Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட்

 

 

ஒழுங்கை கிரிக்கட் தெரியுமா? பன்னிரண்டு அடி அகலம் தான். பண்டா செல்வா ஒப்பந்தம் முடிந்து மூன்றாம் நாள் போட்ட தார் அத்தனையும் எடுபட்டு போய் சல்லிக்கல்லும் குண்டும் குழியும் மட்டுமே எஞ்சி இருக்கும். இரண்டு புறமும் மதில் சுவர். வெடித்துப்போய், கவனமில்லாமல் ஏறினால் சரிந்துவிழுந்துவிடும். ஒரு பக்கம் யாராவது ஹிட்லர் குடும்பம் இருக்கும். இன்னொரு வீட்டில் அந்த ஏரியாவின் தேவதை, “என் வீட்டு தோட்டத்தில்” பாட்டுக்கு கனவில் உங்களோடு சேர்ந்து டூயட் ஆடும் மதுபாலா! “ம்ஹூஹூம் அனுபவமோ” என்று நிச்சயம் இரண்டு நாளுக்கு ஒருவாட்டியாவது கனவில் வந்து செல்லமாக சிணுங்கியிருப்பாள்! வடிவான பெட்டை! அவளை ரூட்டு போட ஒன்றிரண்டு ஏஎல் அண்ணாமார் அந்த ஏரியாவில் ஸீப்ளேன் விடுவார்கள்! சந்தேகப்படாமல் சைட் அடிப்பதற்கு ஒரே வழி கிரிக்கட் தான். ஏரியாவில் இருக்கும் சின்ன பெடியளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒழுங்கையிலேயே கிரிக்கட் ஆட்டம். அவ்வப்போது சைட். அடிக்கடி அவள் வீட்டு கூரையில் சிக்ஸர்கள் பறக்க, அங்கிள் என்று சொல்லி கேட்டை தட்டி, மூன்றாம் நாள் பந்து போனால் மதுபாலாவின் அப்பர் ஒளித்துவைத்துவிடுவார். திட்டி அனுப்புவார். இப்படி தொலைந்த பந்துகளின் கணக்கே ஒரு தொகை வரும்!  

47593835_thumb%25255B1%25255D.jpg?imgmax

ஆட்டத்துக்கு என்று ஒன்றும் பெரிதாக செலவழிக்க தேவையில்லை. நல்ல காய்ந்த தென்னை மட்டையை அரிந்து “பட்” சரிக்கட்டி கொள்ளலாம். டெனிஸ் பந்து என்பதால் பிட்ச்சும் பெரும் சிக்கல் இல்லை. ஆனால் பந்து சல்லிக்கல்லில் பட்டு அங்கேயும் இங்கேயும் எகிறும். அதனால் பந்து வீசுபவன், தான் வசீம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்விங் பண்ணுவதாக நினைத்துக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதனால் நல்ல மொங்கான் எடுத்து பட்டிங் கிரீஸை சமப்படுத்தவேண்டும். விக்கட்டுக்கு பை வைத்தால் போதுமானது. பை என்றால் வேறு ஒன்றுமில்லை, இரண்டடி இடைவெளியில் செருப்பையோ, அல்லது கல்லையோ வைத்தால் அது பை! அதற்குள்ளால் பந்து போனால் ஆள் அவுட்.  அதிகம் உயரமாக போனாலோ, இல்லை புல்லாக விழுந்தாலோ, அல்லது காலில் பட்டாலோ அவுட் தரமாட்டார்கள். பட் பண்ணுபவன் அதிக வயதுக்காரன் என்றால் அவனாக விரும்பி அவுட் தந்தாலே ஒழிய வேறு எந்த வகையிலும் அவுட் கிடைக்காது. நடுவாலே உருண்டு போனாலும் அவுட் தராமல் அலாப்புவான்! ஏன் மூன்று தடி நட்டு முறையான விக்கட்டில் விளையாட முடியாதா? என்று கேட்பீர்கள். நட்டுப்பார்த்தவனுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். கீப்பராக நிற்கும் நாதாறி தன்னை சுரேஷாகவோ, பீஷ்மனாகவோ சில சமயம் நினைத்துக்கொண்டு ஸ்டம்ப் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு முறையும் விக்கட்டை தட்டி விழுத்துவான். அதற்கு பிறகு எவ்வளவு தண்ணி ஊற்றி தடியை ஊன்றினாலும் பந்துவீசும்போது அது ஒரு பக்கம் சரிந்துவிடும். சில சமயங்களில் பந்து விழமுன்னமேயே கீப்பர் விக்கட்டை தட்டி அலாப்புவதும் உண்டு. இப்படி பல சிக்கல்களை கடந்து தான் ஒழுங்கை கிரிக்கட் விளையாடவேண்டும்!

 

டேக் கட்ச் அவுட் என்று ஒரு ரூல் இருக்கிறது. அதாவது அடித்த பந்து எங்காவது மாமரத்திலோ, தென்னை வட்டிலோ, அல்லது வீட்டுக்கூரையிலோ போய் விழுந்து, பின் உருண்டு வரும்போது பிடித்தால் அது அவுட். இன்னுமொரு ரூல் லாஸ்ட் மேன் ஐ சான்ஸ். அது உண்மையிலேயே “Last man Eine Chance” ஆக இருக்கவேணும். நாங்கள் ஐ சான்ஸ் என்று சொல்லுவோம். அதாவது இறுதி ஆட்டக்காரன் அவுட் ஆகுமட்டும் ஆடலாம். ரன்னர் தேவையில்லை. ஒருவரே ரன் ஓடுவார். ஆள் பற்றாக்குறையால் வந்த குளறுபடிகள் தான் இவை.

photo%252520%2525283%252529_thumb%25255B

ஒழுங்கை கிரிக்கட்வீரர்கள் எல்லாம் ஸ்ட்ரைட்டாக அடிப்பதில் வல்லவர்கள். எங்கள் பாஷையில் சொல்லுவதானால் “இழுத்து மெயினுக்குள் அடிப்பது”. எவ்வளவு நீளமான ஒழுங்கை என்றாலும் மெயின் ரோட் காண இழுத்து அடிக்கும் திறமை இருக்கிறது. அரைப்பிட்சில் குத்தினாலும், ஷோர்ட் ஒப் த லெந்த் போட்டாலும் ரெண்டு ஸ்டேப் எடுத்தேனும் ஸ்ட்ரைட் டிரைவ் தான். இழுத்தடிப்பதற்கு க்ளோஸ் டு த பிட்ச் வரவேண்டும், அதனால் பவுலர் என்ன தான் ஸ்விங் ட்ரை பண்ணினாலும் தலைக்கு மேலால் தென்னை ஓலை எல்லாம் தடவிக்கொண்டு நேர் ஒழுங்கையில் பந்து பறக்கும்! அதனால் தானோ என்னவோ கவாஸ்கரும் டோனி கிரேய்க்கும் ஸ்ட்ரைட் டிரைவ் பற்றி சிலாகித்தால், அட இதெல்லாம் ஒரு அடி என்று இந்த புளுகு புளுகிறாங்களே என்று நினைப்போம்!

 

பந்து. பதினைந்து ரூபாய் முதல், டின் பந்து என்றால் இருபத்தைந்து முப்பது ரூபாய் வரை கடையில் போகும். அதற்கும் சிலவேளைகளில் காசு இருக்காது. இதற்காகவே மட்ச் “கொழுவுவார்கள்”. அக்கம் பக்கத்தில் உள்ள ஒரு டீமுடன் ஒரு பந்துக்கோ, அல்லது ஒரு டின்னுக்கோ ஆட்டம் நடைபெறும். நன்றாக விளையாடக்கூடிய நண்பர்களின் காலை கையை பிடித்து அவசர அவசரமாக டீம் போட்டாலும் பதினொரு பேர் தேறுவது அரிது. அதனால் கிரிக்கட் சுட்டுப்போட்டாலும் வராத ஓரிருவரை பிடித்து கிழங்கு ரொட்டியோ, இல்லை மசாலா தோசையோ பேரம் பேசி அவர்களையும் சேர்த்து டீமை உருவாக்கி, ஒரு கணக்கு கொப்பி கடையில் வாங்கி பொலித்தீன் உறை எல்லாம் போட்டு … ஒரு “ஒழுங்கை டீம்” உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி எங்கள் ஒழுங்கையில் உருவாகிய அணி தான் “Yellow Stars” அணி. ஏன் அப்படி ஒரு பெயர் வைத்தோம் என்று இன்றைக்கு வரைக்கும் எனக்கு காரணம் தெரியாது. ஒரே ஒரு சீசனில் நான்கு ஆட்டங்கள், மூன்று “Away” ஒழுங்கைகள், ஒன்று “Home”ஒழுங்கை மட்ச். மூன்று பத்து ரூபாய் பந்தும் ஒரு வெள்ளை பந்து டின்னும் அந்த சீரிஸில் ஜெயித்திருக்கிறோம். எல்லா பந்தும் அக்கம் பக்கம் வளவுகளில் இறுதியில் தொலைந்து போனது இன்னொரு முஸ்பாத்தி.

ஆ, அக்கம் பக்கம் வளவுகள் பந்து போனால் யார் போய் எடுப்பது என்று முறை இருக்கிறது. அனேகமாக பட்ஸ்மன் தான் போவது. அவன் கொஞ்சம் செல்வாக்கான ஆள் என்றால் அடிப்பொடிகளை அனுப்புவான். பந்து மூன்று தடவைக்கு மேல் அந்த வளவுகளுக்குள் போய் விழுந்தால் அடித்தவர் அவுட். மதுபாலா வீட்டில் பந்து போய் விழுந்தால் ஆளாளுக்கு போட்டி போட்டு மதில் தாண்டுவார்கள். இதுவே ஹிட்லர் வீடென்றால் ஐஞ்சாம் வகுப்பு பெடியன் ஒருவனை ஏத்தி அனுப்புவோம்.  ஹிட்லர் இருக்கும் வீடுகளில் இருக்கும் பொதுவான விஷயம், ஹிட்லரின் மனைவி நல்லதனமாக இருப்பார்! “பெடியங்கள் எண்டால் விளையாட தானே வேணும்” என்று ஹிட்லருக்கு தெரியாமல் வளவுக்குள் விழுந்த பந்தை எடுத்து திருப்பி எறிவார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்றது இந்த மரமண்டைக்கு கம்பஸ் போகும்மட்டும் விளங்கவில்லை!

 

இன்னொரு சர்வதேச பிரச்சனை ஒழுங்கை கிரிக்கட்டில் இருக்கிறது. யாழ்ப்பணத்தில் அனேகமாக, பின் வளவுகளில் கக்கூசை தனியாக தான் கட்டுவார்கள். அதுவும் காற்று வரட்டும் என்று யன்னல் ஓட்டையை வேறு பெரிதாக வைப்பார்கள். எங்கள் கஷ்டகாலம், நாங்கள் அடிப்பது நேரே அந்த யன்னல் ஓட்டையால் உள்ளே போய் விழும். உள்ளே ஆள் இருந்தால், அதுவும் பொம்பிளையாக இருந்தால் கதை கம்மாஸ். வேணுமென்று தான் அடித்தோம் என்று பிரச்சனையாகும். ஆளே இல்லாவிட்டால் கூட பிரச்சனை தான். கக்கூஸ் பவுள் ஓட்டைக்குள் பந்துவிழுந்துவிடும். அதை எடுப்பது யார் என்பது சர்ச்சையாகும். அநியாயத்துக்கு அத்தனை பேரும் தாங்கள் பெரிய கிளீனான ஆட்கள் போல பிகு பண்ணுவாங்கள். பின் சொப்பிங் பாக் எடுத்து பந்தை பிடித்து லைவ்போய் போட்டு கழுவி.. அதை ஏன் கேட்கிறீர்கள். பந்து எங்காவது கிணற்றுக்குள் விழுந்தாலும் இந்த பிரச்சனை தான். வாளியை துலாவி துலாவி லபக் என்று பிடிக்கவேண்டும். இப்படி பல நடைமுறை நாளாந்த பிரச்சனைகளை கடந்து தான் ஒழுங்கை கிரிக்கட் விளையாட வேண்டும்.

 

பன்னிரண்டு வயதில் கௌரிபாகன் Under 15 விளையாடியது talk of the town ஆனது. ஒரே நாளில் கௌரி பாடசாலையின் ஹீரோ ஆனான். ஏற்கனவே அவன் அண்ணன்களான பீஷ்மன் மற்றும் அரவிந்தன் இருவருமே பிரபல வீரர்கள். ஆனால் இவன் ஆறாம் வகுப்பிலேயே அணியில் நுழைந்து கலக்குவான் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கௌரி எங்கள் வகுப்பு என்பது நம் எல்லோருக்குமே பெருமை. சில நேரங்களில் பொறாமையும் கூட. அழகான பெண்கள் எல்லாம் அவன் பில்டர் பண்ணி முடித்த பிறகு தான் நம் செலக்ஷனுக்கும் வரும்! அதை விட சோகம் அவனுக்கும் நமக்கும் இடையில் இன்னும் பல ஹூரோக்கள் இருக்க, நம் தவணை வரும்போது தாவணி வரிசை எம்ப்டி ஆகிவிடும்…இது போதாதென்று ஒருவருடம் கழித்து 1993ம் ஆண்டு யாழ் இந்துவில் கார்த்திக் என்ற இன்னொரு ஹீரோ உருவாகிறான். அவனுக்கும் நம் வயசு தான். அவன் யாழ் இந்துவில் under 15 விளையாடி கலக்க ஆரம்பிக்க கௌரியா? கார்த்திக்கா? என்ற போட்டி டியூஷன் வகுப்புகளில் மாணவர்களிடையே அன்று தொட்டு உருவாகி, அந்த rivalry 2000ம் ஆண்டு மட்டும் தொடர்ந்தது சுவாரசியமான விஷயம்.

photo_thumb%25255B27%25255D.jpg?imgmax=8

1993ம் ஆண்டு சென்றல் சென்ஜோன்ஸ் பிக் மட்ச், பீஷ்மன் அண்ணா சென்ஜோன்சுக்கு கப்டின். காண்டீபன் யோகதாஸ் கேர்ஷன் என சீனியர் ப்ளேயர்கள் எல்லாம் இப்போது அணியில் இல்லை. ஏற்கனவே லீக்கில் ஒரு ஆட்டம் தோற்றதாகவும் ஞாபகம். ஆக பிக் மட்ச் நெருங்க நெருங்க எங்களுக்கு சின்ன பதட்டம் தொற்ற தொடங்கியது. அதேநேரம் ஆகாஷ், லட்டு என்று பழைய வீரர்கள் இன்னமும் சென்றலில் இருக்கிறார்கள். மத்திய கல்லூரி கிரிக்கட்டில் ஒரு ஆச்சர்யமான விஷயம். சீசன் பூராக பிரகாசிக்காமல் இருந்துவிட்டு பிக் மட்சில் மட்டும் ஒருத்தன் திடீரென்று விஸ்வரூபம் எடுப்பான். 1992ல் அது லட்டு என்றால், இந்த வருடம் அது சுரேஷ். மட்ச் ஓரளவுக்கு எங்கள் கொன்றோலில் இருக்கிறது என்று நினைத்த நேரத்தில் தான் சுரேஷ் ஒரு செஞ்சரியை போட, நம்ம நிலைமை மீண்டும் சோகம். இரண்டாவது இன்னிங்ஸில் எண்பத்தாறு ரன்னுக்கு எட்டு விக்கட் போய்விட்டது. முழுநேர செஷன் மிச்சம் இருக்கிறது. வெற்றி நிச்சயம் என்று மத்தியகல்லூரி ரசிகர்கள் பக்கம் விசில் பறக்க, நல்ல “தண்ணியில்” இருந்த ஒருசில சென்ஜோன்ஸ் ரசிகர்கள் “போனால் போகட்டும் போடா” பாட்டை கூட எண்ணெய் பரலில் தாளம் தட்டி பாட தொடங்கிவிட்டனர். அப்போது தான் அந்த அதிசயம் இடம்பெற்றது.

 

சஞ்சீவ், சிறிதரன் என்ற இரண்டு பேரையும் அதற்கு முதல் பெரிதாக எங்களுக்கு தெரியாது. Under 17 விளையாடியவர்கள். 8 down, 9 down ஆக வருவார்கள். இவர்களில் வேலையில்லை, சென்ஜோன்ஸ் கதை முடிந்தது, ஆக நாங்கள் எல்லாம் முக்காடு போட்டுக்கொண்டு நடையை கட்டுவோம் என்று நினைக்க, அவர்கள் இருவரும் வேறு மாதிரி நினைத்தார்கள் போல. போடும் பந்து எல்லாவற்றையும் ஒரே நொட்டு தான். கவாஸ்கர் ரவிசாஸ்திரி மஞ்சேர்கர் எல்லாம் தோற்றார்கள் என்று வையுங்களேன். ஸ்பின்னாக இருக்கட்டும், ஸ்பீடாக இருக்கட்டும். பவுன்ஸ், ஜோக்கர், எதுவென்றாலும் புளொக் தான். பசையல் என்றால் அப்படி ஒரு பசையல். “சென்ஜோன்ஸ்காரங்கள் பாய் போட்டு படுத்தாட்டங்கள்” என்று சென்றல் பக்கம் இருந்து கூச்சலோ கூச்சல். இடையிடையே இரண்டு ஓவருக்கு ஒருமுறை தண்ணீர் வரவைப்பார்கள்; நேரம் கடத்த. அம்பயர் துரத்தும் மட்டும் தண்ணீர் குடித்துக்கொண்டு இருப்பார்கள். திடீரென்று பாட் கழட்டி மாற்றுவார்கள். பட் மாற்றுவார்கள். நேரத்தை போக்காட்ட இல்லாத திகிடுத்தாளம் எல்லாம் செய்து, இறுதியில் ஆற்றாமையால் விக்கட் கீப்பர் சுரேஷ் கூட பந்து வீசிப்பார்த்து, ம்ஹூம் ஆணியே புடுங்க முடியாமல் போய்விட்டது. இறுதியில் இருவருமே ஐம்பது அடித்து மட்சை ட்ரோவில் முடிக்கும் மட்டும் நாங்கள் எவருமே இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. சுண்டு விரல் கூட அசைக்கவில்லை. இடையில் பாத்ரூம் வேறு வந்தது. நோ வே .. எங்கே அசைந்தால் விக்கட் போய்விடுமோ என்ற பயம். அப்படி ஒரு ஆட்டம் அது.

 

அந்த பருப்பு அடுத்த வருடம் வேகவில்லை! 1994ம் ஆண்டு சஞ்சீவ் அண்ணா கப்டின். சென்ஜோன்ஸ் லீக் சுற்றில் நன்றாக செய்தாலும் பிக் மட்ச்சில் கோட்டை விட்டு இலகுவாக சென்றலிடம் தோற்றுவிட்டோம். ஆனால் கௌரியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. பதினாலு வயதிலேயே பிக் மாட்ச் விளையாடினான். 8 down ஆக இறங்கி சிக்ஸர் பவுண்டரி என விளாசித்தள்ளி 39 ரன்ஸ் அடித்து தோல்வியை தள்ளிப்போட்டான்.

 

95ம் ஆண்டு கிரிக்கட் சீசன் ஒரு சமாதான சீசன். சந்திரிக்கா ஆட்சிக்கு வந்து கரிகாலன், பாலபட்டபெந்தி தலைமைகளில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருந்த நேரம். அனுருத்த ரத்வத்த பாதுகாப்பு துணை அமைச்சர், பொருளாதார தடையையும் தளர்த்திவிட, யாழ்ப்பாணம், இன்னமும் ஒன்பது மாதங்களில் இடம்பெறப்போகும் மனிதப்பேரழிவை பற்றி அறியாமல் சிரித்துக்கொண்டு இருந்த சமயம். எமக்கும் பதினைந்து வயது ஆகிறது. பதினைந்து வயதில்  கௌரி இப்போது சீனியர் ப்ளேயர், ஓபனிங் பட்ஸ்மென் அண்ட் விக்கட் கீப்பர். ஆனாலும் பிரகாசிக்கவில்லை.  நிரோஷன் அண்ணா, என் மாமாவின் மகன், அவருக்கு வெயிலில் நின்றால் ஒரு புதுவகை அலர்ஜி நோய் வந்துவிடும். பிக் மட்சுக்கு முதல் வாரம் அலர்ஜி வந்துவிட, மாமா வீட்டில் ஒரே பதட்டம். விளையாட விடுவதா? இல்லையா? ஒருவகையாக ஆட்டத்துக்கு அவர் ரெடியாக, பிக் மட்ச் முதல் இன்னிங்ஸில் 48 ரன்களில் அண்ணா ஆட்டம் இழந்தபோது முகம் தொங்கிப்போய்விட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் வட்டியும் முதலுமாக சேர்த்து அடித்து நொறுக்கி செஞ்சரி அடித்து, ஆட்டம் ட்ரோவில் முடிந்தாலும் இத்தனை ஆட்டங்களில் சென்ஜோன்சின் கை ஓங்கியிருந்த முதல் பிக் மட்ச் அது தான் என்பது முக்கியமானது.  ஆட்டநாயகனுக்கு லுமாலா சைக்கிள் எல்லாம் பரிசாக கொடுப்பதாக அறிவித்ததை நாங்கள் ஆவென்று கேட்டுக்கொண்டிருந்ததும் ஞாபகம் இருக்கிறது!

 

யாழ்ப்பாணத்தில் தீபாவளியன்று இடம்பெற்ற ஒத்துமொத்த இடப்பெயர்வோடு 1995, 1996ம் ஆண்டு விளையாட்டு செயற்பாடுகள் ஸ்தம்பித்து போய், 1997இல் மீண்டும் துளிர்விட்டது, இந்த காலப்பகுதியில் தான் கௌரி என்ற ஆட்டக்காரனின் மொத்த உருவம், யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும், குறிப்பாக கொழும்பிலும் பரவ தொடங்கியது. 1997ம் ஆண்டே பதினேழு வயசில் அவன் சென்ஜோன்ஸ் கப்டினாகிவிட்டான்.

 

அது ஒரு பாடசாலை நாள். கெமிஸ்ட்ரி கிளாஸ், பி.எஸ் சேர் வகுப்பு. ஐந்து நிமிடத்துகொருமுறை மீசையை சொறிந்துகொண்டே கேள்வி கேட்பார். கரும்பலகையில் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பார். திடீரென்று நிறுத்திவிட்டு மீசையை சொறிந்துகொண்டே திரும்பி எம்மைப்பார்த்து கேள்வி கேட்பார். எவனுமே ரியாக்ட் பண்ணாவிட்டால் மீண்டும் எழுத போய்விடுவார். சிலநேரங்களில் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று எம்மை அழவைத்து தான் மட்டும் சிரிப்பார்! டவுட்டுக்கு பேர் போன அப்பாஸ் ஏதாவது Inorganic இல் கேள்விகேட்டு குழப்பிவிட்டால் இன்னமும் வேகமாக மீசையை சொறிவார். அன்றைக்கும் சேர் அடிக்கடி மீசையை சொறிந்துகொண்டு இருந்தார். ஆனால் டென்ஷனுக்கு காரணம் கெமிஸ்ட்ரி பாடம் அல்ல.

 

அன்றைக்கு தான் under 17 semi final மட்ச். நடப்பது கொக்குவில் இந்து மைதானத்தில். கொக்குவில் இந்து ஏற்கனவே பட் பண்ணி ஆட்டமிழந்துவிட்டது. சென்ஜோன்ஸ் பட்டிங். கட கடவென்று முதலிரு விக்கட்டுகளும் விழுந்துவிட்டன. சென்ஜோன்ஸில் இருந்த தொலைபேசிக்கு எடுத்து யாரோ அவ்வப்போது ஸ்கோர் சொல்லிக்கொண்டிருக்க, பாடசாலையில் ஒருவித பதட்டம் பரவ தொடங்கியிருந்தது. கௌரி கிரீஸில் நிற்கிறான் என்ற தகவல் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை தெரியவருகிறது. பத்து, இருபது முப்பது என்று வந்துகொண்டிருந்த ஸ்கோர் திடீரென்று ஐம்பது நூறு என்று எகிறுகிறது. வகுப்பில் இருப்புக்கொள்ள முடியவில்லை. பெரும் பார்ட்னர்ஷிப் ஒன்று, கௌரி பிட்சில் இருந்து சதிராடுகிறான் என்று நியூஸ் பள்ளிக்கூடம் முழுதும். இன்டர்வலுக்கு கன்டீனிலும் இது தான் கதை. ஆனால் போய்ப்பார்க்க முடியாது. மதில் பாய்ந்து போகலாம் என்றால் அடுத்த நாள் தனபாலன் பிரின்சிபலிடம் “பின்னாலே” வாங்க வேண்டிவரும். அவர் வேறு சின்னவயதில் பெரும் பொக்ஸர் என்று எல்லோரும் கதைத்தார்கள். எங்களை விட பிஎஸ் தான் கடும் டென்ஷனில் இருந்தார். ப்ச் .. பார்க்கேலாம இருக்கே.. என்னமா அடிப்பான் தெரியுமா .. என்று பிஎஸ் தான் சின்னவயதில் பார்த்த கிரிக்கட் கதை எல்லாம் சொல்ல தொடங்க பின் வாங்கில் இருந்த நாங்கள் எல்லாம் பேனை சுண்டி ஆடுற கிரிக்கட்டை விளையாட தொடங்கியிருந்தோம்!

photo%252520%2525282%252529_thumb%25255B

அன்றைய கௌரியின் இன்னிங்ஸ், என் அறிவுக்கெட்டியவரையில் அது தான் யாழ்ப்பாண வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்க்ஸ். கொக்குவில் இந்து மைதானம் மிகச்சிறிய மைதானமாகவே இருக்கட்டும். ஆனால் ஒருத்தனால் பதினெட்டு சிக்ஸர்கள் அடிக்கமுடியுமா? yes you read it right. பதினெட்டு சிக்ஸர்கள். பதினெட்டு பவுண்டரிகள். மொத்தமாக 236 ரன்கள். ஒரே நாளில் முழங்கியிருக்கிறான்.  இத்தனைக்கும் கௌரி ஒன்றும் வெறும் slogger கிடையாது. அவன் ஒரு complete batsman. Attack, defence என்று இரண்டும் சரிவர கலந்திருக்கும், மிக வேகமான footwork கொண்ட technically correct playerம் கூட. அதுவும் front foot பயங்கர ஸ்ட்ரோங். ஹூக்கிங் கூட ஸ்ட்ரோங். நான் அறிந்து அவனுக்கு ஏதும் வீக் லிங்க் இருந்ததாக தெரியவில்லை. இருந்திருந்தாலும் எந்த பந்துவீச்சாளராலும் அதை அறியமுடியவில்லை. அவனாக ஆட்டமிழந்தாலே ஒழிய அவனை ப்ளான் பண்ணி அவுட்டாக்க முடியாது. அப்படி ஒரு ப்ளேயர் ஆடிய பெஸ்ட் இன்னிங்ஸை காணும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. ஆனால் அன்றைய ஆட்டத்தில் non-striker’s end இல் இருந்து கௌரியோடு மிக நீண்ட பார்ட்னர்ஷிப் போட்ட என்னுடைய நெருங்கிய நண்பனான தினேஷ் எபநேசர் அதை எப்படி விவரிக்கிறான் என்று பார்ப்போம்.

“It was the semi finals of the U – 17 district tournament @ Kokuvil Hindu College grounds. The ground was packed with the Kokuvil Hidu students, and we could hardly see a Johnian as it was a school day.

We lost two wickets for one run, and I joined him in the second over. The cheer was on top and the crowd was right behind our opponents. We discussed and the plan was not to lose a wicket and score about 75 together initially. The plan was executed and both rotated the strike without taking many risks. We were together on 35 each if my memory serves right. Then Gowri told me to anchor the innings and he’ll take calculated risks and consolidate the score. As a captain, he was prepared to lead from the front.

The fireworks started from then on. He reached his 50 in 3 overs from then. Each over there was a boundary scored. The opposition captain couldn’t do anything. He was clueless and mesmerized. Still we rotated the strike and I took singles and provided Gowri majority of the strike.

He reached his 100 in style with a six over extra cover. About three overs later I was bowled for 78. This included 12 boundaries. The team score was 241, where the 3
rd
 wicket partnership was 235 runs – an unbroken record still I guess.

From there on, Gowri accelerated further and hammered the bowlers all over the park. He played all the shots in the book and the spectators were thrilled. Covers, extra covers, long on, long off, mid wicket and square leg…. No one could stop him that day. He hardly put a foot wrong.

He blazed away to 200 in no time and probably a record score then, and finally dismissed for 236. He hit 18 sixes and 18 fours. This took him to the peak of his popularity I could say. When he got out and walked back to the dressing room, the whole ground stood up and applauded. This is the first time I have ever seen a school boy getting such an honour.

Further, he followed it up with the match wining 65 in the finals as we emerged champions in that season.”

இதை எழுதிய தினேஷ் பின்னாளில் சென்ஜோன்ஸ் அணிக்கு கப்டினாக இருந்து, அப்புறம் கொழும்பு பல்கலைக்கழகத்து அணிக்கும் விளையாடி, சில வெளிநாட்டு சுற்றுலா அணிகளிலும் இடம்பிடித்தவன். திறமைசாலி. பதிவு எழுதிக்கொண்டு இருக்கும்போது இவர்கள் போட்ட பார்ட்னர்ஷிப் ஞாபகம் வர, அந்த அனுபவத்தை ஷேர் பண்ணமுடியுமா என்று அவனிடம் நேற்று கேட்க, தயக்கமே இல்லாமல் உடனடியாகவே எழுதி அனுப்பினான். Thanks a lot Dinesh!

 

கௌரி இப்படி ஆடிக்கொண்டிருக்க யாழ் இந்துவின் கார்த்திக்கும் அட்டகாசமான இன்னிங்ஸ்களை ஆடிகொண்டிருந்தான். முதல் முறை யாழ் மாவட்ட அணி தெற்குக்கு விஜயம் செய்தபோது பாடசாலை அணிகளில் இருந்து கௌரியும் கார்த்திக்கும் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டார்கள். ஏனைய ஒன்பது பெரும் பிரபல அனுபவ வீரர்கள்.  ஆனால் இவர்கள் எவருக்குமே turf இல் விளையாடிய அனுபவம் இல்லை. அந்த அனுபவம் இல்லாமலேயே கௌரியும் கார்த்திக்கும் கொழும்பை ஒரு கலக்கு கலக்கினார்கள். இருவரும் ஓபனிங்காக இறங்கி ஐம்பது நூறு என்று அடித்துவிட்டு ஆட்டமிழந்தால் அப்புறம் யாழ் மாவட்ட அணி சச்சின் ஆட்டமிழந்த இந்திய அணி போல ஆகிவிடும். எல்லோருமே கடமைக்கு சைன் வைக்க போவது போல் போய்விட்டு போன வேகத்தில் ஆட்டமிழந்து திரும்புவார்கள். அப்போது தான் கௌரியும் கார்த்திக்கும் எப்படிப்பட்ட வீரர்கள் என்று மொத்த யாழ் மாவட்டத்துக்கும் புரிந்தது.

 

98 பிக் மட்சில் செகண்ட் இன்னிங்ஸில் கௌரியின் ஆட்டம், 99 பிக் மட்சில் கௌரி-பிரகாஷன் ஜோடி கலக்கிய கலக்கல், திடீரென்று கேதீஸ் அடித்த செஞ்சரி என்று இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம். “இந்த பதிவை இரண்டு பாகங்களுக்குள் சுருக்க முடியாது அண்ணே” என்றான் உதயா. உண்மை தான். எதை எடுக்க எதை விட?

photo%252520%2525281%252529_thumb%25255B

ஆனால் சிலநேரங்களில் இவர்கள் எல்லாம் பின்னாளில் என்ன ஆனார்கள் என்று நினைக்கும்போது சின்னதான அயர்ச்சி வருகிறது. கிரிக்கட் இவர்களுக்கு சோறு போடவில்லை. சின்ன டீ கூட கொடுக்கவில்லை. அது தான் யாழ்ப்பாணத்தின் நிலைமை. காண்டீபன் அண்ணா பாடசாலை முடிந்து கொஞ்சகாலமாக கிளப் அணிகள் விளையாடியவர் பின்னர் கிரிக்கட்டுக்கு மொத்தமாகவே முழுக்கு போட்டுவிட்டார். கௌரி, இப்போது முப்பத்திரண்டு வயது, அவன் லெவலுக்கு அவனுக்கென்று ஒரு அணி இருந்திருக்குமேயானால் சர்வதேச கிரிக்கட்டில் உச்சத்தில் இருக்கும் வயசு. அணிக்கு தலைமை தாங்கும் வயசு. என்ன செய்கிறான்? கிரிக்கட்டை சுத்தமாக கைவிட்டுவிட்டான். தன் படிப்பு கெட்டது கிரிக்கட்டால் என்று புலம்பியவன், இரண்டாவது தடவையில் மெடிசின் எண்டர் பண்ணி இன்றைக்கு டொக்டராக இருக்கிறான். எம்எஸ் செய்கிறான் என்றும் கேள்வி. கார்த்திக் கொஞ்சநாள் இங்கிலாந்து அணி ஒன்றில் விளையாடியவன் இப்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில். பீஷ்மன், லட்டு, சுரேஷ் அண்ணாமார் எல்லாம் “அந்த நாள் ஞாபகம்” பாடும் நிலை தான். ஏன் இப்படி என்ற ஒரு சலிப்பு வருவது இயல்பாகிறது. சில நாடுகளின் வீரர்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்கும்போது கோபம் இன்னமும் எகிறுகிறது. இது காண்டி அண்ணாவின் இடம். டூ டவுணாக வரவேண்டியவன் கௌரி, இந்த பார்ட்னர்ஷிப் போட்டிருக்கவேண்டியவர்கள் கௌரியும் கார்த்திக்கும் என்றெல்லாம் ஒவ்வொருமுறையும் சில இன்டர்நேஷனல் ஆட்டங்களை பார்க்கும் பொது எண்ணம் வருகிறது. கூடவே அடிமனதில் இருந்த கனவுகளும் எகிற, கோபம் இன்னமும் அதிகரிக்கிறது. இது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை என்று புத்தி கூறுபவர்கள், மீண்டும் இந்த இரண்டு பாகங்களையும் வாசித்துப்பாருங்கள். இது தான் எங்களின் அணிகள். இவர்கள் தான் நாங்கள் கொண்டாடிய வீரர்கள். இது தான் எங்கள் கிரிக்கட்! கிரிக்கட் ஒரு விளையாட்டாய், கிரிக்கட் ஒரு அரசியலாய் .. இதெல்லாமே தாண்டி “என் கிணறு என் கனவு எது சரியோ எது பிழையோ இதுவே நாம்” என்ற கேதாவின் கவிதை போல … இந்த கிரிக்கட் ஒரு தசாப்தத்தின் வாழ்க்கை … எங்களின் வாழ்க்கை! இதுவே நாம்!

 

2001ம் ஆண்டுக்கு பிறகு பிக் மட்ச், உள்ளூர் ஆட்டங்களில் இருந்த ஆர்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கத்தொடங்கியது. ஒருவேளை எனக்குள் இருந்த ஐஸ்பழம் வாங்கி சூப்பிக்கொண்டே யாழ் இந்து மைதான சுவரில் சாய்ந்துகொண்டு மட்ச் பார்க்கும் சிறுவன் தொலைந்து போயிருக்கலாம். அல்லது நான் பார்த்து வளர்ந்த யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்து போய், தெற்கிலிருந்து புதுவித யாழ்ப்பாணம் இறக்குமதியாகியிருப்பது காரணமாக இருக்கலாம். தெரியவில்லை. சென்ற வருடம் லீவில் ஊருக்கு சென்றபோது சென்றல்-சென்ஜோன்ஸ் under 17 ஆட்டம் ஒன்று, சிவலக்ஷன் என்று எனக்கு தெரிந்த தம்பி ஒருத்தன் “அண்ணே நானும் விளையாடுறன், டைம் இருந்தா பார்க்க வாங்க” என்றான். நானும் சந்தோஷத்தில், சிவப்பு டீஷர்ட் எல்லாம் போட்டு, ஜோனியன்ஸ் கலர்ஸ் காட்டவேண்டும் என்பதற்காக சண்கிளாசஸ் அடித்துக்கொண்டு, அந்த வெக்கைக்குள்ளும் அடிடாஸ் சப்பாத்து போட்டுக்கொண்டு, கிளம்பி போனேன். மைதானத்துக்கு போனால், ஒன்றிரண்டு ஸ்ரீலங்கா போலிஸ், தூரத்தில் பார்த்தவுடனேயே அடிவயிற்றில் ஒரு நடுக்கம், அந்தப்பக்கம் திரும்பியே பார்க்காமல் மேலே சென்றால், தூரத்தில் தக தகவென யாழ் நூலகம் என்னை பார்த்து சிரித்தது. திருத்தப்பட்ட மணிக்கூட்டு கோபுரம், சோலையாய் சுப்ரமணிய பூங்கா. அந்த வெயிலுக்கு குளிர்ச்சியை தந்திருக்கவேண்டும். எனக்கு ஏனோ எரிந்தது.

559092_10150663514008823_1534590485_n_th

மைதானத்துக்குள் எந்த அழுக்கும் இல்லாமல், ஜேர்சி அணிந்த வீரர்கள். ஒரு சில கட்டாக்காலி நாய்கள். ஆங்காங்கே விளம்பர பதாகைகள். மோட்டர்சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு வில்வ மரத்தடியில் நின்ற ஐயாவிடம் கதை குடுத்தேன். அவராவது மட்ச் பார்க்க வந்திருக்கிறாரே.

“ஐயா மட்ச் என்ன சொல்லுது? இந்த பசை பசையிறாங்கள்?”

“என்ன மயிரோ .. நான் போலிஸ் ஸ்டேஷன்ல ஒரு என்ரி போட வந்தனான் .. அறுவான் ஒஐஸி சாப்பிடப்போயிட்டான் … அதான் இதில வந்து நிண்டு நேரம் கடத்துறன்”

அதற்கு மேல் அவரோடு கதைகுடுத்தால் கந்தலாகிவிடும் என்ற பயத்தில், மைதானத்தை ஒரு ரவுண்ட் அடித்தேன். பத்து பன்னிரண்டு வயது சிறுவர்கள், எல்லோரும் சுப்பிரமணிய பூங்காவில்! இந்தப்பக்கம் மட்ச் நடக்கதக்கதாக எப்படி அவர்களால் பூங்காவுக்குள் இருந்து விளையாட முடிகிறது? மத்திய கல்லூரி மைதானத்தில் சுடுமணலின் மேல் செருப்பை வைத்து அதற்கு மேல் இருந்து மட்ச் பார்க்கும் சிறுவனை காணவில்லை. கரியரில் டியூஷன் கொப்பி இருக்க, வகுப்பை கட் பண்ணிவிட்டு நேரத்தை பதட்டத்தோடு பார்த்து பார்த்து களவாக மட்ச் பார்க்கும் சிறுவனையும் காணவில்லை. ஆட்டம் தன்பாட்டுக்கு நடக்க, மூலையில் இருக்கும் பாழடைந்த பாஸ்கட்போல் கோர்ட்டில் ஆளுக்கு இரண்டு ஓவர் என்று விளையாடும் சிப் கிழிந்த, பட்டன் உடைந்து ஹேர்பின் குத்திய காற்சட்டை சிறுவர்களையும் காணவில்லை. கறல் பிடித்த ஒரு தகரத்தை நடுவெயிலில் இருந்து தடக்கு தடக்கு என்று தட்டியபடியே கொலிஜ் கொலிஜ் என்று கத்தும் சிறுவர்களையும் ….

யாராவது கண்டுபிடித்து சொல்லுங்களேன். பிளீஸ்.

http://www.padalay.com/2012/10/2.html

இணைப்பிற்கு நன்றி நுணா ,ரசித்து படித்தேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.