Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ அரசியலுக்கான, ஒப்பந்தங்களும் தீர்மானங்களும், நேற்று,சிங்களம். இன்று,இந்தியா. நாளை,சர்வதேசம்!?.

Featured Replies

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் சுயமாக தயாரிக்கப்பட்டு உலகத்தை ஏமாற்ற வழங்கப்பட்ட Lessons Learnt and Reconciliation Commission.(LLRC) அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை,

நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானம், மார்ச் 22, 2012 அன்று ஜெனீவா ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரின்போது வாக்கெடுப்புக்குவந்து. 24 நாடுகள் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு தனது சுத்துமாத்து வசதிக்கேற்றவாறு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றும் மனப்பாங்குடன் தயாரிக்கவில்லை என்பது தீர்மானத்தின்போது இடம்பெற்ற முரண்பாடுகளிலிருந்து தெரிகிறது.

ஒப்பந்தங்களையும் ஆணைக்குழுக்களையும் எழுத்தளவில் உருவாக்கி ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி பழக்கப்பட்ட இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை எப்படி கைக்கொள்ளப்போகின்றனர் என்பதை வருங்காலங்களில் அறியவரும்.

1957 ஜூலை 26, 1957 அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட"பண்டா செல்வா ஒப்பந்தம்" கிழித்தெறியப்பட்டது தமிழுலகம் அறிந்ததே.

அதன்பின் முப்பது வருடங்களுக்குப்பின்,

22-03-2012 ஜெனீவா, அமெரிக்க தீர்மானம் நிறைவேறுவதற்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, அவர்களும். அன்றைய இலங்கையின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா இருவருக்கும் இடையே யூலை 29, 1987 அன்று ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதை ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான 'இலங்கை இந்திய ஒப்பந்தம்' என்று கூறப்பட்டது'?

அந்த ஒப்பந்தம், இலங்கையை ஒரு பல்லின, பலமத, பலமொழி நாடாக ஏற்று, வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று, தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று, மாகாண சபைகளுடனான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது என்று வரையப்பட்டிருந்தது.

1. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு, ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி,

2. இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின,பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து,

3. "மிகக் கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதையும்",

4. வடக்கு,கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுபூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீகரித்து,

5. இலங்கையின் ஐக்கியம்,இறைமை,பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன, பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணி, பின்வரும் உடன்பாட்டிற்குவருகிறோம் என்று அந்த ஒப்பந்தத்தில் வரையப்பட்டிருந்தது.

அவ் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, இந்தியாவின் விருப்பத்திற்கமைய ஒருதலைப்பட்ஷமாக வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் நியமிக்கப்பட்டார். "ஒட்டுமொத்தமான ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழர்களின் ஒரே ஒரு பாதுகாப்பு அரணான தமிழீழ விடுதலைப்புலிகளும் விரும்பாத அந்த ஒப்பந்தத்தை தனது வரட்டு பிடிவாதத்தால் இலங்கையில் அறிமுகப்படுத்தியே தீருவேன் என்று அடம்பிடித்து ராஜீவ் அந்த ஒப்பந்தத்தை உருவாக்கியிருந்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு சிறு துரும்புகூட ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் பாவனைக்குட்படுத்தவில்லை என்பது வேறுவிடயம்.

அப்போ அமைதி காக்கும் படை என்ற Indian Peace Keeping Force இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோதும், ஒப்பந்தத்தில் வரையப்பட்ட எந்த ஒரு அதிகார அலகுகளையும் இலங்கையில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் மூலம் வடகிழக்கு மாகாணசபைக்கு வழங்கி செயல்வடிவமாக்க இந்திய வல்லாதிக்கத்தால் முடிந்திருக்கவில்லை. ஒரு சிறிய கிராம அபிவிருத்திச்சங்கத்துக்குள்ள அதிகாரம் கூட இல்லாமல் வடகிழக்கு மாகாணசபை பரிதாபமாக தேய்ந்து இல்லாமல் போனது.

காலாகாலமாக கடதாசி ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு பொறிப்பந்தல் நிலையில் வாழ விரும்பாத வடகிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களுக்கு, 1987 இந்திய அரசால் திணிக்கப்படும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வரையப்பட்ட அம்ஷம்கள். அரசியல் ரீதியாக நீண்ட நிலையான தீர்வுதரக்கூடியவை அல்ல என்று, விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தை புறக்கணித்திருந்தது அனைவரும் அறிந்தது.

சிங்கள ஆட்சியாளர்கள் துவேஷ நோக்கமின்றி, சகோதரத்துவ மனப்பாண்மையுடன், அன்று எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரங்கள் ஒருசிலவற்றையாவது காலவரையறை ஒன்றுக்கு உட்படுத்தாமல் படிப்படியாகவென்றாலும் நிறைவேற்றப்பட்டிருக்குமாயின், தமிழர் தாயக மக்களின் சூழ்நிலையில் மாற்றம் ஏற்ப்பட்டிருக்க முடியும். இந்திய-இலங்கை அரசுகள்மீது தமிழ்த்தரப்பினருக்கு ஐயுறவில்லாத ஒரு நம்பிக்கை பிறந்து ஆயுதப்போராட்டத்தில் காட்டும் முனைப்பைவிட ஜனநாயகவழியில் மீதி உரிமைகளுக்காக போராடும் சூழ்நிலை உருவாகியிருக்கக்கூடும்.

நிறைவான ஒரு மையத்தை அடைய காலம் நீடித்திருந்தாலும் பெருத்த பொருள் அழிவு, கூட்டம் கூட்டமாக மக்கள் அழிக்கப்பட்ட நிலமை தடுக்கப்பட்டிருக்கும்.

இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் காலாகாலமாக இருந்துவந்த முரண்பாட்டுக்கான தடைகளை அகற்றி. யதார்த்தமான, நியாயமான, அரசியல் முன்னெடுப்புக்களை உருவாக்கி சரியான தீர்வை ஈட்டிக்கொடுக்க முடியுமென்று மத்தியஸ்தனாக இலங்கைக்குள் புகுந்த இந்திய அரசால் எதுவுமே முடியவில்லை. அமைதிப்படை என்று வந்திறங்கிய இந்திய இராணுவம், ஈழமக்களின் நிம்மதியை குலைத்து பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்தது. இறுதியில் சிங்கள ஆட்சியாளர்களாலேயே அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. துரதிஷ்டவசமாக இந்தியத்தலையீட்டால் தமிழினத்துக்கு அழிவுமட்டும் மிஞ்சியது. அதன் பின்னரும் ஈழதேசம் எங்கும் பழைய நிலை தோற்றுவிக்கப்பட்டு சிங்கள பாசிசவாதிகளால் போர் நீடிக்கப்பட்டது.

இந்திய வெளியேற்றம் நடந்து பின்வந்த பத்து, பதினைந்து வருடங்கள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியாளர்கள் இலங்கைப்பிரச்சினையில் தலையிடாக்கொள்கையை கடைப்பிடிப்பதுபோல் காட்டிக்கொண்டனர். ஈழத்தமிழன் படை வெற்றியின் புள்ளியை அண்மிக்கும் சமயத்தில் இலங்கை இன விவகாரங்களில் தலையிடா கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறிய இந்திய காங்கிரஸ் அரசு மறைமுகமாக ஸ்ரீலங்கா ராஜபக்க்ஷவின் இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் நேரடியாகச்செய்து முள்ளிவாய்க்காலில் முழு இன அழிப்புடன் போராட்டமும் வஞ்சகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழனின் கடந்தகால வாழ்வின் வரலாற்றுச் சூழலை ஆராய்ந்து அறிந்திராத சர்வதேசம், ஆயதப்போராட்டம் அரசியல் ரீதியான தீர்வுக்கு உகந்ததல்ல என்ற பொதுவான கருத்தை கூறிவந்தது.

முப்பது வருடங்களாக ஈழத்தமிழினம் அஹிம்சை வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் இழிவுபடுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம் என்பதையும். தமிழினத்தை மதித்து எவரானாலும் ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை வழங்கினால் ஆயுதப்போராட்டம் தேவையற்றதென்பதையும் தமிழர் தரப்பின் ஏக பிரதிநிதிகளான புலிகளும் ஒத்துக்கொண்டிருந்தனர். இருந்தும் ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து உலக நாடுகள் தடைசெய்வதற்கு முன்னுதாரணமாக இந்தியாவே பிள்ளையார் சுழி போட்டு பிரச்சாரம் செய்தது. இலங்கை-இந்திய கொள்கை வகுப்பாளர்களின் இட்டுக்கட்டிய பிரச்சாரம் உலகில் பல நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கததை தடைசெய்ய உதவின.

ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளிடம் தொடர் தோல்விகளை சந்தித்த ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்க்ஷ பல நாடுகளிடமும் உதவியை நாடினார். அந்த சந்தற்பத்தை பயன்படுத்திய சோனியா தலைமையிலான இந்தியா, சிங்கள அரசின் தமிழர் விரோதமான அதே நிலைப்பாட்டை பின்பற்றி, புலிகள் இயக்கத்தை ஆயுதத்தாலும் வஞ்சக தந்திரங்களாலும் அழித்து வெற்றிகொள்ள ஸ்ரீலங்காவுடன் இணைந்து களமிறங்கியுருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளான கருணாநிதி மற்றும் பல காங்கிரஸ் அரசியல்வாதிகள் உறுதுணையாக இருந்து பல தந்திர நாடகங்களை நடத்தினர்.

கேணல் கிட்டுவின் படுகொலையில்த்தொடங்கி புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிப்பதுவரை இந்தியாவின் நரித்தனமான தந்திரமே ஸ்ரீலங்காவின் கை ஓங்க காரணமாகியிருந்தது. ஆனாலும் போராட்டத்தில் வெற்றிகொள்ளமுடியவில்லை.

எந்தவிதத்திலும் தமிழரின் உணர்வுரீதியான போராட்டத்தை வெற்றிகொள்ள முடியாது என அறிந்த, காட்டுமிராண்டிகளை கொள்கை வகுப்பாளர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் கொண்ட இந்தியா, இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அழிப்பின்போது நச்சு இரசாயின ஆயுதங்களை மிருகத்தனமாக பயன்படுத்த ஸ்ரீலங்காவை அனுமதித்தது. அதற்கான நச்சு தொழில்நுட்பத்தையும் ஆளணிகளையும் எந்த குற்ற உணர்வுமில்லாமல் ஸ்ரீலங்காவுக்கு கொடுத்துதவி நடத்தப்பட்ட அத்தாக்குதலில் ஒரேநாளில் ஆயிரக்கணக்கான தளபதிகளும் போராளிகளும் பல ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

சர்வதேசம் குறிப்பிடும் போர்க்குற்றம் என்ற பதத்தின் எழுவாயாக, சர்வதேச நெறிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட ஆயுதப்பாவனை, குடியிருப்பு, மற்றும் குடியிருப்பற்று அவல் நிலையில் தத்தளிக்கும் மக்கள் மீதான இடைவெளியில்லாத விமான, வான்வெளி தாக்குதல் படுகொலை உத்தி, போன்ற மனித அழிவுக்கு காரணமான நாசகார அனர்த்தத்தையே பெருத்த மனித உரிமை மீறலாக ஐநா சாசனம் குறிப்பிடுகிறது. icrc மற்றும் International Crisis Group அமைப்புக்குக்களும் அவற்றையே வெறுக்கத்தக்க முதல்த்தர போர்க்குற்றமாக சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால் சகல அத்துமீறல்களையும் இலங்கை இராணுவம், இந்திய ஆதரவுடன் ஈழத்தமிழ் மக்கள் மீது எந்தவித குற்ற உணர்வுமில்லாமல் பிரயோகித்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் அழிவின்பின், இந்தியாவின் பணிப்பின் பேரிலேயேதான் ஈழப்போரை நடத்தி முடித்ததாக, ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்க்ஷ, மற்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்க்ஷ ஆகியோர் பலமுறை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறி, இந்தியாவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. உலகநாடுகள் பலமுறை பல வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்து இறுதியாக ஐநா மன்றத்தின் பணிப்பின்பேரில் மூன்றுபேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட குழுவினர் போர்பற்றிய நீண்ட தகவல் ஆய்வு அறிக்கையையும் தயாரித்து ஐநா செயலரிடம் கையளித்திருக்கிறனர். இருந்தும் ஏதோ உள்அழுத்தம் காரணமாக ஐநா செயலாளர் அந்த அறிக்கையின் முக்கியத்துவத்தை இதுவரை பகிரங்கப்படுத்தியிருக்கவில்லை!.

சீன, ரஷ்ய எதிர்ப்பு தவிர, இந்தியத்தலையீடு காரணமாகவே அனைத்து நியாயங்களும் ஐநாவில் ஒடுக்கப்பட்டு வஞ்சகத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமே சர்வதேச தொண்டமைப்புக்களுக்கும், இன்னர் சிற்றி போன்ற சர்வதேச ஊடகங்களுக்கும், தமிழினத்திற்கும் நெருடலாக இருந்து வந்திருகிறது.

இருந்தும் நீதி மேலெழுந்து நியாயம் கிடைப்பதற்கு முயற்சி நடப்பதாகவே சர்வதேச தொண்டமைப்புக்களின் தலையீடுகளின் ஒவ்வொரு கட்டங்களும் அறிவுறுத்தி வந்தன. இந்தத்தொடர்ச்சியில் இலங்கையின் மனித உரிமைமீறல் விசாரணையின் ஒருகட்டமாக ஐநா மன்றத்தின் 19வது மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடர், சில நியாயங்களை வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கை பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. நடந்து முடிந்த ஐநா மனித உரிமை மாமன்றத்தின் 19வது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா-இந்திய அரசபடைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் இனப்படுகொலை எவற்றிற்கும் சரிநிகரான நியாயம் எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பல இலட்சம் மக்கள் "தொடர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்". பல ஆயிரம் மக்கள் கை, கால், கண்கள் இழந்து ஊனமாக்கப்பாட்டிருக்கின்றனர். மேலாக பல ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய சரியான தகவல்கள் இன்றுவரை கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. பலாத்காரம், பாலியல் வல்லுறவு, தவிர இராணுவமயத்துள் மக்கள் பேசாமடந்தைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இவைகளுக்கான நியாயத்தை எவரிடம் கேட்டு பெறுவது? இதைவிடவும் துன்பம் ஒன்று உலகில் உண்டா! நம்பிக்கையாக இருந்த ஒரே தெரிவான ஐநா அமைப்பு? சர்வதேசம் அபிவிருத்தி, மீழ் கட்டமைப்பில் கரிசனை கொண்டிருந்தாலும். நடந்து முடிந்த மனிதப்படுகொலைகளுக்கான விசாரணையை பகிரங்கமாக்கி குற்றத்துக்கான தண்டனையிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் ஒளிப்பு மறைப்புச்செய்து புறந்தள்ளமுடியாது.

(கசப்பான) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு, ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் ஆலோசனையுடன் வேறு எவரது தலையீடுமில்லாமல் சிங்கள தரப்பால் உருவான ஒரு அமைப்பு, உலகத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் தப்பித்தலுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று, அந்த அமைப்பால் எழுதப்பட்ட வரைவு கொல்லப்பட்ட தமிழினத்திற்கு எந்தளவுக்கு நியாயமாக செயல்ப்படும் என்பது உள்ளூர், மற்றும் உலகம் அறிந்த விடயம். படுகொலையில் ஈடுபட்டவனே நீதி வழங்கும் நீதிமானாக இருப்பான் என்று புதிய சித்தாந்தத்தை நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சொல்லுகிறது.---------------------

அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் தமிழர்களுக்கன சுபீட்சமான வாழ்வை உறுதிப்படுத்திவிடலாம் என்பதும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ட வாதம். இதுபோன்ற ஆயிரம் வரைவுகளை தமிழினம் கண்டு கழித்துவிட்டது. வரைவுகளும் ஆணைக்குழுக்களும் இலங்கை வரலாற்றில் வல்லமை உள்ளதாக இருந்திருந்தால் ஆயுதத்திற்கும் படுகொலைகளுக்கும் இடமில்லாமல்ப்போயிருக்கும். கொலைக்குற்றவாளியான நண்பன் இந்தியா, தவிர வேறு எவரும் எல்எல்ஆர்சி அறிக்கையை ஏற்றுக்கொள்ளவுமில்லை.

அறிக்கையை வெளியிட்டு வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதுபோன்ற மாயையை உலவவிட்டு காலம் கடத்துவதே இலங்கை-இந்திய ஆட்சியாளர்களின் தந்திரம் என்பதை உலகம் உணர்ந்து கொண்டதனால், அந்த அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை முதல்க்கட்டமாக நிறைவேற்றிக்காட்டுங்கள் என்பதே அமெரிக்க தீர்மானத்தின் கருப்பொருளாகவுள்ளது. இந்த மென்போக்கான கட்டளை பல திருகுதாளங்களை அரங்கேற்றி காலம் கடத்த உதவும் என்பதே உண்மை.

ஸ்ரீலங்காவே தயாரித்து வெளியிட்ட 'எல்எல்ஆர்சி' அறிக்கை, அதை நண்பன் இந்தியா வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்த நிலையில் அதை செயல்வடிவமாக்குவதற்கு இந்தியா-இலங்கை விரும்பவில்லை. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில்க்கூட திருத்தம் செய்து சர்வதேசத்தின் தலையீடு அல்லது அறிவுறுத்துவது இந்திய ஆதிக்கத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது. எதையும் பேப்பர் வடிவில் மட்டுமே பாவித்துப்பழக்கப்பட்ட சிங்கள-இந்திய ஆட்சியாளர்கள் சர்வதேசத்திடமிருந்து இப்படியான ஒரு நெருக்கடி விரைவில் வரும் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழினத்தின் குரல்வளையை அடைக்கவல்ல சதித்திட்டம் நிறைந்த தரவுகள்தான் ஸ்ரீலங்காவின் அறிக்கையில் நிறைந்திருக்கின்றன, ஓரிரு சாதகமான பரிந்துரைகளும் தமிழினத்தை ஏமாற்றுவதற்காக இணைத்து செருகப்பட்டிருக்கின்றன. (கொடுக்காத கடன் என்றால் ஒரு ரூபாவென்ன ஒரு கோடி என்றால்த்தானென்ன எல்லாம் ஒன்றுதானே)

அமெரிக்க நெருக்குதலுக்கு பயந்து அறிக்கையை நடைமுறைப்படுத்த புறப்பட்டால் "தமிழினத்தை ஏமாற்றுவதற்காக செருகப்பட்ட" தமிழர்களுக்கு சாதகமான சிலவிடையங்களையும் செயல்ப்படுத்தவேண்டி வரும் என்ற ஐயமே "எவரும் தலைய்யீடு செய்து நிர்ப்பந்திக்காக்கூடாது" என்ற இந்தியாவின் திருத்தத்தின் தந்தரமாக காணலாம். நாளடைவில் போர்க்குற்றம் கிளறப்பட்டு சர்வதேச நீதிமன்றம்வரை செல்லவேண்டிய அபாயம் தோன்றிவிடும் என்ற அச்சமும். இந்திய இலங்கை ஆட்சியாளர்களை பறந்தடிக்க வைத்திருக்கிறது.

நடந்து முடிந்த ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்பில் விவாதிக்கப்பட்ட விடயமாகட்டும், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானமகட்டும் ஸ்ரீலங்கா அரசின் விருப்புக்கு மாறாக முரணாக எதையும் நிறைவேற்றிவிடவில்லை. ஸ்ரீலங்கா அரசால் வரையப்பட்ட எல்எல்ஆர்சி அறிக்கை பரிந்துரைகளை துரிதமாக நடத்தவேண்டும் என்கின்ற காலக்கெடு மட்டுமே இடித்துரைக்கிறது.

அமெரிக்க கொண்டுவந்த தீர்மானத்தை 47 அங்கத்துவ நாடுகளில் பெரும்பன்மையான அங்கத்துவ நாடுகள் ஆதரவாக வாக்களிக்க தயாராக இருந்தன. இந்தியா ஆரம்பத்தில் தீர்மானத்தை எதிர்த்ததும், இந்தியாவை ஸ்ரீலங்கா அதிபர் ஆதரவாக வாக்களிக்கவேண்ட்டாம் என்று கேட்டுக்கொண்டதும் செய்தியாக வந்தன. ஆனால் தீர்மானம் பெரும்பான்மை வாக்குக்களால் நிறைவேற்றப்படப்போகிறது என்பது தெரிந்ததும் இந்தியா நிலமையை உணர்ந்துகொண்டது. எதிராளியாக வெளியிலிருந்து முகமூடி கிழிக்கப்பட்டு மூக்குடைபடுவதிலும் பாற்க உள்ளிருந்து கழுத்தறுப்பு செய்யலாம் என்ற தந்திரத்துடன் தீர்மானத்துக்கு ஆதரவாக தானும் வாக்களிக்க இருப்பதாகவும் தீர்மானத்தில் சில திருத்தங்களை செய்யவேண்டும் என்றும் தீர்மானத்தின் உயிர்ப்புத்தன்மையான வசனங்களை மாற்றம் செய்து மந்தப்படுத்த இந்தியா முயன்று தன்னையும் காத்து நண்பன் ராஜபக்க்ஷவையும் காத்து உதவியிருக்கிறது.

ஐநா அமர்வின்போது தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தாலும், அமெரிக்காவின் தீர்மானம் ஓரளவு பெரும்பான்மை ஓட்டுக்களால் வெற்றியடைந்திருக்கும் என்பதே உலக நாடுகளின் கணிப்பும் யதார்த்தமும். தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின் எவரது தடைகளையும் பொருட்படுத்தாது மேற்குலகின் நேரடித்தலையீடு ஸ்ரீலங்காவை நெருக்கடிக்குள் ஆக்கியிருக்கும். இதனால் போர்க்குற்றம் சம்பந்தமான பல விசாரணை வேலைத்திட்டங்களை இந்தியாவாலும் தடுக்கமுடியாமல் போய்விடும் என்பதால் இந்தியா தனது வழமையான நரித்தனத்தை பாவித்து தீர்மானத்துள் புகுந்து சதிசெய்ய இருப்பது பின்னர் அறியலாம்.

உலகத்தமிழ் செய்தி ஊடகங்கள் இதை ஒரு வெற்றிச்செய்தியாக வெளிப்படுத்தின. வட இந்திய ஊடகங்கள் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியிருக்கின்றன. எதிர்கால விளைவின் வீரியத்தை உணராமல் அமெரிக்க எதிர்ப்பு அலைகளை உள் நாட்டில் ராஜபக்க்ஷ தூண்டிவிட்டிருக்கிறார். இதுகூட அமெரிக்காவை ஒரு கொதிநிலைக்கு இட்டுச்செல்லுமே தவிர தீர்மானத்தின் வீரியத்தை குறைக்குமெனச்சொல்லமுடியாது.

ஒருவேளை அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை காலதாமதமின்றி நேர்மையுடன் இலங்கை அரசு நிறைவேற்றினால் இலங்கை அரசின்மீது சர்வதேசத்திற்கு ஒரு நம்பிக்கை பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. மறுபுறம் ராஜபக்க்ஷ உள்ளூரில் சிங்களவர்களை தூண்டிவிடுவதுபோல அவரால் தீர்மானத்தை முற்று முழுதாக புறக்கணித்துவிடவும் முடியாது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டதுபோல மனித உரிமை மீறல் மற்றும் படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகளையும் துரிதப்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 22 வது கூட்டத்தொடருக்குமுன் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை காட்டியாக வேண்டும் அது நடக்கும் காரியம் என்றும் முடிவுக்கு வந்துவிடமுடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன.

சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை ஆதரித்து ஒட்டளித்த இந்தியா அதிருப்தியில் இருக்கும் ராஜபக்க்ஷவை சமாதானப்படுத்தும் வகையில் சமாதானக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பலகாரணங்களினால் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ""நடுநிலைத்தன்மையுடன் அமையவேண்டுமென இந்தியா முயற்சி மேற்கொண்டாகவும்"" பிரதமர் சிங் கூறியுள்ளார். எனினும், இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிப்பதே பிரச்னைக்கான தீர்வு என்பதை குறிப்பிட்டுள்ளார்.

மன்மோகனின் அந்தக்கூற்றிபடி மனிதத்தன்மையற்ற அரக்கத்தனமான படுகொலைவாதி ராஜபக்க்ஷவை காப்பாற்றவேண்டிய தார்மீகக்கடமை என்ன மன்மோகன் சிங்கிற்கு இருக்கிறது.

அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக ஏன் ராஜபக்க்ஷ, மன்மோகன்மீது மட்டும் அதிருப்திப்படவேண்டும்,

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் "நடுநிலைத்தன்மையுடன் அமையவேண்டுமென'' இந்தியா முயற்சி மேற்கொண்டாகவும் பிரதமர் கூறியுள்ளார்!?.

ஏன் இந்த பிரயத்தனமான முயற்சியை மேற்கொண்டு நடுநிலைத்தன்மையை நோக்கி திருப்புவதற்கு மன்மோகன் பிரயத்தனப்படவேண்டும்?. அத்துடன் "இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிப்பதே" பிரச்னைக்கான தீர்வு என்பதை குறிப்பிட்டுள்ளார். கடைசி வரியிலுள்ள சாரத்தின்படி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிக்காவிட்டால் பிரச்சினை மீண்டும் சர்வதேச அரங்கை நோக்கி சென்றுவிடும் என்பதும்,, அப்படிச்செல்லும் பட்ஷத்தில் இந்தியாவும் யுத்தக்குற்றவாளி என்ற உண்மை உலகம் ஆதாரபூவமாக உறுதிப்படுத்திவிடும் என்பதும் இந்தியாவால் புரியப்பட்டிருக்கிறது.

எத்தனை வல்லரசுகள் வந்தாலும், அசுரர்கள் தோன்றினாலும், "காலம்தான் சரியான நீதியான தீர்மானத்தை நிறைவேற்றிகிறது"

ஈழதேசம் இணையத்திற்காக.

கனகதரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.