Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நந்திக் கடலோரம் .. ஒரு மீள்பயணம்

Featured Replies

நந்திக் கடலோரம் .. ஒரு மீள்பயணம்

- முல்லை சபா

காலம் திரைகளை நிறம் மாற்றி விரிப்பதுண்டு. வரலாற்றிற்தான் எத்தனை விசித்திரங்கள்?

கோடையிற் காய்ந்து மாரியிற் துளிர்க்கிற நந்திக்கடலில் இப்பொழுது மயான அமைதி. தன்னுடைய சனங்களை இழந்து போனேன் என்ற துயரத்தில் உறைந்து போன அமைதியா அது? அங்கே கடலில் விளையாடும் கறுத்த, மெலிந்து ஒடுங்கிய சிறுவர்கள் இல்லை. மாரியில் வலை படுக்கின்ற, கோடையில் கரப்புக் குத்துகிற அல்லது தூண்டில் போடுகிற மீனவர்களும் இல்லை. சீசனுக்கு வரும் கடற்பறவைகள் கூட இன்னும் வரவில்லை. உக்கிப் போன அல்லது உறைந்து போன கடந்த காலத்தின் எச்சங்களாகக் கரையோரங்களில் சிதைந்த சிறிய படகுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதைந்து கிடக்கின்றன.

சாம்பல் நிறப் படிகமாய் விரிந்திருக்கும் கடலின் மேலே மிதந்து கொண்டிருக்கின்றன வேறு சில புதிய படகுகள். அவை இலங்கைக் கடற்படையின் படகுகள் அல்லது இராணுவத்தினரின் படகுகள். நந்திக் கடலோரத்திலிருந்த கேப்பாபுலவு என்ற வன்னியின் மூத்த கிராமத்தையும் காணவில்லை.

இந்த மூத்த கிராமத்தில் பெரும்பாலும் பனை ஓலையால் வேய்ந்த சிறு வீடுகளே இருந்தன. ஒரு வளவில் அநேகமாக நான்கு அல்லது ஐந்து குடிசைகளிருக்கும். தலைவாசல், பெரிய வீடு அல்லது தாய்வீடு, அடுப்படி (குசினி), அருகே இன்னொரு குடிசை என்று. மூன்று குடிசைகள் ஆகாதென்பது சோதிடவிதி. அது அடுப்புக் கல் வடிவில் இருப்பதால் குடும்பத்துக்குப் பொருத்தமில்லை என்ற நம்பிக்கை. இந்த நான்காவது குடிசை பெரும்பாலும் களஞ்சிய அறை. அதற்கு மேலிருந்தாலும் நிச்சயமாக அது களஞ்சியந்தான். அதற்கப்பால் சற்றுத் தள்ளி, மாட்டுக்கொட்டில் என்று சொல்லப்படும் ஒரு குடிசை இருக்கும். அதை வண்டிற் கொட்டில் என்றும் சொல்வார்கள். அதற்குள்ளே மாட்டு வண்டி, அதற்குரிய பொருட்கள், நுகத்தடி, ஏர் (அப்பொழுது உழவு இயந்திரங்களையும் விட எருதுகளைப் பயன்படுத்தியே உழவைச் செய்தார்கள். எனவே அதற்கான கலப்பைகள்) போன்றவை அதற்குள் வைக்கப்பட்டிருக்கும்.

இருபது வருசத்துக்கு முதல், முதற்தடவையாக கேப்பாபுலவுக்கு நான் வந்தபோது எனக்கு வியப்பாயிருந்தது, அங்கே இருந்த நெல்லுக்கூடைகளே. வன்னியின் பிற இடங்களிலும் இந்த மாதிரி நெல்லுக்கூடைகள் இருந்தாலும் கேப்பாபுலவில்தான் முதன்முதலில் அதைக் கண்டேன். காட்டுத்தடிகளையும் மண்ணையும் கொண்டு செய்த கூடைகள். முற்றிலும் இயற்கை முறையில் அமைக்கப்பட்ட கூடைகள். ஆபிரிக்காவில் இன்னும் சில பழங்குடிகளிடம் உள்ளதைப்போன்ற ஒரு வழமை. அந்தக் கூடை ஒரு சிறிய களஞ்சியமே. அப்போதெல்லாம் பெரும்பாலான வன்னி விவசாயிகளிடம் பெரிய வீடுகளோ, நெல்லைப் பாதுகாப்பாக வைக்கக்கூடிய களஞ்சிய அறைகளோ இருக்கவில்லை. ஆகவே, அவர்கள் இந்த மாதிரியான கூடைகளையே களஞ்சியமாகப் பயன்படுத்தினார்கள். இந்தக் கூடைகளில் இரண்டாண்டுகள் வரையில் நெல் கெடாமல் மிகப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அந்துப் பூச்சிகள் போன்ற தொல்லைகளுக்கும் இயற்கை மருந்துத் தடைதான். சுமார் ஐந்து அடியிலிருந்து ஏழு அடிவரையான உயரம் கொண்ட இந்தக் கூடைகளின் அகலம் நான்கு அல்லது ஐந்து அடி விட்டத்தை உடையது.

இந்தக் கூடையை வீட்டுக்கு அருகில் தனியே அமைத்து வைத்திருந்தார்கள். அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒன்றோ இரண்டோ கூடைகளிருந்தன. கீழே மரக்கால்களை நாட்டி, அதற்குமேல் படுக்கையை அமைத்து, அந்தப் படுக்கையிலிருந்தே கூடையை அமைத்திருந்தனர். மழைக்காலங்களில் வெள்ளம் வந்தாலும் கூடையில் பாதிப்பு ஏற்படாது. மண் ஊறி கூடையைப் பாதிக்காதிருக்கவே இந்த மரக்கால்களின் ஏற்பாடு. மேலே வட்டக் குடில் வடிவிலான பனை ஓலைக்கூரை.

இந்த மாதிரி முழுதாகவே இயற்கையோடிணைந்த அமைப்பைக் கொண்டிருந்தது கேப்பாபுலவு. ஏராளம் மாடுகள் அங்கே நின்றன. கிழக்கே நந்திக்கடல். மேற்கே விரிந்து செல்லும் வன்னிப் பெருங்காடு. அங்கே இருந்த ஒன்றிரண்டு ஓட்டுக்கூரைகளையும் ஒரு பள்ளிக்கூடத்தையும் தபாற்கந்தோரையும் தவிர, வேறு எந்தப் பெரிய மாற்றங்களுமில்லாமலேயே 2009 வரையில் கேப்பாபுலவு இருந்தது.

கேப்பாபுலவுக்கு அருகில் இருந்தது சூரிபுரம். இது விடுதலைப்புலிகளின் காலத்தில் உருவாகிய சிறிய கிராமம். அநேகமாக ஏழை மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் ஒன்று சூரிபுரம். முக்கியமாக கேணல் சங்கரின் அடையாளமும் நினைவுகளுமே சூரிபுரம் எனலாம். கேணல் சங்கர் புலிகளின் விமானப்படைக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் கேப்பாபுலவுக்கு மேலே - சூரிபுரத்துக்கு அண்மையாக ஒரு முகாம் இருந்தது. அதனால், தன்னுடைய பார்வைப் பரப்பிலிருந்த சூரிபுரத்தை அவர் கூடுதற் கவனமெடுத்து மேம்படுத்தி வந்தார். இரணமடுவிலும் இந்தச் சூரிபுரத்திலுமே புலிகளின் விமான ஓடுபாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச் சூரிபுரம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானத்தின் மூலமே 1999 இல் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் போராளிகள் மலர்களைத் தூவியிருந்தனர். இப்போது கேப்பாபுலவும் இல்லை சூரிபுரமும் இல்லை.

நந்திக் கடலுக்கு மேற்கே, கேப்பாபுலவுக்கும் மேற்கே, சூரிபுரத்தோடிணைந்து விரிந்து செல்லும் பெரிய காடு இன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிக்கப்பட்ட காட்டின் வழியாக ஒரு புதிய பாதையைப் போட்டிருக்கிறார்கள். இந்தப் பாதையை இலங்கையிலுள்ள வீதி அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச சபை என்ற வீதி அமைப்புக்குப் பொறுப்பான எந்த அதிகார நிறுவனங்களும் அமைக்கவில்லை.

இது படையினரால் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வீதி. ஏற்கனவே இருந்த வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதி கேப்பாபுலவு ஊடாகச் சென்றது. அதை முறித்து, காட்டை ஊடறுத்து இந்தப் பாதையை அமைத்திருக்கிறார்கள். இந்த வீதியின் வழியாகவே இப்பொழுது முல்லைத்தீவுக்குச் செல்ல வேண்டும். அதாவது பரந்தன் - முல்லைத்தீவு வீதி ஊடாக நீங்கள் முல்லைத்தீவுக்குப் போக வேண்டுமென்றால், புதுக்குடியிருப்பிலிருந்து தெற்காக, கேப்பாபுலவு கள்ளியடி வயல்வெளியூடாக வற்றாப்பளை, முள்ளியவளை, தண்ணீரூற்று வழியாகவே போக வேணும்.

புதுக்குடியிருப்பிலிருந்து கிழக்காக முள்ளிவாய்க்கால் ஊடாக நந்திக்கடலின் கிழக்குக் கரையோரம் சென்று, வட்டுவாகல் பாலத்தின் வழியாக முல்லைத்தீவுப் பட்டினத்தினுள்ளே நுழைந்த காலம் போய்விட்டது. 2009 மே 19 இல் ஈழப்போர் முடிவுக்கு வந்ததோடு சனங்களுக்கான இந்த வழி அடைக்கப்பட்டுவிட்டது. பதிலாகப் படையினருக்கு மட்டுமே திறந்திருக்கிறது. ஆகவே, நந்திக்கடலின் மேற்காகக் காட்டு வழியாகச் சென்று முல்லைத்தீவைச் சேர வேண்டும். இந்தக் காட்டு வீதி படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

ஆனால், வீதியின் வழியாகப் போகும்பொழுது அவர்கள் யாரையும் மறிக்கவோ, சோதனையிடவோ, பதிவுகளைச் செய்யக்கோரவோ இல்லை. என்றாலும் இரண்டு பக்கமும் விரிந்திருக்கும் படைவலயத்தினூடாகவே செல்லவேண்டும். மிகப் பிரமாண்டமான படை வலயம்.

இந்தப் படைவலயம் புதுக்குடியிருப்புக்குத் தெற்கே பத்தாம் வட்டாரத்திலிருந்து கள்ளியடி, கேப்பாபுலவு, சூரிபுரம், வற்றாப்பளைக்கு அண்மையாக இருக்கும் சீனியாமோட்டைக் குளம் வரையில் நீண்டு விரிந்திருக்கிறது. உள்ளே காட்டின் ஆழத்துக்கு எவ்வளவு தூரம் வரையில் செல்கிறது என்று தெரியவில்லை. ஆனால் வெளியே தெரியும் தோற்றத்தைக் கொண்டு பார்த்தால் வன்னியின் இரண்டாவது பெரிய தளம் இது என்றே தெரிகிறது. முதற் பெரிய தளம் கிளிநொச்சியில் இரணமடுக்குளத்தை அண்டிய பகுதியில் உள்ளது. இந்தத் தளத்தை கடந்த சில மாதங்களுக்கு முன், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ திறந்து வைத்திருந்தார். அது கிளிநொச்சி மாவட்டத்துக்கான இராணுவத் தலைமையகம் என்று அறிவித்திருந்தனர்.

அதைப்போலவே இந்தக் கேப்பாபுலவு - சூரிபுரம் பகுதியில் உள்ள தளமும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான இராணுவத் தலைமையகமாக இயங்கி வருகிறது. இங்கேதான் மேஜர் ஜெனரல் மார்க் என்ற இராணுவத்தளபதி இருக்கிறார்.

புதுக்குடியிருப்பிலிருந்து இந்த வழியாகச் செல்வதாயின் நீங்கள் முதலில் சந்திப்பது, புதுக்குடியிருப்புச் சந்தியின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் சந்தியோடிணைந்திருக்கும் இடிபாடுகளையே. பத்தாம் வட்டாரத்திலிருக்கும் சூசையப்பர் தேவாலயம், றோமன் கத்தோலிக்கத் தமிழ்க்கலவன் பாடசாலை உட்பட அந்தப் பகுதியிலிருந்த வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் எல்லாமே முற்றாக அழிந்துள்ளன. 10 ஆம் வட்டாரத்திலிருந்த 'சுவையூற்று' என்ற விடுதலைப் புலிகளின் நவீன உணவகம் மற்றும் அதற்குப் பக்கத்திலிருந்த பேருந்து நிலையம் எதுவும் இருந்த அடையாளங்களே இல்லை. புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் ஐயனார் கோவிலடியில் நின்ற பெரிய ஆலமரங்கள் கூட முறிந்து சிதைந்து வெளியாகவே உள்ளது.

பற்றை மண்டிப் பயங்கரமாகத் தோற்றமளிக்கும் இந்த இடங்களில் அபாய எச்சரிக்கை நாடாக்களை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் கட்டியிருக்கின்றனர். ஆங்காங்கே படையினர் நிற்கின்றனர். புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தாலும் இந்தப் பகுதியில் மக்கள் இருப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. (முதலாம் வட்டாரம் மற்றும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம், பத்தாம் வட்டராங்கள் இன்னும் மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படவில்லை). ஆகவே, சனங்கள் இங்கே நடமாடக்கூட முடியாது. அவ்வளவுக்குப் பயங்கரம். அந்தச் சூழலைப் பார்க்கவே மயிர்க்கூச்செறிகிது. இறுதிக் காலத்தில் புதுக்குடியிருப்புச் சந்தியில் சந்தை அமைந்திருந்த பகுதி முற்றாகவே இல்லை. நிலைமையைப் பார்க்கும்போது இப்போதைக்கு இந்தப் பகுதியில் மக்களின் மீள் குடியேற்றம் சாத்தியப்படாது போலுள்ளது.

ஆனால் இந்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அணியொன்றுக்குப் பொறுப்பான ஜெரால்ட் என்பவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன்.

'இது இறுதி யுத்தம் நடந்த பகுதி. அதிலும் புதுக்குடியிருப்புப் பகுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று புலிகளும் புதுக்குடியிருப்பைக் கைப்பற்ற வேண்டும் என படையினரும் இறுதிச் சண்டையில் ஈடுபட்ட இடம் இது. அப்படியான ஒரு சூழலில் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இரண்டு தரப்பும் தங்களுடைய உச்சப் பலத்தைப் பிரயோகித்ததால் எல்லாமே அழிந்துள்ளன. இப்பொழுது நாங்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதிலும் அவற்றை இனங்காண்பதிலும் மிகச் சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. காலத்தைச் சரியாக வரையறுக்க முடியவில்லை. என்றாலும் முடிந்தவரையில் விரைவாகக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்குத் திட்டமிட்டு வேலைசெய்கிறோம்' என்றார் ஜெரால்ட்.

இந்தப் பகுதியைக் கடந்து சென்றால், அடுத்தது, கேப்பாபுலவு கள்ளியடி வயல்வெளிக்கிடையிலிருக்கும் காட்டுப் பகுதி. இந்தப் பகுதியில் படையினரின் இரண்டு தளங்களிருக்கின்றன. இதைக் கடந்து வயல்வெளியில் இறங்கினால், விதைப்பின்றிக் காய்ந்து வெளியாகிக் கிடக்கிறது அந்த வெளி.

முன்னர் இந்த வெளியில் செம்மண் தெருவின் இருண்டு பக்கமும் பச்சை விரிப்பாக நெற்பயிர்கள் காற்றிலசைந்து கொண்டிருக்கும். ஒரு மலைப் பிரதேசத்தைப்போல சாம்பல் நிறத்திலான தொலைதூரக் காடுகளின் மத்தியில் விரிந்திருக்கும் பச்சைவெளி வன்னியின் அபூர்வ அழகில் ஒன்று. அங்கங்கே நிற்கும் பனைகள் அந்த விரிந்த வெளிக்கொரு கம்பீரம். இன்னொரு பார்வையில் பார்த்தால் மேலே குடையாக விரிந்திருக்கும் வானத்தை இந்தப் பனைகளே தாங்கிப் பிடிப்பதைப்போலிருக்கும்.

அந்தப் பனைகளின் கீழே, வயலோரங்களில் ஆயிரக்கணக்கான மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். மாடுகளை இப்போது நீங்கள் தேடத்தேவையில்லை. அவை ஒன்றுமே அங்கில்லை. பதிலாக யுத்தகால மண் அணைகளும் அறுத்தோடிகளும்தான் உள்ளன. இன்னும் எதுவும் சீராக்கப்படவில்லை.

இந்த வயல்வெளியின் தொங்கலில் எப்போதும் வற்றாத ஒரு ஆறு பாய்ந்து கொண்டிருக்கும். அந்த ஆற்றுக்கருகில் மருத மரங்களின் நிழலில் வீசும் கள் வாசனையையும் காணவில்லை. கள்ளோடு சேர்ந்து வரும் குரல்களும் அங்கில்லை. எல்லாமே காய்ந்து விட்டன.

இதைக் கடந்து மேலும் சென்றால், கேப்பாபுலவு வீட்டுத்திட்டம் வரும். ஆனால்,

இப்பொழுது அது வராது. பதிலாக அங்கே நீண்ட முட்கம்பி வேலியும் இடையிடையே தொங்கவிடப்பட்டிருக்கும் 'இலங்கை விமானப்படைக்கான நிலம்' என்ற அறிவிப்புப் பலகைகளுமே வரும். ஏறக்குறைய மூன்று நான்கு கிலோ மீற்றர் நீளத்துக்கு இந்த அறிவிப்பைப் போட்டிருக்கிறார்கள். இடையிடையே படையினரின் காவலரண்கள். நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பை விமானப்படைத்தளத்துக்காக – அல்லது விமானப்படையின் பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த நிலத்தில் ஒரு பகுதி சனங்களுக்குச் சொந்தமான புலவு. ஏனையவை வனப்பகுதி. அரசுக்குரியது.

இதைக் கடந்தால்...

கேப்பாபுலவுக்குப் போகாமலே பாதை முறிகிறது என்று சொன்னேனல்லவா! இப்படிப் பாதை முறியும்போது நம்மைத் தொடர்கிறது படை வலயம்.

மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளில் மண் அணைகள். முட்கம்பி வேலிகள். உள்ளே, காடுகளினுள்ளே விரிந்து கொண்டே செல்லும் படையணிகளின் தலைமையகங்கள். எனவே பாதைகள், கட்டிடங்கள், தகவற் பரிமாற்றக் கூடாரங்கள் என அதற்கேற்ற அமைப்புகள். இதைவிட தொலைத்தொடர்புக் கோபுரங்கள். இதையொரு இராணுவ நகரம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதன் அமைப்பும் பிரமாண்டமும் ஏற்பாடுகளும். இங்கேதான் நான் முன்னர் குறிப்பிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மார்க் இருக்கிறார். கிறிஸ்தவரான இவர் ஒப்பீட்டளவில் மற்றவர்களை விடச் சற்றுப் பரவாயில்லாதவர் என்று பிரதேசவாசிகள் சொல்கிறார்கள்.

ஆனால், அருகிலிருக்கும் இரண்டு முக்கியமான ஊர்களைத் தன்னுடைய கால்களின் கீழே மார்க் வைத்திருக்கிறார். அவற்றை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பதைப் பற்றி அவர் இன்னும் யோசிக்கவில்லை. அல்லது அந்தச் சனங்களையும் விட படைகளின் நலனே அவருக்குப் பெரிதாகத் தோன்றியிருக்கலாம். அல்லது சனங்களை அங்கே குடியமர்த்துவதற்கான அனுமதி அவருக்குக் கிடைக்கவில்லை.

ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், முல்லைத்தீவு நகரைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு கேப்பாபுலவு என்ற நந்திக்கடலுக்கு மேற்கேயுள்ள இந்தப் பிரதேசம் படைகளுக்குத் தேவை என்று இராணுவத் தந்திரோபாயம் சொல்கிறது.

முன்னர் முல்லைத்தீவு நகரில் மட்டுமே படையினர் இருந்தனர். அது ஒரு சிறிய தீவுப் பகுதி. எனவே அங்கிருந்த படையினரைச் சுற்றி வளைக்கவும் அவர்களின் மீது தாக்குதலைத் தொடுக்கவும் புலிகளுக்கு வாய்த்தது. ஆகவே, எதிர்காலத்தில் அப்படியொரு அச்சுறுத்தல் எந்த வடிவில், எப்போதும் ஏற்படாதிருக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையை கடந்த கால அனுபவம் படைத்துறைக்குக் கொடுத்திருக்கிறது. அதனால் அவர்கள் வெளியரங்கில் - தங்களின் தளத்தை விரித்துள்ளனர். ஏறக்குறைய மன்னார்த் தீவுக்கு வெளியே இருந்த தள்ளாடித் தளத்தைப்போல. ஆனால், அதையும் விடப் பல மடங்கு பெரியது இந்தத்தளம். இது இராணுவத்தளத்தோடு விமானப்படையின் தளத்தையும் இணைத்தது.

கேப்பாபுலவு, சூரிபுரம் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டும் காணாமற் போய்விடவில்லை. அங்கே இருந்த சனங்களும் இல்லை. நந்திக்கடலில் துள்ளும் பால் முரலோடு விளையாடும் மனிதர்களும் சிறுவர்களும் காணாமற் போய்விட்டார்கள். கள்ளியடி வயலின் பச்சையும் கள்ளின் மணமும் காணாமற்போய் விட்டன. கேப்பாபுலவிருந்து தேனெடுக்கவும் வேட்டைக்குப் போவதும் போய்விட்டது. அங்கே இப்போது தன்னிச்சையாகப் பழுத்துச் சொரியும் முரலிப் பழங்களையும் பாலை, வீரைப்பழங்களையும் படையினரே தின்கிறார்கள். நெய் முறுக்கேறிய பன்றிகள் கவனிப்பாரின்றித் திரிகின்றன.

நந்திக்கடல் அமைதியாகக் கிடக்கிறது.

'முல்லைத்தீவில் எல்லாமே பாழடைந்து விட்டது

மனிதர்கள் கட்டியதை

மனிதர்களே இடித்து விட்டார்கள்

மனிதர்களை மனிதர்களே

கொன்றும் எரித்தும் விட்டார்கள்

ஆனால்,

மனிதர்களை விட மூத்ததும்

பெரியதுமான கடல்

எதனாலும் காயப்படாமல்

எல்லா நிச்சயமின்மைகளின் பின்னாலும்

ஏக நிச்சயமாக

அது ஒரு தேவதையைப்போல

அழகிய கடல்

ஒரு முனிவரைப் போல

அமைதியானது

வானத்தின் நீலமெல்லாம் கரைந்து

கடலானது போல நிறம்

மனிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள்

நகரங்கள் கட்டப்படும் இடிக்கப்படும்

ஆனால் கடல்

வருவதுமில்லை போவதுமில்லை

யுத்தமோ சமாதானமோ

எதுவும் அதைத் தீண்டுவதில்லை'

- (நிலாந்தன், மண்பட்டினங்கள்).

கோடையிற் காய்ந்து மாரியிற் துளிர்க்கிற இந்தச் சிறிய கடலேரியின் கரைகளைச் சுற்றி சிறிய குடியிருப்புகளும் சனங்களின் காலடிச் சுவடுகளும் பன்னெடுங்காலமாய் நீக்கமற நிறைந்திருந்தன. 2009 மே யில் வரலாற்றின் தீராச் சோகத்தையெல்லாம் நந்திக் கடல் தன்னுள் கொண்டபோது அவையும் அந்தத் துயருக்குள் புதையுண்டு போயின.

இன்றோ, காய்ந்து வரண்ட அந்தக் கரையோரங்களில் துக்கமே விளைந்து கிடக்கிறது.

'இதோ

மனிதர்கள் மறுபடியும் வருகிறார்கள்

இனி

மண்ணால் ஒரு பட்டினத்தைக் கட்டுவார்கள்

ஓ... கடலே

மூத்த கடலே

அன்பான பெருங்கடலே

நீ மண்பட்டினங்களின் உறவாயிரு...'

- (நிலாந்தன், மண்பட்டினங்கள்).

என்று வரலாற்றில் நம்பிக்கை கொள்வதைத் தவிர, என்னதான் செய்யும் மனித மனம்?

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=205d5569-6465-48e6-aa7a-16fe69d365e7

'இதோ

மனிதர்கள் மறுபடியும் வருகிறார்கள்

இனி

மண்ணால் ஒரு பட்டினத்தைக் கட்டுவார்கள்

ஓ... கடலே

மூத்த கடலே

அன்பான பெருங்கடலே

நீ மண்பட்டினங்களின் உறவாயிரு

ஆம் அந்த மனிதர்கள்,மறுபடியும் பட்டினத்தைக்கட்டப்போகும் மனிதர்கள் தயாராகிவிட்டார்கள். இதை எப்படி இவ்வளவு உறுதியுடன் நான் கூறுகிறாய் என்று என்னிடம் அன்பாய் நீ கேட்பாய் கடலே. ஏனனில் அந்த மனிதர்களின் மையத்தில் நான் வாழுகின்றபடியால் இவ்வளவு உறுதியாக உனக்கு கூறுகிறேன் என் இனிய கடலே.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.