Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசியல் அரங்கில் நகர்த்தப்படும் காய்கள்

Featured Replies

இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா.

பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அச்சமின்றி, மிகப் பகிரங்கமாகத் திரிகிறார்கள். புலிகளின் முக்கியஸ்தர்களாகவும் புலிகளின் சிரேஸ்ர மட்டத்தலைவர்களாகவும் இருந்தவர்கள் கூட இன்று மிகப் பாதுகாப்பாக – வெளியே நடமாடுகிறார்கள். ஆனால், நாட்டுக்காகப் போராடிய, அதற்காக மரணத்தின் விழிம்புவரை சென்று திரும்பிய சரத்பொன்சேகா சிறைக் கம்பிகளினுள்ளே நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்@ அல்லது தன்னுடைய தீர்மானங்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்@ அல்லது கடந்த காலத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்@ அல்லது எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அல்லது தன்னுடைய விடுதலையைப்பற்றி அல்லது தான் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொள்வதைப் பற்றி அல்லது எல்லாவற்றிலும் உச்ச தீவிரம் கொண்டியங்குவதைப் பற்றி, எப்படியோ....

ஆனால், நிச்சயமாக அவர் எதையோ பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் படைகளின் தளபதி இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தேர்தலின்போது கூட்டு வைத்துக் கொண்டவர்கள் கூட அவரைச் சென்று பார்க்கவில்லை.

அவரைக் களமிறக்கியவர்களும் அவரை ஆதரித்தவர்களும் இன்று அவரைக் கைவிட்டுள்ளனர் என்றே தெரிகிறது. அல்லது அவர்கள் சரத்தை மீட்க முடியாத நிலையில் வேறு தெரிவுகளுக்குச் சென்றுள்ளனர்.

சரத் எப்படியான சூழலில் களமிறங்கினார் என்று பார்ப்பதற்கு முன்னர், அவரை யார் களமிறக்கினார்கள்? எப்படிக் களமிறக்கப்பட்டார்? என்று பார்ப்பது இன்றைய அரசிற் சூழலை விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.

சரத்தைக் களமிறக்கியது அமெரிக்கா தலைமையிலான மேற்கே. இலங்கையில் தமக்குச் சாதமான தலைமைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது மேற்கு. அதற்குத் தோதாக யாரும் இல்லை என்ற நிலையில் சரத் பொன்சேகாவை அது தேர்ந்தெடுத்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தத் தெரிவைச் செய்ய வேண்டிய அவசியம் மேற்கிற்கிருந்தது. மகிந்த ராஜபக்ஷ மேற்கின் ஆளில்லை என்று அதற்குத் தெளிவாகவே தெரியும். எனவே அது வேறு ஒருவரை அல்லது மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கக் கூடிய – அவரை மேவக்கூடிய ஒருவரைத் தேடியது.

வழமையைப்போல ஐ.தே.க மேற்குக்குக் கை கொடுக்கும் இயல்போடிருந்தது என்றாலும் அதன் தலைமை அதற்குரிய ஆளுமையோடு இல்லை என்பதால் சரத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரணில் வெற்றிகளுக்குரியவரல்ல என்ற கணிப்பும் வருத்தமும் மேற்கிற்கு ஏற்பட்டிருந்தது. எனவே வெளியே இருந்த சரத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், சரத் அரசியலுக்குப் பரிச்சயமில்லாதவர், புதியவர் என்பதால் அவருக்கு முழுமையான ஆதரவைக் கொடுத்து வெற்றியடைய வைக்க வேண்டிய ஒரு சூழலை மேற்கு உருவாக்கியது.

images+%2878%29.jpgஇதன்படி அது முதலில் சரத்தை ஒரு பொது வேட்பாளராக்கியது. இந்தப் பொது வேட்பாளரை ஐ.தே.க வும் ஆதரிக்கும். சிறுபான்மைத்தரப்புகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிக்கும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஆதரிக்கும். மனோ கணேசனும் ஆதரிப்பார் என்று ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தியது. அதாவது சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர் - ஒரு பொது ஆள் என்ற தோற்றத்தையும் உணர்வையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்தப் பொதுப் பிம்பத்தின் மூலம் சரத்தை வெற்றிகொள்ள வைத்து தனக்குச் சாதகமான ஒரு நிலைமை உருவாக்கிக் கொள்வதே மேற்கின் நோக்கம். இதில் மேற்கிற்குக் கிடைக்கவிருந்த அனுகூலங்கள் அதிகம். குறிப்பாக தனக்குச் சார்பான ஆள் ஒருவரை இலங்கையில் அதிகாரத்தில் இருத்துவதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகளோடு பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் அதிகாரத்திலிருப்பது என்பது வெளியே ஜனநாயகத்தின் பார்வையாளருக்குத் திருப்தியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்பது.

இதற்காக அது இன்னும் ஒரு விசயத்திலும் கவனஞ்செலுத்தியது.

சரத் போர் வெற்றியின் முக்கிய பங்காளி. (போர்க்குற்றத்தின் பங்காளியும்கூட என்றபோதும் இதை மறைத்து விட்டது மேற்கு). எனவே இந்தப் போர் வெற்றியை ஒரு முதலீடாக ஆக்கிக் கொள்வதற்கும், போர் வெற்றியைத் தன்னுடையதாக்க முயன்ற மகிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சியாகவும் மேற்கு சிந்தித்தது.

அந்த நாட்களில் மிக நெருக்கடிப் பட்டே – பதற்றம் நிரம்பிய நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ சரத்தை எதிர்கொண்டார் அல்லது ஜனாதிபதித் தேர்தலை அவர் எதிர்கொண்டார் என்பது எல்லோருக்குமே தெரிந்த சங்கதி.

இதேவேளை இந்தச் சூழலுக்காக மேற்கு குறிப்பாக அமெரிக்கப்பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் பல தடவைகள் பயணம் செய்திருந்தார்கள். அங்கெல்லாம் பொதுமக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுவோரைச் சந்தித்தார்கள். மதகுருக்களைச் சந்தித்தனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் கூடச் சந்தித்தனர். இன்னும் சொல்ல வேண்டுமானால், யாழ்ப்பாணத்தில் முதன்மைப் பத்திரிகையாகத் தோற்றம் காட்டும் உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தையும் கொழும்பில் தினக்குரல், வீரகேசரி போன்றவற்றின் பிற ஊடகவியலாளர்களையும் அமெரிக்கப் பிரதிநிதிகள் முக்கியத்துவம் கொடுத்துச் சந்தித்தனர். மேலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதும் ஊடகவியலாளர்களையும் மேற்கின் ராஜதந்திரிகள் தொடர்ந்து சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம், தமக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதே. அதன்படியே பிறகு அனைத்துத் தரப்பும் சரத்தை ஒருமித்த குரலில் வாய்ப்பாடாக ஆதரித்துக் ‘கோரஸ்’ பாடின.

ஆனாலும் சரத்தினால் கோல்போட முடியவில்லை. அவர் போரில் பெற்ற வெற்றியையும் பறித்துக்கொண்டதாகவே அவருடைய அரசியல் பிரவேசம் அமைந்தது. அரசியல் அரங்கில் சரத் தடுமாறினார். போர்க்களத்தையும் விட அரசியற் களம் மிகக் கடினமானதாக சரத்திற்கிருந்தது.

விடுதலைப்புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் ஆபத்தான கட்டத்துக்குச் சென்று திரும்பியிருந்த – தப்பியிருந்த சரத், இந்த அரசியல் அரங்கு ஏற்படுத்திய அபாய நெருக்கடியிருந்து மீள முடியாத நிலைக்குள்ளானார். ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் நிலை, போரில் வெற்றியீட்டிய ஒரு இராணுவத்தளபதியின் நிலை இன்று இப்படித்தானுள்ளது.

மேற்கின் நம்பிக்கை நட்சத்திரம் அப்படியே ஒளிர முடியாமற் தணிந்தடங்கி விட்டது.

சரத் பொன்சேகாவின் நிலையை இத்துடன் நிறுத்திக் கொண்டு நாம் இப்போதுள்ள நிலைமையைப் பார்க்கலாம்.

சரத்தின் தோல்விக்குப் பிறகு வேறு தெரிவுகள் எதுவும் மேற்கிற்குச் சுலபமாகக் கிடைக்கவில்லை. ஆகவே பிடியற்ற ஒரு நிலையிற்தான் இலங்கை விசயத்தில் மேற்குத் தொடர்ந்தும் உள்ளது.

ஐ.தே.கவிற்குள் தேடினால், ரணிலுக்கு அடுத்தபடியாக கரு ஜெயசூரியா தென்பட்டார். ஆனால் அவர் ஒரு சிரேஸ்ர உறுப்பினராக இருந்தாலும் காரியசித்தராக இல்லை. அடுத்த நிலையில் தெரிந்தவர் சஜித் பிரேமதாஸ. ஆனால், அவரும் மேற்கிற்குக் கவர்ச்சியை ஏற்படுத்தத் தக்க அளவில் செழிப்பான அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை. பதிலாக இன்னும் கட்சியையும் தன்னையும் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் சஜித்.

இந்த நிலையிற்தான் மேற்கு வேறு வழியின்றி மீண்டும் ரணிலை முன்னரங்குக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. அதன்படியே ரணிலை அது பொது ஆளாக்குகிறது. ஐ.தே.கவுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற கொந்தளிப்பான சூழலின் மத்தியிலும் ரணில் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டு கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். இது ஒரு முக்கியமான விசயம்.

இந்தியாவுடனும் வெளியுலகத்துடனும் தொடர்புள்ள ஒரே தலைவர் ஐ.தே.கவுக்குள் ரணில்தான் என்ற அபிப்பிராயம் மேற்கிற்கு உள்ளதும் இதற்கு இன்னொரு காரணம்.

எனவே அது ரணிலைத் தேர்வு செய்து அவரைப் பொது ஆளாக்கிப் பலப்படுத்துவதற்கு யோசிக்கிறது. அதாவது வெற்றிக்கான நாயகனாக்குவதற்கு, நம்பிக்கை நட்சத்திரமாக்குவதற்கு முயற்சிக்கிறது.

இதன்படியே அது இப்பொழுது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை மீண்டும் உருவாக்க முனைகிறது. இந்தக் கூட்டமைப்பில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களும் அதிருப்தியாளர்களும் ஒன்றிணைவதற்கான ஏது நிலைகளையும் அது உருவாக்கி வருகிறது. இதற்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து பல சந்திப்புகளைப் பல தரப்பினருடனும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் நடத்தி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் பிரதிநிதிகளுடனும் ஆயருடனும் நடக்கின்ற சந்திப்புகள் கூட இந்தப் பின்னணியைப் பெரிதும் கொண்டவையே. மேலும் அங்குள்ள பத்திரிகைகளையும். சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும். இதற்காக அது சில தரப்புகளுக்கு அள்ளியிறைக்கும் தொகையும் வழங்கும் சலுகைகளும் கொஞ்சமல்ல.

இப்போது இவ்வாறு உருவாக்கப்படும் பொது ஆளான ரணில் யாழ்ப்பாணம் வரையில் வந்து அரசியல் விவகாரங்களில் ஈடுபடுகிறார். அண்மையில் நடந்த மேதின நிகழ்வுகள் இதற்கொரு உதாரணம். இதற்கு அவருக்கு யாழ்ப்பாணத்திலிருக்கும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் (திருமதி விஜயகலா மகேஸ்வரன்) சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஆதரவாக இருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக ரணிலுடன் கைகுலுக்குவதை அதிகம் விரும்பவில்லை என்றாலும் மேற்கின் விருப்பத்தை அதனால் மீறிட முடியவில்லை. எனவே அது நசிந்த நிலையில் மெல்லக் கையை நீட்டியுள்ளது. (யாழ்ப்பாணத்தை எரித்துக் களித்தவர்களும் யாழ்ப்பாணத்தை எரித்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியவர்களும் எப்போது எப்படி இணங்கினர் என்று கேட்கப்படும் கேள்வியும் ஒரு பக்கத்தில் கொதிநிலையிலேயே உள்ளது). மட்டுமல்ல சம்மந்தன் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியதும் (அதுவும் யாழ்ப்பாணத்தில்) மேற்கின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டதே. (இந்த இடத்தில் யாழ்ப்பாணம் ஆயர் வாய் திறக்காமல் கள்ள மௌனம் காப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் அவர் மேற்கின் விருப்பங்களுக்கு மாறாகச் சிந்திக்க மாட்டார். அப்படிச் சிந்தித்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்).

ஆனால், எப்படியோ ரணில் இலங்கைத் தீவின் பல சமூகத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட – அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொது ஆளாகத் தோற்றம் கொள்ள வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் ‘இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இத்தகைய ஒரு பொதுத் தோற்றம் தேவை. பலருடைய ஒன்றிணைவுடன் வரும் ஒருவரே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிலையைக் கொண்டிருக்க முடியும்’ என்று இதனை அவதானிக்கும் சிலர் வாதிடுகிறார்கள். மட்டுமல்ல ‘ஜனநாயகத்தின் பேணுகைக்கும் இது அவசியம்’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

‘இல்லை. இது வெறும் தோற்றம் மட்டுமே தவிர, அதற்கப்பால் ஒன்றுமேயில்லை. எல்லாமே வழமைதான். தங்களுடைய நலன்களுக்காக எங்களின் கண்களில் மண்ணைத் தூவி மூளையைக் கறுப்பாக்க முயற்சிக்கிறார்கள். மேதின நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் ரணில் என்ன சொன்னார் தெரியுமா? ‘நாங்கள் யுத்தம் செய்யாமல் யாழ்ப்பாணம் வந்திருக்கிறோம். இப்போது யாழ்ப்பாணத்திலும் நாங்கள்’ என்கிறார். இது எதைக் காட்டுகிறது? தான் போர்க்குற்றங்களுக்கு அப்பாலானவன், இரத்தக்கறை படியாதவன் என்று சொல்லப்பார்க்கிறார். ஆனால், அவர் தீர்வைக் குறித்து என்ன சொல்கிறார்? என்று கேட்கின்றனர் மறுப்பாளர்கள்.

‘இலங்கை மீது – மகிந்த ராஜபக்ஷ அரசின் மீது போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றின் மூலம் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்ற மேற்கு, அதேவேளை உள்நாட்டில் அரசுக்கு எதிராக – மாற்றணி ஒன்றை வலுவாக்க இந்த முயற்சியை முயற்சித்து வருகிறது. ஆகவே அந்த வேலைத் திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு இதை விட வேறு என்ன மார்க்கம் இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள் முதற் தரப்பினர்.

‘இல்;லை இது மேற்கின் சூழ்ச்சி, மேற்கு தொடர்ந்து கொண்டிருக்கிற இன்னொரு விடிவத்திலான ஆக்கிரமிப்பு முயற்சி. இதெல்லாம் அதனுடைய பொறியே தவிர, இலங்கையின் நிரந்தர அமைதி, சமாதானம், இன நல்லிணக்கம், அரசியற் தீர்வு என்ற எதுவும் இந்த நடவடிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. இலங்கை மக்களுக்கோ இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ இதில் எந்த நன்மைகளும் பெரிதாக இல்லை’ என்கின்றனர் மறுப்பாளர்கள். அதாவது ரணில் இந்த நாட்டுக்காக அல்ல, வெளித்தரப்புக்காகக் கோல் போடுவதற்காகவே தயாரிக்கப்படுகிறார்.

இப்படியே ‘இரு நிலை விவாதம்’ இன்றைய இலங்கை நிலைமை குறித்து பொதுவாகப் பேசப்படுகிறது.

இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இனங்களுக்கும் நாட்டுக்கும் விவகாரங்களுக்கும் பொதுவானதாக இருக்கவில்லை என்ற பலவீனமான நிலைமையை ஆதாரமாக வைத்துக்கொண்டு, அந்தப் பலவீன வெடிப்புகளுக்குள்ளால் எதிர்ப்பூற்றைச் சுரக்க வைக்க வெளிச் சக்திகள் முயற்சிக்கின்றன.

இங்கே ஒரு விசயத்தை நாம் மீளவும் திரும்பிப் பார்க்கலாம்.

ரணிலின் ‘பொது ஆள்’ தோற்றத்துக்கு உச்ச எதிர்ப்புக் காட்டுவது ஐ.தே.கவினுள் இருக்கும் ஒரு அணி. அதாவது ரணிலுக்கு எதிரான அணி. சஜித்தின் தலைமையிலான அணி.

கூடவே வேறு எதிர்ப்புகளும் சிறு அளவில் சிங்களத்தரப்பில் உண்டு. அதைப்போல தமிழ்த் தரப்பிலும் ரணிலை நம்பமுடியாது என்போர் பெருமளவில் இருக்கின்றனர். ரணில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமல்ல என்று கருதிய மக்களும் பெருமளவில் உள்ளனர்.

இந்த நிலையில் மேற்கின் பந்தயக் குதிரையாக ஆக்கப்பட்ட சரத்தைப் போல ரணிலும் பொறியொன்றினுள் சிக்கிக் கொள்வாரா? அல்லது வெற்றிக் கொடியோடு – நம்பிக்கை நட்சத்திரமாக - சிம்மாசனம் ஏறுவாரா? இது ஒரு பொல்லாத – கடினமான கேள்வியும் எதிர்பார்க்கையுமாகும்.

எப்படியோ இன்று தமிழ் அரசியற் தலைவர்களையும் விட சிங்கள அரசியற் தலைவர்களே அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள். தமிழ் அரசியற் தலைவர் எவரும் நாடு கடத்தப்படவோ சிறையில் அடைக்கப்படவோ இல்லை. பதிலாக சிங்கள அரசியற் தலைவர்களே அப்படியான நிலைக்குள்ளாகியிருக்கிறார்கள். அண்மையில் ஜே.வி.பியின் உறுப்பினர்களான லலித், குகன் காணாமற்போனமை மற்றும் ஜே.வி.பியின் மாற்று அணியின் பிரமுகர்கள் பிரேம்குமார் குணரட்ணம், திமுது ஆட்டிக்கல போன்றோர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டமை எல்லாம் இங்கே கவனத்திற்குரியது. இதைத்தவிர அனைத்துப் பல்கலைக்கழங்களின் தலைவர் உதுல் பிரமரத்தினவின் கைது நிகழ்ச்சிகள்.

எனவே அரசாங்கம் தமிழ்த் தலைமைகளையும் விட சிங்களத் தலைமைகளைக் குறித்தே அதிகம் அச்சமடைகிறது. மடியிற் கனமிருந்தால் வழியிற் பயம் என்று சொல்வார்கள். அரசாங்கத்தின் மடியிற் கனமிருக்கும் வரையில் அது இந்த வழிப்பயத்தை விட்டொழிக்கவே முடியாது.

இதற்கெல்லாம் காரணம் இலங்கைத் தீவில் ஜனநாயகத்தைத் தின்று தீர்த்தவர்களும் அதற்கு ஆதரவாக இருந்தவர்களுமே. இதை மாற்றியமைப்பதற்கு இன்று ஒரு ஒப்பற்ற ஜனநாயக ஆளுமை - தன்னை ஒப்புக்கொடுத்துச் செயலாற்ற வல்ல, வரலாற்றை நகர்த்தக் கூடிய ஆற்றல் பொருந்திய தலைமை வேண்டும். ஆனால் அது இல்லை என்பதே இந்தத் துயர நீட்சிக்குக் காரணமாகும்.

http://naalupakkam.blogspot.com/2012/05/blog-post_11.html

எனவே ஜனநாயகத்தை இலங்கையில் மீளுருவாக்கம் செய்கிறோம் என்ற போர்வையில் வெளிச் சக்திகள் தங்களுக்கான வேர்களை இங்கே பதியம் வைக்க முயற்சிக்கின்றன. இதை அங்கீகரிப்பதைத் தவிர வேறு கதியில்லை என மக்களிற் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதுதான் இன்றைய உலகத்தின் புதிய போக்காக வளர்ந்து வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.