Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கூண்டு’ (வாசிப்பு மனநிலை விவாதம் -3)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கூண்டு’ (வாசிப்பு மனநிலை விவாதம் -3)

October 6, 2012 Comments Off

vasuthevan-252x300.jpgவாசுதேவன் அவர்கள் கார்டன் வைஸ் அவர்களின் ‘கூண்டு’ நூல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். வாசுதேவன் அவர்கள் பிரான்சில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்து வருவதோடு, ‘மொழிஆக்கப்’ படைப்பாளியாகவும் தன்னை அடையாளப்படுத்திவருபவர். அவர் பிரஞ்சு இலக்கியங்களையும், பிரான்சின் வராலாற்று நூல்களையும் ஆழமாக கற்றுவருபவர். ஐரோப்பிய அறிவொளிக்கால வரலாற்றில் பிரான்சின் வகிபாகம் குறித்தும் ஆர்வமான தேடல்களை மேற்கொண்டவர். ‘தொலைவில்’எனும் தலைப்பிலான இவரது கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது. அண்மைக்காலமாக நவீன ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார்.

வாசுதேவன்: நான் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்பாக இங்கு நான் எந்த சூழ்நிலையில் இருந்து பேசப்போகிறேன் என்பதை ஒரு கணம் யோசித்துப்பார்த்தேன். பிரான்சில் 91ஆம் ஆண்டு காலகட்டத்தில் என்று கருதுகின்றேன் ஐரோப்பாவெங்கும் நடைபெற்று வந்த இலக்கியச்சந்திப்பை தொடர்ந்து அவதானித்து வந்தேன். இந்த இலக்கியச் சந்திப்பானது ஆரம்பகாலகட்டத்திலே இலக்கியங்களை முன்னிலைப்படுத்தியே பேசி வந்தது. காலப்போக்கில் இந்த இலக்கியச் சந்திப்பானது ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாறி அது விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு அமைப்பாக மாறியது. இதில் அநேகமானவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காதென்றே நினைக்கிறேன்.

இப்ப இங்கு இருப்பவர்களை எடுத்துக்கொண்டால், எனக்கு தெரியாத முகங்களைத் தவிர மற்றைய அனைவருமே விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என தீவிர பிரச்சாரம் செய்தவர்கள். அதற்காக முனைப்பாகவும் செயல்பட்டார்களோ அது எனக்குத்தெரியாது. சோபாசக்தியை எடுத்துக் கொண்டால் தமிழ் நாட்டிலே விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு மிகப்பெரிய ஊன்றுகோலாக அவர் இருந்தவர். அவர் மட்டுமல்ல அவரை ஒரு உதாரணத்திற்காக கூறினேன். என்னைப் பொறுத்தவரையில் நான் விடுதலைப் புலிகளை ஆதரித்தவன்.

குறுக்கீடு: அசோக் பிரகாஸ்: இடையில் தானே.

ஒன்றாக சிலகுரல்கள்: இடையில் தான்.

வாசுதேவன்: உண்மைதான் இடையில் ஆதரித்தவன். யுத்தம் முடிவடைவதற்கு முன்பாக சேரன் அவர்கள் கூறிய ஒரு வசனத்தை இங்கு வரும்போது யோசித்துப் பார்த்தேன். அவர் என்ன சொல்கிறார் என்றால். ‘விடுதலைப் புலிகள் வெற்றியடைந்தால் அது அவர்களது வெற்றியாக இருக்கும். இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோல்வியுற்றார்கள் என்றால் அது ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியாக இருக்கும்’ என்று சொன்னார். இது வந்து மிகவும் அர்த்தம் செறிந்த விசயம். இந்த விடயம் எப்போ எனக்கு விளங்க ஆரம்பித்ததோ அப்போதிருந்து நான் விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்தேன். அது சரியா பிழையா என்பது எனக்குத் தெரியாது. அதே நேரத்தில் எனக்கு எல்லாம் தெரியும், நான் மூன்று காலமும் அறிந்த முனிவன் என்று சொல்லவும் வரவில்லை. நீங்கள் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்கு பல காரணங்களை சொல்லி வந்த நீங்கள். ஒன்று அது சைவவேளாள பாதுகாப்பும், தமிழ்த்தேசிய சிந்தனையும் கொண்டது ஆகவே அதை அழிக்கவேண்டும். மேலும் அவர்கள் பயங்கரவாதிகள், அல்லது அவர்கள் முன்பு சோசலிசத்தை ஆதரித்தவர்கள் பின்பு அவ்வாறு அவர்கள் இல்லை. ஆகவே அவர்களை அழிக்கவேணும். அல்லது அவர்கள் தலித்துகளுக்காக போராடுவதாக வெளிப்படையாக அறிவிக்கவேணும் இவ்வாறு காலத்திற்கு காலம் ஒவ்வொரு காரணங்களை சொல்லி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள்தான் இங்கு அநேகமானவர்கள். புலிகள் ராஜீவ் காந்தியை கொலை செய்திருக்க் கூடாது என அரவிந் அப்பாத்துரை கூறுவார். இவ்வாறு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது. இந்த சூழ்நிலைகளுக்குள் இருந்தே இந்த புத்தகம் பற்றி நான் பேச வருகின்றேன். இது சும்மா சாதாரணமான விசயம் அல்ல இது பெரியதொரு றிஸ்க் எனக்கு.

குறுக்கீடு நாதன்: நீங்க ராஜீவ் காந்தியை கொலை செய்ததை நியாப்படுத்திறீங்களா?

வாசுதேவன்: நான் அப்படி சொல்ல வரவில்லை. இங்கு நான் சொல்வதெல்லாம் சரியென்றும் வாதிடவில்லை. நான் ஒரு சாதாரண மனிதன்தான்.

தேவதாசன்: இங்கு எல்லோருமே சாதார மனிதர்கள்தான். அவரை கதைக்கவிடுங்க.

வாசுதேவன்: முதல்ல என்னை கதைக்க விடுங்க. நான் இங்கு கதைப்பதற்கு இவ்வளவு துணிவா வந்திருக்கிறனல்லவா அதை முதலில் பாராட்டுங்க.

எனக்கு நேரம் போதாத காரணத்தால் இந்தப் புத்தகத்தை மிக வேகமாகவே வாசிக்க முடிந்தது. அது எனது பிழை என்று கூடச்சொல்லலாம். ‘சிங்கத்தின் வெற்றி’ ‘சுவர்க்கம் கண்டுபிடிக்கப்பட்டது’ ’இழந்த சுவர்க்கம்’ ‘புலிகளின் புரட்சி’ ’வாகனத்தொடர்-11’ ‘கூண்டுக்குள்’ ‘உண்மைக்கான போராட்டம்’ ’முற்றுகை’’உலகம்கவனித்துக்கொண்டிருக்கையில்’’மோதல்களுக்குப் பின்’’திரும்பிப் பார்க்கையில்’எனும் அத்தியாயங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய தொகுப்பாக ஆழமான விடயங்ளோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கின்றது. உண்மையிலேயே இந்தப் பணி மிகவும் பாராட்டுக்குரியது. ஆரம்ப அத்தியாயமான ‘சிங்கத்தின் வெற்றி’ எனும் பகுதியில் இலங்கையின் வரலாறு கட்டமைக்கப்பட்ட தன்மைகள் பற்றி குறிப்பிடுகின்றார். தீபவம்சத்திலிருந்து எவ்வாறு மாகவம்ச வரலாறு தோன்றுகின்றது. மாகாவம்சம் தோன்றுவதன் நோக்கம் என்ன. ஆரம்பத்தில் சோழர்களின் படையெடுப்பும் பொலநறுவை ஆட்சியின் தொடக்கம், பிற்பாடு அநுராதபுர வரலாறு என ஆரம்ப இலங்கை வரலாறுகளை பதிவு செய்துள்ளார். இதெல்லாம் எமக்குத் தெரிந்த விடயங்கள். இந்த நூல் ஆசிரியர் சிங்கள, தமிழ் தரப்பினரென இரு பகுதியினரிடமிருந்தும் தகவல்களை பெற்றிருக்கின்றார். இந்த ‘சிங்கத்தின் வெற்றி’ எனும் தலைப்பை வாசிக்கும்போது ஒரு முக்கியமான சரித்திரநாவலின் ஞாபகம் எனக்கு வந்தது. அது குறித்து இங்கு நான் சொல்லாமல் தொடரமுடியாது.

எஸ்.பொ அவர்கள் எழுதிய ‘மாயினி’ என்பதுதான் அந்த சரித்திரநாவல். எஸ்.பொ அவர்கள் ஒரு வரலாற்று ஆசிரியர். அவரிடம் வாரலாறு சம்பந்தமான தூரப்பார்வை ஒன்றிருந்தது. புனைவு நாவலாக இருந்தாலும் நீண்ட தூர வரலாற்றுப்பார்வையில் எழுதப்பட்ட நாவல் அது. சைவ மத பெரியார்கள், தமிழ் வரலாறுகளோடு தென் இந்தியாவில் பௌத்தம் அழிந்த கதை. அதே பௌத்தம் இலங்கையில் நிறுவுவதற்கான மாற்றங்கள் பற்றியெல்லாம் அந்த நாவல் மிக விரிவாக பேசுகின்றது. ‘சிங்கத்தின் வெற்றி’என கார்டன் வைஸ் சுவையில்லாது எழுதிய விடயங்களை எஸ்.பொ. அவர்கள் மிக சுவையாக எழுதியிருக்கின்றார். ஒரு இன காழ்ப்பு இல்லாமலும் எழுதப்பட்ட நாவல் அது.

இந்த நூலிலுள்ள ‘சிங்கத்தின் வெற்றி’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட பகுதியில் இலங்கையில் இனவாதம் தோன்றுவதற்கான அடித்தளம் எவ்வாறு போடப்பட்டதென்பது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதம் இருக்கவில்லை சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்தவர்கள் அநகாரிக தர்மபாலா எதுவும் செய்யவில்லை. ஆறுமுகநாவலரும் மிக நல்ல மனிதன் என்று சொல்பவர்களெல்லாம் பச்சை பொய்சொல்பவர்கள்.

பல்-மொழி பல்-காலாச்சாரங்களை பேணிவந்த இலங்கை வாழ் சமூகங்களானது எவ்வாறு சிறுக, சிறுக இனவாதத்தை நோக்கி நகர்ந்தது என்பதை மிகதெளிவாக சொல்லுகிறார். ‘சுவர்க்கம் கண்டுபிடிக்கப்பட்டது’ என்ற பகுதியும் அவ்வாறான சம்பவங்களையே பேசுகின்றது. காலனிய ஆட்சிக்காலத்தில் இருந்து விடுபடும்போது மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் குறித்தெல்லாம் இதில் கூறப்பட்டிருக்கின்றது. தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க இருந்ததும் பிற்பாடு தமிழர்கள் எவ்வாறு ஏமாற்றம் அடைந்தார்கள் என்பது பற்றியும் கூறுகின்றார். ‘இழந்த சுவர்க்கம்’எனும் இந்த பகுதியில் வந்து சுவர்க்கமாக இருந்த நிலமானது எவ்வாறு அந்த நிலையிலிருந்து மாற்றம் அடைகின்றதென்பது பற்றி கூறப்பட்டுள்ளது. இதற்கு பிற்பாடு ’புலிகளின் புரட்சி’எனும் பகுதியில் 83 யூலைக் கலவரத்திலிருந்து இயக்கங்கள் எப்படி உருவாகின்றது, புலிகள் மற்ற இயக்கங்களை அழித்தது குறித்து பேசுகின்றபோது எங்கு இயக்கங்கள் தோன்றினாலும் அவைகளுக்குள் உடைவுகள் ஏற்படுவதை தடுக்கமுடியாதென்பதாகவும் கூறுகின்றார். இவைகளை வரலாற்றுரீதியாக பார்ப்பதா, அல்லது இவை தவிர்க்கக்கூடிய ஒன்றாக இருந்தா என்பது குறித்தெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விசயங்கள். அடுத்ததாக ‘வாகனத்தொடர் 11’இது வந்து முக்கியமான பகுதி இது குறித்து சோபாசக்தி கூடுதலாக கதைப்பார் என நினைக்கின்றேன். அது அவருக்கு பிடித்தமான விசயமாகவும் இருக்கும். விடுதலைப் புலிகள் இறுதி நேரத்தில் செய்த அட்டூழியங்கள் பற்றிய விபரங்கள் இந்தபகுதியில் அடங்கியுள்ளது. அதே நேரத்தில் அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் அதைவிட அதிகமாகவே இருக்கின்றது. விடுதலைப் புலிகள் பல அட்டூழியங்கள் செய்தவர்கள் என்ற போதிலும் மக்களின் பாரிய அழிவுகளுக்கு அரசாங்கமே காரணமாக இருந்ததாக கார்டன் வைஸ் அவர்கள் இந்த நூலில் பதிவு செய்திருக்கின்றார்.

இதில் நாம் யாரையும் மன்னித்துவிட முடியாது. இதில் வந்த ஐக்கியநாடுகள் சபையின் பொறுப்பென்ன? ஏன் இந்த இனப்படுகொலைகள் மீது அக்கறையில்லாமல் இருந்தது? நடந்தது இனப்படு கொலைதான் என்பதை நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தில் சீனாவின், இந்தியாவின், அமெரிக்காவின் பங்குகள் என்ன என்பது பற்றியெல்லாம் சொல்லியிருக்கின்றார். இவ்வாறான சர்வதேச சூழலை இலங்கை எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது என்பது குறித்தும் விரிவாக பேசப்பட்டிருக்கின்றது. இதில் வந்து எமக்கு தெளிவாக புலனாகிற விசயம் என்னவென்றால் இந்த தமிழத் தேசியப் போராட்டமானது சீரோ நிலையிலிருந்து ஆரம்பமாகி தமிழர்களுக்குள்ளேயே முரண்பட்டு, முரண்பட்டு உடைந்து சின்னாபின்னமாகியும், தமிழத் தேசியப்போராட்டமானது முன்னால் சென்று கொண்டிருக்கும்போது…, இவர்கள் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன? இதில் இந்தியாவானது புலிகளை அழிக்கவேண்டும் என்பதாகவும், அழிக்ககூடாதென்பதான மதில்மேல் பூனை எனும் நிலைப்பாட்டில் ஏன் இருந்தது? பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வருவதை எதிர்ப்பதில் சீனா மேற்கொண்ட இறுக்கமான நிலைப்பாடு, அதேபோன்று பாக்கிஸ்தானின் உதவிகள் போன்ற தகவல்களெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றது. மேலும் இதில் முக்கியமான விடயமாக இந்த புத்தகத்தின் வெளிச்சத்தின் ஊடாக நாம் பார்க்கக்கூடியதென்னவென்றால், உண்மையிலேயே இந்த இனப்படுகொலையை நிகழ்த்தத் தூண்டியதும், அதற்கு துணையாக இருந்ததும் இந்த வல்லரசுகள்தான். இந்த வல்லரசுகளின் நோக்கம் எதுவாக இருந்ததெனில் தமது அனைத்து ஆதரவுகளையும் வழங்கி இனப்படுகொலைகளை தூண்டுவது, அதன்பிற்பாடு அதன் ஆதாரங்களை எடுத்துக்கொள்வது. இஸ்ரேலிலுள்ள தனியார் சற்றலைற் நிறுவனங்களுடாக பெறப்பட்ட பலதகவல்கள் அமெரிக்கா வசம் உள்ளது் எனவே இதில் அமெரிக்காவினது பங்கு முக்கியமானது. அந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு இலங்கையோடு பேரம்பேசுகின்றது. இலங்கையை தனது நண்பனாக காட்டுவதற்காக சீனா தனது பங்கிற்கு பல உதவிகளைசெய்து வருகின்றது. இவைகளுக்குள் என்ன செய்வதென்று அறியாது இந்தியா தடுமாறுகின்றது. இது இன்றைய இலங்கையின் அவல நிலையாகவும், இதற்குள்தான் தமிழர்களும் கைதிகளாகவும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டில் எவர் கொடி தூக்கினால் என்ன, இங்கு ஐம்பதுநாயிரம் பேர் திரண்டு ஊர்வலம் நடத்தினாலென்ன எதுவும் நடக்கப்போறதில்லை. எமக்கு அவை தெளிவாக விளங்கினாலும், இந்த நூலும் அவற்றை ஆதரபூர்வமாக கூறுகின்றது.

இலங்கை ஒரு இறையாண்மை உள்ள நாடு என்று நாம் பேசுவதற்காக சொல்லலாம். ஆனால் இலங்கையின் இறையாண்மையின் ஒரு பகுதி வல்லரசுகளிடம் சிக்கியுள்ளது என்பதை இந்த நூலினூடாக நாம் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். உண்மையில் இந்த நூல் ஆசிரியர் மிகநேர்மையாக நடந்துள்ளார். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறுவதோடு, அவர்களது நல்ல பக்கங்களையும் கூறுவார். கோத்தாபாயா பற்றிக்கூறும் போது அவர் போரில் வல்லவர், தீரன் என்பதாகவும், அதே நேரம் இரக்கமனம் இல்லாதவர், கொடுமையானவர், மக்கள் கொல்லப்படுவது பற்றி அவருக்கு அக்கறை இருந்ததில்லை என்றும் கூறுகிறார். பிரபாகரன் பற்றிக் கூறும்போதும் அவர் ஒரு காட்டுமிராண்டி, தான் எடுத்த முடிவுகள்தான் சரியென்ற நிலைப்பாட்டில் இருப்பவர். அதோபோன்று அவர் தீவிரமான போராளி, யாருக்கும் அஞ்சாதவர் என இரண்டு பக்கமும் நடுநிலையாக பேசுகிறார். இது அவரது திட்டமிட்ட முறையாக கருதமுடியாது. அவை அவரது மனதில் இருந்து இயல்பாக எழுந்த விடயமாகத்தான் பார்க்கவேண்டும். சில இடங்களில் திரும்ப திரும்ப சொன்னதை சொல்லுகிறார். காலக்கிரமங்களை மாற்றிச் சொல்லுகிறார் எனவே அவர் இதை திட்டமிட்டு வடிவமைத்து எழுதவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். கார்டன் வைஸ் அவர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர் அவர் இலங்கைப் போராட்டத்தை பலஸ்தீன-ஸ்ரேல் போராட்டத்துடன் ஒப்பிட்டும் பேசுகிறார்.

இதில் சேரன் குறிப்பிட்டதுபோல் ‘பக்கச் சார்பின்றி அறக்கடப்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை. எனினும் இந்த நூல் அம்பலப்படுத்துகிற ஏராளமானவற்றை நாம் எதிர்கொண்டேயாக வேண்டும். ‘ எனும் கருத்தோடு எனக்கும் முழு உடன்பாடுள்ளதென்பதைக் கூறிக்கொள்கின்றேன். மிகுதியை சோபாசக்தி தனது தொகுப்புரையில் கூறுவார்.

உரையாடல்:

வரதன்: நீங்க விடுதலைப்புலிகளின் உண்மையான ஆதரவாளரா அல்லது நடிக்கிறீங்களா?

வாசுதேவன்: அதை உங்களால கண்டுபிடிக்கமுடியாதா?

அரவிந்த அப்பாத்துரை: நீங்க சொன்னீங்க இங்க மிகப்பெரிய அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டார்களென்று. நான் அப்படி கருதவில்லை. இங்கே விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பே இல்லாமல் இருந்ததுதான் அவங்களுக்கு இருந்த பிரச்சனை என்று தான் நான் சொல்லுவேன். ஒரு அரசியல் எதிர்ப்பு பலமாக இருந்திருக்குமானால் அவர்கள் அழிந்திருக்கமாட்டார்கள்.

விஜி: எங்க எதிர்கிறது அரவிந்…! அவங்க சுட்டுப்போடுவாங்களே.

அரவிந் அப்பாத்துரை: அதுதான் நான் சொல்லுறேன் இவர் சொன்னார் வந்து சோபாசக்தி தமிழ் நாட்லேயே புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் எல்லாம் செய்தார் என்று அதெல்லாம் கட்டமைக்கப்பட் பிம்பங்கள்தானே தவிர அப்படியெல்லாம் இருக்கவில்லை.

வாசுதேவன்: உங்களுடைய விடுதலைப் புலிகள் எதிர்ப்பு சம்பந்தமாக என்னால் சில விசயங்களை இங்கு சொல்லாமுடியாமல் இருக்கின்றேன் ஏனெனில் தொழில் சார்ந்த விடயமாக இருப்பதால் என்னால் சொல்லமுடியாது. சில விசயங்களை வெளிப்படையாக பேசமுடியாது.

உதயகுமார்: புத்தகம்பற்றி பேசுவம்

தேவதாசன்: தனிநபர்கள் பற்றியெல்லாம் நாங்க பேசத்தேவையில்லை.

வாசுதேவன்: உதாரணத்திற்கு இந்த நூலில் ஒரு இடத்தில் சொல்லப்படுகின்றது விடுதலைப்புலிகளிடம் சிறிய அளவிலேனும் விமானப் படை இருப்பது, அது எந்தளவுதூரம் சர்வதேசத்தில் பீதியை உருவாக்குகிறது என. இதன் காரணமாக ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் தடைசெய்யப்படுகின்றது. பிரான்சிலும் விடுதலைப் புலிகளின் செயலகம் தடைசெய்யப்படுகின்றது. அதற்கு இங்கு கொடுக்கப்பட்ட ஆதரவுகள், ஏற்கனவே தாயாரிக்கப்பட்ட ஆவணங்கள் யாவும் விடுதலைப் புலிகள் பிரான்சில் தடைசெய்யப்பட்ட அன்று பின்நேரமே தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றது. அத்தகவல்களை கொடுத்தவர்கள் யார் என்பதெல்லாம்…

தேவதாசன்: அடிப்படையே அதுதான், இந்த போராட்டத்தை தொடக்கிவைத்ததும் சர்வதேசம் தான். அழிக்கப்பண்ணியதும் சர்வதேசம்தான். இந்த நூலிலும் சொல்லப்படுகின்றது ஜப்பானுக்கு அடுத்து வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இலங்கை இருந்திருப்பதாகவும், 1948 ஆம் ஆண்டு காலத்திற்கு பின்பு டி.எஸ்.சேனநாயக்காகவின் ஆட்சியை தொடர்ந்து இலங்கை பொருளாதாரரீதியாக வளர்ச்சியடைந்த நாடாகவும் இருந்துள்ளது என்று. ஆனால் இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம் சர்வதேசம்தான்.

வாசுதேவன்: குறிப்பாக இந்தியா…. ஆரம்பித்து வைத்தது இந்தியா.

தேவதாசன்: இல்ல அப்படி சொல்லேலாது. ஆரம்பிச்சது அமெரிக்கா. அமெரிக்கா ஆரம்பிச்சு வைக்க இந்தியா நுழைந்தது. அதுதான் உண்மை இவற்றையெல்லாம் அழகாக சொல்லியிருக்கிறார். ஆனால் கார்டன் வைஸ் அவர்களின் தகவல்களும் அவரது சொந்த அனுபவமாக இல்லைதானே. தனது நம்பிக்கை சார்ந்தவர்களிடம் இருந்து பெற்ற தவல்கள்தான்.

வாசுதேவன்: அவர் பெற்ற தகவல்கள் கூடுதலாக வந்து சிங்கள புத்திஜீவகளிடமிருந்து பெறப்பட்டவை. சிலரது பெயர்களையும் குறிப்பிடுகிறார். மற்றது யு.ரி.எச்.ஆர். இடமிருந்து பெற்றவைகள். யு.ரி.எச்.ஆரின் பொசிசன் வந்து எங்களுக்கு ஆரம்பித்திலேயே தெரியும்.

அசுரா: இந்த நூல் பற்றிய எனது பார்வை வந்து வாசுதேவன் சொன்னது மாதிரி பலன்ஸ் பண்ணி பலன்ஸ் பண்ணித்தான் போகுது. ஒரு கட்டுரைப் படைப்பை எப்படி முடிப்பது என்ற வகையில் இந்த நூல் அமையேல்ல. மற்றது சர்வதேச நிலைப்பாட்டில் வந்து சீனா இந்தியா என்பதற்கு அப்பால் அமெரிக்க செனெட் சபை இலங்கையில் அமெரிக்கா தலையிட தடைவிதித்தது. இலங்கைக்கும் சீனாவுக்கும் உள்ள உறவு, இலங்கைப்பிரச்சனையில் தலையிடுவதால் சீனாவுடனான அமெரிக்க எதிர்ப்பு, சீனாவின் உலகப்பொரளாதார வளர்ச்சி இவைகளெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டதாலேயே மேற்குலகம் இலங்கைப்பிரச்சைனையில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டதென்பதும், இதுவே இலங்கைக்கு சாதகமாக இருந்ததாகவும் இங்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதோட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கையாலாகாத நிலை குறித்தெல்லாம் இதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மற்றது இந்த போர்க்குற்றம் பற்றிய ஒரு கேள்வி எனக்கு. போர் என்பதே குற்றம்தான். நாங்களல்ல, இந்த நூலில் கார்டன் வைஸ் அவர்களே சொல்லுறார் புலிகள் இறுதி நேரம்வரை தற்கொலைப்படைகளை பாவித்திருக்கிறார்களென. இராணுவத்தின் மனநிலை பற்றி அவர் சொல்லும்போது இராணுவத்தில் இருக்கும் சிலர் வருகிற மக்களை அனுதாபத்துடன் வரவேற்றதாகவும், சில இராணுவத்தினர் மக்களை தற்கொலைப்படையினராக சந்தேகித்ததாகவும் கூறுகிறார். வெள்ளைக் கொடியுடன் வருபவர்களையும் அவ்வாறே சந்தேகிக்கும் நிலை இராணுவத்திற்கு நேர்ந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். போர் குற்றம் எனும்போது அதை இரண்டு நாடுகளுடன் தானே நாம் ஒப்பிடலாம். ஒரு சட்டதிட்டங்களுக்கும் உட்படாத ஒரு அமைப்புடன் ஒரு நாடு எப்படி போர்குற்றங்களை அனுசரிக்கமுடியும். வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் கூட குண்டுடன் பாய்ந்ததாக தெரியவருகின்றது. ஆகவே இதை நாம் எப்படி பார்ப்பது.

வரதன்: இதில என்ன பிரச்சனை என்றால். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் மாதிரித்தான் இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும். இரண்டு பேரும் போர்க்குற்றவாளிகள்தான். இது எல்லாருக்கும் தெரியும். உலகமும் அறிந்த விசயம்.

வாசுதேவன்: அதை நான் மறுக்கேல்ல. எனக்கு சரியான உண்மைகள் தெரியாது. இப்ப இவரும் (கார்டன் வைஸ்) அந்த இடத்தில் இருக்கவில்லை ஆனால் இருண்டு பேர் அங்கிருந்து தவல்கொடுத்துக் கொண்டிருக்கினம். இதில உள்ள பல விடயங்கள் ஏற்கனவே இணையத்தளங்களில் வந்த விடயங்கள் தான். விடுதலைப் புலிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏற்கனவே வந்த விசயங்கள். அதை வாசிக்கும்போது கிட்டத்தட்ட போரடித்ததென்றே சொல்லலாம். சாதாரணமான அரசியல் மயப்படுத்தப்படாத உண்மைகளை சொல்லக்கூடியவர்கள், என்னிடம் மொழி பெயர்ப்பிற்கு வரும்போது அவர்களுடன் நான் கதைத்திருக்கின்றேன். இடையில் ஒன்று சொல்லுறன் இவர் (கார்டன் வைஸ்) சொல்லுறார் ஒட்டுமொத்த மக்களையும் அரசாங்கம் விடுதலைப் புலிகளாகத்தான் பார்த்தார்களென்று. அடுத்ததாக விட்ட விசயத்திற்கு வாறன். நான் என்ன கேக்கிறன் என்றால் விடுதலைப் புலிகள் சுட்டார்கள், அடித்தார்கள் என்ற வசனம் எல்லாம் வருகுது.

நான் என்னிடம் வருபவர்களிடம் கேக்கும்போது அவர்கள் என்ன சொல்லுகிறார்களென்றால், வன்னிக்குள் அகப்பட்டடிருந்த மக்கள் கூட்டத்தில இருந்தவர்களில் விருப்பமாக சேர்ந்து பயிற்சியெடுத்த போராளிகள், கட்டாயமாக சேர்க்கப்பட்ட போராளிகள், பிறகு இந்த போராளிகளைச்சேர்ந்த குடும்பங்கள், போரில சம்பந்தப்படாத குடும்பங்கள் என்று. மக்கள் 2002 ஆம் ஆண்டு சமாதான காலத்தில எப்படி போருக்கு இயல்பு நிலையில் உதவி செய்தார்களோ அவர்களெல்லோரும் தங்களது உயிருக்கு ஆபத்து வரப்போகுதென கருதியபோது மிச்ச ஆக்களனைவரையும் விட்டுட்டு தாங்கள் மட்டும் தப்பியோட முயற்சித்தார்கள். மற்றவர்கள் தப்பிப்போகேலாது. காரணம் அவர்கள் போராளியும், போராளியின் தாயும், தகப்பனும், சகோரிகளாகவும் இருந்தவர்கள், சிலவேளை மாமா, மாமி, உளவு பார்த்தவகளும் அடங்கும். இவர்களெல்லாம் தப்பிப்போகேலாது. இந்த சிக்கலுக்க நடந்தது சிவில் யுத்தம்போல. உள்ளுக்குள்ள ஒரு ரென்சன் வந்திட்டுது. கடசி நேரத்திலும் போகாமல் இருந்தவர்கள்தான் யுத்தப் பிரதேசத்தில் இருந்தவர்கள். இவர்களே மிக மோசமான நிலையில் இருந்தார்கள். இவர்களே போராளிகளும், போராளியை சார்ந்தவர்களும். இவர்கள் தப்பிப்போகேலாது. இவர்களே தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக ஆக்களை மயமுறுத்துவது, தப்பியோடுபவர்களை சுடுவது போன்ற வேலைகளை செய்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். இது வந்து அரசியல் மயப்படுத்தப்படாதவர்களிடம் இருந்து வரும் செய்திகள்தான் இவை. ஒட்டுமொத்தமாக புலிகளும், மக்களும்தான் அங்கு இருந்தார்கள் என்பது சாத்தியம் இல்லாத கதை. அங்கு புலிகள் இருந்தவர்கள், புலிகளைச் சார்ந்தவர்கள் இருந்தவர்கள், புலிகளைச் சாராதவர்கள் இருந்தவர்கள். இப்படியான ஒரு கட்டமைப்பு இருந்தது. இதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில சிலர் சொல்லுகிறார்கள் கட்டளை மையம் கூட கெம்பிளீற்றாக செயலிழந்து போய்விட்டதாக. பின்பு யார் யாரெல்லாம் இருந்தனரோ அவர்களெல்லாம் கட்டளைத் தளபதியாக மாறினார்கள் என்று. இந்தக்கட்டம் தான் தோல்வியின் இறுதிக்கட்டம், எல்லாமே சீர்குலைந்த நேரம் அப்ப அந்த நேரத்தில வந்து, விரும்பியவர்கள் விரும்பிய வேலைகளை செய்தார்கள்.

றமேஸ்: அது விரக்தியில செய்வார்கள். உதாரணத்திற்கு என்ர வமிலி இருக்குது. இன்னொரு வமிலி ஓடுது எனும்போது நின்று சண்டை பிடிப்பவன் யோசிப்பான் என்னடா விட்டுட்டு ஒடுறாங்கள். இவங்களுக்காகத்தானே சண்டை பிடிக்கிறம் என்று யோசிப்பான். எனவே அவர்களே சுயமாக எதாவது முடிவெடுப்பார்கள்.

சோலையூரான்: நீங்க சொன்நீங்க தானே கட்டளை மையம் சீர் குலைந்து போய்விட்டது அதனாலேதான் அப்படி நடந்ததென்று.

வாசுதேவன்: ஒரு பகுதிச் செய்தியை சொன்னேன்.

சோலையூரான்: நீங்க உதாரணத்திற்கு சொன்நீங்க. ஆனால் நாங்க அப்பிடி பார்க்க ஏலாது. ஏனென்று சொன்னால் 15ஆம் திகதி கூட அங்கிருந்த முக்கியமான தளபதிகளால் வெளியில இருப்பவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது, நாங்கள் தொடர்ச்சியாக போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். மக்களே அணிதிரண்டுவாருங்கள் என்று. இதில நாங்க எப்படி பார்க்கிறதென்றால் புலிகள் ஒரு தொகையான மக்கள் அங்கு கொல்லப்படுவதை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

வாசுதேவன்: அதை கார்டன் வைஸ் அவர்களும் குறிப்பிட்டிருக்கின்றார்.

சோலையூரான்: ஏனென்றால் 15 ஆம் திகதிவரை தாம் போராடிக்கொண்டிருக்கின்றோம் என்று சூசையும் சொல்லிக்கொண்டிருந்தவர். 16ஆம் திகதி பின்நேரம்தான் அவர்கள் எல்லாம் இழந்து பையித்தியக்கார மனநிலைக்கு போனார்கள். ஆனால் அங்கு மக்கள் கொல்லப்படுவதை அவர்கள் விரும்பினார்கள். அதனூடாக தங்களை நிலை நிறுத்தலாம் என நினைத்தார்கள் என்பது உண்மை.

தேவதாசன்: சர்வதேச அனுதாபத்தை பெறுவதற்காக மக்கள் கொல்லப்படுவதை விரும்பினார்கள்.

விஜி: யுத்த காலத்திலதான் புலிகள் இதை விரும்பினார்கள் என்றில்லை அவர்கள் எப்போதும் அதைத்தான் விரும்பினார்கள்.

சோலையூரான்: இதற்கு ஒரு உதாரணததை சொல்லலாம். சந்திரிகாவால் 95ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பிடிக்கப்பட்டிருந்த சமயம். கிழக்கு மாகாணத்தில வந்து பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தவாகள் புலிகள். களவாஞ்சிக்குடியிலிருந்து மட்டக்களப்புவரை தமது கட்டுப்பாட்டுபிரதேசமாக கொண்டுவரவேணும் என்பதற்காக புதுக்குடியிருப்பில ஒரு தாக்குதல் செய்தார்கள். அது எஸ்.ரி.எவ் ஆல் தோற்கடிக்கப்பட்டது. அதில் புலிகள் கொல்லப்பட்டடார்கள். இரண்டாவது வவுணதீவில் ஒரு தாக்குதல் முயற்சியில் 90க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டு அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்த தோல்விக்கு காரணமாக இருந்தவர்கள் என சமூகத்திலுள்ள முக்கியமான இருவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தார்கள். இது எதற்காகவென்றால் இப்படியான செயல்களால் தான் எமக்கு தோல்வியே தவிர நாங்கள் எப்போதும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறான மரணதண்டனைகளை வழங்கினார்கள்.

வாசுதேவன்: கொலம்பியாவிலுள்ள farc எனும் அமைப்பும் இதைத்தான் செய்கிறது.

விஜி: இது நோமலா என்பதுதான் பிரச்சனை.

வாசுதேவன்: யுத்தம் என்றால் இது நோமல். சாதாரணமான சமூகத்தில் இப்படி நடக்காது. இந்த புத்தக விமர்சனம் வந்து புலிகளுக்கு எதிரான விழாவாக நடக்கலாம் என்று நான் எதிர்பார்த்தனான். இப்ப அதுதான் நடந்து கொண்டிருக்கு. இந்த புத்தகத்திலுள்ள ஒரு குட்டிப் பகுதிதான் அவைகள். இந்தப் புத்தகத்தில எவ்வளவோ விசயங்கள் இருக்கு அதுபற்றி கதையுங்கோ பாப்பம்.

சோபாசக்தி: அமைதி..அமைதி என்னையும் பேசவிடுங்கோ. இன்றைய நிகழ்வு சம்பந்தமான விளம்பர நோட்டீசில என்ர தொகுப்புரை என்று போட்டிருக்கினம். அது சும்மா நம்பாதேங்கோ. என்னைக் கேக்காமல் போட்டிருக்கினம்.தொகுப்புரை என்பது ஒரு பிழையான மரபு. வரும் கூட்டங்களில அப்படி தொகுப்புரை என்று போடாதேங்கோ. நான் பேசுவது தொகுப்புரையல்ல நான் பேசினாப்பிறகு எல்லோரும் தொடர்ந்து பேசுவோம். போன கூட்டத்தில இந்த புத்தகம் குறித்து பேசுவதற்கு நான்தான் அபிப்பிராயம் தெரிவித்தனான். இது வந்து ஒரு அருமையான புத்தகம் கடுமையான உழைப்பு. இலங்கையின் போராட்ட வரலாறு அது, இது போக்குவரத்து என்று மிக அருமையாகவும் ஒரு பக்கச்சார்பு இன்றியும் எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகம் பற்றி வாசுதேவன் நிறையப் பேசுவார் என்று பார்த்தனான் ஏனென்றால் அவ்வளவு விசயங்களை உள்ளடக்கிய புத்தகம். அதிகமாக கூடுதலாக பேசக்கூடியவர் இன்று குறைவாக பேசியிருக்கிறார். வாசுதேவன் தனது உரையில் கார்டன் வைஸின் பெயரை ஒருக்காத்தான் குறிப்பிட்டவர் என்ர பெயரை மூன்றுதரம் குறிப்பிட்டார். அங்க இருந்து என்னைப்பார்த்துக் கொண்டே பேசினார். வாசுதேவன் சொன்னதுபோல வல்லரசுகள் சேர்ந்து தோற்கடிச்ச சம்பவத்தை பத்து நாடுகள் சேர்ந்துதான் தோற்கடிச்சதென்று பலரும் சொல்லுகிறார்கள். இந்த சீனா, இந்தியா, அமெரிக்கா எல்லாம் சேர்ந்துதான் தோற்கடிச்சதென்றும் சொல்லப்படுகின்றது இதை கார்டன் வைஸோ, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினரோ சொல்லித்தான் எமக்குத் தெரியவேணும் என்றில்லை.

வாசுதேவன்: அதைத்தான் நான் முதலில் சொன்னனான். இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்த விடயம்தான் என்று முதலே சொல்லிவிட்டேனே.

சோபாசக்தி: இந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில எப்படி அந்நிய மேலாதிக்க வல்லரசுகள் குறிப்பாக இந்தியா போன்றவை எப்படி தமது கையில் எடுத்திருக்கிறது. எப்படி பிளே பண்ணுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் போராட்டம் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே இவை பற்றிய விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கு. குறிப்பாக ‘வங்கம் தந்த பாடம்’ என்ற புத்தகத்தில் இருந்து நிறைய விமர்சனங்கள் வந்தது. இடது சாரிகள், கொம்யூனிஸ்டுக்கள், தனித்த சிந்தனையாளர்கள் என பலர் மேற்குலகத்தை நம்பாதேங்க அவங்கதான் இந்த கேமை பிளான் பண்ணுகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இந்தக் குரல்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் ஒடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. கம்யூனிஸ்ட் கட்சிகள் தடைசெய்யப்பட்டது, பலர் கொல்லப்பட்டார்கள் விமர்சனம் என்ற பேச்சுக்கெல்லாம் அப்போ இடம் இருக்கவில்லை. 2009 முன்பு சொல்லப்பட்டதென்ன? அமைதியா கம்பென்டு இருங்க தலைவருக்குத் தெரியும்! தலைவர் சிந்திப்பார் அவர் எல்லாம் செய்வார் என்று. நீங்க சும்மா இருந்து கீபோட் மார்க்சிய பிரச்சாரம் செய்யுறது, கூட்டம்போட்டு கதைக்கிறது, இலக்கியச் சந்திப்பை வைத்து குளப்பம் செய்யுறது…. நீங்கள் இதெல்லாம் செய்து ஒன்றும் நடக்கப்போறதில்ல. தலைவர் பிளான் பண்ணுவார் அவர் கெட்டித்தனமாக கையாழுவார் என்றுதான் எங்களுக்கு சொல்லப்பட்ட கதைகள் ‘அந்தப்பக்கத்தில’ இருந்து. அதேநேரம் மேற்குலகத்தின் சதிகள் பற்றி பக்கம் பக்கமாக, புத்தகம் புத்தகமாக எழுதப்பட்டிருக்கிறது, பேசப்பட்டிருக்கிறது, விவாதிக்கப்பட்டிருக்கின்றது. இவை இவ்வாறு இருக்க இறுதியுத்தத்தில் இரண்டு தரப்புமே தவறிழைத்திருக்கின்றன, இரண்டு தரப்புமே போர்க் குற்றங்களை புரிந்திருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதில எனக்கு எந்த சந்தேகமுமில்லை. இதில மாற்றுக்கருத்துடையவர்கள் இருக்கினம், ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களும் இருக்கினம். என்னும் சொல்லப்போனால் எண்டைக்கு 84 ஆம் ஆண்டில் இருந்து விமானத்தில தமிழ் கிராமங்களில் குண்டு போடத்தொடங்கினார்களோ அன்றில் இருந்து இனப்படுகொலை ஆரம்பித்துவிட்டது என்பதுதான் என்னுடைய கருத்து. அது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் இறுதியுத்தத்தின் நடந்தவைபற்றிய யு.என்.ஓ அறிக்கை வந்து புலிகள் மீது ஆறு குற்றங்களையும், அரசு மீது ஐந்து குற்றங்களையும் சுமத்தியுள்ளது. அதற்கு பிறகு கார்டன் வைஸின் புத்தகம் வருகிறது. இவை இரண்டும் வெளிவந்ததன் பின்புதான் இந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மேலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்கள் எங்கடபக்கமும் கொஞ்சம் பிழை விட்டிருக்கினம்தான்,

மண்டை குழம்பித்தான் போட்டுது என்று. ஆனால் இந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, அங்கு மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீங்கள். உங்களுக்கு வடிவாத்தெரியும் 2ஆம் திகதி கிளிநொச்சி விழுகுது, அண்டையில இருந்து மக்களை ஓட்டிக்கொண்டேதிரிந்தார்கள். அரசாங்கம் அறிவிக்குது ஒரு பகுதியை, இது ஒரு யுத்தமற்ற பிரதேசம் இங்கு தாக்குதல்கள் நடத்தப்பட மாட்டாது என்று. யுத்தம் அற்ற பிரதேசம் என்றால் என்ன? அங்கு ஆமியும் போகக்கூடாது. புலிகளும் போகக்கூடாது ஆனால் புலிகள் அங்கேதான் இருந்தார்கள். பாங்களாதேசத்து அதிகாரி சொல்லுறார் தாங்கள் பங்கருக்குள் இருக்கிறம் அது செஞ்சிலுவைச்சங்கம் இருக்கும் இடம் என அறிவித்தல்களெல்லாம் இருக்கு. அப்படியிருக்க அருகில இருந்து புலிகள் அடிக்கிறார்கள். அதை நோக்கி ஆமியும் அடிக்குது. இவ்வாறு இரண்டுதரப்புமே யுத்த மீறல்களை செய்திருக்கின்றார்கள். நந்திக்கடலில் பிரேதங்கள் மிதக்கிறதென்பது எங்களுக்குத் தெரியும் அது யார் சுட்ட பிரேதங்கள்.. புலிகள் சுட்டபிரேதங்கள். அதுகுறித்து நாங்கள் இங்கு பேசுகின்றோம். எழுதுகின்றோம். ஆனால் மே18 புலிகள் விழும்வரை வாய் மூடியிருந்த புலி ஆதரவாளர்கள், புலி ஆதரவு ஊடகங்கள் அனைத்துமே ஒருவிதத்தில் போர்க் குற்றவாளிகளே.

வாசுதேவன்: இதில ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்துட்டீங்கள். புலி எதிர்ப்பிற்கு காட்டின முழு சக்தியையும் நீங்கள் மற்றப்பக்கத்திற்கு காட்டவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை. நீங்கள் ஆயிரம் கட்டுரைகள் எழுதியிருக்கிறீங்க. ஆனால் ஒருகட்டுரையில்கூட அதற்கான நியாயத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னொரு விசயம் கேளுங்க. சில உண்மைகளை நான் சொல்லவேணும்.புலிஆதரவாளர்கள் வந்து எப்படி குறுட்டுத்தனமாக புலிகளை ஆதரித்தார்களோ அதேபோல புலி எதிர்ப்பாளர்களும் வந்து என்னதான் நடந்தாலும் புலிசெய்வதுமட்டுமே பிழை, மற்றதைப்பற்றி ஒரு கவலையும் இல்லை என்றுதான் சொன்னார்கள்.

வரதன்: புலி எதீhப்பாளர்களை எவ்வாறு கணிக்கிறீர்கள்.

சோபாசக்தி: கொஞ்சம் அமைதியாக இருங்க அவரை பேசவிடுங்க.

வாசுதேவன்: நீகள் பங்களாதேசத்து அதிகாரிபற்றி குறிப்பிட்டீங்க அவர் சொல்லுறார் ஆஸ்பத்திரிகளுக்குப் பக்கத்திலும், பங்கருக்குப்பகத்திலையும் ஆட்டிலறிகளை வைத்திருந்தவர்கள் என்று அதற்கு கார்டன் வைஸ் என்ன சொல்லுகிறார் என்றால் ஒரு ஒன்றரைக் கிலோ மீற்றர், இரண்டு கிலோ மீற்றர் நெருக்கமான பகுதிக்குள்தான் அவர்கள் நிக்கமுடியும். இவ்வாறான நிலையில் அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் என்று கார்டன் வைஸ் சொல்லுகிறாரென்றால், அரசாங்கம் தாக்குதலை நிறுத்தி பட்டிணியாக இருக்கவிட்டோ, அல்லது ஏதோ ஒரு வகையில் அவர்களை செயலிழக்கசெய்திருக்கலாம். ஆனால் அரசினது நோக்கம் எவ்வளவு மக்கள் இறந்தாலும் பறவாயில்லை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்களது இறுதி நோக்கமாக இருந்ததென்று. அதை நீங்க மறந்து புலிகள் ஆட்டிலறியை வைத்து அடித்தார்கள் என்று சொல்லுகிறீர்கள்.

சோபாசக்தி: கார்டன் வைஸ் சொல்லுகிறார் இந்த யுத்தம் நடந்த ரைமில கொழும்புக்கு அடுத்ததாக அதிக சனத்தொகையிருந்தது அங்குதான் என்று. இது எப்படி ஆனது? அங்கேயே இருந்த மக்களா அனைவரும்? இல்லையே கிளிநொச்சி விள, மந்தைகளாக ஓட்டிக்கொண்டு வந்து சேர்க்கையாக உருவானதுதானே .

இந்த முடிவு

வாசுதேவன்: நீங்க மீண்டும் அந்த தவறை விடுறீங்க புலிகள் மந்தைகளாக மக்களை கொண்டு சென்றார்கள் என்று.

உதயகுமார்: புலிகள்தான் கொண்டு சென்றவர்கள்.

வாசுதேவன்: நீங்கள் நான் சொன்னதை உள்வாங்கவில்லை இந்த பைபிள் பிரச்சாரம் செய்கின்ற ஆக்கள் மாதிரி அங்கு புலிகளும் மக்களும் இருந்தவர்கள். றைட் தற்சோல் இதைத்தவிர அங்கு ஒன்றும் இருக்கவில்லை என்று சொல்லுறீங்க. நான் அப்படி சொல்லவில்லை. அங்க இருந்தது வந்து புலிகள், புலிகளின் ஆதரவாளர்கள், புலிகளால் பிடிக்கப்பட்டவர்கள், யத்தத்தில் சம்மந்தப்படாதவர்கள் என ஒட்டுமொத்தமாக இருந்தவர்கள். அந்த உள் மெக்கானிசம் என்னமாதிரி நடந்ததென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீங்கள். நீங்கள் என்ன சொல்லுறீங்க அங்க புலிகள் இருந்தவை, மக்கள் இருந்தவை அவ்வளவுதான் நடந்தது என்று.

அரவிந் அப்பாத்துரை: இது வந்து ஒரு பெரியவிசயம் என்ன தெரியுமா? யுத்தம் முடிவடைவதற்கு முன்னால் இராணுவ அதிகாரியான நாணயக்காரா என்ன சொன்னார் தெரியுமா? அங்கு இருப்பவர்கள் அனைவருமே புலிகள் என்று சொன்னார். அதுவே போர்க் குற்றத்தின் தொடக்கம் என்பேன். இது சொல்வகையான ஒரு போர்க்குற்றம்.

வாசுதேவன்: ஆமா அவங்க சொன்னார்கள் புலிகள்தான் இருந்ததென்று இவர் சொல்லுறார் அங்கு புலிகளும் மக்களும் இருந்ததென்று ஆனால் உண்மை அதுவல்ல.

அரவிந் அப்பாத்துரை: இரண்டாவது வந்து விடுதலைப் புலிகள் கனரக ஆயதங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றது, எழுதப்பட்டிருக்கின்றது. எந்தவொரு இராணுவமோ, இயக்கமோ தன் மக்களின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தினால் அதில் என்ன தார்மீக நியாயம் இருக்கிறது என தெளிவாக எழுதியிருக்கிறார்.

வாசுதேவன: இதில 177 வது பக்கத்தில இவ்வாறு எழுதப்பட்டிருக்கு: ’தங்கள் மக்களின் அவலமான சூழல் உலக நாடுகளைத் தலையிடத் தூண்டும், எனவே முக்கோணத்திற்குள் அவர்களை சிறைவைத்து, ராணுவத்தை தாக்கவைத்து, பொதுமக்களை அதிக எண்ணிக்கையில் உயிரிழக்க வைப்பதை ஒரு தந்திரமாக கடைப்பிடித்தனர் விடுதலைப் புலிகள். அனால் அத்தந்திரம் அவர்களுக்கு எதிராய் முடிந்தது.

பொதுமக்களை அவர்கள் கொல்வது வெளியுலகிற்குத் தெரியவர, அதனைச் சுட்டிக்காட்டி நாங்கள் எங்கே கொல்லுகின்றோம் அவர்கள் தானே அப்படிச் செய்கிறார்கள் என்று பிரச்சனையை அவர்கள் பக்கம் திருப்பிவிட்டனர். ஆனால் உண்மை அதுவல்ல. விடுதலைப்புலிகளின் அக்கிரமங்கள் நிறைய என்றாலுங்கூடப் பொதுமக்கள் பெரும்பாலானோரின் மரணததிற்கு அரசின் தாக்குதலே முக்கியகாரணம்.’இரண்டு பேரும் பொறுப்பு என்றாலும் அரசின் தாக்குதலே முக்கியகாரணம் என்று சொல்லுகிறார்.

வரதன்: புலி வந்து மக்களை கொன்றாலும் அரசாங்கத்தின் பிழைதான். மற்றது நீங்க புலி எதிர்ப்பாளர்களென்று அடிக்கடி உபயோகிக்கிறீங்க அதை எப்படி என தெளிவு படுத்துங்க.

வாசுதேவன்: புலிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்று கருதியவர்கள்.

அசுரா: வாசுதேவன் சொல்வதுபோல் புலி எதிர்ப்பாளர்களது நோக்கம் வந்து புலி அழியவேணும் என்பதாக

வாசுதேவன்: அப்படி வெளிப்படையாகசொன்னவர்கள்.

அசுரா: இல்ல அப்படியல்ல. புலிகள் வந்து மற்றவர்கள் பேசுவதற்கும், மற்றவர்கள் செயல்படுவதற்கும், இயங்குவதற்கும் வழிவிடவேண்டும் என்பதுதான் தேவையாக இருந்ததே தவிர புலிகள் அழிக்கப்படவேண்டும் என்பதல்ல. இன்று புலிகளின் செயல்பாடுகள் ஜனநாயக பூர்வமாக இருக்குமென்றால் புலிகளின் அழிவெணும் எனும் கருத்து எப்படி இருக்கும். இப்படியெல்லாம் லாச்சப்பலில் நாம் சந்தித்துப் பேசமுடிந்ததா முன்பு.

விஜி: புலிகள் உடல் ரீதியாக அழியவேண்டும் என்பதல்ல. அவர்களது சிந்தனை தான் அழியவேண்டும் என்பதாக இருந்தது.

சோலையூரான்: இண்டைக்கும் அந்த சிந்தனைக்கு எதிராக தொடர்ச்சியாக வேலைசெய்து கொண்டுதான் இருக்கிறோம்.

வாசுதேவன்: இந்தப் புத்தகத்தில நிறையவே தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விசயங்கள் இருக்கு. அநகாரிகதர்மபாலாவின் வருகை அவரது செயல்பாடுகள் பற்றியெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது அவர் அதற்காக சிங்கள ஆய்வாளர்கள் பலருடன் கலந்து ஆலோசித்த அனுபவத்தில்தான் எழுதியிருக்கின்றார். பொலநறுவையில் நிகழ்ந்த இரண்டு படையெடுப்புகளால் வந்து இரண்டு இராச்சியமாக பிரிந்துபோகிறது. அதற்கிடையிலான காட்டுப்பகுதி வந்து சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்குமான இயல்பான எல்லையாக வருகிறது. அதற்குள் எவரும் போகவுமில்லை. அங்கு இரண்டு மதங்களுடைய முக்கியததுவமும் குறைந்திருந்தது என்று சொல்லுகிறார். ஆனால் காலனித்துவ காலம் இங்கு வந்து கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு முயலும்போதுதான் இங்குள்ள சமூகங்களும் இரண்டாக பிரிந்துபோகும் நிலை ஏற்படுகின்றது. இந்தக்காலத்தில் இறையியல் சபை அங்கத்தவர்களான ரசியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் இலங்கை வருகிறார்கள். இவர்கள் பௌத்த மதம் குறித்து ஆய்வுசெய்தபோது தேரவாத பௌத்தம் இலங்கையில் இருப்பதை அறிந்தே அங்கு சென்றார்கள். அந்தக்காலகட்டத்தில அமெரிக்காவில எந்த மதங்கள் நல்லமதம் என்று கண்டுபிடிப்பதற்கான எழுச்சியான காலகட்டமாக இருந்தது. இன்றைய காலகட்டமும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கின்றது. இந்த பௌத்த மதத்தை அவர்கள் இலங்கை முழுவதிற்குமாக வளர்ச்சிபெற வைப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டு போகும்போது இந்த முயற்சிகளில் ஈடுபடுகின்றவரின் செயலாளராக இருந்தவர்தான் அநகாரிக தர்மபாலா என்பவர். அநகாரிகதர்மபால என்பது அவரது பெயரல்ல அதனது அர்த்தம் வீடற்றவர், அல்லது தர்மத்திற்கு வேலை செய்பவர் என்பது. இந்த அநகாரிகதர்மபால தான் இலங்கையில் பரவலாக இருந்து வந்த பௌத்தத்தை சிங்கள் மொழியோடு இணைக்கும் வேலையை செய்தார். இதற்கு அடிப்படைக்காரணமான தூண்டுதலாக இருந்தது காலனித்துவ கிறிஸ்தவ மதங்களாகும்.

உதயகுமார்: அதற்கு முதல் தமிழ் பௌத்தர்கள் இருந்திருக்கிறார்கள்.

வாசுதேவன்: நிச்சயமாக. பராக்கிரமபாகு காலத்திலேயே தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து ஆட்சி செய்திருக்கின்றார்கள்.

நாதன்: இந்த யுத்தத்தில இரண்டுதரப்பிலும் பிழை இருப்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம்.இரு தரப்பிற்புமிடையில்யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டு இருந்ததுதானே அந்தவேளையில் யுத்த நிறுத்தத்தை மீறியவர்கள் யார்? என்பது பிரதானமான கேள்வி என்றுதான் நான் நினைக்கின்றேன். புலிகளா? அரசாங்கமா யுத்த நிறுத்தத்தை மீறியது.

வாசுதேவன்: நாதன் இதில ஒரு பொய்விவாதம் ஒன்றிருக்கு. சிங்கள ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகளை எப்போதுமே நம்பவில்லை.அதேபோன்று விடுதலைப் புலிகளும் சிங்கள ஆட்சியாளர்களை நம்பவில்லை. இந்த சர்வதேசம் ஏதோ ஒரு செற்றப்பிற்காக ஒரு சமாதான உடன்படிக்கை நாடகத்தை தொடக்கியது. தொடக்கிவிட்ட அவர்கள் இந்த சமாதான ஒப்பந்தம் எவ்வளவு காலததிற்கு நீடிக்கும் என்ற எந்த வரையறையும் வைக்கவில்லை. இது ஒரு காலவரையறை அற்ற ஒப்பந்தமாக இருந்தது. இவ்வளவு காலத்திற்குள் இதை முடியுங்கள் என்று எந்த கண்டிசனும் வைக்கவில்லை. அரபாத்திற்கு என்ன நடந்ததோ அதோபோன்ற விசயம் தான் நடந்தது. அரபாத் கையெழுத்து வைத்ததோட பாஸ்தீன இயக்கமும் இல்லாதுபோனது. அதேபோன்றுதான் இலங்கையிலும் நடந்தது. அதேபோல தமிழர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் ஒரு ஒற்றுமையான சம்பவம் என்னவென்றால். யூதர்கள் எல்லோருமே அறுதியாக நமபுகிறார்கள் எங்களுக்கு அந்த நிலம் கடவுளால் அருளப்பட்டதாக.

அதேபோல் அநேகமான சிங்களவர்களும் கருதுகிறார்கள் அந்த நிலம் பௌத்தத்தின் வளர்ச்சிக்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் என்று. இந்த அடிப்படை வேரை எப்படி பிடுங்குவது என்பதுதான் பிரச்சனை. இதனால் நாங்கள் சிங்களவர்களை கூடாதவர்கள் என்று கூறமுடியாது. இது ஒரு ஆழமான தத்துவ பிரச்சனையாக உள்ளது. அதற்காக அடிமட்டத்தில இருந்து பேசுவது எப்படி, அதற்கான வழி என்ன. இவற்றையெல்லாம் அரசியல் சார்பு நிலைகளுக்கு அப்பால் சென்று பார்த்தால் இந்த துன்பம் வந்து எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப்போகின்றது என்பதுதான் சிக்கலாக இருக்கின்றது.

தில்லைநடேசன்: வாசுதேவன் இந்தக்குழப்பகார அநகாரிக தர்மபாலவைப் பற்றி ஆய்வு செய்ததுபோல எங்கட ஆறுமுக நாவலர் பற்றியும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. மற்றது விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என விரும்பியவர்கள் என்றது தவறு. அந்தக்காலகட்டத்தில இருந்து விடுதலைப்புலிகளின் சிந்தனையைத்தான் நாங்கள் எதிர்த்த நாங்களே தவிர தனிப்பட்டரீதியாக விடுதலைப்புலிகள் அழியவேண்டும் என கருதியதில்லை. இலக்கியச் சந்திப்பின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது.

வாசுதேவன்: இதில ஒரு பாதர் பத்மநாதன் என்று நினைக்கிறன் அவர் சொல்லுறார் எங்களுக்கு விடுதலைப் புலிகளுடன் முரண்பாடு இல்லை என்றில்லை, ஆனாலும் நாங்கள் அவர்களை ஆதரிக்கின்றோம் என்று. அதுபற்றி இதில எழுதியிருக்கிறார். அதேபோல சில பாதர்களையும், சிஸ்டர் மார்களையும் நீங்கள் வெளியேறுங்கள் என கேட்கப்பட்டபோது அவர்கள் தாங்கள் ஒருதரையும் விட்டு வரமாட்டோம் எனக் கூறியருக்கிறார்கள். எனவே மக்களை விட்டுவரமாட்டோம் என்று கூறினார்களா? புலிகளைவிட்டு வரமாட்டோம் என்றுகூறினார்களா?

விஜி: பாதர் மார், சிஸ்டர் மார் எல்லோரும் அனைத்தையும் கடந்து சிந்திக்கக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் அப்படி கேட்கமுடியும்.

தில்லைநடேசன்: விடுதலைப் புலிகளின் சிந்தனை என்பது அவர்களுக்கே உரிய சொந்தமான சிந்தனை என்று கருதாதீர்கள். அது வந்து யாழ்ப்பாண சமூகத்தின் அடி வேரில் இருந்த வாற சிந்தனை அமைப்பு. இந்த சிந்தனை அமைப்புதான் அபாயகரமானது.

சுந்தரலிங்கம்: ஆரம்பத்தில் புலிகளும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள். பின்பு அவர்கள் கலந்து கொள்ளவில்லை காரணம் அவர்கள்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்காள்ள முடியவில்லை.

விஜி: கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்களால அங்கு வரமுடியாமல் போனது.

தில்லைநடேசன: அவர்கள் சொல்லுற கருத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்ளவேணும்.

விஜி: அவங்க அடிச்சவங்கப்பா.

வாசுதேவன்: குறிப்பா சோபாசக்தி, சேனன், வின்சன் இந்த மூன்று பேரும் வந்ததில் இருந்து இலக்கியச் சந்திப்பின் நிலையே மாறிவிட்டது.

அசுரா: இது பொய்க் கதை.

விஜி : சேனன், வின்சன் இருவரும் பிரான்சில நடந்த சில இலக்கியச் சந்திப்பில் மட்டும் தான் கலந்து கொண்டவர்கள்.

சோபாசக்தி: ஐயோ உண்மையில இலக்கியச் சந்திப்புக்காரர்கள் எங்களை ஒண்டுக்கும் சேக்கிறதுமில்லை, அவங்கள் எங்கள கூப்பிடறதுமில்ல நாங்களல்லோ தண்ணியை போட்டுட்டு பின்னுக்கிருந்து கத்துறது.

வாசுதேவன்: அதுதான் பின்னுக்கிருந்து.

சோபாசக்தி: வழமையாக செய்யுறது அதுதானே.

வாசுதேவன்: இப்ப ஒரு கதையை நான் வெளிப்படையாக சொல்லுறன். வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் கொல்லப்படுகின்றார். உடனடியாக பிரச்சாரம் எழுகிறது புலிகள்தான் கொன்றார்கள் என்று. புலிகளுக்கு எதிரான ஒரு அரசியல் வாதி இங்கு வந்து சொல்லுகிறார், அதை உறுதியாக சொல்லமுடியாது புலிகள்தான் கொன்றதென்று. ஆனால் அரசாங்கத்திற்கு ஒருதேவை இருந்தது அவரை கொல்லுவதற்கு. முக்கியமான விசயம் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் கதிர்காமருக்கு இருந்தது. ஒரு தமிழரை அவ்வாறு அனுமதிக்க முடியாது இது முதலாவது விசயம். இந்த நேரத்தில் கொலை செய்தால் அது புலிகள் சுட்டதாகவே கருதப்படும் அதை உலகமும் ஏற்றுக் கொள்ளும். அதோடு யுதத நிறுத்தத்தை மீறி அவசரகால சட்டத்தை அமல்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகவும் கருதப்பட்டதாக புலிகளுக்கு எதிரான ஒரு அரசியல் வாதி இங்கு வந்து சொன்னவர். உண்மையா? இல்லையா? இங்க இருக்கிற இரண்டு மூன்று பேருக்கு அது தெரியும் அவர்கள் சொல்லாவிட்டால் நானும் அவர் யாரென்று சொல்லமாட்டேன்.

பலரும் சேர்ந்து: யார் என்று சொல்லுங்கோவன் இதில என்ன இருக்கு. ஓப்பினா கதையுங்க. வாசுதேவன் நாங்களும் தெரிஞ்சு கொள்ள வேணுமல்லா.

வாசுதேவன்: இது நல்லா இருக்கு ஆளக் காட்டித்தா, காட்டித்தா இல்லாவிட்டால் கொல்லுவம் என்ற மாதிரி இருக்கு. காட்டித் தரமாட்டேன் நான். ஒரு எக்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்கோ. வேணுமென்றால் நான் சொல்லுவதையும் உண்மை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

யோகரட்ணம்: கதிர்காமரை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை அவர்கள் மீது மேற்கொள்ளப்ட்டிருக்கும் நீதி விசாரணை பற்றி…

வாசுதேவன்: இலங்கையின் நிதிமன்றம் குறித்து இதில நல்ல வடிவா எழுதியிருக்கிறார்.

யோகரட்ணம்: சரி அது வேண்டாம். மகேஸ்வரனின் கொலை சம்மந்தமாக டக்ளஸ் மீதுதான் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் 150 பக்கங்களைக்கொண்ட நீதி மன்றவிசாரணையின் பின்பு இன்று அந்தக் கொலைக் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட விசாரணையூடாக அவர் புலிஉறுப்பினர் என்பதும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் மகேஸ்வரனின் மனைவி கூட முன்பு டக்ளஸ் மீதே குற்றம் சாட்டியவர்.இதேபோல ஜெராஜ் பெர்னான்டோ பிள்ளையிள் கொலைக்கும் நீங்கள் கதிர்காமரின் கொலைக்கு கூறப்பட்ட நியாயம்தான் கூறப்பட்டது. அவரும் அடுத்த பிரதமாராக வரும் வாய்ப்பு இருந்ததால் அரசாங்கமே அக்கொலையை செய்திருக்கும் என்பதாக. ஆனால் என்ன நடந்தது தற்கொலையாளி தங்கியிருந்த இடம, உடந்தையாக இருந்தவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு உண்மை வெளிவந்தது. இன்றைக்கு கதிர்காமரை சிங்களவர்கள் எவ்வளவு தூரம் போற்றிப் புகழ்கிறார்கள் என்பதை பார்க்கும்போது எங்களுக்குவியப்பாக இருக்கு. கதிர்காமரின் நினைவுப்பேருரையில் ஒரு சிங்களப் பேராசிரியர் பேசுகின்றபோது இப்படியான திறைமைசாலியை சிங்கள மக்கள் பயன்படுவதற்கு கொடுத்துவைத்தவர்கள் என்று பேசியுள்ளார். எங்கட வழமையொண்டு என்னெண்டா, உதாரணத்திற்கு என்னை கொலை செய்ததை நீங்கள் கண்டிருந்தாலும் கடசிவரையும் நீங்கள் சொல்லப்போறதில்ல எனவே அது இனந்தெரியாதவர்களால் கொல்லப்பட்டது என செய்தியாகின்றது. முடிஞ்சுது அலுவல்.

சோலையூரான்: வடக்குக் கிழக்கில் நடந்தகொலைகளெல்லாம் அப்படித்தான், மாற்று இயக்கத்தில நாநூறு பேர் இருக்கமாட்டாங்கள் அவன் ஆற்ற பிள்ளை ஆற்ற சகோதரம் என்று எல்லோருக்கும் தெரியும் அப்படியிருக்க என்னென்று அவன் இனந்தெரியாதவனாக இருக்கமுடியும். பப்ளிக்காக வந்து சுட்டுட்டு போறான் அனால் அது இனம்தெரியாதவர்கள் என்று செய்தியாகும்.

யோகரட்ணம்: நீங்க அநகாரிகதர்மபாலாவைப் பற்றி பேசும்போது எங்கட ஐயா ஆறுமுநாவலரையும் ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை இருக்கு.

வாசுதேவன்: எனது ஒரு கவிதையில இந்த இருவரையும் ஒன்றாக கட்டி கொடும்பாவி எரிக்கிற அன்றுதான். கொடும்பாவி என்பதை ஒரு சிம்போலாக எழுதியிருந்தேன். அதாவது ஒவ்வொரு மனங்களிலும் அந்த எரிப்பு நிகழவேண்டும் என்பதாக. நாங்க பெரி ஞானிகள் எல்லாத்தையும் படிச்சுப்போட்டு இருந்து பினாத்திக்கொண்டிருப்போம். பிரச்சனை அதுவல்ல அடிமனத்தில அநகாரிக தர்மபாலாவையும் ஆறுமுகநாவலரையும் எப்படி வெட்டி எடுக்கிறதென்பதே பிரச்சனை.

http://www.thuuu.net/?p=1202

Edited by sathiri

இணைப்பிற்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]

[size=4]ச்சா.............[/size][/size][size=1]

[size=4]உலக தமிழர்களுக்காக அல்லும் பகலும் உழைப்பவர்கள் [/size][/size][size=1]

[size=4]பல புத்தகங்கள் எழுதி உலகத்தில் தமிழை அறிமுகம் செய்த முக்கிய தமிழ் போராளி அறிஞர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். ஓவரு நாளும் சி என் என் பார்க்கிறான். இந்த சந்திப்பை பற்றி உலக செய்திகளில் ஒன்றுமே போடவில்லையே?[/size][/size]

[size=1]

[size=4]உலக செய்தி நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போக.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.