Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா நிபுணர்குழு அறிக்கைக்கு ஏற்பட்ட கதி உள்ளக அறிக்கைக்கும் ஏற்படுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஐ.நா நிபுணர்குழு அறிக்கைக்கு ஏற்பட்ட கதி உள்ளக அறிக்கைக்கும் ஏற்படுமா?[/size]

முத்துக்குமார்

வருமா? வராதா? என்ற சந்தேகத்துடன் இருந்த ஐ.நா உள்ளக அறிக்கை வெளிவந்துவிட்டது. அதில் 29 பக்கங்கள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டாலும் புலம்பெயர் நாடுகளில் அதுவும் கசிந்துள்ளது. வெள்ளைக்கொடி விவகாரத்தின் சூத்திரத்தாரி விஜய் நம்பியார் பற்றிய தகவல்கள் வேண்டுமென்று இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. போரில் இந்தியாவின் பங்கினை மறைப்பதற்கான முயற்சியாக இது இருக்கலாம்.

போர்க்காலத்தில் ஐ.நா தனது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிவிட்டது. குறிப்பாக செயலகத்தின் செயற்பாட்டு முகவர்கள், இலங்கையில் செயற்பட்ட ஐ.நா உறுப்பினர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் என்பன தமது பங்களிப்பினை சீராக செயற்படுத்தத் தவறிவிட்டன என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஐ.நா வின் பாரதூரமான தோல்வியாகும் என்றும் மோதலின் இறுதிக்கட்டத்தின்போது ஐ.நா போதியளவு செயற்பாடுகளை கொண்டிருக்காதது மட்டுமன்றி ஐ.நா வின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவகையில் செயற்பட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கும் காரணமாகிவிட்டது. என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான்.கி.மூன் உள்ளக அறிக்கையின் சிபார்சுகளை ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்குவதற்கும், அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்குமான முதற்கட்ட நடவடிக்கையாக சிரேஷ்ட ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தக்குழு அமைக்கப்பட்டால் பான்.கி.மூன் இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்றாவது நடவடிக்கையாக இருக்கும். ஏற்கனவே தருஸ்மன் தலைமையிலான ஐ.நா நிபுணர்குழு, ஐ.நாவின் செயற்பாடுகளை ஆராயும் உள்ளக மீளாய்வுக்குழு என இரு குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

தருஸ்மன் தலைமையிலான ஐ.நா குழு அறிக்கை சிறப்பாக வந்தபோதும்கூட அது விடயத்தில் பெரிய நடவடிக்கைகள் எதனையும் ஐ.நா முன்னெடுக்கவில்லை. இலங்கை அரசு நிபுணர்குழு அறிக்கையினை மறுதலிப்பதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கியபோது, அதற்குப்பின்னால் இழுபட்டுச்செல்லவே ஐ.நாவும் மேற்குலகமும் முனைந்தன.

நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டபோது அதன் கட்டமைப்பு, அதிகாரம் பற்றி விமர்சனம் செய்த ஐ.நாவும், மேற்குலகமும் பின்னர் நல்லிணக்க அறிக்கையின் வாலைப் பிடித்துக்கொண்டு சென்றமைதான் மிகவும் துரதிஸ்டவசமானது. இலங்கையின் சொந்தத் தீர்மானங்களைக் கொண்டே அதனை மடக்குவது என்ற இராஜதந்திரம் இதற்கு இருந்தாலும், ஐ.நா நிபுணர்குழு அறிக்கையினை முழுமையாக கைவிட்டமை தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆரோக்கியமானதாக இருக்கவில்லை.

ஐ.நா வின் இந்த நெகிழ்ச்சியான போக்கு உலகநாடுகளின் 110 பரிந்துரைகளை நிராகரிக்கும் துணிவை இலங்கை அரசிற்கு வழங்கியுள்ளது. இவ்வாறு நிராகரித்த விடயங்களில்தான் தமிழ் மக்களின் அடிப்படை விடயங்கள் அடங்கியிருந்தன. 13வது திருத்தத்திற்கு அமைவாக அதிகாரப்பகிர்வை மேற்கொள்வது, இடம்பெயாந்து வாழும் அனைத்துத் தரப்பினரையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவது, இராணுவப் பிரசன்னத்தை வட - கிழக்கில் குறைப்பது, சர்வதேச குற்றவியல் ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடுவது என்கின்ற அடிப்படையான விடயங்கள் அதில் அடங்கியிருந்தன.

13வது திருத்தம் தமிழ்மக்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு போதுமானதல்ல என்பதை தமிழ்த் தலைமைகள் வெளிக்காட்டியிருந்த போதும், அதனைக்கூட வழங்குவதற்கு இலங்கை தயாராக இல்லை என்பதே உண்மைநிலை. இதன் அர்த்தம் இலங்கையின் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பினுள் ஒரு சமூகமாக தமிழ்மக்களை ஏற்கமாட்டோம் என்பதே. இந்த விடயம் தெளிவாகத் தெரிந்த பின்னர் மாற்றுவழிகள் பற்றியே ஐ.நாவும், மேற்குலக - இந்தியக் கூட்டும் யோசித்திருக்க வேண்டும். எனினும் மேற்குலக, இந்தியக்கூட்டின் பூகோள நலன் அதற்கு இன்னமும் இடம்கொடுக்கவில்லை.

ஐ.நா வின் சுயவிமர்சனம் பாராட்டப்படக்கூடியதாக இருந்தாலும் போர்க்காலத்தில் ஐ.நா வின் நிலைப்பாடு தவறுதலாக ஏற்பட்டது எனக் கூறமுடியாது. புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படல் வேண்டும் என மேற்குலக - இந்தியக் கூட்டு விரும்பியிருந்தது. இந்தியா யுத்தத்தில் நேரடியாகவும் பங்குபற்றியிருந்தது. இதனால் இக்கூட்டின் கருவியாக இருந்த ஐ.நாவும், மேற்குலக - இந்தியக் கூட்டின் நிலைப்பாடுகளுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்லவே முனைந்தது. இந்தவகையில் போரின் பங்காளியாக மேற்குலக இந்தியக் கூட்டும் மட்டும் இருக்கவில்லை. ஐ.நாவும் பங்காளியாக இருந்தது.

லிபியா, சிரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அது மேற்குலகின் அரசியலுக்கு அவசியமாக இருந்தமையினால் ஐ.நா விரைவாகவும், வினைத்திறனுடனும் செயற்பட்டது. அந்தச் செயற்பாட்டின் 1/10 ஒன்றினைக் கூட இலங்கை விவகாரத்தில் ஐ.நா காட்டவில்லை. சாட்சியமில்லாத யுத்தத்திற்கு ஐ.நா.வே காரணமாக இருந்திருக்கிறது.

போர் அவலம் ஒருபுறமிருக்க போருக்கு பின்னரும் கூட ஐ.நா தமிழ்மக்களுக்கு விசுவாசமாக இருந்தது எனக் கூறமுடியாது. ஐ.நா நிபுணர்குழு அறிக்கை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையாக கீழிறங்கியமைக்கும் இந்த விசுவாசமின்மை தான் காரணம். உண்மையில் போர்க்குற்றம் பற்றி விவாதிக்க வேண்டிய இடம் மனித உரிமைகள் கவுன்சில் அல்ல. மாறாக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலே அதற்குரிய இடம். ஆனால் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்வது பற்றி ஐ.நா பெரியளவிற்கு முனைப்புக் காட்டவில்லை.

சீனா, ரஸ்யா போன்ற மறுப்பாணை அதிகாரம் உள்ள நாடுகள் இதனை ஏற்காது என மறுப்புக் கூறலாம். ஆனால் உரியமுறையில் அவற்றிற்கு விளக்குவதற்கு ஐ.நா விசுவாசமாக முயன்றதா என்பதுதான் இங்குள்ள கேள்வி! லிபியா விவகாரத்தில் ஐ.நா வின் தொடர்ச்சியான முயற்சியினால் சீனாவும், ரஸ்யாவும் நடுநிலைமை வகித்தமை நாம் அறிந்தவையே. இங்கு போரின்போது மட்டுமல்ல போருக்குப் பின்னரும் தமிழர் விவகாரத்தில் ஐ.நா ஆமை வேகத்தில் நகர்ந்துள்ளது. அல்லது சில சந்தர்ப்பங்களில் நகராமல் விட்டுள்ளது என்பதுதான் மிகவும் சோகமான விடயம்.

ஐ.நாவும், மேற்குலக - இந்தியக் கூட்டும் இலங்கை அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பியிருக்கின்றன. புலிகள்தான் அரசியல் தீர்விற்கு தடையாக உள்ளனர். புலிகளை அழித்துவிட்டால் அரசியல் தீர்வு இலகுவாக வந்துவிடும் என்பதே இவற்றின் ஏகோபித்த கருத்தாக இருந்தது. இவை சிங்கள சமூக உருவாக்கம், அதன் அடிப்படையில் எழுந்த சிங்கள அரசுருவாக்கம் என்பன பற்றிய அறிவு எதனையும் பெற்றிருக்கவில்லை என்றே தெரிகின்றது.

சிங்கள சமூக உருவாக்கம் என்பது சிங்கள - பௌத்த பேரினவாத கருத்து நிலைகளினால் கட்டியெழுப்பப்பட்டதே. இதற்கு அரசியல் மட்டும் காரணமாக இருக்கவில்லை. வரலாறு, ஐதீகம், சமயம் எல்லாம் காரணமாக இருந்திருக்கின்றன. சிங்கள அரசியல்வாதிகள் செய்ததெல்லாம் இந்தப் பேரினவாத கருத்து நிலைக்கட்டுக்கு மேல் குந்தியிருந்தமையே.

இந்தக் கருத்துநிலைப்படி இலங்கைத்தீவு சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டும் சொந்தமானது. ஏனையவர்கள் இத்தீவில் வாழ்ந்துவிட்டுப் போகலாம். உரிமைகள் எதுவும் கேட்கக்கூடாது என்பதே! இந்த உண்மை மேற்குலகத்திற்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவிற்கு நன்றாகவே தெரியும். இது தெரிந்துகொண்டும் புலிகளை அழிக்கத் துணைநின்றமைதான் மிகப்பெரிய சோகம். புலிகளை அழிக்கத் துணைநின்றதன் மூலம் மேற்குலகம் தமிழ்மக்களை பேரினவாதத்தின் வாலில் கொண்டுபோய் விட்டிருக்கின்றது. போருக்கு பின்னர் பேரினவாதம் தமிழ்மக்களை சப்பித்தின்ன முயற்சிக்கின்றது.

புலிகள் தென்னாசியாவில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதில் பங்களித்திருந்தனர். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான அதிகாரச் சமநிலை, அமெரிக்காவிற்கும், சீனாவிற்குமிடையிலான அதிகாரச் சமநிலை, ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான அதிகாரச் சமநிலை, தமிழரசியலுக்கும், சிங்கள அரசியலுக்குமிடையிலான அதிகாரச் சமநிலை என்பவற்றைப் பேணுவதில் புலிகள் கணிசமான பாத்திரத்தை ஆற்றியிருந்தனர். இன்று புலிகள் அழிக்கப்பட்டநிலையில் அதிகாரச் சமநிலை மகிந்தருக்குச் சார்பாக, மோசமாகச் சரிந்திருக்கிறது. செம்மனச் செல்விக்காக பிட்டுக்கு மண்சுமந்த இறைவன் மீது விழுந்த அடி எல்லா உயிர்களிலும் பட்டதுபோல, புலிகள் மீது பட்ட அடி எல்லாத் தரப்பின் மீது விழுந்திருக்கின்றது. ஐக்கிய தேசியக்கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜே.வி.பி, இந்தியா, அமெரிக்கா என எதுவுமே அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

தனித்து வெளி அழுத்தம் மட்டும் மகிந்த அரசினை பணிய வைத்துவிடாது. உள்ளூர் அழுத்தமும் தேவை. புலிகள் வலிமையான உள்ளூர் அழுத்த சக்தியாக விளங்கியிருந்தனர். அது இல்லாமல் போனதால் சர்வதேச அழுத்தம் என்கின்ற ஒற்றை அழுத்தம் இலங்கை அரசினை பெரியளவிற்கு அசைக்கவில்லை. இதனை இந்திய இராஜதந்திரிகள் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர். தங்களுக்கு இப்போது பிடி எதுவும் இல்லை என்று கூறியிருக்கின்றனர்.

இன்று மேற்குலகமும், இந்தியாவும் தமது நலன்களைக் கூட இலங்கையில் பேணமுடியாமைக்கான காரணம் புலிகள் அழிக்கப்பட்டமையே! எனவே மீண்டும் அதிகாரச் சமநிலையை உயர்த்த வேண்டுமானால் தமிழ் அரசியல் வலிமைப்படவேண்டியது தவிர்க்க முடியாதது. அதனை வலிமைப்படுத்த இந்திய - மேற்குலகக் கூட்டு என்ன செய்யப்போகின்றது என்பதுதான் இன்றுள்ள மிகப்பெரிய கேள்வி. வெறுமனே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் இழுபடச் செய்வதன்மூலம் இந்த வலிமையைக் கொண்டுவர முடியாது. தமிழ்த்தரப்பு தனது சொந்த நிகழ்ச்சிநிரலின் கீழ் தனது அரசியலைக் கட்டியெழுப்புவதற்கான சூழல் இருக்கும்போதே அது சாத்தியமாக இருக்கும்.

தற்போது உள்ளக அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இதன் வருகைக்கு இந்திய - மேற்குலகக் கூட்டு தனது நிகழ்ச்சிநிரலை நகர்த்த முடியாமை, மகிந்தரின் எதிர்நிலையான போக்கு, புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்கள், மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள் என்பன காரணமாக இருந்திருக்கின்றன.

எதிர்காலத்தில் இந்த அறிக்கைக்கு என்ன நடக்கும் என்ற கேள்விகளும் எழுகின்றன. ஐ.நா நிபுணர்குழு அறிக்கை அமுக்கப்பட்டதனால் இவ் அறிக்கைக்கும் அந்தக்கதி ஏற்பட்டுவிடுமோ என்கின்ற சந்தேகம் பலரிடம் உண்டு. இவ்வறிக்கையை ஆய்வுசெய்து தேவையான சிபார்சுகளை செய்வதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் ஒரு குழுவை உருவாக்கி இருக்கின்றார். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். எனினும் இது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்கும் என கூறமுடியாது. இலங்கையின் தொடர்ச்சியான எதிர்ச்செயற்பாடுகளும், தமிழ்த்தரப்பின் அழுத்தங்களும், மனிதஉரிமை நிறுவனங்களின் அழுத்தங்களுமே நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும்.

எதற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது தமிழ்த்தரப்பினர் செயற்பாடுகளாகும். அழுதாலும் தாய் தான் பிள்ளை பெறவேண்டும் என்பதற்கிணங்க தமிழ்த்தரப்புத்தான் இது விடயத்தில் முன்கையெடுத்து செயற்படல்வேண்டும். அரசாங்கம் தொடர்ச்சியாக எதிர்ச் செயற்பாடுகளை செய்து கொண்டுதான் இருக்கப்போகின்றது. அந்த எதிர்ச் செயற்பாட்டில் அரசாங்கத்தின் இருப்பே தங்கியிருப்பதனால் இது தவிர்க்க முடியாதது. அந்த எதிர்ச் செயற்பாடுகளுடன் தமிழ்த்தரப்பின் வலிமையான அழுத்தங்களும் இருக்கும்போதே சர்வதேச சக்திகளினாலும் வினைத்திறனுடன் நகரமுடியும். இல்லையேல் அரசாங்கத்தின் சிறிய, சிறிய சாதக அசைகளுக்குகூட சர்வதேச சமூகம் மயங்கவேண்டி ஏற்படும். அரசாங்கம் சிங்கள சமூகத்தின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியில் இருக்கின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது.

தமிழ்த்தரப்பின் அழுத்தங்கள் தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் என மூன்று பக்கங்களிலிருந்தும் எழுச்சியடைய வேண்டும். இதிலும் தாயக எழுச்சி மிக முக்கியமானது. ஏனைய இரண்டினதும் எழுச்சிகள் துணைப் பாத்திரத்தினை வகிக்க முடியுமே தவிர பிரதான பாத்திரத்தை வகிக்கமுடியாது.

குறிப்பாக தமிழ்தரப்பு மூன்று விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும். போர்க்குற்றம் தொடர்பாக அல்லாது இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்னெடுத்தல் வேண்டும். இதற்கான விசாரணை பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும்.

இனப்படுகொலை என்பது உயிர்க்கொலை மட்டுமல்ல, அது ஒரு மக்கள் கூட்டம் தனது அடையாளத்துடன் வாழ்வதை இல்லாமல் செய்வதாகும். நிலப்பறிப்பு, வளப்பறிப்பு, பண்பாட்டுப் பறிப்பு என்பன எல்லாம் அவற்றுள் அடங்கும். தமிழ்மக்களைப் பொறுத்தவரை போர் இன்னமும் முடியவில்லை. தற்போதும் தொடர்கின்றது. தற்போதைய நிலப்பறிப்புகள் அதன் வெளிப்பாடுகளே!

இரண்டாவது அரசியல் தீர்வு எவையும் தமிழ்மக்களை ஒருதனியான தேசமாக அங்கீகரித்ததாக இருத்தல் வேண்டும். தேசங்களுக்குத்தான் சுயநிர்ணய உரிமையுண்டு. சிறுபான்மை இனங்களுக்கு அவையில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது. அதிகார அலகு, அதிகாரப்பங்கீடு, மத்திய அரசில் வகிபங்கு, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றில் ஒரு தேசத்திற்கான வலிமையான உத்தரவாதங்கள் வேண்டும்.

மூன்றாவது தற்போது இடம்பெறும் பச்சை ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்தவேண்டும். இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கள் ஒரு இனப்படுகொலைக்குரியவை என்பதை தர்க்கரீதியாக சர்வதேச மட்டத்தில் புரியவைக்கும்போது ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தக்கூடியதாக இருக்கும்.

துரதிஸ்டவசமாக இம் மூன்று விடயங்களையும் முன்னெடுக்கவேண்டிய பொறுப்பு வாய்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. தனது பொறுப்பில் உள்ள உள்ளூராட்சி அமைப்புகளுக்குகூட வலிமையான தலைமையைக் கொடுக்க அதனால் முடியவில்லை. கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சி ஸ்தானத்தை வகிக்கின்ற போதும், அதனைப் போர்க்களமாக்க முடியவில்லை. ஒரு வலுவான அமைப்பு வடிவத்தை இன்னும் பெறவில்லை. தேர்தல் கூட்டாக மட்டும் அது இருக்கின்றது. திட்டமிட்ட வேலைமுறைக்கு புறம்பாக தன்னிச்சையான வேலைமுறையே அங்கு நடைமுறையில் உள்ளது. உட்கட்சிச் சண்டைவேறு.

அகரீதியான இந்தநெருக்கடிகளில் இருந்து விடுபடுவதில் முன்னேற்றங்கள் காணப்படவில்லை என்றால் சர்வதேசம் உருவாக்கித் தந்த சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த முடியாத நிலையே ஏற்படும். இராஜதந்திர நடவடிக்கை என்பது சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வதல்ல. மாறாக சொந்த நிகழ்ச்சி நிரலை சர்வதேச நிகழ்ச்சிநிரலாக்குவதே!

கூட்டமைப்பின் தலைமை இதனைப் புரிந்துகொள்ளுமா?

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=0bec17de-d87b-48ee-b8c0-fe3886f9fa4b

லிபியா, சிரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அது மேற்குலகின் அரசியலுக்கு அவசியமாக இருந்தமையினால் ஐ.நா விரைவாகவும், வினைத்திறனுடனும் செயற்பட்டது. அந்தச் செயற்பாட்டின் 1/10 ஒன்றினைக் கூட இலங்கை விவகாரத்தில் ஐ.நா காட்டவில்லை. சாட்சியமில்லாத யுத்தத்திற்கு ஐ.நா.வே காரணமாக இருந்திருக்கிறது.

[size=4]உண்மை. அங்கே ஐ.நா. பாதுகாப்பு சபையின் முன்னால் இந்த நாட்டு விடயங்கள் நிறுத்தப்பட்டன. நாடு கடந்த அரசின் பிரதமர் இரு நாட்களுக்கு முன்னர் நாமும் அடுத்த ஜெனீவா மனித உரிமை சபையை தாண்டி பாதுகாப்பு சபைக்கு எமது விடயத்தை எடுத்து செல்லவேண்டும் என கூறி இருந்தார். [/size]

[size=4]அங்கே சீன, உருசிய ஆதரவுகளை நாம் பெற முயலவேண்டும் எனவும் கேட்டிருந்தார். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.