Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே

Featured Replies

அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே செல்கிறோம் என்கிறார் புலித்தேவன்

சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அப்பேச்சுக்களில் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதற்கான மனநிலையும் அதற்கு இல்லை. இதனை கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவே ஒஸ்லோவுக்கு செல்கிறோம் என்றும் புலித்தேவன் மேலும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒஸ்லோ பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கை அரசாங்கத்தின்மீது சர்வதேச சமூகம் தீவிரமான அழுத்தத்தைப் பிரயோகித்து தீர்வொன்றை எட்டுவதற்கு நிர்ப்பந்திக்காதவரை எந்தவிதமான ஒரு தீர்வும் இலங்கை இனப்பிரச்சினைக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் முயற்சியாகவே புலிகளின் ஒஸ்லோப்பயணம் அமையவுள்ளது.

தென்னிலங்கையில் காலங்காலமாக குழுக்கள் அமைப்பது, மாநாடுகள் கூட்டுவது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்றுள்ளன.

ஆனால் அவையெதுவுமே உருப்படியான எந்தவிதமான தீர்வையும் தந்ததில்லை. அதேபோலவே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தற்போது அமைக்கப்படும் இரு குழுக்களும் எந்தவிதமான தீர்வையும் தரப் போவதில்லை.

அதேவேளை, மேற்படி குழுக்களிலும் அவை பற்றிய கூட்டங்களிலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் இணைக்கப்படாமை, தென்னிலங்கையும் தமிழீழமும் இரு துருவங்களாகப் பிரிந்து விட்டன என்பதையே தெளிவாகக் காட்டுகின்றன என புலித்தேவன் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம் நோர்வேயின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் இடம்பெறவுள்ள நோர்ட்டிக் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் இலங்கை அரச தரப்பு குழுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவும் இன்று ஒஸ்லோ நோக்கி பயணமாகவுள்ளன. இலங்கை அரச தரப்பு குழுவில் சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோஹன தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவினரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவினரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பர். இலங்கை அரச தரப்புக்குழுவில் சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோஹன, சட்டத்தரணி கோமின் தயாசிறி, சந்திர ஜெயசேகர உட்பட மற்றுமொருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் மற்றும் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோரும் ஒஸ்லோ பயணமாகவுள்ளனர். அதேநேரம், தற்போது அமெரிக்காவிலுள்ள புலிகளின் பிரமுகர் உருத்திரகுமாரனும் ஒஸ்லோவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவினரோடு இணைந்து கொள்வாரென்று தெரிய வருகிறது.

ஒஸ்லோ நோக்கி இன்று பயணமாகவுள்ள அரச தரப்பு குழுவும், புலிகள் தரப்பு குழுவும் வெவ்வேறு விமானங்களிலேயே பயணிக்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவினர் இன்று மதியம் கிளிநொச்சியிலிருந்து விமானப் படை உலங்கு வானூர்தியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்கிருந்து ஒஸ்லோ நோக்கி பயணமாவார்கள்.

கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரைக்குமான புலிகளின் போக்குவரத்துக்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வழித்துணை வழங்குமென்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொட்டாற் தெரிவித்தார். அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான ஏற்பாடுகளை நோர்வே அனுசரணையாளர்கள் கவனிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளதன் பின்னணியில் நோர்டிக் நாடுகளின் கூட்டம் ஒஸ்லோவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்திருப்பதால் போர்நிறுத்த கண்காணிப்புப் பணியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஈடுபட முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்ட குழு முன்வைக்கும் என்று தெரியவருகிறது. குறிப்பாக நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பது பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும் என்பதால் இது குறித்து தமது தலைமையின் நிலைப்பாட்டை புலிகளின் உயர்மட்டக்குழு அனுசரணையாளர்களான நோர்வேக்கு தெரியப்படுத்தும் என்றும் நோர்ட்டிக் நாடுகள் தவிர்ந்த பிரதிநிதிகள் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறலாம் என்றும் புலிகளின் உயர்மட்டக்குழு இந்த கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் என்றும் தெரியவருகிறது.

virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே சந்திப்பின் பின்னர் புலிகள் சுவிஸுக்கு செல்வர்

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறும் சந்திப்பைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சுவிற்சர்லாந்துக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள சந்திப்புக்காக, விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழு நேற்று

ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையமூடாக ஒஸ்லோவுக்கு புறப்பட்டது.

நேற்று நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்காவுக்கு விமானப் படையின் ஹெலிகொப்டரில் புறப்பட்ட தமிழ்ச்செல்வன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், காவல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் ஆகியோர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள `ஏயார்போர்ட் கார்டன்' ஹோட்டலில் மிகப் பலத்த பாதுகாப்பின் மத்தியில் தங்க வைக்கப்பட்டனர்.

ஒஸ்லோ சந்திப்புகள் முடிவடைந்ததும் புலிகளின் முக்கியஸ்தர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஒஸ்லோவிலிருந்து சுவிற்சர்லாந்துக்குச் செல்வர்.

அங்கு 12 ஆம் திகதி சுவிஸ் அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்புகளை நடத்திய பின் 13 ஆம் திகதி சுவிஸிலிருந்து இலங்கை திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

அசௌகரியம்' குறித்து புலிகள் பிரஸ்தாபிப்பர்

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளருடன் பணியாற்ற முடியுமா?

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்த நிலையில், அந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிப்பதால் எதிர்காலத்தில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுடன் நெருங்கிச் செயற்படுவதில் பல அசௌகரியங்களேற்படுமெனத் தாங்கள் கருதுவதாக விடுதலைப் புலிகளின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒஸ்லோவில் எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் திகதி களில் நடைபெறும் சந்திப்புகளில் கண்காணிப்புக் குழுவினரின் எதிர்காலம் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் அவர்களது பாதுகாப்பு குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து புலிகளின் அந்த உயர்மட்ட வட்டாரம் மேலும் கூறுகையில்;

ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தத் தடையானது சமாதான முயற்சிகளையும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பணிகளையும் பெரிதும் பாதிக்கவுள்ளது.

இதனை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது ஒரு தலைப்பட்சமாக மேற்கொண்ட செயற்பாடானது இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளை கேள்விக் குறியாக்கியுள்ளது.

தற்போதைய நிலையில் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியன ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும்.

எனவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அங்கம் வகிக்கும் கண்காணிப்புக் குழுவுடன் நாம் நெருங்கிச் செயற்படுவதில் பல அசௌகரியங்கள் ஏற்படும்.

அவ்வாறானதொரு நிலையில் அவர்கள் நடு நிலைமை வகிக்கும் சாத்தியங்கள் குறித்தும் கேள்வியெழும் என்பதால் இது பல நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

இது குறித்தெல்லாம் இந்த ஒஸ்லோ சந்திப்பில் நாம் விரிவாக ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இதைவிட கண்காணிப்புக் குழுவின் எதிர்காலம் அவர்களது செயற்பாடுகள் குறித்தெல்லாம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கை அரச பிரதிநிதிகளும் நோர்வே அனுசரணையாளர்களும் பங்குபற்றவுள்ளதால் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென நம்புகின்றோம்.

இதைவிட வடக்கு- கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், அவலங்கள் மற்றும் துன்பங்கள் குறித்தும் இங்கு விளக்கவுள்ளதாகவும் தெரிவித்தன.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்துக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டை விளக்கவே ஒஸ்லோ பயணம்

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன்

நோர்வேயின் அழைப்பை ஏற்று ஒஸ்லோ செல்வது ஏன் என்பது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் விபரித்திருக்கிறார்.

ஒஸ்லோ செல்வதற்கு முன்பாக கிளிநொச்சியில் புலிகளின் குரல் வானொலிக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது;

எமது ஒஸ்லோ பயணமானது தாயகத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையை சுமுகமான நிலைக்கு கொண்டுவரும் என்று நாங்கள் நம்பவில்லை.

உண்மையிலேயே நாம் ஒஸ்லோவுக்கு போவது என்பது, நோர்வேயினுடைய அழைப்பை ஏற்று, அதனை மதித்து இதுவரை காலமாக நோர்வேத் தரப்பு முன்னெடுத்து வந்த அமைதி முயற்சிகள், சமாதான முன்னெடுப்புகள், அனுசரணைப் பணிகளுக்கு மதிப்பளிக்கும் முகமாகத்தான் நோர்வே அழைப்பை எங்களுடைய தலைமைப்

பீடம் சாதகமாக பரிசீலித்து ஒஸ்லோப் பயணத்துக்கு எங்களைச் செல்லுமாறு எமது தலைவர் பணித்தார். அந்த வகையில் தான் ஒஸ்லோ செல்கின்றோம்.

தமிழர் தாயகத்தில் மிகமோசமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இனப்படுகொலைகள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நாம் நோர்வேத் தரப்புக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுப்படுத்துகின்ற ஒரு முயற்சியாகத்தான் எங்களுடைய பயணம் அமைகின்றது.

ஒரு பக்கம் சமாதான அழைப்பை விடுத்துக் கொண்டு, சமாதானத்துக்கு சாதகமாக பேசிக்கொண்டு, பேச்சளவில் ஒன்றையும், செயலளவிலும் முழு அளவில் தமிழர் தாயகத்தை சிதைப்பதும், தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடுவதும் மிகக் கொடூரமான ஒரு யுத்தத்தை எதிர்நோக்கும் நோக்கோடுதான்ங இலங்கை அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களைத் தணிப்பதற்காகவே பேச்சளவில் இப்படியான பேச்சுகளை பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதால் செயற்பாட்டில் எதுவுமில்லை. இதனை அம்பலப்படுத்தும் நோக்கோடுதான் ஒஸ்லோவுக்குப் போகிறோம்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்கள் மற்றும் தீவிர முயற்சிகளினால் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோவில் விடுதலைப் புலிகள் - நோர்வே மக்கள் உற்சாக வரவேற்பு!

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுக்களில் பங்கேற்பதற்காக நோர்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சென்றடைந்தனர். ஓஸ்லோவில் விடுதலைப் புலிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை நோர்வே நேரம் இரவு 10.30 மணிக்கு ஒஸ்லோ விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பல நூற்றுக்கணக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் விமான நிலையத்தில் ஒன்றுகூடி தமிழர் பிரதிநிதிகளுக்கு உற்சாக வரவேற்றபளித்தனர்.

ஓஸ்லோ விமான நிலையத்தில் ஒன்றுகூடிய மக்கள் தமிழீழத் தேசியக்கொடி, நோர்வே தேசியக்கொடிகளைத் தாங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் குழுவினருக்கு மலர்க்கொத்துக்கள் வழங்கி மகிழ்ச்சி வரவேற்பளித்தனர்.

நோர்வேயின் வுஏ2 என்ற பிரபல தொலைக்காட்சி, விடுதலைப் புலிகளின் வருகையையும் மக்களின் வரவேற்பளிப்பபையும் பதிவு செய்ததோடு அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் செவ்வி கண்டது.

சமாதான முயற்சிகள் நெருக்கடியான நிலைக்குள் சென்றிருக்கின்ற சூழலிலும், விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ள நிலையிலும் ஓஸ்லோ சந்திப்பின் முக்கியத்துவம் குறித்து ஓஸ்லோ விமான நிலையத்தில் புதினத்திற்காக சு.ப. தமிழ்ச்செல்வனிடம் நாம் கேட்டபோது,

நோர்வேயின் அழைப்பை மதித்து நாங்கள் இந்தச் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவிருக்கின்றோம். தமிழர் தாயகத்தில் மிக மோசமான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அங்குள்ள நிலைமைகளையும் எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடுகளையும் நேரடியாக நோர்வேக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லவுள்ளோம். அதேவேளை இந்தச் சந்திப்புகள் சிங்களப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் நம்பவில்லை என்றார்.

ஓஸ்லோ சந்திப்புக்கள் மூலம், மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதற்கான புறச்சூழல் ஏற்படுத்தப்படும் வாய்ப்புக்கள் உள்ளனவா என்று கேட்டபோது,

தமிழர் தாயகத்தில் கொடூர வன்முறைச்சூழலும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் அங்கு சுமூகநிலை இல்லை, மாற்றங்கள் இல்லை. எனவே இந்தச் சந்திப்புக்களால் பேச்சுவார்தைகளுக்கான புறச்சூழல் ஏற்படுமென்றோ அதற்கான மாற்றங்கள் ஏற்படுமென்றோ நாம் நம்பவில்லை. நோர்டிக் (ஸ்கன்டிநேவிய) நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக இச்சந்திப்புக்களில் ஆராயப்படவுள்ளது. அது விடயம் தொடர்பான எமது தலைமைப்பீடத்தின் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து விளக்கவுள்ளோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் நோர்வேக்கு வருகை தந்துள்ளனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸ்லோவில் கடல் இறைமை குறித்து விவாதிக்கப்பட்டால் நிலைப்பாடு என்ன?: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம்

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் விடுதலைப் புலிகளின் கடல் இறைமை குறித்து விவாதிக்கப்பட்டால் எத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

ஓஸ்லோ பயணத்துக்கு முன்னதாக ஈழநாதம் நாளேட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

தமிழ் மக்களின் அமைதி முயற்சிகள், சமாதான முன்னெடுப்புக்கள், இணக்கப்பாடுகளுக்கான அனைத்தையும் மிக மோசமான முறையில் சீர்குலைத்தவர் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச. இதன் உச்சக் கட்டமாகப் பெரிய யுத்தத்தையும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் எமது மக்கள் மீதும், தேசத்தின் மீதும் கட்டவிழ்த்துவிடுகின்ற தந்திரோபாயமாகத்தான் அவர் இத்தகைய நடவடிக்கைகளைச் செய்து வருகிறார்.

சர்வதேச அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓரங்கட்டப்படுவதைத் தமிழ்மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே தமிழ் மக்கள் இதனால் ஆத்திரமடைந்து ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றி போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து தங்களது சுதந்திரத்துக்கான சுயநிர்ணய உரிமையை நிலைப்படுத்தும் போரில் தீவிர முயற்சி எடுப்பார்கள். இதனை மகிந்த நன்கு உணர வேண்டும். சர்வதேச அரங்கில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைத் தனிமைப்படுத்தி ஓரங்கட்டிப் பலவீனப்படுத்த முயற்சிப்பதே அவரின் இன்றைய நடவடிக்கையாகவுள்ளது. இது அவரது சதித்திட்டம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.

அவர் இன்று சிங்கள இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து எமது தேசத்தின் மீதும் மக்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி எம்மால் உணரமுடிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பலமடங்கு பலத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.தமிழீழ மக்கள் இன்று முழு அளவில் ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் நாங்கள் பலம் பெறுகிறோம். ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடித்து எமது தேசத்தை விடுவித்துச் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு அவாக்கொண்டு செயற்படுகிறார்கள். இந்த நிலையில் புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பலம் இழந்து, விட்டது என்று பேசப்படுவது உண்மையற்ற ஒன்று. இனிவரும் காலத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளும் அதன் அரசும் சந்திக்கப்போகின்ற நிலையை வைத்துத்தான் இந்தக் கேள்விக்கான விடையை அவதானிக்கலாம்.

எமது ஒஸ்லோப் பயணம் தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு உண்மையான தெளிவான செய்தியைச் சொல்லிவிட்டுத்தான் செல்கிறோம். புதுக்குடியிருப்பில் பத்தாயிரம் மக்கள்படை வீரர்கள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்விற்கு நானும் கலந்து கொள்வதாக இருந்தது. பின்னர் இன்று திடீரென ஒஸ்லோ செல்ல வேண்டியிருந்ததால் அந்த எழுச்சிமிக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

எங்களின் பயணமானது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் எங்கள் தலைமையும் எடுக்கப்போகின்ற தீர்க்கமான முடிவுகளைச் சர்வதேச அரங்கில் நேரடியாகக் கொண்டு சென்று தெளிவாக்கும் நோக்குடன் தான் அமைகின்றது. இந்தப் பயணம் எங்கள் மக்கள் எழுச்சியையோ அன்றி அடுத்தகட்ட நகர்வுகளையோ எந்த வகையிலும் பாதித்து விடாது. இவற்றை எல்லாம் வலுப்படுத்தும் வகையில் தான் எங்களது பயணம் அமையும்.

தமிழர் பிரதேசத்தில் நிலை கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடித்து எமது தேசத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் எமது இந்தப் பயணத்தால் பாதிப்படைந்து விடமாட்டாது.

நாங்கள் ஓஸ்லோவில் அரச தரப்பைச் சந்திக்கப்போவதில்லை. நோர்வேத் தரப்பு எங்களை பேசுவதற்காக அழைத்திருக்கிறது. இந்தப் பேச்சில் கண்காணிப்புக்குழுவின் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் பேசுவதற்காக அழைத்திருக்கிறார்கள்.

அவர்களின் அழைப்பின் படி நோர்வேத் தரப்பையும் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் நோட்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இன்றுள்ள நெருக்கடி நிலைமைகள் பற்றிப் பேசவே செல்கின்றோம். அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நாங்கள் செல்லவில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பதினெட்டாயிரம் வரையான மாவீரர்களையும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் இழந்திருக்கின்றோம். மிக நீண்ட உறுதியான போராட்டத்தினை முன்னெடுத்ததன் மூலம்தான் எங்களது தேசத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எமது இறைமையை மீட்டெடுத்தோம். அதன் மூலம் எமது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கியிருக்கின்றோம்.

இந்த நிலையில் எங்களால் மீட்கப்பட்ட உரிமையையோ அல்லது இறைமையையோ விட்டுக்கொடுக்கத் தயார் இல்லை. எங்களது கடல், வான், தரைப் பிரதேசம் அனைத்தும் தமிழீழத்திற்கே செந்தமானது. இதன் உரிமையாளர்கள் தமிழீழ மக்கள். தமிழீழத் தாயகம் முழுமையும் மக்களுக்கே உரிமையானது. ஆகவே இதில் நாங்கள் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாராகவில்லை.

இந்த நிலைகளில் இருந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதனை நாங்கள் சமாதான முன்னெடுப்புக்களை ஆரம்பித்த பொழுதே தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. ஆகவே இரண்டு தரப்பும் இந்த நிலைகளைப் பேண வேண்டும்.

நாங்கள் கடற்பிராந்தியத்தை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றோம். கடலில் தமிழீழத்தின் கடற்படை மிக வலிமையான ஒன்றாகக் கட்டி எழுப்பட்டு இருக்கிறது. பல மாவீரர்களின் உயிர்த் தியாகங்களினால்தான் நாங்கள் எங்கள் கடல் இறைமையைக் கூட மீட்டெடுத்திருந்தோம். இந்த நிலையில் எங்களது கடல் பிராந்தியத்தையோ அல்லது தரைப் பிராந்தியத்தையோ எங்களது பிரதேசங்களின் எந்த இறைமையையும் நாங்கள் விட்டுக்கொடுக்கத் தயார் இல்லை.

இந்த விடயம் பற்றிப் பேசப்பட்டால் எங்களது உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்துவோம்.

தேசியத்தலைவர் எம்மிடம் இதுபற்றி மிக உறுதியாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி இருக்கிறார். அதற்கமைவாக இது விடயம் தொடர்பில் நாம் எமது உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவோம்.

ஐரோப்பிய ஒன்றியத் தடையானது ஒட்டுமொத்தமாகத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துகின்ற கொச்சைப்படுத்தும் செயலாக அமைந்து விட்டது. இது துரதிஸ்டவசமானது. தமிழ் மக்களை மிகவும் நோகடிக்கச் செய்துள்ளது. இதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலை காரணமாக எமது மக்கள் உறுதியான நிலைப்பாட்டை நோக்கி மிக வேகமாக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்களது தேசத்தை மீட்டெடுக்கின்ற உறுதியான பயணத்தைத் தொடர்வது தான் ஒரேவழி.

சர்வதேச சமூகத்தை நம்பி இனியும் பொறுமை காக்க முடியாது என்ற நிலையை எமது மக்கள் அடைந்துவிட்டார்கள். இந்த நிலையை நாம் வெளிப்படுத்துவோம். எமது பயணம் தமிழ் மக்களின் தீர்மானங்களையோ அல்லது எமது தலைமைப்பீடத்தின் தீர்மானங்கள் எதையுமோ தள்ளிப்போடாது.

தமிழ் மக்கள் இன்று பூரண எழுச்சி கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் பின்னால் அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள். எமது மக்கள் மீதும், தேசத்தின் மீதும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற வன்முறைகள் இனவழிப்பு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இல்லாதொழிப்பதற்கு மக்கள் திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்கள். மக்களின் இந்த உறுதிப்பாட்டையும் தலைமையின் தீர்மானங்களையும் எங்களது பயணம் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக்காது.

மக்கள் பூரண எழுச்சியை நோக்கி மிகவிரைவாக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரின் பின்னால் மக்களும் தமிழீழத் தேசமும் முழுமையாக அணிதிரண்டு தேசத்தின் மீது பீடித்திருக்கின்ற அடக்குமுறைமிக்க ஆக்கிரமிப்பை இல்லாதொழித்து மக்கள் சுதந்திரப்பூமியில் சுதந்திரக் காற்றைச்சுவாசிக்கும் காலத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோ சந்திப்பின்போது புலிகள்

கடும் போக்கைக் கடைப்பிடிப்பர்!

தலைவர் பிரபாவின் இறுக்கமான நிலைப்பாட்டை

பிரதிபலிப்போம் என்கின்றார் தமிழ்ச்செல்வன்

""போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஒஸ்லோவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள பேச்சுகளின்போது கடுமையான நிலைப்பாட்டுடன் சில யோசனைகளை அரசுக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முன்வைப்போம். அரசு அதற்கு இணங்குமானால் அமைதி முயற்சிகள் தொடரும். இல்லையேல் அமைதி முயற்சிகள் தொடர்வதற்கான சாத்தியம் இல்லாமல் போகும்.''

இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன். ஒஸ்லோ சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்பட முன்னர் கொழும்பில் வைத்து "உதயன்'இற்குக் கருத்து வெளியிட்டபோதே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்தார்.

""ஒஸ்லோ சந்திப்புக்களில் நாம் இறுக்க மான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்போம். ஐரோப்பிய ஒன்றியம் எமது இயக்கத்தைத் தடை செய்த பின்னர் இலங்கை போர் நிறுத் தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக் கும் டென்மார்க், பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாட்டு உறுப்பினர்களின் நிலைமை என்ன? அவர்களிடமிருந்து பக்கச் சார்பற்ற, நடுநிலையான சேவையைப் பெற முடியுமா? என்பன கேள்விகள் எழுகின்றன.

இந்தப் பிரதிநிதிகள் தொடர்ந்து இதில் அங்கம் வகிப்பது போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளில்கூட சமதரப்பு அந் தஸ்தைப் பாதிக்கும். எனவே, இது தொடர்பான எமது நிலைப்பாட்டை உறுதியாகக் கூறவுள்ளோம் என்றும் தமிழ்ச்செல்வன் கூறினார்.

""கடல் போக்குவரத்து விடயத்தில் நாம் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யப் போவ தில்லை. அந்தப் பேச்சுக்கே இடமில்லை. நாம் தலைவரின் விசேட செய்தி ஒன்றையே இந்தச் சந்திப்புக்கு எடுத்துச் செல்கிறோம். ஒஸ்லோவில் எமது நிலைப்பாட்டுக்கு அரசு இணங்கினால் அமைதிக்கான முயற்சிகள் தொட ரும். இல்லையேல் எல்லாம் அடைப்பட்டுப் போகும். தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் அராஜகங்களை நிறுத்துமாறும் இங்கு வலியுறுத்தவுள்ளோம்.'' என்றார் தமிழ்ச்செல்வன்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

சமதரப்பு அந்தஸ்தை வலியுறுத்தும்

நிகழ்வாக ஒஸ்லோ சந்திப்பு

யுத்தமா? சமாதானமா?

மென் தீவிரப் போரைத் தொடர்ந்தும் மேற்கொண்டு, அதை முழு யுத்தமாக வெடிக்க வைக்கப் போகின்றீர்களா? அல்லது அமைதித் தீர்வுகாண்பதற்கான சமாதானப் பேச்சுகளில் இதய சுத்தியுடன் ஈடுபட விரும்புகின்றீர்களா?

நாளை மறுதினம் நோர்வேயில் நடைபெறப் போகும் சந்திப்பின்போது இந்தக் கேள்வியைத்தான் இலங்கை அரச தூதுக் குழுவினரைப் பார்த்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் கேட்பார்கள் எனத் தெரிகின்றது.

வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக விடயத்தை முடித்து வருமாறு கூறித்தான் தனது பிரதிநிதிகளை ஒஸ்லோவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

இவ்வாறு வெளியாகும் தகவல்களைப் பார்க்கும்போது ஒஸ்லோ சந்திப்பு மிகச் சூடாக இருக்கும் என்று கருத முடிகின்றது.

இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வுகாணும் தேடலில் இலங்கை அரசுத் தரப்பும், தமிழர்களின் பிரதிநிதிகளான புலிகள் தரப்பும் சம அந்தஸ்துடையவை என்ற அடிப்படை இணக்கப்பாட்டுக்கு அமையவே தற்போதைய சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய பின்னர்தான் அமைதி முயற்சிகளுக்கே புலிகள் இணங்கினர்.

ஆனால், அந்த சமதரப்பு அந்தஸ்து இன்று தமிழர்களைப் பொறுத்தவரை பங்கப்பட்டு, பழிக்கப்பட்டுப் போய் நிற்கின்றன.

பௌத்த சிங்களப் பேரினவாதத்தில் ஊறித் திளைத்த தென்னிலங்கை சக்திகளின் ஆதரவோடு ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்தரின் அரசு, அமைதி முயற்சிகளில் தமிழர் தரப்புக்கு சம அந்தஸ்து தருவதை அடியோடு மறுத்து நிற்கின்றது.

மறுபுறம், அமைதி முயற்சிகளில் ஈடுபட வேண்டிய தரப்புகளில் ஒன்றை மட்டும் தன்பாட்டில் தடைசெய்ததன் மூலம் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்ததன் வாயிலாக இந்த சமதரப்பு நிலைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்தியிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் சுட்டிக்காட்டியமை போன்று இந்தத் தடை அமைதி முயற்சிகளில் தமிழர்களின் சமதரப்பு அந்தஸ்தையும், அதன் மூலம் வலுவையும் வெகுவாகப் பாதித்து நிற்கின்றது.

ஆகவே, இந்தப் பாதிப்பிலிருந்து மீளுகின்ற மீட்சி பெறுகின்ற முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டிய தேவைப்பாடு தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

அதற்காக இந்த ஒஸ்லோ சந்திப்பைப் புலிகளின் பிரதிநிதிகள் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நோக்கம் கருதித்தான் ஒஸ்லோ கலந்துரையாடல்களின்போது புலிகளின் பிரதிநிதிகள் இறுக்கமாகவும், கடுமையாகவும், உறுதியாகவும் சில விடயங்களில் நிற்பார்கள் என உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

கடற்போக்குவரத்து விவகாரமாகட்டும், புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளுக்கு அமைய வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசத்துக்குக் கட்டுப்பாடில்லா பொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது பற்றிய விடயமாகட்டும், கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிய அம்சங்களாகட்டும் இவை ஒவ்வொன்றிலும் அரசுத் தரப்புடன் தமிழர் தரப்பும் சம அந்தஸ்துடையது என்பதை அடித்து, வலியுறுத்திக் கூறுவது போன்றதாக புலிகளின் நிலைப்பாடு ஒஸ்லோ சந்திப்புகளின் போது அமைந்திருக்கும் எனத் தெரிகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவிதித்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதிகளாகத் தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற விவகாரத்தைக் கூட, அதனால் அமைதிச் செயற்பாடுகளில் தமிழர் தரப்பின் அந்தஸ்துப் பாதிப்பின் அடிப்படையிலேயே புலிகளின் பிரதிநிதிகள் அணுகுவர் என்றும் தெரிகின்றது.

புலிகளைத் தடைசெய்து, அவர்களின் சமதரப்பு அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்படுத்தும் நாடுகளின் பிரதிநிதிகள் நடுநிலையுடன் கூடிய கண்காணிப்புக் குழுவில் இடம்பெறுவது நியாயமா என்ற கேள்வியை மேற்படித் தடை வருவதற்கு முன்னரே இப்பத்தியில் எழுப்பியிருந்தோம். நமது கேள்வி எழுப்பப்பட்ட அதே அடிப்படையில்தான் புலிகள் ஒஸ்லோ சந்திப்பில் இந்த விடயத்தை ஆராய அணுக போகின்றார்கள் என்று தெரியவந்திருக்கின்றது.

ஒட்டுமொத்தத்தில் அமைதி முயற்சிகளில் தமிழர்களின் சமதரப்பு அந்தஸ்தை தூக்கி நிறுத்தி உறுதிப்படுத்துவதாக ஒஸ்லோ சந்திப்பு இடம்பெறப் போகின்றது. அந்த நிலைப்பாட்டை ஏற்று அங்கீகரித்துச் செயற்பட இலங்கை அரசுத் தரப்பு ஒஸ்லோவில் இணங்கி, அதன்படி செயற்படுமானால் ஒஸ்லோ சந்திப்பு வெற்றி பெறும். அல்லது வீண் விரயமாகும்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.