Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு

18 ஏப்ரல் 2013

கலாநிதி எம்.எஸ்.அனீஸ்

30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழ் முஸ்லீம் மக்களிடையேயான முரண்பாடுகளுக்கு காரணமான விடயங்கள் குறித்து இந்தக் கட்டுரையுடன் முரண்படுவோர் ஆரோக்கியமான பதில் கட்டுரைகளை radiokuru@yahoo.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் அவற்றையும் குளோபல் தமிழ்ச் செய்திகள் பிரசுரிக்கும்.

இலங்கையின் முப்பது வருடகால விடுதலை போராட்டமானது ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றுதான் பல நூற்றாண்டு காலமாக அன்னியோன்யமாக வாழ்ந்து வந்த தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டு அரசியலும் அதனுடன் வளர்ந்த இனவாதமுமாகும்.

இந்த நாட்டின் சுதந்திர வரலாற்றில் முதல் முப்பது வருட கால விடுதலை போராட்டமானது அஹிம்சை ரீதியாக முன்னெடுக்கப்பட்டபோது அது தமிழ் பேசும் மக்களின் போராட்டமாகவே இருந்தது. அதனால்தான் அந்த போராட்டத்தில் வடகிழக்கு முஸ்லிம்களும் தம்மை கணிசமான அளவு இணைத்துக்கொண்டனர். ஆனால் விடுதலை போராட்டமானது 1970 களின் பிற்பகுதியில் ஒரு ஆயுத போராட்டமாக மாறியபோது அது தனியே தமிழர்களின் போராட்டமாகவே முன்னெடுக்கப்பட்டது. ஒரு சிறிய விகிதத்தில் முஸ்லிம் இளைஞர்கள் போராட்ட இயக்கங்களிள் இருந்தாலும் கூட பெரும்பாண்மை முஸ்லிம்கள் இதில் அக்கறை காட்டவில்லை. இதனால் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர் போராட்டதின் எதிரிகளாகவே பார்க்கப்பட்டார்கள். தமிழ் ஈழம் என்ற இலக்கை அடைய பல்வேறு போராட்டக்குழுக்கள் போராடிய பொழுது முஸ்லிம்கள் இயல்பாகவே அச்சம் கொண்டனர். சிலவேளை தமிழ் ஈழம் அடையப்பட்டால் அது தனியே தமிழருக்கு மாத்திரம் சொந்தமான ஒன்றாக மாறிவிடுமோ என்ற அச்சமும் தாம் அன்னியப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயமும் அவர்களை ஆட்கொண்டது. இதற்கு ஏற்றாற்போல வடகிழக்கு மாகாணங்களில் சில தமிழ் போராட்ட குழுக்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளும் அமைந்து இருந்தன.

இந்த நாடு எந்த விதத்திலும் துண்டாடப்படுவதை விரும்பாத பெரும்பாண்மை ஆட்சியாளர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தியதால் இந்த இரண்டு இனம்களும் திட்டமிட்ட அடிப்படையில் பிளவுபடுத்தப்பட்டன. குறிப்பாக 1980 களின் நடுப்பகுதியில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இந்த இரு இனம்களும் அப்போதைய ஆட்சியாளர்களால் பிரித்து ஆளப்பட்டனர். முதலில் அரசின் இந்த பிரித்தாளும் கொள்கைக்கு கிழக்கு மாகாண தமிழர்களும் முஸ்லிம்களும் பலிக்கடாவாக்கப்பட்டனர். ஒரு புறம் சில தமிழ் போராட்ட குழுக்களும் மறுபுறம் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும் இதற்காக பெரும்பாண்மையினரால் பயன்படுத்தப்பட்டார்கள். முடிவாக இரண்டு சமூகமும் நிரந்தரமாக பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் நிரந்தர எதிரிகளாக்கப்பட்டார்கள். ஈற்றில் பேரினவாதம் தன் இலக்கை மிகவும் சுலபமாக அடைந்து கொண்டது.

இந்த முப்பது வருட ஆயுத போராட்டம் எற்படுத்திய ஆறாத வடுக்களில் ஒன்றுதான் நூற்றாண்டு காலமாக வடக்கில் வாழ்ந்த ஏறத்தாள 12.000 குடும்பங்களை சார்ந்த 80.000 மேற்பட்ட முஸ்லிம்களை 1990 ஒக்டோபரில் ஒரு சில மணித்தியாலத்தினுள் விடுதலை புலிகள் வெளியேற்றிய நிகழ்வாகும். எதுவித குற்றமும் செய்யாத இந்த மக்கள் அனியாயமாக விடுதலை புலிகளினால் தண்டிக்கப்பட்டபோது சர்வதேச சமூகம் உட்பட அத்தனை பேரும் அமைதிகாத்த நிகழ்வானது வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகும். ஏறத்தாள 23 ஆண்டுகளாக அவர்கள் தமது தாயகத்துக்கு வெளியே அனுபவித்துவரும் வேதனைகள் சொல்லில் வர்ணிக்க முடியாதவையாகும். அவர்களை வெளியேற்றியதில் இருந்து விடுதலை புலிகள் ஆயுதரீதியாக அழிக்கப்படும்வரை அவர்களால் இந்த வெளியேற்றத்திற்கான எந்த ஒரு நியாயபூர்வமான காரணமும் கூறப்படவில்லை என்பதானது இந்த முஸ்லிம் சமூகத்தின் குற்றமற்ற தன்மைக்கு ஒரு போதிய ஆதாரமாகும். ஒரு கட்டத்தில் விடுதலை புலிகள் தமது இந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்தமையானது அவர்களது தவறினை உலகுக்கு நண்றாகவே உணர்த்தியது. ஆனால் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இன்று ஒரு சில சந்தர்ப்பவாத தமிழ் அரசியல் வாதிகள் இந்த வெளியேற்றத்திற்கு புதிய காரணங்களை முன்வைப்பதுதான். முஸ்லிம்கள் தமது போராட்டத்தை காட்டிக் கொடுத்ததால்தான் அவர்களை புலிகள் வெளியேற்றினார்கள் என நா கூசாமல் கூறிவருகின்றனர். போராட்ட வரலாற்றை நன்கு தெரிந்தவர்கள் ஒரு போதும் இவ்வாறு பேச மாட்டார்கள். காட்டிக்கொடுப்புகள் உள்வீட்டுக்குள்ளேயே எவ்வாறு அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது ஒன்றும் புரியாத புதிர் அல்ல.

வரலாறு நெடுகிலும் தமிழர் போராட்டம் என்பது ஏனையோரை விட தமிழர்களால்தான் காட்டிக்கொடுக்கப்பட்டது என்பதற்கு புதிய ஆதாரம் ஒன்றும் தேவை இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக் கொடுத்ததுபோல பண்டாரவன்னியனை காக்கைவன்னியன் காட்டிக் கொடுத்ததுபோல விடுதலைபுலிகளும் உள்வீட்டாரினாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டார்கள் என்பது வரலாறு அறிந்த உண்மையாகும். இறுதி யுத்தத்தின்போது கூட முள்ளிவாய்க்காலில் எப்படி விடுதலை புலிகளின் தலைமைத்துவமும் அதனோடு சேர்ந்த மற்றவர்களும் உடன் இருந்தவர்களாலும் நாட்டுக்கு வெளியே இருந்தவர்களாலும் கச்சிதமாக காட்டிக் கொடுக்கப்பட்டார்கள் என்பதை இன்று புலம்பெயர்ந்து வாழுகின்ற முன்னைநாள் விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் பத்திபத்தியாக இணைய தளங்களில் எழுதிவருகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள்தான் தமது போராட்டத்தை காட்டிக்கொடுத்தார்கள் என இந்த அரசியல் வாதிகள் மட்டுமின்றி தம்மை புத்திஜீவிகள் என காட்டிக்கொள்ளும் சில தமிழ் சகோதரர்களும் கூறிவருவதுதான் முஸ்லிம்களுக்கு பெரிய வேதனையை கொடுக்கின்றது. இவர்கள் கூறுவது உண்மையானால், இறுதி யுத்தம் நடந்தபோதும் முஸ்லிம்களா விடுதலை புலிகளை காட்டிக்கொடுத்தார்கள்? என்ற ஒரு கேள்வியை நாம் கேட்க முடியும். காரணம் இறுதி யுத்தம் நடந்த போது ஒரு முஸ்லிம் கூட அந்த இடத்தில் இருக்கவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும். எனவே முஸ்லிம்கள்தான் போராட்டத்தை காட்டிகொடுத்தார்கள் என்றும் அதனால்தான் அவர்களை வடக்கை விட்டும் விடுதலை புலிகள் வெளியேற்றினார்கள் என்றும் கூறுவதை இனியேனும் இப்பேற்பட்டவர்கள் கைவிடவேண்டும்.

போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்குபெறாத போதும் கூட அவர்கள் போராட்டத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவும் இல்லை அதற்கான அவசியமும் அவர்களுக்கு இருக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். வடக்கு முஸ்லிம்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட இன்றுவரை அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு சுடுசொல்லை கூட பயன்படுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இத்தனை பிரச்சினைகளுக்கும் பிறகும் கூட அவர்கள் தமது பூர்வீக இடங்களில் மீள்குடியேற முயற்சிக்கும் போது பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளமை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சமூகமாக வெளியேற்றப்பட்ட இம்மக்களின் மீள்குடியேற்றம் என்பது எல்லோருடைய ஒத்துழைப்புடனேயே செய்யப்பட வேண்டியுள்ளது. தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் இவ்விடயத்தில் அதிக அக்கறை காட்டுவதானது அவர்களின் தார்மீக பொறுப்பாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோது முஸ்லிம் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்லலாம் என கனவு கண்டனர். ஆனால் அந்த கனவுகள் இன்றுவரை கனவாகவே இருக்கின்றமையானது அவர்கள் மத்தியில் பாரிய விரக்தியினை ஏற்படுத்தியுள்ளது. 2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் மீள்குடியேற சென்ற யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பல்வேறு இடையூறுகள் அப்போது விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டமை யாவரும் அறிந்த உண்மையாகும். முதலில் அவர்கள் அரசின் ஒற்றர்களாக பார்க்கப்பட்டனர். அதுமட்டுமின்றி அவர்களது சுதந்திர நடமாட்டம் கூட விடுதலை புலிகளினால் கட்டுப்படுத்தப்பட்டது. அவர்களது வியாபாரம் தடைசெய்யப்பட்டது. குறிப்பாக அவர்களது பரம்பரை தொழிலாகிய பளைய இரும்புகளை விற்றல் மற்றும் இறால், நண்டு வியாபாரம் என்பன விடுதலை புலிகளினால் தடுக்கப்பட்டது. விடுதலை புலிகளின் காலத்தில் தான் அவ்வாறனதொரு நிலை காணப்பட்டது என்றால் இன்றும் அவ்வாறனதொரு நிலை வேறு ஒரு வடிவத்தில் காணப்படுகின்றமையானது எவ்விதத்திலும் ஏற்றுகொள்ளமுடியாத ஒன்றாகும்.

யுத்தத்தின் பின்னரான வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் மன்னார் மாவட்டதில்தான் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. மீள்குடியேற சென்ற இம்மக்கள் அன்னியவர்களாக சில அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளினாலும் பார்க்கப்பட்டார்கள். அரசினாலும் சர்வதேச சமூகத்தினாலும் கைவிடப்பட்டநிலையில் இவர்கள் தமக்கென்று இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் பல துன்பங்களின் மத்தியில் மீள்குடியேற முயற்சிக்கும் போது அதனைகூட சகித்துக்கொள்ளமுடியாத நிலையில் சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதானது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும். மன்னாரில் தோற்றம் பெற்ற அந்தப் பிரச்சினை இன்றுவரை நீதிமன்றத்தில் வழக்காக விசாரனை நிலையில் தொடர்கின்றது. மன்னாரில் தொடங்கிய இந்த பிரச்சினை இன்று முல்லைத்தீவு வரை சென்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் முஸ்லிம்களும் தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை எல்லா ஊடகங்களிலும் செய்தியாக்கப்பட்டது. வெளி மாவட்டங்களிள் இருந்து முஸ்லிம்களை கொண்டு வந்து முல்லைத்தீவில் குடியேற்ற முயற்சிப்பதாக வன்னி மாவட்டத்தை சார்ந்த ஒரு முஸ்லிம் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மறுபுறமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. ஏட்டிக்கு போட்டியான இந்த நிகழ்வுகள் நிச்சயம் வரவேற்க்கப்பட கூடியவை அல்ல.

ஒரு உண்மையை நாம் யாவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது 23 ஆண்டுகளின் முன்னர் வெளியேற்றப்பட்ட இம்மக்களின் குடும்பங்கள் இன்று பல்கிப்பெருகியுள்ளது. பல புதிய உப-குடும்பங்கள் உருவாகி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இவர்கள் யாரும் வெளிமாவட்ட மக்கள் அல்ல. வெளிமாவட்ட முஸ்லிம்கள் ஒரு போதும் மன்னாருக்கோ அல்லது முல்லைத்தீவுக்கோ வந்து குடியேற விரும்பப்போவதும் இல்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை.

இங்கு பிரச்சினை என்னவென்றால் அரச காணிகளில் இந்த முஸ்லிம்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்பதுதான். இந்த மாவட்டங்களை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் முஸ்லிம்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் விடுதலை புலிகளினால் தமிழ் மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டு அவர்கள் அந்த நிலம்களில் குடியேற்றப்பட்டார்கள். இன்று அவர்களை எது விதத்திலும் குடியெழுப்ப முடியாத நிலை காணப்படுகின்றது. அப்படியானால் மீள்குடியேறவரும் முஸ்லிம்களை எங்கே குடியேற்றுவது? என்ற பிரச்சினைதான் எம்முன் எழும் பிரதான கேள்வியாகும். இந்த விடயத்தில் தமிழ் மக்களாக இருந்தாலும் சரி தமிழ் அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி ஒரு மனிதாபிமான நிலையில் நின்றுகொண்டு இந்த பிரச்சினையை பார்ப்பதுதான் அனைத்து முஸ்லிம்களினாலும் விரும்பப்படும் விடயமாகும்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று இந்த நாட்டின் சகல சிறுபாண்மை இனம்களும் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் பிரதான சிறுபாண்மை இனங்களான தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை இவ்வாறான இனவாதிகள் தமது இலக்கை அடைய வழிவகுக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் நமது சமூகங்கள் மேன்மேலும் நசுக்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டில் வாழும் சிறுபாண்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அதற்கான அடிப்படையாக தமிழ்-முஸ்லிம் இன உறவு என்பது காணப்படுகின்றது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. முப்பது வருட கொடூர யுத்தத்தினால் இத்தனை துன்பங்களை அனுபவித்த பின்னரும் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ தயார் நிலையில் இல்லை என்றால் நாம் எல்லோருமே பெரும்பாண்மை அடிப்படைவாதிகளினால் நசுக்கப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாமல் போய்விடும்.

முன்னொருபோதும் இல்லாதவாறு இன்று தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கான அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. இதனை அத்தனை தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும் புரிந்து நடப்பது காலத்தின் கட்டாயமாகும். யுத்தத்தின் பின்னர் இன்று வடக்கிலே சிங்களமயமாக்கம் ஒரு புறமும் மறுபுறமாக பௌத்தமயமாக்கமும் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுவரும் இவ்வாறான பிளவுகள் நிச்சயம் வடமாகாணத்தை பெரும்பாண்மை சமூகத்துக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கே உதவும் என்பதையும் சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலைதான் ஈற்றில் உருவாகும்.

இன்று வடக்கை சேர்ந்த 22.000 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக தமது பெயரை பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைதான் காணி பிரச்சினையாகும். இது விடயத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் வடக்கை சேர்ந்த சகல முஸ்லிம்களினதும் எதிர்பார்க்கையாகும். இரு சமூகங்களும் பாரிய புரிந்துணர்வுடன் செயலாற்ற வேண்டிய காலத்தின் கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் வரலாற்று தவறை நாம் செய்யமுற்படக் கூடாது. கடந்த கால கசப்பான உணர்வுகளை நாம் இரு சாராரும் மறக்க முற்பட வேண்டும்.

வடமாகாண தேர்தலுக்கு முன்னால் மென்மேலும் இனம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வடமாகாண சபையையும் தன்வசப்படுத்தவே அதிகாரத்தில் உள்ள பெரும்பாண்மை இன்று முயற்சிக்கின்றது. ஆக குறைந்த பட்ச அதிகாரத்தினை கூட சிறுபாண்மையினரின் கைகளுக்கு கொடுக்க பெரும்பாண்மை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்பதை இவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் காட்டுகின்றன. இதை வடக்கின் தமிழ்-முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதிர்காலம் மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

வடக்கின் தமிழ்-முஸ்லிம் இன ஒற்றுமை என்கின்ற விடயத்தை பொறுத்தவரையில் இந்த இரண்டு சமூகங்களின் அரசியல் தலைவர்களும், புத்திஜீவிகளும், கல்விமான்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் முன்வந்து ஒரு பரந்துபட்ட கலந்துரையாடலை செய்யவேண்டும். எம்மத்தியிலே காணப்படும் வீணான சந்தேகங்கள் களையப்படவேண்டும். பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுப்புக்கான அடித்தளங்கள் இடப்படவேண்டும். இந்த வகையில் அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையானது மிகவும் வரவேற்க தக்கதொன்றாகும். சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை வேறுவிதத்தில் அர்த்தப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயன்றாலும் கூட உண்மையில் வடக்கு முஸ்லிம்களின் மத்தியில் மட்டுமின்றி இலங்கையின் எல்லா பிரதேச முஸ்லிம்களின் மத்தியிலும் இந்த உரை அதிக வரவேற்பை பெற்றுள்ளதை யாரும் மறுக்கமுடியாது. இது விடயத்தில் திரு. சம்பந்தன் ஐயா அவர்களை போன்ற மூத்த அரசியல் வாதிகள் தமது அனுபவத்தையும் ஆளுமையையும் கையாள வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

முப்பது வருடகால கொடூர யுத்தம் விட்டுச்சென்றுள்ள அழிவுகளில் இருந்து எம்மை மீட்டெடுக்க நீண்டகாலம் செல்லும் என்பதுதான் யதார்த்தம். இந்த யுத்தம் தமிழ் மக்களை மிக மிக அதிக அளவில் பாதித்தது என்ற உண்மையை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வது போல வடமாகாண முஸ்லிம்களும் இந்த யுத்தத்தினால் அனியாயமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் உணரும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நாம் யாவரும் எதிர்பார்க்கும் அந்த நிரந்தர சமாதானத்தை அடைய முடியும் என்பதோடு பேரினவாதத்தின் பிடியில் இருந்தும் எம் யாவரையும் பாதுகாக்க முடியும்.

(தொகுப்பு –இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இணையம்: www.globaltamilnews.net

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90900/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நல்லா பேசுறீங்க...ஜெனீவாவிலை நடந்தது என்ன....முல்லைத்தீவில் நடப்பது என்ன...மன்னாரில் நடக்கிறது என்ன ..வவுனியாவில் செய்வது என்ன... இப்ப யாழில் செய்யப்போறது  என்ன...நீங்கள் சொல்லுறதை கேட்க நல்லத்தான் இருக்கு...இதை முதலில் உங்க அடிவருடி அமைச்சர்களிடமும்...தலைவர்களிடமும் சொல்லிட்டு ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.