Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா பிரேரணையும் அதன் அரசியலும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா பிரேரணையும் அதன் அரசியலும்

- யதீந்திரா

சமீப நாட்களாக இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு வகையான திகில் அனுபவத்தை வழங்கிக் கொண்டிருந்த ஜெனிவா அரசியல் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. தெற்கின் சிங்கள தேசிவாத தரப்பினரை கவலைக்குள்ளும், தமிழ்த் தேசியவாத சக்திகளை மகிழ்சிக்குள்ளும் தள்ளும் வகையில் ஜெனிவாவின் முடிவு அமைந்திருந்தது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் ஜ.நாவின் மனித உரிமைகள் பேரவையில், 24 நாடுகளின் ஆதரவைப் பெற்றதன் மூலம் இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை வெற்றிபெற்றுவிட்டது. இப்போது எங்கள் முன் உள்ள கேள்வி - இந்த பிரேரணையின் அரசியலை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகின்றோம்? ஆனால் நம் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் சூடான விவாதங்களை பார்த்தால் - இந்த பிரேரணையின் அரசியலை எவருமே விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆகக் குறைந்தது அதனை விளங்கிக் கொள்வதற்கான முயற்சிகளை கூட மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த பிரேரணை வருவதற்கும், அது வெற்றிபெறுவதற்கும் யார் காரணம்? இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் தொடர்ச்சியாக பேசிவரும் மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு தாமே காரணம் என்று வாதிடலாம். புலம்பெயர் நாடுகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இலங்கை அரசுக்கு எதிராக திரண்டு நின்று போராடிய புலம்பெயர் தரப்பினர், அமெரிக்கா தமது அழுத்தங்களினால்தான் இத்தகையதொரு பிரேரணையைக் கொண்டு வந்தது என்று கூறலாம். அவ்வாறானவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்டு நின்று அமெரிக்காவிற்கு நன்றியும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் த.தே.கூட்டமைப்போ வேறு விதமாக வாதிடலாம் - இவைகள் அல்ல காரணம். நாம் தொடர்ந்தும் உறுதியுடன், இலங்கைக்குள் இருந்தவாறு அரசின் எதேச்சாதிகார போக்கிற்கு எதிராக போராடி வந்ததால்தான் இத்தகையதொரு நிலைமை உருவாகியது. நாங்கள் ஜ.நா.மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்துக்கும் அழுத்தங்களைக் கொடுத்ததால்தான் மேற்படி நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தன என்று கூட்டமைப்பால் வாதிட முடியும். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் சென்று விவாதிப்போரும் உண்டு. அவ்வாறானவர்கள், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை மாற்றியமைக்கும் வகையில் தமிழக தேசியவாத சக்திகள் கொடுத்த அழுத்தத்திற்கு அடிபணிந்தே இந்தியா மேற்படி பிரேரணையை ஆதரித்தது, இதன் காரணமாகவே ஏனைய பல நாடுகளும் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன என்றும் சொல்லக் கூடும். செந்தமிழன் சீமானும், வை.கோபாலசாமியும் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது என்று வாதிடும் மேதைகளும் நம்மத்தியில் இல்லாமலில்லை. அவ்வாறு சிந்திப்பதற்கு த.தே.கூட்டமைப்பிலும் கூட ஒரிருவர் உண்டு.

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் - ஏதோ 'கேட்கிறவன் கேணயன்' என்று அதன் அடி தொடங்கும். ஜெனிவா பிரகடனத்திற்கு பின்னர் வெளிவரும் இவ்வாறான வாதங்களை கேட்க நேரும் போதெல்லாம் அந்த பழமொழியே நினைவுக்கு வருகிறது. பொதுவாக தமிழ் சூழலில் காணப்படும் ஒரு பெரிய குறைபாடு, எல்லாவற்றிலும் நுனிப் புல் மேய்வது, பின்னர் அதனை ஒரு கண்டுபிடிப்பாக பறைசாற்றுவது. இத்தகைய பார்வைதான் இன்றுவரை நமது சூழலில் 'உலக ஒழுங்கு' என்று ஒன்று இருப்பதையும் அது நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இயங்குநிலையைக் கொண்டது என்பதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாமல் போனமைக்கான காரணமாகும்.

ஒரு வாதத்திற்கு மேற்படி அபிப்பிராயங்களை சரியென்றே எடுத்துக் கொள்வோம். நம்மில் சிலர் சொல்லிவருவது போன்று, தமது அழுத்தங்களினால்தான் இன்று அமெரிக்காவும் இந்தியாவும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன என்பது உண்மையானால், யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற வேளையில், குறிப்பாக புலிகள் தமது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தபோது ஏன் இத்தகைய அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இன்று பயன்பட்ட அழுத்தங்கள் ஏன் அன்று பயன்படவில்லை அல்லது புலிகள் அழிவடைய வேண்டும் என்பதுதான் உங்கள் அனைவரதும் விருப்பமாக இருந்ததா?

உண்மையில் அமெரிக்கா இலங்கை அரசு தொடர்பில் பிரேரணையை சமர்ப்பித்ததற்கும், பின்னர் அது வெற்றி பெற்றதற்கும் மேற்படி வாதங்களுக்கும் எந்தவிதமான நேரடி தொடர்புகளும் இல்லை என்பதே உண்மையிலும் உண்மை. ஆனால் சில மறைமுகமான தொடர்புகள் இருக்கின்றன என்பதை இந்த பத்தி மறுக்கவில்லை. குறிப்பாக த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும், மனித உரிமை அமைப்புக்களின் விமர்சனங்களையும் குறிப்பாக சனல்-4 இன் ஊடான உலகளாவிய பிரச்சாரங்களையும் தனது பிரேரணைக்கான நியாயமாக அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. உலகின் அதிபெரும் சக்தி என்னும் வகையில் அமெரிக்காவால் இத்தகைய தலையீடுகளைச் செய்ய முடியும் என்பது ஆச்சரியமான ஒன்றுமல்ல. ஆனால் அமெரிக்காவின் இத்தகைய தலையீட்டை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகின்றோம்?

அமெரிக்கா இலங்கையின் பொறுப்புக் கூறல் (Accountability) தொடர்பில் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து வருவதற்கும், அதன் சமீபகால மூலோபாய நகர்வுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புண்டு. அமெரிக்க வெளிவகாரச் செயலர் கிலாரி கிளின்ரன் (Hillary Clinton) 2011 ஆம் ஆண்டு வெளிவிவகாரக் கொள்கை (Foreign policy) சஞ்சிகையில் எழுதிய தனது கட்டுரையில், மூலோபாய ரீதியில் ஆசியா பெற்றுவரும் முக்கியத்துவத்தையும் அதில் அமெரிக்காவின் ஈடுபாட்டையும் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார். கிளின்ரன் ஆசிய - பசுபிக் பிராந்தியத்தை உலகளாவிய அரசியலில் பிரதான ஓட்டுனர் (key driver) என்று வர்ணித்திருந்தார். அவர் குறிப்பிட்டிருக்கும் பிறிதொரு விடயம் மிகுந்த முக்கியத்துமுடையது...

'அமெரிக்கா ஒரு முக்கிய திருப்புமுனையில் நிற்கிறது. ஈராக்கில் யுத்தக் காற்று ஓய்ந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து எமது படைகளை திருப்பி அழைத்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா கடந்த பத்து வருடங்களில் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு திரையரங்குகளிலும் பெருமளவு வளத்தை ஒதுக்கியிருந்தது. நாம் ஒரு திடமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது, அடுத்த பத்தாண்டுகளில் நமது தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் வகையிலும், நமது நலன்கள், விழுமியங்கள் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் நமது சக்தி மற்றும் நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஆசிய-பசுபிக் பகுதியில் நீடித்து நிலைக்கக்கூடிய பொருளாதார, ராஜதந்திர, தந்திரோபாய மற்றும் மூலோபாய விடயங்களில் முதலீடுகளை அதிகரிப்பதுதான் அமெரிக்கரின் மிக முக்கியமான சாணக்கிய இலக்காகும் (One of the most important tasks of American statecraft over the next decade) கிலாரி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் பிறிதொரு விடயம் மிகுந்த கவனத்திற்குரிய - 'ஆசியா, அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஆபத்தாக இருக்கிறது. ஆயினும் அமெரிக்காவின் ஈடுபாடு ஆசியாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமாக இருக்கிறது. எங்களது தலைமைத்துவத்திற்காகவும். வியாபாரத்திற்காகவும் இந்தப் பிராந்தியம் ஏக்கத்தோடு இருக்கிறது. ஒரு வேளை இது நவீன வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத ஒன்றாக இருக்கலாம்'

இந்த இடத்தில்தான் இலங்கை மூலோபாய நோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. யுத்த வெற்றிக்கு சொந்தமான இலங்கை அரசின் சமீபகால நகர்வுகள், அமெரிக்காவின் ஆசியா நோக்கிய மூலோபாய நகர்வுகளுக்கு குந்தகமாக அமைந்திருக்கின்றன. அது எவ்வாறான குந்தகமாக இருக்க முடியும்? ஆசியாவை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் மூலோபாய நகர்வில், அது இரண்டு வகையான தடைகளை எதிர்கொள்ளக் கூடும்... ஒன்று, சீனா, ரஸ்யா மற்றும் அவற்றுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஈரான் போன்ற நாடுகளின் மூலம் அமெரிக்க மூலோபாயம் நெருக்கடிகளை சந்திக்கலாம். மற்றையது, மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாத வலையமைப்புக்கள் (Chain of Terrorism) அமெரிக்க நகர்வுகளுக்கு முட்டுக்கட்டையாக அமையலாம். இந்த பின்னணியிலேயே அமெரிக்காவின் இலங்கை நோக்கிய நகர்வுகளை நாம் நோக்க வேண்டும்.

யுத்த நிறைவுக்கு பின்னர் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து வருவதானது அமெரிக்க ஆர்வங்களுக்கு ஏற்புடைய ஒன்றல்ல. தவிர, அது இந்திய ஆர்வங்களுக்கும் ஏற்புடைய ஒன்றல்ல. இந்த பின்புலத்தில்தான் நாம் அமெரிக்காவின் சமீபகால அழுத்தங்களையும், அதற்கு இந்தியா மறைமுகமான ஆதரவை வழங்கி வருவதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஜெனிவா விடயம் ஆரம்பித்த நாளிலிருந்து அதன் முடிவு வெளியாகும் வரை நமது ஆய்வாளர்கள் பலரும், இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்தியாவே ஜெனிவாவில் இலங்கையை காப்பாற்றப் போவதாகவும் கூறி வந்தனர் ஆனால் இந்தியா தனது முடிவை வெளிப்படுத்தியதும் அவ்வாறானவர்கள் திகைத்துப் போனார்கள். விடயங்களை குறிப்பான சூழலில் நின்று நோக்காமல் எங்களுடைய பிரச்சனையை மட்டும் மையப்படுத்தி சிந்திப்பதன் விளைவே அத்தகைய அவரச ஆய்வுகளுக்கு காரணமாகும்.

இதுவரை இந்தியா, கொழும்பை திருப்திப்படுத்துவதையே தனது முதன்மையானதொரு அணுகுமுறையாக கடைப்பிடித்து வந்தது. ஆனால் ஜெனிவா விடயத்தில் இந்தியா அத்தயைதொரு முடிவை எடுக்கவில்லை. இதனையும் நாம் மேற்படி அமெரிக்காவின் ஆசியா நோக்கிய மூலோபாய நகர்வுகளின் பின்னணியிலேயே உற்று நோக்க வேண்டும். இன்றைய ஒழுங்கில், அமெரிக்கா தனது மிக முக்கிய மூலோபாய பங்காளியாக இந்தியாவையே கருதுகிறது. பராக் ஒபாமாவின் வார்த்தையில் சொல்வதானால் இந்திய-அமெரிக்க உறவானது 21ஆம் நூற்றாண்டின் நிர்ணயிக்கும் பங்காளியாக அமையும் (defining partnerships of the 21st century). இந்த பின்னணியில்தான் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஒரு வேளை அமெரிக்காவால் இது முன்வைக்கப்படாது இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை செய்தது என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களே ஆகும். திருத்தம் செய்வதற்கு அது ஒன்றும் பாரதூரமான பிரேரணை அல்ல. மூத்தோர் அமைப்பைச் சேர்ந்த அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மரி றொபின்சன் குறிப்பிட்டிருப்பது போன்று அது ஒரு 'மென்மையான தீர்மானம்' மட்டுமே ஆகும். ஆனால் இதனை அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதை பொறுத்து விளைவுகள் அமையலாம்

இந்த பிரேரணை தமிழர்களுக்கு சில சாதகமான வாய்ப்புக்களை தரலாம் என்றவாறான கருத்துக்களும், இது எதனையுமே கொண்டு வந்துவிடப் போவதில்லை என்றவாறான குரல்களையும் ஒருங்கே கேட்க முடிகிறது. மேற்படி பிரேரணை எதைத் தரும், தராது என்ற வாதங்களில் காலத்தை விரயம் செய்வதைவிடுத்து தற்போது ஏற்பட்டிருக்கும் சர்வதேச ஆதரவு வெளியை தமிழர் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்திப்பதுதான் சாலப் பொருத்தமானது. அமெரிக்க, இந்திய நகர்வுகள் அவைகளது நலன்கள் சார்ந்தவை என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவிற்கு உண்மை, இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதும் அதற்கு இணக்கம் காணக்கூடிய ஒரு தீர்வு அவசியம் என்பதும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் உண்மையே! ஆனால் இதில் பிறிதொரு உண்மையும் உண்டு - மேற்படி சூழலை சரியாக கையாளாது விட்டால் மீண்டும் பாதிக்கப்படப்போவது தமிழர்களாகவே இருக்கும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=fdfe0417-dbd8-4487-8e5f-381a911c1744

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கிருபன்!

மிகவும் சிந்தித்துக் கவனமாக,, எமது காலடிகளை முன்னோக்கி நகர்த்த வேண்டிய இன்னுமொரு சந்தர்ப்பமாகவே இதை நாம் பார்க்கவேண்டும்!

எமது முன்னெடுப்புக்களை, முட்டாள்தனமென முளையிலேயே கிள்ளி எறியும் பல 'ஆய்வுகள்'' வரத் தொடங்கி விட்டன!

இணைப்புக்கு நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.