Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரே உயிரே - ஆநதி // நன்றி: http://www.dinamani.com

Featured Replies

தொடக்கம் மட்டும் வாசித்தேன். மிகுதி இன்னும் வாசிக்கவில்லை. பின்னர் நிச்சயம் வாசிப்பேன். தொடருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் நன்றிகள் அண்ணா பெறும் மூச்சு விட தான் தோணுது.... எல்லாம் அநியாயமா போட்டுதே அண்ணா எவளவு இழப்புகள் எவளவு வலிகள் முடியல்ல கண்களால் கண்ணீர் தான் வருது

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (17) (இறுதி அங்கம்)

ஆநதி

First Published : 26 Aug 2012

26kdr2.jpg

பொதுவாகவே காயக்காரர் அதிகமாகும் போதுகளில் இப்படித்தான் காது வலியாலும் அவதிப்பட்டார்கள். ஆனால் அப்படி முன்னர் அவதிப்பட்டதெல்லாம் சில வாரங்களோ சில மாதங்களோ தானே. இந்தக் கடின உழைப்போ இப்படி ஆண்டுக்கணக்காய் நீள்கிறதே. இங்கிருந்தும் கவலைப்பட இனி இடமில்லை. அடுத்த கட்டம் என்ன? என்ற குடைச்சல் அவளையும் வாட்டியது.

"அமுதா... அமுதா... அமுதா'' என்ற ஆண்குரல் அவளை வெளியே அழைப்பது கேட்டது. அந்த ஈனக்குரல் எதையோ உணர்த்த விரைந்தோடினாள். வெளியில் கிடந்த காயமடைந்தவர்களிடையே பார்வையை விசிறினாள். காயம்பட்ட மனிதர்கள் அழுக்கும் குருதியும் வேதனை முனகலும் விம்மலும் கதறலுமாய் கடல்போலக் கிடந்தார்கள். அதற்குள் இருந்துதான் அந்த ஒற்றைக் குரல் அவளைக் கூவி அழைக்கிறது. அக்குரலை நோக்கி விரைந்து சென்றவள் குரலுக்குரியவனைக் கண்டதும் திடுக்கிட்டாள். குற்றுயிராய்கிடந்து அவளை அழைத்தவன் சேரன்தான். அமுதாவின் பழைய நண்பர்களில் ஒருவன். அவனோடு அவள் கதைக்காமல்விட்டே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

"அமுதா வாழ்க்கை என்றது வாழத்தான். ஒரு நண்பன் செத்திட்டானெண்டா இன்னொரு நண்பனத் தேடிக்கொள்ளுறம்தானே. அதப்போல நீங்கள் ஓமெண்டால் நான்'' என்றவனை எரித்துக் கருக்குவதுபோலப் பார்த்துவிட்டுச் சென்ற அமுதா இன்றுவரை அவனோடு முகம் கொடுத்துக் கதைத்ததில்லை.

"செய்தால் உங்களத்தான் செய்வன். இல்லாட்டில் உங்களப் போலவே உங்களுக்காக நானும் தனியாவே வாழுவன். என் மரணம்வரை உங்களுக்காகக் காத்திருப்பேன்'' என்று எழுத்தில் அனுப்பியவன் உண்மையில் அவளுக்காகவேதான் காத்திருந்தான்.

இதோ மரணம் அணைக்கப் போகும் தருவாயில் அவன்.

அமுதா துயரத்தோடு அவனைப் பார்த்தாள். உயிர் பிழைக்கக்கூடிய நிலையில் அவனில்லை என்பது புரிந்தது. அவளுக்கு உடல் பதறியது. கால்கள் நடுங்கின. அவளால் அவனை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்கவே முடியாது. மார்பு கிழியக் கிடக்கும் அவனது தோற்றம் அவளை அறைவது போலிருந்தது. ஒரே ஓட்டமாய் திரும்பி ஓடினாள். பின்னே அவனது குரல் அவளை துரத்திப்பிடித்தது.

"அமுதா போகாதை. என்னய விட்டிட்டுப் போகாதையடி அமுதா'' என்ற குரல் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அமுதாவிடம் வந்த சுமதி அவளைப் பிடித்து நிறுத்தினாள். என்ன? என்று பார்வையால் கேட்டாள். பின்பு அவளே சொன்னாள்.

"எங்க போறாய் அவன் சாகப்போறான் போ அமுது. கொஞ்ச நேரம் அவனடில நிண்டிட்டு வா'' என்று அமுதாவைத் திருப்பிவிட்டாள் சுமதி. அமுதா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நின்றாள். எல்லோரும் அவளைப் பார்ப்பது அவளுக்கு மனக்கஸ்ரமாய் இருந்தது.

"அமுதா வா அமுதா'' என அவன் ஓயாமல் சத்தமிடுவது அவளுக்கு என்னவோபோல இருந்தது. மற்றவர்கள் அவளை என்ன நினைப்பார்கள் எனினும் அமுதா அவன்முன்னால் சென்று நின்றாள். அவனோ நம்பமாட்டாதவனைப்போல அவளைப் பார்த்தான். உலகத்தின் வேதனை அனைத்தையும் அப்போது சேரனின் முகத்தில் பார்க்க முடிந்தது. குருதி வழியும் கைகளால் மெதுவாக அமுதாவின் கையைப் பிடித்தான். எதையோ சொல்லத் துடித்தான். எதுவுமே சொல்லாமல் கண்களை அமுதாவின் முகத்தில் பதித்தான். அந்தக் கண்கள் மெது மெதுவாய் உயிர் வற்றிப் போயின.

அமுதா தன் நடுங்கும் விரல்களால் அவனது இமைகளை மூடினாள். தன் கையை அவன் பிடியிலிருந்து விடுவித்து அவனது கைகளிரண்டையும் சீராக அவன் மீது வைத்துவிட்டாள். சிலைபோல அசைந்து வந்த அமுதாவைப் பிடித்து சுமதி நிலத்தில் இருத்தினாள்.

"இஞ்ச பார் அமுது, எல்லாரும் போகப் போயினம் எண்டு கதைக்கினம்.''

"எங்க?'' என்றாள் அமுதா. சேரனுக்காக அழக்கூட அவளுக்கு நேரமில்லையா? அடுத்தடுத்து வந்த செய்திகள் அத்தனையுமே அவளை அப்படியா காயப்படுத்த வேண்டும்?அவனுக்காக அழவேண்டும் போன்று கிளம்பிய உணர்வு அப்படியே அவளுக்குள் கல்லாக இறுகியது.

"என்ன சுமதி சொல்றாய் எங்க போகப் போயினம்?''

"போராட்டம் முடிஞ்சிதாம். எல்லாரையும் போகட்டாம்.''

"என்ன சுமதி என்ன சொல்றாய்? எங்க போறதாம்?''

"ஆமியிட்டத்தான்.''

"உண்மையாவா சொல்றாய்?''

"ஓ நீயும் போ. நீ போகாட்டில் அம்மா தனிச்சிருவா.''

"ஏன் நீ?'' என்ற அமுதாவின் வார்த்தைகள் ஒலிவற்றிக் காற்றாகின.

"வாமன் வராமல் நான் முடிவெடுக்க மாட்டன் அமுது.''

"நானும் உன்னோட நிக்கிறன்.''

"வேண்டாம் அமுது. அம்மா பாவம். அவவுக்காக எண்டாலும் நீ போகத்தான் வேணும்.''

அங்கு நின்ற அனைவரும் படையினரிடம் எப்படிச் சரணடைவது என்பதைப் பற்றியே கதைத்தார்கள். அமுதா எந்த அபிப்பிராயமுமே சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டாள். தம்மைச் சுற்றிலும் கேட்டுக் கொண்டிருக்கும் காயமடைந்தவர்களின் கதறலுக்காக இனி அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. காதுகளை முழுமையாகச் செவிடாக்கும்படி அயல்முழுவதும் எறிகணைகள் வெடித்தன. குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் மழைபோலப் பொழிந்தன. சுமதி தலையைக் கையில் தாங்கியபடி நிலத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளது மனமோ இப்படி மழையாகக் குண்டுகளைப் பொழிய இந்த அரச படையால் எப்படி முடிகிறது? என்று கேள்விகேட்டது.

"போறதுதான் முடிவெண்டால் போங்களன். பிறகேன் மினக்கெடுறிங்கள்?'' என்று அவளை மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றவர்களிடம் சொன்னாள்.

"நீங்களும் வாங்களனக்கா. நீங்க எங்கட அக்கா எண்டு கூட்டிக்கொண்டு போறம்?'' என்று கெஞ்சலாய் கேட்டார்கள் இரு தம்பிமார்.

"இல்ல நான் இன்னும் வாரதா முடிவெடுக்க இல்லை. நீங்க போங்க. வாமன் வந்தால் வாறன்.''

படையினர் மிக மிக நெருங்கி வந்துகொண்டிருப்பது புரிந்தது. அங்கு நின்ற எல்லோருமே விரைவாக நகர்ந்தோடினார்கள். சுமதி மருத்துவ அதிகாரியைத் தேடி ஓடினாள்.

"எல்லாரும் எங்க போறிங்க? எங்கள விட்டிட்டு ஓடுறிங்களா'' என்னும் கதறல்கள் ஓடிக்கொண்டிருந்த சுமதியின் பின்னே கேட்டன. அந்தக் குரல்கள் சுமதியை மட்டுமல்ல, பலரின் இதயங்களையும் சாட்டையால் அடித்த மாதிரித்தான் இருந்தன. ஆனால் அதைப் பற்றியெல்லாம் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கவோ அவர்களை காப்பாற்றவிடவோ முடியாத நிலையில்தான் எல்லோருமே இருந்தார்கள்.

நடக்கக்கூடிய நிலையில் இருந்த காயப்பட்டவர்கள் தாமே எழுந்து நடந்தார்கள். சிலர் நடந்து வருவது எலும்புக்கூடுகள் நகர்வதைப் போன்றிருந்தது. உலக வரலாறுகளைச் சொல்லும் சில திரைப்படங்களில்தான் சுமதி அப்படியான காட்சிகளைப் பார்த்திருக்கிறாள். அப்படியொரு நிலைமை தமிழினத்துக்கும் வரும், அதை தானும் கண்களால் காண வேண்டியிருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. கிடப்பில் விழுந்தவர்களின் கதறல்கள் சொல்லில் அடங்காதவை. மரத்துக்கு மரம், பள்ளத்திற்குப் பள்ளம் என்று பார்வைக்குப்பட்ட இடமெல்லாம் காயப்பட்டவர்களின் காட்சிதான். அவர்களின் கதறலும் கண்ணீரும் மட்டுமல்ல, இன்னமும் தேடிப்பிடிக்க முடியாமல்,போன உறவுகளின் தேடல்,குரலும் கதறலும்,கூட அவ்விடத்தை சூழ்ந்து இனம் புரியாதவொரு சூனியத்தை ஏற்படுத்தியது. அத்தனையையும் கடந்து ஓட்டமும் நடையுமாய் போனாள்.

"எங்கள விட்டிட்டு போறிங்களா டொக்டரக்கா'' என்று அவளின் பாவாடையை பிடித்திழுத்துக் கதறிய நோயாளியின் கையை பறித்துவிட்டுவிட்டு ஓடிய அவள் போனவேகத்தில் வைத்திய அதிகாரியின் காலடியில் தடுக்கிவிழுந்தாள். அவர் கைப்பையும் தோள் குழந்தையுமாக நின்றார்.

"வாங்க சுமதி. இதில இனி நிக்கேலாது. கண்டால் சுடுவான். சனத்தோட போவம்'' என்றவரோடு அவரது மனைவியும் நடையைக் கட்டினார்.

"டொக்டர், வாமன்.....'' என்றபடி அவரின் பின்னேயே சென்றாள் சுமதி.

"முதல்ல வாங்கம்மா. பாப்பம். விசாரிப்பம்'' என்றவர் நடையை வேகப்படுத்தினார்.

"டொக்டர் வாமனில்லாமல் நான் வரமாட்டன்'' என்றவள் தயங்கி நின்றாள்.

"வாம்மா. வானத்தப் பார் எப்பிடி புகை கிளம்புதெண்டு. இதில மினக்கெட்டமெண்டால் காயப்படுவம். வாமனத் தேடிப் பார்க்கலாம். வாங்க இப்ப'' என்றவர் நடையை மேலும் வேகப்படுத்தினார்.

"டொக்டர், அமுதாவ விட்டிட்டு வாறம்'' என்றவளை திரும்பிப்பார்த்த மருத்துவரின் கண்கள் குளமெனத் ததும்பின.

"அந்தத் தெய்வமும் எங்கள விட்டுட்டுப் போட்டுதம்மா'' என்றவர் குலுங்கி அழுதார். சுமதியால் நம்பவே முடியவில்லை.

"எப்பிடி டொக்டர் என்னோடதானே நிண்டவ?'' என்ற சுமதிக்கு உலகமே கேட்கக்கூடிய மாதிரி சத்தமிட்டு அழத் தோன்றியது. அப்படியே நின்ற சுமதியை வைத்திய அதிகாரியின் துணைவியார் தோளில் தட்டிக் கொடுத்தார்.

"அமுதுக்கு என்ன நடந்ததக்கா?'' என்று சுமதி விம்மினாள்.

"அப்பதான் இவரிட்ட வந்தா. வாசல்ல நிண்டு என்னவோ சொல்ல வெளிக்கிட்டா. பங்கருக்க வாங்க எண்டு இவர் சொல்லி முடியேல்ல, ரவுண்ஸ் ஒண்டு நெத்திப் பொட்டிலயே இறங்கிட்டுது. சாகிறனெண்டு தெரியாமலேயே ஆள் முடிஞ்சிது. இவர் சரியாய் அழுதுபோட்டார். அப்பிடியொரு நேர்ஸ நான் வாழ்க்கையிலயும் கண்டதில்லையம்மா. அருமையான பிள்ள'' என்ற அவரின் வார்த்தைகள் சுமதியை விம்மி விம்மி அழவைத்தன.

சுமதியின் மனம் எரிமலையாய்க் குமுறிக் கொண்டிருந்தது. எறிகணைச் சத்தமோ அப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. வானம் முற்று முழுதாகக் கரும்புகையாலும் புழுதியாலும் நிறைந்திருந்தது. ஆகாயமே தெரியாத அளவுக்கு அப்புகை கட்டியாய் நிறைத்து காற்று முழுவதையும் தூசியாக்கியது. அந்த இறுதி நாளில் மக்கள் சுவாசித்தது காற்றையே அல்ல, புகையையும் தூசி துகள்களையும்தான்.

வட்டுவாகலை நெருங்கியபோது சுமதியின் கால்கள் நகர மறுத்தன.

"நீங்கள் போங்க டொக்டர். நான் நிண்டு வாமனத் தேடிப் பாக்கிறன்'' என்றவள் மருத்துவர் என்ன சொன்னார் என்பதையே கேளாமல் சனத்திரளுக்குள் மறைந்தாள். உயிர் குடிக்கப் பாய்ந்துவரும் சன்னங்களின் ஒலி அவளின் இதயத்தையும் நடுங்கச் செய்தன. அவளது உள்ளமோ "வாமன் வாமன் வாமன்'' என்று உருப்போட்டுக் கொண்டிருந்தது. கால்களோ தொய்ந்து விழப்போகிறேன் என்று பயமுறுத்தின. கண்களை கண்ணீர் மறைத்தது. விம்மும் இதயத்தை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவளது கால்கள் வந்த வழியை மறந்துவிட்டிருந்தாலும் வந்து கொண்டிருப்பவர்களை விலக்கியபடி எதிர்நடை போட்டன.

தொடர்ச்சியாக வீறிட்டழுது கொண்டிருந்த ஒரு குழந்தையின் சத்தம் அவளை நின்று பார்க்க வைத்தது. சிறிய மரமொன்றின் அடிவேரில் சாய்ந்தபடி குந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் மடியிலிருந்துதான் அக்குழந்தை அலறிக்கொண்டிருந்தது. மரத்தில் சாய்ந்திருந்தவள் குழந்தையின் தாயாக இருக்கலாம். அவர்களருகில் எவரும் இருக்கவில்லை. அத்தனை கூட்டத்திற்குள்ளும் தனித்துவிடப்பட்டவர்களாய்த் தெரிந்தார்கள். அவளின் தலையிலிருந்து குருதி பெருகிக்கொண்டிருந்தது.

"தனியவா வந்திருக்கிறிங்க?'' என்று கேட்ட சுமதி திடுக்கிட்டாள். ஏனென்றால் அது பதில் பேச முடியாத பிணம்.

வெறுமையாகிவிட்ட சுமதியின் மனத்தால் எதையும் சிந்திக்க முடியவில்லை. எனினும் அழுதுகொண்டிருந்த அந்த குழந்தையை பிணத்தின் மடியிலேயே விட்டுவிட்டு விலக சுமதி என்ற தாதியால் முடியவில்லை.

முற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ ஆனதி கதையை அவசரப்பட்டு கட்டாயமாக முடித்த மாதிரிப் படுகிறது பேசாமல் ஈழநேசன் இணையத்திலேயே எழுதிக் கொண்டு வந்திருக்கலாம்...கதையை தொடர்ச்சியாக இணைத்ததிற்காக சோழியானுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.