Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிச்சதென்ன பிடிச்சதென்ன : “ஆறா வடு”

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் --

தம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும்

ஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா?

ஜேகே, நீங்க கட்டாயம் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும்.

அண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்!

சயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பிரபலம் என்பதற்கு இதைவிட வேறு எதை சொல்லமுடியும்? சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்கு வாசிக்க தந்தார். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ஈழத்தில் இருந்து ஒரு எழுத்தாளர் வெளிவரும்போது, அதை எப்படி எங்கள் ஆட்கள் கொண்டாடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டத்தான். இந்திய மிமிக்ரி கலைஞர்களின் கலைவிழா ஒழுங்கமைப்பாளரிடம் “அடுத்த நிகழ்ச்சிக்கு சயந்தனை கூப்பிடுவோமா? நிறைய வரவேற்பு இருக்கிறது இங்கே” என்று சொல்ல, “யாரு தம்பி சயந்தன்? விஜய் டிவியா?”!

கதை என்ன? எங்கள் கதையின் ஒரு பகுதி தான். இந்திய அமைதிப்படை காலத்து சம்பவங்கள் தொட்டு 2002ம் ஆண்டு சமாதான காலம் வரை நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு. Non linear வடிவில், ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு கப்பலால் போக எத்தனிக்கும் அனுபவம், அமைதிப்படை காலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவமும், தமிழ் ஆயுதக்குழுக்களும் அடிக்கும் கூத்துகள். பின்னர் புலிகள் காலத்தில், அதன் உறுப்பினரின் பார்வையில் வரும் அனுபவங்கள் இப்படி, …. அமுதன் என்ற Narrator(கதை சொல்லி?) பார்வையில் போகும் கதை ஆங்காங்கே தாவி மற்றையவர்கள் கதைகளையும் சொல்லுகிறது. அந்த யுக்தி மூலம் சமாந்தரமாக சம காலத்தில் நடந்த பல சம்பவங்களை தொகுக்கக்கூடிய வாய்ப்பு சயந்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. புது யுக்தி. இதுக்கு மேலே கதையை சொல்லுவது அழகில்லை. இது தான் கதையின் அடிநாதம் என்றும் ஒன்றை சொல்லவும் முடியவில்லை. இது ஒரு அனுபவக்குவியல், மீட்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் மனதை திடப்படுத்திக்கொண்டு வாசியுங்கள். ரமணிச்சந்திரன், லக்ஷ்மி வகையறா feel good வாசகர் என்றால் “ஆறா வடு” வை மறந்துவிடுங்கள்.

நாவலின் தனித்து தெரியும் விஷயம், வெற்றிபெறும் விஷயம் சந்தேகமே இல்லாமல் சயந்தனின் அங்கதம் தான். அடித்து விளையாடியிருக்கிறார். யார்? என்ன? என்று பார்க்காமல், “what the hell?” என்ற ஒருவித அலட்சிய ஆனால் ஆழமான, சும்மா இரண்டு வரிக்கு ஒரு முறை வந்து விழும் நையாண்டிகள் உடனே சிரிக்க வைத்தாலும் அப்புறம் பெருமூச்சு விட வைக்கும். சில நேரங்களில் முகம் சுழிக்கவும் செய்யும். எங்கள் வாழ்க்கை தானே!

சோறு ஒன்றை தருகிறேன். அமுதன் இயக்கத்தில் அடிபாட்டு குரூப்பில் இருந்தபோது எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தது. சண்டையில் ஏற்பட்ட காயத்தில் கால் போக, சொல்ல சொல்ல கேட்காமல் அரசியல் பிரிவில் சேர்த்துவிட்டார்கள்.

அரசியல் வகுப்பின் முதல்நாள், “யுத்தம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?” என்றொரு கேள்வியை படிப்பிக்கவந்தவர் என்னை பார்த்து கேட்டார். நான் எழுந்து யோசித்தேன். பிறகு “யுத்தம் என்றால் அடிபடுறது, அரசியல் என்றால் அடிபாட்டை நிப்பாட்டிப்போட்டு பேச்சுவார்த்தைக்குப் போறது” என்று சொன்னேன்.

பதிலுக்கு அவர் இப்படிச்சொன்னார். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்.”

அந்தக்கணத்தில் அளம்பிலில் என் காலுக்குக் குண்டெறிந்த ஆமிக்காரன் மேலே எனக்கு ஆத்திரம் பத்திக்கொண்டு வந்தது. ‘உன்னால தாண்டா இந்த கோதாரியெல்லாம்’ என்று நான் பற்களை நறுமினேன்.

இது சும்மா சிங்கிள் தான். இதை விட டபில்ஸ், பௌண்டரி .. ஐந்தாறு சிக்ஸர் கூட இருக்கிறது. சயந்தன், எதுக்கும் நீங்கள் கதவுக்கு இரண்டு பூட்டு போடுங்கள். உடைத்தாலும் எவன் உடைத்தான் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பரந்துபட்ட பார்வை!

சயந்தனின் இந்த வகை புட்டு புட்டு வைக்கும் அங்கத நடை வெறும் வசனங்களோடு முடியவில்லை. சம்பவங்களிலும் அடிச்சு சாத்தியிருக்கிறார்! உதாரணத்துக்கு அந்த சோலாபுரி சம்பவம், பண்டாரவன்னியன் கதை … ஆனால் இந்த வகை அங்கதம் மொத்த நாவலுக்குமே இருக்கிறதா என்றால் இல்லை. அந்த முடிவு அது வேறு தளம். Sattire ஐ வசனங்களுக்கும் சம்பவங்களுக்கும் மட்டுமே மட்டுப்படுத்திவிட்டீர்கள்.

அந்த கப்பல் பயணம். என்ன ஒரு விவரணம்! ஒரு முறை லங்கா முடித்த சரக்கு கப்பலில், கொழும்பு போன போது, ஆயிரத்து ஐநூறு பேர் ஒரே கப்பலில். ஐந்தாறு கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கழிப்பறைகள்! அவசரத்துக்கு ஒண்ணுக்கு வந்துவிட, கியூ நீளம் என்பதால், நானும் நண்பனும் கப்பலில் கயிறுகள் குவித்திருக்கும் பகுதிக்குள் ஒதுங்கியபோது அங்கே பத்து பேர் ஏற்கனவே இரண்டாம் உலகத்தில் இருந்தனர்! உங்கள் கதையில் வரும் கப்பல் பயண அனுபவங்களோடு ஒப்பிடும்போது என்னையது நத்திங். ஆனாலும் ரிலேட் பண்ணி பயணிக்கமுடிந்தது. அருமை.

நாவல் செய்யும் அரசியல் தனிவகை. சயந்தனுக்கு எந்த வித அரசியல் சித்தாந்தங்களும் இல்லை. அல்லது அது எல்லாவற்றையும் கடைப்பிடித்து, ஏமாந்து, விரக்தியடைந்ததாலும் இருக்கலாம். அதனால் ஒன்றை கொண்டாடி, இன்னொன்றை மறைத்து, சிலதை புனைவுபடுத்தும் முயற்சிகள் எங்கும் இல்லை. எல்லாமே எதிர்ப்பு அரசியல் தான். இந்திய ராணுவம், இலங்கை ராணுவம், EPRLF, புலிகள், சந்திரிக்கா, சாதாரண பொதுமக்கள் என எல்லோரும் வசமாக வாங்கிக்கட்டுகிறார்கள். வாசிக்கும் போது ஒரு வித எரிச்சல் வருகிறது, ஒரு கோபம், ஒரு விரக்தி வருகிறது என்றால், வாசகர் நாங்கள் “ஆறா வடு” நாவல் பாத்திரங்களில் எங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து பார்க்கிறோம் என்று அர்த்தம். இதனால் சில தெரிந்தவர்களை சயந்தன் எள்ளி நகையாடும் போது கோபம் வருகிறது! சிலவேளைகளில் சில பாத்திரங்களை வாசிக்கும்போது “அடிடா அந்த நாயை” என்று நாங்களும் சேர்ந்து கூவவேண்டும் என்று மனம் சொல்லுகிறது. எங்கள் மன விகாரங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் எங்களுக்கு இன்னும் வரவில்லை சயந்தன்!

இலக்கியத்தில் Transgressive writing என்று ஒன்று இருக்கிறது. வதைகள், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை, நிகிலிசம்(Nihilism) என்று சொல்லக்கூடிய ஒரு அழகான, சாதாரண வாழ்க்கையின் முழுமையான எதிர்மறை வாழ்க்கை, இது தான் transgressive literature. தமிழில் சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இதை வெறும் தனி மனித உளவியல் பிரச்சனை, செக்ஸ் என்ற விஷயத்துக்குள் அடக்கி விடுவார்கள். சுஜாதா லைட்டாக எழுத நினைப்பார். ஆனால் ஒரு ஆயுதப்போராட்டம், இன ஒடுக்குமுறை சார்ந்த சமூகத்தில் இருந்து இந்த வகை எழுத்து வரும்போது தான் அது உண்மையான transgression. ஒரு மனநோயாளி செய்யும் பாலியல் வல்லுறவுக்கும், சந்தர்ப்பமும் அதிகாரமும் இருக்கும் போது சென்றிபாயிண்டில் இராணுவம் செய்யும் வல்லுறவுக்கும் நிறைய வித்தியாசம். முன்னையது தனி மனித, சுற்றம் சார்ந்த விகாரம். பின்னையது ஒரு நாடு, இனம் அதன் கலாச்சாரம் சார்ந்த விகாரம். இந்த வகை வாழ்க்கையை ஒரு வித sattire உடன் எழுதும்போது அவை உலக இலக்கியம் ஆகிறது. ஆகியிருக்கின்றன. ஷோபாசக்தியின் “ம்” என்ற நாவல் இந்த வகையது. அதில் அவரின் அரசியல் பார்வை வேறு இருப்பதால், நாவலின் இலக்கியத்தரம் பலரால் பார்க்கப்படுவதில்லை. சயந்தன் தமிழில் ஒரு நிஜமான Transgressive இலக்கியத்தை படைக்கலாம் என்ற நம்பிக்கையை “ஆறா வடு” அளிக்கிறது.

ஈழத்து போராட்ட வாழ்க்கை, ஏதோ மிகப்பயங்கரமானதும், வாழ முடியாததும் போன்ற தோற்றப்பாட்டை நாவல் ஏற்படுத்துகிறது. இருபது வயசு வரை வடக்கிலும், இன்னொரு ஐந்து வருஷங்கள் கொழும்பிலும் இருந்தவன், இந்த கதையில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவங்கள் பூராவும் நினைவு தெரிந்த நாட்களில் என்னை சுற்றி நடந்தன என்ற உரிமையில் சொல்லுகிறேன். எங்கள் வாழ்க்கை அவ்வளவு மோசம் கிடையாது! உயிர் எப்போது போகும்? எவன் எப்ப வந்து தூக்குவான்? இந்த எல்லா சிக்கல்களும் இருந்தாலும், எங்களுக்குள் மிகவும் …. மிகவும் அழகான, அட இனி அப்படி ஒரு வாழ்க்கை அமையாதா? என்று ஏங்க வைக்கக்கூடிய ecstatic வாழ்க்கை ஒன்று இருந்தது. அதை செங்கை ஆழியான் அருமையாக எழுதுவார். அந்த பதினைந்து வருஷ வாழ்க்கையை தான் எழுதுவதென்று தீர்மானித்திருந்தால், ஏன் இந்த விஷயம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று புரியவில்லை.

sayanthan-150x150_thumb%25255B1%25255D.jpg?imgmax=800சயந்தன், இது உங்கள் முதல் நாவல் என்கிறார்கள். நிச்சயம் நீங்கள் எழுத்துலகில் சிறுவயது முதல் நிறைய எழுதியிருக்கிறீர்கள் என்றும் புரிகிறது. அதுவே உங்களுக்கு எமன்! முதல் நாவல், எதை எடுக்க? எதை விட? என்ற குழப்பத்தில், எல்லாமே வந்து விழுந்துவிட்டது. 87இல் இருந்து 2002 வரை உள்ள ஈழப்போராட்ட வரலாற்றை செங்கை ஆழியானால் பத்து புத்தகங்கள் தாண்டியும் எழுதி முடிக்க இயலவில்லை. பதினைந்து வருஷங்களில் நடந்த விஷயங்களை நாவல்களாக எழுத பத்தாயிரம் பக்கங்களே போதாது என்ற நிலையில் வெறும் இருநூறு பக்கங்களுக்குள் என்னத்தை எழுதிவிட முடியும்? அதை யோசித்து இருந்தால் narration இல் கோட்டை விழுந்திருக்காது என்றே என் சிற்றறிவுக்கு படுகிறது. அமுதன் பார்வையில், “நான்” என்ற narrative விளிப்புடன் பயணிக்கும் கதை, ஏன் இந்திய இராணுவ காலத்தில் “இவன்” ஆகிறது? அதற்குள் சிவராசன், நிலாமதி, தேவி என பலரின் கதை. ஒவ்வொன்றும் முத்துக்கள். சிறுகதைகள். ஆனால் தொகுப்புக்கு பொருந்தவில்லை. “நான்” என்பதை “அமுதன்” என்று மாற்றி third person narration இல் சொல்லியிருந்தால் ஓரளவுக்கு போருந்தியிருக்கலாம். ஆனால் “நான்” இல்லாமல் அந்த நக்கல்களை அடித்தால் கருத்து கூறுவது போன்று ஆகிவிடும். உங்கள் சங்கடம் புரிகிறது. கொஞ்சம் மனதை கல்லாக்கிக்கொண்டு எடிட் பண்ணியிருந்தால் “ஆறா வடு” ஆறாமலேயே மனதில் எப்போதும் உட்கார்ந்திருக்கும்!

கடைசியில் அமுதன் கடலில் தத்தளிக்கும் போது இவன் தான் அந்த ஈபி காரனா? புலியா? இவன் விலகிட்டானா? கோடு தானே கீறினான்? எப்போது விலகினான்? என்ன நடக்குது? என்ற குழப்பம் வர ஆரம்பித்து விட்டது. Non linear கதை களனின் பாத்திரங்கள் ஒரு சிலவாக இருந்தாலேயே எங்களால் அவற்றோடு ஒன்றி பயணிக்கமுடியும். முடியவில்லை. போதாக்குறைக்கு இரிதிரிஸ் என்று ஒரு பாத்திரம் வருகிறது. கொஞ்சம் தத்துவார்த்த அறிமுகம். அறிமுகம் செய்யவேண்டிய தேவை புரிகிறது. அதன் அரசியல், அதை புகுத்தவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் ஆச்சர்யம். ஆனால் புகுத்தியவிதம் …. தப்பாட்டம் சயந்தன்!

ஒரு நாவலின் கடைசி ஐம்பது பக்கங்களில் (முன்னூறு பக்க நாவல் என்று வைப்போமே) புதிதாக ஒரு உப கதையையோ அல்லது பாத்திரத்தையோ அறிமுகப்படுத்தகூடாது என்பது நியதி. புகுத்துவதானால் முன்னம் எப்போதோ எங்கேயோ அந்த நாவலில் அட்லீஸ்ட் கோடியாவது காடியிருக்கவேண்டும் என்பது தார்மீக எழுத்து நெறி.

Any appearances within the last 50 pages of a novel or last 30 pages of a script should have been foreshadowed earlier, even if mysteriously

சுஜாதா இதை படிச்சு படிச்சு சொல்லுவார். கடைசியாக ஒரு அண்ணனையோ தம்பியையோ திடீரென்று கொண்டு வருவது தப்பாட்டம் என்பார். பிரிவோம் சந்திப்போம் மதுமிதா, முதல் பாகத்திலேயே ரகுவை காதலித்து/காதலிக்காமல் குழம்புவாள். ரகுவும் குழம்புவான். இரண்டாம் பாகம் முடிவில், திரும்பவும் மது வந்து ரகுவை குழப்ப, இந்த சனியன் ரத்னாவை விட்டு விட்டு மீண்டும் குழம்பபோகிறான் என்று வாசகர்கள் அனைவரையும் கோபம்கொள்ள வைப்பார் இல்லையா? சுஜாதா வசனம் எழுதிய ரோஜா படத்தில் காஷ்மீர் தீவிரவாதி வாசிம்கானை கைதுசெய்யும் காட்சி ஆரம்பத்தில் வரும். அப்புறமாக கதை திருநெல்வேலியில் உள்ள குக்கிராமத்துக்கு நகர்ந்து, சென்னைக்கு தாவி, பின்னர் காஷ்மீருக்கு ரிஷியும் ரோஜாவும் போக போகிறார்கள் என்ற போது பார்வையாளனையும் என்ன நடக்கபோகிறது என்பதற்கு கொஞ்சம் தயார்படுத்திவிடுவார். இறுதியில் அந்த வாசிம்கானை மையப்படுத்தியே காட்சிகளின் நோக்கம் நகரும். என்னை கேட்டால் இரித்திரிஸ் வரும் அந்த கடைசி அத்தியாயம் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு நாவலின் முதலாவதாக வந்திருக்கவேண்டும். இது உங்கள் நாவல் தான். ஆனால் வாசகனாய், கிரிக்கெட்டில் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு விமர்சனம் செய்யும் பார்வையாளன் நான்! சச்சின் 99இல் ஆட்டமிழக்கும் போது “என்ன ப்ளேயர் இவன்? இவனுக்கு ஒரு ரன் கூடவா அடிக்க தெரியாது” என்று சொல்லுவேன். அப்போது அவர் அடித்த 99ரன்கள் மறந்துவிடும். ஆடாமல் இருக்கும் வரை அந்த வசதி எப்போதும் இருக்கிறது!

சயந்தன், இந்த விமர்சனம் “ஆறா வடு” நூலை எப்படி புரிந்துகொண்டேன் என்ற அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இரண்டு முறை வாசித்தால் சிலவேளைகளில் என் அபிப்பிராயம் மாறுபடலாம். ஐந்து முறை வாசித்தால் இன்னமும். இதையே வன்னியில், சுற்றம் முற்றம் எல்லாம் இழந்த ஒருத்தனாய் வாசித்திருந்தால் வேறு தளமாய் இருந்திருக்கும். விமர்சனம் என்பது ஒரு சட்டத்தில் இருந்து வருவதால், இன்னொருவர் வாசிப்புக்கும், எழுத்தாளர் உங்கள் சிந்தனைக்கும் என் வாசிப்பு அனுபவம் பொருந்தவேண்டும் என்றில்லை. என்னடா இவன் கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனமாக எழுதுகிறானே என்றும் நினைக்கக்கூடும். எனக்கு இதுதான் பிடிக்கும். “நன்றாக இருக்கிறது, தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு எழுத்தாளர்” வகை ஸ்டேடஸ் கமெண்ட் போட்டுவிட்டு போவதில் இஷ்டமில்லை. வெறும் குப்பை என்று கிழித்துபோடும் சாருவும் இல்லை!

சினிமாவில், “கில்லி” மாதிரி ஒரு படம் என்றால் வெறுமனே “நல்ல படம்” என்று சொல்லிவிட்டு போகலாம். அதுவே “ஹே ராம்” என்றால், ஆற அமர விமர்சிப்போம் இல்லையா? ஒரு கட்டத்தில் “ஹே ராம்” நல்ல படம் என்பதையும் தாண்டி, விமர்சனங்கள் போய்க்கொண்டிருக்கும். ஆறா வடுவுக்கு கிடைக்கும் அந்த வகை விமர்சனங்கள் தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

உங்கள் அடுத்த புத்தகம் இதை விட அதிக விமர்சனங்களை கிளரும் என்ற நம்பிக்கையில், சந்திப்போம்!

http://udumalai.com/...oducts&id=10576

www.sayanthan.com

மூலப்பதிவு : http://www.padalay.c...og-post_22.html

Edited by jkpadalai

ஆறாவடு கனடாவில் வெளியிட்ட அன்று வாங்கிவந்து உடனேயே வாசித்து முடித்துவிட்டேன்.

கதைமுழுக்க வியாபித்திருக்கும் அந்த நையாண்டித்தனமும் எவரையும் பற்றி அக்கறைபடாமல் கையாண்டிருக்கும் புதுவித எழுத்துநடையும்(மிக எளிமையான ஊர்நடை ) கதையின் முடிவும் நன்று .

ஆனால் கதையுடன் பல இடங்களில் ஏனோ என்னால் ஒன்றாக பயணிக்கமுடியவில்லை.கதை நகர்ந்த காலகட்டத்தில் நான் ஊரில் இல்லாததாலா அல்லது எழுத்தாளர் இயக்கத்தில் இருக்காததாலா என தெரியவில்லை.(இப்படித்தான் இயக்கங்கள் இருக்கும் என்று ஊகம் தான் எழுத்தில் இருந்தது ) .

கோவிந்தனின் புதியதோர் உலகம்,சோபாவின் கொரில்லா தந்த நிறைவை ஆறாவடு எனக்கு தரவில்லை என்பதுதான் உண்மை .

இருந்தாலும் இளம் எழுத்தாளார்க்கு எனது வாழ்த்துக்கள், இன்னுமும் கனக்க அவரிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள அர்ஜூன்,

//எழுத்தாளர் இயக்கத்தில் இருக்காததாலா என தெரியவில்லை.(இப்படித்தான் இயக்கங்கள் இருக்கும் என்று ஊகம் தான் எழுத்தில் இருந்தது ) //

இயக்கத்தில் இருந்தால் தான் எழுதவேண்டும் என்றில்லை என நினைக்கிறேன். தன் அனுபவங்களை மட்டுமே ஒரு எழுத்தாளன் எழுதினால் மூன்றாம் நாவலுக்கு மேல் சரக்கு தீர்ந்துவிடும் இல்லையா.. சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒன்றும் அவரின் சொந்த அனுபவங்கள் இல்லை .. ஆனால் அவ்வளவு உண்மை இருக்கில்லையா.

என்னை கேட்டால் இயக்கத்தை விமர்சித்த அளவுக்கு இயக்கியின் நேர்மறை நல்ல விஷயங்கள் காட்டப்படாதது ஒரு காரணமாக இருக்கலாம். அதையும் அவர் வேண்டுமென்றும் செய்யவில்லை என்றே நினைக்கிறேன். கதையின் ஓட்டம் ஒரு black humour வகையானது .. அதிலே நல்லவிஷயங்கள், obvious ஆன எல்லோருக்கும் தெரிந்த, கொண்டாடுகின்ற விஷயங்களை எழுதமாட்டார்கள் .. ஆனால் வாசிக்கும் போது உங்களுக்கு வந்த மனநிலை எனக்கும் வந்ததை மறுப்பதற்கில்லை!

நன்றி நுணாவிலன்!

சுஜாதாவின் பிறப்பிடம் சிறிரங்கம் தான் .ஆனந்தவிகடனில் வந்த அத்தனை "சிறி ரங்கத்து தேவைதைகளும்" பொக்கிஷம் ,அதுவும் ரெயினில்வரும் மிசை வைத்தவரின் காதல் கதை தி பெஸ்ட்.

ஆறாவது வடு கனடாவில் இருந்து வரும் பெண்ணும் அவரை காதலிக்கும் பொய் புலியும் எனக்கு மிகையாக இருந்தது ,இப்படி பல .

இப்போ அசோகமித்திரன் எப்பவோ எழுதிய பதினெட்டாம் அட்சகோடு வாசிக்கின்றேன் ,முன் பின் அறியாத சூழல்,கதைக்களம் அப்படியிருந்தும் இழுத்து செல்கின்றது .

எனக்கு அமுதனின் காதல் இயல்பானதாகத்தான் படுகிறது. புலிகளோ அல்லது போராளிகளோ வானில் இருந்து இறங்கி வந்தவர்களல்ல. நிற்க சுஜாதா எமக்கும் ஒரு ஆதர்ச எழுத்தாளர்தான். அசோகமித்திரனின் உலர் நடை எனக்குப் பிடிக்காது, அவரின் சில கதைகள் நன்கு பிடித்திருந்தாலும். எனக்குப் பிடித்தவர் ஜானகிராமன். அவர் நடை ஈரமானது. இவ்வாறே ஈழத்து எழுத்தாளர்களிலும் எமக்கும் பிடிக்கும் பிடிக்காது இருக்கும். ரசனைகள் வேறுவிதம். நான் கதைக்காலத்தில் ஊரில் நின்றபடியால் எனக்குக் கதையுடன் ஒன்ற முடிகிறது. தற்போதைய இளைஞர்களில் சயந்தனும் யோ.கர்ணனும் நம்பிக்கை தருகிறார்கள். யோ.கர்ணன் ஒரு பக்கத் தவறை மட்டும் எழுதுகிறார் எனற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அவர் கூறுபவை நிறைய நடந்தவை. ஒப்பீட்டளவில் சயந்தனின் நாவல் புலி எதிர்ப்பு அல்ல. புலிகளின் தவறும் பதியப்பட வேண்டும் என்பது என் விருப்பம். உடனே 'கைக்கூலி' என்று தொடங்கிவிடாதீர்கள். அரசின் தவறுகளும் இன்னும் போதியளவு பதியப்படவில்லை. அதுக்குக் காரணம் நாமும்தான். (நாம் என்பது வெளிநாட்டு வாழ் அடியேன் போன்ற பயந்தாங்கொள்ளிகள்)

Edited by கறுவல்

//

..... அன்புள்ள அர்ஜூன்,

//எழுத்தாளர் இயக்கத்தில் இருக்காததாலா என தெரியவில்லை.(இப்படித்தான் இயக்கங்கள் இருக்கும் என்று ஊகம் தான் எழுத்தில் இருந்தது ) //

இயக்கத்தில் இருந்தால் தான் எழுதவேண்டும் என்றில்லை என நினைக்கிறேன்.....

//

அப்படியென்றால் கண்டவனும் கண்டதையெல்லாம் எழுதிவிட்டுப் போய்விடலாமே... ''பரபரப்பு'' ரிஷியும் முந்தி உதையே தான் செய்தார்... பொய்யான தகவல்களை உண்மைகளாக்கி வியாபாரமாக்கியவர்....

இன்னும் பத்து வருசத்தில முள்ளிவாய்க்காலில இதுதான் நடந்தது என்று வாய்வழிக் கதைகளைக் கேட்டு திரிபு படுத்தி தக்க எழுத்து நடையோடு எழுதினால் வாசிக்கிற அரைவாசிப் பேர் (விபரம் முழுதும் தெரியாத) நம்பத் தானே போகிறார்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@arjun

//சுஜாதாவின் பிறப்பிடம் சிறிரங்கம் தான்//

அது உண்மை தான். நான் என்ன சொல்ல விளைந்தேன் என்றால், நம் அனுபவம் மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் நபர்களின், கேட்டறிந்த விஷயங்களையும் ஒரு நல்ல எழுத்தாளர் புனையலாம். புனைந்தால் தான் அது நாவல். இல்லாவிட்டால் அது சுயசரிதம் இல்லையா? சுஜாதாவும் கூட அதையே செய்தார். பாலாமணியை மறந்திருக்க மாட்டீங்கள்..

சுஜாதா பற்றிய என் குறிப்பிலும் இதை குறிப்பிட்டு வியந்திருக்கிறேன்..

http://www.padalay.com/2011/12/blog-post_11.html

அன்புடன்,

ஜேகே

ஆறா வடுவில் சில உறுத்தல்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

@கறுவல் .. ஆளாளுக்கு வாசிக்கும்போது எதிர்ப்பார்ப்புகள் மாறுபடும் இல்லையா? ஒருவருக்கு உறுத்துவது மற்றவருக்கு கொண்டாடவேண்டும் போல இருக்கிறது .. இதுவே சயந்தனின் வெற்றி என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள @darmaraj

//அப்படியென்றால் கண்டவனும் கண்டதையெல்லாம் எழுதிவிட்டுப் போய்விடலாமே..நான் //

நான் சொல்லவந்ததை தப்பாக புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். தன் அனுபவத்தை தான் ஒருவன் எழுதினால் அது சுயசரிதம். கேட்டறிந்த அனுபவங்களை புனைந்து வருவதே நாவல். ஒரு நாவலில் வாழ்க்கையை சொல்லலாம். சொல்லி செங்கை ஆழியான் உட்பட பல எழுத்தாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். கரிசல் காட்டு வாழ்க்கையை எழுதிய கீ ரா அங்கே இருந்தார் ஒழிய கதையில் சொன்ன பாத்திரங்களாக வாழவில்லை. பொய்யாக புனைந்து, யதார்த்தம் மீறினால் அந்த இலக்கியம் புறக்கணிக்கப்படலாம். அதையும் தாண்டி எழுத்தாளர் தன் திறமையால் இது தான் உண்மை என்று நம்ப வைத்துவிட்டால் எம்மால் ஒன்றுமே செய்யமுடியாது. சோழ பேரரசுகள் கடார படை எடுப்புகளில் செய்த அநியாயங்கள் தமிழில் மூடி மறைக்கப்பட்டுள்ளன. சாண்டில்யனும் கல்கியும் அந்த பக்கம் சிந்தித்தே பார்க்கவில்லை. கனக்க ஏன்? மகாவம்சம் எப்படி முழுப்பூசணியை மறைக்கிறது? நம்மால் ஏதும் செய்ய முடிகிறதா?

நீங்கள் சொல்லும் முள்ளிவாய்க்கால் திரிபு படுத்தல்கள் முன்னால் போராளிகளை கொண்டே இலங்கை பத்திரிகைகளில் எழுதப்பட்டு வருவதை அறிவீர்களா? அரசு திட்டமிட்டு செய்யும் இந்த செயலை எவன் கேட்க முடியும் சொல்லுங்கள்? நான் உள்ளேயே இருந்தேன் .. ஆக அதுதான் உண்மை? என்று எழுதுபவன் சொல்லுகிறான்! அதனால் உள்ளிருந்து வந்தால் தான் உண்மை வெளியில் இருந்து எழுதினால் பொய் என்ற மனநிலையை விடலாமே. எங்கிருந்து எழுதினாலும் உண்மையை எழுதினால் மட்டுமே அது உண்மை!

நாமும் ஓரளவுக்கு உண்மையை எழுதும் எழுத்தாளர்களை கொண்டாடவேண்டும்! கொண்டாடுகிறோமா? நீங்கள் கூட சயந்தன் எழுதிய யதார்த்தமான விஷயங்களை விட்டு விட்டு உறுத்தலை மாத்திரம் தானே விமர்சிக்கிறீர்கள்? இப்படி என்றால் எப்படி ஒரு எழுத்தாளன் உய்ய முடியும் சொல்லுங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.