Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்கை நோக்கும் விட்டுக்கொடுப்பும் கூட்டுச்சேர்வும் வெற்றிக்கான அடிப்படைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை நோக்கும் விட்டுக்கொடுப்பும் கூட்டுச்சேர்வும் வெற்றிக்கான அடிப்படைகள்

தத்தர்
 

 

'நெருப்பில் பூத்த மலர்கள் வெய்யிலில் வாடுவதில்லை'. ஈழத்தமிழர் நெருப்பில் பூத்த மலர்கள். அவர்களின் தியாகங்கள் அளப்பெரியவை. இழப்புக்கள் மிகப்பெரியவை. அவர்களின் துயரங்கள் மிகப்பெரியவை. வலியும் வேதனையும் அப்படியே அளப்பெரியவை. கனவிலும் நனவிலும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்திருப்பவர்கள். உறங்காத கண்களும் ஆறாத மனமுமாய் துயர்தோய்ந்த வாழ்க்கைச் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருப்பவர்கள்.

 

ஈழத்தமிழர் அரசற்ற தேசிய இன மக்கள் மட்டுமல்ல அவர்களுக்காகக் குரல்கொடுக்க உலகில் எந்தவொரு அரசும் இல்லாத மக்களும்கூட. சர்வதேச உறவென்று ஒன்று அரசியல் அகராதியில் சொல்லப்படுகின்றதே ஆயினும், நடைமுறையில் சர்வ அரசுகளுக்கிடையேயான உறவுகள்தான் இருக்கின்றதே தவிர, தேசிய இனங்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய இனங்களிடையேயான சர்வதேச உறவென்று ஒன்றில்லை. அரசற்ற ஈழத்தமிழர்கள் சிங்கள அரசாலும் அவர்களுக்கிருக்கும் உலகளாவிய அரச உறவுகளினாலும் ஒருங்குசேர ஒடுக்கப்பட்டு வரும் மக்கள். இந்த அடிப்படை யதார்த்தத்தை கருத்திலெடுத்து ஈழத்தமிழர்கள் தமது விடுதலைக்காகத் திட்டமிடவேண்டியுள்ளது.

 

என்ன இருக்கின்றதோ அதை வைத்துக்கொண்டுதான் நாம் எதையாவது படைத்தாகவேண்டும். எனவே இருப்புநிலையை எப்பொழுதும் கருத்திலெடுக்க வேண்டும். வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதோ அங்கிருந்துதான் நாம் அடுத்தகட்ட பயணத்திற்கான அடியை எடுத்துவைக்க முடியும். 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதி கறைபடிந்த அத்தியாயத்துடன் உலகளாவிய மனிதகுல வரலாற்றை முள்ளிவாய்க்காலில் தோற்றுவித்துள்ளது.

 

ஹிரோசிமா, நாகசாக்கி ஆகிய இடங்களில் அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட பாரிய அழிவின் தன்மையை விடவும் முள்ளிவாய்க்கால் அழிவின் தன்மை மிகப்பெரியது. ஹிரோசிமா, நாகசாகியில் கொல்லப்பட்டும் பாதிப்புக்கும் உள்ளானோரின் தொகை 11இலட்சம். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் தொகை 1இலட்சத்து 40ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இங்கு பிரச்சனை கொல்லப்பட்டவர்களின் தொகையைவிடவும் இனஅழிப்பின் தன்மை மிகப்பெரியது என்பதை அடையாளம் காணவேண்டியதே ஆகும். அதாவது அணுகுண்டு வீச்சு நிகழ்ந்தபோது உலகம் அதிர்ச்சிக்குள்ளானது. அந்த இரண்டு அணுகுண்டுகளும் இரண்டாம் உலகமகா யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன. அந்த அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட பேரழிவும் அவலமும் உலக வரலாற்றில் புதியதும் பெரியதுமாகும். ஆனாலும் அந்த அழிவைமீறி வளரவல்ல ஒரு பலமான வரலாற்றுக் கருப்பை யப்பானியரிடம் இருந்தது. அழிவு நிகழ்ந்த மறுகணம் அடுத்தகட்டத்திற்கு யப்பானியர் தயாராயினர். அங்கு அழிக்கப்பட்டது உயிர்களும் பொருட்களும்தான். ஆனால் யப்பானினுடைய அரசு, நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், கலாச்சார மையங்கள், பண்பாட்டு வேர்கள் என எவையுமே அழிக்கப்படவில்லை.

 

நிலமையைச் சுதாகரித்துக்கொண்ட யப்பானியரிடம் தம்மை அடுத்தகட்டத்திற்கு தயாராக்க நிறுவனங்கள் இருந்தன, அமைப்புக்கள் இருந்தன. ஆனால் ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் முள்ளிவாய்க்காலில் மக்கள் மாத்திரம் கொல்லப்படவில்லை. கூடவே அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. அமைப்புக்கள், சங்கங்கள் என எவையுமே மிஞ்சவில்லை. அரசியல் அரங்கம் வெற்றிடமானது.

 

அந்த வெற்றிடத்தில் அழிப்பை மேற்கொண்ட எதிரியே அமர்ந்துகொண்டான். இப்போது ஈழத்தமிழர் அரசியல் வெற்றிடமாக உள்ளது என்பது மட்டுமல்ல பிரச்சனை, அந்த இடத்தை எதிரியே நிரப்பியுள்ளான் என்பதுதான் பிரச்சனை. வெற்றுவேட்டுக்களையும் கர்வங்களையும், மாயாஜால கற்பனைகளையும் கைவிட்டு நடைமுறைச் சாத்தியமான விடுதலைக்கான ஒரு பாதையைத் தேடுமாறு வரலாறு எமக்குக் கட்டளையிடுகின்றது. பழக்கப்பட்டுப்போன பழைய கற்பனைகளிலிருந்து விடுபட்டு, புதிய யதார்த்தத்தை புதிய கண்கொண்டு அணுகவேண்டும்.

 

கடந்த நூற்றாண்டைத் திரும்பிப் பார்த்தும் இந்த நூற்றாண்டை நிமிர்ந்து பார்த்தும் நாம் எமது திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும். வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்று எம்மை நாம் மறுசீரமைப்புச் செய்யவேண்டும். பரந்த மனமும், விரிந்த சிந்தனையும், ஆழமான பார்வையும் கொண்டு நடைமுறைச் சாத்தியமான திட்டமிடல்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.

 

'எதனை மாற்றமுடியுமோ அதன் மீது செயற்படு; எதனை மாற்றமுடியாதோ அதை புரிந்துநட'

 

'தக்கன பிழைக்கும் தகாதன அழியுமென' ஓர் உயிரியற் கோட்பாடு உண்டு. தம்மைச் சூழலுக்குத் தகஅமைக்கும் உயிர்களே பிழைக்கின்றன என்பது உயிரியல் யதார்த்தம். 'அரசு ஒரு ஜீவி' என்ற ஒரு கோட்பாடு உண்டு. நாம் அரசமைக்கப் புறப்பட்டிருக்கும் மக்கள். எனவே அரசு, அரசுகள் என்று காணப்படும் அவற்றுக்கான விதிகளைக் கையிலெடுக்காமல் நாம் அரசமைக்க முடியாது.

 

காலனித்துவ ஆதிக்கத்திற்கெதிராக நிகழ்ந்த தேசிய விடுதலைப் போராட்டங்களை விடவும் பல்லினங்களைக் கொண்ட ஓர் அரசில் தமது தேசிய விடுதலைக்காகப் போராடும் போராட்டம் மிகக் கடினமானது. ஆனாலும் சாத்தியமானது. இந்தக் கடினத்தையும் சாத்தியத்தையும் கருத்திற்கொண்டு அதிக சிரத்தையுடனும், மிக ஆழ்ந்த பார்வையுடனும் நாம் போராட்டத்தை வடிவமைக்க வேண்டும். இப்போது எமது தலையாய பிரச்சினை அரசியல் வெற்றிடத்தை நிரப்ப எம்மை நாம் சீரமைத்து தகவமைக்க வேண்டியதுதான். விடுதலை என்ற இறுதி இலட்சியத்தை நோக்கிய பயணத்திற்கு எம்மை நாம் அதிகம் சீரமைக்கவேண்டியுள்ளது. 1986ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில் நிகழ்ந்த கருத்தரங்கில் பின்வரும் ஒரு கருத்து உரத்து ஒலித்தது. அதாவது 'எமக்கிடையே நாங்கள் விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத் தயாரில்லை என்றால் இறுதியில் அனைவருமே எதிரிகளிடம் சரணடைய வேண்டிவரும்'. இவ்வாக்கியம் இன்றைய காலகட்டத்தில் அதிகம் நினைவுகூரத் தக்கது.

 

எமக்கிடையே நாம் சண்டையிட்டுக்கொண்டும் ஒருவர் மீது இன்னொருவர் சேற்றை வாரியிறைத்துக் கொண்டும் இருக்கின்ற குறுநில மன்னர் கலாச்சாரத்திற்குப் பதிலாக, தம் இன்னுயிரை அர்ப்பணித்திருக்கும் மக்களின் பெயரால், விடுதலை வீரர்களின் பெயரால் தமிழீழ தேசிய நலனை நாம் முன்நிறுத்த வேண்டும். எல்லோரிடமும் ஒரே மனமும் ஒரேவிதமான பார்வையும் இருக்குமென்பதை நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. எமது தேசிய இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்கவும் விடுதலைக்கான அடுத்த அடியை எடுத்துவைக்கவும், தேவையான குறைந்தபட்ச தீர்மானங்களில் நாம் ஒருங்கிணைந்து செயற்படுத்துவதற்கான மனப்பாங்கைப் பெறவேண்டும். குறைந்தது 10 வீதம் உடன்பாடு காணும் விடயத்தில் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து செயற்படத் தயாராக வேண்டும். இதுவே வளர்ச்சிக்கும் விடுதலைக்குமான முன் நிபந்தனை.

 

அமெரிக்க இராஜதந்திரிகள் பாகிஸ்தானை தமது FRIENDLY ENEMY என்றுகூறும் மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அமெரிக்கரின் அர்த்தத்தில் பாகிஸ்தானியர் அவர்களின் இறுதி எதிரிதான். அதேவேளை அது ஒரு நட்புப்போல காட்சியளிக்கும் ஒரு எதிரியாகும். இந்த வகையில் பாகிஸ்தானை அவர்கள் அடையாளம் கண்டுள்ள நிலையில் தமக்குச் சாதகமாக பாகிஸ்தானை பயன்படுத்தக்கூடிய இடங்களில் எல்லாம் பயன்படுத்துகிறார்கள். ஓர் இல்லாமிய நாடான ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில், இவ்வாறான ஒரு நாட்டின் அதுவும் ஓர் இஸ்லாமிய நாட்டின் உதவியை அமெரிக்கா பெற்றுக்கொள்ள தவறவில்லை. அதாவது பாகிஸ்தானை தன் எதிரி என்ற முடிவுடனே ஒரு காலபோக நண்பனாக பாகிஸ்தானுடன் கைகோர்த்துள்ளது.

 

அரசுகளுக்கிடையேயான உறவில் தூய்மை, கற்பு, வெளிப்படை என்று எதுவும் இருக்காது. அரச இயந்திரம் சேலை அணிவதில்லை. அதற்கு வெட்கம் என்ற ஒன்று இருப்பதில்லை. இரத்தமும் தசையுமான இத்தகைய உண்மையைக் கருத்திலெடுத்து ஒடுக்கப்பட்டும் கொண்டொழிக்கப்பட்டும் வருகின்ற செழுமைமிக்க எமது தமிழீழத் தேசிய பண்பாட்டை நாம் பாதுகாத்தும் விடுவித்தும் ஆக வேண்டும். உணர்ச்சிவசமான, சம்பிரதாய பூர்வமான, பசப்பு வார்த்தைகளைக் கடந்து அறிவுபூர்வமான நடைமுறைச் சாத்தியமான புதிய திட்டமிடலில் நாம் முழுமனம் கொண்டு செயற்படவேண்டும்.

 

இந்த நூற்றாண்டிலேயே அதிகம் ஒடுக்கப்பட்டும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டும் வரும் இனம் ஈழத்தமிழர்கள்தான். தமது இன்னுயிர்களை விடுதலை வீரர்களும், வீராங்கனைகளும் விடுதலைக்குக் காணிக்கையாக்கி உள்ளார்கள். இந்த வீரர்களினதும் வீராங்கனைகளினதும் தியாகத்தை விடவும், தமது புதல்வர்களினதும் புதல்விகளினதும், சகோதர சகோதரிகளினதும், காதலன் காதலிகளினதும் இன்னுயிர்களைக் காணிக்கையாக்கி நடைபிணங்களாய் புலம்பித்திரியும் எமது மக்களின் துயரம் மிகப்பெரியது. கூரிய இராணுவ ஒடுக்குமுறைக்கு தமது இன்னுயிர் உறவுகளையும், அங்கங்களையும் இரையாக்கி தவிக்கும் மக்களின் உணர்வுகள் எல்லாம் விடுதலைக்கான காணிக்கைகள் தான்.

 

ஒவ்வொரு உயிரையும், உயிர்களின் பெறுமானங்களையும் அவர்களின் உணர்வுகளையும் அர்ப்பணிப்புக்களையும் நினைவில் நிறுத்தி எம்மிடையே ஐக்கியத்தையும் ஒத்த குரல்களையும் ஓங்கி ஒலிக்கவேண்டும்.

 

ஐக்கியம் என்பதைக் கற்பனையில் சிந்திக்க முடியாது. சாத்தியமான ஒரு புள்ளியில் பல்வேறு சக்திகளும் கைகோர்ப்பதைத்தான் ஐக்கியம் என்போம். மனிதர்களிடையே முரண்பாடுகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் ஒரு புள்ளியில் அனைத்து முரண்பாடுகளும் இரு அணிகளாகவே பிரிகின்றன. இந்தவகையில் எதிரிக்கெதிரான ஒரு புள்ளியில் இணையக்கூடிய குறைந்தபட்ச உடன்பாட்டையே நாம் ஐக்கியம் என்கின்றோம். இதுவே மெய்யியல் கூறும் அடிப்படை உண்மையாகும்.

 

அரசியலை விஞ்ஞானபூர்வமாகப் புரிந்துகொள்ளாமல் அதிகம் கற்பனை வடிவிலான மனோரம்மியக் கனவுகளாக வடிவமைக்கக் கூடாது. யதார்த்தத்திற்குப் பொருத்தமாக எம்மைத் தகவமைக்காது விட்டால் கொடிய மிருகங்கள் வாழும் அரசியல் காட்டில் நாம் தப்பிப்பிழைக்க முடியாது. இப்போது எமது பிரச்சனை எம்மைச் சூழ்ந்துள்ள கனவுலகக் கற்பனையிலிருந்து விடுபட்டு எம்மை நாமே விடுவிப்பதும் எதிரியை வெற்றிகொள்வதற்குமான வியூகத்தை அமைப்பதுதான். மனோரம்மிய விருப்பங்களால் அரசியலை வடிவமைக்காமல் காணப்படும் சாத்தியக்கூறுகளால் அரசியலை வடிவமைக்கவேண்டும்.

 

இருப்புநிலையைச் சரியாகக் கணிப்பதைக்கொண்டே சாத்தியக்கூறுகளை அடையாளங் காணமுடியும். அதனால் இருப்புநிலையைப் பற்றிய சரியான கணிப்பீடு மிகவும் முக்கியமானது. தெரிந்ததைத் தெரிந்ததென்றும் தெரியாததைத் தெரியாது என்று சொல்வதே அறிவு. தெரியாததைத் தெரியும் என்று சொல்பவன் அறிவீனன் மட்டுமல்ல, அவன் அறிவின் எதிரியுங்கூட. எமது எதிரியாகிய சிங்கள அரசு இராஜதந்திரத்தில் கைதேர்ந்த அறிவைக் கொண்டது. சிங்களவரை 'மோட்டுச் சிங்களவர்' என்று கூறும் மிகப் பிழையான கணிப்பீடும் பொய்யறிவும் எமக்குப் பாதகமானவை. அரசியல் இராஜதந்திரத்தில் நாம் அதிகம் முன்னேறவேண்டியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாய் அரசற்று வாழும் ஒரு தேசிய இன மக்களென்ற வகையில் தொழில்முறைசார் இராஜதந்திர பேச்சுக்கான வாய்ப்பு எமக்கு மிகவும் அரிதானது. ஆனால் மிகச்சிறிய 1 1/4 நூற்றாண்டுக்கான இடைவெளியைத்தவிர மூவாயிரம் கால தொடர்ச்சியான அரசநிறுவன இராஜதந்திர பாரம்பரியத்தை சிங்கள இனத்தவர்கள் கொண்டுள்ளார்கள். ஆதலால் இராஜதந்திர மெருகுக்கான வாய்ப்பினை அவர்கள் அதிகம் கொண்டுள்ளார்கள். இவ்விடயத்தில் நாம் மிகவிரைவான இடைநிரப்பலை செய்தாகவேண்டியுள்ளது.

 

வரலாறு இரத்தமும் சதையுமாக மிகப்பெரும் சுமையை எமது தலைகளிலும் தோள்களிலுமே ஏற்றியுள்ளது. அதனை ஒரு வரலாற்றுக் கட்டாயமாக ஏற்று முன்னறிவுடனும் பொறுப்புணர்வுடனும் செழிப்பான தமிழ்தேசிய இனத்தினைப் பாதுகாக்கவேண்டிய தலையாய கடமையுணர்வுடன் நாம் செயற்படவேண்டிய காலத்தின் கட்டாயம் எம்முன் விரிந்துள்ளது.

 

எல்லாவற்றையும் நாம் நவீன கண்கொண்டும் உள்ளார்ந்த செயல்பூர்வ அர்த்தத்திலும் பார்வையிட வேண்டும். அரசியல் என்பது ஒரு சமூகநடத்தை, சமூகநடத்தையைப் பரிசீலிப்பதற்கான ஆய்வுகூடம் வரலாறு ஆகும். எனவே வரலாற்று ஆய்வுகூடத்தில் நாம் விருப்புவெறுப்புகளை கடந்து அரசியல் நடவடிக்கைகளை பரிசீலித்தும் பரிசோதித்துமாக வேண்டும்.

 

அமெரிக்க இரட்டைக்கோபுரங்கள் மீது ஒசாமா பின்லாடன் மேற்கொண்ட இராணுவத் தாக்குதலை சரியான முறையில் பரிசீலிப்போம். இதில் ஒரு புதிய கண்ணோட்டமும் சரியான பார்வையும் எமக்கு முக்கியம். ஒரு செயல் எவ்வளவு வசீகரமாக இருக்கின்றது என்பதல்ல முக்கியம். அச்செயல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதே முக்கியம். பின்லாடனின் மேற்படி தாக்குதல் இராணுவ அர்த்தத்தில் மிகவும் வசீகரமானது. வரலாறு முன்னெப்பொழுதும் கண்டிராத ஒரு வினோதமான மிகவெற்றிகரமான இராணுவத் தாக்குதல் அது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதன் விளைவு இஸ்லாமிய உலகின் அனைத்துவகை போராட்டங்களையும் அடியோடு ஒடுக்க உதவியது மட்டுமல்லாமல், உலகின் நாலாபுறங்களிலும் காணப்பட்ட விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கவும் அது ஏதுவாய் அமைந்தது.

 

ஒரு செயல் எவ்வளவு நல்லெண்ணத்துடன் செயற்படுகிறது என்பதல்ல முக்கியம். அது ஒரு சரியான இலக்கைநோக்கி எப்படி நடத்தப்படுகின்றது என்பதே முக்கியம். உதாரணமாக உதைபந்தாட்டப் போட்டியில் இருஅணிகள் ஈடுபடும்போது எதிரணி கோல் போடுவதை தவிர்க்கவேண்டும் என்கின்ற நல்நோக்கத்திற்காக ஒருவர் அடிக்கும் பந்தானது தவறுதலாக SAME SIDE GOAL ஆக அமையுமிடத்து அந்த கோல் எதிரிக்குரியதாகி, அந்தக்கோலை அடித்தவர் எதிரியின் நண்பராகிவிடுவர். இங்கு அவர் நல்நோக்கம் கொண்டவர் என்பதல்ல பிரச்சனை. செயல்பூர்வ அர்த்தத்தில் எதிரிக்கு கோல் அடித்துக் கொடுத்த எதிரியின் நண்பராகி விடுகிறார். அதனால் ஒருவருடைய செயல் இறுதி அர்த்தத்தில் யாருக்கு சேவை செய்கின்றது என்பதிலிருந்தே அவர் யாருக்கு நண்பர், யாருக்கு எதிரி என்பது தெரியவரும்.

 

பலவேளைகளில் எம்முடன் நின்றவர்களே எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து நிற்பதே ஒருவகையாக எதிரிக்கு சேவைசெய்யும் அதேவேளை, நாம் எமக்கிடையே ஒருவர்மீது ஒருவர் சேற்றை அள்ளி வாரி வீசுவது எதிரிக்கான இன்னொருவகை சேவையாகவும் அமைந்துவிடும். ஆதலால் நாம் ஒரு தெளிவான பார்வையை கொண்டிருக்கவேண்டும். எமது நோக்கம் எமது செயல் இவைகள் தரவல்ல விளைவுகள் என்பனபற்றிய துல்லியமான பார்வையையும் எமது மக்களின் நல்வாழ்விற்கான செழிப்பான மனப்பான்மையையும் முதலில் நாம் அதிகம் வளர்த்தெடுத்தாக வேண்டும்.

 

1981ஆம் ஆண்டு சனத்தொகை புள்ளிவிபரத்தின் அடிப்படையைப் பார்த்தால் இயல்பான வளர்ச்சிப்படி இன்று ஈழத்தமிழரின் சனத்தொகை சுமாராக அரைக்கோடியை அண்டியிருத்தல் வேண்டும். ஆனால் தற்போது இத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரே தமிழீழ மண்ணில் உள்ளனர். அதேவேளை தமிழ் மண்ணில் சிங்கள சனத்தொகை வேகமாக வளர்ந்து வருவதுடன் கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் சிங்கள சனத்தொகை மூன்றில் ஒன்றாக காணப்படுகின்றது.

 

தற்காப்பு முன்னேற்றம் இதுவே வளர்ச்சிக்கான சூத்திரம் ஆகும். எல்லாவற்றிற்கும் அப்பால் முதலில் தற்காப்பில் அதிக கவனம் செலுத்தி முன்னேற முயலவேண்டும். இலங்கைத் தீவின் 74வீத சனத்தொகையைக் கொண்ட சிங்கள இனத்தோர், அரச இயந்திர அனுசரணையுடனும் இராணுவ பொலிஸ் பலத்துடனும் உறுதியான தமிழின ஒழிப்புத் தீர்மானத்தோடும் சர்வதேச ரீதியான அரச ஆதரவுடனும் ஒருங்கிணைந்து தமிழீழ மண்ணை கபளீகரம் செய்யும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

 

ஆனால் நாம் எமக்கிடையே சண்டையிடுவதில் எம்காலத்தைக் கழிப்போமானால் எதிரி சிங்கள இனமயமாக்கலை மிகக் குறுங்காலத்தில் நிறைவேற்றிவிடுவான். இறுதியில் எவ்வளவு தூரம் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு மக்கள் கூட்டத்தின் கையிலிருக்கின்றது என்பதிலேயே அம்மக்கள் கூட்டத்தின் தலைவிதி நிர்ணயமாகும். உதாரணமாக 2ஆம் உலகமகா யுத்தத்திற்கு முன் இஸ்ரேலில் யூதர்களின் சனத்தொகை 15வீதம்தான். ஆனால் தற்போது இஸ்ரேலின் சனத்தொகையின் நிலப்பரப்பும் 75வீதம் யூதர்களுடையதாகவுள்ளது. இது ஒரு புதிய இருப்புநிலை யதார்த்தத்தை தோற்றுவித்துள்ளது. தமிழ்மண்ணின் பரப்பளவு வேகமாகக் குறுகி வருவதுடன் தமிழ்மண் துண்டாடப்பட்டும் வருகிறது. அதேவேளை இராணுவ நிர்வாக பொலிஸ் விஸ்தரிப்புக்கும் ஆதிக்கத்திற்கும் உள்ளாகும் ஒரு மண்ணென்ற வகையில் சிங்கள மயமாக்கல் அதிகம் விரிவடைய பெருவாய்ப்புண்டு. இவற்றையெல்லம் கருத்தில்கொண்டு நாம் எமக்கிடையே அதிகம் ஐக்கியப்பட்டு தற்காத்து முன்னேற வேண்டும்.

 

நாம் அதிகம் உலகின் கவனத்தைப் பெற்ற ஒரு மக்கள் கூட்டமாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம் புவியியல் ரீதியான அமைவிட கேந்திர முக்கியத்துவமாகும். இக்கேந்திர முக்கியத்துவத்தின் காரணமாகவும் இக்கேந்திர முக்கியத்துவத்தில் கண்வைக்கும் சர்வதேச அரசுகளின் துணைகொண்டும் சிங்கள அரசு எம்மை மிகமோசமாக ஒடுக்கிவருகின்றது. இந்தவகையில் கேந்திர முக்கியத்துவம் ஒரு பாதகமான பாத்திரத்தை வகிக்கின்றது. அதேவேளை இதனைச் சாதகமாக மாற்றக்கூடிய வாய்ப்பும் எமக்குண்டு. ஆதலால் இக்கேந்திர முக்கியத்துவத்தைச் சரிவரப் புரிந்து எப்படிக் கையாள்கின்றோம் என்பதில் இருந்தே, அதற்கான சாதகநிலை தங்கியுள்ளது. இதனைத் சாதகமாகக் கையாள்வதற்கேற்ற வாய்ப்புக்கள் தற்போது முற்றிலும் நிலவுகின்றன. ஆதலால் சாதகமான சாத்தியக்கூறுகளை சரிவர ஒருங்கிணைத்து எமது இலட்சியத்தை ஈட்ட நாம் பாடுபடவேண்டும்.

 

தமிழீழ இலட்சியம் என்பது ஒரு நேர்கோட்டுப் பயணமல்ல. அது வளைவும் நெளிவும் சந்தும் பொந்தும் நிறைந்த ஒரு பாதை. இதனை சரிவர அடையாளம் கண்டு சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் எமக்குண்டு.

 

முதலில் எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் அதேவேளை மூக்குப்போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டுமென்று மூக்கை அறுத்துக் கொள்ளாமலும் எம்மிடையே குடும்பிபிடி சண்டை போட்டுக்கொள்ளாமலும் இருப்பதற்கான ஒரு மனப்பாங்கை முதலில் நாம் பெற்றாகவேண்டும். சரியையும் பிழையையும், வெற்றியையும் தோல்வியையும் சீர்தூக்கி ஆராயும் மனப்பான்மை வேண்டும். எவ்வளவு தூரம் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கிறோம் என்பதைக் கண்டுகொள்ளாமல் வெற்றியின் உச்சியை எட்டமுடியாது. ஆதலால் எம்மைப் பற்றிய சரியான கணிப்பீடும் யதார்த்தத்தைப் பற்றிய சரியான கணிப்பீடும் எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பீடும் இவற்றை மதிப்பிடுவதற்கான பரந்த மனப்பாங்கும் எமக்கு அவசியம்.

 

குறுவட்டப் போட்டி மனப்பான்மையிலிருந்து விடுபட்டு பரந்துபட்ட மக்களின் நீடித்து நிலைக்கவல்ல வாழ்விற்கான பரந்த மனப்பாங்கும் சிந்தனையும் எமக்கு வேண்டும். இப்போது எமக்குத் தேவைப்படுவது புதிய சிந்தனைக்கான, புதிய அணுகுமுறைக்கான புதிய மனப்பான்மை. இதனை அடிப்படையாகக் கொண்டு 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய உலகை நாம் எதிர்கொள்வோம்.

 

எமது விடுதலைக்கு எம்மிடையே சமாதானமும் ஐக்கியமும் முக்கியம். 21ஆம் நூற்றாண்டில் அரசநிறுவனங்களினதும் அரசஉறவுகளிற்கான போக்கும் எப்படி அமையப்போகின்றது என்பது பற்றிய துல்லியமான கணிப்பீடு அவசியம். அரசுகளிற்கான உறவுப் போக்கிலிருந்து எம்மை நாம் பிரித்து நோக்கிட முடியாது. அவற்றிற்கு அன்னியப்பட்டும் நாம் வாழவும் முடியாது. ஆதலால் இந்த உலக அரசுகளிற்கிடையேயான உறவுப் போக்கில் எமக்கு இருக்கவல்ல ஒரு சாதகமான இடத்தை அடையாளங்கண்டு அதில் எம்மை தகவமைத்து நாம் முன்னேற வேண்டும்.

 

தனித்தொரு இனமோ, தேசமோ, அரசோ இந்த பூமியில் வாழமுடியாது. இனம், தேசம், அரசு என்பன எல்லாமே ஒரு விதிக்குட்பட்டு செயற்படுகின்றன. அமெரிக்கா என்பது உலகில் மிகப் பலம்வாய்ந்த பெரிய அரசாகும். ஆனால் ஈராக்கிற்கு எதிரான தனது யுத்தத்தில் அமெரிக்கா தனித்துநின்று போராடவில்லை. தன்னுடன் 42 நாடுகளைக் கூட்டிணைத்தே நேட்டோ எனும் பலநாடுகள் சார்ந்த இராணுவ அணியுடன் அது தரை இறங்கியது. எனவே ஒரு பெரிய அமெரிக்க அரசாங்கத்தால் தனித்துநின்று போராட முடியவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இது வரலாறு போதிக்கும் சிறந்த பாடமாகும்.

 

சிங்கள அரசு தனித்துநின்று முள்ளிவாய்க்காலில் யுத்தம் புரியவில்லை. அதில் காணப்பட்ட சர்வதேச அரசியல் உறவு யதார்த்தத்தைக் கையாண்டு நேரடியாக 20 நாடுகளுக்கு மேற்பட்ட இராணுவ உதவியுடன் ஈழத்தமிழின அழிப்பில் ஈடுபட்டது. ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான நாடுகளைக்கூட இராஜபக்ச தனது புள்ளியில் ஒன்றாக இணைத்துச் செயற்படுத்தியுள்ளார். எதிரி தனக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச வாய்ப்புக்களையும் சாத்தியக்கூறுகளையும் தவற விடவில்லை.

 

ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்துவதிலும், தனக்குச் சாதகமான உள்நாட்டு வெளிநாட்டு காரணிகளை ஐக்கியப்படுத்துவதிலும் எதிரிபெற்ற வெற்றியே எமக்கான முள்ளிவாய்க்கால் தோல்வியாகும். எதிரி எப்பொழுதும் நடைமுறை சார்ந்தவர். மாயாஜாலக் கற்பனைகளில் மிதக்கவில்லை. 'இராஜபக்ச ஒரு யதார்த்தவாதி' என்று சொல்லப்படும் கருத்தில் உண்மையுண்டு. அவர் யதார்த்தத்தில் சாத்தியமான அனைத்தையும் கையாள்வதில் தொடர்ந்தும் வெற்றியீட்டி வருகின்றார்.

 

தமது உடனடி எதிரிகளுக்கெதிராக இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட எதிரிகளை யதார்த்தபூர்வமாக கையாள்வதில் இராஜபக்ச வெற்றிபெற்று வருகிறார். உதாரணமாக தனது இனத்துக்குள் காணப்பட்ட 2ஆம் கட்ட எதிரியான மங்கள சமரவீரவைத் தமது உடனடி நண்பனாகப் பயன்படுத்தியதியதும், 3ஆம் கட்ட எதிரியான JVPயை அப்படியே உடனடி நண்பனாகப் பயன்படுத்தியதும் பின்பு தேவை முடிந்ததும் அவர்களை தூக்கி எறிந்ததும் போன்றன முழுநீள அணுகுமுறையை நாம் காணலாம். அவர் மங்கள சமரவீரவையும் JVPயையும் தனது சட்டைப் பைகளுக்குள் வைத்திருந்த போதிலும் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களைக் கையாளவேண்டிய தேவை முடிந்ததும் தூக்கி வீசினார். இது ஒரு யதார்த்தவாதிக்குரிய அணுகுமுறைதான். அரசியல் என்பது எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலுமல்ல யதார்த்தத்திலேயே தங்கியுள்ளது. எவன் யதார்த்தத்தை முன்நிறுத்துகிறானோ அவனே வெல்லுகிறான். எவன் யதார்த்தமெனும் ஒரு புள்ளியில் தனது நாளைய எதிரியையும் இன்றைய நண்பனாக்கிக் கொள்கிறானோ அவனே வெற்றிவீரனாகிறான்.

 

1917ஆம் ஆண்டு அரங்கேறிய அக்டோபர் புரட்சியின் போது, லெனின் 21 கட்சிகளுடன் கூட்டிணைந்தே அதில் வெற்றியீட்டினார். ஆனால் புரட்சி வென்ற பின்பு படிப்படியாக ஒரு பொல்சிவிக் கட்சியே தனியிடம் வகித்தது. கூட்டுச்சேர்தலும் முன்னேறலும் ஒரு நாணயத்தின் தவிர்க்கமுடியாத இருபக்கங்கள். எவ்வளவுக்கெவ்வளவு எம்மை நாம் குறுக்குகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு தோல்வியைச் சந்திப்போம். எவ்வளவுக்கெவ்வளவு விசாலமாக்குகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு வெற்றிகளைச் சம்பாதிப்போம்.

 

12.01.2013

 

தமிழரின் 1948 ஆண்டிலிருந்து வந்த சரித்திரத்தை இந்த ஆசிரியர் படித்திருக்காவிட்டால் பரவாயில்லை, கணவனும் மனைவியுமாக சுதந்திரக்கட்சிக்கு உழைத்த சிராணி குடும்பத்தை,  சரத் என் சில்வாவை  அறியாத ஆசிரியராக இவர் இருப்பது வருந்தத்தக்கது. பொசேக்கா என்ற நெருப்பில் பிறந்த  விட்டில் பூச்சியை,பாவம் இந்த ஆசிரியர் தெரிந்திருக்க வில்லை. பாவம் பொன்சேக்கா அது நெருப்பு மீது கொண்ட காதலால், நெருப்பை தேடிச்சென்று நெருப்பிலே விழுந்து நெருப்பிலேயே எரிந்துபோய்விட்டது.

 

யப்பானும், ஒசாமாபின் லேடனும் ஜனநாயக சக்திகளை தாக்கி தோல்வி கண்டார்களே ஒழிய யப்பானையும், ஒசாமாபின் லேடனையும் ஜனநாயக சக்திகள் தாக்க ஆரம்பிக்கவில்லை. இரண்டில் ஒன்றும் தமது  சுதந்தி்த்திற்காக போராடிவர்கள் அல்ல. இரண்டு சக்திகளையும் அழிக்க உலகம் ஒன்று கூடியதை தமிழரை அழிக்க உலகம் ஒன்று கூடியதுடன் ஒப்பிட முடியாது.

 

கிட்லரினது பெரிய ராஜதந்திரமாக வருணிக்கப்பட்ட ஆரம்ப நாடு பிடிப்புகள் அவருக்கு முடிவு வரும் பொது பெரிய ராஜ தந்திரமானதாக சரித்திர ஆசிரியர்களால் வருணிக்கப்படவில்லை. மோடையாகளின் வெற்றியை ஆசிரியர் மோடையாக்களிடம் பணம் வாங்கிவிட்டு பெரித்துபடுத்த முயல்கிறார். ஸ்ரலினின் தான் தோன்றித்தனத்தால் சோவியத் யூனியன் பின்னாளில் தானாக உடைந்து போனது. இதை பண்டாரநாயக்கா, J.R. மகிந்தவும் ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்து செய்தால் அது மோடயாத்தனம் இல்லை என்றாகிவிடாது. மோடயாக்கள் பணடாரநாயக்காவும், J.R. ம் ஏறிந்த பூமராங் அவர்களிடமே திரும்பி வந்தது மாதிரியே  மகிந்தாவினதும் அவரின் தலையை வந்து கொய்யும். மகிந்தா தான் அழிய முன்னர் பலரை அழித்துவிட்டார் என்பதாலும், இன்னும் பலரை அழிக்க சக்தியுள்ளவராக இருக்கிறார் என்பதாலும், அவருக்கு அழிவில்லை என்று படம் காட்ட முடியாது. மேர்வின் சில்வா மாதிரி மகிந்தாவின் காலில் விழுந்தும், ருக்கமன் பிரேமசந்திராவால் தனது தலையை காப்பாற்ற முடியவில்லை.   எத்தனையோ முறை ருக்மன் மகிந்தாவை கெஞ்சியும், சேவை முடிந்தவுடன் கதிர்காமர் போலவே போய் சேர்ந்துவிட்டார். இந்திய கதையேதான்.  இந்தியாவுக்கும் மகிந்ததா இதையேதான் காட்டினார்.

 

அடிக்கிற கைதான் அணைக்கும் என்று வாதடி ஆசிரியர் குட்டி மானையும் தாயை அடித்து தின்ற சிங்கத்திடம் அனுப்பிவைக்கப் பார்க்கிறார்.

 

 

'நெருப்பில் பூத்த மலர்கள் வெய்யிலில் வாடுவதில்லை'.

நெருப்பில் எந்த பூவும் மலர்ந்ததில்லை. அது யதார்த்தமில்லை. ஆசிரியர் ஏமாத்து, உசுப்பேத்தல், பிழையான கதையை சொல்லி பிழையான கரையில் செல்ல தமிழ் மக்களை உசுப்பேத்தினால் அந்த யதார்ர்தமில்லாத கதையை யாரும் நம்ப மாட்டர்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.