Everything posted by பிழம்பு
-
8 இந்திய மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா அபராதம்; ஒத்திவைக்கப்பட்ட 8 மாத சிறைத் தண்டனை - கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு
கிளிநொச்சியில் இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 இந்திய மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா அபராதத்துடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி அதிகாலை இரணைதீவை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து, நீதிமன்ற கட்டளைக்கு அமைய இன்று வரை அந்த 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் இன்றைய தினம் (22)கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்த முதலாவது குற்றச்சாட்டுக்கு 6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச் சாட்டுக்கு எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. 8 இந்திய மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா அபராதம்; ஒத்திவைக்கப்பட்ட 8 மாத சிறைத் தண்டனை - கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு | Virakesari.lk
-
நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம்
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் கருணாகரன் நாவலன் தெரிவிக்கையில், இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கியுள்ளது. இதை ஏற்க முடியாது. நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார். ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்த காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது. இதன் உச்சமாக தற்போது அனுர அரசும் அனைத்து தகுதிகள் இருந்தும் திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது. இதை எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அந்த வகையில் அரசானது பழிவாங்கலை கைவிட்டு அவருக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். பதவி உயர்வுக்கான சூழலை அரசு உருவாக்காவிட்டால் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி போராடும் நிலை வரும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் JVP செய்த செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள். அதேநேரம் அவர்கள் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்ள விரும்புவதில்லை. அவ்வாறான தரப்பினர் இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிளீன் சிறீலங்கா என்று கூறி தமிழ் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகிறது. மறைமுக பழிவாங்கல் போக்குடனும் செயற்படுவதாக மக்கள் கூறுவதை காண முடிகிறது. ஆனால் ஆட்சியை கைப்பற்ற அனுர தரப்பு மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் தென்பகுதியைப் போன்று தமிழ் மக்களையும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பதவிநிலைகளில் பாரபட்சம் பாராது நியமிக்க வேண்டும் என தெரிவித்தார். நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம் | Virakesari.lk
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் எமக்கான சீனாவின் ஆதரவு தொடரும் ; அரசாங்கம்
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை சீனா தொடர்ந்து வழங்கிவந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அரசாங்கம், அந்த ஒத்துழைப்பு எதிர்வருங்காலங்களிலும் தொடரும் எனத் தெரிவித்துள்ளது. அத்தோடு 'ஒரே சீனக்கொள்கையின்' பிரகாரம் சீனாவின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டினை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அரங்குகளில் இலங்கை வெளிப்படுத்தும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (22) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், ஜனாதிபதியின் சீன விஜயமானது எதிர்வருங்காலத்தில் ஒரு நாடு என்ற ரீதியில் இலங்கை முன்னேற்றகரமான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய மிகமுக்கிய விஜயமாக அமைந்ததாகவும், இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குரிய பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும், 15 இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு உலகளாவிய ரீதியில் நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு சீனா போன்ற மிகப்பெரும் பலம்பொருந்திய நாட்டின் ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், இவ்விஜயத்தின்போது சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிடம் இருந்து அதற்கான உத்தரவாதம் கிட்டியமை தாம் பெற்ற வெற்றியாகும் எனத் தெரிவித்தார். அதேபோன்று, 'சீன ஜனாதிபதி சி ஜின்பிங்குடனான சந்திப்பின்போது 'ஒரே சீனக்கொள்கையை' நாம் ஆதரிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து பேணுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தோம்' எனவும் அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். அதேவேளை சீனாவில் ஏதேனும் பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெறின், அதற்கு எதிராக இலங்கை உடன்நிற்கும் எனவும், இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் சீனாவுக்கு எதிரான எந்தவொரு பிரிவினைவாத செயற்பாடுகளும் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தாம் சீன ஜனாதிபதியிடம் உத்தரவாதமளித்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை சீனா தொடர்ந்து வழங்கிவந்திருப்பதாகத் தெரிவித்த அவர், அந்த ஒத்துழைப்பு எதிர்வருங்காலங்களிலும் தொடரும் என்றார். அத்தோடு சீனாவின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டினை, ஒரே சீனாவுக்கான ஆதரவினையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அரங்குகளில் இலங்கை வெளிப்படுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார். இதன்போது 'எதிர்வருங்காலத்தில் சீனா தாய்வானுக்கு எதிராக ஆக்கிரமிப்பில் ஈடுபடும் பட்சத்தில், அதனையும் இலங்கை ஆதரிக்குமா?' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விஜித்த ஹேரத், 'தாய்வான் என்பது சீனாவின் ஒரு பகுதி என்பதால், தாய்வானை ஆக்கிரமிக்கவேண்டிய அவசியம் சீனாவுக்கு இல்லை. சீனாவின் ஓரங்கமே தாய்வான் என்பதை எமது அரசாங்கம் மாத்திரமன்றி, முன்னைய அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே நாம் அக்கொள்கையை மாற்றமின்றித் தொடர்வோம்' என்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் எமக்கான சீனாவின் ஆதரவு தொடரும் ; அரசாங்கம் | Virakesari.lk
-
உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு
(எம்.மனோசித்ரா) வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய சதொச விற்பனை நிலையங்களில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நிலக்கடலை கிலோ ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 995 ரூபாவாகும். சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 300 ரூபாவாகும். உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும். சிவப்பு கௌப்பியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 765 ரூபாவாகும். நெத்தலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 940 ரூபாவாகும். பாஸ்மதி அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 645 ரூபாவாகும். பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 230 ரூபாவாகும். பருப்பின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 288 ரூபாவாகும். வெள்ளை சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 240 ரூபாவாகும். உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு | Virakesari.lk
-
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை
தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு துறைமுகங்களுக்குமிடையே நிரந்தரமான தொடர் சேவையை வழங்குவதற்காக ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 700 மெட்ரிக் தொன் எடை கொண்ட ‘தாரா கிரண்’ என்ற கப்பலை தயார்படுத்தியுள்ளது. கடலில் பயணிக்கும் தகுதி மற்றும் பிற சான்றிதழ்களை பெறும் செயல்முறைகள் பெப்ரவரி மூன்றாவது வாரத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் முதல் பயணம் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகால உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிபுணத்துவத்துடன் அந்தமானில் தலைமையகத்தைக் கொண்ட ஏ&என் லாஜிஸ்டிக்ஸ் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான இடப்பெயர்வு தீர்வுகளை வழங்கி வருகிறது. 2024 முதல் இலங்கை அடைந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கவனித்த ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் இயக்குனர்கள் குழு தென்னிந்தியாவுக்கும் இலங்கையின் வடக்குக்கும் இடையிலான வணிக நடவடிக்கைகளை நேரடியாக மீண்டும் நிறுவும் வகையில் இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இந்நிறுவனமானது மார்ச்சில் இந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான ஒரு பயணிகள் படகுச் சேவையையும் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏ & என் லாஜிஸ்டிக்ஸின் உள்ளூர் நிறுவனம் கே. கே. எஸ். டெர்மினல் ஆப்ரேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும். மேலும் தகவல்கள் பெற உள்ளூர் நிறுவனத்தை 071 798 8928 அல்லது 077 379 3368 என்ற எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக் கப்பல் சேவை | Virakesari.lk
-
அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ? புதிய சொற்களை அறிமுகப்படுத்துகையில் தமிழ் சொற்பதங்களையும் அறிமுகப்படுத்துங்கள் - வலியுறுத்தல்
( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் செயற்திட்டங்களின் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. திட்டத்தின் தலைப்பு புரியாத சந்தர்ப்பத்தில் அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது. அஸ்வெசும என்பதன் அதன் தமிழாக்கம் என்ன, 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களை அறிமுகம் செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவையானதொரு செயற்திட்டமாகும். இதனூடாக பல விடயங்கள் இந்த நாட்டில் கிளீன் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் ஊடாக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் நல்ல விடயங்களுக்கு இந்த அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த செயற்திட்டத்தின் நோக்கமாக நீண்டகாலமாக நிலைத்திருக்க சமூக கலாச்சார மாற்றங்களை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். . இது ஒரு இனத்திற்காக அன்றி அனைத்து இன மக்களுக்குமான வேலைத்திட்டமாக உங்களுடன் பணியாற்ற நாங்கள் விரும்புகின்றோம். நல்ல நடத்தை மாற்றத்தை செய்யாது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இதனை நாங்கள் முதலில் செய்ய வேண்டும். இந்த வேலைத்திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்ச்சியொன்றை பார்க்க முடியுமாக இருந்தது. அது இரண்டு மொழியில் மட்டுமே செய்யப்பட்டது. தமிழ் மொழியில் அது இருக்கவில்லை. இதனால் நடத்தை மாற்றத்தை எங்களிடம் இருந்து ஆரம்பித்து தமிழையும் அதில் சேருங்கள் என்று கோருகின்றோம். இதேவேளை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. வேலைத்திட்டத்தின் தலைப்பு புரியாது அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியதே. அஸ்வெசும என்றால் அதன் தமிழாக்கம் என்ன? 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களையும் கொண்டு வாருங்கள். உறுமய போன்ற திட்டங்களின் தமிழ் பொருளையும் வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் மத நல்லிணக்க அமைச்சின் பௌத்த சாசன அமைச்சு மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மூன்று மதங்களுக்கும் தனித்தனி அமைச்சுகள் இருந்தன. இந்நிலையில் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையில் திட்டத்தை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றோம் என்றார். அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ? புதிய சொற்களை அறிமுகப்படுத்துகையில் தமிழ் சொற்பதங்களையும் அறிமுகப்படுத்துங்கள் - வலியுறுத்தல் | Virakesari.lk
-
உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் - ஜனாதிபதி
(எம்.வை.எம்.சியாம்) உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடயம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்வி - தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்துக்கு ஏற்ப நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனக்கூறப்பட்டதல்லவா? பதில்- ஆம். தற்போது நாம் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். இந்தத்தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான தீர்மானத்தின் போது கொள்கை ரீதியான பிரச்சினைகள் ஏற்படாது என நாம் நம்புகிறோம். எனவே நிறைவேற்று அதிகார முறைமை நிறைவுக்கொண்டு வருவதாக இருந்தால் கட்டாயமாக தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும். தேர்தல் முறைமை மாற்றத்துக்கு அமையவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முடிவு கொண்டு வர முடியும்.இங்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் போது பிரச்சினைகள் ஏற்படாது.தேர்தல் முறைமையிலேயே சிக்கல் உள்ளது. கேள்வி - பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினைக்கு நீண்டகாலமாக தீர்வுக்காணப்படாமல் உள்ளது. அவர்களுக்கு இந்த விடயத்தில் நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லவா? பதில் - இந்த்துறையில் வீழ்ச்சியடைந்துள்ள நிறுவனங்கள் உள்ளன.இலாபம் ஈட்டும் நிறுவனங்களும் உள்ளன.இதுவே இன்றைய நிலைமை.எனவே நாம் ஒவ்வொரு நிறுவனங்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம். அவர்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அதன்பின்னர் பொதுவான கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்போம்.அமைச்சர் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் - ஜனாதிபதி | Virakesari.lk
-
அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும் தடை - டிரம்ப் உத்தரவில் கைச்சாத்திட்டார்
அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவினால் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ஆப்கான் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ள உத்தரவு அமெரிக்காவினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஆப்கான் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதை டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளார். இந்த தீர்மானம் ஆப்கான் அகதிகள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பான ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானில் பணிபுரிந்த பாதுகாப்பு படையினரின் குடும்ப உறுப்பினர்கள் பிள்ளைகள் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள குடும்ப உறுப்புpனர்களுடன் இணைவதற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலையில் உள்ளனர் என அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பான ஆர்வலர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய உத்தரவை தொடர்ந்து 27 ம் திகதி முதல் அமெரிக்காவிற்கு பயணிக்கும் விமானங்களில் ஏறுவதற்கு ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு அனுமதி மறுக்கப்படும். தலிபான் 2021 இல் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பலரின் பாதுகாப்பு தொடர்பில் டிரம்ப் மற்றும் பைடன் நிர்வாகங்கள் வாக்குறுதிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது..அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும் தடை - டிரம்ப் உத்தரவில் கைச்சாத்திட்டார் | Virakesari.lk
-
சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள தடை செய்யப்பட்டுள்ள அமைப்புடன் பேசுவதற்காகவே நான் சென்னை சென்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவரை விசாரணை செய்தால் உண்மையை கண்டறியலாம். விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் நெருக்கடி ஏற்படவில்லை என அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ள விடயத்துக்கும், சுமந்திரனின் கருத்துக்கும் தொடர்பு உள்ளதென சந்தேகிக்கிறேன். எனது சிறப்புரிமை மீறப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஆகவே விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்திய தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் கடந்த 11, 12 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பொருட்டு கடந்த 10 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நான் இந்தியாவுக்கு பயணமாகி இருந்தேன். அன்றைய தினம் மாலை 6.35 மணிக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன் விமான சேவையில் யு.எல் 123 விமானம் புறப்படத் தயாராயிருந்த நிலையில் எனது கடவுச் சீட்டில் குறைபாடு உள்ளதாகவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரின் விசாரணைகளுக்கு என்னை உட்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள் எனக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதன்போது என்னுடன் இணைந்து பயணம் செய்வதற்காக விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விமானம் புறப்படத் தயாரான இறுதி நேரத்தில் என்னை இந்திய பயணத்திற்கு அனுமதித்தனர். 13 ஆம் திகதி நான் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது குறித்த பயணத்தடை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வினவிய போது அவ்வாறான பயணத்தடை எதுவும் விதிக்கப்படவில்லை எனத்தெரிவித்திருந்தனர். நீதிமன்றக் கட்டளைகள் எதுவுமின்றி சபாநாயகரின் ஆலோசனை எதுவுமின்றி எனக்கு பயணத்தடை உள்ளதென குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டமை திட்டமிட்ட வகையிலான சிறப்புரிமை மீறல் என்றே நான் கருதுகின்றேன். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனக்கு இருக்கும் அடிப்படை சிறப்புரிமையை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணி குறித்து இந்த சபையில் நான் கேள்வி எழுப்புகின்றேன். அத்தோடு இன்னொரு முக்கிய விடயத்தையும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இரு நாட்களுக்கு முன்னர் (19 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் தனியார் ஊடகமொன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் “ சிறிதரன் கனடாவிலிருந்து வருகின்ற தடை செய்யப்பட்ட அமைப்போடு பேச முனைந்தாகவும் அதற்காகத்தான் அவர் சென்னை செல்ல இருந்ததாகவும் அந்த காரணத்தின் அடிப்படையில்தான் அவரை தடுக்க விமான நிலையத்தில் முயற்சி செய்திருக்கலாம் ஊக்கத்தின் அடிப்படையில் சிறீதரனை அவர்கள் மறித்திருக்கலாம். ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்துதான் நான் இதனைக் கூறுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இது தொடர்பில் சுமந்திரனிடம் விசாரித்தால் எந்த எந்த ஊடகங்களில் இந்த செய்தி வந்துள்ளது என்பதனை அறிந்து அந்த ஊடகங்களின் பிரதானிகளை விசாரிப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிய முடியும். இது எனக்கு எதிராக செய்யப்பட்ட மிகப்பெரும் சதியாகவே நான் கருதுகின்றேன். விமான நிலையத்தில் தடுக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் தனக்கு தெரிவிக்கவில்லை என்றும் சுமந்திரன் அதில் கூறியுள்ளார். நான் அவரை சென்னையில் சந்தித்தபோது சுமந்திரனும் இது தொடர்பில் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. இதனை விட வடக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக இருந்த அய்யூப் அஸ்மின் என்னை விமான நிலையத்தில் தடுத்த அன்றையய தினமான 10 ஆம் திகதி தன்னுடைய முக நூலில் ''கடந்த நாட்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் விமான நிலையத்தில் எவ்வித இடையூறுகளும் எவராலும் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறு பரப்பப்படுகின்ற செய்திகளில் உண்மைகள் எதுவும் இல்லை விமான நிலைய உயரதிகாரி'' என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். நான் இந்தியாவிலுள்ள பிரபல அரசியல் தலைவர் செந்தமிழன் சீமானுடன் இருக்கும் படத்தையும் தன்னுடைய முகநூலில் பதிவேற்றி எனக்கு எதிராக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். அஸ்மினும் சுமந்திரனும் நெருங்கிய நண்பர்கள் .சுமந்திரன் சொன்ன செய்திக்கும் அஸ்மினின் பதிவுக்கும் . ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் எனக்குத் தெரிகின்றது. என்னை அந்த நிகழ்வுக்கு போக விடாது தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இதற்குப் பின்னால் சாதி உள்ளது. எனவே இவ்விடயத்தில் மிகக்கூடிய கவனம் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும். இதேவேளை என்னுடைய பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரி ஜி.ஜி.பி. ரத்ன குமார .இவர் என்னுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மெய்ப்பாதுகாவலாராக இருந்தார். திடீரென சென்ற வாரம் அவர் மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக நான் கடந்த 8 ஆம் திகதி பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக கடிதம் வழங்கியிருந்தேன். அதன் பிரதியை சபா பீடத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். இதுவரை அந்த அதிகாரியை மீண்டும் எனக்கு நியமிக்கவில்லை. அஸ்மினின் முக நூல் பதிவையும் நான் சபாபீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். சுமந்திரன் வழங்கிய பேட்டியை கொண்ட பென் டிரைவையும் சபா பீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். இது என் மீது புனையப்பட்டுள்ள மிகப்பெரிய மோசடி.நான் எந்தவொரு காலத்திலும் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள கனடாவிலுள்ள அமைப்புடன் பேசுவதற்கு தயாராகவில்லை. அப்படி யாரும் என்னைக் கேட்டதுமில்லை. அவ்வாறான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை. அரசின் பேச்சாளர் போல் அல்லது புலனாய்வுத்துறையின் பேச்சாளர் போல் ஊகத்தின் அடிப்படையில் ஊடகங்களில் வந்தது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளது மிகப் பாரதூரமானது. எனக்கு நீதி வேண்டும். சர்வதேச பாராளுமன்றத்திடமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் சர்வதேச மன்னிப்புச்சபையிடமும் இக்கோரிக்கையை முன்வைக்கின்றேன். பாராளுமன்றத்திடமிருந்து எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.எனவே நீதியான நேர்மையான விசாரணைக்கு எனது விடயத்தை உட்படுத்த வேண்டும் .எனக்கு இதற்கான வழியை சொல்ல வேண்டும் என்றார். சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன் | Virakesari.lk
-
"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன?
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து பேசிய சர்ச்சைகளுக்குப் பதிலளித்துப் பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஹவுஸில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குப்பன் என்பவர் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜன 21) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், பசுமைத் தாயகத்தின் தலைவரான முனைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்நூலினை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். தமிழிசை செளந்தரராஜன் அப்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்துப் பேசியது சர்ச்சையானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்திருக்கும் தமிழிசை, "மாட்டின் கோமியத்தை 'அமிர்த நீர்' என்று கூறியுள்ளனர். மாட்டின் சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என்று கூறியுள்ளனர். இது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, மியான்மார் போன்ற நாடுகளில் மாட்டின் கோமியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கோமியம் 80 வகையான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாகத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை வழிநடத்துபவர் சும்மா கூறுவாரா...? 'என் உணவு என் உரிமை' என்று கூறும் நீங்கள் விஞ்ஞான பூர்வமாகக் கோமியம் மருந்து என்று கூறுவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். இவர்களுக்குக் கோமியம் குடிப்பதில் பிரச்னையில்லை, டாஸ்மாக்கில் குடிப்பதில் குறைந்துவிடுமோ எனப் பயம். ஆயுர்வேதத்தில் கோமியம் 'அமிர்த நீர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைச் சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், "மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு மருந்து எனச் சொல்லப்படுகிற மாட்டின் சிறுநீரான கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்." என்று பேசியிருக்கிறார். ."மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன? | bjp leader Tamilisai Soundararajan Speech about komiyam and beef - Vikatan
-
வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்!
‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ - தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை ராமேசுவரம்: இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27-ம் தேதிகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதியில் P 475, P 481 ஆகிய கடற்படை ரோந்து படகு / கப்பல் மூலம் ஜனவரி 24, ஜனவரி 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என இலங்கை கடற்படை சார்பாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மூலம் அந்நாட்டு அனைத்து மீனவ சங்கங்களுக்கும் அறிவிப்பும் விடுத்துள்ளனர். இந்நிலையில், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சர்வதேச எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம், என மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ - தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை | Don't cross the Border: Fisheries Department Advises TN Fishermen - hindutamil.in
-
‘கள் விடுதலை மாநாடு’ மேடையில் ‘கள்’ அருந்தி சீமான் ஆதரவு - பரபரப்பு பேச்சு
விழுப்புரம்: “கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் அருகே பூரிக்குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’ அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. இதில், பாஜக துணைத் தலைவர் ஏஜி சம்பத், வேட்டவலம் மணிகண்டன், பனையேறி பாதுகாப்பு இயத்தத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக பெண்கள் கள் பானையை தலையில் சுமந்தபடி ஊர்வலமக எடுத்து வர மாணவிகள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர். தொடர்ந்து பனையேறி ஒருவர் பனைமரத்தில் ஏறி கள் இறக்க, பனைமரத்துக்கு கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு படையலிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கள் நன்மையை விளக்கும் விதமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் கள் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: “கள் மது வகையில் வராது. அது நம் உணவு. கள்ளை மதுவென்று நிருபித்தால் ரூ.10 கோடி பரிசு என்று அறிவித்து வாதிட்டார்கள். கள் விடுதலை போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி துணை நின்று போராடி வருகிறது. மதுவை போதுமென்று சொல்லாமல் அருந்தி மயங்குவார்கள். ஆனால் உணவை மட்டுமே மனிதன் போதுமென்று சொல்வான். அது போலத்தான் கள்ளை போதுமென்று மனிதன் சொல்வான். ரஷ்யாவில் வோட்கா போல தமிழனின் தேசிய பானம் கள். கள் என்று சொல்லாமல் அதை பனஞ்சாறு என்றும் மூலிகைச்சாறு என்று சொல்லலாம். கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன? என கேள்வி எழுகிறது. எந்த மாநில முதல்வருக்கும் சாராய தொழிற்சாலை கிடையாது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுக்கு சாராய ஆலை உள்ளது. சட்டசபையில் மது விற்பனையை உயர்த்த நடவடிக்கை என பேசுகிறார்கள். பொங்கல் பண்டிகையின்போது இரண்டு நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்தனை கோடியில் குடிப்பவனுக்கு ஏன் இலவசம்? டாஸ்மாக் வைத்துக் கொண்டு, இளைஞர் நலன், மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத் துறை வைத்திருப்பது வேடிக்கையானது. பொருளாதாரம் தெரியாதவர்களிடம் நாடு உள்ளது. எத்தனை புயல் வந்தாலும் பனை மரம் சாயாது. மண் அரிப்பை தடுக்க மரம் நடவேண்டும். சிமெண்ட் பூசுவதில்லை. ஒரே நாளில் நூறு வழக்கு வாங்கியவன் இந்தியாவிலேயே நான் ஒருவன் மட்டுமே. எந்த அதிகாரமும் நிரந்தமில்லை. கள் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி எல்லா வகையிலும் துனை நிற்கும்,” என்றார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “அதை விடுங்கள்” என பதில் அளித்தார். மேலும், “ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இருவர் தான். களம் எங்களுக்கானது. நான் ஒருவன் தான் போட்டியிடுகிறேன். ஆனால் கூட்டணி கட்சிகள் இருந்தும் திமுக பல அமைச்சர்களை அனுப்பி, வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்? பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெண்களுக்கு தாலி அடிமை சின்னம் அதனை அறுத்து எரியவேண்டும். கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம், பெண்கள் கருப்பையை அறுத்து எரிய வேண்டும், மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக் கூடாது என்று கூறுவதற்கு ஒப்பானது என்று பெரியார் பேசியதை கூறி வாக்கு கேளுங்களேன். பெரியாரை எதிர்ப்பது மதவாதத்துக்கு ஆதரவாக உள்ளது என கூறுகிறார்கள். பெரியார் எந்த மதத்துக்கு எதிரானவர்? மாட்டு பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக் கறி உண்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி இதுதான் இந்த நாட்டில் உள்ள கட்டமைப்பு. இதிலிருந்து தப்பிக்க அரசியல் புரட்சி மட்டுமே ஒரே வழி. திராவிடமும், ஆரியமும் வெவ்வேறு கிடையாது இரண்டும் ஒன்றுதான்,” என்று அவர் பேசினார். ‘கள் விடுதலை மாநாடு’ மேடையில் ‘கள்’ அருந்தி சீமான் ஆதரவு - பரபரப்பு பேச்சு | Toddy Movement conference near Villupuram: Seeman supports by drinking toddy in the stage - hindutamil.in
-
'நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார் : எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தால் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற தயார்" - அனுரவிற்கு மகிந்த பதிலடி
’’நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை’’ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் புலம்புவதாகவும் அனைவரும் கூறுகின்றனர். ஆனால் நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை என இத்தகண்டே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். கெபித்திகொல்லேவயில் ஓடும் பேருந்து மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கண்ணீர் விட்டதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அந்தத் துயரத் தருணமே இறுதியில் நந்திக்கடலுக்கு அருகிலுள்ள ஒரு நிலப்பரப்பில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முடிவிற்கு இட்டுச் சென்றது. "மஹிந்த ராஜபக்ச தனது வசிப்பிடத்தை இழப்பதற்காகவோ அல்லது தனது பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டதாகவோ அழுபவர் அல்ல. அவர் ஒரு சிறந்த தலைவர். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை மதிப்பீடு செய்ய அனுப்பப்பட்ட நபர் சொத்துகள் முகாமைத்துவக் கிளையின் வெறும் எழுத்தராக மட்டுமே இருந்திருக்க வேண்டும். மஹிந்த, கொழும்பில் உள்ள விஜேராமவில் 4.6 மில்லியன் செலவழித்து வாழ வேண்டிய ஒருவர் அல்ல. தேவை ஏற்படின் அவர் கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருக்க முடியும்," என்று தேரர் கூறினார். "எனவே, தற்போதைய தலைவரின் படுக்கைக்கு அருகில் ஈரமான சாக்கு மூட்டையை வைத்து அவரை எழுப்பவும், அவர் இப்போது நாட்டின் ஜனாதிபதி என்பதை நினைவுபடுத்தவும் யாராவது அவருடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று தேரர் மேலும் கூறினார். Tamilmirror Online || ’’நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை’’
-
வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்றையதினம்திங்கட்கிழமை(21) கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள்,மிதவைகள்,போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது. வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
-
கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!
உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் கிளாலி பகுதியில் இருந்து வெள்ளை மணல் கடத்தி வந்த டிப்பர் ஒன்று மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த டிப்பர் சட்டவிரோதமாக மணலை ஏற்றி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!
-
வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்!
வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475, P481 ஆகிய கலங்களில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்! | Virakesari.lk
-
அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! 21 Jan, 2025 | 04:49 PM யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதன்போது,போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். பின்னர், அர்ச்சுனா ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு! | Virakesari.lk
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன? இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சங்ககிரி ராஜ்குமார் சொன்ன எடிட்டிங் பற்றிய தகவல் உண்மையாக இருக்கலாம். சீமான் - கேப்டன் பிரபாகரன் சீமான் ஈழம் சென்று வந்த இரண்டு ஆண்டுக்கு பிறகு, இந்தப் புகைப்படம் கிராபிக்ஸ் என்ற தகவல்கள் வெளியானது. அப்போது அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, பின்னர் மறந்துவிட்டோம். புகைப்படம் கிராபிக்ஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. சீமான் ஈழம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அவர் வந்து சென்ற செய்தியை மட்டும் தான் சொன்னார்கள். எனக்கு கிடைத்த தகவலின் படி அவர் சென்று வந்தது உண்மை. ஆனால் மிகக் குறைவான நேரம் மட்டும் பிரபாகரனை சந்திக்க, சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரபாகரனுடன் பலரும் திறந்தவெளியில் தான் புகைப்படம் எடுத்துள்ளார்கள். கொளத்தூர் மணி தனியாக ஸ்டூடியோ போன்று இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. சீமான் தன்னை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்வாரா? அல்லது இரண்டு முகமும் காட்டுவாரா? என்பது தெரியவில்லை" என்று பேசியிருக்கிறார். Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன? | kolathur mani about seeman - Vikatan
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமான் - பிரபாகரன் சந்திப்பு புகைப்படம் சர்ச்சையாவது ஏன்? பின்னணி என்ன? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படம் தான் எடிட் செய்தது என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இந்த கருத்து குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. சீமானுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், தான் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, தன்னிடம் புகைப்படங்களை கொடுத்து எடிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சீமான் பிரபாகரனை நேரில் சந்தித்தாரா இல்லையா, சந்தித்த போது புகைப்படம் எடுத்தாரா இல்லையா என்று தனக்கு தெரியாது என்று கூறும் சங்ககிரி ராஜ்குமார், இந்த புகைப்படம் பிரபாகரனுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறுகிறார். சீமான் மீதும் பிரபாகரன் மீதும் கொண்ட மரியாதை காரணமாகவும், இந்த புகைப்படம் சீமானுக்கு தமிழக அரசியலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உதவட்டும் என்று நினைத்தும், தான் எடிட் செய்த விசயத்தை இதுவரை வெளியில் சொல்லவில்லை என்று சங்ககிரி ராஜ்குமார் கூறுகிறார். மேலும், பெரியார் மீதான அவதூறு பேச்சு உட்பட சமீப காலமாக சீமானின் கருத்துகள் தனக்கு உடன்பாடாக இல்லாததால், பொது சமூகத்தின் நலன் கருதி இந்த உண்மையை இப்போது கூறும் கட்டாயத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார். இது குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "அந்த புகைப்படத்தை அவர் சீமானுக்கு பரிசளிக்கப் போவதாக கூறி செங்கோட்டையன் என்ற நண்பர் அந்த புகைப்படத்தை எடிட் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டார். பிறகு, அந்த புகைப்படமே சந்திப்புக்கான ஆதாரமாக ஊடகங்களில் பகிரப்பட்டன'' என கூறுகிறார் சங்ககிரி ராஜ்குமார், ''இன்றைய தலைமுறைக்கு பிரபாகரன் என்றால் சீமானுக்கு ஆமைக்கறி சமைத்துக் கொடுத்தவர் என்று நினைவுக் கொள்ளும்படி செய்துள்ளார் சீமான். சமீப காலமாக, தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இனிமேலும் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்ற கட்டாயத்தினால் இதை சொல்கிறேன்" என்றார் அவர். இதை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், ''டைம் ட்ராவல் செய்து 2009-ம் ஆண்டிலேயே ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு புகைப்படத்தை எடிட் செய்திருப்பார் போல'' என்று பதிவிட்டிருந்தார். சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மையா இல்லையா என்பது குறித்து அவ்வபோது தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. 2018-ஆம் ஆண்டு மதுரையில் பேசியிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளாகும் புகைப்படங்களில் ஒன்று இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போது, ஏழு ஆண்டுகளுக்கு முன் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? சந்தித்தது நானும் அவரும். மூன்று கி.மீ.க்கு இருட்டுக்குள் ஓடுகிறது வண்டி. கூட்டிட்டு வந்த போராளிகள் இறங்கி விட்டனர், அண்ணன் நடேசன்தான் வாகனம் ஓட்டுகிறார். மூன்று கி.மீக்கு மின்சாரமே கிடையாது. அடர்ந்த காட்டுக்குள் சந்திக்கிறோம். அருகில் யாருமே கிடையாது" என்றார் சங்ககிரி ராஜ்குமார் கூறுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.செந்தில் குமார் மறுக்கிறார். அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், " விடுதலை புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பின் தலைவரோடு சந்தித்ததாக பொய் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்றார். மேலும், "இது 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புகைப்படம். சங்ககிரி என்பவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தை எடிட் செய்திருப்பதாக கூறினால், அவர் மீது தான் வழக்கு தொடர வேண்டும்" என்றார். "சில கட்சிகள் மாவீரன் தினத்தை ஒரு சடங்காக மட்டுமே நடத்தி வந்தனர். அதனை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ந்தது நாங்கள்தான். பிரபாகரன் மீது இங்குள்ள மக்கள் சிலருக்கு ஈர்ப்பும் மரியாதையும் உண்டு. அந்த மக்களின் ஆதரவை தாங்கள் பெற வேண்டும் என்பதற்காகவே எங்கள் கட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு சீமான் - பிரபாகரன் சந்திப்பு புகைப்படம் சர்ச்சையாவது ஏன்? பின்னணி என்ன? - BBC News தமிழ்
-
காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு திருவனந்தபுரம்: காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று (ஜன.20) அறிவிக்கப்படுள்ளது. கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்தார். இரண்டு முயற்சிகள்.. காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கரீஸ்மா யோசித்தார். ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடினார். ஒரு முறை பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என ஷரோன் ராஜ்க்கு கரீஸ்மா கொடுத்தார். ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என நினைத்து அதை ஷரோன் ராஜ் குடித்தார். தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது. இந்நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது, முன்னதாக க்ரீஷ்மாவின் வயதைக் கருத்தில் கொண்டும், அவர் திருந்தி வாழ தயாராக இருப்பதை சுட்டிக் காட்டியும் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டாம் என அவரது வழக்கறிஞர் சார்பில் கோரப்பட்டிருந்தது. காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு | Sharon Murder case: Prime accused Greeshma gets capital punishment - hindutamil.in
-
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தயார் - நாமல் ராஜபக்ஷ
”மஹிந்தவை வெளியேற்ற அரசாங்கம் சதி செய்கிறது” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த இன்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடியிருப்புக்கு 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை என டொலவத்த தெரிவித்துள்ளார். "ஜனாதிபதிகள் பொதுவாக முன்னாள் ஜனாதிபதிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்க மாட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்யும் அதேவேளையில், NPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது," என்று அவர் கூறினார். Tamilmirror Online || ”மஹிந்தவை வெளியேற்ற அரசாங்கம் சதி செய்கிறது”
-
யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்!
யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரி.ஐ.டி. என்று அடையாளப்படுத்தி நூதனமான முறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகைப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரியவருகின்றது. நூதனமாகக் கொள்ளை சில நாள்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றிலேயே இந்த நூதனக்கொள்ளை நடந்திருந்தது. நகைக்கடையொன்றுக்குச் சென்ற குழு ஒன்று தங்களை ரி.ஐ.டியினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டதுடன், விசாரணை என்ற போர்வையில் கடையில் இருந்த 30 லட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டு அந்தக் குழு தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய, யாழ்ப்பாணக் குற்றவிசாரணைப் பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி கலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. சந்தேகநபர்கள் கைது கண்காணிப்புக் கமராப் பதிவுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இனங்காணப்பட்ட நிலையில் பிரதான சூத்திரதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒருதொகைப் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் வாகனச்சாரதி உட்பட மூவர் கண்டியில் வைத்தும், இருவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்றும், மற்றுமொருவர் தெற்கு அரசியல் கட்சியொன்றில் பிரமுகர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டியில் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் கொண்டுவந்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்!
-
மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு ; போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் - வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று பாலையடிவட்டை- வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர் - ராணமடு வீதி, வெல்லாவெளி - உகன வீதி போன்றன வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப்பகுதிக்கான பல்வேறு போக்குவரத்துப்பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு ; போக்குவரத்து பாதிப்பு | Virakesari.lk
-
முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்புற நடைபெற்ற பட்டத்திருவிழா
20 Jan, 2025 | 11:15 AM முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். அதனையடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள் கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார், வட்டுவாகல் அறநெறிப்பாடசாலையின் முதல்வர் அப்புத்துரை செல்வரட்ணம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பெருந்திரளான மக்களும் இந்த பட்டத்திருவிழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு கடற்கரையில் சிறப்புற நடைபெற்ற பட்டத்திருவிழா | Virakesari.lk
-
சாரதிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, தங்க நகைகள் கொள்ளை - யாழில் சம்பவம்
வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர வேண்டுமெனக் கூறி, வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, அவ்வாகனத்தில் இருவரும் கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வீதியோரமாக வாகனத்தை நிறுத்துமாறு இருவரும் சாரதியிடம் கூறியுள்ளனர். வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் அப்பகுதியில் உள்ள கடையொன்றில் இருவரும் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர். குளிர்பானத்தை குடித்த சாரதி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். வீதியோரத்தில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் சாரதி அசைவின்றி மயக்க நிலையில் இருந்ததை அவதானித்த சிலர், சாரதியை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சாரதி சுயநினைவுக்கு வந்த பின்னரே, தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். சாரதிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, தங்க நகைகள் கொள்ளை - யாழில் சம்பவம் | Virakesari.lk