Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்

யமுனா ராஜேந்திரன்

இங்கிலாந்தின் சேனல் நான்கு தொலைக்காட்சி, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள், ஆவணப்படத்தினை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளின்பின் 2012 மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது. 2012 மார்ச் 14 ஆம் திகதி இரவு 10.55 மணிக்கு சேனல் நான்கிலும், சேனல் நான்கு வரிசையில் படம் முடிந்து ஐந்து நிமிடம் பின்னதாக, நள்ளிரவு 11.55க்கு சேனல் ப்ளஸ் ஒன்றிலும் ஆவணப்படம் இரு முறை திரையிடப்பட்டது. துல்லியமான புரிதலுக்காக இருமுறையும் படத்தினைப் பார்த்தபின் இந்தப் பதிவினை எழுதத் துவங்குகிறேன்.

இலங்கையின் கொலைக்களங்கள் எனும் முழுமையான இரண்டு மணிநேர ஆவணப்படத்தின் இரண்டாவது பகுதியாகவே இந்த ஆவணப்படம் கருதப்பட வேண்டும்.

முதல் ஆவணப்படம் முன்வைத்த போர்க்குற்ற ஆதாரங்களின் தொடர்ச்சியாக மேலும் பல ஆதாரங்களை அழுத்தமாக முன்வைக்கும் இந்த ஆவணப்படம், கொல்லப்பட்ட 40,000 ஈழமக்கள் உலக மனசாட்சியில் தூரத்து நினைவுகளாக மறக்கப்படுவார்களா அல்லது அவர்களுக்கு சர்வதேச சமூகம் நிலைத்த நீதி வழங்குமா எனும் துயர்தோய்ந்த கேள்வியுடன் முடிவுபெறுகிறது.

அழிவினிடையில் தமது தளர்ந்த உடலுடன் தமது உறவுகளைத் தேடி ஓடும் ஒரு மனிதனுடன் ஆவணப்படம் துவங்குகிறது. 2010 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படத்தின் முதல் பாகத்தில் முன்வைக்கப்பட்ட யுத்த சூனியப் பிரதேசப் படுகொலைகள், உணவும் மருத்துவ வசதிகளும் இல்லாது மரணமுற்ற வெகுமக்கள், பதுங்குகுழிகளில் கொல்லப்பட்ட குழந்தைகள், பின்புறம் கைகள் கட்டப்பட்டு, கண்கள் கறுப்புத்துணியினால் கட்டுண்ட நிலையில், பின்னந்தலையில் குறிபார்த்துச் சுடப்பட்டுச் சரியும் போராளிகளின் உடல்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் போராளிகள் போன்றவர்களின் பிம்பங்கள் ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்களில் மீள்நினைவுகளாகத் தொகுத்துக் கொள்ளப்படுகிறது.

இப்போது 2011 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியினால் அமர்த்தப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையினைக் கையில் வைத்தபடி ஆவணப்படத் தொகுப்பாளர் ஜான் ஸ்நோ, 2010 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் மேலதிகமாக சேனல் நான்கிற்குக் கிடைத்த போர்க்குற்ற ஆதாரங்களை நமக்கு விவரிக்கத் துவங்குகிறார்.

ஆவணப்படம் நான்கு மேலதிகப் போர்க்குற்ற ஆதாரங்களை முன்வைக்கிறது :

முதலாவதாக, இறுதி யுத்த காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் மெக்கே உள்பட, ஐ.நா.வின் இரு சர்வதேச தொண்டு நிறுவன ஊழியர்கள் உடையன்கட்டு எனும் கிராமத்தில் சிக்குண்டிருந்தபோது, தனியார் ஆரம்பப் பள்ளி ஒன்றின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையொன்றின் மீது எறிகணை வீச்சு நடைபெற்றதாகவும், அவை ஐ.நா.வின் பாதுகாப்பு பதுங்குகுழிகளுக்கு மிக அருகில் வீழ்ந்து வெடித்ததால் கொல்லப்பட்ட, படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்பான பல ஆதாரங்கள் குறித்த ஐ.நா. ஊழியர்களால் புகைப்படங்களாக எடுக்கப்பட்டதாகவும் ஜான் ஸ்நோ தெரிவிக்கிறார். நடைபெற்றுக் கொண்டிருந்த கடும் யுத்தத்தில் இது ஒரு சிறிய அங்கமாகவே கருதப்படும்போதும், பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இவை இருக்கின்றன என்கிறார் அவர்.

இத்தாக்குதல்களை அடுத்து இரு ஐ.நா. பணியாளர்களும் செய்மதி தொலைபேசிகள் மூலம் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கொழும்பிலிருந்த ஐ.நா. தூதரக அதிகாரிகளின் ஊடாக, இலங்கை அரசப் படைகளின் இராணுவத் தலைவர்களுடனும் பாதுகாப்பு அமைச்சரான கோத்தபாய ராஜபக்சேவுடனும் தொடர்பு கொண்டு உடனடியாக எறிகணைத் தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதையடுத்து ஐ.நா. பதுங்குகுழிகள் அமைந்திருந்த பகுதியில் எறிகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும், எனினும் யுத்த சூனியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், தாம் தங்கியிருந்த கொட்டகைக்கு அருகிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடந்துகொண்டே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எறிகணைத் தாக்குதல்களை எங்கு, எப்போது, எப்படி மேற்கொள்வது எனும் கட்டுப்பாட்டு அதிகாரம் அரசப் படைகளிடமும், பாதுகாப்பு அமைச்சரிடமும் இருந்துள்ளதை இச்சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என சேனல் நான்கு சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவதாக, இலங்கைப் படையானது தமிழ் வெகுமக்களைப் பட்டினி போட்டும், போதிய மருந்துகள் இல்லாமலும், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்காமலும் அம்மக்களைக் கூட்டமாகக் கொன்றது எனவும், அதனை ஒருங்கிணைந்த வகையில் திட்டமிடச் செய்தது என்றும் ஆவணப்படம் சொல்கிறது. 1,25,000 பேர் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருக்கும்போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே சி.என்.என்.னுக்கு அளித்த செவ்வி ஒன்றில், உச்சபட்சமாக 5,000 அல்லது 10,000 பொதுமக்களே இன்னமும் யுத்தவலயத்தில் சிக்கியிருப்பார்கள், அவர்களையும் விரைவில் மீட்டெடுப்பதிலேயே கவனம் செலுத்துகிறோம் என்கிறார். அந்நேரம் யுத்தவலயத்திற்குள் லட்சக்கணக்கானவர்கள் சிக்கியிருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கிறது சேனல் நான்கு ஆவணப்படம்.

சேனல் நான்கின் இலங்கைக் கொலைக்களங்கள் ஆவணப்படத்திற்கு மறுப்பு தெரிவித்து, இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட ஒப்புக்கொள்ளப்படும் பொய்கள் எனும் ஆவணப்படத்தில், யுத்த வலயத்தில் கடமையாற்றிய வைத்தியர்களின் சாட்சியங்கள் இடம்பெற்றிருந்தன. தாம் யுத்த வலயத்திலிருந்தபோது, விடுதலைப் புலிகளால் வற்புறுத்தப்பட்டதால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தவறான புள்ளிவிபரங்களைக் கூறியிருப்பார்கள் என அரசு பிரச்சாரம் செய்தது. இப்போதுயாரின் வற்புறுத்தலால் அதே வைத்தியர்கள் இப்படி மாற்றிச் சொல்லியிருக்கலாம் என்பதற்குரிய சாத்தியங்களையும் தெளிவாக நிரூபிக்கிறது இந்த ஆவணப்படம். யுத்தப் பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட மருத்துவர்கள் நேரடியாக குற்ற விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். பயங்கரவாதத் தடுப்பு விசாரணைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டார்கள். ஜனாதிபதியைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், அரசு சொல்லிக் கொடுத்தபடி சொல்லாவிட்டால் 18 மாதம் குறைந்தபட்சம் அல்லது ஆண்டுக் கணக்கில் சிறைவைக்கப்படுவார்கள் என மிரட்டப்பட்டார்கள்.

பிற்பாடு அரசு சார்பு ஊடகவியலாளர்கள்- பத்திரிகையாளர் சந்திப்பில் எவ்வாறு பேசுவது என்கிற பயிற்சியை மருத்துவர்களுக்கு அளித்தார்கள் என்கிறது ஆவணப் படம்.

மூன்றாவதாக, இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கனரக ஆயுதங்களையும் டாங்கிகளையும் யுத்த சூனியப் பிரதேசங்களில் பாவிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. மாறாக, முதலாம், இரண்டாம், மூன்றாம் யுத்த சூனியப் பிரதேசங்களின் நிலப்பரப்பு சுருங்கிக் கொண்டே வந்தபோது, இறுதி யுத்த சூனியப் பிரதேசம் ஒரு கிலோ மீட்டர் அளவே இருந்தபோது, ஒன்றிலிருந்து மற்றொன்றை நோக்கி மக்கள் ஓடிக் கொண்டிருந்தபோது, அவர்களின் மீது இலங்கை அரசு திட்டமிட்டு கனரக ஆயுதங்களையும் டாங்கிகளையும் பாவித்தது என்கிறது ஆவணப்படம்.

நான்காவதாகவும் இறுதியாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனது இளைய புதல்வர் 12 வயது பாலச்சந்திரனும், பிற்பாடாகப் பிரபாகரனும் கொல்லப்பட்ட சூழலை விளக்குகிறது ஆவணப்படம். இந்தச் சாட்சியத்தை வழங்கிய இலங்கைப் படையதிகாரியிடம் சத்தியப் பிரமாண வாக்குமூலம் பதியப்பட்டிருப்பதாக ஆவணப்படம் சொல்கிறது. அவரது வாக்குமூலத்தின்படி, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடம் குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே அவரது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொலை செய்துள்ளது.

பாலச்சந்திரனைப் படுகொலை செய்வதற்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது இலங்கை ராணுவம். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி தகவல்களைப் பெற்றுள்ளனர். பின்னரே கொன்றுள்ளனர். உண்மையில் ஐந்து பாதுகாவலர்களுடன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவத்திடம் சரணடையவே பிரபாகரன் அனுப்பியுள்ளார். பிரபாகரனின் மகனைப் பிடித்துக் கொண்டு முதலில் ஐந்து பாதுகாவலர்களையும் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொன்றுவிட்டனர். பின்னர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து தகவல்களை அவரது புதல்வர் பாலச்சந்திரனிடம் பெற்றுக் கொண்டு, பாலச்சந்திரனையும் படுகொலை செய்துள்ளனர். இது மிகப் பெரிய யுத்த விதி மீறலாகும். பாலச்சந்திரனின் உடலில் ஐந்து தோட்டாக்கள் பாய்ந்த வடுக்கள் உள்ளன. அவர் 2 அல்லது 3 அடிகள் தொலைவில் இருந்தே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பான வெளிப்படையான அடையாளம் இல்லை. எனினும் அந்த சிறுவன் இருந்த சூழ்நிலையைப் பார்க்கிறபோது, ஐந்து பாதுகாவலர்களை அந்த சிறுவன் கண் முன்பாக அவன் பார்த்துக் கொண்டிருக்க, கொடூரமாக முதலில் கொன்றுள்ளனர். பிற்பாடு சிறுவனிடம் அவரது தந்தை பிரபாகரன் குறித்து விசாரித்துள்ளனர். இது உளவியல் சித்திரவதை. அவனது கண்களுக்கு முன்னால் அவனது பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின், அந்த சிறுவனின் கண்களைக் கட்டாமல், கையைக் கட்டாமல் நேரடியாகப் பார்த்து அந்தச் சிறுவனைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அவரது இளைய மகன் கொல்லப்பட்ட பின்பே மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். அசையாத நிலையில் மிக அருகாமையில் வைத்து நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். குறிப்பிட்ட காட்சிகள் குறித்து, காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பௌன்டர்.

பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாகவே தாம் உணர்வதாக பௌன்டர் சொல்கிறார். இந்த ஒளிக்காட்சி அரச அனுமதியுடன் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதல்ல எனவும் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம் எனவும், அது சாத்தியமும் அல்ல எனவும் அவர் சொல்கிறார். பிரபாகரன் கொல்லப்பட்டவிதத்தைப் பார்க்கும்போது, அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும். அசையாத நிலையில் ஒருவரைச் சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் இருக்கிறது. பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் எனவே தாம் கருதுவதாக பௌன்டர் சொல்கிறார்.

கேனல் ரமேஷ் கொல்லப்பட்ட ஒளிக் காட்சி, ஒரு போராளி குழியினுள் வைத்துக் கொல்லப்படும் காட்சி, இசைப்பிரியா உள்ளிட்ட பெண் போராளிகள் கொல்லப்பட்ட காட்சி, பின்தலையில் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி, சிறுவன் பாலச்சந்திரனும் அவரது ஐந்து பாதுகாவலர்களும் கொல்லப்பட்ட காட்சி, பிரபாகரன் கொல்லப்பட்ட காட்சி என்பதன் ஒளிப்பதிவுகள் ஒத்ததன்மையினைக் கொண்டிருப்பதனை தடயவியலாளர் பௌன்டர் சுட்டிக்காட்டுகிறார்.

பிரபாகரன், பாலச்சந்திரன் தவிர அனைவரும் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கண்கள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட அனைவருமே கொல்லப்படுவதற்கு முன்பாக ஆடை களையப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் அனைவரும் முழுமையாக நிர்வாணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே மிக அருகாமையிலிருந்து பின்னந்தலையில் அல்லது முன்நெற்றியில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். சிறுவனான பாலச்சந்திரன் மட்டுமே மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதனைக் கொண்டு பார்க்கும்போது, பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு, மேலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட முறையில், கீழ் அணிகள் வரையிலும் இலங்கை அரசு திட்டமிட்டு படுகொலை செய்திருப்பது தெரிகிறது எனக்கூறும் தடயவியலாளர் பௌன்டர், நிச்சயம் அரசின் உயர்மட்டத்தின் அனுமதி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பது எங்களின் கருத்தாகும் எனவும் சொல்கிறார்.

குறிப்பிட்ட நான்கு ஆதாரங்களையும் நிறுவுவதற்கான மேலதிக ஆதாரங்களை ஆவணப்படம் விக்கிலீக்ஸ் ஆவணங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கைகள், அன்றைய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், இலங்கைக்கான அன்றைய ஐ.நா. அதிகாரி ஜான் ஹோம்ஸ், மனித உரிமை வழக்கறிஞர் வில்லியம் செபாஸ் போன்றோரது உரைகள் போன்றவற்றின் வழி ஆவணப்படம் முன்வைக்கிறது. ஆவணப்படத் தொகுப்பாளர் ஜான் ஸ்நோ ஆவணப்படம் நெடுகிலும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவையும், அவரது சகோதரரான இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவையும், களமுனைத் தளபதி சவேந்திர சில்வாவையும் இந்தப் போர்க்குற்றங்களைக் கட்டளையிட்டுத் திட்டமிட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார். ஜான் ஸ்நோ சொல்கிறார்:

இந்த மிகப் பெரிய போர்க்குற்றச் செயலில் இலங்கை அரசும், ராணுவமும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயல்களுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர்தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த படுகொலைகளை நடத்திய ராணுவத்தினர் அத்தனை பேருமே மிகப் பயங்கர கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ராணுவ அதிகாரிகள் முதல் ஜனாதிபதி வரை, அவரது சகோதரர் அனைவருமே இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளது வியப்பளிக்கிறது. ஒரு பத்திரிகையாளராக நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டியது எங்களது கடமை. இனி ஐ.நா. சபையும், சர்வதேச சமுதாயமும்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். -அதுதான் பரிதாபமாக உயிரிழந்து போன ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நியாயமானதாக அமையும். நாம் தற்போது சிரியாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். எனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் நாம் கண்டிப்பாக கவலைப்பட்டாக வேண்டும்.

ஐ.நா.வின் பாதுகாக்கப்பட்ட ரகசிய அறிக்கையில் சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பு வலயப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை வேண்டும் என்றே திட்டமிட்டு குண்டுவீசிப் படுகொலை செய்தனர். இது அரசுக்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் குறித்த உண்மையான எண்ணிக் கையை இலங்கை அரசு மறைப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைப் பட்டினி போட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டாக வேண்டும்.

இலங்கையின் கொலைக்களம் முதலாவது பகுதியில் ஒளிப்பதிவின் சாட்சிகளுடன் இலங்கை அரசினதும் விடுதலைப்புலிகளினதும் போர்க்குற்ற ஆதாரங்களை முன்வைத்த ஆவணப்படம். இரண்டாம் பகுதியான தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் வைத்திருக்கும் போர்க்குற்ற ஆதாரங்கள், முழுமையாக இலங்கை அரசைக் குறித்ததாகும்.

.....

இந்தச் சூழ்நிலையில், சேனல் நான்கு மீதான இருமுனை விமர்சனங்கள் தமிழர்களிடம் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. சேனல் நான்கு அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளிடம் அதற்காக சேனல் நான்கு நிதிபெறுவதாகவும், அதிலிருந்தே இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதாகவும் ‘மார்க்சியர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்’ எனத் தம்மைக் கோரிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சானல் நான்கு ஒரு பொதுநிறுவனம். அது அரசிடமிருந்து எந்த விதமான நிதியும் பெறுவது இல்லை. 2007 ஆம் ஆண்டு அது கடுமையான நிதி நெருக்கடியில் வீழ்ந்தபோது, அன்றைய பிரித்தானிய சட்டத்தின்படி, அரசு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் லைசென்ஸ் கட்டணத்தில் இருந்து, அதனது மீட்புக்காக ஒரு தொகை வழங்கியது. பிற்பாடாக, பிரித்தானிய அரசு அந்தச் சட்டத்தையே இல்லாததாக ஆக்கியது. இப்போதும் கூட 2012 பிற்பகுதியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறும் வேளையிலான நிதி நெருக்கடியில் சேனல் நான்கு இருந்தபோது, அதனை மீட்பதற்கென லைசென்ஸ் கட்டணத்திலிருந்து அதனை நிவர்த்தி செய்வதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதுவன்றி முழுமையாகத் தமது நிகழ்ச்சி விளம்பரக் கட்டணங்களாலும், நிகழ்ச்சி அனுசரணையாளர்களாலும் மட்டுமே கொண்டு செலுத்தப்படுவது சேனல் நான்கு தொலைக்காட்சி நிறுவனம்.

அரசு சாரா நிறுவனங்கள் உள்பட, சுயாதீன ஊடகங்கள் உள்பட, தமது அரசியல் திட்டங்களுக்கு உடன்பட்டு வராதவர்கள் அனைவரையும் ஏகாதிபத்தியத்திடம் காசு வாங்குபவர்கள், அதனது நிகழ்ச்சி நிரலுக்குச் செயல்படுபவர்கள் என, எந்தவிதமான ஆதாரமும் அற்று எழுதுவது ஒரு நோய்க்கூறான சிந்தனை முறை. குறைந்தபட்சம் இடதுசாரிகள் அதிலிருந்து வெளியே வரவேண்டும். மன்மோகன் சிங்கும், மகிந்த ராஜபக்சேவும், எகிப்திய ராணுவமும் அரசு சாரா நிறுவனங்களின் மீதும், சுயாதீன ஊடகங்களின் மீதும் ஏறி விழும்போது, இதில் நீங்கள் எங்கே முரண்படுகிறீர்கள் என்கிற குறைந்தபட்ச தர்க்கத்தையாவது நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

ஆதாரமற்று அவதூறுகளைத்தான் நீங்கள் சதா சுமத்திக் கொண்டிருப்பீர்கள் என்றால், மகிந்த முதல் மன்மோகன் வரை இவர்களுக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தியாசம் சொல்லுங்கள்?

சேனல் நான்கின் மீதான பிறிதொரு விமர்சனம், விடு தலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தின் இறுதிநாட்களில் இலங்கைப் படையினரால் கொல்லப்படவில்லை எனும் நம்பிக்கையை முன்வைப்பவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு முன்னால் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே தனது ஆவணப்படத்தின் அறமும் ஆதாரங்களும் குறித்து வாக்குமூலமாகச் சொல்வதனைக் கேட்போம்:

போர்க் குற்றங்கள் தொடர்பில் சேனல் நான்கு முன்வைக்கும் ஆவணங்களை, போலியானவை என ஒற்றைச் சொல்லில் இலங்கை அரசு மறுப்பதும், அதனைப் பெருமளவிலான சிங்கள் மக்கள் நம்புவதும் மறுக்கமுடியாது. ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு சிங்கள மக்களிடம் அதிர்ச்சி கலந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அதிக எண்ணிக்கையான சிங்கள மக்கள் ராஜபக்சே குழுவினரின் நடவடிக்கைகளை நம்புபவர்களாக இல்லை. அதேபோல் அதிகளவு சிங்கள மக்கள் இவ்விடயங்கள் தொடர்பில் அக்கறை உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர்கள்கூட இவ்விடயங்களில் கவலைப்படுபவர்களாக இருக்கின்றனர். அதேபோல் இலங்கை இராணுவத்திற்கு மிக நெருங்கியவர்கள் கூட இவ்விடயங்களில் அக்கறை உடையவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறு இருந்தபோதும் இதே அளவு மறுபக்கத்தில் ஏராளமான சிங்கள மக்கள் அரசு சொல்வதை நம்புபவர்களாகவே இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது. இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசு தனித்தனியாக விளக்கம் தருவதை விடுத்து, ஒரேயடியாக வீடியோ காட்சிகள் அனைத்தும் போலி என்று இலகுவாகச் சொல்லிவிடுகின்றது. அவ் வாறு தான் சொல்வதை ஏராளமான சிங்கள மக்கள் நம்பும்படியாகவும் இலங்கை அரசு பிரச்சாரங்களைச் செய்துள்ளது.

புலிகளின் ஆதரவுடனே வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சிறீலங்கா அரசின் மற்று மொரு குழப்பமான குற்றச்சாட்டுக்கு உதாரணமாகும். இக்குற்றச்சாட்டு உண்மையாயின் நாங்கள் எவ்வாறு விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொண்டு வர முடியும்? உதாரணமாக, மக்களைக் கேடயமாக விடுதலைப்புலிகள் பயன்படுத்தியமையை வெளிப்படுத்தியிருக்கின்றோம். உண்மையில் இது மிகவும் கடினமான தருணம். ஏன் இலங்கை அரசு இவ்வாறு சொல்கின்றது என்பது புரியவில்லை.

ஆனால் ஆவணத் திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு உண்மை புரியும். நிதி உதவி அளிப்பதாகக் கூறப்படுவது முட்டாள்தனமான கூற்றாகும். சேனல் நான்கு தொலைக்காட்சியின் முழுமையான நிதி உதவியில்தான் இத்திரைப்படம் உருவாகியது. நாங்கள் சுதந்திர ஊடகமாகச் செயற்படுகின்றோம். எமது முன்னைய விசாரணைகளில் அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளின் அதிகளவிலான போர்க்குற்றத் தவறுகள் சுட்டப்பட்டுள்ளன. இலங்கையின் போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் சுட்டப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்கள், காணொளி நிபுணர்களால் மிகக் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபின் அது உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையோ மேற்குலக நாடுகளோ இலங்கைப் படையினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க உருப்படியான எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் கட்டளைகளின் அடிப்படையிலேயே போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.

இதற்கு நேரடியான பொறுப்பை ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலரும் இராணுவத் தளபதியும் வகித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையிலும், விக்கிலீக்ஸில் வெளியான அமெரிக்காவின் தொடர்பாடல் குறிப்புகளும், ஐ.நா.வின் முன்னாள் முக்கியஸ்தர் ஜோன் ஹோம்ன் செவ்வியும் உறுதி செய்துள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில், அனைத்துலக சட்டங்களின்கீழ் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய முதன்மையான கடமையை நிறைவேற்ற அனைத்துலக சமூகம் தவறியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைத் தடுக்கத் தவறியதற்குப் பிரதான காரணமாக தீவிரவாதத்துக்கு எதிராக அன்றய சூழலில் அமெரிக்காவும் மேற்குலகும் நடத்திய உலகளாவிய போர் என்ற நிகழ்ச்சி நிரலை ராஜபக்சே அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது.

யுத்தத்தில் பொதுமக்களைக் கேடயமாகப் பாவித்தது உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை எவரும் நிராகரிக்கவில்லை. அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தெளிவானவை, ஆவணப்படுத்தப்பட்டவை. அவற்றுக்கு எவரும் சவால்விட முடியாது.

இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறீலங்கா அரசப் படைகள் யுத்த மீறல்கள் மேற்கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன. விடுதலைப்புலிகளோ, இலங்கை அரசோ அல்லது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ யாராயினும், போர்க்குற்றம் புரிந்தால் அதை வெளிக்கொணர்வது ஊடகவியலாளரின் கடமை.

ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் எனது கடமையை நான் சரிவர செய்துள்ளேன். இப்போது இலங்கை தொடர்பிலும் அதையே செய்துள்ளேன். இதற்குமேல் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் செய்யவேண்டியது எதுவோ, அதனை அவர்கள் செய்யட்டும்.

ஹாலும் மக்ரே ஒரு அரசியல்வாதி அல்ல. எந்த ஒரு அரசியல் தரப்புக்குமாக அவர் வாதிட முடியாது. ஓரு ஊடகவியலாளரின் அறம் தனது தரப்பினை வெளிப்படுத்த முடியாத நிராதரவான மனிதனின் குரலாகச் செயல்படுவதுதான். அவன் அடிப்படையில் ஏற்கனவே வகுத்துக் கொண்ட சார்பு நிலையில் இருந்து செயல்பட முடியாது. போஸ்னியா, கிழக்கு திமோர், கொசாவா, குர்திஸ்தான், பாலஸ்தீனம், ஈழம், காஷ்மீர் என சேனல் நான்கு ஆவணப்படங்களை வெளியிட்டு வருகிறது. அரசியல் சார்பு நிலைகளுக்கும் அப்பாலான உண்மைகளைக் கொன்டுவருவதுதான் ஊடகவியலாளனின் பணி. அவனிடம் இசைப்பிரியா, கேனல் ரமேஷ், பிரபாகரனின் இளைய புதல்வர், நடேசன், பிரபாகரன், கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட போராளிகள், யுத்த தவிர்ப்பு வலயத்தில் கொல்லப்பட்ட மக்கள் போன்ற அனைவரதும் தொடர்பான ஒளிப்பதிவுகள் வருகிறது. இலங்கை ராணுவத்தினரால், அரசினால் அதிகாரபூர்வமாக எடுக்கப்படாத தரப்பிலிருந்து அவனுக்கு ஒளிப்பதிவுகள் கிடைக்கிறது. அதனை அவன் தொழில்துறை நிபுணர்களை வைத்து, தடயவியல் நிபுணர்களை வைத்து உறுதிப்படுத்திக் கொள்கிறான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பான ஒளிப்பதிவு தவிர பிற ஒளிப்பதிவுகள், பிம்பங்கள் தொடர்பாக, அதிலுள்ள மரணமுற்றவர்கள் தொடர்பாகத் தமிழர்கள் எவரும் நம்பகத்தன்மை எனும் கேள்வியை எழுப்புவது இல்லை.

....

சேனல் நான்கு தொலைக்காட்சி பார்த்துக் கற்றுக் கொண்டு வளர்ந்த சிறுபான்மையினச் சமூகங்களின் தலைமுறை ஒன்று பிரித்தானியாவில் நிச்சயமாக இருக்கிறது. ஊடகப் போராளிகள் எனும் ஆளுமையுடன் எவரையும் நாம் குறிப்பிட முடியுமானால் அவர்கள் ஜான் பில்ஜர், ஜான் ஸ்நோ போன்ற ஆளுமைகள்தான். இருவருமே சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்புடனும், சேனல் நான்கு தொலைக்காட்சியுடனும் தொடர்பு கொண்ட ஆளுமைகள்.

குர்திஸ் மக்கள் ஆதரவு அமைப்புடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர் ஜான் ஸ்நோ. உலகின் சிறுபான்மையின மக்களின் போராட்டங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தியவர் ஆவணப்பட இயக்குனர் ஜான் பில்ஜர். ஊடக அறம் குறித்த கல்விக் கையேடுகள் ஜான் பில்ஜர் எழுதிய நூல்கள். நந்திக் கடல் படுகொலைகளின் போது, சாட்சியமற்று இலங்கை அரசு நடத்தி முடித்த அந்த யுத்தத்தின் மானுடவிரோதம் குறித்துத் தார்மீகக் கோபத்துடன் நியூ ஸ்டேட்ஸ்மென் அரசியல் இதழில் கட்டுரையொன்றினை எழுதினார் ஜான் பில்ஜர்.

நிராதரவான மக்களின் பாலான இவர்களது தோழமையுணர்வு, தமிழர்கள் உட்பட, எவரும் கேட்டுக் கொண்டதால் அவர்களிடம் உருவானது இல்லை. அவர்களது ஊடக அறமும் மனுக்குலப் பெருமிதத்தின் மீதான அவர்களது தார்மீக உணர்வும்தான் அவர்களை இவ்வாறு இயல்பாகவே நிராகரிக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் நிற்கச்செய்கிறது. சேனல் நான்கு தொலைக் காட்சியின் உருவாக்கமே சிறுபான்மையின மக்களுக்காகவே ஒப்புக் கொடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சிச் சேவையின் அவசியத்தினின்றுதான் உருவானது.

எல்லைப்புற மொழி என வழங்கப்பெற்ற வேல்ஸ் மொழியிலும், வேல்ஸ் மக்களுக்காகவும் அதிகமான நிகழ்ச்சிகளை உருவாக்கி ஒளிபரப்புவது எனும் நோக்கிலிருந்து 1982 ஆம் ஆண்டு சேனல் நான்கு தொலைக்காட்சி உருவானது. அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிபிசி ஒன்று மற்றும் இரண்டு அதனோடு ஐடிவி எனும் மூன்று தொலைக்காட்சி வரிசையினோடு நான்காவதாக உருவானதுதான் சேனல் நான்கு தொலைக்காட்சி. பிபிசி தொலைக்காட்சி வரிசைகளோடு ஒப்பிட, ஐடிவி, சேனல் நான்கு போன்றன ஒரு முக்கியமான வித்தியாசத்தினைக் கொண்டிருந்தது.

பிபிசி, பிரித்தானிய அரசு மக்களின் மீது விதிக்கும் லைசென்ஸ் கட்டண வருமானத்தைக் கொண்டு நடத்தப் பெறும் அமைப்பு. ஐடிவியும் சேனல் நான்கும் சுயாதீனமான, தமக்குத் தானே நிதி அளித்து நடத்தப்பெறும் தொலைக்காட்சி வரிசைகள். ஓளிபரப்பு விளம்பரங்களில் வரும் வருமானம், தாம் தயாரிக்கும் நிகழ்ச்சிகள், திரைப் படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகின் பிற பிரதேசங்களுக்கு விற்பதால் வரும் வருமானத்தில் நடத்தப்பெறும் நிறுவனங்கள் இவை. இதுவன்றி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் சார்ந்து ஐடிவிக்கும் சேனல் நான்கிற்கும் மிகப்பெரும் வித்தியாசங்கள் உண்டு.

சேனல் நான்கு வெகுஜன ஊடகங்களில் தரப்படும் பிரபல நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக சிறுபான்மையினச் சமூகங்கள், வெகுஜனத் தொலைக்காட்சிகளால் அதிகம் கவனம் குவிக்கப்பெறாத கருப்பொருட்கள் என்பன வற்றைத் தனது தனித்துவமாக வரித்துக் கொண்டது.

அன் ரிப்போர்டட் ஓர்ல்ட் எனும் ஆவணப்பட வரிசை முழுக்க முழுக்க உலகின் சிறுபான்மையினச் சமூகங்களின் போராட்டம் குறித்த சித்திரமாக இருந்தது. பார்னிங் எம்பர்ஸ் என இங்கிலாந்தின் புகழ்வாய்ந்த இடதுசாரிப் பாராளுமன்றவாதியான டோனி பென் நெறிப்படுத்திய உரையாடல் நிகழ்ச்சி காத்திரமான அரசியல் -தத்துவ விவாதங்களை வெகுமக்கள் தளத்துக்குக் கொண்டு சென்றன. டாக்கிங் ஹெட்ஸ் நிகழ்ச்சியில் உலகின் மிக முக்கியமான சிந்தனையாளர்கள் அனைவரதும் நேர்முகங்கள் வெளியானது. பிற்பாடு இவை புத்தக வடிவிலும் வெளியானது.

சேகர் கபூரின் பண்டிட் குயின், மீரா நாயரின் காம சூத்ரா, வால்ட்டர் செல்லாசின் சே குவேரா-மோட்டார் சைக்கிள் டயரி போன்ற படங்களை சேனல் நான்கு நிறுவனமே தயாரித்தது. மட்டுமன்று, இன்று உலகில் வாழும் உன்னதமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவரும், ஸ்காட்லாந்தைச் சார்ந்தவருமான கென் லோச்சின் ஆவணப்படங்கள், முழுநீளப் படங்கள் எனப் பலவற்றை இந்த நிறுவனமே தயாரித்தது. சிறுபான்மையினத் திரைப்படங்கள், கலாச்சாரங்கள் போன்றன பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக அறிய வந்ததற்கு மிகப்பெரும் ஊடகக் காரணம் எனில், அது சேனல் நான்கின் செயல்பாடுதான் எனத் தயக்கமின்றி, ஆதாரங்களுடன் நிறுவ முடியும்.

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இதுதான் சேனல் நான்கு தொலைக்காட்சியின் சுருக்கமான வரலாறு. இன்றும் எனது சேமிப்பில் அறிவின் வற்றாத சுனையாக சேனல் நான்கு பதிப்பித்த புத்தகங்களும் ஆவணப்படங்களும் திரைப்படங்களும் இருந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வெளியானபோது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அதனைக் கொண்டாடினார்கள். சேனல் நான்கு வெளியிட்ட ஒளிநாடாக்களின் உண்மைத்தன்மை பற்றி இலங்கை அரசு மட்டுமே அவதூறுகளைப் பரப்பியபடி, அது இட்டுக்கட்டப்பட்டது என நிராகரித்துக்கொண்டே இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தடயவியல் நிபுணர்களும், சுயாதீனத் தடயவியல் நிபுணர்களும் அந்த ஒளிநாடாக்களின் ஆதாரத்தன்மையை உறுதிப்படுத்தினார்கள். இதனது உச்சமாகவே சாட்சியமற்று நடத்திமுடிக்கப்பெற்ற இலங்கை அரசின் இனக் கொலைக்கு எதிரான வலுவான ஆதாரங்களாக சேனல் நான்கின் ஒளிப்பட ஆதாரங்கள் அமைந்தன.

இந்த ஆதாரங்களைக் குலைக்குமாறான அனைத்து தகிடுதத்தங்களையும் இலங்கை அரசு ஒரு உத்தியோக பூர்வப் பிரச்சார யுத்தமாகவே மேற்கொண்டது. பிரித் தானியாவின் ஊடகக் கட்டுப்பாட்டு நிறுவனமான ஓப்காமில் சேனல் நான்கின் மீது நூற்றுக்கணக்கில் இலங்கை அரசினாலும், இலங்கை அரச ஆதரவாளர்களாலும் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டன. ஓப்காம் அந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிராகரித்தது.

சேனல் நான்கின் ஒளிப்பதிவுகள் நம்பகத் தன்மையற்றவை எனும் குற்றச்சாட்டு தொடர்பான மிகச் சமீபத்திய அனுபவங்கள் இவை.

இதற்குப் பின்னும் இலங்கை அரசு என்ன சொல்கிறது? தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் ஆவணப் படத்திலுள்ள ஒளிப்பதிவுகள் பொய்யானவை என்கிறது. இதைப் போலவே இஸ்ரேலுக்காக வேலை செய்யும் பிரித் தானிய பாராளுமன்றவாதிகள் பற்றி ஒரு நிகழ்ச்சியை (Dispatches: Inside Britains Israel Lobby Channel 4, 16 November 2009) சேனல் நான்கு ஒளிபரப்பியது. யூதர்களை யும் இஸ்ரேலிய அரசையும் பற்றி பாரபட்சமான நிகழ்ச்சி அது என இஸ்ரேலிய ஆதரவாளர்களால் ஓப்காமில் சேனல் நான்கு மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்த ஓப்காம் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தது.

குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் சார்பு கொண்டவை என்றும், சேனல் நான்கை அரசியல் சார்பு எடுக்குமாறு அவை கோருகின்றன என்றும், அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒரு உண்மைகாண் விசாரணை நிகழ்ச்சியே அல்லாது அரசியல் விவாதத்தில் சார்பு நிலை எடுக்கும் நிகழ்ச்சி அல்ல எனக் காரணம் சொன்னது ஓப்காம்.

சேனல் நான்கு சம்பந்தப்பட்ட, ஒரு இடதுசாரி மரபாளனாக சங்கடப்பட்ட ஒரு தருணமும் இருக்கிறது. லிவிங் மார்க்சிசம் என டிராட்ஸ்க்கி- மார்க்சிய ஆய்விதழ் ஒன்று வெளியாகிக் கொண்டு இருந்தது. மிகக் காத்திரமான விவாதங்களைக் கொண்ட கட்டுரைகளை வெளியிட்ட ஒரு மார்க்சிய ஆய்விதழ் அது. யுகோஸ்லாவிய யுத்தத்தின்போது அவ்விதழ் சேனல் நான்கின் நிகழச்சியொன்று தொடர்பாகக் கட்டுரையொன்றினை வெளியிட்டது. யுகோஸ்லாவியாவில் அக்காலத்தில் முள்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு, செர்பியப் பெரும் பான்மையின ராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்ட சிறுபான்மையின மக்கள் குறித்த நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியில் காட்டப்படும் முள்கம்பி வேலிக்குள் இருக்கிற எலும்புகள் துருத்திய சிறுபான்மையின மக்களின் பிம்பம் சேனல் நான்கினால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான பிம்பம் என எழுதியது லிவிங் மார்க்சிசம். சேனல் நான்கு தமது நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட அவதூறு என்பதற்காக லிவிங் மார்க்சிசம் இதழின்மீது பல இலட்சக்கணக்கான பவுண்டுகள் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்தது.

லிவிங் மார்க்சிசம் இதழின் முன் இரண்டு தேர்வுகளே இருந்தன. ஓன்று சேனல் நான்கிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது இலட்சக்கணக்கான பவுண்டுகள் நஷ்டஈடு கொடுக்க முடியாத நிலையில் அந்த இதழ் பிரசுரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். லிவிங் மார்க்சிசம் வழக்கை எதிர்கொள்ள முடிவெடுத்தது.

உலகின் புகழ்பெற்ற இடதுசாரிச் சிந்தனையாளர்களான நோம் சாம்ஸ்க்கி, ஜான் பில்ஜர், கென்லோச் - இவர்கள் மூவரும் வேறுவேறு விதங்களில் சேனல் நான்குடன் தொடர்புபட்ட ஆளுமைகள் - இருவருக்கும் இடையில் சமரசம் செய்ய முனைந்தனர். லிவிங் மார்க்சிசம் முன்வைத்த கருத்து பிழையேயென்றாலும், அவ்வாறு சந்தேகம் எழுப்புவதற்கான அதனது சுதந்திரக் குரல்வளையை நெறித்துவிடக் கூடாது. சேனல் நான்கு அந்த இதழையே மூடிக்கட்டும் வகையில் இந்த வழக்கை நடத்தக்கூடாது எனக் கோரினார்கள். சேனல் நான்கு தன் மீதான கறையைத் துடைக்க இதுவே வழி எனப் பிடிவாதமாக நின்றது. தொடர்ந்து சாம்ஸ்க்கி, பில்ஜர், கென்லோச் போன்ற இடதுசாரிகள் லிவிங் மார்க்சிசம் இதழுடன் தமது தோழமையை வலியுறுத்தி, அந்த இதழைக் காப்பாற்ற வழக்குமன்ற நிதியையும் அவர்கள் துவங்கி வைத்தார்கள்.

வழக்கில் சேனல் நான்கு வென்றது. விளைவாக, பெரும்பணம் நஷ்டஈடு வழங்க முடியாத சூழலில் லிவிங் மார்க்சிசம் தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. இப்பிரச்சினையில் சேனல் நான்கின் மீது இடதுசாரிகளுக்கு மனத்தாங்கல் இருந்தாலும், அதனது ஊடக அறம் சார்ந்து எவரும் அதனை அவமானப்படுத்திக் கேள்வியெழுப்ப முடியவில்லை.

ஈழத் தமிழர்கள் எவரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தவிர பிற தலைவர்கள், போராளிகள், வெகுமக்கள் மரணங்கள் குறித்து நம்பகத்தன்மையற்றது, பொய்யானது என விவாதிப்பது இல்லை. இலங்கை அரசு மட்டுமே இந்த ஒளிப்பதிவுகளும் பிம்பங்களும் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை என்கின்றன. இந்தச் சூழலில் பிரபாகரனது மரணம் தொடர்பான சேனல் நான்கின் ஒளிப்பதிவுகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவது என்பதும், அந்தக் காரணத்துக்காக சேனல் நான்கின் ஊடக அறத்தையும் அவர்களது நோக்கையும் கேள்விக்கு உட்படுத்துவது என்பதும், அவர்களது உண்மை காண் நோக்கைச் சந்தேகிப்பது என்பது தர்க்கத்துக்கு உட்பட்டதாகத் தோன்றவில்லை.

இந்தப் பிம்பங்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, உள்நோக்கம் கொண்டவை எனத் தமிழர்கள் கருதி சேனல் நான்கை விமர்சிப்பார்களானால் தவிர்க்கவியலாமல் அவர்கள் இலங்கை அரசின் சேனல் நான்கிற்கு எதிரான அதே அலைவரிசையில் சென்று சேர்வது தவிர்க்கவியலாததாகிவிடும். இன்றைய நிலையில் மிக வலிமையான போர்க்குற்ற ஆதாரமான சேனல் நான்கு ஆவணப்படத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவது ஊடக அறத்தின் மீதான தாக்குதலாக மட்டுமல்ல, தமிழர்களுக்குச் சார்பான உலக அபிப்பிராயத்தின் மீதான தாக்குதலாகவும் ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.

சேனல் நான்கு தொலைக்காட்சியின் வரலாறு ஊடக அறத்தின் வரலாறு. சிறுபான்மையின மக்களின்பாலான அதனது சார்பு நிலையின் வரலாறு. அதனது நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவது, ஒரு சிறுபான்மை இனம் தனது எதிரிகளைத் தனக்குள்ளேயே கண்டுபிடிப்பது போன்றது. இது வரலாற்றுத் தவறாகிவிடும் மிகப்பெரும் ஆபத்து.

....

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் இலக்கிய முகமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க சேனல் நான்கின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் ஆவணப்படம் குறித்து ஒரு கட்டுரை (Prof. Rajiva Wijesinga : The American creation of opposites : 18 March 2012 : The Island : Sri Lanka) எழுதியிருக்கிறார். இலங்கை அரசுக்காக தமிழ்-&சிங்கள கலாச்சார ஒற்றுமைச் சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுக்கிற ஒரு புனைவிலக்கியவாதி அவர். அவரது புனைவுத் திறமை அந்தக் கட்டுரையிலும் வெளியாகியிருக்கிறது. சேனல் நான்கு குறித்த அவரது கட்டுரை வெளியாகியிருக்கிற அதே தருணத்தில், சேனல் நான்கின் தண்டிக்கப்படாத குற்றங்கள் ஆவணப்படக் குற்றச் சாட்டுக்குப் பதில் என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு, ஆறிப்போன பழங்கஞ்சியுடன் பயங்கரத்தின் (Shadows of Terror : 18 March 2012 : Sri Lankan Defence Documentary) எனும் ஓரு ஆவணப்படத்தையும் வழியவிட்டிருக்கிறது.

முதலில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் ஆவணப்படத்தைப் பார்த்துவிட்டு கட்டுரையின் இறுதியில் மதிப்புக்குரிய பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவைச் சந்திப்போம். சேனல் நான்கின் இரண்டு பகுதிகளிலான (2010 மார்ச் மற்றும் 2012 மார்ச்) இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்திற்கு முழுமையாக இலங்கை அரசு பதில் சொல்வதாக இந்த ஆவணப்படம் கோரிக்கொள்கிறது. சேனல் நான்கு தனது ஆவணப்படத்தின் இரண்டு பகுதிகளிலும் குறிப்பாக (specific) சொல்வது என்ன?

(1). யுத்த சூன்யப் பிரதேசத்தில் வெகுமக்களின் மீது இலங்கை அரசு எறிகணைகளைப் பாவித்தது. ஆஸ்திரேலிய ஐ.நா. ஊழியர் பீட்டர் மெக்கே சாட்சியம் இதற்கு ஆதாரம். (2). ஒரு யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து இன்னொரு யுத்த சூனியப் பிரதேசத்துக்கு மக்களை அரசு செலுத்தியபோது, நிலப்பரப்பு குறுகக் குறுக அந்தப் பிரதேசங்களில் இலங்கை அரசு கனரக ஆயுதங்களையும், டாங்கிகளையும் பாவித்து பொதுமக்களைக் கொலை செய்தது. ஒளிப்படங்கள் ஆதாரம் (3). யுத்தத்தில் அகப்பட்ட வெகுமக்களுக்குத் தேவையான உணவு மருந்துகள் அளிக்காமல் மத்திய கால முற்றுகைகள் போல வெகுமக்களைத் திட்டமிட்டு இலங்கை அரசு கொலை செய்தது. ஒளிப்படங்கள் ஆதாரம் (4). வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை, சரணடைந்தவர்களை இலங்கை அரசு கொலை செய்தது. நடேசன், புலித்தேவன், பிரபாகரனது இளைய புதல்வனும் 12 வயதுச் சிறுவனுமான பாலச்சந்திரன் போன்றோரின் படுகொலைகள் இதற்கு ஆதாரம் (5). இசைப்பிரியா போன்ற பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, இறந்த நிலையிலும் அவர்களது உடல்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார்கள். ஒளிப்படங்கள் ஆதாரம் (6). யுத்தத்தில் போர்க்குற்றவாளிகளாக நடத்தப்பட வேண்டிய, உயிருடன் கைது செய்யப்பட்ட போராளிகளை சித்திரவதை செய்து கொலை செய்தது. கேனல் ரமேஷின் கொலை இதற்கான ஆதாரம் (7). உயிருடன் பிடிபட்ட போராளிகள் கண்கள் கட்டப்பட்டு, பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் பின்னந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்கள் தொகையாகக் கொல்லப்பட்டதற்கு ஒளிப்படம் ஆதாரம் (8). கடத்தப்பட்டவர்கள், சட்டமீறல் ஆயுதக்குழுக்கள், யுத்தத்தின் இறுதியில் வெகுமக்கள் கொல்லப்பட்டது குறித்துப்பேசும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போர்க்குற்றங்களில் அரசின் பொறுப்பு குறித்துப் பேசவில்லை. அறிக்கையைப் படித்துக் கொள்ளுங்கள் (9).இலங்கை ராணுவத்திற்குப் பொறுப்பான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவினதும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவினதும் கட்டளையின்படிதான் இலங்கை ராணுவம் நடந்து கொண்டது. வெற்றி தம்முடையது (சரத் பொன்சேகாவினது இல்லை) எனத் திரும்பத் திரும்பக் கோரிக் கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும், அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவும்தான் இதற்குப் பொறுப்பாளர்கள். இதுவரையிலும் தண்டிக்கப்படாத போர்க் குற்றங்களுக்காக இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவைதான் சேனல் நான்கு தனது இரு பகுதிகளிலான இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தில் வைத்த தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்.

இந்தக் குற்றங்களை முன்வைத்த சேனல் நான்கின் ஆவணப்படங்களுக்குப் பதிலிறுக்குமுகமாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு இதுவரையிலும் மூன்று ஆவணப்படங்களை (Lies Agreed Upon - 46 Minutes : Ruthless - 28 Minutes : Shadows of Terror - 33 Minutes) வெளியிட்டிருக்கிறது. முன்னிரண்டு பழைய ஆவணப்படங்களிலும் சொல்லப்பட்ட விஷயங்களையும், காட்சிப் பிம்பங்களையும் வெட்டித் தொகுத்து 2012 மார்ச் 18 ஆம் திகதி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு ஒரு புதிய தலைப்பொன்றினைக் கொடுத்து புதிய ஆவணப்படம் போல வெளியிட்டிருக்கிறது. நிஜத்தில் இந்த ஆவணப்படம் குறிப்பான சேனல் நான்கின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் ஆவணப் படத்திற்குப் பதிலான படமே இல்லை. இதனைக் ‘குறிப்பாக’ நாம் நிறுவலாம்-.

ஆஸ்திரேலிய ஐ.நா. ஊழியரான பீட்டர் மெக்கே யுத்த சூனியப் பிரதேசத்தில் தான் இருந்தபோது வெகுமக்களின் மீது இலங்கை அரசப் படையினர் திட்டமிட்டு நடத்திய எறிகணை வீச்சுக் குறித்துத் தனது சொந்த சாட்சியத்தை முன்வைத்திருக்கிறார். இது குறித்த எந்தத் தரவையும் தனது பதிலில் தொகுப்பாளர் மினோலி முன்வைப்பதேயில்லை. சேனல் நான்கின் மிக முக்கியமான பதிவு, 12 வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் பிரபாகரன் கொல்லப்பட்டது தொடர்பான ஒளிப்பட ஆதாரம். இது குறித்து இலங்கை அரசின் ஆவணப்படத் தொகுப்பாளர் மினோலி தப்பித் தவறி கூடத் தனது கடினமான கரகரத்த பதிலில் பதில் உச்சரிக்கவில்லை.

சேனல் நான்கு ஆவணப்படத்தின் இரு பகுதிகளிலும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மூன்று ஆவணப்படங்களும் எதிர்கொள்ளும் அணுகுமுறை (narrative methodology) ஒரே மாதிரியிலானவை. முதலாக, குறிப்பான கேள்விகளுக்கு எந்தவிதமான குறிப்பான பதில்களையும் சொல்லாமல் ஒட்டுமொத்தமாக சேனல் நான்கின் ஒளிப்படங்கள் போலியானவை என்பதனை அது முன்வைத்து வருகிறது. இரண்டாவதாக, விடுதலைப்புலிகளே அனைத்து அழிவுகளுக்கும் காரணமானவர்கள்; அவர்களே போர்க்குற்றங்கள் செய்தார்கள். அரசப் படையினர் மனிதாபிமான மீட்பு யுத்தமே செய்தார்கள் என்று சொல்லி வருகிறது. இவ்வாறு சேனல் நான்கு முன்வைக்கும் குறிப்பான போர்க்குற்றங்களுக்கு பொதுமைப்படுத்தப்பட்ட (generalised) வாதங்களையே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் ஆவணப்படங்கள் முன்வைத்து வருகின்றன.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு சேனல் நான்கிற்குப் பதில் எனச் சொல்லி முன்வைக்கும் முக்கியமான அவர்களது ஆவணப்படங்கள் மூன்றிலும் அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு வாதம், விடுதலைப்புலிகள் பலவந்தமாகச் சிறுவர்களைப் படைக்குச் சேர்த்தார்கள், வெகுமக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள், சில இடங்களில் தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெகுமக்களைச் சுட்டுக் கொன்றார்கள் என்பதுதான். இந்தக் குறிப்பிட்ட குற்றங்களை விடு தலைப்புலிகள் செய்தார்கள் எனும் விடயங்கள் சேனல் நான்கு ஆவணப்படத்தில் மட்டுமல்ல, அல்ஜஜீராவின் ஆவணப்படத்திலும், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகவே இந்த வாதம், இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மறுப்பதற்கான ஆதாரங்களாக, வாதமாக இலங்கை அரசு முன்வைப்பது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது.

இதுவன்றி இலங்கை அரசு புரிந்த யுத்த சூனியப் பிரதேசக் கொலைகள், உணவு, மருந்து கொடுக்காமல் வெகுமக்களைக் கொன்றது, கனரக ஆயுதங்களை மக்கள் மீது பாவித்தது போன்ற குற்றங்களுக்கான பதில்களை, இலங்கை அரசு யுத்தத்தின் இறுதி நாட்களில் கைது செய்து பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் விசாரணை செய்யப்பட்ட மருத்துவர்களைக் கொண்டே பதில் சொல்ல வைக்கிறது. விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தபோது விடுதலைப்புலிகளால் செலுத்தப்பட்டே இவர்கள் அப்போது பேசியதாக அரசு சொன்னது. இப்போது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற அவர்கள் தமது முன்னைய தகவல்கள் அனைத்தையும் மறுத்துச் சொல்வதை உண்மை என்கிறது. இங்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். முதலில் இலங்கை அரசு வெகுமக்கள் சாவு என்பது பூஜ்யம் என்றது. நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் வெகுமக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காணாமல் போதல் நிகழ்ந்திருக்கிறது. அது குறித்த புள்ளிவிவரத்தை அரசு கொண்டிருக்கவில்லை. ஆகவே, இது குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறது. இலங்கை அரசின் முதல் ஆவணப்படத்தின் புள்ளி விவரங்களின் படி 3000 n¾°மக்களுக்கு அது கணக்குச் சொல்லமுடியவில்லை. இப்போது, வெகுமக்கள் கொல்லப்படடிருக்கலாம், அது சொற்பமானது என்கிறது அரசு. அரசின் தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யுத்தத்தின் இறுதிநாட்களில் ஒருத்தருமே கொல்லப்படவில்லை என அறிக்கை விடுகிறார். இவ்வளவு குழப்பங்களை முன்வைக்கிற அரசின் திட்டவட்டமான, வெகு மக்கள் கொலைகள் குறித்து மினோலி தனது ஆவணப் படத்தில் அறுதியாக எதுவுமே சொல்வதில்லை.

மினோலியால் சொல்லக் கூடியதெல்லாம், கொல்லப்பட்டவர்கள் 40,000 பேர் என்பதெல்லாம் அதிகப்படி கணக்கு என்பதுதான்.

பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகிறார்கள், பாலச்சந்திரன் போன்ற, போராளிகளின் வாரிசுகள் திட்டமிட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கான இலங்கை அரசின் குறிப்பான ஒரு பதில் என்னவென்றால், இசைப்பிரியாவும், இசைப்பிரியா போன்றவர்களும் கடுமையான பயங்கரவாதிகள் (ஆகவே அவர்களைச் சித்திரவதை செய்து, பாலியல் வல்லுறவு புரிந்து, அவர்தம் உயிரற்ற உடல்களையும் நிர்வாணப்படுத்திக் கால்களில் மிதிக்கலாம்). இன்னொரு விதமான பதில்களை தமிழ்ச்செல்வனின் துணைவியார், சூசையின் துணைவியார் போன்ற அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், முகாம்களில் அரசப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் முன்வைக்கிறார்கள். தம்மை அரசு நன்கு கவனித்துக் கொள்வதாகவும், தாம் எவரும் சித்திரவதைக்கோ, பாலியல் வல்லுறவுக்கோ உள்ளாகவில்லை என்றும், ‘தமக்குத் தெரிந்து’ அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் ‘பொதுவாக’ அவர்கள் சொல்கிறார்கள். இந்தக் கூற்றுக்கள் எல்லாம், சேனல் நான்கு ஆவணப்படத்தில் கண்கள் கட்டிய நிலையில் சுட்டுக் கொல்லப்படும் பெண் போராளிகள், சித்திரவதைக்குள்ளான, இரத்தம் உறைந்த, அவயவங்கள் சிதைந்த, பெண் போராளிகளின் நிர்வாணமான உடல்கள் குறித்த ‘குறிப்பான’ ஒளிப்பட சாட்சியங்களுக்கான பதில்கள் இல்லை.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இந்தத் தந்திரோபாயம் பற்றிக் குறிப்பிடும்போதுதான் இலங்கைக் கொலைக்களங்கள் ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே இவ்வாறு குறிப்பிடுகிறார் : இலங்கை அரசு செய்ததாக ஆதாரங்களுடன் நாங்கள் குறிப்பாகக் குறிப்பிடும் போர்க்குற்றங்கள அனைத்தையும், அது குறித்துக் குறிப்பாக பதிலளிக்காத நிலைமையில், மொத்தமாகவும் பொதுவாகவும் இவை போலி என நிராகரிக்கிற காரியத்தை இலங்கை அரசு செய்து வருகிறது. இந்தக் காரியத்தைத்தான் தன் சொல் சிலம்ப விளையாட்டின் மூலம் செய்து வருகிறார் மகிந்த ராஜபக்சேவின் இலக்கிய முகமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க என்பவர்.

அமெரிக்காவின் திட்டத்தின் பகுதியாகத்தான் ஜெனீவாவில் சேனல் நான்கு ஆவணப்படத்தை வெளியிடுகிறது என்கிறார் அவர். ரஜீவ விஜேசிங்கவின் பேரறிவு அப்படிப்பட்டது. மனித உரிமைக் கண்காணிப்பகம் ஒவ்வொரு ஆண்டும் முன் கோடைக்காலத்திலும், கடும் கோடைக் காலத்திலும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மனித உரிமைகள் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. மார்ச், -ஏப்ரல், -மே மாதங்களில் ஜெனீவா, -இலண்டன் உள்பட இந்தத் திரைப்பட விழாக்கள் பலவருடங்களாக நடந்துவருகிறது. இலண்டன் பிரிக்ஸ்ட்ன் ரிட்ஸி திரையரங்கம் இந்தத் திரைப்பட விழா நடக்கும் முக்கியமான வளாகம். அமெரிக்க, ஐரோப்பிய மனித உரிமை மீறல்களும், இந்தியா உள்ளிட்ட உலக அளவிலான நாடுகளின் மனித உரிமை மீறல்களும் குறித்த ஆவணப்படங்களும் முழுநீளப் படங்களும் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படும். இந்திரா காங்கிரசார் புரிந்த டில்லி சீக்கிய மக்கள் படுகொலை குறித்த சோனாலி போஸின் அமு (2005), குஜராத் நரவேட்டைக்காரன் நரேந்திரமோடி குஜராத் முஸ்லிம் மக்களைக் கொன்று குவித்த பேரழிவு பற்றிய நந்திதா தாஸின் பிராக் (2008) போன்ற திரைப்படங்களை நான் இந்த மனித உரிமைத் திரைப்பட விழாவில்தான் பார்த்தேன்.

ரஜீவ விஜேசிங்கவுக்கு தனது எஜமானர்களான மகிந்த ராஜபக்சே மீதும், அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்சே மீதும் போர்க்குற்றவாளிகள் என சேனல் நான்கு குற்றம் சாட்டுவதனையிட்டு மிகவும் வருத்தம் இருக்கிறது. இவர்கள் மீது சேனல் நான்கு குறிப்பாக எதுவே குற்றம் சுமத்தவில்லையாம். பொதுமைப்படுத்தி அவர்களைக் குற்றம்சாட்டுகிறதாம். ரஜீவ விஜேசிங்க, மகிந்த ராஜபக்சேவையும், கோத்தபாய ராஜபக்சேவையும் மெசின்கன் ஏந்திய சுவர்ஸ்நேக்கர் அல்லது சில்வஸ்டர் ஸ்டலோன் வடிவத்தில் சேனல் நான்கு குறிப்பாகக் குற்றம்சாட்டி நிறுத்த வேண்டும் என நினைக்கிறாற்போல இருக்கிறது.

இட்லர், நரேந்திர மோடி முதல், மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபாய ராஜபக்சே வரை நரவேட்டையாளர்கள்யாரும் நேரடியாகக் கொலைகள் புரிவதில்லை. இவர்கள் இலட்சக்கணக்கான மக்களைக் கொல்வதற்கான தூய கருத்தியல் தோய்ந்த கொலை அமைப்புகளைத்தான் உருவாக்குவார்கள். இதனைத்தான் சேனல் நான்கு சொல்கிறது. இப்படித்தான் சேனல் நான்கு வெகுமக்கள் கொலைகளுக்கு ராஜபக்சே சகோதரர்களைப் பொறுப்பானவர்கள் எனச் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பானது, பொதுவானது என்பது சொல் சிலம்பம் சம்பந்தமானது இல்லை என்பதனை ரஜீவ விஜேசிங்க புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தால் அவர் சேனல் நான்கு முன்வைத்திருக்கும் குறிப்பான கேள்விகளுக்குப் பொதுவாகப் பதில் சொல்லாமல், குறிப்பான பதில்களைத் தேடிக் கொண்டுவருமாறு இலங்கை அரசுக்கு அறிவுரை சொல்லட்டும். அதுவரை சொல்சிலம்பத்தைப் பேராசிரியர் நிறுத்தி வைக்க வேண்டும் என்பது நமது பணிவான வேண்டுகோள்.

....

தண்டிக்கப்படாத குற்றங்கள் ஆவணப்படத்தின் மிக முக்கியமான பகுதி பிரபாகரனது 12 வயதுப் புதல்வர், பாலகனான பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான பகுதிதான். பச்சிளம் பாலகனை இவ்வாறு உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தி, அரைநிர்வாணப்படுத்தி, அவரது பிஞ்சு உடலில் ஐந்து தோட்டாக்களைச் செலுத்திக் கொல்கிற ஒரு அரசின் செயல்திட்டம், சரணடைந்தவர்கள் தொடர்பாக, யுத்தமுனையில் சிக்கிய வெகுமக்கள் தொடர்பாக எவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொண்டிருக்கும் என்பதற்கான அசைக்க முடியாத சான்றாக இது இருக்கிறது. இதே படையினர் பதுங்குகுழியிலிருந்து வெகுமக்களை வெளியில் இழுத்து அவர்களைச் சரமாரியாகச் சன்னங்கள் செலுத்திச் சுட்டுக்கொன்றது என்கிற சாட்சியத்தின் பதிவு ஒன்றினையும் ஆவணப்படம் கொண்டிருக்கிறது.

ஆவணப்படத்தின் இறுதிக்கு வரும்போது, இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் முதல் பகுதியை அரசு எவ்வாறு எதிர்கொண்டது என்பதனையும், எவ்வாறு இலங்கை அரசினால் பயிற்றுவிக்கப்பட்ட ஊடக விலாளர்கள் பொய்களை விற்பவர்களாக, வன்மம் கொண்டவர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்பதனையும் ஜான் ஸ்நோ எடுத்துக்காட்டுகிறார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் சேனல் நான்கு ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னால், அரசு சார்பு சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் சேனல் நான்கு ஆவணப்படம் சார்ந்தவர்கள் மீது எகிறி விழுகிறார். நிழலில் ஆட்களை உட்கார்த்திவிட்டுப் படமெடுத்துவிட்டு இதனை உண்மை என்கிறீர்கள் என்கிறார் அவர். வெளிப்படையாகச் சொன்னால் அவர்களுக்கு உயிராபத்து எனச் சொல்கிறபோது அவர் பதட்டமடைகிறார். இந்த உரையாடலை இடைவெட்டி தனது முழுமையான அடையாளத்துடன் நம்முன் தோன்றுகிறார். நாடு கடந்த அகதி ஊடகவியலாளரான தாஸன அபயமாதன. அவர் சொல்கிறார் : உண்மையைப் பேசுகிற ஊடகவியலாளர் இலங்கையில் உயிர்வாழ முடியாது. போர் முடிந்த பின்னாலும் ஒரு தேசம் எனும் அளவில் தமிழ் மக்கள் அழிக்கப்படுகிறார்கள்.

இலங்கை அரசு, சேனல் நான்கு போரின் பின்னான வளர்ச்சிகளை அங்கீகரிக்க மறுக்கிறது என்கிறது. அடுத்த காட்சியில் மதுக்கிண்ணங்களை வெளிநாட்டு ராஜதந்திரங்களின் கிண்ணங்களுடன் உரசுகிறார் ஜி.எல்.பிரீஸ். விருந்து மண்டபத்தின் ஜன்னலில் கடல் அலை வந்து மோதுகிறது. 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய காமன் வெல்த் கூட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணியாரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் மகிந்த ராஜபக்சே. இசை கிணுகிணுக்கிறது. இடையில் கேட்கிறது குழந்தையைப் பறிகொடுத்த ஈழத் தாயின் கதறல். மரித்த குழந்தையின் முகத்தில் ஈக்கள் மொய்க்கின்றன. திரை இருளத் துவங்குகிறது. 2013 காமன்வெலத் நாடுகளின் மாநாடு இலங்கையில் நடக்கப் போகிறது. இலங்கை ஜனாதிபதியின் 2011 நிபுணர் குழு அறிக்கை இலங்கைப் படையினரின் போர்க்குற்றம் பற்றி ஏதும் பேசவில்லை. கொல்லப்பட்ட 40,000 வெகுமக்களின் மரணம் உலக மனசாட்சியில் தூரத்து நினைவுகளாக மறையுமா அல்லது அவர்களுக்கு நீதி கிடைக்குமா என இருளிலிருந்தபடி கேட்கிறார் ஜான் ஸ்நோ.

ஆவணப்படம் முடிந்த பின்னாலும் இலங்கைக்கான அன்றைய ஐ.நா. அதிகாரி ஜான் ஹோம்சின் வார்த்தைகள் நமக்குள் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

யுத்தம் இவ்வாறுதான் முடிவுறும் என்று தெரிந்த பிறகும் உலக நாடுகள் ஒருவகையிலான ராஜதந்திர நடனத்தில்தான் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அனைவருமே பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் சொல்லணியினால் வழிநடத்தப்பட்டார்கள். இதனைத் தடுக்க இவர்கள் எவரும் உறுதியாகச் செயல்படவில்லை. விடுதலைப்புலிகள் அழிக்கப்படுவதை இவர்கள் விரும்பினார்கள். இலங்கை அரசுக்கு இது தெரியும். இலங்கை அரசு இதனைப் பாவித்து, எந்த உயிர்ப்பலி கொடுத்தும் விடுதலைப்புலிகளை அழிப்பது என்பதை நோக்கிச் செயல்பட்டது. உலகம் தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றவில்லை. தனது கடமையைச் செய்யவில்லை. இதுவே நடந்தது.

சர்வதேச மன்னிப்பு சபையின் அமைப்பின் ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநர் சாம் ஜாப்ரி இது குறித்து இவ்வாறு சொல்கிறார் :

இலங்கை ராணுவத்தின் உயர்ந்தபட்ச தலைவர், ஜனாதிபதி ராஜபக்சே. ராணுவத்தின் தலைமைத் தளபதியும் அவரே. அதேபோல ஈழப் போரின் போது ராணுவ உத்திகளைத் தான்தான் வகுத்து செயல்படுத்தியதாக அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவும் பலமுறை பெருமையுடன் கூறியுள்ளார். நடந்த சம்பவங்கள் குறித்து, குறிப்பாக பாலச்சந்திரன், பிரபாகரன் குறித்து இவர்கள் இருவரும் நிச்சயம் விசாரிக்கப்பட்டாக வேண்டும். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான மனிதப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தக் குற்றங்கள் தண்டிக்கப்படவில்லையானால் ஐக்கிய நாடுகள் சபை எந்த மதிப்பீடுகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டதோ, எந்த விழுமியங்களைக் காப்பதாக கோரிக் கொள்கிறதோ அது அர்த்தமற்றதாகி விடும். ஐ.நா. சபையின் சட்டபூர்வத்தன்மை என்பது அர்த்தமற்றதாகிவிடும்.

ஆவணப்படத்தின் இறுதியில் போர் முடிந்துவிட்டது, போர்க்குற்ற ஆதாரங்கள் குவிவது நிற்கவில்லை என்றார் ஜான் ஸ்நோ. ஈழ மக்களது துயர்களும் பாடுகளும் படுகொலைகளும் உலகின் முன் தூரத்து நினைவுகளாக மறையப் போகிறதா அல்லது அம்மக்களுக்குக் கிடைத்தே ஆகவேண்டிய நீதி கிடைக்கப்போகிறதா என அவர் கேட்ட கேள்வி மட்டும் அலையடித்துக் கொண்டேயிருக்கிறது. ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே சொன்ன மாதிரி, ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் அவர் தனது கடமையைச் சரிவரச் செய்துள்ளார். இதற்குமேல் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் செய்யவேண்டியது எதுவோ, அதனை அவர்கள் செய்யட்டும் என்று அவர் சொல்கிறார். இந்தக் கோரிக்கையை ஆதாரங்களுடன், மிக அழுத்தமாக உலக நாடுகளின் மனசாட்சியின் முன்வைத்திருக்கிறது தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் சேனல் நான்கின் இந்த ஆவணப்படம்.

.....

நன்றி : கட்டுரையில் பாவிக்கப்பட்டிருக்கும் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே, ஜான் ஸ்நோ, சாம் ஜாப்ரி ஆகியோரின் வாக்குமூலங்களின் தொகுப்பு, சேனல் நான்கின் தொலைக்காட்சியின் ஆவணப்படச் சிறப்புப் பக்கம், குளோபல் தமிழ் வலைத்தள மொழிபெயர்ப்புகள், தமிழகத்தின் 4 தமிழ் ஊடகத் தளநண்பர்கள் ஜெனீவாவில் ஹாலும் மக்ரேவுடன் மேற்கொண்ட அசலான நேர்காணல் போன்றவற்றிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தளங்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எனது மனமுவந்த நன்றி.

rajrosa@gmail.com

ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட

இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம்

சுருக்கமான வரலாறு. . .

அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முன்வரைவு, 2012 மார்ச் 7 ஆம் திகதி, ஐ.நா. மனித உரிமைச் சபையின் 47 உறுப்பு

நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் முன்வரைவு இவ்வாறு அமைந்திருந்தது.

இலங்கையில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் குறித்து

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு

அமைவாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது

கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்,

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை

ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்,

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கச்சார்பற்ற விசாரணை

மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து

வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல்

மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான

சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை

வரவேற்றும்,

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும்

கவனத்திற்கொண்டு,

(1) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன், நீதி,

பொறுப்புக் கூறுதல், சகல இலங்கையருக்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நட

வடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் இலங்கை அரசைக் கோருதல்.

(2) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து

எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்துக்

கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கோருதல்.

(3) மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும்,

இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுவதுடன், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள்

தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல். என்கிற மூன்று அம்சங்களே அமெரிக்காவின் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைச் சபையின் தீர்மான முன்வரைவில் அழுத்திக் காட்டப்பட்டதாக அமைந்திருந்தது.

2012 மார்ச் 22, காலையில் ஐ.நா. மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மூன்றாவது அம்சத்தில் மட்டுமே ‘மாற்றம்’ இருக்கிறது. இந்த மாற்றம்

இந்தியாவின் ஆலோசனைக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டது என்பதனை, ஐ.நா. மனித உரிமைச் சபையில் வாசிக்கப்பட்ட இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைபாடு தொடர்பான

அறிக்கையின் பனுவலை வாசிக்கிற எவரும் அறிய முடியும்

மாற்றப்பட்ட, ஐ.நா. மனித உரிமைச் சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் மூன்றாவது அம்சம் பின்வருமாறு இருக்கிறது.

(3) மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும்,

இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசித்தும், இசைவுகண்டும், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான

அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

ஆங்கிலத்தில்and the Government of Sri Lanka to accept என்று இருந்த வாக்கிய அமைப்புக்கு மாறாக in consultation with, and with the concurrence of, the Government of Sri

Lanka என மாற்றப்பட்டுள்ளது. தமிழில், இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுவதுடன் எனும் வாக்கிய அமைப்பு இலங்கை அரசாங்கத்துடன்

ஆலோசித்தும், இசைவுகண்டும் என மாற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம் இந்தியா உள்பட்ட 24 நாடுகளின் ஆதரவுடனும், சீனா, கியூபா உள்பட்ட 15 நாடுகளின் எதிர்ப்புடனும்,

8 நாடுகள் வாக்களிக்காத நிலைமையில் ஜெனீவா ஐ.நா. மனித உரிமைச் சபையில் மார்ச் 22, 2012 காலை நிறை வேற்றப்பட்டிருக்கிறது.

மாற்றப்பட்ட வாக்கிய அமைப்பு இலங்கையின் மீதான சர்வதேசக் கண்காணிப்பையும், இலங்கையின் அரசின் மீதான சர்வதேசக் கட்டுப்பாட்டையும் எந்தவிதத்திலும்

மாற்றியமைத்துவிடப் போவதில்லை எனும் அளவில், இலங்கையின் மூர்க்கத்தனமான தமிழர் இனஅழிப்புக் கொள்கையை வைத்துப் பார்க்கையில், இந்த ஐ.நா. தீர்மானம் தமிழர்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

http://uyirmmai.com/contentdetails.aspx?cid=5609

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனை யாழ் க(டு)றுப்பு பட்டியலில் இணைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

"மார்க்சியர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்’ எனத் தம்மைக் கோரிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்."

யாரந்த பொறுக்கிகள?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.