Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலமெல்லாம் ரத்தம் - 101 (இறுதி பகுதி) (பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே)

Featured Replies

  • தொடங்கியவர்

68] என்ன அழகான திட்டம்!

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 68

அமெரிக்க டாலரை 'ரிசர்வ் கரன்ஸி' என்பார்கள். மதிப்பு மிக்க நாணயம். எண்ணெய், தங்கம் போன்ற விலை மதிப்பு மிக்க பொருள்களின் வர்த்தகம், சர்வதேச அளவில் டாலரில்தான் நடக்கும். மற்ற தேசங்களின் கரன்ஸி எத்தனை மதிப்பு மிக்கது என்பதை அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டுத்தான் சொல்வது வழக்கம். அதாவது, 'அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு' என்று சொல்லப்படுவதைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா? அதுதான்.

அமெரிக்க டாலரைக் காட்டிலும் இன்றைக்கு 'யூரோ'வின் மதிப்பு அதிகம். ஜப்பானின் 'யென்', ஸ்விட்சர்லாந்தின் 'ஸ்விஸ் ஃப்ராங்க்', இங்கிலாந்தின் 'பவுண்ட் ஸ்டெர்லிங்' ஆகியவையும் மதிப்பு மிக்க நாணயங்கள்.

இந்த நாணயங்களெல்லாம் சமீப காலத்தில் மதிப்பு பெற்றவை. ஐம்பதுகளில் அமெரிக்க டாலர் ஒன்றுதான் 'ரிசர்வ் கரன்ஸி'. ஒவ்வொரு தேசமும் தனது அந்நியச் செலாவணியாக எத்தனை டாலர்கள் வைத்திருக்கிறது என்பதைக் கொண்டு அதன் பொருளாதார நிலைமை மதிப்பிடப்படும். அது மட்டுமில்லாமல், எந்த தேசமும் தான் இறக்குமதி செய்துகொள்ளும் எந்தப் பொருளுக்கும் அமெரிக்க டாலரில் விலை கொடுக்குமானால் கணிசமான தள்ளுபடி கிடைக்கும்! காரணம், அந்த தேசத்தின் அந்நியச் செலாவணி டாலரில் கிடைக்கிறதல்லவா, அதனால்தான்!

இந்த 'ரிஸர்வ் கரன்ஸி' அந்தஸ்தை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கா அன்றைக்கு பிரிட்டனை மிரட்டியது.

'மரியாதையாக சூயஸ் யுத்தத்தை நிறுத்துகிறீர்களா? அல்லது, நான் என் ரிசர்வ் கரன்ஸி முதலீடுகளை நிறுத்திக்கொள்ளவா?'

இதுதான் மிரட்டல். மிரட்டியதோடு அமெரிக்கா நிற்கவில்லை. கொஞ்சம் பயமுறுத்தும் விதத்தில் ஓரளவு தன்னுடைய முதலீடுகளையும் முடக்கிவைத்தது. இதனால் ஒரே நாளில் பிரிட்டனின் 'பவுண்ட்' மதிப்பு தடதடவென்று சரிந்தது. நாணயத்தின் மதிப்பு சரிந்தால் நாடே சரிகிறது என்று அர்த்தம்.

ஆகவே பிரிட்டனின் அன்றைய பிரதமர் ஆண்டனி ஈடன் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யவேண்டியதானது. அவசரமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் கூடி, எகிப்திலிருந்து படைகளை வாபஸ் பெற முடிவு செய்தது. இது நடந்தது மார்ச் 1957-ல்.

இதற்குச் சில தினங்கள் முன்னதாக கனடாவின் அன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருந்த லெஸ்டர் பியர்ஸன் (Lester Pearson) என்பவர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நேரில் சென்று, சூயஸ் விவகாரத்துக்கு ஒரு முடிவு காண ஒரு தனி நபர் போராட்டத்தை நடத்தினார்.

'சூயஸ் கால்வாய் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதாக இருப்பதன் பொருட்டு, ஐ.நா.வே ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி எகிப்துக்கு அனுப்பவேண்டும்' என்பது கனடாவின் கோரிக்கை. 'அரசியல் ரீதியிலான தீர்வு ஒன்று காணப்படும்வரை, ஐ.நா.வின் இந்த அதிரடிப்படை சூயஸ் கால்வாய்க் கரையில் முகாமிட்டு உட்கார்ந்தால்தான் வர்த்தகம் தடைபடாமல் இருக்கும்' என்று பியர்ஸன் எடுத்துச் சொன்னார்.

நீண்ட வாக்குவாதங்களுக்குப் பிறகு ஐக்கியநாடுகள் சபை இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எகிப்துக்கு ஒரு ராணுவத்தை அனுப்பியது. அமைதிப்படையாகத்தான் அனுப்பப்பட்டதென்றாலும் ஆயுதங்களுடன்தான் போனார்கள். (மிகுந்த சாதுர்யமும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த இந்த யோசனைக்காகவே லெஸ்டர் பியர்ஸனுக்கு 1957-க்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. இன்றைக்கு உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைப்பிரிவைத் தோற்றுவித்தவரே இவர்தான்.)

எகிப்தின் சூயஸ் கால்வாய் விவகாரம், உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய விஷயங்கள் பல. அவற்றுள் முக்கியமானது, 'உலகின் மிகப்பெரிய சக்தி என்கிற அந்தஸ்திலிருந்து பிரிட்டன் இறங்கிவிட்டது' என்பது. உண்மையிலேயே பெரிய சக்தி அமெரிக்காதான் என்பது நிரூபணமானதும் அப்போதுதான். அமெரிக்காவுக்கு நிகராக வைத்துப் பேசுவதற்கு சோவியத் யூனியன்தான் இருக்கிறது என்பதும் அப்போது நினைவுகூரப்பட்டது.

இதைக் காட்டிலும் முக்கியமாக உலகம் கவனித்த விஷயம் ஒன்றுண்டு. நாசர் என்கிற நபர் எத்தனை சக்திமிக்கவர் என்பதுதான் அது! இந்த சூயஸ் கால்வாய் விவகாரத்தில் எகிப்து ராணுவ ரீதியில் தோல்வி கண்டிருந்தபோதும் மத்தியக் கிழக்கின் ஒரே ஹீரோ அவர்தான் என்று அத்தனை நாடுகளும் அடித்துச் சொல்லிவிட்டன.

குறிப்பாக அன்றைய தேதியில் மத்தியக் கிழக்கில் சொல்லிக்கொள்ளும்படியான தலைவர் யாரும் இல்லாத காரணத்தால், நாசரின் இந்தத் துணிச்சலும் வீரமும் வெகுவாகப் புகழப்பட்டன. நாசரை மையமாக வைத்து, செத்துக்கொண்டிருந்த 'இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு' உயிர் கொடுக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அத்தனை முஸ்லிம் நாடுகளும் தன்னை இப்போது ஆதரிக்கின்றன என்பதைக் கண்டுகொண்ட நாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று, 'எகிப்தில் உள்ள அத்தனை யூதர்களும் உடனடியாக வெளியேற வேண்டும்' என்று ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.

இது இஸ்ரேலுக்கு குலைநடுக்கம் ஏற்படுத்தியது. ஏனெனில் அன்றைய தேதியில் எகிப்தில் சுமார் முப்பதாயிரம் யூதர்கள் இருப்பார்கள் என்று இஸ்ரேல் நினைத்தது. (உண்மையில் இருபத்தைந்தாயிரத்துக்குச் சற்று அதிகமானோர் இருந்தார்கள்.) யுத்தத்தின் விளைவாக, அவர்கள் எந்த நாட்டுக்குப் போனாலும் யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதால் அத்தனை பேரும் எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள்தான் வர நினைப்பார்கள்.

இஸ்ரேல், தன்னுடைய சொந்தக் குடிகளை ஏற்பதற்கு எக்காலத்திலும் தயக்கம் காட்டியதில்லை என்றபோதிலும் முப்பதாயிரம் பேருக்கு உடனடியாகத் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அப்போது தயாராக இல்லை. காரணம், யுத்த இழப்புகள்.

ஆனாலும் வேறு வழியில்லை என்று கரம் நீட்டி வரவேற்க சினாய் எல்லையில் தயாரானது இஸ்ரேல் ராணுவம்.

இருபத்தைந்தாயிரம் பேர். அத்தனை பேரும் இரவோடு இரவாக எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள். அது தவிர இன்னும் ஓராயிரம் (சிலர் ஆயிரத்து ஐந்நூறு என்கிறார்கள்.) பேரை நாசர் 'சந்தேகத்தின் பேரில்' சிறையில் அடைத்தார். சில நூறுபேர், சித்திரவதைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஒரு வதந்தி உண்டு.

இந்தச் செய்திகள் வெளியே வந்தபோது ஒட்டுமொத்த அரபு உலகமும் நாசரைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாட ஆரம்பித்துவிட்டது. இஸ்ரேலின் கொட்டங்களை அடக்குவதற்கு நாசர்தான் ஒரே சரியான ஆள் என்று பேசினார்கள்.

உலகம் இதையெல்லாம் எவ்வாறு பார்த்தது என்பதைவிட, நடந்த சம்பவங்களை இஸ்ரேல் அன்று எப்படிப் பார்த்தது என்று கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏற்கெனவே அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தது. இந்த சூயஸ் விவகாரத்துக்குப் பிறகு, அமெரிக்காதான் அடுத்த வல்லரசு என்று அத்தனை தேசங்களும் எழுந்து நின்று தலைதாழ்த்தி வணக்கம் சொன்னபோது, ஒரு நண்பனாக அமெரிக்காவின் தோளில் தட்டிக்கொடுத்து தன்னுடைய நெருக்கத்தை இன்னும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தது இஸ்ரேல். அதன்மூலம் எகிப்து என்ன பயமுறுத்தினாலும் தனக்கு அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று சொல்லாமல் சொன்னது.

எகிப்து விஷயத்தில் இஸ்ரேல் எக்கேடு கெட்டாலும் அதன் அமெரிக்கச் சார்பு நிலை நிச்சயம் சோவியத் யூனியனுக்கு எரிச்சல் தரும் என்பதை இஸ்ரேலியர்கள் உணராமல் இல்லை. ஆனாலும் சோவியத் யூனியன் ஒருபோதும் தன்னை ஆதரிக்காது என்றே இஸ்ரேல் நம்பியது.

இஸ்ரேல் எதிர்பார்த்தது ஒரு தோள். சாய்ந்துகொள்வதற்கான தோள். அவர்களால் சுயமாக யுத்தம் செய்ய முடியும். யுத்தத்துக்குத் தேவையான ஆயுதங்களைக்கூட அவர்களே உற்பத்தி செய்துகொள்வார்கள். பண உதவியைக் கூட இஸ்ரேல் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. உழைப்பின் மூலம் வேண்டிய பணத்தைத் தானே சம்பாதித்துக்கொள்ள முடியும் என்பதுதான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்குமே இஸ்ரேலின் சித்தாந்தம்.

ஆனால் அவர்களுக்கு ஒரு தார்மீக ஆதரவு வேண்டியிருந்தது. யாராவது ஒரு பெரிய சக்தி தனக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த சக்தி ஓர் அயோக்கிய சக்தியாக இருந்தால்கூடப் பாதகமில்லை. ஆனால் பெரிய சக்தியாக இருக்கவேண்டும். மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் ஜீவித்திருப்பதென்பது, சிங்கத்தின் குகையில் ஓர் ஓரத்தில் குடிசை போட்டுக்கொண்டு வாழ்வது மாதிரிதான். எந்த நிமிஷம் யார் பாய்வார்கள் என்று சொல்லமுடியாது. இதோ எகிப்து இன்றைக்கு வேலையைக் காட்டிவிட்டது. நாளைக்கு ஜோர்டன் தாக்கலாம். ஈராக் யுத்தத்தை ஆரம்பிக்கலாம். கழுத்தில் இருக்கும் கத்தியான சிரியா அடிக்க வரலாம். அவ்வளவு ஏன், அத்தனை பேருமே சேர்ந்துகூட சண்டைக்கு வரலாம். இதற்கெல்லாம் ஒரு காரணம்கூட வேண்டாம். எதாவது கேட்டால் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு ஆதரவாகப் போர் என்று சுலபமாகச் சொல்லிவிட முடியும்.

என்ன ஆனாலும் தன்னை ஆதரிக்க இஸ்ரேலுக்கு ஒரு பெரிய ஆதரவு சக்தியாக அமெரிக்கா இருக்கும் என்று உறுதியானது அப்போதுதான்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இஸ்ரேலை ஆதரிப்பதற்கான காரணங்கள் மிகவும் எளிமையானவை. ஒன்று, இஸ்ரேலை சோவியத் யூனியன் ஆதரிக்கவில்லை என்பது. இரண்டாவது, மத்தியக் கிழக்கில் தனக்கொரு தளமாக இஸ்ரேல் இருக்கும் என்கிற நம்பிக்கை. திகட்டத் திகட்டப் பொருளாதார உதவிகள், ஆயுத உதவிகளை அளித்துக்கொண்டிருப்பதன் மூலம் இஸ்ரேலைத் தன்னுடைய குட்டிக் காலனி மாதிரியே அமைத்துக்கொண்டு, அங்கிருந்து அனைத்து எண்ணெய் தேசங்களையும் கண்காணிக்கலாம் என்பது அமெரிக்காவின் எண்ணம்.

என்ன முயன்றாலும் சோவியத் யூனியனுடன் முஸ்லிம் நாடுகளை ஒட்டவைக்க முடியாது என்று அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் திட்டவட்டமாகக் கருதினார். எங்காவது, எதிலாவது அவர்கள் முட்டிக்கொள்ள நேரிடும் என்பதே அவரது எண்ணம். ஆகவே, மத்தியக் கிழக்கில் காசு பண்ணுவதற்குத் தான் இஸ்ரேலை ஆதரிப்பது லாபகரமான முடிவாகவே இருக்கும் என்று அமெரிக்கா நினைத்தது. தவிரவும் இஸ்ரேலில் எண்ணெய் கிடையாது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து கிழக்கே போனால்தான் எண்ணெய். ஆகவே, இஸ்ரேலில் காசு பண்ணுகிறது அமெரிக்கா என்றும் யாரும் குற்றம் சொல்ல முடியாது.

என்ன அழகான திட்டம்!

அன்று தொடங்கி, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் வர்த்தகம், இஸ்ரேல் பொருளாதாரம் ஆகிய மூன்று அம்சங்கள் எப்படியெப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு நிழல் சக்தியாக அமெரிக்கா ஆகிப்போனது.

தனது முதல் கட்டளையாக, எகிப்திடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய சினாய் பகுதியிலிருந்து இஸ்ரேலிய ராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி ரகசியமாகக் கேட்டுக்கொண்டது.

ஒரு துண்டு நிலம் என்னவிதமான பிரச்னைகளை உருவாக்கும் என்று சொல்லமுடியாதல்லவா? அமெரிக்காவின் நீண்டநாள் திட்டங்களுக்கு அந்த ஒரு மாநிலமே கூடத் தடையாக இருக்கலாம். இஸ்ரேலுக்கே அது ஒரு நிரந்தரத் தலைவலிப் பிராந்தியமாகிவிடக்கூடும்.

இதையெல்லாம் யோசித்துத்தான் சினாயை எகிப்திடமே திரும்பக் கொடுத்துவிடலாம் என்று முடிவானது.

1957-ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேல், சினாயில் இருந்த தன்னுடைய ராணுவத்தைக் கட்டக்கடைசியில் மொத்தமாக வாபஸ் பெற்றுக்கொண்டது. மீண்டும் அங்கே எகிப்து ராணுவம் வந்து உட்கார்ந்துகொண்டது.

எல்லையில் வலுவான வேலி போடப்பட்டது. இங்கேயும் நிலம்தான். அங்கேயும் நிலம்தான். சமதளமும் கூட. ஆனாலும் நடுவில் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய பள்ளம் ஒன்று இருப்பதாகவே அனைவருக்கும் தோன்றியது.

யாரைப் பிடித்து யார் தள்ளப்போகிறார்கள் என்பதே கேள்வி. எப்போது என்பது அடுத்த கேள்வி.

இதையெல்லாம் ஒரு மனிதர் பார்த்துக்கொண்டிருந்தார். மிகவும் அமைதியாக. எந்தக் கருத்தும் சொல்லாமல். யாசர் அராஃபத். அவர் எகிப்தில் பிறந்த பாலஸ்தீன்காரர் என்பதால் சூயஸ் விவகாரத்தில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதனாலேயேதான் இப்போது எதுவும் பேசக்கூடாது, செய்யக்கூடாது என்று தீர்மானமாக இருந்தார்.

அவரது சிந்தனையெல்லாம் ஒரே விஷயத்தைப் பற்றித்தான். நாசரை எந்தளவுக்கு நம்பலாம்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 17 ஜூலை, 2005

தொடரும்...

  • Replies 146
  • Views 19.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

64] அராஃபத் என்கிற புரட்சியாளர்

அராஃபத் தோற்றுவித்த அல் ஃபத்தாவைப் பிற தீவிரவாதக் குழுக்களோடெல்லாம் ஒப்பிடவே முடியாது. இன்றைக்குத் தீவிரமாக இயங்கும் அல் குவைதா, ஹமாஸ், எல்.டி.டி.ஈ., போன்ற மாபெரும் குழுக்களாலெல்லாம் முடியாத காரியங்களை இந்த ஐம்பதுபேர் கொண்ட குழு வெகு அலட்சியமாகச் செய்து முடிக்கக்கூடிய வல்லமை பெற்றதாக இருந்தது. அதிக வசதிகள், நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவும் அல் ஃபத்தாவுக்குக் கிடையாது. குறைந்தபட்ச ஆயுதங்கள் மட்டும்தான். ஆனால் அவர்களிடம் இருந்த கோபமும் தீவிரமும் வேகமும் வெறியும் அராஃபத் என்கிற ஒரு சரியான தடுக்கும் சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டு புரட்சிப் பாதையில் துல்லியமாகத் திசைதிருப்பி விடப்பட்டதால், நம்பமுடியாத சாதனைகளைப் புரியக்கூடியவர்களாக இருந்தார்கள்.

தொடரும்...

:) :) :)

  • தொடங்கியவர்

69] பாலஸ்தீன் விடுதலை இயக்கம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 69

பாலஸ்தீன் விடுதலைக்காக யாசர் அராஃபத் ஆரம்பித்த போராட்டங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் பி.எல்.ஓ.வைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. ஏனெனில், சூயஸ் கால்வாய் விவகாரத்தை பி.எல்.ஓ. மிகவும் நுணுக்கமாக கவனித்து ஆராய்ந்ததற்குப் பிறகுதான் பாலஸ்தீனுக்கான போராட்டம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வடிவம் பெறத் தொடங்கியது. பி.எல்.ஓ. வடிவமைத்த அந்தப் போராட்டப் பாதையைத்தான் யாசர் அராஃபத் வேண்டிய அளவுக்குத் திருத்தி அமைத்து, போராட்டத்தைத் துரிதப்படுத்தினார். ஆகவே, இப்போது பி.எல்.ஓ.

பி.எல்.ஓ. என்கிற அமைப்பு 1964-ம் வருடம் ஜூன் மாதம் 2-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. பாலஸ்தீன் தேசிய கவுன்சில் (Palestinian National Council PNC) என்கிற அமைப்பின் அரசியல் பிரிவுதான் பி.எல்.ஓ. என்கிற பாலஸ்தீன் விடுதலை இயக்கம்.

இந்த பாலஸ்தீன் தேசிய கவுன்சில் என்கிற அமைப்பு, பாலஸ்தீனுக்கு வெளியே பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வசித்து வந்த பாலஸ்தீனியர்களால் உருவாக்கப்பட்டது. தங்களால் பாலஸ்தீனுக்குள் நுழைந்து போராட முடியாத காரணத்தால்தான் பி.எல்.ஓ.வை அவர்கள் தோற்றுவித்தார்கள். வாய்வார்த்தைக்கு 'அரசியல் பிரிவு' என்று சொல்லப்பட்டாலும், பி.எல்.ஓ. முழுக்கமுழுக்க ஒரு ராணுவ அமைப்புத்தான். பின்னால் இதற்கே தனியானதொரு அரசியல் பிரிவும் உண்டானது வேறு விஷயம்!

பாலஸ்தீன் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் மே மாதம் 1964-ம் ஆண்டு ஜெருசலேத்தில் நடைபெற்றது. கவுன்சிலில் அப்போது மொத்தம் 422 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஜோர்டான், வெஸ்ட் பேங்க், கத்தார், ஈராக், சிரியா, குவைத், எகிப்து, லிபியா, அல்ஜீரியா மற்றும் காஸா பகுதிகளிலிருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அத்தனை பேருமே அடிப்படையில் பாலஸ்தீனியர்கள். சந்தர்ப்பவசத்தால் வெளிநாடுகளில் அகதிகளாக வசிக்க நேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதே கூட்டத்தில்தான் பி.எல்.ஓ.வைத் தோற்றுவித்ததும், அகமது அல் ஷக்ரி (Ahmed al shuquiry) என்பவரை அதன் தலைவராக நியமித்ததும் நிகழ்ந்தது.

இந்த அகமது அல் ஷக்ரி, லெபனானைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு பாலஸ்தீனியர். தாய் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெருசலேம் நகரில் சட்டம் படித்துவிட்டு ஐக்கிய நாடுகளுக்கான சிரியாவின் பிரதிநிதியாக 1949-லிருந்து 51 வரை பணியாற்றியவர். பிறகு அரபு லீகின் துணைச் செயலாளராகச் சில காலம் பணிபுரிந்துவிட்டு, ஐ.நா.வுக்கான சவுதி அரேபியாவின் தூதராக 1957-லிருந்து 62 வரை வேலை பார்த்திருக்கிறார். பெரும்பாலான அரபு தேசங்கள், ஷக்ரி தங்களுக்காகப் பணியாற்ற மாட்டாரா என்று ஏங்கும் அளவுக்கு அக்காலத்தில் அரேபிய தேசங்களின் மதிப்புக்குரிய அரசியல் வல்லுநராக விளங்கியவர் இவர்.

ஆகவே, பி.எல்.ஓ. தொடங்கப்பட்டபோது, அதன் தலைவராக இருக்கச் சரியான நபர் ஷக்ரிதான் என்று தீர்மானித்து அவரைக் கொண்டு வந்தார்கள்.

ஷக்ரி, பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம், பி.எல்.ஓ.வுக்கான முந்நூறு பேர் கொண்ட முதல்நிலை ஆட்சிக்குழு ஒன்றை அமைத்ததுதான். பிறகு, பதினைந்து பேர் கொண்ட செயற்குழு ஒன்றை அமைத்து, அதற்கு பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் இருந்தே ஆள்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். மேற்சொன்ன முந்நூறு பேரும் ஓட்டுப் போட்டு, தேசிய கவுன்சில் உறுப்பினர்களான 422 பேரிலிருந்து 15 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஏற்பாடு.

பி.எல்.ஓ.வே ஒரு நிழல் ராணுவ அமைப்புத்தான் என்றபோதும், நிழலுக்குள் வெளிச்சமாக பி.எல்.ஏ என்று தனக்கென ஒரு தனி ராணுவப் பிரிவையும் பி.எல்.ஓ. ஏற்படுத்திக் கொண்டது.

எப்படி பல்வேறு அரசியல் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இணைந்து பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தைத் தோற்றுவித்தார்களோ, அதேபோல, பல்வேறு போராளிக் குழுக்களை ஒருங்கிணைத்தே பி.எல்.ஏ. என்கிற Palestine Liberation Army தோற்றுவிக்கப்பட்டது. அந்தந்தக் குழுக்களின் தனிப்பட்ட நோக்கமும் செயல்பாடுகளும் என்ன மாதிரியாக இருந்தாலும் 'அரபு தேசியம்' என்கிற கருத்தாக்கத்திலும் பாலஸ்தீனை விடுவிப்பது என்கிற நோக்கத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனையாக இருந்தது.

பி.எல்.ஓ.வின் தோற்றமும் ஆரம்ப வேகமும் பெரும்பாலான பாலஸ்தீனியர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. எடுத்த உடனேயே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவர்கள் ஓடவில்லை. மாறாக, இஸ்ரேலுக்கு வெளியே அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய மக்கள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்துப் பேசினார்கள். இழந்த பாலஸ்தீனைப் போராடித்தான் பெறவேண்டும் என்பதையும் போராட்டத்துக்கு மக்கள் எந்தெந்த வகையிலெல்லாம் பங்களிக்கலாம் என்பதையும் விளக்கிச் சொன்னார்கள்.

பி.எல்.ஓ.வின் இந்த மக்கள் சந்திப்பு ரகசியத் திட்டம், மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கத் தொடங்கியது.

பெரும்பாலான பாலஸ்தீனிய இளைஞர்கள், உடனடியாகத் தங்களை பி.எல்.ஓ.வுடன் இணைத்துக்கொண்டார்கள். ஆயுதப் பயிற்சி உள்ள அத்தனை பேரும் பி.எல்.ஓ.வின் ராணுவத்தில் சேரத் தொடங்கினார்கள். அடிப்படைப் பயிற்சி இருந்தாலே போதும் என்று பி.எல்.ஏ. நினைத்தது. மேல் பயிற்சிகளைத் தாங்களே தர முடியும் என்று கருதி, துப்பாக்கி தூக்கத் தெரிந்த அத்தனை பேரையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இப்படி இணைந்த இளைஞர்கள் அத்தனை பேரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு எகிப்து, லெபனான், சிரியா போன்ற தேசங்களில் இருந்த பி.எல்.ஓ.வின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்பட்டன.

இந்தப் பயிற்சிகளுக்கு உலகெங்கிலுமிருந்து, பல்வேறு விடுதலை இயக்கங்களின் தலைவர்களே நேரில் வந்திருந்து வகுப்பெடுத்தார்கள்.

இதற்கெல்லாம் தேவையான நிதியைத் திரட்ட தனியே ஒரு குழு அமைக்கப்பட்டது. பாலஸ்தீன் மக்களின் துயர் துடைப்பதற்காக நிதி சேகரிக்கப் புறப்பட்ட அந்தக் குழுவினர், மத்திய ஆசியா முழுவதும் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி நிதி சேகரித்தார்கள். பல தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் ஏராளமான நிதி அளித்தார்கள் என்பது உண்மையே என்றபோதும் பொதுமக்கள் அளித்த நிதிதான் பி.எல்.ஓ.வினரால் மிக முக்கியமாகக் கருதப்பட்டது.

தீவிரமாக, மிகத் தீவிரமாக இந்தப் பணிகள் நடைபெறத் தொடங்கியதும் 1968-ம் ஆண்டு பாலஸ்தீன் தேசிய கவுன்சில் தன்னுடைய முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டது. கிட்டத்தட்ட ஓர் அரசாங்க உத்தரவு போலவே காணப்பட்ட அந்த அறிக்கைதான், இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டம் குறித்த முதல் தகவல் அறிக்கை என்று சொல்லலாம்.

மிக நீண்ட, விவரமான, ஏராளமான பின்னிணைப்புகள் கொண்ட நூற்றுக்கணக்கான பக்கங்கள் உள்ள அந்த அறிக்கையின் பல பத்திகளில் 'இஸ்ரேல் ஓர் ஒழிக்கப்பட வேண்டிய தேசம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (பின்னால் 1993-ல் ஓஸ்லோ உடன்படிக்கை சமயத்தில் இந்தப் பத்திகளை வாபஸ் பெறுவதாக யாசர் அராஃபத் அறிவித்தது பிறகு வரும்.)

இதுதான் ஆரம்பம். இங்கிருந்துதான் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிரான பாலஸ்தீன் விடுதலைப் படையினரின் நேரடித் தாக்குதல்கள் ஆரம்பமாகின்றன.

பி.எல்.ஓ.வுக்கு அப்போதெல்லாம் கெரில்லாத் தாக்குதல் முறை தெரியாது. பரிச்சயம் கிடையாது. எங்கோ தொலைதூர குவைத்தில் ரகசிய அறை எடுத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த யாசர் அராஃபத்துக்குத்தான் கெரில்லா தாக்குதல் தெரியும். அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைவரான பிறகுதான் அத்தனைபேருக்கும் ஒளிந்திருந்து தாக்கும் கலை பயிற்றுவிக்கப்பட்டது. அதுவரை, நேரடித் தாக்குதலில்தான் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

நேரடித் தாக்குதல் என்றால் என்ன?

முதலில் ஓர் இலக்கை நிர்ணயிப்பார்கள். உதாரணத்துக்கு, டெல் அவிவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன். இலக்கு முடிவானதும் ஒரு பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அங்கே அனுப்புவார்கள். டெல் அவிவுக்கு அவர்கள் போய்ச் சேர்ந்ததும் 'நலமாக வந்து சேர்ந்தோம்' என்று யார் மூலமாகவாவது தகவல் அனுப்புவார்கள். இந்தத் தகவல் வந்ததும் இன்னொரு குழுவினர் மூலம் தாக்குதலுக்குப் போனவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் ரகசியமாக அனுப்பிவைக்கப்படும். பெரும்பாலும் சரக்கு லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். வாழைத் தார்கள், கோதுமை மூட்டைகளுக்கு அடியில் படுத்துக்கொண்டு துப்பாக்கிகள் தனியே பயணம் செய்து உரியவர்களிடம் வந்து சேரும்.

அதன்பிறகு ஒரு நேரம் குறித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எதிரே பதுங்கி நின்றுகொண்டு சுட ஆரம்பிப்பார்கள். நான்கைந்து காவலர்கள் இறந்ததும் உள்ளே போவார்கள். தேவைப்பட்டால் அங்கும் தாக்குதல் தொடரும். இல்லாவிட்டால் அங்கிருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வண்டி ஏறிவிடுவார்கள்.

குண்டு வைப்பதென்றாலும் இதே நடைமுறைதான். முதல் நாள் இரவே குறிப்பிட்ட இடத்துக்குப் போய் வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு, விடிந்ததும் குண்டு வைத்துவிட்டு பஸ் பிடித்துவிடுவார்கள். (மனித வெடிகுண்டுகள் புழக்கத்துக்கு வராத காலம் அது.)

மறுநாள் செய்தித்தாளில் விஷயத்தைப் பார்த்து, உறுதி செய்துகொண்டபிறகு கொஞ்சம் போல் கொண்டாடி விட்டு, அடுத்த வேலையில் ஈடுபடத் தொடங்குவார்கள்.

இஸ்ரேல் ராணுவம், பாதுகாப்புப் படை இரண்டும்தான் பி.எல்.ஓ.வினரின் பிரதானமான தாக்குதல் களமாக இருந்தது. சில சமயங்களில் பொதுமக்கள் மீதும் வன்முறை ஏவப்பட்டிருக்கிறது. 1968-ம் ஆண்டு டிசம்பரில் காஸா பகுதியில் ஒரு பேருந்தில் வெடித்த குண்டுதான் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும். (23 பேர் பலி.) அடுத்தடுத்து ஒரு நாள் தவறாமல் எங்காவது குண்டு வெடித்துக்கொண்டேதான் இருந்தது.

இஸ்ரேல் என்ன தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பி.எல்.ஓ.வினரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் அது ஒரு நிரந்தரத் தலைவலி என்று ஆகிப்போனது.

ஆகவே, இஸ்ரேல் அரசு பி.எல்.ஓ.வை ஒரு தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தது. அதுவரை ஒரு விடுதலை இயக்கமாக மட்டுமே அறியப்பட்டு வந்த பி.எல்.ஓ., அமெரிக்க மீடியாவின் உதவியுடன் பயங்கரவாத அமைப்பாக, தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் ஒரு ராட்சஸத் தொழிற்சாலையாகச் சித்திரிக்கப்பட்டது.

இஸ்ரேலும் தன் பங்குக்கு பி.எல்.ஓ. செய்ததுடன் நிறைய புனைவுகள் சேர்த்து உலகெங்கும் அனுதாபம் தேடத் தொடங்கியது.

பி.எல்.ஓ. ஒருபோதும் தனது தீவிரவாத நடவடிக்கைகளை அக்காலத்தில் நியாயப்படுத்தியதில்லை. 'வேறு வழியில்லாமல் ஆயுதம் தூக்கியிருக்கிறோம். உங்களால் அமைதி வழியில் பாலஸ்தீனை மீட்டுத்தர முடியுமானால் செய்யுங்கள்' என்றுதான் பி.எல்.ஓ. சொன்னது.

அமைதிக்கான எந்த சாத்தியத்தையும் அப்போது இஸ்ரேல் விட்டுவைக்காத காரணத்தால் ஆயுதம்தான் தீர்வு என்று அனைவராலுமே நம்பப்பட்டது.

ஆனால், பி.எல்.ஓ.வின் நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு மிகைப்படுத்தி மீடியாவுக்குத் தருகிறது என்று எடுத்துச் சொல்ல, பி.எல்.ஓ.வில் யாருக்கும் தெரியவில்லை. பிரசாரம் ஒரு வலுவான சாதனம். எதையும் திரும்பத்திரும்பச் சொல்லுவதன் மூலம் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதியவைத்துவிட முடியும். ஆகவே, இஸ்ரேலின் திட்டமிட்ட பிரசார உத்தி பி.எல்.ஓ.வுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. நான்கு பேர் பலியானார்கள் என்பதை நானூறு பேர் பலி என்று சொன்னால் அதை இல்லை என்று மறுக்க வேண்டுமல்லவா?

அப்படி மறுத்து, மறு அறிக்கை விட பி.எல்.ஓ.வில் அன்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியே அவர்கள் எடுத்துச் சொன்னாலும் வெளியிடுவதற்கான ஊடக ஒத்துழைப்புகள் இல்லாமல் இஸ்ரேல் பார்த்துக்கொண்டது.

இது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. போராட்டம் ஒழுங்காக நடந்தால் போதாது; நிர்வாகமும் சிறப்பாக இயங்கவேண்டும் என்று முதல் முதலில் அப்போது உணரப்பட்டது. ஒரு சரியான, திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த தலைவருக்காக பி.எல்.ஓ. ஏங்கியது.

1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி யாசர் அராஃபத் அந்தப் பொறுப்புக்கு வந்தார்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21 ஜூலை, 2005

:) :) :)

:) :)

  • தொடங்கியவர்

70] ஆறு நாள் யுத்தத்தின் பின்னணியில்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 70

1964-ல் தொடங்கப்பட்ட பி.எல்.ஓ.வுக்கு 69-ல்தான் யாசர் அராஃபத் தலைவராக வருகிறார். இடைப்பட்ட காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்னையை அரபு உலகம் சந்திக்க வேண்டியிருந்தது. அதனை முதலில் பார்த்துவிட்டு யாசர் அராஃபத்திடம் போவதுதான் சரியாக இருக்கும்.

ஆறு நாள் யுத்தம் (Six day war) என்று சரித்திரம் வருணிக்கும் இந்தப் போர், 1967-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, சிரியா, ஜோர்டன் ஆகிய தேசங்களுக்குமிடையே நடைபெற்றது. யாருமே எதிர்பார்க்காத, சற்றும் முன்னறிவிப்பில்லாத, திடீரென்று தொடங்கப்பட்ட இந்த யுத்தத்தின் சூத்திரதாரி இஸ்ரேல்.

எந்தவிதமான முன்னேற்பாடுகளும் கிடையாது. திடீரென்று அடிக்க ஆரம்பித்தார்கள். மும்முனைத் தாக்குதல். இங்கே சினாய், அங்கே கோலன் குன்றுகள், மேற்கே வெஸ்ட்பேங்க், கிழக்கே காஸா என்று முந்தைய காலத்தில் இழந்த பகுதிகள் அத்தனையையும் அந்த ஆறு நாள் யுத்தத்தில் அள்ளிக்கொண்டுவிட்டது இஸ்ரேல். என்ன நடக்கிறது என்று சுதாரித்துக்கொள்ளும் முன்னதாகவே யுத்தம் முடிந்துவிட்டது. இஸ்ரேல் என்பது எத்தனை அபாயகரமான தேசம் என்பது வெளிச்சமானது.

இஸ்ரேல் இந்த யுத்தத்தைத் தொடங்கியதற்கான காரணங்கள் மிகவும் நுணுக்கமானவை. 1956-ம் ஆண்டு நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின்போது இஸ்ரேல் தன் வசப்படுத்திய சினாய் பகுதியை அத்தேசம் மீண்டும் எகிப்துக்கே விட்டுத்தர வேண்டி வந்ததை முன்பே பார்த்தோம் அல்லவா? அதன் விரிவாக்கப்பட்ட தொடர்ச்சி என்று இதனைக் கொள்ளலாம்.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாகத்தான் சினாயை மீண்டும் எகிப்து வசம் அளித்தது இஸ்ரேல். என்னதான் ராணுவ ரீதியில் அந்த யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்திருந்தபோதிலும், இஸ்ரேல் அந்தப் பகுதியைத் திருப்பிக் கொடுத்ததை உலகம் முற்றிலும் வேறு விதமாகவே பார்த்தது. அதாவது, நாசரின் ராஜதந்திர வெற்றி அது என்பதாக ஒரு பிரசாரம் மிகத் தீவிரமாக நடந்தது! இது இஸ்ரேலுக்குப் பெரிய தன்மானப் பிரச்னையாக இருந்தது. அமெரிக்க நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் நிச்சயமாக சினாயை விட்டுக்கொடுத்திருக்க மாட்டோம் என்று எங்காவது குன்றின் மீது ஏறி நின்று உரக்கக் கத்தலாம் போலிருந்தது அவர்களுக்கு.

ஆனால், அமெரிக்காவை அவர்களால் பகைத்துக்கொள்ள முடியாது. அதற்கு அரசியலைத் தாண்டிய பொருளாதாரக் காரணங்களும் நிறைய இருந்தன. ஆகவே, வாகான ஒரு சந்தர்ப்பத்துக்காக இஸ்ரேல் காத்திருந்தது.

மறுபுறம், சூயஸ் யுத்தத்தைத் தொடர்ந்து எகிப்து, சிரியா, ஜோர்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஒருமாதிரியான நேசம் வளர ஆரம்பித்திருந்தது. ராணுவம் முதல் வர்த்தகம் வரை பல்வேறு விதங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்துகொண்டும் ஒத்துழைத்துக்கொண்டும் நிஜமான சகோதரத்துவம் பேண ஆரம்பித்திருந்தார்கள்.

இஸ்ரேலுக்கு இது பெரிய ஆபத்தாகப் பட்டது. ஏனெனில், எகிப்து, சிரியா, ஜோர்டன் மூன்றுமே இஸ்ரேலின் மூன்று எல்லைப்புற தேசங்கள். மூன்றும் அரபு தேசங்களும் கூட. இந்த மூவர் கூட்டணியை வளரவிட்டால் எந்தச் சமயத்திலும் தனக்குப் பிரச்னை வரக்கூடும் என்று இஸ்ரேல் பயந்தது. தோதாக, இந்த மூன்று தேசங்களுமே சூயஸ் யுத்தத்தைத் தொடர்ந்து சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தன. ஜோர்டனுக்கு வேறு பல மேற்கத்திய நாடுகளுடனும் தனியே அப்போது நல்லுறவும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் இருந்தன.

ஏற்கெனவே எந்த அரபு தேசமும் இஸ்ரேலுக்கு எந்த வகையிலான ஒத்துழைப்பையும் தருவதில்லை என்று முடிவு செய்திருந்த நிலையில், இந்த மூன்று தேசங்களின் நேசக் கூட்டணி இஸ்ரேலுக்கு அச்சம் தந்தது இயல்பான விஷயமே.

தவிரவும் சோவியத் யூனியன் குறித்த நியாயமான பல அச்சங்களும் இஸ்ரேலுக்கு இருந்தன. சூயஸ் யுத்தத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் பிரிட்டனின் நாணய மதிப்பைக் குறைத்துவிடுவதாக அமெரிக்கா மிரட்டியதுபோலவே, சோவியத் யூனியனும் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மீது அணு ஆயுத யுத்தம் தொடங்குவேன் என்று மிரட்டியது. (லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களில் ஏற்கெனவே சோவியத் யூனியன் அணுகுண்டுகளைக் கொண்டு வந்து இறக்கிவிட்டது என்று கூட ஒரு வதந்தி எழுந்தது!)

இதுபோன்ற மிரட்டல்களால்தான் பிரிட்டனும் பிரான்ஸும் சூயஸ் யுத்தத்தைக் கைவிட்டன. இதே காரணத்தால்தான் இஸ்ரேலும் தன் நோக்கம் முழுவதும் நிறைவேறுவதற்கு முன்னதாகவே யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டிவந்தது. அந்தக் கோபம் அடிமனத்தில் இருந்ததால்தான் பதினொரு வருடங்கள் காத்திருந்து 67-ல் அடிக்க ஆரம்பித்தது.

இவற்றையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியக் காரணமும் இந்த யுத்தத்துக்கு உண்டு.

சிரியாவிலிருந்து இஸ்ரேல் வழியாகப் போய் கலீலீ கடலில் கலந்துகொண்டிருந்த டான் மற்றும் பனியாஸ் நதி நீரை திசை திருப்பி, மேற்கே ஓடவிட்டு, ஜோர்டன் நதியில் கலக்கும்படியாக மாற்றியமைக்க, சிரியா ஒரு திட்டம் போட்டது. இது அப்பட்டமாக, வயிற்றிலடிக்கும் காரியம்தான். சந்தேகமே இல்லை. இஸ்ரேலுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு வரவேண்டும் என்கிற 'பரந்த' நோக்கத்துடன் தீட்டப்பட்ட திட்டம்தான். கோடிக்கணக்கில் செலவழித்தாவது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிரியா மிகுந்த ஆர்வம் செலுத்தியதைக் கண்ட இஸ்ரேல், தன் கோபத்தைக் காட்ட ஒரு வழி தேடிக்கொண்டிருந்தது அப்போது.

அந்தக் கோபத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக 1966-ம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் ஒரு ராணுவ ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இரு தேசங்களில் எந்த தேசத்தை யார் தாக்கினாலும் அடுத்தவர் உடனே உதவிக்கு ஓடி வரவேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.

இதற்குமேல் இஸ்ரேலால் பொறுமை காக்க முடியவில்லை. 1967 ஏப்ரல் 7-ம் தேதி சிரியாவின் ஆளுகைக்குட்பட்ட கோலன் குன்றுப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 'வழக்கமான' எல்லை தாண்டும் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார்கள். இரு பக்கங்களிலும் மெல்லிய துப்பாக்கிச் சூடுகளுடன் வழக்கமாக முடிந்துவிடும் வைபவம்தான் அது. அப்படித்தான் சிரியா நினைத்தது.

ஆனால் இஸ்ரேல் அந்தச் சிறு சம்பவத்தை அப்படியே ஊதிப் பெரிதாக்கி, பெரிய அளவில் ஒரு யுத்தமாக ஆக்கிவிட்டது. சிரியாவின் ஏழு போர் விமானங்களை (அனைத்தும் MIG 21 ரக விமானங்கள்) ஒரேயடியாக அடித்து வீழ்த்தி, ஒட்டுமொத்த கோலன் பகுதியையும் சுற்றி வளைத்துக்கொண்டு விட்டது.

இது ஒட்டுமொத்த அரபு உலகத்தையும் கோபம் கொள்ளச் செய்தது. அனைத்து தேச அரபுத் தலைவர்களும் அவசரமாகக் கூடிப் பேசினார்கள். இஸ்ரேலின் அராஜகங்களுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்பதே பேச்சின் சாரம். ஆனால் என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?

நாசர் தயாராக இருந்தார். ஏற்கெனவே சினாய் விவகாரத்தால் கடுப்பில் இருந்த அவர், இதை ஒரு காரணமாக வைத்து இஸ்ரேல் மீது யுத்தம் தொடுத்தால் எகிப்து முன்னின்று அதனை நடத்தத் தயார் என்று பகிரங்கமாகவே சொன்னார். போதாக்குறைக்கு, அப்படி எகிப்து யுத்தத்தை வழி நடத்துவதென்றால், தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்யத் தயார் என்று சோவியத் யூனியனும் ரகசியச் செய்தி அனுப்பியது. (சோவியத் யூனியனின் அப்போதைய அதிபர் அலெக்ஸி கோசிஜின்.)

ஆனால் பாதிக்கப்பட்ட தேசமான சிரியாதான் அடியெடுத்துக் கொடுத்தாக வேண்டும்.

பிரச்னை என்னவெனில் சிரியாவுக்கு அப்போது ஒரு யுத்தத்தில் பங்குபெறும் தெம்பு இல்லை. குறைந்தபட்சம் ஒரு படையை இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஊடுருவ அனுப்பக்கூட முடியாது என்கிற சூழ்நிலை.

ஆகவே எகிப்து வேறு ஒரு வழியைப் பிடித்தது. இஸ்ரேலின் பிரதான கப்பல் போக்குவரத்து வழியாக இருந்த திரன் ஜலசந்தியை மூடிவிட்டது. இஸ்ரேலின் எண்ணெய் வர்த்தக வழி என்பது அது ஒன்றுதான். ஒரு சொல்லில் விவரிப்பதென்றால் இதற்குப் பெயர்தான் அடிமடியில் கைவைப்பது.

இதெல்லாம் சேர்ந்துதான் இஸ்ரேலை உசுப்பிவிட்டன. முழு மூச்சில் அத்தேசம் யுத்தம் தொடங்க முடிவு செய்துவிட்டது. நாசரும் சொன்னார்: 'எங்களின் அடிப்படை நோக்கமும் இஸ்ரேலை ஒழிப்பதுதான். அத்தனை அரேபியர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்''

மூன்று முனைகளிலும் இஸ்ரேல் தனது வீரர்களை நிறுத்தியது. மேற்கே ஜோர்டன் ராணுவத்துக்கு எதிராக மேற்குக்கரைப் பகுதியில் யுத்தம். தென் கிழக்கே எகிப்துக்கு எதிராக காஸா மற்றும் சினாய் பகுதிகளில். வடக்கே, சிரியா. கோலன் குன்றுகள்.

நாசர் சில விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார். யுத்தத்தைத் தான் தொடங்கக்கூடாது என்பது அவற்றுள் முதன்மையானது. இஸ்ரேல்தான் ஆரம்பித்தது. இரண்டாவது, இஸ்ரேலின் தாக்குதல் எத்தனை வலுவாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அந்தக் காட்சிகளை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே தூக்கி சர்வதேச மீடியாவில் வெளியிட, அவர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். உலகம் முழுவதும் இஸ்ரேலைத் திட்டித்தீர்க்க இந்த யுத்தத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது அவரது திட்டம்.

யுத்தத்தை தான் முதலில் ஆரம்பிக்கக்கூடாது என்று நாசர் முடிவெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

யுத்தம் தொடங்கியதற்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னதாக அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து மாஸ்கோவில் இருந்த க்ரெம்ளின் மாளிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

பனிப்போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமெரிக்க அதிபர், சோவியத் அதிபரை அழைத்துப் பேசுவதாவது? நம்ப முடியாத விஷயமாக இருப்பினும் இது நடக்கத்தான் செய்தது.

அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்தவர் லிண்டன் ஜான்சன். அவர்தான் கோசிஜினை அழைத்தார். 'நான் கேள்விப்பட்டது உண்மையா?'' என்று முதல் வரியில் விஷயத்தை ஆரம்பித்தார்.

'என்ன கேள்விப்பட்டீர்கள்?'

'மத்தியக் கிழக்கில் உங்கள் அடிப்பொடியாக இருக்கும் எகிப்து. இன்னும் 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஒரு பெரிய யுத்தத்தைத் தொடங்கவிருப்பதாக எங்களுடைய இஸ்ரேலிய உளவுத்துறை நண்பர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா?''

உண்மையில் கோசிஜின் அப்படியொரு விஷயத்தை அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே சற்று அவகாசம் கேட்டார்.

'இதோ பாருங்கள். உலக அளவில் இன்னொரு பெரிய யுத்தத்துக்கு இது வழிவகுக்கக்கூடும். பின் விளைவுகளுக்கு அமெரிக்கா பொறுப்பில்லை' என்று எச்சரித்துவிட்டு போனை வைத்தார் ஜான்சன்.

அது மே 27-ம் தேதி 1967-ம் வருடம். நள்ளிரவு 12.48 மணி. சரியாக ஒன்றே கால் மணி நேரம் கழித்து எகிப்துக்கான சோவியத் தூதராக இருந்த டிமிட்ரி போஜிதேவ் (Dimitri Pojidaev), நாசரின் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.

'யுத்தத்தை எகிப்து ஆரம்பிப்பதை சோவியத் யூனியன் விரும்பவில்லை. அப்படி நீங்கள் தொடங்கினால், சோவியத்தின் உதவி கிடைக்காமல் போகலாம்' என்று கோசிஜின் சொல்லச் சொன்ன தகவலைத் தெரிவித்தார்.

நாசர் வெறுமனே தலையாட்டிவிட்டு அவரை அனுப்பிவைத்துவிட்டு, உடனே தன்னுடைய வெளி விவகாரத்துறை அமைச்சர் அப்துல் ஹக்கிம் அமீரை (Abdel Hakim Amer) அழைத்து, சோவியத் யூனியனில் உள்ள எகிப்து ஏஜெண்டுகளை அழைத்து கோசிஜின் அப்படித்தான் சொன்னாரா என்று உறுதிப்படுத்தச் சொல்லிக் கேட்டார்.

அவர் சொன்னது உண்மைதான் என்று அடுத்த ஒரு மணி நேரத்தில் உறுதியானது. ஆகவே நாசர், யுத்தத்தை இஸ்ரேலே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருக்கத் தீர்மானித்தார்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 24 ஜூலை, 2005

தொடரும்....

  • தொடங்கியவர்

71] சினாயும் காஸாவும் இஸ்ரேல் வசம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 71

இஸ்ரேலும் ஒரு முடிவில்தான் இருந்தது. சிரியாவுடனான தண்ணீர்ப் பிரச்னை, எகிப்துடனான கப்பல் போக்குவரத்துப் பிரச்னை, ஜோர்டனுடனான மேற்குக்கரைப் பிரச்னை உள்ளிட்ட தன்னுடைய சொந்தப் பிரச்னைகளுக்கு அமெரிக்காவோ, ஐ.நா.சபையோ ஒரு தீர்வு கொண்டுவராவிட்டால், தனக்குத் தெரிந்த முறையில் தானே நடவடிக்கையில் இறங்கிவிடலாம் என்பதுதான் அது!

அந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி மோஷே தயான் (Moshe Dayan) என்கிற மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை ராணுவத் தளபதியாக நியமித்தார் இஸ்ரேலியப் பிரதமர் லெவி இஷ்கல். (Levi Eshkol). ஒரு அவசர யுத்தத்தை திட்டமிட்டு நடத்தக்கூடிய வல்லமை பொருந்தியவர் என்பதால்தான் இந்த திடீர் பதவி மாற்றம்.

இதைக் கவனித்ததுமே அமெரிக்க அதிபர் ஜான்சன் இஸ்ரேலிய பிரதமரைத் தொலைபேசியில் அழைத்தார். வேண்டாம், யுத்த முஸ்தீபுகள் இப்போது தேவையில்லை என்று எச்சரிக்கை செய்தார்.

ஆனால், இஸ்ரேல் கேட்கக்கூடிய நிலையில் இல்லை. அமெரிக்கா சொன்னதைக் கேளாமல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டாலும் பின்னால் சமாதானம் பேசி வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று முடிவு செய்தார் இஸ்ரேலியப் பிரதமர்.

ஆகவே எகிப்தின்மீது தாக்குதல் தொடங்க உத்தரவிட்டார். அன்றைக்குத் தேதி ஜூன் 5.

இஸ்ரேலின் முதல் இலக்கு, எகிப்தின் விமானப்படையை ஒழித்துக்கட்டுவதுதான். அன்றைய தேதியில், மத்தியக்கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த விமானப்படையை வைத்திருந்த ஒரே தேசம் எகிப்து. காரணம் சோவியத் யூனியனின் ஒத்துழைப்பு. உலகில் விமானக் கட்டுமானத்தில் என்னென்ன நவீன உத்திகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அவை யனைத்தும் எகிப்து விமானப்படைக்கு வந்து சேர வேண்டுமென்பதில் எகிப்தைக் காட்டிலும் அப்போது சோவியத் யூனியன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது.

மத்தியக் கிழக்கில் தான் பங்கேற்கக்கூடிய பெரிய யுத்தம் என்று ஏதேனும் வருமானால், அப்போது அதிநவீன எகிப்து விமானப்படையை உபயோகித்துக்கொள்ளலாமே என்கிற முன் யோசனையுடன் தான் சோவியத் யூனியன் எகிப்து விமானப்படையை ஒரு செல்ல நாய்க்குட்டி போலப் பராமரித்து வந்தது.

இது ஒரு வெளிப்படையான ரகசியம். அன்றைக்கு உலகம் முழுவதற்குமே இந்த விஷயம் தெரியும். தன்னுடைய விமானப்படையின் பலம் குறித்த பெருமையுடன் இருந்த எகிப்து, அதனாலேயே மற்ற படைகள் சற்று முன்பின்னாக இருந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்தது.

இதனால்தான் இஸ்ரேல் முதலில் எகிப்தின் விமானப்படையைத் துவம்சம் செய்துவிட முடிவு செய்தது. மொத்தம் 385 போர் விமானங்கள். அத்தனையும் சோவியத் யூனியன் சரக்கு. அவற்றுள் நாற்பத்தைந்து விமானங்கள், ஜிஹி 16 Badger என்கிற நடுத்தர குண்டுவீச்சு விமானங்கள்.

இந்த விமானங்களைக் கொண்டுதான் முன்னதாக எகிப்துப் படைகள் இஸ்ரேலின் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வந்தன. ஆகவே இவற்றை முதலில் ஒழித்துவிடவேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஜூன் 5-ம் தேதி இஸ்ரேலிய நேரம் காலை 7.45-க்கு அனைத்து இஸ்ரேல் போர் விமானங்களும் எகிப்து விமான தளங்களைக் குறிவைத்துப் புறப்பட்டன.

முன்னதாக இஸ்ரேல் முழுவதும் யுத்த எச்சரிக்கை செய்யப்பட்டது. எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். முக்கிய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இரவோடு இரவாக தேசம் முழுவதும் ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பணியில் நிறுத்தப்பட்டார்கள்.

எகிப்து வசம் நல்ல தரமான போர் விமானங்கள் இருந்தனவே தவிர, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே கிடையாது. அதன் விமான தளங்கள் அனைத்தும் கார்ப்பரேஷன் மைதானம் போலத்தான் இருக்கும். விலை மதிப்பு மிக்க போர் விமானங்களைப் பாதுகாக்கக்கூடிய பங்கர் என்றுசொல்லப்படும் ராணுவத் தளவாடங்கள் அப்போது எகிப்திடம் இல்லை.

இந்த விஷயத்தை மனத்தில் கொண்ட இஸ்ரேல், எந்தத் திசையிலிருந்து தாக்குதலைத் தொடங்கலாமென்று ஆற அமர யோசித்து, இறுதியில் மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து ஆரம்பிப்பதே பலன் தரும் என்று முடிவு செய்தது. அனைத்து இஸ்ரேலியப் போர் விமானங்களும் எகிப்துப் பக்கம் திரும்புமுன் மத்தியத் தரைக்கடலின் மீது வானில் அணிவகுத்துப் பறந்தன.

நாசர் கவலை கொண்டார். என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு வேறு ஒரு பிரச்னை இருந்தது. அறிவிப்பில்லாமல் இஸ்ரேல் யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்த விஷயம் எகிப்து மக்களுக்கு முதலில் முறைப்படி தெரியப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அவகாசம் இல்லை. தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்கிற அடிப்படையில் எகிப்து விமானங்களையும் அணி வகுத்துப் பறக்கச் செய்தால், வேறு ஒரு பிரச்னை வரும்.

அதாவது, எகிப்து அரசுக்கு எதிராக அப்போது உள்நாட்டில் பல தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அத்தனை இயக்கங்களுமே நாசரைப் பதவியிலிருந்து இறக்க விரும்பிய இயக்கங்கள். எல்லாம் எகிப்தின் உள்நாட்டுப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை.

இந்தத் தீவிரவாத இயக்கங்களிடம் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் நவீன பீரங்கிகளும் இருந்தன.

நாசருக்கு என்ன கவலை என்றால், இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக தான் போர்விமானங்களை அணிவகுத்துப் பறக்கவிடப் போக, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு உள்ளூர் தீவிரவாதிகள், அவர்களை ஒழிக்கத்தான் ராணுவ விமானங்கள் வருகின்றனவோ என்று எண்ணி, சுட்டு வீழ்த்தி விடக் கூடுமல்லவா?

ஆகவே கொஞ்சம் யோசித்துச் செய்யலாம் என்று நினைத்து, தனது போர் விமானங்களை எடுக்காமல், இஸ்ரேல் விமானங்கள் வரும்போது எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு பீரங்கிகளை மட்டும் தயார் நிலையில் வைக்கச் சொன்னார்.

இதுதான் மிகப்பெரிய பிரச்னையாகப் போய்விட்டது.

என்னதான் ராணுவ டாங்குகள் அணிவகுத்தாலும் போர் விமானங்களை, அதுவும் மொத்தமாக பத்திருபது விமானங்கள் வரும்போது அவற்றைச் சமாளிக்க, டாங்குகளால் முடியாது. பறந்துவரும் விமானங்களைத் தரையிலிருந்து அடித்து வீழ்த்துவது பெரிய கலை. அந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, ஒரு சமயத்தில் ஓரிரண்டு விமானங்களைத்தான் வீழ்த்த முடியுமே தவிர, மொத்தமாக ஒரு விமானப்படையையே அழித்துவிட முடியாது.

இஸ்ரேல் இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டம் அப்போது அவர்கள் பக்கம் இருந்தது. அத்தனை எகிப்து விமானங்களும் சமர்த்தாக மைதானங்களில் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவர்கள் வியப்பின் உச்சிக்கே போனார்கள். எந்தவித சிரமமும் இல்லாமல் ஒன்று விடாமல் 300 எகிப்திய விமானங்களைக் குண்டு வீசி அழித்தார்கள். சுமார் நானூறு விமானப்படை வீரர்களும் இறந்தார்கள்.

எகிப்து தரப்பில் அவர்களால் வெறும் பத்தொன்பது இஸ்ரேல் விமானங்களைத்தான் வீழ்த்த முடிந்தது. இது ஒரு பெரிய விஷயமே இல்லை. தவிரவும் எகிப்தின் விமான பலத்துடன் ஒப்பிட்டால் இஸ்ரேலியப் போர் விமானங்கள் அத்தனையுமே சொத்தை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே, அந்தச் சிறிய இழப்பை இஸ்ரேல் கண்டுகொள்ளவே இல்லை. வெற்றிப் பெருமிதத்துடன் இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் தம் தேசத்துக்குப் போய்விட்டன.

இத்தனை பெரிய வெற்றியை இஸ்ரேல் தொடக்கத்திலேயே எதிர்பார்க்கவில்லையாதலால், மிகுந்த மகிழ்ச்சியுடனும் மேலும் உத்வேகத்துடனும் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக எகிப்தின் சினாய் மற்றும் காஸா பகுதிகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட ஏழு முழுப்படைகளை இப்பணியில் இறக்கியது இஸ்ரேல். யுத்தத்தில் பங்குகொண்ட முக்கியத் தளபதிகளுள் ஒருவர் பெயர் ஏரியல் ஷரோன். இன்றைய இஸ்ரேலியப் பிரதமர்.

சினாயைக் கைப்பற்றுகிற விஷயத்தில் இஸ்ரேல் அன்று கடைப்பிடித்த உத்தியைக் கவனிக்க வேண்டும்.

நேரடியாக சினாய்க்கு வீரர்களை அனுப்பியதுடன் இஸ்ரேல் ராணுவத் தளபதிகள் ஓய்ந்துவிடவில்லை. மாறாக எகிப்தின் நான்கு முனைகளிலும் தாக்குதலுக்கு வீரர்களை அனுப்பி எல்லைகளில் அணிவகுக்க வைத்தார்கள். அதனால், எகிப்து தனது வீரர்களை அனைத்துப் பக்கமும் அனுப்ப வேண்டியதானது. ஆனால், இஸ்ரேல் யுத்தம் செய்ய முடிவு செய்தது என்னவோ சினாயில் மட்டும்தான்.

பெரும்பாலான எகிப்து வீரர்கள் தேசமெங்கும் சிதறிக்கிடக்க, இஸ்ரேல் தன்னுடைய ராணுவத்தின் முக்கியப் படைகள் அனைத்தையும் சினாயில் குவித்து, யுத்தத்தை ஆரம்பித்தது. கப்பல் படையின் பாதுகாப்பில் தரைப்படை வீரர்கள் முன்னேறி வந்து தாக்கத் தொடங்கினார்கள். எகிப்து ராணுவத்துக்கு இங்கேயும் பிரச்னை.

அவர்கள் இஸ்ரேல் கப்பல் படையை முதலில் கவனிப்பதா, தரைப்படையைக் கவனிப்பதா என்று புரியாமல் கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருக்க, அதற்குள் முழு சினாயையும் ஆக்கிரமித்துவிட்டது இஸ்ரேல் படை. இது நடந்தது 8 ஜூன்.

யுத்தங்களுக்கென்று சில இலக்கணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தக் குறிப்பிட்ட போரைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஓர் இலக்கணம் மீறிய புதுக்கவிதை யுத்தத்தை மேற்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

யுத்த இலக்கணப்படி கப்பல்படையின் பாதுகாப்பில் தரைப்படை முன்னேறுமானால், முதலில் பின்னால் அணிவகுக்கும் கப்பல்களைத்தான் தற்காப்பு யுத்தம் செய்யும் தேசம் குறிவைக்கும். ஏனெனில் ஒரு போர்க்கப்பல் என்பது இருபது விமானங்களைச் சுமந்துகொண்டிருக்கலாம். இரண்டாயிரம் வீரர்களைச் சுமந்துகொண்டிருக்கலாம். பல்லாயிரக்கணக்கான வெடிகுண்டுகள், ஆயுதங்கள் அதில் இருக்கலாம். தரைப்படை வீரர்களை முதலில் தாக்கத் தொடங்கினால் பின்னால் சாரிசாரியாக ஆட்களும் ஆயுதங்களும் வந்தபடியே இருக்குமென்பதால் முதலில் பாதுகாப்பளிக்கும் போர்க்கப்பல்களை அழிப்பதுதான் யுத்த நடைமுறை.

அதைத்தான் எகிப்துப்படையினர் செய்ய முயன்றார்கள். ஆனால், இஸ்ரேல் மிகக் கவனமாகத் தனது போர்க்கப்பல்களில் எந்த விதமான முக்கிய ஆயுதங்களையோ விமானங்களையோ வைக்காமல், ஒப்புக்குக் கொஞ்சம் வீரர்களை மட்டுமே நிறுத்திவிட்டு, தரைப்படையினர் வசமே அத்தனை தளவாடங்களையும் தந்திருந்தது!

இதை எகிப்து கனவில் கூட எதிர்பார்த்திருக்க முடியாதென்பதால், தரைப்படையினரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அது தோல்வியைத் தழுவ வேண்டியதானது!

எகிப்தின் இன்னொரு பெரிய பலவீனம், தகவல் தொடர்பின்மை மற்றும் ஒருங்கிணைப்பு இன்மை. பதற்றத்தில் எகிப்துப்படை இஷ்டத்துக்குப் போரிடத் தொடங்கிவிடவே, ஒரு கட்டுப்படுத்தும் சக்தியாக யாராலுமே செயல்பட முடியாமல் போய்விட்டது.

சினாயும் காஸாவும் இஸ்ரேலின் வசம் திரும்ப வந்தது இப்படித்தான்!

சிரியாவின் கோலன் குன்றுகளாயிற்று, எகிப்தின் சினாய் ஆயிற்று. அடுத்தது ஜோர்டன். அந்த மேற்குக் கரை விவகாரம்.

இஸ்ரேல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அந்தப் பக்கம் அடுத்து பார்த்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 ஜூலை, 2005

  • தொடங்கியவர்

72] அரேபியர்களின் அந்த மௌன ஓலம்

நிலமெல்லாம் ரத்தம் - பா ராகவன் 72

எகிப்து மற்றும் சிரியாவின் படைகளுடன் ஒப்பிட்டால் அன்றைய காலகட்டத்தில் ஜோர்டனின் படை சற்றே வலுவானது என்றுதான் சொல்லவேண்டும். ஜோர்டனுக்கு நிறைய மேலை நாடுகளுடன் நட்பு இருந்தது. அதன்மூலம் நவீன ஆயுதங்கள் பலவற்றை வாங்கிக் குவித்திருந்தார்கள். அத்துடன், அப்படி வாங்கும் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சியும் முறைப்படி ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவைப் பிடிக்காத அத்தனை தேசங்களுடனும் அன்றைக்கு ஜோர்டன் நட்புக் கொண்டிருந்தது. ஆகவே, ஒரு யுத்தம் என்று வரும்போது, அதுவும் இஸ்ரேலுடன் யுத்தம் என்று வரும்போது அத்தனை பேரும் போட்டி போட்டுக்கொண்டு ஜோர்டனுக்கு ஆயுத உதவிகள் செய்தார்கள்.

ஆறு நாள் யுத்த சமயத்தில் ஜோர்டனின் மொத்த படைபலம் சுமார் ஒன்றரை லட்சம். அதில் பதினொரு பிரிகேடுகள் அதாவது, சுமார் அறுபதாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறப்புப் பிரிவு நவீன ரக பீரங்கிகளை இயக்குவதற்காகவே பழக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் நாற்பதாயிரம் பேரை மேற்குக் கரையிலும் மிச்சமிருந்த இருபதாயிரம் பேரை ஜோர்டன் பள்ளத்தாக்குப் பகுதியிலும் நிறுத்தியிருந்தார்கள். இவர்களுக்கு உதவியாக ராயல் ஜோர்டன் விமானப்படைப் பிரிவு ஒன்று இருபத்துநான்கு மணிநேரமும் கூடவே சுற்றிப் பறந்துகொண்டிருந்தது. மொத்தம் இருபது போர் விமானங்கள் கொண்ட படை அது.

ஜோர்டனுக்கு இரண்டு பிரச்னைகள் இருந்தன. முதலாவது, மேற்குக் கரைப் பகுதியை இஸ்ரேலிடமிருந்து காப்பது. இரண்டாவது, ஜோர்டனின் வசம் இருந்த ஜெருசலேம் பகுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிக்கொள்வது. ஆகவே, ஜெருசலேத்தில் தனியே ஐந்து பிரிகேடுகள் நிறுத்தப்பட்டன.

ஜூன் ஐந்தாம்தேதி ஜோர்டன் தனது யுத்தத்தைத் தொடங்கியது. முதலில் ஜெருசலேத்தில் இருந்த இஸ்ரேலிய ராணுவ முகாம் மீது தாக்குதலைத் தொடங்கினார்கள். மறுபுறம் டெல் அவிவ் நகரில் இருந்த அத்தனை இஸ்ரேலிய அரசு அலுவலகங்கள் மீதும் ஜோர்டன் விமானங்கள் குண்டு வீசத் தொடங்கின. இப்படிக் கட்டடங்களைத் தாக்கிக்கொண்டே இஸ்ரேலின் விமானதளம் வரை வந்து சேர்ந்த ஜோர்டன் படை, அங்கிருந்த இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஒவ்வொன்றையும் குறிவைத்துக் குண்டு வீச ஆரம்பித்தன. இஸ்ரேலியத் தரைப்படையினர் பீரங்கி மூலம் நிகழ்த்திய தாக்குதலில், ஜோர்டனின் சில விமானங்களும் அப்போது நாசமாயின என்றாலும் ஜோர்டன் அரசு சற்றும் எதிர்பாராதவிதமாகக் குறைந்தது எட்டு இஸ்ரேலிய விமானங்களையாவது அவர்கள் முழுச்சேதப்படுத்தியிருந்தார்கள்.

இதற்கான பதிலை மறுநாள் யுத்தத்தில் இஸ்ரேல் அளித்தது. ஒரே சமயத்தில் ஏழு ஜோர்டானிய இலக்குகளின் மீது அவர்கள் தாக்குதலை ஆரம்பித்தார்கள். ரமல்லா நகரம், ஜெருசலேமின் ஜோர்டானியப் பகுதிகள், ஜோர்டன் பள்ளத்தாக்கு என்று புகுந்து புகுந்து அடிக்க ஆரம்பித்தார்கள். மூச்சு விடக்கூட அவகாசமில்லாமல் குண்டுகள் வந்து விழுந்துகொண்டே இருந்தன.

ஏழாம் தேதி நிலைமை இன்னும் தீவிரமானது. ஜோர்டனின் விமானப்படை முழுவதும் மேற்குக் கரை ஓரம்தான் அணிவகுத்திருக்கின்றன என்பதை கவனித்து, இஸ்ரேல், தனது விமானப்படையை மொத்தமாக ஜெருசலேத்துக்கு அனுப்பியது. விமானப்படையின் பாதுகாப்பில் நகருக்குள் பழைய ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த இஸ்ரேலிய ராணுவம், அங்குள்ள புனிதச் சுவரையும் Temple Mount என்று சொல்லப்படும் புராதனமான புண்ணியத் தலம் ஒன்றையும் கைப்பற்றிக்கொண்டது.

அத்துடன் ஓயாமல் அப்படியே படையை நகர்த்திக்கொண்டு போய் ஜுதேயா, குஷ் எட்ஸன், ஹெப்ரான் பகுதிகளையும் அபகரித்துக்கொண்டது.

இந்தப் போரில் ஜோர்டன் படையினர் காட்டிய வீரம் குறித்து மொத்தம் நான்கு இஸ்ரேலிய ராணுவ ஜெனரல்கள் தமது போர் நினைவுக் குறிப்புகளில் மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள். 'அவர்களிடம் சரியான திட்டமிடல் இருந்தது. இலக்கு தவறாமல் ஆயுதப்பிரயோகம் செய்யத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். நவீன ஆயுதங்களைச் சிறப்பாகக் கையாளவும் செய்கிறார்கள். தோற்றதற்குக் காரணம், அவர்களைக் காட்டிலும் இஸ்ரேலியர்கள் சிறப்பாகப் போரிட்டதுதான்'' என்று எழுதுகிறார் மாண்ட்லர் என்கிற ஓர் இஸ்ரேலிய கமாண்டர்.

ஆறுநாள் யுத்தத்தில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பது மேற்குக் கரையையும் முழு ஜெருசலேத்தையும் அவர்களால் கைப்பற்ற முடிந்ததுதான். அரேபியர்கள் அதிர்ச்சியடைந்ததும் அதனால்தான் ஜெருசலேத்தின் ஒரு பகுதியாவது ஜோர்டன் வசமிருந்ததில் சற்றே ஆறுதலடைந்த முஸ்லிம்கள், அதுவும் இப்போது போய்விட்டதில் மிகுந்த கலக்கத்துக்கு ஆளானார்கள்.

ஜூன் பத்தாம்தேதி யுத்தம் ஒருவாறு முடிவுக்கு வந்தது. சிரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கோலன் சிகரங்களை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்டதுடன் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்தது. காஸா, சினாய், மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் என்று இஸ்ரேல் கண்ட முழுக்கனவும் அந்த யுத்தத்தில் நனவாகிப்போனது. இதன்மூலம் இஸ்ரேலின் பரப்பளவு முன்பிருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரிக்க, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வாழும் அரேபியர்களின் எண்ணிக்கையும் கூடுதலாகப் பத்துலட்சம் ஆனது.

இந்த யுத்தத்தைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஒரு விஷயத்தை மிகத்தெளிவாக நிரூபித்தது. ஒரு போரில் கலந்துகொண்டு வெற்றி பெறுவது மட்டுமல்ல; ஒரு போரை வெற்றிகரமாக ஆரம்பித்து, நடத்தி ஜெயிப்பதிலும் தான் கில்லாடி என்பதைச் சொல்லாமல் சொன்னது.

எகிப்து, சிரியா, ஜோர்டன் ஆகிய மூன்று தேசங்களுக்கும் இந்த யுத்தம் சில பாடங்களைச் சொல்லித்தந்தன. என்னதான் அவர்கள் வீரத்துடன் போரிட்டாலும் யுத்தத்தில் வெற்றி என்பது சில சூட்சுமமான ஃபார்முலாக்களைக் கைக்கொள்வதில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். எந்தச் சமயத்தில் எங்கு தாக்கினால் பலன் கிடைக்கும் என்பதை யூகிப்பதற்கு அறிவியல்பூர்வமான கற்பனை அவசியம் என்பதை நாசர் உணர்ந்துகொண்டார். மடத்தனமாகத் தனது விமானப்படையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்து மொத்தமாக இழந்தது குறித்து மிகவும் வருத்தப்பட்டார்.

யுத்தத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி, மேற்குக்கரை. அது பாலஸ்தீனியர்களின் தாயகம். இஸ்ரேல் வசமிருந்து ஜோர்டனுக்குக் கைமாறி, மீண்டும் இப்போது இஸ்ரேல் வசமே வந்துவிட்டது. எனில் பாலஸ்தீனியர்களின் சுதந்திரம் என்பது நிரந்தரக் கேள்விக்குறிதானா?

மேற்குக்கரையில் அப்போது சுமார் பத்துலட்சம் அரேபியர்கள் வசித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தம் இஸ்ரேலுக்குச் சாதகமாக மாறிவிட்டதில், அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து அங்கே வசிப்பதில், தங்களுக்கு மிகுந்த சிரமம் இருக்கும் என்று கருதினார்கள். சுமார் மூன்றரை லட்சம் பேர் அகதிகளாகப் புறப்பட்டு, ஜோர்டன் நதியைக் கடந்து ஜோர்டன் நாட்டுக்குள் நுழைந்துவிட்டார்கள். இதன்மூலம் ஜோர்டனுக்கு அகதிச் சுமையும் அதிகமானது.

அதிலும் தர்மசங்கடமான நிலைமை வேறு. மேற்குக்கரையிலிருந்து இப்போது வரும் மக்களை எந்த தேசத்தவர்கள் என்று சொல்வது? முந்தைய தினம் வரை அவர்களும் ஜோர்டன் குடிமக்கள்தான். இந்த நிமிஷம் மேற்குக்கரை, இஸ்ரேல் வசமானதால் அவர்கள் அந்நிய நாட்டு அகதிகளா, அல்லது சொந்த நாட்டு அகதிகளா?

அரசுக்கே இந்தக் குழப்பம் என்றால், அந்த மேற்குக் கரை மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அகண்ட பாலஸ்தீனின் ஆதிகுடிகள் அவர்கள். அவர்கள்தான் அப்போது அகதிகளாக அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். ஆள வந்த இஸ்ரேலியர்களும் சரி, ஆண்டு முடித்த ஜோர்டானியர்களும் சரி, மேற்குக்கரையின்மீது சொந்தம் கொண்டாட எந்த நியாயமும் இல்லாதவர்கள். இது ஏன் உலகின் பார்வையில் சரியாக விழவே மாட்டேனென்கிறது? தங்களுக்காக ஏன் யாருமே குரல் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்?

பாலஸ்தீனிய அரேபியர்களின் அந்த மௌன ஓலம் பாலைவனக் காற்றில் மிதந்து அலைந்துகொண்டிருந்தது. கேட்கத்தான் நாதி இல்லை.

இந்த யுத்தத்தின் இன்னொரு முக்கியமான அம்சம், இழப்புகள் தொடர்பானது. மூன்று தேசங்கள் இணைந்து இஸ்ரேல் என்கிற ஒரு நாட்டுடன் யுத்தம் செய்திருக்கின்றன. ஆனால் போரில் ஏற்பட்ட இழப்புகள் அப்படியே தலைகீழ்!

எகிப்துடனான யுத்தத்தில் இஸ்ரேல் இழந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை வெறும் முந்நூற்று முப்பத்தெட்டு! ஆனால் எகிப்து தரப்பில் மொத்தம் பதினைந்தாயிரம் வீரர்கள் உயிரிழந்திருந்தார்கள். ஜோர்டன் தரப்பில் எண்ணூறு பேர் இறந்தார்கள். ஜோர்டன் படையுடன் போரிட்ட இஸ்ரேல் ராணுவத்தரப்பில் இழப்பு எண்ணிக்கை முந்நூறுதான். அதேபோல சிரியாவின் கோலன் குன்றுகளில் நடந்த யுத்தத்தில் இஸ்ரேலியத் தரப்பில் மொத்த இழப்பே 141 பேர்தான். ஆனால் ஐந்நூறு சிரிய வீரர்கள் அந்த யுத்தத்தில் இறந்ததாக இஸ்ரேலியத் தரப்பு கணக்குச் சொன்னது. (இந்த ஒரு விஷயத்தில் மட்டும் சிரிய ராணுவம் சரியான தகவல் தராத காரணத்தால் இஸ்ரேல் சொல்லும் எண்ணிக்கையை மட்டுமே நாம் ஏற்கவேண்டியிருக்கிறது!)

இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அரேபியர்கள் யோசித்துப் பார்த்தார்கள். உண்மையில், அதிக ஆட்சேதம் இல்லாமல் யுத்தம் செய்வது எப்படி என்கிற கலையை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் தனிப்படைப் பிரிவு ஒன்று இஸ்ரேல் ராணுவத்துக்குக் கற்றுக்கொடுத்தது என்று ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடந்த இன்னொரு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின்போது தெரியவந்தது!

ஆனால் இந்தக் குறிப்பிட்ட யுத்தத்தில் அமெரிக்கா மட்டுமல்லாமல் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு மறைமுகமாக நிறைய உதவிகள் செய்து, கொம்புசீவி விட்டதாக அரபு மீடியாக்கள் அத்தனையும் அலறின.

உதாரணமாக, எதிரிப்படைகளின் இருப்பு குறித்த தகவல்களையும் அவர்கள் எங்கே, எந்த திசையில் நகர்கிறார்கள் என்பது போன்ற விவரங்களையும் அமெரிக்கா தன் உளவு சாட்டிலைட்டுகள் மூலம் கண்காணித்து, உடனுக்குடன் இஸ்ரேலுக்குத் தகவல் தெரிவித்து வந்தது என்று கெய்ரோ வானொலி, மணிக்கொருதரம் சொல்லிவந்தது. இதே தகவலை அல் அஹ்ரம் என்கிற எகிப்து நாளிதழும் உறுதிப்படுத்திக்கொண்டே இருந்தது.

சிரியா மற்றும் ஜோர்டன் ஊடகங்கள், பிரிட்டன் அளித்த பொருளுதவிகள், ஆயுத உதவிகள் பற்றி நிமிஷத்துக்கு நிமிஷம் அறிக்கை வாசித்துக்கொண்டே இருந்திருக்கின்றன. காரணம், இதையெல்லாம் கேட்டாவது சோவியத் யூனியன் களத்தில் வந்து குதிக்காதா என்கிற எதிர்பார்ப்புதான்.

ஆனால் சோவியத் யூனியன் அப்படிச் செய்யாததற்குக் காரணம், உள்ளூர் யுத்தம் ஓன்று இன்னொரு உலக யுத்தமாகிவிடக்கூடாதே என்பதுதான். அவர்களால் முடிந்தவரை எகிப்து ராணுவத்துக்கு விமானப்படை உதவிகளை ஏற்கெனவே அளித்திருந்தார்கள். வேறென்ன செய்யமுடியும்? அன்றைய தேதியில் உளவு பார்க்கிற விஷத்தில் அமெரிக்க சாட்டிலைட்டுகள் அளவுக்கு, சோவியத் சாட்டிலைட்டுகள் அத்தனை சிறப்பானதில்லை. தவிர, அரேபியப் படைகள்தான் ரகசியமாகத் திட்டம் தீட்டி படைகளை நகர்த்திக்கொண்டிருந்தனவே தவிர, இஸ்ரேலிய ராணுவம், எந்த ரகசியமும் இல்லாமல் மிகவும் வெளிப்படையாகவேதான் தனது படைகளை நகர்த்திச் சென்றது. அவர்களே தினசரி போட்டோ பிடித்துப் பத்திரிகைகளில் வெளியிட்டுக்கொண்டும் இருந்தார்கள். எந்தப் படை எங்கே இருக்கிறது; எங்கே போகப்போகிறது என்று பத்தி பத்தியாக எழுதிக்கொண்டும் இருந்தார்கள்.

ஒரு தேர்ந்த ராணுவத்துக்குரிய எல்லா லட்சணங்களையும் பெற்றவர்களாக அவர்கள் இருந்ததை அரபு உலகம் கவனித்தது. இது எப்படி சாத்தியமானது? வெறும் 19 வயதே ஆன இஸ்ரேல். எந்தவித உள்கட்டுமானமும் இன்னும் செய்துமுடிக்கப்படாத தேசம் அது. தேசம் என்று பிறந்த நாளாக சிக்கல்களை மட்டுமே எதிர்கொண்டுவரும் இஸ்ரேல். ஆனாலும் எப்படி முடிகிறது?

பேசலாம், அமெரிக்க உதவி, பிரிட்டன் உதவி என்று என்னவேண்டுமானாலும் சொல்லலாம். அடிப்படையில் இஸ்ரேலியர்களுக்கு வெற்றியை மட்டுமே தேடித்தரும் காரணி எதுவாக இருக்கும்?

இதுதான் அரேபியர்களுக்குப் புரியவில்லை. அவர்களுக்கு அது புரியாததுதான் இஸ்ரேலின் பலமாக அப்போதும் இருந்தது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 31 ஜுலை, 2005

  • தொடங்கியவர்

73] இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad)

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 73

பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.

சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன? அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா? பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும். அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது? ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை?

எகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது. ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர் நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.

எப்படி இது சாத்தியம்? அரேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா? அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில் அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்?

இவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).

உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது. பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது. சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.

மொஸாட்டின் பணிகள் மிகவும் எளிமையானவை. 1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல். 2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல், 3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல் 4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.

இவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே. இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது. ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம் கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது! அவ்வளவுதான்.

இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000. ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கிலும் உண்டு.

மொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம். உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும். உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கேட்பார்கள். இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும். எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள் அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை. மற்றபடி அவர்களின் நடவடிக்கைகள் காற்றுக்கும் கடவுளுக்கும் கூடத் தெரியாது!

மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)

1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்களுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.

2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.

3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.

4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.

5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.

6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.

இந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான்.

முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.

பாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலகையே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு, படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.

கறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி. ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள். அதுவும் எப்படி? மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள்! கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை! இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்!

இச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.

மொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான். அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும். எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந்த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது! சுவாசிக்கக்கூட முடியாது! அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.

இஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப்படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.

மொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். (தற்போதைய இயக்குநர் விமீ’வீக்ஷீ ஞிணீரீமீஸீ.) இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான் மொஸாட் செயல்படுகிறது.

இந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது. பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 ஆகஸ்ட், 2005

  • தொடங்கியவர்

74] அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 74

1967 - இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம். ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள். அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள் குற்றம் சாட்டினார்கள். நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், அப்புறம் இந்த அரசாங்கங்களை நம்பி என்ன புண்ணியம்? ஆகவே, ஏதாவது ஒரு மாற்று வழி யோசித்தே தீரவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மக்களுடைய இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவுதான், பாலஸ்தீனில் ஏராளமான விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, சரியான திட்டம் வகுத்து, கவனம் குவித்து, இஸ்ரேலுக்கெதிரான முழுநீள யுத்தத்தை வழி நடத்தும் பொறுப்பு, பி.எல்.ஓ.வின் தலையில் விழுவதற்குக் காரணமானது. அப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் இருப்பவர், மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் மாவீரராகவும் மனிதாபிமானியாகவும் இருக்கவேண்டுமென்றுதான் யாசர் அராஃபத்தை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார்கள். அதுவரை குவைத்தில் இருந்தபடி அல் ஃபத்தாவை வழிநடத்திக்கொண்டிருந்த அராஃபத். அரபு தேசங்களில் இருந்த எந்த ஒரு போராளி இயக்கத்துக்கும் அதுவரை பரிச்சயமில்லாமல் இருந்த 'கெரில்லா' தாக்குதல் முறையில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்த அராஃபத்.

1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கெய்ரோவில் கூடிய பாலஸ்தீன் தேசிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில், யாசர் அராஃபாத் முறைப்படி பி.எல்.ஓ.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது பி.எல்.ஓ.வில் உறுப்பினராக இருந்த விடுதலை இயக்கங்கள் இவை:

1. Fatah, 2. western Sector, 3. Force 17, 4. Popular Front for the Liberation of Palestine PFLP, 5. Democratic Front for the Liberation of Palestine DFLP), 6. Hawatmah Faction; 7. Abd Rabbu Faction; 8. Popular Front for Liberation of Palestine (General Command), 9. Palestine Liberation Front, (PLF) 10. Abu Abbas Faction, 11. Tal'at Yaqub Faction, 12. AlSaiqa Organization, 13. Arab Liberation Front (ALF), 14. Palestinian Arab Liberation Front , 15. Palestinian Democratic Union (Fida), 16. Palestine Islamic Jihad Movement, 17. Palestinian People's Party [Hizb Al Sha'ab], 18. Palestinian Popular Struggle Front.

இவற்றுள் ஃபத்தா மட்டும் அராஃபத்தின் சொந்த இயக்கம். மற்ற அனைத்தும் தோழமை இயக்கங்கள். இத்தனை இயக்கங்களையும் கட்டிக்காப்பதுடன் மட்டுமல்லாமல் சரியான, முறைப்படுத்தப்பட்ட போர்ப்பயிற்சி அளிப்பது, இஸ்ரேலை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் கவர வழி செய்வது என்று அராஃபத்துக்கு இருந்த பொறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.

வெற்றிகரமாக அவரால் அதனைச் செய்ய முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம், முன்பே பார்த்ததுபோல, அரசுகள் மீது மக்கள் இழந்துவிட்டிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை அப்படியே அப்போது விடுதலை இயக்கங்களின்பக்கம் சாயத் தொடங்கியது.

இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், பாலஸ்தீன் மக்கள், ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தார்கள். அதே சமயம், இந்தப் போராளி இயக்கங்கள்தான் தமக்கு விடுதலை பெற்றுத் தரப்போகிறவர்கள் என்றும் கருதினார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். போராளி இயக்கங்கள் பொதுவாக, தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களாகச் சித்திரிக்கப்படுவது சர்வதேச மரபு. இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா. அமெரிக்க அரசுக்குத் தலைவலி தரக்கூடிய எந்த ஓர் அமைப்பையும், பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதுதான் அத்தேசத்தின் வழக்கம். அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை முதலில் இங்கிலாந்தும் பிறகு ஐரோப்பிய யூனியனில் உள்ள அத்தனை தேசங்களும் அப்படியே எவ்வித மாறுதலும் செய்யாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன.

சர்வதேச அளவில் எந்த ஒரு தேசத்தில் விடுதலைக் குரல் கேட்கிறதோ, அந்தக் குரலுக்கு உரியவர்களைத் தீவிரவாதிகள் என்று உடனே சொல்லிவிடும் வழக்கம், அப்போது ஆரம்பித்ததுதான்.

உண்மையில் விடுதலை இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அரசாங்கங்கள் கைவிட்டு, அரபு லீக்கும் கைவிட்டு, ஐ.நா.சபையும் கைவிட்டபிறகு, இழந்த தங்கள் நிலத்தைத் திரும்பப்பெற பாலஸ்தீன் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றானது வரலாறு. அவர்களைப் போராளிகள் என்று சொல்லாமல் தீவிரவாதிகள் என்று வருணிப்பது எப்படிச் சரியாகும்?

ஆனால் இந்தப் போராளி இயக்கங்கள் சமயத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதும், மறுக்கமுடியாத உண்மையே ஆகும். உதாரணமாக, யாசர் அராஃபத் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஐந்தாம் ஆண்டு, அதாவது 1974-ம் வருடம் பி.எல்.ஓ.வின் ஒரு குழுவினர் இஸ்ரேலில் உள்ள மா'லாட் (விணீ'ணீறீஷீt) என்கிற இடத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் புகுந்து, கையெறி குண்டுகளை வீசி 21 குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று வீசினார்கள். இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீவிரவாதம். இன்னும் சொல்லப்போனால் கொலைவெறியாட்டம். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான யுத்தத்துக்கும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? யூதர்களில் சிறுவர், பெரியவர் என்று பாராமல் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட ஆரியக் கிறிஸ்துவரான ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டது இஸ்ரேல்.

நியாயப்படுத்தவே முடியாத இத்தகைய செயல்களால்தான் போராளி இயக்கங்களுக்கு சர்வதேச ஆதரவோ, அனுதாபமோ பெரும்பாலும் கிடைக்காமல் போகிறது. போராளி இயக்கங்களின் நோக்கத்தில், செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய சறுக்கல்களால்தான் அவர்கள்மீது விழவேண்டிய நியாயமான கவனம், விழாமல் போகிறது.

அராஃபத் பொறுப்புக்கு வந்த ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக இஸ்ரேலிய ராணுவம், காவல்துறை போன்ற இலக்குகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இது, இஸ்ரேலுக்குள்ளாக. இஸ்ரேலுக்கு வெளியிலும் பல்வேறு தேசங்களில் பி.எல்.ஓ.வின் போராளிகள் கவன ஈர்ப்புக்காக ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஆனால் மிகக் கவனமாக அத்தனை தாக்குதல்களுமே, யூத இலக்குகளின் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.

உலகம் முழுக்க பி.எல்.ஓ., பி.எல்.ஓ., என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது. யார், என்ன என்கிற விவரம் கூடத் தெரியாமல், அராஃபத்தைப் பற்றிப் பேசினார்கள். அணுகுண்டுகள் வைத்திருக்கும் இயக்கம் என்றெல்லாம் கதை பரப்பினார்கள். உண்மையில், நாட்டுவெடி குண்டுகளுக்கு அப்பால் பி.எல்.ஓ.வினரிடம் அப்போது வேறெந்த ஆயுதமும் கிடையாது. வாங்குவதற்குப் பணம் கிடையாது முதலில். பி.எல்.ஓ.வின் பிரசாரப் பிரிவினர் அரபு தேசங்களெங்கும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி வசூல் செய்தே இயக்கத்தை வழி நடத்திக்கொண்டிருந்தனர். சவுதி அரேபியா போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் மட்டும் மறைமுகமாக பி.எல்.ஓ.வுக்கு நிதியுதவி செய்திருப்பதாகத் தெரிகிறது. 1973-ம் ஆண்டுவரை பி.எல்.ஓ.வுக்கு மிகப்பெரிய அளவில் நிதிப்பிரச்னை இருந்திருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.

ஒரு பக்கம் பி.எல்.ஓ.வில் இருந்த இயக்கங்கள், மிகத் தீவிரமாக இஸ்ரேலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதே காலகட்டத்தில், பாலஸ்தீனில் வேறு சில புதிய இயக்கங்களும் தோன்றத் தொடங்கின.

'இஸ்ரேல் என்கிற திடீர் தேசத்தை வேரோடு ஒழித்துவிட்டு, அகண்ட பாலஸ்தீனை மறுபடியும் ஸ்தாபிப்பதற்காக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. ஆயுதங்கள் மூலம் அச்சமூட்டுவோம். இன விருத்திமூலம் கலவரமூட்டுவோம். யூதர்களைத் தூங்கவிடமாட்டோம். ஜெருசலேம் உள்பட, இஸ்ரேல் எங்களிடமிருந்து அபகரித்த அத்தனையையும் திரும்பப் பெறாமல் ஓயமாட்டோம்' என்கிற யாசர் அராஃபத்தின் அன்றைய பிரகடனம் ஒரு வேத மந்திரம் போல, அத்தனைபேரின் செவிகளிலும் விழுந்து சிந்தனையைக் கிளறிவிட்டதன் விளைவே இது.

இப்படித் தோன்றிய இயக்கங்களில் சில திசைமாறிப் போயின என்றாலும், பெரும்பாலான இயக்கங்கள் பி.எல்.ஓ.வில் சேராவிட்டாலும் பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யத் தயங்கவில்லை. குறிப்பாக, ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது அன்றைக்கு பி.எல்.ஓ.வினரின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.

குறிப்பாக அரபு தேசங்களுக்கு வெளியே அவர்கள் திட்டமிட்ட ஒவ்வொரு கவன ஈர்ப்புச் செயலுக்கும் தேவையான ஆயுதங்களைக் கடத்தியோ, உருவாக்கியோ, வாங்கியோ தரும் பணியைச் செய்ய இத்தகைய இயக்கங்கள் மிகவும் உதவி செய்தன.

அப்படி 1967 யுத்தத்துக்குப் பிறகு உதித்த பாலஸ்தீன் இயக்கங்களுள் ஒன்றுதான் ஹமாஸ்.

'இஸ்ரேல் அரபுப் பிரச்னை என்பது அரசியல் சார்ந்ததல்ல. அது இஸ்லாத்துக்கும் யூதமதத்துக்குமான பல நூற்றாண்டு காலப் பிரச்னையின் நீட்சி. நடப்பது அரசியல் யுத்தமல்ல. அது இரு மதங்களின் மோதல் மட்டுமே' என்கிற பிரகடனத்துடன் உருவான இயக்கம் இது.

பிரச்னையை முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டுமே பார்க்கக்கூடியவராக அராஃபத் இருந்த நிலையில், ஹமாஸின் இந்த திடீர் பிரவேசம் உரிய கவன ஈர்ப்பைப் பெற்றதே தவிர, ஹமாஸால் இதன் காரணம் பற்றியே பி.எல்.ஓ.வில் இணைய முடியாமலும் போனது.

அது அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இல்லை என்பதையும் சொல்லவேண்டும். ஏனெனில் என்னென்ன பிரகடனங்கள் செய்துகொண்டாலும், எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். குறிக்கோள் ஒன்றுதான். கனவும் நினைவும் ஒன்றுதான். அது இஸ்ரேலை ஒழிப்பது. யூதர்களைப் பூண்டோடு அடித்துத் துரத்துவது. இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் அடைந்து, பாலஸ்தீனுக்குப் புத்துயிர் அளிப்பது.

ஆகவே, பி.எல்.ஓ.வுக்குள் இல்லாமலேயே ஹமாஸ் பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான பணிகளைச் செய்ய ஆரம்பித்தது.

தொடர்ந்தும் தீவிரமாகவும் இஸ்ரேலிய ராணுவத்தை, காவல்துறையை, அரசு இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அச்சுறுத்தி வருவதுதான், சரியான ஆரம்பமாக இருக்கும் என்பதில் இவர்கள் யாருக்குமே கருத்து வேறுபாடு இல்லை. தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டத்துக்காக அவர்கள் வகுத்து வைத்திருந்த வழிமுறைகளில் சில மாறுதல்கள், கூடுதல், குறைவுகள் செய்துகொள்ளலாமே தவிர, போராட்டத்தை வேறு எந்த விதமாகவும் தொடருவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அத்தனை பேருமே கருதினார்கள்.

பி.எல்.ஓ.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த யாசர் அராஃபத்துக்கு அந்தத் தொடக்க காலத்திலேயே வெஸ்ட் பேங்க் பகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அறிவிக்கப்படாததொரு மகாராஜாவாகத்தான், அவரை மக்கள் அங்கே கருதினார்கள்.

அதே போல, காஸா பகுதியில் தோன்றி, வேர்விட்டு, வளர்ந்து, நிலைபெற்ற ஹமாஸுக்கு அங்கே பி.எல்.ஓ.வைக்காட்டிலும் செல்வாக்கு அதிகம். இந்த வெஸ்ட் பேங்க் என்று சொல்லப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்துத்தான், சுதந்திர பாலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்று இன்றுவரை பேசிவருகிறார்கள்.

நமக்குப் புரியும் விதத்தில் சொல்லுவதென்றால், இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது எப்படி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று இரு வேறு துண்டுகளை இணைத்து ஒரே தேசத்தை உருவாக்கினார்களோ, அதுபோல.

இந்தமாதிரி நிலப்பரப்பு ரீதியில் பெரிய இடைவெளிகளுக்கு அப்பால் ஒரே தேசத்தின் வேறொரு பகுதி இருக்கும் இடங்களிலெல்லாம், எப்போதுமே பிரச்னைதான். காஸா விஷயத்தில் என்ன பிரச்னை என்பதைப் பிறகு பார்க்கலாம்.

இப்போது அங்கே ஹமாஸ் வளர்ந்த கதையை கவனிக்க வேண்டும்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 7 ஆகஸ்ட், 2005

தொடரும்......

  • தொடங்கியவர்

75] ஹமாஸ் (Harakat Al Muqawamah AlIslamiyah)

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 75

ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா (Harakat Al Muqawamah AlIslamiyah) என்கிற நெடும்பெயரின் எளிய சுருக்கம்தான் ஹமாஸ் (Hamas).

பொதுவாக டெல் அவிவில் குண்டு வெடித்தது என்கிற செய்தி வரும்போதெல்லாம் ஹமாஸின் பெயர் அடிபடுவதைப் பார்த்திருப்பீர்கள். மற்றபடி அந்த இயக்கத்தைப் பற்றி மேலதிக விவரங்கள் பெரும்பாலும் வெளியே வராது. அதிகம் படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லத்தக்க மிகப்பெரிய பண்டிதர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்பு இது. இன்றல்ல; தொடக்கம் முதலே அப்படித்தான். ஆனால் அல் கொய்தா என்று சொன்னதுமே ஒசாமா பின்லேடனின் முகம் நினைவுக்கு வருவது மாதிரி, ஹமாஸ் என்றதும் யார் முகமும் பெயரும் அடையாளமும் நமது நினைவில் வருவதில்லை அல்லவா? அதுதான் ஹமாஸ். உண்மையில் அல் கொய்தாவைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது; அளவிலும் செயல்திறனிலும் பெரிய அமைப்பு இது.

ஆனால் அல் கொய்தா மாதிரி ஊரெல்லாம் குண்டு வைத்து, உலகெல்லாம் நாசம் செய்யும் அமைப்பு அல்ல இது. மாறாக, பாலஸ்தீனின் விடுதலைக்காக மட்டும், இஸ்ரேலுக்கு எதிராக மட்டும் செயல்படும் ஓர் அமைப்பு. பாலஸ்தீனுக்கு வெளியே ஹமாஸுக்குத் தீவிரவாத இயக்கம் என்று பெயர். ஆனால் பாலஸ்தீனுக்குள் அது ஒரு போராளி இயக்கம் மட்டும்தான். இன்றைக்கு பாலஸ்தீன் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாக விளங்கும் ஹமாஸ், ஏன் பி.எல்.ஓ.மாதிரி ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கமாக உருப்பெறவில்லை என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான்.

பி.எல்.ஓ.வுக்கு அரசியல் நோக்கம் மட்டுமே உண்டு. ஹமாஸின் அடிப்படை நோக்கம் மதம் சார்ந்தது. இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னையை இன்றுவரை யூத முஸ்லிம் பிரச்னையாக மட்டுமே பார்க்கிற அமைப்பு அது. அதனால்தான் பி.எல்.ஓ.வில் இணையாமல் தனியாகத் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு பி.எல்.ஓ.வுக்கு இணை அமைப்பு போலச் செயல்படத் தொடங்கியது ஹமாஸ்.

யூதர்களின் அராஜகங்கள் அனைத்துக்கும் ஒரு தடுப்புச் சக்தியாக விளங்கக்கூடியவர்கள் என்கிற அறைகூவலுடன் (ஹமாஸின் முழுப்பெயரின் நேரடியான அர்த்தமே இதுதான்) பாலஸ்தீன் விடுதலைப் போரில் ஹமாஸ் குதித்தபோது, ஏற்கெனவே அங்கே சுமார் இருபது போராளி இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால் எந்த இயக்கத்திலும் படித்தவர்கள் கிடையாது. அல்லது அரைகுறைப் படிப்பு. எந்த ஒரு விஷயத்தையும் உள்ளார்ந்து யோசித்து, அலசி ஆராய்ந்து செயல்படக் கூடியவர்களாக அப்போது யாரும் இல்லை.

ஹமாஸின் பலமே, படித்தவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் என்பதுதான். இஸ்லாமிய மார்க்கக் கல்வியில் கரைகண்ட பலபேர் அதில் இருந்தார்கள். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டக்கூடிய பல மிகப்பெரிய கட்டுமான வல்லுநர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஆசிரியர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள், மதகுருக்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஹமாஸை வழி நடத்தத் தொடங்கினார்கள்.

இத்தனை பெரிய ஆட்களுக்கெல்லாம் துப்பாக்கி தூக்குவதைத் தவிர, வேறு யோசனையே வராதா என்று ஒரு கணம் தோன்றலாம். இந்தியா போன்ற பிரச்னைகள் அதிகமில்லாத தேசத்தில், அதிலும் குறிப்பாக ஜனநாயக தேசத்தில் அமர்ந்துகொண்டு, பாலஸ்தீன் பிரச்னையைப் பார்க்கும்போது, சில விஷயங்கள் இப்படித்தான் அந்நியமாகத் தோன்றும். ஆயுதப்போராட்டம் தவிர வேறு எதுவுமே உபயோகப்படாது என்று, அத்தனை பேருமே அங்கே முடிவு செய்து களத்தில் இறங்கியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுவது, ஒவ்வொரு கட்டத்திலும் இங்கே அவசியமாகிறது. ஏனெனில் பாலஸ்தீனிய அரேபியர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் அரசோ, மற்ற தேசங்களின் அரசுகளோ, செவி சாய்க்கவே இல்லை என்பதுதான் சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை. என்றைக்கு பிரிட்டன், பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை உருவாக்குவது என்று முடிவு செய்ததோ, அன்றைக்கு ஆரம்பித்த சிக்கல் இது. பாலஸ்தீனியர்களுக்கென்று பிரித்துக்கொடுக்கப்பட்ட மேற்குக்கரையையும் காஸாவையும் கூட இஸ்ரேல் அபகரித்தபோது, அதன் தீவிரம் அதிகமானது. அந்தத் தீவிரக் கணத்தில் உதித்த இயக்கம்தான் ஹமாஸ்.

ஹமாஸ் தொடங்கப்பட்டபோது, அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டவை இவைதான்:

1. மேற்குக் கரை, காஸா உள்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது. இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. (அதாவது இங்கே யூதர்களை என்று பொருள்.)

2. தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்படவேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது; பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக ஆக்குவது.

இந்த இரண்டு நோக்கங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிக வெளிப்படையாகச் சொல்லிவிட்டுத்தான், ஹமாஸ் இயக்கத்தினர் துப்பாக்கிகளை வாங்க ஆரம்பித்தார்கள்.

ஹமாஸ் தோன்றியபோது, பி.எல்.ஓ.வின் தனிப்பெரும் தலைவராக யாசர் அராஃபத் அடையாளம் காணப்பட்டு, மேற்குக் கரைப் பகுதி கிட்டத்தட்ட அவரது கோட்டை போலவே இருந்தது. யாசர் அராஃபத் அங்கே தலைவர் மட்டுமல்ல. ஒரு ரட்சகர். அவரைவிட்டால் பாலஸ்தீனிய முஸ்லிம்களுக்கு வேறு நாதி கிடையாது என்கிற நிலைமை.

ஆகவே, ஹமாஸின் வளர்ச்சியும் வேகமும் மேற்குக்கரை வாசிகளுக்கு முதலில் ஒருவிதமான பயத்தைத்தான் விளைவித்தது. ஹமாஸ் என்கிற இயக்கம், பி.எல்.ஓ.வுக்கு எதிராகத் திசை திரும்பிவிடுமோ என்கிற பயம். ஏன் ஹமாஸும் பி.எல்.ஓ.வில் இணையக்கூடாது என்று மக்கள் ஆற்றாமையுடன் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஆனால் ஹமாஸின் நிறுவனர்கள், அந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். இரு அமைப்புகளின் அடிப்படை நோக்கமும் ஒன்றுதான் என்றாலும் ஹமாஸுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இருந்ததால், வீணாகத் தன்னால் பி.எல்.ஓ.வும் யாசர் அராஃபத்தும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகக் கூடாது என்று நினைத்தார்கள். அதனாலேயே தனித்து இயங்கத் தீர்மானித்தார்கள்.

இதனால் மேற்குக்கரைப் பகுதியில், தொடக்ககாலத்தில் ஹமாஸுக்கு செல்வாக்கு என்று ஏதும் உண்டாகவில்லை. மாறாக, காஸாவில் ஹமாஸ் அபரிமிதமான வளர்ச்சி கண்டது. காஸா பகுதியில் வசித்துவந்த ஒவ்வொரு தாயும் தன் மகன் எந்த விதத்திலாவது ஹமாஸுக்கு சேவையாற்றவேண்டும் என்று விரும்பியதாகக் கூடச் சொல்லுவார்கள். அங்கே உள்ள ஆண்கள் அத்தனை பேரும் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹமாஸுக்கு நன்கொடையாக அனுப்பிவைப்பார்கள். இன்றைக்குப் பல தீவிரவாத இயக்கங்கள் கட்டாய வரிவசூல் செய்வது உலகறிந்த விஷயம். (நமது நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் உல்ஃபா போன்ற பல இயக்கங்கள், இப்பணியைக் கர்மசிரத்தையாக இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு சாத்தியம் இருக்கிறது என்கிற யோசனை அவர்களுக்கு வந்ததே, ஹமாஸுக்கு காஸா பகுதி மக்கள் மனமுவந்து நிதியளித்ததைப் பார்த்த பிறகுதான்! மனமுவந்து மக்கள் அளிக்காத இடங்களிலெல்லாம் கட்டாய வசூல் என்கிற கலாசாரம் தோன்றிவிட்டது!)

ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்தால், இந்தளவு மக்கள் செல்வாக்கு இருக்குமா? உண்மையில் ஹமாஸின் பணிகள் பிரமிப்பூட்டக்கூடியவை. ஹமாஸின் தற்கொலைப்படைகளும், கார் குண்டுத் தாக்குதல்களும் பிரபலமான அளவுக்கு அந்த அமைப்பின் சமூகப்பணிகள் வெளி உலகுக்குத் தெரியாமலேயே போய்விட்டன.

மேற்குக் கரையும் சரி, காஸாவும் சரி, பாலஸ்தீனிய அரேபியர்கள் வாழும் இஸ்ரேலின் எந்த மூலை முடுக்காயினும் சரி. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக ஹமாஸ் தனியொரு அரசமைப்பையே வைத்திருந்தது. சாலைகள் போடுதல், குடிநீர் வசதி செய்துதருதல், வீதிகளில் விளக்குகள் போட்டுத்தருதல், குப்பை லாரிகளை அனுப்பி, நகரசுத்திகரிப்புப் பணிகள் ஆற்றுதல் என்று ஹமாஸின் 'அரசாங்கம்' செய்த மக்கள் நலப்பணிகள் ஏராளம். (இன்று இதெல்லாம் இல்லை. சுத்தமாக இல்லை என்பதையும் சொல்லிவிட வேண்டும்.)

இந்தக் காரியங்களெல்லாம் ஒழுங்காக நடப்பதற்காகத் தனியொரு 'நாடாளுமன்றமே' ஹமாஸில் நடத்தப்பட்டது. முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் தொகுதி தொகுதியாகப் பிரித்துத் தந்துவிடுவார்கள். மக்கள் பணிகளுக்கான செலவுக்குப் பணம்?

தயங்கவே மாட்டார்கள். இஸ்ரேலிய இலக்குகள் எது கண்ணில் பட்டாலும் உடனடியாகத் தாக்கப்படும். வங்கிகள், கருவூலங்கள், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் என்று எதையும் எப்போதும் தாக்குவார்கள். சாக்குமூட்டையில் பணத்தைக் கட்டிக்கொண்டுபோய் ஹமாஸுக்கென்று தனியே இயங்கிய வங்கியொன்றில் சேகரித்து, கணக்கெழுதிவிடுவார்கள்.

அதன்பின் தொகுதி வாரியாக 'நிதி' பிரித்தளிக்கப்படும். இஸ்ரேலிய அரசு எதையெல்லாம் செய்யத் தவறுகிறதோ, அதையெல்லாம் அங்கே ஹமாஸ் செய்யும். இடிக்கப்பட்ட மசூதிகளைச் செப்பனிட்டு, புதுப்பொலிவுடன் மீண்டும் கட்டித்தருவது, மதப் பள்ளிக்கூடங்கள் நடத்துவது, மருத்துவமனைகள் கட்டுவது, மூலிகை மருந்துகளுக்காக மூலிகைத் தோட்டங்கள் அமைப்பது என்று எத்தனையோ பணிகளை ஹமாஸ் செய்திருக்கிறது.

இதற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல இன்னொரு பக்கம் சற்றும் இரக்கமில்லாமல், யூதர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றும் போடுவார்கள். பைக் வெடிகுண்டு, கார் வெடிகுண்டு, சூட்கேஸ் வெடிகுண்டு ஆகிய மூன்றையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தியது ஹமாஸ்தான். இவற்றுள் கார்குண்டு வெடிப்பில் ஹமாஸ் இயக்கத்தினர் நிபுணர்கள். உலகின் எந்த மூலையிலும் எந்த யூத இலக்கின்மீது கார் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு ஹமாஸ்தான் என்று கைகாட்டிவிட முடியும்.

இந்தக் காரணத்தால்தான், பாலஸ்தீனிய அரேபியர்கள் ஹமாஸை எந்தளவுக்குக் கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஹமாஸை அச்சமூட்டும் பயங்கரவாத இயக்கமாகத் தொடர்ந்து கண்டனம் செய்துவருகின்றன.

ஹமாஸின் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அடிக்கடி பரபரப்பூட்டுபவை. என்ன செய்தும் தடுத்துநிறுத்தப்பட முடியாதவை. இஸ்ரேல் அரசே எத்தனையோ முறை ஹமாஸுடன் சமரசப் பேச்சுக்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் சம்மதித்ததில்லை.

'எங்களுக்கு இஸ்ரேலியப் பொதுமக்கள், இஸ்ரேலிய ராணுவம் என்கிற பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு இஸ்ரேலியக் குடிமகனும் கட்டாயமாக ஒரு வருடமாவது ராணுவச் சேவையாற்றவேண்டும் என்று அவர்கள் விதி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் சிவிலியன்களைத் தாக்குவதாகச் சொல்லுவது தவறு. அனைத்து யூதர்களுமே குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ராணுவத்தில் இருந்திருக்கிறார்கள் அல்லவா? அதனால், யாரை வேண்டுமானாலும் தாக்குவோம். அபகரிக்கப்பட்ட எங்கள் நிலம் மீண்டும் எங்கள் வசம் வந்து சேரும்வரை தாக்கிக்கொண்டேதான் இருப்போம்' என்பது ஹமாஸின் பிரசித்தி பெற்ற கோஷம்.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஒரு நிரந்தரத் தலைவலி என்பது 1970-களின் மத்தியில் மிகவும் வெட்டவெளிச்சமாகத் தெரிய ஆரம்பித்தது. இஸ்ரேலுக்கு உதவி செய்யக்கூடிய அத்தனை நாடுகளுக்குமே என்றாவது ஒரு நாள் ஹமாஸால் பிரச்னை வரத்தான் செய்யும் என்று அமெரிக்கா எச்சரித்தது.

ஆகவே ஹமாஸின் செயல்பாட்டைக் குறைத்தாலொழிய, நமக்குத் தலைவலி குறையாது; என்ன செய்யலாம் என்று இஸ்ரேலிய அரசு தனது உளவு அமைப்பான மொஸாட்டிடம் யோசனை கேட்டது. ஹமாஸுக்கு நிதியளிப்பவர்கள் பாலஸ்தீனிய அரேபியர்கள். அவர்களின் ஆள்பலம் என்பதும் பாலஸ்தீனுக்குள் இருக்கும் அரபு இளைஞர்கள்தான். ஆகவே ஹமாஸின் மக்கள் செல்வாக்கைக் குறைத்தால்தான் எதுவுமே சாத்தியம். அந்த இடத்தில் அடித்தால் இந்த இடத்தில் வந்து சேரும் உதவிகள் நிறுத்தப்படும் என்று மொஸாட், இஸ்ரேல் அரசுக்கு யோசனை சொன்னது.

இஸ்ரேல் அரசு இதனை ஏற்றுக்கொண்டது. விளைவு? காஸா மற்றும் மேற்குக் கரை மக்களின் மீது திடீர் திடீரென்று வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஒவ்வொரு இரவிலும் ஏதாவது ஒரு குடிசைப் பகுதி பற்றிக்கொண்டு எரியும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐம்பது அரேபியர்களாவது 'காணாமல்'போவார்கள். ஒவ்வொரு தினமும் எந்த அரபுக் குடியிருப்புப் பகுதியிலாவது இனக்கலவரம் மூளும். அடிதடிகள் நடந்து, கண்ணீர்ப்புகைகுண்டு வீச ராணுவம் வரும். கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கு பதில் அவர்கள் கையெறி குண்டுகளை வீசிச் சிலரைக் கொன்றுவிட்டுத் திருப்தியுடன் திரும்பிப் போவார்கள்.

இந்தச் சம்பவங்கள் ஒரு கட்டத்தில் தறிகெட்டுப் போகவே, கோபம் கொண்ட ஹமாஸ் ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டது. இஸ்ரேல் அரசுக்கு எதிராக, மிகத் துணிச்சலுடன், மிகக் கோபமாக, மிகக் கடுமையாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, இஸ்ரேலை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையுமே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கச் செய்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 11 ஆகஸ்ட், 2005

தொடரும்......

  • தொடங்கியவர்

76] ஹமாஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவு

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 76

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் தொடக்கம் மதம் சார்ந்ததாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அது முற்றிலும் அரசியல் சார்ந்ததொரு விவகாரமாகிவிட்டது. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டபடியால்தான் யாசர் அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, தொடக்கத்திலிருந்தே அரசியல் தீர்வுக்கும் ஒரு கதவைத் திறந்து வைத்தார். பேச்சுவார்த்தைகள், அமைதி ஒப்பந்தங்கள், போர் நிறுத்தம் உள்ளிட்ட சாத்வீக வழிகளுக்கும் சம்மதம் சொன்னார்.

ஆனால் பிரச்னையின் அடிப்படை அரசியல் அல்ல என்று திட்டவட்டமாகக் கருதிய ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிராக வெளியிட்ட அந்த முதல் அறிக்கையில் அழுத்தந்திருத்தமாக 'அல்லாவின் பெயரால்' தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தது.

'மதத்தின்மீது ஒருவன் நம்பிக்கை இழப்பானானால் அவனது பாதுகாப்பும் அவனது நல்வாழ்வும் அந்தக் கணத்துடன் போய்விடுகிறது' என்கிற பிரசித்தி பெற்ற இஸ்லாமியக் கவிஞர் முஹம்மது இக்பாலின் வரிகளை மேற்கோள் காட்டி யூத மக்களுக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் எச்சரிக்கை செய்யும் விதமாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கைதான் இஸ்லாத்தின் பெயரால் புனிதப்போருக்கு அறைகூவல் விடுத்த முதல் அறிக்கை.

புனிதப்போர்கள் அதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் ஹமாஸின் அந்த அறிக்கை பாலஸ்தீனிய அரேபியர்களிடையே அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கமும் பாதிப்பும் முன்னெப்போதும் நிகழாதது. உருக்கமும் உணர்ச்சி வேகமும் கோபமும் ஆதங்கமும் கலந்த கவித்துவமான வரிகளில் ஒரு போராளி இயக்கம் அதற்கு முன் அறிக்கை வெளியிட்டதில்லை. பாலஸ்தீனியர்களின் வலியை அப்பட்டமாகப் படம் பிடிக்கும் அந்த அறிக்கையிலிருந்துதான் பாலஸ்தீனுக்கான ஜிகாத் வேகமெடுக்கத் தொடங்கியது என்று தயங்காமல் கூறலாம்.

திடீரென்று பாலஸ்தீனில் இந்த அறிக்கை உண்டாக்கிய எழுச்சியைக் கண்டு, முதலில் அஞ்சியது இஸ்ரேல் அல்ல. அமெரிக்காதான். உடனடியாக ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கச் சொல்லி, இஸ்ரேல் அரசுக்கு உத்தரவிட்டுவிட்டு, உலகெங்கும் ஹமாஸுக்கு உதவக்கூடிய யாராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கைது செய்யவும் தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் கேட்டுக்கொண்டது.

அன்றைய காலகட்டத்தில் இது மிகவும் நகைப்புக்குரிய ஒரு விஷயம். ஏனென்றால், ஹமாஸ் என்றொரு இயக்கம் இருப்பது தெரியுமே தவிர, அது யாரால் தலைமை தாங்கப்படுகிறது, வழி நடத்துவோர் யார் யார் என்கிற விவரங்களெல்லாம் அப்போது பாலஸ்தீனிலேயே கூட யாருக்கும் தெரியாது. ஹமாஸின் எந்த ஒரு தலைவரும் தன் பெயரோ, புகைப்படமோ வெளியே வர அனுமதித்ததில்லை. ஹமாஸ் இயக்கத்தில் இருந்த எந்த ஒரு போராளியும் பிற போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்போல இருபத்து நாலு மணி நேரமும் கையில் துப்பாக்கியுடன் முகத்தைத் துணியால் கட்டி மறைத்துக்கொண்டு அலைந்து திரிந்ததில்லை. காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் மட்டுமே புழங்கி, திரைப்படத் தீவிரவாதிகள்போல படபடபடவென்று இயந்திரத் துப்பாக்கி புல்லட்டுகளை வீணாக்கிக் கொண்டிருக்கவில்லை.

ஹமாஸின் முழுநேரப் போராளிகள்கூட தொடக்ககாலத்தில் எங்கெங்கோ உத்தியோகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். சிலர் ஆசிரியர்களாக இருந்தார்கள். சிலர் மருத்துவர்களாக இருந்தார்கள். பெரும்பாலான இளைஞர்கள் ஹமாஸின் 'தனி பார்லிமெண்ட்'டின் தன்னார்வச் சேவகர்களாக கிராமம் கிராமமாகப் போய் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு, சாலை போடுவதிலும் நகர சுத்திகரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். இது மிகையே இல்லாத உண்மை. ஓர் அவசியம், தேவை என்று வரும்போது அப்படி அப்படியே வேலையைப் போட்டுவிட்டு ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். அந்தச் சமயங்களில் மட்டும் அடையாளம் மறைப்பதன் பொருட்டு ஹமாஸ் போராளிகள் தங்கள் முகங்களைத் துணியால் சுற்றி மறைத்துக்கொள்வார்கள். ஏனெனில், பொழுது விடிந்தால் மீண்டும் வீதிகளுக்கு வந்து கூட்டிப் பெருக்க வேண்டுமே?

ஹாலிவுட் காட்ஃபாதரிலிருந்து கோலிவுட் ஜென்டில்மேன் வரை திரைப்படங்கள் காட்டிய நெகடிவ் ஹீரோயிஸத்தின் ரிஷிமூலத்தைத் தேடிப்போனால் ஹமாஸில்தான் வந்து நிற்கவேண்டியிருக்கும்.

ஹமாஸின் வளர்ச்சி இஸ்ரேலை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. ஏற்கெனவே பதினெட்டுப் போராளி இயக்கங்களை உள்ளடக்கிய பி.எல்.ஓ.வையும் அதன் தலைவர் யாசர் அராஃபத்தின் எதிர்பார்க்கமுடியாத கெரில்லா யுத்தங்களையும் சமாளிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். குறிப்பாக, பி.எல்.ஓ.வின் மிக முக்கிய சக்தியாக விளங்கிய அராஃபத்தின் 'ஃபத்தா' இயக்கத்தினர் தாம் கற்ற போர்க்கலையின் அத்தனை சிறப்பு நடவடிக்கைகளையும் மொத்தமாக டெல் அவிவ் நகரில் காட்டியே தீருவது என்று தீர்மானம் செய்துகொண்டு, தினசரி குறைந்தது இரண்டு அல்லது மூன்று தாக்குதல்களைத் தயங்காமல் மேற்கொண்டு வந்தார்கள்.

ஃபத்தா விஷயத்தில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், தொடக்கம் முதலே (அதாவது பி.எல்.ஓ.வில் இணைவதற்கு முன்பிலிருந்தே) அராஃபத் அதனை ஒரு மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் முன்னிறுத்தி வந்தார். இயக்கத்திலிருந்த அத்தனை பேருமே இஸ்லாமியர்கள்தான் என்றபோதும் இஸ்லாத்தை முன்வைத்து அவர்கள் ஒருபோதும் யுத்தம் மேற்கொண்டதில்லை. ஹமாஸ் அல்லது இன்றைய அல் கொய்தாவைப்போல் 'அல்லாவின் பெயரால்' அறிக்கை விடுத்ததில்லை. மாறாக, 'இஸ்ரேலிடமிருந்து இழந்த நிலத்தை மீட்பது' மட்டுமே ஃபத்தாவின் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே சர்வதேச மீடியா ஃபத்தாவைக் குறித்து செய்தி சொல்லும்போதெல்லாம் அதனை ஓர் அரசியல் இயக்கமாகவே குறிப்பிட்டு வந்தது. பாலஸ்தீன் விவகாரம் அதிகம் எட்டியிராத தூரக்கிழக்கு தேசங்களிலெல்லாம் எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஃபத்தாவை ஓர் அரசியல் கட்சி போலவே சித்திரித்துச் செய்தி வெளிவரும்! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துத் திண்டாடி நிற்கும் இஸ்ரேல் அரசு. 'ஃபத்தா ஓர் அரசியல் கட்சியல்ல, அது ஒரு தீவிரவாத இயக்கம்தான்' என்று லவுட் ஸ்பீக்கர் வைத்து அலறுவார்கள். அமெரிக்க ஊடகங்களின் துணையுடன் புகைப்படங்கள், வீடியோத் துணுக்குகளை வெளியிடக் கடும் முயற்சிகள் மேற்கொள்வார்கள். அப்போதுகூட எடுபடாமல் போய்விடும்.

இஸ்ரேலுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. ஏனெனில், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தங்களுக்கு ஆபத்து என்றுதான் இஸ்ரேல் அரசு எப்போதும் ஐ.நா.வில் புலம்புவது வழக்கம். அராஃபத்தும் ஃபத்தாவும் பி.எல்.ஓ.வின் தலைமை நிலைக்கு வந்துவிட்டபோது, அவர்களால் அப்படி அழுது புலம்ப முடியாமல் போய்விட்டது. ஏனெனில் அராஃபத் எப்போதும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருந்தார். எப்போதும் போர் நிறுத்தத்துக்கான சாத்தியத்தை முதலில் வைத்துவிட்டுத்தான் யுத்தத்தையே தொடங்குவார். இது ஒரு ராஜதந்திரம். மாபெரும் அரசியல் தெளிவுள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான யோசனை.

ஆகவே ஃபத்தாவின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த வழி தேடிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, ஹமாஸின் திடீர் எழுச்சியும் அவர்களுக்கு இருந்த மக்கள் ஆதரவும் மேலும் கலவரமூட்டியது. ஒருகட்டத்தில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட், வேறு வழியே இல்லை என்று ஹமாஸை எப்படியாவது வளைத்து, இஸ்ரேல் அரசின் ரகசியத் தோழன் ஆக்கிக்கொண்டு, அவர்களைக் கொண்டே பி.எல்.ஓ.வை ஒழித்துக்கட்ட ஒரு திட்டம் தீட்டியது.

தேவையான பண உதவி, வேண்டிய அளவுக்கு ஆயுத உதவி. ஹமாஸ் இயக்கத்தினருக்கு அளவற்ற பாஸ்போர்ட்கள், ஒருவருக்கே நான்கைந்து பாஸ்போர்ட்கள் வேண்டுமென்றாலும் கிடைக்கும். எந்த நாட்டு பாஸ்போர்ட் வேண்டுமென்றாலும் கிடைக்கும்; இயக்கத்திலிருக்கும் அத்தனை பேருக்கும் வீடு, நிலங்கள் என்று நம்ப முடியாத அளவுக்குக் கொட்டிக்கொடுத்தாவது ஹமாஸை வளைக்க இஸ்ரேல் அரசு ஒரு திட்ட வரைவையே தயாரித்தது.

ஹமாஸின் மத உணர்வுகளைத் தாங்கள் மிகவும் மதிப்பதாகவும், நிதானமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்புக்கும் திருப்தியளிக்கும் விதத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணமுடியும் என்று தாம் நம்புவதாகவும், ஃபத்தாவும் அராஃபத்தும்தான் பிரச்னை என்றும் 'எடுத்துச் சொல்லி' ஹமாஸ் தலைவர்களை வளைக்க ஒரு செயல்திட்டம் தீட்டியது இஸ்ரேல் அரசு.

இதன் மறைமுக அர்த்தம் என்னவென்றால், ஹமாஸுக்கு இஸ்ரேல் அரசு உதவி செய்யும். பதிலுக்கு பி.எல்.ஓ.வை ஒழித்துக்கட்ட ஹமாஸ் உதவவேண்டும் என்பதுதான்.

இத்தகைய கேவலமான யோசனைகள் அமெரிக்காவுக்கும் அமெரிக்க அடிவருடிகளுக்கும் மட்டும்தான் சாத்தியம் என்று ஒற்றைவரியில் நிராகரித்துத் திருப்பிவிட்டார்கள், ஹமாஸின் உயர்மட்ட அரசியல் குழுவினர். அதோடு நிறுத்தாமல் மிகத் தீவிரமாக ஓர் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தையும் அவர்கள் உடனே தொடங்கினார்கள். பாலஸ்தீன் முழுவதும் யூத அதிகாரிகள் அப்போது கிடைத்த வழிகளிலெல்லாம் பணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஊழலில் உலகிலேயே முதல் இடத்தை இஸ்ரேல் பிடித்துவிடக்கூடிய சாத்தியம் இருக்குமளவுக்கு ஊழல் நாற்றம் இஸ்ரேல் முழுவதும் நாறடித்துக்கொண்டிருந்தது. ஏராளமான அறக்கட்டளைகள் அப்போது அங்கே இருந்தன. யாராவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், உடனே ஏதாவதொரு பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நிதி வசூலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். குறிப்பிடத்தக்க அளவில் பணம் சேர்ந்ததும் அறக்கட்டளை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அறங்காவலர்கள் வெளிநாடுகளுக்குப் போய்விடுவார்கள். எதற்காக அவர்கள் நிதி திரட்டினார்கள், திரட்டிய நிதி எங்கே போனது என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது.

உல்லாசமாக வெளிநாடுகளில் சுற்றித் திரிந்துவிட்டு, பணம் தீர்ந்ததும் மீண்டும் இஸ்ரேலுக்கு வந்து வேறொரு அறக்கட்டளை ஆரம்பிப்பார்கள். மீண்டும் வசூல் நடக்கும். மீண்டும் காணாமல் போய்விடுவார்கள்.

ஒருவர் இருவர் அல்ல. அநேகமாக அன்றைய இஸ்ரேலின் மிக முக்கியமானதொரு 'தொழிலாகவே' இது இருந்தது. எழுபதுகளில் இஸ்ரேலில் இம்மாதிரி திடீர் அறக்கட்டளைகள், டிரஸ்டுகள் மட்டும் லட்சக்கணக்கில் தோன்றி, காணாமல் போயிருக்கின்றன. இத்தகைய நூதன மோசடியில் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கூட நிறைய தொடர்புகள் இருந்திருக்கின்றன.

கோடிக்கணக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணம் திரட்டி, அறக்கட்டளைகளின் பெயரில் அவற்றைச் சில தனிநபர்கள் தின்று கொழுத்து வந்ததைக் கண்டு கோபம் கொண்ட ஹமாஸ், இத்தகைய அறக்கட்டளைகளையும் டிரஸ்டுகளையும் ஒழித்துக்கட்டுவதே தன் முதல் வேலை என்று தீர்மானம் செய்து பகிரங்கமாக அறிவித்துவிட்டு, கையோடு வேலையை ஆரம்பித்து விட்டது.

இதற்கு பயந்த ஊழல் முதலைகள், போர்டுகளைக் கழற்றிப் போட்டுவிட்டு, அறைக்கதவைச் சாத்திக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தன. ஆனால் ஹமாஸ் இயக்கத்தினர் இத்தகைய அறக்கட்டளைகளைக் கணக்கெடுத்து, பட்டியலிட்டு, ஒரு நாளைக்கு ஒன்று என்று முடிவு செய்து தேசம் முழுவதும் இவற்றின்மீது தினசரி யுத்தம் ஆரம்பித்துவிட்டார்கள்.

அறக்கட்டளைகளின் பெயரில் ஊழல் செய்வதைத் தடுக்கப் போன ஹமாஸுக்கு அரசுத்துறையிலும் ஊழல் மலிந்து கிடப்பது தெரியவர, பெரிய அளவில் ஒரு நாடு தழுவிய ஊழல் ஒழிப்புப் போராக நடத்தினாலொழிய இதற்கு விடிவு கிடையாது என்று தெரிந்தது.

ஆகவே, ஹமாஸில் உடனடியாகத் தனியொரு ஊழல் ஒழிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. எங்கெல்லாம் , யாரெல்லாம் ஊழலில் ஈடுபடுவதாகத் தெரிகிறதோ அங்கெல்லாம் இந்தப் படை போகும். ஒரு தோட்டா. ஒரே முயற்சி. ஆள் காலி அல்லது நிறுவனம் காலி. அங்கிருக்கும் பணம் முழுவதும் அடுத்த வினாடி ஹமாஸின் மக்கள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிடும். உடனே கணக்கு எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி எங்காவது மாட்டிவிடுவார்கள். இந்த இடத்தில் இத்தனை பணம் எடுத்துவரப்பட்டது. இந்தப் பணம் இந்த இந்த வகைகளில் செலவிடப்படவிருக்கிறது என்று எழுதியே போட்டுவிடுவார்கள்.

எழுதிப் போட்டபடி செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காகவே ஒரு குழு இருக்கும். அவர்கள் வருடத்துக்கு மூன்றுமுறை இன்ஸ்பெக்ஷன் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அது ஓர் அரசாங்கமேதான். தனியார் அரசாங்கம்.

ஆரம்பத்தில் ஹமாஸின் இத்தகைய சமூகப்பணிகள்தான் இஸ்ரேல் அரசின் கவனத்தைக் கவர்ந்தன. ஹமாஸைத் தீவிரவாதச் செயல்களிலிருந்து பிரித்து இழுப்பது சுலபம் என்று அவர்கள் நினைத்ததும் இதனால்தான்.

ஆனால் யுத்தத்தை நிறுத்தினாலும் நிறுத்துவார்களே தவிர, அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்பது ஏனோ அவர்களுக்கு உறைக்காமல் போய்விட்டது.

இதெல்லாம் எண்பதுகளின் தொடக்கம் வரைதான். அதுகாறும் அரசியல் சித்தாந்தவாதிகளால் வழிநடத்தப்பட்டுவந்த ஹமாஸுக்கு எண்பதாம் வருடம் ஒரு ராணுவத் தலைவர் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பெயர் ஷேக் அகமது யாசின். (Sheikh Ahmed Yassin). அந்தக் கணமே ஹமாஸின் செயல்பாடுகள் முற்றிலும் வேறுமுகம் கொள்ளத் தொடங்கிவிட்டன.

தொடரும்......

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14 ஆகஸ்ட், 2005

மிக நல்ல தொடர். யூதர்களை பற்றி அறிய மிகவும் ஆவல் கொண்ட நான் தற்சமயம் தான் அவர்களை பற்றி சரியாக அறிய முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். எம்மையும் யூதர்களையும் ஒப்பிடுவது எந்தளவு தூரம் சரி என்று ஜோசிக்க வேண்டும். சும்மா தற்பெருமை பேசாமல் நாம் ஜோசிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

77] ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 77

2004-ம் வருடம் மார்ச் மாதம் 22-ம் தேதி தொழுகைக்காக அவர் ஒரு மசூதிக்குச் சென்றுகொண்டிருந்தார். தொழுகை முடித்து மசூதியை விட்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு ராக்கெட் வெடிகுண்டு, அவர் அருகே சரியாக விழுந்து வெடித்து உயிரைக் குடித்தது. அடுத்த வினாடி பாலஸ்தீன் பற்றி எரியத் தொடங்கியது. இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனின் கதை அத்துடன் முடிந்தது என்று அத்தனை பேரும் பேசிக்கொண்டார்கள். திட்டமிட்ட அந்தத் தாக்குதலை "சற்றும் எதிர்பாராததொரு விபத்துதான் இது. நாங்கள் அவரைக் குறிவைத்து ராக்கெட்டை ஏவவில்லை" என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் பொய்தான் சொல்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். வயதில் மிகவும் முதிர்ந்த, மார்க்கக் கல்வியில் கரை கண்டவரான அவர் பெயர் ஷேக் அகமது யாசின். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸின் தலைவர்.

ஷேக் அகமது யாசின், ஹமாஸின் தலைமைப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் தொடங்கவேண்டிய இந்த அத்தியாயத்தை, அவரது மரணத்தில் தொடங்க நேர்ந்தது தற்செயலானதல்ல. தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் எந்தக் காலத்திலும் வெளியில் சொல்லாத போராளி அவர். யாசின் குறித்து இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள் நான்கே நான்குதான். முதலாவது, அவர் அதிகம் பேசமாட்டார். சமயத்தில் பேசவே மாட்டார். இரண்டாவது, ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டியும் ஒரு தம்ளர் பாலும் மட்டும்தான் அவரது உணவாக இருந்தது என்பது. மூன்றாவது, இருட்டில் கூடக் குறிதவறாமல் சுடக்கூடியவர் என்கிற தகவல். நான்காவது தகவல், அவருக்குக் கடைசிக் காலத்தில் கண் பார்வை சரியில்லாமல் போய் மிகவும் அவஸ்தைப்பட்டார் என்பது. இதுதான். இவ்வளவுதான்.

யாசினுக்கு முன்பு ஹமாஸை வழி நடத்தியவர்கள் எல்லோரும் அரசியல் வல்லுநர்களாக மட்டும் இருந்தார்கள். இவர்தான் முதல் ராணுவத் தலைவர். ஹமாஸை ஒரு சக்திமிக்க தனியார் ராணுவம் போலவே வடிவமைத்ததில் பெரும்பங்கல்ல; முழுப் பங்கே இவருடையதுதான். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் யுத்தத்துக்கு ஒரு சரியான வடிவம் கொடுத்தவர் யாசின்தான்.

ஒரு மாதத்துக்கு இத்தனை இலக்குகள் என்று திட்டம் போட்டுக்கொண்டு, தாக்குதலை நடத்தக் கற்றுக்கொடுத்தவர் அவர். ஒரு குழு ஓரிடத்தில் தாக்குதல் நடத்தப் போனால், அடுத்த குழு அடுத்த இலக்கை நோக்கி அப்போதே பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கும். இவ்வாறு ஹமாஸின் அத்தனை போராளிகளையும் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, தேசமெங்கும் வேறு வேறு இடங்களில் பயிற்சி முகாம்கள் அமைத்து, தங்கவைத்துத் தயார் செய்ய ஆரம்பித்தார் யாசின்.

எந்தவிதமான சமரசங்களுக்கும் ஹமாஸ் தயாரானதல்ல என்பது முதன்முதலில் இஸ்ரேலிய அரசுக்குப் புரியவந்ததே ஷேக் அகமது யாசின் பொறுப்புக்கு வந்தபிறகுதான். ஹமாஸ், மிகத்தீவிரமாக இஸ்ரேலிய மக்களின்மீது தாக்குதல் ஆரம்பித்ததும் அவரது தலைமைக்குப் பிறகுதான். அதுவரை ராணுவ இலக்குகள், அரசாங்க இலக்குகள்தான் ஹமாஸின் பிரதான நோக்கமாக இருந்துவந்தது. அதனை மாற்றி, பொதுமக்களும் அரசின் கருத்தை ஏற்று நடந்துகொள்பவர்கள்தானே, ஆகவே இஸ்ரேலிய அரசின் அத்தனை குற்றங்களிலும் அவர்களுக்கும் பங்குண்டு என்று சொன்னவர் அவர்.

பொது இடங்களில் ஹமாஸ் வெடிகுண்டுகளைப் புழக்கத்தில் விடத் தொடங்கியது அப்போதுதான். பஸ்ஸில் வைப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கார் பார்க்கிங்கில் வைப்பார்கள். ரயில்களில் வைப்பார்கள். ஹோட்டல்கள், யூத தேவாலயங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கங்கள், அரசு விழாக்கள் நடக்கும் இடங்கள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் என்று எங்கெல்லாம் மக்கள் கூடுவார்களோ அங்கெல்லாம் குண்டுவைக்க ஆரம்பித்தார்கள்.

சித்தாந்தம் என்பது சௌகரியப்படி மாற்றி எழுதிக்கொள்ளத் தக்கது. அதுவரை பாலஸ்தீன் விடுதலைக்காகப் போராடியபடி, பாலஸ்தீனிய அரேபியர்களின் நலனுக்காகவும் பாடுபட்டுக்கொண்டிருந்த ஹமாஸ், எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இஸ்ரேலிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துவதையே தனது பிரதான மான நோக்கமாகக் கொள்ளத் தொடங்கியது.

இதனால்தான் பி.எல்.ஓ. ஓர் அரசியல் முகம் பெற்றதைப் போல ஹமாஸால் இறுதிவரை பெற முடியாமல் போய்விட்டது. எண்பதுகளிலேயே ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கமாக உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டதென்றபோதும், அது அல் கொய்தாவைக் காட்டிலும் பயங்கரமான இயக்கம் என்று கருதப்பட்டது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான்.

உலகிலேயே முதல் முறையாக தற்கொலைத் தாக்குதல் என்னும் உத்தியைப் புகுத்தியது ஹமாஸ்தான். இந்தத் திட்டம் ஷேக் அகமது யாசினின் எண்ணத்தில் உதித்தவற்றுள் ஒன்று.

கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்வது, மதத்துக்காக உயிர்த்தியாகம் செய்வது, விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்வது என்கிற புராதனமான சித்தாந்தத்துக்குப் புதுவடிவம் கொடுத்து, தானே ஓர் ஆயுதமாக மாறி எதிரியின் இலக்கைத் தாக்கி அழிப்பது என்கிற கருத்தாக்கத்தை முதன்முதலில் 1989-ல் முன்வைத்தது ஹமாஸ்.

ஹெப்ரான் (Hebron) என்கிற இடத்திலிருந்த இப்ராஹிம் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 29 பேர், ஈவிரக்கமின்றி பரூஷ் கோல்ட்ஸ்டெயின் (Baruch Goldstein) என்கிற வந்தேறி யூதரால் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க முடிவு செய்தது ஹமாஸ். திரும்ப அதேபோல துப்பாக்கி ஏந்தி கண்ணில் பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்வது எந்தப் பலனும் அளிக்காது என்று ஹமாஸின் உயர்மட்டக் குழுவினர் கருதினார்கள். அப்போது வடிவம் பெற்றதுதான் இந்தத் தற்கொலைத் தாக்குதல் என்கிற உத்தி.

ஒரு தாக்குதல் நடத்த வேண்டும். அது உலகத்தையே குலுக்க வேண்டும். இஸ்ரேலிய அரசு பதறிக்கொண்டு அலறியோட வேண்டும். இப்படியும் செய்வார்களா என்று அச்சம் மேலோங்கவேண்டும். அதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் என்று தீர்மானித்த ஹமாஸ், திட்டமிட்டு ஒரு போராளியைத் தயார் செய்து அனுப்பியது. உடலெங்கும் வெடிபொருட்களைக் கட்டிக்கொண்டு போய் நட்டநடு வீதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு சுமார் ஐம்பது யூதர்களையும் கொன்றான் அவன்.

ஹமாஸ் எதிர்பார்த்தபடியே இந்தச் சம்பவம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்தது. அத்தனை நாட்டுத் தலைவர்களும் அலறினார்கள். இஸ்ரேல் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனது. இப்படியுமா கொலைவெறி கொள்வார்கள் என்று பக்கம்பக்கமாக எழுதி மாய்ந்தார்கள். உடனடியாகப் பல்வேறு நாடுகள் ஹமாஸை தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவித்தன. இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு வெளிப்படையாகப் பல தேசங்களில் கிளைகளும் துணை அமைப்புகளும் பயிற்சி முகாம்களும் இருப்பதுபோல ஹமாஸுக்குக் கிடையவே கிடையாது. எங்கே யார் இருக்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது.

1989-லிருந்து 1991- வரை ஹமாஸ் இயக்கத்தினரைப் பற்றித் தகவல் சேகரிக்கவென்றே அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.வில் தனியொரு பிரிவு செயல்பட்டது. இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாட்டுடன் இணைந்து மூன்று ஆண்டுகள் படாதபாடுபட்டும் அவர்களால் மொத்தம் பதினான்கு பேரைத் தவிர வேறு பெயர்களைக் கூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு ஹமாஸ் தலைவரைப் பற்றிய தனி விவரங்களும் கிடைக்கவேயில்லை. "கஷ்டப்பட்டு" அவர்கள் சேகரித்து வெளி உலகுக்கு அறிவித்த அந்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்கள் இதோ:

ஷேக் அகமது யாசின் – மதத்தலைவர், ராணுவத்தலைவர். (இவர் மார்ச் 22, 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.)

டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸி (Dr. Abdul aziz al rantissi யாசின் மறைவுக்குப் பிறகு ஹமாஸின் தலைவரானவர். இவரும் இஸ்ரேல் ராணுவத்தினரால் அதே ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.)

இப்ராஹிம் அல் மகத்மெ (Ibrahim al Makadmeh 2003-ம் ஆண்டு மொஸாட் உளவாளிகளால் கொலை செய்யப்பட்டவர்.)

மெஹ்மூத் அல் ஸாஹர் (Mahmoud al Zahar அரசியல் பிரிவுத் தலைவர்)

இஸ்மாயில் ஹனியா (Ismail Haniya பெரும்பண்டிதர். அரசியல் ஆலோசகர்.)

சயீது அ'சியாம் (Said a' Siyam - அரசியல் பிரிவின் மூத்த செயலாளர்.)

ஸலா ஸாஹேத் (Salah Sahed ஹமாஸின் ராணுவத் தளபதி. 2002-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.)

மொஹம்மத் டெயிஃப் (Mohammed Deif – ராணுவத் தளபதி.)

அட்னல் அல் கௌல் (Adnal al Ghoul வெடிபொருள் நிபுணர். ராக்கெட் லாஞ்ச்சர் பிரயோகத்தில் விற்பன்னர்.)

மொஹம்மத் தாஹா (Mohammed Taha ஹமாஸைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். மார்க்க அறிஞர். 2003-ம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவம் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றுவரை சிறையில் இருக்கிறார்.)

யாஹியா அயாஷ் (Yahya Ayyash வெடிகுண்டுகள் தயாரிக்கும் விஞ்ஞானி.)

காலித் மஷால் (Khaled Mashal டெமஸ்கஸில் வசிக்கும் ஹமாஸ் தலைவர். செப்டம்பர் 2004-க்குப் பிறகு ஈரானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.)

மூசா அபு மர்ஸுக் (Mousa Abu marzuk சிரியாவில் இருக்கிறார்.)

ஷேக் கலில் (Sheikh Khalil – 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட இவர், மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்று வருணிக்கப்பட்டவர்.)

எந்த விவரமும் கண்டுபிடிக்க முடியாத இவர்களில் சிலரை இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கொன்றது என்பது மிக முக்கியமான விஷயம். ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் அந்த இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் மிகப்பெரிய மார்க்க அறிஞராகத்தான் இருப்பார். அவரது ராணுவத் தகுதிகளெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான்.

அப்படி சமய ஈடுபாடு மிக்க ஒருவர் மசூதிக்குப் போய் தொழுகை நடத்துவதிலிருந்து ஒரு நாளும் தவற மாட்டார்.

இதை கவனத்தில் கொண்ட இஸ்ரேல், காஸா பகுதியில் உள்ள அத்தனை மசூதிகளைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஒற்றர்களை எப்போதும் நிறுத்திவைக்கும். இந்த ஒற்றர்கள், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு முறை ஓரிடத்தில் பணியில் இருக்கும் ஒற்றர், அடுத்த ஒரு மாத காலத்துக்கு அந்த இடத்துக்கு வரமாட்டார். அத்தனை கவனம்!

இப்படிப் பணியில் நிறுத்தப்படும் ஒற்றருக்கு ஒரே ஒரு கட்டளைதான். ஹமாஸ் தலைவர் எப்போது எந்த மசூதிக்கு வருகிறார் என்று பார்த்துச் சொல்லவேண்டும். அவர் தினசரி வருகிறாரா, வாரம் ஒரு முறை வருகிறாரா, அல்லது ஏதாவது விசேஷ தினங்களில் மட்டும் வருகிறாரா என்று காத்திருந்து சரியாகப் பார்த்துச் சொல்லவேண்டும்.

தகவல் சரிதான் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் பாதுகாப்பான தூரத்தில் பதுங்கியிருந்து ராக்கெட் வெடிகுண்டு மூலம் கொன்றுவிடலாம் என்று யோசனை சொன்னது மொஸாட்.

இப்படித்தான் ஷேக் அகமது யாசின் படுகொலை செய்யப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மசூதிக்கு வருபவர் அவர் என்பது, இஸ்ரேல் ராணுவத்துக்கு சௌகரியமாகப் போய்விட்டது. அவர் உள்ளே போகும் நேரம், வெளியே வந்து நாற்காலியிலிருந்து இறங்கி வண்டியில் ஏறுவதற்கு ஆகும் கால அவகாசம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கவனித்து, சரியாக அடித்தார்கள். யாசின் இறந்து போனார்.

யாசின் இறந்தபோது, கோபத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் முழுவதும் ஏராளமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். எங்கு பார்த்தாலும் குண்டு வெடித்தது. பஸ்கள் எரிந்தன. மக்களின் அலறல் ஓசை பத்து நாட்கள் வரை ஓயவே இல்லை. புதிய தலைவரான டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸியின் வழிகாட்டுதலில், இயக்கம் இன்னும் உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார்கள்.

உடனே மொஸாட் விழித்துக்கொண்டது. ஓஹோ, உங்கள் புதிய தலைவர் இவர்தானா என்று அவருக்கு அடுத்தபடியாகக் கட்டம் கட்டினார்கள். அதேபோல ஒளிந்திருந்து தாக்கி அவரையும் கொன்றார்கள். ஒரே வருடத்தில் இரண்டு தலைவர்களைப் பறிகொடுத்த ஹமாஸ், செய்வதறியாமல் திகைத்தது.

ஹமாஸ் தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தபோதுதான், விஷயத்தை மோப்பம் பிடித்த ஹமாஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சிரியாவில் வசிப்பவருமான காலித் மஷால், அவசர அவசரமாக "தலைவரை ரகசியமாகத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் யார் தலைவர் என்பதை வெளியே சொல்லாதீர்கள்" என்று இயக்கத்தினருக்கு ரகசியச் சுற்றறிக்கை அனுப்பினார்.

சற்றே நிதானத்துக்கு வந்த ஹமாஸ், அவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தங்களது தலைவர் யாரென்பதை அறிவிப்பதை அத்துடன் நிறுத்திக்கொண்டது. ஆனாலும் சீனியாரிடி அடிப்படையில் மெஹ்மூத் அல் ஸாஹர்தான் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னது மொஸாட். துணைத்தலைவராக இஸ்மாயில் ஹனியாவும் அவருக்கு அடுத்தபடியாக சயீது அ'சியாமும் இருப்பார்கள் என்றும் சொல்லி, வைத்த குறிக்காக இன்னும் வலைவிரித்திருக்கிறார்கள்.

தொடரும்.....

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 18 ஆகஸ்ட், 2005

  • தொடங்கியவர்

78] யாசர் அராஃபத்தின் இண்டிஃபதா (Intifada)

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 78

ஷேக் அகமது யாசினின் தலைமையில் ஹமாஸ் தனது சமூகப் பணி முகத்தைக் கிட்டத்தட்ட கழற்றிவைத்துவிட்டு, முழுநேர குண்டுவெடிப்பு இயக்கமாக உருமாறத் தொடங்கிய அதே சமயத்தில், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பி.எல்.ஓவுடன் பொதுமக்களும் கைகோக்கும் விதத்தில் ஒரு புதிய திட்டத்தைத் தயார் செய்துகொண்டிருந்தார்.

கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் செய்யும் திட்டம் ஏதும் அப்போது அவருக்கு இல்லை. மாறாக கத்திக்கு பதில் கல்லும் துப்பாக்கிக்குப் பதில் தீக்குச்சியும் ஆயுதமாகலாம் என்று முடிவு செய்தார். மேலோட்டமான பார்வையில் வெறும் மக்கள் எழுச்சி; நீதி கேட்டு நெடும்பயணம் என்பது போலத்தான் தெரியும். எப்படியும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குவதற்கு வரும். பதில் தாக்குதலுக்குத் துப்பாக்கி எடுக்காமல் கற்களைக்கொண்டு தற்காப்பு ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்.

இது மக்கள் மத்தியில் இன்னமும் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுத்தரக் கூடும். மேலும், பாலஸ்தீன் விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் கரத்தில் மட்டும் இல்லை என்று அராஃபத் நினைத்தார். இயக்கம் முன்னின்று போராடும். ஆனால், பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்தான் திட்டம் வெற்றி யடையமுடியும் என்பது அவரது கருத்து.

இந்த எண்ணத்தின் விளைவாகப் பிறந்ததுதான் இண்டிஃபதா (Intifada). இந்த அரபுச் சொல்லுக்கு எழுச்சி, உலுக்கிப் பார்த்தல், பொங்கியெழுதல் என்று பலவிதமாகத் தமிழில் அர்த்தம் சொல்லலாம். இஸ்ரேல் அரசையும் ராணுவத்தையும் உலுக்குவதுதான் அராஃபத்தின் நோக்கம். பி.எல்.ஓ. அதனைச் செய்யாமல், பொதுமக்களை முன்னிறுத்திச் செய்யலாம் என்கிற யோசனைதான் முக்கியமானது. உலகம் முழுவதும் "இண்டிஃபதா, இண்டிஃபதா" என்று உச்சரிக்கும் விதத்தில் இந்த எழுச்சி மிகப்பெரிய வெற்றியை அவருக்குத் தேடித்தந்தது.

தோற்றத்தில் இது ஓர் அறப்போராட்டம் போல் இருந்ததால், அராஃபத்தின் எழுச்சி ஊர்வலங்களில் நடைபெறும் கலவரங்களும் கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சுகளும் தீவைப்புச் சம்பவங்களும் சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்குத்தான் அவப்பெயரைத் தேடித்தந்தன. உண்மையில் அரேபியர்களும் இந்த இண்டிஃபதாவில் ஏராளமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கலவரத்தை ஆரம்பித்துவைத்ததே அரேபியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பது சமகால சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை.

அராஃபத்தின் எண்ணத்தில் உதித்த இண்டிஃபதா, முதன் முதலில் செயலுக்கு வந்த ஆண்டு 1987. இதற்கு ஒரு வலுவான பின்னணியும் இருந்தது. அந்த வருடம் அக்டோபர் முதல் தேதி, காஸாவில் ஒரு சம்பவம் நடந்தது. இஸ்ரேலிய ராணுவம் அன்றைய தினம், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் என்னும் அமைப்பைச் சேர்ந்த ஏழு போராளிகளைச் சுட்டுக் கொன்றது. இந்தச் சம்பவத்தால் காஸா முழுவதும் யுத்தத்தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கிய சமயத்தில் ஒரு வந்தேறி யூதர், ஓர் அரபு பள்ளிச் சிறுமியின் பின்புறத்தில் தன் கைத்துப்பாக்கியால் சுட்டார். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி அவள். சற்றும் எதிர்பாராதவகையில் பின்புறமிருந்து ஒரு குண்டு பாய்ந்து வந்து அவளது இடுப்புப் பகுதியில் வெடிக்க, நடுச்சாலையில் அந்தக் குழந்தை விழுந்து கதறியதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து, நிலைகுலைந்து போய் நின்றார்கள். அந்த யூதர், துப்பாக்கியைத் துடைத்து எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு வந்த வழியே போய்விட்டார்.

இந்தச் சம்பவம் காஸாவில் மிகப்பெரிய கலவரத்துக்கான தூபத்தைப் போட்டது. மக்கள் கொதித்து எழுந்தார்கள். போராளிகளோ, கண்ணில் தென்பட்ட அத்தனை யூதர்களையும் சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள். அனைத்து யூதக் கடைகள், அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. பேருந்துகள் நடுச்சாலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன.

என்ன செய்வதென்று தெரியாமல் இஸ்ரேலிய அரசு விழித்து நின்றது. கலவரத்தை அடக்க, ராணுவத்தை அனுப்பிவைத்தது. இது இன்னும் பிரச்னையாகிவிட்டது. ராணுவம் வந்துவிட்டது என்பது தெரிந்ததுமே காஸா பகுதியில் வசித்துவந்த மக்கள், கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். கண்மூடித்தனமாகச் சாலைகளை நாசப்படுத்தி, குடிநீர்க் குழாய்களை உடைத்து, சரக்கு லாரிகளின் டாங்குகளில் தீப்பந்தங்களைச் சொருகி, என்னென்ன வகைகளிலெல்லாம் பற்றி எரியச் செய்யமுடியுமோ, அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள்.

காஸாவில் என்ன நடக்கிறது என்பதே சரியாக வெளியே தெரியவரவில்லை. அதனால், ஏராளமான வதந்திகள், புரளிகள் எழத் தொடங்கின. தினசரி பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள், எரிக்க வழியில்லாமல் கடலில் பிணங்கள் வீசப்படுகின்றன என்றெல்லாம் தகவல்கள் வெளிவரத் தொடங்க, சர்வதேச மீடியா பரபரப்படைந்தது.

கலவரம் நடந்தது உண்மை. இரு தரப்பிலும் ஏராளமான சேதங்கள் இருந்தது உண்மை. அதற்கு மேல் ஆயிரக்கணக்கில் படுகொலை என்று சொல்லப்பட்டது எல்லாம் பொய். ஆனால், வதந்திகள் தந்த கோபத்தில் மக்களின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போய் மிகப்பெரிய யுத்தமாக அது உருப்பெறத் தொடங்கியது.

அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் அராஃபத் பயன்படுத்திக்கொண்டார். போராட்டம். மக்கள் போராட்டம். அறப்போராட்டம். ஆயுதத்தாக்குதல் வந்தால் மட்டும் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்தலாம் என்று மக்களின் எழுச்சியை ஒருமுகப்படுத்தி, அதற்கு இண்டிஃபதா என்று ஒரு பெயரளித்தார்.

கஸ்டடி மரணங்கள், கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்வது, வீடுகளை இடிப்பது, கொடூரமான முறையில் சித்திரவதை செய்வது, நாடு கடத்துவது உள்ளிட்ட இஸ்ரேலிய அரசின் அரபு விரோத நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, இவை அனைத்துக்கும் எதிரான போராட்டம் என்று சொல்லித்தான் முதல் இண்டிஃபதா ஆரம்பமானது.

ஆரம்பத்தில், இது அராஃபத்தின் யோசனையே அல்ல; மக்களின் இயல்பான எழுச்சியைத்தான் அராஃபத் தன்னுடைய திட்டம் போல் வடிவம் கொடுத்து நடைபெறச் செய்துவிட்டார் என்று கூடச் செய்திகள் வந்தன.

உண்மையில், மக்களை முன்னிறுத்தி ஒரு மாபெரும் போராட்டம் நடத்துவது பற்றி 1985-லிருந்தே அராஃபத் யோசித்து வந்திருக்கிறார். 1986-ம் வருடம் ஒரு பிரெஞ்சு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இது பற்றி மிக விரிவாகப் பேசவும் செய்திருக்கிறார்.

"பெயர் வாங்கிக்கொள்ளும் ஆர்வமோ, முன்னின்று நடத்துகிறோம் என்கிற கர்வமோ எங்களுக்கு இல்லை. வேண்டியது, பாலஸ்தீனின் விடுதலை. எங்கள் தாயக மக்களின் சுதந்திர சுவாசம். அதற்கு மேல் ஒன்றுமில்லை. இந்தப் போராட்டத்தில் பாலஸ்தீனின் ஒவ்வொரு குடிமகனும் எங்களுடன் இணைந்து போராடவேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன்" என்று சொன்னார் அராஃபத்.

பி.எல்.ஓ. போராளிகள் முன்னின்று நடத்திய இந்த இண்டிஃபதாவுக்கு ஹமாஸும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பும் வெளியிலிருந்து ஆதரவு தந்தன. அதாவது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டிய ஆயுதங்களை அவர்கள் சப்ளை செய்தார்கள். கல் வீச்சு என்னும் நடவடிக்கை ஹமாஸுக்குப் பிடிக்கவில்லை. பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் இயக்கத்தின் தலைவர்களோ, "அவர்கள் கண்ணீர்ப் புகை குண்டு வீசுகிறார்கள் என்றால் நீங்கள் நாட்டு வெடிகுண்டுகளையாவது வீசித்தான் ஆகவேண்டும்" என்று சொல்லி, கேட்டாலும் கேட்காவிட்டாலும் வீடுதோறும் தமது போராளிகளை அனுப்பி தினசரி ஒரு வீட்டுக்கு ஒரு நாட்டு வெடிகுண்டு என்று சப்ளை செய்துவிட்டு வர ஏற்பாடு செய்தார்கள்.

இது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மனக்கிளர்ச்சியை உண்டாக்கியது. விளைவாக, இண்டிஃபதா என்பது ஒரு அறப்போராட்டமாக அல்லாமல், திட்டமிட்ட கலவரமாகப் பரிமாணம் பெற்றது.

இதையெல்லாம் கவனித்துச் சரி செய்யவோ, எது நியாயம், எது அநியாயம் என்றெல்லாம் இரு கட்சிக்கும் பொதுவில் ஆராய்ச்சி செய்யவோ யாருக்கும் விருப்பமோ, அவகாசமோ இருக்கவில்லை. பொழுது விடிந்தால் குண்டு வெடிக்கும். கட்டடங்களும் பேருந்துகளும் பற்றி எரியும். ஒரு பக்கம் கொடி பிடித்து ஊர்வலம் போவார்கள். கோஷங்கள் விண்ணை முட்டும். இஸ்ரேலிய காவல்துறையோ, ராணுவமோ, துணை ராணுவப் படையோ தடுப்பதற்கு எதிரே வந்தால் உடனே கல்வீச்சு ஆரம்பமாகும். ஒரு டிராக்டரில் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு ஊர்வலத்தின் கூடவே ஓட்டிவருவார்கள். இஸ்ரேலிய போலீஸ் கண்ணில் பட்டவுடன் ஊர்வலம் கலவரமாகிவிடும். கற்கள் வானில் பறக்கும். பதிலுக்குக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பாயும். ரத்தமும் தண்ணீரும் சேறும் சகதியுமாக சில நிமிடங்களில் சாலையே ஒரு போர்க்களமாகக் காட்சியளிக்கும்.

இண்டிஃபதா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், மக்களை ஒரே நோக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்பதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாக, சாதாரண மக்கள் அத்தனை பேரையும் ஆயுததாரியாக மாற்றும் விதத்தில் இந்த எழுச்சிப் போராட்டம் மாறிப்போய்விட்டது. ஒரு கட்டத்தில் இண்டிஃபதா ஊர்வலங்களின் முன் பகுதியில் குழந்தைகளை நிறுத்தி நடக்கச் சொல்லிவிட்டு மக்கள் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேலிய போலீஸ், தாக்குதல் நடத்தினால் முதலில் பலியாகக் கூடிய சாத்தியம் குழந்தைகளுக்கே இருந்தபடியால், அதனைக் கொண்டு சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்கு கெட்டபெயர் உண்டாக்கித் தரலாம் என்று போராளி இயக்கங்கள் யோசித்து முடிவு செய்த முட்டாள்தனமான முடிவு இது. எத்தனையோ குழந்தைகள் இந்த எழுச்சிப் போராட்டக் காலத்தில் இறந்துபோனார்கள். ஆயிரக்கணக்கில் காயமடைந்தார்கள். இரு தரப்பிலும் ரத்தவெறி மேலோங்க, பாலஸ்தீன் முழுவதுமே பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.

இதனிடையில் பாலஸ்தீனில் இருந்த மைனாரிடி கிறிஸ்தவர்கள் 1988-ம் ஆண்டு பிரத்தியேகமாக ஓர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். (இது நிஜமாகவே அமைதிப் போராட்டம்தான். ஆயுதங்கள் இல்லாமல் நடந்த போராட்டம்.) குறிப்பாக, கிறிஸ்தவ வியாபாரிகள்.

யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த தொடர் யுத்த நடவடிக்கைகளில் மைனாரிடிகளான கிறிஸ்தவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இஸ்ரேலிய அரசு, தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அத்தனை கிறிஸ்தவ வியாபாரிகளும் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை "சிறப்பு வரியாக" அரசுக்குச் செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. வழக்கமான வருமான வரி, சொத்துவரி, விற்பனை வரி உள்ளிட்ட அத்தனை வரிகளும் எப்போதும் போல் உண்டு. இது சிறப்பு வரி. எதற்காக? என்றால், அரேபியப் போராளி இயக்கங்களுக்கு எதிராக இஸ்ரேல் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக!

வெறுத்துப் போனார்கள் கிறிஸ்தவர்கள். ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த பாலஸ்தீனுக்காகவும் நடக்கும் யுத்தத்தில் அப்போது அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் ஜெருசலேம் புனித நகரம்தான். பக்கத்து ஊரான பெத்லஹேமில்தான் இயேசுபிரான் பிறந்திருக்கிறார். பாலஸ்தீனில் எங்கு தொட்டாலும் கிறிஸ்தவர்களுக்கும் ஆயிரம் புராணக் கதைகள் இருக்கவே செய்கின்றன.

ஆனால் இதென்ன அக்கிரமம்? வேறு இரண்டு இனங்கள் மோதிக்கொள்வதற்குத் தாங்கள் எதற்கு வரி செலுத்தி வசதி செய்துதர வேண்டும்?

அதனால்தான் அவர்கள் ஆரம்பித்தார்கள். போராட்டம். அறப்போராட்டம். அதாவது கோஷங்களுடன் ஊர்வலம். கோரிக்கைகளுடன் மனுக்கள். உண்ணாவிரதத்துடன் முழுநாள் கூட்டம். கடையடைப்புடன் சமநிலை குலைத்தல்.

ஒரு வகையில் கிறிஸ்தவர்களின் இந்தப் போராட்டம், முஸ்லிம்களின் இண்டிஃபதாவுக்கு ஓர் இலவச இணைப்பு போல் அமைந்துவிட்டது. பருந்துப் பார்வையில் பாலஸ்தீன் முழுவதுமே ஏதோ ஒரு காரணத்துக்காகப் போராடிக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருப்பது போல் தோற்றம் கிடைத்துவிடுகிறதல்லவா? அதுவும் கிறிஸ்தவர்கள் அங்கே மைனாரிடிகள். மைனாரிடிகளின் குரலுக்கு உரிய மதிப்புத் தராதவர்கள் எந்த தேசத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆனால், இஸ்ரேல் தவறு செய்தது. கிறிஸ்தவர்களின் குரலுக்கு அவர்கள் மதிப்புக் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. அந்தச் சிறப்பு வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்தது.

இது எரியும் கொள்ளியில் பேரல் பேரலாக பெட்ரோலை ஊற்றியது போலாகிவிட்டது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21 ஆகஸ்ட், 2005

தொடரும்...

மிக நல்ல தொடர். யூதர்களை பற்றி அறிய மிகவும் ஆவல் கொண்ட நான் தற்சமயம் தான் அவர்களை பற்றி சரியாக அறிய முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். எம்மையும் யூதர்களையும் ஒப்பிடுவது எந்தளவு தூரம் சரி என்று ஜோசிக்க வேண்டும். சும்மா தற்பெருமை பேசாமல் நாம் ஜோசிக்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தொடர்ந்து இணைந்திருங்கள்

  • தொடங்கியவர்

79] இண்டிஃபதாவின் எழுச்சிப் பேரணிகள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 79

நமக்குத்தெரிந்த ஊர்வலங்கள், நாம் பார்த்திருக்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், நமது தேசத்தில் நடைபெறும் மாபெரும் பேரணிகள், சீரணி அரங்கத்தில் திரளும் மக்கள்வெள்ளம் _ இவற்றைக் கொண்டு பாலஸ்தீனில் அன்று நடைபெற்ற இண்டிஃபதாவைக் கற்பனை செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில், எண்பதுகளின் பிற்பகுதியில், பாலஸ்தீனியர்களின் இந்த எழுச்சி அலையை ஒப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காமல் திண்டாடித் தெருவில் நின்றிருக்கிறது சர்வதேச மீடியா.

பத்து, நூறு, ஆயிரமல்ல. லட்சக்கணக்கில் மக்கள் திரண்டுவிடுவார்கள். நிற்க இடமில்லாமல் சாலைகள் அடைபடும். கூட்டம் ஓரங்குலம் நகர்வதற்கே மணிக்கணக்காகும். ஒட்டுமொத்த பாலஸ்தீனிய அரேபியர்களும் இஸ்ரேலுக்கு எதிராகத் திரண்டு நிற்கும்போது, எத்தனை கண்ணீர்க் குண்டுகள் வீசமுடியும்? என்னதான் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும்?

மேலும் எழுச்சிப் பேரணி என்பது காலை தொடங்கி மாலை முடிவுறும் விஷயமும் அல்ல. வருடக்கணக்கில் நடந்தது. இரவு _ பகல் பாராமல் நடந்தது. பிறவி எடுத்ததே பேரணி நடத்தத்தான் என்பது போல் திடீர் திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் மக்கள் கூடிவிடுவார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைகளை முதலில் நடக்கவிட்டு, பின்னால் பெண்கள் அணிவகுப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் ஆண்கள். நடுவில் ஊடுபாவாகப் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இருக்கவே இருக்கிறது கல் வண்டிகள். பெட்ரோல் அடைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள்.

பாலஸ்தீனியப் போராளி இயக்கங்களின் நோக்கத்துக்கு, இந்த மக்கள் எழுச்சிப் பேரணிகள் மிகப்பெரிய உதவிகள் செய்ததை மறுக்கவே முடியாது. அதே சமயம், இழப்புகளும் சாதாரணமாக இல்லை.

முதல் இண்டிஃபதா தொடங்கி பதின்மூன்று மாத காலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் முஸ்லிம்கள் இஸ்ரேலியக் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அத்தனைபேரும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள். பதிலுக்கு அரேபியர்கள் நடத்திய தாக்குதலில் (அதே ஒரு வருட காலத்தில்) 160 இஸ்ரேலியக் காவல்துறையினர் இறந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கல்லடித் தாக்குதல் உத்தியைக் காட்டுமிராண்டித்தனமாக மீடியாவில் முன்னிறுத்த, இஸ்ரேல் அரசு மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொண்டது. உலகப்போர்களையும் உள்ளூர்ப் போர்களையும் பார்த்துவிட்ட பிறகு, துப்பாக்கிச் சூடு என்பது மிகச் சாதாரணமான விஷயமாக ஆகிவிட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கல்லால் அடித்துக் கொல்வது என்பது கண்டிப்பாகக் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறது என்று நம்பி, இஸ்ரேல் அரசு இண்டிஃபதாவின் வன்முறைப் பக்கங்களை _ குறிப்பாக அரேபியர்களின் கல்லடித் தாக்குதல் காட்சிகளை கவனமாகப் படம் பிடித்து மீடியாவுக்கு அளிக்க விசேஷ கவனங்கள் எடுத்துக்கொண்டது.

ஆனால், இந்த முயற்சி பலனளிக்கவில்லை. காரணம், இண்டிஃபதா ஊர்வலங்களைக் குழந்தைகளை முன்னிறுத்தி அரேபியர்கள் நடத்தியபடியால், முதல் பலி எப்படியானாலும் சிறுவர், சிறுமியராகவே இருந்ததால், அதுதான் பூதாகரமாக வெளியே தெரிந்தது. "குழந்தைகளைத் தாக்காதீர்கள்" என்று ராணுவ உயர் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கரடியாகக் கத்திக்கொண்டிருந்தாலும், இஸ்ரேலியப் படையினருக்கு அத்தனை பெரிய கூட்டங்களைச் சமாளிக்கத் தெரியவில்லை. குழந்தைகளை விலக்கிவிட்டு எப்படிக் கூட்டத்தின் உள்ளே புகுந்து பின்னால் அணி வகுக்கும் ஆண்களைக் குறிவைப்பது என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஊர்வலத்தை தூரத்தில் பார்க்கும்போதே அவர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசத் தொடங்கிவிடுவார்கள். எப்படியும் சில நூறு குழந்தைகளாவது உடனே மயக்கமடைந்து கீழே விழும். காத்திருந்தாற்போல் போராளி அமைப்பினர் அவற்றைப் புகைப்படமெடுத்து அனுப்பிவிடுவார்கள். இஸ்ரேலியப் படையினர் ஊர்வலத்தை நெருங்கி, தாக்குதலை மெல்ல ஆரம்பித்து எல்லாம் முடிந்தபிறகு படமெடுக்கத் தொடங்குவதற்குள் அங்கே குழந்தைகள் விழுந்துகிடக்கும் படங்கள் பிரசுரமே ஆகியிருக்கும். நாடெங்கிலும் பெரிது பெரிதாக போஸ்டர் அடித்து ஒட்டிவிடுவார்கள். நம்மூர் பாணியில் சொல்லுவதென்றால் "அப்பாவிக் குழந்தைகள் அநியாய பலி! யூதர்களின் கொலைவெறியாட்டம்!!" என்கிற தலைப்புகளை நாள்தோறும் பார்க்க முடிந்தது.

பாலஸ்தீன் பற்றி எரிகிறது என்பது தெரிந்ததுமே உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தமது பிரதிநிதிகளை பாலஸ்தீனுக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலான சர்வதேச ஊடகங்களுக்கு அன்று பாலஸ்தீனில் ஒரு நிரந்தர அலுவலகமே இருந்தது.

இந்த மேலை நாட்டு ஊடகச் செய்தியாளர்களிடம் ஒரு பிரச்னை என்னவெனில், அவர்களுக்கு அரபு - யூத உறவு அல்லது உறவுச் சிக்கல் பற்றிய அடிப்படைகள் அவ்வளவாகத் தெரியாது. வரலாறு தெரியாது. ஆகவே, ஒவ்வொருவரும் தம் இஷ்டத்துக்கு ஒரு வரலாற்றை உற்பத்தி செய்து பக்கம் பக்கமாகக் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக ஐரோப்பிய தேசங்களிலிருந்து அன்றைக்கு பாலஸ்தீனுக்கு வந்த பத்திரிகையாளர்கள் அடித்த கூத்து, நகைச்சுவை கலந்த சோகம்.

ஒரு நாளைக்கு ஒரு கதை சொல்லுவார்கள். இண்டிஃபதா ஊர்வலத்தை ஒருநாள் பார்த்துவிட்டு, அரேபியர்கள் அடிபடும் காட்சி அவர்கள் கண்ணில் பட்டுவிட்டதென்றால், அன்றைக்கு அரேபியர்கள் மீது அவர்களின் அனுதாபம் பிய்த்துக்கொண்டு ஊற்றத் தொடங்கிவிடும். சரித்திர காலத்திலிருந்தே பிரச்னையை கவனித்து வருபவர்கள்போல, அரேபியர்களின் பக்கம் சார்பு எடுத்து பக்கம் பக்கமாக என்னென்னவோ எழுதித் தள்ளி அனுப்பிவிடுவார்கள். அது பிரசுரமும் ஆகிவிடும்.

அதே நிருபர்கள் மறுநாள் அல்லது அடுத்த வாரம் எழுதும் கட்டுரை சம்பந்தமே இல்லாமல் யூத ஆதரவு நிலை எடுத்துப் பல்லை இளிக்கும்.

உண்மை என்னவென்றால், பிரச்னையின் ஆணிவேர் அவர்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சரித்திர காலம் தொடங்கி நடந்துவரும் இரண்டு இனங்களின் மோதலுக்கு அடிப்படை என்னவென்று மேலை நாட்டினருக்குத் தெரியவே தெரியாது. யூதர்கள் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்கிற அனுதாபம் அனைத்து ஐரோப்பியர்களுக்கும் எப்போதும் உண்டு. ஏனென்றால், ஐரோப்பிய தேசங்கள்தான் யூதர்களைக் கஷ்டப்படுத்தியிருக்கின்றன. அது ஓரெல்லை வரை அவர்களது உள்ளூர் சரித்திரத்தின் சில அத்தியாயங்கள். ஆகவே, யூத ஆதரவு நிலை எடுக்க அந்த ஒரு காரணமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது.

ஆனால், சமகாலத்தில் பாலஸ்தீன் மக்களின் எழுச்சிப் போராட்டத்தைப் பார்க்க நேரிடுகையில், யூதர்கள் தம் குணத்தை மாற்றிக்கொண்டு கொடுங்கோலர்களாக மாறிவிட்டார்களோ என்றும் சமயத்தில் அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

உண்மையில், யாரும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. குணத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. யூதர்கள், அரபுகளின் நிலங்களை அபகரித்ததில்தான் பிரச்னை தொடங்குகிறது. நிலவங்கிகள் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இது நா¦Ç¡ரு முகம் கொண்டு பூதாகரமாகி வருகிற விஷயம். ஆதரவற்ற அரேபியர்களை அடக்கி வைப்பது அவர்களுக்குச் சுலபமாக இருந்த காரணத்தால், தயங்காமல் தர்ம, நியாயம் பார்க்காமல் பாலஸ்தீன் முழுவதையும் ஆக்கிரமித்தார்கள். அரபுகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஒருமித்த குரலில் இஸ்ரேலை எதிர்க்கமுடியவில்லை. யுத்தம் வரை வந்த சகோதர அரபு தேசங்கள் கூட, கிடைத்தவரை லாபம் என்று மேற்குக் கரையையும் காஸாவையும் ஆளுக்கொரு பக்கம் கூறு போட்டது நினைவிருக்கலாம்.

1948 - யுத்தத்தின்போதே, ஜோர்டனும் எகிப்தும் தமக்கு லாபமாகக் கிடைத்த பாலஸ்தீனிய நிலப்பரப்பை பாலஸ்தீனிய அரேபியர்களிடமே திருப்பிக்கொடுத்து, சுதந்திரப் பாலஸ்தீனை உருவாக்கி அளித்திருப்பார்களேயானால், அவர்களின் சுதந்திரத்துக்குப் பாதுகாவலர்களாக நின்றிருப்பார்களேயானால், இத்தனை தூரம் பிரச்னை வளர்ந்திருக்கமுடியாது.

மீண்டும் யுத்தம் செய்து இழந்த நிலங்களை இஸ்ரேல் கைக்கொண்டபிறகு தான் இத்தனை விவகாரங்களும் சூடுபிடித்தன.

இதெல்லாம் ஐரோப்பிய மீடியாவுக்குத் தெரியவில்லை. ஆகவே, இஷ்டத்துக்கு எழுதி, குழம்பிய குட்டையை மேலும் குழப்ப ஆரம்பித்தார்கள்.

இதில் ஆச்சர்யமான விஷயம், ஐரோப்பிய ஊடகங்களுக்குத் தெரியாத சரித்திரங்களை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க மீடியா எடுத்துச் சொன்னது என்பதுதான். இண்டிஃபதா ஊர்வலங்களில் ஏராளமான பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்பட்டதில் கொதித்துப்போன அமெரிக்கப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அந்தச் செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுத்துப் பிரசுரித்ததோடு மட்டுமல்லாமல், அமெரிக்க அரசு இஸ்ரேலைக் கண்டித்துப் பேசவும், நடவடிக்கை எடுக்கவும் கூடக் கடுமையாக வற்புறுத்தின.

நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுகளுக்கு நாம் வந்து சேரவேண்டியிருக்கிறது:

பாலஸ்தீன் போராளி இயக்கங்களே சாதிக்க முடியாத பலவற்றை இந்த மக்கள் எழுச்சி ஊர்வலங்களும் அதன் தொடர்ச்சியான கலவரங்களும் சாதித்தன. பாலஸ்தீன் பிரச்னை குறித்த சர்வதேச கவனமும் அக்கறையும் உண்டாக இந்த இண்டிஃபதாதான் ஆரம்பக் காரணமானது. பாலஸ்தீன் விஷயத்தை ஐ.நா. மிகத்தீவிரமாக கவனிக்கவும் பின்னால் பி.எல்.ஓ.வுக்கு ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்து அளிக்கவும் கூட இதுதான் மறைமுகக் காரணம்.

அக்கம்பக்கத்து அரபு தேசங்களின் தொடர்போ, ஒத்துழைப்போ இல்லாமல், பாலஸ்தீனிய அரேபியர்கள் தாங்களாகவே வழிநடத்தி, முன்னெடுத்துச் சென்ற இந்த மிகப்பெரிய எழுச்சி ஊர்வலங்கள், அரசியலைத் தாண்டி அனுதாபத்துடன் பிரச்னையைப் பார்க்க வழி செய்தன.

அதுவரை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாலஸ்தீனிய அரேபியர்களை "South Syrians" என்று சிரியாவின் குடிமக்களாக முன்னிலைப் படுத்தியே பேசிவந்த இஸ்ரேலின் குள்ளநரித்தனம் உலக மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, பாலஸ்தீனியர்களின் சுய அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியாயம் என்று பேச வழிவகுத்தது.

இந்த இண்டிஃபதாவுக்குப் பிறகு சற்றும் நம்பமுடியாதபடியாகப் பல்வேறு ஐரோப்பிய தேசங்களின் அரசுகள் பி.எல்.ஓ.வுக்கும் றி.கி என்று சுருக்கமாகச் சொல்லப்படும் "பாலஸ்தீனியன் அத்தாரிடி" என்கிற அரபுகளின் ஆட்சிமன்றக் குழுவுக்கும் வெள்ளமென நிதியுதவி செய்ய ஆரம்பித்தன. மறுபுறம் அமெரிக்க அரசு, தனது விருப்பத்துக்குரிய தோழனான இஸ்ரேலிய அரசுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளையும் மிரட்டல்களையும் முன்வைத்து வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியது. குறிப்பாக எழுச்சிப் பேரணியின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பதினாறு வயதுக்குட்பட்ட 159 அரேபியக் குழந்தைகள் மொத்தமாக இஸ்ரேலியக் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்க ஊடகங்கள் அத்தனையும் தம் அரசின் இஸ்ரேலிய ஆதரவு நிலையை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் அமெரிக்க அரசு இது தொடர்பாக இஸ்ரேலைக் கண்டித்ததுடன் மட்டுமல்லாமல், ஒரு சில உதவிகளைத் தாம் நிறுத்தவேண்டிவரும் என்று எச்சரிக்கையும் செய்தது.

இஸ்ரேல் அரசின் நிதி ஆதாரம் கணிசமாக பாதிக்கப்பட ஆரம்பித்தது. ஒரு வருட காலத்தில் சுமார் 650 மில்லியன் டாலர் ஏற்றுமதி இதனால் கெட்டது என்று பேங்க் ஆஃப் இஸ்ரேல் அறிக்கை அளித்துக் கலவரமூட்டியது. இந்தப் போராட்டங்களினால் இஸ்ரேலின் சுற்றுலா வருமானம் சுத்தமாக நின்றுபோனது.

அதுவரை அரேபியர்களின் அனைத்துப் போராட்டங்களையும் தீவிரவாதச் செயல்களாக மட்டுமே சொல்லிவந்த இஸ்ரேலிய அரசுக்கு இண்டிஃபதா எழுச்சிப் பேரணிகளை என்ன சொல்லி வருணிப்பது என்று தெரியாமல் போனது. தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் கலந்துகொள்ளும் பேரணிகளை எப்படித் தீவிரவாதச் செயலாக முன்னிலைப்படுத்த முடியும்? அதுவும் சர்வதேச மீடியா முழுவதும் அப்போது பாலஸ்தீனில் குடிகொண்டிருந்தது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இண்டிஃபதா நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலெல்லாம் யாசர் அராஃபத்தும் பி.எல்.ஓ.வின் மிகமுக்கியத் தலைவர்களும் துனிஷியாவில் அகதி அந்தஸ்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். (அதற்குமுன் கொஞ்சகாலம் லெபனானிலும் அங்கிருந்து துரத்தப்பட்டு சிரியாவிலும் தஞ்சமடைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.) பாலஸ்தீனில் இருக்கமுடியாத அரசியல் நெருக்கடி அவர்களுக்கு இருந்தது. வெளிநாட்டில் இருந்தபடிதான் பாலஸ்தீனியப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடிக்கொண்டிருந்தார்கள். இண்டிஃபதாவின் மகத்தான வெற்றிதான் அவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வழிகோலியது. அதாவது ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான ஆரம்பமே இந்த மக்கள் எழுச்சிப் பேரணிகளும் அவற்றின் விளைவுகளும்தான். ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்த பிறகுதான் பி.எல்.ஓ.வினர் பாலஸ்தீன் திரும்ப முடிந்தது.

அதென்ன ஓஸ்லோ ஒப்பந்தம்? அடுத்துப் பார்க்கவேண்டியது அதுதான்.

தொடரும்...

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 ஆகஸ்ட், 2005

கைவிடாமல் தொடர்ந்து இணைக்கும் அபராஜிதன் அண்ணாவுக்கு பாராட்டுகள். :)

  • தொடங்கியவர்

80] ஓஸ்லோ ஒப்பந்தம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 80

பி.எல்.ஓ. போன்ற மாபெரும் போராளி இயக்கங்களின் தலைவர்கள் பாலஸ்தீனிலேயே இருந்தபடி போராட்டங்களை நடத்துவது என்பது சற்றும் இயலாத காரியம். ஓர் இயக்கத்தை வழி நடத்துவது என்பது நூற்றுக்கணக்கான சிக்கல்களை உட்கொண்டது. முதலில் போராளிகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு சௌகரியமான இடம், வசதிகள், உணவு, போதிய தூக்கம், பாதுகாப்பு மிகவும் அவசியம். இவற்றைவிட முக்கியம், பணம். அப்புறம் அரசு ஆதரவு. தடையற்ற ஆயுதப் பரிமாற்றங்களுக்கான வசதிகள்.

இதன் அடுத்தக்கட்டம், அரசியல் தீர்வுகளுக்கான ஆலோசனைகளை மேற்கொள்வது, பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளைத் திறக்கப் பார்ப்பது. உண்மையிலேயே அதில் விருப்பமிருக்குமானால் தலைவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் சுபாவம் இருந்தாக வேண்டும். விமர்சனங்களுக்கு அஞ்சாத பக்குவம் வேண்டும். நீண்டநாள் நோக்கில் தேசத்துக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாவதற்காகக் கொள்கைகளில் சிறு மாறுதல்கள் செய்துகொள்ளத் தயங்கக்கூடாது. எல்லாவற்றைக் காட்டிலும் சுயநலமற்ற மனப்பான்மை நிரந்தரமாக இருக்கவேண்டும்.

இதெல்லாம் அனைவருக்கும் புரியக்கூடியவை அல்ல. புரியும் என்றாலும் முழுக்கப் புரிவது சாத்தியமில்லை.

பாலஸ்தீனில் வசிக்க முடியாத பி.எல்.ஓ.வினருக்கு லெபனானும் சிரியாவும் டுனிஷும் அரசியல் அடைக்கலமும் ஆதரவும் அளித்து, அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழி செய்துகொடுத்ததில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால், அராஃபத் யுத்தத்தைக் காட்டிலும் அரசியல் தீர்வில்தான் தமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தொடக்கம் முதல் வெளிப்படையாகத் தெரிவிக்காமலேயே இருந்துவிட்டதில்தான், கொஞ்சம் பிரச்னையாகிவிட்டது.

அரசியல் தீர்வுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்று வாய்வார்த்தையில் சொல்லுவது பெரியவிஷயமல்ல. அதை அவர் தொடக்கம் முதலே செய்துவந்திருக்கிறார் என்றபோதும், பிரதானமாக ஒரு போராளியாகவே அடையாளம் காணப்பட்டவர், இஸ்ரேலிய அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டுவந்திருக்கிறார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் விஷயமாகவே இருந்தது.

தவிரவும், முன்பே பார்த்தது போல அராஃபத்தும் சரி, அவரது அல்ஃபத்தா அமைப்பும் சரி, ஆரம்பம் முதலே சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்ட தலைவரும் இயக்கமுமாகவே அடையாளம் காணப்பட்டு வந்ததையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருபோதும் மதத்தை முன்னிறுத்தி அராஃபத் யுத்தம் மேற்கொண்டதில்லை.

அவரளவில் தெளிவாகவே இருந்திருக்கிறார் என்றபோதும், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு அராஃபத்தின் அரசியல் அவ்வளவாகப் புரியவில்லை என்பது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் தெரியவந்தது.

அராஃபத் டுனிஷில் இருந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் எது ஒன்றும் முழு விவரங்களுடன் வெளியே வரவில்லை. ஒரு பக்கம் பாலஸ்தீன் முழுவதும் இண்டிஃபதா எழுச்சிப் போராட்டங்கள் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்பதைப் பாலஸ்தீனியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தாற்காலிகத் தீர்வுகளின் வழியே நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது என்கிற சித்தாந்தத்தில், அராஃபத்துக்கு நம்பிக்கை உண்டு. அவரது மேடைப்பேச்சு வீடியோக்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. ஆக்ரோஷமாக "ஜிகாது ஜிகாது ஜிகாது" என்று கை உயர்த்திக் கோஷமிடும் அந்த அராஃபத்தைத்தான் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குத் தெரியும். அந்த உத்வேகத்துக்கு ஆட்பட்டுத்தான் அவர்கள் இண்டிஃபதாவை மாபெரும் வெற்றிபெற்ற போராட்டமாக ஆக்கினார்கள்.

அதிகம் படிப்பறிவில்லாத, தலைவன் என்ன சொன்னாலும் கட்டுப்படக்கூடிய அந்த மக்களுக்கு, அராஃபத்தின் இந்த அரசியல் தீர்வை நோக்கிய ஆரம்ப முயற்சிகள் முதலில் புரியாமல் போனதில் வியப்பில்லை. துப்பாக்கியுடன் மட்டுமே அராஃபத்தைப் பார்த்தவர்கள் அவர்கள். ஆலிவ் இலையும் துப்பாக்கியும் கைக்கொன்றாக எடுத்துக்கொண்டு ஐ.நா.வுக்குப் போன அராஃபத், அவர்களுக்கு மிகவும் புதியவர்.

அதனால்தான், இண்டிஃபதாவின் விளைவாக உருவான ஓஸ்லோ ஒப்பந்தம், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் தந்தது. அவநம்பிக்கை என்றால், அராஃபத்தின் மீதான அவநம்பிக்கை. கிட்டத்தட்ட சரிபாதி பாலஸ்தீனியர்கள் இந்த அவநம்பிக்கைக்கு ஆட்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அகண்ட பாலஸ்தீனத்தின் ஒரே பெரிய தலைவராக அவரைக் கற்பனை செய்துபார்த்துவந்த மக்களுக்கு, அவரை ஒரு முனிசிபாலிடி சேர்மனாக நினைத்துப் பார்ப்பதில் நிறைய சங்கடங்கள் இருந்தன. அதைவிட, எங்கே அராஃபத் விலைபோய்விடுவாரோ என்கிற பயம் அதிகம் இருந்தது. அவரும் இல்லாவிட்டால் தங்களுக்கு விடிவு ஏது என்கிற கவலை. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகம் முழுவதிலும் வசித்துவந்த முஸ்லிம் சமூகத்தினருக்கும் அடிமனத்தில் இந்த பயம் இருக்கத்தான் செய்தது.

இந்த விவரங்களின் பின்னணியில், நாம் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குள் நுழைவது சரியாக இருக்கும்.

இன்றைக்கு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமரசம் பேசி ஏதாவது நல்லது செய்துவைக்க முடியுமா என்று பார்க்கிற நார்வே, அன்றைக்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையில்கூட இப்படியானதொரு அமைதி முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இன்றைக்குப் போல, அன்று நடந்த இந்த முயற்சிகள், வெளிப்படையான முயற்சிகளாக இல்லை. மாறாக, டுனிஷியாவில் இருந்த யாசர் அராஃபத்துக்கும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் யாவும் பரம ரகசியமாகவே நடைபெற்றன. இதற்கு நார்வே மட்டும் காரணமல்ல. ஓரெல்லை வரை அமெரிக்காவும் காரணம்.

1989-90_களிலிருந்தே பி.எல்.ஓ.வும் இஸ்ரேலிய அரசும் ரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஓரளவு அமைதிக்கான சாத்தியம் இருக்கிறது என்பது தெரியவந்தபோது, ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான பணிகளில் இறங்க ஆரம்பித்தார்கள். ஓஸ்லோ என்பது நார்வேவின் தலைநகரம். அங்கே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் அந்தப் பெயர் வந்துவிட்டது. அவ்வளவுதான்.

முதலில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அராஃபத் நார்வேக்குப் போகவில்லை. அவர் அப்போது அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடனும் ஐ.நா.வின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். நிரந்தரத் தீர்வு என்பது உடனடியாகச் சாத்தியமில்லாத காரணத்தால், சில தாற்காலிகத் தீர்வுகளை இருதரப்புக்கும் பொதுவாக அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் முன்வைத்தார்.

ஒரு பக்கம் யாசர் அராஃபத் அங்கே பேசிக்கொண்டிருந்த அதே சமயம், அங்கே பேசப்பட்ட தீர்வுகள், ஓர் ஒப்பந்தமாக எழுதப்பட்டு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் கையெழுத்தானது. பி.எல்.ஓ.வின் சார்பில் அகமது குரானி என்பவரும், இஸ்ரேல் அரசின் சார்பில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமோன் பெரஸும் கையெழுத்திட்டார்கள்.

கவனிக்கவும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம், ரகசியமாகவே செய்யப்பட்டது. உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று இது நடந்தது.

ஒப்பந்தம் என்று செய்யப்பட்டதே தவிர, பாலஸ்தீனியர்கள் இதனை எப்படி ஏற்பார்கள் என்கிற சந்தேகம் அராஃபத்துக்கும் இருந்திருக்கிறது. அதனால்தான், பகிரங்கமாக ஒப்பந்தத்தை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், இதெல்லாம் மூடிவைக்கிற விஷயமல்ல என்கிற காரணத்தினால் சரியாக எட்டே தினங்களில் (ஆகஸ்ட் 27) வெளிவந்துவிட்டது. பத்திரிகைகள் எப்படியோ மோப்பம் பிடித்து செய்தி வெளியிட்டுவிட்டன.

முதலில் அராஃபத்தும் இஸ்ரேலிய அதிகாரிகளும் யோசித்தார்கள். அப்படியொரு ஒப்பந்தம் நடக்கவே இல்லை என்று சொல்லிவிடுவதா? அல்லது, ஆமாம் நடந்தது என்று உண்மையை ஒப்புக்கொள்வதா?

இதுதான் குழப்பம். ஆனால் நார்வே அரசு, இதற்கு மேல் மூடி மறைக்க வேண்டாம் என்று சொல்லி, ஒப்பந்தம் கையெழுத்தானது உண்மைதான் என்று பகிரங்கமாக அறிவித்தது.

பாலஸ்தீனியர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகமே வியப்புடன் பார்த்த சம்பவம் இது. ஆண்டாண்டு காலமாகப் பாலஸ்தீனியர்களின் விடுதலைக்காகத்தான் யாசர் அராஃபத் போராடுகிறார். அவர்களுக்காகத்தான் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓர் ஒப்பந்தம் வரை போயிருக்கிறார். அப்படி இருக்கையில், அதை ஏன் ரகசியமாகச் செய்யவேண்டும்? மக்கள் மத்தியிலேயே செய்திருக்கலாமே?

என்றால், காரணம் இல்லாமல் இல்லை. நிதானமாகப் பார்க்கலாம். விஷயம் வெளியே தெரிந்துவிட்டதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ளவேண்டியதானது என்று பார்த்தோமல்லவா?

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தை, முறைப்படி பகிரங்கமாக மீண்டும் ஒரு முறை செய்தால்தான் சரியாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் சொன்னார்.

ஆகவே, கையெழுத்தாகிவிட்ட ஒப்பந்தம் மீண்டும் ஒரு முறை வாஷிங்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பகிரங்கமாக, மீடியாவின் விளக்குகளுக்கு எதிரே மீண்டும் கையெழுத்தானது. இம்முறை இஸ்ரேல் பிரதமர் இட்ஸாக் ராபினும் யாசர் அராஃபத்துமே பில் க்ளிண்டன் முன்னிலையில் கையெழுத்துப் போட்டார்கள்.

இப்படியொரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக யூதர்கள், ராபினைப் புழுதிவாரித் தூற்றி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அரேபியர்கள், யாசர் அராஃபத்தை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

யாருக்குமே சந்தோஷம் தராத அந்த ஒப்பந்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாம்:

Declaration of Principles என்று தலைப்பிடப்பட்டு ஒரு கொள்கைப் பிரகடனமாக வெளியிடப்பட்ட இந்த ஒப்பந்தம், மொத்தம் பதினேழு பிரிவுகளையும் நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டது.

"பாலஸ்தீன் மக்கள் தமது ஒரே தலைவராக யாசர் அராஃபத்தைத்தான் கருதுகிறார்கள். ஆகவே, அவருடன் செய்துகொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களுடனும் செய்துகொள்ளும் ஒப்பந்தமாகக் கருதப்படும்" என்கிற அறிவிப்புடன் ஆரம்பமாகும் இந்த ஒப்பந்தத்தின் சாரமென்னவென்றால், பி.எல்.ஓ.வுக்கு இஸ்ரேலிய அரசு சில இடங்களில் தன்னாட்சி செய்யும் உரிமையை வழங்கும் என்பதுதான்.

தன்னாட்சி என்கிற பதம், சற்றே கிளுகிளுப்பு தரலாம். உண்மையில் ஒரு நகராட்சி அல்லது மாநகராட்சியை நிர்வகிப்பது போன்ற அதிகாரத்தைத்தான் இஸ்ரேல் அதில் அளித்திருந்தது. காஸா மற்றும் மேற்குக் கரையிலுள்ள ஜெரிக்கோ நகரங்களை ஆட்சி செய்யும் அதிகாரம் அரேபியர்களிடம் அளிக்கப்படும். "பாலஸ்தீனியன் அத்தாரிடி" என்கிற ஆட்சிமன்ற அமைப்பின் மூலம் அவர்கள் அந்தப் பகுதிகளை நிர்வகிக்க வேண்டும். யாசர் அராஃபத் முதலில் பாலஸ்தீனுக்கு ஒரு முறை "வந்துபோக" அனுமதிக்கப்படுவார். பிறகு அவர் அங்கே குடிபெயரவும் ஏற்பாடு செய்யப்படும். பி.எல்.ஓ.வின் ஜோர்டன் கிளையில் உறுப்பினர்களாக இருக்கும் சில நூறு போராளிகள் மேற்குக் கரைப் பகுதி நகரமான ஜெரிக்கோவுக்கு வந்து நகரக் காவல் பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். (அதாவது உள்ளூர் போலீஸ்.) பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தபால் துறை ஆகிய துறைகள் பாலஸ்தீனியன் அதாரிடியால் நிர்வகிக்கப்படும். இஸ்ரேலிய ராணுவம் அந்தப் பகுதிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படும். ஆனால், உடனடியாக அது நடக்காது. "தன்னாட்சி அதிகாரம் பெற்ற இடங்கள்" என்று சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலங்களையும் நீர் ஆதாரங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இஸ்ரேல் அரசிடம்தான் இருக்கும். ஒட்டுமொத்த பாதுகாப்புப் பொறுப்பு மற்றும் வெளி விவகாரத் துறைப் பொறுப்பு ஆகியவையும் இஸ்ரேலைச் சேர்ந்ததே.

சுற்றி வளைக்க அவசியமே இல்லை. இரண்டு நகரங்களை ஒரு நகராட்சித் தலைவர்போல யாசர் அராஃபத் ஆளலாம். அவ்வளவுதான். இதற்குத்தான் நார்வே நாட்டாமை. அமெரிக்க ஆதரவு. ரகசியப் பேச்சுக்கள் எல்லாம்.

அதுசரி. பதிலுக்கு பி.எல்.ஓ. அவர்களுக்குச் செய்யப்போவது என்ன?

தொடரும்..

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 ஆகஸ்ட், 2005

கைவிடாமல் தொடர்ந்து இணைக்கும் அபராஜிதன் அண்ணாவுக்கு பாராட்டுகள். :)

ஆக குறைந்தது ஒருவர் ஆவது இத்தொடர் முழுவதையும் படித்தார் என்றாலே எனக்கு போதுமானது

ரதி அக்கா புங்கையூரான் அண்ணா மற்றும் ராஜவன்னியன் அண்ணா போன்றோர் படித்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்புறன் :wub:

  • தொடங்கியவர்

81] பாலஸ்தீனியன் அத்தாரிடி யாசர் அராஃபத்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 81

ஓஸ்லோ ஒப்பந்தப்படி காஸாவையும் ஜெரிக்கோவையும் முதலில் ஓர் ஐந்தாண்டு காலத்துக்கு நிர்வகிக்கும் பொறுப்பு, அரேபியர்களுக்குக் கிடைக்கும். தன்னாட்சி அதிகாரம் என்கிற பெயரில் அது வருணிக்கப்பட்டாலும், இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நிலப்பரப்பின் குறுநில ஆட்சியாளர்களாக அரேபியர்கள் இருக்கலாம், இயங்கலாம். பதிலுக்கு யாசர் அராஃபத் என்ன செய்யவேண்டும்?

இதில்தான் யூதர்களின் குயுக்தி வெளிப்பட்டது. பி.எல்.ஓ.வை அரேபியர்களின் ஒரே அரசியல் முகமாகத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அதன்படி யாசர் அராஃபத்தை பாலஸ்தீனிய அரேபியர்களின் ஒரே தலைவராகத் தாங்கள் அங்கீகரிப்பதாகவும், ஓஸ்லோ ஒப்பந்தத்தையொட்டி அமெரிக்காவில் வைத்து அராஃபத்திடம் சொன்னார், இஸ்ரேலியப் பிரதமர் இட்ஸாக் ராபின். இதன் மறைமுக அர்த்தம் என்னவென்றால் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட அத்தனை மதவாத இயக்கங்களையும் இஸ்ரேலிய அரசு முற்றிலுமாக ஒழித்துக்கட்ட விரும்புகிறது என்பதும், அதற்கு பி.எல்.ஓ. உதவி செய்யவேண்டும் என்பதுமாகும்.

ஏற்கெனவே ஹமாஸை வைத்து பி.எல்.ஓ.வை ஒழிக்க முயற்சி செய்து, அந்த முயற்சியில் தோற்றவர்கள் இஸ்ரேலியர்கள். இப்போது பி.எல்.ஓ.வை ஓர் அரசியல் இயக்கமாக அங்கீகரித்து அவர்களைக் கொண்டு ஹமாஸ் உள்ளிட்ட மதவாத இயக்கங்களை ஒழிக்க விரும்பினார், இஸ்ரேலியப் பிரதமர். அதற்காகத்தான் யூதர்களே யாரும் எதிர்பாராத வகையில் காஸா மற்றும் ஜெரிக்கோ ஆட்சி அதிகாரத்தை யாசர் அராஃபத்துக்கு விட்டுக்கொடுக்க முன்வந்தார்.

இதற்கு எப்படி அராஃபத் ஒப்புக்கொள்ளலாம் என்பதுதான் பாலஸ்தீனிய அரேபியர்களின் கேள்வி. இதனை முன்வைத்துத்தான் அராஃபத் இஸ்ரேலிய அமெரிக்க சூழ்ச்சியில் விழுந்து, விலை போய்விட்டார் என்று பேச ஆரம்பித்தார்கள்.

உண்மையில் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு அராஃபத் ஒப்புக்கொண்டதற்கு வேறு சில நுணுக்கமான காரணங்கள் உண்டு.

தன்னாட்சி அதிகாரம் ஓரிடத்துக்கு வழங்கப்படுகிறதென்றால், அந்த இடத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கென்று தனியே நிதி ஒதுக்கியாகவேண்டும். இஸ்ரேல் அரசுதான் அதைச் செய்துதரவேண்டும். அதுதவிர, ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தவுடன் தமக்கு உதவக்கூடிய அயல்தேசங்களிடம் கேட்டும் நிதியுதவி பெற்று அடிப்படை வசதிகளைக் கணிசமாக மேம்படுத்தலாம். காஸா, ஜெரிக்கோ பகுதிகளில் பாலஸ்தீனியன் அத்தாரிடி ஆட்சியமைக்கும் பட்சத்தில், மிகக்குறுகிய காலத்தில் அந்தப் பகுதிகளை சிறப்பாக மேம்படுத்தி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழிசெய்யும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் உடனடியாக கவனம் பெற முடியும். அதை வைத்தே பாலஸ்தீன் விடுதலையை துரிதப்படுத்தலாம்.

இதுதான் அராஃபத்தின் திட்டம். இதையெல்லாம் இஸ்ரேலும் யோசிக்காமல் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு அராஃபத்தின் வாயிலிருந்து ஒரு சொல் வரவேண்டியிருந்தது. 'இஸ்ரேலை அங்கீகரிக்கிறோம்' என்று பி.எல்.ஓ.வின் சார்பில் அவர் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் அது மிகப்பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகிவிடும். எந்த அரபு தேசமும் அதுகாறும் இஸ்ரேலை அங்கீகரிக்காமல் இருந்த நிலையில், பாலஸ்தீன் விடுதலை இயக்கத் தலைவரே அதை முன்மொழிய வேண்டுமென்பதுதான் இஸ்ரேலின் விருப்பம்.

அதற்கெல்லாம் அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மேற்சொன்ன காஸா மற்றும் ஜெரிக்கோ பகுதிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் என்று ஒரு சிறு ரொட்டித்துண்டை வீசியது இஸ்ரேல்.

அராஃபத் இந்த வலையில் விழுந்தார்.

காஸா பகுதி நிர்வாகத்தை பாலஸ்தீனியன் அத்தாரிடியிடம் ஒப்படைப்பதை ஒட்டி 2.7 பில்லியன் டாலர் பணத்தை இஸ்ரேல் தரவிருக்கிறது என்று எழுதியது ஒரு பிரபல அரபு தினசரிப் பத்திரிகை. அதிகாரபூர்வமாக இந்த எண்ணிக்கை குறித்து, இரு தரப்பு முக்கியஸ்தர்களும் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றபோதும், தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்ட இந்தத் தொகை பற்றிய மறுப்பு ஏதும் வெளிவரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதுதவிர மேற்குக் கரை நகரமான ஜெரிக்கோவுக்காகத் தனியே 800 மில்லியன் டாலர் தொகையையும் ஒதுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் செய்தி வெளியானது.

2.7 பில்லியன், 800 மில்லியன் என்பதெல்லாம் மிகப்பெரிய தொகை. அரேபியர்களுக்காக இந்தத் தொகையை இஸ்ரேல் ஒதுக்குகிறது என்பது நம்பவே முடியாத உண்மை. இத்தனை பெரிய தொகை ஒதுக்கப்படுகிறதென்றால், அவர்கள் தரப்புக்கு ஏதோ பெரிதாக லாபம் இல்லாமலா செய்வார்கள்?

இந்தச் சந்தேகம்தான் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கும் போராளி இயக்கங்களுக்கும் மேலோங்கி இருந்தன. அராஃபத் எப்படி இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியலாம்? கேவலம் இரண்டு நகரங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காகவா இத்தனை ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறோம்? என்றால், அரேபியர்களின் அகண்ட பாலஸ்தீன் கனவு அவ்வளவுதானா?

கோபம். கடும் கோபம். குமுறிக் குமுறித் தணிந்துகொண்டிருந்தார்கள். அராஃபத்தை அவர்களால் முற்றிலும் நிராகரிக்கவும் முடியவில்லை. அவரது இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. அராஃபத், இஸ்ரேலிய அரசிடம் பணம் வாங்கிக்கொண்டு அரேபியர்களை ஏமாற்றிவிட்டார் என்று கூடச் சில தரப்பினர் மிகக் காட்டமாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் இது அடிப்படையில்லாத சந்தேகம். அராஃபத்தின் நோக்கம், இந்தத் தாற்காலிக ஏற்பாட்டினாலாவது பாலஸ்தீன் மக்களின் துயர் துடைக்கக் கொஞ்சம் நிதி கிடைக்குமே என்பதுதான். இஸ்ரேல் ஒதுக்கும் நிதி மட்டுமல்ல. எல்லாம் நல்லபடியாக நடந்து, காஸா, ஜெரிக்கோ பகுதியின் நிர்வாகம் பாலஸ்தீன் அத்தாரிடி வசம் வந்துவிடுகிற பட்சத்தில், ஒப்பந்தத்தில் கூறியிருந்தபடி இஸ்ரேல் என்கிற தேசத்தை யாசர் அராஃபத் அங்கீகரிக்கும் பட்சத்தில், பல்வேறு அரபு தேசங்களும் அமெரிக்காவும் ஸ்காண்டிநேவியா அரசுகள் சிலவும் பாலஸ்தீனுக்கு நிறையக் கடனுதவி செய்வதற்கான சாத்தியங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்தன.

கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படை வாழ்க்கைத் தரம் என்று அனைத்து அம்சங்களிலும் மிகவும் பின்தங்கியிருந்த பாலஸ்தீன அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி உண்டாக்க, இது ஒரு சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்று அராஃபத் நினைத்தார். அதனால்தான் இறங்கிவந்து இஸ்ரேலுடன் கைகுலுக்கவும் இஸ்ரேலை அங்கீகரிக்கவும் கூடத் தயாரென்று அறிவித்தார்.

ஒரு போராளி இப்படிச் செய்வதைச் சகிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியல்வாதி செய்வதாக யோசித்துப் பார்த்தால் அராஃபத் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கும். அவர் தன்னை முதன்மையாக ஒரு போராளியாக முன்னிறுத்திவந்ததுதான் இங்கே பிரச்னையாகிவிட்டது. போயும் போயும் இஸ்ரேலுடன் எப்படி அராஃபத் கைகுலுக்கலாம் என்கிற கோபம்தான், அவரை ஓர் ஊழல்வாதியாகப் பேசவும், எழுதவும் வைக்கும் அளவுக்கு அரேபியர்களைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டுபோனது.

உண்மையில் அராஃபத் ஊழல் செய்தார் என்பதற்கு இன்றுவரை யாராலும் வலுவான ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை. சில சந்தேகங்கள் இருந்தன. யூகங்கள் இருந்தன. முணுமுணுப்புகள் இருந்தன. ஏராளமான கருத்து வேறுபாடுகளும் மனக்கசப்புகளும் கூட இருந்தன. பாலஸ்தீனியன் அத்தாரிடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அராஃபத் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரு நகரங்களின் ஆட்சிப் பணிகளை மேற்கொண்டபோது, அனைத்துப் பணத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டார், கணக்கு வழக்கு விவகாரங்களில் வெளிப்படையான அணுகுமுறை இல்லை என்றெல்லாம் குறை சொன்னார்கள். அவர் ஒரு சர்வாதிகாரிபோல் நடந்துகொள்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் யாராலும் எதையும் ஆணித்தரமாக நிரூபிக்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் இவற்றால் மட்டுமே அராஃபத் செய்தது முழு நியாயம் என்றும் ஆகிவிடாது. பல லட்சக்கணக்கான பாலஸ்தீனிய அரேபியர்கள் 1948 யுத்தத்தைத் தொடர்ந்து, அகதிகளாக சிரியாவுக்கும் ஜோர்டனுக்கும் எகிப்துக்கும் இன்னபிற தேசங்களுக்கும் போய் வசிக்க வேண்டிவந்தது நினைவிருக்கும். அவர்களுக்கெல்லாம் இருந்த ஒரே நம்பிக்கை, என்றைக்காவது இழந்த தாயகம் மீண்டும் கிடைக்கும்; அப்போது இழந்த வாழ்க்கையைத் திரும்பப் பெறலாம் என்பதுதான்.

ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி அராஃபத் நடந்துகொள்ளத் தொடங்கியதன் விளைவு என்னவெனில், அவர்களின் கனவு தகர்ந்துபோனது. இஸ்ரேல்தான் அதிகாரமுள்ள தேசம். பாலஸ்தீன் அத்தாரிடி என்பது, இஸ்ரேலின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட ஓர் உள்ளாட்சி அமைப்பு. தனியாட்சி அதிகாரம் என்று சொல்லப்பட்டாலும், எந்தக் கணத்திலும் இஸ்ரேல் அதை ரத்து செய்யும் தகுதியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மேலும் பாலஸ்தீனியர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான பி.எல்.ஓ., இஸ்ரேலின் இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டு செயல்பட ஆரம்பித்துவிட்டதும், பாலஸ்தீனியர்களின் சுதந்திர தாகத்தைத் தணிக்கக்கூடிய இயக்கம் என்று வேறு எதுவுமே இல்லாமல் ஆகிவிட்டது. ஹமாஸைத் தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்திவிட்டார்கள். அவர்கள் குண்டுவைக்கலாமே தவிர, இஸ்ரேலுக்கு எதிராக ஒரு முழு யுத்தம் நடத்த முடியுமா என்பது சந்தேகமே. அப்படியே நடத்தினாலும் எந்த தேசமும் உதவிக்கு வராது. ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு யார் உதவி செய்ய வருவார்கள்?

ஆக, நோக்கம் எத்தனை உயர்வானதாகவே இருந்தாலும், அராஃபத் இஸ்ரேலின் வலையில் விழுந்தது உண்மை என்றாகிவிட்டது. இஸ்ரேலை அவர் அங்கீகரிக்கவும் செய்துவிட்டார். இதற்குமேல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இண்டிஃபதாவைத் தொடருவது?

இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். இண்டிஃபதா உக்கிரமாக நடைபெற்று வந்த காலத்தில் மொத்தம் சுமார் பதினான்காயிரம் அரேபியர்களை இஸ்ரேலியக் காவல்துறை சிறைப்பிடித்து அடைத்து வைத்திருந்தது. ஓஸ்லோ ஒப்பந்தப்படி அரேபியர்களின் தன்னாட்சி உரிமையை அவர்கள் அங்கீகரிப்பது உண்மையென்றால், நல்லுறவின் அடையாளமாக முதலில் அவர்களை விடுவிப்பது குறித்தல்லவா பேசியிருக்கவேண்டும்?

ஆனால் அந்தப் பதினான்காயிரம் பேரின் கதி என்னவென்று கடைசிவரை சொல்லவே இல்லை. அராஃபத்தும் அது குறித்துக் கேள்வி எழுப்பவில்லை என்பது மிகவும் உறுத்தலாகவே இருந்துவந்தது.

செப்டம்பர் 9, 1993 அன்று அராஃபத் ஒரு பத்திரிகைச் செய்தி வெளியிட்டார். இஸ்ரேலை அங்கீகரித்து வெளியிடப்பட்ட முதல் அறிக்கை அது. ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களும் மனத்துக்குள் குமுறிக் குமுறித் தணிந்தார்கள். இதனைத் தொடர்ந்துதான் செப்டம்பர் 13-ம் தேதி வாஷிங்டன் நகரில் பில் க்ளிண்டன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. காஸாவையும் மேற்குக்கரையின் சில பகுதிகளையும் பாலஸ்தீனியன் அத்தாரிடியிடம் ஒப்படைப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் அறிவித்தார். உடனடியாக பாலஸ்தீனியன் அத்தாரிடியின் தலைவராக யாசர் அராஃபத் பி.எல்.ஓ.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரமல்லாவில் இருந்தபடி அவர் ஆட்சி புரிவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒரு சில பாலஸ்தீனியன் அத்தாரிடி முக்கியஸ்தர்கள், இந்த அமைதி உடன்படிக்கை, நீண்டநாள் நோக்கில் பலன் தரத்தக்கது என்று பக்கம் பக்கமாகப் பேசியும் எழுதியும் வந்தபோதும், பெரும்பாலான பி.எல்.ஓ.வின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கே இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்தது. ஒப்பந்தம் முடிவானவுடனேயே பி.எல்.ஓ.வின் செயற்குழு உறுப்பினர்களான மஹ்மூத் தார்விஷ் என்பவரும் ஷாஃபிக் அல் ஹெளட் என்பவரும் தமது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வேறு சில முக்கிய பி.எல்.ஓ. தலைவர்களும் விரைவில் ராஜினாமா செய்யவிருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ராஜினாமா செய்த மஹ்மூத், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 'அராஃபத் மிகவும் தன்னிச்சையாக நடந்துகொள்கிறார். பாலஸ்தீனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர் கையாளும் விதம் அச்சமூட்டும்விதத்தில் இருக்கிறது. யாராலுமே கணக்குக் கேட்கவும் முடியவில்லை, எதுவும் வெளிப்படையாகவும் இல்லை' என்று சொன்னார்.

ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த மறுகணமே நிதி விவகாரங்களில் குற்றச்சாட்டு எழுந்ததில் அராஃபத் மிகவும் மனம் உடைந்துபோனார். பெரும்பாலான பாலஸ்தீனியர்களுக்கு இந்த ஏற்பாடே பிடிக்கவில்லை என்பதிலும் அவருக்கு வருத்தம்தான். அமைதியின் தொடக்கமாக ஓஸ்லோ ஒப்பந்தத்தை அவர் கருதினார். அதன் வழியே எப்படியாவது 1967 யுத்தத்துக்கு முன்னர், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கென்று இருந்த நிலப்பரப்பை முழுவதுமாக மீட்டு, ஒரு சுதந்திர பாலஸ்தீனை நிறுவுவதே அவரது கனவாக இருந்தது.

அதையெல்லாம் யாரும் பொருட்படுத்தத் தயாராக இல்லை. உள்நாட்டில் அராஃபத்தின் செல்வாக்கு கணிசமாகச் சரியத் தொடங்கிய அதே சமயம், அமைதிக்கான நோபல் பரிசை அவர் ஷிமோன் பெரஸ் மற்றும் இட்ஸாக் ராபினுடன் பகிர்ந்துகொள்வார் என்று ஸ்வீடிஷ் அகடமி அறிவித்தது.

இது நடந்தது 1994-ம் ஆண்டு. பாலஸ்தீனியர்கள் இன்னும் கோபம் கொண்டார்கள். நிலைமை மேலும் மோசமாகத்தான் ஆரம்பித்தது.

தொடரும்..

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 1 செப்டம்பர், 2005

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு இடத்திற்குக் கொண்டு வந்துள்ளீர்கள்!

எல்லா விதமான, உரிமைப் போராட்டங்களும், முடிவடைந்த இடம், இந்த 'ஒஸ்லோ' தான்!

என்னைக் கேட்டால், அரபாத், விட்ட மாபெரும் தவறு, 'பாலஸ்தீனம்' என்ற பெண்ணை விவாகரத்துப் பண்ணி விட்டு, ஒரு பிரெஞ்சுப் பெண்ணைக் கைப் பிடித்ததே!

இவரது, இரகசியங்களும், பலவீனங்களும், வெளிப் படுத்தப் பட்டதும், இந்தப் பெண்ணால் தான் என்று கூறப் படுகின்றது!

தொடருங்கள், அபராஜிதன்!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

82] அன்றைக்கு யாசர் விதைத்ததுதான்..

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 82

இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சு. மற்ற எந்த அரபு தேசமும் செய்ய முன்வராதவகையில் இஸ்ரேலை அங்கீகரிப்பது. அமெரிக்காவில் போய் உட்கார்ந்துகொண்டு இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ஒப்பந்தத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்தது. நார்வேயில் அமைதி ஒப்பந்தம். மீண்டும் அமெரிக்காவில் அதை உறுதிப்படுத்துவது. இதெல்லாம் நடந்து முடிந்தவுடனேயே அமைதிக்கான நோபல் பரிசு. அதையும் இஸ்ரேலியர்கள் இரண்டு பேருடன் பகிர்ந்துகொண்டது.

என்ன இதெல்லாம்? செய்வது யார்? யாசர் அராஃபத்தா? பாலஸ்தீனிய அரேபியர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் என்று வருணிக்கப்பட்டவரா? எப்படி அவரால் இப்படியொரு அரசியல் முகம் கொள்ள முடிந்தது? எதனால் அவர் இப்படி மாறிப்போனார்? இஸ்ரேல் கிடக்கட்டும், அமெரிக்காவுடன் எப்படி அவரால் தோழமை கொள்ள முடிந்தது? ஏன் இதனைச் செய்தார்? ஒரு ஜிகாத் போராளி செய்யக்கூடியவையா இதெல்லாம்?

இதுதான் பாலஸ்தீனியர்களுக்குப் புரியவில்லை. இதன் காரணமாகத்தான் அராஃபத்தை அவர்கள் கடுமையாக எதிர்க்கவும், கண்டபடி பேசவும் ஆரம்பித்தார்கள். அரஃபாத்தின் இந்த நடவடிக்கைகளை சறுக்கல் என்று வருணித்தார்கள். 'ஒரு பரிசுத்தமான போராளி, விலைபோய்விட்டார்' என்று பேசவும் ஏசவும் தொடங்கினார்கள்.

ஆனால், சற்றே கண்ணைத் திறந்து, நடந்த அனைத்தையும் நடுநிலைமையுடன் பார்க்க முடியுமானால் அராஃபத் சறுக்கவில்லை என்பது புரியும். செய்த ஒரு தவறுக்குப் பிராயச்சித்தமாகத்தான் அவர் இவற்றையெல்லாம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பது புரியவரும். இதைக்கூடத் தனக்காக அல்லாமல் பாலஸ்தீனிய அரேபியர்களுக்காகத்தான் அவர் செய்தார் என்பதும் கவனத்தில் ஏறும்.

1991-ம் ஆண்டு மத்தியக் கிழக்கில் ஒரு புயல் வீசியது. புயலின் பெயர் சதாம் உசேன். ஈராக்கின் அதிபர். சதாம் உசேனுக்கு ஏறக்குறைய ஹிட்லரின் மனோபாவம் அப்படியே இருந்தது அப்போது. குறிப்பாக, நாடு பிடிக்கிற விஷயத்தில். ஈராக்குக்கு அண்டை நாடான குவைத்தின் எண்ணெய்ச் செழுமை, அதனால் உண்டான பணச்செழுமை ஆகியவற்றால் கவரப்பட்ட சதாம், எப்படியாவது குவைத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று தாம் பதவிக்கு வந்த நாளாக நினைத்துக்கொண்டிருந்தார். 1991-ம் ஆண்டு அது நடந்தது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதற்கு குவைத்தின் சில கொள்கை முடிவுகள்தான் காரணம் என்று சதாம் குற்றம் சாட்டினார்.

ஒரே நாள். ஒரே இரவு. ஈராக் படைகள் குவைத்துக்குள் புகுந்தன. வீசிய புயலில் குவைத் கடலுக்குள் மூழ்காதது வியப்பு. குவைத்தின் அமீராக இருந்தவர் உயிர் பிழைக்க சவுதி அரேபியாவுக்கு ஓடிப்போனார். ஆதரவற்று இருந்த குவைத்தை அப்படியே எடுத்து விழுங்கி, 'இனி இந்தத் தேசம் ஈராக்கின் பத்தொன்பதாவது மாநிலமாக இருக்கும்' என்று அறிவித்தார் சதாம் உசேன்.

நவீன காலத்தில் இப்படியொரு ஆக்கிரமிப்பை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஒட்டுமொத்த மத்தியக்கிழக்கும் அச்சத்தில் ஆழ்ந்தது. சதாம் அச்சம். எங்கே தம்மீதும் பாயப்போகிறாரோ என்கிற கவலை. மத்தியக் கிழக்கை ஒரு ஐரோப்பாவாகவும், தன்னையொரு ஹிட்லராகவும் கருதிக்கொண்டு இன்னொரு உலக யுத்தத்துக்கு வழி செய்துவிடுவாரோ என்கிற பயம்.

இந்தச் சம்பவத்தை மற்ற அரபு தேசங்களைக் காட்டிலும் அமெரிக்கா மிகத் துல்லியமாக கவனித்து ஆராய்ந்தது. எப்படியாவது மத்தியக்கிழக்கில் தனது கால்களை பலமாக ஊன்றிக்கொண்டு, எண்ணெய்ப் பணத்தில் தானும் கொழிக்க முடியுமா என்று சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தது அது. மேலும் பரம்பரையாக எண்ணெய் எடுக்கும் தொழிலில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஜார்ஜ் வாக்கர் புஷ்தான் அப்போது அமெரிக்காவின் அதிபராக ஆகியிருந்தார்.

ஆகவே, அத்துமீறி குவைத்தை ஆக்கிரமித்த ஈராக் மீது உடனடியாக போர் அறிவித்தது அமெரிக்கா. குவைத் அப்போது, இப்போது, எப்போதும் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் அமெரிக்கா போர் அறிவிக்க, இன்னொரு பக்கம் ஐக்கிய நாடுகள் சபையும் ஈராக்கின் இந்த அத்துமீறலைக் கடுமையாக எதிர்த்ததுடன் அல்லாமல் ஈராக்குக்கான சர்வதேச உதவிகளுக்கும் தடை போட ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தது. அநேகமாக உலகம் முழுவதுமே சதாமுக்கு எதிராகத் திரண்டு நின்ற நேரம் அது.

அப்படியென்றால் உலகம் முழுவதுமே அமெரிக்க ஆதரவு நிலை எடுத்ததா என்றால் இல்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் குவைத்தை விழுங்கிய ஈராக் மீது ஒரு சர்வதேச வெறுப்பு ஏற்பட்டிருந்தது என்பது உண்மை. அந்த வெறுப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும், குவைத்துக்கு மறுவாழ்வு அளிப்பதன்மூலம் மத்தியக்கிழக்கில் தன்னுடைய வேர்களைப் படரவிடவும் அமெரிக்கா திட்டம் தீட்டியது.

இப்படியொரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில், சம்பந்தமே இல்லாத பாலஸ்தீனிய விடுதலை இயக்கமும் அதன் தலைவரான யாசர் அராஃபத்தும் சதாம் உசேனுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். யாசர் அராஃபத், சதாம் உசேனைச் சந்தித்த புகைப்படம் வெளியாகி சர்வதேச மீடியாவைக் கலக்கியது. இது, பி.எல்.ஓ.மீது உலக நாடுகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அனுதாபத்தையும் சுத்தமாக வழித்துத் துடைத்துக் கழுவிக் கவிழ்த்துவிட்டது.

உலகத்தின் பார்வையில் அன்றைய தேதியில் பி.எல்.ஓ.ஒரு போராளி இயக்கம்தான். அரசியல் முகமும் கொண்டதொரு போராளி இயக்கம். ஆனால் சதாம் உசேன் என்பவர் ஒரு சாத்தானாக மட்டுமே அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருந்த நேரம் அது. இன்றைக்கு அத்துமீறி குவைத்தில் நுழைந்தவர், நாளை எந்த தேசத்தை வேண்டுமானாலும் அப்படி ஆக்கிரமிக்கக்கூடும் என்கிற சந்தேகத்தில் எப்படியாவது சதாமின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்று அத்தனை பேருமே நினைத்தார்கள். தம்மால் முடியாத ஒரு காரியத்தை அமெரிக்கா செய்ய முன்வருகிறதென்றால், அதற்கு உதவி செய்யமுடியாவிட்டாலும் ஒதுங்கி நின்று வழிவிடுவதே சிறந்தது என்று அனைத்துத் தலைவர்களும் நினைத்தார்கள்.

இதன்மூலம் அமெரிக்கா எப்படியும் சிலபல லாபங்களைப் பார்க்காமல் விடாது; இன்றைக்கு ஈராக்கிடமிருந்து காப்பாற்றி அளிக்கும் குவைத்தை நாளை அமெரிக்காவே கபளீகரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதுவரை கூட மத்தியக்கிழக்கின் தலைவர்கள் யோசித்துவிட்டார்கள்.

ஆனால், சதாம் உசேன் என்கிற பொது எதிரி முதலில் ஒழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் அத்தனை பேருமே கருதியதால்தான் பேசாமல் இருந்தார்கள்.

அதுவும் அப்போது அமெரிக்க அதிபர் புஷ் நடந்துகொண்ட விதத்தைக் கவனியுங்கள். நேரடியாக அமெரிக்கப் படைகளை ஈராக்கில் கொண்டுவந்து நிறுத்தாமல், 'உங்கள் படைகளை ஈராக் எல்லையில் அணிவகுத்து நிறுத்துங்கள்' என்று சவுதி அரேபிய அரசுக்குக் கட்டளை இட்டது அமெரிக்கா.

'இது உங்கள் பிரச்னை; நான் உதவி செய்யமட்டுமே வருகிறேன்' என்று சொல்லாமல் சொல்லும் விதம் அது.

அதன்படி சவுதி அரசுதான் தன்னுடைய ராணுவத்தை முதல் முதலில் ஈராக்குக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தியது. அப்புறம்தான் அமெரிக்கப் போர் விமானங்கள் வந்து சேர்ந்து வானில் வாணவேடிக்கை காட்ட ஆரம்பித்தன.

இப்படியொரு இக்கட்டான தருணத்தில் பி.எல்.ஓ. தனது தார்மீக ஆதரவை சதாம் உசேனுக்கு அளித்ததற்கு என்ன காரணம் என்று யாருக்குமே புரியவில்லை. யாசர் அராஃபத்தின் நோக்கம் விளங்கவில்லை. ஒருவேளை அவர் இப்படி நினைத்திருக்கலாம்: ஈராக்கின் அதிபர் சதாம் உசேன், மத்தியக் கிழக்கின் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்துகொண்டிருக்கிறார். அமெரிக்காவையே எதிர்க்கும் அளவுக்கு அவரிடம் வல்லமை இருக்கிறது என்னும்போது அவரது நட்பைப் பெறுவது பாலஸ்தீன் விடுதலையைத் துரிதப்படுத்த உதவக்கூடும்.

இது ஒரு காரணம். இன்னொரு காரணம், சகோதர முஸ்லிம் தேசங்கள், அனைத்தும் ஒரு யுத்தம் என்று வரும்போது சதாமை ஆதரிக்கத்தான் விரும்பும் என்று யாசர் அராஃபத் தப்புக்கணக்குப் போட்டது. போயும் போயும் அமெரிக்காவுக்கு ஆதரவாக எந்த அரபு தேசமும் இருக்காது, இயங்காது என்று அவர் மனப்பூர்வமாக நம்பினார்.

அராஃபத்தின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல் இது. மதச் சார்பற்ற இயக்கமாகத் தன்னுடைய பி.எல்.ஓ.வை வழிநடத்தியவர், ஈராக் விஷயத்தில் முஸ்லிம் தேசங்கள், அமெரிக்காவை ஆதரிக்காது என்று மதத்தை முன்வைத்து யோசித்தது வியப்பே. அந்தச் சறுக்கலுக்குக் கொடுத்த விலைதான் பாலஸ்தீன் விடுதலை என்கிற அவரது முயற்சிக்கு ஏற்பட்ட பலமான பின்னடைவு.

ஐ.நா.வே கைவிட்டுவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. எந்த ஒரு தேசமும் அப்போது அராஃபத்தின் நியாயங்களை யோசிக்கத் தயாராக இல்லை. உலக நாடுகள் அனைத்தும் கேவலம், சதாமைப் போயா இந்த மனிதர் ஆதரித்தார்! என்று அருவருப்புடன் பார்க்கத் தொடங்கின. மதம் கடந்து, அரசியல் கடந்து, ஒழிக்கப்படவேண்டியதொரு சர்வாதிகாரியாக மட்டுமே சதாம் உசேனை உலகம் பார்க்கிறது என்பதை அராஃபத் அவதானிக்கத் தவறிவிட்டார். அதற்கான விலைதான் அது!

இன்னும் எளிமையாகப் புரிய ஓர் உதாரணம் பார்க்கலாம். ராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்த ஆதரவையும் அனுதாபத்தையும் எண்ணிப்பாருங்கள். புலிகளுக்குத் தமிழகம் ஓர் இரண்டாம் தாயகமாகவே இருந்துவந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். ஆனால், அந்தப் படுகொலைக்குப் பிறகு நிலைமை அப்படியே தலைகீழாகிப் போனதல்லவா?

அதுவரை விடுதலை இயக்கமாகவே அறியப்பட்டுவந்த விடுதலைப் புலிகளை, ஒட்டுமொத்த இந்தியாவும் தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கத் தொடங்கியதன் காரணம் வேறென்னவாக இருக்க முடியும்?

செயல். ஒரு செயல். ஒரே ஒரு செயல். அதன் விளைவுகளுக்கான விலைதான் அது. இதே போன்றதுதான் அன்றைக்கு பி.எல்.ஓ.வுக்கு ஏற்பட்ட நிலைமையும். சதாம் உசேனை குவைத் யுத்தத்தின் போது அராஃபத் ஆதரித்துவிட்டதன் பலனாக பாலஸ்தீன் விடுதலைக்காக அதுவரை அவர் வகுத்துவைத்த அத்தனை திட்டங்களையும் உலகம் நிராகரித்துவிட்டது. எந்த ஒரு தேசமும் எந்த ஓர் அமைப்பும் பி.எல்.ஓ.வுக்கு ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கத் தயங்கியது.

தனது ஆயுதப் போராட்டத்தைத் தாற்காலிகமாகவாவது ஒதுக்கிவைத்துவிட்டு, அமைதிப் பேச்சுகளில் கவனம் செலுத்தி, ஏற்பட்டுவிட்ட அவப்பெயரைத் துடைத்துக்கொண்டால்தான் விடுதலைப் போராட்டத்தில் ஓர் அங்குலமாவது முன்னேற முடியும் என்று அராஃபத் முடிவு செய்தார். அதனால்தான் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அவர் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்த முன்வந்தார். நார்வேயின் அமைதி ஏற்பாட்டுக்குச் சம்மதம் சொன்னார். பெரிய லாபமில்லாவிட்டாலும் ஓஸ்லோ உடன்படிக்கைக்கும் ஒத்துழைக்க முடிவு செய்தார். அமெரிக்க அதிபருடன் கை குலுக்கினார். அத்தனை காரியங்களையும் ஆத்மசுத்தியுடன் செய்தார்.

இந்த விவரங்களை பாலஸ்தீனிய அரேபியர்கள் சிந்தித்துப் பார்க்க மறந்ததன் விளைவுதான் அராஃபத்தை துரோகி என்றும், விலை போய்விட்டவர் என்றும், பதவி ஆசை பிடித்தவர் என்றும் வசைபாடவைத்தன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்கும் அராஃபத் கடுமையான பதில்களை ஒருபோதும் தந்ததில்லை. புரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள் என்று மௌனமாக மன்றாடியதைத் தவிர, அவர் வேறெதுவும் செய்யவில்லை.

குவைத் யுத்தத்தில் அவர் சதாமை ஆதரித்தது ஒரு விபத்து. சந்தேகமில்லாமல் விபத்து. அதுபற்றிய வருத்தம் அராஃபத்துக்கு இறுதி வரை இருந்திருக்கிறது. தனது சறுக்கலை அவர் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அதன் விளைவுகள் தனது தேசத்தின் விடுதலையைப் பாதித்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் அவர் ஓஸ்லோ உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டார் என்பதைத்தான் பாலஸ்தீனியர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

இஸ்ரேலுடன் நல்லுறவு வேண்டாம்; குறைந்தபட்சம் பேசிக்கொள்ளும் அளவுக்காவது சுமாரான உறவு இருந்தால்தான் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர முடியும் என்பது அராஃபத்தின் நம்பிக்கை. ஏனெனில், இஸ்ரேலை ஒழித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று இதர பாலஸ்தீனிய இயக்கங்கள் கோஷமிட்டுக்கொண்டிருந்ததைப் போல் அவர் செய்யவில்லை. இஸ்ரேலை ஒழிப்பதென்பது வெறும் மாய யதார்த்தம் மட்டுமே என்பதை அவர் மிக நன்றாக அறிந்திருந்தார்.

இங்கேதான் ஒரு போராளிக்கும் அரசியல் விற்பன்னருக்கும் உள்ள வித்தியாசம் வருகிறது. அராஃபத் ஒரு போராளியாக மட்டும் இருந்திருப்பாரேயானால் அவரும் அந்தக் கற்பனையான இலக்கை முன்வைத்துக் கண்ணில் பட்ட இடங்களையெல்லாம் சுட்டுக்கொண்டேதான் இருந்திருப்பார். அவர் ஒரு ராஜதந்திரியாகவும் இருந்ததால்தான் அமைதிக்கான வாசல்களை அவரால் திறந்துவைக்க முடிந்தது.

அன்றைக்கு அவர் விதைத்ததுதான் இன்றைக்கு காஸாவிலிருந்தும் மேற்குக் கரையிலிருந்தும் இஸ்ரேலியர்களை, இஸ்ரேலிய அரசே வெளியேற்றும் அளவுக்குப் பலனளிக்கத் தொடங்கியிருக்கிறது. அராஃபத் இறந்ததனால்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியிருக்கிறது என்று இன்றைக்கு இஸ்ரேலிய அரசு விஷமப்பிரசாரம் செய்யலாம்; செய்கிறது. உண்மையில் அன்றைக்கு அமைதிப் பேச்சு என்கிற விஷயத்தை அவர் ஆரம்பித்து வைக்காதிருப்பாரேயானால், ஜோர்டன் நதி முழுச் சிவப்பாகவே இப்போது ஓடவேண்டியிருந்திருக்கும்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 செப்டம்பர், 2005

தொடரும்....

நல்ல ஒரு இடத்திற்குக் கொண்டு வந்துள்ளீர்கள்!

எல்லா விதமான, உரிமைப் போராட்டங்களும், முடிவடைந்த இடம், இந்த 'ஒஸ்லோ' தான்!

என்னைக் கேட்டால், அரபாத், விட்ட மாபெரும் தவறு, 'பாலஸ்தீனம்' என்ற பெண்ணை விவாகரத்துப் பண்ணி விட்டு, ஒரு பிரெஞ்சுப் பெண்ணைக் கைப் பிடித்ததே!

இவரது, இரகசியங்களும், பலவீனங்களும், வெளிப் படுத்தப் பட்டதும், இந்தப் பெண்ணால் தான் என்று கூறப் படுகின்றது!

தொடருங்கள், அபராஜிதன்!

எல்லா விதமான, உரிமைப் போராட்டங்களும், முடிவடைந்த இடம், இந்த 'ஒஸ்லோ' தான்

  • தொடங்கியவர்

83] ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணம்?

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 83

பாலஸ்தீன் விடுதலைப் போராட்ட சரித்திரத்தில், ஓஸ்லோ ஒப்பந்தம் மிக முக்கியமானதொரு கட்டம். ஏனெனில் அமைதியை உத்தேசித்துச் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு தரப்பிலும் மக்கள் மத்தியில், மிகப்பெரிய அதிருப்தியையே உண்டாக்கியது. இப்படி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதற்காக, இஸ்ரேலியப் பிரதமராக இருந்த இட்ஸாக் ராபினை ஒரு யூதரே கொலை செய்தார் (1995). அடுத்து வந்த பொதுத்தேர்தலில், யூதர்கள் மிகக் கவனமாக பழைமைவாத யூதரான பெஞ்சமின் நெதன்யாஹுவை (Benjamin Netanyahu)ப் பிரதமராக்கி உட்காரவைத்தார்கள். ஒருபோதும் அவர், அரேபியர்களுக்கு எந்த அதிகாரத்தையும் தரமாட்டார் என்கிற நம்பிக்கை யூதர்களுக்கு இருந்தது.

மறுபுறம், அரபுகள் தரப்பில் யாசர் அராஃபத் மீது உண்டான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி, அரேபியர்கள் யூதர்களின்மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்றும், பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் தன்னுடைய ராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்றும் ஏற்பாடாகியிருந்தது.

எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் நீங்களாக எப்படி ஒப்பந்தத்தை ஏற்கலாம் என்று அராஃபத்தைக் கேட்டார்கள், பாலஸ்தீனிய அரேபியர்கள். குறிப்பாக, அங்குள்ள விடுதலை இயக்கங்கள் அனைத்துமே, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகத்தான் இருந்தன.

அராஃபத் தன் சக்திக்கு உட்பட்ட அளவில் ஒவ்வொரு இயக்கத்தையும் அழைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, ஒப்பந்தத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பார்த்தார். தினசரி, பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்கும் விளக்கமளித்தார். கேட்கத்தான் ஆளில்லாமல் போய்விட்டது.

"யூதர்கள் மீது அரேபியர்கள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று எழுதிக்கொடுத்துக் கையெழுத்துப் போட்டீர்கள் அல்லவா? இதோ பாருங்கள்," என்று அன்று தொடங்கி, கலவரங்களும் தாக்குதல்களும் நம்ப முடியாத அளவுக்கு அதிகரிக்க ஆரம்பித்தன.

ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலிய அரசு சம்மதித்ததன் அடிப்படைக் காரணமே, ஹமாஸ் உள்ளிட்ட போராளி இயக்கங்களின் செயல்பாடுகளை அராஃபத் முயற்சி எடுத்து முடக்கிவைக்கவேண்டும் என்பதுதான். ஆனால் எந்தவிதமான பேச்சுவார்த்தை சமரசங்களுக்கும் இயக்கங்கள் ஒத்துழைக்கத் தயாராக இல்லாத காரணத்தால், பாலஸ்தீன் முழுவதும் படிப்படியாக வன்முறை அதிகரிக்கத் தொடங்கியது.

இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின்படி செப்டம்பர் 1993 தொடங்கி, செப்டம்பர் 2000 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 256 இஸ்ரேலியர்களை அரேபியர்கள் கொன்றிருக்கிறார்கள். இதற்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை. திடீரென்று கலவரம் மூளும். கண்ணில் பட்டவர்கள் மீது கற்கள் வீசப்படும். தப்பியோடினால் துப்பாக்கிச் சூடு. விழுந்த உடல்கள் உடனடியாக ஜோர்டன் நதியில் வீசி எறியப்படும்.

கட்டுப்படுத்தவே முடியவில்லை. மக்களின் கோபம் எல்லையற்றுப் பொங்கிக்கொண்டிருந்தது. அராஃபத் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பாலஸ்தீன் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்தக் கூட்டங்களிலும் கற்கள் பறக்க ஆரம்பித்தன. (உண்மையில் கற்கள் பறந்த சம்பவம் மிகக் குறைவு. அழுகிய பழங்கள்தான் அதிகம் பறந்தன.)

அராஃபத்தின் கவலை என்னவெனில், இப்படிக் கலவரம் அதிகரித்துக்கொண்டே போனால், ஒப்பந்தப்படி இஸ்ரேலிய ராணுவம் வாபஸ் ஆவது தள்ளிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் மீண்டும் பழைய குருடி கதவைத் திறக்க வந்துவிடுவாள். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் இட்ஸாக் ராபின் படுகொலை செய்யப்பட்டு, பெஞ்சமின் நெதன்யாஹு இஸ்ரேலின் பிரதமராக ஆனார். இந்தப் புதிய பிரதமரின் நடவடிக்கைகள் அராஃபத்துக்கு மேலும் கவலையளித்தன.

நெதன்யாஹு பதவியேற்றவுடனேயே யூதர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இருந்த யூதக் குடியிருப்புகளை அதிகப்படுத்தத் தொடங்கினார். இதன் அர்த்தம் என்னவெனில், எக்காரணம் கொண்டும் அந்த இரு பகுதிகளையும் இஸ்ரேல், அரேபியர்களுக்குத் தத்துக் கொடுத்துவிடாது என்பதை உறுதிப்படுத்துவதுதான்.

ஏற்கெனவே 1967 யுத்தத்தை அடுத்து, இப்பகுதிகளில் யூதக் குடியிருப்புகள் கணிசமாக உருவாக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான யூதர்கள் இங்கே இடம் பெயர்ந்து வந்து, அரேபியர்களின் மத்தியில் வாழ ஆரம்பித்திருந்தார்கள். அவர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் புதிதாகவும் பல்லாயிரக்கணக்கானோரை இப்பகுதிகளுக்கு அனுப்பி அழகு பார்த்தது இஸ்ரேல்.

இது அரேபியர்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் உண்டாக்கி, அடிக்கடி கலவரங்களில் இறங்கத் தூண்டியது. "பார்த்தீர்களா, உங்கள் ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணத்தை?" என்று அராஃபத்தைக் கேட்டார்கள்.

அராஃபத்தால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம், அரேபியர்கள் தாக்குதலில் ஈடுபடாமலிருக்கும் பட்சத்தில் இஸ்ரேல் ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்கப்படும் என்றுதான் ஒப்பந்தத்தில் இருந்ததே தவிர, அரேபியர்கள் வாழும் இடங்களில் யூதக் குடியிருப்புகளை நிறுவுவது குறித்து, அதில் ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அது கூடாது என்றோ, சரியென்றோ இருவிதமாகவும் ஒப்பந்தத்தில் ஏதும் இல்லாத காரணத்தால், வழக்கப்படி விருப்பமான நேரத்தில், விருப்பமான அளவில், குடியேற்றங்களை அமைப்பது என்கிற புராதனமான வழக்கத்துக்குப் புத்துருவம் கொடுத்துவிட்டார் நெதன்யாஹு.

ஓஸ்லோவினால் உண்டாகியிருந்த வெறுப்பை இந்த ஏற்பாடு, யூதர்கள் மத்தியில் சற்றே தணிக்கத் தொடங்கிய அதே சமயம், அரேபியர்கள் முழு வீச்சில் கலவரங்களில் இறங்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

பாலஸ்தீன் அத்தாரிடி சார்பில் அதிபராக அராஃபத்தும் அவரது நியமன உறுப்பினர்களாக ஒரு சிறு அமைச்சரவையும் பொறுப்பேற்றிருந்தபோதும், அவர்களுக்கு ஆட்சி செய்வதில் அனுபவம் இல்லாத காரணத்தால், நிறைய நிர்வாகக் குளறுபடிகள் ஏற்பட்டன. குறிப்பாக, பணத்தை ஒழுங்கான விகிதத்தில் பிரித்து, செலவு செய்யத் தெரியாத காரணத்தால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள். மறுபக்கம் மக்கள், போராட்டம்தான் முழு நேரத் தொழில் என்று முடிவு செய்துவிட்டிருந்தபடியால் வர்த்தக மையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் எப்போதாவதுதான் திறந்திருக்கும் என்கிற நிலைமை உண்டானது. வேலையில்லாப் பிரச்னை அதிகரித்து, ஏராளமான அரபு இளைஞர்கள் புதிதாகத் துப்பாக்கி ஏந்த ஆரம்பித்தார்கள். இவர்களுக்குக் கொம்பு சீவி விடும் பணியைப் போராளி இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. (அராஃபத் பதவிக்கு வந்த முதல் வருட இறுதியில் மக்கள் வாழ்க்கைத் தரம் 30% குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் 51% அதிகரித்ததாக ஒரு புள்ளி விவரம் இருக்கிறது.)

இவை அனைத்துமே ஓஸ்லோ ஒப்பந்தத்தின் விளைவுதான் என்று தீவிரமாக நம்பினார்கள் அரேபியர்கள். அது மட்டுமல்லாமல், ஓஸ்லோ ஒப்பந்தத்தின்போதே எழுதப்படாத ஒப்பந்தமாகப் புதிய குடியேற்றங்களுக்கும் அராஃபத் சம்மதம் தெரிவித்திருப்பார் என்று சந்தேகித்து, அத்தகைய புதிய குடியேற்றங்களால் தங்கள் விளை நிலங்களும் வாழும் இடங்களும் பறிபோகின்றன என்றும் குற்றம்சாட்ட ஆரம்பித்தார்கள்.

ஆனால், இந்தக் குடியேற்றங்கள், அராஃபத் முற்றிலும் எதிர்பாராதது. உண்மையிலேயே இரு தரப்பு அமைதியை இஸ்ரேல் விரும்புவதாகத்தான் அவர் நம்பினார். அதன் ஆரம்பப் புள்ளியாகத்தான் ஓஸ்லோ உடன்படிக்கையை அவர் பார்த்தார். ஆனால், இஸ்ரேல் தனது வழக்கமான குடியேற்றத் திருவிழாவைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, யூதர்களைச் சமாதானப்படுத்தியதில் உண்மையிலேயே அவருக்கு அதிர்ச்சிதான்.

ஆனால் எப்படி எடுத்துச் சொன்னால் இது புரியும்? மக்கள் யாரும் புரிந்துகொள்ளும் மன நிலையில் இல்லை. தாங்கள் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாகவே கருதினார்கள். ஏதாவது செய்து தங்கள் எதிர்ப்பை மிகக் கடுமையான முறையில் பதிவு செய்ய மிகவும் விரும்பினார்கள். இது மட்டும் நடந்தால், பிறகு சரிசெய்யவே முடியாத அளவுக்குப் பிரச்னை பூதாகாரமாகிவிடும் என்று அராஃபத் அஞ்சினார்.

ஆகவே, மக்களின் கவனத்தைத் திசைமாற்றவும், யூதக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தவும் வேறு வழியே இல்லாமல், தானே இரண்டாவது இண்டிஃபதாவுக்கான அழைப்பை விடுக்கத் தீர்மானித்தார்.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது உண்மை. ஆனால் தொடர்ந்து நடைபெறும் காரியங்கள் எதுவும் அமைதியை முன்னெடுத்துச் செல்வதாக இல்லை என்று அறிவித்துவிட்டு, அரேபியர்களின் உணர்ச்சியை இஸ்ரேல் மதிக்கத் தவறுவதாகப் பேசினார்.

இது, சூடேறிக்கொண்டிருந்த பாலஸ்தீனைப் பற்றியெரியச் செய்யும் விதமான விளைவுகளை உண்டாக்க ஆரம்பித்தது. 1996-ம் ஆண்டில் மட்டும் இஸ்ரேலில், சுமார் முப்பது குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றுள் டெல் அவிவில் வெடித்த பஸ் வெடிகுண்டு ஒன்று பத்தொன்பது பேர் உயிரைக் குடித்தது, மிக முக்கியமானது. மார்ச் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஏப்ரலில் காஸா பகுதியில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு ஆறு யூதர்கள் பலியானார்கள். மீண்டும் மே மாதம் டெல் அவிவில் ஒரு பஸ்ஸில் வெடிகுண்டு வெடித்து, முப்பது பேர் பலி. அந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக ஜெருசலேமில், அதே பாணி தற்கொலைத் தாக்குதலுக்கு ஐந்து பேர் பலி.

என்ன நடக்கிறது என்றே புரியாத சூழல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, ராணுவ நடவடிக்கை மிகவும் அவசியம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு கருதினார். ஆனால் அரேபியக் குடியிருப்புகளில் ராணுவம் புகுமானால் விளைவு எந்த மாதிரியும் ஆகலாம். ஒரு முழுநீள யுத்தத்துக்கான சாத்தியமே அப்போது தெளிவாகத் தெரிந்ததால் சற்றே நிதானம் காட்டலாம் என்று மொஸாட் சொன்னது.

ஹமாஸ், மிகத் தீவிரமாகச் செயல்பட்ட நேரம் அது. தினசரி குண்டுகள் வெடிப்பது என்பதை ஒரு கடமை போலச் செய்தார்கள். பெரும்பாலும் பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், பாலங்கள், தேவாலயங்கள் ஆகிய இடங்களில்தான் அவர்கள் குண்டுவைத்தார்கள். பத்து அல்லது பன்னிரண்டு சாதாரண குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு, ஒரு பெரிய தற்கொலைத் தாக்குதல் நடத்துவது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஹமாஸின் இந்தத் தீவிர நடவடிக்கைகள், அரேபியர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உண்டாக்கியது. ஒருவேளை தங்களுக்கு விடுதலை வாங்கித் தரப்போவதே ஹமாஸ்தானோ என்று அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். நடப்பது எதுவுமே நல்லதுக்கல்ல என்பது மட்டும் அராஃபத்துக்குப் புரிந்தது. பி.எல்.ஓ.வை அவர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிடுவதற்கு முன்னால், ஏதாவது செய்தால்தான் உண்டு என்று நினைத்தார்.

மிகவும் யோசித்து, சாதகபாதகங்களை அலசி ஆராய்ந்து, கடைசியில்தான் அந்த முடிவை எடுத்தார். இன்னொரு இண்டிஃபதா.

பாலஸ்தீனின் இரண்டாவது மக்கள் எழுச்சி என்று சரித்திரம் வருணிக்கும் இந்த இண்டிஃபதாவுக்கு "அல் அக்ஸா இண்டிஃபதா" என்று பெயர். அதாவது அல் அக்ஸா மசூதியை மீட்பதற்கான மக்கள் போராட்டம். சந்தேகமில்லாமல் இதனைத் தொடங்கியவர் அராஃபத் தான். ஆகவே இதன் விளைவாகப் பெருகிய மாபெரும் ரத்த வெள்ளத்துக்கும் அவரேதான் பொறுப்பு.

தொடரும்....

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 8 செப்டம்பர், 2005

  • தொடங்கியவர்

84] அல் அக்ஸா மசூதியின் பின்னணி

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 84

இந்தச் சரித்திரத்தின், மிக ஆரம்ப அத்தியாயங்களில் தொட்டுக்காட்டிய, ஒரு மிக முக்கியமான பிரச்னையின் வாசலில், இப்போது நிற்கின்றோம். உள்ளே சென்று, விரிவாக அலசி ஆராயவேண்டிய விஷயம் அது. அல் அக்ஸா மசூதி. அதனை மீட்பதற்காக பாலஸ்தீனியர்கள் தொடங்கிய 'அல் அக்ஸா இண்டிஃபதா'வைப் பார்ப்பதற்கு முன்னால், அம்மசூதியின் பின்னணியைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் ஆணிவேர், இந்த இடத்தில்தான் இருக்கிறது. சற்று நெருங்கிப் பாருங்கள். பற்றி எரியும் இந்த நெருப்பின் வெப்பம்தான், பாலஸ்தீனை ஆயிரமாண்டுகளாக வாட்டிக்கொண்டிருக்கிறது.

aqsa.jpg [படம்: மஸ்ஜித் அல் அக்ஸா] ஜெருசலேம் நகரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் இது. ஒட்டுமொத்த பாலஸ்தீனிலேயே, இதனைக்காட்டிலும் பெரிய பள்ளிவாசல் வேறு ஏதும் கிடையாது. ஒரே சமயத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்து தொழ முடியும். முகம்மது நபியின் பாதம் பட்ட பூமி இதுவென்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை. அவரது விண்ணேற்றத்துடன் தொடர்புடைய நிலம் இது.

இந்த அல் அக்ஸா பள்ளிவாசலுக்குச் சற்றுத்தள்ளி, இன்னொரு பள்ளிவாசல் இருக்கிறது. அதன் பெயர் மஸ்ஜித் ஏ உமர். கலீஃபா உமர் கட்டிய பள்ளிவாசல் இது.

இந்த அல் அக்ஸா மற்றும் மஸ்ஜித் ஏ உமர் ஆகிய இரு பள்ளிவாசல்களையும் இணைத்த வளாகத்தை, முஸ்லிம்கள் 'பைத்துல் முகத்தஸ்' என்று அழைப்பார்கள்.

இந்த இடத்தை முன்வைத்துத்தான், யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமான பிரச்னை ஆரம்பித்தது.

அல் அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் இடத்தில்தான், யூதர்களின் புராதனமான புனிதத்தலமான சாலமன் தேவாலயம் இருந்தது என்பது இஸ்ரேலியர்களின் வாதம். அதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, அந்தப் பள்ளிவாசலின் ஒருபக்கச் சுற்றுச் சுவராக இன்னமும் மிச்சமிருக்கும் அந்த உடைந்த சுவர். (Wailing wall எனப்படும் அழுகைச் சுவர். சாலமன் ஆலயம் இருந்ததன் அடையாளம், இந்தச் சுவர்தான் என்பது யூதர்களின் கருத்து. இந்தச் சுவரில் முகத்தைப் புதைத்து அழுதபடியே யூதர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.). யூதர்களின் வாதம் என்னவெனில், அல் அக்ஸா பள்ளிவாசலுக்கும் முகம்மது நபி விண்ணேறிய சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அல் அக்ஸாவுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள Dome of the Rock எனப்படும், மஸ்ஜித் ஏ உமர் பள்ளிவாசல் இருந்த இடத்திலிருந்துதான் முகம்மது விண்ணேற்றம் செய்தார் என்பது.

domeoftherock.jpg [படம்: Dome of the Rock] தங்களுடைய இக்கருத்தை அழுத்தம் திருத்தமாக உலக மக்கள் மத்தியில் பதியச் செய்வதற்காக, Dome of the Rock ஐயே-அல் அக்ஸா என்று குறிப்பிடுவது யூதர்களின் வழக்கம். அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டுத் தங்கள் தேவாலயத்தை மீண்டும் அங்கே எழுப்புவதற்குத் தொல்பொருள் துறையின் உதவியை அவர்கள் நாடினார்கள்.

உண்மையில் அல் அக்ஸா வேறு, Dome of the Rock வேறு. இரண்டும் பைத்துல் முகத்தஸ் என்கிற ஒரே வளாகத்தில் இருக்கும், இரு வேறு மசூதிகள்.

அயோத்தி மாதிரியேதான். யூத தேவாலயங்கள் - சாலமன் ஆலயமே ஆனாலும் சரி; எப்படியானாலும் மசூதிகளின் காலத்துக்கு முற்பட்டவைதான். ஏனெனில், இஸ்லாத்தின் தோற்றமே காலத்தால் மிகவும் பிற்பட்டது. ஆனால், மசூதி இருக்கும் ஓரிடத்தில்தான் தங்களது புராதன ஆலயம் இருந்தது என்று நிறுவுவதற்கு, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான் பல விபரீதங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆதாரங்களில் தெளிவில்லாதது அவற்றுள் முதலானது. அணுகுமுறையில் முரட்டுத்தனம் மிகுந்திருந்தது அடுத்தது. பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை, ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க நினைத்தது மூன்றாவது.

புராண, சரித்திர காலங்கள் தொடங்கி மிகச் சமீபத்தில் 1967-ம் ஆண்டு வரை இந்த மசூதி வளாகம், முஸ்லிம்களின் வசம்தான் இருந்திருக்கிறது. பாலஸ்தீன் யூதர்களை மொத்தமாக விரட்டியடிக்கும் தமது அரசியல் நோக்கத்துக்கு வலு சேர்ப்பதற்காகவே, இஸ்ரேலிய அரசு அல் அக்ஸா மசூதி விஷயத்தைக் கையில் எடுத்து, அங்கேதான் சாலமன் தேவாலயம் இருந்தது என்று தொடர்ந்து பிரசாரம் செய்து, மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட ஆரம்பித்தது.

பிரச்னையைத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் வசம் அளித்துவிட்டு, 'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் தோண்டிப் பாருங்கள்' என்று அனுமதியும் அளித்தது.

ஒரு மசூதி இருக்கிறது. மக்கள் அங்கே தினசரி தொழுதுகொண்டிருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் தவிர உலகெங்கிலுமிருந்து ஜெருசலேத்துக்கு யாத்திரை வரும் முஸ்லிம்கள் அத்தனை பேரும் அந்த மசூதிக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். (முஸ்லிம் உலகின் மூன்றாவது மிக முக்கியமான வழிபாட்டுத்தலம் அது.) இறைத்தூதருடன் தொடர்புடைய ஒரு நினைவுத் தலம் அது. அப்படிப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்க்க அனுமதி அளிப்பது என்றால், என்ன அர்த்தம்?

1967-ம் ஆண்டு யுத்தத்தின்போது ஜெருசலேம் நகரை முழுமையாக யூதர்கள் கைப்பற்றியபிறகுதான், இதெல்லாம் ஆரம்பமானது. யுத்தத்தில் வெற்றி கண்ட மறுநாளே, இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. முதலில் பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில் பதினான்கு மீட்டர் நீள, ஆழத்துக்குத் தோண்டினார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டு கால இடைவெளியில், அந்த இடத்தில் சுமார் எண்பது மீட்டர் நீளத்துக்குத் தோண்டி ஓர் அகழி போல் ஆக்கிவிட்டார்கள். பள்ளிவாசலின் மேற்குப் பகுதி வழியே, யாருமே உள்ளே போகமுடியாதவாறு ஆகிவிட்டது.

யுத்தத்தில் அரேபியர்கள் தோற்றிருந்ததால், ஜெருசலேம் நகரில் இருந்த முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஆகவே, அல் அக்ஸாவில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தாமதமாகத்தான் தெரியவந்தது. உள்ளம் பதைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அவர்கள் இருந்தார்கள்.

1970-ம் ஆண்டு இந்த அகழ்வாய்வுப் பணியின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பமாயின. இம்முறை பள்ளிவாசலின் தென்மேற்கு மூலையிலிருந்து தோண்ட ஆரம்பித்தார்கள். அங்கிருந்து மேற்குத் திசை வாசல் வரை தோண்டிக்கொண்டே போனார்கள். இப்படி அகழ்வாய்ந்தபோது, மிகப் புராதனமான சில கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. (அடக்கஸ்தலம் என்பார்கள்.) அவை, முகம்மது நபியின் தோழர்களாக விளங்கிய சிலரின் கல்லறைகள் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை. இதற்கு ஆதாரமாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுவது இதுதான்:

யூதர்களின் அகழ்வாராய்ச்சியில் தட்டுப்பட்ட ஒரு குறிப்பிட்ட கல்லறையில், அது முகம்மது நபியின் தோழர்களுள் ஒருவரான உபாதா இப்னு அல் ஸாமித் என்பவருடையது என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் இருந்திருக்கிறது! இதே போல இன்னொரு கல்லறையில், ஷத்தாத் இப்னு அவ்ஸ் என்கிற வேறொரு நபித்தோழரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும், கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கல்லறைகளைக் கண்டுபிடித்ததோடு, யூதர்கள் நிறுத்தவில்லை. அதையும் உடைத்துப் பார்த்ததில் உள்ளே உடல்களையும் கண்டிருக்கிறார்கள். ஆனால், விஷயம் பெரிதாகிவிடக்கூடாது என்று, அதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். தோண்டப்பட்ட அந்த இடங்களில் யாரும் வந்து பார்த்துவிடாமலிருக்க, அந்தப் பகுதியைச் சுற்றிலும், மேலும் பதின்மூன்று மீட்டர் சுற்றளவுக்கு மிகப்பெரிய அகழியைத் தோண்டிவிட்டார்கள்.

இந்தச் சம்பவமெல்லாம், எழுபதுகளின் தொடக்கத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. துல்லியமான ஆதாரங்கள் ஏதும், அப்போது வெளியாகவில்லை. ஆனால், பள்ளிவாசலின் நுழைவாயிலுக்கு அருகே தோண்ட ஆரம்பித்து, சுமார் பத்து மீட்டர் ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவானபோது, விஷயம் வெளியே வந்துவிட்டது. இது நடந்தது 1976-ம் ஆண்டில்.

அந்த இடத்தின் அடிவாரம் வரை யூதர்கள் தோண்டிக்கொண்டே போக, எப்படியும் மசூதி இடிந்து விழத்தான் போகிறது என்று செய்தி பரவிவிட்டது. துடித்து எழுந்தார்கள், முஸ்லிம்கள். உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி, பைத்துல் முகத்தஸ் வளாகமே வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது; அங்கே யூத ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவது சட்டவிரோதம் என்று ஆதாரங்களைக் காட்டி, படாதபாடுபட்டு ஆய்வை நிறுத்தினார்கள்.

நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் வழக்கு இழுத்தடித்தது. வழக்கு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, 1981-ம் ஆண்டு யூதர்கள் மீண்டும் பள்ளிவாசலைத் தோண்டத் தொடங்கினார்கள். இம்முறை அவர்களுக்கு, ஒரு சுரங்கப்பாதை அங்கே இருந்தது தெரியவந்தது.

கி.பி. 636-ம் ஆண்டு கலீஃபா உமர் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில், எதற்காக ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இப்போது இல்லை. ஒரு சாரார் கருத்துப்படி, உமர் இந்தப் பள்ளிவாசலைக் கட்டிய காலத்தில் சுரங்கம் எதையும் அமைக்கவில்லை. மாறாக, கி.பி 690 - 691 ஆண்டுக் காலகட்டத்தில், அப்துல் மாலிக் இப்னு ஹிஷாம் என்பவர் அல் அக்ஸா மசூதியை விரிவுபடுத்தி, மேலும் அழகூட்டி, செப்பனிட்டபோதுதான் பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில், இந்தச் சுரங்கப்பாதையை அமைத்தார் என்று சொல்கிறார்கள்.

கி.பி. 1099-ம் ஆண்டு ஜெருசலேம் நகரைக் கிறிஸ்துவர்கள் கைப்பற்றியபோது பள்ளிவாசலையும் கைப்பற்றி, சுரங்கத்தை அடைத்துவிட்டார்கள். பின்னால் சார்லஸ் வார்ன் என்கிற ஒரு பிரிட்டிஷ் அகழ்வாய்வாளர், இந்த மூடிய சுரங்கத்தைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. (இது நடந்தது கி.பி.1880-ம் ஆண்டு.) பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் மண்மூடிக் கிடந்த இந்தச் சுரங்கம்தான், 81-ம் ஆண்டு யூதர்களின் அகழ்வாய்வின்போது அகப்பட்டது.

செய்தி, மீடியாவுக்குப் போய்விட்டபோது, யூதர்கள் தரப்பில் 'இந்தச் சுரங்கப்பாதை சாலமன் ஆலயத்தின் ஒரு பகுதி. ஆலயக் கட்டுமானத்திலேயே சுரங்கமும் இருந்தது' என்று சொல்லப்பட்டது.

ஆனால், சாலமன் தேவாலயம் குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தரும் எந்த ஒரு ஆவணமும் கோயில் எழுப்பப்பட்டபோது, சுரங்கம் இருந்தது பற்றிய குறிப்பு எதையும் தரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், யூதர்களின் அகழ்வாய்வின் விளைவாக, அல் அக்ஸா மசூதி இருந்த வளாகம் மிகப்பெரிய அகழி போலானதுதான் மிச்சமே தவிர, தேவாலயம் ஏதும் அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இது மிகவும் இயல்பானது. சாலமன் ஆலயம் கட்டப்பட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நவீன காலத்தில் ஆதாரம் தேடி, இருக்கிற மசூதியை இடித்துப் பார்ப்பது என்பது வீண் வேலை. இது யூதர்களுக்குத் தெரியாததில்லை. ஆனால், அந்த ஓர் உடைந்த சுவர் மீது, அவர்களுக்கு உள்ள நம்பிக்கைதான் இக்காரியத்தை எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் அவர்களைச் செய்யவைத்தது. தவிரவும், அல் அக்ஸா மசூதியை முன்வைத்து முஸ்லிம்கள் ஜெருசலேம் நகரைச் சொந்தம் கொண்டாடிவிடக்கூடாது என்கிற எண்ணமும் இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று.

இப்படித் தோண்டித்தோண்டி மண் எடுத்ததின் விளைவாக, இன்றைக்கு அல் அக்ஸா பள்ளிவாசலின் அடித்தளம் மிக அபாயகரமான நிலையில் காணக்கிடைக்கிறது. பள்ளிவாசலின் அஸ்திவாரங்கள் வெளியே தெரிகின்றன. மண் வாசனையே இல்லாமல் வெறும் கற்களின் மீது நிற்கிறது கட்டடம். ஒரு சிறு நில நடுக்கம் ஏற்பட்டால் கூட, மசூதி இடிந்து விழுந்துவிடும் அபாயம்.

தொடரும்....

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 11 செப்டம்பர், 2005

  • தொடங்கியவர்

85] அக்ஸா மசூதியை இடிக்க நடக்கும் சதிகள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 85

இயேசுவைச் சிலுவையில் அறைந்து, கொல்ல உத்தரவிட்ட ஏரோது மன்னனின் காலத்தில், அதாவது கி.மு. 63-ல் இரண்டாவது முறையாகப் புதுப்பித்துக் கட்டப்பட்ட சாலமன் ஆலயத்தின் எச்சங்களைத் தேடி, கி.பி. 1967-லிருந்து யூதர்கள் அல் அக்ஸா மசூதி வளாகத்தில், அகழ்வாராய்ச்சி செய்து வருவதைப் பார்த்தோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடகாலத்து மிச்சங்களை இன்றும் அவர்கள், தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் உடைந்த சுவர்தான் அவர்களது ஆதாரம். மேற்கொண்டு வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அல் அக்ஸா பள்ளிவாசலின் தாழ்வாரம், இஸ்லாமியர்களின் கட்டடக் கலையைப் பிரதிபலிப்பதாக இல்லை; உள்ளே இருக்கும் தூண்களும் மாடங்களும், பண்டைய ரோமானிய கட்டடக் கலைப் பாணியில் இருக்கின்றன என்றெல்லாம் சொன்னார்கள். அகழ்வாராய்ச்சியில் பல்வேறு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வப்போது தகவல் வந்துகொண்டே இருக்கும். ஆனால், அந்த இடத்தில்தான் சாலமன் தேவாலயம் இருந்திருக்கமுடியும் என்பதற்கான உறுதியான ஓர் ஆதாரம், இன்றுவரை பெறப்படவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்தக் காரணங்களால் அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டு, அங்கே ஒரு யூத தேவாலயம் எழுப்பவேண்டுமென்கிற தங்கள் விருப்பத்தை விட்டுக்கொடுக்க, யூதர்கள் தயாராக இல்லை. ஜெருசலேமே யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு நகரம்தான் என்பதால், அவ்வப்போது ஆக்கிரமிப்பு முயற்சிகள் மூலமும், இதற்கான வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

1967 _ யுத்தத்தில் இஸ்ரேல் வென்ற உடனேயே, மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சிக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாயின என்று, சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதோடு இன்னொரு காரியத்தையும் அவர்கள் செய்தார்கள். அந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, ஷலோமாகரன் என்கிற யூத மத குரு ஒருவர், ஒரு சிறு படையைத் (அரசாங்கப்படைதான்) தன்னுடைய பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்துகொண்டு, அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு வந்து, அங்கே யூத முறைப்படியான பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

ஷலோமாகரன், தனது சொந்த முடிவின்பேரில்தான் இந்தப் பிரார்த்தனையைச் செய்தார் என்று இஸ்ரேல் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது, அரசு அனுமதியின்றி நடந்திருக்கச் சாத்தியமில்லை என்பது மிகவும் வெளிப்படை.

முஸ்லிம்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்போதுதான் அவர்கள் யுத்தத்தில் தோற்றுத் துவண்டிருந்தார்கள். ஜெருசலேம் நகரை விட்டு அவர்கள் முற்றிலுமாக நீங்குவதற்குள், மசூதி அவர்கள் கையைவிட்டுப் போய்விடும்போலிருந்தது. தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போராளி இயக்கத்தவர்கள் யாரும், அப்போது அங்கே இல்லை. ஒரு முழுநாள் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையின் தொடர்ச்சியாக, மசூதி விரைவில் இடிக்கப்பட்டு, அங்கே பழைய சாலமன் ஆலயம் மீண்டும் எழுப்பப்படும் என்கிற நம்பிக்கையை யூதர்களுக்கு விதைத்துவிட்டு, வீடுபோய்ச் சேர்ந்தார், அந்த மதகுரு. (அவரது அந்த துணிச்சல் மிக்க நடவடிக்கைக்காக, அந்த வருடம் முழுவதும் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில், அவருக்குப் பாராட்டுக்கூட்டங்கள் நடந்தனவாம்.)

ஒரு பக்கம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்க, அதில் நம்பிக்கை இல்லாத சில தீவிர யூதர்கள் மசூதியை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பது, தீவைத்து எரிப்பது, புல்டோசர்களைக் கொண்டுவந்து இடிப்பது என்று, பல்வேறு உத்திகளைப் பரிசீலிக்கத் தொடங்கினார்கள்.

மசூதி வளாகத்தில், எந்தவிதமான அத்துமீறல்களையும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் அரசு சொன்னாலும், 1969-ம் ஆண்டு ஒரு தீவைப்புச் சம்பவம் அங்கே நடக்கத்தான் செய்தது. மனநிலை சரியில்லாதவன் என்று, பின்னால் இஸ்ரேல் நீதிமன்றம் சான்றிதழ் அளித்துவிட்ட அஸுயி டெனிஸ் என்கிற ஒரு யூதத் தீவிரவாதி, பள்ளிவாசலின் ஒரு பகுதியில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்தான். கணிசமான சேதம். அந்தப் பகுதியில் இருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாகப் போராடி, இந்தத் தீயை அணைத்தார்கள். இறுதிவரை தீயணைப்பு வண்டிகள் எதுவும் வரவேயில்லை.

அரசுத் தரப்பிலிருந்து எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத நிலையில், முஸ்லிம்கள் தாங்களாகவே ஒரு குழுவை ஏற்பாடு செய்து, அல் அக்ஸா மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழவைத்து, மசூதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தார்கள்.

இதில் வினோதம் என்னவென்றால், முற்றிலும் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மசூதிக்கு, அப்போது முஸ்லிம்கள் யாரும் போய்வரமுடியாது. கேட்டால், அகழ்வாராய்ச்சிப் பணிகளைக் காரணம் சொல்லிவிடுவார்கள். அகழ்வாராய்ச்சிக்காரர்கள் எப்போது தோண்ட ஆரம்பித்து, எப்போது வீட்டுக்குப் போனாலும், உடனே யாராவது மசூதியைத் தகர்க்க வந்துவிடுவார்கள். மசூதிக்கு வெளியே கண்விழித்துக் காவல் காத்து நிற்கவேண்டியது மட்டும், முஸ்லிம்கள்.

யூத மதகுரு ஷலோமாகரன், முதல் முதலில் அல் அக்ஸாவுக்குச் சென்று, யூத மதச் சடங்குகளை நிறைவேற்றிவிட்டு வந்ததன் தொடர்ச்சியாக, அடுத்த நான்கைந்து வருடங்களில் மொத்தம் மூன்று முறை, இதே போன்ற முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் முஸ்லிம் இளைஞர்கள், அவர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.

இதனால், யூதர்கள் இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்கள். நீண்டநாள் இழுத்தடித்த இந்த வழக்கில், 1976-ம் வருடம் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. 'இப்போது மசூதி இருக்கிறதென்றாலும் எப்போதோ தேவாலயம் இருந்த இடம்தான் அது என்று யூதர்கள் நம்புவதால், அவர்களும் அங்கே பிரார்த்தனையில் ஈடுபடத் தடையில்லை' என்பது தீர்ப்பு.

கவனிக்கவும். அகழ்வாராய்ச்சித் துறையினர் தமது முடிவுகளை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. அங்கே இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய யூத தேவாலயம் இருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. பிரச்னைக்குரிய இடத்தில் இரு சமயத்தவரும் பிரார்த்தனை செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் உள்நோக்கம், மிக வெளிப்படையானது. யூதர்கள் ஒரு மாபெரும் கலவரத்தை உத்தேசிக்கிறார்கள் என்று அலறினார்கள், அரேபியர்கள்.

காது கொடுத்துக் கேட்க யாருமில்லாத காரணத்தால், அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு அடிக்கடி யூதர்கள் வரத் தொடங்கினார்கள். இதனால் எந்தக் கணமும் அங்கே மதக்கலவரங்கள் மூளும் அபாயம் ஏற்பட்டது. சமயத்தில், வம்புக்காகவே நூற்றுக்கணக்கான யூதர்கள் (பெரும்பாலும் இந்த அணிகளில் காவல்துறையினரே இருந்ததாக முஸ்லிம்களின் சில இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.) மொத்தமாக மசூதிக்குள் நுழைந்து, யூத மதச் சடங்குகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். நாள்கணக்கில்கூட இந்தச் சடங்குகள் நீள்வதுண்டு. அப்போதெல்லாம், அகழ்வாராய்ச்சித் துறையினர் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இம்மாதிரியான தருணங்களில், அந்தப் பகுதியில் கலவரம் மூள்வது சாதாரணமாகிப்போனது. முஸ்லிம்கள், யூதர்களைத் தாக்குவார்கள். பதிலுக்கு யூதர்கள் முஸ்லிம்களைத் தாக்குவார்கள். கடைகள் உடனடியாக மூடப்படும். கற்கள் பறக்கும். பாட்டில்களில் அடைத்த பெட்ரோல், வானில் பறந்து சுவரில் மோதி வெடிக்கும். எப்படியும் ஓரிருவர் உயிரை விடுவார்கள். பலர் காயமடைவார்கள். கிட்டத்தட்ட, இது ஒரு தினசரி நடவடிக்கையாகிப் போனது. புனிதமான நகரம் என்று வருணிக்கப்படும் ஜெருசலேம், உலகின் ஆபத்து மிகுந்த நகரங்களில் ஒன்றாக ஆகிப்போனது.

இதில் உச்சகட்ட சம்பவம் ஒன்று உண்டு. அல் அக்ஸா மசூதி வளாகத்தின் அருகே, ஒரு பள்ளிக்கூடம் உண்டு. யூதர்களின் மதப் பள்ளிக்கூடம் அது. திடீரென்று அந்தப் பள்ளிக்கூடத்தை வெடிமருந்துக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். ஒரே இரவில் லாரிகளில் வெடிபொருள்களைக் கொண்டுவந்து, அங்கே நிரப்பினார்கள். ஒரு சிறு வெடிவிபத்தை 'உண்டாக்கினால்' கூடப் போதும். மசூதி இருந்த இடம், அடையாளம் தெரியாமல் உருக்குலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டது.

இதனால் கலவரமடைந்த முஸ்லிம்கள், உடனடியாக அந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் வெடிபொருள்களை அப்புறப்படுத்தக் கோரி, போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தப் போராட்டத்தை, ஒரு கலவரமாகக் கணக்கில் எடுத்துக்கொண்ட இஸ்ரேல் காவல்துறை, கலவரத்தை அடக்குவதான பெயரில், மசூதியின் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்த ஆரம்பித்தது. இதில் மசூதியில் பல பகுதிகள் சேதமாயின. ஒரு சில உயிர்களைப் பலி வாங்கி, சில கதவு ஜன்னல்களை நாசப்படுத்தி, சுமார் எட்டு மீட்டர் பரப்பளவுக்கு மசூதிச் சுவரையும் இடித்துத் தள்ளியதுடன், இந்தக் கலவர அடக்கல் நடவடிக்கை, ஒரு முடிவுக்கு வந்தது. பள்ளிக்கூட வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்படும் என்று உறுதியளித்துவிட்டு ஒதுங்கிப்போனார்கள். (பிறகு அந்த குண்டுகள் எப்போது அப்புறப்படுத்தப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களில் பள்ளிக்கூடம் இருந்த திசையிலிருந்து, மசூதியை நோக்கி வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ஆனால் சேதமில்லை.)

1982-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் பள்ளிவாசல் தகர்ப்பு முயற்சிகள், புதுப்பரிமாணம் பெற்றன. குறைந்தது வாரம் ஒருமுறையாவது, அந்தப் பகுதியில் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற ஆரம்பித்தது. வாகனங்களில் வந்து இறங்கி மசூதியை நோக்கி குண்டு வீசுவது தவிர, இரவு நேரங்களில் ரகசியமாக, அத்துமீறி உள்ளே புகுந்து, வெடிகுண்டுகளை வைத்துவிட்டுப் போவதும் நடந்திருக்கிறது. ஷிப்ட் முறையில் முஸ்லிம்கள் விழித்திருந்து, இந்தச் சம்பவங்கள் அசம்பாவிதங்களாகிவிடாமல் தடுப்பதற்காகக் காவலில் ஈடுபட்டார்கள்.

அப்படிக் காவலில் ஈடுபட்டவர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. 1982-ம் ஆண்டு தொடங்கி 86 வரையிலான காலகட்டத்தில், அல் அக்ஸா காவல் பணியில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் இளைஞர்களில் மொத்தம் 23 பேர், யூதர்களின் தாக்குதலுக்கு பலியாகியிருக்கிறார்கள். (முஸ்லிம்கள் திருப்பித்தாக்கியதில், இதே சந்தர்ப்பங்களில், இதே காலகட்டத்தில் 16 யூதர்களும் பலியாகியிருக்கிறார்கள்.)

இதில், கலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக்கொண்டு, ராணுவம் உள்ளே புகுந்ததன் விளைவாக இறந்தவர்கள் தனி. உண்மையில் கலவரக்காரர்களைக் காட்டிலும், ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையினால்தான் மசூதி அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பல பகுதிகள் இடிந்து சின்னாபின்னமாயின.

82-ம் வருடம் பிப்ரவரி மாதம் லெஸர் என்கிற யூதர் ஒருவர், தனது உடம்பெங்கும் ஜெலட்டின் குச்சிகளைக் கட்டிக்கொண்டு, மனித வெடிகுண்டாக, பகிரங்கமாக அல் அக்ஸாவுக்குள் நுழைந்தார். முஸ்லிம்கள் கடுமையாகப் போராடி, அவரை அப்புறப்படுத்தினார்கள். இந்தச் சம்பவம் உண்டாக்கிய பாதிப்பில், அடுத்த வருடமே தீவிர யூதர்கள் அடங்கிய குழுவினர் (சுமார் ஐம்பது பேர் கொண்ட குழு), இதேபோல் மனித வெடிகுண்டுகளாக ஒரு நாள் அதிகாலை மசூதிக்குள் நுழைந்தார்கள்.

அதிகாலைப் பிரார்த்தனைக்காக அந்தப் பக்கம் வந்த சில முஸ்லிம்கள், அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்று தடுக்க, அப்போது எழுந்த களேபரத்தில் அத்தனை பேருமே மடிந்துபோனார்கள். நல்லவேளையாக, மசூதி தப்பித்தது.

1984-ம் ஆண்டு ஒரு யூத மதகுரு, மசூதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மசூதியின் மேலே ஏறி, அங்கே யூத தேசியக் கொடியைப் பறக்கவிட்டார். இந்தச் சம்பவம் மிகப்பெரிய கலவரத்துக்கான தூண்டுதலாக அமைந்தது. அந்த யூத மதகுரு, மனநிலை சரியில்லாதவர் என்று இஸ்ரேலிய நீதிமன்றம் சொல்லிவிட்டதைக் கண்டித்து, உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கோபக்குரல் எழுப்பினார்கள். ஜெருசலேம் முழுவதும் வசித்துவந்த முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்க, போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு என்று நகரமே ரணகளமானது. இருபது பேர் இறந்தார்கள். அறுபத்தியேழு பேர் படுகாயமடைந்தார்கள்.

1990-ம் ஆண்டு சாலமன் ஆலயத்தை, மசூதி வளாகத்தில் எழுப்பியே தீருவோம் என்று, அடிக்கல் நாட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. தடுக்கப்போன சுமார் இருநூற்றைம்பது முஸ்லிம்கள், வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தக் கலவரங்களின் உச்சமாக, 2000-ம் ஆண்டு செப்டெம்பரில் சில முக்கிய சம்பவங்கள் நடைபெற்றன. 27-ம் தேதி டேவிட் பிரி (David Biri) என்கிற யூத மதகுருவைச் சில முஸ்லிம்கள் சேர்ந்து கொன்றார்கள். இது, இன்னொரு இண்டிஃபதாவின் ஆரம்பம் என்று இஸ்ரேல் உளவுத்துறை முடிவு செய்துவிட்டது. இந்தச் சம்பவம் நடந்த இருபத்துநான்கு மணி நேரத்துக்குள், இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம், மேற்குக்கரை நகரமான கல்கில்யாவில் நடைபெற்றது. இஸ்ரேலிய காவல்துறையினருடன் இணைந்து, ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியக் காவலர் ஒருவர், தமது சக யூதக் காவலர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

எப்படியும் கலவரம் மூளத்தான் போகிறது என்று எதிர்பார்த்த, அப்போதைய இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, ஏரியல் ஷரோன், அரசியல் காரணங்களை உத்தேசித்து, அல் அக்ஸா மசூதிக்கு ஒரு விசிட் செய்தார்.

இது மிகப்பெரிய பிரச்னைக்கு வித்திட்டுவிட்டது. தீவிர யூதரான ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவதை ஜெருசலேம் நகரத்து முஸ்லிம்கள் விரும்பவில்லை. ஏற்கெனவே பிரச்னைகள் மலிந்த பிராந்தியம் அது. ஏரியல் ஷரோன் அங்கே வரும்பட்சத்தில் நிச்சயம் விபரீதம் நடக்கும் என்று நினைத்தவர்கள், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளே விடமாட்டோம் என்று வழிமறித்து நின்றார்கள்.

ஏரியல் ஷரோன் மசூதிக்குள் நுழைவதற்கு, இஸ்ரேலிய காவல்துறை பாதுகாப்பு அளித்தது. ஷரோன் மசூதிக்குள் நுழைந்தார். வெளியே கலவரம் வெடித்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 15 செப்டம்பர், 2005

தொடரும்....

  • தொடங்கியவர்

86] ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 86

ராணுவத் தளபதியாக உத்தியோகம் பார்த்திருந்தாலும் அடிப்படையில் ஏரியல் ஷரோன், எப்போதுமே அரசியல்வாதிதான். பிரதமராவதற்கு முன்பு, அவரது அரசியல் எப்படி இருந்தது என்பதை, ஒரு வரியில் விளக்கிவிடலாம். அவர் இஸ்ரேலின் லாலு பிரசாத் யாதவ். அதிரடிகளுக்குப் பெயர்போனவர். ஜனநாயக சௌகரியத்தில் நினைத்துக்கொண்டால் பேரணி, ஊர்வலம் என்று அமர்க்களப்படுத்திவிடுவது, அவரது இயல்பாக இருந்தது. பெரிய அளவில் - மிகப்பெரிய அளவில் ஓர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, அவர் தீட்டிய திட்டம்தான், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவது என்பது.

அதன்மூலம் யூதர்களின் நன்மதிப்பை அழுத்தந்திருத்தமாகப் பெறுவது, அதை அடிப்படையாக வைத்தே இஸ்ரேலின் பிரதமராகிவிடுவது என்கிற அவரது கனவு, அச்சுப்பிசகாமல் பலித்ததை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், அன்றைக்கு அந்தச் சம்பவம் உண்டாக்கிய பாதிப்பு, பாலஸ்தீன் சரித்திரத்தில் அழிக்கமுடியாததொரு மாபெரும் கறையாகிப்போனதும் உண்மை.

ஏரியல் ஷரோன், அல் அக்ஸாவுக்கு வருகை தரத் திட்டமிட்டிருந்த தினத்தில், ஒட்டுமொத்த ஜெருசலேம் மக்களும் அந்தப் பிராந்தியத்தில் நிறைந்து குவிந்துவிட்டார்கள். ஏற்கெனவே, அரசுக்கு விண்ணப்பித்து, 'முறைப்படி' அனுமதி பெற்றுத்தான் அவர் அந்தத் 'தீர்த்தயாத்திரை'யை மேற்கொண்டிருந்தார். ஆகவே, முன்னதாகவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று அரண்கள் போல் நகரக் காவல் படையினர், துணை ராணுவப் படையினர், மொஸாட் உளவுப் பிரிவின் சிறப்புக் காவல் அதிகாரிகள் மசூதியைச் சூழ்ந்து காவல் காக்க, ஏரியல் ஷரோன் அங்கே வந்து சேர்ந்தார்.

இறங்கியவருக்கு, முதலில் கிடைத்தது ஒரு கல்லடி. எங்கிருந்து எப்படிப் பறந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்யவெல்லாம் நேரமில்லை. ஒரு கல். ஒரே ஒரு கல். அவ்வளவுதான். சரியாக அவரது காலடியில் வந்து விழுந்தது. நகத்தில் பட்டிருக்குமோ என்னவோ. ஆனால், தாக்குதல் ஆரம்பமாகிவிட்டதாக, காவல்துறையினர் தற்காப்பு யுத்தத்துக்கு ஆயத்தமாக, அதுவே போதுமானதாக இருந்தது.

நிறையப்பேர் கறுப்புக்கொடி காட்டினார்கள். ஷரோனுக்கு எதிராக கோஷமிட்டார்கள். தடுப்புகளை மீறி வந்து, அவரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், காவல்துறையினர் யாரையும் அருகே நெருங்க விடவில்லை. இது, முஸ்லிம்களின் கோபத்தை மிகவும் கிளறிவிட்டது. வன்மத்தை நெஞ்சுக்குள் வைத்துப் பூட்டி, தொலைவில் நின்றபடியே பல்லைக் கடித்துக்கொண்டிருந்தார்கள்.

'நான் வம்பு செய்ய வரவில்லை; அன்பை விதைக்கவே வந்தேன்' என்று கவித்துவமாகப் பேசி கைதட்டல் பெற்றுக்கொண்டார் ஏரியல் ஷரோன்.

அவரது வருகையின் உண்மையான நோக்கம், அன்பு விதைப்பதெல்லாம் இல்லை. அல் அக்ஸா மசூதி வளாகம் யூதர்களுக்குச் சொந்தமானதுதான்; நாம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மசூதியை இடித்துவிட்டு, நமது தேவாலயத்தைக் கட்டிவிடலாம் என்று சொல்லாமல் சொல்லுவதுதான்! ஜெருசலேம் முழுமையாக, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை, யூதர்களுக்குப் புரியவைப்பதற்காகத்தான் அவர் அந்த முயற்சியை மேற்கொண்டார்.

ஏரியல் ஷரோன் என்கிற ஒரு மனிதர், சுமார் பதினைந்து நிமிடங்கள் நடத்திய, அந்த ஓரங்க நாடகத்துக்குப் பாதுகாவலர்களாக வந்திருந்தவர்களின் எண்ணிக்கை, மொத்தம் ஆயிரத்து இருநூறு. பார்வையாளர்களான பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எழுபத்தைந்தாயிரம் பேர்.

ஷரோன் வந்து திரும்பும்வரை அதாவது, அந்தப் பதினைந்து இருபது நிமிடங்கள் வரை, அங்கே எந்த விபரீதமும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. காவலர்கள் மிகத் திறமையாகச் செயல்பட்டு, ஒரு எறும்புகூடக் கிட்டே வரமுடியாதபடிதான் பார்த்துக்கொண்டார்கள்.

ஆனால், அவர் திரும்பிய மறுகணமே ஜெருசலேம் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டது. அடிபட்ட புலிகளாக ரகசியமாகக் கூடிப் பேசினார்கள், முஸ்லிம்கள். புனிதமான அல் அக்ஸா மசூதி வளாகத்தை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதற்காகவே, ஏரியல் ஷரோன் அங்கு வந்து போனார் என்பதில், அவர்களுக்கு இரண்டாவது கருத்தே இல்லை. ஆதிக்க சக்திக்கும் பாதிக்கப்பட்ட வர்க்கத்தினருக்கும், காலம் காலமாக நடந்து வரும் யுத்தத்தின் அடுத்த பரிமாணம், அந்தக் கணத்தில் நிகழலாம் என்பது போலச் சூழல் மோசமடைந்துகொண்டிருந்தது.

முஸ்லிம்கள், எந்தத் தலையை முதலில் உருட்டப்போகிறார்கள் அல்லது எந்தக் கிராமத்தில் புகுந்து, தீவைக்கப்போகிறார்கள் என்பதுதான் கேள்வி. பதில் எப்போது கிடைக்கும் என்று உலகமே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அது நடந்தது..

முதல் உயிரை யூதர்களே பறித்தார்கள்.

எப்படியும் முஸ்லிம்கள் தாக்கத்தான் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில், தாங்களே முந்திக்கொண்டால், சேதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்த ஜெருசலேம் நகர யூதர்கள், அங்கிருந்த முஸ்லிம் குடியிருப்புகளின்மீது, சற்றும் எதிர்பாராவிதமாகத் தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள். கற்கள் பறந்தன. தீப்பந்தங்கள் பாய்ந்து சென்று பற்றிக்கொண்டன. கதவுகள் இடித்து உடைக்கப்பட்டு, வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. தப்பியோடியவர்களைப் பிடித்து இழுத்து, கழுத்தை அறுத்தார்கள். சிலர் கைத்துப்பாக்கியால் சுட்டார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எல்லாம் நடந்தது. அரை நாள் பொழுதுதான். கலவர மேகம் சூழ்ந்தது தெரியும். முஸ்லிம்கள் தமது கலவரத்தை எங்கிருந்து தொடங்குவார்கள் என்று அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது, யூதர்கள் அதனை ஆரம்பித்துவைத்ததோடு மட்டுமல்லாமல், அன்று இரவுக்குள்ளாகவே நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை ரத்தம் சொட்டச்சொட்டத் தலைதெறிக்க ஓடவைத்தார்கள். அப்புறம் நடந்ததுதான், மேலே சொன்ன தீவைப்பு இத்தியாதிகள்.

இத்தனை நடந்தபோதும், காவலர்கள் யாரும் அங்கே வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். எல்லாம் முடிந்து நகரமே மயானபூமியாகக் காட்சியளித்தபோதுதான், முதல் போலீஸ் வண்டி வந்து நின்றது. பதினேழு நிமிடங்கள் பிரதான மார்க்கெட்டில் ஒப்புக்கு ஒரு விசாரணை நடந்தது.

கொதித்துவிட்டது முஸ்லிம் உலகம். அன்றிரவே தீர்மானித்து, மறுநாள் காலையே தமது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாகக் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள். இங்கே மேற்குக் கரையில் ஒரு பேரணி. அங்கே காஸாவில் ஒரு பேரணி.

தோதாக அன்றையதினம், முஹம்மத் அல் துரா என்கிற பன்னிரண்டே வயதான சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சிறு துப்பாக்கிச் சண்டையின் குறுக்கே போய் மாட்டிக்கொண்டுவிட, சிறுவன் பலியாகிப் போனான்.

இதுவும், முஸ்லிம்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும், வெகுண்டெழச் செய்த சம்பவம் அது.

இதன் தொடர்ச்சியாகத்தான், சாதாரண கண்டனப் பேரணியாகத் தொடங்கிய அந்த 'அல் அக்ஸா இண்டிஃபதா', ஒரு மாபெரும் கலவர ரகளையின் தொடக்கப்புள்ளி ஆனது. எங்கிருந்துதான் முஸ்லிம்களுக்குக் கற்கள் கிடைத்தனவோ தெரியவில்லை. பேரணியெங்கும் கற்களே பறந்தன. கண்ணில் பட்ட அத்தனை இஸ்ரேலியக் காவலர்களையும் அடித்தார்கள். துரத்தித் துரத்தி அடித்தார்கள். பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிப் பற்றவைத்துத் தூக்கித் தூக்கி வீசினார்கள். யூதக் கடைகள், கல்வி நிலையங்கள், வீடுகள் எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. போகிற வழியிலெல்லாம், முத்திரை பதித்துக்கொண்டே போனார்கள்.

இத்தனைக்கும், முஸ்லிம்கள் தரப்பில் இழப்புகள் அம்முறை மிக அதிகமாக இருந்தது. இண்டிஃபதா தொடங்கிய முதல் ஆறு தினங்களிலேயே, சுமார் அறுபத்தைந்து பேரை இஸ்ரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொன்றிருந்தார்கள். இவர்கள் தவிர, சுமார் 2,700 பேர் நடக்கக்கூட முடியாத அளவுக்குக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீதியெங்கும் ரத்தக் கறையுடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் விழுந்துகிடந்த காட்சிகளை, சர்வதேச மீடியா கர்ம சிரத்தையுடன் ஒளிபரப்பியது.

அக்டோபர் 12-ம் தேதி இரண்டு இஸ்ரேலிய போலீஸார், சிவிலியன் உடையில் ரமல்லா நகருக்குள் புகுந்தார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொண்ட பாலஸ்தீன் அத்தாரிடி காவலர்கள், உடனடியாகக் கைது செய்து சிறையில் தள்ளினார்கள். இந்தச் சம்பவம், மேற்குக் கரையில் ஒப்புக்குக் காவலர்கள் என்கிற பெயருடன், பொழுதுபோக்கிக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலருக்கு, மிகுந்த சலிப்பையும் வெறுப்பையும் உண்டாக்கின. அவர்கள், காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கே பணியில் இருந்த இஸ்ரேலியக் காவலர்கள் அத்தனை பேரையும் சுட்டுக்கொன்று, பிணங்களைத் தாங்களே தூக்கி வந்து வீதியில் வீசி எறிந்தார்கள்.

தற்செயலாக, அந்தப் பக்கம் படமெடுத்துக்கொண்டிருந்த ஒரு இத்தாலி டி.வி. குழுவினர், இந்தக் காட்சியைப் படமெடுத்து ஒளிபரப்பிவிட, ஒட்டுமொத்த யூதகுலத்தவரும், பாலஸ்தீன் அரேபியர்களை ஒழித்துக்கட்ட, வரிந்துகட்டிக்கொண்டு, களத்தில் குதித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் அபாயம் தெரியவரவே, இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி புரியும் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில், விமானத் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.

இந்தக் களேபரங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில், இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வந்தது. வருடம் 2001, பிப்ரவரி மாதம்.

தொழிலாளர் கட்சித் தலைவர் ஈஹுத் பாரக், புகழ்பெற்ற மக்கள் தலைவர். எப்படியும் அவர் தலைமையிலான ஆட்சிதான் அமையும் என்று உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சற்றும் நம்பமுடியாதபடி லிகுத் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏரியல் ஷரோன் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

எல்லாம், அவர் அல் அக்ஸா மசூதிக்குள் புகுந்து நடத்திய அரசியல் நாடகத்தின் விளைவு. யூதர்களின் தேவதூதரே அவர்தான் என்பது போல், திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டது அப்போது. யூதர்கள் இழந்த தம் சாலமன் தேவாலயத்தை மீண்டும் கட்டவேண்டுமென்றால், ஜெருசலேத்தை அவர்கள் நிரந்தரமாகத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றால், ஏரியல் ஷரோனை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே முடியும் என்று பிரசாரம் செய்யப்பட்டிருந்தது.

ஷரோனும் மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். 'எனக்கு யார் மீதும் அனுதாபங்கள் ஏதுமில்லை. இஸ்ரேல் மக்களுக்காக மட்டுமே நான் குரல் கொடுப்பேன், போராடுவேன்.''

போதாது? பிரதமராகிவிட்டார்.

மே மாதம் 7-ம் தேதி ஒரு சம்பவம் நடந்தது. நடந்துகொண்டிருந்த சம்பவங்களுக்கெல்லாம், சிகரமானதொரு சம்பவம்.

பாலஸ்தீன் அத்தாரிடி பொறுப்பில் இருந்த காஸா பகுதியின் கடல் எல்லைக்குள் 'சந்தோரினி' என்றொரு கப்பல் வந்துகொண்டிருந்தது. அந்தக் கப்பலை இஸ்ரேலியக் கடற்படை அதிகாரிகள், சுற்றி வளைத்துச் சோதனை போட்டார்கள். ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அதிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும், 'Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP - GC)' என்கிற அமைப்பின் தலைவரான அஹமத் ஜிப்ரில் என்பவரின் ஆர்டரின் பேரில், காஸா துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்த ஆயுதங்கள். அவற்றின் மொத்த மதிப்பு பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று, மதிப்பிட்ட அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

காஸா துறைமுகத்துக்குச் சற்றுத்தள்ளி ஒதுக்குப்புறமான கடல் பகுதியில் கப்பலை நிறுத்தி, படகுகள் மூலம் அவற்றை எடுத்துச் சென்று பாலஸ்தீன் அத்தாரிடி அதிகாரிகளிடம் சேர்ப்பிக்க, உத்தரவு இருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

மிகவும் வெளிப்படையாகச் சொல்லுவதென்றால், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரானதொரு முழுநீள யுத்தத்துக்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதே இதன் பொருள்.

இதை பாலஸ்தீனியர்களேகூட நம்பமாட்டார்கள். அராஃபத், என்றைக்கு பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகி, மேற்குக் கரை நகரங்களையும் காஸாவையும் ஆளத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே தமது போராளி முகத்தைக் கழற்றி வைத்துவிட்டார் என்பதுதான், பாலஸ்தீனியர்களின் பிரதானமான குற்றச்சாட்டு. ஆனால், இந்த விஷயத்தில் இஸ்ரேலிய கடற்படை அதிகாரிகள் சொன்ன தகவல், முற்றிலும் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது?

இஸ்ரேல் வேறு ஏதாவது சதித்திட்டம் தீட்டுகிறதா என்ன? யாருக்கும் அப்போது புரியவில்லை.

தொடரும்....

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 18 செப்டம்பர், 2005

  • தொடங்கியவர்

87] யுத்தம்தான் என்று தீர்மானமாகிவிட்டது

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 87

பாலஸ்தீன் அரேபியர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக, யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதற்கான அரசியல் காரணங்களை விளக்க அவசியமே இல்லை. முன்பே பார்த்ததுபோல், அராஃபத்தும் சரி, அவரது இயக்கமும் சரி... மதத்தை முன்வைத்து யுத்தம் மேற்கொண்டதில்லை என்பது ஒன்று. இரண்டாவது, ஹமாஸ் போன்ற இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இடைக்கால, தாற்காலிக ஒப்பந்தங்கள் செய்துகொள்வது என்பது சாத்தியமில்லாத விஷயம். உட்கார்ந்து பேசுவதற்கு, ஏதேனும் ஓர் உடன்படிக்கைக்கு ஒத்துவரக்கூடிய ஒரே நபர், அராஃபத். இதனால்தான் அவருடன் ஓஸ்லோ ஒப்பந்தம் செய்துகொண்டு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப்பொறுப்பேற்று, மேற்குக் கரையையும் காஸாவையும் நிர்வகிக்க அனுமதி அளித்தார்களே தவிர, உண்மையிலேயே பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை உருவாக்கித் தருகிற எண்ணமெல்லாம், இஸ்ரேலுக்கு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

அராஃபத்தின் சுதந்திர பாலஸ்தீன் பிரகடனமோ, அவரது தலைமையில் நடைபெற்ற ஆட்சியோ, பாலஸ்தீன் மக்கள் மத்தியில் பெரிய எழுச்சி எதையும் உண்டாக்கவில்லை. இரண்டு நகரங்களின் ஆட்சி அதிகாரம் கைவசமிருப்பது, பாலஸ்தீன் விடுதலை என்கிற நீண்டதூர இலக்குக்கு, எந்த வகையிலும் வலு சேர்க்கப்போவதில்லை என்றே, அவர்கள் கருதினார்கள்.

முஸ்லிம் இனத்தவரின் இந்த அபிப்பிராயத்தை, இஸ்ரேல் அரசு மிகக் கவனமாக உற்று நோக்கிவந்தது. பெரும்பாலான பாலஸ்தீன் முஸ்லிம்கள் அராஃபத்தைத்தான் தமது தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்றபோதும், அவர்களுக்கும் ஓரெல்லை வரை அவர்மீது அதிருப்தி இருக்கவே செய்தது என்பதுதான், இஸ்ரேல் உளவுத் துறையின் தீர்மானம். இதற்காக, ஏராளமான கிராமத் தலைவர்கள், சமூக சேவகர்கள், பொது மருத்துவமனை டாக்டர்கள், பள்ளி ஆசிரியர்கள், வியாபாரிகள் ஆகிய தரப்பில் ரகசியமாக, விசாரிப்பது தெரியாமல் விசாரித்து, தகவல் சேகரித்து, மிகப்பெரிய அறிக்கையே தயாரித்தது மொஸாட்.

இஸ்ரேல் உளவுத் துறையின் முடிவு என்னவென்றால், அராஃபத் மீது அரபுகளுக்கும் அதிருப்திதான். ஆகவே, அவரைக் குறிவைத்துத் தாக்குதல் தொடங்கினாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், அராஃபத், பாலஸ்தீனின் மகாத்மாவாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது; அவரும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான்; ஆகவே, அரசு என்னவிதமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கத் தயங்கவேண்டாம்!

இதற்குப் பிறகுதான், ஆயுதக் கடத்தல் விவகாரங்களில் அராஃபத்தை சம்பந்தப்படுத்த முடிவு செய்தது இஸ்ரேல் அரசு.

காஸா துறைமுகத்துக்கு அருகே, பிடிக்கப்பட்ட ஆயுதக் கப்பல் விவகாரம், ஒரு பக்கம் சூடுபிடித்துக்கொண்டிருக்க, அதே போன்ற வேறொரு சம்பவமும் உடனடியாக அரங்கேறியது.

ஜனவரி, 2002-ம் ஆண்டு, ஈரானிலிருந்து ரகசியமாக பாலஸ்தீன் கடல் எல்லைக்குள் புகுந்த ஒரு பெரிய படகை, இஸ்ரேலிய கமாண்டோப் படைப் பிரிவான ஷி13 (Shayetet - 13. இஸ்ரேலின் மிக முக்கியமான மூன்று படைப்பிரிவுகளுள் முதன்மையானது இது.) வழிமறித்து, பரிசோதித்தது. அந்தப் படகின் பெயர் கரைன் ஏ. (Karine கி) படகில் இருந்தவர்களில் சிலர், கடலில் குதித்து தப்பித்துவிட, ஒன்றிரண்டு பேர் மட்டும் மாட்டிக்கொண்டனர். படகைப் பரிசோதித்ததில், ஏராளமான நவீன ஆயுதங்களும் வெடிமருந்து மூட்டைகளும் அதில் இருக்கக் கண்டனர். பெட்டிப் பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள், கைத்துப்பாக்கிகள், தானியங்கித் துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்ச்சர்கள் என்று, அந்தப் படகு முழுவதும் ஆயுதங்கள் அடுக்கப்பட்டிருந்தன.

படகில் வந்தவர்களில், தப்பித்தவர்கள் போக மிஞ்சிய ஓரிருவரிடம் நடத்திய விசாரணையில், இரண்டு விஷயங்கள் தெரியவந்தன. முதலாவது, ஈரானிலிருந்து கடத்திவரப்பட்ட அந்த ஆயுதங்கள் அனைத்தும், பாலஸ்தீன் விடுதலை இயக்கப் போராளிகளுக்குத்தான் போகின்றன. இரண்டாவது, இந்தக் கடத்தல் நடவடிக்கையில், பாலஸ்தீன் அத்தாரிடி உயர்மட்ட அதிகாரிகள் சிலருக்கு, நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

படகில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இஸ்ரேல் அரசு ஓர் அறிக்கை தயாரித்தது. அதன் சாரம் இதுதான்:

'பாலஸ்தீன் அத்தாரிடி, ஓர் அதிகாரபூர்வ அரசியல் அமைப்பாக இருந்து, மேற்குக்கரையையும் காஸாவையும் ஆண்டுவந்தபோதிலும், தனது பழைய தீவிரவாத முகத்தை இன்னும் தொலைத்துவிடவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் கடத்திச் சேகரிக்கிறார்கள் என்றால், எப்படியும் பெரிய அளவில் ஒரு யுத்தத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். யாசர் அராஃபத்தின் தலைமையில் இயங்கும் ஒரு சிறு அமைப்பான பாலஸ்தீன் அத்தாரிடியின் மிக மூத்த உறுப்பினர்களே, இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்னும்போது, அராஃபத் மீது சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.''

தனது இந்த முடிவை இஸ்ரேல் அரசு, முதலில் அமெரிக்க அதிபருக்கு அனுப்பிவைத்தது. காரணம், ஓஸ்லோ ஒப்பந்தத்தை அராஃபத் மீறுகிறார் என்று, அமெரிக்க அதிபர் வாயால் முதலில் சொல்லவைக்க வேண்டுமென்பதுதான்.

ஏற்கெனவே, செப்டெம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், பெண்டகன் ராணுவத் தலைமையகம் மீதும், ஒசாமா பின்லேடனின் அல் கொய்தா இயக்கத்தினர் நிகழ்த்திய தாக்குதலில், நிலைகுலைந்து போயிருந்தது அமெரிக்கா. தீவிரவாதத்துக்கு எதிரான, உலகளாவிய யுத்தத்தை ஆரம்பித்துவைத்து, ஆப்கன் மீதும் ஈராக் மீதும் கவனம் குவித்திருந்தது. 'இஸ்லாமியத் தீவிரவாதம்' என்கிற பிரயோகத்தை உருவாக்கி, எல்லாவிதமான தீவிரவாதச் செயல்களுக்கும் வலுக்கட்டாயமாக, ஒரு மத அடையாளத்தைச் சேர்த்து, அரசியல் ஆட்டம் ஆடத் தொடங்கியிருந்தது.

ஆகவே, தனது நட்பு நாடான இஸ்ரேல் விஷயத்தில் மட்டும் விட்டுக்கொடுக்க, அமெரிக்க அதிபர் புஷ் தயாராக இல்லை. உடனடியாக இஸ்ரேலின் கருத்தைத் தாம் ஆமோதிப்பதாக அறிவித்தார். பாலஸ்தீனில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஒடுக்கியே ஆகவேண்டும், ஒப்பந்தம் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என்று சொன்னார்.

முதல் நாள் வரை மதச்சார்பற்ற முன்னாள் போராளியாக, மதச்சார்பற்ற இந்நாள் அரசியல் தலைவராக வருணிக்கப்பட்டுக்கொண்டிருந்த யாசர் அராஃபத், அந்தக் கணம் முதலே 'இஸ்லாமியத் தீவிரவாதி'களின் தலைவர் ஆகிப்போனார்!

ஒரு புறம், அல் அக்ஸா இண்டிஃபதா சூடுபிடித்துக்கொண்டிருக்க, மறுபுறம், பாலஸ்தீன் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், முழு வீச்சில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களையும் தொடங்குவதற்கு, இதுவே இன்னொரு தொடக்கப் புள்ளியாகிப்போனது.

மார்ச் மாதம் 27-ம் தேதி நெதன்யா என்கிற இடத்தில், 'பார்க்' என்கிற ஓட்டலின் புல்வெளியில், சுமார் 250 பேர் கூடி விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். Passover விருந்து என்று அதற்குப் பெயர். அன்று, ஒரு யூத விடுமுறை தினம். மதச் சடங்குகளோடு கலந்த கொண்டாட்டங்கள் நடக்கும்.

அப்படியொரு விருந்துக்கூட்டத்துக்குள் ஒரு ஹமாஸ் போராளி, உடம்பெங்கும் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு போய் வெடிக்கச் செய்து, தானும் இறந்து, அங்கிருந்தவர்களுள் முப்பது பேரையும் கொன்றான்.

இதை ஒரு 'சிறந்த' தொடக்கமாகக் கருதிய அனைத்துப் போராளி இயக்கங்களும் தம் பங்குக்கு, ஆங்காங்கே குண்டு வெடிக்கத் தொடங்கிவிட, அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழுவதும், இஸ்ரேலில் ஏராளமான வெடிச் சம்பவங்கள் அரங்கேறின. தினசரி, குறைந்தது பத்துப் பேராவது பலியானார்கள். எங்கு பார்த்தாலும் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அரசுக் கட்டடங்கள் திடீர் திடீரென்று தகர்க்கப்பட்டன. பள்ளிப் பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியோர் என்று வேறுபடுத்திப் பார்க்கவே இல்லை. கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், போராளிகள் தாக்குதல் நிகழ்த்தத் தவறவேயில்லை.

இதன் விளைவு, ஏப்ரலில் மட்டும் இஸ்ரேலில் மொத்தம் 130 சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள்.

ஏரியல் ஷரோன் யோசித்தார். கடுமையான நடவடிக்கை மூலம்தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்று தீர்மானித்து, மேற்குக் கரைப் பகுதியில் முழு வேகத்தில், ராணுவ நடவடிக்கை ஆரம்பமாக உத்தரவிட்டார்.

Operation Defensive Shield என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை, பார்க் ஓட்டல் சம்பவம் நடந்து முடிந்த இருபத்து மூன்றாவது மணி நேரத்தில் ஆரம்பமானது. தேசமெங்கும், உடனடியாக அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு, இருபதாயிரம் ரிசர்வ் காவல் படையினர், மேற்குக் கரையில் கொண்டு குவிக்கப்பட்டனர்.

பாலஸ்தீன் சரித்திரத்தில், இத்தனை பெரிய படை மேற்குக் கரையில் இதற்கு முன்பு குவிக்கப்பட்டதில்லை. 1967-ம் ஆண்டு நடைபெற்ற ஆறுநாள் யுத்தத்தின்போது கூட, இந்த எண்ணிக்கை இல்லை. ஒட்டுமொத்த பாலஸ்தீன் அரேபியர்களையும் ஒழித்துக்கட்டும் வேகத்துடன் யூதக் காவலர்களும், துணை ராணுவப் படைப் பிரிவினரும் அங்கே கூடி முற்றுகையிட்டு நின்றார்கள்.

முன்னதாக, ஏரியல் ஷரோன், 'நெஸட்'(Knesset - இஸ்ரேல் பாராளுமன்றம்) அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, மேற்குக் கரையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளுக்குத் தாம் அளித்துள்ள கட்டளைகள் குறித்து ஓர் உரையாற்றினார்.

1. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு, அடைக்கலம் தரும் அத்தனை நகரங்களையும் கிராமங்களையும், முற்றுகையிட வேண்டும்.

2. முடிந்தவரை தீவிரவாதிகளைக் கைது செய்யவேண்டும். தவிர்க்க முடியாமல் போனால், சுட்டுக்கொல்லலாம்.

3. தீவிரவாதிகளுக்குப் பண உதவி, ஆயுத உதவி, தங்குமிட உதவிகள் செய்வோரும் தீவிரவாதிகளாகவே கருதப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும்.

4. தீவிரவாதிகளின் ஆயுதக் கிடங்குகளைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும். ஆயுதங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

5. பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு கூடாது என்று சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த பாலஸ்தீன் அரேபியர்களையுமே இஸ்ரேலிய அரசு, தீவிரவாதிகள் பட்டியலில்தான் சேர்த்திருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெத்லஹெம், ஜெனின், நப்லஸ், ரமல்லா. இந்த நான்கு நகரங்கள்தான் இஸ்ரேலியப் படையின் முதல் இலக்காக இருந்தது. ஹெப்ரான், ஜெரிக்கோ நகரங்களை என்ன காரணத்தினாலோ, அவர்கள் தவிர்த்திருந்தார்கள். (ஜெரிக்கோவில் இஸ்லாமிக் ஜிகாத் போராளி இயக்கத்தினருக்குப் பலமான வேர்கள் உண்டு.)

எல்லாம் தயார். எல்லாரும் தயார். யுத்தம்தான் என்று தீர்மானமாகிவிட்டது. உள்நாட்டு யுத்தம். இஸ்ரேலியத் தரப்பில் இது 'தீவிரவாத ஒழிப்பு' என்று மட்டுமே சொல்லப்பட்டது. பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை இது, இன்னொரு சுதந்திரப் போர்.

அராஃபத் அப்போது ரமல்லாவில்தான் இருந்தார். தன்னால் இயன்றவரை அமைதிக்காகக் குரல் கொடுத்துப் பார்த்தார். இஸ்ரேலிய ராணுவத்தின் உண்மையான நோக்கம், தன்னைக் கைதுசெய்வதுதான் என்பது அவருக்குத் தெரியும். அவருக்கு மூன்று வழிகள் இருந்தன. ஒன்று, வெளி நாட்டுக்குப் போய்விடுவது. அல்லது அங்கேயே இருந்து யுத்தம் செய்வது. மூன்றாவது, யுத்தம் செய்து மீண்டும் தன்னையொரு போராளியாக வெளிப்படுத்தாமல், அமைதி நடவடிக்கையின் தொடர்ச்சியாகத் தன்னைக் கைது செய்ய அனுமதிப்பது!

வெளிநாட்டுக்குப் போய்விடுவது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை. தவிர, ஒரு போராளி இயக்கத் தலைவர் அப்படி வெளிநாட்டில் தங்கியிருந்து போராட்டத்தை நடத்துவதும் ஒன்றும் புதிய விஷயமல்ல. அராஃபத்தே தன் வாழ்வின் பெரும்பகுதியை அப்படிக் கழித்தவர்தான். ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு முன்பு, சிரியாவிலும் லெபனானிலும் துனிஷியாவிலும்தான், அவர் பயிற்சிமுகாம்கள் நடத்திக்கொண்டு, பாலஸ்தீன் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்.

ரமல்லாவிலேயே தங்கியிருந்து, போராளிகளுக்கு ஆதரவாக அவரும் துப்பாக்கி ஏந்தியிருந்தால், ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களும் அவர் மீது கொண்டிருந்த கசப்புகளை மறந்துவிட்டு, அராஃபத்தை முழு மனத்துடன் ஆதரிக்க முன்வருவார்கள்.

இந்த இரண்டையும் செய்யாமல், பிரச்னையை அரசியல் ரீதியிலேயே அணுகுவது, அதாவது கைது செய்ய வந்தால், முரண்டு பிடிக்காமல் சம்மதிப்பது என்கிற முடிவை எடுத்தால் மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே என்றாலும், இறுதிவரை, மேற்கொண்ட உறுதியை மீறாத ஒரு நேர்மையான அரசியல் தலைவராக அடையாளம் காணப்படலாம்.

மூன்று வழிகள். அராஃபத் யோசித்தார். அவர் யோசிக்கத் தொடங்கும்போதே, வெளியே இஸ்ரேலிய ராணுவத்தினர் வந்து குவிய ஆரம்பித்திருந்தார்கள்.

தொடரும்....

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 22 செப்டம்பர், 2005

  • தொடங்கியவர்

88] பாலஸ்தீனின் தந்தை யாசர் அராஃபத்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 88

யாசர் அராஃபத்தை, 'பாலஸ்தீனின் தந்தை' என்று தயங்காமல் சொல்லமுடியும். பாலஸ்தீன் விடுதலைக்காக அவர் எடுத்த முயற்சிகள், பட்ட சிரமங்கள், செய்துகொண்ட சமரசங்கள், விட்டுக்கொடுத்த சம்பவங்கள், கெஞ்சிக் கூத்தாடிய தருணங்கள், வெகுண்டெழுந்து தோள்தட்டிய உணர்ச்சி மயமான காட்சிகள் எல்லாம், கணக்கு வழக்கில்லாதவை. ஆனால் நமக்குத் தெரிந்த 'தேசத்தந்தை' படிமத்துடன், அராஃபத்தை ஒப்பிடமுடியாது.

இதற்குப் பல நுணுக்கமான காரணங்கள் உண்டு. முதலில் காந்தியைப் போல், அராஃபத், ஓர் அஹிம்சைவாதி அல்ல. அவர் ஆயுதப்போராளி. வயதான காலத்தில்தான், அவர் பேச்சுவார்த்தைகளில் அக்கறை காட்டினார். இரண்டாவது, காந்தி பதவிகள் எதிலும் அமர்ந்தவரல்லர். சுதந்திரம் அடைந்த தினத்தில்கூட வங்காளக் கலவரங்களுக்கு நிவாரணம் தேடி, நவகாளி யாத்திரை போனாரே தவிர, டெல்லியில் கொடியேற்றி, மிட்டாய் சாப்பிட்ட வைபவங்களில், அவர் கலந்துகொள்ளவில்லை. மூன்றாவதும் மிக முக்கியமானதுமான காரணம், காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தது. நல்லது கெட்டது எதுவானாலும், ஊருக்குத் தெரிவித்துவிட்டுத்தான், அவர் தம் வீட்டுக்கே சொல்வார். அராஃபத்தின் வாழ்க்கை, ரகசியங்களாலானது. அவரது பல நடவடிக்கைகள் குறித்து, இன்றுவரை சரியான, ஆதாரபூர்வமான தகவல்கள் கிடையாது.

இத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும், அவரும் தேசத்தந்தைதான். இன்னும் பிறக்காத, என்றோ ஒருநாள் பிறக்கப்போகிற, ஒரு தேசத்தின் தந்தை.

இந்த ஒப்பீடு இங்கே செய்யப்படுவதற்கு, ஒரு காரணம் உண்டு. இரண்டாயிரமாவது ஆண்டு பிறந்தபிறகுதான் பாலஸ்தீன் பிரச்னை, ஒரு புதுப்பரிமாணம் எடுத்தது. நிறைய உயிரிழப்புகளும், கலவரங்களும், தீவைப்புச் சம்பவங்களும், கல்வீச்சு வைபவங்களும் தினசரி நடக்கத் தொடங்கின. 2001 மார்ச் மாதம், 'பார்க்' ஓட்டலில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள், இஸ்ரேல் அரசு முழுவீச்சில் அரேபியர்களை அடக்குவதற்காக அனுப்பிய ராணுவத்தின் வெறித்தனமான வேட்டை, அப்போது கைதான ஏராளமான அரபுகளின் கோபம், அதன் விபரீத விளைவுகள் இவையெல்லாம், இதற்குமுன் உலக சரித்திரத்தில், வேறெங்குமே நடந்திராதவை.

அப்படியொரு களேபரம் நடந்துகொண்டிருந்தபோது, பாலஸ்தீன் அரேபியர்களின் ஒரே அரசியல் முகமான, அராஃபத்தின் நடவடிக்கைகள் எதுவுமே, வெளிப்படையாக இல்லை என்பது வருத்தமான உண்மை.

ஒரு பக்கம், அமைதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டேதான் இருந்தார். மறுபக்கம், இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக மல்லுக்கட்டிக்கொண்டிருந்த பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்கும் தம்மாலான உதவிகளை, அவர் செய்துகொண்டே இருந்தார். இது, அனைவருக்குமே தெரியும் என்றபோதும், தொடர்ந்து அவர் தமது போராளி இயக்க ஆதரவு நிலை குறித்து, மறுப்புத் தெரிவித்து வந்தது, பொருந்தாமலேயே இருந்துவந்தது. அவர் வெளிப்படையாகவே, இஸ்ரேலுக்கு எதிரான நேரடி யுத்தத்தைத் தலைமைதாங்கி நடத்தலாமே என்றுதான் அரபுலகம் கேட்டது. அராஃபத், அதற்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்ததற்கு, ஒரே ஒரு காரணம்தான்.

ஒருவேளை அமைதிப் பேச்சுக்கள் மூலம் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்குமானால், அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது.

நல்லது நடக்க வேண்டும் என்பதுதான், அவரது நோக்கம் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கான வழி இதுதான் என்று தெளிவாக, தீர்மானமாக அவரால் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.

இல்லாவிட்டால் ஓஸ்லோ ஒப்பந்தப்படி அமைதிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகப் பொறுப்பேற்று, மேற்குக் கரையையும் காஸாவையும் ஒரு பக்கம் ஆண்டுகொண்டு, இன்னொரு பக்கம், போராளி இயக்கங்களுக்கு உதவி செய்ய எப்படி முடியும்?

அவர், போராளி இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று, இஸ்ரேல்தானே குற்றம் சாட்டியது என்று கேட்கலாம்.

ஒரு சம்பவம் நடந்தது. அதுதான் எல்லாவற்றையும் வெட்டவெளிச்சமாக்கியது. ஆண்டு 2002. அந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே, அராஃபத்தின் 'அல் ஃபத்தா'வும், அல் ஃபத்தாவின் தற்கொலைப் படைப் பிரிவான 'அல் அக்ஸா மார்டைர்ஸ் பிரிகேடு'ம் மிகத்தீவிரமான ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கின. கவனிக்கவும். ஹமாஸோ, இதர அமைப்புகளோ அல்ல. அராஃபத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போராளி இயக்கங்கள்.

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற இயக்கங்களின் தாக்குதல்களைக் காட்டிலும், அல் ஃபத்தாவின் தாக்குதல்கள் மிகத் தீவிரமானவை; கடும்பாதிப்புகளை ஏற்படுத்தவல்லவை. இதற்கு, சரித்திரத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உண்டு. இந்த அமைப்புகளின் தாக்குதலில் தினசரி, குறைந்தது பத்திருபது இஸ்ரேலிய இலக்குகளாவது நாசமாகிக்கொண்டிருந்தன. ஒட்டுமொத்த பாலஸ்தீனும் வியப்புடன் பார்த்த சம்பவம் அது.

ஏனெனில், அராஃபத் அமைதி, அமைதி என்று பேச ஆரம்பித்திருந்ததில் சற்றே நம்பிக்கை இழந்து போயிருந்தனர், பாலஸ்தீனியர்கள். ஆனால் அல்ஃபத்தா இயக்கத்தவர்கள், மிகவும் வெளிப்படையாக, இஸ்ரேலிய ராணுவத்தினரைக் கண்ட இடத்திலெல்லாம் துவம்சம் செய்ய ஆரம்பித்ததைப் பார்த்ததும் அராஃபத், மீண்டும் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்றே பேச ஆரம்பித்தார்கள்.

அராஃபத் இதனை மறுத்து அறிக்கை வெளியிடவில்லை. அதேசமயம், 'ஆமாம், நான் மீண்டும் துப்பாக்கி ஏந்திவிட்டேன்' என்றும் சொல்லவில்லை.

இது சர்வதேச அரங்கில் மிகப்பெரிய குழப்பத்தை விளைவித்தது. அராஃபத்தின் நிலைப்பாடு என்ன என்பது, மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

இந்தக் குழப்பத்துக்கு இன்னும் வலு சேர்க்கும்விதமாக, அதுவரை அராஃபத்தை மிகக் கடுமையாக விமரிசித்து வந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற பாலஸ்தீன் விடுதலை இயக்கங்கள், 2002-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, அராஃபத்தை வானளாவப் புகழ ஆரம்பித்தன. அவர்தான் மீட்சி கொடுக்கப்போகிறார் என்றே ஹமாஸ் ஒருமுறை சொன்னது.

இப்போதும் மறுத்தோ, ஆமோதித்தோ அராஃபத் பதில் ஏதும் சொல்லவில்லை. ஒரு விஷயத்தில் அவர் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார். நேரடியாகத் தானே துப்பாக்கி ஏந்தி யுத்தம் புரிவதில்லை. அதேசமயம், அரேபியர்களின் ஆடைகளுள் ஒன்றாகிவிட்ட துப்பாக்கியை, என்ன செய்தாலும் தன்னால் இறக்கி வைக்க முடியப்போவதில்லை என்பதால், போராளிகளுக்கு எதிராக ஏதும் செய்யாமல் இருந்துவிடுவது. முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்யப் பார்ப்பது. முடியாதபோது, பேசாமல் இருந்துவிடுவது.

இதெல்லாம் அரசியலில் மிகவும் சாதாரணமான விஷயங்கள்தான் என்பதை விளக்கத் தேவையில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டம் என்கிற புனிதமான உணர்வில், இந்த அரசியல் வாசனை கலக்கும்போதுதான், ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இப்படியானதொரு குழப்பம் மிக்க பின்னணியுடன், அராஃபத் உலாவந்த காலத்தில்தான், ரமல்லா நகருக்குள் இஸ்ரேலிய ராணுவம் புகுந்தது. அப்போதும் அராஃபத், 'பேசலாம் வாருங்கள்' என்றுதான் சொன்னார். ஆனால், அவரது மாளிகைக்கு வெளியே, இஸ்ரேலிய ராணுவத்தினருடன் துப்பாக்கி யுத்தம் புரிந்துகொண்டிருந்தவர்களை, அவர் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடல் போல் பெருக்கெடுத்து வந்திருந்த இஸ்ரேலியப் படைகளுக்கு, ரமல்லாவில் அராஃபத் தங்கியிருந்த மாளிகையைக் காவல் காத்தவர்கள், வெறும் கொசுக்களாகத்தான் தெரிந்திருக்க வேண்டும். மிகச் சுலபத்தில் அவர்கள் மாளிகையையும் நகரையும் வசப்படுத்திவிட்டார்கள். அங்கிருந்த அத்தனை அரேபியப் போராளிகளையும் கைது செய்து அனுப்பிவிட்டு, நகரைச் சுற்றி, முதலில் பலத்த காவல் போட்டார்கள். அராஃபத்தின் மாளிகையைச் சுற்றி, தனியே ஒரு சுற்று ராணுவக் காவல் நிறுத்தப்பட்டது.

வீட்டைவிட்டு அவர் வெளியே வரமுடியாதபடியும், வெளியிலிருந்து ராணுவத்தினருக்குத் தெரியாதபடி யாரும் உள்ளே போகமுடியாதபடியும் கவனமாக ஏற்பாடு செய்துவிட்டு, அவரது மாளிகைக்குள் ராணுவம் நுழைந்தது.

சோதனை.

ஓர் இண்டு இடுக்கு விடாமல், அப்படிடியொரு சோதனை போட்டார்கள். அராஃபத்தின் வீட்டிலிருந்த அத்தனை ஆவணங்களையும், கடிதங்களையும், கணக்கு வழக்கு நோட்டுப்புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டு அராஃபத் புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார். அவருக்கு மிக நெருக்கமான ஒன்றிரண்டு சகாக்கள் மட்டுமே அருகே இருக்க, அனுமதிக்கப்பட்டனர். தொலைபேசித் தொடர்புகள் மறுக்கப்பட்டன. தொலைக்காட்சி, வானொலி போன்ற சாதனங்கள் பயன்படுத்துவதையும் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.

அராஃபத்தால் எதுவுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. என்னென்ன ஆவணங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள், எதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள், எது சாதாரணம் என்று கருதப்பட்டது? எதுவுமே அவருக்குத் தெரியாது. ஓர் அறையில் அவர் இருக்க அனுமதிக்கப்பட்டார். அந்த அறைக்குள்ளேயே பாத்ரூம் இருந்ததால் வெளியே வரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லப்பட்டது. அப்படியே வருவதென்றாலும், கூடவே இரண்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கி ஏந்தி வருவார்கள். அதிகபட்சம் தன்னுடைய வீட்டின் பிற அறைகளுக்கு அவரால் போக முடியும். அவ்வளவுதான். மொட்டை மாடிக்குக்கூடப் போகக்கூடாது என்று தடைவிதித்திருந்தார்கள்.

இதைத்தான் வீட்டுச்சிறை என்பார்கள். ஓர் அரசியல் தலைவருக்குத் தரவேண்டிய மரியாதையில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், மரியாதை ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றும் சாதிக்க முடியாது என்கிற நிலைமை.

இந்தச் சோதனை, சில வாரங்கள் நீடித்தன. (மூன்று மாதங்கள் வரை சோதனை நடந்தது என்றும் சில கருத்துகள் இருக்கின்றன. கால அளவில் துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை.)

சோதனையை முடித்துவிட்டு, கிடைத்த விவரங்களை அங்கிருந்தபடியே ராணுவத்தினர் டெல் அவிவுக்கு அனுப்பினார்கள். அதன் அடிப்படையில், 2002-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இஸ்ரேல் அரசு ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், போராளி இயக்கங்களுக்குப் போதிய நிதி உதவி அளிக்க, அராஃபத் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த அனுமதிக் கடிதம் ஒன்று, சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆதார நகலையும் இஸ்ரேல் அரசு வெளியிட்டது. இது தவிரவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இது, சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய அறிக்கை என்று கருதிய அரபு லீக், அவசர அவசரமாக ஓர் அமைதி ஒப்பந்தத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது. ஆறுநாள் யுத்தத்தின் போது, கைது செய்த பாலஸ்தீன் முஸ்லிம்களை இஸ்ரேல் விடுதலை செய்யவேண்டும். அராஃபத்தின் பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்பை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும். தொடர்ந்து அரேபியர்களின் ஆட்சி, மேற்குக் கரை மற்றும் காஸாவில் நடைபெறத் தடை சொல்லக்கூடாது. பதிலுக்கு அரபு லீக், இஸ்ரேல் என்னும் தேசத்தை, அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும்.

இன்றுவரையிலுமே கூட இஸ்ரேலை, எந்த ஓர் அரபு தேசமும் அங்கீகரிக்கவில்லை என்பதை, நினைவில் கொள்ள வேண்டும். அன்றைய சூழ்நிலையில், அவர்களுக்கு அப்படிடியொரு நிர்ப்பந்தம் இருந்தது. அராஃபத்தை ஒரு பொய்யர் என்று நிறுவுவதற்குத் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் இஸ்ரேல் எடுத்துக்கொண்டிருந்தது. அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக அறிவித்த ஆவணங்கள் கூட, இஸ்ரேலிய உளவு அமைப்பே உருவாக்கியிருக்கக்கூடிய போலி ஆவணங்கள்தான் என்றுகூடப் பேசினார்கள். என்னென்னவோ சொல்லிப்பார்த்தார்கள், செய்து பார்த்தார்கள்.

இஸ்ரேல் கேட்பதாகவே இல்லை. அராஃபத் தொடர்ந்து வீட்டுச்சிறையில்தான் இருந்தாக வேண்டும் என்கிற நிலைமை உருவானது. அதேசமயம், அவர் அதுநாள் வரை இழந்திருந்த மக்கள் செல்வாக்கு என்னும் மதிப்புமிக்க பீடம், மீண்டும் அவருக்குக் கிடைக்கத் தொடங்கியது.

தொடரும்....

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 செப்டம்பர், 2005

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.