Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை" - ஔவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நேர்காணல் "பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை" - ஔவை   சந்திப்பு: கருணாகரன்

Avvai-Image-1.jpg

 

ஔவை நவீனத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவர். 1980களில் ஈழத்தில் எழுந்த பெண்கவிஞர்களின் எழுச்சியோடு எழுத வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்துப் புதிய நோக்கில் சிந்திக்கும் வழியைத் திறந்துகொண்டு வந்த ‘சொல்லாத சேதிகள்’ அணியில் முக்கியமானவர்.

 

 

25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகின்றபோதும் ‘எல்லை கடத்தல்’ என்ற ஒரு கவிதை நூல் மட்டுமே இதுவரையில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து எழுத்திலும் களச் செயற்பாடுகளிலும் இயங்கி வருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று, பின்னர் ஆசிரியர் பணி, கல்விச் செயற்பாடுகள் எனத் தொடர்ந்து பணியாற்றி வரும் ஔவை, கொந்தளிக்கும் அரசியல் சுழற்சிகளில் நெருக்கடிகளைச் சந்தித்தவர், அபாய நிலைகளை எதிர்கொண்டவர், என்றபோதும் தன்னுடைய ஜனநாயக அடித்தளத்தைச் சிதைவுற விட்டதில்லை.

 

ஈழத்து நவீனக் கவிதைகளின் முன்னோடி மஹாகவியின் மகளான ஔவை, இன்னொரு முக்கிய ஈழக் கவிஞரான சேரனின் சகோதரி. ஔவையின் கணவர் எஸ்.கே. விக்னேஸ்வரன் முக்கியமான எழுத்தாளர். ஊடகச் செயற்பாட்டாளர்.

 

எழுத்துக்கும் உங்களுக்குமான உறவு, நீங்கள் கவிதை எழுதத் தொடங்கிய சூழல்?

 

 

எனது மனதுக்கும் உணர்வுக்கும் மொழிக்குமான உறவுதான் எனது எழுத்து. பாடசாலைக் காலத்தில் கவிதைப் போட்டிகள் நடைபெறும். பெரும்பாலும் அவை திறந்த போட்டிகளாகவே நடைபெறும். இதனால் நான் ஒருபோதும் சிறு வயதில் போட்டிகளுக்குச் செல்லவில்லை. 1983இல் கல்விப் பொதுத் தராதரம் உயர்தரத்தில் இருக்கும்போது கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசைப் பெற்றிருந்தேன். அதுவே கவிதை எழுதுவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்தியது. நாட்டில் அக்காலத்தின் அரசியல் சூழல் மிக வேகமாக மாறிக்கொண்டிருந்தது. ஈழத்திலிருந்த மக்களின் மனங்கள் எரிந்துகொண்டிருந்தன. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. எனது உணர்வுகளைக் கவிதைகளாக்கினேன். இக்காலத்தில் பெண்கள் பலரும் கவிதையில் ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். எனது வீட்டுச்சூழல், பாடசாலைச் சூழல், கிராமம் மற்றும் இந்தக் காலகட்டம் இவை எல்லாமும் சேர்ந்துதான் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொள்ளச் செய்தன எனலாம்.

 

1985களில் பல்கலைக்கழகம் சென்றபோது அக்காலத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த ஊர்வசி, சிவரமணி, செல்வி போன்றவர்களின் நட்பு கிடைத்தது. நாங்கள் எல்லோரும் பெண்கள் ஆய்வு வட்டத்தில் சேர்ந்திருந்தோம். அடிக்கடி நாங்கள் சந்திப்பதற்கான சூழல் இருந்தது. இலக்கியத்தின் மற்றெல்லா வெளிப்பாட்டு வடிவங்களையும்விட கவிதையே அக்கால அரசியல் சூழலில் மிகவும் சக்திவாய்ந்த வடிவமாக எமக்குத் தோன்றியது. அந்த அரசியல் சூழல் ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்துப் புதிய நோக்கில் சிந்திப்பதற்கான வழியைத் திறந்துவிட்டிருந்தது. இதுவே பெண்நிலை நின்று, உலகை நோக்கி, எம் உணர்வுகளை வெளிப் படுத்தக் கவிதையே பொருத்தமான சாதனமாக தெரிந்தமைக் கான சூழலாகும்.

 

அக்காலத்தில் சின்னண்ணா(சேரன்)வின் கவிதைகள் புத்தகங்களாக வெளிவரத் தொடங்கியிருந்தன. அவை எல்லோராலும் மிகவும் பாராட்டப்பட்டன. இது மிகவும் மகிழ்வையும் உற்சாகத்தையும் என்னுள் ஏற்படுத்தியது. கவிதைகள் சிலவற்றை எழுதி சின்னண்ணாவிடம் காட்ட ஆரம்பித்தேன். மிக அரிதாகவே அவற்றில் திருத்தம் செய்து தருவார். இது தொடர்ந்து கவிதை எழுதும் நம்பிக்கையைத் தந்தது.

 

 

 

ஈழத்தின் எண்பதுகளின் கவிதைச் சூழலுக்கும் இன்றைய கவிதைச் சூழலுக்கும் இடையிலான வேறுபாடுகள்?

Avvai-Image-2.jpg

 

எண்பதுகளின் கவிதைச்சூழல் ஈழத்தின் பாரம்பரிய கவிதைச்சூழலில் இருந்து மிகவும் வேறுபட்டது. இன ஒடுக்குமுறையின் தீவிரம் மிக அதிகமாக வெளிப்படத் தொடங்கியிருந்த காலம் அது. அதற்கு எதிரான உணர்வும் போராட்ட வேகமும் தீவிரமடையத் தொடங்கியிருந்தன. புதிதுபுதிதாக விடுதலை இயக்கங்கள் உருவாகிக்கொண்டிருந்தன. விடுதலை இயக்கங்களுக்குப் பெண் போராளிகளின் அவசியம் உணரப்பட்டது.

 

விடுதலை இயக்கங்களில் பெண்கள் அமைப்புகள் உருவாகின. பெண்கள் மத்தியில் பெண் அடையாளம் பற்றிய சிந்தனைகள் பற்றிக்கொள்ளத் தொடங்கின. பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான குரல்களும், விடுதலையை வேண்டி நிற்கின்ற, விடுதலைப் போராட்டத்தை முதன்மைப்படுத்துகின்ற கருத்துக்களும் கவிதைகளின் பாடு பொருளாகிற்று. வாழ்வும் மரணமும் காதலும் பிரிவும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்த அங்கங்களாகி புதிய பரிமாணத்துடன் பேசப்பட்ட காலம் அது.

 

 

சொல்லாத சேதிகளுக்குப் பின்னர் ஈழப்பெண் கவிதைகள் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் கண்டிருக்கும் மாற்றங்களும் வளர்ச்சியும்?

 

உண்மையில் 80களில்தான் முதன்முதலாக ‘பெண்ணிய சிந்தனை’ என்ற சிந்தனை மரபு தமிழில் அறிமுகமாகியது. சமூகம், அரசியல், பண்பாடு, இலக்கியம், வாழ்வுமுறை என்று எல்லாவிடயங்களையும் பெண்ணிய அடிப்படையில் நோக்க வேண்டிய அவசியமான சிந்தனைமுறையாக இச்சிந்தனை வளர்ச்சி பெறத் தொடங்கியது. இதுவே கவிதைகளின் மொழியில், அதன் சிந்தனையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இது ஒரு முக்கியமான வளர்ச்சி என்றே கருதுகிறேன்.

 

சாதி, இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து பெண் என்ற அடிப்படையில் நின்று சிந்திக்கும் உலகப் பொதுவான போக்குடன் தமிழ்க் கவிதையும் இணைந்துகொண்டது. இது ஈழப்பெண் கவிதைகளின் ஒரு முக்கியமான மாற்றம் என்றே நம்புகின்றேன்.

 

இந்த மாற்றங்களுக்கு அல்லது வேறுபாடுகளுக்கு என்ன காரணங்கள்?

சமூகத்தின் வாழ்வு அனுபவ மாற்றமே இவ்வேறுபாடுகளுக்கான பிரதான காரணம் என்று நினைக்கிறேன். நாட்டில் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைந்ததும், பெண்கள் பெருமளவில் போராளிகளாக மாறியதும், அவர்கள் குடும்பத்திலும் சமூகமட்டங்களிலும் தனியாக தலைமைப் பொறுப்பேற்று செயற்பட வேண்டிய நிலைமைகள் உருவாகியதும்கூட இவ்வேறுபாடுகளுக்குக் காரணம் என்று சொல்லலாம்.

 

என்னைப் பொறுத்தவரை இந்த வேறுபாடு ஒருவகையில் வளர்ச்சி என்றே சொல்வேன். ஆனால் பெண்ணிய சிந்தனைகள் வளர்ந்த வேகத்தில், சமூக அரசியல் ரீதியான சிந்தனைகள் (குறிப்பாக விடுதலைப் போராட்டம் தொடர்பான சிந்தனைகள்) வளர்ச்சி அடையவில்லை என்றே நினைக்கின்றேன். அவற்றுக்கு அவசியமான கோட்பாடுகளோ, விவகாரங்களோ வெகுசனமட்டத்தில் வளராமை, அதை மரபார்ந்த அரசியல் சிந்தனைக்குள்ளேயே முடக்கிவிட்டது என்று தோன்றுகிறது.

 

 

‘சொல்லாமல் போகும் புதல்வர்கள்’ காலத்தின் அடையாளம். அது யதார்த்த நிலை. எண்பதுகளில் ஈழத்தில் பெரும்பாலான குடும்பங்களில், அநேகமான தாய்மார் அனுபவிக்க - எதிர்கொள்ள வேண்டியிருந்த வாழ்க்கை அது. இந்தக் கவிதை உங்களுக்கு பெரும் அறிமுகத்தைத் தந்தது. இன்றைய நிலையில் இந்தக் கவிதையைக் குறித்து உங்களுடைய மறுபார்வை என்ன?

 

Avvai-Image-3.jpg

 

 

அது அன்றைய யதார்த்த நிலை. நான் அப்போது கல்விப் பொதுத் தராதரம் உயர்தரத்தில் கற்றுக்கொண்டிருந்தேன். எனது நண்பர்களும், அறிமுகமான - அறிமுகமற்ற மாணவர்களும் தமது துவிச்சக்கர வண்டிகளை மரத்துக்கு கீழே சாத்திவிட்டு டியூசனுக்கு வரும் வழியில் இயக்கத்திற்குச் சென்றுவிடுவார்கள். அப்போதிருந்த எல்லா இயக்கங்களுமே விடுதலைப் போராட்டத்திற்கு அங்கத்தவர்களைப் பெருமளவில் சேர்த்துக்கொண்டிருந்தன.

 

எங்களுடைய பாடசாலைகளில்கூட திடீரென உள்ளே வந்து மாணவர்களைத் திரட்டிக் கூட்டம் நடைபெறும். அதிபரோ, ஆசிரியர்களோ அதில் தலையிட முடியாது. அவ்வாறே அச்சூழல் இருந்தது. 84இல் இவ்வாறு நடைபெற்ற ஒரு விடுதலை இயக்கத்தின் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டிருந்தேன். மிக இயல்பாக மாணவர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளித்தார்கள். நானுட்பட பல மாணவர்கள் இயக்கத்தில் இணையப் பெயர் கொடுத்தோம். எனக்கு இயக்கம் சம்பந்தமான முதலாவது நேரடி அனுபவம் அதுதான்.

 

ஆனால் விரைவிலேயே துரதிருஷ்டவசமாக எமது விடுதலைப் போராட்டம் திசைமாறியது. ‘சொல்லாமல் போகும் புதல்வர்கள்’ என்று பெருமிதம் கொள்ள முடியாமல் தாய்மார் தமது பிள்ளைகளைத் தேடி அலைந்தார்கள். வீட்டுக்குள் ஒளித்து வைத்தார்கள். ஆம். இயக்கங்கள் தம்முள் மோதிக்கொள்ளத் தொடங்கின. இயக்கப் படுகொலைகள் மிகவும் கொடூரமாக நடந்தேறின. பின்னர் தனி ஆவர்த்தனமாக போராட்டம் தொடர்ந்தது.

 

தேசத்து தாய்மார் ‘பிள்ளைபிடிகாரர்’களுக்குப் பயந்து கதறும் நிலை யதார்த்தமாக மாறியது. என்னைப் பொறுத்தவரை இவை எல்லாம் யதார்த்த நிலைகள். எல்லா யதார்த்தங்களையும் எனது கவிதைகளில் காணலாம்.

 

‘சொல்லாமல் போகும் புதல்வர்கள்’ கவிதையில் போருக்கு வழி அனுப்பிய அதே தாய்தான் பின் ‘இன்னுமா தாய்நிலம் புதல்வர்களைக் கேட்கிறது?’ என்று கேட்கிறாள்.

 

எமது மக்களது சராசரி வாழ்வின் யதார்த்தம்தான் எனது கவிதை மையம். இதனால் அந்தக் கவிதை பற்றி எந்த விதமான மறுபார்வையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. கவிதைகள் அந்தந்தக் காலத்தின், வாழ்வின் உணர்வுடனும் சிந்தனையுடனும் இணைந்து நோக்கப்பட வேண்டியவை.

 

 

ஈழத்துக் கவிதைகளைப் பொறுத்து, பெண்மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

 

‘பெண்மொழியில்’ என்று சொல்வதே மாற்றம்தானே. அப்படி ஒரு மொழியை எண்பதுகளுக்கு முன் யாரும் அறியார். இப்போது அதுபற்றி நிறையப் பேசுகிறோம், எழுதுகிறோம், சொற்களை மாற்றுகிறோம். புதிதாக உருவாக்குகிறோம். இவையெல்லாம் பெரிய மாற்றங்கள் தான். ‘பெண்ணிலை’ தொடர்பான பிரக்ஞையின் அடுத்தகட்ட வளர்ச்சிநிலைதான் பெண்மொழி.

 

இப்போது பெண்கள் தமது உணர்வுகளை உண்மையாக, வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஆண்மொழியின் புகழ்ந்துரைக்கும் சொற்களினூடாக அது தனக்கு அங்கீகாரத்தைத் தேடவில்லை. இது முக்கியமான மாற்றம். ஆனால் இது இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை. ஆனால் அந்த நிலை வந்தே தீரும். பெரும்பாலான ஈழத்தமிழ் ஊடகங்கள் பெண்மொழியில் கவனமெடுத்துச் செயற்படுவது இன்று ஓரளவுக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இது மேலும் வளர வேண்டுமாயின், பெண் படைப்பாளிகளின் அக்கறையான செயற்பாடு அவசியமாகும்.

 

 

வாழ்க்கை, சிந்தனை, எழுத்து என்ற தளங்களில் தமிழ்ப் பெண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்?

 

தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை, சிந்தனை, எழுத்து எல்லாவற்றிலும் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 83க்குப் பின்னர் பெருமளவு இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். இவர்களின் திருமணத்திற்கு இங்கிருந்து பெண்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். தாலி, கூறையுடன் பெண்கள் சென்று, முகம் தெரியாத ஒரு ஆளைத் திருமணம் செய்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இக்காலத்தில் இவர்கள் பல வகையான இன்னல்களுக்கு உட்பட்டனர். தாம் வாழ்ந்த வாழ்விலிருந்து முற்றிலும் புதியதான ஒரு வாழ்வை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஒரு பகுதியான பெண்களுக்கு ஏற்பட்டது.

 

இரண்டாவது வகையாக, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் குறிப்பிடலாம். இவர்களின் நிலையும் மிகவும் அவலமானதுதான்.

 

போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் வீரப்பெண்களாக நோக்கப்பட்டவர்கள், பின் பிரச்சினைக்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள். சாதாரண வாழ்க்கைக்குள் மீளவும் திரும்பவேண்டிய நிலை உருவாகியபோது இவர்களது வாழ்வும் சிந்தனையும் முரணாகிற்று. உண்மையில் சொல்லப்போனால், 83க்குப் பின்னர் பெண்கள் வாழ்க்கை, சிந்தனை, எழுத்து எல்லாவற்றிலுமே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு பெண்களும் இதற்கு மிகப்பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள்.

 

மூன்றாவதாக 83க்குப் பின்னரே விதவைப் பெண்களின் தொகை மிகவும் அதிகரித்தது. அதிலும் இளம் பெண்கள். சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்தவர்கள் ஆண்துணை இழந்து, வருமானம் இன்றி, பாதுகாப்பின்றி வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதைப் பல புள்ளிவிபரங்களில் நீங்கள் பார்க்கலாம்.

 

இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வும் அவர்களது சிந்தனையிலும் நடைமுறையிலும் இன்று பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவைபற்றிப் பெண் எழுத்தாளர்கள் தமது படைப்புக்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

உண்மையில் இது மிக விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று.

 

 

முஸ்லிம் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்து? அவற்றுக்கென்று வேறுபட்ட தன்மைகள், அடையாளங்கள் எப்படியானவை?

 

 

முஸ்லிம் பெண் கவிஞர்களின் கவிதைகள் தனித்துவமானவை. அவர்களது கவிதைகளின் களம், கருப்பொருள், கையாளும் மொழி, வெளிப்படுத்தும் விதம் என்ற எல்லாவற்றிலும் தனித்துவம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.

 

நீங்களே ‘முஸ்லிம் பெண் கவிஞர்கள்’ என்று குறிப்பிடுகின்றீர்களே! எப்படி? பிறப்பால் அவர்கள் முஸ்லிம் என்பதாலா? இல்லை. தமிழ்ப் பெண் கவிஞர்கள், முஸ்லிம் பெண் கவிஞர்கள் என்று பெண்களின் தமிழ்க் கவிதைகளை வகைப்படுத்தும் அளவுக்கு அவற்றில் சமூக, அரசியல், கலாச்சார தனித்துவங்கள் இருப்பதை நாம் காணலாம். அதேவேளை அவர்கள் அனைவரும் பெண்ணாக இருப்பதன் ஒற்றுமையையும் கவிதைகளினூடு நாம் அவதானிக்கலாம்.

 

 

மஹாகவி, சேரன் ஆகிய இரண்டு படைப்பு ஆளுமைகள் உங்களின் குடும்பத்தில் இருந்துள்ளனர். இவர்களில் உங்களை ஈர்த்தது, உங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது யார்?

Avvai-Image-4.jpg

 

நானும் கவிதைகள் எழுதுவதால் அப்பாவையும் சின்னண்ணாவையும் குறிப்பிட்டுக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் எனது இலக்கிய உலகு, கவி உலகு எல்லாம் சின்னண்ணாதான். அவரது கவிதைகள் என்னை மிகவும் பாதித்தன. அவருக்குத் தெரியாமலே அவரது கவிகளின் முதல் வாசகியாக இருந்தேன். ஆனால் எனது ஆளுமை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்ததும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தியதும் அம்மாவும் குட்டி அண்ணாவும்தான். அவர்களது அன்பும் அரவணைப்பும் கோவமும்தான் என்னை ஆரோக்கியமாக வாழவைத்தன. இவர்கள் இருவரும் இல்லை என்றால் இன்று நான் இப்படி இருந்திருக்கமாட்டேன்.

 

மஹாகவியை நீங்கள் எப்படி அறிந்தீர்களோ அப்படித்தான் நானும் அறிந்தேன். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அப்பாவின் கவிதைகளினூடாகவே நான் அப்பாவை உணர்ந்தேன், அறிந்தேன்.

 

 

உலக அளவில் பெண் குரல்கள், தமிழ்ப் பெண் குரல்கள், ஈழத்துப் பெண் குரல்கள் என உள்ள மூன்று அமைவுகளிலும் உங்கள் பார்வை?

 

உலக அளவில் பெண் குரல்கள், தமிழ்ப் பெண்குரல்கள், ஈழத்துப்பெண் குரல்கள் என்ற மூன்றுக்கும் பொதுவாக நிற்பது ‘பெண்’ என்ற தனித்துவ அடையாளம் அல்லது உணர்வு என்று சொல்லுவேன்.

 

ஆனால் ஈழத்துப்பெண் கவிதைகளில் இன ஒதுக்கல், யுத்தம், இடப்பெயர்வு போன்றவற்றின் வடுக்களும் தாக்கங்களும், அவற்றின் அனுபவங்களும் சேர்ந்து வெளிப்படுகின்றன. இது காலத்துடனான மாற்றம். தவிர்க்க முடியாதது.

 

இன்று உலக அளவிலான பெண் குரல்கள், பெண்நிலை நின்று உலகை நோக்கி அவர்களது தனிப்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் கவிதைகளாகத் தருகின்றன. பெண்களின் கவிதைகள் பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து வருகின்றன. பெண்களின் கவிதைகள் வெளிவர வேண்டும் எனப் பத்திரிகை நடத்துபவர்களும் இப்போது விரும்புகிறார்கள். அதற்காகத் தேடுதல் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இது பெண் எழுத்தாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலாகும்.

 

ஈழப் போராட்டத்தில் அதிகம் வலிகளையும் பாடுகளையும் சுமந்தவர்கள் பெண்களே! தாயாக, மனைவியாக, சகோதரியாக எனக் கண்ணீர் வடித்துக் கொண்டேயிருந்தவர்கள். இன்னும் கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதைவிடப் பெண் என்ற காரணத்தினால் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிக நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள் பெண்களே. இந்தத் துயரநிலையைப் பற்றி . . .

 

காதலியாகவும்கூட என்று சேர்த்துக்கொள்ளுங்கள்.

 

எமது சமூகத்தில் பெண்ணுக்கு வாழ்வே ஒரு சுமைதான். யுத்தத்தில் முக்கியமான பலி கடாவாக பெண்ணே அமைகிறாள். யுத்தம் என்பது ஆண்களுடையது என்றும் ஆண்களின் வீரத்தை வெளிப்படுத்தும் ஒன்று எனவும்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் இடம் அங்கேயும் இரண்டாம் தரம்தான். எனவேதான் பாடுகளை அனுபவிப்பவளாக அவள் அமைந்துவிடுகிறாள். குடும்பம், சமூகம் என்று எல்லா மட்டங்களிலும் பெண்களின் நிலை இன்னமும் சுயாதீனமாக மாறிவிடவில்லை.

 

பொருளாதார சுயாதீனம், சமூகப் பண்பாட்டு அம்சங்களில் சமத்துவம் என்பவை இன்னமும் பெண்களின் கனவுகளாகவே உள்ளன. எனவே கண்ணீரும் துயரும் அவர்களது தவிர்க்க முடியாத விதியாக இருந்துவருகிறது.

 

இந்த இடத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தை உங்களுடன் பகிர வேண்டும் என விரும்புகிறேன். 1987ஆம் ஆண்டு (மிஜீளீயீ) இந்திய அமைதிப் படை யாழ்ப்பாண ஒழுங்கைகளின் மூலை முடுக்குகளெல்லாம் திரிந்துகொண்டிருந்த காலம். நான் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். உக்கிரமான சண்டையினால் யாழ் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. எங்கள் வீட்டில் நானும் அம்மாவும் அம்மம்மாவும் மட்டும்தான். இந்திய இராணுவத்திற்குப் பயந்து எங்கள் வயதுப் பெண்கள் கால்முட்ட நீளப்பாவாடை கட்டிக்கொண்டு எந்த நேரமும் இருந்தோம்.

 

கோயில்களில் எல்லோருமாகச் சென்று கூடியிருந்தோம். சிலவேளைகளில் சமைப்பதற்காக மட்டும் வயதான பெண்கள் வீட்டுக்கு வந்து சோறும் சாம்பாரும் வைத்து எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றுவிடுவார்கள்.

 

ஒரு நாள் நானும் அம்மாவும் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தோம். அம்மா எங்கள் வீட்டில் இருந்து சிறு தூரத்திலிருந்து அயலவர் ஒருவரின் வீட்டுக்குச் சீனி வேண்டுவதற்காகச் சென்றார். சிறிது நேரத்தில் நாய்கள் பலமாகக் குரைத்தன. அம்மா மூச்சு வாங்க ஓடியபடி என்னையும் இழுத்துக்கொண்டு கட்டிலுக்கடியில் பதுங்கினா. ஒரு இருபது நிமிடத்திற்குப் பின் நாய்கள் குரைத்து ஓய்ந்தது. ‘ஆமிக்காரர் போட்டான்கள். வா கெதியா கோயிலுக்கு ஓடுவம்’ என்று அம்மா சொல்லிவிட்டு வாசலுக்குப் போனா.

 

‘அக்கா!’ என்று அலறியபடி எங்கள் பெண் ஒருவர் ஓடிவந்து அம்மாவைக் கட்டிப்பிடிச்சபடி அழுதா. ‘அவங்கள் அஞ்சாறுபேர் என்னை அநியாயம் செய்திட்டாங்கள்’ என்று கூறியபடி நடக்க முடியாமல் வாசலில் இருந்தா. அவ நான்கு பிள்ளைகளின் தாய். வீட்டு வாசலில் கணவனின் தந்தை இருந்திருக்கிறார். பிள்ளைகளும் தாயுடன் இருந்திருக்கிறார்கள்.

 

‘அம்மா அவவை ஆறுதல்படுத்தி, சத்தம் போடாதை. யாருக்கும் சொல்லாதை. தண்ணியைக்குடி, கோயிலுக்குப் போவம்’ என்று சொன்னா. நான், அம்மா இருவருமே யாருக்கும் சொல்லவில்லை. ஆனால் ஊர் அறிந்தது. கணவன் கிளிநொச்சிக்குச் சென்று தட்டுப்பாடான பொருட்களைக் கொண்டுவந்து மனைவியிடம் கொடுக்க மனைவி வீட்டிலிருந்து விற்று வந்த பணத்தில் வாழ்க்கையை ஓட்டும் வறுமையான குடும்பம் அது.

 

இந்தச் சம்பவத்தின் பின்னர் அவர்கள் கிளிநொச்சிக்குச் சென்றுவிட்டார்கள். ஐந்து அல்லது ஆறு வருடங்களின் பின் அவர்களைப் பற்றி தெரிந்தவரிடம் விசாரித்தேன். “கணவன் மனைவியைக் கைவிட்டிட்டார். அவ நான்கு பிள்ளைகளுடனும் சரியாகக் கட்டப்படுகிறா. எல்லாம் பழைய இந்தியன் ஆமிப்பிரச்சினைதான்’ என்று சொன்னார்.

 

இதுதான் பெண்களின் நிலை. பெரும்பாலான பெண்களின் கண்ணீருக்கும் துயருக்கும் பிரதான காரணம் உடைமை, உறவுகளின் இழப்பு என்பவற்றுக்கு மேலாக அவர்களது எதிர்கால வாழ்வின் மீதான சவால்கள்தான் என்று நினைக்கிறேன். பெண் தனியாகவும் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் தனித்துவமாகவும் வாழ்வதற்கு உகந்ததாக இந்தச் சமூகம் மாறாதவரை இந்த நிலைமைக்கு விடிவு இல்லை. துரதிஸ்டவசமாக எமது நாட்டின் விடுதலைப் போராட்ட அரசியல் இந்தப் பக்கம் பற்றி விழிப்பற்றதாகவே இருந்து வந்திருக்கிறது.

 

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் உளநிலைப் பாதிப்பும் சமூகநிலைப் பாதிப்பும் மிக அதிகம். இளவயதில் கணவனை இழந்தவர்கள் மிகக் கூடுதலாக உள்ளனர். இவர்களுடைய வாழ்க்கை இன்று ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கு. இந்தப் பெண்களைக் குறித்து பிற பெண்களிடத்தில் எந்தச் சிந்தனையையும் காண முடியவில்லை. இதைக் குறித்து?

 

யுத்தத்தின் பின்னரான மறுவாழ்வு குறித்து விவாதிப்போர் பலரும் பொருளாதார உதவி என்ற மட்டத்துடன் நின்றுவிடுகின்றனர். கலாச்சார, பண்பாட்டு மாற்றங்களுக்கான செயற்பாடு அறவே இல்லாதிருக்கிறது. இந்த நிலையில் ஆண்களிடமும் சரி, பெண்களிடமும் சரி சிந்தனையில் மாற்றத்தைக் காண முடியாது. உண்மையில் சிந்திப்பவர்களது கூட்டியக்கமும் போராட்டமும் இதற்கு அவசியம். இன்று எமது நாட்டில் மிக ஆபத்தான, ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது.

 

இது இவ்வாறான கூட்டியக்கத்திற்கும் போராட்டத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நான் நினைக்கிறேன், ஒரு உறுதியான மாற்று அரசியல் எழுச்சியுடன் சேர்ந்தே இவை வளர்ச்சி பெற முடியும் என. ஆனால் எங்களது தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அரசியல் சிந்தனையானது, மாற்றுக் கருத்துக்களை எதிரிக் கருத்துகளாகவே நோக்குகிறது. இதனால்தான் எமது போராட்டம் நீண்ட காலம் நடந்தபோதிலும் சமூகம் முழுவதும் திரண்டு பொது நோக்கில் செயற்படும் நிலையை உருவாக்க முடியவில்லை.

 

 

இன்று சர்வதேச அளவில் பெண்கள் சந்திக்கும் நெருக்கடிகள்?

 

ஒரு பெண் பெண்ணாக இருந்தபடி சரிநிகர் சமானமாக வாழ்வதற்காகச் செயற்படும்போதுதான் பாலியல் நெருக்கடிகள் தோன்றுகின்றன. பாருங்கள், ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் பாலியல் வல்லுறவும், கொலையும் பற்றிய தகவல்கள் வெளிவருகின்றன. பெண்ணாக இருப்பதால்தான் இப்பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. இன்னும் பெரும்பாலானவர்கள் இவை பற்றி என்ன கதைக்கிறார்கள் தெரியுமா? “ஏன் அவர்கள் தனிய வீட்டில் இருக்கிறார்கள்? இரவில் தனியா போகக்கூடாதுதானே?” இவ்வாறான கதைகளைத்தான் எல்லாமட்டத்தவர்களிலும் கேட்கக்கூடியதாக இருக்கிறது. பாதுகாப்பற்ற சூழல் பற்றியோ, பெண்களின் உரிமைபற்றியோ கதைப்பவர்கள் மிகக் குறைவு.

 

மிக அண்மையில் டெல்லியில் நடந்த சம்பவம், இலங்கையில் மண்டைத்தீவில் நான்கு வயதுச் சிறுமிக்கு நடந்த சம்பவம் இவையே எல்லாம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை எமக்குப் புரியவைத்திருக்கும். இவை மட்டுமல்ல. பத்திரிகைகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இவ்வாறான சம்பவங்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. சில சம்பவங்கள் மட்டும்தான் உலக அரங்கில் பேசப்படுகின்றன. அதற்கு எதிராகத்தான் குரல் எழுப்பப்படுகின்றன. ஏனையவை சம்பவங்களாகிவிடுகின்றன. அரசும் சட்டமும் இந்த விடயங்களில் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும். இது ஒரு பயங்கரமான நிலைமை.

 

பொதுமதிப்பீடுகள் எல்லாம் கவர்ச்சிகரமாக உள்ளன. ஆனால் உண்மை நிலை அப்படியில்லை. பால்நீதியில் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு உண்டு என்பது சட்டபூர்வமாக அனேகமாக எல்லா நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர்களது அறிவு, ஆற்றல், உரிமைகள் என்ற பலவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இவை மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

 

ஆனால் பால்நிலை சார்ந்த சமத்துவம் உருவாகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. அதிலும் மூன்றாம் உலக நாடுகளில் இது மிகவும் மோசமான நிலையிலுள்ளது. பெண் பற்றிய சமூகத்தின் உள்ளார்ந்த மதிப்பீடு, அவள் ஆண்களின் போகப்பொருள் என்ற அடிப்படைச் சிந்தனையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்றே நினைக்கிறேன்.

 

 

தமிழ்ப் பெண்கள் இப்பொழுது உலகத்தின் பல திசைகளிலும் வாழ்கிறார்கள். வரையறுக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்களுக்கான சமூக, பண்பாட்டுச் சூழலில் இந்தப் பரந்த தள வாழ்க்கை எத்தகைய மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கு?

 

பரந்த தள வாழ்வு புதிய அனுபவங்களையும், சிந்தனைகளையும் நம்பிக்கை, துணிவு என்பவற்றையும் பெண்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன். இது தமிழ்ச் சமூகப் பண்பாட்டுச் சூழலில் பெரிய அதிர்வுகளை ஆரம்பத்தில் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் காலப்போக்கில் தமிழ்ச் சூழலை வடிவமைப்பதில் இவையே பங்காற்றக்கூடிய நிலைமையும் இருக்கிறது. இது பெண்களைப் பொறுத்தவரை விடுதலைக்குரிய சூழலையே உருவாக்கும்.

 

 

நீங்கள் கல்வித்துறையிலும் செயற்படுகிறீங்கள். இலங்கையின் கல்விமுறை, இந்தக் கல்வி முறையின் ஊடாக அடைகின்ற பெறுபேறுகள் எப்படியிருக்கு?

 

இலங்கையின் கல்வித்துறை அறிவாளிகளையும் நிபுணர்களையும், நிலவும் பண்பாட்டின் காவலர்களையும் உருவாக்குவதையே செய்துவருகிறது. மாணவர்கள், துறைசார் அறிவைப்பெற்று வளர்ச்சி பெற்று உலக அளவில் மெச்சத்தக்கவர்களாக வர முடியுமாயினும் சுயசிந்தனை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கக்கூடிய பிரஜைகளாக வருவதற்கான சாத்தியங்கள் பாடசாலைக் கல்வியில் அரிதாகவே உள்ளன.

 

யுத்தகாலக் கவிதைகள் பற்றிச் சொல்லுங்கள்.

 

யுத்தகாலக் கவிதைகள் மூன்று அம்சங்களைக் கொண்டு வந்துள்ளன. ஒன்று யுத்தம் பற்றியவை. இரண்டாவது மனித அவலம் பற்றியவை. மூன்றாவது பெண்கள் பற்றியவை. இம்மூன்றும் ஒன்றுக்குள் ஒன்று கலந்தும், தனித்தும் வெளிப்பட்டிருகின்றன. ஈழத்துக் கவிதைகளில் இவற்றை நாம் அனேகமாக எல்லோரது கவிதைகளிலும் காணலாம். ஆண் கவிஞர்கள் உட்பட.

 

பொதுக் கருத்து நிலை சார்ந்து, பொதுச் சூழல் சார்ந்து எழுதப்படும் கவிதைகள் ஒருவகை. தன்னனுபவம் சார்ந்து எழுதப்படும் கவிதைகள் இன்னொரு வகை. இதில் எதை நீங்கள் விரும்புறீங்கள்?

 

அப்படி பிரத்தியேகமான விருப்பம் எதுவும் கிடையாது. கவிதை எழுத வேண்டும் என்ற அளவுக்குத் தூண்டும் அனுபவம் எதுவும் எனக்கு ஒன்றுதான். கவிதை அனுபவப் பகிர்வாக அமையக் கூடியதாக, உணர்வை, அறிவை, சிந்தனையை அருட்டக்கூடியதாக அமைய வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன இரண்டு விதமான கவிதைகளையும் நானும் எழுதியிருக்கிறேன்.

 

உங்கள் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்கள் உங்களுக்கும் உங்களுடைய கவிதைகளுக்கும் தந்திருப்பதென்ன?

 

என்னுடைய கவிதைகள் தொடர்பாகவும் அதே நிலைதான். விமர்சனம் என்று பெரிதாக ஒன்றும் வெளி வரவில்லை. பாராட்டு அல்லது வசை. அவ்வளவுதான் விமர்சனம். எனது கவிதைகளில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதென்றால் அது விமர்சனத்தால் அல்ல, நானாக ஏற்படுத்திக்கொண்ட ஒன்று என்றே சொல்ல வேண்டும்.

 

 

http://www.kalachuvadu.com/issue-160/page40.asp

  • கருத்துக்கள உறவுகள்
சேர‌னின்ட‌ ஒரு சகோதரியின் கணவர் புலிகள் சுட்டு இறந்தார் என கேள்விப் பட்டேன்...அது இந்த சகோதரி இல்லைத் தானே :unsure:

 

சேர‌னின்ட‌ ஒரு சகோதரியின் கணவர் புலிகள் சுட்டு இறந்தார் என கேள்விப் பட்டேன்...அது இந்த சகோதரி இல்லைத் தானே :unsure:

 

 

ஒளவையின் கணவர் 'விக்கினேஸ்வரன்' என்னுடைய நெருங்கிய நண்பர். முழு ஆரோக்கியத்துடன் சுப்பராக இருக்கின்றார். அவர் ஒரு சிறந்த ஊடகவியலாளரும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

ஒளவையின் கணவர் 'விக்கினேஸ்வரன்' என்னுடைய நெருங்கிய நண்பர். முழு ஆரோக்கியத்துடன் சுப்பராக இருக்கின்றார். அவர் ஒரு சிறந்த ஊடகவியலாளரும் கூட.

 

 

எனக்கு எந்த சகோதரி எனத் தெரியாது நிழலி...சேரனின் ஒரு சகோதரியின் கணவரை புலி சுட்டதாகவும் அதனால் தான் சேரன் புலிகள் மீது கொஞ்ச நாள் வெறுப்பாக இருந்ததாகவும் முந்தி எங்கேயோ வாசிச்சேன் ...உண்மை,பொய் தெரியாது :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.