Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவருக்கு தோள்கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது

Featured Replies

தேசியத் தலைவருக்கு தோள் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது: செ.வ.தமிழேந்தி

தாயக விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு தமிழ்மக்கள் அனைவரும் தோள் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ.தமிழேந்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நிதித்துறை கணக்காய்வுப் பொறுப்பாளர் அறவாணன் தலைமையில் சமகால அரசியல் கருத்தரங்கு நிகழ்வு நடந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிதித்துறைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் சமகால அரசியல் நிலவரம் குறித்து செ.வ.தமிழேந்தி சிறப்புரையாற்றினார்.

அவர் ஆற்றிய சிறப்புரையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழினத்தை ஒழிக்க வேண்டும் இலங்கைத்தீவு சிங்களவருக்கு மட்டும் உரியது என்று சிங்கள அரசுகள் தமிழினத்தை பல்வேறு வழிகளில் தீவிரமாக அழித்து வருகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் சிங்களவரும் வாழவேண்டும்- அதேவேளை தமிழ்மக்கள் தமது தாயகத்தில் உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றார்கள்.

ஆனால் சிறிலங்கா அரசோ வரலாற்றில் தமிழினத்தை அழிக்க வேண்டும் இங்கு சிங்கள இனம் மட்டுமே வாழ வேண்டும் என்று இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது அமைதி உடன்படிக்கை ஒன்று அப்படியே இருக்கின்றது. அதே நேரத்தில் தமிழர் மீதான கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசாங்கம் தன்னுடடைய இராணுவத்தோடு இயங்குகின்ற ஒட்டுக்குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகளுடன் உழைப்பவர்களையும் தமிழ்த் தேசியப்பற்றாளர்களையும் கொன்று குவித்து வருகின்றது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வந்த பின்னால் அமைதி முயற்சிகள் சீர்குலைந்து வருகின்றன. இருந்த போதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் பொறுமை காத்து இந்த அரசாங்கத்துடன பேசுவதற்கு முன்வந்தார்.

ஜெனீவாவில் பேச்சுக்கள் நடந்தன. அதில் ஒட்டுக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ஆனால் அதன் பின்னால் திருகோணமலையில் தமிழ்த் தேசியத்துக்காக உழைத்த விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்தும் கொலைகள் நடக்கின்றன.

ஆகவே இன்றைய சூழலில் வலுவுள்ள அனைவரும் அகவை வேறுபாடு இன்றி போர்ப்பயிற்சி பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் தமிழர் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

ஊடுருவல் குழுக்களால் விடுதலைப் புலிகள் மட்டுமின்றி மக்களும் தாக்கப்படுகின்றனர் கொல்லப்படுகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெறவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

தாயக விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு தமிழ்மக்கள் அனைவரும் தோள் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. விடுதலையைப் பெற வேண்டிய காலம் வந்து விட்டது என்றார் செ.வ.தமிழேந்தி.

நன்றி: புதினம்

  • தொடங்கியவர்

முழுமையான உரை

தமிழர்கள் உண்மையிலே பயங்கரவாதிகளாக மாறினால் இலங்கைத் தீவே சுடுகாடாகும்: செ.வ.தமிழேந்தி எச்சரிக்கை

[வெள்ளிக்கிழமை, 19 மே 2006, 09:50 ஈழம்] [ச.விமலராஜா]

சர்வதேசமும் சிறிலங்காவும் கூறுவது போல் தமிழர்கள் பயங்கரவாதிகளானால் இலங்கைத் தீவே சுடுகாடாகிவிடும் என்று தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ. தமிழேந்தி எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சியில் நிதித்துறைச் செயற்பாட்டாளர்களிடையே நேற்று வியாழக்கிழமை நடந்த சமகால அரசியல் கருத்தரங்கில் செ.வ.தமிழேந்தி பேசியதாவது:

இலங்கைத் தீவில் எங்கள் இனத்தின் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக- இலங்கைத் தீவில் தமிழர் தங்கள் இருப்பை- தங்கள் தாயகத்தில் தமிழீழத்தில் நிலைப்படுத்திக்கொள்வதற்காக- இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்பே பல்வேறு அமைதி வழி முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளைக்காரரிடமிருந்து இலங்கை விடுதலை பெற வேண்டும் என்பதற்காக- 1944 ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்னால் தமிழர் தரப்புக் கருத்துகளை அப்போதிருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்தார். அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதன் பின்னாலே இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர் தங்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜி.ஜி.பொன்னம்பபலம் முன்வைத்த கருத்துகள் எவையுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதற்குப் பின்னர் இணைப்பாட்சி திட்டத்தின் கீழ் ஐக்கிய இலங்கையில் கூட்டாட்சித் திட்டத்தின் கீழ் தமிழர் தங்கள் தாயகத்தில் மத, மொழி உரிமையைப் பேணி ஆட்சி புரிவதற்கான ஒரு திட்டத்தை தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வா முன்வைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என மாறி மாறி அமைந்த சிறிலங்கா அரசாங்கங்களோடு அவர் பேசினார்.

1957 ஆம் ஆண்டு தந்தை செல்வாவுடன் பண்டா ஒப்பந்தம் செய்தார். அது பண்டா- செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.

1965 ஆம் அண்டு டட்லி சேனநாயக்கவுடன் ஒப்பந்தம் செய்தார். அது டட்லி-செல்வா ஒப்பதம் என அழைக்கப்படுகிறது. அதுவுமே செயலற்றதானது.

பேச்சுவார்த்தைகள் மற்றும் அறப் போராட்டங்கள் என எல்லாவற்றைய்ம் நடத்தினர். எல்லாமே தோற்றுப் போயின. எவையுமே நிறைவேறவில்லை.

1970-களில் ஆயுதப் போராட்டம் உருவாகி பல்வேறு அமைப்புகள் உருவாகின. எங்கள் விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசு தலையிட்டது. இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் தங்களது நலன்களுக்காக எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

இந்திரா அம்மையார் காலத்தில் கூட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. வட்டமேசை மாநாடு ஒன்று இஙகே நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதில் கலந்து கொண்டனர். அந்தப் பேச்சுக்களிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதற்குப் பின்னால் ஆயுதம் தாங்கிப் போராடியய அமைப்புகள் மற்றும் விடுதலைக் கூட்டணி உட்பட அன்றைக்கிருந்த அமைப்புகள் அனைத்தும் திம்புவிலே இந்திய அரசின் அனுசரணையோடு நடத்திய பேச்சுக்களும் தோல்வியடைந்தன. அந்தப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தமிழரின் ஒப்புதலின்றி தன்னிச்சையாகவே முடிவெடுத்து இந்தியா தலையிட்டது. இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தைச் செய்தது. அந்த ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கபட்டது. அதன் அதிகாரங்கள் எவையும் தமிழரது நலன்களைப் பேணுபவையாக இருக்கவில்லை.

மாகாண சபையை ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சி செய்து இந்த மண்ணை விட்டு போவதற்கு முன்னால் மாகாண சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தனர். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அமைந்த மாகாண சபை தமிழர்களுக்கு எந்த உரிமையும் தராதபடியால் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்துகிறோம் என்று போலியான ஒரு நாடகத்தை ஆடினார்கள். ஆனால் அவர்கள் சில கருத்துகளை முன்வைத்தார்கள்.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழரது நலன்கள் பேணப்படவில்லை என்ற கருத்தை- இந்தியாவின் கையாட்களாக இருந்த அவர்களே முன்வைத்தனர்.

ஆக இலங்கை- இந்திய ஒப்பந்தமும் எதனையும் தமிழர்களுக்குப் பெற்றுத்தரவில்லை என்பதற்கு அவர்களுடைய அந்தத் தீர்மானம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

அதற்குப் பின்னால் பிரேமதாசவுக்கும் எங்களுக்கும் இடையே பேச்சு நடந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது.

1994 ஆம் ஆண்டு சந்திரிகா பிரதமராக வந்தபோது போர் நிறுத்தம் செய்யப்பட்டு பேச்சு நடந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது.

2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எங்கள் தலைவருக்கும் செய்யப்பட்ட உடன்பாடு- போர் நிறுத்தம் இப்போது என்ன நிலையில் இருக்கிறது உங்களுக்குத் தெரியும்.

அமைதி உடன்படிக்கை ஒன்று அப்படியே இருகிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை அப்படியே இருக்கிறது.

அதே நேரத்தில தமிழர் மீதான கொலை நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கம் தன்னோடு இணைந்து நிற்கிற ஒட்டுக் குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகளோடு இணைந்து நின்று உழைப்பவர்களையும் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்றவர்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.

ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்பு இந்த நிலைமைகள் மேலும் சீரழியும் நிலைக்கு வந்தன.

ஆனாலும் எங்கள் தலைவர் பொறுமை காத்தார். இந்த அரசாங்கத்தோடும் பேசவும் முன்வந்தார். ஜெனீவாவில் நடந்த பேச்சில் உடன்பாட்டுக்கும் வந்தனர்.

துணைக் குழு அல்லது ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவது என்று அவர்கள் உறுதி தந்தனர்.

அதன்பின்னர் திருமலையில் தமிழ்த் தேசியத்திற்காக உழைத்த- தமிழரது மேம்பாட்டுக்காக உழைத்த- திருமலையில் தமிழர் இருப்பை பேணுவதற்காக அயராது உழைத்த விக்னேஸ்வரன் கொல்லப்பட்டர்.

அண்மையில் அல்லைப்பிட்டியில் 4 மாத குழந்தை- பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தை- அன்னைக்கும் தந்தைக்கும் நடுவே சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சியை பார்த்திருப்பீர்கள். இந்த மண்ணில் வாழும் பச்சிளம்குழந்தைக்கும் கூட பாதுகாப்பு இல்லை.

நாளைக்கு உங்கள் குழந்தைக்கும் அதே நிலை வரும். அந்த நிலை வராது என்பதற்கு உறுதி எதுவும் இல்லை.

ஆகவே வலிமை உடைய- வயது வேறுபாடின்றி- அனைத்துத் தமிழர்களும் ஆயுதப் பயிற்சி; பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அப்போதுதான் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சிங்கள இரணுவம் ஊடுருவித் தாக்குதல் நடத்துகிறது. அதனோடு ஒட்டுப்படைகளும் வருகின்றனர்.

கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல. பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆகையால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நேரமிது.

தமிழினத்தை இந்த மண்ணில் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை சிங்களவர்கள் நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர்.

யாழில் சிங்கள இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று

"இந்த நாட்டில் சிங்களவர்தான் வாழமுடியும்- தமிழரும் சிங்களவரும் வாழ முடியாது" கூறிவருகின்றனர்.

இது சிங்கள இராணுவத்தின் கருத்து அல்ல- சிங்களவர் மற்றும் சிங்கள அரசின் கருத்து.

வரலாற்றில் துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் நடந்த போரில் எல்லாளன் கபடமாகக் கொல்லப்பட்டான். நேருக்கு நேர் நின்று போரில் கொல்லப்படவில்லை.

போர் அறத்துக்கு மாறாக அவனது யானையைத் தாக்கி அவன் விழுகின்றபோது கொன்றார்கள். அறத்தின்பால் நேருக்கு நின்று வீழ்த்தவில்லை. வஞ்சகமாக எல்லாளனைக் கொலை செய்தார்கள்.

அந்த எல்லாளன் இந்திய ஆக்கிரமிப்பாளன் என்று சொல்லுகிறார்கள்- எங்களையும் இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதான் சிங்களவர் சொல்லுகிறார்கள்;.

ஆனால் தமிழர் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள்.

இலங்கைத் தீவு தமிழர்களுக்கே சொந்தமானது.

சிங்களவர்கதான் இந்த நாட்டின ஆக்கிரமிப்பாளர்கள்- இந்த நாட்டினது வந்தேறு குடிகள்.

தமிழர் தங்களது சமகால வரலாற்றை சான்றுகளோடு எழுதி வைக்கவில்லை என்பது மிகப் பெரும் குறை. நாம் விட்ட தவறு அது.

ஆனால் கிடைக்கக் கூடிய தொல்லியல் சான்றுகள் அனைத்தும் தமிழ்ரே இந்த மண்ணின் உரிமையாளர்க்ள் என்று தெட்டத் தெளிவாக சொல்லுகின்றன.

வந்தேறி சிங்களவர்கள் தாங்கள் வந்தேறியவர்கள் என்பதால் முந்திக் கொண்டு எம்மை வந்தேறு குடிகள் என்கிறார்கள்.

அப்படியானால் இந்த மண்ணிலே தமிழர்கள் எப்படி சிறுபான்மையினராக உள்ளனர்? என்ற கேள்வி எழலாம்.

கடந்த கால வரலாற்றை- குடிசன மதிப்பீட்டை எடுத்துப் பார்த்தால் தமிழர்களைவிட சிங்களவர் பெருக்க வீதம் அதிகமாக இருந்துள்ளது.

1881 ஆம் அண்டு குடிசன மதிபபீட்டையும் 1981 ஆம் ஆண்டு கணக்கையும் ஆய்வு செய்து பார்த்தால் உண்மை புரியும்.

நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட குடிசன வளர்ச்சியின் படி இந்த நாட்டிலே 492 விழுக்காடு சிங்களவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

462 விழுக்காடு முசுலிம்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களோ............

எங்களது இனம் சிறுபான்மைப்பட்டமைக்கு இதுவும் காரணம்.

சிங்களம் செய்த சதிகளால் இந்த மண்ணில் சிறுபான்மையினராக தமிழர்களாக்கப்பட்டு விட்டனர்.

துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் போர் நடந்த பின்னால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.

அன்றைக்கு அது இரண்டு இலட்சமெனில் இன்றைக்கு அது பல லட்சமாக இருந்திருக்கும்.

இப்படித் தமிழரக்ள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.

ஆயிரமாயிரமாண்டு காலமாக இருந்து வரும் முரண். அவர்கள் எம்மை அழித்துவிடவேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால் நாம் அவர்களை அழிக்கவேண்டும் என்று கருதவில்லை.

அவர்களும் நாங்களும் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்று தமிழர் கருதுகின்றனர். அவர்களோ சிங்களவர் மட்டுமே வாழ வேண்டும் என்கின்றனர்.

அவர்கள் சொல்வது போல் வந்தேறு குடிகள் வெளியேற வேண்டுமேயானால் முதலில் சிங்களவர்கள்தான் வெளியேற வேண்டும். நாங்கள் ஒன்றும் இந்த மண்ணின் வந்தேறிகள் அல்ல.

இந்த உலகில் குமரிக் கண்டனம் என்று ஒன்று இருந்தது. அதனது வடக்கெல்லை இமயம். மேற்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கெல்லை அண்டார்ட்டிக். தென்கிழக்கு எல்லை அவுத்திரேலியா. கிழக்கு எல்லை- கிழக்கிந்திய தீவுகள்.

இதற்கிடையே ஒரு பெருந்தேசம் இருந்தது.

கடல்கோளிலே இந்த தேசம் அழிந்து போயிற்று.

இதில் எஞ்சியிருப்பது இந்தியாவும் இலங்கையும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவும்தான்.

இந்த மண்ணிலே தோன்றிய மக்கள் நாங்கள். எங்களுக்கே உரியது இந்த மண்.

வந்தேறுகுடிகள் வெளியேற வேண்டுமானால் சிங்களவர்கள் வெளியேற வேண்டும்.

உலகின் பல பகுதிகளிலும் வந்தேறிகுடிகள்தான் வெளியேற வேண்டும்.

இந்தியா- தமிழருடைய நாடு.

3,500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரியர்கள் குடியேறினார்கள். அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும்.

அமெரிக்கா செவ்விந்தியர் நாடு. அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் வெளியேறிச் செல்ல வெண்டும்.

அவுஸ்திரேலியா அபோர்ஜினியர்களின் நாடு. அங்கிருந்து வெள்ளைக்காரர்கள் வெளியேற வேண்டும்.

இப்படியெல்லாம் கூறினால் நடக்கப்போவதும் இல்லை- வாய்ப்பும் இல்லை-

அந்த அந்த மண்ணில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்தவர்களை உள்ளே போ வெளியே வா என்று சொல்வது மூடச் செயல். சிங்களவர்களுக்கு இது புரியாது. அவர்களுடைய இனவாதம் எல்லாவற்றையும் மறைத்துவிடுகிறது.

இந்த மண்ணுக்குரிய நாங்கள் எங்கேயும் போக வேண்டியதில்லை. எங்கள் மண்ணில எங்கள் இருப்பைக் காப்பாற்ற நாம் போராட வேண்டும்.

இலங்கை விடுதலை அடைகிற போது நீர்கொழும்பில் 53 தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. இன்றைக்கு ஒரே ஒரு பள்ளிக்கூடம் மட்டுமே இருக்கிறது. மற்ற பள்ளிக்கூடங்கள் எல்லாம் சிங்களப் பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

தமிழ் மூலம் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களை அந்தப் பள்ளிகளுக்கு நியமிக்காமல் நிறுத்தி சிங்கள ஆசிரியர்களை அமர்த்தினார்கள். சிங்கள மொழியிலே கல்வி கற்பித்து படிப்படியாக அங்கே எங்கள் இனமே இல்லாமல் முற்றாக அழித்தொழித்திருக்கிறார்கள்.

நீர்கொழும்பில் இன்றைக்கு சிங்களவர் என்று சொல்லிக் கொண்டு வாழ்கிறவர்கள் யார் என்றால் இலங்கை விடுதலையடைவதற்கு முன்பு தமிழர்களாக இருந்தவர்கள்தான்.

நீர்கொழும்பிலும் மட்டுமல்ல. சிலாபத்திலும் தெற்குப் பகுதியிலும் வாழ்ந்த தமிழர்களும் இவ்வாறு மாற்றப்பட்டவர்களே.

ஒரு இனத்தினது பயிற்று மொழி அழிந்தால் அந்த இனமே அழிந்து போகும்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பீஜி, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா என்று பல்வேறு நாடுகளுக்கும் தமிழர்கள் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

இன்றைக்கு அங்கே வாழ்கிற அவர்கள் யாருக்குமே தமிழ் தெரியாது. அவர்கள் இனமாற்றம் அடைந்து விட்டனர்.

ஏன் உங்களுடைய உறவினர்கள் இன்றைக்கு வெளிநாடுகளில் வாழ்கிறார்களே- அவர்களில் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்.?

இங்கிருந்து போனவர்கள் மட்டும் தமிழ் பேசுகின்றனர். 4 வயதில் போனவர்கள் கூட தமிழை மறந்துவிட்டனர். ஏனென்றால் தமிழைப் படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லை.

மொழி என்பது ஒரு இனத்தினது அடையாளம்- உயிர். அது இல்லாது போனால் அந்த இனம் தனது அடையாளத்தை இழந்துவிடும்.

கனடவில் 3.5 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் மூவாயிரம் பிள்ளைகள்தான் தமிழைப் படிக்கிறார்கள் அப்படியானால் அங்கே உள்ள நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.

தங்கள் இனத்தின் அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கருதுகிற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் தமிழில் கற்க வேண்டு என்கிற பெற்றோர் பிள்ளைகளுக்கு வீட்டிலே தமிழைச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதை பொருட்படுத்தாதவர்கள் விட்டுவிட்டார்கள்.

பெற்றோருக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால் பெற்றாருடன் பிள்ளைகள் தமிழில் கதைக்க வேண்டியிருக்கிறது. எழுதவோ படிக்கவோ அவர்களுக்குத் தெரியாத நிலையும் உள்ளது.

இந்த நிலைமை தொடருமானால் வெளிநாட்டுக்குப் போன தமிழர்கள் இனமாற்ம் அடைந்து விடுவார்கள்.

தமிழீழத்தில் எங்கள் எண்ணிக்கையில் அரைவாசிப் பேர் வெளியே சென்றுவிட்டனர். அவர்களில் மிகக்குறந்த எண்ணிக்கையே இங்கே திரும்பி வருவர்.

தமிழ் மறந்து போன தமிழ்ச் சிறார் இங்கே வரப்போவதில்லலை. அடுத்த தலைமுறை வருமா என்பதும் உறுதியில்லை.

இந்த மண் விரைந்து விடுதலையடைந்தால் அவர்கள் வரலாம். இந்த விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் 30 ஆண்டுகள் இழுபட்டால் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

மொழி அழியவும் அழிக்கப்படவும் கூடியது. அதைத்தான் சிங்கள அரசாங்கம் இங்கே செய்து கொண்டிருக்கிறது.

நீர்கொழும்பிலும் சிலாபத்திலும் செய்ததை மலையகத்திலும் செய்ய முயற்சிக்கின்றனர். மலையகத்தில தமிழ் ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு சிங்கள ஆசிரியர்களை நியமிக்கிறார்கள்.

அச்சத்தின் காரணமாக மலையகத்தில் சிலர் தங்களது பெயரை சிங்களப் பெயராக மாற்றிக் கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திலும் கூட தமிழர்கள் முஸ்லிம்களாகவும் சிங்களவர்களாவும் தங்களை மாற்றிக்கொள்ள முனைந்திருப்பதை அறிந்தபோது மிகவும் துயரப்பட்டேன்.

இனம் மாற்ற நடவடிக்கைக்கு புறம்பாக வன்முறைகள் மூலமாக இந்த மண்னில் காலத்துக்கு காலம் தமிழர்கள் எப்படியெல்லாம் கொல்லப்படிருக்கிறார்கள் என்பது உங்கள் எல்லோருக்கு ;தெரியும்.

1958, 77, 81, 83 ஆண்டுகளில் சிங்கள அரசுகளின் துணையோடு சிங்கள இனவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு இனத்தைக் கொல்வதினால் மட்டும் அந்த இனம் அழிக்கப்படுவதில்லை. பொருளாதாரம்- கல்வி- நிலம் பறிக்கப்படுவதூடாகவும் அழிக்கப்படுகிறது.

1891 இல் தென் தமிழீழத்தில் 5,947 சிங்களவர்கள் இருந்தார்கள். 75 ஆயிரம் தமிழர்கள் இருந்தனர். 43 ஆயிரம் முஸ்லிம்கள் இருந்தனர்.

100 ஆண்டுகளுக்குப் பின்னைய புள்ளிவிவரப்படி 1981 இல் தென் தமிழீழத்தில் 4 இலட்சத்து 11 ஆயிரம் தமிழர்கள், 2 இலட்சத்து 50 ஆயிரம் சிங்களவர்கள்- 3 இலட்சத்து 19 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் சேர்த்தால் தமிழர்கள் சிறுபான்மையாகி விடுவர்.

12 தமிழருக்கு ஒரு சிங்களவர் என்ற நிலை அன்று இருந்தது. இன்றைக்கு ஒரு சிங்களவருக்கு 2 தமிழர் கூட இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.

இன்றைக்கு வன்முறைகள் எங்கள் மண்ணிலேயே நடக்கிறது. சிங்கள அரசங்கத்தின் ஒப்புதலோடு இந்தப் படுகொலை நடக்கிறது. இந்தப் படுகொலை வரிசையின் கடைசிதான் அல்லைப்பிட்டி படுகொலை.

எங்கள் இனத்தின் விடுதலைக்குப் போராடுவது பயங்கரவாதம் என்று சிறிலங்கா சொல்கிறது. இலங்கையிலிருந்து நன்மை பெற வேண்டிய சில நாடுகள் அதற்கு சங்கு ஊதுகின்றன.

அமெரிக்காவிலிருந்து ஒரு அமைச்சர் வந்தாராம். உலகத்திலேயெ இருக்கிற மிகப்பெரிய பயங்கரவாத இயக்கம் விடுதலைப் புலிகள் என்று சொல்லியிருக்கிறார்.

நாங்கள் ப்யங்கரவாதிகள் அல்லர்-

எங்கள் இன விடுதலைக்காக போராடுகிறோம்.

சிங்களவர்களும் நாங்களும் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.

சிங்களவர்களுக்கும் உலகத்துக்கும் நாங்கள் ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

தமிழரை இந்த மண்ணிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கையை சிங்களவர்கள் மேலும் எடுப்பார்களேயானால்- நங்கள் பயங்கரவாதிகளாக மாறினால் இலங்கைத் தீவு அழிந்துவிடும் என்பதை சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கண்டிப்பாக இலங்கைத் தீவு அழியும்.

தமிழர் இந்த மண்ணில் வாழ முடியாது போனால்- தமிழர்கள் பயங்கரவாதிகளாக மாறினால் இலங்கைத் தீவு அழிந்துபோகும்.

சிறிலங்காவும் அதற்கு வழிபாடு ந்டத்தும் நாடுகளும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களுக்கு வாழ்வில்லை என்கிற போது கைகட்டி வாய்பொத்தி பார்த்திருக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் அழித்துவிட்டு நாங்களும் அழிந்துவிடலாம் என்ற முடிவுக்கு வரலாம்.

அப்படியான முடிவை நாங்கள் எடுத்தால் இலங்கைத் தீவு சுடுகாடாக மாறாகும்.

சிங்களப் பகுதிகளளைத் தாக்குவது ஒன்றும் விடுதலைப் புலிகளுக்கு சிக்கலான விடயம் அல்ல.

எங்கள் தேசியத் தலைவரை ஒரு பயங்கரவாதி என்கிறார்கள்-

என்ன காரணத்துக்காக சொல்கிறார்கள்? பிரபாகரன் செய்த குற்றம் என்ன?

- தமிழர் இந்த மண்ணில் அழிந்துபோகாமல் இருப்பதற்காக பிரபாகரன் போராடுவதுதான் அவர் செய்த குற்றம்

- தமிழர் தாய்மண்ணை மீட்டெடுக்க போராடுவதுதான் பிரபாகரன் செய்கிற குற்றம்

அது குற்றமாகுமேயானால்

அந்தக் குற்றத்தை

அந்தப் பயங்கரவாதச் செயலைக்

கோடி முறையும்

எல்லாத் தமிழர்களும் செய்ய அணியமாக வேண்டும்.

அதைத்தான் இந்த இலங்கை விரும்புமேயானால் வேறுவழியில்லை.

எப்படியாவது விடுதலைப் புலிகளின் தலைவரை அழித்துவிடலாம் என்று சிங்கள அரசு முயற்சித்து வருகிறது. அதற்குத்தான் ஊடுருவல் நடத்துக்கிறார்கள்.

உங்கள் தலைவர் மீது அளப்பரிய பற்று வைத்திருக்கிறவர்கள் நீங்கள்-

உயிரைவிட நீங்கள் அவரை மதிக்கிறீர்கள்-

அவர் இல்லையெனில் கண்டிப்பாகத் தமிழினம் இல்லை.

உலகம் முழுவதும் 8 கோடித் தமிழர்கள் வாழ்வதாகச் சொல்லுகிறார்கள். இந்தியாவிலும் 6 கோடித் தமிழர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர்.

தங்களைத் தமிழர் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. எந்தப் பதிவிலும் இந்தியர் என்றுதான் பதிய வேண்டும்.

தமிழர் என்ற ஒரு இனம் தன் இன அடையாளத்தை இருப்பை வெளிப்படுத்டும் ஒரே இடம் இந்த மண். அதனால்தான் எங்கள் தலைவரை இல்லாது ஒழித்துவிட்டால் உலகில் தமிழினம் என்பதையே இல்லாது செய்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.

தமிழர்கள் இங்கே விடுதலையடைந்து விட்டால் தமிழ்நாட்டிலும் அந்த சிக்கல் உருவாகுமோ என்று இந்தியா அஞ்சுகிறது.

இந்திய நடுவன் அரசு அஞ்சுவது போல் எதுவும் நடக்காது.

எங்கள் தலைவரது வாழ்வுதான் தமிழரது வாழ்வு.

எங்களிடம் மானம் ஒன்றுதான் உள்ளது.

அந்த மானத்தை விட்டு விடப் போகிறோமா என்று முடிவு செய்ய வேண்டும்.

தமிழர் இந்த உலகத்துக்கு நாகரீகம்- பண்பாட்டை கறுத்தந்தவர்கள். நாம் பெருமைப்பட வேண்டும்.

வீரர்கள் நிறைந்த இனம் என்று இன்று பொருள்படும் படியான நிலைமையைத் தலைவர் உயர்த்தியிருக்கிறார்.

தமிழ் மொழி உலகின் முதலாவது மொழி. தமிழர் தான் உலகில் முதலில் தோன்றியவர்கள் என்று ரசியாவின் ஆய்வாளர் சொல்லியிருக்கிறார். இந்துமாக்கடல் மர்மங்கள் என்ற பெயரில் அவரது நூல் தமிழில் வெளி வந்துள்ளது.

நாங்கள் தொன்மை மிக்க நாகரிகத்தையும் உலகத்துக்கு பண்பாட்டையும் கொடுத்தவர்கள். உலகில் தமிழ், சமஸ்கிருதம், கீப்ரூ, லத்தீன், கிரீக், சீனம் ஆகியவை மூத்த மொழிகளாக சொல்லப்படுகின்றன.

தற்போது லத்தீனும் சமஸ்கிருதமும் செத்த மொழிகள் என்று சொல்லப்படுகின்றன.

இந்த மொழிகளில் ஒன்று கீப்ரு. யேசுநாதரின் மொழி எபிரேயம். அது அழிந்த மொழி.

உலகம் முழுவதும் ஒன்றரை கோடி யூதர்களே இருக்கின்றனர். ஜெர்மானியர்கள் அந்த யூதர்களை படாதபாடுபடுத்தினர். யூதர்களைக் கொண்டு புதைகுழிகளைத் தோண்டி அதற்குள் யூதர்களையே புதைத்தார்கள்.

இத்தனை கொடுமைகளுக்கும் இடையேய தங்களது தேசத்தை அவர்கள் உருவாக்கினார்கள். இஸ்ரேல் உருவாக்கப்ட்டது. இஸ்ரேலை எதுவும் செய்ய முடியாத படி இன்று வளர்ந்துள்ளனர்.

மொத்தம் இஸ்ரேலிய மக்கள் தொகை 50 இலட்சம் பேர்தான்.

உலகில் பல்வேறு நாடுகளில் 100 கோடி முஸ்லிம்கள் இருக்கலாம். இத்தனை கோடி முஸ்லிம்கள் இருந்தும் யூதர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவர்களது இனப்பற்று காரணம்.

தங்களது தேசத்துக்காக எதையும் செய்யத் தயார் என்று அவர்கள் இருப்பதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

யூதர்கள் ஒன்றரை கோடி பேரும் யூதர் என்ற எண்ணத்தோடு யூத தேசியம்- இஸ்ரேல் என்ற எண்ணத்தோடு உள்ளனர்.

அமெரிக்கா யூதர்களைப் பக்க பலமாக பாதுகாத்து வருகிறது. அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் மட்டும் 20 இலட்சம் யூதர்கள் வாழ்கின்றனர்.

அமெரிக்காவினது அரசியலை தீர்மானிக்கிற- பொருளாதாரத்தை தீர்மானிக்கிற மிகப் பெரும் சக்தியாக யூதர்கள் உள்ளனர். அவர்களை விஞ்சி அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது.

எந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் யூதர்களுக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அடுத்த முறை ஆட்சிக்கு வரமுடியாது.

- யூதர்கள் தங்கள் தேசத்தை நேசிக்கிறார்கள்

- இஸ்ரேலுக்காக எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள்

- தங்கள் தேசத்தின் நினைவுகளோடு- தேசத்தைக் கட்டியெழுப்பும் நினைவோடு உறங்குகிறார்கள்- வாழ்கிறார்கள்.

வெளிநாடுகளில் உள்ள ஒரு தொகை தமிழர்கள் தங்கள் தேசத்தை நேசிக்கிறவர்களாக இருகின்றனர். அதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வன்னியை இரண்டாகப் பிரித்து தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை முறியடித்த வெற்றிக்குப் பின்னால் வெளிநாட்டுத் தமிழர்கள் இருக்கின்றனர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்தத் தமிழர்கள் அளித்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட போர்க்கருவிகள்தான் அந்த வெற்றிக்குத் துணையாக இருந்தன.

ஆனையிறவு தளம் 350 ஆண்டுகளாக மாற்றாரின் கையில் இருந்தது.

யாழ்ப்பாணத்தைப் போர்த்துகேயர் கைப்பற்றியபோது வன்னி தனித்து இயங்கியது.

வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு யாரும் ஊடுருவிவிடக் கூடாது என்பதற்காக ஆனையிறவில் தடை முகாம் அமைத்தனர்.

அதன் பின்னர் அந்த முகாம் ஒல்லாந்தரால் பேணப்பட்டது. பின்னர் யாழை பிரிட்டிசார் கைப்பற்றினர். பண்டாரவன்னியனையும் தோற்கடித்து வன்னியைக் கைப்பற்றினர்.

அதற்குப் பின்னர் சிங்கள அரசாங்கத்தின் கைக்கு ஆனையிறவு சென்றது.

ஆனையிறவை நாங்கள் மீட்டெடுத்ததற்கு பின்னால் அந்த மாபெரும் வரலாற்றுக்குப் பின்னால் தேசப்பற்றுள்ள- வெளிநாட்டுத் தமிழர்கள்தான் உள்ளனர் என்பதை மறுக்கிறவர் யாரும் இல்லை.

ஆனால் யூதர்களைப்போல் நாம் முழுவதுமாக இல்லை. அதுதான் நாம் முன்னேற தடை. நாம் ஒன்றுபடவேண்டிய சூழல் வந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் தமிழேந்தி.

நன்றி: புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுத்தமிழரும் இதைத்தான் செய்யவேண்டும். ஆற்றல் மிகு தலைவனில் காலத்தில் எமதுரிமைகளை வெல்லவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.