Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

ருவாண்டாவில் 1994 இல் இடம்பெற்ற இனப் பிரிவினையில் ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் சொல்லியிருக்கிறது.

அதுவும் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த தலைவரான Juvenal Habiyarimana கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 100 நாட்களில்! இது நாட்டின் மொத்த சனத்தொகையின் இருபது வீதமாம்!

சிறுபான்மை இனமான டுட்சி இனத்தவரே பல நூற்றாண்டுகளாக, ருவாண்டாவின் அதிகாரவர்க்கமாக இருந்திருக்கிறார்கள். 1962 ஹுட்டு இனத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற, அகதிகளாக வெளியேறிய டுட்சி இனத்தவரிலிருந்து, 1990 இல் Rwandan Patriotic Front (RPF) என்ற போராளிகள் அமைப்பு உருவாக உள்நாட்டுச் சண்டை நடக்கிறது.

1993 இல் போர்நிறுத்தம் ஏற்படுகிறது. இந்தநிலையில் 1994 இல் Juvenal Habiyarimana கொலை செய்யப்பட, அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்களைக் கூறுகிறது ஹோட்டல் ருவாண்டா திரைப்படம்

ஒரு நாட்டில் எந்தப் பாகுபாடுமின்றி இணைந்து வாழும் இரு இனமக்கள். இதில் பெரும்பான்மை இனத்தவர்களிடம் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரமாக ஊட்டப்படுகிறது இனத்துவேஷம்! விளைவு? நேற்றுவரை உறவுகளாக இருந்தவர்கள் திடீரென எதிரிகளாக மாறி சிறுபான்மையினரை கொல்ல, சொத்துக்களை சூறையாட, ஒரே நாளில் சொந்தநாட்டில், பிறந்த மண்ணில் அகதிகளாக, எப்போது வேண்டுமானாலும் உயிர் பறிக்கப்படும் நிராதரவான நிலை!

நம்மில் பலர் இப்படியான சம்பவங்களைக் கேள்விப்படிருக்கலாம், சிலர் அனுபவப் பட்டிருக்கக் கூடும். இதே அனுபவத்தை உணர வைக்கிறது படம்!

1994, ருவாண்டா. ஒரு வானொலி அறிவிப்பு. 'டுட்சி இனத்தவரை நாம் ஏன் வெறுக்க வேண்டும்? வரலாற்றைப் படியுங்கள். இது பெரும்பான்மையான ஹூட்டுக்களின் நிலம். டுட்சிகள் வந்தேறிகள். கரப்பான் பூச்சிகள். அவர்களை அழிக்கவேண்டும்!'.

நகரின் பெரிய ஸ்டார் ஹோட்டலின் மானேஜரான போல் (Paul) நாட்டின் பெரும்பான்மையான ஹூட்டு (Hutu) இனத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவி டாடியானா சிறுபான்மை டுட்சி (Tutsi) இனத்தவர். வேலை முடிந்து வீடு செல்லும் போல் அங்கே தன மனைவியின் தம்பி குடும்பத்துடன் விருந்தினராக வந்திருக்க, மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் ஏதோ சத்தம் கேட்டு , மெதுவாகக் கதவைத்திறந்து பார்க்க, அங்கே ஹூட்டு இனக் கும்பல் ஒன்று எதிர்வீட்டு டுட்சி இனத்து குடும்பமொன்றை வலுக்கட்டாயமாக அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றுவதைக் காண்கிறார்கள். ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் அவர்களின் முகங்களில் கலவரம் படர்கிறது.

மறுநாள் ஹோட்டலில் அனுமதி பெற்று போலைச் சந்திக்கும் மைத்துனனும் அவன் மனைவியும் கலவரம் பெரிதாகப் போவதாகத் தகவல் கிடைத்ததாகவும், வானொலியில் அதற்கான சங்கேத வார்த்தை ' உயரமான மரங்களை வெட்டுங்கள்' என்பதாகவும் சொல்கிறார்கள். அதற்கு போல்,' ஐ.நா.வின் அமைதிப்படை, உலகப்பத்திரிகையாளர்கள் வந்திருப்பதால் அப்படி எதுவும் ஆகாது' என ஆறுதல் கூறுகிறார்.

இரவு ஆளரவமற்ற தெருக்கள், அங்காங்கே பற்றியெரியும் வீடுகள் கண்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்பும் போல், வீட்டில் ஏராளமான டுட்சி இனத்தவர் அடைக்கலம் புகுந்திருப்பதைக் காண்கிறார். மறுநாள் காலை துப்பாக்கிச் சத்தங்கள் கேட்க, எல்லோரும் பதட்டத்துடன் வானொலி முன்! வானொலியில், 'நம் தலைவரைக் கொன்றுவிட்டார்கள், இதுவே தருணம், உயரமான மரங்களை வெட்டுங்கள்!'

'

போல் வீட்டிற்கு வரும் ஒரு ஹூட்டு குழு, போலின் மனைவி, குழந்தைகள் உட்பட அங்குள்ள டுட்சிகள் அனைவரையும் கொல்லப்போவதாகக் கூற, ஏராளமான பணம், நகைகளை லஞ்சமாகக் கொடுத்து, அனைவரையும் பத்திரமாகத் தனது ஹோட்டலுக்குக் கூட்டிச்சென்று தங்கவைக்கிறார். நகரிலுள்ள மேலும் பல டுட்சிகள், செஞ்சிலுவைச் சங்க பெண் அதிகாரி அழைத்துவரும் அநாதை இல்லக் குழந்தைகள் என ஹோட்டலில் தங்குவோர் தொகை அதிகரிக்கிறது. இதனால் வேலை செய்ய மறுக்கும் பணியாளர்கள், நாட்டு சூழ்நிலை காரணமாக ஹோட்டலை மூட முடிவு செய்யும் வெளிநாட்டிலுள்ள முதலாளி ஆகியோருடன் பேசி, ஹோட்டலைத் தொடர்ந்தும் இயங்க வைக்கிறார் போல். இதற்கிடையில் போலின் மைத்துனன் குடும்பம் என்னவானது என்றே தெரியவில்லை.

நாளுக்குநாள் பிரச்சினை தீவிரமாக போல், அங்குள்ளவர்களிடம், 'வெளி நாடுகளிலுள்ள உங்கள் உறவினர்களைத் தொடர்புகொண்டு பேசி நாட்டை விட்டு தப்பி வெளியேறும் வழி வகைகளைச் செய்யுங்கள்' என்கிறார். அதன்மூலம் சிலருக்கு அழைப்பு வருகிறது. போல் குடும்பத்தினருக்கும் விசா வந்திருக்கிறது. ஐ.நா.அமைதிப் படையினரின் பாதுகாப்புடன் கவச வாகனத்தில் விசா கிடைத்தவர்கள் ஏறி அமர, தனது மனைவி, குழந்தைகளை ஏற்றிவிட்டு, இறுதி நேரத்தில் தான் வாகனத்தில் ஏறாமல் நின்றுவிட, ஓடும் வாகனத்தில் மனைவி, குழந்தைகள் கதறுகிறார்கள்.

ஹோட்டலில் பணிபுரியும் ஹூட்டு இனத்தவன் ஒருவன், டுட்சி இனத்தவர் தப்பிச்செல்லுவதை போட்டுக் கொடுத்துவிட, ஐ.நா.வாகனத் தொடரணியை சூழ்ந்து விடுகிறார்கள் ஹூட்டுக்கள். ஒருவழியாக அனைவரையும் காப்பாற்றி மீண்டும் ஹோட்டலுக்கு திருப்பிக் கொண்டுவருகிறார் ஐ.நா.வின் கனேடியக் கேணல் தர அதிகாரி.

போல் பிறகு என செய்கிறார்? அவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றினாரா? ஹோட்டலில் தங்கி இருந்தோர் கதி? தனது மைத்துனன், குடும்பத்தைக் கண்டுபிடித்தாரா?

அதிகாலையில் ஹோட்டலுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வரும்போது போலின் வாகனம் சரியாக ஓடாமல் பள்ளத்தில் விழுந்ததைப் போல துள்ளுகிறது. இறங்கிப்பார்க்கும் போல், பார்க்கச் சகிக்கமுடியாமல் நிலைகுலைகிறார். அங்கே, சாலை எங்கும் பரவிக்கிடக்கின்றன நூற்றுக்கணக்கான மனித உடல்கள்!

நிலைமையின் தீவிரத்தால் அமெரிக்க, இங்கிலாந்து படையினர் வர, டுட்சி அகதிகள் தங்கள் காப்பாற்றப்பட்டோமென்று மிக்க மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் அவர்கள் ஹோட்டலில் தங்கியுள்ள வெள்ளையர்களை மட்டுமே மீட்க வந்திருப்பது பின்னர் புரிந்து உற்சாகம் வடிந்து, அமைதியாகும் காட்சி மிக உருக்கமானது.

மீட்கவந்த படையினருக்கும், கனேடிய கேணல் அதிகாரிக்கும் இடையிலான வாக்குவாதத்தைத் தூரத்திலிருந்தே அவதானித்து நிலைமையைப் போல் புரிந்து கொள்ளும் காட்சி.

மீட்கப்பட்ட வெள்ளையர்கள் தங்களுடன் டுட்சி குழந்தைகளை அழைத்துச் செல்ல முயல, அந்த முயற்சி வலுக்க்டாமாகப் படையினரால் தடுக்கப் படுகிறது.அந்தப் பேருந்திலிருந்து ஒரு வெள்ளைப் பெண் அந்தக் குழந்தைகளை சோகமாகப் பார்க்க, அந்தப்பெண்ணின் மடியில் அமர்ந்திருக்கிறது அவள் வளர்க்கும் நாய்!

போலும், டடியானாவும் முகாமில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களில் டடியானாவின் தம்பி குழந்தைகளைத் தேடும் காட்சி, அனாதைக் குழந்தைகள் கூட்டாகச் சேர்ந்து பாடும் காட்சி என்பவை மனதை நெகிழச் செய்பவை.

ஐ.நா.வின் வாகனத்தில் போல் மற்றும் ஹோட்டலிலிருந்த ஏனைய மக்கள் ஐ.நா. முகாமிற்குச் செல்லும்போது, ஹூட்டு இனக்குழு ஆவேசத்துடன் தொடர, திடீரென தோன்றும் இன்னொரு குழு ( டுட்சி) அவர்களை துரத்திச் சுடுகின்றது. அப்போது மகிழ்ச்சியுடன் கூவும் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் உற்சாகம் எங்களையும் ஒருகணம் தொற்றிக்கொள்ளும்!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அந்த இனத்திலிருந்து உருவான ஒரு போராளிக்குழு ஆயுதமேந்தி போராட வரும்போது, வழியின்றித் தவித்த அந்த மக்களின் மனநிலை எப்படியிருக்கும்? சொல்வது கடினம் உணர்ந்தவர்களுக்கே புரியும்!

இந்த உலகில் எங்கெல்லாமோ ஆக்கிரமிப்புகள், திட்டமிட்ட இன அழிப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் போல் போன்ற மனிதாபிமானமுள்ள நல்ல குணமுள்ள மனிதர்கள் எங்கும் வாழ்கிறார்கள்!

1983 இல் இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தில், நல்ல மனம் கொண்ட சிங்கள மக்களால் பல தமிழர்கள் வீடுகளில் மறைத்து வைத்து காப்பாற்றப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்!

படம் நிறைவடையும்போது, ' போல், ருவாண்டாவின் கிகாலி நகரிலிருந்த ஹோட்டலில் 1268 அகதிகளைத் தன் பாதுகாப்பில் வைத்துக் காப்பாற்றினார். இன்று பெல்ஜியத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார்' என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன!

2004 இல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் Oscar உட்பட ஏராளமான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, Berlin , Toronto International Film Festivals விருதுகள் உள்ளிட்ட பலவிருதுகளை வென்றது.

இயக்கம் : Terry George

மொழி : English , French

http://umajee.blogspot.com/2011/04/hotel-rwanda.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.