்கிலத்தன்மை இருப்பதால், அந்தப் பெயரே இருவருக்கும் என்றாகியது. பின்னர் இந்தியர்கள் மட்டும் விளையாடும் ஒரு இடத்திற்கும் போனோம். அவர்களும் எங்களைச் சேர்த்தார்கள். எங்கள் இருவரையும் அண்ணன் - தம்பி என்றே அவர்கள் இன்றும் சொல்கின்றனர். அந்த வியட்நாமியர்கள் எங்களை இந்தியர்களுடன் விளையாடக்கூடாது என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன காரணம் அந்த இந்தியர்களுக்கு சுத்தமாக விளையாடவே தெரியாது, அவர்களுடன் விளையாடினால் நாங்கள் உருப்படவே மாட்டோம் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும் இலங்கையர்கள் என்று அந்த வியட்நாமியர்களுக்கு தெரியும். அவர்கள் இலங்கையில் இருக்கும் மதங்கள் பற்றியும், மொழிகள் பற்றியும், குறிப்பாக பாளி மொழி பற்றியும் என்னிடம் தகவல்களை கேட்டறிந்து இருக்கின்றார்கள். பா-ளி என்ற இரண்டு எழுத்துகளை தவிர வேறு எதுவும் தெரியாத நான் சமஸ்கிருதத்தில் இருப்பவை எல்லாவற்றையும் பாளியில் இருப்பவை என்று மாற்றி ஒரு விளையாட்டுக்காக சொன்னேன். பொய் சொல்லலாம் என்று திருவள்ளுவர் சொன்னது அப்படியே இதயத்தில் தங்கி நிற்கின்றது. பின்னர் நாங்களே ஒன்றை ஆரம்பித்து, எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரையும் சேர்த்து விளையாட ஆரம்பித்தோம். பல நாட்டவர்கள், பல இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக விளையாடினோம். ஒரு தடவை இரு பெண் பிள்ளைகள் வந்தார்கள். ஏதோ கல்லூரி விடுமுறைக் காலம் போல. நாங்கள் நாலைந்து பேர்கள் நின்றோம். அவர்கள் இருவரும் ஒரு பக்கமும், நாங்கள் மற்ற பக்கமும் என்றார்கள். அவர்களை இலகுவாக அடித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு ஐந்து நிமிடங்களிலேயே நிலைமையின் தீவிரம் விளங்கியது. அந்த இரு பெண் பிள்ளைகளும் மனிதர்கள் இல்லை. எங்களை அடித்து துவைத்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். முடிந்த பின், 'நீங்கள் நல்லாவே விளையாடுகின்றீர்கள்.............' என்று அவர்கள் சொன்ன போது வலி அதிகமாக இருந்தது. அன்று கூட முதலாவது அடைப்பு வந்திருக்கலாம். எல்லாம் சரி, இப்படி வருடம் முழுவதும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் இதயத்தில் அடைப்புகள் வருமா என்ற கேள்வி இங்கே வரக்கூடும். இன்னும் சில காரணிகளும் இருக்கின்றன என்பார்கள் மருத்துவர்கள். அயலவர் ஒருவர், மருத்துவர்கள் சொல்லும் எக் காரணிகளும் இல்லாதவர். மிகவும் அமைதியானவர், பக்தியாவனர், ஒழுக்கமானவர். சில மாதங்களின் முன் அவருக்கும் திடீரென்று நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டு, மூன்று அடைப்புகள் இருப்பதாக அறிந்து, உடனேயே சத்திர சிகிச்சை செய்தனர். அவருக்கும் உள்ளே நான்கு அடைப்புகள் இருந்தன. அவருடைய தீராத கவலை அவருக்கு இது எப்படி வந்தது என்பதே. அந்த அதிர்ச்சியில் இருந்து, அவருக்கு இது எப்படி வந்தது என்னும் அந்த அதிர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாகவே மீண்டு வந்து கொண்டிருக்கின்றார். மிகவும் நெருக்கமான இன்னொருவர். அவரை ஒரு பூரணமான மனிதன் என்றே சொல்லவேண்டும். பூரணத்திற்கும் ஒரு நாள் நெஞ்சுவலி ஏற்பட்டது. பூரணம் நம்பவே இல்லை. அவர் தமிழ்ச்சினிமா அதிகமாக பார்க்கின்றவரும் கூட. அதனால் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கை வேறு யாருடையதோ, தன்னுடைய பெயரை தவறுதலாகப் போட்டு விட்டார்கள் என்று அடம்பிடித்தார். அதையே எனக்கும் சொன்னார். மருத்துவர்கள் ஆங்கிலேயர்கள், இந்தச் சினிமாக் கதையை பொருட்படுத்தாமல், ஆளைப் படுக்க வைத்து வெட்டி ஒட்டினார்கள். 'எனக்கும் இது வந்து விட்டதோ..............' என்ற அதிர்ச்சி பெரிய தாக்கத்தை உண்டாக்குகின்றது போல. பூச்சியத்துக்கும் வரும், பூரணத்துக்கும் வரும் என்று இருந்தால், அடைப்புகள் வந்த பின் வரப் போகின்ற அதிர்ச்சியை குறைக்கலாம். 'எல்லாமே முடிந்து விட்டது........' என்று ஒரேயடியாக ஒதுங்கி வாழவும் தேவையில்லை என்று நினைக்கின்றேன். மீண்டு வந்துவிடலாம். ஒரு தடவை இந்தியா போயிருந்த போது என்னுடன் ஊரில் வகுப்பில் படித்த ஒருவர் வந்து கதைத்துக் கொண்டிருந்தார். திரும்பி எப்போது போகின்றீர்கள் என்று கேட்டார். அவருக்கு பதில் சொல்லும் முன்பு சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை எதேச்சையாகப் பார்த்தேன். நீங்கள் வெளிநாடுகளில் நேரத்துடன் போட்டி போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றார் அவர். அவர் சொன்னதும் சரியே என்று தோன்றியது. அல்லாவிட்டால் நான் ஏன் அந்தக் கடிகாரத்தைப் பார்த்திருக்கவேண்டும். ஆனால் சில மாதங்களில் அவர் மாரடைப்பால் இறந்து போனார் என்ற செய்தி கிடைத்தது. மிகவும் கவலையாகப் போனது. இவை என்னவென்று இன்றும் புரியவில்லை. அண்ணனுக்கு இந்த ஆறுதல் வார்த்தைகள் தேவையில்லை. அவர் தான் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லுகின்றார். சிகிச்சையின் முன் தலைமை சத்திர சிகிச்சை நிபுணர் சிலவற்றை சாதாரணமாக, கதையோடு கதையாக சொல்வது போல சொல்லியிருக்கின்றார். சத்திரசிகிச்சையின் முன் சுவாசப்பைகளை செயலிழக்க செய்வோம், அவை சிகிச்சையின் பின் மீண்டும் செயல்படும் என்று கண்டிப்பாகச் சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கின்றார். இதையே தான் இதயத்துக்கும் சொல்லியிருக்கின்றார். ஆனால் அந்த நிபுணர் இவற்றை சொன்ன விதம் அரவமற்றது, தீணடாதது. இவற்றை தெளிவாக தனித்தனியாக நிற்பாட்டி நிற்பாட்டிச் சொன்னால், உங்களின் சிகிச்சையும் நீங்களும் என்று விட்டுவிட்டு ஓடுபவர்களும் இருப்பார்கள். 'அலையும் நீரே........' என்பார்கள். அதாவது வாழ்க்கையில் எல்லாமே அதே வாழ்க்கை தான், அலை கூட அதே நீர் தான் என்பது போல. இப்படி சில தத்துவத்துங்களுடன் தத்துப்பித்தென்று இருந்தாலும், அந்த தலைமை சத்திர சிகிச்சை நிபுணரின் கடைசி நேர வார்த்தைகள் இடையிடயே நினைவில் வந்து துணுக்குற வைக்கின்றன. என்றோ ஒரு நாள் எனக்கு மூன்று அடைப்புகள் இருப்பதாக அவர்கள் சொல்லக்கூடும். 'நான்காகக் கூட இருக்கும்..................' என்று நானும் ஒன்றை கதையோடு கதையாக அந்த நிபுணர்களுக்கு சொல்லுவதாக இருக்கின்றேன்.
  10. 👍........... அந்தச் செய்தியுடன் ரவிகரன் என்னும் பெயரும் ஞாபகத்தில் இருக்கின்றது, ஏராளன். நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கவேண்டும்.................... இதைப் போன்ற செய்திகளும், விளம்பரங்களும் உண்டாக்கும் உணர்வு நீங்கள் சொல்லியிருப்பதே.........👍.
  11. நான் இருக்கும் தென் கலிஃபோர்னியாவில் கடந்த பத்து வருடங்களில் நடந்த எம்மவர்களின் திருமணங்களில் மணமக்கள் இருவரும் தமிழர்களாக இருந்த ஒரு திருமணம் கூட நடக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லியிருந்தார். உண்மை பொய் தெரியவில்லை, ஆனால் எனக்கு தெரிந்த சில திருமணங்கள் மாற்று வழிகளிலேயே நடந்திருக்கின்றன. தாயகத்தில் இன்று இப்படி நடக்கின்றது என்றவுடன் எங்களில் பலர் அங்கலாய்க்கின்றார்கள் போல. உண்மையில் தாயகத்தில் இப்படி அதிகமாக நடக்கின்றது என்பதற்கு தரவுகள் ஏதாவது இருக்கின்றதா தெரியவில்லை. ஒருவரின் அபிப்பிராயமாகக் கூட இருக்கலாம். 'திருமதி. பெரேரா' என்னும் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது. இஸுரு சாமர சோமவீர எழுதியது. தமிழ் மொழிபெயர்ப்பு அகழ் இதழில் வந்தது. @satan எழுதியிருந்த 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பதை அங்கே பார்க்கலாம். ஆனால் இந்த சிறுகதை சொல்ல வந்த விடயம் அதுவல்ல................... https://akazhonline.com/?p=2817
  12. இலங்கையில் இனப் பிரச்சனை நாட்டையே இரண்டாக்கும் முன் இருந்த காலத்தில், வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே சாதியப் பாகுபாடுகள் உச்சத்தில் இருந்தது. அன்றைய நாட்களில் சில தமிழ் வியாபாரிகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் வியாபாரங்களும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும் மிகவும் அதிகமாக இருந்த காலகட்டம் அது. ஆனாலும் அன்று சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே திருமண உறவு மிகக் குறைவாக இருந்தது. காவல்துறை தலைவர் நடேசன் போன்ற ஓரிருவரே அப்படிச் செய்ததாக தெரிந்திருந்தது. போராட்டம் தீவிரமாக இருந்த காலம் வேறு. முற்று முழுதான சந்தேகமே இரண்டு பக்கங்களிலும் இருந்தது. இனப் பாகுபாட்டை மீறி எந்த விதமான உறவுகளையும் ஏற்படுத்தும் ஒரு சாதகமான நிலை இருக்கவில்லை. மிகவும் சிலவே நடந்தன. இன்றைய போக்கு மாறி இருந்தால், அதற்கான பிரதான காரணம் வடக்கு மக்களின் பரம்பலே பிரதான காரணமாக இருக்கவேண்டும். வடக்கிலிருந்து வெளியேறிய மக்கள் நாட்டின் வேறு பகுதிகளில் நிரந்தரமாக , முக்கியமாக கொழும்பு போன்ற இடங்கள், வாழ ஆரம்பித்துவிட்டனர். அங்கு அவர்கள் வேறு இன மக்களுடன் அதிக இணக்கத்துடன், முன்னருடன் ஒப்பிடும் போது, இருக்கின்றார்கள் போல. இது இன்று உலகின் பல பெரு நகரங்களிலும் காணும் ஒரு நடைமுறையே. சென்னையில் கூட அவர்களின் மிகவும் இறுக்கமான சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி புதிய உறவுகள் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணமோ மூவினங்களும் ஒரே அளவில் வாழும் ஒரு பிரதேசமாக மாறிவிட்டது. காலப்போக்கில் இன மற்றும் வேறு அடையாளங்களை தாண்டிய உறவுகள் அங்கே அதிகமாவது தவிர்க்க முடியாத ஒன்றே.
  13. சில வருடங்களின் முன், டென்மார்க்கிலிருந்து இதே போல ஒரு செய்தி வந்திருந்தது. 'விமான ஓட்டியான முதல் ஈழத்து தமிழ் பெண்...........' என்பது போன்ற ஒரு தலைப்புடன். அந்தப் பெண்ணின் தந்தை தெரிந்தவர், ஊரில் ஆசிரியராக இருந்தவர். அவர் ஒன்றோ இரண்டு முழு நீள சினிமா படங்களும் எடுத்திருந்தார். ஒரு காலத்தில் ஊரில் நாடகங்கள் எழுதி இயக்கி நடித்தவர். சில காலமாக அவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. பின்னர் எந்த செய்தியும் வரவில்லை/தெரியவில்லை. அதற்கு சில வருடங்களின் முன் பிரித்தானியாவில் தனது மகன் விமான ஓட்டியாக இருப்பதாக ஒருவர் சொன்னார். அமெரிக்கா கூட வந்து போவதாகச் சொன்னார். ஆனாலும் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. இங்கு நான் இருக்கும் அதே ஊரில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர் விமான ஓட்டியாக இருக்கின்றார். பெரிதாக பழக்கம் இல்லை. எங்காவது கண்டால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே. பல வருடங்களின் முன் இங்கு இருக்கும் ஒரு சிறிய கல்லூரியில் ஒரு தமிழ் அரசியல்வாதியின் மகன் வந்து இந்த துறையில் படித்துக் கொண்டிருந்தார். முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை. தினக்குரலோ அல்லது வேறு ஏதோ ஒரு பத்திரிகையில் பெரிதாக படங்களுடன் செய்தி வந்திருந்தது. ஒரு பெரிய விளம்பரம் போன்றே அது தெரிந்தது. அந்தக் கல்லூரி, படிப்பு எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிது இல்லை, ஆனாலும் எதிர்கால அரசியலுக்காக செய்கின்றார்கள் போல என்று நினைத்தேன். அவர் இன்னமும் ஒரு தேர்தலிலும் நிற்கவில்லை போல.
  14. கடன் என்பது பலவீனமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும் இல்லை. அதுவே ஒரு நாட்டின் பலமாகக் கூட இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வட்டி மற்றும் முதல் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதிலேயே கடன் ஒரு நாட்டுக்கு சுமை ஆகின்றதா அல்லது அதன் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுகின்றதா என்று தீர்மானிக்க முடியும். தனிநபர் சராசரி வருமானமும், முழு நாட்டின் செல்வத்தின் பரம்பல் விகிதங்களும் மக்களின் வருமானத்தை ஓரளவு சரியாகக் குறிக்கும். வருமானமும், வாழ்க்கை தரமும் நேர் விகிதமானதாக இருக்க வேண்டும் என்றில்லை, உதாரணம்: அமெரிக்கா. அதே நேரத்தில் இந்தியா போன்ற ஒரு தேசம் எவ்வளவு சமச்சீர் அற்றது என்று அறிந்து கொள்ள இந்தக் குறியீடுகள் உதவியாக இருக்கின்றன.
  15. மிக்க நன்றி. நீங்கள் சொன்ன பின் இந்த திரியில் இருந்த என்னுடைய முதல் பதிவை திருத்தி அஞ்சலியையும் சேர்த்துள்ளேன்................🙏.
  16. மஹா குழுமத்தை இந்த கணக்குகளும், தொகைகளும் பாதிப்பதே இல்லை, வசீ. மிகவும் அடிப்படையான சில தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாதிப்புகள் நேரடியாக அங்கு தாக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரலாம். ஆனால் இன்று அவர்கள் வெற்றி பெற்று விட்ட, அவர்களின் அமெரிக்காவை மீண்டும் கொண்டு வந்து விட்ட ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள். மற்றைய அமெரிக்கர்களின் நிலை, அதிகமாக மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளில் இருக்கும் மக்கள், ஒரு நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியபடியே இருக்கின்றது. புதிய முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு மூன்றரை வருடங்கள் மட்டுமே என்றும் நம்புகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டு, அதனால் ஒரு சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிதாக கல்லூரிப் படிப்புகளை முடித்தவர்கள். இந்த வகையினர் கொஞ்சம் அவநம்பிக்கையுடனேயே இன்று இருக்கின்றனர். இதற்கு செயற்கை நுண்ணறிவால் உண்டாகிக் கொண்டிருக்கும் தொழில்துறைச் சுனாமியும் ஒரு பிரதான காரணம்.
  17. விசுகு ஐயா 'சினிமாவுக்குப் போன சித்தாளு' என்னும் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய குறுநாவலை வாசித்திருக்கின்றீர்களா என்று தெரியவில்லை. இந்தக் கதையில் வரும் பல சம்பவங்கள் இன்றும் பொருந்துபவை மற்றும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உண்டாக்குபவை. அந்தக் கதையில் எம்ஜிஆர் இருக்கின்றார், ஆனால் நேரடியாக அல்ல, ஆனாலும் அது எம்ஜிஆர் தான் என்று வாசிப்பவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும். எம்ஜிஆர் சுத்தமாகவே ஆண்மையற்றவர் என்று சுட்டும் வசனங்கள் அந்தக் கதையில் உண்டு. நான் இதை வாசித்த பின், எம்ஜிஆருக்கு எந்த வகையிலாவது வாரிசுகள் உண்டா என்ற கேள்வி உண்டானது. ஆனாலும் இப்படி எழுதியதற்காக ஜெயகாந்தனை எம்ஜிஆர் எதுவும் செய்யவேயில்லை. அவர் ஜெயகாந்தனை ஒதுக்கக்கூட இல்லை. இந்தக் கதையின் பின்னும், 'இலக்கியவாதிகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்..............' என்று அவர் ஜெயகாந்தனைப் பற்றி மிகவும் உயர்வானதாகவே சொன்னதாகச் சொல்லுகின்றார்கள்.
  18. இந்த விடயத்தில் சரோஜா சாவித்திரி போல்ராஜும், ஜேவிபி கட்சியினரும் நடந்து கொண்ட விதம் மோசமானதே. அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போய்விட்டது...........................😒.
  19. 👍.................. அருள்நிதியின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு, மு க குடும்பத்தில் இவர் யார் என்று தேடி நீங்கள் சொல்லியிருக்கும் தகவலை பார்த்திருக்கின்றேன். அதே போலவே சமீபத்தில் முரசொலி செல்வம் மறைந்த பொழுது அவர் பற்றிய செய்திகள் பிரசுரமாகியிருந்தன. பெரிய ஒரு குடும்பமே................
  20. மோடியை நுள்ளிப் பார்க்கிறதை தலை ஒரு வேலையாக வைச்சிருக்குது போல............🤣. நான் முதலில் தலை சொல்லியிருந்த தகவலைத்தான் பார்த்தேன். தலை ஏன் இப்ப இதை சொல்லுகின்றது என்று பார்த்தால்.................... மோடி உலகமே வியந்தது என்று ஒரு பேச்சோட வாறார்...........😜.
  21. மு க முத்து அவர்களுக்கு என் அஞ்சலிகள். தமிழ்நாட்டு அரசியலில் சாதாரண ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவரே சம்பாதிக்கும் காலத்தில், மு க முத்துவிற்கு ஏற்பட்ட நிலையை நம்புவது கடினமாக இருக்கின்றது. அழகிரி ஒரு பக்க தமிழ்நாட்டில், ஸ்டாலின் இன்னொரு பக்க தமிழ்நாட்டில், சகோதரிகளின் கணவர்கள் உயர் பதவிகளில், அவர்களின் பிள்ளைகள் மத்திய அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்று ஒரு குடும்ப சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய கருணாநிதியாலே முத்துவை என்ன செய்தும் வழிப்படுத்த முடியாமல் போனது ஆச்சரியம் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.