Everything posted by பிழம்பு
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்!
கோட்டபய, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் - கம்மன்பில (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அசாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடளிக்க பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழுத்தம் பிரயோகித்ததாக குறிப்பிடுமாறு சாய்ந்தமருது பொலிஸார் அசாத் மௌலானாவின் மனைவிக்கு ஏன் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அரச சக்தி என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கோட்டபய, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் - கம்மன்பில | Virakesari.lk
-
ஶ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வழித் தோன்றல்களினால் கண்டியில் விசேட நிகழ்வு
02 Feb, 2025 | 05:12 PM கண்டி இராச்சியத்தின் இறுதி அரசனான ஶ்ரீ விக்ரம இராஜசிங்கனின் 193 ஆவது நினைவு தினம் அவரது வழித் தோன்றல்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கண்டியில் நினைவு கூறப்பட்டது. இந்த நிகழ்வு கண்டியிலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஶ்ரீ நாத தேவாலய வளாகத்தில் சமய நிகழ்வுகள் நடை பெற்றன. இவ்வைபவத்தில் அரசனின் மனைவியான தங்கம்மா அரசியின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு பூஜைகளையும் மேற்கொண்டனர். அதனை அடுத்து ஶ்ரீ தலதா மாளிகையை அடுத்துள்ள இராஜமாளிகைக்கும் சென்று ஶ்ரீ விக்கரம இராஜசிங்கனின் உருவச்சிலை மற்றும் புகைப்படங்களையும் பார்வையிட்டனர். இராஜசிங்க மன்னனின் உறவினர்களின் ஒருவர் எனக் கூறப்படும் கண்டியைச் சேர்ந்த அருள் செல்வராஜ் இது பற்றித் தெரிவிக்கையில், வருடா வருடம் தமது உறவினர்கள் மேற்படி நினைவேந்தல் மற்றும் சமய நிகழ்வுகளை மேற்கொள்வதாகக் கூறினார். மேற்படி ஶ்ரீ விக்ரம இராஜசிங்கனது அரச மாளிகையை புனரமைத்துத் தந்த அமெரிக்க அரசிற்கும் அதன் தூதுவர் ஜூலி சங்கிற்கும் நன்றி தெரிவித்தார். ஶ்ரீ விக்ரம இராஜசிங்க மன்னனின் வழித் தோன்றல்களினால் கண்டியில் விசேட நிகழ்வு | Virakesari.lk
-
அமெரிக்கா வரி கட்டுப்பாடுகளை விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும்? - ரணில் கேள்வி
(லியோ நிரோஷ தர்ஷன்) தூய்மையான அரசியல் என்று கூறினாலும், அரசாங்கத்தின் செயல்களும் நடவடிக்கைகளும் தூய்மையானதாக இல்லை என்பது கொள்கலன் விடயத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி கட்டுப்பாடுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இலங்கைக்கும் விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு நேற்று கொழும்பு - 7 அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மக்கள் நிதியை மோசடி செய்தவர்களை கைது செய்வதற்கு யாரும் எதிர்ப்ப தெரிவிக்க போவதில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கல் நோக்குடன் அரசாங்கம் செயல்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் போது அரசாங்கம் முன்வைத்த திட்டங்கள், வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. அதற்கான ஆரம்ப நிலை முன்னெடுப்புகள் காணப்பட வில்லை. தொலைநோக்குடன் சிந்திக்காது பொறுப்பற்ற வகையில் அரசாங்கம் செயல்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்காது. சீனாவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி கட்டுப்பாடுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இலங்கைக்கும் விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும். அவ்வாறானதொரு நிலை வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் இன்னும் சிந்திக்க கூட இல்லை. தூய்மையான அரசியல் என்று கூறினாலும், அரசாங்கத்தின் செயல்களும் நடவடிக்கைகளும் தூய்மையானதாக இல்லை. 300க்கும் மேற்பட்ட கொள்கலன்களை அரசாங்கம் சட்டவிரோதமாக விடுவித்துள்ளது. இது குறிதத பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் அரச தரப்பு வாயடைத்து போகிறது. எனவே கொள்கலன் விடயத்தில் சந்தேகங்கள் உள்ளன. நாடு பொருளாதார ரீதியில் சவால்களை எதிர் கொள்கையில் இரண்டு ஆண்டுகள் கடுமையாக போராடி நிலைமையை சீராக்கினோம். அதன் பின்னர் பொருளாதார ரீதியிலான ஸ்திரதன்மையை நோக்கி நாட்டை கொண்டு செல்ல செயல்பட்டோம். ஆனால் நாட்டில் இன்று ஸ்தீரதன்மை ஒன்று உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும் . வரவு - செலவு திட்டத்தை அரசாங்கம் மார்ச் மாத்தில் நிறைவேற்ற உள்ளது. அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு வரும். இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் வழிகாட்டல் வரவு - செலவு திட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை இதன் போது ஆராய்வார்கள். 2024 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட தொகையை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும். இந்த நிதியுடன் வரவு - செலவு திட்டம் எவ்வாறு பயணிக்கும் என்பதை அவர்கள் தீவிரமாக ஆராய்வார்கள் என குறிப்பிட்டார். அமெரிக்கா வரி கட்டுப்பாடுகளை விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும்? - ரணில் கேள்வி | Virakesari.lk
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
- திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் - வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன்
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என வடமாகாண ஆளுநர் நா, வேதநாயகன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸவிகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர். காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்திவருகின்றார். அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திஸ்ஸ விகாரையை அகற்றி , அந்த காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்த போது, ஆளுநர் குறித்த காணி உரிமையாளர்கள் மாற்று காணியை கேட்டுள்ளதாக குறிப்பிட்டார். குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் , அதனைதெளிவு படுத்தும் முகமாக ஆளுநர் குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் - வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் | Virakesari.lk- கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம் ; கடற்தொழில் அமைச்சர்
02 Feb, 2025 | 05:31 PM இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை. உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் அமைச்சரிடம் முறையிட்டனர். மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் பங்கேற்று இருந்தார். கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம் ; கடற்தொழில் அமைச்சர் | Virakesari.lk- யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு
சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளா்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு | Virakesari.lk- மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய திட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். செல்லவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிப்போம். அதன்படி சட்டரீதியாக வௌியேற வேண்டி வரும். இப்போதே சென்று விட்டால் கௌரமாக இருக்கும். இனி அவரே யோசிக்க வேண்டும்" என்றார். R Tamilmirror Online || மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய திட்டம்- சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களுக்கு சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென நீரியல்வளத்துறை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சட்டவிரோத தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக சட்டவிரோத தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை சட்டவிரோதமாக பிடித்துவருவதுடன், பாவனைக்கு உதவாதென கூறி பெரும் தொகையான சிறிய மீன்களை கடலில் வீசி விட்டு வருவதாக அறியமுடிகிறது. கடந்த வருடமும் வடமராட்சி கிழக்கில் சுருக்குவலை தலை தூக்கிய போதும் சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளர்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை. இந்த புதிய அரசாங்கத்தில் வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில் தலை தூக்கியுள்ளதால் மீன்பிடி அமைச்சர் விரைந்து இவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கட்டைக்காடு மீனவர்கள் | Virakesari.lk- புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
01 Feb, 2025 | 06:57 PM அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அகதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக கூடிய நாட்டிற்கு மீள செல்லுமாறு நிர்ப்பந்திக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தடுத்துவைக்கபட்டுள்ள ரோகிங்யா அகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு நபர் பலவந்தமாக காணாமலாக்கப்படும் ஆபத்தை எதிர்கொள்வார் என கருதுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளபட்சத்தில் அந்த நபரை வேறு நாட்டிற்கு நாடு கடத்தவோமுடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் ரோகிங்யாமக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது குறித்த எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது இலங்கை அரசாங்கம்பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல் குறி;த்த ஆபத்தை கருத்தில் கொள்ளவேண்டும் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு | Virakesari.lk- தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
யாழ்ப்பாணம் 35 நிமிடம் யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அதன் போது , தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு , அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு , அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார். இருந்த போதிலும் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் கட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில் சட்டவிரோதமான முறையில் , ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இந் நல்லிணக்கத்திற்கோ , மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார். (ப) தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
பொலிஸார் மக்களின் மனதை வெல்ல வேண்டும் இல்லையேல் போதையை ஒழிக்க முடியாது - யாழில் ஜனாதிபதி அனுர தெரிவிப்பு! பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் போதை பொருளை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நிலையில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். .சட்டவிரோத போதை பொருள் பாவனயை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொலிஸார் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும். இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும்போது முறையிடுவோர் தொடர்பான தகவல்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு செல்கிறது என்றார். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில்ஹந்துநெந்தி வவுனியாவில் ஒரு கிராமத்துக்கு சென்றேன் அங்கு பொலிஸாரை மக்கள் திட்டி தீர்த்தார்கள். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள் இவ்வாறு மக்கள் மத்தியில் பொலிஸார் தொடர்பில் மாற்றுக் கருத்து பரவலாக உள்ளது என தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த வட பிராந்திய பொலிஸ்மா அதிபர்தனபால சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் அடிப்படையில் பல கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. கீழ்நிலை அதிகாரிகள் தவறவிட்டால் உயர் அதிகாரிகளிடம் முறையிடங்கள் அல்லது பொலிஸ் விசேட தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தியே தகவல்களை கூற முடியும் முறைப்பாட்டாளர் தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை தகவல்களை துல்லியமாக வழங்கினால் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். (ப) பொலிஸார் மக்களின் மனதை வெல்ல வேண்டும் இல்லையேல் போதையை ஒழிக்க முடியாது - யாழில் ஜனாதிபதி அனுர தெரிவிப்பு!- பெரும்பான்மையை விஞ்சும் முஸ்லிம்களின் சனத்தொகை என்பது விஞ்ஞான பூர்வமானதல்ல - நூல்வெளியீட்டு விழாவில் ஹக்கீம் தெரிவிப்பு
31 Jan, 2025 | 09:20 AM (ஆர்.ராம்) நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொகையை முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் விஞ்சிப்போய்விடும் என்பது விஞ்ஞான பூர்வமாக உறுதியான விடயமல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய 'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்-முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்' ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது ஏற்புரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பேர்ட்ரம் ரசல் எனும் தத்துவாசிரியர் 'இந்த உலகம் தீவிரவாதிகளாலும், முட்டாள்களாலும் நிறைந்ததாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் தம்மைப் பற்றி மிகத்திடகாத்திரமான உணர்வுடன் இருக்கின்றார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் வாழ்கின்றார்கள்' என்று கூறுகின்றார். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. சமூகத்தில் தீவிரவாத சிந்தனைகளுடன், முட்டாள்தனமான சிந்தனையுடன் இருப்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் தங்களுடைய விடயத்தில் உறுதியாக இருக்கையில் நாங்கள் தான் ஒவ்வொரு விடயத்தினையும் அச்சத்துடன், பீதியுடனும் பார்கின்றோம். இந்த மனோநிலையில் இருந்து நாங்கள் மாறவில்லை என்றால் எமது அடுத்தசந்ததியினருக்கான சமூகக் கட்டமைப்பினை அமைப்பதில் நாங்கள் தவறிப்போவோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் நடைபெற்ற உலக ஊழல் தினத்தில் ஆற்றிய உரையின்போது, மிகக் காரசாரமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அணுகுமுறையை கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்படுகின்ற குற்றப்பத்திரிகைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அதுபற்றிய உரையாடல் நெடியது. எவ்வாறாயினும் சட்டத்தின் ஆட்சி சம்பந்தமான விடயத்தில் இழைக்கப்பட்டுள்ள தவறுகள் திருத்தப்படுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். முஸ்லிம்களாக நாம் தற்பாதுகாப்பு நிலைப்பாட்டை எடுக்கும் காரணத்தினால் பல்வேறு சந்தேகங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதில் தவறியிருக்கின்றோம். முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் இந்த நாட்டின் பெரும்பான்மையை விஞ்சிப்போய்விடும் என்றொரு அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்வதற்காக சனத்தொகைவளர்ச்சி விஞ்ஞானம் சம்பந்தமான பேராசிரியர் திசாநாயக்கவுடன் நீண்ட கலந்துரையாடல்களைச் செய்து அதன்மூலமாகப் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் விடயங்களை முன்வைத்துள்ளேன். இந்த விடயங்கள் சமூக மயப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு பெரும்பான்மை மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார். பெரும்பான்மையை விஞ்சும் முஸ்லிம்களின் சனத்தொகை என்பது விஞ்ஞான பூர்வமானதல்ல - நூல்வெளியீட்டு விழாவில் ஹக்கீம் தெரிவிப்பு | Virakesari.lk- சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்பு ; சமூக ஊடகங்கள் பாவனையே காரணம் - இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரி
31 Jan, 2025 | 09:59 AM சமூக ஊடகங்கள் பாவனை சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட சிறுவர் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் வைத்திய கலாநிதி கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி கடந்த ஆண்டில் 270 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உயிர்மாய்ப்புக்களை தடுக்க எடுக்க வேண்டிய முதலாவது நடவடிக்கை சமூக ஊடகங்களை ஏதேனும் ஒரு வழியில் தடை செய்வதாகும். ஒரு நாடாக என்ன செய்ய முடியும் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம், மேலும் ஓரிரு வாரங்களில் மேலதிக விவரங்களை வெளியிடுவோம் என்று நம்புகிறோம். சமூக ஊடகங்கள் சிறுவர்களுக்கு சாதகமாக மற்றும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் அதே வேளையில், அதன் பயன்பாட்டை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்பு ; சமூக ஊடகங்கள் பாவனையே காரணம் - இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரி | Virakesari.lk- யாழில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்! - ஜனாதிபதியிடம் யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் சுட்டிக்காட்டு
31 Jan, 2025 | 02:05 PM யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. எனவே, இந்த ரயில் கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும். யாழில் நேர அட்டவணைக்கேற்ப, 38 புதிய பஸ்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் வீதிக்கு 23 பேருந்துகளும் பருத்தித்துறை வீதிக்கு 10 பேருந்துகளும் காரைநகர் வீதிக்கு 5 பேருந்துகளும் தேவையாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 6 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன. எனவே, வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞை விளக்குகளை அமைக்க வேண்டும் என்றார். யாழில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்! - ஜனாதிபதியிடம் யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் சுட்டிக்காட்டு | Virakesari.lk- ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைகளை சமர்ப்பித்தார் கஜேந்திரகுமார்
31 Jan, 2025 | 02:40 PM ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்வேறு கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார். 1. யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல் வேண்டும். 2. யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகள் அதிகளவான நோயாளர்களால் நிரம்பி வழிகிறது. பல விடுதிகளில் கட்டில்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது நோயாளர்கள் தரையிலும் இரவு முழுவதும் கதிரைகளில் அமர்ந்தவாறும் ஒரு கட்டிலில் இரண்டு நோயாளர்கள் என உறங்கவேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. நோயாளிகளைப் பராமரிப்பதற்காக உடனிருப்பவர்கள் பல மணிநேரமாக நின்ற நிலையிலேயே பராமரிப்பு பணிகளில் ஈடுபடவேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும். 3. யாழ். பண்ணையில் அமைந்துள்ள மார்பக சிகிச்சை (காச நோய்) பிரிவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் பிரிவை அந்த இடத்தில் மீளவும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மயிலிட்டியில் இயங்கிய காசநோய் வைத்தியசாலை தற்காலிகமாக கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இயங்குகிறது. ஆனாலும் அங்கு அந்த அலகுக்கான ஆளணிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை. உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்பட வேண்டும். பண்ணையில் உள்ள மார்பக சிகிச்சை நிலையத்துக்கென நிரந்தரமான எக்ஸ்ரே றேடியோ கிறாபர் (x-ray radiographer) இல்லை. அவர்களை நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும். (தற்போது திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும்) இவ்வைத்தியசாலையில் பரிசோதனைக்காக பெறப்படும் சளி மாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டிகள் பெரும் பற்றாக்குறையாக உள்ளது. பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சோதனை செய்யப்பட வேண்டும். ஆனால், உரிய கருவிகள் இன்மையால் ஒரு வருடத்துக்கும் மேலாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகிறது. இந்நிலை சீர் செய்யப்பட வேண்டும். 4. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களை மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும். 5. யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் படகுகளை பாதுகாப்பதற்கான கல்லணைகள் அமைத்தல்: பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம், இன்பர்சிட்டி கடற்கரை, சக்கோட்டை கடற்கரை, திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டைமானாறு கடற்கரை, பலாலி கடற்கரை, சேந்தான்குளம் கடற்கரை, மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்து நிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு கல்லணைகள் அமைக்கப்பட வேண்டும். படகுகள் நுழையும் பகுதிகளை ஆழமாக்குதல்: மூர்க்கம் தொடக்கம் மாதகல் வரை படகுகள் தொழிலுக்காக இறக்கப்படும் நுழைவு வான்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும். கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்: வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையிலேயே குவிக்கப்பட்டுள்ளது. அந்த மண் மீண்டும் மீண்டும் இறங்குதுறைக்குச் சென்று படகுகள் நிறுத்தும் பகுதியை மூடுவதனால் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே, அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். 6. இந்திய மீனவர்களால் வலைகள், படகுகள், சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். 7. கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். 8. யாழ். குடாநாட்டில் சொந்த காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமல் உள்ளது, அத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும். 9. தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானம் அகற்றப்பட வேண்டும். தனியார் காணிகள் அனைத்தும் பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். 10. மயிலிட்டியில் விடுவிக்கப்படாத மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் உட்பட யாழ். குடாநாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் மற்றும் பொதுக் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். வசாவிளான் சந்தியிலிருந்து பலாலி சந்தி வரையான வீதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட வேண்டும். 11. யாழ். நகர அபிவிருத்திக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் உலக வங்கி வழங்கிய நிதி உதவியில் வடிகாலமைப்பில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். 12. யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் தகுதிபெற்ற திட்டமிடலாளருக்குரிய ஆளணி உருவாக்கப்பட்டு, நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமைக்குமான பிரதான வடிகாலமைப்பு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். 13. வீதி விளக்குகள் பொருத்துவது தொடர்பில் மினசார சபைக்கும் பிரதேச சபைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். 14. நெடுந்தீவுக்கான கடல்வழிப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் படகுச் சேவைகள் கடற்படையினரிடமிருந்து மீளப்பெற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட வேண்டும். 15. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இயக்கப்பட்டுவந்த குறிகாட்டுவான் - நைனாதீவுக்கான போக்குவரத்துப் பாதை பழுதடைந்த நிலையில் ஒரு வருடமாகத் திருத்தப்படாமல் உள்ளது. அது உடனடியாக திருத்தப்பட வேண்டும். நைனாதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இறங்குதுறை பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக அங்கு போக்குவரத்து இடம்பெறுவதில்லை. அந்த இறங்குதுறை திருத்தி அமைக்கப்பட வேண்டும். 16. குறிகாட்டுவான் இறங்குதுறை உடனடியாக விஸ்தரிக்கப்பட வேண்டும். குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து புங்குடுதீவு நோக்கிச் செல்லும் வீதி சுமார் 5 கிலோ மீற்றர் குன்றுங்குழியுமாக உள்ளது. உடனடியாக திருத்தப்பட வேண்டும். 17. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தர மாகாண கல்விப் பணிப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 18. வடக்கு மாகாணத்தில் ளுடுநுயுளு அதிகாரிகளுக்கான பற்றாக்குறை 50 வீதத்துக்கு மேல் காணப்படுகிறது. இவ்வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் பிரமாணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 19. வடக்கு மாகாணத்தில் 3555 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 20. வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆளணி வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் இவ்வாறான கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்தார். ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைகளை சமர்ப்பித்தார் கஜேந்திரகுமார் | Virakesari.lk- மக்களுக்கான ஜனாதிபதியால் எமக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லையா? - வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதி
Published By: Digital Desk 7 31 Jan, 2025 | 03:44 PM யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி எங்களுக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாது சென்றுள்ளார். வாக்குக்காக மட்டும் எங்களை நாடும் அரசியல்வாதி போல ஜனாதிபதியும் நடந்து கொண்டுள்ளமை எமக்கு வேதனை அளிக்கிறது என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் கொண்டிருந்தார். அதன் போது , யாழ் . மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்காக வருகை தந்த போது , மாவட்ட செயலகத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகள் , வேலை கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தங்களிடம் வருகை தந்து தமது கோரிக்கைகளை கேட்டறிந்து கொள்வர் எனும் நம்பிக்கையில் பட்டதாரிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காவல் இருந்தனர். கூட்டம் நிறைவடைந்ததும் , மாவட்ட செயலகத்தில் இருந்து ஜனாதிபதி மாற்று பாதை ஒன்றின் ஊடாக சென்று இருந்தார். ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கும் போது , நாம் கேட்பது எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமா ? எத்தனை பேருக்கு எப்போது வேலைவாய்ப்பினை வழங்குவீர்கள் என்றே. ஆனால் இந்த அரசாங்கம் எமக்கு இதுவரையில் எந்த பதில் வழங்கவில்லை மக்கள் விரும்பும் ஜனாதிபதி என்றால் எங்களை வந்து சந்தித்து இருக்க வேண்டும். நங்கள் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து அமைதி வழியில் தான் போராடுகிறோம். எங்களுக்காக ஐந்து நிமிடங்களை ஒதுக்க முடியவில்லையா ? எங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வழங்க வேண்டும் என்றே கோருகிறோம். பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு ஆசிரியரே நாலைந்து பாடங்களை கற்பிக்க வேண்டிய நிலைகளில் உள்ளனர். ஆனால் அந்த பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய எமக்கு வேலை வாய்ப்புகளை வழங்கலாம். எங்களை கண்டு அரசாங்கம் பயப்பட தேவையில்லை. நாங்கள் ஆயுதங்களுடன் போராடவில்லை. எமது போராட்டங்களுக்கு நீதிமன்ற தடையுத்தரவுகளை பெற தேவையில்லை. எமக்கு வேலை வாய்ப்புகளை வழங்குங்கள் வடக்கு மாத்திரமல்ல கிழக்கிலும் வேலை கோரி பட்டதாரிகள் போராடி வருகின்றனர். வடக்கு கிழக்கு இளையோருக்கு அரசாங்கம் வேலை வாய்ப்புக்களை வழங்க முன் வர வேண்டும். அதேவேளை வடக்கு கிழக்கு மக்களிடமும் நாம் அன்பான கோரிக்கையை முன் வைக்கிறோம். எங்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள் என மேலும் தெரிவித்தார். அதேவேளை வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் தமக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க கோரி , ஜனாதிபதியை நேரில் சந்தித்து மகஜர் கொடுக்க முனைந்த போது , தம்மை ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்காது , ஜனாதிபதியின் செயலாளர் ஒருவரே தம்மிடம் மகஜரை வாங்கியதாகவும் , தாமும் வெளியே வரும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தமது கோரிக்கையை முன் வைக்க மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த போதிலும் , ஜனாதிபதி தம்மை சந்திக்காது சென்றார் என கவலை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மக்களுக்கான ஜனாதிபதியால் எமக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லையா? - வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதி | Virakesari.lk- நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
தெற்கில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துவோம். நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப எமது அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுகிறது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறையில் இன்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கு மக்கள் கடந்த இரண்டு பிரதான தேர்தல்களின் போதும் தேசிய மக்கள் சக்திக்கு அளித்த வாக்குகள் வெறுமனே ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான புள்ளடி மாத்திரம் அல்ல. மாறாக அவை இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு வழங்கிய வாக்குகளாகும். இலங்கையில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு தெற்கு, மேற்கு, மலையகம் என பேதமின்றி அனைத்து மக்களின் ஆதரவுடன் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என பிளவுபடுத்தியே ஆட்சி செய்தார்கள். ஆனால், நாம் மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு பதிலாக அவர்களை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். இதற்கு முன்னர் நாட்டில் மேல் மட்டத்தில் இருந்த ஒரு சில குடும்பங்களிடமே அதிகாரம் இருந்தது. ஆனால், இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலின்போது தீர்க்கமான முடிவை எடுத்திருந்தனர். உயர் மட்டத்தில் இருந்து சாதாரண மக்களிடத்தில் அதிகாரத்தை கைம்மாற்றினார்கள். எனவே, இந்த மக்களுடனேயே எமக்கு பிணைப்பு உள்ளது. கட்டம் கட்டமாக இந்த நாட்டை நாம் மீட்டெடுப்போம். அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்கியுள்ளோம். நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த வருடத்துக்குள் அதற்கான நடவடிக்கை எடுப்போம். வடக்கின் காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு இங்கு முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம். தொழில்வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். அரச திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பொலிஸ் திணைக்களங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. 2 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளோம். தமிழ் பேசும் இளைஞர்களும் இதில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம். இந்த பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். அதேபோன்று காணி பிரச்சினை உள்ளது. மக்களின் காணிகள் மக்களிடத்திலேயே வழங்கப்பட வேண்டும். எனவே, காணி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்போம். கிராமப்புறங்களில் உள்ள வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்குவோம். குடிநீர் வசதிகளை பெற்றுக்கொடுப்போம். எமது மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம். மீனவர் பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடினோம். இலங்கை கடற்படைக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளோம். கட்டம் கட்டமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். எனவே, எமக்கு சிறிது காலம் தாருங்கள். நிச்சயம் தீர்வு காண்போம். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்போம். வடக்கில் தெங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். எனவே, நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் தோற்றம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாத்தை கையில் எடுக்கும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம். இனிமேலும் முரண்பட்டுக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு எமது அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுகிறது. மக்களிடத்தில் இனவாதம் மதவாதம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகளிடம் இந்த பண்புகள் உள்ளன. தற்போது தெற்கில் இனவாத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த நாட்டை புதிய யுகத்தை நோக்கி அழைத்துச் செல்வோம். இந்த மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வோம். தண்டனை பெற்றுக் கொடுப்போம். கடந்த தேர்தலின்போது பிரிந்து செயற்பட்டவர்கள் மீண்டும் ஒன்றிணைய முயற்சிக்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு ஒன்றாக கூடியுள்ளனர். ஒருபக்கம் மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர். மற்றைய பக்கம் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை ஏமாற்றியவர். திருடர்கள் ஒன்றிணைந்தாலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரையில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது. நாம் முன்னெடுத்துள்ள விசாரணைகளை அவர்களால் நிறுத்த முடியாது. மேல் மட்டத்தில் உள்ளவர்கள் இணைந்தாலும் மக்கள் எம்முடன் இருக்கிறார்கள். நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார். நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி | Virakesari.lk- இலங்கையர்கள் நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றனர் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்
நாட்டில் அரக்கு மற்றும் பியர் ஆகிய மதுபானங்களுக்கு நாளாந்தம் 690 மில்லியன் ரூபாவை மக்கள் செலவு செய்கின்றனர் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83 சதவீதமான தடுக்கக்கூடிய இறப்புகள் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மது மற்றும் புகையிலை பழங்கங்களே தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணிகளாகும். 2022 ஆம் ஆண்டில், மதுபானம் ஊடாக வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாய் ஆகும். மதுவால் ஏற்பட்ட இழப்பு 237 பில்லியன் ரூபாய் ஆகும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் நாளாந்தம் 40 முதல் 50 பேர் மது பழக்கத்தால் மரணமடைகின்றனர். இதனால் வருடாந்தம் 15,000 - 20,000 பேர் மரணமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதால் பல சிறுவர்கள் தந்தையை இழக்கின்றார்கள். மது அருந்துவதற்கான தற்போதைய போக்கு, பெரும்பாலான நிகழ்வுகள் பெரிய கூட்டங்களின் போது நிகழ்கின்றன என்பதைக் காட்டுகிறது. இதுவே மது பழக்கத்தை ஆரம்பிக்க முக்கி பங்கு வகிப்பதோடு, செல்வாக்கு செலுத்துக்கின்றது. மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி செராம், 2022 ஆம் ஆண்டு நாளாந்தம் புகையிலை பயன்பாட்டுக்கு 510 மில்லியன் ரூபாவை மக்கள் செலவு செய்துள்ளார்கள். 2019 ஆம் ஆண்டு புகையிலை ஊடாக வரி வருமானம் 92.9 பில்லியன் ரூபாய் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இலங்கை அரசாங்கம் வருடாந்தம் புகையிலை நுகர்வு தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் செலவுகளுக்கு 214 பில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. இலங்கையில் மது அருந்து பழக்கம் குறித்த மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நடத்திய பொதுக் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான வயது வந்தவர்கள் மதுபானங்களின் விலைகளை 73 சதவீதாமாக அதிகரிக்கவும், 75 சதவீதாமாக மது வரிவிதிக்கவும் ஆதரவாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றனர் - மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் | Virakesari.lk- கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழிமூலம் 19 பேரும் தமிழ் மொழிமூலம் 42 பேருக்குமாக மொத்தம் 250 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர, வெளிவிகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர் எம் பி எஸ் ரத்நாயக்க ,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் | Virakesari.lk- வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
Published By: Vishnu 29 Jan, 2025 | 10:54 PM இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார். 1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் இன்று இரவு காலமானார். இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Virakesari.lk மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்! இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலினை யாழ்ப்பாணம் போதனை மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் திரு மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ப) மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்!- இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்த்தங்களுக்கு வழிவகுக்கிறது ; அமைச்சர் சந்திரசேகரன்
29 Jan, 2025 | 10:48 AM இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தொரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இறைமையுள்ள நாடு அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள். இந் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) காங்கேசன் துறைக் கடற்பரப்பில் இந்தியா மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுக்குள் கடற்படையினர் ஏறியுள்ளனர். இவ்வாறு ஏறிய மீனவர்களை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய மீனவர்கள் தயாரானபோது கடற்படையினர் தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம் இன்று நேற்று உருவானது விடயம் அல்லை பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சனைக்கு எமது ஆட்சியில் தீர்வை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனெனில் மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. நாங்கள் பலமுறை இந்திய மீனவர்களை தயவாகக் கேட்டுள்ளோம் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள் எமது மீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று. அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர். நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாது உள்ளது என கூறுகிறார்கள். எமது மீனவ மக்களை இந்திய அத்துமீறிய மீனவர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக் காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது. எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு. கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன இவை கடந்த காலங்களிலும் இடம் பெற்றுள்ளன. ஆகவே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்த்தங்களுக்கு வழிவகுக்கிறது ; அமைச்சர் சந்திரசேகரன் | Virakesari.lk- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழில் போராட்டம் 29 Jan, 2025 | 04:30 PM வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் இன்று (29) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இதன்போது பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன. “வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும்”, “படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம்”, “பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரயோசனம்” என்றவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ். நகரினூடாக மாவட்ட செயலகத்துக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தமை தொடர்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவரை நாளைய தினம் வியாழக்கிழமை (30) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை பொலிஸாரால் வழங்கப்பட்டது. அதனையடுத்து, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரின் போராட்டம் நண்பகல் வேளையில் நிறைவடைந்தது. வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழில் போராட்டம் | Virakesari.lk- யோஷிதவிடமிருந்து 4 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன ; இனி ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரமே - பாதுகாப்பு செயலாளர்
29 Jan, 2025 | 08:26 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தற்பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு புலனாய்வு அறிக்கை அவசியமாகும். அந்த வகையில் யோஷித ராஜபக்ஷவிடமிருந்து 4 துப்பாக்கிகள் ஏற்கனவே மீளப் பெறப்பட்டுள்ளதோடு, எஞ்சியுள்ள இரு துப்பாக்கிளையும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கடந்த ஆண்டு கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய 1697 அனுமதிப்பத்திரமுள்ள துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. 1550 பேர் துப்பாக்கிளை வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளனர். கணக்காய்வின் பின்னர் 1368 துப்பாக்கிகள் மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 182 துப்பாக்கிகள் இன்னும் கையளிக்கப்படவில்லை. துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்ட சிலர் வெளிநாடுகளில் தொழில் புரிவதால் அவர்கள் அவர்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இவர்கள் தவிர இந்த கணக்காய்விற்கு ஒத்துழைப்பினை வழங்காதவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் தரப்பிலிருந்து ஆலோசனைப் பெற்று சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிள் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அதனை உறுதியாகக் கூறவும் முடியாது. சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு அதனை ஒருவருக்கு ஒன்று என வரையறுத்துள்ளது. அதுவும் புலனாய்வு பிரிவின் ஊடாக குறிப்பிட்டவொரு நபருக்கு துப்பாக்கி அவசியம் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே துப்பாக்கி வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களிடமிருந்து உடனடியாக அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யோஷித ராஜபக்ஷவுக்கு 6 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் இரண்டு இன்னும் அவர் வசமே காணப்படுகிறது. அவற்றில் ஒன்றை மீள ஒப்படைக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஒரு துப்பாக்கியையும் தொடர்ந்தும் வழங்குவதா இல்லையா என்பதை மதிப்பீடொன்றின் பின்னரே தீர்மானிப்போம். பாதாள உலகக் குழுவினருக்கிடையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். யோஷிதவிடமிருந்து 4 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன ; இனி ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரமே - பாதுகாப்பு செயலாளர் | Virakesari.lk - திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் - வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.