Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்: 02

Featured Replies

மனுஷ்ய புத்திரன்

Manush%20Kavithai.jpg

இரங்கல் கூட்டம்

இரங்கல் கூட்டத்தில்

விளக்குகள்

மிகவும் பிரகாசமாக இருந்தன

சொல்வதற்கு

ஏராளம் இருந்தன உண்மைகள்

ஏராளம் இருந்தன பொய்கள்

இரண்டுக்கும் இடையிலும்

கொஞ்சம் இருந்தன

இறந்தவனை

எப்படித் தொட்டுப் பார்ப்பது என்று

ஒருவருக்குமே தெரியவில்லை

ஒவ்வொருவராக முன் வந்தார்கள்

ஒருவர் அவனை

தண்ணீராக மாற்றிக்காட்டினார்

இன்னொருவர்

அவனை ஒரு புகையாக மாற்றினார்

வேறொருவர்

ஒரு காலித் தொப்பியிலிருந்து

அவனை

ஒரு புறாவாக பறக்கச் செய்தார்

யாரோ ஒருவர்

சிகரெட் லைட்டரில் எரியும்

கணநேர ஜுவாலையாக மாற்றினார்

அவனுக்கு மிகவும்

நெருக்கமான ஒருவர் வந்தார்

மரணம்

ஒரு மலரை

காகித மலராக்கி

அமரத்துவம் அடையச் செய்துவிட்டது

என்றார்

யாரோ ஒருத்தி

அவன் மீதான காதலை

அப்போதுதான் முதன் முதலாக

வெளிப்படுத்தினாள்

ஒரு ஒவியர் அவனை

ஒரு ஓவியமாக்கியிருந்தார்

ஒரு புகைப்படக்காரர்

அவனை ஒரு புகைப்படமாக்கியிருந்தார்

ஒரு ஒளிப்பதிவாளர்

அவனைக் காட்சிப்படுதியிருந்தார்

ஒரு கவிஞர்

அவனை ஒரு கவிதையாக்கினார்

நான் சொன்னேன்

’எனக்கு அவனை

அவ்வளவாகத் தெரியாது

இந்த மரணம்

அவனை தெரிந்துகொள்ள

ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது’ என்று

இறந்தவன் ஒன்றுமே சொல்லவில்லை

அவன் போக்கில்

முகத்தைத் திருப்பிக்கொண்டு

உட்கார்ந்திருந்தான்

இறந்தவனின்

சின்ன மகளுக்கு

மிகவும் சலிப்பாக இருந்தது

அவள் இருக்கைகளுக்கு

இடையே நடக்கத் தொடங்கினாள்

ஒவ்வொருவராக சிரிப்பு மூட்டத் தொடங்கினாள்

எல்லோருமே சிரிக்க விரும்பினார்கள்

ஆனால் எச்சரிக்கையுடன்

சிரிப்பைத் தவிர்த்தார்கள்

அவள்

உயிரோடு இருக்கும்

யாரோ ஒருவரின்

சின்ன மகளுடன் சேர்ந்துகொண்டாள்

அவர்கள் எல்லா இடத்திலும்

ஓடிக்கொண்டே இருந்தார்கள்

தயாரிக்கப்பட்ட பேச்சுக்களின்

பக்கங்கள் காற்றில் பறக்கத் தொடங்கின

இறந்தவனுக்காக

கண்ணீர் சிந்த விரும்பியவர்கள்,

இறந்தவனின் குழந்தைக்காக

கண்ணீர் சிந்த விரும்பியவர்கள்

இதை கவனிக்காமல் இருக்க

முயற்சித்தார்கள்

வெளிவாசல் கதவை

எட்டிப் பார்த்த

இறந்தவனின் குழந்தை

உயிரோடிருப்பவனின் குழந்தையிடம்

’ரொம்ப இருட்டாயிடுச்சு

எப்ப வீட்டுக்குப் போகலாம்’

என்று கேட்டாள்

இருளோடு

இருளாய் நின்றுகொண்டிருந்த

இறந்தவன்

தன் சில்லிட்ட கைகளால்

அந்தக் குழந்தைகளின்

தலையை வருடுகிறான்

(கிருஷ்ணா டாவின்ஸிக்கு)

azhivu1%20copy.jpg

அழிவு வேட்கையை உற்சாகப்படுத்தும் கவிஞன்

அழிவு வேட்கையை

உற்சாகப்படுத்தும் கவிஞன்

ரத்த ருசி அறிந்தவன் அல்ல

இருந்தும்

பலிபீடத்தின் முன்

உறைந்த கண்களுடன்

நின்றிருந்தவர்களுக்கு

புனிதப் பலியின் கிளர்ச்சியூட்டும்

வரிகளை எழுதினான்

அவர்கள் நடனமாடிக்கொண்டே

அந்த வரிகளை நோக்கிச் சென்றார்கள்

அந்த பலி பீடத்தை நோக்கிச் சென்றார்கள்

அழிவுவேட்கையை

உற்சாகப்படுத்தும் கவிஞன்

குரூரக் கனவுகள் காண்பவன் அல்ல

இருந்தும்

யுத்த களத்தில்

சமாதானத்தின் தூதுவர்களுக்கு எதிராக

தியாகப் போரின் சிலிர்ப்பூட்டும்

வரிகளை எழுதினான்

அந்த வரிகளினூடே

யாரோ மகத்தான யுத்தங்களை வென்றார்கள்

யாரோ மகத்தான யுத்தங்களைத் தோற்றார்கள்

அழிவு வேட்கையை

உற்சாகப்படுத்தும் கவிஞன்

ஒரு புரட்சியாளன் அல்ல

இருந்தும்

அவன் எளிய மக்களை

முடிவற்ற புரட்சிகளுக்குத் தூண்டும்

வரிகளை எழுதினான்

அந்த வரிகள்

கூட்டம் கூட்டமாக மக்களைக் கொல்வதற்கான

கூட்டம் கூட்டமாக ரகசியமாகப் புதைப்பதற்கான

வரலாற்று நியாயங்களை உருவாக்கின

தத்துவார்த்த நியாயங்களை உருவாக்கின

அழிவுவேட்கையை

உற்சாகப்படுத்தும் கவிஞன்

இறந்த உடல்களை

புணரும் பழக்கம் கொண்டவனல்ல

இருந்தும்

அவன் யாரோ ஒருத்தியின்

உடலைத் தேடி அலையும்

யாரோ ஒருவனுக்கு வழிகாட்டும்

வரிகளை எழுதினான்

அந்த வரிகள் காமத்தின் தீராத வாசனையை

எங்கெங்கும் பரப்பின

அழிவு வேட்கையை

உற்சாகப்படுத்தும் கவிஞன்

பிணங்களின் விரலிலிருந்து

மோதிரத்தைத் திருடும்

நோக்கம் கொண்டவனல்ல

இருந்தும்

யாரோ ஒரு பைத்தியக்காரி

தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டபின்

தன் மணிக்கட்டை

அறுத்துக்கொள்ளத் தூண்டும்

வரிகளை எழுதினான்

அது அவளுடைய ரத்தமல்ல,

தன் கவித்துவத்தின் ரத்தப் பெருக்கு

என்று அவளை நம்பச் செய்தான்.

அழிவுவேட்கையை

உற்சாகப்படுத்தும் கவிஞன்

ஒரு பரபரப்புச் செய்திக்கு காத்திருக்கும்

பத்திரிகையாளன் அல்ல

இருந்தும்

ஏதோ ஒரு விடுதியில்

விஷம் கலந்த

தங்கள் கடைசி மதுவை

நிர்வாணமாக அருந்தும்

காதலர்களுக்கு

மகத்தான காதலின்

தற்கொலைப் பாடலை எழுதினான்

அந்தப் பாடல்

இந்த உலகத்தின்

அத்தனை நஞ்சிற்கும்

அமுதத்தின் ருசியைக் கொடுக்கிறது

இந்த உலகத்தின் அத்தனை காதல்களையும்

அந்தப் பாடலில் ஒரு சொல்லாக மாற்றுகிறது

அழிவு வேட்கையை

உற்சாகப்படுத்தும் கவிஞன்

ஒரு போதும் அழிவை விரும்புகிறவன் அல்ல

ஆனால்

அழிவற்ற மனிதர்கள்

ஒரு கவிஞனை எவ்வாறு தோற்கடிக்கின்றனர்

என்பதை அவன் அறிந்திருந்தான்

அழிவற்ற உண்மைகள்

ஒரு கவிதையை

எவ்வாறு சாரமிழக்கச் செய்கின்றன

என்பதை அவன் அறிந்திருந்தான்

மகத்தான கடவுள்கள் வாழ

மகத்தான் கவிதைகள் வாழ

அழிவின் மீது கொள்ளும் இன்பத்தைத் தவிர

அழிவின் மீது சிந்தும் கண்ணீரைத் தவிர

வேறு வழியே இல்லை

என்பதைத்தான்

அழிவு விருப்பம் கொண்ட கவிஞன்

இறுதியாகக் கண்டுபிடித்தான்

புகழைத் தேடி

நான் இன்று காலை

சிறிதளவு புகழை விரும்பினேன்

ஒரு பொய்யனைத் தேடிச் சென்றேன்

அவன்

என் கவிதைகளைப் புகழ்ந்தான்

ஒரு வேசியைத் தேடிச் சென்றேன்

அவள்

என் ஆண்மையைப் புகழ்ந்தாள்

ஒரு கங்காணியைத் தேடிச் சென்றேன்

அவன்

என் வேலைகளைப் புகழ்ந்தான்

ஒரு சித்ரவதையாளனை தேடிச் சென்றேன்

அவன்

என் பொறுமையைப் புகழ்ந்தான்

ஒரு கடவுளின் தூதரை தேடிச் சென்றேன்

அவர்

நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன்

என்று புகழ்ந்தார்

நாட்டின் தலைவரை தேடிச் சென்றேன்

அவர்

நீதான் இந்த நாட்டின் சிறந்த குடிமகன்

என்று புகழ்ந்தார்

எனக்கு எதுவுமே போதுமானதாக இல்லை

என் கையில் ஊர்ந்துகொண்டிருந்த

எறும்பிடம் கேட்டேன்

‘நீ என்னைப் பற்றி

என்ன நினைக்கிறாய்?’ என

‘நீ ஏன் இவ்வளவு நீளமான கைகளுடன்

இருக்கிறாய்

எவ்வளவோ நேரமாக

இதைக் கடந்துகொண்டிருக்கிறேன்’

என்றது சலிப்புடன்

pukazhai%20thedi%20copy.jpg

வேட்கையின் தடத்தில்...

சாம்பல் குவியலில்

எங்கோ கனல்கிறது

மிச்சமிருக்கும்

ஒரேயொரு கங்கு

என் காமத்தின் சுடரை

நீ மெல்லத் தூண்டுகிறாய்

தரிசு நிலத்தில்

சட்டென கண் விழிக்கிறது

எங்கிருந்தோ வந்து சேர்ந்த

ஒரேயொரு விதை

என் காமத்தின் நிழலில்

நீ கொஞ்சம் இளைப்பாறுகிறாய்

வீடு திரும்பும்

வழியை தொலைத்தவர்களுக்கு

கூடவே வந்துகொண்டிருக்கிறது

ஒரேயொரு நட்சத்திரம்

என் காமத்தின் தடத்தில்

நீ உன் வீட்டிற்குத் திரும்பி நடக்கிறாய்

யாருமற்ற அறைகளில் வசிப்பவர்கள்

இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

தங்கள் ஒரேயொரு நிழலுடன்

என் காமத்தின் கைகளால்

நீ ஒரு கனத்த இரவை உதறுகிறாய்

சொல்ல வந்த ஏதோ ஒன்றை

சொல்ல முடியாமல் போனவர்கள்

ஒரேயொரு சந்தர்ப்பம் வேண்டி

மனமுடைந்து போகிறார்கள்

என் காமத்தின் சொற்களை

நீ ஒரு பிரகடனம்போல சுவரில் எழுதுகிறாய்

ஒரு கனத்தை நினைவை

இறக்கி வைக்க முடியாதவர்கள்

தேடியலைகிறார்கள்

ஒரேயொரு இடத்தை

என் காமத்தின் வழியே

நீ ஒரு கனத்த மனதிலிருந்து வெளியேறிச் செல்கிறாய்

காமத்தின் பலிபீடத்தில்

ஒவ்வொருவரும் இழக்க விரும்புகிறார்கள்

ஒரேயொரு முறை தங்கள் உடலை முழுமையாக

என் காமத்தின் வாசனையில்

வரலாற்றில் யாரிடமோ இழந்த

உன் உடலை

நீ இன்று கொஞ்சம் மீட்டெடுக்கிறாய்

vetkai%20copy.jpg

சொற்களின்

சுவர் முன்னால்

சொற்களின் சுவர் முன்னால்

நின்றுகொண்டிருக்கிறேன்

அந்தப் பக்கம்

யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை

சொற்களின் சுவர்மீது

சாய்ந்து

நின்றபடியே தூங்குகிறேன்

நான் அப்போது சொற்களாலான

ஒரு கனவு காண்கிறேன்

யாரோ ஒருவன்

சொற்களின் சுவர்மீது

அசிரத்தையாக மூத்திரம் போகிறான்

அது சொற்களாலான

ஒரு கனவைவிட

எவ்வளவோ ஆசுவாசம் தருவதாக இருக்கிறது

இந்த சொற்களின் சுவரைத் தாண்டி

அந்தப் பக்கம் போய்விடலாம்

என்றுதான் எவ்வளவோ காலமாக

இங்கே நின்றுகொண்டிருக்கிறேன்

நான் சிறுவனாக இருந்தபோது

அது சிறிய கைப்பிடி சுவராகத்தான் இருந்தது

இப்போது அது ஒரு சிறைச்சாலையின் சுவராக

ஒரு மனநோய்விடுதியின் சுவராக

இந்த நகரத்தின் ஒரு தனித்த விடுதி அறைச் சுவராக

என்னென்னவெல்லாமாகவோ மாறிவிட்டது.

ஏதோ ஒரு சுவரில்

நீங்கள் ஒரு ஆபாசமான வாக்கியத்தை எழுதுகிறீர்கள்

அல்லது

ஒரு புரட்சிகரமான வாக்கியத்தை எழுதுகிறீர்கள்

வெறுமனே ஒரு பெண்ணின் பெயரை எழுதுகிறீர்கள்

அது அந்தச் சுவரை

அதன் உறைந்த நிலையிலிருந்து விடுவிக்கிறது.

ஆனால் சொற்களாலான சுவர் என்பது ஆபத்தானது

அது தன் முன் இருப்பவரை உறைய வைக்கிறது

அவரை ஒருபோதும்

கடந்து செல்ல அனுமதிப்பதே இல்லை.

ஒரு மனதின் மீது கட்டப்பட்டிருக்கும்

சொற்களின் சுவர்

ஒரு தேசத்தின் எல்லைச் சுவர்போல

அவ்வளவு கறாரானதாக இருக்கிறது

நான் நள்ளிரவில்

திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறேன்

சுவருக்கு அந்தப் பக்கம்

யாராவது இருக்கிறீர்களா

என பயத்துடன் கத்துகிறேன்

சொற்களின் சுவர்கள்

இந்த நாட்களில் எதிரொலிப்பதுகூட இல்லை

அவை எல்லா சொற்களையும் என்னிடமே

திருப்பி அனுப்புகின்றன

நான் எப்போதோ தொலைக் காட்சியில்

அந்த சம்பவத்தைப் பார்த்தேன்

ஒரு மனிதன் சுவரின் முன்

நிராதரவாக நிறுத்தப்பட்டு

பின்புறமிருந்து சுடப்படுகிறான்

அவன் அந்த சுவரில் சரிந்து விழுகிறான்

நான் நிறைய நேரம்

என் தலைக்குள்

ஒரு துப்பாக்கி வெடிப்பதற்காக

இந்தச் சுவரில் கைகளை வைத்தபடி

நின்றுகொண்டே இருக்கிறேன்

அப்படித்தான்

நான் எனது கவிதைகளுக்காக காத்திருக்கிறேன்

இன்னொரு சம்பவம்

என் கண்முன்னால் நடந்தது

யாரோ ஒருத்தி

சொற்களின் சுவரின் முன்னால்

தன் குழந்தையை

ஒரு போலி நம்பிக்கையின் பெயரால்

அப்படியே நிற்கவைத்துவிட்டுப் போய்விட்டாள்

அந்தக் குழந்தை

சொற்களின் சுவரோடு பேசத் தொடங்கிவிட்டான்

சொற்களின் சுவர்கள் அவனது சொற்களை

எவ்வளவு தின்றும் அந்தப் பேச்சை நிறுத்தவே முடியவில்லை

யாரோ சிலர்

சுவரில் தலையை மோதிக்கொண்டு அழுகிறார்கள்

யாரோ சிலர்

சுவர்கள் ஓர் நாள் உடைக்கப்படும்

என்று கவிதை எழுதுகிறார்கள்

யாரோ சிலர்

சுவர்களே இல்லாத பாதைகளில்

நடந்து போகிறார்கள்

நான் எனது சொற்களின் சுவர்மீது

ஒரு சின்ன எறும்பு ஊர்ந்து செல்வதையே

வெகு நேரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்

பூனைகள் வாழ்வில்

ஒரு சம்பவம்

poonaikal.jpg

சாம்பல் நிற பூனையைவிட்டு விட்டு

மஞ்சள் நிறப் பூனை

எங்கோ சென்று விட்ட

இந்த நாட்களில்தான்

ஒரு பூனையின் கண்ணில்

துயரம் எப்படி படியும்

என்பதைப் பார்த்தேன்

அது எவ்வளவோ நேரம்

தனியாக விளையாடிப் பார்த்தது

அதன் அபத்தத்தை

அது உணர்ந்துகொண்டது

தனக்குத் தானே கத்திக்கொண்டே இருந்தது

அதன் அர்த்தமின்மையை

அது புரிந்துகொண்டது

சாம்பல் நிறப்பூனை

எங்கே போனாலும் என் பின்னாலேயே

வரத் தொடங்கியது

நான் அதைக் கவனிக்கும்போதெல்லாம்

வாலை உயர்த்தி

கொஞ்சம் தொடும்படி

கொஞ்சம் கையில் எடுத்துக்கொள்ளும்படி

அது அவ்வளவு பரிதவிக்கிறது

நான் ஒரு மஞ்சள் பூனையாக

எப்படி மாறுவது என்பதை

என்னால் கற்றுக்கொள்ளவே முடியவில்லை

ஒரு பூனை பிரிவைக் கண்டு பயப்படுகிறது

ஒரு பூனை வாழ்வின் கருணையின்மையைக் கண்டு பயப்படுகிறது

அது அமைதியிழந்து

துணிகளுக்கு நடுவே எங்கோ ஒடுங்குகிறது

மஞ்சள் பூனையையே நினைத்தபடி

அது சுவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது

நேற்று நான் என் அறையில்

பூனை இருப்பதை அறியாமல்

கதவைப் பூட்டிவிட்டு

யாரையோ தேடி

எங்கோ போனேன்

பின்னிரவில் வீடு திரும்பும்போது

இரண்டு பூனைகளின் ஓலத்தால்

எனது வீடு நிரம்பியிருந்தது

பூட்டப்பட்ட அறைக்கு உள்ளே

சாம்பல் பூனையும்

பூட்டபட்ட அறைக்கு வெளியே

மஞ்சள் பூனையும்

இந்த உலகின் கருணையின்மைக்கு எதிராக

எவ்வளவோ நேரமாக அழுதுகொண்டிருந்தன

நான் அந்தக் கதவைத் திறந்தேன்

அந்த மகத்தான சந்திப்பின் கணத்தை

நான் திறந்தேன்

அவை ஒன்றோடொன்று தழுவிக்கொண்டபோது

அவற்றின் கண்கள் ஒரு கணம்

பூனைகளின் கண்கள் போலவே இல்லை

அவை முத்தமிட்டுக்கொண்டபோது

அந்த முத்தம் பற்றி

இதற்குமுன்பு நான் எங்கோ

எழுதியிருக்கிறேன் என்று தோன்றியது

மேலும்

இதெல்லாம்

எனக்கு மட்டும்தான் நடக்க முடியும் என்று

இவ்வளவு காலம் நினைத்துக்கொண்டிருந்துவிட்டேன்.

manushyaputhiran@gmail.com

http://www.uyirmmai....s.aspx?cid=5824

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.