Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழமே தீர்வு- பொது வாக்கெடுப்பு நடத்துக

Featured Replies

தமிழீழமே தீர்வு- பொது வாக்கெடுப்பு நடத்துக - திராவிட இயக்க நூற்றாண்டுவிழா தீர்மானம்

PostDateIcon.pngசனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012 14:35

eelam-100x80.jpgதிராவிட இயக்க நூற்றாண்டு விழா – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு, இன்று (15.09.2012) கரூரில் நடைபெற்று வருகிறது.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1

தமிழ் ஈழமே தீர்வு- பொது வாக்கெடுப்பு நடத்துவீர்

மனித குல வரலாற்றில் தேசிய இனங்கள், உரிமையோடும, மானத்தோடும் வாழ்வதற்காக, ஆயுதப் போராட்டம் நடத்தியும், அனைத்து உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றும், ஐ.நா. மன்றத்தின் தலையீட்டாலும், தங்கள் தாயகத்தை, சுதந்திர இறையாண்மை உள்ள நாடுகளாக பிரகடனம் செய்து விட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இலங்கைத் தீவின் பூர்வகுடி மக்களான ஈழத்தமிழர்கள், சுதந்திர இறையாண்மை உள்ள அரசு அமைத்து, உலகின் தொன்மையான நாகரிகம், பண்பாட்டை அடையாளப்படுத்தும் பெருமையோடு வாழ்ந்து வந்தனர்.

ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து, போர்த்துகீசியரும், ஒல்லாந்தரும், பின்னர் பிரித்தானியரும், இலங்கைத் தீவில் ஆக்கிரமிப்பு அரசுகள் அமைத்தபோது, அதிலும் பிரித்தானியர் ஆளுகையில், தங்கள் நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும், ஒரே அதிகாரக் குடையின்கீழ் இணைத்து, ஆட்சி புரிந்தனர்.

அதுவரை பிரித்தானியக் காலனியாக இருந்த இலங்கை, 1948 பிப்ரவரி 4 இல், சுதந்திரம் பெற்றபோது, சிங்களவர்களோடு, சம உரிமையும், அதிகாரமும் உள்ள மக்களாக, தாங்களும் வாழ முடியும் என்ற, தவறான நம்பிக்கையில், தமிழர்கள், சிங்களரோடு சகவாழ்வு சாத்தியம் என்றே நம்பினர். ஆனால், எடுத்த எடுப்பிலேயே, 1948 இல், அத்தீவினை தங்கள் உழைப்பால், வியர்வையால், வளம் கொழிக்கும் பூமியாக ஆக்கிய இந்திய வம்சாவழித் தமிழரான, பத்து இலட்சம் தமிழர்களை நாடு அற்றவர்களாக ஆக்கி, அவர்களின் குடி உரிமையையும், சிங்கள இனவாத அரசு பறித்த செயல், உலகத்தில் இதுவரை எங்கும் நடைபெறாத அநீதி ஆகும்.

பரந்த இப்பூவுலகில் எங்கேஅநீதி நேர்ந்தாலும் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தபண்டித நேருவின் இந்திய அரசாங்கம், அன்று வாய்மூடி மௌனியாகக் கிடந்தது என்பதும், அன்றிலிருந்தே இந்திய அரசின் துரோகம் தொடர்ந்தது என்பதும், வரலாற்று உண்மை ஆகும்.

1956 இல், சிங்களம்தான் ஆட்சிமொழி என்று, சிங்கள அரசு அறிவித்ததோடு, நீதி கேட்டு அறப்போர் நடத்திய தமிழர்கள் மீது, அடக்குமுறையை ஏவத் தொடங்கியது.

1957 இல், தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களோடு, சிங்கள அதிபர் பண்டாரநாயகே, ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால், ஜெயவர்த்தனேயும், புத்த பிட்சுகளும் எதிர்த்ததால், ஒப்பந்தம் குப்பைத் தொட்டிக்குப் போயிற்று. தமிழர்கள் தொடர்ந்து அறவழியில் போராடினர்.1965 இல், தந்தை செல்வாவோடு, இலங்கை அதிபர் சேனநாயகே செய்த ஒப்பந்தமும், சிங்களர் எதிர்ப்பால், புதைகுழிக்குப் போயிற்று.

தமிழர்கள் மீது, கொடிய அடக்குமுறை சிங்களரால் ஏவப்பட்டது. 1974 இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், சிங்களரின் கோரத் தாக்குதலால், 9 தமிழர்கள் மாண்டனர்.

இதனால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தந்தை செல்வா ராஜினாமா செய்தார். 1975 இல் காங்கேசன்துறை இடைத்தேர்தல் நடந்தது. சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசம் என்ற கோரிக்கையை முன்வைத்து, தந்தை செல்வா போட்டியிட்டார். 74 விழுக்காடு வாக்குகளுடன், மகத்தான வெற்றியும் பெற்றார். இலங்கை நாடாளுமன்றத்தில், தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, முரசு கொட்டினார்.

1976 மே மாதம் 14 ஆம் தேதி, பண்ணாகம் வட்டுக்கோட்டையில், அனைத்துத் தமிழர் அமைப்புகளையும் ஒன்றாகத் திரட்டி, சுதந்திர தமிழ் ஈழ தேசம் ஒன்றே, ஈழத்தமிழர்களின் இலக்கு என்று பிரகடனமும் செய்தார். இதுவே, வட்டுக்கோட்டைப் பிரகடனம் என்று, வரலாற்றில் புகழ் பெற்றது.

1977 பொதுத்தேர்தலில், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெரு வெற்றி பெற்றது. சிங்கள அரசு, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கும், கொடிய சட்டங்களை நிறைவேற்றியது.

1981 இல் தமிழர்கள், சிங்கள அரசின் இராணுவம்,போலீஸ் மற்றும் சிங்களக் காடையர்களால், கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அதன் உச்சகட்டமாக,1983இல் தமிழ் இனப் படுகொலை நடந்தது. ஜூலை ¹25 ஆம் நாள், வெலிக்கடை சிறையில், 53 தமிழர்கள், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர், மிகக் கோரமாகக் கொல்லப்பட்டனர்.

1983 ஆகஸ்ட் 16 ஆம்தேதி, இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், இலங்கையில் நடப்பது, தமிழ் இனப் படுகொலை என்று அறிவித்தார். தமிழ் மக்கள் தாக்கப்படுவது கண்டும், தமிழ்ப் பெண்கள், சிங்கள போலீஸ், இராணுவத்தால், கற்பழிக்கப்படும் சகிக்க முடியாத அக்கிரமம் கண்டும், தமிழர்களின் சின்னஞ்சிறு குழந்தைகளையும், சிங்களர்கள் கொதிக்கும் தாரில் போட்டு, ஈவு இரக்கம் இன்றிக் கொலை செய்ததைக் கண்டும், இனி ஆயுதம் ஏந்திப் போர் புரிவது ஒன்றே, அடிமை இருளில் இருந்து தமிழர்களை விடுவிக்கும் என்று, ஈழத்து இளைஞர்கள், முடிவுக்கு வந்தனர்.

வரலாறு நெடுகிலும், உலகில் இப்படித்தான் ஆயுதப்போர் நடந்தது என்பதால், மாவீரர் திலகம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், முதலில் புதிய புலிகள் என்ற அமைப்பைத்தொடங்கி, பின்னர் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்று பெயரிட்டு, உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீர சாகசம் புரியும்,புரட்சிகர விடுதலைப்படையாக உருவாக்கினார்.

இந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக் காலத்தில், விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளுக்கு, இந்திய அரசு, ஆயுதப் பயிற்சியும் உதவியும் செய்தது. ஆனால், அவரது மறைவுக்குப்பின், இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராஜீவ் காந்தி அரசு, சுவீடன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விலைக்கு வாங்கிய போஃபர்ஸ் பீரங்கிகள் பேரத்தில் நடைபெற்ற ஊழல், அம்பலத்துக்கு வந்ததால், இந்திய மக்கள் கவனத்தைத் திசை திருப்ப, புலிகளின் தலைவர் பிரபாகரனை, நயவஞ்சகமாக ஏமாற்றி இந்தியாவுக்கு அழைத்து வந்து, தில்லி அசோகா ஓட்டலில் சிறைவைத்து, இலங்கையோடு இந்தியா ஒப்பந்தம் செய்யப் போகிறது என்றும், அதனை ஏற்றுத் தீர வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்தது. 1987 ஜூலை 29 ஆம் நாள், ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய அரசோடும், மக்களோடும் மோதல் போக்கை விரும்பாத பிரபாகரன் அவர்கள், ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஈழத்தில் சுதுமலையில், தனது தாயக மக்களிடம் தெரிவிக்கையில், தமது பூகோள அரசியல் நலன்களுக்காக, வல்லரசான இந்தியா, நம்மீது ஒப்பந்தத்தைத் திணித்து, நாம் தியாகத்தாலும் வீரத்தாலும் கட்டி எழுப்பிய, மகத்தான விடுதலைக் கோட்டையைத் தகர்க்கின்றது. இனி, ஈழத்தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை, இந்திய அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; சிங்கள இனவாத பூதம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விழுங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று, தீர்க்கதரிசனமாகச் சொன்னார்.

ஈழத்தமிழர்களின் நியாயமான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, 1987 செப்டெம்பர் 15 ஆம் நாள், விடுதலைப்புலிகளின் முன்னணித் தளகர்த்தர்களுள் ஒருவரான திலீபன், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு எதிரே உள்ள திடலில் துளிநீரும் பருகாத உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கினார். பலாலி வரை வந்த இந்தியத் தூதர் தீட்சித், திலீபனைப் போய்ச் சந்திக்கவும் முற்படவில்லை.

அதற்கு மாறாக, செப்டெம்பர் 14 ஆம் தேதி இரவில், இந்திய அமைதிப்படையின் தளபதி ஹர்கிரத்சிங் அவர்களை, தீட்சித் தொலைபேசியில் அழைத்து, பிரபாகரனைச் சுட்டுக் கொன்று விடுமாறு, இந்திய அரசு கூறி உள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு அத்தகைய துரோகத்தை, இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று ஹர்கிரத்சிங் மறுத்துவிட்டார்.

செப்டெம்பர் 26 ஆம் தேதி திலீபன் உயிர்நீத்தார். இந்தியா தந்த வாக்குறுதிக்கு மாறாக, விடுதலைப்புலிகளின் வீரத்தளபதிகள், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேர், சிங்களப் படையினரால், அக்டோபர் 3 ஆம் நாள் கைது செய்யப்பட்டு, பலாலியில் சிறை வைக்கப்பட்டு, இந்திய அரசின் துரோகத்தால், அங்கு போடப்பட்டு இருந்த காவல் விலக்கப்பட்டு, சிங்கள இராணுவத்தினர் கரங்களில், சிக்க விரும்பாத 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பிகளைக் கடித்து மாண்டார்கள்.

இந்திய இராணுவம், விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்காப்புக்காக, அவர்கள் திருப்பித் தாக்கினர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியப் படை அங்கே குவிக்கப்பட்டது. அமைதிப்படை, அமளிப்படை ஆயிற்று. ஈழத்தமிழர்கள், பெண்கள், இந்திய இராணுவத்தால் வதைபட்டனர். அனைத்துக்கும் ராஜீவ் காந்தி அரசே பொறுப்பாயிற்று.

1989 இல், இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வி.பி.சிங் பிரதமர் ஆனார்.இந்திய இராணுவம் திரும்ப அழைக்கப்பட்டது. இலங்கையில் அரசியல் அதிகார மாற்றங்கள் ஏற்பட்டன. சந்திரிகா குமாரதுங்கே அதிபரானதும், ஈழத்தமிழர்கள் மீது முப்படைகளை ஏவினார். 1998 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்து இலட்சம் தமிழர்கள் வெளியேற நேர்ந்தது. சிங்கள அரசுக்கு எந்த உதவியும் செய்வது இல்லை என, இந்தியாவின் அன்றைய பிரதமர் வாஜ்பாய், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அறிவித்தார். விடுதலைப்புலிகள், தங்கள் பாசறைகளைப் பலப்படுத்தினர். யானை இறவு களத்தை, போரில் வென்றனர். ஓயாத அலைகள், அக்கினி அலைகளில் வென்றனர்.

இந்தப் பின்னணியில், ரனில் விக்கிரமசிங்கே இலங்கைப் பிரதமர் ஆனார். விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த, நார்வே அரசு உதவியது. அதிபர் சந்திரிகா அதைச் சீர்குலைத்தார்.

2004 இல், திருமதி சோனியா காந்தி அம்மையார் இயக்குகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவில் பொறுப்பு ஏற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபர் ஆனான். இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு, அளவிட முடியாத ஆயுதங்களையும், பணத்தையும், சிங்கள அரசுக்குக் கொடுத்து, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை, போரில் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு, மன்னிக்க முடியாத துரோகங்களைத் தமிழர்களுக்குச் செய்தது. பலாலி விமான தளத்தை,இந்திய விமானப்படை பழுதுபார்த்துக் கொடுத்தது.செஞ்சோலையில், 61 தமிழ்ச் சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள், பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். படுபயங்கரமான தமிழ் இன அழிப்புக் கொலைகளை, இராஜபக்சே அரசு செய்தது. உலகின் பல நாடுகள் போர் நிறுத்தத்தை வேண்டின. தமிழ்நாட்டில், முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழர்கள், போரை நிறுத்தக் கோரி, தீ வளர்த்துத் தங்கள் உயிர்களைத் தந்தனர்.

பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் க்hட்டுகின்ற விலாங்கு மீன் வேலையை,அப்போது முதல் அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி செய்தார்.மத்திய அரசின் மந்திரி பதவிகளுக்காக ஈழத்தமிழ் இனத்தைக் காவு கொடுத்தார். உச்சகட்டமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்தன. எங்கள் போரை இந்திய அரசுதான் நடத்தியது என்று, ராஜபக்சே, இலங்கை நாடாளுமன்றத்திலேயே அறிவித்தான்.

ஈழத்தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேர், அம்மணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கண்களும், கைகளும்கட்டப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி, 2010 ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்றும், இசைப்பிரியா என்னும் தமிழ் நங்கை, சிங்கள இராணுவத்தினரால், கோரமாகக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட காட்சி, 2010 டிசம்பர் 2 ஆம் தேதியும், லண்டன் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது,உலகத்தின் மனசாட்சி அதிர்ச்சியுற்றது. ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மூவர் குழு அறிக்கை, சிங்கள இராணுவம் நடத்திய தமிழ் இனப் படுகொலையை, உலகுக்கு அறிவித்தது.

2011 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியாவும்,கியூபாவும்வரிந்து கட்டிக்கொண்டு, இலங்கை அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றின. ஆனால், 2012 ஆம் ஆண்டும் , அதே துரோகத்தை இந்தியா செய்ய இருந்தபோது, அதனை எதிர்த்து முதல் கண்டனக் குரல் எழுப்பி, இந்தியப் பிரதமருக்குக் கடுமையான கண்டனத்தை, ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று அனுப்பினார்.அதன்பின்னரே, மற்றவர்களின் எதிர்ப்பு எழுந்தது.

அமெரிக்கா, மனித உரிமைகளுக்காகக் கொண்டு வந்த தீர்மானத்தை, இந்திய அரசு நீர்த்துப் போகச் செய்து, ஒப்புக்காக, அதை நிறைவேற்ற வாக்கு அளித்தது.

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு ஆகும் என்று, 1995 ஜூலை 1 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாநில மாநாடு, தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றியது. அதே நிலையில், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், இழ விடுதலைக்காகப் போராடுகிறது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும், தமிழர் தாயகப் பகுதிகளில், சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. சிங்கள இராணுவமும்,போலீசும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன. அவர்களையும், சிங்களக் குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, ஒரு பொது வாக்கெடுப்பை, அனைத்து உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் நடத்த வேண்டும் என்றும், அந்தப் பொது வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே, அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வகை செய்ய வேண்டும் என்றும், 2011 ஆம் ஆண்டு, ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, பிரகடனம் செய்தார்.

இந்தக் கருத்து, உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த, ராஜபக்சே கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம், சுதந்திரத் தமிழ் ஈழத்தை அமைப்பதையும், ஒரே இலக்காகக் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்; தமிழகத்திலும், தரணியிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில், தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

http://tamilleader.com/mukiaya/6147-2012-09-15-09-14-33.html

[size=4]திராவிட இயக்க தீர்மானம் ஒரு நாள் நனவாகவேண்டும், தென் சூடான் போன்று எமது மக்களும் விடுதலை பெற வேண்டும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.