பொள்ளாச்சியில் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் 'உயிருடன்' திரும்பி வந்த நபர் - என்ன நடந்தது?
கட்டுரை தகவல்
சேவியர் செல்வக்குமார்
பிபிசி தமிழ்
25 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பொள்ளாச்சியில் ஒருவர் தன் தந்தை இறந்து போனதாக இறுதிச்சடங்குகள் செய்த நிலையில், அவருடைய தந்தை உயிருடன் திரும்ப வந்துள்ளார்.
அதனால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட சடலம், கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இருவருடைய தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்ததால் இந்த குழப்பம் நடந்துள்ளதாக தெரிவித்த மகனின் குடும்பத்தினர், இறுதிச் சடங்கிற்காக பல ஆயிரம் வரை செலவழித்துள்ளதாகக் கூறினர்.
இறுதிச்சடங்கு செய்யப்பட்ட சடலம் யாருடையது என்பது அடையாளம் தெரியவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
திட்டமிட்டு இது நடக்கவில்லை என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அப்படி நடந்திருந்தால் சட்டரீதியான ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்றும் கோட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
உருவ ஒற்றுமையால் ஏற்பட்ட குழப்பம்!
பொள்ளாச்சி பெத்தநாயக்கனூரைச் சேர்ந்த காளிதாஸ், தனது தந்தை மருதமுத்துவை காணவில்லை என்று கடந்த சனிக்கிழமையன்று பல இடங்களிலும் தேடியுள்ளார்.
சாலையோரத்தில் விழுந்து கிடந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலமாக சிலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் எங்கே சேர்த்தனர் என்று கண்டறிய முடியவில்லை.
காளிதாஸ் குடும்பத்தினர் தெரிவித்த தகவலின்படி, மருதமுத்துவுக்கு காளிதாஸ் உட்பட 3 மகன்கள் உள்ளனர். ஆனால் யாருடைய வீட்டிலும் நிரந்தரமாகத் தங்காமல், கெங்கம்பாளையத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
அடிக்கடி தன் வீட்டிற்கு வந்து செல்லும் தன் தந்தையை காணாமல் காளிதாஸ் தேடிக்கொண்டிருந்தபோது, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோட்டூர் காவல் நிலையத்திலிருந்து அவரை அழைத்துள்ளனர்.
அங்கு சென்றபோது, ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, அந்த நபர் இறந்து அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் யாராவது இறந்தால் அவருடைய புகைப்படத்தை எடுத்து, பல்வேறு காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து அதை மக்கள் பார்க்கும்படி காவல் நிலையங்களில் அறிவிப்புப் பலகைகளில் ஒட்டுவது காவல்துறையில் வழக்கமாகவுள்ளது. அப்படி கோட்டூர் காவல் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்த சிலர், இவர் கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த மருதமுத்து என்று காவலர்களிடம் கூறியுள்ளனர். அதன்பின்பே காளிதாசை காவல்துறையினர் அழைத்துள்ளனர்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கோப்புப்படம்
அந்த சடலத்தைப் பெறுவதற்கு, காவல்துறையிடமிருந்து பெறவேண்டிய ஆவணங்களை திங்கள்கிழமையன்று வாங்கிக்கொண்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு காளிதாஸ் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அங்கு முறைப்படி எல்லா ஆவணங்களையும் ஒப்படைத்து, அந்த சடலத்தைப் பெற்றுக்கொண்டு பெத்த நாயக்கனூருக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர்.
''இறப்புத் தகவல் கேட்டு பொள்ளாச்சியிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த உறவினர் ஒருவர், சமத்தூர் அருகே எனது மாமனார் நடந்து வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர் இறந்துவிட்டதாகத்தானே நமக்கு தகவல் வந்தது என்று நினைத்த அவர், அவரை வீடியோ எடுத்து அனுப்பினார். நாங்கள் அதைப் பார்த்தும் நம்பவில்லை. ஆனால் எங்கள் மாமனாரை கையோடு ஆட்டோவிலேயே வீட்டுக்குக் கூப்பிட்டும் வந்துவிட்டார்.'' என்றார் காளிதாஸின் மனைவி வைதேகி.
''அவர் வரும் வரை எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. வந்தபின்பே எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. உண்மையில் கோட்டூர் காவல் நிலையத்தில் எனது மாமனாரின் புகைப்படத்தைக் காண்பித்துத் தகவல் சொன்னதால்தான் எனது கணவர் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே ஐஸ்பெட்டியில் அவர்கள் காட்டிய சடலத்தைப் பார்த்து முகம் மாறியிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்கு இறந்து 3 நாட்களாகிவிட்டதால் முகம் மாறி விட்டதாகக் கூறியுள்ளனர். ஆடை மாறியிருந்தது பற்றிக் கேட்டபோது, மிகவும் அழுக்கானதால் மற்றவர்கள் ஆடை கொடுத்திருப்பார்கள் என்று கூறியுள்ளனர். அதை அவர் நம்பிவிட்டார்.'' என்றார் வைதேகி.
சாலையில் விழுந்து கிடந்து, ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட மருதமுத்து, ஓரளவு உடல் நலம் பெற்றதும் அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பாமல் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்துள்ளார்.
அவரிடம் மொபைல் போன் எதுவும் இல்லாததால் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அவருடைய மகன்களின் குடும்பத்தினர் தேடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மருதமுத்துவிடம் பேசுவதற்கு முயன்றும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவருடைய மகன் காளிதாஸ், ''கடுமையான மன உளைச்சலில் இருப்பதால் எதுவும் பேச விரும்பவில்லை.'' என்று தெரிவித்தார்.
உடல் எரிக்கப்பட்டிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்?
பட மூலாதாரம்,Getty Images
காளிதாஸ், தேங்காய் உரிக்கும் விவசாயக் கூலியாக வேலை பார்த்து வரும் நிலையில், தந்தையின் இறுதிச் சடங்கு செய்வதற்காக பல ஆயிரம் வரை செலவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார் அவருடைய மனைவி வைதேகி.
இறந்தது மருதமுத்து இல்லை என்று தெரிந்ததும் காவல்துறையில் தகவல் தெரிவித்து, அந்த சடலத்தை கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோட்டூர் காவல் ஆய்வாளர் ஜெகதீசன், ''இதில் காவல்துறையின் தவறு என்று எதுவுமில்லை. பெற்ற மகன்களே இது எங்கள் தந்தையின் உடல் என்று சொன்னதால்தான் அந்த உடலைப் பெறுவதற்கான காவல்துறையின் சட்டப்பூர்வமான ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்தோம். அது அவர்களின் தந்தை இல்லை என்று தெரிந்ததும், அடையாளம் தெரியாத சடலம் என்று பதிவு செய்து மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டோம்.'' என்றார்.
மருதமுத்துவின் சடலம் என்று நினைத்து அவர்கள் பெற்றுவந்த சடலம், கோவை அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நபர் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது அது அவருடைய சடலம் இல்லை என்று தெரிந்தபின்பு அடையாளம் தெரியாத நபரின் உடல் என்று கோட்டூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் மணிவண்ணன், ''அந்த உடல் மார்ச் 9 அன்று இரவு 7 மணிக்கு மேல்தான் அடையாளம் தெரியாத நபரின் சடலம் என்று குறிப்பிடப்பட்டு, கோட்டூர் காவல் நிலையத்திலிருந்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. உடற்கூறு ஆய்வு இன்று நடந்துள்ளது. இதுபோன்ற அடையாளம் தெரியாத நபரின் சடலங்களை ஒரு வாரம் அல்லது 2 வாரம் வரை பாதுகாத்து வைப்போம். அதன்பின் உடற்கூறு ஆய்வு செய்துவிட்டு, காவல்துறையிடம் ஒப்படைத்துவிடுவோம்.'' என்றார்.
இறுதிச்சடங்கு செய்யப்பட்டவரின் சடலம் யாருடையது என்பது இப்போது வரை கண்டறியப்படவில்லை. அது தெருவோரத்தில் வசிக்கும் யாசகர் ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறினர்.
ஒரு வேளை மருதமுத்துவின் சடலம் என்று அதை நினைத்து, அவருடைய குடும்பத்தினர் அதை எரித்திருந்தால் இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய காவல் ஆய்வாளர் ஜெகதீசன், ''நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படி ஒரு வேளை நடந்திருந்தால், சட்டப்பூர்வமான ஆலோசனை பெற்று அதன்படி காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். உருவ ஒற்றுமையின் காரணமாக இப்படி ஒரு குழப்பம் நடந்துள்ளதே தவிர, வேறொருவரின் சடலத்தைப் பெற்றுவந்து இறுதிச்சடங்கு செய்ததில், அவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதால் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை.'' என்றார்.
https://www.bbc.com/tamil/articles/cpv83e04gxgo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.