Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாண்டாகியும் முடிவிலாது தொடரும் வன்னியின் துயரம் (ஆய்வு)

Featured Replies

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒருவகையில் வன்னி மக்கள் மௌன நிலைக்கு வந்தும் அதே கால அளவு ஆகின்றது. யுத்தத்தின் அனைத்துக் கோரங்களையும் நேரில் கண்ட மக்கள் தமது பயப் பீதியைக் கூட நாலுபேருக்குச் சொல்லி மனமாற முடியாத சூழலில் தான் இந்த மூன்றாண்டுகளையும் கடந்திருக்கின்றனர்.நலன்புரி நிலையங்களின் முட்கம்பி வேலிகளை விட இப்போது இராணுவப் புலனாய்வாரள்களால் அந்த மக்களைச் சூழ எழுப்பப்பட்டிருக்கும் கண்காணிப்பு வேலி வலுவானதாக இருக்கின்றது. அந்த மக்களை பேசாமடந்தைகளாக்கி இனியொரு விடுதலைப் போராட்டம் நோக்கிய மனநிலை அவர்கள் மத்தியில் ஏற்படாதிருக்கச் செய்வதற்காகவே இந்தக் கண்காணிப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

சம நேரத்தில் போரின் சாட்சியங்களாக இருக்கும் மக்கள் இயங்கும் புற வெளியும் கண்மூடித்தனமமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் நாம் 30 ஆண்டுகள் லட்சக்கணக்கான சகோதரர்களை இழந்து போராட்டம் நடத்தினோமா? என்ற கேள்வியை மே 18 காலையில் சரணடைந்தவர்கள் கூடகேட்குமளவுக்கு இந்த மாற்றம் தலைவிரித்தாடுகின்றது.

முழுவீரியத்துடன் போராடிய இனம் தன் புரட்சித் தோல்வியை ஒப்புக் கொண்டபின்னர் அதிகாரத்தரப்பினால் திணிக்கப்படும் அனைத்து விதமான வன்முறைகளையும் தமிழ் மக்கள் இப்போது எதிர்கொள்கின்றனர். அந்த வன்முறை தமிழர்கள் பல நூற்றாண்டுகாலம் கட்டிக்காத்த அனைத்தையும் துடைத்தழிப்பதாக மாறிவருகின்றது.

போர் ஓய்வோடு வன்னியில் என்ன நடந்தது?

சரணடைந்த மக்களை இரண்டு சிறைகளில் அடைத்தனர். ஒன்று நலன்புரி நிலையங்கள் எனப்படும் திறந்தவெளி சிறைச்சாலை. மற்றையது புனர்வாழ்வு நிலையம் எனப்பட்ட கடூழிய வதை முகாம்கள். இந்த இரண்டுக்குள்ளும் மக்கள் அடைக்கப்பட்ட பின்னர் வெறுமையான வன்னியை பொறுப்பெடுத்துக் கொண்டது இராணுவம். அங்கு அவர்கள் செய்த முதல் வேலை வன்னி மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தமை ஆகும். அதாவது இடம்பெயர்ந்து அலைந்த தருணங்களில் விட்டுச் சென்ற அனைத்து வாழ்வுத் தேட்டங்களையும் இராணுவமும் அவர்களோடு சேர்ந்தியங்கியவர்களும் கொள்ளையடித்தனர் என்றே குறிப்பிட வேண்டும். முள்ளிவாய்க்காலில் பிணங்களாக மீட்கப்பட்ட பொது மக்களின் அவயங்களில் அணிந்திருந்த நகைகளே கொள்ளைக்காரர்களின் முதல் இலக்காக இருந்தது. அத்தோடு நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்த தங்க நகைகளையும் இராணுவம் கண்டெடுத்துக் கொண்டது. மக்கள் விட்டு வந்த வாகனங்கள் அவர்கள் கண்முன்னாலேயே தெற்கு வாசிகளால் எடுத்துச் செல்லப்பட்டது. இதைவிடவிடுதலைப்புலிகளின் அனைத்து சேகரிப்புக்களும் இராணுவ வசமாகியது.

வன்னியில் இப்போதும் பச்சை பெயின்ற் அடித்துப் பல வாகனங்கள் ஓடுவதைக் காணலாம். இதில் இன்னொரு விடயமும் நடந்தேறியது. போரின் போது கொல்லப்பட்டவர்களின் உடலங்களும் எலும்புகளும் கண்காணாத தேசத்துக்கு போனது.

இதற்கு அடுத்தகட்டமாக அமைச்சர்களின் அங்கீகாரத்தோடு முஸ்லிம்களும் சிங்களப் பொதுமக்களும் வன்னிக் கொள்ளையடிப்புக்களுக்hகத் தரையிறக்கப்பட்டனர். அவர்கள் எஞ்சியிருந்த வீடுகளின் யன்னல்கள், கதவுகள், பிற தளபாடங்கள், இரும்பு எனப் பல பொருட்களை யாருடைய அனுமதியுமின்றி எடுத்துப் போனார்கள். எல்லாவற்றையும் துடைத்தெடுத்துவிட்டு வன்னி மக்களை பகுதி பகுதியாக அரசு மீள்குடியேற்றம் செய்தது.

தெருவில் விட்டது மீள்குடியேற்றம்.

சொத்து என்று குறிப்பிடுவதற்கு சிதைக்கப்பட்ட வீட்டுக் கற்களைத் தவிர ஏதுமில்லை என்ற தருணத்தில் தறப்பாள்களோடும் கொஞ்ச நிவாரணப் பொருட்களோடும் மக்கள் தம் ஊர் திரும்பினர்.தாம் புதைத்து வைத்துவிட்டுப் போன போருட்களாவது இருக்கும் என்ற நம்பிக்கையோடு வந்தனர். ஆனால் பலருக்கு கிடைத்தது ஏமாற்றமே. புதைத்தவைகள் கூட கிளறியெடுக்கப்பட்டிருந்தன. அனைத்தையும் இழந்து தம் பாரம்பரிய விவசாயத் தொழிலையாவதுசெய்வொமென்றால் அதற்கும் தடைகள் இருந்தன. அதிகளவான விளைச்சல் நிலங்களை இராணுவம் தன்வசம் வைத்திருந்தது. உரிமை கோரப்படாத விளைநிலங்கள் இராணுவத்துக்குரிய சொத்தாகியது. வியாபாரத் தளங்களும் இராணுவத்தினர் வசமே இருந்தன.

இப்போது ஓராளவுக்கு வியாபாரம் வன்னி மக்களின் கைகளுக்குத் திரும்பிவிட்டாலும் அதில் கிடைக்கும் இலாபத்தின் பெரும்பகுதி தெற்கிற்குத்தான் சென்றடைகின்றது. ஏனெனில் முதலீடு அவர்களுடையது. மூன்று வருடங்களுக்கு முன்பு இப்போது நடக்கும் நிதி நிறுவனங்களின் முதலீட்டு அடிப்படையிலான வியாபாரம் வன்னியில் இருக்கவில்லை. இதனால் இப்போது வன்னியில் உழைக்க விரும்பும் அனைவரும் வியாபாரத்தையே தம் முதல்தெரிவாகக் கொள்கின்றனர்.

அந்த நிலத்தின் அடையாளத் தொழிலாகிய விவசாயம் தன் நிலை இழந்து வருகின்றது. தெற்கு வியாபாரிகள் வன்னி வியாபாரிகளின் உழைப்பில் இருந்து இருப்பில் லாபம் சேர்க்கின்றனர். இதுவும் ஒருவகையான உழைப்புச் சுரண்டல் தான். விவசாயக் குடிகளிடையே இருக்கும் தனித்துவமான நற்பண்பாடு இப்போது மிகமோசமான சீரழிவை சந்தித்து வருவது கவலைக்குரியது தான்.

நாயாறு தொடக்கம் தாழையடி வரையில் கடற்தொழில் அபகரிப்புக்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளன. கடற்தொழில் அமைச்சின் அனுமதியுடன் பல நூற்றுக்கணக்காக சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவு கொக்கிளாய் நாயாறு பகுதிகளுக்கு வந்து தங்கியிருந்து தொழில் செய்கின்றனர். தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள்,மற்றும் வலைகளைப் பயன்படுத்தி அவர்கள் மேற்கொள்ளும் கடற்தொழிலால் தமிழ் மீனவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர. தமிழர்களின் கடற்தொழில் உரிமங்கள் சிங்களவர் கைக்கு மாறியுள்ளது. ஆயினும் அவர்கள் இதனால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யாரிடமும் முறையிட முடியாது.

நில அபகரிப்பும் அத்துமீறிய குடியேறிகளும்.

முல்லைத்தீவு மற்றும் வவுனியா எல்லையோரத் தமிழ் கிராமங்கள் இப்போது சிங்களவர் வசமாகிவிட்டது. அதற்கெனத் தனிப் பெயர்களும் சிங்களபடையினனின் பெயரில் வைக்கப்பட்டுள்ளது. நாயாறு கொக்கிளாய் நெடுங்கேணி போன்ற தமிழ்கிராமங்களில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பூர்வீகத் தமிழ் மக்களின் எதிர்ப்பை ஆயுதங்கள் கொண்டு அடக்கிய பின்பே இந்த அத்துமீறிய குடியயேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. எல்லையோரமாக நகர்ந்துவரும் இந்த அத்துமீறிய குடியேற்றங்கள் இனிவரும் காலங்களில் இங்கு நடைபெறப்போகும் வாக்கெடுப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. இன விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழரை மோசமான பாதிப்பை நோக்கி நகர்த்தப் போகின்றது.

படையினர் தமது இருப்புக்காக பல ஏக்கர்கள் தமிழர் நிலங்களை ஏப்பமிட்டுள்ளனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் காணிகளும் இராணுவத்துக்குரிய சொத்தாகியுள்ளது. இதைவிட சிங்கள வியாபரிகளுக்காக அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்கள் பெருமளவிலானவை. ஏ9 சாலையின் இருமருங்கிலும் இருந்த பலரது கடைகளும் காணிகளும் இன்று தமிழர்களின் பெயர்களில் இல்லை. ஒன்றில் விலைகொடுத்து அபகரிக்கப்படுகின்றது. அல்லது இராணுவத்தின் தலையீட்டோடு அடாத்தாகப் பிடித்துக் கொள்கின்றனர். அரசோடு ஒட்டியிருக்கு முஸ்லிம் அமைச்சர்களின் அடியாட்களும் தமிழர் நிலங்களை அபகரித்து ஏப்பம் விடுவதில் இப்போது முன்நிற்கின்றனர்.

ஆவசரமாக குடிபெயரும் புத்தர்

தமிழர்களின் நிலப்பகுதியை ஆக்கிரமித்ததோடு அல்லாமல் கலாசார ரீதியான மாற்றங்களையும் வன்னியில் ஏற்படுத்திவிட சிங்கள அரசுமுனைப்புக் காட்டி வருகின்றது. ஒவ்வொரு நாளும் புத்தர் சிலைகளும் விகாரைகளும் முளைக்கின்றன. பிள்ளையார் இருந்த இடத்தில் புத்தபெருமான் ஒட்டிக் கொள்கின்றார். இராணுவ முகாம்களை அண்மித்த இடங்களில் அரசம் விதைகள் முளைக்க வைக்கப்படுகின்றன. வன்னியிலிருக்கின்ற ஒவ்வொரு கிராமத்திலும் புத்தர் தோன்றிவிட்டார். இது அங்க மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டுவரும் கலாசார சலவையிடலாகவே நோக்கப்படடல் வேண்டும். ஆக்கிரமிப்பின் முகம் புத்த பெருமானின் சாயலிலும் எம்மீது அவிழ்த்து விடப்பட்ருக்கின்றது.

போரில் சிங்களவர்கள் வென்றதை காட்டும் வகையிலான வெற்றிச் சின்னங்கள் இராணுவத்தினரால் வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் பிரதான நோக்கம் இது எமது நாடு (சிங்கள நாடு) என்பதைக் காட்டவே. கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு, புதுக்குடியிருப்பு,மந்துவில், மாத்தளன், வட்டுவாகல், கேப்பாப்புலவு எனப் பல இடங்களில் இந்த சிங்கள வெற்றிச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கப் படையெடுக்கும் சிங்கள மக்கள் இனவெறியேறிய நிலையில் தம் சுற்றுலா பயணங்களை நிறைவு செய்கின்றனர். இதுவும் ஒருவகையான கலாசார மாறுதலே.

இராணுவத்தினர் முன்னெடுக்கும் கலாசார சீரழிவுகள்

திட்டமிட்ட வகையில் கலாசாரக் கவிழ்ப்பொன்றை தமிழர் பிராந்தியங்களில் சிங்கள அரசு மேற்கொண்டுவருகின்றது. அனைத்து மக்களும் மோகங்களுக்கு தேவைப்பட்ட வடிவில் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கின்றனர். பெருமளவிலான பாடசாலைப் பிள்ளைகள் இப்போது சிங்கள கெட்ட வார்த்தைகளைப் பாடமாக்கி வைத்திருக்கின்றனர். அனைவரது கைகளிலும் தவளும் சீனத் தொலைபேசிகள் ‘அனைத்துவிதமான உறவுகளையும்’ நெருக்கமாக்குகின்றது.

இராணுவத்தினர் அரசாங்கத்தால் விற்பனைக்குத் தடைசெய்யப்பட்ட நாட்களிலும் பாடசாலைகளில் வைத்து மதுபான விநியொகம் செய்கின்றனர். வயது வேறுபாடின்றி அனைவருக்கும் குறைந்த விலையில் இங்கு சுகம் வழங்கப்படுகின்றது. அத்தோடு இராணுவம் நடாத்தும் போட்டி நிகழ்வுகளுக்கு மதுபானப் போத்தல்கள் பரிசாக வழங்கப்படுவதும் புதிய கலாசாரமாக மாறி வருகின்றது.

விதவைகள் நிலை பரிதாபமானது

வன்னியில் 89000 விதவைகள் இருப்பதாக கருத்துக் கணிப்பொன்று குறிப்பிடுகின்றது. இவர்கள் அனைவமு; போரினால் தமது கணவன்மாரை இழந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம். இவர்களுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வாழ்வாதார உதவிகளை அவ்வப்போது வழங்கினாலும் அது எந்தளவுக்கு உரியவர்களை சென்றடைகின்றது எனத் தெரியவில்லை. இடைநடவே பலரால் ஏப்பமிடப்படுகின்றது. அத்தோடு எப்போதாவது வழங்கப்படும் உதவிகள் வாழ்க்கையை செலுத்துவதற்குப் போதுமானதாக இருப்பதில்லையென அவர்கள் கவலையுறுகின்றனர். இந்த நிலையில் பிள்ளையின் பசியைப் போக்குவதற்காகத் தன் உடலை விற்கும் விதவைத் தாய்களின் கதைகளும் நம்மால் உணரமுடியாமல் இருக்க இயலவில்லை. ஆனால் இது வேறுவிதமாக வெளியாரால் நோக்கப்படுவதுதான் வேதனையளிக்கின்றது.

அடிக்கடி வெடிக்கும் மர்மப் பொருட்கள்

மீள் குடியேற்றத்திற்குப் பின்பு பலர் தம் உடல் அவயங்களை இழந்திருக்கின்றனர். உயிரைக் காவு கொடுத்திருக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த குழந்தைகள் கூட மரமப் பொருடகளினால் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். ஏன் இப்படி? என்ற கேள்வியை முன்வைத்தால் அவர்களிடம் இருப்பது ஒரே ஓரு பதில்தான். உழைப்புத்தேடிப் போனன். வெடித்தது. என்பதைத் தான் பலரும் சொல்கின்றனர். எல்லா தொழில்களையும் சிங்களவர்கள் பறித்துக் கொண்டு இரும்பு பொறுக்கி விற்கும் தொழிலைமட்டும் வன்னிப் பாமர மக்களிடம் விட்டிருக்கின்றனர். வெடிபொருள் இரும்பாகின்றது. அதனை எடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடும் போது அது தன் முகத்தைக் காட்டிவிடுகின்றது. இதற்கு 2 வயது குழந்தைகூட விதிவிலக்கில்லாமல் சாவதுதான் மிகத்துயரமிக்கது. உளப்பணிக்கு இடமேயில்லை.

இந்த உலகமே ஒரு கணம் திரும்பிப் பார்க்கும் படியான போரை நிகழ்த்தி சரணடைந்த மக்களை காட்டுமிராண்டித்தனமாக நடத்திய பின்னரும் அவர்களுக்கான வாழும் உரிமை தொடரந்தும் அரசினால் மறுக்கப்பட்டே வருகின்றது. அந்த மக்களின் எதிர்காலம் குறித்த எவ்வித கவனமும் செலுத்தப்படாது வீதிகளும் வணிகமையங்களும் மட்டும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அடிப்படையான ஆற்றுப்படுத்தல்கள் கூட மேற்கொள்ளப்படவில்லை.

அதற்கு எந்த ஒரு துறைசார்ந்த நிறுவனத்திற்கும் அனுமதியில்லை. பொருள் பண்டங்கள் மட்டும் வழங்க முடியும். கண்முன் நிகழ்ந்த கொடூரங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் எவ்வளவு ஆழமான வடுக்களை ஏற்படுத்தியிருக்கும். அது காலப்போக்கில் எவ்வளவு மோசமான சமூகமொன்றை உருவாக்கப்பபோகின்றது? எவ்விதமான அக்கறையுமற்ற உளவியல் ஆற்றுப்பணிகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. இப்படியெ போனால் எதிர்காலத்தில் வன்னி மக்கள் பைத்தியக்கரார்களாகத் தெருவில் அலைவர் என்ற உணமை சிங்கள அரசுக்கு தெரிந்த பின்பே குறித்த உளவியல் சார்ந்த பணிகளைத் தடைசெய்து வைத்திருக்கின்றது.

அனைத்திலும் இராணுவத்தலையீடு

வன்னியின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும் இராணுவத்தின்பிரசன்னம் இருக்கின்றது. அங்கு இயங்குகின்ற அரச மற்றும் பொதுசன அமைப்புக்கள் எல்லாம் வெற்றுக் கோதுகள் தான். படையினரின் வரவின்றி எந்தப் பொது நிகழ்வுகளும் நிகழ்த்த இயலாத நிலைதான் இப்போதும் காணப்படுகின்றது. விதம் விதமான பதிவுகளை மாதந்தோறும் இராணுவத்தினர் மேற்கொள்ளுகின்றனர். ஒவ்வொரு கிராமத்தையும் இராணுவப் படையணிகளின் பெயர்ப்பலகைகளே வரவேற்கின்றன.

போர் முடிந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வன்னியின் நிலைமை இவ்வாறுதான் அரசினால்கருச்சிதைப்பு செய்யப்படுகின்றது. இதனைத் தட்டிக்கேட்க அந்த மக்களின் வாக்குகளை வாங்கி பாராளுமன்றம் சென்றவரகளால் கூட இயலாமல் இருப்பது தான் விந்தையானது. எல்லாவற்றுக்கும் மக்கள் அடுத்த தேர்தலைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.