Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கில மாயை

Featured Replies

angila_mayai.jpg

 

ஆங்கில மாயை, நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம், டிசம்பர் 2012, பக்கம் 160, விலை ரூ. 80 நலங்கிள்ளியின் மின்னஞ்சல் முகவரி enalankilli@gmail.com

 

 

விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. ‘தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு சரிதானா, கூடாதா?’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்?’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா?’ என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு தொடர் கட்டுரை எழுதுகிறார்.

 

அந்தக் கட்டுரைத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, மேலும் சில மாற்றங்களுடன் உருவானதே இந்தப் புத்தகம் ‘ஆங்கில மாயை’.

 

நலங்கிள்ளி பல தமிழர்களிடமும், அதுவும் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வருவோரிடமும், ஆங்கிலம் தொடர்பாக உள்ள நம்பிக்கைகளை இவ்வாறு பட்டியலிடுகிறார்:

 

தமிழ்போலன்றி, கற்றுக்கொள்ள எளிதாக 26 எழுத்துகள் மட்டுமே உள்ள மொழி.

தமிழ்போலன்றி, உலகப் பொதுமொழி.

தமிழ்போலன்றி, மனிதர்களிடம் உயர்வு, தாழ்வு கற்பிக்காத சனநாயக மொழி

தமிழ்போலன்றி, பாலியல் வேற்றுமை கற்பிக்காத பெண்ணிய மொழி

தமிழ்போல் பழமை பேசும் காட்டுமிராண்டி மொழியன்று, நவீன காலத்துக்கான அறிவியல் மொழி

தமிழ்போல் பத்தாம்பசலி மொழியன்று, மூட நம்பிக்கைகள் அற்ற பகுத்தறிவு மொழி

அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்த மொழி

 

இந்தக் கருத்துகளை எதிர்கொள்வதே புத்தகத்தின் பெரும் பகுதி. இதில் மூன்று கருத்துகளை மட்டும் விரிவாக எடுத்துக்கொண்டு தனித்தனி அத்தியாயங்களை அவற்றுக்காகச் செலவிடுகிறார். ஆங்கிலம் ஜனநாயகத் தன்மை கொண்ட மொழியா? ஆங்கிலம் பெண்ணிய மொழியா? ஆங்கிலம் அறிவியல் மொழியா?

இவை பற்றி உண்மையிலேயே நீட்டி முழக்கவேண்டுமா என்று சிந்தித்தால் இந்த விவாதம் சில நேரங்களில் அவசியமே என்று படுகிறது. ஆங்கிலம் உண்மையிலேயே ஜனநாயகத் தன்மை கொண்ட மொழி என்றால், ஆங்கிலம் பேசும் பகுதிகளில் இனவேற்றுமை சமீப காலங்கள் வரை பரவியிருந்தது ஏன் என்பதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். அந்தக் கருத்துகள் மொழியிலும் பரவியிருப்பதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அதேபோல பெண்ணடிமைக் கருத்துகளில் ஆங்கிலேயர்கள் எந்த அளவிலும் பின்தங்கி இருக்கவில்லை. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் பெண்கள் தமக்கான உரிமைகளை அந்நாடுகளில் பெற்றார்கள். இருப்பினும் பெண்ணடிமைக் காலத்தில் அக்கூறுகள் ஆங்கில மொழியில் பரவி, இன்றளவும் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.

 

இதேபோல ஆங்கிலம் பல்வேறு சொற்களை உருவாக்குவதற்கும் ரோம, கிரேக்க, நார்டிக் புராணங்களின் கட்டுக்கதைகளை நம்பியிருப்பதையும் நலங்கிள்ளி சுட்டிக் காட்டுகிறார்.

 

 

தமிழகத்தில் ஆங்கில மொழிமீதான மோகம் ஏன் ஏற்பட்டது என்பதை நலங்கிள்ளி இவ்வாறு விளக்குகிறார். மெகாலே இந்திய மொழிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலத்திலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். தொடர்ந்து...

 

உடல் உழைப்பு செய்யாது ஒடுக்குண்ட மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திவந்த பார்ப்பனர்கள் பிரித்தானிய ஆட்சியில் ஆங்கில முகமூடியை மாட்டிக்கொண்டு தங்களைப் பெரும் அறிவாளிகள்போல் காட்டிக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கு நன்கு சேவகம் செய்யத் தொடங்கினர். இந்தப் போலி முகமூடியைக் கிழித்தெறிந்து பார்ப்பனர்களின் மூடத்தனங்களை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, அதே முகமூடியைத் தமிழர்களும் அணிந்துகொள்ளவேண்டும் என ஆசைப்பட்டார் பெரியார். (பக்கம் 132)

தொடர்கிறார் நலங்கிள்ளி.

 

உழைக்கும் மக்களை ஊருக்கு வெளியே துரத்தியடிக்கும் பார்ப்பனியந்தான் அம்மக்களின் தாய்மொழியாம் தமிழையும் கல்வி நிலையங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் இருந்தும் துரத்தியடித்தது. ஆனால் மக்களின் மொழியைப் புறந்தள்ளுவதற்கு மெகாலேயும் பார்ப்பனர்களும் சொன்ன அதே காரணங்களைப் பெரியாரும் சொன்னார்.

 

1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். 2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும். 3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது. (பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)

இதில் பார்ப்பனர்களைப் பற்றியும் பார்ப்பனியம் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ள விவரணங்களை இப்போதைக்கு விட்டுவிடுவோம். தமிழர்களின் ஆங்கில மோகம் இப்படியாக வந்தது: முதலில் மெகாலே அறிமுகப்படுத்துகிறார். அடுத்து பார்ப்பான் இறுக்கிப் பிடித்துக்கொள்கிறான், பிறகு பார்ப்பானை எதிர்க்கும் பெரியாரும் அதே கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார். எனவே தமிழகம் ஆங்கில மோகம் கொள்கிறது.

பெரியாரின் மேற்படிக் கருத்துகளை நலங்கிள்ளி விவரமாக மறுக்கிறார்.

 

“ஆங்கிலந்தான் உலகத்தின் ஒரே மொழி என்று நம்பி ஆங்கிலத்தின் பின்னாலேயே தமிழர்கள் ஓடியதால்தான் தமிழர்கள் விசாலமான அறிவின்றித் தரந்தாழ்ந்து வாழ்ந்துவருகிறார்கள்” என்கிறார் நலங்கிள்ளி. (பக்கம் 137). இது முழுதான உண்மையாக எனக்குத் தெரியவில்லை. இதுவும் விவாதத்துக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒரு கூற்று.

 

மேலும், “ஆங்கிலம் ஒன்றே அறிவின் ஒளி என நம்பித் தமிழர்கள் பல பத்தாண்டுகளாய் ஓடினார்கள். நடந்தது

என்ன? இன்று உலக அறிவு எதையும் அதைப் படைத்தவர் எழுதிய மூல மொழியிலிருந்து நமக்கு நேரடியாக மொழிபெயர்த்துத் தருவதற்கு ஆளில்லை” என்கிறார் நலங்கிள்ளி. (பக்கம் 137).

ஆனால் இன்று உலக மொழிகள் பலவற்றுக்கும் இதே நிலைதான். இந்திய மொழிகள் அனைத்திலும் இதே நிலைதான். பல மொழிகளையும் மதிக்காத எல்லாச் சமுதாயங்களிலும் இந்நிலைதான் இருக்கும். எனவே இதனைத் தமிழுக்கு மட்டுமான குறையாகக் காட்ட முடியாது.

 

***

புத்தகத்தின் அடிப்படைக் கருத்து எனக்கு ஏற்புடையதே. எம்மொழிக்கும் தனியான ஏற்றம் என்பது எதுவும் இல்லை. ஒரு மொழி, அதனை உருவாக்கிய மக்களின் அன்றைய கலாசாரத்துக்கு ஏற்ப சொற்களை உருவாக்கிக்கொண்டது. அந்தச் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளும் ஒவ்வாத கருத்துகளும் இருந்தால் அது அம்மொழியில் பிரதிபலித்தது. காலப்போக்கில் அக்கருத்துகள் தவறு என்று அச்சமுதாயம் கருதும்போது, அச்சொற்களை நீக்கும், அல்லது அவற்றின் பொருளை மாற்றும்.

 

சில மொழிகளின் சில கூறுகள் கற்க எளிதாக இருக்கும், ஆனால் வேறு சில கூறுகள் கற்கக் கடினமாக இருக்கும். ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான், ஆனால் உச்சரிப்புக்கு ஏற்ப ஸ்பெல்லிங்கைச் சரியாக எழுதுவது கடினம். தமிழில் ஹிந்தி அல்லது பிற இந்திய மொழிகளில் இருப்பதுபோல அதிக எழுத்துகள் இல்லாவிட்டாலும் ஆங்கிலத்தைவிட அதிகம் (உயிர்மெய் சேர்த்து). ஆனால் ஸ்பெல்லிங் என்ற சிக்கல் இல்லை (ன-ண-ந, ர-ற தவிர்த்து). இலக்கணங்களின் நிறைய மாறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் பல தனித்தன்மைகள் உள்ளன. ஒரு மொழி நம் தாய்மொழியாக அமைந்துள்ள ஒரே காரணத்தாலேயே அந்த மொழி வளம் பெறவேண்டும் என்று நாம் உழைக்கவேண்டும். ஒரு மொழியை விடுத்து இன்னொரு மொழியைக் கற்பது எளிதல்ல. அப்படியே ஒரு சிலருக்கு அது எளிதாகிவிட்டாலும், ஒரு சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அது எளிதல்ல. இதில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தம் தாய்மொழியைக் கைவிடும் பட்சத்தில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கடும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

ஆங்கிலத்தில் உலக அறிவு அனைத்தும் வருகிறது என்றால் ஆங்கிலேயர்கள் ஆரம்பக் கட்டத்தில் உலக அறிவு அனைத்தையும் முயற்சி செய்து ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றார்கள். அதேபோலவே ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும், ரஷ்யர்களும், கொரியர்களும், சீனர்களும் செய்தார்கள். தமிழர்கள் அதனைச் செய்யாமல் எளிதாக ஆங்கிலத்துக்குத் தாவிவிடலாம் என்று நினைத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். தனிப்பட்ட முறையில் சில பல தமிழர்கள் தப்பிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் பல மொழிகளைக் கற்றுக்கொண்டுவிட முடியும். ஆனால் அனைத்துத் தமிழர்களாலும் முடியாது. ஒரு மொழியை ஒட்டுமொத்தமாகத் துடைத்துவிட்டு மற்றொரு மொழியை அந்த இடத்தில் விதிப்பது எளிதான காரியமல்ல. அப்படிப்பட்ட செயல்களால் மக்கள் இரண்டுங்கெட்டானாக அலையவேண்டியிருக்கும்.

 

இந்தப் புத்தகத்தின் குறைபாடுகளாக நான் காண்பது கீழ்க்கண்டவற்றை:

(1) பார்ப்பனியம் - பார்ப்பனர் என்பதாகப் பிரித்து, பார்ப்பனியம்தான் கொடியது, அதனை பார்ப்பனர்கள் அல்லாதோரும் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லிவிட்டு, பின்னர் பார்ப்பனியம் என்ற ஆதிக்கக் கருத்தியலை எதிர்ப்பவர்கள் சிலர். ஆனால் நலங்கிள்ளியைப் பொருத்தமட்டில் அந்த வித்தியாசமே தேவையில்லை. பார்ப்பனர்கள் நயவஞ்சகர்கள். பார்ப்பனர்கள் அடாவடி செய்பவர்கள் என்று தொடங்கி பக்கம் பக்கமாக எழுதுகிறார். அவருடைய அரசியல் கருத்தாக்கத்துக்கு இவையெல்லாம் அவசியம். இவை தொடர்பாக அவருடன் ஓர் உரையாடலை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றால் அவரிடம் நான் விவாதிப்பதாக உள்ளேன். பார்க்கலாம்.

 

(2) ஆங்கிலத்தின் உயர்ச்சி என்று பிறர் சொல்வதாகச் சில கருத்துகளை முன்வைத்து, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஆங்கில மொழியும் குப்பைதான் என்பதாக நிறையப் பக்கங்களைச் செலவழிக்கிறார். ஆனால் உண்மையில் எந்த மொழியும் அந்தக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் குறை குற்றங்களுக்குப் பொறுப்பாக முடியாது; அவர்களுடைய உயர்வுக்கும் பொறுப்பாக முடியாது. இந்தக் கருத்தை நலங்கிள்ளி வெளிப்படுத்துகிறார். என்றாலும், அவர் ஏன் இத்தனை பக்கங்கள் ஒதுக்கி ஆங்கில மொழியைக் கிண்டல் செய்யவேண்டும்?

(3) எத்தனையோ காரணங்களால் இன்று ஆங்கிலம் முன்னணி மொழியாக இருக்கிறது. தமிழ் அப்படி இல்லை. எப்படி தமிழின் நிலையை உயர்த்தி, தமிழில் கலைச் செல்வங்களைப் பல மொழிகளிலிருந்தும் கொண்டுவந்து சேர்ப்பது, அதற்கான உணர்வை தமிழ் கல்விப்புலத்தில் எப்படிக் கொண்டுவருவது என்பது பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.

 

(4) இப்போதைய ஆங்கில மோகத்துக்கான அடிப்படைக் காரணம், நடைமுறை வாழ்வியல்; ஒரு நல்ல வேலை கிடைக்க அரைகுறை ஆங்கில அறிவாவது வேண்டும் என்ற தவறான கருத்தை மக்கள் மனத்திலிருந்து எப்படிப் போக்கடிப்பது என்று எந்த விவாதமும் இல்லை. ஆங்கிலத்தைக் கீழ்மைப்படுத்தி மக்களை அதனிடமிருந்து பிரிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழில் படிப்பது எளிது, அதன்மூலம் ஆங்கிலத்தில் ஒன்றைத் தெரிந்துகொள்வதைவிட வேகமாகத் தெரிந்துகொள்ள முடியும், எனவே வேலையிலும் சிறந்து விளங்கலாம் என்பதை வெறும் வாயால் சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. அதற்கான அடிப்படைச் செயல்முறை வேலைகளில் இறங்கவேண்டும். அதற்கு அரசியல் அதிகாரம் இல்லாமல் முடியாது. அதற்கான செயல்திட்டம் பற்றி அனைவரும் யோசிக்கவேண்டும்.

 

http://www.badriseshadri.in/2013/02/blog-post_7.html

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தக் கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப்  புரியவில்லை.

  • தொடங்கியவர்

உண்மையில் இந்தக் கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப்  புரியவில்லை.

 

வாங்கிப்படித்தால் தெரிந்துவிடலாம்  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.