Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டான் - டானியல் ஜீவா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குட்டான்

டானியல் ஜீவா

விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள். நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிவிட்டன. வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேலோங்கும். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது . என்னுடைய வீட்டுக்காரர் இருவீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். ஸ்காபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன். அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம் பார்த்து வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில் தனக்கு தெரிந்த தமிழ்ச் சனத்தைக் குடியமர்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் இந்த இருவீடுகள் பற்றிக் கணவனும் மனைவியியும் புளுகித் தள்ளுவதில் தங்களது ஓய்வு நேரங்களைத் தொலைத்துக் கொண்டிருந்தார்கள். நான்அவை எல்லாவற்றுக்கும் மறுப்புச் சொல்லாமல் “ம்” போடுவதை என்னுடைய வழக்கமாகக் கருதினேன்.

வீட்டின் அறையில் நான் குடித்தனம் செய்யவர முன் இந்த அறையைப் பற்றித் தமிழ்ப் பத்திரிகையில் “தளபாடத்துடன் கூடிய அறையொன்று வாடகைக்கு” என்று தான் விளம்பரம் போடப்பட்டிருந்தது. அறையை வாடகைக்கு எடுத்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் “மரமஞ்சள்”அவிச்சுக் குடிக்க வேண்டிய நிலையென்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள். கட்டிலின் நான்கு பக்கங்களும் கறள் கட்டிய கம்பியால் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது. சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கம்பிகளின் சிறிய பகுதிகள் வெளித் தள்ளப்பட்டுக் காணப்படும். இந்தக் கம்பிகள் என் கால்களில் அடிக்கடி தட்டுப்பட்டுக் காயக்கீறல்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தன. மெத்தையில் என் உடல் சாய்ந்தால் ஏதோ ஒருபள்ளத்திற்குள் தொப்பென விழுவது போன்ற தொரு உணர்விலிருந்து என்னால் தப்பவேமுடியாது.

ஒருகால் முறிஞ்ச பழைய மேசை, ஒரு பழைய கதிரை, சின்ன ரீப்போ இவைகளைத்தான் கனடாவில் தளபாடத்துடன் அறை வாடகைக்கு விடப்படும் என்று விளம்பரப்படுத்துவது வழக்கமாய்ப் போய்ச்சுது…?

நான் இங்கு வந்த போது இருந்த மனநிலை படிப்படியாகமாறி இந்த வீட்டின் சொந்தக்காரர் குமார் எனக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார். ஒவ்வொரு வெள்ளியிரவும் குடிப்பதிலேயே குமாருக்கு அந்த இரவு அழிந்துவிடும். நான் ஒரு அறையில், அடுத்த அறையில் இன்னொரு பொடியன். அவனும் காலப் போக்கில் எனக்கும் குமாருக்கும் நண்பனாகிவிட்டான். அவனுடைய பெயர் விநாயகமூர்த்தி. ஆனால் நானோ குமாரோ அல்லது குமாரின் வீட்டுக்காரரோ அவனை அப்படி அழைப்பதில்லை. மாறாக “குட்டான்” என்றுதான் நாங்கள் எல்லோரும் அவனை அழைப்பது வழக்கம். அவன் மிகவும் குள்ளமாக இருப்பதே அவனை அப்படி அழைப்பதற்கு மிக முக்கியமான காரணம். அவனை ஆரம்பத்தில் குட்டான் என்று நாங்கள் அழைத்தபோது அவன் கொஞ்சம் சங்கடப்பட்டாலும் காலப் போக்கில் அவன் விரும்பியோ விரும்பமாலோ அவனுக்கு அந்தப் பெயரே நிலைத்தது.

குமாரின் இரண்டு பிள்ளைகளும் சுறுசுறுப்பான சுபாவம் கொண்ட பிள்ளைகள். தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொள்வார்கள். அப்படி அவர்கள் கதைப்பது குமாரின் மனைவிக்குப் பெருமையாக இருக்கும். குமாரின் மனைவி சாந்தாவை நாங்கள் சாந்தாக்கா என்றுதான் அழைப்போம். சாந்தாவுக்கு அவ்வளவாக ஆங்கிலம் பேசவோ எழுதவோ தெரியாவிட்டாலும் அரை, குறையாக ஆங்கிலத்தில் பிள்ளைகளோடு பேசுவதை எப்போதும் பெருமையாக நினைப்பாள். வீட்டில் மொத்தமாக நான்கு அறைகள். ஒர் அறையில் நானும், மற்றைய அறையில் குட்டானும், இன்னொரு அறையில் குமாரின் அப்பாவும் அம்மாவும் மற்றைய அறையில் குமார் குடும்பமுமாய் அந்த வீடு “கொழும்பு ஐலண்ட்” லொட்ச்சுப் போல இருக்கும். நான் சாப்பாட்டோடு மாதம் நானூறு டொலர் கொடுக்கிறேன். அது போல் குட்டானும் கொடுப்பான் என்று தான் நினைக்கிறேன். குமாரின் பெற்றோர் சமூகக் கொடுப்பனவுப் பணத்தில் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குமாருக்கு மாதம் எவ்வளவு அவர்கள் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி இன்றுவரையும் எனக்கு தெரியவில்லை.

குமாரின் அம்மாவுக்கு கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கலாம். ஆனால் நவநாகரீக மங்கை போலவே தோற்றம். இரண்டு கைகளிலும் தங்க வளையல் அடுக்கப்பட்டிருக்கும். மோதிரங்கள் மூன்று எப்போதும் விரல்களை அலங்கரித்திருக்கும். கண்களில் அஞ்சனம் அழகாய் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் பூசுவதைமட்டும் மறப்பதில்லை. உதட்டில் சாயம் எப்போதும் உட்காந்திருக்கும். உடையில் மேலேத்தேய நாகரீகம் தூக்கலாய் இருக்கும். அடிக்கடி கண்ணாடி முன் நின்று சரிபார்க்கும் குமாரின் அம்மாவிற்கு நிறம் மட்டும் கறுப்பாக இருப்பதாகக் கவலை. ஆனாலும் வெளிப்பார்வைக்கு அவர் தன்னுடைய குறையாக அந்த நிறப் பிரச்சனையை என்றும் காட்டிக் கொள்வதில்லை.

இன்று வெள்ளிக்கிழமை. வழமையான நாட்களிருந்து எங்களுக்கு இந்த நாள் வேறுபட்டே இருக்கும். ஏனென்றால் இன்று தான் வீட்டிலிருக்கும் எல்லோரும் ஒன்றாய்ச் சந்திக்கும் நாள். குமாரின் பெற்றோர்கள் நடுவிறாந்தையில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் இருக்கும் “இத்தாலியன் லெதர் சோபா” வில் உட்கார்ந்து விட்டார்கள். குமார் வேலை முடிந்து வருவதற்கு இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கின்றது. குட்டான் வேலை முடிந்து வந்து குளித்துவிட்டு அவனுடைய அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான். சாந்தா நல்ல வாசம் மூக்கைத் துளைக்கிற மாதிரி கறி சமைத்துக் கொண்டு குசினிக்குள் நின்றாள். பொதுவாக நான் சாப்பிடுவதற்காக நடுவிறாந்தைக்கு வரும் போது சாந்தா சோபாவில் இருந்தால் குமாரின் பெற்றோர்கள் சாந்தாவுக்கு முன்னால் வந்து உட்காரமாட்டார்கள்.

நான் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது சாந்தாவைத் தவிர வேறு யாரும் வீட்டில் இருக்கவில்லை.அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாந்தா தன் நெஞ்சுக்குள் அடுக்கடுக்காய் சேமித்து வைத்த பிரச்சினைகளை வாய்விட்டுத் கொட்டித் தீர்த்தாள். சாந்தா எனக்குத் தன்னுடைய மாமா மாமியை பற்றிச் சொன்ன குற்றச்சாட்டுக்கெல்லாம் “ம்” போட்டபடியே இருந்தேன். சில பிரச்சினைகள் பற்றி கதைக்கும் போது குறுக்காகச் சாந்தாவிற்கு நோகாமல் சில கேள்விகளையும் தொடுத்தேன். பொதுவாக சாந்தாவின் உப்புச்சப்பில்லாத நொண்டிச்சாட்டுகளில் எனக்கு உடன்பாடில்லை. நேற்றுக் கேட்ட சில கேள்விகளுக்கு சாந்தா சொன்ன பதில்கள் வேடிக்கையோடு என் மனதில் இழையோடியது.

“அக்கா..இங்கை முதியோரை ஸ்பொன்சர் பண்ணி எடுத்தவங்க அவர்கள் வந்த பின் பொதுவாக கொடுமைப்படுத்துறாங்க எண்டுதான் பரவலாய் கதையிருக்கு. ஆனா நீங்க சொல்றதப் பார்த்தா உங்கட மாமி மாமா தான் உங்களை கொடுமைப்படுத்துவது போல இருக்கே..? என்றுகேட்டதற்கு,

‘ம்’ பேந்தென்ன தம்பி. நீ இன்னும் கல்யாணம் பண்ணேலெயெண்டா அது உன்ர சொந்தப் பிரச்சினை அதேயேன் உன்னட்டத் தோண்டித் தோண்டித் கிளறவேணும் இதிலயிருந்து அவங்கட குணத்தை நாங்க அறியேலாதா..?

சில வேளை அவங்களுக்கு என்னுடைய வாழ்க்கையில அக்கறையிருக்கலாம் தானே…?

அவையளுக்கு உன்ர வாழ்க்கையில அக்கறையா..? இது மெய்யாத்தான் இருக்குமோ.. அது அவையின்ர நடிப்பு.. தன்ர சொந்தப்பிள்ளை படுகிற கஸ்டத்தையே உணராமல் இருக்கினம். அதுக்குள்ள உங்கட வாழ்க்கை பிரச்சினையிலையா அக்கறை வந்திருக்கும். அவங்க சுபாப்புத்தியே மற்றவங்கட பிரச்சினையை தோண்டித் தோண்டித் கேட்கிறது தான்… என்னைப்பாருங்களேன். வேலை முடிஞ்சு வந்து சும்மா சோபாவில இருந்தால் குசினிக்குள் ஏதோ செய்யிறமாதிரி நிண்டுகொண்டு குத்தலாய் கதைப்பாள்… எத்தினை நாளைக் கெண்டுதான் நானும் பொறுத்துக் கொள்ள அதென்ன தம்பி இந்த வயசிலேயே அவியள்பட்டப் பகலியே அறையை பூட்டிக் கொண்டு புதுசாக கல்யாணம் செய்தவியள் மாதிரிஆட்டம் போடுகினம் பேரப்பிள்ளையை கண்ட காலத்திலேயே இப்படியெண்டால் அந்தக் காலத்திலே எப்படி சோக்குப் பண்ணியிருப்பினம்? இதுக்கு மேலே இரண்டு பேரும் குடியும் கும்மாளமும்… ச்சீ… எங்கட பரம்பரையிலேயே பொம்பிளைகள் குடிச்சதாய் இது வரைக்கும் வரலாறு கிடையாது. இவையளுக்கு வெக்கம் மானம் ரோசம் கிடையாது. என்ர மனுசனையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குடிக்கினம். இதென்ன அறுந்த குடும்பம்.தெரியாமல் வந்து இந்த சாக்கடைக்குள்ள விழுந்திட்டேன்.

ஒரு அடைமழை பெய்து ஓய்வெடுத்தது போல அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் தெறித்து அமைதியானாள். ஏன் அமைதியானாள் என்பது எனக்கு புரியவில்லை. என்னைக் கதைக்கவிடமால் தானே வெடுவெடுத்துக் கதைத்துக் கொண்டிருந்தவள் ஏன் திடீரென உறைநிலையானாள்.? ஒற்றைப்பின்னல் கூந்தல் மார்ப்பிக்கிடையில் நெளிந்து அழகு கீறிக்கிடந்தது. நெற்றியல் சிவப்புநிலா.. இரண்டு காதோரமும் முடி நீண்டு சுடுண்டு மடிந்து கிடந்தது. அது விரல்களால் சுருட்டி விடப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி சுருட்டி விடுகிற பழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம். கழுத்தில் தங்கத்தாலி அதன்மேல் முத்தமிட்டபடி மல்லிகைமொட்டு சங்கிலி கிடந்தது. மௌனம் போர்த்திக்கிடந்த முகத்தை ஏறிட்டு பார்த்தேன். விக்கித்துப் போனேன். கண்கள் சிவத்து மெல்ல மெல்ல கண்ணீர் சிறு ஓடையாய் ஒடியது.

“சாந்தா அக்கா ஏன் அழுகிறியள்..?”

‘……..’

ஒன்றும் பதில் சொல்லாமலே இன்னும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

மீண்டும் கெஞ்சும் குரலில் “என்னண்டு சொல்லிப் போட்டுத்தான் அழுங்களன் அக்கா……?” என்றேன்.

அவள் எதுவும் பேசுவதாக தெரியவில்லை. நான் இதற்கு மேல் கதைக்காமல் என்னுடைய அறைக்கு போய்விட்டேன். கணனிக்கு முன்னால் நான் இருந்து இலங்கைச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நேற்று நடந்த இந்தநினைவும் வந்து தொலைந்தது. அறைக்குள் இருந்து நான் விறாந்தைக்கு வரவும் குட்டானும் வெளிவிறாந்தைக்கு வரவும் சரியாக இருந்தது.

“என்னடா குட்டான் முகமெல்லாம் அதைச்சுப் போய்க்கிடக்கு… ஏன்ரா இரவெல்லாம் முழிச்சிருந்து தமிழ் நாடகங்கள் பார்த்தனீயோ..?”

“இல்லையடா மச்சான் இரவில இப்ப நித்திரை வாறது குறைவாயிருக்கு.. இப்ப புதுசா சேர்ந்த இரண்டாவது வேலை சரியான கஸ்டமடா அதுதான் இரவில கொஞ்சம் நித்திரை வரப்பஞ்சிப்படுகிது. அதாலதான் மூஞ்சி அதைச்சுப் போய்க்கிடக்குது.. என்ன செய்யிறது இங்க உழைக்கத்தானே வந்தனாங்க. உடம்பு ஏலும் மட்டும் அடிப்போம்… எங்கட கஸ்டத்தை மற்றவங்களுக்கு சொன்னாப்போல தரவா போறாங்க.” என்று சொல்லிக் கொண்டு பக்கத்தில் இருந்த சோபாவில் உட்கார்ந்தான்.

நான் சோபாவிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்க குமாரின் அம்மா என்னைப் பார்த்து

“கொஞ்சம் இரன் தம்பி சோபவில்” என்று சொல்லவும் நான் சோபவில் உட்காந்துகொண்டேன்.

“இஞ்ச பார்த்தியளா குட்டான்ர கதையை நாங்க என்ன கேட்டா உதவி செய்யமாட்டோமா?”

அவளுடைய இயல்பான கேலியும் கிண்டலும் கலந்த குரலில் மனமுருகி கேட்பதுபோல் குமாரின் அம்மா கேட்டாள். குட்டானுக்கு கோபம் வந்ததோ என்னவோ ஒரு குத்தலாக கதையைப் போட்டான்.

“நீங்களே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீயள் அதுக்குள்ள எனக்கு உதவி செய்யப் போவினயாம். கொஞ்சம் உள்ளுக்குள்ள போனவுடனே என்ன கதைக்கிறதென்டு தெரியாமல் வாயில் வந்ததெல்லாத்தையும் கொட்டுறியள்.”என்றான். குமாரின் அம்மாவுக்கு முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. வலியும் அவமானமும் கொதிப்புமாய் உயர்ந்தது உடலில்.. கோபக்குவியலாய் முகம் இறுகி கனத்து செவ்வானம் போல் சிவந்திருந்தது .

"டேய் பொன்னையான்! நாங்க வெல்வயர் எடுத்து சீவித்தால் உனக்கு என்னடா செய்யுது. நாலு சல்லிக்கு பெறாத நாய் எங்களைப் பார்த்து கதைக்கிறியோ..? எங்கட குடுபத்தின்ர கௌரவம் என்ன.. எங்கட ஊருலயே எங்களிட்டத்தான் மெத்தைவீடு இருந்தது… வீட்டில் ஒன்றுக்கு இரெண்டு வேலைகாரர். நீயெல்லாம் எங்கட கால் தூசிக்கு வரமாட்டாய் அதுக்குள்ள வாயைப்பார்…?”

குட்டானும்விடமால், “பேந்தென்ன குடும்ப கௌரவத்தை சொல்ல வேண்டும் பொஞ்சாதியும் புருசனும் புள்ளையும் சேர்ந்து குடிக்கிற இலட்சணத்தில”

"அது எங்கட நாகரீகம்… எங்கட விருப்பம். அதுல உனக்கு என்னசெய்யுது…?”

அப்ப உன்னைப் போல பொன்னையன் மாதிரி மூலைக்குள் கிடக்கவா சொல்லுறாய்? விடிஞ்சா பொழுதுபட்டால் வேலை வேலையெண்டு திரியிற நாய்… குடிக்கத் தெரியாது சிகரட் பத்தத் தெரியாது நாலு இடத்துக்கு போகத் தெரியாது நாலு பேரோட பழகத் தெரியாது நீயெல்லாம் ஆம்புளையா..? பொன்னையன்… பொன்னையன்…”

ஆண்மை பற்றி அவள் கொண்டிருந்த கோட்பாடு கோபத்தோடு வெளிப்பட்டது.

மயான அமைதி விறாந்தையில் நிலவியது.

குசினிக்குள் நின்று நடக்கிற விடயங்களை அவதானித்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்த சாந்தா கையில் இரண்டு கப்பு தேத்தண்ணீயைக் கொண்டு வந்து எனக்கும் குட்டானுக்கும் தந்து விட்டு மீண்டும் குசினிப்பக்கம் போய்விட்டாள்.

இவ்வளவு நேரமும் குசினிக்குள் நின்ற சாந்தா திடீரென ஏன் விறாந்தைக்கு வரவேனும்…?

ஏதேனும் காரணத்திற்காகத்தான் அவள் தேத்தண்ணீயை தருவதுபோல் விறாந்தைக்கு வந்து போயிருக்க வேண்டுமென்று என்மனதிற்குள் மின்னலாய் வெட்டியது. ஆனால் சாந்தா விறாந்தைக்கு வரும்போது அவளுடைய முகத்தில் கடுப்பான எரிச்சல் கவிந்து கிடந்ததை அவதானித்தேன்.

அவள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் குடும்பச்சுமை தின்று தீர்க்க மூச்சுவிட நேரமற்று ஓடித்திரிவாள். அன்பான கணவனும் அம்மா.. அம்மா.. என்று அன்பால் நனைக்கும் பிள்ளைகளும் அவள் இதயத்தை இதமாக வைத்திருந்தாலும் வீட்டில் இருப்பவர்களால் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளால் தூக்கம் இன்றி துக்கத்தில் ஆழ்ந்துபோய் விடுவாள். அப்படி ஏற்படும் துயரத்தில் இருந்து உடனடியாக அவள் திரும்பவும்மாட்டாள். சிலவேளை ஒரு மாதத்துக்கு கூட நீண்டு போய்விடும். அந்த நேரத்தில் யாருடனும் முகம் கொடுத்து பேசாமல் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் பூட்டி மனதிற்குள் மறைத்து வைத்து கடுப்பான எரிச்சலோடு உருகிச் செத்துக் கொண்டிருப்பாள். அவளுடைய இயல்பே அப்படித்தான் என்பதை உணர்ந்த குமார் அதற்கேற்ப வளைந்து கொடுப்பான்.

சுவரில் மாட்டப்பட்ட மணிக்கூடு ஒரு பறைவையின் சத்தம்போல் ஒலியெழுப்பி இரவு ஏழு மணியைக் காட்டிக்கொண்டு ஓய்ந்தது. இளவேனிற்காலம் என்பதால் ஏழுமணியாகியும் இன்னும் இருட்டவில்லை. சூரியனின் மஞ்சள் நிற ஒளிக்கதிர்கள் வீட்டின் முன்பக்கத்திலுள்ள கண்ணாடியில் விழுந்து தெறித்துக்கொண்டிருந்தன. குமார் வழமையாக ஆறுமணிக்குள் வீட்டிற்கு வந்துசேருவான். ஆனால் இன்று ஏழு மணியாகியும் இன்னும் வரவில்லை. இன்று வெள்ளியிரவு என்பதால் சிலவேளை குடிவகை வாங்கப் போயிருக்கலாம்.

விறாந்தையில் நிலவிக் கொண்டிருந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று மனம் கிளற,

“குட்டான் நடந்ததெல்லாம் மறந்துபோட்டு வா சாப்பிடுவோம்" என்று கூப்பிட்டுக்கொண்டு குமாரின் அம்மாவின் மீது என் பார்வை திரும்பியது.

“அம்மா என்னதான் இருந்தாலும் குட்டான் உங்களுடைய வயதுக்காவது மதிப்புக் குடுத்து கதைச்சிருக்கவேணும். அவன் அப்படி கதைக்காதது அவனுடைய பிழைதான் நான் ஒத்துக்கொள்ளுறன். அதுபோல நீங்களும் கொஞ்சம் நாகரீகமாக அவனோட கதைத்திருக்கலாம்.”

நான் சொல்லி முடிப்பதற்குள் எரிகின்ற நெருப்பில் எண்ணைய் ஊற்றியதுபோல் என் வார்த்தை இன்னும்அவள் கோபத்தை கிளறி விட்டுதுபோல..,

“இந்தக் குட்டானோட நாகரீகமாய்கதைக்கிறதா..? இப்பவே பெட்டியைக் கட்டிக் கொண்டு வீட்டை விட்டுப்போகணும்.. இல்லையெண்டால் நடக்கிறது வேற..”

குட்டான் ஒன்றும் பேசாமல் பறையாமல் இருக்க… குசினிக்குள் நின்ற சாந்தா வெளிவிறாந்தைக்கு விறுவிறு என நடந்து வந்தாள். முகத்தில் உணர்ச்சிக் குவியல் குமாரின்அம்மா சொன்ன வார்த்தையை உள்வாங்கி கடுப்பாகிப் போனாள். மனம் இருப்புக்கொள்ள முடியாமல் கொந்தளித்தது.

சூரியனையே சுட்டுப் பொசுக்கும் விழிகளின் பார்வை.. நான் இந்த வீட்டின் அறைக்கு வந்த நாட்களிலிருந்து இப்படி சாந்தா கோபம் கொண்டதை இதுவரையில் நான் பார்தததே இல்லை.

“குட்டான்! எங்கட வீட்டில வாடகைக்கு இருக்கிறவன்.. அவனை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்ல மாமி உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவங்க தாற வாடகையில்தான் வீடடுக்கு வாங்கின கடன் கட்டுறம் அவங்க வீட்டை விட்டு போனால் எனக்குத்தான் அந்த கஸ்டம் தெரியும். அவன் தானுண்டு தன்ர வேலையுண்டு என்டு தன்ரபாட்டில இருக்கிற பொடியனை..” என்று நீட்டி முழங்கிக் கொண்டிருந்த வார்த்தைகள் முற்றுப் பெறுவதற்குள் குமாரின் அம்மா முந்திக்கொண்டு சீறிப்பாய்ந்தாள்.

“நீயேன்ரி அவனுக்காக வக்காளத்து வாங்கிக்கொண்டு வாறா.. ஆட்டக்காறி.. வாயைத் திறந்திட்டாள். எனி வாய் குடுத்து தப்பபேலாது.”

“எனக்கு மற்ற ஆட்களைப் பற்றி கவலையில்லை.. குட்டான் எங்களோடுதான் இருப்பான்.”

குமாரின் அம்மாவுக்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது.

“அப்ப… இவள் அவனை வைச்சிருக்கிறாளாக்கும்”

அதன் பின் யாரும் எதுவும் கதைக்கவில்லை. விறாந்தை முழுவதும் அமைதி அப்பிக் கிடந்தது.

யன்னல் வெளியினுடே வானம் இருண்டுகொண்டு வந்தது. வெளிப்பக்கமாக கார் வந்து தரித்து நிற்க குமார் இறங்கி உள்ளே நடந்து வந்தான்.

நன்றி. காலம்-கனடா

http://www.sirukathaigal.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/

அப்ப உன்னைப் போல பொன்னையன் மாதிரி மூலைக்குள் கிடக்கவா சொல்லுறாய்? விடிஞ்சா பொழுதுபட்டால் வேலை வேலையெண்டு திரியிற நாய்… குடிக்கத் தெரியாது சிகரட் பத்தத் தெரியாது நாலு இடத்துக்கு போகத் தெரியாது நாலு பேரோட பழகத் தெரியாது நீயெல்லாம் ஆம்புளையா..? பொன்னையன்… பொன்னையன்…”

ஆண்மை பற்றி அவள் கொண்டிருந்த கோட்பாடு கோபத்தோடு வெளிப்பட்டது.

யாழ்பாணியத்தின் அகோரமுகம் புலத்தில் , குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் அகலக்கால் பதித்திருப்பதை டானியல் ஜீவா மிகவும் நுட்பமாகத் தனது பாணியில் சொல்லியிருக்கிறார் . மிக்க நன்றிகள் கிருபன் பகிர்வுக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.