Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பிரச்சினை- ஒரு யதார்த்தமான பார்வை Dr. Brian Senewi

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரச்சினை - ஒரு யதார்த்தமான பார்வை Dr. Brian Senewiratne : பாகம் 1

மூலம்: Dr. Brian Senewiratne

தமிழில் Dr. Brian Senewiratneவின் அனுமதியுடன்: புனிதன் (அவுஸ்திரேலியா)

சர்வதேச சமூகத்துக்கு ஒரு வேண்டுகோள்; - 9 ஜுன் 2006

இலங்கைப் பிரச்சினை - ஒரு யதார்த்தமான பார்வை

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ்ப் பகுதிகள் மட்டுமல்ல, தெற்குச் சிங்களப் பகுதிகள் கூட, ஏன்? இலங்கை முழுவதுமே ஒன்றாக அழிவதை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கைப் பிரச்சினையை தெளிவாக விளக்குதற்காக இது வரையப் படுகிறது.

இலங்கை அரசு, பிரச்சினையே தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்தான் என்று சொல்லிக் கொள்கிறது. இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் அவர்களின் உடமைகள் மீதும் குண்டுமாரி பொழிவதையும், அவர்களைக் கொல்வதையும், அவர்களின் உடமைகளை அழிப்பதையும் தான் உண்மையில் இலங்கை அரசு செய்துகொண்டிருக்கிறது.

முந்தைய இலங்கை அரசுக்கும் (UNP) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டிருந்தது. 17 நவம்பர் 2005ல் ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் (SLFP) சார்ந்த மஹிந்த ராஜபக்ஸ, தமிழர்களுக்கு எதிரான அரசியல் சந்தர்ப்பவாதிக் கட்சியாக ஜே.வீ.பீ.யின் (JVP) - தமிழில் மக்கள் விடுதலை முன்னணி - ஆதரவுடனும், கடும் போக்குடைய புத்தகுருமாரின் இன-மத மிதவாதிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் (JHU) - தமிழில் சிங்கள தேசிய மரபுக் கட்சி - ஆதரவுடனும், ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஸ, போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்தும், சிறுபான்மைத் தமிழர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதை விட நாட்டைப் போருக்குக் கொண்டு செல்வதில் திடமாக இருக்கிறார் போலத் தெரிகிறது.

மீண்டும் ஒரு போர் மூண்டால், 18 ஆண்டுப் போராலும், கடல்கோளாலும் உயிர்களை இழந்த, உடமைகள் அழிந்த வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்ப் பொதுமக்களுக்கு பாரிய உயிர் இழப்புக்களும், உடல் ஊனங்களும்;, உடமைச் சேதங்களும் ஏற்படும்.

கிராமிய, வறிய நகர்ப்புற சிங்கள மக்களையே இலங்கை இராணுவம் கொண்டிருப்பதனால் சிங்கள உயிரிழப்புக்களும் இந்தத் தேவையற்ற போரினால் மிக அதிகரிக்கும்.

ஏற்கனவே தாழ்ந்த நிலையில் இருக்கும் சரியாக நிர்வகிக்கப்படாத நாட்டின் பொருளாதாரத்தால், பெரிய அளவில் அந்நிய நாணயத்தில் கொள்ளவேண்டிய ஆயுத தளபாடங்கள் கொள்ளவேண்டி வரும். இதனால் சுற்றுலாத்துறை, அந்நிய முதலீடு ஆகியவற்றின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது.

இலங்கை நிதித்துறை ஓட்டாண்டியாகும், இலங்கை தரக்குறைவான நாடாகும் சந்தர்ப்பங்கள் யதார்த்தமாகும்.

இந்தப் பேரழிவை முக்கியமாக இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச சமூக அழுத்தங்களால் தான் நிறுத்த முடியும்.

இலங்கை நிலையைக் கணிப்பதற்கு உலக நாடுகள் இலங்கை அரசின் பொய்ப் பரப்புரைகளையும், அரச மயமாக்கப்பட்ட - அரச கட்டுபாட்டு, அரச ஆதரவு - ஊடகங்களையும் உபயோகிக்கிறது. உண்மை நிலையைப் பலவழிகளில் அறிந்த, அறியக் கூடிய, இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் தூதுவராலயங்கள் அனைத்தும் இலங்கையிலே இருப்பதால் உலக நாடுகள் தமக்கு உண்மை நிலை தெரியாது என்று மறுக்கமுடியாது. மறுப்பதை ஏற்கவும் முடியாது. உலக நாடுகள் உண்மை நிலையை அறிவது தமக்குத் தேவையற்ற ஒன்றென்றும் அன்றி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வேண்டுமென்றே எடுக்காமலும் இருக்கின்றன என்று நான் சந்தேகிக்கிறேன். இச் சந்தேகம் சரியானால் உலக நாடுகளுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டிய காலம் இது.

என்னைப் பொறுத்தவரை..

1. நான் இலங்கையின் பெரும்பான்மை (74%) இனத்தைச் சார்ந்த சிங்களவன். சிங்கள இனத்தவர்களின் மேலாதிக்க இலங்கை அரசின் பிடியில் பல ஆண்டுகளாக அடக்குமுறை அட்டூழியங்களை எதிர்கொள்ளும் தமிழ் (18%) இனத்தைச் சார்ந்தவன் அல்லன். என் அக்கறை மனித நேய அடிப்படையானது. அரசியல் அடிப்படையற்றது.

2. உயிர் வாழும் உரிமையையும் உள்ளடக்கிய மனித உரிமைகளை மீறாத - நாட்டு மக்களின் ஒரு சாராரை எதுவிதத்திலும் புறக்கணிக்காத - எவர், இலங்கையை மட்டுமல்ல, வேறெந்த நாட்டை ஆண்டாலும், நான் அதைப்பற்றி அக்கறைப் படப்போவதில்லை. சர்வதேச மன்னிப்புச் சபையும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற வேறு பல மனித உரிமைக் குழுக்களும் தம் வெளியீட்டுக்களில் ஆவணப் படுத்தியுள்ள பரவலான மனித உரிமை மீறல்களுக்கு கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தமிழ்ச் சமூகம் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மனித உரிமை மீறல்களுள், ஒட்டு மொத்தமான கைதுகள், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் படாமலும், விசாரணையின்றியும் படையினரின் சிறையில் தடுத்து வைத்திருத்தல், படையினரின் சிறையிலேயே ஆயிரக் கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் காணாமல் போனவைகள், படையினராலேயே கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றுக்கு ஆளானவைகள் முதல், தங்கள் அரசாலேயே குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணைத் தாக்குதல்களுக்கும் இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு ஆளானதும், தற்போது இலங்கையின் தமிழர் தாயகமான கிழக்கு ஆளாகிறது வரை அடங்கும். தம் விருப்பின்றி காணாமல் போனோரின் எண்ணிக்கையில் இலங்கை உலகில் இரண்டாவது இடத்தில் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

3. இலங்கை அரசு, பிரச்சினையே தமிழ்ப் பயங்கரவாதம்தான் என்று சொல்லும் பொய்ப் பிரச்சாரத்தை நான் முற்றாக மறுக்கிறேன். இந்தப் பொய்ப் பிரச்சாரம் விற்பனைக்கென்றே ஆயுத தளபாடங்களைக் குவித்து வைத்திருக்கும் சர்வதேசத்திடம் இருந்து ஆயுத தளபாடங்களைப் பெற மட்டுமே உதவும். ஆனால் இது இலங்கையின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்க்கவே மாட்டாது.

இலங்கையை இன்று அழித்துக் கொண்டிருக்கின்ற இனப் பிரச்சினை மிகவும் சிக்கலான ஒனறு. அதைச் சுருக்கமாகக் கீழே தருகிறேன். இனப் பிரச்சினையின் அடிப்படையே சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் பல் இன பல் மத பல் கலாச்சார இலங்கையை சிங்கள-புத்த நாடாக்கும் முயற்சியே. இதற்காக இலங்கையின் 74வீத சிங்களவரின் ஆதரவைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதும் தக்க வைப்பதும் சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தினதும் நோக்கம். 1972 அரசியல் யாப்பிலும் அதன் பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகளிலும் போற்றிப் பேணப்படும் இலங்கை சிங்கள-புத்த நாடென்பதே சிங்கள அரசியல் கட்சிகளின் உறுதியான நோக்கம் எனில் தமிழீழம் என்ற தனிநாடு உருவாவதைவிட வேறு மாற்று வழி ஏதுமில்லை.

அரசியலில் புறக்கணிக்;கப் பட்டதாலும், அரசியல் சந்தர்ப்பவாதத்தாலும், 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தொடர்ந்து ஆண்ட சிங்கள அரசுகளின் தீர்க்க தரிசனமற்ற குறைபாடுகள் நிறைந்த ஆட்சியாலுமே தமிழ் மக்கள் தனிநாடு கோரிக்கையை நோக்கித் தள்ளப் பட்டனர் என்பது என் அறிவுபூர்வமான முடிவு.

4. அரச கட்டுப்பாட்டில் அனைத்தும் இருத்தல் வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுடன் அரச அதிகாரமும் ஒரு இடத்திலேயே அதுவும் சிங்கள பெரும்பான்மையின் கையில் மையப் படுத்தப்பட்டது. நாட்டை வளமாக்கும் அதிகாரமும் இதற்குள் அடங்கும். இதனால் நாட்டின் தமிழர் தாயகப் பகுதிகளான கரையோர மாவட்டங்கள் ஏன்? உள்நாட்டுத் தெற்குச் சிங்கள மாவட்டங்களும் வளமாக்கப் படாமல் ஒதுக்கப் பட்டது. இது 1833ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆக்கத்தின் நேரடி விளைவே. இந்த ஆக்கத்தினால் இலங்கைத் தீவின் மூன்று இராச்சியங்களும் ஆட்சி வசதிக்காக இணைக்கப் பட்டு ஒரு நாடாக்கப் பட்டது. சுதந்திரம் பெற்ற நாள் முதல் அரசுகளின் குறைபாடுகள் நிறைந்த ஆட்சியாலும், நாடடைக் கட்டி எழுப்பத் தவறியதாலும் இந்த ஆக்கம் தோல்வியில் முடிந்தது. மீண்டும் நாட்டை ஒன்றாகக் கட்டி எழுப்ப காலம் கடந்து விட்டது.

5. இலங்கை அரசால் தமிழரின் பிரச்சினையைத் தீர்க்க முடியாததற்கு ஒரே காரணம் வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசுக்குக் கிடைக்கும் நிதி உதவியும் ஆயுத தளபாட உதவியுமே. இந்த உதவிகளை இலங்கை அரசு தன் குடிமக்களாகிய தமிழர்களுடன் போரிடவே, அதாவது தமிழினத்தை நசுக்கவே, உபயோகித்தது. வெளிநாடுகள் பிரச்சினையைத் தீர்க்க உதவாமல், இன்று பிரச்சினையில் தாமும் ஒரு அங்கமாகி நிற்கின்றன.

6. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றுமே ஆதரவு கொடுக்கும் என் நிலைப்பாட்டால் ஊக்கப் பட்ட பலர், தமிழர்கள், நான் பண்டாரநாயக்க குடும்பத்தின் உறவினன் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் சந்தர்ப்பவாதத்தாலும், இன-மத மிதவாதப் போக்கினாலும், குறைபாடுகள் நிறைந்த ஆட்சியாலும் இலங்கையை 50 ஆண்டுகள் அழித்த ஒரு குடும்பத்தின் உறவினன் என்பதால் எனக்கு எந்த வித சிறப்போ அன்றி பெருமையோ கிடையாது. தமிழரின் பிரச்சினைக்கும் எனக்கு இருக்கின்ற ஈடுபாட்டுக்கும் இடையில் ஏதாவது இருந்தால் அது என் குடும்பத்தினரால் உருவாக்கப் பட்ட பிரச்சினையைத் தீர்க்க நான் முயற்சிக்க வேண்டும் என்ற உந்தலே.

இலங்கைப் பிரச்சினை

இலங்கைப் பிரச்சினை மிகவும் சிக்கலான ஒன்று. இது சரித்திர, நில இயல், நில இயல் சார்ந்த அரசியல், இன, மத, பண்பாடு போன்ற காரணங்களை உள்ளடக்கி உள்நாட்டு செல்வாக்கு அரசியலுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. இலங்கைப் பிரச்சினையில் இந்திய உள்நாட்டு அரசியலின் தாக்கம் கூட நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இலங்கைப் பிரச்சினையின் மூல வரலாறுகூடத் தெரியாமல் அதைத் தீர்க்க முயற்சிக்கக்கூட முடியாது.

1. இன்று ஸ்ரீலங்கா (இலங்கை) என அழைக்கப்படும் “சிலோன்” முன்னர் ஒருபோதும் தனி நாடாக இருந்ததில்லை. அது வடக்கில் யாழ்ப்பாண (தமிழ்) ராச்சியம், நடுவில் கண்டி (சிங்கள) ராச்சியம், தெற்கில் கோட்டை (சிங்கள) ராச்சியம், ஆகிய மூன்று அரசுகளை அதாவது நாடுகளை உள்ளடக்கியது. பிரித்தானியர், கோல்புறூக்-கம்றொன் திருத்தங்கள் மூலம், 1833ல் இலங்கையை காலனித்துவ நிர்வாக வசதிக்காக, மூன்று நாடுகளையும் ஒன்றாக்கினர். அத்துடன் அரச நிர்வாகத்தையும், ஆட்சி பீடத்தையும், முழு இலங்கையையும் வளமாக்கும் அதிகாரத்தையும் சேர்த்து சிங்களத் தெற்கில் ஒன்றாக்கினர். இதனால் இவை அனைத்தும் சிங்கள அரசியல்வாதிகளிடம் பின்னர் மாறியது.

2. மலாயா, இந்தியா போன்ற பல நாடுகளில் இந்த ஒற்றையாட்சி முறை தாக்குப் பிடிக்கவில்லை. அளவில் இலங்கையின் முப்பதில் ஒரு பங்கேயான சிங்கப்பூர் ஆகவும் மலேசியா ஆகவும், மலாயா பிரிந்தது. இன்றைய இந்தியா ஆகவும், பாகிஸ்தான் ஆகவும் இந்தியா பிரிந்தது. கால நீரோட்டத்தைத் தாக்குப் பிடிக்காத இந்த ஆவணப் படுத்தப் பட்ட ஒற்றையாட்சி முறை இலங்கையில் திருத்தப் படவேயில்லை. திருத்தப் படாததன் விளைவே இரு தசாப்தங்களாக இலங்கையில் பலரைக் கொன்றழித்த அவலமான உள்நாட்டு யுத்தம் - இலங்கையின் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி - இலங்கை நாடே அழியாது தப்புவது.

3. இலங்கை சுதந்திரம் அடைந்தபின் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய கொழும்பை மையமாக வைத்து ஆண்ட அரசுகள் ஏனைய கரையோரச் சிங்கள, தமிழ்ப் பகுதிகளை திட்டமிட்டு வேண்டுமென்றே வளப்படுத்தாது புறக்கணித்தன. இந்தப் பகுதிகளில் இருந்தே 1970களில் சிங்கள, தமிழ் மக்களிடமிருந்து ஆயுதப் போராட்டங்கள் தொடங்கின.

4. இத்துடன் நில்லாது, திட்டமிட்டு படிப்படியாக சிறுபான்மைத் தமிழரின், மொழி உபயோகம், கல்வி, வேலை வாய்ப்பு, ஏன்? அவர்களின் வாழ்வுரிமை கூட 58 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு சிங்கள மேலாதிக்க அரசாலும் புறக்கணிக்கப்பட்டன. இப் புறக்கணிக்கப்பை அரசியல் லாபம் கருதி 74 வீத வாக்காளர்கள் சிங்களவர்களாக இருப்பதால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் செய்தது.

4.1. மலையக தோட்டத் தொழிலாளரின் குடியுரிமையும் அரசியல் உரிமையும் பறிப்பு

தமிழ் மலையக தோட்டத் தொழிலாளர் 2500 ஆண்டுகளாகவோ அதற்கு மேலாகவோ இலங்கையைத் தாயகமாகக் கொண்ட இலங்கைத் தமிழர்களல்லர். அவர்கள் அடிமைத் தொழிலாளர்களாக பிரித்தானியர்களால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவிலிருந்து 1830களில் கொண்டுவரப் பட்டவர்கள். இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பங்கு மிகப் பெரியது.

எதிர்க் கட்சிக்கு வாக்களித்தனர் என்ற ஒரே காரணத்துக்காக 1948ல் 10லட்சம் தமிழ் மலையக தோட்டத் தொழிலாளரின் குடியுரிமையும் அரசியல் உரிமையும் அரசினாலேயே பறிக்கப்பட்டன. இதைவிட கொடூரமான அரசியல் சட்டத்தை உலகம் என்றுமே கண்டிருக்க மாட்டாது.

நான்கு பரம்பரைகளாக இலங்கையில் வாழ்ந்த இவர்களில் அரைவாசிக்கு மேலோர் சில ஆண்டுகளின் முன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர். அண்மையில் மிஞ்சியவர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை மட்டும் பெற்றார்கள். ஆனால் இலங்கையிலே இவர்கள் சமுதாயத்தில் மிகவும் கீழ்நிலையில் உள்ளவர்களாகவும், வசதிகளற்ற சூழலில் வாழ்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இப்படி வாழ்ந்தாலும் இவர்களின் அடிமைத்தன உழைப்புத்தான் உலகவரை படத்தில் உளுந்தளவில் இருந்தும் இலங்கையை அடையாளம் காணச் செய்கிறது.

4.2. குடியேற்றத் திட்டங்கள்

புதிய விவசாயத் திட்டங்களை தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடங்கும் சாக்கில், அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய சிங்கள அரசுகள் இலங்கையின் தெற்கு மேற்குப் பகுதிகளிலுள்ள வறிய சிங்கள மக்களை தமிழர்கள் வாழும் பகுதிகளில் குடியேற்றினர். இதனால் அந்தத் தமிழ் மாவட்டங்களின் சமுதாயப் புள்ளிவிபரங்கள் சிங்களவர்களுக்குச் சாதகமாக மாற்றப்பட்டது.

4.3. மொழிப் பிரயோகங்கள்

1956ம் ஆண்டு SWRD பண்டாரநாயக்காவினால் அரசகரும மொழியாக இருந்த ஆங்கிலம், சிங்களம் மட்டும் என மாற்றப்பட்டு, தமிழை அரசகருமங்களிலிருந்து ஒதுக்கிவிட்டது. இதனால் அரசு ஊழியர்களாக இருந்த தமிழர்கள் வெகுவாகப் பாதிக்கப் பட்டனர். அரசின் “சிங்களம் மட்டும் அரசகரும மொழி@ சிங்களமும் தமிழும் தேசிய மொழிகள்” என்ற சட்டம் வார்த்தை ஜாலம் அல்லது கண் துடைப்பு மட்டுமே. ஆனால் சிங்களம் அரசகரும மொழியாகவும் தேசிய மொழியாகவும் தொடர்ந்து கொணடிருக்கிறது. இது ஒரு பெரிய இனத்தை ஓரங்கட்டுவதாக அமைந்தது.

4.4. கல்வி

SWRD பண்டாரநாயக்கா “சிங்களம் மட்டும் அரசகரும மொழிச்சட்ட விதியின் ஒரு கூறை மாற்ற முயற்சித்த போது புத்த பிக்கு ஒருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ளுறுசுனு பண்டாரநாயக்காவின் மனைவி சிறிமா பண்டாரநாயக்கா பிரதமரானார். அவரால் 1972ம் ஆண்டு பல்கலைக் கழக புகுமுகத் தேர்வில் புள்ளிகளைத் தரப் படுத்தல் என்ற சட்டம் கொண்டுவரப் பட்டது. இது பல்கலைக் கழக புகுமுகத் தேர்வில் ஒரே துறைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு மாணவர்கள் சிங்கள மாணவர்களை விடவும் கூடுதல் புள்ளிகளைப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்தச் சட்டம் இருமொழி மாணவர்களிடம் வேற்றுமை உணர்வையும், தரம் குறைந்த சிங்கள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பைக் கூட்டுவதற்கு தரம் கூடிய தமிழ் மாணவர்களின் கல்வி வாய்ப்பை இழக்கவும் செய்தது. இதனால் இது ஒரு அநீதியாக ஜனநாயக முறையில் கொண்டுவரப்பட்ட பாரபட்சமான சட்டம் மட்டுமல்ல. கல்வி ஒவ்வொருவரினதும் உரிமை@ உயர்கல்வி அனைவருக்கும் சமமாக திறமையை மட்டும் அளவுகோலாகக் கண்டு கிடைக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகளின் உலக மனித உரிமைகள் சாசன விதி 26.1 (United Nations Universal Declaration of Human Rights, Article 26.1) ஐயும் மீறுவதாக உள்ளது.

4.5. வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பும் பாரபட்சத்துக்குத் தப்பவில்லை. எழுது வினைஞர் வேலை (Clerical Service) தமிழரின் கைக்குள்ளேயே இருந்தது. அரச கூட்டுத்தாபனங்களால் (State Coporations) ஆல் 1956 தொட்டு 1970ம் ஆண்டு வரையான காலத்தில் கொடுக்கப்பட்ட 189,000 வேலைகளில் 99வீதம் சிங்கள மக்களுக்குக் கொடுக்கப்பட்டன. இதற்கு எதிர்மாறான கருத்தை இலங்கை அரசு கூறிவந்தாலும், அரச வேலைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப் படுவதும், கூடுதலான வேலைகள் சிங்களவருக்கே கிடைப்பதும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உயர் பதவிகளிலிருக்கும் சில தமிழர்களை உதாரணம் காட்டி, இலங்கை அரசு அதை மறைக்க – மறுக்க – எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் மிகத் தெளிவான ஏமாற்று வித்தையே.

4.6. வளப்படுத்தல்

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தமிழ்ப் பிரதேசங்கள் வேண்டுமென்றே வளப்படுத்தப் படாமல் புறக்கணிக்கப் படுகிறது. இந்தப் பகுதிகளுக்குச் சென்றவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி இதை அவதானித்திருப்பார்கள். இதையும், 50ஆண்டுகளின் முன்னர் நிறுவப்பட்ட இரண்டு, மூன்று தொழிற்சாலைகளை ஆதாரம் காட்டி, இலங்கை அரசு மறைக்க – மறுக்க – எடுக்கும் முயற்சிகள் கூட மிகத் தெளிவான ஏமாற்று வித்தையே.

4.7. கடல்கோள் (Tsunami)

வெளிநாடுகளிலிருந்து கிடைத்த கடல்கோள் நிவாரண உதவி நிதி எவ்வாறு உபயோகிக்கப் பட்டது என்பதைவிட தமிழர் புறக்கணிக்கப் படுவதற்கு மிகத் தெளிவான ஆதாரம் வேறேதுமில்லை. கடல்கோளினால் இலங்கையின் வடக்கு கிழக்கு நெற்றியடி வாங்கியிருந்தும், நிவாரண உதவி நிதியின் கால்வாசியை விடக் குறைவாகவே இந்தப் பகுதி பெற்றது. தமிழர்களையும் சமமாகக் கணிக்கிறோம் என்பதை நிரூபிக்க இலங்கை அரசு தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தூக்கி எறிந்து விட்டது. இது மட்டுமல்ல. தமிழர்கள் எதுவெல்லாம் நடக்கும் எனப் பயந்தார்களோ அதையும் விடக் கூடுதலாகவும் நடக்கலாம் என்பதை அரசின் நடைமுறை உறுதி செய்துள்ளது.

5. தமிழர்களின் சட்ட மறுப்புக்கள்

1956ம் ஆண்டு மிகவும் பாரபட்சம் கொண்ட அரசகரும மொழி மாற்றம் அமுல் படுத்தப் பட்டதைத் தெடர்ந்து, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் காந்தி வழி அஹிம்சைப் போராட்டம் நடத்தினர். இப் போராட்டங்கள் 95வீத சிங்களவரைக் கொண்ட காவல்துறையினரதும், 99வீத சிங்களவரைக் கொண்ட படையினரதும், முன்னிலையில் அவர்களாலேயே தூண்டப்பட்ட சிங்களக் குண்டர்களால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாக்கப் பட்டனர். சில இடங்களில் சிங்களக் குண்டர்களுடன் அவர்களும் இணைந்து கொண்டனர்.

தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முயற்சித்த, அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய சிங்கள அரசுகள் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் வேறு வேறு ஒப்பந்தங்கள் செய்தன. குறுகிய மனத்தைக் கொண்ட சிங்கள நாட்டுப் பற்றாளர்களும், சிங்கள மிதவாதிகளும் இலங்கையை சிங்கள-புத்த நாடாகவே கண்டனர். தமிழ் மக்களுக்கு ஏதாவது சலுகை வழங்கினால் அதை சிங்கள-புத்த நாட்டைத் தமிழர்களுக்கு விற்பதாகவே கண்டனர். இவர்களின் அழுத்தங்களினால் இந்த ஒப்பந்தங்கள் அனைத்துமே ஒருதலைப் பட்சமாக சிங்கள அரசுகளால் கிழித்து எறியப் பட்டன.

6. தமிழர்களைக் கொன்று குவித்தல்

தமிழர்களை வன்முறைகளால் அடிபணிய வைத்து இலங்கையை சிங்கள-புத்த நாடாக ஏற்கச் செய்ய, சிங்களவர்களின் அதிகாரத்தில் இருந்த அரசுகள் திட்டமிட்டு, படிப்படியாக தமிழர்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டன. அரசியல் தீர்வொன்றை அரசின் ஆயுத பலத்தால் திணிக்கும் முனைப்பைக் கொண்ட ஒரு முயற்சி இது.

சில இனக்கலவரங்கள் அரச கட்சிகளுக்குத் தமிழர் தேர்தலில் வாக்களிக்கவில்லையே என்னும் சிறு காரணத்தால் தொடங்கப் பட்டன. உதாரணமாக, 1977ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்த தமிழ் வாக்காளர்கள் தமிழீழம் என்ற தனித் தமிழ் நாட்டை உருவாக்க வாக்காளித்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கையின் தெற்கிலும் மேற்கிலும் இருந்த தமிழ்ப் பொதுமக்கள் கொன்று குவிக்கப் பட்டனர்.

1983ம் ஆண்டில் இனப் படுகொலை என்னும் அளவுக்குத் தமிழ்ப் பொதுமக்கள் கொன்று குவிக்கப் பட்டனர். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக 3000 தமிழர்கள் கொழும்பிலும் இலங்கையின் சிங்களத் தெற்கிலும் கொன்று குவிக்கப் பட்டனர்@ அவர்களின் வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் அழிக்கப் பட்டன. இது இலங்கை அரசால் திட்டமிடப்பட்டே நடத்தப் பட்டது என்பதற்குப் தேவைக்கு அதிகமாகவே ஆதாரங்கள் உண்டு. தமிழர்களை அழிப்பது மட்டும்தான் இதற்குக் காரணமல்ல. கொழும்பிலும் இலங்கையின் தெற்கிலும் அவர்களின் பொருளாதார நிலையைச் சரிப்பதும்கூடக் காரணமாக அமைந்தது. இலங்கையின் கறை படிந்த இக்கலவரத்தின் தலைவர்களாக நச்சுப்பாம்பாக தமிழரை எதிர்த்த அன்றைய தொழில்துறை அமைச்சராக இருந்த சிரில் மத்யூவும், புத்தகுருமாரில் சிங்கள மிதவாதத்தில் ஊறிய பகுதியின் எல்ல குணவன்சவும் இருந்தனர்.

இனப் படுகொலைத் தடுப்பும் தண்டனையும் (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) என்ற சாசனம், இனப் படுகொலையை, ஒரு தேசியத்தை, ஒரு இனத்தை, ஒரு குலத்தை, அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை முழுமையாகவோ அல்லது அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிக்கும் முகமாக எடுக்கப்படும் நடவடிக்கை என இலக்கணம் கூறுகிறது. இந்தச் அனைத்துலகச் சாசனத்துக்கு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. இந்த வரைவிலக்கணத்தின் படி இலங்கையில் 1983லும் அதன் பின்னரும் தொடர்ந்த இனக்கலவரங்கள் அனைத்தும் இனப் படுகொலைகளே.

1956, 1958, 1977, 1981, 1983 ம் ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்களில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டனர். 1983ம் ஆண்டின் பின்னர் பல்லாயிரக் கணக்கில் இலங்கையின் வடக்கு கிழக்கில் கொல்லப் பட்டவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

(7. தமிழ் ஆயுதப் போராட்டம்... தொடரும்)

http://www.tamilbrisbane.com/content/view/108/1/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.