Jump to content

போர்னோகிராபி - மூர்க்கமாக நகரும் கைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும்

போர்னோகிராபி

மூர்க்கமாக நகரும் கைகள்

 

தேவிபாரதி

sex_illus_20121224.jpg

தலைநகர் புதுதில்லியில் சென்ற டிசம்பர் 26ஆம் தேதி பெயரற்ற பிசியோதெரப்பி மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபலமான இரண்டு இந்திய போர்னோகிராபித் தளங்கள் உடனடியாகத் தமது தளங்களை மூடப்போவதாக அறிவித்தன. அவற்றில் ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இரண்டுமே போர்னோகிராபி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானவை. தில்லிச் சம்பவத்துக்குப் போர்னோ கிராபித் தளங்களும் காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தியும் உடனடியாக அவற்றை மூடக்கோரியும் வந்திருந்த கடிதங்களில் சிலவற்றைப் பிரசுரித்திருந்த இத்தளங்கள் அந்த மருத்துவ மாணவிக்குத் தம் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தியிருந்தன. இந்த அறிவிப்புகள் வியப்பிலாழ்த்தின. மருத்துவ மாணவியின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நம்பமுடியாததாயிருந்தது. ஒருவகையில் அது நெகிழவைக்கக்கூடியதாகவும் இருந்தது. தமிழ்த் தளம் புதுப்பிப்பதை நிறுத்திக்கொண்ட போதும் பழைய பதிவுகள் அப்படியே இருக்கின்றன. ஆங்கிலத் தளம் தொடர்ந்து பதிவுகளைப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது.

கதைகள், அனுபவங்கள், பாலியல் தொடர்பான கேள்வி பதில்கள், படங்கள், காணொளிகள் அடங்கிய இந்த இரு தளங்களும் அநேகமாக நாள்தோறும் புதுப்பிக்கப்படுபவை. இரண்டுமே உறுப்பினர் சேர்க்கைக்குக் கட்டணம் வசூலிக்கின்றன. இரண்டுமே இணையத் தொழில்நுட்பத்தின் எல்லா வகையான வாய்ப்புகளையும் உச்ச அளவில் பயன்படுத்திக்கொண்டிருப்பவை. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தமிழ்த் தளம், உறுப்பினர் எண்ணிக்கை அதன் உச்ச அளவை எட்டிவிட்டதால் புதிய உறுப்பினர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தது. இத்தளங்களுக்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்புக்கும் மேல் மிக அதிகமாகவே இருக்கும் என்பது போர்னோகிராபி பற்றி அறிந்தவர்களுக்கு வியப்பூட்டக்கூடிய தகவல் அல்ல. தில்லிச் சம்பவத்திற்காக எந்த நடுத்தர, உயர் நடுத்தரவர்க்கம் கிளர்ந்தெழுந்ததோ அதே நடுத்தரவர்க்கம்தான் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் அதிக அளவில் பெற்றிருக்கிறது. மடிக்கணினிகள், உயர் தொழில்நுட்ப வதிகள் கொண்ட கைபேசிகள் வழியாக நினைத்த நேரத்தில் இணையத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள நடுத்தரவர்க்க இளைஞர்கள், மாணவர்களுக்கு மட்டுமல்ல பால், வயது வேறுபாடற்ற பலருக்கும் போர்னோகிராபியுடன் ஒரு குறைந்தபட்சப் பரிச்சயமாவது இருக்கக்கூடும். சிலருக்கு போர்னோகிராபி பாலியல் கிளர்ச்சியூட்டும் ஒரு கருவி, சிலருக்கு வடிகால், வேறு சிலருக்கு போதை. இந்தியர்களின் வாழ்வில் போர்னோகிராபி ரகசியமான கனவின் இடத்தைப் பெற்றுள்ள ஒன்று. பாலியல் பற்றிய உரையாடல்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்ட சமூகத்திற்கு அது ஒரு பயங்கரமான கனவாகவுங்கூடத் தென்படக்கூடும்.

ஓர் இந்திய மனம் போர்னோகிராபியுடன் கொண்டுள்ள உறவு ‘கள்ளக்காத’லை ஒத்தது.

நம் சமூகத்தைப் போன்ற பாலியல் சுதந்திரமற்ற ஒரு சமூகத்திற்குப் போர்னோகிராபி அத்தியாவசியமான ஒன்றாகவும் இருக்கக்கூடும். இறுக்கமான ஒழுக்க விதிகளால் கட்டமைக்கப்பட்ட பாலியல் உறவுகளில் போர்னோகிராபி ஒரு ரகசியமான குறுக்கீட்டை நிகழ்த்திவந்திருக்கிறது. தொடக்கக்கால போர்னோகிராபிப் புத்தகங்களான இந்துநேசன், சரோஜாதேவி முதல் தற்போது இணையத்தில் கிடைக்கும் நூற்றுக்கணக்கான தளங்கள் வரையிலான போர்னோகிராபி உலகத்துடன் தமிழ்ச் சமூகம் கடந்த நாற்பது ஐம்பதாண்டுகளில் கொண்டுள்ள உறவு அதன் பாலியல் முனைப்புகள், உறவுகள்மீது நுட்பமான பல மாற்றங்களை நிகழ்த்தி வந்திருப்பதை அறியலாம். இருபதாண்டுகளுக்கு முன்புவரைகூட இந்துநேசன் அல்லது சரோஜாதேவி போன்ற போர்னோகிராபிப் புத்தகத்தை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இருந்திருக்கவில்லை. அவற்றைக் குடும்ப உறுப்பினர்களின் கண்களில் படாமல் பாதுகாப்பது அதைவிடக் கடினம். அவற்றில் இடம் பெற்றிருக்கும் கதைகளைப் படிப்பது ஆழமான குற்ற உணர்வையும் ஒருவிதமான சுயஅருவருப்பையும் மூளச் செய்யும் அனுபவம். அந்தக் கதைகளுக்கும் கட்டமைக்கப்பட்ட ஒழுக்க விதிகளுக்குமிடையே பெரும் இடைவெளிகள் இருந்தன. செக்ஸ் ஒரே சமயத்தில் புனிதமாகவும் பாவமாகவும் கருதப்பட்ட ஒரு சமூகத்தில் இந்துநேசனில் இடம்பெறும் கதைகளில் வருவதுபோல அண்டை வீட்டைச் சேர்ந்த ஒரு ‘மாமி’யுடன் அல்லது மிகுகாமம் கொண்ட முதலாளியம்மாவுடன் ‘கள்ளப் புணர்ச்சி’யில் ஈடுபடுவது அவ்வளவு எளிதான காரியமுமல்ல. அவை முழுவதுமே கற்பனையாக முன்வைக்கப்பட்டன. கற்பனையாகவே வாசிக்கப்பட்டன. ஆனால் இந்துநேசனுக்கும் சரோஜாதேவிக்கும் அப்பால் போர்னோ கிராபி உலகம் விரிவடையத் தொடங்கிய பிறகு அது வெறும் கற்பனையாக நீடித்திருக்கவில்லை. அது இப்போது எதார்த்த உலகுடன் ரகசியத் தொடர்பை மிக வெற்றிகரமான முறையில் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

cartoon.jpg

 

 

 

 

இன்றைய போர்னோகிராபி அதை வடிவமைப்பவர்களால் மேலிருந்து திணிக்கப்படுவதாக மட்டும் இருக்கவில்லை. வெளியிலிருந்து பலர் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவற்றில் இடம்பெறும் கதைகளைப் பற்றிக் கருத்துரையிடுகிறார்கள். தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆசைகளை வெளியிடுகிறார்கள். பாலியல் குறித்த சந்தேகங்களுக்கு போர்னோகிராபி உலகத்தில் விடைதேடுகிறார்கள். கைபேசிகள், ரகசியக் காமிராக்கள் மூலம் தமது பாலியல் செயல்பாடுகளைப் படம் பிடித்து அவற்றைப் புகைப்படங்களாகவோ காணொளித் துண்டுகளாகவோ போர்னோகிராபித் தளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள். கு¬றைந்தபட்சம் எம்எம்எஸ் மூலம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் அல்லாமல் இப்போது பெண்களில் சிலராவது போர்னோகிராபி உலகைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். உயர்தொழில் நுட்ப வசதிகள் கொண்ட கைப்பேசிகளில் இணையம் மூலம் போர்னோகிராபித் தளங்களைப் பார்வையிடும் பெண்களின் எண்ணிக்கை பெருகிவருவது போல் தோன்றுகிறது. ஆனால் இப்போதும்கூட போர்னோகிராபி ஆண்களின் உலகத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒன்றாகவே இருக்கிறது. ஆண்களின் பாலியல் வேட்கைக்குத் தீனிபோடும் வகையிலேயே எல்லா போர்னோகிராபித் தளங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. போர்னோகிராபித் தளங்களுக்குப் பங்களிப்பவர்களில் யாருமே பெண்களாக இருக்க வாய்ப்பில்லையென்பதை அந்தத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் காணொளித் துண்டுகளை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துவிடும்.

வெளியிலிருந்து பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகளில் பெரும்பாலானவற்றில், பாலுறவில் ஈடுபடும் ஆணின் முகம் தென்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. ஆனால் பெண்ணின் முகம், உடல், அவளது பாலியல் உறுப்புகள், அவளது அசைவுகள், பேச்சு, சத்தம் ஆகிய அனைத்துமே மிக நெருக்கமாகவும் தெளிவாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வீடுகள், விடுதி அறைகள், கடைகள், பூங்காக்கள், கோவில்கள், பள்ளிக்கூடங்கள் முதலான அந்தரங்கமானவையும் பொதுவானவையுமான வெளிகளில் நடைபெறும் பாலியல் செயல்பாடுகள் அதில் ஈடுபடும் ஆண்களாலோ அவர்களது நண்பர்களாலோ காட்சிப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான காணொளித் துண்டுகளில் வாய்வழிப் புணர்ச்சியே முக்கியமானதாக இடம்பெற்றிருக்கும். இது ஆண் தன் அடையாளத்தை மறைத்துக்கொள்வதற்கு ஏதுவான, பெண்ணை, அவளது அடையாளங்களைத் திட்டவட்டமாகப் பதிவு செய்வதற்கு உகந்த நிலை. sஜீஹ் நீஷீனீ எனப்படும் ரகசியக் காமிராக்கள் வழியாகவோ மடிக்கணினியில் உள்ள வெப்காம் வசதியைப் பயன்படுத்தியோ எடுக்கப்பட்ட காணொளித் துண்டுகளில் புணர்ச்சியில் ஈடுபடும் ஆண் பெண் இருவருடைய அடையாளங்களும் தெளிவாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கும்போது ஆண்கள் தம் அடையாளத்தை மறைத்துக்கொள்வதற்கு எல்லாத் தருணங்களிலும் முயல்வதில்லை என்று தோன்றுகிறது. சில தருணங்களில் பெண்ணுக்கு தான் படம்பிடிக்கப்படுகிறோம் என்பதுகூடத் தெரிந்திருக்கிறது. ஆண் ஏதாவது சொல்லி அவளது சம்மதத்தைப் பெறுகிறான்.

அநேகமாக எல்லா போர்னோகிராபித் தளங்களிலும் காணக்கிடைக்கும் எட்டு நிமிடக் காணொளியொன்றில் காதலனுடன் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஓர் இளம் தமிழ்ப்பெண்ணுக்கு அவன் தன்னுடைய கைபேசியில் அவளைப் படம் பிடிப்பது தெரிந்திருக்கிறது. அவளிடம் பெரிய மறுப்பு தென்படவில்லை. அவன் எதற்காகத் தன்னைப் படம் பிடிக்கிறான் எனக் காதலால் நிரம்பித் ததும்பும் குரலில் கேட்கிறாள். அவன் அது தன்னுடைய ரசனைக்காக மட்டுமே எனச் சொல்கிறான். நினைத்தபோதெல்லாம் அவளுடைய நிர்வாணத்தை ரசிக்க வேண்டுமெனப் பதிலளிக்கிறான். அவனது காமிரா தொடர்ந்து வேட்கையுடன் அவளது உடலைப் பதிவு செய்துகொண்டிருப்பதை அவள் தடுக்க முயலவில்லை. ஆனால் வெட்கப்படுகிறாள். செல்லமாகக் கோபித்துக்கொள்கிறாள். வேறு யாரிடமும் அதைக் காட்டிவிடக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறாள். “இல்ல, இத இண்டர்நெட்ல போட்டுக் கோடிகோடியாச் சம்பாதிக்கப் போறேன் பாரு” என விளையாட்டாகச் சொல்வதுபோல அவளுக்குப் பதிலளிக்கிறான் அவன். அவனது மற்றொரு கை அவளது உடலின் மீது படர்கிறது. அவளது உடலில் மீந்திருக்கும் உள்ளாடைகளைக் களைந்து அவளது அந்தரங்க உறுப்பை நோக்கி மூர்க்கமாக நகர்ந்து செல்கிறது. அவள் மௌனமாகிறாள். அவளுக்குக் கண்கள் செருகத் தொடங்குகின்றன. அந்த எட்டு நிமிடக் காணொளித் துண்டு இப்போது எல்லா போர்னோகிராபித் தளங்களிலும் காணக் கிடைக்கிறது. அவளுடைய காதலன் அவளிடம் சொன்னது விளையாட்டுக்காக அல்ல என்பதை இப்போது அவள் புரிந்துகொண்டிருந்திருக்கக்கூடும். தான் எமாற்றப்பட்டுவிட்டதை, காதலின் பொருட்டு மிகக் கொடிய முறையில் தண்டிக்கப்பட்டுவிட்டதை உணர்ந்து கொண்டிருப்பாள். ஆனால் அது எந்தவிதத்தில் அவளுக்குப் பயன்பட்டிருக்கும்? அவளுடைய குடும்பத்தினரோ உறவினர்களோ நண்பர்களோ யாராவது அந்தக் காணொளியைப் பார்த்திருப்பார்களா? அது நடந்திருந்தால் அவள் என்ன மாதிரியாக எதிர்வினையாற்றியிருப்பாள்? அதற்குப் பிறகு குடும்பத்திலோ பொதுவெளியிலோ அவளது இடம் என்னவாக இருந்திருக்க முடியும்? அவளால் தன்னை ஒருபோதும் நியாயப்படுத்திக்கொள்ள முடியாமல் போயிருந்திருக்கும். எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டியிருந்திருக்கும். அவளால் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்குப் பரிகாரம் தேடி காவல் துறை அல்லது நீதித் துறையின் உதவியை நாடியிருக்க முடியுமா? அவமானம் தாளாமல் அவள் தற்கொலை செய்துகொண்டிருக்கவும் கூடும். பதற்றத்தை மூளச் செய்யும் கேள்விகளை உருவாக்கும் இது போன்ற நூற்றுக்கணக்கான காணொளித் துண்டுகள் இந்திய போர்னோகிராபித் தளங்களில் காணக் கிடக்கின்றன.

போர்னோகிராபி இந்துநேசனைப் போலவோ சரோஜாதேவியைப் போலவோ பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுவதற்கான ஒரு திடப்பொருளாக இப்போது இல்லை. அது பிறரது அந்தரங்கங்களுக்குள் சலனமின்றிப் பிரவேசிக்கும் கொழகொழப்பானதொரு திரவமாக மாறியிருக்கிறது. அவர்களது வாழ்வை அடியோடு சீர்குலைக்கிறது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழின் பிரபலமான நடிகையொருவர் தங்கியிருந்த ஓட்டலொன்றின் குளியலறையில் பொருத்தப்பட்ட ரகசியக் காமிராவின் மூலம் அவரது நிர்வாணம் படம்பிடிக்கப்பட்டு பல்வேறு போர்னோகிராபித் தளங்களில் வெளியிடப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தேவநாதன் என்ற அர்ச்சகர் கோவில் கருவறையில் வைத்துப் பல பெண்களுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டு அவற்றைக் காணொளித் துண்டுகளாக்கி போர்னோகிராபித் தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். இவை இரண்டும் போர்னோகிராபி ரசிகர்களிடையே புகழ்பெற்ற பதிவுகளாக இன்று வரையிலும் நீடித்திருப்பவை. போர்னோகிராபித் தளங்கள் யாருடைய அந்தரங்கத்தையும் பொருட்படுத்துவதில்லை. இத்தளங்கள் யாருக்கும் சேவை செய்வன அல்ல. இவை போன்ற scandalகளுக்குப் பெரும் வர்த்தக மதிப்பு இருக்கிறது. காணொளிகளைப் பதிவிறக்கம் செய்வதற்குப் பெரும்பாலான தளங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் தொழில் முறையில் தயாரிக்கப்பட்ட நீலப்படங்களின் மீதான ஆர்வம் குறைந்துபோய்விட்டது. அது போன்ற படங்கள் அருவருப்பு மூட்டுவதாகச் சொல்லும் போர்னோகிராபி ரசிகர்கள் இயற்கையான பாலுறவுக் காட்சிகளை விரும்புகிறார்கள். நடிகைகளின் உடல்களைவிடச் சராசரிப் பெண்களின் உடல்கள் அதிகம் போதையூட்டக் கூடியவையாக மாறியிருக்கின்றன. போர்னோகிராபித் தளங்களில் scandalகளுக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

யாராவது ஒருவருடைய கைபேசியில் உள்ள மிகச் சிறிய காமிரா யாராவது ஒரு பெண் குளிப்பதைப் படம் பிடிக்கிறது. யாராவது ஒரு பெண் தன் வீட்டுக்குள் கதவைத் தாளிட்டுக்கொண்டு உடைமாற்றும் காட்சியை ஒரு மடிக்கணினியின் வெப் கேமரா சத்தமில்லாமல் பதிவுசெய்கிறது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களைப் கைபேசிகள் பின்தொடர்கின்றன. அவர்களது மார்பை, இடுப்பை, தொப்புளைப் மிகவும் ஆபாசமான கோணங்களில் படம்பிடிக்கின்றன. எல்லாமே எப்படியோ இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுவிடுகின்றன. போர்னோகிராபி ஆபத்தற்ற தீமை என்னும் கருத்து இப்போது காலாவதியாகிக்கொண்டு வருகிறது. பல வலைத்தளங்களில் கூட்டுப் புணர்ச்சியும் கூட்டு வன்புணர்ச்சியும் காட்சிகளாக்கப்பட்டுப் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. வலைத்தளமொன்றில் சமீபத்தில் பார்த்த 12 நிமிடக் காணொளி என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. நடுத்தர வயதுப் பெண் ஒருத்தியை அடர்ந்த காட்டின் நடுவே பாறையொன்றின் மீது வைத்து கும்பலொன்று வன்புணர்ச்சியில் ஈடுபடும் காட்சி அது. அந்தப் பெண் கதறுகிறாள். தெலுங்கோ கன்னடமோ ஏதோவொரு திராவிட மொழியில் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். இந்தக் காணொளி யாருக்காவது பாலியல் கிளர்ச்சியை ஊட்டக்கூடியதாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தளத்தின் editor’s picகளில் ஒன்றாக அந்தக் காணொளி கடந்த சில வாரங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு தளத்தில் தமிழ்ப் பெண் ஒருத்தி நான்கைந்து இளைஞர்களால் மிகக் கொடூரமான முறையில் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். அந்தப் பெண் அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடுகிறாள், அவளுக்கு மூச்சுத் திணறுகிறது. அப்பட்டமான மனித உரிமை மீறலுக்கு பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைக்கு அந்த ஒரு காணொளி மட்டுமே சாட்சியாக இருக்க முடியும். தமிழ்ப் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்படும் வேறு சில காணொளிகளும் போர்னோகிராபித் தளங்களில் top rated, most viewed பதிவுகளாக நீடித்திருக்கின்றன. கூட்டுப் பாலுறவு சார்ந்த காணொளிகள் அதிக அளவில் தென்படுகின்றன. ஒரு பெண்ணுடன் இரண்டு அல்லது மூன்று ஆண்கள் உறவில் பங்குபெறும் காணொளிகளும் ஒரு ஆணுடன் இரண்டு அல்லது மூன்று ஆண்கள் பங்குபெறும் காணொளிகளும் கணிசமான எண்ணிக்கைகளில் தென்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தொழில்முறையில் உருவாக்கப்பட்டதாகத் தென்படவில்லை.

இணையம் அச்சு வடிவிலான போர்னோகிராபிக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. அச்சில் வெளிவந்திருக்கும் எல்லாக் கதைகளும் இணையத்தில் தொகுக்கப்பட்டுவிட்டன. புதிதாக எழுதப்படும் கதைகளின் உள்ளடக்கங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. முறை தவறிய பாலுறவு பற்றிய சித்தரிப்புகளே அதிக வாசகர்களால் விரும்பிப்படிக்கப்படுபவை. அதே போல புனைவுகளைவிட அனுபவங்களுக்குச் செல்வாக்குக் கூடியிருக்கிறது. கதைகள் தன்மையில் எழுதப்பட்டு அவற்றுக்கு உண்மையின் சாயல் அளிக்கப்படுகிறது. பாலியல் குறித்த சந்தேகங்களுக்கு எல்லா இணையங்களிலும் யாராவது பதிலளிக்கிறார்கள். பெரும்பாலான கேள்விகள் முறைதவறிய பாலுறவு பற்றியவையாக இருக்கின்றன. பதிலளிப்பவர்கள் அவற்றுக்கு ஆதரவாக விளக்கங்கள் அளிக்கிறார்கள். பலரது அனுபவங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. இந்தியச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுவரும் ஓரினச் சேர்க்கை, பெண்களின் பாலியல் முனைப்புகள், செக்ஸ் சுதந்திரம் பற்றிய கிளர்ச்சியூட்டும் விவாதங்கள்கூடச் சில இணையத்தளங்களில் தென்படுகின்றன.

ஆண்டுக்கொருமுறை அவுட்லுக், இந்தியா டுடே முதலான ஆங்கில இதழ்கள், ஏதாவதொரு ஆணுறைத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் செக்ஸ் சர்வேக்கள் இந்தியர்களின் பாலியல் நடத்தையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதாகக் குறிப்பிடுகின்றன. தில்லியின் மருத்துவ மாணவியின் மீதான பாலியல் வன்முறைக்கெதிரான கிளர்ச்சி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அதே தருணத்தில் கடைகளில் பரபரப்பாக விற்றுக்கொண்டிருந்த 24.12.2012 நாளிட்ட அவுட்லுக் சிறப்பிதழில் (OUTLOOK-SKORE SEX SURVEY 2012) இந்தியர்களின் பாலியல் வேட்கைகள், பழக்கங்கள், நடத்தைகள், மதிப்பீடுகள் குறித்த விரிவான சர்வே இடம்பெற்றிருந்தது. தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரு முதலான பெருநகரங்கள் தவிர பூனே, ஜெய்பூர், கொச்சி உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள 12 நகரங்களில் வசிக்கும் 18 முதல் 35 வயது வரையுள்ள 1,205 பேரிடம் எடுக்கப்பட்ட அந்த சர்வே இந்தியாவின் படித்த, நடுத்தரவர்க்கத்தின் பாலியல் முனைப்புகள் குறித்து அளிக்கும் சித்திரங்கள் ‘பாரதம்’ பற்றிய பெருமிதங்களில் மூழ்கிக் கிடக்க விரும்புபவர்களுக்குச் சங்கடமூட்டுபவை. சர்வேயில் பங்கேற்றவர்களில் முப்பது சதவீத இந்திய இளம் தலைமுறையினர் ஓரினப் புணர்ச்சிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னால் சாதாரண முறையில் செக்ஸில் ஈடுபடுபவது தப்பில்லை எனக் கருதும் இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலோர் தமது இருபதுகளில் முதல் பாலுறவு அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 28.5 சதவீதத்தினர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட திருமண உறவின் மூலம் தமது முதல் பாலுறவு அனுபவத்தைப் பெற்றவர்கள். 52.5 சதவீதம் பேர் பாலுறவில் பரிசோதனை முயற்சிகளை விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் 24 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் இணையைக் கொண்டிருக்கிறார்கள். 55.6 சதவீத ஆண்கள் தங்கள் இணையின் கன்னித்தன்மையை முக்கியமாக வலியுறுத்துபவர்கள் அல்ல. 53.8 சதவீதம் பேர் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை அங்கீகரிக்கிறார்கள். 29.7 சதவீதம் பேர் தனியாக வாழ்வது இணையுடன் வாழ்வதைவிடச் சிறந்தது என்கிறார்கள். சர்வேயில் பங்கேற்றவர்களில் 73.2 சதவீம் பேர் முறை தவறிய பாலுறவு (வீஸீநீமீst) இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை என அஞ்சுகிறார்கள். 34.3 சதவீதம் பேர் அது எப்போதுமே தவறானது என்றோ ஒழுக்கக் கேடானது என்றோ கருதவில்லை. இந்த மாற்றங்கள் ஆரோக்கியமானவை, பாலினச் சமத்துவத்தை நோக்கிய பயணத்திற்குத் துணைபுரிபவை. இது போன்ற கருத்துக் கணிப்புகள்கூட பாலியல் கிளர்ச்சி தருபவையாகவும் ஆபாசமானவையாகவும் கருதப்படுவது தான் சோகம்.

இது போன்ற செக்ஸ் சர்வேக்கள் ஆங்கில ஊடகங்களில் வழக்கமாக இடம்பெறுபவை. இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு அவ்வப்போது இவற்றைத் தமிழ் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி வருகிறது என்றபோதிலும் ஒழுக்கசீலர்கள் இவற்றை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஒழுக்கம் ஒரு நியதியாகப் பொதுச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தந்திரமாகப் பின்பற்றப்படுகிறது. மீறல்கள் தண்டனைக்குரியவையாகக் கருதப்படுகின்றன. அதனால்தான் திருமணத்திற்கு முந்தைய பாலுறவு பற்றிய நடிகை குஷ்புவின் கருத்துக்குக் கலாச்சாரக் காவலர்கள் அவ்வளவு கடுமையாக எதிர்வினையாற்றினார்கள். தில்லிச் சம்பவத்தையடுத்துப் பெண்களின் உடைக்கட்டுப்பாடு குறித்தும் ஆண் நண்பர்கள் குறித்தும் பெண்கள் இரவு நேரங்களில் நடமாடுவது குறித்தும் எதிர்மறையான கருத்துகளை முன்வைத்தவர்களில் பலர் ஒழுக்கத்தைப் பெண்களுக்கான பாதுகாப்புக் கவசமாக முன்வைக்க முயன்றனர். அவர்களில் யாரோ சிலர்தான் தில்லியில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு உங்களுடைய தளமும் ஒரு காரணம் என நான் முதலில் குறிப்பிட்ட போர்னோகிராபித் தளங்களுக்குக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். தமது தளங்களை மூடப்போவதாக அறிவித்தததன் மூலம் அவை தமது ‘குற்றத்’தை ஒப்புக்கொண்டிருக்கின்றன. இப்போது பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமையைத் தூண்டும் காரணிகளில் ஒன்று மூடப்பட்டுவிட்டது.

ஆனால் போர்னோகிராபி எல்லோருக்கும் தேவையாக இருப்பதுபோல் தோன்றுகிறது. பாலியல் தொழில் எப்படி இன்றியமையாததாக இருக்கிறதோ அப்படி போர்னோகிராபியும் இன்றியமையாததாக இருக்கக்கூடும். ஒழுக்கம் பற்றிய பொய்மைகளை அது கலைத்துப்போடுகிறது. போர்னோகிராபி சமூகத்தைச் சீரழிக்கிறது என்னும் குற்றச்சாட்டு எல்லாத் தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. எனினும் அதன் மீது சமூகத்திற்கு எந்த விரோதமும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘கள்ளக்காதலி’யைப் போலவோ பாலியல் தொழிலாளியைப் போலவே அதை நேசிக்கவும் செய்கிறது. பாலியல் வன்முறைக்கெதிரான ஒரு மகத்தான கிளர்ச்சிக்குப் பின்னருங்கூட, தில்லியின் மருத்துவ மாணவி கூட்டு வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டது போன்ற ஒரு காணொளியை ஏதாவதொரு போர்னோகிராபித் தளத்தில் பார்க்க நேரும் யாருக்காவது அறச்சீற்றம் ஏற்படுமா எனத் தெரியவில்லை. அது போன்ற ஒரு காணொளி பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுவதற்கான ஒன்றாக மட்டுமே பார்க்கப்படும் என்பது யாராலும் ஒப்புகொள்ள முடியாத, கசப்பான உண்மை.

போர்னோகிராபி பாலியல் சமமின்மையை, பாலியல் மீது பெரும் சுமையாகக் கவிந்திருக்கும் ஒழுக்க நியதிகளைக் குலைக்கிறதா என்னும் கேள்வி முக்கியமானது. எந்தவொரு போர்னோகிராபித் தளமும் அத்தகைய கோட்பாடுகளுடன் இயங்குவதில்லை என்றபோதும்கூட இது பொருட்படுத்தத் தகுந்த ஒரு கேள்விதான். போர்னோ கிராபியின் தாக்கம் குறித்து யோசிக்கும்போது வேறுசில கேள்விகளும் எழுகின்றன. சில ஆய்வுகள் சொல்வது போல இறுக்கமான குடும்ப அமைப்புக்கும் பாலியல் உறவுக்குமுள்ள தொடர்புகள் அறுபடத் தொடங்கியுள்ளதற்கும் போர்னோகிராபிக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது பாலியல் வன்முறைக் கெதிரான போராளிகள் குற்றம் சுமத்துவதுபோல் பெருகிவரும் பாலியல் வன்முறைகளையும் பாலியல் சார்ந்த கொலைகளையும் போர்னோ கிராபி நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டுகிறதா? நவீன உலகில் போர்னோகிராபியின் இடம் என்ன? எல்லா வற்றுக்கும் மேலாக போர்னோகிராபி நமது பாலியல் விருப்பங்களில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? இது போன்ற கேள்விகளுக்கு யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் கிடைக்கப் போவதில்லை. பாலியல் சார்ந்த கேள்விகளை எதிர்கொள்வதன் சங்கடத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு சமூகத்தால் இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாது என்றுதான் தோன்றுகிறது. கணினி அறிவுள்ள, இணையத் தோடு நெருக்கமான தொடர்புகொண்டுள்ள எனது நண்பர் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட போர்னோகிராபித் தளத்தின் பெயரைச் சொல்லி, அதைப் பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா எனக் கேட்டபோது அவர் அருவருப்புடன் முகத்தைச் சுழித்துக்கொண்டார். திடீரென என்னிடமிருந்து விலகி ஓரடி தள்ளி நின்றுகொண்டார். என் கேள்விக்குப் பதிலளிக்க அவர் கொஞ்சங்கூட விரும்பவில்லை என்பது தெரிந்தபோதும் அதே கேள்வியை மீண்டும் அவரிடம் கேட்டேன்.

அவர் தேவைக்கதிமாகப் பதற்றமடைந்தார். பிறகு சுதாரித்துக்கொண்டு அது போன்ற தளங்கள் இணையத்தில் இருக்கின்றனவா என அப்பாவித்தனமாகக் கேட்டார். ஒருவேளை உண்மையிலேயே அவர் ஓர் அப்பாவியாகவும் இருக்கக்கூடும் என்றுதான் நினைக்கிறேன்.

 

http://www.kalachuvadu.com/issue-158/page33.asp

Link to comment
Share on other sites

நல்லதொரு கட்டுரை.

 

எனக்குத் தெரிந்த ஒரு பிரபல்யமான இந்திய Torrents போர்னோகிரபி தளத்தில் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இருந்து Mobile phone இல் எடுக்கப்பட்ட ஆகக்குறைந்தது  5 வீடியோக்களாவது தரவேற்றம் செய்கின்றனர். அநேகமானவை பெண்களின் சம்மதத்துடன் எடுக்கப்பட்டவை என்பதை அவர்களின் பேசும் மொழியிலும், உடல் மொழியிலும் இனம் காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றில் 2 ஆவது ஒன்றில் கேரளாவில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ எடுக்கப்படுவன. இதில் தரவேற்றப்படும் சாதாரண குடும்ப பெண்களின் கூட்டுப் பாலுறவு காட்சிகள் ஆரம்பத்தில் ஒரு வருடத்தில் ஒன்றோ இரண்டோ என்று வந்து கொண்டிருந்த நிலமை மாறி இப்ப வாரத்துக்கு ஒன்றிரண்டு என்று பெருகியுள்ளன. கல்லூரிகளில் நடக்கும் இவ் கூட்டுப் பாலுறவும் அதிகரித்து போயுள்ளன.

 

இவற்றில் இருக்கும் ஒரு விடயம் என்னவெனில் இதனை பார்க்கும் எனக்கோ அல்லது பின்னூட்டம் இடும் இலட்சகணக்கானோருக்கோ இவை பற்றி அறம் சார்ந்த கோபமோ ஆத்திரமோ வருவதில்லை என்பதுதான்.

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.