Everything posted by பிழம்பு
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா 20 Jan, 2025 | 03:01 PM யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட வேளையில், அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், தலைமையிலான அரசாங்கத்திடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே குறித்த கலாசார மையத்தினை இந்தியா எமக்கு அளித்திருக்கின்றது. யாழ். மாநகர சபைக்கு சொந்தமான காணியில் அதனை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் அனைத்தும் எம்மாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததன. இவ்வாறான பின்னணியிலேயே குறித்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது உலகப் பொதுமறையான திருக்குறளை எமக்களித்த திருவள்ளுவர் எமது மதிப்பிற்குரியவர். அவரையும் அவருடைய ஆளுமையையும் போற்றிப் புகழ்வதில் தமிழர்கள் யாருமே பின்நிற்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை எமது மக்கள் ஆர்வத்துடனும் பெருமிதத்துடன் பிதிஷ்டை செய்து பராமரித்து வருகின்றனர். எனினும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற நியாயமான சந்தேகத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான சந்தேகங்கள், இந்த நாட்டிலே புரையோடிப் போய் இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான தேசிய நல்லிணக்க முயற்சிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையில், இதனுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையின் தற்போதைய புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் போன்றோர் பெயர் மாற்றப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கலாசார மையத்தின் பெயர் மாற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk
-
யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் - அமைச்சர் சந்திரசேகரன்
20 Jan, 2025 | 03:23 PM யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் - பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் நானும் அதிதியாக கலந்துகொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின்போது தான் அவதானித்தேன். திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றமல்ல. யாழ்ப்பாணத்துக்கே உரித்தான பெயர்களான யாழ். கலாசார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாசார மையம் என காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல் திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். சிலவேளை தெரியாமல் சில தவறுகள் இடம்பெற்றிருக்கக்கூடும். குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் நான் இன்னும் கலந்துரையாடவில்லை. நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் - அமைச்சர் சந்திரசேகரன் | Virakesari.lk
-
ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க
20 Jan, 2025 | 03:44 PM போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். இந்த பயணத்தின்போது, பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து பிமல் ரத்நாயக்க பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இவர் ஊடகங்களுக்கு அறிவிக்காது, ரயில் பயணத்தின்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்காணிக்க நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார். இதன்போது, அடிக்கடி இடம்பெறும் ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, ரயில்களில் ஏறுவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு, பாதுகாப்பற்ற பாழடைந்த ரயிலை தொடர்ந்து பயன்படுத்தல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களிடம் இருந்து கேட்டறிந்துள்ளார். ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க | Virakesari.lk
-
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தயார் - நாமல் ராஜபக்ஷ
20 Jan, 2025 | 07:04 PM (எம்.மனோசித்ரா) இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமைகளாகும். எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற நாம் தயாராகவே உள்ளோம். காரணம் இது எமது சொந்த குடியிருப்பு அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். உத்தியோகபூர்வ இல்லம் என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளவையாகும். எவ்வாறிருப்பினும் அந்த இல்லத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு யாருக்காவது விற்க வேண்டிய தேவை இருந்தால், அதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். காரணம் அந்த உத்தியோகபூர்வ இல்லம் பலவந்தமாக பெற்றுக் கொண்டதல்ல. அரசியலமைப்பு ரீதியாக கிடைக்கப் பெற்றதாகும். இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட நியதியுமல்ல. உலகில் எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறையே காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி, சகல முன்னாள் அரச உத்தியோகத்தர்களுக்கும் இது பொறுந்தும். முன்னாள் அரச தலைவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் பழிவாங்கப்படுகின்றனரா இல்லையா என்பது ஜனாதிபதி அநுரவின் உரைகளிலும், செயற்பாடுகளிலும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல. அது உரிமையாகும். இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் பல நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். எனவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எது எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார் என்றார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தயார் - நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk
-
மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்
மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி Freelancer / 2025 ஜனவரி 16 , பி.ப. 08:25 - 0 - 101 மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாட்டுவண்டி போட்டி தொடர்பில் மன்னாரில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் முறுகல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கமைய, மன்னார் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 42 மற்றும் 61 வயதுடைய நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று உயிரிழந்தனர். இதன்போது நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 2022ஆம் ஆண்டு மன்னார் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜுலை எட்டாம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 2023 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் என்ற போதைப் பொருள் வர்த்தகர் என்றும், அவரது தரப்பினரே இந்த கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். குறித்த நபரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R Tamilmirror Online || மன்னார் துப்பாக்கிச்சூடு - அதிர வைக்கும் பின்னணி
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! 16 Jan, 2025 | 04:02 PM யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) அதிகாலை மிதவை ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இந்த மிதவையில் புத்தர் சிலைகள், தேங்காய்கள் முதலான பொருட்கள் காணப்பட்டன. பர்மாவில் இறந்த பிக்குகளை (தேரர்களை) நினைவுகூரும் முகமாக ஆரம்பகாலம் முதல் சடங்கு முறையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிதக்கும் வீடுகளை தயார் செய்து அதற்குள் நினைவுகூரும் தேரர்களின் சிற்பங்களை / படங்களை வைத்து அவர்களுக்கு படையலிட்டு கடலில் விடும் வழக்கம் இருக்கிறது. அந்த மிதக்கும் வீடு எந்த கரையை அடைகின்றதோ அங்கே அவர்களது ஆன்மா சென்றடைவதாக ஒரு ஐதீகம் பர்மிய பௌத்தர்களிடையே காணப்படுகிறது. அந்த வகையில், நாகர் கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடானது பிக்கு ஒருவரை நினைவுகூரும் முகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பிக்குவை நினைவுகூரும் சடங்குகளை செய்து மிதக்கும் வீட்டினை அமைத்து கடலில் விட்டவர்களின் விபரங்களும் பர்மிய மொழியில் அந்த மிதவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்! | Virakesari.lk
-
சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் - யாழ். மீனவர் அமைப்பு சவால்!
Published By: Digital Desk 3 16 Jan, 2025 | 05:01 PM முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார். இன்றையதினம் சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது கடற்தொழில் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கதைப்பதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு இருந்த போதே இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறாமல் இங்கு வந்தபின்னர், முதலமைச்சருடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு தான் கேட்டுள்ளதாகவும், மீனவர்களின் பிரச்சினைகளை கதைக்கப்போவதாகவும் கூறுகின்றார். இதெல்லாம் பகட்டுக்கும், எதிர்காலத்தில் மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் கூறுகின்றார். இந்தியாவில் தேர்தல் நெருங்குகின்றது. தேர்தல் காலத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தர மாட்டார்கள். இயலும் என்றால் நீங்கள் நேரத்தினை பெற்று நமது மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசித் தீருங்கள், அதற்கு பின்னர் நாங்கள் உங்களை வரவேற்கின்றோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கதைப்பதற்கு, கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடமும் கோரிக்கை முன்வைத்தோம் இதன்போது அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்தார். இருப்பினும் எமக்கான நேரம் வழங்கப்படவில்லை. அப்படி எமக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் எமது பிரச்சினைகளை நேரடியாகவே எடுத்துக்கூறி இருப்போம் என்றார். சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் - யாழ். மீனவர் அமைப்பு சவால்! | Virakesari.lk
-
ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு: அமெரிக்க காங்கிரசில்தீர்மானம்
அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை கூட்டம் பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் கூடியது. அப்போது “அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு செய்து” தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஒரு அமெரிக்கவாழ் தமிழன் என்ற முறையில் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தமிழ் மொழி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் விதமாக இந்த தீர்மானத்தை கொண்டு வருவதில் பெருமிதம் அடைகிறேன். அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள் கலாச்சாரங்கள் கருத்துகள் மற்றும் மரபுகளின் ஒரு அங்கம். மேலும் இந்த தீர்மானம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் தமிழர்களின் வளமான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் நம்ப முடியாத சாதனைகள் மீது ஔி வீசும் என மனதார நம்புகிறேன்” என்று தெரிவித்தார். இந்த தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளன. ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு: அமெரிக்க காங்கிரசில்தீர்மானம் | Virakesari.lk
-
Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன?
சென்னை - இறந்த ஆமைகள் Join Our Channel Share சென்னையின் கடற்கரைப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர் தொடங்கி நெம்மிலி குப்பம், ஈச்சம்பாக்கம் எனத் தொடர்ந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக TREE அறக்கட்டளையின் நிறுவனர் சுப்ரஜா தாரணியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஆமைகள் கடலுக்கு மிக முக்கியமான உற்பத்திக்காரணி. கடலில் இருக்கும் பாசைகளை உண்டு, அது அந்த இடத்தை சுத்தம் செய்துவிடும். அதனால், மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். மீன் குஞ்சுகளை உண்ணும் ஜெல்லி மீன்களை ஆமைகள் உண்ணும். அதனால் மீன் வளர்ச்சியும், உற்பத்தி அதிகரிக்கும். மண்ணில் இருக்கும் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். 10/10 1/10 6/10 7/10 8/10 9/10 10/10 1/10 1000 ஆமைகளில்... ஆனால், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறப்பது தொடர்கதையாகதான் இருக்கிறது. இந்த வருடம் எண்ணிக்கை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலின் முதல் அட்டவணையில், கடல் ஆமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஆமைகள் கடலில் வாழ்ந்தாலும், கடலில் எத்தனையாயிரம் தொலைவுக்கு நீந்தித் திரிந்தாலும், எந்த இடத்தில் பிறந்து தவழ்ந்ததோ, முட்டையிடும்போது அந்த இடத்துக்கு வந்துவிடும். டிசம்பர் முதல் ஜூன் வரை சென்னை, ஆந்திரா, ஒடிசா கடற்கரைகளில் பல ஆயிரம் ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். ஆயிரம் குஞ்சுகள் பிறந்தால் அதில் முட்டையிடும் பருவத்துக்கு ஒரே ஒரு ஆமைதான் வரும். மீதமுள்ள 999 ஆமைகள், வலைகளில் சிக்கியோ, சுறாவுக்கு இரையாகியோ இறந்துவிடும். முட்டையிடும் பருவம் முட்டையிடும் பருவம் வந்ததும் அது முட்டையிடும் கடற்கரைப் பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து தங்கிவிடும். இரவு நேரத்தில் கரைக்கு வந்து, 65 முதல் 160 முட்டைகள் வரை இடும். 15 நாள் இடைவெளியில ரெண்டுமுறை வந்து இந்த முட்டைகளை இட்டு கடலுக்குள் சென்றுவிடும். ஆமைகள் 40 - 45 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேல்பகுதிக்கு வந்து சுவாசிக்கும். அந்த நேரங்களில் மீன்பிடி விசைப்படகுகள் மோதியோ, வலையில் சிக்கியோ ஆமைகள் இறந்துபோகின்றன. அதன்காரணமாகவே, ஆமைகள் மேலே வந்து சுவாசிக்க முடியாமலும் இறக்கின்றன. சுப்ரஜா தாரணி ஆமைகளுக்கு மிக முக்கியமான வழித்தடம் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 8 கடல் மைல்களுக்குப் பிறகுதான் விசைப்படகுகள் கில்நெட்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும். ஆனால், மழைக்காலம் முடிந்தவுடன் கடலின் சில மைல்களிலேயே இறால் போன்றவைகள் அதிகம் கிடைக்கும் என கில்நெட்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் ஆமைகள் இதில் சிக்கி இறக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உலகிலேயே மூன்று இடங்களில்தான் லட்சக்கணக்கான ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். அதில் ஒடிஷாவில் இருக்கும் ரிஷிகுல்யா, கஹிர்மதா எனும் இரண்டு கடற்கரைகள் மிக முக்கியமானவை. இந்த இடங்களில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் முட்டியிடும் ஆமைகள், உணவுத்தேடி நம்முடைய மன்னார்வளைகுடா பகுதிக்கு வரும். இங்கிருந்து அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வட தமிழகம் வழியாக ஒடிசாவுக்கு நீந்திச் செல்லும். இதுதான் அந்த ஆமைகளுக்கு மிக முக்கியமான வழித்தடம். இந்த சமயங்களில்தான் அதிகமான ஆமைகள் படகுகளிலும், வலைகளிலும் சிக்கி இறக்கின்றன. காசிமேடு தொடங்கி, மெரினா, பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்க எனக் கோவளம் வரை இறந்து கரை ஒதுங்குகின்றன. தற்போது எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி நீலாங்கரைக் முதல் கோவளம் வரை 168 ஆமைகள் இறந்திருக்கின்றன. செம்மஞ்சேரி முதல் ஆலம்பரை வரை இருக்கும் பகுதிகளில் 123 ஆமைகள் இறந்தநிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்கும் விதமாக கடந்த 8-ம் தேதியே அரசுத் துறைகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். மீனவர்கள், கடலோரக் காவல்படை, வனக்காவலர்கள், கடலோரக் காவல் குழுமம் ஆகியோரை அழைத்து, சீசன் தொடங்குகிறது என்பதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட நடத்தினோம். ஆனாலும், ஆமைகளின் இறப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசு இதில் தலையிட்டாலே தவிர, தீர்வு கிடைக்காது. ஒடிசாவில் இந்த சீசனில் கில்நெட் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடதக்கது." எனத் தெரிவித்திருக்கிறார்.. Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன? | Hundreds of turtles are washing up dead on the coast of Tamil Nadu - Vikatan
-
``பெண்களுக்கும் தமிழுக்கும் எதிரி பெரியார்!'' - சீமான் பரப்புவது பொய்ச் செய்தியா - `விடுதலை' சொல்வது உண்மையா..?
“உனக்கு காம இச்சை வந்தால் உன் தாயிடமோ, சகோதரிிடமோ, மகளிடமோ தீர்த்துக்கொள் என்று சொன்ன பெரியார், பெண் விடுதலையைப் பேசியவரா?’’, ’’தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார்.’’ - இப்படியெல்லாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை கடுமையாக விமர்சித்து பேசி இருப்பது, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. மாநிலம் முழுக்க போராட்டங்கள், காவல்நிலையங்களில் புகார்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு என பரபரப்புக் கிளம்பியுள்ளது. `பெரியார் சொல்லியதாக சீமான் சொல்வது வெறு அவதூறு மட்டுமே' என்று, திராவிடர் கழகம் மற்றும் பெரியாரிய கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். ``பெரியார் அப்படிச் சொல்லியிருந்தால், அதற்கான ஆதாரத்தை சீமான் கொடுக்க வேண்டும்’’ என்று அவர்கள் கேட்க, ``வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கி வைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடைமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன்” என்று பதில் கொடுத்துள்ளார் சீமான். பரப்பப்படும் செய்தி... உண்மையா, பொய்யா? பொதுவாகவே பெரியார் `அதைச் சொன்னார்... இதைச் சொன்னார்' என்று பல்லாண்டுகளாகவே பற்பல விஷயங்களும் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே அவையெல்லாம் பெரியார் சொன்னவை அல்ல என்கிற மறுப்புகளும் சுழலத்தான் செய்கின்றன. அப்படி, காமம் குறித்து சொன்னதாகப் பரப்பப்படும் மேலே குறிப்பிட்டுள்ள செய்தி, 2017-ம் ஆண்டிலிருந்தே சில குழுக்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதைக் குறிப்பிடும் ஒரு செய்தித் தாள் துண்டுச்சீட்டு, `விடுதலை ஏடு:11.5.1953’ என்று தேதியிட்டுள்ளது. இப்போது சீமானும் அதை மேற்கோள் காட்டி பேசியிருக்கும் நிலையில், குறிப்பிட்ட தேதியிட்ட விடுதலை நாளேட்டை நாம் ஆராய்ந்தோம். அன்றைய தினம் வெளியான, நான்கு பக்கங்களைக் கொண்ட விடுதலை நாளேட்டில், தென் சென்னை திராவிட கழக மாவட்ட மாநாடு பற்றிய செய்திதான் முதல் பக்க தலைப்புச் செய்தி. அதை தொடர்ந்து இன்னும் பல செய்திகள் இடம்பெற்றிருக்கும் அந்த நாளேட்டில், சுற்றலில் இருக்கும் செய்தி எதுவும் இடம்பெறவில்லை. ஆக, இந்தப் படம் உண்மை அல்ல. அது பெரியார் கருத்தல்ல... சனாதன கருத்து! இதுகுறித்து தந்தைப் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் கேட்டபோது, ``பெரியார் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி, ஒரு புராணக்கதை. பிரம்மா, தன் மகள் சரஸ்வதி யையே மணந்தவர். இந்த விஷயத்தைப் பற்றிய புராணக் கதையில்தான் `தாயென்ன, மகளென்ன...' எனப் பேசப்பட்டிருக்கிறது. இதைத்தான் பெரியார் மேற்கோள் காட்டி னாரே தவிர, இது அவருடைய கருத்தல்ல. 11.5.53 தேதியிட்ட `விடுதலை' நாளிதழில் பெரியார் இப்படி கூறியுள்ளதாக, இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல காலமாகக் கூறி வருகின்றனர். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அந்தக் குறிப்பிட்ட தேதியில் வெளியான விடுதலை நாளிதழை வெளி யிட்டு, அத்தனையும் பொய் என்று நிரூபித்துவிட்டோம். இப்போது, தங்கள் சீடன் சீமானை வைத்து அதே வேலையை செய்கிறது இந்துத்துவா’’ என்றார் கொளத்தூர் மணி காட்டமாக. `தமிழ், காட்டுமிராண்டி மொழி...' - இதனால்தான் சொன்னார் பெரியார்! `தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று குறிப்பிட்ட பெரியார் எப்படித் தமிழ் இனத்தின் தலைவராக முடியும்?’ என்று சீமான் கேட்டுள்ளது குறித்து, திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர், `விடுதலை’ ராஜேந்திரனிடம் கேட்டபோது, ``பெரியார் தமிழ் மொழியை அறிவியல் மொழியாக்க விரும்பினார். அதன் பொருட்டுதான் ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி’ என்கிற கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையின் முடிவில் பின் குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார். `நான் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கு தமிழறிஞர்கள் என் மீது கோபப்படுவார்கள். அதற்காகத்தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். கோபப்படுகிறவர்கள் பகுத்தறிவு மற்றும் சமூக சிந்தனை கொண்ட இலக்கியங்களை எழுதுவார்கள் என்றால், அதை நானே அச்சுக்கோத்து பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். பகுத்தறிவு சிந்தனை கொண்ட எழுத்துகள் நம் மொழியில் பிறக்க வேண்டும் என்கிற நோக்கோடுதான் பெரியார் அப்படி எழுதினாரே தவிர, தமிழை சிறுமைப்படுத்தும் நோக்கோடு அவர் எழுதவில்லை. உலகப்பொதுமறையான திருக்குறளுக்கு மாநாடு நடத்தியவர் பெரியார்தான். திருக்குறளை அனைவரும் சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்ளும்படியாக சிறிய பதிப்பை வெளியிட்டவரும் பெரியார்தான். அவர் தமிழ் எழுத்துத் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். சம்ஸ்கிருதத்தை நிராகரித்து தமிழ் மொழியில் உறுதியேற்றுக் கொண்டு நிகழ்த்தப்படும் சுயமரியாதைத் திருமணத்தை நடைமுறைப்படுத்தினார். அப்படிப்பட்டவரை தமிழுக்கு எதிரானவர் எனச் சொல்வது ஏற்புடையதல்ல'' என்று சொன்ன ராஜேந்திரன், ``பெரியாரின் நூல்களை யார் வேண்டு மானாலும் பதிப்பிக்கலாம் என்று நீதிமன்றத்தின் மூலமாக உத்தரவு பெற்றுள்ளோம். அதைத் தொடர்ந்து பலரும் பதிப்பித்து வருகின்றனர். இணையதளங்களிலும் அவருடைய நூல்கள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, நாட்டுடமை ஆக்குங்கள்... ஆதாரம் தருகிறேன் என் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்றும் விளக்கினார். பெரியார் முரண்களின் மூட்டை! `சீமான் சொன்னது தவறான செய்தி என்பது விடுதலை நாளிதழ் ஆவணங்களை பரிசீலித்தபோது தெரிகிறதே... பெரியாரின் நூல்களை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்கிறபோது, நாட்டுடமை என்கிற கேள்விக்கே இடமில்லையே...' என்பது உள்ளிட்ட கேள்விகளை, சீமானின் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் கேட்டபோது, ``பெரியார் காமம் குறித்து அப்படித்தான் கூறினார் என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறோம். எங்கள் முன்னோர்கள் அதைப் படித்து விட்டு செவி வழியில் சொன்னதைக் கொண்டுதான் பேசுகிறோம். ஆதாரம் வேண்டுமென்றால் விடுதலை நாளிதழை அரசு உடைமையாக்கி பெரியார் வாழ்ந்த காலம் வரை வெளியான அனைத்து இதழ்களையும் வெளியிட வேண்டும். அப்படி செய்தால் எல்லா இதழ்களையும் அலசி ஆராயலாம். அப்படி ஆராய்ந்த பிறகு இல்லையென்றால், அதைப் பற்றிப் பேசலாம். தமிழ்ச் சமூகத்துக்குப் பங்காற்றியவர்களில் பெரியாரும் ஒருவர் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், `பெரியார் மட்டுமே எல்லாவற்றையும் செய்தார். இது பெரியார் மண்’ என்று சொல்லி மற்றவர்களது பங்களிப்பையும், போராட்டத்தையும், உழைப்பையும் மூடி மறைத்துவிட்டு பெரியாரை முழு முதல் முகமாக நிறுத்திய பிம்ப அரசியலைத்தான் எதிர்க்கிறோம். பெரியார் முரண்களின் மூட்டை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தே இயங்கியவர். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற் போல தனது கருத்தை மாற்றிக் கொண்டவர். அவரது இரட்டை நிலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக பல உதாரணங்களைச் சொல்ல முடியும். உலகப்பொதுமறை தந்த தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கிறது. பெரியாரை தமிழின் தந்தையாக்கி அதைச் சுருக்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம்'' என்கிறார் இடும்பாவனம் கார்த்திக். விஜய் வருகையால் மாறும் சீமானின் அரசியல் கணக்குகள்! இந்த விஷயங்கள் குறித்துபேசும் தமிழக அரசியல் நோக்கர்கள் சிலர், ``பெரியார் மீதான எதிர்ப்பை பொதுவாக இந்துத்துவா அமைப்பினர்தான் முன்வைப்பார்கள். இப்போது, சாதிய இந்துக்களில் பலரும் அம்பேத்கரியர்களில் ஒரு சிலரும்கூட பெரியாரை மறுக்கின்றனர். இப்போது, தமிழ்நாட்டில் கருத்தியல் ரீதியிலான முரண்பாடுகள் பல வகைகளில் பெருகியிருக்கின்றன. பிறப்பின் அடிப்படையில் பெரியார் ஒரு தமிழரல்ல என்பதாலேயே அவர் முன்னிறுத்துகிற திராவிடம் என்கிற கருத்தின் மீது ஏற்பில்லாதவர்கள், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அவரை எதிர்க்கின்றனர். தமிழக ஓட்டு அரசியல் சூழலில் இந்துத்துவ எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு என எல்லாவற்றையும் திராவிடக் கட்சிகள் பேசி வருகின்றன. இதற்கு எதிர்க்கோட்டில் பா.ஜ.க போன்ற இந்துத்துவக் கட்சிகள், மத அரசியலை தீவிரமாக முன்னெடுக்கின்றன. இப்படியான அரசியல் சூழலில் தனக்கான தனியொரு பாதையை கட்டமைக்க வேண்டுமென்றால், தமிழ்த் தேசியம் மட்டும்தான் தேவை என்பதை சீமான் அரசியலுக்கு வரும்போதே உணர்ந்து விட்டார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சீமான் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்த வேளையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இளம்தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜய்யின் வருகை சீமான் தரப்பை சேதத்துக்குள்ளாக்குமோ என்கிற பேச்சுகள் எழுந்துள்ளன. இச்சூழலில்தான், பெரியார் எதிர்ப்பை சீமான் இன்னும் அழுத்தமாக முன் வைக்க வேண்டிய தேவை உண்டாகியுள்ளது. விஜய் கட்சியும், கொள்கை வழிகாட்டியாக பெரியாரை அறிவித்திருக்க, பெரியார் எதிர்ப்பை அக்கட்சியின் மீதும் திருப்புவது சீமானின் நோக்கமாக உள்ளது'' என்கின்றனர். ``பெரியார், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?'' என்று கேட்டால், ``நிச்சயமாக இல்லை. அது கருத்தியல் ரீதியிலான முரணாக இல்லாமல், பெரிதளவு தனிப்பட்ட சீண்டலாகவே இருப்பதுதான் பிரச்னை. நியாயமான விமர்சனம் வையுங்கள், அதுகுறித்து உரையாடலாம். ஆனால், கீழ்த்தரமான அவதூறுகளைப் பரப்பக் கூடாது’' என்கின்றனர் திராவிட கழகத்தினர். இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னைப் பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறார் பெரியார். தத்துவங்களுக்கு ஏது மரணம்?! Vikatan Plus - 19 January 2025 - ``பெண்களுக்கும் தமிழுக்கும் எதிரி பெரியார்!'' - சீமான் பரப்புவது பொய்ச் செய்தியா... - Vikatan
-
கேம் சேஞ்சர் Review: ஷங்கரின் ‘தெலுங்கு மசாலா’ அஸ்திரம் எடுபட்டதா?
கேம் சேஞ்சர் Review: ஷங்கரின் ‘தெலுங்கு மசாலா’ அஸ்திரம் எடுபட்டதா? 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஷங்கர், முதல் முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. ‘இந்தியன் 2’ கொடுத்த மிகப் பெரிய தோல்வியால் வெற்றியின் கட்டாயத்தில் ஷங்கரும், ‘ஆர்ஆர்ஆர்’ பெற்ற உலகளாவிய கவனத்துக்குப் பிறகு ‘சோலோ’வாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராம் சரணும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார்களா என்பதை பார்ப்போம். எதிலும் நேர்மை, எங்கும் துணிச்சல் என்று செயல்படும் ஓர் அரசு அதிகாரியும், எங்கும் எதிலும் ஊழல் என்று செயல்படும் ஓர் அரசியல்வாதியும் மோதிக் கொண்டால் என்ன ஆகும் என்பதே ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஒருவரிக் கதை. ஐபிஎஸ் ஆக இருந்து ஐஏஎஸ் அதிகாரியாகி இருக்கும் ராம் நந்தன் (ராம்சரண்) விசாகப்பட்டினத்துக்கு மாவட்ட ஆட்சியராக வருகிறார். வந்த உடனே தனது அதிரடியான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான மோப்பிதேவி (எஸ்.ஜே.சூர்யா) உடன் ஆட்சியர் ராம் நந்தனுக்கு மோதலை ஏற்படுத்துகிறது. தனது தந்தை ஒப்பிலி சத்யமூர்த்தி (ஸ்ரீகாந்த்) இறந்த பிறகு முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மோப்பிதேவிக்கு ஹீரோவால் பல சிக்கல்கள் எழுகின்றன. இருவருக்கும் இடையிலான இந்த எலி - பூனை விளையாட்டில் ஆட்டத்தை மாற்றியது யார் என்பதற்கு படத்தின் திரைக்கதை பதில் சொல்கிறது. தமிழ் சினிமா மட்டும் மட்டுமின்றி இந்திய சினிமாவையே தனது ‘முதல்வன்’ என்கிற அரசியல் படத்தால் திரும்பி பார்க்க வைத்த ஷங்கரிடமிருந்து மீண்டும் ஓர் அரசியல் படம் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தனது வழக்கமான டிரேக்மார்க் அம்சங்களுடன் ‘தெலுங்கு மசாலா’ என்ற புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். ஆனால், அது அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கைகொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பொதுவாகவே ஷங்கர் தனது படங்களில் பல்வேறு புதுமையான விஷயங்களை புகுத்தியிருப்பார். கதைக்கு தேவையே இல்லாத பிரம்மாண்ட செட் பாடல்களை தாண்டி, படத்தின் திரைக்கதை ஆடியன்ஸ் யூகிக்க முடியாத அளவுக்கு தனித்து நிற்கும். ஆனால் ‘கேம் சேஞ்சர்’ அப்படியான எந்த புதுமைகளும் இல்லாமல் எளிதில் யூகிக்க கூடிய தட்டையான திரைக்கதையுடன் நகர்கிறது. பாடல்களில் மட்டுமே ஷங்கரின் ‘சிக்னேச்சர்’ பாணியை பார்க்க முடிகிறது. எனினும், படம் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதல். அதே வழக்கமான ஹீரோ இன்ட்ரோ, அதே அறிமுகப் பாடல், அதே குடும்ப காட்சிகள் என்று தொடங்கும் முதல் பாதியில் ’பிளாஸ்டிக்’ தனமான காதல் காட்சிகளை தவிர எஸ்.ஜே.சூர்யா, ராம்சரண் தொடர்பான காட்சிகள் அடுத்தடுத்து நகரும்படியே எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இடைவேளைக்கு முந்தைய காட்சி அப்பட்டமான லாஜிக் மீறல் என்றாலும், அதை படமாக்கிய விதம் சிறப்பு. ஷங்கர் படங்களில் வரும் ‘ஷார்ப்’ வசனங்கள் இதில் மிஸ்ஸிங். நினைவில் வைத்துக் கொள்ளும்படி அவை எந்த இடத்திலும் ஈர்க்கவில்லை. படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் என்றால் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்கும், அதில் இடம்பெற்ற சுப்பண்ணா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும்தான். அதில் ஹீரோயிசத்தை குறைத்து தனது தேர்ந்த நடிப்பால் ராம்சரண் வெகுவாக கவர்கிறார். கிட்டத்தட்ட 25 நிமிடம் ஓடும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியே இரண்டாம் பாதியை பெரிதும் தூக்கி நிறுத்துகிறது. எனினும் அந்த ஃப்ளாஷ்பேக்குக்குப் பிறகு படம் மீண்டும் பக்கா தெலுங்கு மசாலா பாணிக்கு திரும்பி ஒருவழியாக முடிகிறது. ஓர் அரசு அதிகாரியின் ஆற்றல் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாத பல தகவல்கள் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன என்றாலும், ஐஏஎஸ் அதிகாரி ஒரே இரவில் மிகப் பெரிய பொறுப்புகளுக்குப் பாய்வது நிஜத்துக்கு அருகில் கூட வராத அப்பட்டமான லாஜிக் மீறல்கள் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளன. இது ஷங்கர் படம் தானா என்ற ஐயம் படம் முழுக்க எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த இடத்தில்தான் ஷங்கர் பெரிதும் சறுக்கியுள்ளதாக தோன்றுகிறது. படத்தின் பின்னணி இசையில் தமன் கவனம் ஈர்க்கிறார். பாடல்கள் ஓகே ரகம். இந்த இடத்தில் ஷங்கரின் ஆஸ்தான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்யாமல் இருக்கமுடியவில்லை. திருவின் கேமரா ஷங்கர் பட பிரம்மாண்டத்தை காட்ட தவறவில்லை. ஒவ்வொரு பிரேமிலும் படக்குழுவினரின் உழைப்பும், செலவும் தெரிகிறது. ஷங்கரின் முந்தைய படம் தந்த மிகப் பெரிய ஏமாற்றத்துடன் ஒப்பிடும்போது இப்படம் பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ‘ஷங்கர் படம்’ என்று இதுநாள் வரை அமைக்கப்பட்டிருந்த ஒரு இமேஜ் உடன் ஒப்பிட்டால் ‘கேம் சேஞ்சர்’ ஒரு சராசரி தெலுங்கு மசாலா படம் மட்டுமே! ஹீரோவாக ராம்சரண் கதாபாத்திரத்துக்கு நல்ல தேர்வு. இரண்டு விதமான கெட்-அப்களிலும் வித்தியாசம் காட்டி கவர்கிறார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் வரும் சுப்பண்ணா கதாபாத்திரம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தரும். பெரும்பாலான ஷங்கர் பட நாயகிகளைப் போலவே இதிலும் கியாராவுக்கு பாடல் காட்சிகளைத் தவிர பெரிய வேலை எதுவும் இல்லை. எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் முழு மேக்கப் உடன் வந்து செல்கிறார். அஞ்சலி தனது வேலை குறையின்றி செய்திருக்கிறார். வில்லன் கேரக்டர் என்றாலே அல்வா சாப்பிடுவது போல அமர்க்களப்படுத்தும் எஸ்.ஜே.சூர்யா இதிலும் ஸ்கோர் செய்கிறார். சுனில், வெண்ணெலா கிஷோர் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதோ முயற்சி செய்துள்ளனர். படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் என்றால் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்கும், அதில் இடம்பெற்ற சுப்பண்ணா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும்தான். அதில் ஹீரோயிசத்தை குறைத்து தனது தேர்ந்த நடிப்பால் ராம்சரண் வெகுவாக கவர்கிறார். கிட்டத்தட்ட 25 நிமிடம் ஓடும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியே இரண்டாம் பாதியை பெரிதும் தூக்கி நிறுத்துகிறது. எனினும் அந்த ஃப்ளாஷ்பேக்குக்குப் பிறகு படம் மீண்டும் பக்கா தெலுங்கு மசாலா பாணிக்கு திரும்பி ஒருவழியாக முடிகிறது. ஓர் அரசு அதிகாரியின் ஆற்றல் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாத பல தகவல்கள் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன என்றாலும், ஐஏஎஸ் அதிகாரி ஒரே இரவில் மிகப் பெரிய பொறுப்புகளுக்குப் பாய்வது நிஜத்துக்கு அருகில் கூட வராத அப்பட்டமான லாஜிக் மீறல்கள் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளன. இது ஷங்கர் படம் தானா என்ற ஐயம் படம் முழுக்க எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த இடத்தில்தான் ஷங்கர் பெரிதும் சறுக்கியுள்ளதாக தோன்றுகிறது. படத்தின் பின்னணி இசையில் தமன் கவனம் ஈர்க்கிறார். பாடல்கள் ஓகே ரகம். இந்த இடத்தில் ஷங்கரின் ஆஸ்தான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்யாமல் இருக்கமுடியவில்லை. திருவின் கேமரா ஷங்கர் பட பிரம்மாண்டத்தை காட்ட தவறவில்லை. ஒவ்வொரு பிரேமிலும் படக்குழுவினரின் உழைப்பும், செலவும் தெரிகிறது. ஷங்கரின் முந்தைய படம் தந்த மிகப் பெரிய ஏமாற்றத்துடன் ஒப்பிடும்போது இப்படம் பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ‘ஷங்கர் படம்’ என்று இதுநாள் வரை அமைக்கப்பட்டிருந்த ஒரு இமேஜ் உடன் ஒப்பிட்டால் ‘கேம் சேஞ்சர்’ ஒரு சராசரி தெலுங்கு மசாலா படம் மட்டுமே! கேம் சேஞ்சர் Review: ஷங்கரின் ‘தெலுங்கு மசாலா’ அஸ்திரம் எடுபட்டதா? | Game Changer Movie Review - hindutamil.in
-
ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம்
Published By: Vishnu 10 Jan, 2025 | 07:01 PM மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி வெள்ளிக்கிழமை (10) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது பிடிக்கப்பட்ட படங்கள். ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம் | Virakesari.lk
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் | கோப்புப் படம் திருச்சூர்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார். ADVERTISEMENT தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார். ‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன’, கிழக்கு சீமையிலே படத்தில் ‘கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’ உள்ளிட்ட பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார். சுமார் 60 ஆண்டுகள் இசை உலகை ஆட்சி செய்த அவர் தற்போது விடைபெற்றுள்ளார். மண்ணுலகை விட்டு அவர் விடைபெற்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும். பி.ஜெயச்சந்திரனின் திரைப் பயணம்: (2020-ல் பி.ஜி.எஸ்.மணியன் எழுதிய கட்டுரையில் இருந்து...) எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரை இசையில் சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது. இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன். 1944-ம் வருடம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ரவிபுரம் பகுதியில் பத்ராலயம் என்ற சிற்றூரில் ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் - பளியத்து சுபத்ரா குஞ்சம்மாள் தம்பதிக்கு இவர் மூன்றாம் மகனாகப் பிறந்தார். குடும்பம் இரிஞ்ஞாலக்குடாவுக்குக் குடிபெயர்ந்ததால் மாணவப் பருவம் இரிஞ்ஞாலக்குடாவிலேயே கழிந்தது. 1958-இல் மாநில இளைஞர் திருவிழாவில் பதினான்கு வயது ஜெயச்சந்திரன் சிறந்த இளம் மிருதங்கக் கலைஞராகச் சிறப்பிக்கப்பட்டார். அதே மேடையில் சிறந்த இளம் கர்நாடக இசைக் கலைஞர் விருது பெற்றவர் பதினெட்டு வயது வாலிபரான கே.ஜே.ஜேசுதாஸ். முதல் பாடல்: பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய ஜெயச்சந்திரனுக்குக் கிடைத்த பாராட்டுகளும் பரிசுகளும் அவருடைய இசை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தன. முதல் வாய்ப்பு இருபத்து மூன்றாம் வயதில் ‘உத்யோகஸ்தா’ என்ற மலையாளப் படத்தில் எம்.எஸ்.பாபுராஜ் இசையில் ‘அநுராக கானம் போலே’ என்ற பாடல். இவருடைய திறமையை மேலும் புடம்போட்டுத் தங்கமாக ஒளிரவைத்த பெருமை இசையமைப்பாளர் தேவராஜனையே சேரும். வசீகரக் குரலால் சேட்டன்களைக் கட்டிப்போட்ட ஜெயச்சந்திரனுக்கு மெல்லிசை மன்னர் இசை அமைத்த ‘பணி தீராத வீடு’ படத்தில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாடல், கேரள மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றுத் தந்தது. 1973-இல் சத்யா மூவிஸின் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் இதழே’ பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.எஸ். விஸ்வநாதன். “அந்த இணையற்ற கலைஞர் என் கிட்டே இருந்த திறமையை அழகா வெளியே கொண்டு வந்தார். சொல்லப்போனால் எனக்கு முதல் முதலாகக் கிடைச்ச அவார்டே ‘பணி தீராத வீடு’ படத்துலே அவர் இசையில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாட்டுக்குத்தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் ஜெயச்சந்திரன். 1976-ல் வெளிவந்த பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராமுடன் பாடிய ‘ஆடி வெள்ளி தேடி வந்த’, ‘வசந்த கால நதிகளிலே’ ஆகிய பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. மாஞ்சோலைக் கிளிதானோ... - புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் ‘அலைகள்’ படத்தில் ஜெயச்சந்திரன் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய கவியரசரின் ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ பாடலில் ஜெயச்சந்திரனின் குரலில் தென்படும் வசீகரம் மனத்தை வருடி சாந்தப்படுத்தும். 1975-ல் ‘பெண்படா’ என்ற மலையாளப்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைப்பாளர். இந்தப் படத்தில் ‘வெள்ளித் தேன்கிண்ணம் போல்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடினார். இளையராஜாவின் இசையில் முதல்முதலாக ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் பாடிய ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ பாடலும், ‘கிழக்கே போகும் ரயி’லின் ‘மாஞ்சோலைக் கிளிதானோ’ பாடலும் பெரு வெற்றிபெற்று முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனைச் சேர்த்தன. ‘ஒருதலை ராகம்’ படத்தில் ‘கடவுள் வாழும் கோவிலிலே,’ ‘இரயில் பயணங்களில்’ படத்தில் ‘வசந்த காலங்கள்’ ஆகிய பாடல்கள் டி.ராஜேந்தரின் இசையில் ஜெயச்சந்திரன் தொடுத்த வெற்றிக்கோலங்கள். கே. பாக்யராஜின் சிறந்த திரைக்கதை அமைப்புக்கான படங்களில் முதலிடத்தில் இருக்கும் ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ பாடலை எஸ். ஜானகியுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடி அசத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். ‘ராஜ’ கீதங்கள் - ‘கடல் மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்’ என்று எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் ஜெயச்சந்திரன். பாடல்களுக்காவே பெரிய வெற்றிபெற்ற ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே ஜெயச்சந்திரனைத்தான் பாடவைத்தார் இளையராஜா. ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ , ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’, ‘காத்திருந்து காத்திருந்து’ மூன்றுமே வெற்றிக்கனியை ஜெயச்சந்திரனின் மடியில் போட்ட முத்தான பாடல்கள். ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் ‘பூவை எடுத்து’, ‘கொடியிலே மல்லியப்பூ’ (கடலோரக் கவிதைகள்) ஆகியவை ஜெயச்சந்திரனின் குரல் தனித்தன்மையோடு வெளிப்பட்ட பாடல்கள். ரஜினிகாந்த்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’ பாடலில் சொந்தபந்தங்களால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனநிலையைத் தனது குரலால் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். இதே போல் ‘ரிஷி மூலம்’ படத்தில் குற்ற உணர்வு நீங்கி பாரம் அகன்ற மனிதனின் உணர்வை ‘நெஞ்சில் உள்ள காயம் ஒன்று’ பாடலில் வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் வாணிஜெயராமுடன் பாடிய ‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை’ என்ற துவிஜாவந்தி ராகப் பாடல் இனிய தேனமுது. என்றாலும் இளையாராஜாவின் இசையில் இவர் பாடிய அனைத்தும் ‘ராஜ’கீதங்கள் எனலாம். துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார் ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ (‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில் ‘அந்திநேரத் தென்றல் காற்’றை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து வரவழைத்தார். விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் குரல் வசீகரம் சொல்லாமலே புரியும். ‘ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத நிகழ்வும் இவர் வாழ்வில் உண்டு. தனது பதினான்காவது வயதில் முதல்முதலாக எந்த ஜேசுதாஸ் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேடையில் சிறந்த மிருதங்க இசைக் கலைஞராக ஜெயச்சந்திரன் கௌரவிக்கப்பட்டாரோ அதே ஜேசுதாஸின் பெயரால் ஆண்டுதோறும் இசைத்துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விரு’தை முதல்முதலாக - இரண்டாயிரமாண்டில் - ஜேசுதாஸின் கையாலேயே பெற்றுக்கொண்டார் ஜெயச்சந்திரன். மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! | legendary singer p jayachandran passed away - hindutamil.in
-
”என்ன செய்தாலும் தம்பியை (துமிந்த சில்வா வை) விடுவிக்க மாட்டோம்”
முன்னாள் எம்.பி.யும் கொலைக் குற்றவாளியுமான துமிந்த சில்வாவின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு தொலைக்காட்சி ஊடகங்கள் அவருக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டாலும் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதி நீதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பேசிய ஜெயசிங்க, “டிவி சேனல்களுக்கு நாங்கள் பயப்படவில்லை, தம்பியை விடுவிக்க மாட்டோம்” என்றார். குறித்த தொலைக்காட்சி சனலை நேரடியாகப் பெயரிட்டுக் கூறாத அதே வேளையில், அதன் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட ஜெயசிங்க, இது நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், துமிந்த சில்வாவுக்கு தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை வேண்டுமா என்பதை அறிய மருத்துவ மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் வலியுறுத்தினார். 2011 ஆம் ஆண்டு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் தண்டனை பெற்ற துமிந்த சில்வாவுக்கு, 2021 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Tamilmirror Online || ”என்ன செய்தாலும் தம்பியை விடுவிக்க மாட்டோம்”
-
வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை!
வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை! வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் மிதவை ஒன்று நேற்று கரையொதுங்கியுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குறித்த மிதவை கடலில் மிதந்துவருவதை அவதானித்திருந்தனர் சிவப்பு நிறமுடைய கூம்பு வடிவிலான மிதவை ஒன்று கரையொதுங்கி இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.[ஒ] வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை!
-
யாழில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்த முச்சக்கரவண்டி!
வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற முச்சக்கரவண்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு வேலிகள், அலங்காரத் தொட்டிகளைத் தகர்த்து உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது. இதன்போது காவல் பணியில் இருந்த இராணுவச் சிப்பாய் பதற்றமடைந்துள்ளதுடன் தெரு நாய் ஒன்று ஓட்டோவின் குறுக்கே சென்றபோது அதனை விலகிச் செல்ல முற்பட்ட சமயமே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்ததுடன் அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ] யாழில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்த முச்சக்கரவண்டி!
-
சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - பொ. ஐங்கரநேசன் கோரிக்கை!
09 Jan, 2025 | 03:28 PM யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி பொ.ஐங்கரநேசன் வியாழக்கிழமை (09) மனுவொன்றைச் சமர்ப்பித்த பின்னர் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் சுண்ணாம்புக்கல் வடமேற்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் கரையோரத்தை அண்டிக் காணப்படும் ஒரு இயற்கை வளமாகும். புவிச்சரித வரலாற்றில் பல மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மயோசின் காலத்தில் கடலின் அடித்தளப் படிவுகளாகத் தோற்றம்பெற்ற இப்பாறைகள் சீமெந்து தயாரிப்பிலும், இதர கட்டுமானங்களிலும் பிரதான மூலப் பொருளாக விளங்குகின்றது. கூடவே, சூழலியல் ரீதியாகக் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதைத் தடைசெய்வதிலும், நிலத்தடி நீரோட்டத்திலும் மிகவும் இன்றியமையாத பங்களிப்பையும் வழங்கி வருகிறது. சமீப நாட்களாகச் சுண்ணாம்புக்கல் அகழ்வும் அதனை வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதும் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. சுண்ணாம்புக்கல் அகழ்வு பயிர்ச் செய்கைக்காக இரண்டடி ஆழம் வரையில் கிளறி எடுத்தல் என்ற நிலையில் இருந்து, இன்று சீமெந்து தயாரிப்புக்காகக் கனரக வாகனங்களைக் கொண்டு அகழ்ந்தெடுத்தல் என்ற நிலைக்கு மாறியுள்ளது. குறிப்பாக, தென்மராட்சி சரசாலையில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாக அரச காணிகளிலும், தனியார் காணிகளிலும் பாரிய அளவில் சுண்ணாம்புக்கல் அகழ்வு இரவு நேரங்களில் இடம்பெற்று வருகிறது. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயக்கப்படாதிருப்பதற்குச் சுண்ணாம்புக் கல்லைப் பெறுவதில் உள்ள இடர்பாடுகளே காரணம். கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஏற்பட்ட பிரமாண்ட குழிகள் இன்னமும் மூடப்படாத நிலையில் இனிமேலும் அகழ்வைத் தொடர்வது சூழல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கிளிங்கர்களை எடுத்துவந்து, சீமெந்துத் தொழிற்சாலையை மீள இயக்க முடியும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிருந்து வேறு மாவட்டங்களுக்குச் சுண்ணாம்புக்கல்லை எடுத்துச்செல்வது மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்களை அரைத் தயாரிப்பாகவோ அல்லது முடிக்கப்பட்ட தயாரிப்புகளாகவோ கருதமுடியாது என்பதால் இதனை எடுத்துச் செல்வதற்குப் போக்குவரத்து உரிமம் அவசியம் எனப் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் யாழ். மாவட்டச் செயலருக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் வெளிமாட்டங்களுக்குத் தங்கு தடையில்லாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆளுநர் உடனடியாக சுண்ணக்கல் அகழ்வில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளைக் களைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - பொ. ஐங்கரநேசன் கோரிக்கை! | Virakesari.lk
-
யாழில் மணல் அகழ்வுக்காக போலி அனுமதிப் பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல்
09 Jan, 2025 | 06:47 PM யாழ்ப்பாணத்தில் மணல் ஏற்றுவதற்காக போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்து, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபரொருவர் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் மீட்டிருந்தனர். கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை (8) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. யாழில் மணல் அகழ்வுக்காக போலி அனுமதிப் பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
-
சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது!
கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்! 09 Jan, 2025 | 07:14 PM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்று (8) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் - காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின்போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகை கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்! | Virakesari.lk
-
இலங்கை: வாகனங்களில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? புதிய நடவடிக்கையால் சர்ச்சை
ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 7 ஜனவரி 2025, 06:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டமானது, அடிமட்ட மக்களை நேரடியாக பாதித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். முச்சக்கரவண்டி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு போலீஸார் வற்புறுத்துவதாக மக்கள் கூறுகின்றனர் தேங்காய், அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஜனவரி மாதம் முதலாம் தேதி 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், விசேட வாகன தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பதில் போலீஸ் மாஅதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார். 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி, பதில் போலீஸ் மாஅதிபரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் போக்குவரத்து தேடுதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவூட்டப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையானது, மறு அறிவித்தல் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்கெல்லாம் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது? இதன்படி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பல்வேறு சத்தங்களுடனான ஒலி பெருக்கி, தோரணை போன்ற மின்விளக்குகள், அதிக சத்தத்துடனான சைலன்ஸர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பெரும்பாலான பஸ்களின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தமது இஷ்ட தெய்வங்களின் சிலைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பஸ்கள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில், வாகனங்களை அழகுப்படுத்துவதற்கான மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு கடந்த காலங்களில் உரிய தரப்பினர் அறிவுறுத்தல் பிறப்பித்திருந்த போதிலும், அவ்வாறான பாகங்களுடன் தற்போதும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை காண முடிகின்றது. குறிப்பாக பஸ் மற்றும் முச்சக்கரவண்டிகளின் முன்பக்கத்தில் பிளாஸ்டிக் பூக்கள், கடவுள்களின் சிலைகள், அழகுப்படுத்தும் வகையிலான மின்விளக்குகள் உள்ளிட்ட மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் கூறுவது என்ன? இந்த நிலையில், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இவ்வாறான மேலதிக பாகங்களினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், வாகனத்திற்குள் பயணிப்போருக்கு அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், வீதிகளில் பயணிப்போருக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இந்த நிலையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகள் விடுக்கும் தவறுகளை கண்டறியும் வகையில் போலீஸார் சிவில் உடைகளில் பயணித்து, வீடியோ பதிவு செய்து வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். இவ்வாறான போலீஸாரின் நடவடிக்கை காரணமாக தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நடவடிக்கைகளை போலீஸார் நிறுத்தாத பட்சத்தில், தாம் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் பதில் போலீஸ் மாஅதிபருடன் கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளங்களின் ஊடாகவும், நேரடியாகவும் தற்போது கடும் எதிர்ப்புக்களை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எதிர்ப்பு முச்சக்கரவண்டிகளில் மேலதிகமாக பொருத்துவதற்கு சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள சுமார் 50 மேலதிக பாகங்கள் உள்ள போதிலும், அதனையும் போலீஸார் அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ''கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை, வாகனங்களில் பொருத்தியுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்த பயன்படுத்துகின்றனர். முச்சக்கரவண்டியில் பொருத்தக்கூடிய பாகங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியின் முன்பக்கத்திலுள்ள சூரிய ஒளி படாத வகையிலுள்ள பாகத்தையும் அப்புறப்படுத்துமாறு கூறுகின்றனர். அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சுமார் 50 பாகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. அதை முதலில் பார்த்தவிட்டு சட்டத்தை அமல்படுத்த வருமாறு போலீஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன்." என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடவுள் சிலைகளை அகற்ற உத்தரவு? வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள கடவுள் சிலையை கூட அகற்றுவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். ''மழை நீர் உட்பிரவேசிக்காத வகையிலான பாதுகாப்பு கவசத்தை பொருத்த சட்டத்தில் அனுமதியுள்ளது. போலீஸார் அதையும் அப்புறப்படுத்துகின்றனர். மழை காலத்தில் பாதுகாப்பிற்காகவே இந்த பாகம் வைக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையையும் அப்புறப்படுத்துகின்றனர். தமது இஷ்ட தெய்வமாக அந்தந்த மதங்களை சார்ந்தவர்கள் வைத்துள்ள புத்தர் சிலை, இயேசு சிலை, சிவன் சிலை, குரானிலுள்ள அடையாளங்கள் என்பவற்றை அகற்றுமாறு கூறுகின்றனர்" என்கிறார் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் எல்.ரோஹண பெரேரா. ''இப்போது நாங்கள் வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை. சாரதிகளுக்கு தெளிவுப்படுத்திக்கொண்டிருக்கிறோம்'' என போலீஸ் ஊடக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார். அனைத்து செயற்பாடுகளையும் சரி செய்வதே கிளீன் ஸ்ரீலங்காவின் நோக்கம் என அமைச்சர் கே.டீ.லால் காந்த தெரிவிக்கின்றார். ''கிளீன் ஸ்ரீலங்கா என்பது தொடர்பில் தெளிவூட்டல் வேண்டும். சிலந்தி வலைகளை சுத்தம் செய்தல், வடிகாண்களை சுத்தம் செய்தல் போன்றதல்ல. அனைத்தையும் சரி செய்ய வேண்டும். சரியான நேரத்தில் வேலைகளை ஆரம்பித்தல். அரசு அலுவலகத்தில் வேலைகளை சரியான நேரத்தில் நிறைவு செய்தல் போன்றதும் இதில் உள்ளடங்குகின்றது." என அமைச்சர் கே.டீ.லால் காந்த ஊடகங்களிடம் தெரிவித்தார். கிளீன் ஸ்ரீலங்கா: இலங்கையில் பேருந்து, முச்சக்கர வண்டிகளில் கடவுள் சிலையை அகற்ற உத்தரவா? - BBC News தமிழ்
-
யாழில் மீண்டும் சோதனைச்சாவடிகள்
யாழில் மீண்டும் சோதனைச் சாவடி அச்சத்தில் மக்கள்! யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீரென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுற்ற பின்னர் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த பல சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. ஆனாலும் அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. மேலும் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசு சோதனைச் சாவடிகளைத் தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைப்பதுமான இந்த நடவடிக்கை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீண்ட காலமாகப் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.[ஒ] யாழில் மீண்டும் சோதனைச் சாவடி அச்சத்தில் மக்கள்!
-
“தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது! யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸாரினால் மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இரண்டு பேரும் என ஜவர் நேற்று கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர் அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு பின்னர் அடிக்கடி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியை வெளியிட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் பொலிஸார் கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளார். யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது! யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது!
-
இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் சென்ற 13 குடும்பங்கள் தம்மை மீண்டும் நாட்டுக்கு அனுப்புமாறு கோரி மனு கையளிப்பு
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கையர்கள் தம்மை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர். இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் அவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வருவாய் இன்றி தவித்த இலங்கை தமிழர்கள் அடங்கிய ஐந்து குடும்பத்தினர் மீண்டும் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்மையில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள இலங்கை தமிழர்களான 13 குடும்பத்தினர் தங்களை படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு நேற்று திங்கட்கிழமை (6) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட மனு கையளித்துள்ளனர். இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் சென்ற 13 குடும்பங்கள் தம்மை மீண்டும் நாட்டுக்கு அனுப்புமாறு கோரி மனு கையளிப்பு | Virakesari.lk
-
வாகன இறக்குமதிகள் அதிகரித்தாலும் கையிருப்புக்குப் பாதிப்பு ஏற்படாது - மத்திய வங்கி ஆளுநர்
Published By: Digital Desk 2 07 Jan, 2025 | 04:51 PM (நமது நிருபர்) வருடமொன்றில் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அதனால் நாட்டின் கையிருப்புக்கோ அல்லது கடன் மீள்செலுத்துகைக்கோ பாதிப்பு ஏற்படாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உத்தரவாதமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இந்த வாகன இறக்குமதிகள் நடைமுறைக்கணக்கு மீதியில் மிகச்சொற்பளவு பற்றாக்குறையைத் தோற்றுவித்தாலும், கடந்த காலங்களைப்போன்று மிகையான பற்றாக்குறையைத் தோற்றுவிக்காது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி கடன்மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடைந்ததன் பின்னர் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர் வரை உயர்வடைந்தாலும், அரசாங்கத்தினால் கையிருப்பைப் பேணவும், அவசியமான மீள்செலுத்துகைகளை மேற்கொள்வதற்கும், அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கும் இயலும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதேவேளை பணச்சுருக்கம் மற்றும் உயர் பெறுமதிசேர் வரி என்பவற்றின் விளைவாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புதிய பெறுமதி உயர்வடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதிகள் அதிகரித்தாலும் கையிருப்புக்குப் பாதிப்பு ஏற்படாது - மத்திய வங்கி ஆளுநர் | Virakesari.lk
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம் - அரசாங்கம் 07 Jan, 2025 | 06:15 PM (எம்.மனோசித்ரா) அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னும் அதிக உள்நாட்டு அரிசியும் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டிலுள்ள தரவுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. தகவல்களுக்கிடையில் பரஸ்பர தன்மை காணப்படுகிறது. அவை சரியானவையாகவும் இல்லை. தற்போது வரை ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாயக்கிழமை (7) மேலும் 10 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 60 000 மெட்ரிக் தொன் நாட்டரிசியும் காணப்படுகிறது. அது மாத்திரமின்றி தேசிய அரிசி ஆலை உரிமையாளர்களாலும் தற்போது அரிசி விநியோகிக்கப்படுகிறது. இனியும் அரிசியை மறைத்து வைத்திருப்பதால் எவ்வித பயனும் இல்லை. எவ்வாறிருப்பினும் சில பிரதேசங்களில் எதிர்பார்க்குமளவுக்கு அரிசி விநியோகிப்படுவதில்லை என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே அரிசி விநியோ கட்டமைப்பை பலப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இம்மாதம் மூன்றாம் வாரமளவில் உள்நாட்டில் உற்பத்தியான அரிசி சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். சுமார் இரண்டரை இலட்சம் மெட்ரிக் தொன் முதல் 4 இலட்சம் மெட்ரிக் தொன் வரை அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நாமும் தீர்வினைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். தட்டுப்பாடு நிலவுகிறது என்று கூறப்படுவது எவ்வாறு தவறான தகவல் இல்லையோ, அதேபோன்று அரிசி மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறானதல்ல. உள்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் கடன் வழங்கப்படுகிறது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் வங்கிகள் ஊடாக இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவர்கள் கடன் பெறும் போது இணங்கியுள்ள நிபந்தனைகளை மீறினால் கருப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள். மீண்டும் எந்தவொரு கடனும் வழங்கப்பட மாட்டாது. இதற்கு முன்னர் இருந்தவர்களுடன் செயற்பட்டதைப் போன்று எம்முடன் விளையாட முடியாது என்றார். அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம் - அரசாங்கம் | Virakesari.lk