Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் இந்தக் கிளர்ச்சிக் குழுத்தலைவன் பிரேம்குமார்?(பூராயப்பார்வை)

Featured Replies

சிங்கள தேசியவாதக் கட்சியான ஜே.வி.பி.யில் உருவாகிய உட்பூசலைத் தொடர்ந்து தனியான அணியை உருவாக்கிய பிரேம்குமார் குணரட்ணம் சனிக்கிழமை அதிகாலை கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்.

அதிகாலையில் வாகனம் ஒன்றில் வந்த ஆயுதக்குழு ஒன்று அவர் தங்கியிருந்த வீட்டை உடைத்து அவரைத் தூக்கிச் சென்றிருக்கின்றது. அவருடன் கட்சியின் மகளீர் அணிக்குப் பொறுப்பான திமுது என்பவரும் மற்றொரு இடத்தில் வைத்துக் கடத்தப்பட்டிருக்கின்றார்.

இந்தச் சம்பவங்கள் பிரேம்குமாரின் பக்கம் அனைவருடைய கவனத்தையும் மீண்டும் ஒருமுறை திருப்பியிருக்கின்றது. ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் போராட்டக்குழுவினர் அமைத்த புதிய கட்சியின் ஆரம்ப வைபவம் திங்கட்கிழமை (ஏப்ரல்-09) நடைபெறவிருந்த நிலையிலேயே அவர் கடத்தப்பட்டிருக்கின்றார்.

ஜே.வி.பி. மாற்றுக் குழுவினரைப் பொறுததவரையில் இச்சம்பவம் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகியிருக்கின்றது. அவர்களுடைய புதிய அரசியல் பாதையை வகுப்பதில் பிரதான பங்கு வகித்த பிரேம்குமார் காணாமல் போயிருப்பது அவர்களை அதிரவைத்திருக்கின்றது.

அவரை மீட்டெடுப்பதற்கான அனைத்து வகையான முயற்சிகளையுடம் அவர்கள் முன்னெடுப்பார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான். இந்த நிலையில், யார் இந்த பிரேம்குமார்? அவரது பாத்திரம் ஏன் முக்கியமானது என்பதை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்!

ஜே.வி.பி.க்குள் முரண்பாடு ஒன்று உருவாகியிருப்பதை அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க மறுத்திருக்கின்ற போதிலும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் ஒன்பது பேர் அதிருப்திக் குழுவுடன் இணைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள், பிரச்சினை உச்ச கட்டத்தில்தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்த உள்வீட்டுப் பிரச்சினை புதாகரமாகி இப்போதுதான் மற்றொரு கட்சி உருவாகும் நிலைமை உருவாகியிருக்கின்றது.

ஜே.வி.பி.யில் இன்று உருவாகியிருக்கும் கருத்தியல் ரீதியான இந்தக் கொந்தளிப்பு நிலைக்கு காரணமானவர் ஒரு தமிழர். அதாவது இனவாதக் கட்சி என அடையாளம் காணப்பட்ட ஜே.வி.பி.யை இன்று ஆட்டிப்படைப்பவர் ஒரு தமிழர். பிரேம்குமார் குணரட்ணம் என்ற இந்த 48 வயதான ஜே.வி.பி. முக்கியஸ்த்தர் கேகாலையைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை தமிழர் தாயார் சிங்களம். ஆனால் இவருக்குத் தமிழ்ப் பெயர்தான் சூட்டப்பட்டது. சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்றமையால் தமிழ் மொழியில் எழுதுவதற்கான போதிய பயிற்சியை இவர் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், சரளமாக தமிழில் உரையாடக்கூடியவர்.

கட்சித் தலைவர் சோமவன்ச குழுவினருக்கும் பிரேம்குமார் குழுவினருக்கும் இடையிலான இந்த மோதல் கட்சித் தலைமையகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது யார் என்ற அளவுக்கு விஸ்வரூபமெடுத்திருந்தது. ஆனால், சோமவன்ச குழுவினர் பொலிஸ் ஆதரவுடன் தலைமையகத்தைத் தக்கவைத்துக்கொண்டார்கள்.

சோமவன்ச தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் நன்கு அறியப்பட்டவர்கள். பிரேம்குமார் பிரிவினர் வெளியே நன்கு அறியப்பட்டவர்களாக இல்லாவிட்டாலும், கட்சியின் பலம்வாய்ந்த ஒரு பிரிவினராகவே இருந்துள்ளனர். உண்மையைச் சொல்லப்போனால் ஒரு தலைமறைவு இராணுவம் போன்றதாகவே அவர்களுடைய செயற்பாடுகள் இருந்தன.

கட்சித் தொழிற்சங்கத்தின் ஆதரவு சோமவன்ச தரப்பினருக்கு இருக்கின்ற போதிலும், கட்சியின் முதுகெலும்பாக உள்ள மாணவர் பிரிவு, மகளிர் பிரிவு மற்றும் கல்விப் பிரிவு என்பன பிரேம்குமாரின் ஆதரவுத் தளமாகவே உள்ளது. கட்சியின் பத்திரிகையான 'லங்கா'வும் சோமவன்ச பிரிவினருக்கு ஆதரவாக இருக்கவில்லை. இதனைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சோமவன்ச தரப்பு மேற்கொண்ட நடவடிக்கை பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு சென்று லங்கா பத்திரிகை நிறுத்தப்படும் அளவுக்குச் சென்றுவிட்டது.

இதனைவிட ஜே.வி.பி.யின் இணையத்தளங்களும் முடக்கப்பட்டுவிட்டன. இதனால்தான் ஜே.வி.பி.க்கு சவால்விடக்கூடியளவுக்குப் பலமான ஒரு அமைப்பாக தமது மக்கள் போராட்டக்குழுவை பிரேம்குமாரினால் அமைக்க முடிந்தது.

பிரச்சினை உச்சகட்டத்துக்குச் சென்று ஜே.வி.பி. இப்போது ஒரு திருப்பு முனையில் நிற்கின்றது என்பதே உண்மை.

சிறப்பான உள்ளகக் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ள ஒரு கட்சி எனப் போற்றப்படும் ஜே.வி.பி.யில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகளுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கட்சித் தலைவரையும், செயலாளரையும் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலரையும் வெளியேற்றிவிட்டு கட்சித் தலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு குழுவினர் மேற்கொண்ட முயற்சிகளையடுத்தே கட்சிக்குள் வெடிப்பு உருவாகியதாக சோமவன்சவுக்கு விசுவாசமானவர்கள் கூறுகின்றார்கள்.

இதனைவிட மற்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, ஜே.வி.பி. அண்மைக்காலமாக தேர்தல்களில் சந்தித்த தோல்விகளும், ஜே.வி.பி.யின் கோட்டைகள் எனக் கருதப்பட்ட பல இடங்களைக் கூட அவர்கள் கோட்டைவிட்டிருப்பதும் தலைமையை மாற்ற வேண்டிய ஒரு தேவையைத் தமக்கு ஏற்படுத்தியிருப்பதாக அதிருப்தியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தத் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு பிரேம்குமார் தரப்பினர் மேற்கொண்ட காய் நகர்த்தல்கள்தான் இன்று உருவாகியிருக்கும் நிலைமைக்குக் காரணம்.

இதேவேளையில், ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்கள் தாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக மூன்று காரணங்களை முன்வைக்கின்றார்கள்.

1. கடந்தகாலங்களில் ஜே.வி.பி. அமைத்திருந்த தேர்தல்காலக் கூட்டணிகள் அதற்கே பாதகமானதாக இருந்துள்ளது. குறிப்பாக சரத் பொன்சேகாவை ஆதரித்தமையை நியாயப்படுத்த முடியாது. ஜே.வி.பி. எப்போதும் தனித்தே செயற்பட வேண்டும் என்ற கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜயவீரவின் கொள்கைக்கு இது விரோதமானதாகும்.

2. இன நெருக்கடி விவகாரத்தில் ஜே.வி.பி. இனவாதப் போக்கைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கின்றது. இதனால் சிறுபான்மையினரின் ஆதரவை அதனால் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

3. ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்கள், எம்.பி.க்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள். உண்மையான சோஷலிசத்தை உருவாக்க அவர்கள் முற்படவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுக்களை ஜே.வி.பி. அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்ற போதிலும், 2009 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்ற ஜே.வி.பி.யின் தீர்மானமே உட்கட்சி முரண்பாட்டை உச்ச கட்டத்துக்குக் கொண்டுசெல்வதாக அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதென்ற தீர்மானம் ஜே.வி.பி.யின் அரசியல் குழுக் கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டது. தற்போது அதிருப்தியாளர்களாக வெளிப்பட்டுள்ள பிரிவினர் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் சோமவன்ச பிரிவினரால் மீண்டும் அந்த யோசனை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு கடுமையான வாதப் பிரதிவாதங்களின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1988-89 காலப் பகுதியில் ஜே.வி.பி.யின் கிளர்சியை ஒடுக்குவதற்காக சரத் பொன்சேகா மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டே அவருக்கு ஆதரவை வழங்கக்கூடாது என அதிருப்தியாளர்கள் வாதிட்டார்கள்.

இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சேர்ந்துதான் இப்போது கட்சியில் மிதவாதிகள், கடும் போக்காளர்கள் என்ற அடிப்படையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிருப்தியாளர்கள் கடும் போக்காளர்களாக இருப்பதால் அவர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்துக்குச் சென்றுவிடலாம் என்ற கருத்தில் அரச புலனாய்வுத் துறையும், அவர்களுடைய நடமாட்டத்தை நுணுக்கமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. பிரேம்குமார் எங்கே உள்ளார்? என்ன செய்கின்றார்? என்பதை அறிவதற்காக பொலிஸாரும் அவரைத் தேடி வலை விரித்துள்ளார்கள். பொலிஸாருக்கு மறைவாக உள்ள பிரேம்குமார் ஜே.வி.பி. யின் கிளர்சியை பின்னணியிலிருந்து தூண்டிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜே.வி.பி.யில் தற்போது உருவாகியிருக்கும் பிளவுக்குக் காரணமாகவுள்ள பிரேம்குமார் குணரட்ணம் ஒரு தமிழர் என்பதை முன்னர் பார்த்தோம். ஆனால், ஜே.வி.பி.யிலுள்ள பலருக்கே அவர் தமிழர் என்பது தெரியாது. காரணம் அவர் சரளமாக சிங்களம் பேசக்டியவர். எழுத வாசிக்கத் தெரிந்தவர். அத்துடன் பிரேம்குமார் என்ற அவரது பெயர் பிரேமகுமார என மருவி இறுதியில் 'குமார' அல்லது 'குமார ஐயே' அல்லது 'குமார மாத்தையா' என சிங்களமாக மாற்றமடைந்துவிட்டது.

தமிழில் சரளமாக உரையாடக்கூடிய இவர், தமிழில் எழுதவோ வசிக்கவோ மாட்டார். 1965 நவம்பர் 18 ஆம் திகதி கேகாலையில் பிறந்த இவர், சிங்கள மொழியிலேயே கல்விகற்றவர்.

இவரது சகோதரரான ரஞ்சிதம் குணரட்ணமும் ஒரு ஜே.வி.பி. தீவிரவாதிதான். போராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற அவர், ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பின் தலைவராகக் கடமையாற்றியவர். அரச படையினரால் அவர் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பிரேம்குமாரும் பேராதனை பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக அவர் கல்வியைத் தொடரவில்லை.

ஆயுதங்களைக் கையாள்வதிலும், வெடி குண்டுகளைத் தயாரிப்பதிலும் நிபுணத்துவத்தைப் பெற்றிருந்த பிரேம்குமர், 1988-89 காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் இராணுவப் பிரிவான 'தேசப் பிரேமி ஜனதா வியாபாரய'வின் திருமலை மாவட்டத் தளபதியாகக் கடமையாற்றியவர். கண்டியிலுள்ள பல்லேகலை இராணுவ முகாம் மீது ஜே.வி.பி. நடத்திய வெற்றிகரமான தாக்குதலை திட்டமிட்டு தலைமை தாங்கி நடத்தியதன் மூலமாக இவரது புகழ் அதிகரித்தது.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது ஜே.வி.பி.யினரால் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலிருந்து தப்பிச் சென்ற அவர், சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் மருத்துவர் ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.

1989 இல் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி பிரேமதாச அரசினால் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட போது, அதன் ஸடதாபகத் தலைவர் ரோஹண விஜயவீர உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவரால் மட்டுமே அப்போது உயிர் தப்ப முடிந்தது. அவர்தான் சோமவன்ச அமரசிங்க. இந்தியாவுக்குப் படகில் தப்பிச் சென்ற அவர், சில மாத காலம் இந்தியாவில் இருந்த பின்னர் அங்கிருந்து ஐரோப்பாவுக்குச் சென்றார். அங்கிருந்து தனது அரசியல் செயற்பாடுகளை அவர் ஆரம்பித்தார். இதனால்தான் நாடு திரும்பிய பின்னர் கட்சியின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

ஜே.வி.பி. அழிக்கப்படுவதற்குப் பிரதான காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண ஆகியோர் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் உருவாகிய அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் தேசிய அரசியலில் ஜனநாயக வழிமூலமாக பிரவேசிப்பதற்கான உபாயங்களை ஜே.வி.பி. வகுக்கத் தொடங்கியது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரேயொரு ஆசனத்தை ஜே.வி.பி. பெற்றுக்கொண்டது. இதன்பின்னர் மற்றைய கட்சிகளுடன் தேர்தல் கூட்டை உருவாக்கிக்கொள்வது ஜே.வி.பி.யின் உபாயமாக இருந்துள்ளது.

கட்சியின் முக்கிய பதவிகளைப் பெற்றவர்கள், மற்றும் எம்.பி.க்கள் மக்கள் மத்தியில் பிரபலத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், ஜே.வி.பி.யைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பிரிவினர் தொடர்ந்தும் தம்மை வெளிப்படுத்தாதர்வர்களாகவே இருந்தனர். கட்சியின் மத்திய குழு கடும்போக்காளர்கள் கட்டுப்பாட்டிலேயே பெருமளவுக்கு இருந்துள்ளது.

ஜே.வி.பி. தலைமையின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இந்தக் கடும்போக்காளர்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். குறிப்பாக அண்மைக்காலத்தில் ஜே.வி.பி. அமைத்துக் கொண்ட அரசியல் கூட்டணிகள் அதற்கே பாதகமானதாக அமைந்திருந்தது என்பதுதான் இவர்களுடைய பிரதான குற்றச்சாட்டாக இருந்துள்ளது. ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜயவீரவும் அரசியலில் கூட்டணி அமைப்பதை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஜே.வி.பி. எடுத்துக்கொண்ட தீர்மானம்தான் இந்த முரண்பாட்டை உச்ச நிலைக்குக் கொண்டுசென்றது.

ஜே.வி.பி.க்குள் உருவாகிய இந்த முரண்பாடுகள் எந்தளவுக்குத்தான் மோசமானதாக இருந்திருந்தாலும், அது தொடர்பான தகவல்கள் வெளியே கசியாதவாறு இரு தரப்பினரும் அண்மைக் காலம் வரையில் பாதுகாத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சோமவன்சவின் ஆதரவாளர் ஒருவர் பிரேம்குமாரின் ஆதரவாளர் ஒருவரினால் மாதிவெலையில் வைத்துத் தாக்கப்பட்டதையடுத்தே உட்கட்சி மோதல்கள் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்தன. இதன்பின்னரே பிரேம்குமார் பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே.வி.பி.யின் தகவல் பிரிவையும், 'லங்கா' பத்திரிகையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டடுவர பொலிஸாரின் துணையை நாட வேண்டிய நிர்ப்பந்தம் சோமவன்சவுக்கு ஏற்பட்டது.

ஜே.வி.பி.யின் மாற்றுக் குழுவான பிரேம்குமார் பிரிவினர் தமிழர் பிரச்சினையிலும் பெருமளவுக்கு அக்கறை கொண்டவர்களாகவே உள்ளனர். கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் சார்பாக யாழ்ப்பாணத்தில் இரண்டு தடவை ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு இவர்களால் மட்டுமே முடிந்துள்ளது. குடாநாட்டில் இவர்களின் தீவிர செயற்பாட்டாளர்கள் இருவர் சில மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமது மக்கள் போராட்டக்குழுவை ஒரு அரசியல் கட்சியாகப் பிரகடனம் செய்வதற்கான மாபெரும் நிகழ்வு ஒன்றை திங்கட்கிழமை (ஏப்ரல் -09) ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே பிரேம்குமார் கடத்தப்பட்டிருக்கின்றார். பிரேம்குமாரைக் கடத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது மிகவும் தெளிவானது. உயர்த்துடிப்புடன் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஒரு இளம் தலைவரை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்துவது அவர்களுடைய நோக்கமாக இருந்திருக்கலாம்!

பூராயத்துக்காக

கொழும்பிலிருந்து பார்த்தீபன்.

http://www.pooraayam.com/mukiaya/3473-2012-04-08-07-00-07.html

அடுத்த ஜெனீவா தீர்மானத்திற்கு, 22, சிங்களத்திற்கு எதிராக மேலும் நிலைமைகள் இறுக்கமடைய இவ்வாறான நிகழ்வுகள் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.