Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை- இந்திய உறவின் போக்கு மாற்றமடைய ஆரம்பித்துள்ளதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை- இந்திய உறவின் போக்கு மாற்றமடைய ஆரம்பித்துள்ளதா?

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்-

பொதுவாக வெளிவிவகாரக் கொள்கை என்பது மாற்றமடையக் கூடியதொன்றாகும். அதேபோன்று இரு நாடுகளுக்கிடையிலான உறவு என்பதும் எப்பொழுதும் ஒரே விதமாக இருப்பதன்று. இருந்த போதும் நீடித்து நிலைத்திருக்கின்ற உறவுகளும் இல்லாதிருப்பதில்லை. உதாரணமாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவையே கூட எடுத்துக் கொள்வோமாயின், அது அதிகம் மாற்றமுறுகின்ற ஒன்று அல்ல. இரு நாடுகளும் இந்நாட்டின் சுதந்திரத்தின் பின்னர் உறுதியான அதேசமயம் நட்புணர்வுடைய உறவைக் கொண்டுள்ளன. இப்போக்கு குறுகிய எதிர்காலத்தில் மாற்றமடையும் என எதிர்பார்ப்பதற்கில்லை. இருப்பினும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அவ்விதமானதல்ல. உண்மையில் மாறிச் செல்வது என்பதே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பின் பிரதானமான குணாம்சம் எனக் கூறப்படலாம். சுதந்திரத்தின் பின்னர் ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் கெடுபிடி நிலையில் இருந்த உறவு குறிப்பாக பண்டாரநாயக்கா மற்றும் ஸ்ரீமா காலத்தில் சினேகபூர்வமானதாக மாற்றமடைந்திருந்தது. பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் காலத்தில் உறவு மிக மோசமாக சீர்கெட்டிருந்தது.

அக்காலத்தில் இதனை தக்கபடி பயன்படுத்திக் கொண்ட மரபு ரீதியான தமிழ் தலைமையும் ஆயுதம் ஏந்தியவர்களும் பாரிய நலன்களை அடைந்திருந்தனர். குறிப்பாக இக்கால கட்டத்திலேயே ஆயுதப் போராட்டம் பாரத மாதாவிடமிருந்து ஆயுத, நிதி மற்றும் ராஜதந்திர ரீதியான ஒத்தாசையைப் பெற்றுக் கொண்டிருந்தது. இதனுடைய தாற்பரியம் என்னவெனில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சிறப்பானதாக இல்லாதிருக்கின்ற போது அது தமிழர்களுக்குச் சாதகமாக இருந்தது என்பதாகும். பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் மீண்டும் உறவு சீரடைய ஆரம்பித்திருந்தது. அதன் காரணமாக ராஜீவ் மற்றும் பண்டாரி போன்றவர்கள் கொழும்பின் நெருங்கிய நண்பர்களாக மாறி இருந்தனர். இது தமிழ் மக்களுக்கோ அல்லது போராட்டத்திற்கோ பாரிய நலன்களெதனையும் கொண்டு வந்திருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதன் பின்னர் விடுதலைப்புலிகள் தொடர்பில் குரோதமான ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டமை கொழும்பையும் டெல்லியையும் நெருக்கமாகப் பிணைப்பதாக இருந்தது.

ஜனாதிபதி குமாரதுங்கவின் புன்னகையும், சமாதான செய்திகளும் ஒரு வகையில் டில்லியை ஆட்கொள்வதாகவே இருந்தது. அதன் காரணமாகவே இக் காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உச்சக் கட்டத்தை அடைந்ததாக வர்ணிக்கப்பட்டிருந்தது. அதன் பிரதிபலிப்பாக இக் கால கட்டத்தில் புலிகளுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இக் கால கட்டத்திலேயே தமிழ் போராட்டத்திற்கு தமிழ் நாட்டில் காணப்பட்டிருந்த ஆதரவு முழுமையாக இல்லாமற் போயிருந்தது. எவ்வாறாயினும் தற்போது ஏற்பட்டுள்ள கேள்வி என்னவெனில், இவ் உச்சக் கட்ட உறவு மாற்றமடைய ஆரம்பித்துள்ளதா என்பதாகும். உண்மையில், அவ்விதமான ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளதாயின் அதன் ஆரம்பம் ஜனாதிபதி ராஜபக்ஷவின் தெரிவின் பின்னர் ஏற்பட்டதாகவே கருதப்பட வேண்டும். இந்தியா பொறுத்து ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவம் இதுவரை காணப்பட்ட டில்லியை கட்டிப் போட்டிருந்த, கவர்ச்சியும், ஆளுமையுமுடைய தலைமை இல்லாமற் போயிருந்தமையாகும்.

சமாதானப் புறா என்ற சந்திரிகாவின் தோற்றம் டெல்லியில் இலங்கை அரசு தொடர்பில் தீவிர சாதகத்தன்மையுடைய அபிப்பிராயத்தை பேணிக் கொள்ள உதவியிருந்தது. ஆயினும், பதவிக்கு வரு முன்னரே ராஜபக்‌ஷ ஒரு கடும் போக்குவாதி என்கின்ற எண்ணமே காணப்பட்டிருந்தது. அது கடந்த ஆறு மாதங்களில் பெரிதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை தொடர்பில் இந்தியாவின் கொள்கையில் மாற்றமொன்று ஏற்படுவதற்குத் தேவையான உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ராஜபக்‌ஷ தொடர்பில் அவ்வளவு சாதகமற்ற மனோபாவம் அரசு தொடர்பிலான மனோபாவ மாற்றத்திற்கு காரணமாக அமையக் கூடும். இத்தகைய ஒரு பின்னணியிலேயே இந்தியா தொடர்பில் இலங்கையில் அதிருப்தி அல்லது கசப்புணர்வு ஏற்படக் கூடிய அபிவிருத்திகள் சில ஏற்பட்டிருந்தன. ராஜபக்‌ஷ பதவிக்கு வருகின்ற போது இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் தேனும் பாலும் போன்றதொரு நிலை காணப்பட்டமையினால், கூப்பிட்டவுடன் ஓடிவந்து புலிகளுக்கு எதிராக இந்தியா செயற்படும் என்ற ஒரு கருத்து அரசாங்க மட்டத்தில் காணப்பட்டிருந்தது. அவ்வகையில் இந்தியா ஏதாயினும் ஒரு வகையில் சமாதான முயற்சிகளில் தலையிடுவது அரசுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்தியா இதற்கு இணங்கியிருக்கவில்லை. இது அரசாங்கத்திற்கும் அதனுடன் இணைந்து இயங்குகின்ற சிங்கள தேசியவாதக் கட்சிகளுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அவ் ஏமாற்றம் ஒருவித கசப்புணர்வையும் தோற்றுவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இந்தியாவின் மறுப்பு காரணமாக விருப்பமில்லாமலே நோர்வேயை அனுசரணையாளராக செயற்பட அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜே.வி.பி.அல்லது ஹெல உறுமய கூட்டங்களில் தற்போது இந்தியாவைப் பற்றிய பேச்சு பெரிதாக அடிபடுவதில்லை.

இந்தியா சமாதான முயற்சிகளில் தலையிடுவதற்கு மட்டும் மறுத்திருக்கவில்லை. மாறாக, இலங்கை இராணுவத்தின் புனருத்தாரணம் என்பதற்கும் ஒத்துழைப்பு வழங்க மறுத்திருந்தது. அதாவது பாரிய அளவில் இலங்கைக்கு யுத்த தளபாடங்களை வழங்குவதற்கும் மறுப்புத் தெரிவித்திருந்தது. இதில் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் கட்சிகளின் செல்வாக்கு பின்னணியில் செயற்பட்டிருந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் இம் முடிவால் இலங்கை அரசாங்கம் பெரிதும் சங்கடப்பட்டிருக்கும் என்பது நிச்சயமானது. அதன் காரணமாகவே, ஒரு வகையில் எதிர் நடவடிக்கை என்று கூறக்கூடிய வகையில் அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளை நோக்கி நகர்ந்திருந்தது. குறிப்பாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களைப் பெறும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே சாதகமான பதிலை வழங்கியிருப்பது தெரிந்ததே. இவ்விதம் அரசு சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றை நோக்கி நகர்ந்தமையே இந்தியா தொடர்பில் இலங்கையில் ஏற்பட்டு வரும் கசப்புணர்வின் வெளிப்பாடு என்று கருதப்படலாம். அதேசமயம், இந்நடவடிக்கை இந்தியாவின் கசப்புணர்வை தூண்டக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதும் அவதானிக்கப்பட வேண்டும். உத்தியோகபூர்வமாக இச் செயற்பாடுகளை தாம் அவதானித்து வருவதாக மட்டுமே டெல்லி அறிவித்துள்ள போதும் கரிசனை அதிலும் அதிகமாக இருக்கும் என்பது நிச்சயமானது. தற்போது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தமிழ் நாட்டிற்கு அனுப்பப்படுவதற்கும் இக் கரிசனைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது என்று நிச்சயமாகக் கூற முடியாது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் தெரிவு தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய அபிவிருத்திகள் இப்போக்கை மேலும் அதிகரிப்பதாக அமையக் கூடும். கொபி அனான் தனது பதவிக் காலத்தை இவ்வருட இறுதியில் பூர்த்தி செய்கின்ற போது பதவி ஆசியாவைச் சேர்ந்த ஒருவரைச் சென்றடைய வேண்டும் என்ற பொதுவான இணக்கம் ஒன்று காணப்பட்டிருந்தது. எனவே, கொபி அனானின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியபோதே இலங்கை பதவிக்கான ஒரு வேட்பாளராக களம் இறங்கியது. இப்பதவியில் இலங்கைக்கு காணப்பட்டிருந்த ஆர்வம் ஒருவர் அல்ல இரண்டுபேர் களம் இறங்கியதன் மூலம் வெளிப்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது டிரோன் பெர்ணாண்டோ தான் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தமை இன்றும் பலருக்கு ஞாபகம் இருக்கக் கூடும். இருப்பினும் ஜயந்த தனபாலவே உண்மையான வேட்பாளர் போன்று ஆரம்பத்தில் இருந்தே தோற்றமளித்திருந்தார். காரணம் அவருக்கு அதற்கான உத்தியோகபூர்வமான தகுதிகள் நிறையவே காணப்பட்டிருந்தன.

பின்னர் அரசும் அவரது வெற்றியில் ஆர்வத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். ஒன்று, இலங்கை போன்ற சிறிய நாடு சர்வதேச ரீதியாக பெரியதொரு பதவியைப் பெறுவது அதன் அந்தஸ்திற்கும், கௌரவத்திற்கும் பாரியதொரு உந்து சக்தியாக அமையும். இரண்டு, இலங்கையரொருவர் சர்வதேச ரீதியாக செல்வாக்கு மிக்க பதவியில் இருப்பது புலிகளுக்கு எதிரான சர்வதேச யுத்தத்திற்கு உதவக் கூடும். எனவே, இப்பதவி தொடர்பில் பாரியதொரு எதிர்பார்ப்பும், விருப்பமும் காணப்பட்டிருந்தது. இத்தகையதொரு பின்னணிலேயே கடந்த வாரம் இந்திய செயலாளர் நாயகம் பதவிக்கு தானும் ஒரு வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தது. இது பெரிதும் எதிர்பாராத, குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரை அதிர்ச்சி தரவல்ல அறிவிப்பு என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் இவ்வறிவிப்பின் பின்னணியில் இரு காரணிகள் இருந்திருக்கலாம். ஒன்று, இந்தியாவின் சர்வதேச அபிலாசைகளுக்கு இது பாரிய ஒரு ஒத்தாசையை வழங்கும். இங்கு இந்தியாவின் வல்லரசாகும் ஆசை, பாதுகாப்பு சபையில் நிரந்தர ஆசனத்திற்கான கோரிக்கை என்பன கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இரண்டாவது, பிராந்திய வல்லரசு தானிருக்க, இலங்கை போன்ற சிறிய நாடு எவ்விதம் செயலாளர் நாயகம் பதவியைப் பெறலாம் என்றதொரு மேலாதிக்க மனோபாவமும் பின்னணியில் இருந்திருக்கலாம்.

எவ்வாறாயினும், இச் செயற்பாட்டை `இந்தியா முதுகில் குத்திவிட்டது' என்ற வகையில் இலங்கை நோக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இந்தியாவின் அறிவிப்புடன் இலங்கையின் வெற்றி வாய்ப்பு பெரிதும் இல்லாமற் போயுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. முதலில், இந்திய வேட்பாளர் சசி தரூர் தனபாலவுடன் ஒப்பிடுகையில் எவ்வகையிலும் குறைந்த தகுதியுடையவரல்ல. அதேசமயம், தமது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவது என்ற விடயத்தில் இலங்கையை விட பாரிய ஒரு வலு இந்தியாவுக்கு உண்டு. மேலும் ஆசியாவில் இருந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ள தாய்லாந்து, இலங்கை ஆகிய இரு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் சர்வதேச உறவு மிகப் பரந்தது. குறிப்பாக ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுடனான இந்தியாவின் உறவும் தொடர்பும் மிகப் பலம் வாய்ந்தவையாகும். எனவே, பாதுகாப்பு சபையின் உறுப்பினர் ஒருவர் நேரடியாக தலையிட்டாலே அன்றி இலங்கை வெற்றிபெறுவது இலகுவானதல்ல. எனவே, இலங்கை ஏமாற்றமடைவதில் தவறில்லை. இவ் ஏமாற்றம் பகையாக மாறுமா ? என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். இந்தியா முடிவை அறிவித்த போது தென்னிலங்கை கெப்பிட்டிகொல்லாவையில் கவனமாக இருந்தமையினால் போதிய கவனத்தைப் பெறவில்லை. எதிர்வரும் வாரங்களில் அல்லது மாதங்களில் இது முக்கியமானதொரு பிரச்சினையாக விவாதிக்கப்படக் கூடும்.

தற்போது இலங்கை இந்திய உறவின் போக்கில் மாற்றமொன்று ஏற்பட்டிருக்குமாயின் அதனை மேலும் தூண்டுகின்ற ஒரு காரணியாகவே தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் கருதப்பட வேண்டும். தமிழ் நாட்டில் இலங்கை தமிழர்கள் மீதான பற்றும் பாசமும் பூரணமாகவே இல்லாமற் போயிருந்தது.

அப்போது இலங்கைப் பிரச்சினையில் தான் விரும்பியவாறு நடந்துகொள்ளக் கூடிய ஓரளவான சுதந்திரம் மத்திய அரசுக்கு காணப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் இலங்கைப் பிரச்சினை தமிழ் நாட்டில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. கருணாநிதியின் மத்திய அரசிற்கான செய்தி குழு இலங்கை மக்கள் பற்றியது என்பதால் தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே ஆயினும் இவ்விடயத்தில் ஒரு விதமான போட்டி ஆரம்பித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகளும், மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்த போராட்டத்தை சமாளிக்கவே கருணாநிதியின் தலைமையிலான கூட்டம் கூட்டப்பட்டது. அக் கூட்டணியினுள்ளும் திராவிட கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையும் போராட்டத்திற்குச் சார்பானவையே. அதேசமயம், விஜயகாந்தும் இலங்கை தமிழ் பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்துள்ளார். இது இலங்கை பிரச்சினையை அரசியல் இலாபங்களுக்காக தமிழக கட்சிகள் பயன்படுத்தும் ஒரு நிலையை ஏற்படுத்தக்கூடும். அப்போட்டி தமிழர்களுக்கான ஆதரவை அதிகரிக்குமாக இருக்குமாயின் மத்திய அரசு அதற்கு இசைந்து நடக்க வேண்டி ஏற்படும்.

அது தற்போது ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகின்ற இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான விரிசலை அதிகரித்துவிடும்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.